த3ருவு – 26
பூர்வீகல்யாணி ராக3மு
மிஶ்ரதாளமு
பல்லவி
தே3வதே3வ இதே3 ஸமயமய்யா – யீ ஸ்தம்ப4முன
ஆவஹிஞ்சி நன்னு ப்3ரோவுமய்யா
தேவர்க்குத் தேவனே! தருணமிது அய்யனே! இத்தூணினுள்ளே
தோன்றிட வேண்டுமே! எனைக் காத்திட வேண்டுமே அய்யனே!
அனுபல்லவி
வேவேக3மெ கருணஜூட3 வெட3லுமு கடு3வடி3னி இபுடு3 ||தேவ||
விரைந்திடுவாய் தயைகாட்டக் கிளம்பிடுவாய் கடிதேக - இப்பொழுதே || தேவர்க்குத் ||
சரணமு
ம்ரொக்கி நின்னு ஶரணுஜெந்தி னய்யா
ஜடி3யகுமனி க்3ரக்குனநனு கா3ரவிம்ப வய்யா
ரக்கஸுடி3டு நன்னுசால கக்கஸிம்ப த3லசெனய்யா ||தேவ||
பணிந்துன்னைச் சரணடைந்தேன் அய்யா!
சட்டெனவெனை அஞ்சலென்று ஆதரிப்பாய் அய்யா!
அரக்கனிவன் எனைமிகவே வருத்தவெண்ணினான் அய்யா ||
தேவர்க்குத் ||
பூ3னி நின்னு த3னுஜுட3டி3கெ3 னய்யா
அணுரேணு பூர்ணுட3னுசு தெ3லிபியுன்னா னய்யா
நேனாடி3ன மாடலெல்ல நிஜமு ஸேய யிதி3கோ3 வேள ||தேவ||
முனைந் துன்னைத் தேடுகின்றான் அய்யா!
அணுத்துகளிலும் உள்ளவன்நீ என்றுரைத்தேன் அய்யா!
நான் சொன்ன சொல்லினை மெய்ப்பிக்க இது வேளை ||
தேவர்க்குத் ||
நீது3 மஹிம தெலியநேர ட3ய்யா – ரக்கஸுடு3
நின்னு தனகு ஜூபமன்னா ட3ய்யா – யீ த3னுஜுனி
தோனு நேனு யிட்லுபந்த கி3ஞ்சினானு ||தேவ||
உனது மகிமை அறிவானோ அய்யா? – அரக்கன்
உன்னுருவை நேரில் காட்டச் சொன்னான் அய்யா! – இராக்கதனோ(டு)
அவ்வாறே நான்சபதம் செய்தேன் அய்யா - ||
தேவர்க்குத் ||
ப4க்துலகுல தை3வமு நீவய்யா – தீ3னுலகு
பெத்3த3த4னமு நீவேக3த3 வய்யா
சித்தமுதள் ளாடெ3னய்யா ஶீக்4ரமுக3ன் ராவலெய்யா ||தேவ||
பக்தர்க்குக் குலதெய்வம் நீயே அய்யா – எளியோர்க்(கு)
உற்றபெருஞ் செல்வமுமே நீதான் அய்யா!
உள்ளந்தடு மாறுதய்யா! உடனேவர வேண்டுமய்யா! ||
தேவர்க்குத் ||
தல்லிதண்ட்3ரி குருவுநீ வய்யா – நிஜமுகா3னு
தனகுதாபு ப்ராபுநீ வய்யா
அலகரினி கா3சுனடுலே அமரக3நன் னாத3ரிம்ப ||தேவ||
தாய் தந்தை குரு நீயே அய்யா – உண்மையில்
நான் கொண்ட கொழுகொம்பும் நீதான் அய்யா
அன்றொருநாள் மதகரியைக் காத்ததுபோல் எனைக் காக்க – ||
தேவர்க்குத் ||
நாமொறால கிஞ்சிகா3வ வய்யா – ஸ்ரீஹரி நின்னு
நம்மிதினிக செயிவிடு3வகு மய்யா
தாமஸமிபு டே3லஅச்யு தாப்3தி4நிலயு டை3னவரதா3! ||தேவ||
குறைகேட்டுக் காத்தருள்வாய் அய்யா – உன்னை
நம்பினேனே, கைவிடுதல் முறையா அய்யா?
தாமதமினி ஏன்தானோ அச்சுதபுரி பெருமாளே? ||
தேவர்க்குத் ||
வசனமு
அனி யிட்லு ஸ்தோத்ரம்பு3 ஜேஸின ப்ரஹ்லாது3டு3 ஹிரண்யகஶிபுனின் ஜூசி அம்போ4ஜநாபு4டு3 ஈ ஸ்தம்ப4ம்பு3னன் உன்னாட3னி தெலுபகா3 ஹிரண்யகஶிபு அத்யந்த ஆக்3ரஹம்பு3னன் ஸ்தம்ப4ம்பு3னு தன சேதி க2ட்3க3ம்பு3 த4வளிஞ்சி பொட3வகா3–னந்தட ப4க்தவாக்யஸம்ரக்ஷணார்த2மை ஸ்ரீஹரி நரஹரி ரூபம்பு3னன் கு3க்குனேயல உக்கு கம்ப3ம்பு3 னுண்டி3 ஆவிர்ப3விஞ்சே மார்க3ம்பு3 பராகு –
என்றிவ்வாறு தோத்திரஞ் செய்த பிரகலாதன் இரணியகசிபுவை நோக்கி “உந்தித்தாமரை உடையநாயகன் இத்தூணிலிருக்கிறான்” என்று உரைப்ப, இரணியன் எழுபெருஞ் சினத்துடன் அத்தூணினைத் தன் வாட்படையொளிரப் பிளப்ப, ஆங்கு அடியவன் மொழியைக் காத்திடவேண்டி மானுடமடங்கல் வடிவினில் மாயவன் விருட்டென இரும்புத்தூணில் தோன்றியது மார்க்கத்தில் பாடப்படுகிறது பராக்!
(இவ்வாறு விஷ்ணுவைத் துதித்த பிரகலாதன் இரணியகசிபுவிடம் “விஷ்ணு இத்தூணில் இருக்கிறார்” என்று கூறவும், பெரும் கோபத்துடன் அத்தூணை இரணியன் தன் வாளால் பிளக்கவும், பக்தனின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக மனிதனும் சிங்கமும் சேர்ந்த உருவத்தில் விஷ்ணுபகவான் அந்த இரும்புத்தூணில் சட்டென்று தோன்றினார். இப்பகுதி மார்க்கச் செய்யுளாகப் பாடப்படுகிறது).
த3ருவு – 27
பூர்வீகல்யாணி ராக3மு
ஆதி3தாளமு
பல்லவி
கடு3வடி3க3ட3 க3ட3க3ட3மனி புட3மியத3ரகா3
ஜடி3சிஸப்த ஸாக3ரமுலு சாலகலக3கா3
வெகுவிரைவாய் புவித்தலமும் கடகடவென் றதிரும்படி
தகவே அவ்வெழுகடலும் அச்சத்தால் நடுங்கும்படி
அனுபல்லவி
அடு3க3டு3கு3கு அலத3னுஜுண் ட3த3ரிபெ3த3ரகா3
அஸுருலதல குதலமை நரஹரி ஆவஹிஞ்செனு
அடிமேலிவர் அடிவைத்திட அரக்கர்கள் பதறும்படி
அசுரர் தலை மண்மீதுற நரசிங்கன் வந்தான்
(பூமி அதிரும்படியும், கடல்கள் ஏழும் நடுங்கும்படியும், அரக்கர்கள் பதறும்படியும், அவர்கள் தலை மண்ணில் சாயும்படியும் சிங்கமுகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மர் வந்தார்).
