கவிகுல திலகம் மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி |
மெலட்டூரில் ‘பாகவத மேளா’ மீட்டுருவாக்கம் ஏற்பட்டு தொடர்ச்சியாக நடைபெற பலர் உழைத்திருக்கிறார்கள். இந்த பழைய கலைவடிவம் உள்ளூர் ஆர்வலர்களால் மீட்டெடுக்கப்பட்டு தனது தனித்தன்மையால் பல கலைஞர்களை ஈர்த்து வந்துள்ளது. தஞ்சைப்பகுதியின் இசை விற்பன்னர்களும், புகழ்பெற்ற நட்டுவனார்களும் இக்கலை வடிவத்தை தங்களுடைய பங்களிப்பால் மேலும் செறிவாக்கியிருக்கிறார்கள். நடேச அய்யர் துவங்கி ஆறு முன்னோடிகளை கட்டுரையின் முதற்பகுதி அறிமுகப்படுத்துகின்றது. நடைமுறை சிக்கல்களை தாண்டி தொடர்ந்து இதை நிகழ்த்த பாகவதமேளா சங்கமாக பதிவு செய்யப்பட்டதையும், அதில் ஏற்பட்ட மாற்றங்களையும் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் காணலாம்.
பாகவத மேளா முன்னோடிகள்
![]() |
பரதம் நடேச ஐயர் |
பரதம். நடேச ஐயர்
பாகவத மேளாவின் தந்தை எனப் போற்றப்படும் நடேச ஐயர் 1875ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஐயர் ஸ்ரீமதி சிவகாமசுந்தரி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தனது எட்டு வயது வரை மேலட்டூரிலேயே ஆரம்பக் கல்வி கற்றார். பின் தஞ்சாவூரில் உள்ள இசைக் கலைஞர்களிடம் சங்கீதத்திலும் ஹரிகதை பாடுவதிலும் பாடம் கற்றுக்கொண்டார்.
அந்த சமயம் மெலட்டூரில் பாகவத மேளாவை நடத்திக்கொண்டிருந்த குழுவால் தொடர்ந்து பாகவத மேளா நாடகங்களை நிகழ்த்த முடியாமல் போனது. இந்த நாடகங்களில் உள்ள நாடகத்தன்மை, நடனம், இசை மற்றும் இலக்கியத்தின் ஆழத்தையும், இவைகள் இணைந்து வெளிபட்ட கலை வடிவத்தின் அழகையும் நேர்த்தியையும் உணர்ந்த நடேச ஐயர், இந்த கலை வடிவத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதற்காக, அவர் புகழ்ப்பெற்ற தஞ்சை நால்வரின் நேரடி வம்சாவளியான சபாபதி நட்டுவானரை அணுகினார். அவரிடமிருந்து நடனத்தைக் கற்றுக்கொண்டார். மேலும் மெலட்டூரிலேயே அனுபவம் வாய்ந்த பாகவத மேளா கலைஞர்களிடமிருந்து, மேளாவின் கலை வடிவத்தின் மரபான அடவுகளைக் கற்றுக்கொண்டார். அவரே ஊரில் உள்ள இளைஞர்களுக்கும் பாகவத மேளாவிற்கான பயிற்சியும் அளித்தார். 1928ஆம் ஆண்டு வெங்கடராம சாஸ்திரியின் பாகவத மேளா நாடகங்களை மீண்டும் தொடங்கினார். முதல் நிகழ்ச்சி பிரகலாத சரிதம். நடேச ஐயர் லீலாவதியாக வேடம் தரித்தார். அவரது சீடர்கள் மெலட்டூர் ரமணி ஐயர் ஹிரண்யகசிபுவாகவும், மெலட்டூர் நாராயணசாமி ஐயர் பிரஹலாதராகவும் நடித்தனர். நடேச ஐயர் பிரஹலாத சரிதம் மட்டும் அல்லாமல் வெங்கடராம சாஸ்திரியின் மற்ற நாடகங்களான உஷா பரிணயம், ஹரிச்சந்திரா நாடகம் என அனைத்து நாடகங்களையும் மீண்டும் மேடைக்கு கொண்டுவர முயற்சி செய்தார்.
