Thursday 14 March 2024

என்னை ஈர்க்கும் இந்திய கானுயிர் - மா. கிருஷ்ணன்

ஏன் இந்திய காட்டுயிர் என்னை  ஈர்க்கிறது?  என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், கடந்த முப்பது வருடங்களில் நாடு முழுவதும் நான் காணநேர்ந்த காட்டுயிர், தாவரங்கள் பற்றிய நினைவுகளை மீட்டுக்கொள்கிறேன் என்று சொல்லலாம். இருந்தும் அதிலிருந்து குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்வது  எளிதல்ல.

பல வருடங்களாக இந்திய வனவிலங்குகளை பின்தொடர்ந்தும் அவதானித்தும் புகைப்படங்கள் எடுத்தும் இருக்கிறேன். குறிப்பாக மிளா, காட்டெருது மற்றும் காட்டானைகளை. யானைகளுடனான அச்சுறுத்தும் நினைவுகளை நினைவுகூர்கிறேன். முதுமலை சரணாலயத்தில் பிளிறிக்கொண்டு கொலைவெறியுடன் தாக்க வந்த கொம்பன்  யானை ஒன்றை 15 கஜ தூரத்தில் இடையே ஓடிக்கொண்டிருந்த ஆழ் நீரோடையால் மட்டுமே தடுத்துநிறுத்த முடிந்தது.  நீரோடை இருப்பதை அறிந்தே அதை ஒரு யானை தடுப்பாக பயன்படுத்திக்கொண்டு என் இருப்பை அதற்கு தெரிவித்தேன். அது நேரே என்னை நோக்கி வந்தது சிறந்த புகைப்படத்தை எடுக்க உதவியது . ஆனாலும் அதனின் இரத்தத்தை உறையவைக்கும் சின சீற்றத்தை, அதனிடமிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு விலகிச்சென்ற பின்பும் நினைக்கத் துணியவில்லை. என் கைகால்கள் அச்சத்தால் நடுங்கிக்கொண்டிருந்தன.

மா. கிருஷ்ணன்

அதே சரணாலயத்தில் வயதான ஒரு  பெண் யானையுடன் மேலும் அபாயகரமான சம்பவம் ஒன்று மிக அருகே நேர்ந்தது. என்னை தாக்க முடிவெடுத்து என் காலடி சுவடுகளை மோப்பம் பிடித்து  துரத்திக்கொண்டு பின்தொடர்ந்த யானையிடமிருந்த ஒருவழியாக மூச்சிரைக்க ஓடி பிழைத்துக்கொண்டேன். ஆனால் யானைகளுடனான என் அனுபவம் பரபரப்பான சாகசமற்ற நேரங்களில் இனிமையான நினைவேக்கம் நிறைந்த, உணர்ச்சிகரமான அனுபவமாகவே உள்ளது. யானைகளின் புலனறியும் திறனும் அறிவாற்றலும் நம்மிடமிருந்து முற்றிலும் வேறானது. நீண்ட நாள் அவற்றை அவதானித்த ஒருவரால் மட்டுமே அதன் கருப்பு வெள்ளை நிற உலகத்தை, வலிமையான குழுமனப்பான்மையை, ஆழ்ந்த தனிப்பட்ட உறவுகளை அறியமுடியும். அந்த தந்தங்களும், உடலும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள நெருங்கிய வட்டத்துக்குள் அவை கலந்தாய்வுக்கூட்டம் நடத்துவதை கவனித்திருக்கிறேன். ஒருவேளை  எனக்கு கேட்காத ஒலி அலைவரிசையில் அவை தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்திருக்கலாம்.

யானைக்குட்டிகளின் விளையாட்டுகளை பார்த்திருக்கிறேன்.  இளம்குட்டிகள் தரும் துயர்மிகு தொல்லைகளை முதிய யானைகள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ளும் தன்மையையும் கவனித்திருக்கிறேன். மேலும் குட்டியை பாதுக்காக்கும் பிடி யானைகளின் தன்னிச்சையான   உணர்வுகளையும் அறிவேன்.

