Thursday 14 March 2024

சூழலியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் முதலில் பல்லுயிர் இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பேசவேண்டும் - ரவீந்திரன் நடராஜன் நேர்காணல்

ரவீந்திரன் நடராஜன்

ரவீந்திரன் நடராஜன் பறவையியலாளர், களச்செயல்பாட்டாளர். 25 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பறவைகள் மீதான ஆர்வத்திலிருந்து, பறவைகளைப் புகைப்படம் எடுப்பது, பறவைகள் பற்றிய ஆய்வுகள் நடத்துவது எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். பறவையியலை அதிகமானவர்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு வருடத்துக்கு 1500 ஆசிரியர்கள் 10,000 மாணவர்களைப் பயிற்றுவிப்பது என்ற முன்திட்டத்துடன் பயணித்து வருகிறார். பறவைகள் குறித்த தனது அவதானிப்புகளைத் தொடர்ந்து பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளத்திலும் எழுதி வருகிறார். மேலும், Research gate, Journal of threatened taxa போன்ற இதழ்களில் இவரது ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அரிய உயிரினங்களை பதிவுசெய்தல் பறவைகளின் வாழ்வியல் மீதான ஆய்வுகள் இவற்றின் மூலமாக மாநிலத்தின் சில பல்லுயிர் சூழல் மிக்க பகுதிகளை அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பல சமூக, சூழல் செயல்பாட்டாளர் குழுக்களுடன் இணைந்து பங்காற்றியிருக்கிறார். அதிகமும் ஆய்வுசெய்யப்படாத இடமாகிய இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்விடப் பறவைகள், வலசைப் பறவையினங்கள் குறித்த ஆய்வுகள் செய்து முக்கியமான பதிவுகளை ரவீந்திரன் செய்துவருகிறார். பறவைகள் மட்டுமல்லாது வண்ணத்துப்பூச்சிகள், காட்டுயிர்கள் குறித்த இவரது ஆய்வுகளும் முக்கியமானவை. தொடர்ந்து வனத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு உதவுவதோடு இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை, மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தினை நிறுவி அதன் வழியாகவும் இயங்கி வருகிறார். 

ரவீந்திரன் நடராஜன் மதுரையில் (30.3.1967) பிறந்தார். அப்பா நடராஜன். அம்மா சாந்தகுமாரி. D.EEE, Dipl. in Ornithology படித்துள்ளரா். மனைவி உஷா நந்தினி, கணித ஆசிரியை. மகள் அனுஷா. தற்போது மதுரையில் வசிக்கிறார். 

ரவீந்திரன்

உங்களுடைய இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள். 


நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மதுரை தான். அப்பா அம்மா தாத்தா மாமா என எல்லோருமே பிற உயிர்களை நேசிப்பவர்களாக இருந்தார்கள். வீடுகளில் சிறிய மீன்கள் முதல் குதிரை வரை வளர்த்திருக்கிறார்கள். வனச் சட்டம் வரும் முன் என்னுடைய மாமா ஒரு பெரிய வேட்டையாடி. சமயங்களில் வேட்டையாடிகளாக இருப்பவர்களது குழந்தைகள் ஒரு நல்ல இயற்கை பாதுகாவலர்களாக (conservationist) மாறிவிடுவார்கள். அதேபோல என்னுடைய மாமா மகன்களும் கானுயிர் ஆர்வலர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களின் தாக்கம் எனக்கும் எனது மூத்த சகோதரருக்கும் ஏற்பட்டது. 


அப்பா பெயர் நடராஜன். அம்மா பெயர் சாந்தகுமாரி. அப்பா ஒரு தொழில் முனைவோர் குடும்பத்தில் தான் பிறந்தார். ஆனால் அவருக்கு அறிவியல் பற்றி ஆர்வம் உண்டு. அப்பா இருந்தவரை எங்கள் வீட்டுக்குள் கார்ப்பெண்டரோ எலக்ட்ரிஷியனோ வந்ததில்லை, முடிந்தவரை என்னென்ன செய்ய முடியுமோ, அவரே செய்வார். அறிவியல் தொழில் நுட்பங்களில் ஆர்வம் இருந்த அவருக்கு நிழற்படம் எடுக்கும் ஆவலும் இருந்தது. அவர் கேமரா கொண்டு எடுக்கும் படங்களை வீட்டிலேயே டெவலப் செய்வார். எனது அறிவியல், தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளும் ஆவல் அப்பாவிடம் இருந்து வந்ததே. அம்மா எதுசெய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வார். பின்னல் தையல், ஆடைகள் வடிவமைத்தல், கோலம் என எல்லாவற்றிலும் நல்ல ரசனையும் அதில் ஒரு ‘பறவை’யும் இருக்கும். எனது அண்ணன் பெயர் நாகேந்திரன், ஒரு சிறந்த புத்தக வாசிப்பாளர். மேலும் அவர் சிறு வயதில் இருந்தே அஞ்சல் தலை, நாணயங்கள் சேகரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவர்.


ஒரு சிறு தொட்டியில் இருக்கும் மீனை சரியாகப் பார்த்துக்கொள்ளத் தெரிந்தால், அவர்கள் பின்னால் நல்ல பெற்றோர்களாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எங்களுடைய அப்பா சொல்வார். ஒரு விடுமுறையின்போது எங்களுக்கு ஒரு மீன் தொட்டி வாங்கித் தந்தார். அதை அடுத்த விடுமுறை வரைக்கும் எப்படி வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து எங்களுக்கு ஏதாவது ஒரு பரிசு கிடைக்கும். அதனால் நானும் என்னுடைய அண்ணனும் அதில் ரொம்ப கவனம் எடுத்துக்கொள்வோம். 


அப்பா கண்டிப்பானவர் என்றாலும் எங்களுக்கு புதிய விஷயங்களை கற்றுத்தரும் முன்மாதிரியானவராக இருந்தார் எனலாம். திரும்பத் திரும்ப புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவராகவே இருந்தார். சிறுவர்கள் ஆங்கிலப் படம் பார்ப்பது என்பது 70களில் அரிதுதான். ஆனால் அப்பா அழைத்துச் சென்ற Tarzan the ape man, Hatari, African safari, Drums of Disney, The Beautiful people, Jaws Paws Claws போன்ற படங்கள் எங்களின் காட்டுயிர் மோகத்தை சிறு வயதிலேயே தூண்டியது எனலாம். அதிலும் கண்ணதாசன் அவர்களின் தமிழ் உரையில் வெளிவந்த கிங் எலிபான்ட் படம் காட்சிகளாக இப்பொழுதும் மனதில் நிற்கிறது. 


நூலகம் செல்லும் பொழுது காட்டுயிர்கள் தமிழ் கலைக் களஞ்சியம் வழியே எங்களுக்கு அறிமுகம் ஆனவர்தான், மா. கிருஷ்ணன். அவரது கானுயிர்ப் நிழற்படத் தொகுப்பான Eye in the Jungle புத்தகத்தை இப்போதும் பொக்கிஷமாக காத்து வருகிறேன் அவருடைய கட்டுரைகளுக்கு புத்தகத்தில் அவரே படம் வரைந்து இருப்பார். அதுவும் என்னை கோட்டோவியங்கள் வரைவதற்கு பெரிதும் உந்தியது. அப்புறம் கோகுலம் போன்ற இதழ்களில் வாண்டு மாமா எங்களுக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அந்த வாசிப்புதான் எங்களை அடுத்தடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றது. என்னுடைய அண்ணன் நாகேந்திரன் தேடித் தேடி நிறைய விஷயத்தை படிப்பார். எங்களது அனுபவத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது வழக்கம். களத்தில் நான் இவ்வளவு உற்சாகமாக வேலை பார்ப்பதற்கு என்னுடைய அண்ணனுடைய பங்களிப்பும் ரொம்ப முக்கியம். 
வாசிப்பிலிருந்து துறை சார்ந்த நிபுணத்துவம், களச்செயல்பாடு நோக்கிச் சென்றது எப்படி? 


துரதிர்ஷ்ட வசமாக துறைசார்ந்த படிப்பு என் விருப்பத்தை ஒட்டி அமையவில்லை. வீட்டுச்சூழலை மனதில் கொண்டு உயிரியல் துறையை விட்டுவிட்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பற்றிப் படிக்க நேர்ந்தது. கல்லூரி காலத்தில் இருந்து ஒரு 20 வருஷம் இயற்கையுடனான தொடர்பில் பெரிய இடைவெளி என்றே சொல்லலாம். அப்போது தேடிப் போய் படிக்க முடியவில்லை. படித்து முடித்த உடனே நுகர்வோருக்கான மின்னணுக்கருவிகள் செய்யும் துறையில் வேலை கிடைத்து. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடந்து வேலை இருக்கும். பிறகு கணினி தொடர்பான வேலையில் சேர்ந்தபோது சற்று இலகுவாக இருந்தது. வாடிக்கையாளர்களுக்கான சேவை தொடர்பாக எங்கேயாவது செல்லும்போது, சாலை ஓரத்தில் இருக்கும் பறவைகளை கவனிக்க ஆரம்பித்தேன். அந்த காலகட்டத்தில் புறநகர்ச் சாலையில் குறுக்கே பறந்த வேதிவால் குருவியினை முதலில் கண்டேன். அதன் நீண்ட வால் என்னைப் பெரிதும் கவர அதன் பெயர் தேடும் பயணத்தில் கிடைத்தது திரு. இரத்தினம் அய்யா அவர்கள் எழுதிய "தமிழகத்து பறவைகள்" புத்தகம். அதன் பின் தான் பார்க்கும் பறவைகளை எல்லாம் இனம் கண்டு பட்டியல் இடும் பழக்கம் வந்தது.


வேதிவால் குருவி

ஆனால் இயற்கை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் இல்லையா. அப்படி மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒரு வாடிக்கையாளர் சேவையை முடித்துவிட்டுத் திரும்பும்போது வானத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கூழைக்கடாக்கள் பறந்து சென்றன. எவையெல்லாம் ரொம்ப வெள்ளையாக அல்லது வண்ணமாக இருக்கின்றனவோ அவையெல்லாம் வெளிநாட்டுப் பறவைகள் என்றுதான் அதுவரையில் மனதில் பதிந்திருக்கிறது, இவற்றைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு அதிர்ச்சி. அவை எங்கிருந்து வருகின்றன என்று தேடிப்போகும் போது தான் சாமநத்தம், அவனியாபுரம் கண்மாயில் பெரும் எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள் இருப்பது தெரிய வந்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு பறவைகளைப் பார்க்கச் செல்வது ஒரு போதையாகிவிட்டது. ஒவ்வொரு வார இறுதியிலும் தவறாமல் அங்கே சென்று எத்தனைப் பறவைகள் வருகின்றன என்று நானாக ஒரு கணக்கு எடுக்க ஆரம்பித்தேன். இப்போது நம்மிடம் இருப்பதுபோல பறவைகள் கணக்கெடுப்புக்கான செல்போன் செயலிகள் இல்லை. தனியாகவே குறிப்புகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தோம்.2000ம் ஆண்டு வாக்கில் “சலீம் அலி” யின் இந்தியப் பறவைகள், “ரிச்சர்ட் க்ரிம்மெட்”னுடைய “இந்திய துணைக்கண்ட பறவைகள்” பற்றிய கள புத்தகம் கிடைத்த பிறகு பறவை பார்ப்பது பொழுதுபோக்காக இருந்து, தீவிர செயல்பாடாக மாற ஆரம்பித்தது. 


