Thursday 14 March 2024

கிறிஸ்துவின் சித்திரங்கள் - 4: உலகப்போர்கள் - தாமரைக்கண்ணன் அவிநாசி

The Risen Christ, 1919 - Jacob Epstein

”இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28.20) என உயிர்ந்தெழுந்த கிறிஸ்து தன் சீடர்களுக்கு வாக்களிக்கிறார். இது மனிதர்கள் அனைவருக்குமான வாக்கு. கிறிஸ்துவின் இந்த உடல் கடந்த ஆன்மீக இருப்பையும் அவரின் அருகணைவையும் எப்போதைக்கும் விட உலகப்போர்களிலும் அதில் நிகழ்ந்த இன அழிப்புகளிலும் மனிதர்கள் உணர்ந்தனர். இது கலைகளிலும் வெளிப்பட்டது. நவீனம் மரபான கலை வடிவங்களில் இருந்து விலகி கலைஞர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்தது. கலைஞர்கள் உலகப்போர்களில் தாங்கள் அடைந்த வலியை, துயரை, போர்கள் மீதான கண்டனத்தை கிறிஸ்து வழியாக வெளிப்படுத்தினர். கண்டனமும் துயரும் மட்டுமல்ல, கலைஞர்கள் தாங்கள் ஆன்மீகமாக கண்டடைந்த தங்களுடைய கிறிஸ்துவை படைத்தனர். 

கிட்டத்தட்ட அப்போதைய இளம் தலைமுறை முழுவதையும் பலிகொண்ட முதல் உலகப்போரின் இறுதியில் 1917-ல் ஜேக்கப் எப்ஸ்டீன் (Jacob Epstein) தனது முதல் வெண்கல கிறிஸ்து சிற்பத்தை வடிக்கத்துவங்கினார், 1919-ல் முடித்தார். இந்த கிறிஸ்து உயிர்த்தெழுந்தவர் - The Risen Christ. நெடிய உயரமுடைய இவர் தன் வலக்கரத்தில் உள்ள காயத்தை காட்டி நிற்கிறார். இடக்கரம் அந்த காயத்தை சுட்டிக்கொண்டிருக்கிறது. இரு கரங்களும் இயல்பை விட பெரிதாக உள்ளன. இவைகளில்தான் சிற்பத்தை காண்பவர்களின் பார்வை குவியும். இந்த சிற்பம் மரபான வடிவமல்ல. மரபான சித்திரங்கள் மற்றும் சிற்பங்களில் காணப்படும் தலைமுடி இருபுறமும் தொங்கிய அழகிய இளம் முகத்திற்கு பதிலாக, நவீன மனிதனாக நன்கு வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் பெரிய நெற்றியுடன் உள்ளார். இந்த முகத்தில் புன்னகை இல்லை. மாறாக இது பழியையும் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது. எப்ஸ்டீன் தனது நெருங்கிய நண்பர் ஒருவர் நோயின் துன்பத்தில் இருக்கும் போது அவரின் முகத்தை படியெடுத்து அதிலிருந்து இந்த கிறிஸ்துவின் முகத்தை வடித்துள்ளார். இந்த சிற்பத்தை பார்த்த திருச்சபையாளர்கள் தங்களுக்கு பழக்கப்படாத இந்த முகத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அணிந்திருக்கும் உடையும் மரபானதல்ல. மேலிருந்து கீழாக தொங்கும் அங்கிக்கு மாற்றாக பக்கவாட்டில் சுற்றப்பட்ட நவீனப்பாணி ஆடையை அணிந்துள்ளார். இந்த கிறிஸ்து அப்போதைய மனிதர்கள் பார்த்துப் பழகிய புராண கிறிஸ்துவோ மறுமலர்ச்சியின் அழகிய கிறிஸ்துவோ அல்ல. இவர் காலாதீத மனிதன். கிறிஸ்துவின் நவீன சித்தரிப்புகளில் இதுவே மிகமுன்னோடியான படைப்பாக சொல்லப்படுகிறது. 

முதல் உலகப்போரில் தனது நெருங்கிய நண்பர்கள் பலரை எப்ஸ்டீன் இழந்திருந்தார். எப்ஸ்டீன் யூதர். மோசஸின் இரண்டாவது கட்டளைப்படி அவர்கள் இறைவடிவங்களை படைக்கக்கூடாது. அப்படியிருந்தும் ஏன் போர் மீதான தனது வெறுப்பைத் தெரிவிக்க எப்ஸ்டீன் கிறிஸ்துவை தெரிவுசெய்தார் என்ற கேள்வி நிச்சயம் எழும். மனிதர்களுடைய வேதனையின் குறியீடாக, அவர்களின் வேதனையை தாங்கியவராக நிற்கும் கிறிஸ்துவின் உருவைத் தவிர வேறு எதை எப்ஸ்டீன் உலகப்போரின் வேதனைகளை, படுகொலைகளை காட்ட கையாண்டிருக்க முடியும். மனிதர்கள் மனிதர்களுக்கு கொடுத்துக்கொள்ளும் வேதனையின் குறியீடாக இந்த சிற்பத்தை வடித்த அதேசமயம் தன் உணர்ச்சிகளையும் இதன் வழியாக வெளிப்படுத்தியுள்ளார் எப்ஸ்டீன். 

