Wednesday, 9 July 2025

ஊரும் கலையும் - பி.எம். சுந்தரம்

‘பாகவத மேளா’ தஞ்சை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் திருவிழாக்களின் போது நாட்டிய நாடகமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்த்துக்கலை. ‘பாகவதர்’ என்ற சொல்லுக்கு ‘ஶ்ரீ வைஷ்ணவத்தில் விஷ்ணுவின் தொண்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விஷ்ணுவின் பக்தர்’ என பொருள்.

பாகவதராக இருப்பதற்கு அந்தணர்குலத்தில் பிறக்க வேண்டும் என்று அவசியமில்லை. ‘சூத்திரஸ்ச பகவத்பக்த விப்ர பாகவத ஸ்ம்ருத:’ என்ற வாக்கியம் இதனை உறுதி செய்கிறது. பொ.யு. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த, தெலுங்குமொழியில் வசனமரபின் முன்னோடி, இசைக்கலைஞர் சதுர்லக்ஷம் கிருஷ்ணமாச்சார்யார் ‘ஏ வரமைனேனி?’ (எந்த வர்ணத்திலிருந்தால் என்ன?) என கூறுவதின் மூலம் இதனை அறியலாம். அவர் போதகமூரில் பிறந்த நாராயணய்யா, சென்னமய்யங்கார் மற்றும் பிற குலங்களில் பிறந்த அனைத்து பாகவதர்களையும் “போதகமூரி பாகவதுலு (போதகமூரை சேர்ந்த பாகவதர்கள்) என்றே பொதுவாக அழைக்கிறார்.

மேளா என்ற சொல்லுக்கு ‘ஒரு குழு அல்லது ஒரு கூட்டம்’ என பொருள் கூறலாம். இங்கு பாகவத மேளா என்றால் ‘இசை, நடனம், நாடகம் ஆகியவை இணைந்த நிகழ்த்துக்கலையை நடத்தும்’ பக்தர் குழுவை குறிக்கும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வளர்பிறை சதுர்தசியான நரசிம்ம ஜெயந்தியன்று இந்த நாட்டிய நாடகம் அரங்கேறுகிறது. இந்த நாளில்தான் அசுரனாகிய இரண்யகசிபுவிடமிருந்து அவன் மகனும் தனது பக்தனுமாகிய பிரகலாதனை காக்க மனிதனும் சிம்மமும் கலந்த உருவத்தில் விஷ்ணு அவதரித்தார் என்பது தொன்மம். இந்த நாளின் இரவில் ‘பிரகலாத சரிதம்’ நாட்டிய-நாடகம் போடப்படுகிறது. இங்குள்ள மக்கள் நரசிம்மர் வழிபாட்டை பின்பற்றுவதற்கு, அஹோபிலத்திலிருந்து இப்பகுதியில் இடம் பெயர்ந்தவர்களின் தாக்கமே காரணம் என கருதுபவர்களும் உண்டு. மெலட்டூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் விக்கிரகம் பதினோராம் அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. இதன்மூலம் சோழர்களின் காலத்திலேயே நரசிம்மர் வழிபாடு பரவலாக இருந்தது என்பதை அறியலாம். இந்த நாட்டிய நாடக நிகழ்த்துக்கலை மெலட்டூர், சாலியமங்கலம், தேப்பெருமாள்நல்லூர், ஊத்துக்காடு, சூலமங்கலம் ஆகிய கிராமங்களில் வழக்கமாக நடைபெறுகின்றன. இவற்றின் பல மேலதிக விவரங்களை தஞ்சை அரண்மனை குறிப்புகளிலுள்ள மோடி கையெழுத்துப்பிரதி மூலமாக அறியமுடிகிறது. உதாரணமாக பின்வருபவற்றை காணலாம்.