நடேச ஐயர் ஹரிகதை பாடுவதிலும் மிகவும் திறமையுடையவராக இருந்தார். பாகவத மேளாவை மீண்டும் நிகழ்த்துவதில் இருந்த முனைப்பில் ஹரிகதையை ஐயர் விரிவாக நிகழ்த்தவில்லை. இருந்தாலும் ஹரிகதையை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரால் ஹரிகதையிலும் சில திறமையான மாணவர்களை உருவாக்கமுடிந்தது. அவரது ஹரிகதை பாடும் சீடர்களில் முதன்மையானவர், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஆண்டாளம்மாளின் மகள் ஸ்ரீமதி பத்மாசினி பாய். பத்மாசினி பாய் தனது நண்பர் வரதம் ஐயங்கார் (எ) துரைசாமி ஐயங்கார் மூலம் நடேச ஐயருக்கு அறிமுகம் ஆனார். நடேச ஐயர் பத்மாசினிக்கு ஹரிகதை பாடுவதிலும் ஹரிகதை நிகழ்ச்சியின் போது பொருத்தமான சந்தர்ப்பங்களில் நிருத்தம் ஆடுவதிலும் அடவுகளை அபிநயங்களை செய்வதற்கு கற்றுக்கொடுத்தார். பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீமதி லலிதாவுக்கும் ஹரிகதை பாடல் ஐயரால் பயிற்சி அளிக்கப்பட்டது.
நடேச ஐயரிடம் நல்லூர் பரதம் நாராயணசுவாமி ஐயர், யமுனா, கிருஷ்ணாம்பாள், மாங்குடி துரைராஜ ஐயர், இ.கிருஷ்ணா ஐயர் ஆகியோர்கள் நாட்டியம் கற்றுக்கொண்டனர்.
மெலட்டூர் பரதம் நாராயணசுவாமி ஐயர். (பத்மாசினி பாயின் அனைத்து ஹரிகதை நிகழ்ச்சிகளிலும் அவர் பாடகராக இருந்துள்ளார்), 'கிருகு' சாமா ஐயர், கின்சின் கோதண்டராம ஐயர், ரமணி ஐயர், பத்மஸ்ரீ பாலு பாகவதர், பிச்சு பாகவதர் என பலர் நடேச ஐயரிடம் பாகவத மேளாவை கற்றுக்கொண்டுள்ளனர். இவர்களில் நாராயணசுவாமி ஐயர் கோதண்டராம ஐயர் இருவரும் நடேச ஐயருடன் இணைந்து ஹரிகதை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர்.
நடேச ஐயரின் மனைவி மங்கலம் அம்மாள். அவர்களுக்கு கல்யாணி அம்மாள், குஞ்சம்மாள் என இரு மகள்கள். அவர்களில் குஞ்சம்மாளின் மகன் சேதுராமனை தன் மகனாக சுவீகாரம் செய்து கொண்டார். நடேச ஐயரின் பாகவத மேளா நாடக குறிப்பேடுகளை சேதுராமன், கல்யாணி அம்மாள், குஞ்சம்மாள் ஆகியோர் இணைந்து எழுதிப் பாதுகாத்தனர். அவற்றை பரதம் ஆர். மகாலிங்கம் (எ) மாலி அவர்களிடம் கொடுத்து கலாக்ஷேத்ராவில் பாதுகாப்பாக இருக்கும் படி ஏற்பாடு செய்தனர். பாகவத மேளாவின் நான்கு பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் சென்னையில் உள்ள உ.வே.சா. நினைவு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பரதம் ஆர். மகாலிங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது.
தனது வாழ்க்கையின் இறுதிக் காலத்திலும் மெலட்டூரில் இருக்கவே நடேச ஐயர் விரும்பினார். 1931ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி சென்னையில் இருந்து ரயிலில் மெலட்டூருக்குச் செல்லும் வழியில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
![]() |
பத்மஶ்ரீ பாலு பாகவதர் கலாக்ஷேத்ராவில் ஆசிரியராக இருந்தபோது (ஶ்ரீ வி.பி. தனஞ்சயன் மேல் இடது மூலையில் இருக்கிறார்.) |
பத்மஶ்ரீ பாலு பாகவதர்
பாலு பாகவதர் என்கிற பாலசுப்ரமணிய சாஸ்திரிகள் பரதம் நடேச ஐயர் காலத்திற்குப் பிறகு பாகவத மேளாவிற்கு புத்துயிர் அளித்து, மேலும் மேம்படுத்தினார். அதனால் மேளாவின் முன்னோடியாகப் போற்றப்படுகிறார். இவர் நவம்பர் 1900ஆம் ஆண்டு மெலட்டூரில் ஸ்ரீ. விஸ்வநாத பாகவதருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ப்ரம்மஶ்ரீ தியாகராஜ சுவாமிகளின் நேரடி சீடரான உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரின் தாய்வழிப் பேரன். புகழ்பெற்ற உமையாள்புரம் இசைப் பள்ளியை பாலு பாகவதர் தான் துவங்கினார். மெலட்டூர் சீதாராம ஐயங்காரிடம் சமஸ்கிருதமும், தாத்தா உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரிடம் இசையும் கற்றார். பரதம் நடேச ஐயரைத் தனது மானசீக குருவாகக் கருதினார்.
