Thursday 14 March 2024

ஆடல் - 6: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி

சூரசம்மாரக் கூத்து 

தமிழில் “கூத்து” என்னும் பழைய சொல் வெவ்வேறு பொருள்களில் பயன்படுகிறது. துணங்கை, குரவை, வெறியாடல் முதலிய சங்ககால கூத்துக்கள் வழிபாட்டுச் சடங்கு சார்ந்தும், போர் முதலான சூழல்களை சார்ந்தும், விழாக்காலங்களில் ஆடப்பட்டதாகவும் உள்ளது. இவற்றில் நாடகீயமான பகுதிகள் இருக்கலாம், மீளச்செய்யப்படும் செய்கைகள் இருக்கலாம், வேடிக்கை வினோதம் போன்ற கூறுகளை அடக்கிய பாவங்கள் இருக்கலாம் ஆனால் சங்ககால கூத்து, கதைகூறல் மரபுடன் வலுவாகப்பிணைந்த கலைவடிவம்தான் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. எளியமுறையில் இதை இன்றைய செவ்வியல் கலையான பரதநாட்டியத்துடன் ஒப்பிட்டால், பரதத்தின் பல பகுதிகள் கதைகூற முயல்பவை அல்ல என்பதை காணலாம். தில்லானா, வர்ணம் முதலியவை அபிநயத்தை மிகக்குறைவாக எடுத்துக்கொள்பவை, அதற்கு மாறாக பதம் முழுக்கவே உணர்ச்சிகளையும் கதைகூறலையும் சார்ந்திருக்கின்றது.


மாறாக கூத்து என்னும் சொல் நாட்டார் வழக்கில் கதையொன்றை நிகழ்த்துவதையே குறிக்கின்றது, ஆடை அலங்காரமும் பாடல்களும் வண்ணமயமான ஒப்பனையும் கலந்த நாட்டார் கலை தெருக்கூத்து. நாம் எண்ணுவதுபோல தெருக்கூத்து அல்லது கட்டைக்கூத்து தமிழகத்தின் வடபகுதியில் பாரதக்கதைகளை மட்டும் ஆடுவது என்றில்லை. உண்மையில் தெருக்கூத்து அதன் வகைகளிலேயே தெற்கு வடக்கு மேற்கு என்று மாறுபட்ட பாணிகளை கொண்டிருக்கின்றது. தென்னாற்காட்டின் புதுச்சேரி கடலூர் விழுப்புரம் பகுதிகள் தெற்கத்தியவை என்றால் திருவண்ணாமலை, வந்தவாசி, தருமபுரி பகுதிகளில் வடக்கு பாணியும், சேலம் பகுதியில் மேற்சொன்ன இரண்டிலிருந்தும் வேறுபட்ட வகையாகவும் இது நிகழ்கிறது. தெருக்கூத்து என்று இன்று நாம் கருதும் கலைவடிவின் இலக்கணங்களை திருப்திப்படுத்தாத வேறு வகை கூத்துக்கள் தமிழகத்தின் தென்பகுதி வரை நடந்திருக்கின்றன. அவற்றில் இரணியன் நாடகம், சீராளன் நாடகம் முதலியவை தஞ்சை பகுதிகளில் நடக்கும் கூத்துக்கள், கணியான் கூத்து தெற்கில் நடக்கும் தனிப்பட்ட கூத்து வடிவம். மேற்குப்பகுதியின் பொன்னர் சங்கர் கூத்துக்களையும் இதே போன்று கூற முடியும். இவையன்றி காரைக்குடியில் இராமாயணக்கூத்துக்கள் நடந்ததாக பதிவுகள் உள்ளன. தெருக்கூத்து சிலகாலம் தெலுங்கு ரசிகர்களுக்காக தெலுங்கில் நடத்தப்பட்டதையும் அறிய முடிகிறது. 

அனுமன் போல, கந்தபுராணத்தில் வீரவாகு போல கூத்தும் எல்லைகளை தாண்டி இலங்கைக்கு சென்றிருக்கிறது. இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியில் ஆடப்பட்ட சூரசம்மாரக்கூத்து என்ற கூத்து பிரதியை ஆய்வாளர் முருகு தயாநிதி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வாயிலாக பதிப்பித்திருக்கின்றார். எவ்வாறு தமிழில் அமைந்த முருகன் தொடர்பான மேடை நாடகங்களுக்கு கந்தபுராணம் ஆதாரமாக அமைந்ததோ அதுபோல முருகன் தொடர்பான கூத்துகளுக்கும் கந்தபுராணம் ஆதாரமாக அமைகின்றது.