சரணமு
ரக்கஸுடி3டு சின்னிதனயு க3க்கஸிம்பனு
மிக்கிலிப்ர ஹ்லாது3ட3புடு3 ம்ரொக்கிவேட3னு
க்3ரக்குனதன ப3க்துனியில கா3சி ப்3ரோவனு
உக்குகம்ப3 முனநரஹரி உத்3ப4விஞ்செனு
அரக்கர்கோன் சிறுபிள்ளையை இரக்கங்கெட் டேவாட்டிட
துறக்கத்தார் தொழுநாதனை ப்ரகலாதனும் தான்வேண்டிட
சிறந்தவனாம் தன்பக்தனை சட்டெனவே காத்தருளிட
இருப்புத்தூண் பொடியாகிட நரசிங்கன் வந்தான்
(அரக்கர்களின் மன்னனாகிய இரணியகசிபு இரக்கமின்றிப் பிள்ளையை வாட்ட, தேவர்கள் வணங்கும் நாராயணனைப் பிரகலாதனும் தொழுதுகொள்ள, தன் பக்தனைச் சட்டென காப்பதற்காக, இரும்புத் தூண் தூளாகும்படி அதைப் பிளந்து கொண்டு நரசிம்மர் வந்தார்).
பு4க3பு4க3மனி தஶதிஶலனு பொக3லு நெக3ட3கா3
த4க3த4க3மனி மிகுலமண்டி மிண்டி கெக3யகா3
நிக3நிக3மனி காந்தி திஶல நிண்டி3 வெலுக3கா3
அக3ணிதமுக3 நரஹரியிபு ட3வதரிஞ்செனு.
குபுகுபுவென் றெண்டிசையும் புகையெழும்பி மண்டும்படி
சரசரவென மண்புழுதியும் விண்ணோக்கிச் செல்லும்படி
தகதகவென ஒளிமண்டலம் திசையெங்கிலும் திகழும்படி
நரனும் அலன் அரியும் அலன் நரசிங்கன் வந்தான்.
(எட்டுத் திக்கிலும் புகை பரவி சூழ்ந்துகொள்ள, நிலத்தின் அதிர்வால் கிளம்பிய புழுதியும் ஆகாயத்தை நோக்கிச் செல்ல, பேரொளி எழுந்து எங்கும் பரவி விளங்க, மனிதனா சிங்கமா என்று சொல்ல முடியாத ஓர் உருவத்தில் நரசிம்மர் வந்தார்).
வசனமு
இட்லு ஆவிர்ப4விஞ்சின ந்ருஸிம்ஹமூர்திநின் ஜூசி ஹிரண்யகஶிபு நகி3 அட்டஹாஸம்பு3 ஸேயுசு தனவத்3த3னு பரம பா4க3வதோத்தமுடை3ன ப்ரஹ்லாது3னின் நிரீக்ஷிஞ்சி யேமனி பலுகுசுன்னாடு3 –
இவ்வாறு முன்றோன்றிய நரசிங்கவுருவினை இரணியன் கண்டு நகைத்து, இடியென முழங்கி ஆரவாரித்து, தன்னருகே நின்ற உத்தமபாகவதனாம் பிரகலாதனை நோக்கி என்னெனக் கூறுவான் –
(இவ்வாறு தோன்றிய நரசிம்மரின் உருத்தைப் பார்த்து, அட்டகாசச் சிரிப்பு செய்த இரணியன், பிரகலாதனிடம் இவ்வாறு சொல்வான்).
ஶார்தூ3ல விக்ரீடி3தமு – பஞ்சபாதி3க
(ஐந்தடிகள் கொண்ட சார்தூலவிக்கிரீடிதம்)
நீவே ப4க்தஶி ரோமணீ கு3ணமணீ நீவேம னீஷீமணீ
நீவே ஸாது4ஶி கா2மணீ நருலலோ நீவேஸு ஶீலாக்3ரணீ!
நீவே பா4க3வ தப்ரியுண்டு3 பு4விலோ நீஸாடி நீவேயகு3ன்
ஏவே ளன்க3ன கோரியுண்டு3 தனகுன் ஈவேள னேலோலுடை3
ஸ்ரீவத் ஸாங்குனி கண்ட்3லஜூபி திவிகா3 (நா) சின்னாரி மாணிக்யமா. 28
அடியார்களில் மேலவன் நீயே; குணமதி நலங்களில் சிறந்தவன் நீயே!
நல்லோர்களில் தலையவன் நீயே! மனிதருள் பண்பினில் உயர்ந்தவன் நீயே!
பாகவதர்களின் அன்பனும் நீயே! உலகினில் உனக்கிணை யானவன் நீயே!
எதுநாள்முதல் தேடினேன் அவனை? இன்றுஉன் பக்தியால் மகிழச்செய்து
ஶ்ரீவத்ச மருவொடு விஷ்ணுவைக் காட்டினாய் அல்லவா என்செல்ல மாணிக்கமே! 28
(மகனே! என் செல்ல மாணிக்கமே! நீயே பக்தர்களில் சிறந்தவன். அறிவினில் உயர்ந்தவன். சாதுக்களில் மேலானவன். நற்பண்புகளால் ஓங்கியவன். பகவானிடம் பக்தி கொண்டவர்களுக்குப் பிரியமானவன். உனக்கு நிகர் நீயே தான். எப்போதிலிருந்து அந்த விஷ்ணுவைத் தேடிக்கொண்டிருந்தேன்? உன் பக்தியால் அவனை மகிழ்வித்து மார்பில் உள்ள ஶ்ரீவத்ச மருவோடு நேரே தோன்றும்படி செய்துவிட்டாயே!).
சம்பகமால
ப4ளி!ப4ளி! புத்ர கா!யிபுடு3 பா3கு3க3 னேநினு மெச்சி கொண்டிரா!
எலமினி நீகு ஸாடித4ர னெவ்வரு லேரிக நாது3 யன்னனுன்
யிலவதி4 யிஞ்சு நாடிமொதெ3 லெக்கட3 ஜூசின கா3னமீதனின்
தெலிவிக3 ப4க்தி ஜேஸியிடு தெச்சிதி வௌரகு மாரரத்னமா. 29
பலே! பலே! மகனே இன்று நன்றுனை மெச்சிக் கொள்வேன்;
தெளிவினில் உனக்கோர் ஈடு உலகினில் இல்லை; என்றன்
தமையனைக் கொன்ற மாலை இதுவரைக் கண்டிலேன்; இன்(று)
உனது பக்தியினால் அவனைக் கொணர்ந்தனை செல்வக்கண்ணே. 29
(மகனே! சபாஷ். உனக்கு இணையானவன் இவ்வுலகில் ஒருவன் இல்லை என்று இன்று பாராட்டத்தான் வேண்டும். என் அண்ணன் இரணியாட்சனைக் கொன்ற அந்த விஷ்ணுவை இதுநாள் வரை தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று உன் பக்தியால் அவனை இங்கு வரவழைத்து விட்டாயே! என் செல்வக்கண்ணா!).
மத்தேப4 விக்ரீடி3தமு
உபகா ரம்பு3லு ஸேயு வாட3னுசுமுன் னூஹிம்ப லேனைதிரா
அபுடே3 வேக3மெ நின்னு சம்பக3லவா டை3யுண்ட3 கா3மேதி3னின்
இபுடீ3 வைரினி நேனு சூட3க3லனே யெந்தைன நீவல்லனன்
ஸப2லம் பா3யெர நாது3 பந்தமிலலோ ஸத்புத்ரகா! நேடிகின். 30
நன்றே செய்திட வல்ல மைந்தனென முன்பே உன்னை எண்ணாமலே
அன்றே கொன்றிடக் கொண்ட ஆசையினில் வென்றே னில்லை – அதுநல்லதே!