2012 ஆம் ஆண்டில் முகநூலில் நான் எடுத்த படங்களைப் பதிவு செய்யும் போது மதுரை என்று இடத்தையும் குறிப்பிடுவேன். அப்போது மதுரையில் அரசு துறைகளும், வீட்டுவசதி வாரியமும் ஆக்கிரமித்தது கண்மாய்களைத்தான். நீர்அமைப்புகளுக்கான போராட்டங்கள் சார்ந்து இயங்கியவர்கள் தொடர்புகொண்டபோது நீர்நிலைகளை எப்படிப் பாதுகாப்பது என்ற உரையாடல் ஆரம்பித்தது. அதில் என்னுடைய கருத்தாக “ஒரு பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அதைச் சுற்றி இருக்கக்கூடிய பல்லுயிரியத்தின் முக்கியத்துவம் பற்றி நாம் பேசவேண்டும். அந்த நீர்நிலையைச் சார்ந்து எத்தனை உயிர்கள் இயங்குகின்றன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்”, அவ்வாறு செய்யப்படும் ஆய்வறிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் நாம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என விளக்கினேன். அதிலிருந்துதான் மதுரை இயற்கை பேரவை என்ற ஆய்வுக்கான அமைப்பு இயங்க ஆரம்பித்தது. இப்போது இந்த அமைப்பு மதுரை இயற்கை பண்பாட்டு மையம் என இயங்கி வருகிறது.


கூழைக்கடா

எப்போது மாணவர்களுக்கு பறவையியலை அறிமுகப்படுத்தவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது?


என்னுடைய மருமகள் அம்ரிதா உள்ளிட்ட சில குழந்தைகளை விடுமுறையில் இயற்கை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது என்னுடைய வழக்கம். வெளியே அழைத்துச் செல்வது, படிக்க புத்தகங்கள் கொடுப்பது, இணையத்தில் இருந்து படங்கள் தரவிறக்கிக் கொடுப்பது என்று குழந்தைகளுக்கு சுவாரசியமான வகையில் இயற்கையைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். இது அவர்களுக்கு ஊக்கமளித்தது. அம்ரிதா கால்நடை மருத்துவம் முடித்தார் [வெட்னரி சயின்ஸ்]. வாய் பேச முடியாத எல்லா உயிர்களுக்குமான பொது மருத்துவமனை ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்பது அம்ரிதாவின் கனவு. துரதிர்ஷ்டவசமாக சிறு வயதிலேயே அம்ரிதா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரது வாழ்நாளில் அவருக்கு நிறைய கனவுகள் இருந்தது. விலங்குகளுக்கான மருத்துவமனை, பல்லுயிர் சூழல் கொண்ட ஒரு உணவுக்காடு, அதில் வகை, வகையான மரங்கள், உயிர்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய கனவுகள் இருந்தது.


2008ஆம் ஆண்டு மக்களைத் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பாக அரசுக் கண்காட்சியி ஒன்றில் பங்கேற்க முடிந்தது. இரண்டு ஆண்டு காலம் நீர்நிலைகளில் எடுத்த பறவைகளுடைய படங்களை அங்கு பார்வைக்கு வைத்தோம். குழந்தைகள் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்தனர். அங்கு வருபவர்களிடம் மிகுந்த ஆர்வத்துடன் பறவைகளைப் பற்றி சொல்வார்கள். ஆனால் அதிர்ச்சியான விஷயம் அங்கு வருபவர்களில் பாதி பேர், இது என்ன பறவை என்றெல்லாம் கேட்க மாட்டார்கள் மாறாக நான் இந்தப் பறவை சாப்பிட்டிருக்கேன், இதன் கறி நல்லா இருக்கும் என்றுதான் சொல்வார்கள். இந்த அசட்டுத்தனம் எல்லாம் குழந்தைகளுக்கு மனச்சோர்வையே கொடுத்தது. 


அங்கிருந்த வனத்துறை அதிகாரி இவர்களுடைய ஆர்வத்தைப் பார்த்து, இந்தக் குழந்தைகளை திண்டுக்கல் காந்திகிராமத்தில் நடந்த வன வார விழாவில் பங்கு கொண்டு புகைப்படங்களைக் காட்சிப்படுத்த அழைப்பு விடுத்தார். அப்போது வனத்துறையுடன் செயல்பட கிடைத்த சந்தர்ப்பம், தொடர்ந்து அவர்களுடன் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தர துவங்கியது. 


அம்ருதாவுடன் ரவீந்திரன்

‘அம்ரிதா அறக்கட்டளை’ துவங்கியது எப்போது?

 

அம்ரிதா நல்ல அறிவாளி. தேசிய அளவில் கால்நடை மருத்துவத் துறையில் இந்தியாவின் இளம் அறுவைச் சிகிச்சை நிபுணர் (young junior surgeon) என்ற விருதை பெற்றார். அம்ரிதாவுக்கு புற்றுநோய் வந்து அவதிப்பட்ட காலத்துக்கு முன்னரே நான் என் பணியை விட்டுவிட்டு அறக்கட்டளை வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தேன். அப்போதே புற்றுநோயால் எங்கள் குடும்பத்தில் இரண்டு மூன்று இழப்புகள் ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்தன. எதுக்காக பணம் சம்பாதிக்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. அவளுடைய நோய்க்கு உலகத்தில் இருக்கக்கூடிய நிறைய மருத்துவர்களைப் ஆலோசித்த பின்னர், தொடர் சிகிச்சை எண்ணத்தைக் கைவிட்டார். அதாவது ஒரு சில நோய்களுக்கு மருத்துவ உலகத்தில் தீர்வு இல்லை என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. எனில் நோய் இல்லாத ஒரு வாழ்க்கையை நோக்கித்தான் நாம் நகர வேண்டும் என்ற விழிப்புணர்வு இளம் வயதிலேயே வர வேண்டும் என்று சொல்வார். அம்ரிதாவை குழந்தை என்றே சொல்ல மாட்டேன். இயற்கை அனுப்பி தந்த தெய்வம் தான் அம்ரிதா. அவளுடைய மறைவுக்குப் பிறகுதான் அறக்கட்டளையை முழுமையாகப் பதிவுசெய்தேன்.


இளைய தலைமுறையிடம் இயற்கை பற்றிய அறிதலை மேம்படுத்த எல்லா இடத்துக்கும் நாமே செல்ல முடியாது, எனவே ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கலாம் போன்ற பரிந்துரைகள் எல்லாம் அம்ரிதாவுடையது. எல்லாமே நாம் காலம் கடந்துதான் செய்கிறோம். காலம் கடந்து செய்யாமல் இந்த விஷயத்தை உடனே நீங்கள் செய்ய வேண்டும் என்பது அம்ரிதாவின் வேண்டுகோள்.


ஒரு காலகட்டத்தில் பணம் மீதான அபிப்ராயம் மாறிவிட்டது, எவ்வளவு பணம் இருந்தாலும் ஒருவரை நம்மால் மீட்டுக் கொண்டு வர முடியவில்லை. 2013ல் எனக்கு நடந்த விபத்தில் என்னுடைய வலது கண் பார்வை போய்விட்டது. அந்த விபத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடம் நான் இறந்துவிட்டதாக நினைத்து எனக்கு யாரும் உதவக்கூட இல்லை, தற்செயலாக ஒருவர் பார்த்து 108க்கு அழைத்து காப்பாற்றினார். எனக்குள் நிறைய கேள்விகள். ஏன் நான் இறந்து போயிருக்க கூடாது? ஏன் என் ஒரு கண் பார்வை மட்டும் போய்விட்டது. ஏன் இன்னொரு கண்ணும் போகவில்லை? இது எல்லாமே சேர்ந்து எனக்கு எதையோ உணர்த்தியதுபோல இருந்தது.


எங்க அப்பா ரொம்ப சின்ன வயதிலேயே இறந்தார். பிறகு அக்கா ஒருவர் ரொம்ப சின்ன வயதில் இறந்தார். எல்லாவற்றையும் விட அம்ரிதா ரொம்ப ரொம்ப சின்ன வயதில் மறைந்தார். ஆனால் நான் திரும்பத்திரும்ப விபத்திலிருந்து ஒவ்வொரு முறையும் உயிரோடு மீண்டு வந்தேன். அப்படியெனில் இவர்களுடைய வாழ்க்கையைத்தான் நான் வாழ்கிறேனோ என்று தோன்றியது. அவர்களுடைய வாழ்க்கையில் எதெல்லாம் நோக்கமாக இருந்ததோ அவற்றையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டு பயணம் செய்வதுதான் என்னுடைய வழியாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். 


ஒரு எளிய வாழ்க்கை. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு தனியனாக ஒரு எளிய வாழ்க்கை வாழ மாதம் 7000 ரூபாய் போதும் என்று முடிவு எடுத்தேன். இதைத் தாண்டி பணத்துக்காக ஏன் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்? இந்தப் பணத்தை ஒரு வாரத்தில் என்னால் சம்பாதிக்க இயலும். மிச்சம் இருக்கிற காலத்தை முழுதுமே பயணங்களுக்கு என்று முடிவு செய்தேன். கல்லூரிகளுக்குச் சென்று மாணவ மாணவியருக்கு இயற்கை பற்றிய புரிதலைச் சொல்ல ஆரம்பித்தேன். ஒரு பேருந்து கட்டணத்துக்கு நமக்கு ஒரு ஸ்பான்சர் கிடைத்தால் போதும், பயணம் செய்துகொண்டே இருக்கலாம். அப்புறம் நிறைய பள்ளி ஆசிரியர்கள், தேசிய பசுமை நடை இதிலிருந்தெல்லாம் தொடர்புகள் கிடைத்த பிறகு மதுரை தாண்டி அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு பயணிக்க துவங்கினேன். 


ராமநாதபுரம் பறவைக் கணக்கெடுப்பில் வனத்துறையுடன் ரவீந்திரன் (2024)

முழுமையான சூழலியலாளராக ஆனது எப்போது? பறவையியலில் உங்கள் மாணவர்கள் எவ்வாறு பங்காற்றுகிறார்கள்?