நடேச ஐயர் காலத்திற்குப் பிறகு, மெலட்டூர் பாகவத மேளா நிகழ்ச்சிகள் தோய்வடைந்தன. பாலு பாகவதர் நடேச ஐயரின் சீடர்களான நல்லூர் நாராயணசாமி ஐயர், நல்லூர் பிச்சு பாகவதர், ரமணி ஐயர் ஆகியோருடன் சேர்ந்து பாகவத மேளாவை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இளம் கலைஞர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கினார், 1938ஆம் ஆண்டு முதன்முதலில் மார்க்கண்டேய நாடகத்தை மெலட்டூரில் உள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர் கோயில் வளாகங்களில் அரங்கேற்றினார். மார்கண்டேய நாடகத்தின் நடன அமைப்பு மற்றும் இயக்கத்துக்கு அவரே ஆசிரியராக இருந்து நாடகத்தை அமைத்துக்கொடுத்தார்.
1964ஆம் ஆண்டு வரை நாடகங்கள் விநாயகர் கோயில், சிவன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில்களில் ஆகிய இடங்களில் நடைபெற்றன. இருப்பினும் இந்த நிகழ்ச்சிகள் ஒரு முறையான அமைப்பின் கீழ் நடைபெறவில்லை. 1964ஆம் ஆண்டு மெலட்டூர் ‘பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம்’ உருவாக்கப்பட்டது. தன்னுடைய கடைசி காலம் வரை அதன் தலைவராக இருந்து சங்கத்தை வழி நடத்தினார். கலாக்ஷேத்திராவின் நிறுவனர் ருக்மிணி தேவி அருண்டேலின் வேண்டுகோளின் பேரில், பாலு பாகவதர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கலாக்ஷேத்திராவில் ஆசிரியராக பணியாற்றி அங்குள்ள மாணவர்களுக்கு பாகவத மேளாவை கற்பித்தார். பாலு பாகவதருக்கு 1967ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதும், 1973ஆம் ஆண்டு அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு பாகவதர் மறைந்தார்.
புகழ்பெற்ற நடனக்கலைஞரும் கலாக்ஷேத்திராவில் பாகவதரிடம் நாட்டிய நாடகம் கற்றவருமான தனஞ்செயன் அவரைப்பற்றிய அனுபவங்களை பின்வருமாறு பகிர்கிறார்.
உஷா பரிணயம் நாடகத்தை எங்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக 1958-60ம் ஆண்டில் கலாக்ஷேத்திராவுக்கு பாலு பாகவதர் வந்திருந்தார், அவரது தோற்றம் மற்றும் அவர் மீதிருந்த பிரியத்தால் அவரை தாத்தா என்றே அழைத்தோம். பாலு தாத்தா, சென்னைக்கு வந்து எங்களுக்காக கற்றுத்தர ஒப்புக்கொண்டிருந்தாலும் அவருடைய தினசரி ஜப, சடங்குகள் மற்றும் உணவுப்பழக்கத்தில் உறுதியாகவே இருந்தார். அவரது நேரடி மாணவிகளாக சாந்தாவும் கிருஷ்ணவேணியும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். சாந்தா சிறுவயதில் இறந்துபோன தாத்தாவின் மகளை நினைவுபடுத்தும்படி இருந்ததாக கண்ணீரோடு சொல்லுவார். நாள் முழுவதும் இந்தப்பெண்களுக்கு தெலுங்கு பத்யங்களை சொல்லித்தருவதோடு அவற்றின் பின்னுள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்ள தெலுங்கு இலக்கியத்தையும் சொல்லிக்கொடுத்தார். தாத்தா ஒரு அற்புதமான பாடகர். பத்யங்களுக்கு ஒருமுறை கூட எந்தப்புத்தகத்தையும் பார்த்ததில்லை அத்தனையும் அவர் நினைவிலிருந்தே வந்துகொண்டிருந்தது.
பாவங்களை வெளிப்படுத்துவதில் பல முக்கியமான விஷயங்களை எங்களுக்கு பயிற்சியளித்தார், சாந்தாவுக்கு ஒரு கன்னிப்பெண் வெளிப்படுத்தும் சிருங்கார பாவத்தை எப்படி மிகையில்லாமல் அழகாக வெளிப்படுத்த முடியும் என்று சொல்லிக்கொடுத்தது இன்னும் எங்களுக்கு நினைவிலிருக்கிறது. உஷா பரிணயத்தில் நான் தான் அநிருத்தன், அவரிடம் உரிமையோடு எங்கள் பாத்திரங்களை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் முடிந்தது. உஷா பரிணயம் அரங்கேறியதும் மீண்டும் எங்களுக்கு ருக்மாங்கத சரிதம் சொல்லிக்கொடுக்க அவர் வருகிறார் என்னும் செய்தியே மிகவும் உற்சாகமளித்தது. ருக்மிணிதேவி ஏற்பாட்டில் பாலு தாத்தா வாயிலாக பாகவதமேளா என்ற நாட்டிய நாடக வடிவை நாங்கள் கற்றுக்கொண்டது அற்புதமான அனுபவம்.