இன்றே கண்ணுற பகைவன் ஆனவனைக் கண்டேன்; உன்றன் ஒருசொல்லிலே
கன்றே போலவும் வந்த நாரணனைக் கொல்வேன்! என்றன் சூள்வென்றதே. 30
(நீ உபகாரங்கள் செய்வாய் என்று முன்னே கற்பனை கூட செய்ய இயலாதவன் ஆனேனடா! அப்போதே விரைவாய் உன்னைக் கொல்ல முடிந்தவனாய் நான் இருந்திருந்தால் இந்த மண்ணில் இப்போது என் எதிரியை நான் பார்த்திருக்க இயலுமா? மைந்தா! எவ்வளவு சொன்னாலும் அரியை நேரில் கண்டு கொல்வேன் என்ற என் சபதம் இன்று உன்னால் பலித்திருக்கிறதடா!).
வசனமு
அனி யிட்லு ப்ரஹ்லாது3னின் மெச்சுகொனி ந்ருஸிம்ஹமூர்தினின் ஜூசி ஹிரண்யகஶிபு யேமனி ப3லுகுசுன்னாடு3
என்றிவ்வாறு பிரகலாதனை மெச்சிக்கொண்டு நரசிங்க வடிவைப் பார்த்து இரணியகசிபு என்னென்று கூறுவான் –
(பிரகலாதனைப் பாராட்டிய இரணியன் நரசிம்மரைப் பார்த்து இவ்வாறு சொல்வான்)
ஶார்தூ3ல விக்ரீடி3தமு
ராவய் யாமுனி முச்சுதொங்க3 யனுசுன் ராஜப்ர ஸித்3த4ம்பு3கா3
யேவே ளன்மொற பெ3ட்டுபா4க3 வதமுன் யேயேபு ராணம்பு3லன்
யேவே ளன்நினு நம்மராது3 ஜனனம் பொ3ல்லார்சி போகொ3ட்டெதௌ3
தே3வா! மஞ்சிதி3 கா3னிநீகு தலமந் தெ3ந்தை3ன போனித்துனா. 31
முனிவரர் மனத்தில் ஒளிந்தவ னேவா, கள்வனே வாவெனப் பெரும்பெயர்க் கூறி
நனிபல ஏத்தி நயம்பட விளிக்கும், பாகவதம் முதல் தொல்லைநூல் பலவும்
நினையொரு நாளும் நம்பலா காதே, பிறவிப் பெருஞ்சுழல் நீக்கிடு வாயால்;
எனையிது வரையில் அண்ட வொண்ணாதே கரந்தனை வந்தாய் விட்டிடு வேனோ? 31
(வாடா! வா! முனிவர்கள் மனதில் ஒளிந்து கொண்டவனே! கள்வனே! உன்னைப் பலவாறு போற்றி பாகவதம் முதல் புராணங்கள் வரை நயமாகப் புகழ்ந்து கூறும். ஆனாலும் உன்னை நம்பக்கூடாது என்பார்கள்; ஏனெனில் நீதான் நம்பியவர்களின் பிறவியைக் கெடுத்து ஒழித்து விடுவாயே! இது வரை என்னை உன் அருகே வரவிடாமல் மறைந்திருந்த நீ இப்போது வந்திருக்கிறாய். உன்னை எங்காவது போக விட்டுவிடுவேனா?)
ஶார்தூ3ல விக்ரீடி3தமு
ஏமோய் வென்னுட3 யின்னிநாள்ளு தனகை யேவங்க தா3கு3ண்டிவோ
ஸாமர்த்2 யம்பு3ல ஜூபவச்சி திவநீ ஸாதி4ஞ்சுடன் தெலுஸுனோய்
ஔமே லாயெஶ பா3ஷுமெச்சி தினியௌ தௌ3தௌ3து3லீ பா3புரே
நீமா யம்பு3ல கெல்ல நேனுவெறுவன் நின்னெந்து3 போ3னீனுரா. 32
வாராய் விண்டுவே! இத்தனை நாளாய் எவ்விடந் தன்னில் மறைந்திருந் தாயோ?
பேராற் றல்பல உன்னிடம் உண்டெனக் காட்ட வந்தாயோ? செய்வகை அறிவேன்!
ஆகா! நல்லது, இதுமிக நல்லது! மெச்சிக் கொள்கிறேன் உன்றனை, அம்ம!
மாயா மூர்த்தியே! வெருண்டிடு வேனோ? தப்பிச் சென்றிட விட்டிடு வேனோ? 32
(ஓய் விஷ்ணுவே! வா! இதுநாள் வரை நீ எங்குதான் ஒளிந்து கொண்டிருந்தாயோ? உன் சாமர்த்தியங்களை என்னிடம் காட்ட வந்தாயா? உன்னை என்ன செய்வதென்று எனக்குத் தெரியும். அடடா! ஆகா! நீ இங்கு வந்தது மிகவும் நல்லதாய்ப் போயிற்று; அம்மா! உனது இச்செயலை மெச்சுகிறேன். நீ காட்டிடும் மாயங்களைக் கண்டு அஞ்சுபவன் அல்ல நான். உன்னை எங்கும் தப்பித்துப் போக விட மாட்டேன்.)
வசனமு
அனி யிட்லு பலிகின ஹிரண்யகஶிபுனின் ஜூசி ந்ருஸிம்ஹமூர்தி யேமனி பலுகுசுன்னாடு3 –
என்றிவ்வாறு கூறிய இரணியகசிபுவை நோக்கி நரசிங்கமூர்த்தி என்னெனக் கூறுவார் –
(இவ்வாறு சொன்ன இரணியனைப் பார்த்து நரசிம்மர் பின்வருமாறு சொல்வார்)
ஶார்தூ3ல விக்ரீடி3தமு
ஏரா ஓரிது3 ராத்மகாப ருவடி3ன் எந்தோம தா3ந்த4ம்பு3சே
ஔரா தா3னவ பா3லுட3ஞ்சு யிஸுமந் தைனானு டெ3ந்த3ம்பு3னன்
பாரா டி3ஞ்சக நீவுயிட்லு ஸுதுனின் பா3தி4ஞ்சு டன்ஜெல்லுனா
க்ரூராத் மா!து3ர மந்துநின்னு யிபுடு3ன் கொஞ்சான நேவிடு3வரா. 33
ஏடா! நற்குணம் சற்றுமே இன்றித் துர்க்குணம் பூண்டாய்! செருக்கினில் மிகுந்தாய்!
வாடா! ராட்சசா! பாலகன் தானெனக் கொஞ்சமும் நெஞ்சில் கொண்டிடாய் ஈரம்;
பாடாய் மைந்தனைப் படுத்தவும் எண்ணி வஞ்சனை செய்ததைப் பொறுத்திட லாமோ?
கேடா! கொடியவா! ஒருக்கிலும் இனிமேல் பிழைத்திடு மாறே விடுகிலேன் உனையே! 33
(அடேய்! தீய குணம் படைத்தவனே! கேடனே! கொடியவனே! அரக்கனே! அகந்தை மிகுந்து, சிறுபிள்ளை என்றும் நெஞ்சில் கருணை காட்டாமல் மகனையே துன்புறுத்தி, தகாத வஞ்சச் செயல்களில் நீ ஈடுபடுவது கண்டு இனியும் பொறுத்திருக்கலாமோ? இனி ஒருபோதும் நீ பிழைத்து வாழ நான் அனுமதிக்க மாட்டேன்.)