பெரியாரில் பிரம்பாண்டமான தனித்த வயதான கொம்பனை பார்த்ததை இப்போதும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். நான் இரண்டு பெருங்களிறுகளை பார்த்திருக்கிறேன் ஆனால் அவைகூட இந்த கொம்பனின் வடிவத்துடனும் கம்பீரமான உடலுடனும் ஒப்பிடமுடியாது. மிதமிஞ்சிய மதநீர் சுரப்பு அவனிடம் காணப்பட்டது,  சுரப்பி மண்டலத்தின் எரிச்சலை  போக்க  தன் தந்ததால் பூமியில் பெரும் பள்ளம் உண்டாக அகழ்ந்து கொண்டிருந்தது.  அப்போதுதான் பாய்ந்து ஓடும் நீரில்  நீந்தி வந்திருந்தாலும், ,   கன்னங்களில் அடர்த்தியான மதநீரின் கருநிற கறை போகவில்லை.  தந்தங்களில் களிமண்ணின் சேறும் ஒட்டிக்கொண்டிருந்தது.  புகைப்படம் எடுக்க வெற்று மணல்வெளியை நான் கடக்கவேண்டியிருந்தது.  ஏரியின் விளிம்பில் அனலேறிய தன் பெரிய தலையை குளிர்வித்துகொண்டிருந்தது., . சுற்றுபுறத்தின் நிகழ்வில் சிறிதும் அக்கறையின்றி முடிந்த மட்டும் ஆசுவாசம் கிட்ட தலைக்கு தண்ணீர் தெளித்துகொண்டிருந்தது. அது  அங்கிருந்து நீண்ட அடியெடுத்து விலகி செல்வதற்குள் என்னால் மிக அருகே சென்று  படம் எடுக்க முடிந்தது.

சில நேரங்களில் சிந்திப்பதுண்டு என் வாழ்வில் காட்டானைகள் இல்லையென்றால் எத்தனை அனுபவங்களை இழந்திருப்பேன் என்று. காட்டானைகளுடன் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பிற்கு மிகச்சிறிய அளவில் அதன் பாதுகாப்பின்மையில் உள்ள சாகச உணர்வு காரணமாக இருக்கலாம், ஆனால் முதன்மையாக ஈர்ப்பு என்பது சந்தேகமின்றி யானைகளே தான். பெருத்த பிரம்மாண்டமான ஒவ்வொரு அடியும், திடமான அதேசமயம் மிக ஆழமான மென்னுணர்வுடன் கூடிய அசாத்தியமான வலிமையும்,  சில அம்சங்களில் நம்மை ஒத்தும், வேறு அம்சங்களில் நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்டும், அத்தனை எடை கொண்டிருப்பினும் மிருதுவான தீர்க்கமான அதன் தொடுகையும்.  நெடும்காலம் மிக நெருக்கமாக நம் நாட்டிலும் பண்பாட்டிலும் பிணைந்துவிட்ட யானைகள் இல்லாத இந்தியாவை என்னால் கற்பனைகூட செய்ய இயலாது.




காட்டெருதுகள் முற்றிலும் வேறானது. காட்டானைகள் வாழும் அதே காட்டில் வாழ்ந்தாலும், நிறம், அளவு, குழுமனப்பான்மை, தனித்த ஆண் என சில இயல்புகளை ஒத்திருந்தாலும் காட்டெருதுகள் வேறானது. இலையுதிர் காட்டில் இவை மேய்வதை காண்பது ஓர் அழகிய அமைதியான புத்துணர்வை அளிக்கும் அனுபவம் என்று சொல்லலாம். மெதுவாக புல்லை அசைபோட்டுக்கொண்டே இயற்கை பேரழகுடன் கூட்டமாக அவை மேய காற்றில் காட்டெருது மந்தைகளின் இனிய மணம் பரவியிருக்கும். என் நினைவுகளில் என்றுமிருக்கும் ஆழ்ந்த சப்தம் காட்டில் கேட்ட பெரும்காட்டெருது ஒன்றின் மந்தை விளி ஒலிதான். ஏதோ காரணங்களால் மந்தையிலிருந்து விலகிய அவன், மிருதுவான நீடித்த தாழ் உச்ச ஸ்தாயியில் எற்படுத்தும் ஒலி அருகிலிருந்து கேட்போருக்கு மெலிதாக இருப்பினும் அரை மைல் தூரத்திற்கு அவ்வொலி மரங்கள் அடர்ந்த காட்டில் ஊடுருவி செல்லும்.