எப்ஸ்டீன் 1880-ல் அமெரிக்காவில் பிறந்து 1910-ல் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு தன் படைப்புகளை வடித்தார். இந்த கலைப்படைப்பு 1920-ல் காட்சிபடுத்தப்பட்டது. அப்போது இதிலுள்ள தனித்துவம் வாய்ந்த அம்சங்களால் இதன் யூத படைப்பாளிக்கு எதிராக ’தெய்வ அவச்செயல் செய்தவர்’ என்ற கூச்சல் கிறிஸ்துவ-இங்கிலாந்தில் எழுத்தது. இதற்கு மூன்று காலகட்டங்களில் எப்ஸ்டீன் பதிலளித்துள்ளார். முதலில் 1921-ல் நாளிதழில் “என்னுடைய கிறிஸ்து வழக்கமான முக பாவத்தைக் கொண்டவரல்ல. அது மரபானது, புராணத்தன்மை கொண்டது. என்னுடைய படைப்பு முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையால் ஆனது. மேலும் இது ஒப்புநோக்க நவீனமானது. துவக்ககால கிறிஸ்துவின் சிற்பங்கள் அப்பல்லோ சிற்பங்களின் வரிசையில் வருபவை. என்னுடைய படைப்பு ஒரு உருவச்சித்திரமாக கருதப்பட வேண்டியதில்லை, குறியீடாக பார்க்கப்பட வேண்டும்… அவர் அச்சத்தையும் அதேசமயம் பக்தியையும் தூண்டுபவர்… அவர் நியாயத்தின் சீற்றத்தை, நீதியின் கோபத்தை வெளிப்படுத்துபவர். இந்த சிக்கலான கிறிஸ்துவைத்தான் நான் வடிவமைக்க முயன்றேன்” என்கிறார். 

1931-ல் “என்னுடைய கிறிஸ்து கிழக்கத்திய சாயலில் இருப்பதாக சொல்கின்றனர். நான் எந்த இனப்பண்பையும் மனதில் வைத்து அப்படைப்பை வடிக்கவில்லை. சில அம்சங்களை மனிதமாதிரி கொண்டு வடித்திருந்தாலும், அப்படைப்பு முழுக்க முழுக்க மனிதமாதிரியை அடிப்படையாக வைத்து வடிக்கப்பட்டதல்ல. என்னுடைய கிறிஸ்து வெளிப்படுத்தும் உளவியல் அம்சம் தற்பொழுது அவ்வளவு பிரபலமானது அல்ல. அவர் நம்மை குற்றம் சாட்டி நிற்கிறார்” என்கிறார்.

Hands of the Risen Christ - Jacob Epstein

வெகுசீக்கிரமே யூத வெறுப்பு ஐரோப்பாவில் அதிகரிக்கிறது. நாசிசம், ஹிட்லர் மற்றும் இங்கிலாந்திலும் பாஸிசம் துவங்குகிறது. இதனால் எப்ஸ்டீன் தன்னுடைய அடக்கமான பதிலளிக்கும் தொனியையும், வழக்கமான ’யூத பார்வை’யை முன்வைப்பதையும் மாற்றிக்கொள்கிறார். 1940-ல் வெளியான தன்னுடைய தன்வரலாற்று நூலில் (Let There Be Sculpture) தன்னுடைய கிறிஸ்துவை ’யூத கிறிஸ்து’வாகவே முன்வைக்கிறார். “நான் எந்த நோக்கத்திற்காக என்னுடைய கிறிஸ்து சிற்பத்தை வடித்தேனோ அதற்காக அதை நான் கண்டிப்பாக நிலைநிறுத்தியாக வேண்டும். அது இவ்வுலகை அதன் கருணையின்மை, மனிதமின்மை, கொடூரம், மற்றும் மிருகத்தனத்திற்காக, உலகப்போருக்காக, தற்போது நிகழும் உலகம் காணும் பெரும் போருக்காகவும் பழிசுமத்தி நிற்கும். எவ்வளவு தீர்க்கதரிசனமான தோற்றம் இது! இது துவக்ககால ரோம, பைசாண்டிய கிறிஸ்துவோ, மைக்கேலேஞ்சலோவின் அப்பலோனிய கிறிஸ்துவோ, ரபேலின் இனிமையான ஆசீர்வதிக்கும் கிறிஸ்துவோ அல்ல. இது நவீன கிறிஸ்து, உயிர்ப்புடைய கிறிஸ்து. இவர் யூதர், கலிலியன் (வடக்கு இஸ்ரேல் மற்றும் தெற்கு லெபனானை உள்ளடக்கிய பண்டைய கலிலி பகுதி), போரை கண்டிப்பவர், ‘அமைதி! தொலைவில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி!’ என நம்மை எச்சரிப்பவர்.” 