மட்டக்களப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு மாவட்டம். ஆரம்பத்தில் சமயச்சடங்குகளை ஒட்டி உருவான மகுடி, பறைமேளக்கூத்து, வசந்தன் கூத்து முதலிய நிகழ்த்துக்கலைகளே மட்டக்களப்பில் இருந்தன. அதற்கடுத்து தென்னிந்திய நாடக மரபின் தாக்கத்தால்தான் நாட்டுகூத்துக்கள் தோன்றி மட்டக்களப்பு தன்மை கொண்ட நாடக கூத்துக்கள் உருவாகின என்று ஆய்வாளர் மௌனகுரு கருதுகிறார். சமயம் சார்ந்த அறக்கருத்துக்கள், சமூக விமர்சனம், மனித குணாதிசயங்கள் ஆகியவை இந்த கூத்துக்களின் வழியாக பேசப்படுகின்றன, அவ்வகையில் மட்டக்களப்பு கூத்துக்கள் மட்டுமல்லாது, அங்குள்ள சிங்கள கிராமிய நாடகங்களும்கூட இதேபாணி உள்ளடக்கம் கொண்டு கிராம மக்களிடையே நிகழ்த்தப்படுபவை என்றும் மௌனகுரு தெரிவிக்கிறார்.


ஒவ்வொருகாலத்திலும் தென்னிந்தியாவிலிருந்து மட்டக்களப்புக்கு குடியேறியவர்களால் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் மட்டக்களப்பின் வழியே கண்டி ராச்சியம் தென்னிந்திய தொடர்பை மேற்கொண்டது இதற்கான இன்னொரு காரணம். திரௌபதை அம்மன் தீக்குளிப்பு, கண்ணகி வழிபாட்டில் வசந்தனாட்டம், கொம்பு முறிப்பு இவையெல்லாம் மட்டக்களப்பில் நிலைபெற்றுவிட்டது. மட்டக்களப்பு மட்டுமில்லாது இலங்கையின் பிறபகுதிகளிலும் நடத்தப்படும் காத்தவராயன், பொன்னர் சங்கர் கூத்து, காமன் கூத்து இவற்றைக்கொண்டும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளின் கூத்துக்கள் கடல்தாவி இலங்கைக்கு சென்றன என்று உறுதியாகச்சொல்ல முடியும். மட்டக்களப்பு மான்மியத்தின்படி வெவ்வேறு காலங்களில் இங்கு வந்த முக்குவர், சீர்பாதக்காரர் போன்றோரில் முக்குவர் இந்த கூத்து நிகழ்வுகளில் முக்கிய இடம் பெறுகின்றனர், சூரசம்கார கூத்து பிரதிகள் பெரிதும் இவர்களிடமிருந்தே பெறப்பட்டன. மட்டக்களப்பு மான்மியம் அவர்களுக்கான குலவிருதுப்பெயராக ‘எழுத்தாணியை’ சொல்கிறதை இங்கு இணைத்துப்பார்க்க வேண்டும்.

பொதுவாக மட்டக்களப்பில் ஆடப்படும் கூத்துவடிவங்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர் வடமோடி, தென்மோடி என்னும் இருவகைக்கூத்துக்கள் பெருவாரியாகவும், விலாசம் என்னும் கூத்து வகை சிறிய அளவிலும் ஆடப்படுகின்றது. 72 வடமோடி கூத்துக்கள் மற்றும் 34 தென்மோடி கூத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வடமோடி தென்மோடி ஆட்டங்களிடையே உள்ள வேற்றுமையாக அதில் அடிக்கடி பயன்படுத்தப்படும் தாளக்கட்டுகளை சொல்வதுண்டு, வடமோடியில் 'தித்தித்தா' என்றபடி பாதம் முழுவதும் தரையில் உரசி இழுத்தாடுவர். தென்மோடியில் 'செய்யத் தாக சந்தத்தும்மி ' என்ற தாளத்தில் குதிகால் நிலம்படாது முன்பாதத்தால் குத்தி மிதித்தாடுவர். ஆண்பாத்திரங்கள், பெண் பாத்திரங்கள் இவற்றின் வருகை, போர், வேட்டை, படையெடுப்பு இவ்வாறு கூத்தில் இடம்பெறும் பல நிகழ்ச்சிகளுக்கு வெவ்வேறு தாளக்கட்டுக்கள் உள்ளன. பொதுவாக தென்மோடியில் தாள நுணுக்கமும் அலங்காரமும் மிகுதி, வடமோடியில் தாள வகை வேறுபாடுகள் அதிகம்.  தென்மோடியில் பா வகைகளும், தருக்களின் வகைகளும் அதிகம், அதுபோல யாப்பையும் இலக்கணத்தையும் அதிகமாக தென்மோடி தக்கவைத்திருக்கின்றது. சண்டைத்தரு தர்க்கத்தரு முதலியவை வடமோடி கூத்துக்களில் நிறைய வருகின்றன. கும்மி, திருப்புகழ் பாடல் வகைகள் வடமோடியில் மட்டுமே உண்டு. மட்டக்களப்பின் வடமோடிக்கூத்துக்கும் கர்நாடக யட்சகானத்துக்கும் உள்ள சில ஒற்றுமைகளை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கூத்துக்களை பாரத, இராமாயண, சரித்திரக்கதைகள் எனவும் கிறிஸ்தவக்கதை, கற்பனைக்கதை, புராணக்கதை, இலக்கியக்கதைகள் எனவும் வகைப்படுத்தும் மௌனகுரு சூரசம்காரம், வள்ளியம்மன் நாடகம், மார்க்கண்டேய நாடகம் இந்த மூன்றுமே கந்தபுராணத்தை அடிப்படையாகக்கொண்டவை என்கிறார்.