என்னுடைய பார்வையை இழந்தபோது எனக்கு ஒரு தம்பி ஒரு DSLR கேமரா வாங்கிக் கொடுத்தான். அது தான் என்னுடைய இன்னொரு கண்ணாகியது. இந்த சமூகத்துல பெரிய அளவுல பேசுபொருளா ஆகியவை பயணங்களில் நான் எடுத்த படங்கள் பற்றிய பதிவுகள் தான். கிட்டத்தட்ட எட்டு வருஷ காலமாக இறகுகள் அப்படிங்கிற அமைப்பு இயங்குகிறது. ஒரு பக்கம் வனத்துறையுடன் சேர்ந்து அவர்களுக்கு தரவுகள் எடுப்பது, மறுபக்கம் கல்லூரி மாணவர்களைக் களத்துக்குக் கொண்டு வருவது இவை இரண்டையுமே எங்கள் இறகுகள் அமைப்பு செய்கிறது.

 

துறைசார்ந்த மாணவர்களின் தேவைக்காக, கல்லூரிகளின் விலங்கியல் துறை மாணவர்களை அணுகியபோது அங்குள்ள பெண்கள் யாருமே களப்பயணம் செல்வதில்லை என தெரியவந்தது. இப்போது கிட்டத்தட்ட 10 கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வனத்துறை ஒவ்வொரு பறவைகள் விலங்குகள் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தும் போதும் எங்களுடைய மாணவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினுடைய கணக்கெடுப்புக்கு என்னுடைய இணைப்பில் இருக்கக்கூடிய பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். மற்ற எல்லா மாவட்டத்திலும் கணக்கெடுக்க ஆளில்லாமல் தவிக்கும்போது, மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த நிலைமையை வெகுவாக மாற்றியிருக்கிறோம். அதே போல இந்த மதுரை நேச்சர் ஃபோரம் வழியாக 2015ல் இருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் எங்களுடைய ஆய்வுகளைத் துவங்கினோம்.


பறவைகள் சார்ந்து மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த என்னை இந்த தொடர்ந்த களப்பயணங்களின் மூலமாக கிடைத்த சூழலியல் அறிவுதான் பல்லுயிர் சார்ந்து இயங்கத் தூண்டியது. பல்லுயிர்களோட வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கும் அப்போ ஒரு சூழல் மாற்றம் என்ன பிரச்சனைகளை உருவாக்கும் என்பது போன்ற விஷயங்களை ஒவ்வொரு வார இறுதியிலுமாகப் பயணித்து மதுரையைச் சுற்றியுள்ள 17 நீர்நிலைகளை ஆய்வு செய்யத் துவங்கினோம். அப்படிப் பதிவு செய்யும்போது லெகர் ஃபால்கன் என்னும் லகுடு வல்லூறு பறவை மதுரை அரிட்டாப்பட்டில முதல் முறையா எங்க குழுவில் பதிவு செய்தோம். அதனை தொடர்ந்து மேற்கொண்ட தொடர் தேடல்களில் 150க்கும் மேற்பட்ட பறவையினங்களும், சில அரிய கானுயிர்களும் இருப்பது தெரியவந்தது.


லெகர் ஃபால்கன் என்னும் லகுடு வல்லூறு பறவை


அந்தக் காலகட்டத்துலதான் அந்த ஊர் மக்கள் கிரானைட் மாபியா கிட்ட இருந்து அரிட்டாபட்டி மலையைக் காப்பாற்றுவதற்காகப் போராடிட்டு இருந்தாங்க. சகாயம் ஐஏஎஸ் அதுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார், இந்தக் காலகட்டத்தில் பரபரப்பாக பத்திரிகை செய்திகளின் வழியாக பேசுபொருளாகியது இந்த லகுடு பறவை இருக்கிறது என்ற செய்தி. அப்புறம் நிறைய புகைப்பட வல்லுநர்கள் அங்கே வர ஆரம்பித்தார்கள். குடைவரைகளும், கல்வெட்டுமாக 1600 ஆண்டுகால சரித்திரம் உள்ள மலை அது. லெகர் ஃபால்கன் என்னும் லகுடு வல்லூறு இருப்பை பதிவு செய்ததை தொடர்ந்து பெரும் பேசு பொருளாகி இன்று அரசின் தனிக்கவனத்தை பெற்று அரிட்டாபட்டி மலை தமிழ்நாட்டினுடைய முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிற்கிறது.


இந்த மலையில கிட்டதட்ட 13 வகை கழுகு இனங்களைப் பதிவு செய்தோம் இந்தச் சூழல் சரியாக இருந்தால், ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் உயிரினங்களின் பிரமீடு போன்ற கோபுர அடுக்கு சரியாக இருக்கும்.


அதேபோல மதுரையில் இருக்கக்கூடிய மத்திய சிறையின் விரிவாக்கத்திற்கு இடையபட்டி காட்டை தேர்வு செய்தார்கள். எங்களின் குழு மேற்கொண்ட ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் அரிய வகை மரங்களும், தாவரங்களும், அதை சார்ந்து உயிரினங்களும் வாழ்வது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஊர் மக்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அரசு அத்திட்டத்தை கைவிட்டது. முறையான ஆய்வுகளும், அறிக்கைகளும், மக்களின் ஒற்றுமையும் சேர்ந்து இன்று இடையபட்டிக் காடு ஒரு பெரிய மத்திய சிறை வளாகமாக மாறாமல் பல்லுயிர்களின் வாழ்வுக்கு ஆதாரமான காடாகவே இன்றும் உள்ளது. சூழல் சார்ந்து இந்தப் பல்லுயிரியத்தின் பெறுமதி நமக்கு தெரிந்திருந்தால், ஒரு அமைப்பாக நம்ம செயல்படுகிறோம் என்றால் கண்டிப்பா என்ன இயற்கையின் தேவையோ அதை நிலைநிறுத்த முடியும்.


மாணவர்களுடன் ரவீந்திரன்

தமிழ்நாட்டில் பல்லுயிரியம் பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது?


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லா மாவட்டங்களிலுமே பணிபுரிந்து இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு கல்லூரிக்காவது சென்றிருப்பேன். அந்த விபத்துக்குப் பிறகு வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக நான் செய்த செயல்கள் நல்ல விளைவுகளை கொடுத்ததன. பிறகு வனத்துறையுடன் சேர்ந்து அவர்களுடைய பல்லுயிர்கள் பற்றிய ஆய்வுகளுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கக்கூடிய நிறைய வனங்களில் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய கணக்கெடுப்பு பணி நேரத்தில் நிறைய பணிபுரிந்து இருக்கிறோம். அதேபோல பாறு கழுகுகள் பற்றிய ஒரு அறிவியல் குழுவிலும் நான் ஒரு உறுப்பினராக இருந்து அவர்களுக்கு வேலை செய்து இருக்கிறேன். யானைகள், புலிகள் பற்றிய கணக்கெடுப்பு பணிக்கு நானும் என்னுடைய மாணவர்களும் பணி புரிந்திருக்கிறோம். இதன் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய நற்பெயரால் அரசுடன் இணைந்து இயங்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 


2015 ஆம் ஆண்டு வாக்கில் ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்விடப் பறவைகள் இருப்பை, வலசைப் பறவைகளின் வருகையை கணக்கிடும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட என்னைப் போல இருந்த பறவை ஆர்வலர்கள் எல்லோரையும் தமிழ்நாடு அளவில் ஒருங்கிணைப்பதற்கு தமிழகத்தின் மூத்த பறவையாளர்கள் அனைவரின் முன்னெடுப்பில் 2015ல் தமிழ் பறவையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். அந்தக் கூட்டம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனித்தனியாக இருந்த பலரை ஒருங்கிணைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி என்பதை ஒரு செயல் திட்டமாக முடிவெடுக்கச் செய்தது. நிறைய ஆர்வலர்கள் தனிப்பட்ட கணக்கெடுப்பு முறைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்து, பொதுமுறை ஒன்றைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக ebird என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தோம். அந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாநிலத்திலும் சிதறிக் கிடந்த இயற்கை ஆர்வலர்களையும் பறவை ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்தது. 


ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விழா காலத்தின் போதும், உதாரணமாக கேரளத்தில் ஓணம், கர்நாடகாவில் சங்கராந்தி, மகாராஷ்டிராவில் ஹோலி காலத்தின் போதும் பறவைகள் கணக்கெடுப்பை செய்து வந்தனர். இது போல தமிழ்நாட்டில் பொங்கல் சமயத்தின் போது பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு என்ற ஒரு நிகழ்வில் இயற்கை ஆர்வலர்கள் அனைவரையும் பங்கெடுக்கச் செய்ய முடிவெடுத்தோம். இதன் மூலமாக பறவைகள் அதிகமாக இருப்பதாக கருதப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை பெருநகரமான சென்னை கோயம்புத்தூர் போன்ற இடங்கள் எல்லாமே அதிகமாக கவனிக்கப்பட்டன.


ஆனால் எந்த ஆய்வுமே இல்லாத ராமநாதபுரம் போன்ற இடங்களை யாருமே கவனிக்கவில்லை. மதுரையில் நாங்கள் இருக்கும் பொழுது ராமநாதபுரம் சிவகங்கை போன்ற மாவட்டங்களை யாராவது சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அதன் பொருட்டு நானும் கால்நடை மருத்துவர் ரவி என்பவரும் கிட்டத்தட்ட வாரத்தில் ஐந்து நாள் பைக்கிலேயே பயணம் செய்து சிவகங்கை ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்குச் சென்று பறவைகள் கணக்கெடுக்கும் பணியை செய்தோம். இதற்கு முன் முனைவர் ரத்தினம் ஐயாவைத் தவிர வேறு யாரும் இந்த மாவட்டங்களை அதிகம் கவனிக்கவில்லை. ரத்தினம் ஐயாவுக்குப் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டு இடைவெளி விழுந்து அவருக்குப் பிறகு நாங்கள் களத்தில் இறங்கினோம்


Castalius rosimon (Common Pierrot)

உங்கள் களப்பணியின் முக்கிய கண்டுபிடிப்புகள் பற்றிச் சொல்லுங்கள்


நான் சொல்வது போல இயற்கை ஒவ்வொரு முறையும் ஒருவரைத் தேர்வு செய்யும். என்னை பொறுத்தவரை கிழக்குக் கடற்கரை என்னைத் தேர்வு செய்தது. நான் 2012ல் BNHS நடத்திய பறவையியல் வகுப்பில் சேர்ந்தேன். அந்த வகுப்பில் கோடியக்கரையைக் களமாக எடுத்துக்கொண்டோம். அங்கு தான் களப்பணி எல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். என்னுடைய துறை சார்ந்த ஆய்வு ஆரம்பித்தது கிழக்குக் கடற்கரையில், பழவேற்காடு, வேதாரண்யம் சதுப்பு நிலப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதியில் தான். இந்த இடங்களில் நடத்தவேண்டிய ஆய்வை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொண்டோம். ஒன்று கடலும் கடல் சார்ந்த பகுதியும், இரண்டு நீர் நிலைகள், விவசாய நிலங்கள், மூன்று வறண்ட முட்காடுகள். இந்த மூன்று பகுதிகளையும் கவனிக்க ஆரம்பித்தோம். அப்போது எனக்கு பறவையாளர்களும் நல்வழி காட்டினார்கள். மூத்த ஆர்வலர்கள் விலகும் ஒரு கட்டத்தில் நாங்கள் இதைக் கையில் எடுத்துக் கொண்டோம்.