எப்ஸ்டீன் இதன் பிறகும் முக்கியமான கிறிஸ்து சிற்பங்களை வடித்துள்ளார். இரண்டாம் உலப்போரில் நிகழ்ந்த மாபெரும் இன அழித்தொழிப்பைக் கண்ட பிறகு எப்ஸ்டீன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மறைந்தன. அவரது படைப்புகள் வெகுஜனத்தாலும் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

--------------------------

இரண்டாம் உலகப்போரில் யூத மக்கள் அனுபவித்த கொடுமைகளும் துயரங்களும் ஒருவகையில் கிறிஸ்து அடைந்தவை. யூதர்கள் அடைந்த வேதனையின் ஒட்டுமொத்த குறியீடாக கிறிஸ்து என்ற யூதரை சித்தரித்தவர் மார்க் ஷகால் (Marc Chagall, 1887 - 1985). ஷகால் அப்போதைய ரஷ்யப்பேரரசின் பகுதியான வைடெப்ஸ்க் (Vitebsk)-ல் பிறந்தவர், யூதர். ப்ரான்ஸில் வசிக்கும் போது ஐரோப்பாவில் உருவான யூத வெறுப்பையும் படுகொலைகளையும் கண்டு 1938-ல் ‘வெள்ளை சிலுவையேற்றம்’ என்ற ஓவியத்தை வரைந்தார். இது போர்மீதான கண்டனம் அல்ல, குற்றச்சாட்டுமல்ல, அதன் சாட்சியாக நிற்கிறது. இதில் கிறிஸ்து யூதர்கள் பிராத்தனையின் போது அணியும் தலிட் என்ற துணியை இடையிலும், தலையில் முற்கிரீடத்திற்கு பதிலாக பிராத்தனைக்கான வெண்துணி கட்டியுள்ளார். கிறிஸ்துவின் தலைக்கு மேல் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் சுருக்கம் INRI-வின் லத்தீன் எழுத்துருக்களும் உடன் பொறிக்கப்பட்டுள்ளன. ஷகால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் சித்திரங்கள் பலவற்றை வரைந்துள்ளார். அதில் இதுவே முதலாவது ஓவியம்.

White crucifixion, 1938 - Marc Chagall

இடப்புறம் சிவப்புக் கொடியுடனும் ஆயுதங்களுடனும் புரட்சியாளர்கள் வருகின்றனர். வலப்புறம் நாசிக்களின் கொடி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் புரட்சியாளர்களாலும், இன்னொருபக்கம் நாசிக்களாலும் தீப்பற்றி எரியும் வீடுகளில் இருந்து பிராத்தனைக்கான புனித மேஜைகளும் நாற்காலிகளும் புனித நூல்களும் வெளியே வீசியெறியப்பட்டுள்ளன. அகதிகளாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு படகில் தப்பி ஓடுகின்றனர். வீட்டை இழந்தவர்கள் வெளியே அமர்ந்துள்ளனர். கீழே இடப்பக்கத்தில் நீல உடை அணிந்தவர் ‘நான் யூதன்’ என எழுதிய பதாகையை நெஞ்சில் தொங்கவிட்டுள்ளார். சிலுவைக்கு கீழே வழிபாட்டு மெழுகுவர்த்தி தண்டான மெனோரா உள்ளது. இதன் ஏழு கிளைகளில் ஆறில் மட்டுமே மெழுகுவர்த்திகள் உள்ளன. அவற்றில் ஐந்து மட்டுமே எரிகின்றன. அதற்கும் கீழே அழிவை மிக அருகே உணர்ந்த அன்னை தன் குழந்தையை அணைத்துள்ளார். ஷகால் தான் வாழ்ந்த வைடெப்ஸ்க் யூத உலகின் சிதைவை இதில் காட்டியுள்ளார். 

இந்த ஓவியத்தின் முக்கிய அம்சம் இதன் வெண்மை நிறம். மேலே விண்ணிலிருந்தும், கீழே எரிந்துகொண்டிருக்கும் தோரா நூல்சுருளில் இருந்தும் வெள்ளை ஒளி வீசுகிறது. வெள்ளை ஒளியை ஓவியத்தின் இருபுறமும் வீடுகளை பற்றியெரிக்கும் தீக்கொளுந்தின் புகைமூட்டம் என்றும், எரியும் புனித நூலான தோராவிலுருந்து வீசி இறைவன் மீது விழும் அவரின் நித்ய ஒளி என்றும் இருவிதமாக பார்க்கலாம் என்கிறார் பேராயர் ரிச்சர்ட் ஹாரிஸ். படிமங்களால் ஆனது ஷலாலின் உலகம்.  கீழேயுள்ள அன்னையும் குழந்தையும் அன்னை மரியாளையும் குழந்தை இயேசுவையும் நினைவுறுத்துகின்றனர். சிலுவைக்கருகில் இருக்கும் ஏணி யாக்கோபின் ஏணி. சிலுவையின் கீழே இடப்புறம் இருப்பவர் எலியா என ஊகிக்கப்படுகிறது. வலப்புறம் ரப்பி ஒருவர் எரிகின்ற தோராவிற்குள் பாய்கிறார். இது ஹாசிடிக் தொன்மக்கதையை சுட்டுகிறது - ’பேராயர் ஒருவர் தோரா நூலை எரிக்க கட்டளையிட்ட போது இஸ்ரேலின் ரப்பி இறைவனிடம் பிராத்தித்தார், இதன் விளைவாக பேராயர் நோயில் விழுந்தார், தோரா எரிக்கப்படவில்லை’. பதினெட்டாம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பரவிய ஹாசிடிக் யூத மறைவாதத்தின் தாக்கம் ஷகாலிடம் உண்டு. அன்னை மரியாள், எலியா போன்றவர்களையும், யாக்கோபின் ஏணி, பற்றியெரியும் வீடு, தோரா போன்றவற்றையும் ஷகால் தன்னுடைய பல ஓவியங்களில் சித்தரித்துள்ளார். “என்னுடைய ஓவியங்களில் உள்ள இவை அனைத்தையும் நான் புரிந்துகொண்டதில்லை. இவை இந்த அர்த்தத்தைத்தான் தருகின்றன என குறிப்பிட்டு சொல்லமுடியாது. இவை என்னை ஆட்கொண்ட படிமங்களின் சித்தரிப்புகள் மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார் ஷகால். 