வேறெந்த நாட்டை விடவும் நம் நாட்டில்தான் நிறைய மானினங்கள் உள்ளன. அதிலும் பலர் இந்திய புள்ளிமான்தான் மான்களில் அழகானது என எண்ணுகின்றனர். வளர்ந்த புற்களுகிடயே வலிமையான ஆண் புள்ளிமான் நடந்து செல்வதை பார்க்கும்பொழுதும் அல்லது கூட்டமாக வைகறையில் நீர் அருந்த வந்து எச்சரிக்கையுடன், எப்போதும் தாவி ஓடுவதற்கும் தயாரான நிலையில் இருக்கும் புள்ளி மான்களின் அழகிய ஈர்ப்பிலிருந்து தப்பமுடியாதுதான். என்றாலும் அளவில் பெரிய சற்றே முரட்டு உடல்கொண்ட காடுவிரும்பியான மிளா(சாம்பர்) மேலும் கவர்ச்சியானது. சரியான ஒருங்கிணைவும் ஒருவித மெல்லடக்கமும் மிளாவுடன் பொருந்துவதை போல வேறெந்த மானுக்கும் பொருந்தவில்லை. மிளாவை பற்றி நினைக்கையில் ஹசர்பாக்கில் திறந்த ஜீப்பில் குளிர்ந்த இரவு உலாவில், அடர் மறைவிலிருந்து சாலைக்கு வரும் மிளாவை காண காத்திருந்து இரண்டு முறை பெரிய குதிரையளவிலான நீண்ட முறுகிய கொம்புகளை கொண்ட மான்களை கண்டது நினைவுக்கு வருகிறது. மிளாக்கள் பீகாரை தாண்டியும் நாட்டின் பல திசைகளிலும்  தொலைதூர இடங்களுக்கு என் நினைவை இட்டுசெல்கிறது.


ஒருநாள் மலைச்சரிவில் பெண் மான் கூட்டம் ஒன்றை யானை மீது பின்தொடர்ந்துகொண்டிருந்தேன். முதலில் எங்களை பார்த்தவுடன் இருந்த அச்சம் நீங்ககியபின் அவை பயப்படுவதாக இல்லை. எங்களுக்கு சற்று தொலைவிலேயே முன்னால் அவை மேய்ந்துகொண்டிருந்தன. மெல்ல ஒரு எச்சரிக்கை உணர்வுடன் அவ்வப்போது எங்களை நோட்டமிட்டு இலை மொட்டுகளை தின்றுகொண்டிருந்தன. மேய்ந்துகொண்டே அடர்ந்த உயர்புற்கள் கொண்ட இடத்திற்கு வந்ததும் அவை சட்டென்று உடலை தாழ்த்தி குறுகிக்கொண்டு கால்களை அகல விரித்து வைத்து எதையோ கூரிந்து நோக்கின, கூட்டத்தினின்று எல்லாம் மின்னல் வேகத்தில் கலைந்து சுற்றியிருந்த மரங்களின் அடர்வில் மறைந்துகொண்டன. அந்த அடர் புற்களை நெருங்கி ஆராய்ந்தபோது அங்கே நெடுநேரம் படுத்திருந்த வரிப்புலியின் தடம்  தெளிவாக காணமுடிந்தது. பனிபடர்ந்த ஈரப்புல்லில் அதன் மணம் இன்னமும் இருந்தது.