  1. பொ.யு. 1869ஆம் ஆண்டின் கைப்பிரதி: கோகுலாஷ்டமியன்று அரங்கேற்றம் கண்ட ‘ருக்மிணி கல்யாணம்’ நாடகத்திற்கு அளிக்கப்பட்ட பொருட்களின் விவரம்
  2. பொ.யு. 1821ஆம் ஆண்டின் கைப்பிரதி: ஸ்ரீ பிரதாப ராமஸ்வாமியின் முன்னிலையில் நிகழ்ந்த ‘கணேச லீலார்நவம்’ நாடகத்திற்கு அளிக்கப்பட பொருட்களின் பட்டியல் 
  3. பொ.யு. 1786ம் ஆண்டின் கைப்பிரதி: மன்னார்குடியில் நிகழ்ந்த பாகவதமேளாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு அளித்த நிலமானியங்களை பற்றிய குறிப்பு
  4. பொ.யு. 1832ம் ஆண்டின் கைப்பிரதி: பாகவத மேளம் குருவய்யா நாராயப்பையா மற்றும் கோபால்பாய் ராஜா இருவரும் நாடகவழக்கின்படி முழுமையான ஆடை அணிகலன்கள் பூணாமல் மேடையில் தோன்றியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதற்கான குறிப்பு
  5. பொ.யு. 1735ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தேதியிட்ட இனாம் ஆவணம்: பாவாஜியின் (ஏகோஜி) துணைவியாரான சுஜான் பாய் ஏகமகாராஜபுரம் என்ற கிராமத்து அந்தணர்களுக்கு நிலங்கள் அளித்த குறிப்பு. இந்த கொடையைப் பெற்றவர்களில் பாகவதமேளா குடும்பத்தை சேர்ந்த கிரிராஜ கவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற குறிப்புகள் வழியாக பாகவதமேளா தஞ்சை அரண்மனையிலும் மன்னார்குடி போன்ற பிற ஊர்களிலும் நடத்தப்பட்டது என அறியமுடிகிறது. நாயக்க அரசர் விஜயராகவ நாயக்கர் இயற்றிய ‘பிரகலாதா’ என்ற நாடகம் தஞ்சாவூர் அரண்மனையின் கிழக்கு வாயிலில் (கொண்டிராஜபாளையம்) இருக்கும் நரசிம்மர் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இவர் மன்னார்குடியில் ‘ருக்மிணி கல்யாணம்’ மற்றும் இன்னும் சில நாடகங்கள் அரங்கேற காரணமாக விளங்கினார். விஜயநகரத்தின் அச்சுதராயரின் இரண்டாம் மனைவியான திருமலாம்பாள் தமிழகத்திற்கு பொ.யு. 1530ல் வருகை புரிந்ததாக கூறப்படுகிறது. ‘பக்த சஞ்சீவி’ என்ற நாடகத்தை இயற்றி, அதனை அரங்கநாதப்பெருமான் முன்னிலையில் அரங்கேற்றியதாகவும், அதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு அனிலை என்னும் கிராமத்தை பரிசளித்ததாகவும் (ARE 308 of 1950-51) குறிப்புகள் உள்ளன.

தற்போது பாகவதமேளா மெலட்டூரில் ஒருவார கொண்டாட்டமாகவும், சாலியமங்கலத்தில் மூன்றுநாட்களும், தேப்பெருமாள்நல்லூரின் ஒருநாளும் நடைபெறுகின்றன. பிற கிராமங்களில் காலப்போக்கில் இந்த நிகழ்த்துக்கலை முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.

மெலட்டூரை தவிர்த்து நோக்கினால், சாமி பாகவதர், பி ஆர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மஹாதேவ ஐயர் என்கிற கிட்டா போன்றோர் ஊத்துக்காட்டிலும் ( வடமொழியில் தேனுவாசபுரம்) பஞ்சந்தைய்யா, சுந்தரேச ஐயர் மற்றும் எஸ் ஸ்ரீனிவாசன் சாலியமங்கலதிலும், வைத்தியநாத பாகவதர், சீதாராம பாகவதர். சூலமங்கலத்திலும், பரதம் நாராயணஸ்வாமி ஐயர் (பிறப்பு பொ.யு. 1872 / மறைவு பொ.யு. 1953) நல்லூரிலும், நடேச பாகவதர், அனந்தகிருஷ்ண பாகவதர், சுப்பைய்ய பாகவதர், நாரத பாகவதர், வைத்தியநாத பாகவதர் போன்றோர் தேப்பெருமாள்நல்லூரிலும் குறிப்பிடத்தகுந்த பாகவத மேளா கலைஞர்களாகத் திகழ்ந்தனர். ‘மைதீன்’ வெங்கடராம ஐயரின் மகன்களான கண்ணன், பாஸ்கர் இருவரும் பாகவதமேளாவின் அமைப்பாளர்களாக இருக்கிறார்கள். 

ராம நவமிக்கு அடுத்துள்ள ஏகாதசியன்று ‘ருக்மாங்கதா’, துவாதசியன்று ‘அம்பரீச சரிதம்’ போன்ற நாடகங்கள் ‘ப்ராசீன சம்பிரதாய நாடக மன்றம்’ என்னும் குழுவினால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது. அந்தணர்களின் பிருஹசரணம் என்னும் பிரிவை சேர்ந்த ஆண்கள் மட்டுமே இந்த நாடகங்களில் பங்கேற்கின்றனர். ஆச்சர்யமேற்படுத்தும்படியாக இதற்கான காரணம் எவருக்கும் தெரியவில்லை.