கொரோனா காலகட்டத்தில் இருந்து முழுக்க முழுக்க நாங்கள் எல்லா பருவ காலத்திலும் இதைச் செய்ய ஆரம்பித்தோம். பொதுவாக பறவை ஆர்வலர்கள் பலர் விடுமுறை காலங்களிலும், வலசை காலங்களில் மட்டும் ஆய்வு செய்வார்கள். நாங்கள் நான்கு பருவத்திலும் ஆய்வு செய்ய ஆரம்பித்தோம். எல்லா காலகட்டத்திலும் செய்யப்பட்ட ஆய்வுகளினால் தான் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் செய்திருந்தால் ராமநாதபுரம் ஆசிய அளவில் பேசப்படும் ஒரு பகுதியாக மாறி இருக்காது. நமக்கு ஆர்ட்டிக்கிலிருந்து வலசை வரக்கூடிய பறவை இனங்கள் தான் அதிகம். ஆனால் முதல் முறையாக அண்டார்டிகாவிலிருந்து வலசை வந்த மென் அலகு அண்டகார பறவை எனப்படும் லைட் மேன்டில்ட் அல்பட்ராஸ் என்ற பறவையை அங்கு பதிவு செய்தோம். ராமேஸ்வரம் அந்தோணியாபுரம் பகுதியில் அது பதிவு செய்யப்பட்டது.


பைஜூவுடன் ரவீந்திரன்

நாங்கள் அதுதான் இந்தியாவுக்கு வலசை வந்த முதல் பறவையாக இருக்கும் என்று நினைத்தோம். பின்னர், தரவுகளை சரிபார்க்கையில் அது ஐரோப்பிய ஆசியப் பகுதிகளுக்கு வந்ததைப் பற்றிய முதல் தகவல் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயங்கள் எங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது எனலாம். கிட்டத்தட்ட நானும் Dr. ரவியும் சேர்ந்து எடுத்த புள்ளிவிவரங்களும், ஆய்வுகளும் குறிப்புக்களாகவும், படங்களாகவும் மென்பொருள் வடிவில் இருந்தது. விலங்கியல் துறையில் இருந்து பைஜு என்பவருடைய நட்பு கிடைத்த பிறகு ஒரு ஆராய்ச்சியாக இதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது. பைஜு கேரளாவைச் சேர்ந்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உயர் கல்வி முடித்து கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். அவர் செய்த ஆய்வுகளோடு என்னுடைய ஆய்வுகளையும் ஒப்பிட்டபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்னால் டாக்டர் சலீம் அலி விட்டு விட்டுப் போன நிறைய கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் இருந்தன. குறிப்பிட்ட காலகட்டம் மட்டுமில்லாமல் வருடத்தின் எல்லா காலத்திலும் செய்யப்பட்ட ஆய்வு என்பதனால் தான் இது சாத்தியப்பட்டது.


உதாரணத்துக்கு நண்டுண்ணி உள்ளான் (crab plover) குஜராத்தைத் தாண்டி மேற்குக் கடற்கரை பக்கத்தில் அங்கங்கே காணப்படும். அதற்குப் பிறகு அதிகபட்சமாக காணக்கிடைத்தது ஸ்ரீலங்காவில் தான். டாக்டர் சலீம் அலியும் தெற்காசியா முழுக்க பயணித்து ஆய்வுகள் செய்து அவருக்குக் கிடைத்த தகவல்களின்படி ஸ்ரீலங்காவில் இவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறது, ஸ்ரீலங்காவில் ஏதோ ஒரு பகுதியில் இது இனப்பெருக்கம் செய்யலாம் என்று ஒரு தகவல் கொடுத்து இருக்கிறார். இதற்கு முன்னால் இந்த நண்டுண்ணி உள்ளான்கள் ஓமன், சவுதி போன்று அரேபியப் பகுதிகளில் மட்டும்தான் இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. மற்ற எல்லா இடங்களுக்கும் வலசை தான் வந்திருக்கின்றன. இவற்றுக்கு ஸ்ரீலங்காவில் இனப்பெருக்க இடம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி சலீம் அலி, ஆய்வில் சொல்லி இருந்தார். நண்டுண்ணி உள்ளான்களை பற்றி இலங்கையில் செயற்கைக் கோள்களைக் கொண்டு அவைகளின் வலசை பாதைகளை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஆய்வறிக்கையின் படி எங்களின் வேதாரண்யத்தில் இப்பறவைகளில் ஒருகுழு நீண்ட காலம் தங்கி விட்டுச் செல்கின்றன என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்தது.


நண்டுண்ணி உள்ளான்

இனப்பெருக்க காலத்தில் ஒரு பறவை வேறு இடத்தில் தங்குகிறது என்றால் பைஜுவின் ஆய்வறிக்கையின்படி இரண்டு காரணங்கள் தான். ஒன்று இனப்பெருக்கத்திற்குத் தகுதியில்லாத பறவைகள் அதனுடைய தாய் நாட்டிற்குத் திரும்பச் செல்லாது. ஏனென்றால் உணவுக்காகத் திரும்ப இங்கேதானே வர வேண்டும் என்பதால் அவை இங்கேயே தங்கிவிடும். திரும்பிச் செல்லாத இன்னொரு வகை என்னவென்றால், இனப்பெருக்கத்துக்குத் தகுதி இல்லாத ‘இளம்பறவைகள்’ அவையும் இங்கேயே தங்கி விடுகின்றன.


தமிழ்நாட்டில் வடக்கிலிருந்து நாங்கள் இந்த ஆய்வை செய்து கொண்டு வரும்போது முத்துப்பேட்டைக்கு அருகில் ஒரு சதுப்பு நிலத்தில் எங்களுக்கு இந்தப் பறவையைப் பார்க்க முடிந்தது. இதில் முதல் மகிழ்ச்சி என்னவென்றால் 20 - 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பகுதியில் நண்டுண்ணி பறவையை நாங்கள் தான் பதிவு செய்தோம். அதற்குப் பிறகு தொடர்ந்த ஆய்வுகளில் இளம்பறவைகளை பருவத்திற்கு முன்னாடியே காணமுடிந்தது.


அந்த சமயத்தில் கிடைத்த தகவல் கொண்டு 100% இந்த பறவை இங்கு இனப்பெருக்கம் செய்கிறது என்ற எண்ணத்துக்கு வந்தோம். இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டு இது உறுதியாகி பறவையை குஞ்சுகளுடன் கண்டுபிடித்தோம். நாங்கள் அவற்றை அதிகம் தொந்தரவு செய்யாமல் 100 மீட்டர் தள்ளி இருந்தே கவனிக்கும் அளவுக்குக் கருவிகளைக் கொண்டு சென்றிருந்தோம். நண்டுண்ணி உள்ளான்களின் கூடுகள் உறுதியான மணற்பரப்பில் ஒரு எலிவளை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் உள் முட்டைகளை இட்டு அடைகாத்து இனப்பெருக்கம் செய்கிறது. குஞ்சுகள், வளர்ந்த பறவைகளாக ஆன பிறகுதான் கூட்டுக்குள் இருந்து வெளியே கூட்டிக் கொண்டு வரப்படுகின்றன. அதைப் பார்த்தது ஒரு பெரிய சந்தோஷம். சலீம் அலி விட்டுவிட்டுச் சென்ற ஒரு பணியை நாங்கள் முடித்தோம் என்ற மகிழ்ச்சி. 


பொதுவாக நானும் பைஜுவும் பேசிக் கொள்வது, கல்வித்துறையில் பறவையியல் பாடத்தைத் தெரிவு செய்து படிப்பவர்களும், களத்தில் பணியாற்றுபவர்களும் சேர்ந்து வேலை செய்யும் பொழுது தான் இது ஒரு வெற்றிகரமான முயற்சியாக அமைகிறது. களப்பணி வழியாக என்னுடைய அவதானிப்பு நிறைய இருக்கும். காலநிலை மாற்றம், வேட்டை நடக்கும் பகுதியில் இருக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளின் நடத்தை என, களப்பணியில்தான் கவனிக்க முடியும். 


உதாரணமாக ஆழிக்கழுகு ஒன்று பெரிய மின் கோபுரத்தில் பெரிய பெரிய குச்சிகளை அடக்கி, நாலுக்கு நாலு அடி அளவில் ஒரு பெரிய ஆளே உள்ளே உட்காரும் அளவுக்கு ஒரு பெரியகூட்டைக் கட்டி இருந்தது. பொதுவாக இந்தப் பறவை வகை உயர்ந்த மரங்களில் கூடு கட்டக்கூடியது. கூடு கட்டிய சமயத்தில் இருந்து அங்கிருந்து இரண்டு குஞ்சுகள் வெளியேறும் வரைக்கும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நானும் நண்பரும் மாறி மாறிச் சென்று அதை ஆய்வு செய்தோம். அந்த ஆய்வறிக்கையையும் சமீபமாக பிரசுரித்தோம். சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தேன். இந்த ஆண்டும் அதே இடத்தில் பழைய கூட்டினை மறு சீரமைப்பு செய்து முட்டை இட்டு, மீண்டும் இரண்டு குஞ்சுகளை அந்த கழுகு இணை வளர்த்து வருகிறது. சூழல் மாற்றத்தால் பறவைகளுடைய மன அழுத்தத்தில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளுடைய வாழ்க்கையிலும் போராட்டம் என்பது இருக்கிறது. சலீம் அலி சொன்ன ஒரு வார்த்தை நினைவுக்கு வருகிறது, இன்று பறவைகளுக்கு நேரும் ஆபத்து என்பது, நாளை மனிதர்களுக்கு விளைய போகும் ஆபத்து என்று சொல்லலாம்.


ஆழிக்கழுகு

மா.கிருஷ்ணன் உங்களுக்கு ஒரு முக்கிய ஆளுமை என்று சொன்னீர்கள். அவரைப்பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.