கான்ஹாவின் பெண்புலி

இந்தியாவில் இன்னும் பெரும் எண்ணிக்கையிலான வேங்கைப்புலிகள் இருகின்றன. இங்கே குறைந்தது ஒன்பது புலிகள் சரணாலயத்தில், பூனை இனத்தின் அற்புதமான இந்த வேங்கைகள்  காக்கப்படும் பொருட்டு பெரும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுபோக சரணாலயங்களுக்கு வெளியேயும் பல வேங்கைகள்  உள்ளன. நான் காட்டில் வேங்கைபுலிகளை கண்டிருக்கிறேன். சில  சுடப்பட்ட வேங்கைகளை நான் பார்த்ததுண்டு.. அவற்றில் ஒன்று என்னால் என்றும் மறக்கமுடியாத  தன் இளமையின் வலிமையின் உச்சத்தில் இருந்த கன்ஹாவில் 1968இல் கண்ட மகத்தான  பெண் வேங்கை.  எந்த வளர்ந்த புலியும் ஆசைகொள்ளும் விதத்தில் நம்பமுடியாத கண்கவர் நிறத்தில் மேல்தோல் மற்றும் அலங்கரிக்கப்பட்ட முன் பாதங்களால் அருளப்பட்டது. யானை சவாரிகளில் ஆட்கள் அதை பின்தொடர்வதை அது சற்றும் விரும்புவதில்லை. அதன் விருப்பமின்மையை அது மூர்க்கமாகவே வெளிப்படுத்தியது. நான் எனது அனைத்து தந்திரங்களையும் பொறுமையும் பயன்படுத்தியே ஒருமுறை பத்து மீட்டர் இடைவெளியில் ஒரு பாறை நிழலில் அது  படுத்திருக்கும்பொழுது நெருங்க முடிந்தது. பாறைகள் அடர்ந்த சிறு குளத்தில் கழுத்து மட்டும் வெளியே தெரிய அது கிடக்கையில் என் மனக்கண்ணில் இன்னமும் தெளிவான எழிலார்ந்த கொள்ளை அழகையும் எந்த முயற்சியுமில்லாமல் நடையில் கைகூடும் அசாத்தியமான நளினத்தையும் பார்க்கிறேன்.

சிறுத்தைகளை அதிகமாக பார்த்திருக்கிறேன். வேட்டையாடும் விலங்குகளில் மிகவும் மாறுபட்டதும் கணிக்கமுடியாததும்  மிகவும் அழகானதுமாகும். துரதிர்ஷடவசமாக அவை  எண்ணிக்கையில் குறைவது போதிய அளவு கவனம் கொள்ளவில்லை. என்னை ஈர்க்கும் மேலும் பல பெரிதும் சிறிதுமான காட்டுயிர்களுண்டு உதாரணமாக கரடி. எனது நண்பர் ஒருவர் இவைகளின் மனிதர்களை ஒத்த குணாதிசயங்களால் இவற்றை “கரடி மாந்தர்” என அழைப்பதுண்டு. நல்ல உணவு , நிறைவான உறக்கம் கொஞ்சம் மந்த புத்தி குட்டிகளிடம் உணர்ச்சிமிகு பாசம் மேலும் அவற்றின் கால்தடமும்கூட ஆச்சர்யப்படும் விதமாக மனிதர்களை ஒத்திருக்கும்.  காட்டின் குறும்புக்காரர்களான அழகிய   மலை அணிலும் பறக்கும் அணிலும் மரத்திற்கு மரம் தாவும் அற்புதத்தை பார்த்தபிறகும் நம்புவது சிரமமே. குரங்குகள்,  பன்றிகள் (காட்டுயிர்களுள் மிகவும் அறிவுக்கூர்மையானதும் தைரியமானதும்), இரவாடியான முள்ளம்பன்றி என இவையனைத்தும் என்னை ஆட்கொள்ளும் விருப்பங்கள்.

சமவெளி விலங்குகளில் வெளிமான் (மான்களில் மிகவும் அழகானதும் தன்மையானதும்) தனது சிறிய உறுதியான ரப்பர் குளம்புகளால் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் எந்த மெனக்கெடலும் இல்லாமல் நெடுந்தூரம் செல்லும்,சிங்க்காரா(சிறுமான்), சிறிய கவர்ச்சிகாரமான இந்திய நரி (உழவர்களின் நண்பன்), காட்டுமுயல், முள்ளெலி என சொல்லிக்கொண்டே போகலாம்.

“எனக்கு பறவைகளும் பிடிக்கும்“

ஒருவேளை நீங்கள் இந்நேரம் என் பிரச்சனையை ஊகித்திருக்கமுடியும், எது பிரத்தேயகமாக என்னை காட்டுயிர் நோக்கி கவர்கிறது என்னும் கேள்விக்கு நேரடியான பதில் இல்லாமையால், என் பழம் நெடும் நினைவுகளில் மட்டும் சஞ்சரிக்கிறேன் என நீங்கள் சிந்திக்கக்கூடும். என் பிரச்சினையை புரிந்துகொள்ளமுடிகிறது என நீங்கள் எண்ணநேர்ந்தால் உங்களால் இன்னும் விரிந்த பார்வையுடன் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை என நான் ஐயப்படுவேன். குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே சொல்லவேண்டுமென்றால் நெடும்காலம் முன்னரே காட்டுவிலங்குகளில் மட்டும் என்னை நான் ஈடுபடுத்திக்கொண்டிருக்க முடியும்.