புகழ்பெற்ற இசைக்கலைஞரான ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் வழிவந்த நாகலட்சுமி இயற்றிய ‘நாடக ஓடம்’ என்ற தொகுப்பிலிருந்து ஊத்துக்காடு கிராமத்தில் பல நாடகங்கள் பிறந்தன. அவை ருக்மாங்கதா (ஊத்துக்காடு கிராமத்தில் அரங்கேற்றப்பட்ட முதல் நாடகம்), பார்வதி கல்யாணம், பிரகலாதா, கொல்ல கதா, மார்க்கண்டேயா, பாரிஜாத சரிதம், கம்ச வதம் மற்றும் ருக்மிணி கல்யாணம். நம்பகமான ஆதாரங்களின்படி ஊத்துக்காடு கிராமத்தில் பாகவதமேளா பொ.யு. 1946ம் ஆண்டு வரை ஐந்நூறு வருடங்களாக நடைபெற்றுவந்தது. இப்போது நாம் மெலட்டூர் பாகவதமேளா குறித்து பார்ப்போம். 

மெலட்டூர் தஞ்சையிலிருந்து கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள கிராமம். இந்த ஊரின் பெயர் மேலாட்டு (பாடியும் ஆடியும் நிகழ்த்துக்கலை புரியும் குழு) மற்றும் ஊர் என்ற இரு சொற்களின் கூட்டு (மேலாட்டு + ஊர் = மெலட்டூர்) என கூறுவோர் பலருண்டு. சோழநாடு பல பகுதிகளாக பிரிந்திருந்ததை ராஜாதித்த சோழன், முதலாம் ராஜராஜசோழன் மற்றும் விக்கிரம சோழன் போன்றோரின் கல்வெட்டு வழியாக நாம் அறியமுடிகிறது. இந்த பகுதி ‘நித்த விநோத வளநாட்டு பெருமிலட்டூர்’ என அழைக்கப்பட்டது. சோழர்காலத்திலிருந்தே இந்த கிராமம் மெலட்டூர் எனவே அழைக்கப்பட்டு வந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. மெரட்டூர் என்ற திரிபுப்பெயரும் இந்த கிராமத்துக்கு உள்ளது. இந்த கிராமத்திலும், சுற்றியுள்ள பிற கிராமங்களிலும் கணிசமான தெலுங்கர்கள் வசிக்கின்றனர்.

பொ.யு. 972ம் ஆண்டு மறைந்த கீழைச்சாளுக்கிய மன்னன் தானர்ணவனின் புதல்வர்கள் தங்கள் பரிவாரங்களுடன் சோழநாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் சங்கீத மும்மூர்த்திகளும் ஒருவரான தியாகைய்யரின் சமாதி உள்ள திருவையாற்றில் குடியேறினர். மேலும் சிலர் அருகிலுள்ள கிராமங்களில் குடியமர்ந்தனர். அவர்களது நிலமான வேங்கிநாடு அவர்களுக்கு திருப்பியளிக்கப்பட்டபோதும் தானர்ணவனின் புதல்வர்களும் மக்களும் அங்கேயே தங்க முடிவு செய்தனர். இவ்வாறாக மெலட்டூர் உட்பட்ட இந்த பகுதியில், தெலுங்கு பேச்சுமொழியாக ஆகியது.

நாயக்க மன்னர்களையும் மெலட்டூரையும் இணைக்கும் ஒரு சுவாரசியமான கதை கூறப்படுகிறது. ஒருநாள் நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கர் தன் அடைப்பக்காரரிடமிருந்து தன இடது கையால் தாம்பூலத்தை வாங்கி மெல்ல தொடங்கினார். இது தெரியாமல் செய்த செயலாக இருந்தாலும் அதனால் வரும் பாவத்திற்கு பரிகாரமாக நெல்லூர் மண்டலம் பிசுபதியிலிருந்து வந்த மக்களுக்கு மெலட்டூர் கிராமத்தை தானமாக அளித்தார். அப்போதிலிருந்து அந்த கிராமம் உத்தமதானபுரம், அச்யுதபதி, அச்சுதபுரி என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அரண்மனை ஆவணங்களின்படி அச்சுதபுரி என்பது மெலட்டூரையும் மேலும் சில கிராமங்களையும் உள்ளடக்கியது. அச்சுதப்ப நாயக்கர் மானியமாக அளித்த 510 பங்குகளில் 500 பங்குகள் அந்தணர்களுக்கு வழங்கப்பட்டன. இத்துடன் ஒவ்வொரு அந்தணருக்கும் ஒன்றரை ஏக்கர் புன்செய் / நன்செய் நிலமும், கிணற்றுடன் கூடிய இல்லமும் தானமாக அளிக்கப்பட்டன. 