சம்பகமாலா
த4ரணித லம்பு3 னன்க3லரு தன்விப ராக்ரம ஶூரு லெந்த3ரோ
கருணயு மானி நீவலெனெ கண்டகு டொ3க்கடு3 லேடு3 நாமதத்-
பருட3னி யெஞ்ச லேகப3ஹு பாபகு லாலய மௌம த3ம்பு3சே
சிறுதுனி ப3ட்டி பாத4லிட ஜேஸிதி வௌக3த3! ஓது3 ராத்மகா. 34
தரணியில் வீரம் கொண்ட தீரர்கள் எண்ணிலா தவர்கள்;
கருணையே இல்லாக் கொடியன் உன்னைப்போல் ஒருவர் உண்டோ?
செருக்கினால் மதர்ப்பு கொண்டாய்; என்னிடம் பக்தி பூண்ட
சிறுவனைப் பிடித்து வாட்டக் கருதினாய் கயவா இன்றே! 34
(உலகில் ஆயுதங்கள் ஏந்திய வீரர்களும் சூரர்களும் எத்தனையோ பேர் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவரும் உன்னளவுக்குக் கொடியவர்கள் இல்லையே; கயவனே! செருக்கினால் மதம் பிடித்துப் போனவனாகிய நீ இன்று என்னிடம் பக்தி பூண்ட சிறுவனாகிய பிரகலாதனை பிடித்து வாட்டலாம் என்று கருதினாயே!)
வசனமு
அனி யிட்லு பலிகின ந்ருஸிம்ஹமூர்தினின் ஜூசி ஹிரண்யகஶிபு யேமனி ப3லுகுசுன்னாடு3 –
என்றிவ்வாறு கூறிய நரசிங்கமூர்த்தியை நோக்கி இரணியகசிபு என்னெனக் கூறுவான் –
(இவ்வாறு சொன்ன நரசிம்மரைப் பார்த்து இரணியன் பின்வருமாறு சொல்வான்.)
த்3விபத3
பஹுகால முனநேனு ப்3ரஹ்மாதி3 ஸுருல
தஹதஹ லொந்தி3ஞ்சி த4ரபோரு லிட3க3
வெகுகால மாய்நானும் பிரமாதி தேவர்
கெடுமாறு போரிட்டுத் தோற்றோடச் செய்ய
க4னகேஸ ரினிக3னி கரிதா3கி3 னட்லு
புனுகு3ரா ஜுனிகி பு3வினி ஸர்பமுலு
னலுகசே புட்டலோ னணகி3யுன் னட்லு
கனகபுன் ஜூசிப்4ருங் க3முலோடி3 னட்லு
அரிமாமுன் மதயானை அரண்டோடு மாப்போல்
நெடுவானில் கருடன்முன் புவிவாழும் சர்ப்பம்
தடுமாறிப் புற்றினுள் சென்றிரியு மாப்போல்
சண்பக மலர்கண்டு வண்டோடு மாப்போல்
கு3ப்3ப3லி பவிகின் கொ3னிஜடி3ஸி னட்லு
பெ3ப்3பு3லினி க3னிகு3க் கப்3பெ3த3ரி னட்லு
வச்சிரப் படைதாக்கிச் சிதறுமா மலைபோல்
வெம்புலியைக் கண்டஞ்சி நாயோடு மாப்போல்
யேசோட தா3கி3யுண்டி விதி3வரகு நீவு
யிச்சடிகி வச்சினதி3 யேமிகா ரணமு
எங்கோடிச் சென்றுநீ இதுவரையொ ளிந்தாய்?
எக்காரணம் கொண்டு இங்கின்று வந்தாய்?
பாரிபோகு மிகனு பருவடி3 நீது3
ஶூரத்வ மெல்லனே சூசெதனு யிபுடு3
இனியேனும் ஓடாமல் என்முன்பு நின்று
உன்வீர தீரங்கள் என்னென்று காட்டு!
ஸர்பரா ஜுனிபடி3கெ3 சாடுன யுன்ன
கம்புதா3 யிட்டட்டு கத3லிபோ க3லனா
படங்கொண்ட கருநாகம் அடிநின்று அஞ்சும்
புல்விரியன் இங்கங்கு செல்லாது கண்டாய்!
லலிமீறி க்ஷூடகோ லனுசுகொன்ன (சுட்டுகோலனு சிக்குகொன்ன)
ஜலசரம்பு3வீடி3 ஜனிபோவ தரமா
இரைதின்னும் ஆசையால் தூண்டிலில் சிக்கிய
நீர்வாழும் சிற்றுயிரும் தப்பாது பாராய்!
அனலமண்டின யீக3, அடுபாரி போனா
பனிபூ3னி வச்சுயா பாடிகா லுனிசே
வாவிரி பாஶான படிகட்டு ப3டி3ன
ஜீவுடு3 தக3ராரு ஜேஸிபோ க3லனா
தீயினை அண்டிய விட்டில்பி ழைக்குமோ?
ஆயுள்மு டித்திடும் கொள்கையால் வந்திட்ட
காலனின் பாசக்க யிற்றினில் கட்டுண்ட
சீவனும் பிடிவாதம் செய்தால்பி ழைக்குமோ?
கு3டி3மிறகி பூ3சிகி யுண்டுயே மட்லு
கட3லிக்3ரோ லினமுனிகி கால்வயே பாடி
பெருமின்னல் ஒளிவீச மின்மினியும் எம்மட்டு?
கடலுண்ட முனிவற்குக் கால்வாயும் எம்மட்டு?
யெனுக3கு தலபேனு எந்தமாத் ரம்பு3
பூ3னிஜூ ட3கனேநா முந்து3நில் சிதிவி
யானைக்கும் பேனுக்கும் நிகர்சொல்ல லாமோ?
ஆராய்ந்து பாராமல் என்முன்பு நின்றாய்!
இதியேடி ரூபமு இதியேடி கெ3லுபு
இதியேடி மக3தனம் பி3தியேடி நட3த
இதியேடி ஶௌர்யம்பு3 இதியேடி க4னமு
இதியேடி பௌருஷம் பி3தியேடி பலுகு
இது என்ன உருவம்? இது என்ன வீரம்?
இது என்ன ஆண்மை? இது என்ன செய்கை?
இதில் என்ன திறமை? இதில் என்ன பெருமை?
இது என்ன வலிமை? இது என்ன வார்த்தை?
அனிலோன திரமுகா3 அடுநிலுவ க3லவே
முனுபெநீ க4னஶௌர்ய முலக3ண்டி பத3ரா.
சமரினில் திரமாக எதிர்மோது வாயா?
சரிசமம் ஆவாயா? அறிவேன் உன் திறலை.
(பலகாலமாக நான் பிரம்மா முதலிய தேவர்களோடு போர்புரிந்து அவர்களைத் தோற்று ஓடும்படி செய்திருக்கிறேன். என்னைக் கண்ட நீ, சிங்கத்தைக் கண்ட யானை போல, கருடனைக் கண்ட பாம்பு போல, சண்பகமலரைக் கண்ட வண்டு போல, வச்சிராயுதத்தைக் கண்ட மலை போல, புலியைக் கண்ட நாய் போல அஞ்சி ஓடி ஒளிந்தாய். எங்கு சென்று இத்தனை நாளாய் ஒளிந்திருந்தாய்? எதற்காக இன்று இங்கு வந்தாய்? இனிமேலாவது என்முன்னே நின்று உன் வீரதீரம் எப்படி என்று காட்டு. கருநாகம் படம் விரித்து நிற்க, புல்விரியன் பாம்பு அதனருகில் சிக்கினால் இங்கு அங்கு நகர முடியுமா? தூண்டிலில் சிக்கிய நீர்வாழ் பிராணி தப்ப முடியுமா? நெருப்பினில் விழுந்த விட்டில் பூச்சி தான் பிழைக்குமா? காலனின் பாசக்கயிற்றில் சிக்கிய உயிர் நயமாய்ப் பேசி உயிர்பிழைக்க முடியுமா? மின்னல் வெளிச்சத்தின் முன் மின்மினிப்பூச்சி எம்மாத்திரம்? கடலையே குடித்த அகத்திய முனிவனுக்கு ஓரு கால்வாய் எம்மாத்திரம்? யானையும் பேனும் ஒன்றோடு ஒன்று சரிசமமாய் மோத இயலுமா? இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் என் முன்பு வந்து நின்றாயே! என்னடா உருவம் இது? இதுவா உன் வீரம்? இதுவா உன் ஆண்மை? இதுவா உன் செயல்திறமை? உன் பேச்சு எப்படி இருக்கிறது! இதில் என்ன பெருமை இருக்கிறது? என்னோடு சரிசமமாய் உறுதியாக நின்று உன்னால் போர் புரிய முடியுமா? போதும். உன் பிரதாபம் என்னவென்று ஏற்கெனவே எனக்குத் தெரியும்.)