இவ்வளவு நிகழ்வுகளும் சூழ மையத்தில் விண்ணொளி வீச கிறிஸ்து சிலுவையில் உள்ளார். இந்த அழிவு எதுவும் தன்னை அணுகாது என்றோ அல்லது இவை அனைத்தையும் நான் சுமக்கிறேன் என்றோ என்றென்றைக்குமாக நித்ய காலத்தில் அங்கு உள்ளார். ஷகாலின் ஓவியங்கள் பற்றி நித்ய சைதன்ய யதி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கோயிலில் தீபாராதனைக்கு வந்து காத்திருப்பவர்கள் மூடிக்கிடக்கும் கர்ப்ப கிரகத்தின் கதவெதிரில் கரம் கூப்பி வெகு நேரம் நிற்கும் போதுதான் மணியோசையுடன் நடை திறக்கப்படுகிறது. சிரத்தையோடு அங்கேயே சற்று நேரம் மனமொன்றி ஆராதனையில் லயித்தால் மட்டுமே தீபாராதனை திவ்ய அனுபூதியைத் தரும். ஷகாலின் ஓவிய உலகிற்குள் பிரவேசிப்பதற்கான ஆயத்தமும் அதைப் பேன்றதாகும். ஷகால் தீட்டிய ஓவியங்களைப் பார்க்கும்போது அவர் ஓவியப்படைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளான வடிவ நேர்த்தி, காட்சிப்பரப்பு, ஜியோமிதி, இயற்கையிலும் உருவத்திலும் காணப்படும் ஒத்திசைவு, குணாம்சம், வர்ணங்களின் சேர்க்கை, நிறங்களின் வர்ணலயம் இவற்றையெல்லாம் கொஞ்சம்கூடப் புரிந்து வைத்திருப்பதாக நமக்குத் தோன்றவில்லை… ஷகாலின் எந்த ஓவியமும் எனக்குள் அழகுணர்வை ஏற்படுத்தியதில்லை. நான் குறிப்பிடுவது உலக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அழகியல் அனுபவத்தைப் பற்றித்தான். இறந்த ஆத்மாவில் உற்சாகத்தை நிரம்பும் அனுபூதி தரிசனம் என்கிற பொருளில் அழகுணர்வைக் காணமுற்பட்டால் ஷகாலின் அனைத்து ஓவியங்களும் மிக அழகானவை என்றே சொல்லலாம்” (ஷகால்: சர்ரியலிசத்தின் முதல் வேர், தமிழில் நிர்மால்யா).

Obsession, 1943 - Marc Chagall

சிலுவையேற்ற வரிசையில் ஷகால் வரைந்த ஓவியங்களில் மற்றுமொரு ஓவியம் 1943-ல் வரைந்த அப்ஸெஸன் (obsession). இது ஒரு இருண்ட கொடுங்கனவு. கிறிஸ்து சரிந்து கிடக்கும் இந்த நரகத்தில் மீட்பென ஒன்று இல்லையா எனக் கதறும் ஓவியம். இங்கு விண்ணுலகிற்கு எற்றிச்செல்லும் யாக்கோபின் ஏணி இல்லை. ஷெகாலுடைய அமைதியின் தூதரான சேவல் கீழே இறந்து கிடக்கிறது. இடப்பக்கம் முதிய யூதர் தாங்கியிருக்கும் மூன்று நிலை மெழுகுவர்த்தித் தண்டில் ஒரு மெழுகுவர்த்தி அணைந்து சரிகிறது. அது சரிவது மட்டுமல்ல, எரிந்துகொண்டிருக்கும் மீத இரண்டு மெழுகுவர்த்திகளையும் அது சரிக்கப்போகிறது. முழுதும் இருள் கவியப்போகிறது. ஓவியத்துடைய மையத்திலிருக்கும் வீடு பற்றி எரிகிறது. வீட்டிலிருக்கும் பெண் தன் குதிரை வண்டியில் ஏறி அங்கிருந்து தப்பிக்க குதிரையை முடுக்குகிறாள். ஆனால் குதிரை நெருப்பைக் கண்டு அஞ்சி  நகர மறுக்கிறது, சரிந்த கிறிஸ்துவோ அதன் பாதையை மறிந்து கிடக்கிறார். அதை கண்டு அன்னை அஞ்சி நடுங்கிறாள், பின்னால் அமர்ந்திருக்கும் அவளது குழந்தையும் கதறுகிறது. கிறிஸ்து நிமிர்ந்து நிலைநிற்கும் வரை அங்கிருந்து தப்பிக்க வழியில்லை. 

இந்த ஓவியம் கலைஞன் ஒருவனின் கொடுங்கனவு மட்டுமல்ல, சிலுவையை சரிக்கவேண்டும் என மனிதர்கள் கொண்டுள்ள ஆவேசத்தின் (obsession) சித்திரம். படுகுழியின் ஆழத்திலிருந்து கேட்கும் கதறல். ஆனால் இதற்கான மறுமொழியை இந்த ஓவியத்தில் பின்னணியில் மிகச்சிறியதாக சித்தரித்துள்ளார் ஷகால். மேலே வலப்பக்கம் தொலைவிலுள்ள மலையின் உச்சியில் சிறிய தேவாலயம் உள்ளது. இறைவனின் கொடியை ஏந்திய குழு ஒன்று தேவாலயம் வழியாக சரிந்து கிடக்கும் இயேசுவை நோக்கி கீழிறங்குகிறது. 