அக்ரஹாரத்தில் வடமேற்கில் வரதராஜ பெருமாளுக்கு ஆலயம் பின்னாளில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் மராட்டிய அரசர் பிரதாபசிம்மரின் காலத்தில் (ஆட்சிக்காலம் பொ.யு. 1739 முதல் 1763 வரை) காலத்தில் கட்டப்பட்டது என ஒரு பாகவதமேளா குழுவின் தலைவரான நடராஜன் கூறுகிறார். எனினும் தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை சோழர்கள் காலத்தியது என கருதுகின்றனர். பின்னாட்களில் ஆலயத்தில் நரசிம்மரின் சிலை நிறுவப்பட்டது. மெலட்டூரில் தங்கி கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற நூலை இயற்றிய நரசிம்மரின் பக்தராகிய நாராயண தீர்த்தரின் செல்வாக்கினால் நரசிம்மர் சிலை நிறுவப்பட்டிருக்கலாம். இவர் இயற்றிய ‘பாரிஜாதபஹரணம்’ மெலட்டூரில் பாகவதமேளாவில் அரங்கேறியிருக்கலாம் என கருதப்படுகிறது. இங்கு கோவில் கொண்டுள்ள உன்னதபுரீஸ்வரர் என்றும் முத்துமண்டீசர் எனவும் அழைக்கப்படும் சிவனும் சிவப்ரியை என அழைக்கப்படும் அம்மனும் மெலட்டூரின் முக்கிய தெய்வங்கள்.

நாராயண தீர்த்தர்
நாடக பிரபந்தங்களும் புராண நிகழ்த்துக்கலைகளும் தஞ்சாவூர் நாயக்கர் காலத்திலிருந்தே இங்கு பிரபலமாக இருந்தன. கஜேந்திர மோட்சம், ருக்மிணி கிருஷ்ணா விவாகம் மற்றும் ஜானகி பரிணயம் முதலிய இசை நாடகங்களை இயற்றிய ரகுநாத நாயக்கரின் (ஆட்சிக்காலம் பொ.யு. 1600 முதல் 1630 வரை) அமைச்சர் யக்ஞநாராயண தீட்சிதர் ரகுநாத விலாச நாடகத்தை இயற்றியுள்ளார். விஜயராகவ நாயக்கர் (ஆட்சிக்காலம் பொ.யு. 1633 முதல் 1675 வரை) காலத்தில்தான் தெலுங்கு மொழியில் பெரும்நாடகங்கள் இயற்றப்பட்டன. விஜயராகவ நாயக்கர் இயற்றிய ஐம்பத்தி இரண்டு நிகழ்த்துக்கலை ஆக்கங்களில் பன்னிரெண்டு ஆக்கங்கள், இசைநாடகங்கள். இவர் இயற்றிய பிரகலாத நாடகத்தில்தான் கதாயுதத்தை ஏந்தும் கட்டியக்காரன் (தெலுங்கில் கடிகம்) என்னும் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. விஜயராகவ நாயக்கர் இயற்றிய பிரகலாத நாடகம் அரங்கேறியபிறகு மேலும் 12 பிரகலாத நாடகங்கள் பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டுள்ளது. இறைவனை வரவேற்கும் பாடல்தொகுப்பான தோடய மங்கலத்திற்கு அடுத்து விநாயகரை வரவேற்கும் பாடல்களை பாடும் வழக்கத்தை தொடங்கிய தஞ்சையின் மராட்டிய அரசர் ஷாஜி (ஆட்சிக்காலம் பொ.யு. 1683 முதல் 1712 வரை) 22 யக்ஷகானங்களை இயற்றியுள்ளார்.

மெலட்டூரில் நிகழும் இசை நாடகங்களின் வடிவம் தஞ்சை அரசவைகளில் நிகழும் வடிவத்தை சார்ந்திருந்தாலும் பின்னாட்களில் ஆசிரியர்கள் பல புதுமைகளை சேர்த்தனர். கோணங்கி என்ற கதாபாத்திரம் அரங்கத்தில் நுழைவதையும் அதன் பின்னர் நிகழும் அவரின் நடனத்தையும் உதாரணமாக கொள்வோம். கோணங்கி என்றால் விதூஷகன் அல்லது கேலிக்கூத்தில் பங்குபெறும் அப்பாவியான முட்டாள் என தெலுங்கு மொழியில் பொருள். கோணங்கியின் பாத்திரத்தை விளக்க பாரம்பரியமாக பின்வரும் கதை கூறப்படுகிறது. விஷ்ணுவின் சக்ராயுதத்தை விநாயகர் விழுங்கிவிட அதனை மீட்க விஷ்ணு கோணங்கியாக உருவமெடுத்து வேடிக்கையாக நடனமாடுகிறார். அதனை கண்டு விநாயகர் விழுந்து சிரிக்க சக்ராயுதம் வயிற்றிலிருந்து விழுகிறது. முற்காலத்தில் கோணங்கி ஒரு குள்ளனாக இருந்திருக்கிறார் என்பதை மேளாவின் மேடைநுழைவு பாடல்கள் (தெலுங்கில் பிரவேச தரு) மூலமாக அறியமுடிகிறது. இன்றைய தினத்தில் கோணங்கியின் கதாபாத்திரம் அதற்கென்று இருக்கவேண்டிய எந்த தனித்துவமும் இன்றி சம்பிரதாய பாத்திரமாக மேடைகளில் தோன்றுகிறது. தற்போதய காலகட்டத்தில் கோணங்கி கதாபாத்திரத்திற்கு மேடையின் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு சென்றுவருவதையும் ‘அமைதி, அமைதி’ என பார்வையாளர்களை நோக்கி கூவுவதையும் தவிர வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை. ஒரு கோமாளி போல கூம்புவடிவ குல்லாயை அணிந்து கைகளால் நடனமாட மட்டுமே செய்கின்றனர். ‘மூஷிக வாகன கோணங்கி’, ‘வாமனரூப கோணங்கி’ போன்ற சொற்றொடர்களால் அமைந்த பாடல்களின் வழியாக நிகழும் கோணங்கியின் மேடைநுழைவு (தெலுங்கில் பாத்திர பிரவேச தரு) அர்த்தமின்மையின் உச்சமாக உள்ளது. சில மேளாக்களில் இந்த பாடலை முழுவதும் கணபதி துதியான ‘மூஷிக வாகன’ என்று தவறாக பாடிவிடுகின்றனர். இவை விநாயகரை குறிக்கும் பாடல்கள் என முனைவர் ஆருத்திரா கூறுகிறார். ஆனால் இந்த பாடல்களின் வரிகளுக்கும் விநாயகருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை; ஏன், இந்த பாடல்களுக்கும் கோணங்கிக்குமே சம்பந்தம் இல்லை. ஊத்துக்காடு பாகவதமேளாவில் கோணங்கியின் பாத்திரத்தையே முற்றிலுமாக அகற்றிவிட்டனர் என்கிறார் பேராசிரியர் பி சாம்பமூர்த்தி.
 தியாகைய்யர்