உத்பலமால
தாபஸ மான ஸாப்3ஜமுன தா3கி3 ஸதா3நிவ ஸிஞ்சி யுண்டிவோ
ஆபர தத்வ மந்து3வஶ மைவெலி ராகனெ ஜொச்சு கொண்டிவோ
காபுர மெந்து3 ஜேஸிதிவி கானக யின்னிதி3 னாலு தா3கஹே!
பா3வுரெ! நின்னு கண்டிதன பந்தமு செல்லெனு மெச்சு கொண்டிரா! 35
தவசியர் மனத்தா மரையில் ஒளிந்துநீ வாழ்ந்துவந் தனையோ
பரவெளி யதனில் ஒடுங்கி வெளிப்படா திருந்துவந் தனையோ
கரந்துநீ எங்குறைந்தாய் இத்தனை நாளாய்க் காணேன்
நலமடா! இன்று கண்டேன் ஆகையால் மெச்சுகின்றேன்! 35
(முனிவர்களுடைய மனதில் இத்தனை நாள் நீ ஒளிந்து வாழ்ந்திருந்தாயா? எல்லாவற்றுக்கும் மூலமான பரவெளியில் சென்று ஒடுங்கி வெளிப்படமல் இருந்து விட்டாயா? எங்கு தான் மறைந்திருந்தாய்? இத்தனைக் காலமாய் நீ அகப்படவே இல்லையே! சரி, நல்லது! இன்றாவது என்முன் வந்து சேர்ந்தாயே! உன்னை அதற்காக மெச்சிக் கொள்கிறேன்.)
வசனமு
அனி யிட்லு பலிகின ஹிரண்யகஶிபுன் ஜூசி ந்ருசிம்ஹமூர்தி யேமனி ப3லுகுசுன்னாடு3 –
என்றிவ்வாறு கூறிய இரணியகசிபுவை நோக்கி நரசிங்கமூர்த்தி என்னெனக் கூறுவார் –
(இவ்வாறு சொன்ன இரணியனைப் பார்த்து நரசிம்மர் பின்வருமாறு சொல்வார்)
த்விபத
ராக்ஷஸா! நீயந்த ரங்க3ம்பு3 லோன
தா3க்ஷிண்ய மிந்தைன த3லசனே லேவு
அரக்கனே! உன்னுடைய நெஞ்சத்தி னுள்ளே
அருளென்ப தொருசிறிதும் இல்லாத தென்னே!
உரக3முலு கரிபிஞ்சி ஒதரஜே ஸிதிவி
ஸரகுன விஸமிச்சி சம்பகோ3 ரிதிவி
நடுக்குற நாகங்கள் தீண்டுமா றேவினாய்!
மடக்கெனக் குடித்திடக் கடுநஞ்சு ஊட்டினாய்!
கொண்ட3பை னெக்கிஞ்சி கூலத்3ரோ ஸிதிவி
மெண்டு3யே னுகு3சேத மெட்டனிச் சிதிவி
மலையுச்சி மேலேற்றித் தரைமோத வீழ்த்தினாய்!
தலையுருள மதயானைக் கால்களால் இடறினாய்!
கமலதி4 லோப3ட்டி க3ட்டிவே ஸிதிவி
கு3மிகொ3னி ஜெட்லசே கும்முலா டி3திவி
கல்லோடு கட்டியே கடலோடு வீசினாய்!
பொல்லாப்பு குன்றாது நீற்றறையி லிட்டாய்!
இட்லுபா தி4ஞ்சிநீ கெறுக3யு லேக
கடகடா! தனயுபை க2ட்3க3மெத் திதிவி
ஊறுகள் எண்ணின்றி செய்துமே அறிவின்றி
உறுமகனை வாள்கொண்டு துணியத்து ணிந்தாய்!
தனதீ3ப மனுசுமுத்3 தா3டே3தி3 க3லதா3
பெனுபாமு னெத்தி செயி பெனகே3தி3 க3லதா3
குலவிளக் கிவனென்று கொஞ்சுவது முறையா?
கருநாகம் பலகொண்டு கொல்லுவது முறையா?
சிறுததோ ஸ்னேஹம்பு3 ஜேஸேதி3 க3லதா3
ஶரதி3லோ சேயிதோ ஸலிபேதி3 க3லதா3
சிறுவனோ(டு) அன்புபா ராட்டுவது முறையா?
சிறைசெய்து கல்பூட்டி வீசுவது முறையா?
இடுவண்டி கு3ணமுநீ கேலகோ க3லிகெ3
குடிலசித் தமுவீடு3 கு3ட்டுதோ ப்3ரதுகு
எதுபற்றி வந்ததோ உனக்கிந்த குணக்கேடு?
கெடுபுத்தி யைவிட்டு நல்வாழ்வு நாடு!
(அடேய் ராட்சசா! உன் மனதில் கருணை என்பது சிறிதும் இல்லாமல் போய்விட்டதே! பாம்புகளை அனுப்பிச் சிறுவனைத் தீண்டச் செய்தாய்; பின் கடும் விஷத்தை அவனுக்குப் புகட்டினாய்; அதுவும் போக மலையுச்சியிலிருந்து கீழே விழும்படி எறிந்தாய்; யானையின் காலால் அவன் தலையை இடறச் செய்தாய்; கல்லில் கட்டிக் கடலில் வீசினாய்; எரித்துச் சாம்பலாக்கும் நீற்றறையில் அடைத்தாய்; இவ்வளவு செய்தும் அவன் சாகவில்லை என்ற பின்னர் அறிவே இல்லாமல் இன்று பெற்ற மகனை வாளால் வெட்டிப்போடவும் துணிந்தாய்; உன் குலத்தை விளக்க வந்த தீபம் என்று அவனைக் கொண்டாடுவது முறையா, அல்லது நாகங்களை ஏவிக் கொல்வது முறையா? அவனிடம் பாசம் காட்டுவது முறையா கல்லில் கட்டிக் கடலில் போடுவது முறையா? எதனால் உனக்கு இப்படிப்பட்ட கெட்டபுத்தி வந்ததோ? இனிமேலாவது இவற்றைக் கைவிட்டு நல்வாழ்வை விரும்பு.)
