Wednesday 31 January 2024

கூத்தாண்டவர் திருவிழா - கரசூர் பத்மபாரதி


அரவான் மகாபாரத காப்பியத்தில் வருகின்ற ஒரு பாத்திரம். “அரவான்” இரவன் இராவத் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் திரௌபதி வழிபாட்டு மரபில் முக்கியப்பங்கு வகிப்பவர். கூத்தாண்டவர் என்பது அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். அரவான் என்பது தமிழ்ப் பெயர். இது அரவு (பாம்பு) என்ற சொல்லிலிருந்து உருவானதாகும். கூத்தாண்டவர் பற்றிய செய்திகள் வாய்மொழிச் செய்திகளாகவும் எழுத்துவழிச் செய்திகளாகவும் உள்ளன. அரவாணிகளின் சமய விழா என்று சொல்வோமானால் கூத்தாண்டவர் திருவிழாவையே கூறலாம். இது வருடந்தோறும் சித்திரை மாதத்தில் நிகழக் கூடியது. கூவாகம், பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் இத்திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பம்பாய், கல்கத்தா, டில்லி, மும்பை போன்ற வட மாநிலங்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அரவாணிகள் இதில் பங்கு பெறுகின்றனர். 

அருச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும்போது அரச உடைகளைக் களைந்து வேதியனாய் யாத்திரைக்குப் புறப்பட்டான். கங்கையில் நீராடினான். பாதாள மங்கையர் சிலர் அங்கு நீராடிக்கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் உலோபியைக் கண்டான். அவளுடைய அழகிலும் ஆற்றலிலும் ஈடுபட்டவனாய் அவளைத் தொடர்ந்துசென்று கூடி அங்கு சில காலம் வாழ்ந்திருந்தான். உலோபியான நாககன்னிக்கும் அருச்சுனனுக்கும் பிறந்தவனே அரவான். அரவான் பிறப்பிலேயே 32 இலட்சணங்கள் பொருந்தியவன். எதிர்ரோமம் உடையவன். இந்த அரவானே கூத்தாண்டவராக போற்றப்படுகிறான். வெட்டப்பட்ட உடன் தலை மட்டும் உயிர் பெற்றதாகக் கூறப்படுகிறது. 

குதித்துக் குதித்துக் கூத்தாடியதால் கூத்தாண்டவர் எனப் பெயர் ஏற்பட்டது. பரத நாட்டியத்திற்கு நடராஜன் இருப்பது போன்று தெருக்கூத்திற்குக் கூத்தாண்டவர் இருக்கிறார். அசுரன் அல்லது வேதாளத்தைக் கொன்று கூத்தாடியதால் கூத்தாண்டவர் ஆனார். கூத்தாண்டவர் என்பதற்கு 'நடிகக் கடவுள்' என்றும் 'நாட்டியக்கடவுள்' என்றும் 'கூத்தாடிகளின் கடவுள்' என்றும் பொருள். தென்னார்க்காடு மாவட்டத்தில் பெரும்பாலும் வன்னியர்களில் ஒரு பிரிவினர் கூத்தாடுபவர்களாக இருப்பதனால் இவர்கள் வணங்கும் தெய்வம் கூத்தாண்டவராக பெயர் பெற்று இருக்கலாம். கூத்தன் என்றால் 'நீரில் பிறந்தவன்' என்பதாகப் பொருளும் உண்டு.

பிராமணன் ஒருவனை இந்திரன் கொன்று விடுகிறான். இந்திரன் பிராமணனைக் கொன்ற பாவத்தின் விளைவாகச் சபிக்கப் படுகிறான். கூத்தாண்டவராக மறுபிறவி எடுத்துத் திருமணம் நடந்து தலை தவிர உடல் மறைந்து போகும் என்பது சாபம். இந்திரனான கூத்தாண்டவருக்குப் பெண் தர அனைவரும் மறுக்க, கண்ணன் பெண் வேடம் பூண்டு கூத்தாண்டவரை மணக்கிறார். பின் களப்பலியாகிக் கூத்தாண்டவர் இறக்கிறார். எனவே இக்கதையின் வழி இந்திரனின் மறுபிறவியாகக் கூத்தாண்டவர் கருதப்படுகிறார் என்பதை அறியலாம்.