தியாகைய்யரின் சமகாலத்தவரான வெங்கடராம சாஸ்திரி (பிறப்பு பொ.யு. 1743 / மறைவு பொ.யு. 1809) மெலட்டூரில் நடக்கும் நடன நாடக மரபுக்கு தந்தையாகவும் முன்னோடியாக இருந்தார். அவர் தந்தையார் கோபாலகிருஷ்ண சாஸ்திரி துருவன், கௌரி கல்யாணம், ருக்மிணி கல்யாணம், சீதா கல்யாணம் போன்ற நாடகங்களை இயற்றியும், அவற்றில் நடித்தும் இருக்கிறார். அவர் நாராயண தீர்த்தரின் சீடராக இருந்து, நரசிம்ம வழிபாட்டிற்கான தீட்சையை பெற்றிருக்கலாம். கோபாலகிருஷ்ண சாஸ்திரியின் தந்தை ‘ஸ்ரீவத்ஸ’ கோத்திரத்தை சேர்ந்த லட்சுமணார்யா. வெங்கட்ராம சாஸ்திரி பன்னிரண்டு நடன நாடகங்களை இயற்றியதாக கூறப்படுகிறது. அவர் இயற்றியதாக கூறப்படும் நாடகங்கள் பின்வருமாறு: பிரகலாதா, ருக்மாங்கதா, மார்க்கண்டேயா, உஷா பரிணயம், அரிச்சந்திரா, சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், கம்ச சரிதம், சிவராத்திரி நாடகம், ஜகலீல நாடகம், சத்சங்கராஜ சரிதம் மற்றும் அசத்சங்கராஜ சரிதம். சில ஆசிரியர்கள் கடைசி இரண்டு நாடகங்களுக்கு பதிலாக துருவ சரிதம் மற்றும் பார்வதி கல்யாணம் நாடகங்களை சேர்த்துக்கொள்கின்றனர். ஒரு செவிவழிக் கதை இப்பகுதிகளில் வழங்கி வருகின்றது அதன்படி மனைவியை இழந்தவரான வெங்கடராம சாஸ்திரி ஒரு பிறழ் உறவினால் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு, தேப்பெருமாள்நல்லூர் போன்ற சில கிராமங்களில் தங்கியிருந்து, குழிக்கரையில் குடியேறி ஓராண்டு வாழ்ந்து மறைந்தார் என்பதே அது.

சில ஆண்டுகளின் தேக்கத்திற்கு பிறகு, மெலட்டூர் பாகவதமேளா பரதம் நடேச ஐயரால் (பிறப்பு பொ.யு. 1875 / மறைவு பொ.யு. 31.05.1931) உயிர்ப்பிக்கப்பட்டது. அவர் இந்த நடன நாடகங்களில் தீவிரமான ஆர்வம் காரணமாக கிராமத்து சிறுவர்களை தேர்வு செய்து முறையான பயிற்சியளித்தார். இவர் ஹரிகதை கலாட்சேபத்தில் விற்பன்னராக விளங்கினார். புகழ்பெற்ற பத்மினி பாய் இவரின் சிஷ்யை. அதேநேரத்தில் கும்பகோணம் பி.எஸ்.லலிதா பாய் அவர்களையும் இந்த கலையில் பயிற்றுவித்தார். நடேசய்யரின் மாணவர்களில் சிலருக்கு தஞ்சாவூர் பரதநால்வரின் வழிவந்த தஞ்சாவூர் சபாபதி நட்டுவனார் பெரிதும் உதவியிருக்கிறார். பின்னர் தஞ்சாவூர் பரதநால்வரின் வழிவந்த மற்றொரு முன்னோடியான தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை இந்த நாடகத்தில் சில நடனங்களை அமைத்தார். நடேசய்யரின் மாணவரான நாராயணஸ்வாமி ஐயர் அனைத்து நாடகங்களின் பாடல்களையும் நினைவிலிருந்து கூறும் திறன்பெற்றிருந்தார். நடேசய்யர் 1930ம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்து அடுத்த ஆண்டு மறைந்தார்.