நான் ஒரு அஞ்சல் தலை சேகரிப்பாளனும் கூட. உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பறவைகளுக்கு என்று வெளியிட்ட 3000 அஞ்சல் தலைகள் வைத்திருக்கிறேன். அதைப்பற்றி தியடோர் பாஸ்கரன் சாரிடம் சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் “அஞ்சல் துறையை விட்டு வெளியே வருவதற்கு முன்னால் மா. கிருஷ்ணனுக்கு ஒரு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று நிறைய முயற்சி செய்தேன் அது முடியாமல் போய்விட்டது” என்று சொன்னார். அரசு ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் கிருஷ்ணன் ரயில் தடங்கள் அமைப்பதால் காடுகளில் பிரச்சனைகள் வரும் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்படும் என்று 1970லேயே மத்திய அரசின் கொள்கைகளுடன் முரண்பட்டார். இல்லஸ்ட்ரேடேட் வீக்லி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டிலுமே இதுகுறித்த அவருடைய கட்டுரைகள் வரும். அரசு திட்டங்களுடன் அவருக்கு இருந்த மாறுபட்ட கருத்துகளினால், அவருக்கு அரசு அளித்த உயரிய விருதுகளையும் ஏற்க மறுத்தார். ஆனாலும் அவருடைய எழுத்து சர்வதேச அளவில் பேசப்பட்டது. 


மா. கிருஷ்ணன் பிரிட்டிஷாரின் வேட்டைப்பழக்கத்துக்கு எதிரானவர். அவர்களது வேட்டை மீதான பேராசையை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். நம்ம மக்கள் சாப்பாட்டுக்காக வேட்டையாடுவாங்க. ஆனா ஆங்கிலேயர்கள் விளையாட்டுக்காக வேட்டையாடுறாங்க. இது செய்யக்கூடாது என்பதுதான் மா. கிருஷ்ணனுடைய வாதம். அதேபோல இந்தக்கட்டுரைகளில் எல்லாம் மா. கிருஷ்ணன், வேட்டையில ஈடுபட முடியாத, இந்தியாவுக்கோ ஆப்பிரிக்காவுக்கோ வரமுடியாத ஐரோப்பியர்களுக்காக மிகைக் கற்பனை சேர்க்கப்பட்ட வேட்டை இலக்கியங்களை விமர்சித்து இருப்பார். அது உண்மைதான், ஜங்கிள் புக் எழுதியவர் அது நடந்த இடத்துக்குப் போனதே கிடையாது. டார்ஜான் எழுதியவர் ஆப்பிரிக்காவுக்கும் போனது கிடையாது. டார்ஜான் கதை எழுதும் போது அவர் புலி வந்தது, போனது என்றெல்லாம் எழுதி இருப்பார். அதுக்கப்புறம் தான் சொல்லி இருக்காங்க ஆப்ரிக்கால புலியே கிடையாதுன்னு. 


தியடோர் சார் ஜிம் கார்பெட்டோட ஒரு சில குறிப்புகள் எல்லாம் படிச்சிட்டு இதைச் சொல்லி இருக்கார். நானும் அதப் பாத்து இருக்கேன். அவர் பயன்படுத்தின துப்பாக்கிகள் பற்றிய விவரங்கள் எல்லாத்தையும் ரொம்பத் தெளிவா கொடுத்திருப்பார். ஆனா அந்த தூரத்தில் இருந்து அந்த துப்பாக்கியில் இருந்து புலியை சுடும் போது அது இறந்து விழுந்திருக்காது. சிதறிப்போயிருக்கும். அது புனைவு தான் என்று ஒரு விமர்சனம் உண்டு. இந்தவகையான எழுத்துக்களை இங்கே உள்ள காடுகள் பற்றி எல்லாம் தெரியாதவங்க படிச்சிட்டு சிலாக்கித்து இலக்கியத்துல ஒரு பெரிய இடம் கொடுத்து இருக்காங்க என்று சொல்லுவார்கள்.


பறவைகளைப் பாதுகாப்பதில் என்னென்ன விஷயங்களை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்? 


எந்த உயிரானாலும் அதன் வாழிடச்சூழல் மிகமுக்கியமானது. பென்குயின், பனிக்கரடி இதெல்லாம் நல்லா வளர குளிரும் பனியும் இருக்கிற சூழல் வேணும். பட்டாம்பூச்சிகள் முட்டையிடும் பொழுது அதுக்குன்னு ஓம்பு தாவரம் (ஹோஸ்ட் பிளான்ட்) இருக்கு. அதுல தான் முட்டை இடும். ஏன்னா அந்த முட்டையிலிருந்து புழு வெளியில் வரும்போது அதற்கான சாப்பாடும் அந்தச் செடியின் இலை தான். வேற ஒரு செடியில் முட்டையிட்டால் அதிலிருந்து வரும் புழு வளர முடியாது.


ஒரு பறவையைப் பாதுகாக்கும் போது நீங்க அது சார்ந்திருக்கிற பூச்சிகள் மற்றும் தாவரங்களின் பல்லுயிர் தன்மையையும் பாதுகாக்குறீங்கன்னு தான் அர்த்தம். அதே மாதிரி ஒரு மரமோ அல்லது பூச்சியோ இல்லாம போச்சுன்னா அதைச் சார்ந்திருக்கும் பறவையும் கூட இல்லாம போறதுக்கு வாய்ப்பு உண்டு. அதனால நாங்க வனப்பாதுகாப்புக்கு பரிந்துரைகள்  செய்யப் போகும்போது சரணாலயங்களில் ஒரு பறவைக் கூடு கட்டனும்னா அதுக்கு உகந்த மரம் எதுவோ அதைத்தான் பரிந்துரை செய்வோம். 

பொறி வல்லூறு (Peregrine falcon)

உதாரணமா சீமை கருவேலமும் இருக்கு நாட்டுக் கருவேலமும் இருக்கு. இரண்டிலுமே முள் இருக்கும். ஆனால் நாட்டுக் கருவேலத்துல முள்ளு நீளமா கிட்டத்தட்ட கிளை மாதிரியே இருக்கும். அதனால குஞ்சுகள் அதைப் பிடிச்சுகிட்டு வெளியில் வந்து விடும். சீமைக் கருவேலத்தின் அடர்த்தி இளம் குஞ்சுகள் நடக்கப் பழகும் போதே கூட்டில் இருந்து தவறி விழுந்து இறந்து போகின்றன. எனவே ஒரு பறவைகள் சரணாலயம் என்றால் என்ன வகையான மரங்கள் உள்ளே இருக்கணும் என்பதைச் சரியாக வலியுறுத்துகிறோம். பிறகு தேவையில்லாத அயல் மரங்களை நீக்கிவிட்டு நாட்டு மரங்களை உள்ளே கொண்டு வருகிறோம்.


இப்போது முடிந்த வரைக்கும் நீர்மத்தி, வெள்வேலம், குடைவேலம் போன்ற மரங்களைப் பரிந்துரை செய்கிறோம். பிறகு நம்முடைய கண்மாய்கள் எல்லாமே வண்டல் சேர்ந்து கண்மாயின் அளவு உயர்ந்து விடுகிறது. வெறும் கரைதான் சாலையையும் கண்மாயையும் பிரித்து நிறுத்துகிறது. அதனாலேயே மரங்களின் வேர் ஈரத்துடன் நேரடியாக மூழ்கும்போது மரங்கள் பட்டுப் போகின்றன. எனவே திட்டுக்கள் அமைத்து அதில் மரங்கள் அமைப்பது அதன் மூலமாக வேறு வேறு தாவரங்கள் வளருவதற்கு வாய்ப்பாக ஆகிறது. ஒரு மணல் திட்டு இருந்தால் அதில் கொக்குகள் நாரைகள் அதற்குக் கீழே ஆள்காட்டிகள் போன்ற பறவைகள் முட்டைகளை வைத்து அவையும் இனப்பெருக்கம் செய்யும். அப்படி இல்லை என்றால் அந்த இடம் ஓரின வாழ்விகளின் இடமாக மாறிவிடும்.

 

பறவைகளை மட்டும் இன்னும் நுட்பமாக அறிந்து கொள்ள மரபணுத் துறை ரொம்ப உதவியா இருக்கு. அதைக் கொண்டு நிறைய துணை இனங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. முக்கியமா பறவைகள் பாதுகாப்பு என்ற திசையில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு சூழலியல் பற்றிய அறிவு ரொம்ப முக்கியம். 


வெளிநாட்டில் மரபணு கொண்டு ஆய்வுகள் அதிகமாக செய்யப்படுகின்றன. நம் நாட்டில் மரபணு ஆய்வு அதிகப்படியாக செய்யப்படுவதில்லை என்று சொன்னீர்கள் இதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?


மேனகா காந்தி அவர்களின் முன்னெடுப்பில் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அட்டவணைப்படுத்தப்பட்ட வன உயிர்கள் நேரடியாக ஆய்வுக்கூடங்களுக்கு எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே பறவைகள் பற்றிய ஆய்வில் நீண்ட காலமாக அரசின் அனுமதியுடன் இயங்கி வரும் BNHS போன்ற அமைப்புகளுக்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பறவைகளுக்கு வளையம் இட்டு அவை எங்கு வலசை போகின்றன என்று பார்க்க வேண்டும் என்றால் கூட அதற்கு பறவைகளைப் பிடிக்க வேண்டி இருக்கிறது. அப்படிப் பறவைகளை வலையிலோ கண்ணியிலோ மற்ற கருவிகள் கொண்டோ பிடிக்கும் பொழுது கண்டிப்பாக உயிரிழப்பும் நேரிடும். எனவே ஆராய்ச்சிக்காக வன உயிர்களைப் பிடிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என்றால் அது பலத்த சேதாரத்தைக் கொண்டு வரக்கூடும். ஆராய்ச்சியின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எழுதி அனுமதி வாங்கிய பின்னரே பறவைகளையோ விலங்குகளையோ ஆராய்ச்சிக்கு உட்படுத்த பிடிக்க முடியும்.


சலீம் அலி

சலீம் அலி அவர்கள் பறவைகளின் ஆராய்ச்சிக்காக பறவைகளைப் பிடித்து பாடம் செய்து வைப்பது பற்றி எழுதி இருக்கிறார். இன்று எப்படி பறவைகளை நாம் ஆய்வு செய்கிறோம்?


சலீம் அலி காலத்தில் இன்றுள்ள பல அதிநுட்பமான கருவிகள் இல்லை. பைனாக்குலர் போன்றவற்றில் பார்த்து அவர்களே வரைந்து தான் பல பறவைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இன்று நம்முடைய கருவிகள் தொழில்நுட்ப வகையில் மிகவும் முன்னேறிவிட்டன. எனவே பறவைகளின் படங்களை நுட்பமான விவரங்களோடு எளிதாக எடுத்து விட முடியும். ஒரு பறவைக்குத் தெரியாமலேயே அதனுடைய கூட்டைக் கண்காணிக்கும் கேமராவை பதித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்ய முடியும். ஒரு பறவையைத் தொடாமலேயே அதைப்பற்றிய வாழ்வியலை ஆராய்ச்சி செய்ய முடியும். ஒரு பறவையின் எச்சத்தில் இருந்தோ இறகில் இருந்தோ அதன் மரபணு பற்றி ஆராய்ச்சி செய்து விட முடியும். பறவைகளின் ஆண் பெண் இனங்களைத் தனித்து, பிரித்து அறிய மரபணு ஆய்வு முக்கியம். ஹைதராபாத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இதைச் செய்கிறார்கள். உயிரியல் பூங்காவில் இருக்கக்கூடிய பறவைகள், உதாரணமாக மக்கா போன்ற இனங்களில் ஆண் பெண் பறவைகள் ஒரே மாதிரி இருக்கும். இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் பறவைகள் ஒரே கூட்டில் இருக்க நேரிட்டால் இனப்பெருக்கம் நடக்காது என்பதனால் இந்த ஆய்வின் மூலம் ஆண் பெண் பிரித்து அறிந்து அதற்கேற்றபடி உயிரியல் பூங்காவில் அவை இணை சேர்க்கப்படுகின்றன.