![]() |
கலைமாமணி பி.கே. சுப்பையர் |
கலைமாமணி பி.கே. சுப்பையர்
கலைமாமணி பி.கே.சுப்பையர் மெலட்டூர் ஸ்ரீ. கைலாசம் ஐயர் ஸ்ரீமதி. லட்சுமி தம்பதிக்கு மகனாப் பிறந்தார். பிரம்மஶ்ரீ தியாகராஜ சுவாமிகளின் நேரடி சீடரான உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரிடம் இசை தீட்சை பெற்றுக்கொண்டார். பின்னர் சங்கீத கலாநிதி ராமநாதபுரம் சீனிவாச ஐயங்கார் (பூச்சி ஐயங்கார்) மற்றும் சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆகியோரிடம் மேலும் இசைப் பயிற்சி பெற்றார். 1931இல் பரதம் நடேச ஐயர் காலமான பிறகு, பாகவத மேளாவின் இசை அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு பாலு பாகவதர் தலைமையில் பிற மூத்த கலைஞர்களுடன் இணைந்து மேளாவின் கலை வடிவத்தை மீட்டெடுத்தார்.
கர்நாடக இசை, பாகவத மேளா இசை மரபுகளைப் பாதுகாத்ததற்காக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைமாமணி விருது வழங்கியது. 1998இல் அவர் காலமானார். பாகவத மேளத்தின் இசை மரபுகளைப் பாதுகாத்ததற்காக இசைத்துறையும் பாகவத மேளாவும் அவருக்குக் கடன்பட்டுள்ளன. குறிப்பாக கண்டா மற்றும் கும்பகாம்போஜி போன்ற அரிய ராகங்களின் இசைத்தொகுப்பு, மற்றும் ஆனந்த பைரவி போன்ற பல ராகங்களில் அரிய பிரயோகங்களின் இசைத்தொகுப்பு இவற்றையெல்லாம் இன்று நாம் கேட்டு ரசிக்கக் காரணமானவர் அவரே. 1953 ஆம் ஆண்டில், சங்கீத கலாநிதி திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி மற்றும் ஸ்ரீ. சதாசிவம் ஆகியோர் மெலட்டூருக்கு வருகை தந்து, ஸ்ரீ. சுப்பையரின் கண்டா இசைத்தொகுப்பைக் கேட்டனர்.
![]() |
கலைமாமணி டி.ஜி. பாவு பிள்ளை |
கலைமாமணி டி.ஜி.பாவு பிள்ளை
கலைமாமணி டி.ஜி.பாவு பிள்ளை 1902 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ஸ்ரீ.கோபால்சாமி ஸ்ரீமதி ஜீவாயி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். 10 வயதிலிருந்தே, தஞ்சாவூர். கே.மகாலிங்கம் பிள்ளையிடமிருந்து 6 ஆண்டுகள் மிருதங்கம் கற்றுக்கொண்டார். அதன் பிறகு தஞ்சாவூர் வடிவேலுநட்டுவனார் குழுவின் பரத நாட்டிய இசை நிகழ்ச்சிகளுக்காக மிருதங்கம் வாசிக்கத் தொடங்கினார்.
1961 ஆம் ஆண்டு, பரத நாட்டிய மிருதங்க கலைஞராக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மறைந்த சங்கீத வித்வான் மன்னார்குடி ராஜகோபால பிள்ளை தலைமையில் நடைபெற்ற ஒரு பொது விழாவில், தஞ்சாவூர் நட்டுவனார்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் சங்கீத வித்வான்களால் தங்கப் பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார். மிருதங்கம் மற்றும் நாட்டியத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக மிருதங்கக் கலைத் துறையில் பணியாற்றினார். தஞ்சாவூரில் உள்ள பரதநாட்டியப் பள்ளிகளில் மிருதங்க ஆசிரியராகவும், பல மாணவர்களுக்கு மிருதங்கம் கற்பித்தார். பந்தநல்லூரில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிஷ்யர்களின் பரத நாட்டியக் கச்சேரிகளுக்கு மிருதங்கம் இசைத்தார். தஞ்சாவூர் பெரிய கோவிலில் 'சரபேந்திர பூபால குறவஞ்சி' நாடகத்திற்கு பல ஆண்டுகள் மிருதங்கம் வாசித்தார். பத்தாண்டுகளுக்கும் மேலாக மெலட்டூர் பாகவத மேளாவுக்கு நட்டுவனாராக பங்களித்துள்ளார்.