கூத்து மட்டுமல்லாமல் பிறகலைகளையும் சடங்கையும் கணக்கில்கொள்ளும் முருகு தயாநிதி மேலேசொன்ன மூன்று கூத்துக்களுடன் வள்ளியம்மன் தினைப்புனக் கரகத்தையும், வள்ளியம்மன் அம்மானையையும் வரிசையில் இணைக்கிறார். வடமோடி தென்மோடி என்ற இரண்டு வகை கூத்து மரபிலும் “சூரசம்மார கூத்து” ஆடப்பட்டிருக்கின்றது.

கந்தபுராணமும் சூரசம்மாரக் கூத்தும் 

முருகு தயாநிதி அவர்கள் முனைக்காடு, அம்பிலாந்துறை, கரையாக்கத்தீவு ஆகிய மூன்று இடங்களிலிருந்து சூரசம்கார கூத்துப்பிரதிகளை பெற்றிருக்கிறார், இவற்றில் முனைக்காடு இ.சின்னையாவின் பிரதியை ஆதாரமாகக்கொண்டு சூரசம்கார கூத்து நூலை பதிப்பித்திருக்கிறார்.1939 முதல் 1985 வரை இந்தக்கூத்து ஆடப்பட்டதாக முருகு தயாநிதி பதிவு செய்கிறார். முருகு தயாநிதியும் மட்டக்களப்பின் அம்பிளாந்துறையை சேர்ந்தவரே. சில நாட்டுக்கூத்து பிரதிகளை இவரே எழுதி வெளியிட்டிருக்கிறார். கல்வி மற்றும் நாடகவியல் துறையில் தொடர்ந்து செயல்பட்டவர். கண்டிராஜன் ஒப்பாரி, இராமர் அம்மானை, வள்ளியம்மன் அம்மானை ஆகியவை இவர் பதிப்பித்த நூல்களில் முக்கியமானவை.

இந்தக்கூத்தில் 23 பாத்திரங்கள் இடம்பெறுகின்றன அவை, கட்டியக்காரன், சிவன், உமை, முருகன், விஷ்ணு, பிரமன், நாரதர், இந்திரன், இந்துராணி, சயிந்தவன், தெய்வானை, கார்த்திகைப்பெண்கள், வீரவாகு தேவன், அரிஅரபுத்திர சேனாதிபதி, பத்மாசுரன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன், மாயை, அசமுகி, பானுகோபன், பதுமகோமளை, சுக்கிரபகவான், நாடகப்பெண்கள்.

விநாயகர் துதி

தருமருவு இந்திராதி தேவர்வானோர்சகல குலம் விளங்கவென்று வந்த செல்வன்
மருமருவு சரவணையில் வந்துதித்த யாதவத்தில் உதித்த சிறுமதலை தானும்
உருமருவு அசுரருடன் போர்புரிந்த உயர்கதையை உம்பர் பிரான் கருணை கொண்டு
திருமருவு நாடகமாய்ப்பாடி ஆடச்சித்தி வினாயகர்பாதம் காப்புத்தானே

கதிர்காம வேலனான கந்தசாமிக்கடவுளை துதித்து கூத்து துவங்குகிறது. தேவேந்திரனும் இந்திராணியும் கொலு வீற்றிருக்க கட்டியக்காரன் வரவு சொல்கிறான்.கட்டியக்காரன் தெருக்கூத்தில் முக்கியமான பாத்திரம். அவனே நாடகத்தை துவக்குபவன், பாத்திரங்களின் வரவை அறிவிப்பவன், விதூஷகன், நாடகம் முழுக்க பயணிக்கும் பாத்திரமும் அவனே. பிற வேஷங்களை ஏற்பதை விட கட்டியக்காரனாக இருப்பதற்கு தனிப்பட்ட திறமையும், பாடமும் வேண்டும். கட்டியக்காரன் முழுக்க முழுக்க தமிழ் கற்பனையில் உருவான ஒரு அமைப்பு (institution) என்கிறார் வெங்கட் சுவாமிநாதன். 


கட்டியக்காரன் வரவு - விருத்தம்
 
வட்டமுண்டாசு கட்டி வண்மைசேர் கொடிபிடித்து 
சட்டமாய் நாமம் சூட்டி சரிகை பொற்பதக்கம் மின்ன 
மட்டில்லாத் தேவர் போற்றும் மகிழ்வுறு கட்டியகாரன் 
இட்டமாய் தெய்வேந்திரன் வாசல் இயல்வுடன் தோற்றினானே 

இந்திர சபையில் நடன மாதர் ஆட கூத்து துவங்குகிறது. ரம்பை முதலியோர் சிருங்கார ரசத்தில் இந்திரனை வாழ்த்திப்பாடுகின்றனர். சபை கலைந்து இந்திரன் ராணியுடன் மாளிகைக்கு செல்கிறார். அடுத்ததாக சூரனுக்கு கட்டியம் சொல்கிறான் கட்டியக்காரன். சூரன் கொலு நடனமாதர் இல்லாமலேயே களைகட்டுகிறது. 