நூறு ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் உயிரிகள், பறவைகள் குறித்த ஆய்வுகள் செய்து அதைப் பிரசுரிக்கும் அமைப்பு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தான் இருந்தது. அந்த காலத்தில் ஒரு பறவையைப் பற்றி ஆய்வு செய்ய கிட்டத்தட்ட நூறு மாதிரிகளாவது அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் இன்று தகவல் சேகரிப்பதற்கான நவீன தொழில்நுட்பம் உள்ளது. நீண்ட வலசை செல்லும் பறவைகளின் உடலில் ட்ரான்ஸ்மீட்டர் கருவிகளை பொருத்தி செயற்கை கோள் மூலமாக ஆய்வு செய்யும் அளவு அறிவியல் வளர்ந்து இருக்கிறது. செயற்கை கோள் வாடகைக்கு எடுத்து பெரிய பல்கலைக்கழகங்கள் இந்த மாதிரியான ஆய்வு செய்கிறார்கள். மதுரையில் இருந்து ஓமன் சென்ற பேராசிரியர். ரெஜினால்டு விக்டர் அவர்களின் கருவாள் மூக்கன் என்ற பறவையின் வலசையை செயற்கை கோள் மூலமாக தொடர் கண்காணிப்பு செய்த விவரங்கள் எங்களுடன் பகிர்ந்து உள்ளார். அவைகளை பார்க்கும் போது பறவைகளின் உலகம் அவற்றின் திறன், காலநிலையை கணிக்கும் அவற்றின் அறிவாற்றல் போன்றவை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஏழு காட்விட் பறவைகளுக்கு ட்ரான்ஸ்மிட்டர்ஸ் அமைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார். அதில் பாகிஸ்தான் பகுதியைத் தாண்டும் பொழுது இரண்டு பறவைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைக் கடைசி ட்ரான்ஸ்மிட்டர் சிக்னல் எங்கு கிடைத்தது என்பதை வைத்து அங்குள்ள அறிஞர்களை வைத்து கண்டுபிடித்திருக்கிறார். ஒரு பறவையின் கால் மட்டும் டிரான்ஸ்மிட்டருடன் தனியாகக் கிடைத்தது. இதுபோல ஒரு பறவையின் இறப்பு எப்படி இருந்தது என்பதைக் கூட இன்று டிராக் செய்ய முடியும். பட்டைத்தலை வாத்து இமயமலையைத் தாண்டி எப்படி வருகிறது என்பதைக் கூட அந்த பறவைகளைப் பின்தொடர்ந்து கவனிக்க முடியும். அந்தப் பறவை மாதிரியே வடிவமைக்கப்பட்ட ட்ரோன்களை அனுப்பி, பின்தொடர்ந்து எவ்வளவு உயரம் செல்கின்றன, இடையில் இறங்குகின்றனவா, என்ன சாப்பிடுகின்றன போன்றவற்றைக் கண்டறியும் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. ஆனால் இது அனைத்துமே செலவேறியது. நல்ல நிதியமைப்பைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே செய்யக்கூடிய ஆராய்ச்சிகள் இவை. 


ட்ரோன்

நீங்கள் இப்போது கடல்சார் பறவைகள் பற்றி ஆய்வுசெய்து வருகிறீர்கள். அவற்றின் வாழ்வியல் சூழல் எப்படி இருக்கிறது? 


நம்மிடம் எவ்வளவு தரவுகள் இருக்கின்றன, தொடர்ந்து ஒரே இடத்தில் எத்தனை முறை தரவுகள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன இவற்றையெல்லாம் கொண்டு தான் நாம் ஆராய்ச்சியை முன்னெடுக்க முடியும். நீண்ட காலத்திற்கு பிறகு தான் ஒரே இடத்தை திரும்பத் திரும்ப தரவுகள் சேகரிப்பது என்பது நடந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் அங்கங்கே தரவுகள் எடுத்திருக்கின்றனர். என்றுமே பருவ காலத்து கணக்கெடுப்பு என்பது அதிகம் நடைபெறுவதில்லை. பம்பாய் இயற்கை வரலாற்று கழகம் (bhns), சாக்கான் (salim ali center for ornithology and natural history), WII, Atree போன்ற அமைப்புகள் மட்டுமே எல்லா பருவ காலத்திலும் ஆழமான ஆராய்ச்சி செய்கின்றனர். மேலதிக ஆய்வுகள் நடக்கின்றனவா என்பது சந்தேகம் தான். எனவே இந்தத்துறை சார்ந்த ஆர்வம் மிக்கவர்கள் இதனுள் இருப்பது பயனுள்ளது. முந்தைய தரவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் இன்று எங்களுடைய ஆராய்ச்சியை முன்னெடுக்கிறோம். சலீம் அலி காலத்தில் இருந்து ஒரு இடத்தைச் சார்ந்து திரும்பத் திரும்ப தரவுகள் எடுக்கும் முறைமை வளர்கிறது. 


2008இல் இருந்தே மதுரையை அதிகமாக கவனித்துக்கொண்டிருக்கிறோம். ஈர நிலங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறோம். மதுரை ஈர நிலங்கள் மத்திய ஆசிய வலசைப் பாதையில் ஒரு முக்கியமான இடம். பறவைகள் ஒரு குறுகிய காலம், ஒரு பத்து நாள் போல இந்த மண்ணில் இருந்து பிறகு செல்கின்றன என்பதை 2008இல் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். இக்கூற்றை வலுப்படுத்த அப்போதிலிருந்து ஆய்வுகள் செய்து வருகிறோம். இதற்கு உதவ எனக்கு கீழே ஒரு மாணவர் குழுவும் உண்டு. அவர்களை பருவ காலத்தை கணிப்பதற்கானகவும் தரவுகள் சேகரிக்கவும் வலியுறுத்துகிறோம். மூன்று பருவ காலத்திலும் காற்று காலம் தவிர மற்ற நேரங்களில் இந்த மாணவர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர். 

பட்டைத்தலை வாத்து

தொடர் பயணம் செய்து ஓரிடத்தை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யும் பொழுது இயற்கையுடன் தொடர்பில் உள்ள மீனவர்கள் எங்களுக்கு உதவி செய்கின்றனர். மீனவர்களிடம் கேட்கும் பொழுது பறவைகளின் படத்தை காட்டி இதை எங்கு எப்போது பார்த்தீர்கள் என்று கேட்டால் 50% வரை துல்லியமான தரவுகள் கிடைக்கின்றன. 


இதில் மாற்றம் என்று பார்த்தால் சலீம் அலி காலத்திலிருந்த எண்ணிக்கையில் வலசை பறவைகள் இன்று இல்லை. நிறைய பறவைகள் அரிதாகி விட்டன. தொடர்ந்து ஆய்வு செய்யவில்லை என்றால் இந்த விஷயங்களை நாம் தவற விட்டு விடுவோம். 2015இல் இருந்து கிழக்கு கடற்கரையில் இருக்கும் முக்கிய இடங்கள் சிலவற்றை கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். வடக்கே பழவேற்காடு ஏரியில் ஆரம்பித்து, வேதாரண்யம் சதுப்பு நிலம், ராமநாதபுரம் மன்னார் வளைகுடா, தூத்துக்குடி, மணப்பாடு, கன்னியாகுமரி வரை தொடர்ந்து தரவுகள் சேகரிக்கிறோம். அதிலிருந்து நீண்ட வலசை வரும் பறவைகளின் வரத்து குறைவதை பார்க்க முடிகிறது. சில பறவைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிறது. முன்னர் பிப்ரவரி இறுதியில் வலசை திரும்பும் பறவைகள் மே மாதம் வரைக்கும் இங்கு இருக்கின்றன. கிட்டத்தட்ட இனப்பெருக்கத்துக்கான உருமாற்றம் (breeding plumage) அமையும்வரை இங்கு இருக்கின்றன. அவற்றுக்கு இனப்பெருக்கத்துக்கான ஆர்வம் இல்லையா, அதற்கான தூண்டல் இல்லையா போன்ற சந்தேகங்கள் உள்ளன. 


இந்தியாவில் நாங்கள் செய்வது ஒரு முதல் கட்ட ஆய்வு என்று சொல்லலாம் தொடர்ந்து ஒரு பறவை இனப்பெருக்க காலத்தில் இங்கு தென்படுகிறது என்றால் அவைகள் இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்திட வாய்ப்பு இருக்கலாம் எனக் கருதுகிறோம். அந்த வகையில்தான் சலீம் அலி நண்டுண்ணி பறவைகள் இலங்கையில் காணப்படுகின்றன என்று சந்தேகித்து கோடியக்கரை போன்ற பகுதிகளில் பார்த்திருக்கிறதாக பதிவு செய்திருக்கிறார். அவருக்கு இலங்கையில் இனப்பெருக்கம் செய்யுமோ என்ற ஒரு சந்தேகம் இருந்திருக்கிறது. நாங்கள் இந்த ஆய்வை மேற்கொள்ளும் போது சலீம் அலியின் அந்த கூற்றை யாரும் ஆய்வு செய்து முடிக்கவில்லை என்பதை கவனித்தோம். எனவே வேதாரண்யம் சதுப்பு நிலத்தில் தேடிச் சென்று ஆய்வு செய்தோம். தங்கம் தேடுவதற்காக ஒருவர் நிறைய தோண்டி இருப்பார்கள் அடுத்து வந்தவர்கள் 100 அடி தோண்டியுடன் தங்கம் கிடைக்கும். நாங்கள் செய்ததும் அதுதான், இடுப்பளவு சேற்றில் இறங்கி நடந்து சென்று மனிதர்களே வர முடியாத பாதுகாப்பான ஒரு திட்டில் நண்டுண்ணி உள்ளான்கள் இனப்பெருக்கம் செய்வதை பதிவு செய்தோம். முதல் ஆண்டு கிட்டத்தட்ட இறுதி நிலையில் தான் அவற்றை காணமுடிந்தது. இரண்டாம் ஆண்டில் எங்களது கண்காணிப்பை முன்னரே ஆரம்பித்தோம். அதற்கு அதிகப்படியான உபகரணங்கள் தேவைப்பட்டன. 40 நாளில் பறவைகள் முழு வளர்ச்சியை அடைந்த பிறகு மணல்திட்டில் இருந்து வெளியில் கொண்டு வரும். துல்லியமான கருவிகள் அப்போது எங்களிடம் இல்லை. ஆனால் முடிந்தவரை இருக்கும் கருவிகளை கொண்டு ஆராய்ச்சி செய்தோம். நாங்கள் தொடர்ச்சியாக நேரம் செலவிடுவதாலும் அதிர்ஷ்டத்தாலும் எங்களுக்கு ஒரு சில நல்ல முடிவுகள் கிடைத்து இருக்கின்றன.