பாலு பாகவதரின் (பிறப்பு பொ.யு. 1897 / மறைவு பொ.யு. 04.11.1985) விடாமுயற்சியாலும் வெங்கடரமணி மற்றும் வெங்கடராம ஜோசியர் ஆகியோரின் வழிகாட்டுதலாலும் பாகவதமேளா தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 1938ம் ஆண்டு ரமணி ஐயர், கணேசய்யர் பி.கே.சுப்பையர் மற்றும் சிலர் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கி விநாயகர் ஆலயத்தில் ‘மார்க்கண்டேயா’ நாடகத்தை அரங்கேற்றினர். இவர்கள் கிஞ்சின் கோதண்டராமைய்யரின் உதவியுடன் வரதராஜபெருமாள் ஆலயத்தில் அனைத்து நாடகங்களையும் (பிரகலாதா உட்பட) அரங்கேற்ற திட்டமிட்டு அதனை செய்தும் முடித்தனர். நாராயண தீர்த்தம் என அழைக்கப்படும் குளத்தின் முன்னுள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயம் சிதைந்துபோகும்வரை அனைத்து நடன நாடகங்களும் ஆலயத்தில் நிகழ்ந்தன என கூறப்படுகிறது. பிற்காலத்தில் நரசிம்மர் சிலை வரதராஜர் ஆலயத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. நடைமுறையில் பாலு பாகவதர் பரதத்தில் விற்பன்னராக இல்லாமல் இருந்தாலும் அவர் மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அளவுக்கு திறமையானவராக இருந்தார் என நம்பகமான ஆதாரங்களிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. வடமொழி அறிஞராகிய பாலு பாகவதரிடமிருந்துதான் மகாலிங்கம் மற்றும் நடராஜன் (தற்போதுள்ள இரு பாகவதமேளா குழுக்களின் தலைவர்கள்) இருவரும் பயிற்சி பெற்றனர் என மெலட்டூர்வாசிகள் அனைவரும் உறுதிசெய்கின்றனர். நடேசய்யருக்கு பின் அனைவராலும் மதிக்கப்படுபவராக பாலு பாகவதர் இருக்கிறார். பாலு பாகவதருக்கு காஞ்சி மடத்தின் பரமாச்சாரியார் ‘பாகவத நடன சிகாமணி’ என பட்டம் சூட்டியுள்ளார். 1967ம் ஆண்டு மத்திய சங்கீத நாடக அகாதெமி தனது விருதினை வழங்கியுள்ளது. இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அவருக்கு 1973ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. பதிமூன்று பாகவதமேளா நாடகங்களுக்கு தெலுங்கிலும் வடமொழியிலும் தேவைக்கேற்றபடி பாலு பாகவதர் வசனம் எழுதியுள்ளார். 1970ம் ஆண்டு கலாக்ஷேத்திராவில் பாகவதமேளாவின் துருவ சரிதம் நாடகத்தை அரங்கேற்றினார். பிற்காலத்தில் பரதம் நடேசய்யரின் மகள் கல்யாணி அம்மாள் தன் தந்தை பாதுகாத்துவந்த பாகவதமேளாவின் அனைத்து நாடகங்களின் கையெழுத்துப்பிரதிகளையும் கலாக்ஷேத்ராவின் ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களிடம் நன்கொடையாக அளித்தார். 

பாகவதமேளா கலைஞர்களில் நரசிம்மரின் முககவசத்தை அணிந்து அந்த வேடத்தை ஏற்கும் கலைஞர் எந்த கிராமத்தை சேர்ந்தவராக இருப்பினும் அவர் தெய்வீக அம்சம் பொருந்தியவராக கருதப்படுவது வழக்கமாக உள்ளது. மெலட்டூரின் உள்ள நரசிம்மரின் முகக்கவசத்தை வெங்கடராம சாஸ்திரி வழிபட்டு வந்தார் என்பது ஒரு செவிவழி செய்தி. வரதராஜபெருமாள் ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் அந்த முகக்கவசம், நரசிம்ம ஜெயந்தியன்று வெளிக்கொணரப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பாகவதமேளா நடைபெறும் பிற ஊர்களிலோ இந்த முகக்கவசம் பங்கேற்கும் ஒரு கலைஞரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும். தக்கயாகபரணியில் இந்த முகக்கவசத்தை ‘முக பானை’ என ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார் என்பதை நினைவுகூர்வது இங்கு பொருத்தமாக இருக்கிறது.