கொலு தரு

தாளக்கட்டு - தந்தாக தாகதாக ததிங்கினதாம் தாக
 
கொலுவில் வந்தான் நல்ல ஒயிலுடன் சூரன் கொலுவில்
வந்தான் கொலுவில் வந்தனன் மகேந்திரபுரி - குலங்கள் முழுமையும் விளங்கவே நல்ல (கொலுவில்)
வலு மிகைத்திரு சிங்கரூபனும் - மகிளும் தாருகன் அருகினில் வர (கொலுவில்)
தாள மத்தள பேரி சல்லரி - சங்க தாளங்கள் முளங்கவே நல்ல (கொலுவில்)
காள முகில் குளல் தங்கை அசைமுகி - கூடவே சபை தோணவே நல்ல (கொலுவில்)
தேசதுரோக பதாதி சூழவே - செளிக்கும் மகேந்திர புரியை ஆள்கின்ற (கொலுவில்)
மாய்கை பெற்றிடம் மைந்தர் நால்வரும்-மகிழும்
சபைதன்னில் தோன்றியே 

பற்மாசூரன் பனசூரராசன் என்றெல்லாம் அழைக்கப்படும் சூரபத்மன் அவனது சகோதரர்கள் சிங்கமுகன், தாருகன், சகோதரி அசமுகியோடு கூத்தில் பிரவேசிக்கிறான். அவர்களது தாயான மாய்கையை (மாயை) கண்டு வணங்க செல்கின்றனர். குருவான சுக்கிராச்சாரியாரை வணங்கினால் நலமுண்டாகுமென மாய்கை சொல்கிறாள். தன்னை நாடிவந்த அசுரர்களை சுக்கிரன் வாழ்த்தி சிவனை நோக்கி தவம்செய்ய சொல்கிறார். கிருஸ்ணர் அமுதத்தை அசுரர்களுக்கு தராமல் மோசம் செய்ததால் சிவனை வழிபடச்சொல்கிறார். அசமுகியை மாளிகைக்கு அனுப்பிவிட்டு மூவரும் தவம் செய்கின்றனர். அசமுகியை மாளிகைக்கு அழைத்துச்செல்லும் தாய் மாய்கை அவளுக்கு தானறிந்த மந்திரசித்துக்களை எல்லாம் கற்பிக்கிறாள். 

சூரன் தீ வளர்த்து தவம் செய்கிறான், சிவன் மனமிரங்காததால் தீயில் வீழ்ந்து இறக்கிறான். அண்ணனை தொடர்ந்து தம்பியர் தீப்பாய முயற்சிக்க சிவன் காட்சி தந்து சூரனை உயிர்ப்பிக்கிறார். நூற்றியெட்டு யுகம் முழுவதும், ஆயிரத்தெட்டு அண்டத்தையும் அரசு செய்ய வரம் கேட்கிறான் சூரன். வரம் கொடுத்து விட்டு அவை சடுதியில் அழியும் என்றும் சொல்லிச்செல்கிறார் அரனார், அசுரர்கள் மகிழ்கிறார்கள்.


வரம்பெற்ற அசுரர் கொடுமைகளை பிரமாவும் விட்ணுவும் புலம்புகிறார்கள், இந்திரனும் இந்திராணியும் தங்கள் மகனான சயிந்தவனுக்கு (ஜெயந்தன்) பட்டம்கட்ட அழைக்கிறார்கள். வயதில்லை எனக்கு சிறியவன் நான் என்று சொல்லும் சயிந்தவனை தேற்றி பொன்னகரை ஆளச்செய்கிறார்கள். பின்னர் சிவனை வழிபடச்செல்கின்றனர் இந்திரனும் ராணியும். சூரன் திக்கு விஜயம் செய்கிறான், தாரகனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை மூள்கிறது , சக்கரப்படை தாரகனின் கழுத்தில் மாலையாக விழுகிறது. விஷ்ணு மகிழ்ந்து அவனுக்கே அதை வழங்குகிறார். பின்னர் இந்திரன் விஷ்ணு பிரமா மூவரும் சூரனின் அரண்மனையில் ஏவல் செய்யும்படி ஆச்சுதே என புலம்புகிறார்கள்.

இந்திரன் ராணியை மகாமேரு மலைக்கு கீழுள்ள பூங்கா ஒன்றில் விட்டு அங்கு அரிஹர புத்திர சேனாதிபதியை அவளுக்கு காவலாக வைத்துவிட்டு சிவனை வணங்கப்போகிறான். அசமுகி அங்கு உலா வருகிறாள். இந்திராணியை தனது அண்ணனின் ‘வெள்ளாட்டியாக’ இருக்க பலவந்தமாக இழுத்துப்போக முயற்சிக்கிறாள், அங்கு வரும் அரிகரபுத்திர சேனாதிபதி அசமுகி கையை துண்டிக்கிறான். 