![]() |
கே.பி. கிட்டப்பா பிள்ளை |
கே.பி. கிட்டப்பா பிள்ளை
பரத நாட்டிய குருவான மறைந்த ஸ்ரீ கே.பி. கிட்டப்பா பிள்ளை, புகழ்பெற்ற தஞ்சை நால்வர் வம்சாவளியின் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் தனது தாத்தா பந்தனைநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் இசை மற்றும் பரத நாட்டியத்தில் ஆரம்பப் பயிற்சியைப் பெற்றார், பின்னர் அவரது தந்தை கே. பொன்னையா பிள்ளையின் வழிகாட்டுதலின் கீழ் அடுத்த கட்ட இசைப்பயிற்சி பெற்றார். ஒரு புகழ்பெற்ற மிருதங்க வித்வானாகவும் இவர் இருந்தார்.
கே.பி. கிட்டப்பா பிள்ளை பல முன்னணி நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் மற்றும் ஏராளமான நடன நாடகங்களை இயக்கியுள்ளார். மெலட்டூர் பாகவத மேளாவை பொறுத்தவரை, இந்த மேதை நாடகங்களுக்கு இசையமைத்துள்ளார், பல பாகவத மேளா நாடக நடனங்களை வடிவமைத்துள்ளார், அவை மக்களிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்றவை. மேலும் கே.பி. கிட்டப்பா பிள்ளை பல பாகவத மேளா நடன நாடகங்களுக்கு நட்டுவாங்கம் செய்துள்ளார்.
இசைப் பேரறிஞர், கலைமாமணி, நாட்டிய கலாநிதி, காளிதாஸ் சம்மான், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகள் கே.பி.கிட்டப்பா பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளன.
![]() |
பரதம் ஆர். மகாலிங்கம் |
பரதம் ஆர்.மகாலிங்கம் (எ) மாலி 1952ல் பிறந்தார் இவரது தந்தை மெலட்டூரை சேர்ந்த இராமலிங்க ஐயர். பாலு பாகவதரிடமும், கிட்டப்பா பிள்ளையிடமும் நேரடியாக பயின்றவர். பி கே சுப்பையர், ஹேரம்பநாதன் போன்ற சிறந்த கலைஞர்களோடு இணைந்து பாகவத மேளாவில் பங்களித்தவர். பிரகலாத சரித நாடகத்தில் 1962ல் பிரஹலாதனாக நடித்தார். அதன் பிறகு பல்வேறு முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். 1985ம் ஆண்டு முதல் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கத்தின் தலைவராகவும், குழுவின் கலை இயக்குனராகவும் இயங்கி வருகிறார். இவரது பொறுப்பிலேயே புரவலர்கள் உதவியுடன் லட்சுமி நரசிம்மர் ஆலயமும், காட்சியரங்கமும் கட்டப்பட்டன. பல இளம் கலைஞர்களை பயிற்றுவித்தவர். அரும் முயற்சியால் பாகவத மேளா பிரதிகளை பதிப்பித்து வருகிறார். இவர் கலைமாமணி விருது, பரதம் விருது முதலிய பல விருதுகளை பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர் இன்றளவும் பாகவத மேளா மேடைகளில் நடித்து வருகிறார்.
![]() |
பெண் வேடத்தில் பரதம் ஆர். மகாலிங்கம் (1970) |
பாகவதமேளா நாட்டிய வித்யா சங்கம்
பாகவதமேளா நாட்டிய வித்யா சங்கம் 1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் பாகவதமேளாவின் தனித்துவமான கலை வடிவத்தை - குறிப்பாக மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரியின் நாடகங்களை - பாதுகாப்பது, வளர்ப்பது, பரப்பவுவது. சங்கத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்று பாகவதமேளா நாட்டிய நாடக உற்சவத்தை 1966 முதல் ஆண்டுதோறும் நிகழ்த்தி வருவது. பல்வேறு இடர்களைத்தாண்டி இந்த நிகழ்வுகள் தொடர்கின்றன, உதாரணத்திற்கு 2000-ம் ஆண்டு உற்சவத்தின் போது நிகழ்ந்த தீ விபத்தில் பாகவதமேளா மேடையும் உடைகளும் எரிந்துவிட்டன, எனினும் உற்சவம் ஒரு மாதத்துக்குள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சங்கம் உருவாவதற்கான காரணங்களையும், வெவ்வேறு காலகட்டங்களில் இதை அரங்கேற்ற உழைத்தவர்களையும் கட்டுரையின் இப்பகுதி விவரிக்கின்றது.