மெலட்டூரில் நடைபெறும் ருக்மிணி கல்யாண நாடகம் வெங்கட்ராம சாஸ்திரியால் இயற்றப்பட்டது என பாகவதமேளா குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அதன் மேடை நுழைவு பாடல்களில் (தெலுங்கு மொழியில் தரு) உள்ள சொற்கள் இதனை உறுதிசெய்யவில்லை, மாறாக இவை வெங்கடராம சாஸ்திரியால் இயற்றப்பட்டவையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன. உதாரணமாக சில பாடல்களின் சொற்களை பார்ப்போம். ‘வீருடு, நவநீத சோருடு, விஜயகோபாலுடு, கொலுவையுன்னதே……’, ‘நாரத முனி முக்கியலு, நாமமு சயன நாராயண தீர்த்த நாதடு’ போன்றவை நாராயண தீர்த்தர் விஜயகோபாலனை மனதிலெண்ணி பாடியவை. ஆகவே தற்போது நிகழும் ருக்மிணி கல்யாணம் நாடகம் கிட்டத்தட்ட நாராயண தீர்த்தரின் அல்லது நாயக்க இசைக்கலைஞரின் பாடல்களின் அடிப்படையிலான பல பாடல்கள் முழுவதுமாக எடுத்தாளப்பட்டுள்ளன. மெலட்டூர் பாகவதமேளா நாடகங்களில் இடம்பெறும் சந்தி வசனங்கள் நாராயண தீர்த்தரின் சொற்பிரயோகத்தையே அடியொட்டியுள்ளன. எடுத்துக்காட்டாக ‘அரே ஏ விதம்புன …. அந்தத ஸ்ரீ பாரிஜாத நாடக நாட்டிய வைகரிக்கி விக்னம்பு ககுண்ட விக்னேஸ்வருண்டு வச்சே மார்கமு பராக்’ என்ற பாடலை கொள்ளலாம். இந்த விஷயத்தில் இன்னும் மேலதிகமான ஆய்வு தேவைப்படுகிறது. 

1964ம் ஆண்டு மெலட்டூரை பூர்விகமாக கொண்டவரும் சென்னையில் தொழிலதிபராக இருப்பவருமான வி.டி.ஸ்வாமி அவர்கள் நாராயண தீர்த்தத்திற்கு அருகில் வாங்கிய ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பாகவதமேளா நடைபெற்றது. பழைய மேடை இரண்டு பக்கமும் இருந்த வரிசையான வீடுகளால் இடுங்கியும் குறுகியும் இருந்தமையால் இனிமேல் இந்த நிலத்தில்தான் மேளா நடக்கும் என்ற நிபந்தனையின்பேரில் பாகவதமேளா குழுவிற்கு அன்பளிப்பாக அளித்தார். குழுவில் அனைவரும் ஒத்துக்கொள்ள 1964ம் ஆண்டு பிரகலாதா மற்றும் ஹரிச்சந்திரா இரண்டு நாடகங்களும் இங்கு மேடையேறின. மூன்றாம் நாள் நிகழவிருந்த உஷா பரிணயம் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் மறைவினால் ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு பாகவதமேளாவின் முக்கிய குழுவினர்களான ராமலிங்கய்யர் மற்றும் கணேசய்யர் நடுவே மனக்கசப்பு உண்டானது. கணேசய்யர் ‘லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்கம்’ என்ற பெயரில் தனியே குழுவை தொடங்கி, தன் புதல்வன் சுவாமிநாத ஐயரின் உதவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி முன் மேடையமைத்து நாடகங்களை நடத்த தொடங்கினார். பாலு பாகவதர், சுப்பையர் மற்றும் சில முக்கிய நபர்கள் ராமலிங்கய்யருடன் இணைந்து நிற்க முடிவெடுத்தனர். இந்த குழு ‘பாகவதமேளா நாட்டிய வித்யா சங்கம்’ என்ற பெயரில் நாடகங்களை நடத்துகிறது. ராமலிங்கய்யரின் புதல்வரான மகாலிங்கம் இப்போது இந்த குழுவினை முன்னின்று நடத்துகிறார். வி.டி.ஸ்வாமிக்கு அளித்த உறுதியின்படி அவர் அளித்த நிலத்தில்தான் இப்பொழுதும் இந்த குழு நாடகங்களை நடத்துகிறது. இந்த பிரிவு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. பாலு பாகவதர் மீது பிறர் கொண்ட காழ்ப்பே இதற்கு காரணம் என்று சிலரும், வேறுசிலர் இருகுழுக்களுக்கும் இடையே இருக்கும் தன்முனைப்பே பிரிவுக்கு காரணம் என கூறுகின்றனர்.