இந்திரனின் வஞ்சனையை அண்ணனிடம் சொல்லிப்புலம்புகிறாள் அசமுகி, பிரமனை அழைத்து தங்கையின் கையை முன்பிருந்து போல மாறச்செய்கிறான் சூரன். மகன் பானுகோபனை அழைத்து இந்திரனை கட்டி இழுத்து வரச்சொல்கிறான். பானுகோபன் படைகொண்டு செல்கையில் , அங்கு சயிந்தவனை கண்டு இந்திரன் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்கச் சொல்கிறான். சயிந்தவன் மறுத்து போர் செய்கிறான். சயிந்தவனை கட்டி இழுத்து வருகிறான் பானுகோபன், சூரன் அவனை சிறையிலடைக்கிறான். 

நாகர்முனை (திருக்கோவில்) சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், உகந்தை வேலாயுதசுவாமி ஆலயம், மண்டூர் கந்தசாமி ஆலயம் இம்மூன்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள புகழ்பெற்ற முருகன் ஆலயங்கள். முருகனுக்கும் சூரனுக்கும் நடந்த போர்க் கதைகள் இங்கும் வழங்கி வருகின்றன. அவற்றின்படி முருகன் ‘கதிர்காமத்தில்தான் சூரனை அழித்தார், பின் அந்த வேலின் உக்கிரம் தணிய மாணிக்க கங்கையில் நீராடி வாகூர மலையை பிளந்து வந்து வெண்நாவல் மரத்தடியில் அமைந்தது, பின்னர் அதுவே வேலாயுதசுவாமி ஆலயமாக மாறியது. அதேபோல இக்கோவில்கள் வேடர் குடிகளுடன் மரபு ரீதியாக பிணைந்திருக்கின்றன. திருக்கோவிலில் வேடர்முகப்பு என்ற வாயில் ஒன்று தனியாக இருந்தது.மண்டூர் கந்தசாமிக்கோவிலில் நடக்கும் சூரசம்கார நிகழ்வு புகழ்பெற்றது. மண்டூர்க்கோவிலிலும் கதிர்காமம் போல உருவ வழிபாடு கிடையாது திரைதான். கப்புகனார் என்றழைக்கப்படும் பூசகர் இங்கு பூசை செய்கின்றனர். சம்மார விழாவில் நாரதர், வீரபாகுத்தேவர், பூத கணங்கள், தேவகணங்கள், சந்நியாசிமார் ஆகியோருக்கு மக்களே வேடமிட்டிருப்பார்கள். கோயில் வீதியில் நாடகியமாக நிகழ்வுகள் நடக்கிறது . வீரபாகுத்தேவர் சூரனிடம் தூது செல்கிறார். சூரனுடன் வாதிடுவது போல நடித்துவிட்டு மீண்டும் வந்து முருகனிடம் போருக்குப் போகும்படி கூறுவார். இடையில் நாரதர் அங்கும் இங்கும் திரிந்து சண்டையை உண்டாக்குவதற்காகக் கோள் மூட்டுவார்.

சூரசம்மாரக்கூத்திலும் நாரதர் முதலில் வந்து இந்திரனிடம் செய்தி சொல்கையில், முதலில் இந்திரன் அவரை நம்ப மறுத்து சந்தேகிக்கிறான்.  பின்னர் தன்னிடம் புலம்பும் சயிந்தவனின் பெற்றோரை, அழைத்துக்கொண்டு நாரதர் சிவனிடம் செல்கிறார். பிரமா விஷ்ணு முதாலானவர்களின் புலம்பல் கண்டு உமையம்மை சிவனிடம் உபாயம் கேட்கிறாள். இவர்கள் துன்பம் தீர முருகன் பிறப்பான் என்று வரம்தருகிறார் சிவன். கார்த்திகைப்பெண்களை அழைத்து அமுதப்பாலூட்டி வளர்க்குமாறு சிவபெருமான் கூறுகிறார். அவர்களால் வளர்க்கப்பட்ட கந்தசுவாமி கூத்தில் பிரவேசிக்கிறார். 

சங்கரனற்புதத்தில் சரவணையில் தானே உதிர்த்து வந்த திங்கள் ஒளியது போல் வந்துதித்த செல்வமே பாலருந்தாய்
மங்கையாளீர் பரியும் இருகையால் வாரி எடுத்தனைத்து தங்கத் தடாகத்திலே வந்துதித்தார் வேந்தே பாலருந்தாய்
மாணிக்க முத்தொளியே மரகத மாமயில் ரெத்தினமே
ஆணிப்பொன்னே மணியே எங்களிட அன்பனே பாலருந்தாய்