சம்பகமால
நிலுநிலு பாரி போகுமிக நீது3ப3 லாப3ல மெல்ல ஜூசெத3ன்
ஜலக3ட3 கி3ஞ்சு வாட3னுசு ஸாருகு நாதுப3 லம்பு3னெ றுங்கு3வா
ஜலஜப4வாதி3 தே3வதலு ஸௌருக3 ஜூட3து ரம்பு3 லோனனே
நுலிநுலி ஜேஸெத3ன் யிகனு நாயொக ஶௌர்யமு ஜூடு3 மிப்புடு3ன். 36
நில்லடா பகைவா இங்குன் வல்லமை கெடுக்க வந்த
ஒல்லென வெல்ல ஒண்ணா என்வலி அறிய மாட்டாய்
உந்தியங் கமலத் தோன்றல் முதலாய தேவர் யாரும்
வந்தனை செய்து போற்றக் கொல்லுவேன் கடிதே இன்றே. 36
(பகைவனே! நில்நில்! உன் ஆற்றலை அழிப்பதற்காக வந்திருப்பவனும் எளிதில் வெல்ல முடியாதவனுமாகிய என்னுடைய வலிமையை நீ அறிய மாட்டாய். என் உந்தித்தாமரையில் தோன்றிய பிரமன் முதலிய தேவர்கள் எல்லோரும் தொழுதுப் போற்றும்படி உன்னை விரைவில் இன்றே கொல்வேன்.)
வசனமு
அனி யிட்லு பலிகின ந்ருஸிம்ஹமூர்தினின்ஜூசி ஹிரண்யகஶிபு யேமனி ப3ல்குசுன்னாடு3 –
என்றிவ்வாறு கூறிய நரசிங்கமூர்த்தியை நோக்கி இரணியகசிபு என்னெனக் கூறுவான் –
(இவ்வாறு சொன்ன நரசிம்மரைப் பார்த்து இரணியன் பின்வருமாறு சொல்வான்.)
த்விபத
நரம்ருக3 ரூபமை நாதோட3 யீரீதி
பரிபரி வித3முலை பலுகவச் சேதி3
நரமிருக உருவினில் என்னோடு இவ்வாறு
பலப்பல விதமாக பேசமுற் பட்டது
(அடேய்! மனிதனும் சிங்கமும் கலந்த உருவில் வந்து நின்று நீ எனக்கு இப்படி விதவிதமாக உபதேசிப்பது எப்படி இருக்கிறது தெரியுமா?)
நெறமத்ஸ்ய முனகீத நேர்பிஞ்சி னட்லு
தரிபுலிகி தா3ட்லுதக3 ஜூபினட்லு
மீனுக்கு நீந்திடக் கற்பிக்கு மாப்போல
மானுக்குத் தாவிடப் போதிக்கு மாப்போல
(தெலுங்கில் ‘புலிக்கு’ என்றுள்ள பாடம் தமிழில் ‘மானுக்கு’ என்று ஓசையின்பம் கருதி மாற்றப்பட்டிருக்கிறது.)
ஜாஜிகி வாஸனலு ஸமஜேர்சி னட்லு
கோ3தா3ரி கினிசல்வ கு3ணமிச்சி னட்லு
முல்லைக்கு நறுமணம் கூட்டமுனை வதுபோல
கங்கைக்குச் சீதளம் சேர்க்கமுயல் வதுபோல
(ஓசையின்பம் கருதி ‘கோதாரி’ என்னும் தெலுங்கு பாடம் ‘கங்கை’ என்று மாற்றப்பட்டிருக்கிறது)
பாமுகு விஷமு கல்பஜேஸி னட்லு
கா3முல ரேனிகி காந்திச்சி னட்லு
பாம்புக்கு நஞ்சினை ஊட்டமுயல் வதுபோல
பரிதிக்கு ஒளியினைக் காட்டவந் ததுபோல
கா3லிகி வேக3ம்பு3 கல்பிஞ்சி னட்லு
காலாக்3னிகி வேடி3 கா3விஞ்சி னட்லு
காற்றுக்குக் கடுவிசை சாற்றமுயல் வதுபோல
கனலுக்கு வெப்பத்தின் குணஞ்சொல்லு வதுபோல
(மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுப்பதைப் போலவும், மான்குட்டிக்குத் தாவக் கற்றுக் கொடுப்பதைப் போலவும், முல்லைப்பூவுக்கு வாசனை கூட்ட முயல்வதைப் போலவும், கங்கை நீருக்கு குளிர்ச்சி சேர்க்கப் பார்ப்பதைப் போலவும், பாம்புக்கு விஷம் கொடுப்பதைப் போலவும், சூரியனுக்கு வெளிச்சம் தருவதைப் போலவும், காற்றுக்கு வேகம் கற்பிக்க முயல்வதைப் போலவும், நெருப்புக்கு உஷ்ணம் என்னும் குணத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பது போலவும் வேடிக்கையாக இருக்கிறது).
தெலியனி வாடி3கி தெ3லுப வச்சேவு
ப4ளிப4ளி யீவண்டி பலுகுலே டிகிரா
தெரியாத விடயமா தெரிவிக்க வந்தாய்?
சரிசரி! இதுபோன்ற வீண்பேச் செதற்கு?
வச்சின பனிஜூடு3 வாவுல வீடு3
சச்சர லோநீவு ஸாதி4ம்ப லேவு
வந்தவே லையைப் பார், உளறலை விடடா!
என்றனை வெல்லுவது உனக்குவரு மோடா?
நெய்யமா டி3தேயிங்க நேவின ஜால
கய்யமாட3னு ரார கத3லி யீவேள.
வாயாடி நின்றால் இனிக்கேட்க மாட்டேன்
போராட வாடா பாய்ந்துஇப் பொழுதே!
(ஏதோ எனக்குத் தெரியாத விஷயத்தைச் சொல்வது போல் பேசுகிறாய்! எதற்கு வீண்பேச்சு? உளறலை விட்டுவிட்டு வந்த வேலையைப் பார். உன்னால் என்னை வெல்ல முடியுமா? இனி நீ பேசும் வெட்டிப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன். இப்பொழுதே என்னுடன் போர் புரியப் பாய்ந்து வா).
உத்பலமால
கண்டினி நீது3 பௌருஷமு கந்து3னி கையிடு வச்சி னாவுவை
கண்டி ஸுராது3லன் தொலுத க3ர்வமுலன் னணகி3ஞ்சி னப்புடீ3
ப3ண்டுத3னம்பு3 கா3னமடு பைதனயந்தனு சம்பி யுன்னயா
கண்டுத3னம்பு3 தீ3ர்சுகொன க்3ரக்குனநாது3 ப3லம்பு3 ஜூடு3மா. 37
கண்டனன் உன்றன் ஆண்மை! வந்தனை பிள்ளைக் காக!
கண்ணிமைச் சிமிட்டா தோரைப் பொன்றுமா வென்ற நாளில்
கண்டிலேன் உன்றன் வீரம்; பின்னரோ தமைய னாரைக்
கொன்றனை; என்றன் வைரம் தீரவே அடரு வேனே! 37
(அடேய்! உன் ஆண்மை எப்படிப்படதென்று பார்த்துவிட்டேனடா! இப்போது இந்தப் பிள்ளைப் பிரகலாதனுக்காக வந்திருக்கிறாய். ஆனால் அன்று இமையாக் கண்களை உடைய தேவர்களின் கர்வம் அழியுமாறு நான் வென்றபோது உன் பராக்கிரமம் எங்கும் வெளிப்படவே இல்லையே! பின்னொரு நாள் என் அண்ணனாகிய இரணியாட்சனை நீ கொன்றதால் உன் மீது நான் கொண்ட பகை தீரும்படியாக இன்று உன்னைத் தாக்குவேன். என் வலிமையைப் பார்).
வசனமு
அனி யிட்லு பலிகின ஹிரண்யகஶிபுனின் ஜூசி ந்ருஸிம்ஹமூர்தி ஏமனி பலுகுசுன்னாடு3 –
என்றிவ்வாறு கூறிய இரணியகசிபுவை நோக்கி நரசிங்கமூர்த்தி என்னெனக் கூறுவார் –
(இவ்வாறு சொன்ன இரணியனைப் பார்த்து நரசிம்மர் பின்வருமாறு சொல்வார்)
கவி மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி |
ஓரோரி ராக்ஷஸா! ஓபாப சரிதா!