இரண்டாயிரம் வருடங்கள் கழிந்த பிறகுதான் யூத கலைஞர்கள் கிறிஸ்துவை சித்தரிக்க துணிகின்றனர். யூத கலைஞர்களில் முதன் முதலில் கிறிஸ்துவின் உருவை வடித்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த மார்க் அன்டோகோல்ஸ்கி (Mark Antokolsky, 1840-1902). இவர் 1873-ல் வடித்த கிறிஸ்துவின் முழுஉருவச்சிலை தான் யூதர் ஒருவரால் வடிக்கப்பட்ட முதல் கிறிஸ்து படைப்பு. இது மரபான சிற்பவடிவம். எனினும் இதில் கிறிஸ்துவை யூத உடை மற்றும் தலையில் அணிந்திருக்கும் பிராத்தனைக்கான திகியா உடன் யூத தன்மையில் வடித்திருப்பார். முதன்முதலில் ஐரோப்பாவுடைய மரபான கிறிஸ்து வடிவை உடைத்து அவரை யூத தன்மையில் வடித்தவர் இன்னும் இருநூறு வருடங்களுக்கு முந்தையவரான ஓவியர் ரெம்ப்ராண்ட், இவர் யூதரல்ல. ரெம்ப்ராண்ட்டின் படைப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. இவையே அன்டோகோல்ஸ்கி போன்றோர் கிறிஸ்துவை யூத தன்மையில் வடிப்பதற்கான துணிவை அளித்தன. இதன் பிறகு இருபதாம் நூற்றாண்டில் எப்ஸ்டீன், ஷகால் போன்றோர் வருகின்றனர். இவர்களுடையது முழுக்க முழுக்க நவீன படைப்புகள். 

ஷகாலுடைய ஓவியங்களில் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டே சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் கிறிஸ்து அடைந்த துயர் மத்தியகால துயர சித்தரிப்புகள் போல நேரடியாக சித்தரிக்கப்படவில்லை. கிறிஸ்து வலியில் வேதனையில் சிலுவையில் அறையப்பட்டுக்கிடக்கவில்லை. எனினும் இந்த ஓவியங்கள் அனைத்திலும் சிலுவை அதே ஆற்றலுடன் உள்ளது. மறை அம்சம் அற்றவை என்றாலும் ஆன்மீக அனுபவத்தைத் தருபவை. சிலுவை சரிந்து கிடந்தாலும் அது நிமிரும் என்ற நம்பிக்கையின் சிறு துளியையாவது தன்னுள் கொண்டவை. இது அத்தனை துயரங்களை கண்ட பின்பும் ஷகால் என்ற மகத்தான கலைஞன் தன் வாழ்நாள் முழுதும் கொண்டிருந்த உள்ளொளி. 

--------------------------

போர்க்கால சித்தரிப்புகள் அனைத்தும் அதன் வலியை வேதனையை காட்டவேண்டும் என்பதில்லை. போரில் நிகழும் தினசரி நடவடிக்கைகளை, அதன் அன்றாடத்தில் திகழும் அழகு, ஒருமை, மற்றும் சாந்தத்தை, அவற்றின் வழியாக கிறிஸ்துவின் இருப்பை காட்டியவர் ஸ்டான்லி ஸ்பென்சர் (Stanley Spencer, 1891-1959). நவீன கிறிஸ்துவ ஓவியர்களில் முக்கியமானவர். இங்கிலாந்தை சேர்ந்தவர். முதல் உலகப்போரின் துவக்கத்தில் இங்கிலாந்து படையின் மருத்துவ பிரிவில் இணைந்து காயம்பட்டவர்களை ஏற்றிச்செல்லும் வண்டிச்சேவையில் பயிற்சி பெற்றார். பின் 1916-ல் இருபத்திநான்காவது வயதில் மாசிடோனியா போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டார். 1917-ல் தானாக முன்வந்து காலாட்படைப் பிரிவில் இணைந்து மாசிடோனியாவில் முன்வரிசையில் போரிட்டார். இரண்டரை வருடங்கள் ஜெர்மன் மற்றும் பல்கேரிய துருப்புகளை எதிர்கொண்டார். பின் மலேரியாவால் தாக்கப்பட்டு அதன் விளைவான பாதிப்புகளால் படைப்பிரிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். போரில் இருந்து உயிருடன் மீண்டு வந்திருந்தாலும், தன் சகோதரரையும் நண்பர்கள் பலரையும் அந்த போரில் ஸ்பென்சர் இழந்தது வாழ்வு மற்றும் இறப்பு மீதான அவரது பார்வையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அவையே அவரது படைப்புகளில் வெளிப்பட்டன. 