பாகவதமேளா மரபு மெலட்டூர் தவிர பிறபகுதிகளில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பின்வரும் காரணங்களால் நலிவடைந்தது :
நகரங்களிலிருந்து கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுதல்
ஆதரவுகள் குறைந்துவருதல்
சரியான நிர்வாகமின்மை
இதனால் தஞ்சைப்பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் நடந்த பாகவத மேளா தற்போது நடப்பதில்லை. எனினும் மெலட்டூர், சாலியமங்கலம், தேப்பெருமாநல்லூர் போன்ற ஊர்களில் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“பாகவதமேளாவின் தந்தை” என புகழப்படும் பரதம் நடேச ஐயர் (1855-1931) இதை மெலட்டூரில் மீண்டும் உயிர்ப்பிக்க முக்கிய பங்கு வகித்தார். நாடக நாட்டிய கலைஞர்களையும், இசை கலைஞர்களையும் பயிற்றுவித்தார். அவரது காலத்தில் வெங்கடராம சாஸ்திரி எழுதிய 10 நாடகங்கள் இருந்தன. எனினும் அவர் காலத்தில் பிரகலாத சரித்திரம், ஹரிச்சந்திரா, உஷா பரிணயம், மார்க்கண்டேயா ஆகிய நான்கு நாடகங்களே அரங்கேற்றப்பட்டன. நடேச ஐயர் தானும் அந்த நாடக பிரதிகளை பாதுகாக்க முயன்றுள்ளார். அவரது மகள் கல்யாணியம்மாள் நூல்குறிப்பேடுகளில் கையெழுத்து பிரதியாக நாடகங்களை எழுதி பாதுகாத்து வைத்துள்ளார். 1928-1931-ஆம் ஆண்டுகளில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் வருடாந்தர நிகழ்வை நடத்தியுள்ளார்.
1931-ல் நடேச ஐயரின் மறைவுக்குப் பின் நிகழ்ந்த இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கு பிராமணர்கள் மெலட்டூர் திரு. டி.கே. சுப்ரமணிய ஐயர் தலைமையில் பாகவதமேளா நாடகங்களை மீண்டும் நடத்தத் தொடங்கினர். நல்லூர் நாராயணசுவாமி ஐயர், நல்லூர் பிச்சு பகவதர், கனகங்கி ஜோசியர், கின்சின் கோதண்டராம ஐயர் ஆகியோர் வழிகாட்டியவர்களாக இருந்தனர். 1932 முதல் 1941 வரை மெலட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரகலாத சரித்திரம் நாடகம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் இசைஞானி அரியக்குடி ராமானுஜ ஐயரின் சீடர் திரு. பி. கே. சுப்பையர் பாகவதமேளாவிற்கு பாடல்களை பாடினார்.
1938-ல் ஸ்மார்த்த பிராமணர்களின் குழுவும் மேலத்தூரில் பாகவதமேளா நாடகங்களைத் தொடங்கியது. அவர்கள் சிவராத்திரியை முன்னிட்டு மார்க்கண்டேயா நாடகத்தை அரங்கேற்றினர். இவை திரு. வி. கணேச ஐயர் தலைமையிலும் திரு பாலு பாகவதரின் வழிகாட்டலிலும் நடைபெற்றன. முதல் ஆண்டில் தமிழில் உரையாடல்கள் நிகழ்ந்தன; 1939 முதல் 1941 வரை முழு நாடகமும் தெலுங்கில் அரங்கேற்றப்பட்டது. 1941-ல் தெலுங்கு பிராமணர்கள் தங்களது நிகழ்சிகளை நிறுத்தினர். 1942-ல் மிராஸ்தார் குன்னம் ஸ்ரீனிவாச ஐயர் ஸ்மார்த்த பிராமணர்களின் குழுவினர் பிரகலாத சரித்திர நாடகத்தை அரங்கேற்ற ஆலோசனை வழங்கி உற்சாகமூட்டினார். அவர் நாடக நிகழ்விற்கான செலவிற்கும் பந்தல் அமைப்பதற்கும் ரூ.100 வழங்கினார். இதன் மூலம் 1942 முதல் ஸ்மார்த்த பிராமணர்கள் பாகவதமேளா நாடகங்களை மெலட்டூர் வரதராஜ ஸ்வாமி கோவிலின் முன்பு நடத்தத் தொடங்கினர். பாலு பாகவதர் உடன் திரு பி.கே.சுப்பய்யர், மெலட்டூர் கிருஷ்ணமூர்த்தி சர்மா, மெலட்டூர் ரமணி ஐயர் ஆகியோர் பாடகர்களாக இருந்தனர்.