ஈரீதி நாதோனு யெது3ராட3 தரமா
கேளடா ராட்சசா! கேள் மகாபாவி!
வாளரக்கா! எனை எதிர்த்திடு வாயோ?
சின்னிபா3 லுனிநீவு ஸேயுபா3 த4லகு
யின்னாள்ளு தாளிதி னிகனோர்வ லேனு
இளையபா லகனுக்கு நீசெய்த கொடுமைகள்
இதுவரை பொறுத்தேன்; இனியேற்க மாட்டேன்;
(அடேய்! ராட்சசா! பாவச் செய்ல்களில் ஈடுபடும் அரக்கா! என்னை நீ இவ்வாறு எதிர்ப்பது தகுமா? அந்த சின்னஞ்சிறு பிள்ளையாகிய பிரகலாதனுக்கு நீ இதுவரை செய்த கொடுமைகளைப் பொறுத்திருந்தேன். இனிமேலும் பொறுத்திருக்க மாட்டேன்.)
பா4வம்பு3 லோநீகு ப4யமிந்த லேக
தேவக3ந் த4ர்வுல த்3விஜுலதி3க் பதுல
பீதியே சற்றேனும் நெஞ்சத்தில் இல்லாமல்
வேதியர் திசைப்பாலர் தேவகந் தருவர்
அத3னபோ ருலுபெ3ட்டி அலயஜேஸிதிவி
அதிகா3க பு4வினியா கா3தி3த4ர் மமுலு
செரிபிதி விண்டிஸுருல ஶீலம்பு3 லன்னீ
பரமமௌ னுலப3ட்டி பா3த4ஜேஸிதிவி
யாவரும் அழலவே யுத்தங்கள் செய்தாய்;
அதுவன்றி பூமியில் வேள்விகள் தவங்கள்
கெடுத்தாய் நசித்தாய் தருமங்கள் நலிய;
முனிவரை இருடியரை வதைத்தே வாட்டினாய்;
(நெஞ்சில் பயம் என்பதே இல்லாமல் அந்தணர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், திக்பாலகர்கள் என்று எல்லோரையும் துன்புறுத்திப் போர் புரிந்தாய்; அதுமட்டும் அல்லாமல் யாகங்கள், தவங்கள் போன்றவற்றைக் கெடுத்தழித்து தர்மங்கள் குன்றிப் போகும்படியும் செய்தாய். முனிவர்களையும் ரிஷிகளையும் வதைத்து வாட்டினாய்.)
ஸரஸஸஜ் ஜனுலனு சால கோ3ஸிதிவி
யெறுகு3து3 னாநாடெ யீது3டு3கு லெல்ல
நல்லோரைச் சான்றோரை அரட்டி வெருட்டினாய்;
பொல்லாங்கு செய்தாய்; எல்லாமும் அறிவேன்
தெப்புன இந்த்3ராதி3 தே3வதல் ஜூட3
அப்புடே3 நீக3ர்வ மணகி3ந்து நேனு
அன்றே இந்திரன் முதலாய இமையவர்
நன்றே காணவுன் செருக்கழித் திருப்பேன்
(நல்ல சாதுக்களையும், கற்றறிந்த மேலோரையும் அதட்டி உருட்டினாய்; தீமைகள் பலவும் புரிந்தாய். இவை எல்லாவற்றையும் நான் நன்றாகவே அறிவேன். அப்பொழுதே உன்னுடைய அகம்பாவத்தை இந்திரன் முதலாய தேவர்கள் காணும்படியாக என்னால் அழித்திருக்க இயலும். ஆனாலும்…)
குப்பலோ மாணிக்ய கு3ளிகயுன் னட்லு
சிப்பலோ முத்யாலு செலுவொந்தி3 னட்லு
குப்பையில் மாணிக்கம் கிட்டுவது போல
சிப்பியில் முத்துக்கள் திரளுவது போல
னவ்வனம் பு3னதிருக3 நலுபில்லு லந்து3
ஜவ்வாஜி புனுகு3ன் ஜனியிஞ்சு ரீதி
அவ்வனம் அலையுமோர் பூனையின் பிட்டத்தில்
சவ்வாதும் நறும்புனுகும் தோன்றுவது போல
வரமொப்ப கா3பரம வைஷ்ணவ ப4க்தி
பரிபூர்ணு டை3னட்டி பா3லுண்ணி நீவு
நலந்தரும் வைணவ பக்தியில் சிறந்த
குலமகன் உன்னிடம் தோன்றினான் அதனால்
(குப்பையில் மாணிக்கக் கல் கிடைப்பது போல, சிப்பியில் முத்துக்கள் உருவாவதைப் போல, காட்டில் திரியும் கரிய பூனையின் பின்பாகத்திலிருந்து வாசனை மிக்க புனுகு தோன்றுவது போல, போயும் போயும் உன்னிடமிருந்து விஷ்ணுபக்தியில் சிறந்த பிரகலாதன் தோன்றியிருக்கிறான்.)
கன்னாவு கா3வுன கருணஜே ஸிதினி
மன்னிம்ப னிகமீத3 மரிவேடி3 னானு
பழிப்படும் பிழைபல பரிவொடு பொறுத்தேன்
பணிந்தினி வேண்டினும் பொறுத்திட மாட்டேன்
பு3த்3தி4ஹீ னுண்டை3ன புத்ருண்ணி ப3ட்டி
தத்3த3யு பா3தி4ம்ப தகி3லெவை ரம்பு
அறிவீனன் ஆகியே அன்புள்ள மைந்தனை
அழித்திடும் வெறியுடன் அறைகூவி நின்றாய்
மந்து3டா3 நினுஜம்ப மஹிதரூ பம்பு3
இந்து3கை பூ3னிதி யிதிநித்ய முக3னு
மந்தனே உனைக்கொல்ல மானுட மடங்கலின்
வெந்திறல் உருக்கொண்டு புவித்தலம் வந்தேன்
(ஆகையால் தான் பழிக்கத்தக்க உன்னுடைய குற்றங்கள் யாவற்றையும் பொறுத்திருந்தேன். இனி பணிந்து மன்றாடினாலும் பொறுமை காட்ட மாட்டேன். அறிவே இல்லாமல் அன்புக்குரிய சொந்த மகனையே கொல்லவேண்டும் என்று வெறிகொண்டு போட்டிக்கு அழைக்கிறாயே. மந்த புத்தி உடையவனே! உன்னைக் கொல்வதற்காகத் தான் நரசிம்மன் என்னும் பெருவலிமை வாய்ந்த உருவத்தில் இந்நிலவுலகுக்கு வந்தேன்.)
நிப்புதோ பக3ஜேஸி நிலுசுட க3லதா3
அப்புடே3 பைகம்மு னனு வினலேதா3
நெருப்பினைப் பகைத்தே நண்ணுவ துண்டா?
விருட்டெனப் பரவிக் கொளுத்திடும், மூடா!
புட3மிலோ தனப3லம் பு3னகுநீ வேது3ரா
நிடுத3மு க3லகப்ப நிலுசுசந் த3முன
புடவியில் எனக்கெதி ராகநீ புடைத்தது
தடியுடை தவளையே முன்னின்ற தொத்தது
(நெருப்போடு பகைசெய்து அதை நெருங்கிச் செல்பவர்கள் உண்டா? அருகில் சென்று வளைத்தால் அது விருட்டென்று பரவி உன்னையே அழித்துவிடுமே மூடனே! எனக்கு எதிராக இப்படி நீ குரலெழுப்பி நிற்பதைப் பார்த்தால் நீண்ட தவளை ஒன்று ஓசையிடுவது போல் எனக்குத் தெரிகிறது.)