பண்டைய நாடக கலைக்கும் தற்போதுள்ள காலகட்டத்திற்கும் உள்ள தொடர் கண்ணிகளில் பாகவதமேளாவும் ஒன்று. அதில் இடம்பெறும் பாடல்கள், இசை மற்றும் நடனங்கள் உயர்க்கலையை சார்ந்தவை. ஏற்கனவே கூறியவாறு முற்றிலும் ஆண்களே பெண்வேடத்திலும் இந்த நாடகத்தில் நடிக்கின்றனர். அனைத்து நடனமாடுபவர்களும் நடிகர்களும் முன்னனுபவம் அற்றவர்கள். ஒத்திகைக்காக தங்கள் சொந்த செலவில் முன்னதாகவே மெலட்டூர் வந்து பயிற்சியினை மேற்கொள்கிறார்கள். மேடையில் நாடகம் நடக்கும்போது நடிகர்களும் பார்வையாளர்களும் தன்னிலை மறந்து உணர்ச்சிகரமான பக்தியில் திளைத்து நரசிம்மரின் ஆசிக்காக வேண்டிக்கொள்கின்றனர். இவற்றையும் மேல்கூறிய அனைத்தையும் கருத்தில்கொண்டு பார்த்தால் சந்தேகமில்லாமல் பாகவதமேளா நவீன அம்சங்களையும், கிராமிய நாட்டுப்புற அம்சங்களையும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு சிறந்த செவ்வியல் கலை என்பதை உறுதியாக கூறமுடியும்.

தஞ்சையில் வசிக்கும் தெலுங்கு மக்களை பாகவதமேளா போன்ற நாடகத்தை இயற்றி நடிக்க தூண்டுதலாக இருந்தது ஆந்திரப்பிரதேசத்தின் குச்சுப்பிடி நடனமே என கூறும் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் இது முற்றிலும் தலைகீழாகவே நடந்தது எனவும் 19ம் நூற்றாண்டில் ஹரி மாதவையா மெலட்டூரின் நாடகங்களை கண்டு அதன் மூலமாக குச்சுப்பிடி நடனம் வடிவமைக்கப்பட்டது என அறிஞரான முனைவர் எஸ்.வி.ஜோகராவ் ‘ஆந்திர யக்ஷகான வாங்மயமு’ என்ற புத்தகத்தில் (பகுதி 1, பக்கம் 194) உறுதியாக கூறுகிறார். குச்சுப்பிடி நடனத்தில் பெரும்பாலான நடனக்கலைஞர்களும் ஆசிரியர்களும் தெலுங்கு அந்தணர்களின் ‘வேலநாடு’ மரபை சேர்ந்தவர்கள். ஆனால் தஞ்சை அரண்மனை குறிப்புகளில் வேலநாடு மரபை சார்ந்த ஒரு கலைஞரின் பெயரைக்கூட பார்க்கமுடிவதில்லை. பாகவதமேளா குடும்பத்தை சார்ந்த கிரிராஜ கவி ‘முலகநாடு’ மரபை சார்ந்த தெலுங்கு அந்தணர். 

பாகவதமேளா தெலுங்கு அந்தணர்களால் பிறந்திருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் அதீத அர்ப்பணிப்பு மற்றும் பக்தியுடன் தெலுங்கு சாராத மக்களால் காலங்கடந்த ஈடுபாட்டுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மொழி வேறுபாடின்றி கலை ஆர்வம் கொண்ட அனைவரும் இதனை பாராட்ட வேண்டும், மக்களுடன் அரசும் இந்த கலைக்கு தேவையான ஆதரவை அளிக்கவேண்டும். இவ்வாறு நடத்தப்படும் இந்த உயர்கலை நீடித்து வாழ அனைத்து கலைஞர்களும் தங்களின் தன்முனைப்பை உதறி இந்த கலைக்காக ஒன்றுசேர்வது அவசியமானது. புராதானமானதும் பாரம்பரியம் மிக்கதுமான பாகவதமேளாவை நீடூழிவாழ அருள்புரியும்படி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை நாம் அனைவரும் வேண்டுவோம்.

பி.எம். சுந்தரம்

தமிழில் - கோ. வீரராகவன்

பி.எம். சுந்தரம்

பி.எம். சுந்தரம் (செப்டெம்பர் 10, 1934) (பாலா மீனாட்சிசுந்தரம் சுந்தரம், B.M.Sundaram) இசையியல் அறிஞர். இசைக்கலைஞர். இசைக்கலைஞர்களின் வாழ்க்கை குறிப்புகளை எழுதியவர். இசைப்பாடல்கள் எழுதிய வாக்கேயக்காரர்.

பி.எம். சுந்தரம் - Tamil Wiki

கோ. வீரராகவன்

கோ. வீரராகவன் இலக்கியம் மற்றும் தத்துவத்தை பயின்று வருகிறார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.