1964-ம் ஆண்டு பாகவதமேளா நாட்டிய வித்யா சங்கம் முறையாகப் பதிவு செய்யப்பட்டது. அதன் முதலாவது தலைவர் நீதிமன்ற நீதியரசர் வேங்கடராம ஐயர். சங்கம் அமைக்க முதன்மையாக பங்காற்றியவர் மெலட்டூரை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் திரு வி.டி.ஸ்வாமி. அந்தக் காலத்திய முக்கிய கலைஞர்கள் திரு. பி. கே. சுப்பையர், திரு. பாலு பகவதர், திரு. ஜி. ஸ்வாமிநாதன், திரு. வி. கணேச ஐயர் மற்றும் திரு. கே. ராமலிங்க ஐயர் ஆகியோர் இந்த சங்கத்தின் நிறுவனர்களாக இருந்தனர். மற்ற உறுப்பினர்கள் திரு. வி. நாகநாத ஐயர், திரு. ஆர். சேதுராமன், திரு. ஏ. ஆர். சேதுராமன் மற்றும் திரு. என். வேங்கடராமன் (தம்பு) ஆகியோர்.
வி.டி.ஸ்வாமி மெலட்டூர் கிராமத்தின் மேற்கு முனையில் உள்ள நாராயண தீர்த்தம் அருகே பழைய நரசிம்மர் ஆலயம் இருந்த நிலத்தை வாங்கி சங்கத்திற்கு நன்கொடையாக அளித்தார். பழைய ஆலய கட்டிடம் அழிந்துவிட்டது. அதிலிருந்த இரண்டு மூலவிக்ரகங்கள் இன்று மெலட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நிறுவப்பட்டுள்ளன. பழைய ஆலயம் இருந்த நிலத்தில் பாகவதமேளா உற்சவங்கள் வருடந்தோறும் நடைபெற தொடங்கின. அந்த ஆண்டில் மூன்று நாடகங்கள் திட்டமிடப்பட்டிருந்தன: பிரக்லாத சரித்திரம், ஹரிச்சந்திரா மற்றும் உஷா பரிணயம். ஆனால் பிரதமர் ஜவாஹர்லால் நேரு இறந்ததனால் உஷா பரிணயம் நாடகம் அரங்கேற்றப்படவில்லை.
1965-ல் முக்கிய நடன கலைஞர்கள் சங்கத்திலிருந்து விலகினர் - திரு ஜி.சுவாமிநாதன், திரு எஸ்.நடராஜன், பிஸ்வதி திரு ஆர்.சுந்தரம், திரு ஆர்.கணேசன். அவர்கள் திரு வி.கணேசன் அவர்களின் தலைமையில் மற்றொரு குழுவாக வரதராஜ ஸ்வாமி கோவிலின் முன்பு நாடகங்களை நிகழ்த்த தொடங்கினர். இந்த குழுவில் மெலட்டூர் திரு கிருஷ்ணமூர்த்தி சர்மா மற்றும் மெலட்டூர் திரு ரமணி ஐயர் ஆகிய பாடகர்கள் இணைந்து கொண்டனர். சங்கம் 1965-ல் நாடகங்களை நடத்தவில்லை; ஆனால் 1966 முதல் நாராயண தீர்த்தம் அருகே நரசிம்ம ஜெயந்தி அன்று உற்சவங்களை நடத்தத் தொடங்கியது. திரு பாலு பாகவதர், திரு பி.கே சுப்பய்யர், திருமதி கல்யாணியம்மாள் ஆகியோர் சங்கத்துடன் இருந்தனர். சங்கத்தை நிறுவிய திரு வி.டி.ஸ்வாமி அவர்கள் தனது வாழ்நாள்வரையிலும் சங்கத்துடன் இணைந்திருந்து நிகழ்வுகளுக்கு ஆதரவளித்துள்ளார்.
இலக்கிய பங்களிப்பு
மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரியின் ஹரிச்சந்திரா நாடகத்தின் ஓலைச்சுவடியை சங்கம் பாதுகாத்து வருகிறது. நடேச ஐயர் மற்றும் அவரது மகள் கல்யாணியம்மாளின் கையெழுத்துக்குறிப்புகளை பாதுகாத்து வருகிறது. இவை பாகவத மேளா மரபின் இசை, நடனம், நாடகத்தின் ஆதாரமான குறிப்புகள்.