சந்திரகிரி அரசன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பல்லாண்டுகளாகக் குழந்தைப்பேறு இல்லை. இருவரும் கிருஷ்ணன்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தமையால் யாகங்கள் செய்து குழந்தைப் பேற்றுக்காக வேண்டினர். கிருஷ்ணர் மனமிரங்கிப் பாரதப்போரில் அறுபட்ட அரவானின் சிரசு உயிருடன் இருப்பதறிந்து அதைக் கருடபகவான் வழியாகச் சரபங்க நதியில் விடச் செய்தார். ஆற்றில் சங்கம்புதரில் சிரசு ஒதுங்கியது.

ஒருநாள் சந்திரகிரி அரசன் வேட்டைக்குச் செல்லும்போது தன் மனைவியையும் உடன் அழைத்துச் சென்றான். அப்பொழுது சரபங்க நதிக்கரையோரமாக அமைந்திருக்கும் அம்மன் கோவிலின் முன்பாக ஒரு குழந்தை தவழ்ந்து கொண்டிருப்பதை அவ்விருவரும் கண்டனர். குழந்தையில்லாத காரணத்தால் அக்குழந்தையை எடுத்துச்சென்று வளர்த்துவந்தனர். சரபங்க நதியிலிருந்து எடுக்கப் பட்டதினால் ஆகாயவாணியின் முன்பாக அக்குழந்தைக்குச் 'சரபாலன்' என்ற பெயரைச் சூட்டினர். சரபாலன் வளர்ந்து பன்னிரெண்டு வயது நிரம்புகையில் அனைத்துக் கலைகளையும் கற்றுத்தேர்ந்தான். திடீரென ஒருநாள் கூத்தாசூரன் சந்திரகிரி அரசனுடன் போரிட்டு அவனைத் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றினான். நாடிழந்த அரசன் சந்திரகிரிக்கு மேற்கேயுள்ள திட்டச்சாவடிக் காட்டிற்குச் சென்று தன் மனைவியுடன் வசித்து வந்தான்.

நாட்கள் நகர்ந்தன. சரபாலனுக்கு வயது பதினாறு நிரம்பியது. அப்பொழுது சரபாலன் தன் பெற்றோர் காட்டில் வாழ்கின்ற காரணத்தைக் கேட்டறிந்து, பெற்றோரை அழைத்துக்கொண்டு சந்திரகிரிப் பட்டணத்திற்குச் சென்றான். சகல கலைகளிலும் வல்ல சரபாலன் கூத்தாசூரனோடு போரிட்டு அவனைத் தோற்கடித்து, மீண்டும் நாட்டைக் கைப்பற்றித் தன் தந்தையிடம் ஒப்படைத்தான், அதன்பிறகு, தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு தான் சிசுவாகக் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றான். அவர்களிடம் நாளைய தினம் சூரியன் உதயமாவதற்கு முன்பாக இதேயிடத்தில் தன்னை வந்து காணும்படிக் கேட்டுக்கொண்டான். அவ்வாறே அவர்கள் மறுநாள் அவ்விடத்தில் சென்று பார்த்தபொழுது சரபாலனின் சிரசினை மட்டும் கண்டனர். உடற்பகுதியைக் காணவில்லை தம் பிள்ளையின் இந்நிலையைக் கண்டு இருவரும் கதறி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து, சரபாலன், 'கவலைப் படாதீர்கள்! வருடந்தோறும் நீங்கள் சித்திரைப் பௌர்ணமியன்று தேர் அலங்காரத்தில் நின்று கூத்தாசூரனோடு போர்புரிந்த என் உருவத்தைக் காணலாம். நீங்கள் மறுபடியும் என்னைப் பார்க்க விரும்பினால் என் சிரசை மட்டும்தான் பார்க்க முடியும்' என்று கூறி மறைந்தான். பிறகு சந்திரகிரி அரசனும் மனைவியும் கலங்கிய கண்களுடன் அரண்மனைக்குத் திரும்பினர்.