பிரமா விஷ்ணு இந்திரன் ஆகியோர் முருகனை தேவர்படை நடத்தி சூரனை அழிக்குமாறு வேண்டுகிறார்கள். முருகன் அவர் தம்பி வீரபாகுவை அழைத்து தூது செல்லப்பணிக்கிறார். சிறையில் நல்ல சொப்பனம் கண்ட சயிந்தவனை கண்டு வீரபாகு ஆறுதல் சொல்கிறார். சூரன் தூது மறுத்து வீரபாகுவை, முருகனை இகழ்கிறான். வீரபாகு முருகனிடம் மீள்கிறார். நாரதர் சூரன் படைகொண்டு வருதலை முருகனுக்கு தெரிவிக்கிறார். முதலாவதாக பானுகோபனிடம் வீரபாகு போரிட்டு அவனை அழிக்கிறார். சூரன் மனைவி பதுமகோமளையும் அவனது தங்கை அசமுகியும் பானுகோபனைக்கண்டு புலம்பி அழுகிறார்கள். அடுத்ததாக தாருகனிடம் போரிடுகிறார் வீரபாகு, தன் மாயையால் அவரை சிறையில் அடைத்து ஒரு மலையாக மாறுகிறான் தாருகன்.
முருகு தயாநிதி

நாரதர் செய்தியால் கந்தசாமி நடந்ததை அறிந்து மலையைப்பிளந்து வீரபாகுவை விடுவிக்கிறார். பின் முருகன் தாருகனிடம் போரிட்டு அவனை வெல்கிறார். சூரனும் சிங்கமுகனும் வாதிடுகின்றனர், சிங்கன் கூறும் அறிவுரையை சூரன் கேட்கவில்லை. கந்தசாமியிடம் போருக்குச்சென்று வீழ்கிறான் சிங்கன். இறுதிப்போர் சூரனுடன் நடக்கிறது, மயிலாகவும் சேவலாகவும் மாறி தாக்க வருகிறான் சூரன், பின் முருகன் அருளால் அவரைச்சேர்ந்தவனாக மாறுகிறான். சிறையிருக்கும் சயிந்தவன் விடுவிக்கப்படுகிறான். நன்றிக்கடனாக தனது தங்கையை முருகவேளுக்கு மணம் முடிக்கிறான், தேவர்கள் சேர்ந்து தெய்வானையை முருகனுக்கு மணம்செய்து தருகிறார்கள்.

தெருக்கூத்துக்கான வழக்கமான முறையில் தரு, வசனம், விருத்தம் என்ற பகுதிகளாக கூத்து நிகழ்கிறது. தரு என்பது தாளத்தை பின்னணியாகக் கொண்ட பாடல். சூரசம்மாரக்கூத்தில் தனிநபர் தருவும், இருவர் மூவராக பேசும் தருவும் இடம்பெறுகிறது. இந்த கூத்தில் பத்தொன்பது தாளக்கட்டுக்கள் உள்ளதாக முருகு தயாநிதி குறிப்பிடுகிறார். தேவாரம் என்ற துதிப்பாடல்கள் இரு இடங்களில் இடம்பெறுகின்றன. பாடல்களுக்கிடையில் வசனங்கள் உள்ளன. தர்க்கம் என்பது இருவர் வாதிடும் பகுதி. அந்தாதி போல ஒருவர் முடித்த இடத்திலிருந்து அடுத்தவர் பேசுவார். எடுத்தும் தொடுத்தும் பேசும் இப்பாணி விஷ்ணு தாருகன் போரிலும், சிவன் சக்தி உரையாடலிலும் பயன்படுகின்றது. அதுபோல கொலு என்பது முக்கியப் பாத்திரம் அரங்கத்தில் உள்நுழையும் இடம். 

கூத்தின் முன்பாதியில் பாத்திரங்கள் அறிமுகமும், சூரன் வரம்பெற்று ஆள்வதும், செயிந்தவன் சிறைப்படுவது வரை கதை செல்கிறது. கூத்தின் மத்தியில் தான் முருகன் பிறக்கிறார், பின்வருபவை அனைத்தும் சூரனுடனான தூதும் போரும். சம்மார கூத்தில் சூரன் களம்படுவது இல்லை அவன் முருகனுக்கு ஏவல் செய்பவனாகிறான். இருந்தாலும் மங்கள நிகழ்வாக தெய்வயானை திருமணத்துடன் கூத்து முடிகிறது. கூத்தின் மையம் செயிந்தவன் சிறைப்படுவதும் அவன் சிறை மீள்வதும்தான்.

மௌனகுரு

முழுக்கவும் கந்தபுராணத்தை அப்படியே பிரதி செய்யாமல் கூத்து மரபுக்காகவும் காட்சி அமைப்புக்காகவும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கந்தசுவாமி சூரன் படையெடுப்பை நாரதர் மூலம்தான் அறிகிறார். மகனை அசுரர்கள் சிறைப்படுத்தினார்கள் என்று நாரதர் சொல்லும் செய்தியை இந்திரன் சந்தேகிக்கிறான். சிங்கமுகன் வீரனாகவும் தத்துவம் வேண்டுபவனாகவும் இருக்கிறான், அண்ணனுக்கு புத்திசொல்பவன், போரில் வீரமிக்கவன். தாருகன் முதலிலிருந்தே விஷ்ணுவுடன் பகை கொண்டவனாகவும் காட்டப்படுகிறான். பானுகோபன் ஒளிமிக்க இளம்வீரன் இந்திரஜித்தை ஒத்தவன். பானுகோபன் இறந்த பின் படுகளத்திற்கு சென்று அசமுகியும் பதுமகோமளையும் அழுதுபுலம்புகிறார்கள். கூத்துமரபில் இந்த படுகளத்திற்கு முக்கியத்துவம் உண்டு. பெரும்பாலும் இளைய வீரன் ஒருவன் இறந்ததை அழுதுபுலம்பும் கதைகள். போரில் இளையவர்களை பலிகொடுத்த குடிகளின் ஆற்றாமையை பழங்கனவாக நினைவுறுத்தும் படுகளங்கள். என்றோ இறந்தவனுக்கான அழுகையும் புலம்பலும் கூத்தில் ஒலிக்கின்றன. அபிமன்யு, அரவான் போன்று பானுகோபனின் வீரப்பிரதாபங்களும் கூத்தின் இப்பகுதியில் இடம்பெறுகின்றது.