வெங்கடராம சாஸ்திரியின் மார்க்கண்டேயா நாடகமும் அதன் பாடல் விளக்கமும் 1995-ல் பதிப்பிக்கப்பட்டன. சங்கத்தின் கலைஞர்கள் திரு என்.விஸ்வநாதம் மற்றும் திரு பரதம் என்.ஸ்ரீனிவாசன் ஆகியோரால் சாஸ்திரியின் சீதா கல்யாணம் நாடகம், அதன் பொருள் விளக்கம், சுவடியில் குறிப்பிடப்பட்ட ராகம் ஆகியவை பதிப்பிக்கப்பட்டன. பிரகலாத சரிதமு துவங்கி சாஸ்திரிகளின் பத்து நாடக பிரதிகள் 2025ம் ஆண்டு வரை சங்கத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளன, அவை தெலுங்கிலும், கிரந்த லிபியிலுமாக அச்சிடப்படுகின்றன. சங்கத்தால் 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரங்கப் பங்களிப்பு
மெலட்டூர் வேங்கடராம சாஸ்திரியின் ருக்மிணி கல்யாணம் தற்போது சங்கத்தால் மட்டுமே அரங்கேற்றப்படுகிறது. சாஸ்திரியின் நாடகங்கள் தவிர பிற நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. தஞ்சை மராட்டிய அரசர் இரண்டாம் ஏகோஜி (1696-1737) பாகவதமேளா மரபில் இயற்றிய மராட்டிய நடன நாடகமான சகுந்தளம், தமிழ் நடன நாடகங்களான ஆண்டாள் திருமண உற்சவம், கீதோதயம் போன்றவற்றை பாகவதமேளா பாணியில் நெறிப்படுத்தி அரங்கேற்றம் செய்துள்ளனர்.
பாகவதமேளா நாடகங்களில் அனந்தபைரவி, பைரவி, தேவகாந்தாரி, ஆஹிரி, பராஸ், அடானா மற்றும் செஞ்சுருட்டி போன்ற ராகங்கள் பண்டைய பாணியில் பாடப்படுகின்றன. இந்த பாணி தற்போது வேறு எங்கும் பிரயோகிக்கப்படவில்லை. கண்டா, மான்ஜி, கும்ப கம்போதி போன்ற ராகங்கள் மிக நுட்பமாக கையாளப்படுகின்றன. குறைந்து வரும் ராகங்கள் மற்றும் பழமையான பிரயோகங்கள் இந்த நாடகங்களில் தொடர்ந்து இசைக்கப்படுகின்றன.
“பரதம்” விருது
பாகவதமேளாவுக்காக பணியாற்றிய கலைஞர்களை மதிக்க “பரதம்” என்ற விருது சங்கத்தால் வழங்கப்படுகிறது. இது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பொன்னாடையை உள்ளடக்கியது.
பாகவதமேளா நாட்டிய வித்யா சங்கத்தின் பிற பங்களிப்புகள்:
மெலட்டூருக்கு வெளியே பல்வேறு முக்கிய மையங்களில் பாகவதமேளா நாடகங்கள் நடைபெற்றுள்ளன:
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், உதாரணமாக காஞ்சிபுரம், திருவிடைமருதூர், திருச்சி
சென்னை நகரின் மியூசிக் அகாடமி, கிருஷ்ணா கான சபா, பிரம்ம கான சபா, கலாக்ஷேத்ரா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல இடங்கள்
தென்னக கலாச்சார மையத்தின் வாயிலாக திருவனந்தபுரம், ஹைதராபாத், குருக்ஷேத்திரா, டெல்லி, புனே மற்றும் மும்பை போன்ற இடங்கள்
பாகவதமேளா மரபை இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து அவர்களை தயார்படுத்தும் பணியில் சங்கம் முக்கிய பங்காற்றிவருகிறது. பரதநாட்டியத்துடன் பாகவதமேளாவின் தனிப்பட்ட நடன பாணியும் கற்பிக்கப்படுகிறது. நட்டுவாங்கமும் கற்பிக்கப்படுகிறது. இந்த அரிய கலையை குடும்பவழி சார்ந்ததாக மட்டுமல்லாமல் பல நிபுணர்கள் இதில் பங்களிப்பாற்ற செய்வதையும் சங்கம் இலக்காக கொண்டுள்ளது.
--------------------------------------
ஆர். மகாலிங்கம்
முரளி ரங்கராஜன்
முரளி ரங்கராஜன் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கத்தின் முன்னணி பாடகராக இருந்து வருகிறார். ஆண்டாள் கல்யாணம் உட்பட சில பாகவத மேள நாடகங்களை தொகுத்துள்ளார்.
![]() |
முரளி ரங்கராஜன் |