கூத்தாண்டவருக்குச் சரபாலன் என்றொரு பெயரும் உண்டு. கூத்தாண்டவர் கோவிலோடு தொடர்புப்படுத்திக் கதை சொல்லப்படுகிறது. சந்திரகிரி என்ற மன்னன் மனைவி கிருபஞ்சியுடன் இப்பூவுலகை ஆண்டுவரும் வேளையில் கூத்தாசூரன் என்னும் அரக்கன் அவர்களை விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான். கிருபஞ்சியும் அரசனும் சிவனை நினைத்துத் தவம் செய்யலாயினர். அவர்கள் தண்ணீர் எடுக்கச் சென்றபோது களப்பலியில் இறந்து போன அரவானின் சிரசு குழந்தை உருக்கொண்டு ஆற்றில் மிதந்து வந்தது. அக்குழந்தையை எடுத்து வளர்த்தனர். அக்குழந்தை வளர்ந்து பெரியவனானதும் கூத்தாசூரனைப் போரில் கொன்று வெற்றியடைகிறது. இவ்வாறு கூத்தாசூரனை வென்ற காரணத்தால் அரவான் 'கூத்தாசூரன்' என அழைக்கப்பட்டான்.

கூத்தாண்டவர் பற்றிய புராணக் கதைகள்

1. மகாபாரதம் கூறும் அரவான் கதை 
2. வில்லிபாரதம் கூறும் அரவான் கதை 
3. மணியாட்டி மகாபாரதம் கூறும் அரவான் கதை 
4. வில்லுப்பாட்டு கூறும் அரவான் கதை 
5. இசை நாடகம் கூறும் அரவான் கதை

எனக் கூத்தாண்டவர் பற்றிய புராணக் கதைகள் பல வடிவங்களில் எழுதப்பட்டுள்ளன.

மகாபாரதக் கதையின்படிக் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது. மேலும் அம்மன் கோயிலில் அரவான் களப்பலி நிகழ்த்தப்படுகிறது. திருவிழா காலங்களில் கதையோடு தொடர்புடைய நிகழ்வுகளை நிகழ்த்துகின்றனர். கூத்தாண்டவர் திருவிழா குறிப்பிட்ட சில இடங்களிலே நடைபெறுகிறது. புதுவையைச் சேர்ந்த பிள்ளையார்குப்பம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம் கூவாகம், கிளியனூர், வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள மோத்தூர், தேவனாம்பட்டினம், கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் போன்ற இடங்களிலும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெற்று வருகின்றது. இது ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியில் மிகச் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.

பாண்டவருக்கும் கௌரவருக்கும் 18 நாட்கள் நடந்த போரினை நினைவுகூரும் வகையில் கூத்தாண்டவர் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. கோயில் மூலவராகக் கூத்தாண்டவர் கருப்புநிறச் சிலைவடிவில் காட்சியளிக்கிறார். அதற்குமுன் முன்னடியானும், பலிபீடமும் அமைந்துள்ளன. தென்கோபுரத்தில் அர்ச்சுனன், அரவான், நாககன்னி சிலைகள் உள்ளன. வடக்குக் கோபுரத்தில் தருமர், திரௌபதி, அர்ச்சுனன் சிலைகள் உள்ளன. கிழக்குமுகம் பார்த்து அமைக்கப்பட்ட முன்கோபுரத்தில் கிருஷ்ணன், அர்ச்சுனன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு மூலையில் இருந்து வடமேற்கு வரையில் திரௌபதி, தருமர், அர்ச்சுனன், வீமன், நகுலன், சகாதேவன், அரவான், கிருஷ்ணன், நாககன்னி, கிருஷ்ணன் குழந்தை ரூபம், தேவகி முதலிய சிலைகள் உள்ளன. திருவிழா நாட்கள் தவிர இக்கோயிலில் விசேஷ பூசை செய்யப்படுவதில்லை. ஆனால் நாள்தோறும் தீபம் ஏற்றப்படும்.

சித்திரை அமாவாசையன்று கோமுட்டிச் செட்டியார் (ஆரிய வைசியர்) இனத்தவர் கொடி ஒன்றை யாருக்கும் தெரியாமல் கட்டுவர். இக்கொடி திருட்டுத்தனமாகக் கட்டப்படுவதால் திருட்டுக் கொடி என வழங்குகின்றனர். பிரிட்டிஷ் காலத்தில் பயத்தின் காரணமாக யாருக்கும் தெரியாமல் விடியற்காலையில் யாரேனும் ஒருவர் திருவிழா நடைபெறுவதற்காகக் கொடி கட்டுவாராம். கொடி கட்டிவிட்டால் கட்டாயம் திருவிழா நடத்தப்படவேண்டும் என்ற மரபின் எச்சம் காரணமாகவே திருட்டுக் கொடி கட்டும்முறை வழக்கிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 