கடல்சார்ந்த இடம், பறவைகள் மட்டுமல்லாது பொதுவாக சூழல் பல்லுயிரியத்துக்கு ஏதுவாக உள்ளதா? 


பல செடிகள் மரங்கள் கொண்ட புல்வெளி காடுகளை அழித்துவிட்டு ஒரே வகையான ஒரு இடத்துக்கு சம்பந்தமில்லாத பயிர்களை பணப்பயிர்களை பயிரிடுவது பசுமை பாலைவனத்துக்கு ஒரு உதாரணம். மலைகளில் பொதுவாக பைன் காடுகள், தேயிலை அல்லது காபி போன்றவற்றை சொல்வார்கள், சமதளத்தில் தீக்குச்சி மரம் பென்சில் மரங்கள், சவுக்கு மரங்களை பசுமை பாலைவனங்கள் என்று சொல்லலாம். இது முக்கியமான பிரச்சனை தான். இவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். காடுகளை அழித்து ஒற்றை இன மரங்களை வளர்ப்பதற்கு முன்னால் அங்கு என்ன வகையான தாவரங்கள் இருந்தன என்று ஆய்வு செய்வது முக்கியம். சீமை கருவேலம் போல ஒரு 25 ஆண்டுகள் கழித்து பிரச்சினைகள் பெரிதாகும்போது தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும். முன்கூட்டியே ஆய்ந்தறிவது நல்லது. நமக்கு முன்னரே ஆஸ்திரேலியாவில் இதைச் செய்து கையை சுட்டுக் கொண்டனர். அலியின் கட்டுரைகளில் நிறைய மேற்கோள்கள் உள்ளன. ஆஸ்திரேலியா முழுக்க முழுக்க வேறு வகைநிலம். அங்கு குடியேறியவர்களுக்கு அந்த நிலத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளும் தன்மை இல்லாமல் முடிந்தவரை அதை மாற்றுகிறார்கள். 


பாலைவனம் என்றால்கூட அதற்கென தனித்த ஒரு உயிர்ச்சூழல் உள்ளது. அதற்குள் பிற விஷயங்களை நாமாக புகுத்தினால் பின்விளைவுகள் வேறு மாதிரி இருக்கும். இயற்கைதான் ஒரு இடத்தை பாலைவனமாக வைத்துக் கொள்ளலாமா அல்லது சோலையாக வைத்துக் கொள்ளலாமா என்று தீர்மானிக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறையை இயற்கையுடன் இணைந்ததாக நாம் மாற வேண்டும். ஆனால் நாம் சூழலை மாற்றும் முயற்சியைத்தான் 99 சதவீதம் செய்கிறோம். நிறைய செவ்விந்திய பழமொழிகளில் சொல்லப்படும் விஷயம் இதுதான். தங்கள் மண் அழிந்து போவதில் செவ்விந்தியர்களுக்கும் ஆஸ்திரேலியா பழங்குடிகளுக்கும் பயங்கர அழுத்தம் இருந்திருக்கும். கண்ணுக்கு முன்னால் அந்த இடங்கள் அழிவதை அவர்கள் முன்கூட்டியே பழமொழிகளில் சொல்லி இருப்பார்கள்.

குருகு

ஓரிடத்தின் பல்லுயிர் தன்மையை நிர்ணயிப்பதில் பல காரணிகள் உள்ளன. உதாரணமாக நிலத்தடி நீர் நன்றாக இருக்கும் பகுதிகளில் உயிர்ச்சூழல் நன்கு வளரும். ஆனால் ஒரு அரசு தொழிற்சாலை கட்ட வேண்டுமென்றால் நிலத்தடி நீர் அதிகம் உள்ள பகுதிக்குதான் செல்வார்கள். அப்படி நிலத்தடி நீரை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு அவற்றின் கழிவுகளை மட்டும் ஆற்றில் கொண்டு சேர்ப்பது போன்ற நடைமுறைகள் அந்த இடத்தில் இருந்து வந்த உயிர் சூழலை கண்டிப்பாக பாதிக்கும். 


காடுகள் வளர்ப்பவர்கள் கூட குறுங்காடுகள் வளர்க்கும் பொழுது சீக்கிரமாக வளரும் அயல் மரங்களை வளர்க்கும் போக்கு உண்டு. நம்முடைய மண் சார்ந்த மரங்கள் வளர்ந்து தழைப்பதற்கு ஒரு 25 வருடமாவது ஆகும். குறுகிய காலத்தில் வளர வேண்டும் என்றால் அதீத வளர்ச்சி கொண்ட வெளிநாட்டு தாவரங்களை கொண்டு வருவது ஒரு சரியான நடைமுறை அல்ல. அங்கு நம்முடைய உயிர்ச்சூழல் பெருகுவது கடினம் தான். அங்குள்ள பறவைகளுக்கு, பூச்சிகளுக்கு ஒரு சில மரங்கள், தாவரங்கள்தான் சரியான இடம் கொடுக்கும். அவற்றின் மூலமாக மட்டுமே பசுமைப் பரவல் இயற்கையில் சாத்தியப்படும்.


இன்னொரு உதாரணம் உப்பளங்களில் பூநாரைகளைப் பார்க்கலாம் என்பது உண்மை அன்று. உப்பை அறுவடை செய்யும் இடங்களில் பூநாரைகள் இருப்பதில்லை. உப்பளத்திற்கு கடலில் இருந்து தண்ணீரை பாய்ச்சும் இடங்களில் தான் பூநாரைகள் இருக்கும். அவற்றுக்கு கடல் தண்ணீரில் வெப்பநிலை 5 லிருந்து 8 டிகிரிக்குள் இருக்க வேண்டும் அப்போதுதான் அவை உண்ணும் உயிரிகள் அதில் இருக்கும். ஆனால் வேறு வேறு உயரத்திற்கு கடல் நீரை ஏற்றி உயரம் கூட்டி கொண்டுபோகும்போது வெப்பம் அதிகமாகும். அங்கு பூநாரைகளுக்கான உணவு கிடைப்பதில்லை. எனவே உப்பளத்துக்கு பூநாரைகள் தேடி வரும் என்பதெல்லாம் தவறான ஒரு தகவல். ஒவ்வொரு இடத்துக்கும் வெப்பநிலை என்பது முக்கியம். 


பவளபாறைகள் இருக்கும் இடத்தில் தான் மீன்கள் முட்டையிடும். வெப்பநிலை அதிகமாகும்போது பவளப்பாறைகள் சுண்ணாம்பாகி உதிர்ந்துவிடும். அவை இல்லாத இடத்தில் மீன்களுக்கு இடமில்லை. பிறகு ஆறும் கடலும் கலக்கும் இடத்தில்தான் உப்புத்தன்மை ஒரு சமநிலையை எட்டும் அதில் மட்டுமே வாழும் மீன்கள் உள்ளன. ஆற்றுத் தண்ணீரில் எதிர்த்து நீந்தும் மீன்கள் உள்ளன. அணை கட்டி நீரோட்டம் குறைந்தால் அந்த மீன்களின் உடல்வாகு மாறி விடுகிறது. ஏரிகளாக கட்டினோம் என்றால் ஆழம் மிகுந்த பகுதிகளில் வாழும் மீன்கள் தான் இருக்கும் தரையை ஒட்டி ஓடும் நீரில் வசிக்கும் மீன்கள் இல்லாமல் போய்விடும்.


பூநாரை

பறவைகள் பற்றி தொடர்ச்சியாக இயங்கும் நீங்கள், தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்குப் பின்புலமாக இருந்தது எப்படி நடந்தது? 


எதேச்சையாக நிகழ்ந்தது தான். அறிவியல் பூர்வமான பங்களிப்பு அதிகம் இல்லை. சாக்கான் (salim ali centre for ornithology and natural history) அறிவியலாளர்கள் இருவர் ஏற்கனவே அந்தப் பகுதியில் தரவுகள் எடுத்திருக்கின்றனர். அந்த ஆய்வறிக்கையை ஒரு பத்திரிக்கை பிரசுரிக்கிறது.


நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு சமூக வலைத்தளங்கள். தேவாங்கு பற்றி என்னுடைய இளம் வயது அனுபவங்கள் பற்றி முகநூலில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். கரடிகள் பற்றி, சாரைப்பாம்பு பற்றி எழுதியிருந்தேன். ஒரு சில கட்டுரைகள் அதிக எண்ணிக்கையில் பகிரப்பட்டுள்ளன. அந்த மாதிரி தேவாங்கு பற்றி அனுப்பிய ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற வக்கீல்கள் படித்துவிட்டு, ஒரு பொதுநல மனு கொடுக்கின்றனர். தேவாங்கு இனம் அழிகிறது அதனுடைய பாதுகாப்புக்கு வழிமுறைகள் செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கின்றனர். காந்திகிராமத்தில் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன என்று சொல்கின்றனர். அங்கு இருக்கும் நீதிபதி அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளை செய்யச் சொல்கிறார். நீதிபதி அதைப் பற்றிய ஒரு அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி ஒரு ஆணை வெளியிடுகிறார். பிறகு வனத்துறை அந்த ஆராய்ச்சியாளர்களை தொடர்ந்து ஆய்வு செய்து முடிவுகளை சமர்ப்பிக்கின்றனர். அப்போது கள ஆய்வுக்கு நிறைய கல்லூரி மாணவர்களை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தோம். திண்டுக்கல் கரூர் மாவட்டத்தில் இருந்த எங்களுடைய மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தினோம். அந்த இரு அறிவியல் அறிஞர்கள் தான் அதைத் தலைமையேற்று நடத்தினார்கள். எங்களுடைய மாணவர்கள் பங்கேற்றார்கள். அந்த அறிக்கை கிடைத்த பிறகு புதிய அரசு அமைந்த உடனே அதில் ஆர்வம் காட்டி அதை சரணாலயமாக அறிவித்தார்கள். உண்மையிலேயே இந்தக் கட்டுரையைப் படித்து அதற்கு அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற உயர்நீதிமன்ற வக்கீல்கள், அவர்களைத்தான் பாராட்ட வேண்டும்.