கூத்து மேலும் மாறுபடும் சில இடங்களை சொல்ல முடியும். அசுரர்கள் தவம் செய்கையில் மாயை மகளுக்கு மந்திரசித்துக்களை கற்பிக்கிறாள். தாய் மகளுக்கு தானறிந்த அறிவை கடத்துவதாக இது அமைகின்றது, கைவைத்தியம் உட்பட பெண்கள் தங்கள் பட்டறிவை தங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்வது காலம்காலமாக நடைபெறும் ஒன்று. கந்தபுராணத்தில் மாகாளர் அசமுகி கையை துண்டிக்க கூத்தில் அரிகரபுத்திர சேனாதிபதி அதைச்செய்கிறார். கந்தபுராணத்தில் வரும் மாகாளர் அரிகர புத்திரனான அய்யனாரின் காவல் வீரன், இந்திராணி கந்தபுராணத்தில் மாகாளர் வருபடலத்தில் அய்யனாரை குறித்து அபயம் கேட்டு ஓலமிடுகிறாள். தமிழ் இலக்கியத்தில் அய்யனார் என்னும் தெய்வம் துதிக்கப்படும் இடமாக இது கருதப்படுகிறது. இதற்கு முன் அப்பர் சாத்தனை மகனாங்கொண்டார் என்று தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். கூத்தில் அரிகர புத்திர சேனாதிபதியே நேரில் வருகிறார். 

பை அரா அமளியானும் பரம் பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம் விண்ணோர்க்கு ஆதியே ஓலம் செண்டார்
கையனே ஓலம் எங்கள் கடவுளே ஓலம் மெய்யர்
மெய்யனே ஓலம் தொல் சீர் வீரனே ஓலம் ஓலம்.

இதே போன்ற பாடல், இந்திரனால் சிவனை நோக்கி கூத்தில் பாடப்படுகின்றது. 

அருமறைப் பொருளே ஓலம் அம்பிகை பாகா ஓலம் 
அரவணி மார்பா ஓலம் அங்கயற்கண்ணா ஓலம் 
திரு வெண்ணீறணிவா ஓலம்
 சிவகிரி பரனே ஓலம் பரு மணி உத்திராட்சமாலை 
மார்தனிலணிந்தாயோலம் 
தருவளர் கொன்றை ஓலம் சதாசிவப் பொருளே ஓலம் 
ருதிய சுடலை தன்னில் கன நடம் செய்தாயோலம்
உரப்பெரும் சூரர் இருக்கும் உகந்து நீ கார்க்க வேணும் 
திருப் பெரும் கயிலை வாசா சிவ சிவா வருகுவாயே

அணுக்கமான பாத்திரங்களை பெரியவர்கள் தம்பி என்று அழைப்பது பிரதியில் மீண்டும் மீண்டும் வருகிறது, விஷ்ணு தாருகனை தம்பி என்கிறார், இந்திராதி தேவர்கள் எல்லாம் முருகனை தம்பி போருக்கு புறப்படுங்கோ என்கின்றனர்.

தும்பி முருகனுக்கிளைய துரையே எங்கள் துயரம் தன்னைக் கார்க்க வந்த மறையே
சூரர் இடுக்கம் தாங்கொண்ணாமல் நாங்கள் - மெத்த துயரமடைந்து வதைப்பட்டோம் - பாலா
என் மகன் சயிந்தனையும் பிடித்தான் - மிக துன்னவே தான் சிறையில் அடைத்தான்
இத்தனை நாட்பட்டதுயர்தீர - நாங்கள் எத்தனையோதவங்கள் செய்தோம் மீள
இச்சணம் சண்டைக்கு புறப்படுங்கோ - தம்பி அச்சணம் அவர்கள் தன்னை வெல்வோம்

கூத்து இறுதிப்போரை எட்டும்தோறும் பாடல்கள் செறிவாகின்றன, அழகிய தாளக்கட்டுக்களுடன் விறுவிறுப்பாக செல்லும்படியான பாடல்கள், அவற்றின் பேச்சுவழக்கு தன்மை குறைந்து பரணி போன்ற இலக்கியத்தன்மை கூடிச்செல்கிறது.