‘Travoys Arriving with Wounded at a Dressing-Station at Smol, Macedonia, September 1916’ - 1919, Stanley Spencer

மாசிடோனியா செல்லும் முன்பே ஸ்பென்சர் தனக்கான பாணியில் ஓவியங்கள் வரைந்துள்ளார். சிலவற்றை முடிக்காமல் விட்டிருந்தார். போரிலிருந்து திரும்பி வந்து அவற்றை முடிக்க நினைத்து வரையத்துவங்கியபோது இனி வரைவது அவ்வளவு எளிதல்ல என உணர்கிறார். “அந்த (போர்) அனுபவத்திற்கு பிறகு மீண்டும் வரைய நினைப்பது சரியல்ல, அறிவானதுமல்ல” என பதிவுசெய்துள்ளார். பிறகு 1919-ல் இங்கிலாந்தின் போர் நினைவுசின்ன குழு அவரை வரைய பணித்ததனால் மீண்டும் வரையத்துவங்குகிறார். ‘Travoys Arriving with Wounded at a Dressing-Station at Smol, Macedonia, September 1916’ என்ற ஓவியத்தை வரைந்தார். இது போர் நினைவு ஓவியம் என்றாலும் இதில் சாகசமோ வீரமோ துயரமோ வெளிப்படவில்லை. அதில் வெளிப்பட்டது மீட்பும் உயிர்த்தெழுகையும். காயம்பட்ட வீரர்களை சுமந்த வண்டிகள் அவசரமருத்துவ இடமாக மாற்றப்பட்ட பண்டைய தேவாலய வாசலில் நிற்கின்றன. காயம்பட்ட வீரர்கள் அலறவில்லை, கோரமாக காட்டப்படவில்லை. மாறாக சாந்தமாக சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துபோல உள்ளனர். மருத்துவர்கள் உயிர்தெழுகையின் குறியீடாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்போடும் தேவாலாய கூடம் கிறிஸ்து பிறந்த சூழல் போல் உள்ளது, பிரகாசமான ஒளியுடன் வீரர்கள் உயிர்த்தெழுவது போல் உள்ளது. இந்த ஓவியத்தில் கிறிஸ்து சித்தரிக்கப்படவில்லை என்றாலும் அவரின் இருப்பை உணரமுடியும். 

உயிர்தெழுகை, மீட்பு, மற்றும் தனது அகத்தில் ஆன்மீகமாக கண்டடைந்த தன்னுடைய கிறிஸ்துவையும் பல ஓவியங்களில் ஸ்பென்சர் வரைந்திருந்துள்ளார். அவை அனைத்துமே முக்கியமானவை என்றாலும் இங்கு பார்க்க இருப்பது குறிப்பாக ஒரு ஓவியத்தை. 

Sandham Memorial Chapel

முதல் உலகப்போரில் உயிர்நீத்த சேந்தம் என்ற வீரரின் நினைவாக பர்க்க்ளேர் (Burghclere) கிராமத்தில் அவரின் சகோதரி மேரி எழுப்பிய தேவாலயத்தில் (Sandham Memorial Chapel) ஓவியங்கள் வரைய மேரி மற்றும் அவரது கணவரால் ஸ்பென்சர் பணிக்கப்பட்டார். இந்த தேவாலயம் ஸ்பென்சரின் விருப்பத்திற்கு ஏற்ப இத்தாலியின் பதுவா நகரிலுள்ள ஜியோட்டோவின் (Giotto) அரினா தேவாலயத்தை (Arena Chapel) மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. 1927 முதல் 1932 வரை ஆறுவருடங்கள் தன் மனைவியுடன் அருகில் வசித்து ஓவிய பணியை முடித்தார் ஸ்பென்சர். தேவாலயத்தின் உட்பகுதியில் மூன்று சுவர்கள் முழுக்க ஓவியங்களால் நிறைத்துள்ளர். இரு பக்கச்சுவர்களில் மொத்தம் 18 ஓவியங்கள் உள்ளன. இவை அனைத்துமே படைவீரர்களின் அன்றாட செயல்கள் மற்றும் நிகழ்வுகளின் சித்தரிப்புகள். மருத்துவப்பணியாளராக, காலாட்படை வீரராக அவர் அடைந்த அனுபவங்கள் இவை. காயம்பட்ட வீரர்களை ஏற்றிய வண்டி மருத்துவமனைக்கு வருவது, வீரர்கள் துணிகளை துவைப்பது, நீராடுதல், உறங்குதல், உண்ணுதல், படை போருக்கு செல்கையில் வரைபடத்தை ஆராய்தல் போன்றவை. இவை எதிலும் போரின் துயரம், கடுமை, ரத்தம் இல்லாமல் இயல்பாக அழகுடன் வரைந்துள்ளார். உதாரணமாக வரைபடத்தை ஆராயும் ஓவியத்தில் படைதளபதி வரைபடத்தை ஆராயும் போது வீரர்கள் பெர்ரி பழங்களை பறித்துக்கொண்டிருப்பர். சிறுசிறு விஷயங்கள் மற்றும் அன்றாட செயல்களுக்கும் ஆன்மீக மதிப்பு உள்ளது என ஸ்பென்சர் நம்பினார். இந்த நம்பிக்கையை அவர் புனிதர் அகஸ்டினின் வார்த்தைகளில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார். சேந்தம் தேவாலய ஓவியங்கள் பற்றி “Heaven in a Hell of War” என்ற தலைப்பில் நூல் வெளியாகியுள்ளது. இந்த ஓவியங்கள் பற்றி ஒருவரியில் சொல்லவேண்டும் என்றால் இந்த தலைப்பை சொல்லலாம். 