காப்புக் கொடி கட்டுதல் : 1930-இல் இருந்துதான் அனைவருக்கும் தெரியும்படி கோவிலில் கொடிகட்டுவது வழக்கத்துக்கு வந்தது என்கின்றனர் ஊர்க்காரர்கள். பனவரைந்தான் கோயில் பின்புறம் ஒரு பனை மரத்தில்தான் முதலில் செட்டியார் ஊராருக்குத் தெரியாமல் கொடி கட்டுவார். செட்டியார் இனத்தவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அமாவாசையன்று கொடி கட்டுவதோடு அவர்களின் பணி முடிந்துவிடும். ஊரார் கொடி கட்டியபின் முதலில் கட்டிய கொடி நீக்கப்படும். அமாவாசையை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையே ஊரார் காப்புக் கொடி கட்டுவர்.

மஞ்சள் கிழங்கை நூலில் சேர்த்து வலதுகையில் கட்டிக் கொள்வது காப்புக் கட்டிக் கொள்ளல் என்ற பெயரில் அமாவாசையன்று நிகழும். பின்பு கலசம் சோடிக்கும் நிகழ்விலும் காப்புக் கட்டாதவர்கள் கட்டிக்கொள்வர். யார் வேண்டுமானாலும் காப்புக் கட்டிக் கொள்ளலாம். இதில் கரகம் எடுப்போர், பலி கொடுப்போர் 7 பேர் உரிமையுடன் காப்புக் கட்டிக் கொள்கின்றனர். கொடி கட்டும் அன்று 8.00 மணிக்குக் கோயிலில் இருந்து கிளம்பி மேளதாளத்துடன் பூசைச் சாமான்களுடன் ஆற்றுக்குச் சென்று அங்கு கரகம் செய்து வைத்துவிட்டுக் காப்புக் கட்டியவர் பிரார்த்தனைக்காரர்களுக்குப் காப்பைக் கட்டிவிடுகின்றார். பின் 7 பேரும் கரகத்தை எடுத்துக்கொண்டு கோயிலைச் சுற்றிவந்து பின் வீதியுலா சென்று மீண்டும் கோயிலுக்குச் செல்கின்றனர்.

சுவாமி சிலைக்கு அருகில் கரகம் வைத்து முளைப்பாலிகை இடுகின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பு கம்பு, கேழ்வரகு, நெல் போன்ற நவதானியங்களை சாமிக்குச் செய்த அபிஷேக நீர் கொண்டு முளைக்க வைப்பதை 'முளைப்பாலிகையிடல்' என்று வழங்குகின்றனர். கொடி கட்டிய பின்பு மறுவாரம் செவ்வாய் திருவிழா நடைபெறும்.

ஒரு நாள் கோமுட்டிச் செட்டியார் சங்கராபரணி ஆற்றுக்குள் தவறி விழுந்தாராம். என்ன என்று பார்க்கும்பொழுது 'நான்தான் கூத்தாண்டவர்’. எனக்குக் கோயில் கட்டி விசேஷித்து வாருங்கள்' எனச் சொல்ல அதனைச் செட்டியார் கொண்டுவந்து பின் கிராமத்தார் கோயிலாக ஏற்படுத்தினர் என்பது வாய்மொழிச் செய்தி. இந்நிகழ்வு 11 தலைமுறைக்கு முன் நடந்ததாகவும் 215 ஆண்டுகள் ஆகின்றன எனவும் கூறுகின்றனர். இதனால்தான் செட்டியார் கொடி கட்டிய பின்பே ஊரார் கொடி கட்டுவர். இதற்கடுத்து மறு செவ்வாய், புதன் கிழமைகளில் திருவிழா நடைபெறுகிறது.