மலையினோடு மலை எதிர்த்தவாறு போலும்
வடவையொடு வடைவை எதிர்த்திட்டாப் போலும்
அலைகடல்கள் கடலுடனே அடித்தாப்போலும்
அண்டமது வெடித்ததிர்ந்த தன்மை போலும்
கொண்டலொடு கொண்டல் எதிர்த்திட்டாப் போலும்
கோடையிலே இடி இடுத்த முழக்கம் போலும்
தலையிலிடு முடி அசையச் சூரபத்மன்
 தாவினான் கந்தனுடன் போராடத்தானே

கூத்தில், வேலால் இருகூறான சூரன் மயிலாக சேவலாக மாறிய பின்னருமே முருகனை தாக்க வருகிறான். மயிலின் போர்க்குணம் காட்டும் இடமிது. பின்னர் முருகனால் அடக்கப்பட்ட மயிலானது அவரை சரணடைகிறது.

மயிலாய் வந்தெதிர்த்தானே - சேவலுமாய் ஒயிலாய் வந்தெதிர்த்தானே - பற்மாசூரன்
மயிலாய் முன் எதிர்த்துமே - கயிலாயர் மகன் தன்னை பயிலாய் வதை செய்ய - மயிலாய் உருக் கொண்டு
(மயிலாய்)
இறகு மயிலின் ரேகை எங்கும் பளபளென்ன சிறகுதனை விரித்து சென்று வதுவை செய்ய
(மயிலாய்)
கோபம் மிகவே கொண்டு வேகமுடன் பொருத கோரமுடன் கண்கள் தீரப் பொறிபறக்க (மயிலாய்)
இற காலடித்துன்னை எமனுக்கிடுவேனென்று தரைதனில் கந்தனைத் தனித்து வதையே செய்ய

வீட்டு வேலை செய்யும் பெண்ணை வெள்ளாட்டி என்ற பெயரில் அழைத்த வழக்கம் இருந்துள்ளது, இராமானுஜரே தனது குருவின் மகளுக்கு மணக்கொடையாக தரவேண்டிய சீதன வெள்ளாட்டி இல்லாத குறையை போக்க தான் அப்பணிக்கு சென்றதாக கதைகள் உண்டு. இந்தக்கூத்தில் இந்திராணியை சூரன் ‘வெள்ளாட்டியாக’ ஆக்க அசமுகி முயற்சிக்கிறாள். கூத்து இறுதியில் தெய்வானை திருமணம் முடிந்தபின்பு, இன்றும் நம் வீடுகளில் நிகழ்வதுபோல மாமியார் இந்திராணி மணச்சடங்குகளில் ஒருபகுதியாக புது மருமகனுக்கு சீனி பால் பழம் கொடுக்கிறாள். 

வாராய் மருமகனே வளரும் செல்வமும் சீரும் நேராக இருவரொன்றாய் பேராக வாழ்ந்திருப்பீர்
அம்மிவலமதாக அரசாணி முன்பதாக செம்மையாய் இடப்புறம் சேர நிற்பாய் மகளே.
வெள்ளி மதியம் பார்த்து விளங்கத் தாலிதரித்து
துள்ளி வினாயகரைத் துதித்திடுவாய் என்மகளே 
பாரியும் நீருமாகப் பரிந்துமே கைப்பிடியும் பால் பழம் சீனி தன்னைக் குடித்திடுவீர் மருமகனே

மாய்கை எனும் சூரனின் தாய், பிரதி முழுவதும் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறாள். அவளது ஆசி பெறுவது சூரர்களுக்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அவள் ஒரு நாட்டார் தெய்வத்தன்மையுடன் காட்டப்படுகிறாள். இறுதியாக மங்கள வாழ்த்தில் தேவர்கள் முருகனோடு மாய்கை மகனான சூரனும் வாழ்த்தப்படுகிறான்.


மங்களமே மங்களமே மலரயன் மகிழ் திருமங்களமே மாமத வாரணக் காரணமே மாமறையோர் திருப்பூரணமே
ஆதிபரஞ் சோதிக்கும் அபிராமி ஆனவர்க்கும் ஆனதிருப்பாற்கடலில் அன்றுதுயில் செய்பவற்கும்
மங்காத வாழ்வுபெறு வானவர்க்காய்த் தானுதித்த சிங்கார வெற்றி வடி வேலவரும் தான் வாழ்க
அண்டவொண்ணாப்படை பொருதும் அவுணர் குலம் விளங்கவந்த மண்டலம் மிதக்கவந்த மாய்கை பற்மாசூரன் வாழ்க
மாதமும் மாரி பெய்ய மாமறையோர் கொண்டாட நீதமுடன் பூவுலகில் நீடூளி வாழ்குவாரே
இந்திரரும் வானோரும் ஈசுரரும் லெட்சுமியும் கந்தன் ஆறுமுகனார் காட்சி பெற்று வாழ்வோமே!

தாமரைக்கண்ணன், புதுச்சேரி

ஆடல் : தொடர்


உதவி நூல்கள் 

  • சூரசம்மாரக்கூத்து - முனைவர் முருகு தயாநிதி
  • மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் - மௌனகுரு 
  • தெருக்கூத்து கட்டுரை - வெங்கட் சுவாமிநாதன்

மௌனகுரு தமிழ் விக்கி