தேவாங்கு

பறவைகள் பற்றிய ஆராய்ச்சி ஏற்கனவே நிறைய நடந்திருக்கிறது என்பது புரிகிறது. இன்று ஆராய்ச்சி செய்ய விரும்பும் ஒருவர் எந்த திசையில் ஆராய்ச்சியை முன்னெடுக்க வேண்டும்? எங்கு ஆராய்ச்சிக்கான தேவை இன்னும் அதிகமாக இருக்கிறது?


ஆராய்ச்சி என்பது தொடர்ந்து நடக்க வேண்டியது. உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போன ஒரு பறவை இன்று காணக் கிடைக்கிறது. இந்தியாவில் மட்டும் அழிந்துவிட்டது என்று ஒரு சில பறவைகளைச் சொல்வார்கள். பறவைகளுக்கு இந்த எல்லைகள் கிடையாது. நேபாளத்தில் எஞ்சி இருந்த ஒரு பறவை திரும்ப இந்தியாவுக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடும். அது இந்தியாவில் அற்றுப் போய்விட்டது என்றால் அதற்கான காரணம் என்ன என்பதுதான் நாம் தேட வேண்டியது. எங்கெல்லாம் புல்வாய் மான் (பிளாக்பக்) இருந்ததோ அங்கெல்லாம் கானமயில் இருந்திருக்கிறது என்று ஒரு குறிப்பு சொல்கிறது. இன்றும் தென் மாவட்டங்களில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் சத்தியமங்கலம் பகுதிகளில் திருநெல்வேலி களக்காடு பகுதிகளில் பிளாக் பக் இருக்கிறது. கடைசியாக கானமயிலைப் பார்த்தது சூலூர் விமான நிலையம் பக்கத்தில் என்று ஒரு குறிப்பு உள்ளது. ஒரு பறவை இல்லாமல் ஆனதற்குக் காரணம் என்ன என்பதை அறிந்து, கொஞ்சம் சரி செய்தால் பறவை திரும்ப வரக்கூடும். கானமயில் அழிந்து கொண்டிருப்பதற்கான காரணமாக காற்றாலைகள் மற்றும் உயர் மின்னழுத்த கோபுரங்கள் போன்றவை சொல்லப்படுகிறது. இந்த அறிதல் இருந்தால் அரசாங்கம் அந்தத் திட்டத்தை பறவைகள் இருக்கும் பகுதியைச் சுற்றி எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இன்றும்கூட ராஜஸ்தானில் இதே போக்கினால் கானமயிலின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இனப்பெருக்கம் செய்யக்கூடிய தகுதி கொண்ட பறவையிணைகள் 200 மட்டுமே உள்ளன. 


புல்வாய் மான் (பிளாக்பக்)


காணமயில்

எனக்குத் தெரிந்து பாறுக்கழுகுகள் மட்டுமே அதிக அழுத்தம் கொடுத்து மீட்கப்பட்டன. இந்தியா முழுவதும் ஒரு பத்தாண்டுகளில் 99 சதவீத கழுகுகள் அழிகின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும்போது அரசு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இதற்கான திட்டங்களை அறிவித்து இன்று ஒரு புதிய சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் நீலகிரி வடக்கு பகுதிகளிலும் சத்தியமங்கலத்திலும் கர்நாடகா கேரளா போன்ற பகுதிகளிலும் வயநாடு பந்திப்பூர் போன்ற இடங்களிலும் பாறுக்கழுகுகள் காக்கப்பட்டு இருக்கின்றன. 


பாறுக்கழுகு

இதெல்லாம் தான் ஆராய்ச்சியின் விளைவுகள். அழிவிலிருந்து மீட்பதற்கு அந்தச் சூழலை மீட்டெடுக்க வேண்டும். சூழலை மீட்டெடுப்பதற்கு அதன் இழப்புக்கான காரணிகள் சரிவர தெரிந்திருக்க வேண்டும். 


வட இந்தியாவில் பெருநாரை (அட்ஜுடன்ட் ஸ்டார்க்) ஒன்று பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்கிறது என்பதாலும், குரல் மிகவும் இரைச்சலாக இருக்கும் என்பதனாலும் அந்தப் பறவைகள் கூடு கட்டும் மரங்களை வெட்டிவிடுவார்கள். அஸ்ஸாமின் காம்ரப் மாவட்டத்தில் அந்தப் பறவைகள் குப்பைகளை மட்டுமே சாப்பிட்டு வாழும் ஒரு சிறு எண்ணிக்கையாகக் குறைந்துவிட்டன. பறவைகள் என்பவை சூழலை மட்டுமல்ல நம் மனித மனம் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன. பறவைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது மனிதர்களுக்கும் வரக்கூடியது தான். பறவைகள் எப்படி வாழ்கின்றன என்பது சூழல் எப்படி இருக்கின்றது என்பதை மட்டுமல்ல மனித மனம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியதும்கூட. பறவைகளை கவனிக்காதவன் சக மனிதனையும் கவனிக்கப் போவதில்லை. 


கழுத்துப் பை நாரை - Greater Adjutant

இப்போது ஒரு சில பறவை ஆர்வலர்கள் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு போன்றவற்றில் புதிதாகக் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் செல்ல வேண்டிய திசை என்ன?


ஆர்வம் மட்டும் தான் வேண்டும். எனக்கு ஆர்வம் இருந்தது. நான் படித்தது மின்னணுத்துறை. ஆனால் சின்ன வயதிலிருந்து ஆர்வம் இருந்ததனால் இதை ஒட்டி செயல்பட முடிகிறது. இந்த ஆர்வம் ஒரு சில பேருக்கு பறவைகளைப் பார்ப்பதோடு நின்று விடுகிறது. சிலருக்கு படம் எடுப்பதோடு நின்றுவிடுகிறது. 


எனவே சூழல், பறவைகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. மனிதர்களுக்கு ஒரு விஷயத்தைத் தங்களுடன் தொடர்பு படுத்தினால் மட்டும்தான் அடுத்த நிலைக்குப் போவார்கள். மா.கிருஷ்ணன், தியடோர் பாஸ்கரன், சலீம்  அலி, கோவை சதாசிவம், க ரத்தினம், சுவாமி ஐயா போல நிறைய பேர் ஆர்வமாக நம்முடைய மக்களைப் போய் சேர வேண்டும் என்று பல கட்டுரைகளை, சொந்த கண்டறிதல்களைத் தமிழில் கொண்டுவந்தார்கள் அல்லவா? அப்பொழுதுதான் எளிமையாக ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல முடியும். வாட்ஸப்பில் தவறான செய்தி பரப்பினால் கூட அது தாய் மொழியில் இருந்தால் வேகமாக பரவும். அதுவே ஆங்கிலத்தில் இருந்தால் அவ்வளவு வேகமாகப் பரவாது. தவறான செய்தியே இவ்வளவு வேகமாகப் பரவும் என்றால் ஒரு நல்ல செய்தி பரவுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. புதியவர்கள் முக்கியமாக செய்ய வேண்டியது இந்த விழிப்புணர்வைப் பரப்புவதுதான். 


தியடோர் பாஸ்கரனுடன் ரவீந்திரன்

நீங்கள் இப்போது பயணிக்கும் தளங்கள், வருங்கால திட்டங்கள் என்ன?


நானும் விழிப்பணர்வு உண்டாக்குவதையே முக்கியமாக செய்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட இன்னும் ஒரு ஐந்து புதிய சரணாலயங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை கையில் எடுத்து அதற்குத் தேவையான அடிப்படை விஷயங்களைத் தயாரித்து வருகிறோம். 


புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் இது இப்போது எனக்கு ஓடும் காலம். உட்காரும் காலத்தில் எழுத வேண்டும். தியடோர் சார் அதைத்தான் சொன்னார்கள். “என்னுடைய எழுத்துக்கள் எல்லாம் 25 வருட குறிப்புகள். என்னுடைய குறிப்புகளை சிறுசிறு செய்திகளாக எழுதி சேகரித்துக் கொண்டே இருந்தேன். அதைத்தான் இப்பொழுது எழுதிக் கொண்டிருககிறேன். ஓய்வுக்குப் பிறகு உனக்கு வாய்ப்பு கிடைக்கும். புத்தகம் எழுத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆவணங்களாக சேர்ப்பதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள். அது ஏதோ ஒரு வடிவில் வெளிப்படும். புத்தகம் என்று ஒன்று எழுதிவிட்டால் அது முற்றுப்புள்ளி மாதிரி. அதைத் தாண்டி மேலே செல்ல முடியாமல் போய்விடும். இது நீங்கள் ஓடும் காலம்” என்றார். இரண்டு மூன்று தடவை முயற்சி செய்து எனக்கே ஒவ்வாமல் புத்தகம் எழுதுவதை நிறுத்திவிட்டேன். எழுதும் நேரமும் வரும்.  


பெருநாரை

உங்களுடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக களத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்ன?


நாங்கள் செய்திருப்பது எல்லாமே ஒரு சிறுபெண்ணுடைய கனவுகளால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் அப்படின்னு தான் சொல்லத்தோணுது. ஆர்வலர்களும் மாணவர்களும் ஒவ்வொரு பள்ளி கல்லூரியினுடைய ஆசிரியர்களும் எங்களுடைய வெற்றிக்குப் பின்னாடி இருக்காங்க. இன்னைக்கு நிறைய மாவட்டங்களில் பயணப்படும் போது அங்க இருக்கக்கூடிய பறவை ஆர்வலர்கள் எல்லாருமே நம்மளோட உதாரணத்தை எடுத்துக்கொண்டு பெரிய அளவில் வேலை பார்க்கிறார்கள். இன்னைக்கு தாராபுரம், திண்டுக்கல் பகுதிகளில் நல்ல குழுக்கள் உள்ளன. அப்புறம் வழக்கறிஞர்கள் சில பேருடைய முயற்சியில்தான் கடல் பசுவுக்கும் தேவாங்குக்குமான சரணாலயம் அமைக்கப்பட்டது. அவங்களுடைய பங்கு ரொம்ப முக்கியமானது. எங்களுடைய தரவுகள் மட்டும் இங்க பேசாது. எங்களுடைய தரவுகளை வைத்துக்கொண்டு அதை சட்ட பூர்வமாக எடுத்துச்செல்வது முக்கியம். மதுரை உயர்நீதிமன்றம் பெஞ்ச் தான் இதற்கு நல்ல உதாரணமாக இருக்கு. இதை ஏன் ஒரு காப்பு காடாக வச்சுட்டு இருக்கீங்க. இதை சரணாலயமா மாத்துங்க அப்படின்னு சொல்லி ஒரு அழுத்தம் கொடுத்தது அவங்கதான். இதேபோல சூழலியல் சார்ந்த விஷயங்களுக்கு ஒரு அடித்தளம் நம்ம வலுவா உருவாக்கிட்டோம்னா அரசு இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். 


சந்திப்பு - விஜயபாரதி, அனங்கன், தாமரைக்கண்ணன் புதுச்சேரி

படங்கள் - ரவீந்திரன் நடராஜன்

https://www.facebook.com/nraveemdu