Whiskered tern - மீசை ஆலா

சிக்கல் என்னவென்றால் காட்டு மிருகங்கள் நமது அகண்ட காட்டுயிரில் மிகச்சிறு பங்கையே வகிக்கின்றன. காட்டானைகளின், காட்டெருமைகளின், கரடிகளின், ஜல்டாபூரில் டோர்சா நதிகரையில் வளர்ந்த கொம்புமுறிந்த வலிமைமிக்க ஆண் காண்டாமிருகத்தின் பலத்தில் என்னை கவரும் அதே அம்சம் பறவைகள், ஊர்வன, சிறு உயிரினங்கள், மரங்கள், தாவரங்கள் ஏன் மலைகள், பள்ளத்தாக்குகள், நதி, கடற்கரைகள் காணும்போதும் குறைவதில்லை. என் ஈடுபாட்டிற்கு முடிவேயில்லை.

இவைகளின் ஈர்ப்பை தவிர்க்கவேமுடியாது. ஏன்! சாதாரண மனிதரும் இதை உணர்ந்திருப்பார். முதல் அடர் மழைக்கு பின் கூட்டம் கூட்டமாக நெரிசலான பகுதிகளில் நீர்பறவைகள் கூடுகட்டும் அழகை வியந்து நாட்டுப்புற மக்களும் காலம்காலமாக மிக ஊக்கத்துடன் நீர்நிலைகளை பராமரித்து வரும் கதைகளை நாம் கேட்டே வருகிறோம்.

Red wattled lawpig - செம்மூக்கு ஆட்காட்டி

பாரத்பூர் இந்தியாவின் மிகப்பெரிய நீர் பறவைகள் சரணாலயம். இங்கே பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பறவை வகைகள் ஆயிரக்கணக்குகளில் அக்டோபரில் கூடுகட்டும், சங்குவளை நாரைகள் குறிப்பாக தனித்த பேரழகுடன் நம் கவனத்தை ஈர்ப்பவை. அவற்றின் கழுத்திலும் முதுகிலும் உள்ள நுட்பமான கருப்பு வெள்ளை வடிவங்களோ அல்லது மஞ்சள் அலகோ அல்ல, அதன் இறகுகளில் உள்ள நாணுறும் ரோஜா சிவப்புதான் அதனை தனித்துக்காட்டுகிறது. இந்த கவர்ந்திழுக்கும் ரோஜாநிறத்தை அவை அடைந்தது வான்கா தன்னுடைய உயர்தர படைப்புகளில் உபயோகித்த பச்சைநிறத்திற்கான அதே உத்தியை பயன்படுத்திதான். ஒளிர் நீலமும் மஞ்சள் நிறமும் அருகருகே தீட்டப்படும்போது காண்போரின் கண்களில் அடர் பச்சை நிறத்தை கடத்தும் வான்கா ஓவியங்களைபோல ஈட்டிமுனை போன்ற இறகுநுனிகளில் மாறிமாறித் தெரியும் கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் சங்குவளை நாரையின் மென்மையான கண்கவர் ரோஜா நிறத்தை கடத்துகிறது. வலசை பறவைகள் சற்று தாமதமாக வந்து சேர்ந்துகொள்கின்றன பூநாரை, வாத்துக்கள், கொக்குகள், கூழைகடா, கடற்பறவைகள் என அனைத்தும் நீர்நிலைகளை காயல்களை நிரப்புகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவற்றின் வருகை நம் கவிஞர்களை ஈர்த்திருக்கிறது.

எந்த யானையாலும் இயலாது!

பெரும் பறவை கூட்டத்தை பாற்கும்போதே ஒருவர் ஆட்கொள்ளப்பட்டுவார் என்றில்லை. பறவைகள் மீதான ஆர்வத்தை ஒருவர் மிக எளிதாக மகிழ்சியூட்டும் அனுபவமாக வளர்த்தெடுக்க முடியும், சில அரிய வகை பறவைகள், வண்ண மற்றும் வடிவ வேறுபாடுகள் இவையெல்லாமே ஒருவரை குதூகலிக்கவைக்கும். வெறும் அரிய வகைகள், வண்ண கலவைகள் மட்டுமல்ல பறத்தலின் நுட்பம், இணைசேர்தல், பறவைபாடல் எல்லாமே மனிதனுக்கு பரவச அனுபவமே. மூங்கில் புதருக்குள் சோலைபாடி (ஷாமா) பாடுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அல்லது குண்டு கரிச்சானின் (ராபின்) சூரிய வணக்கத்தை? ஆந்தையின் குரல்கள் என்னை திடுக்கிடும் பரவசத்திலாழ்த்தும்.