மஹிகா3ல முனசிக்கு மத்ஸ்யம்பு3 ரீதி
அஹிக3ரு டு3னி முத்3து3 அருதெ3ஞ்சு பகி3தி3
நெடுந்தூண்டில் தனில்மீனம் சிக்குவது போலத்
கொடுஞ்சிறைக் கழுகிடைப் படும்பாம்பு போலத்
தக3ருபெ3ப்3 பு3லிசேத தகு3லுகொன் னட்லு
அக3கொனி நாசேத அடுலஜிக் கிதிவி
தகரொன்று புலிமுன்பு தவறிவந் ததுபோல
அகப்பட்டுக் கொண்டாய் என்கையில் இன்று;
ப்ராகடம்பு3க3 நின்னு ப3ட்டியீ க்ஷணமு
சீகாகு ஜேஸெத3னு ஶீக்3ரமுன னிபுடு3.
சிக்கெனத் தூக்கியே இக்கணம் உன்னை
அக்கக்காய்ச் சட்டெனக் கிழித்திடு வேன்காண்!
(தூண்டிலில் மீன் தானே வந்து சிக்கிக் கொள்வதைப் போல, கழுகிடம் பாம்பு அகப்பட்டுக் கொள்வதைப் போல, புலியிடம் மறியாடு தவறி வந்து மாட்டிக் கொண்டதைப் போல, என் கையில் இன்று நீ அகப்பட்டுக் கொண்டாய். உன்னை லாகவமாய்ப் பிடித்து இப்பொழுதே துண்டுதுண்டாகக் கிழித்துப் போட்டு விடுகிறேன் பார்!)
வசனமு
அனி யிட்லு பலிகின ந்ருசிம்ஹமூர்தினின் ஜூசி ஹிரண்யகஶிபு யேமனி பலுகுசுன்னாடு3 –
என்றிவ்வாறு கூறிய நரசிங்கமூர்த்தியை நோக்கி இரணியகசிபு என்னெனக் கூறுவான் –
(இவ்வாறு சொன்ன நரசிம்மரைப் பார்த்து இரணியன் பின்வருமாறு சொல்வான்)
சம்பகமால
ஹரியணு மாத்ர மேஜனன மப்3து4ல யந்து3ரு பெத்3த3 லெந்த3ரோ
அறஸித லஞ்சி ஜூட3அவி யன்னியு த3ப்3ப3ற ஸேய பூ3னியீ
நரம்ருக3 ஜன்ம மெத்திதிவி நாலுக பண்டு3ல வெள்ள பெ3ட்டுசுன்
மரிதல வ்ராலு தப்பது3ர மாபதி கோ3பதி தாத கைனனுன். 38
நான்முகன் படைத்த சீவ கோடிகள் வையம் யாவும்
நாரணன் கூறே என்னும் மறைமொழி பொய்யாய்ப் போக
நரசிங்க உருவில் வந்தாய் நாவொடு பல்லைக் காட்டி;
நறைமலர் அயனும் அரனும் ஓடினர்; நீயெம் மட்டே? 38
(பிரமனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளும் அண்டங்களும் நாராயணனின் ஒரு சிறு அம்சம் தான் என்று பெரியோர்கள் கூறிய கூற்றையெல்லாம் பொய்யாக்கும் விதமாக மனிதனும் சிங்கமும் கலந்த உருவத்தில் பல்லையும் நாக்கையும் வெளிக்காட்டிக்கொண்டு வந்திருக்கிறாய். அந்த பிரம்மாவும் சிவனுமே என்னைக் கண்டு அஞ்சியோடினர் என்றால் நீ எம்மாத்திரம்?)
ஶார்தூ3ல விக்ரீடி3தமு
ரோஸத் வம்பு3லு க3ல்கு3ஶூரு ட3யிதே ரூபம்பு3 பா3பிஞ்சியீ
வேஸம் பு3ல்கொ3னி வச்சிநில்து வடரா! வேவேக3 யுத்3த4ம்பு3னன்
நீஸா மர்த்2யமு நீப3லாப3 லமுலன் நீமுச்சு ஶௌர்யம்பு3லன்
நீஸா ஹஸ்யமு நீது3பௌரு ஷமுலன் நேனிந்து3 சூபிஞ்செத3ன் 39
சூடும் சுரணையும் உள்ளவன் தானெனில் சுயரூ பத்தினைச் சிரிக்கவே மாற்றி
வேடம் தாங்கியே வந்த தென்னேடா! வேகமாய் என்னுடன் யுத்தமே புரிவாய்!
போதும் உன்பலம் துர்பலம் அளந்தே வெற்றுவாய் வீரம் எவ்வள(வு) என்றே
பாரில் யாவரும் கண்டுகொண் டிடவே வெஞ்சமர் செய்தே வென்றிடு வேனே 39
(நீ சூடு, சுரணை போன்ற உணர்ச்சிகள் கொண்ட வீரன்தான் என்றால் எல்லோரும் சிரிக்கும்படியாக உன் சுயரூபத்தை மாற்றிக்கொண்டு இப்படி ஒரு வேடத்தில் வரவேண்டிய தேவை என்னடா? என்னுடன் சீக்கிரம் யுத்தம் செய்திடு. போதும்! உன் உண்மையான பலம் என்ன, பலவீனம் என்ன என்று அளந்து, அதில் வெறும் வாய்ப்பேச்சு எவ்வளவு என்று உலகில் உள்ளவர்கள் எல்லோரும் தெரிந்துகொள்ளுமாறு போர் செய்து உன்னை வென்று காட்டுகிறேன்).
வசனமு
அனி யிட்லு பலிகின ஹிரண்யகஶிபுனின் ஜூசி ந்ருசிம்ஹமூர்தி யேமனி ப3லுகுசுன்னாடு3 –
என்றிவ்வாறு கூறிய இரணியகசிபுவை நோக்கி நரசிங்கமூர்த்தி என்னெனக் கூறுவார் –
(இவ்வாறு சொன்ன இரணியனைப் பார்த்து நரசிம்மர் பின்வருமாறு சொல்வார்).
கந்த3பத்3யமு
சிக்கிதிவிக நினுவிடுவன்
க்3ரக்குனநீ கடு3புசிஞ்சி க3லபே கு3லனுன்
மிக்கிலிதி3வி ஜுலுஜூட3க
யிக்3கு3ன மெட3 வேஸுகொந்து யீக்ஷண முனனே. 40
சிக்கிய வுன்னை விடமாட்டேன்
சட்டென வுன்றன கட்டினைக் கீண்டங் குற்றிடுங் குடலினையே
அக்கினி யிந்திரர் மற்றவர் காண
விக்கணமே மனந் திக்கென வேகண் டத்தினிற் சூடிடுவேன் 40
{சிக்கிய உன்னை விடமாட்டேன்
சட்டென உன்றன் அகட்டினைக் கீண்டு அங்கு உற்றிடும் குடலினையே
அக்கினி இந்திரர் மற்றவர் காண
இக்கணமே மனம் திக்கெனவே கண்டத்தினில் சூடிடுவேன்.}
(என்னிடம் சிக்கிக் கொண்ட உன்னை இனி விடமாட்டேன்! விரைவாய் உன் வயிற்றைக் கிழித்து உள்ளே இருக்கும் குடலை தேவர்கள் யாவரும் காணும்படியாக இப்பொழுதே என் கழுத்தினில் மாட்டிக் கொள்வேன்).
கவி மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி
தெங்குலிருந்து தமிழில் - விக்னேஷ்வரன் புதுச்சேரி, கார்த்திக் ஓசூர், ஜான்சி
பாகவத சேவையும் பிரஹலாத சரிதமும் - என்.வி. தேவிபிரசாத், என். ஶ்ரீநிவாசன்
![]() |
விக்னேஷ்வரன் புதுச்சேரி |