The resurrection of the soldiers, 1927 - 1932, Stanley Spencer

இறைபீடம் உள்ள சுவர் முழுக்க 21 அடி உயரமும் 17அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான ”வீரர்களின் உயிர்தெழுகை (The resurrection of the soldiers)” ஓவியம் உள்ளது. இதுவே இந்த தேவாலயத்தின் மைய ஓவியம். படைவீரர்களும் கோவேறுகளும் இறப்பிலிருந்து அமைதியாக உயிர்த்தெழுகின்றனர். ஓவியம் முழுக்க வெண்சிலுவைகள் குவியலாகவும், வரிசையாக ஊன்றப்பட்டும் நிறைந்துள்ளன. ஒவ்வொரு சிலுவையுமே பிரார்த்தனைக்கானவை. இந்த ஓவியத்தையும் பக்கச்சுவர் ஓவியங்களையும் ஜியோட்டோவின் அரினா தேவாலய ஓவியங்களுடன் ஒப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். அரினா தேவாலய பக்கச்சுவரில் கிறிஸ்துவின் வாழ்கை நிகழ்வுகள் தீட்டபப்பட்டிருக்கும். இங்கு ஸ்பென்சரின் போர் அனுபவங்கள் உள்ளன. அரினா தேவாலய மையச்சுவரில் கிறிஸ்து இறுதித்தீர்ப்பு நாளில் நீதி வழங்குபவராக உள்ளார். சேந்தம் தேவாலய ஓவியத்தின் மேல் பகுதியில் கிறிஸ்து கருணையுடன் வீரர்கள் சமர்ப்பிக்கும் சிலுவையை பெறுபவராக அமர்ந்துள்ளார். அரினாவில் கிறிஸ்துவிற்கு கீழே இரு தேவதைகள் சிலுவையை தாங்கி இருக்கும். சேந்தமில் இளம் வீரன் ஒருவன் தன் சிலுவையையும் அதில் அறையப்பட்ட கிறிஸ்துவையும் உடைந்த வண்டிமீது படுத்தவாறு நோக்கிக்கொண்டுள்ளான். அதற்கும் கீழே வண்டி இழுக்கும் இரு வெண்கோவேறுகள் தலையை திருப்பி அமர்ந்துள்ளன. அவை இரண்டின் மீதும் சாய்ந்தவாறு இளம் வண்டியோட்டி தன் சிலுவையை மடியில் வைத்து அமர்ந்துள்ளான். ஸ்பென்சர் போரில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்ட பல்கேரிய கோவேறு படைப்பிரிவை நினைவில் கொண்டு இரு கோவேறுகளையும் அதனுடன் உள்ள உடைந்த வண்டியையும் சித்தரித்துள்ளார். அந்த இரு கோவேறுகளும் கிறிஸ்துவின் குறியீடுகள். சிலுவையை ஆராயும் வீரனும் வண்டியோட்டியும் இளவயது ஸ்பென்சர்கள். 

ஜியோட்டோவின் அரினா தேவாலயம், இத்தாலி

அரினா தேவாலய மைய ஓவியம்
The resurrection of the soldiers ஓவியத்தில் உயிர்த்தெழுந்தவர்கள் அளிக்கும் சிலுவையை பெரும் கிறிஸ்து 

மிக விரிவான ஓவியம் இது. கீழே உயிர்த்தெழும் வீரர்கள் தங்களுடைய சகவீரர்களுடனும் தளபதிகளுடனும் கைகுலுக்குகின்றனர். முட்கம்பியில் சிக்கிய ஒருவனை மற்றொரு வீரன் கம்பியை வெட்டி காப்பாற்றுகிறான். மேலே வீரர்கள் தங்கள் சிலுவையை சுமந்து செல்கின்றனர். ஜியோட்டோ தன் ஓவியத்தில் நரகத்தை செதுக்கியிருக்கும் வலது ஓரத்தில், ஸ்பென்சர் இங்கு உயிர்த்தெழுந்த பின் வழக்கமான அன்றாட செயல்களை செய்து கொண்டிருக்கும் வீரர்களை வரைந்துள்ளார். ’அன்றாடச் செயல்கள் அவை எவ்வளவு சாதாரண செயல்களாக இருந்தாலும், அவை பெருமையையே அளிக்கின்றன, ஆன்மீகமான அர்த்தத்தை அளிக்கின்றன’ என்பது ஸ்பென்சரின் பார்வை. ஸ்பென்சரின் ஓவியத்தில் நரகம் இல்லை, அது குறியீடாக கூட சித்தரிக்கப்படவில்லை. ஸ்பென்சர் ”போரின் போது நான் பலரை புதைத்துள்ளேன், பல இறந்த உடல்களை கண்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். ஆகவே இறப்பு என்பது அனைத்திற்குமான முடிவல்ல என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். இதை ஸ்பென்சரின் ஓவியங்கள் முழுக்க காணலாம். 