ஒருமுறை  காட்டானை ஒன்றை பார்க்க செல்லும் வழியில் பறக்கும் மரப்பல்லி ஒன்று மரத்திலிருந்து சுழன்றபடியே மீண்டும் புறப்பட்ட இடததிற்கே சென்றமர்ந்ததை பார்த்தவாறே நின்றுவிட்டேன். எங்கள் பயண திட்டம் சற்றே தாமதிக்கவே என் நண்பர் சாதாரண நிகழ்வுகளுக்கு அதிக கவனம் காட்டுகிறேன் என என்னை அவசரப்படுத்தினார். அவரிடம் “எந்த அழும்பு செய்யும் யானையாலும் மர உச்சியில் ஒரு சிறு மரப்பட்டைபோல இருந்து சட்டென்று உயிர்பெற்று சுழன்று மீண்டும் ஒரு சிறு மர பட்டையாகி மறைய முடியாது” எனக் கூறினேன். ஆம் அது உண்மைதான் எந்த யானையாலும் அது சாத்தியபடாது.

என் பாரமும் என் ஆறுதலும்

பூச்சியியலாளர்கள் (Entomoligists) என்னிடம் சொல்வதுண்டு வேறெந்த துறையிலும் இல்லாத பரபரப்பும் ஆர்வத்தை தூண்டும் அம்சமும் காட்டு பூச்சிகள் மற்றும் சிலந்திகள்(arachnids )ஆராய்ச்சியில் உண்டென, ஆனால் எங்கும் பெருகி விரிந்திருக்கும் நம்முடைய பூச்சிகளின் உலகம் பற்றிய என்னுடய அறிவுக்குறைமையால் என்னால் அதில் அதிகம் ஈடுபாடு கொள்ள முடியவில்லை. எனினும் எனக்கு தாவரவியலில் நீண்ட படிப்பினை இருந்தது. அதற்கு நன்றி பாராட்டுக்கிறேன். எப்போதாவது என்னுடைய பயணம் விலங்குகளின்றி அல்லது  வேறேதுமின்றி வெற்றுபயணமாக இல்லாமல் போனமைக்கு தாவரங்களே காரணம். காட்டுச் செடிகளை, மழைகாடுகளின் நெடுதுயர்ந்த மரங்களை, பெருமைக்குரிய கருங்காலியை, தேக்கை அல்லது வியப்பூட்டும் காட்டு பூக்களின் மலர்ச்சியை ரசிப்பதற்கு ஒருவர் தாவரவியலாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை. கோடைகால துவக்கத்தில் இந்திய லேபர்னும் என்றழைக்கப்படும் சரகொன்றை  மரங்களும் மற்ற காட்டு மரங்களும் பூக்கும். நவம்பர் மாதமோ சிறிய தாவரங்களின் அழகிய பூத்தல் நிகழும் பருவம். காந்தள் மலரின் பளிச்சென்ற மஞ்சள் சிகப்பு மலர்கள் புதர்முழுதும் அலங்கரிக்கும், மிகவும் அழகானதும் இனிமையான மணம் வீசுவதுமான ஆர்க்கிட் பூக்கும்.

ஆம், நம் காட்டுயிரின் எல்லாமும் என்னை ஈர்க்கவே செய்கிறது. அதுவே என்னுடைய பாரமும் எனக்கான ஆறுதலும்.

மா. கிருஷ்ணன்

ஆண்டு : 15/06/1975

தமிழில் - விஷ்ணுகுமார்

படங்கள்- மா. கிருஷ்ணன்

mkrishnan.com/photography.html



மா. கிருஷ்ணன் (ஜூன் 30, 1912 - பிப்ரவரி 18, 1996) எழுத்தாளர், சுற்றுசூழல் ஆர்வலர். தமிழில் சுற்றுசூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர்.

மா. கிருஷ்ணன் தமிழ் விக்கி

விஷ்ணுகுமார் புதுவைக்கு அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் மென்பொறியாளராக பணிபுரிகிறார்.