கோவேறுகளில் சாய்ந்தவாறு இருக்கும் வீரன் (இளம் ஸ்பென்சர்)

உடைந்த வண்டியில் படுத்து சிலுவையை ஆராயும் வீரன் (இளம் ஸ்பென்சர்)

மேல் இடப்பக்கம் - உயிர்த்தெழும் கோவேறுகளும் வீரர்களும்

முட்கம்பியில் சிக்கியிருப்பவரை காப்பாற்றும் சக வீரன்

உயிர்த்தெழுந்த வீரர்கள் கைகுலுக்குதல்

தனது அன்றாட கடமையை செய்யும் உயிர்த்தெழுந்த வீரன்

உதாரணமாக அவர் 1920-ல் வரைந்த ’சிலுவையை எடுத்துச் செல்லும் கிறிஸ்து’வின் ஓவியத்தை குறிப்பிடலாம். கிறிஸ்து சிலுவையை சுமந்து செல்வது துயர நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்வை மத்தியகால ஓவியங்கள் மிக உணர்ச்சிகரமாக காட்டியிருக்கும். இருள் நிறைந்த உலகில் உடல் முழுதும் ரத்தம் வழிய வேதனையுடன் கிறிஸ்து சிலுவையை சுமந்து செல்வார். ஆனால் இந்த ஓவியத்தில் துயரம் இல்லை. மாறாக, இதை மிகஇனிய நிகழ்வாக பிரகாசமான சூரிய ஒளியால் நிறைத்துள்ளார். ’என்னுடைய நோக்கம் துயர உணர்வோ, அதை தூண்டுவதோ அல்ல’ என ஸ்பென்சர் தன்னுடைய ஓவியங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த ஓவியத்தில் இருக்கும் சூழல் எருசலேம் அல்ல, ஸ்பென்சர் பிறந்து வளர்ந்த சிற்றூரான குக்கும் (Cookham). இதிலுள்ள மனிதர்கள் எல்லோருமே மிக இயல்பாக உள்ளனர். வீட்டின் சாளரத்தில் இருந்து மகிழ்ச்சிகரமாக எட்டிப்பார்க்கின்றனர். கிறிஸ்துவின் முகமும் அவர்களில் ஒன்றாக உள்ளது. கிறிஸ்து ஒரு அன்றாடச் செயல் போல இயல்பாக சிலுவையை கல்வாரிமலைக்கு எடுத்துச் செல்கிறார். கவனிக்கவும் ‘சுமந்து’ செல்லவில்லை, ’எடுத்து’ செல்கிறார். அவருக்கு பின்னால் இரு தொழிலாளிகள் ஏணியை எடுத்து தங்களது பணிக்குச் செல்வதைப் போல, கிறிஸ்துவும் சிலுவையை தனது ’பணி’க்கு எடுத்துச் செல்கிறார். மனிதர்களுக்கு மீட்பை அருள்வதல்லவா அவரின் பணி. அது ஏன் துயர்மிகுந்ததாக இருக்கவேண்டும்? இந்த ஓவியத்தின் தலைப்பே இதை சுட்டிவிடுகிறது. 

Christ carrying the cross, 1920

இந்த நவீன காலகட்டம் மரபான கிறிஸ்துவை விடுத்து புதிய கிறிஸ்துவை கண்டுபிடித்தது. இவர் எல்லோருக்கும் பொதுவானவர் அல்ல. தனிமனிதர்களுக்கானவர். ஒவ்வொரு கலைஞரும் தான் அகத்தே உணர்ந்த கிறிஸ்துவை வடித்தனர். அத்தகைய சித்தரிப்புகளில் ஆற்றல் மிக்கவை எப்ஸ்டீன், ஷெகால் மற்றும் ஸ்பென்சரின் படைப்புகள். இதற்கு உலகப்போரின் பின்னணியும் ஒருகாரணம். இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது கிறிஸ்து ஒருமுறை மட்டும் சிலுவையில் அறையப்படவில்லை, உலகப்போர்கள் போன்று மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் பேரழிவுகள் ஒவ்வொன்றின் போதும் நாம் அவரை சிலுவையில் அறைந்துகொண்டே இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆயினும் மரணம் அனைத்திற்கும் முடிவல்ல என்றும், மீட்பும் புத்துயிர்ப்பும் நிகழும் என்றும் உணர்த்துபவை. இவற்றை மதஓவியங்கள் மட்டுமே என சொல்லவிட முடியாது. ஒரு இனத்திற்கோ ஒரு மதத்திற்கோ மட்டுமானவையல்ல. மொத்த மனித குலத்திற்கும் உரியவை. மதத்திலிருந்து படிமங்களையும் ஆன்மீகத்தையும் எடுத்துக்கொண்டு மரபான படைப்புகளைவிட அதிகவீச்சுடன் வெளிப்பட்ட மகத்தான கலைப்படைப்புகள். 

--------------------------

பார்க்க:

  1. Unlocking Sandham Memorial Chapel - YouTube

  2. Sandham Memorial Chapel | National Trust Collections


உதவியவை:

  1. The Image of Christ: The Catalogue of the Exhibition Seeing Salvation by Neil MacGregor, Gabriele Finaldi 

  2. The Image of Christ in Modern Art by Richard Harries, 2013

  3. Jacob Epstein's artistic expressions of Jesus | Raquel Gilboa - Academia.edu

  4. Marc Chagall, Painter of the Crucified, 1955 - Cornelia Sussman, Irving Sussman

  5. Distinctive Individual Visions (gresham.ac.uk)

  6. Stanley Spencer - Wikipedia

  7. Christian Themes in Art: Understanding faith through the eyes of Stanley Spencer (gresham.ac.uk)



தாமரைக்கண்ணன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்.  ஆங்கிலத்திலிருந்து முதன்மையாக தத்துவ கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். இவர் மொழிபெயர்த்துவரும் ஆனந்தகுமாரசாமியின் கட்டுரைகள் பரவலான வாசகத்தளத்தை சென்றடைந்துள்ளன