சாலங்கரகம் எடுத்தல் : கூத்தாண்டவர் கோயிலிருந்து கோயில் மேளம், பறைமேளம் அடிக்க பூசாரி கற்பூரம் ஏற்றுகிறார். கரகக்காரர் தாம்பாளத்தட்டில் தேங்காய், அரிசி எடுத்துக்கொண்டு சாலங்கரகம் எடுத்துவர, அழைப்புக்காகக் கூத்தாண்டவர் கோயில் முன் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் செல்கிறார். அங்குச் சாலங்கரகம் முன் வாழை இலையில் அரிசியை நிரப்பித் தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றி, 'கோவிந்தா.. கோவிந்தா' எனப் பலமுறை கூவிவிட்டுச் சாலங்கரகம் எடுத்துத் தலையில் வைத்துக் கொள்கின்றனர். வழி நெடுகிலும் 'கோவிந்தா கோவிந்தா ...' எனக் கூவிக்கொண்டு கூத்தாண்டவர் கோயிலுக்குத் தெற்கில் 3 அடி உயரம் உள்ள கங்கம்மா கோயிலின் முன் சென்று தீபாராதனை காட்டுகின்றனர். பின்பு மீண்டும் வெளியே வந்து ‘கோவிந்தா ...கோவிந்தா' எனக் கூவிக்கொண்டு சாலங்கரகத்திற்குத் தீபாராதனை காட்டி ஒவ்வொரு பானை மூடியையும் திறந்து விபூதி போட்டு மூடிவிட்ட பின் (2 மூடி போட்ட அலங்காரம் செய்த பானைகள், 2 மூடி இல்லாமல் அலங்காரமின்றி இருக்கும் பானைகள்) கோயிலுக்குள் கொண்டுசெல்லப்படுகிறது. கோயிலிருந்து சாலங்கரகம் சூலம், வேப்பிலை, மாவிலை, தருப்பைப்புல், அபிஷேகக்கூடை, கத்தி, பலகையின் மேல் அமைந்த காத்தவராயனின் மரபொம்மை ஆகியவற்றுடன் மேளம் (கோயில் பறை இசையுடன்) அடித்துக் கொண்டே கங்கம்மா கோயிலுக்கு வருகின்றனர். அங்கே தீபாராதனை செய்துவிட்டு 'கோவிந்தா... கோவிந்தா' எனக் கூவிக் கொண்டே ஆற்றுக்குச் செல்கின்றனர்.

கலசம் சோடித்தல் : ஆற்று மணலில் நீர் தெளித்துக் கிழக்குமுகம் பார்த்துக் காத்தவராயனை அமர வைத்து எலுமிச்சை பழம் செருகப்பட்ட 2 சூலங்களைப் பக்கத்துக்கு ஒன்றாய் நட்டு வைக்கின்றனர். இதேபோல் 2 கத்திகளை வைக்கின்றனர். நடுவில் புதுப்பானையால் சோடிக்கப்பட்ட கலசம், அதற்குப் பக்கத்தில் சூலம், கத்தி, கலசம், கொந்தன், காத்தவராயன், கத்தி, சூலம், பெரிய சூலம் என்ற வரிசைப்படியிலும் கீழே உடைத்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, அரிசி நிரப்பப்பட்ட வாழையிலை ஆகியனவும் வைக்கப்பட்டுள்ளன. இப்படியாக, புதுப்பானை, 2 சூலம், 2 கத்தி அனைத்தையும் நீரிட்டுச் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமமிட்டுக் கலசம் தயாரிக்கின்றனர்.

திருமஞ்சணம் திரட்டுதல் : இதனை 'ஜலம் திரட்டுதல்' எனக் கூறலாம். அதாவது ஆற்றுக்குச் சென்று 2 புது மண்பானைகளில் நீர் கொண்டுவருதலையே 'திருமஞ்சனம் திரட்டுதல்' எனக் கூறுவர். நீர் எடுத்துவந்து கலசத்துக்குப் பின்னால் வைத்து வேப்பிலை, மாவிலை வைத்துத் தீபாராதனை காட்டி இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்வர். இந்நிகழ்ச்சி முழுவதும் 'கோவிந்தா கோவிந்தா' என்று கூவி, கோயில் செல்லும் வரை கற்பூரத்தை எரிய விடுகின்றனர்.

கோயிலுக்குள் கலசம் கொண்டுவருதல் : பின்னர் ஆற்றிலிருந்து கிளம்பிப் பனைவரத்தான் கோயிலுக்குப் பின்புறம் வந்து அங்கு எல்லையில் (சாமி எல்லை) கற்பூரம் ஏற்றிவிட்டுப் பின்னர் பனவரத்தான் கோயில் முன்புறம் உள்ள ஐயனாரப்பனுக்கு தீபாராதனை காட்டிவிட்டு அங்கிருந்து கங்கம்மா கோயில் வந்து மீண்டும் தீபாராதனை செய்து கூத்தாண்டவர் கோயிலை ஒரு சுற்றுச் சுற்றி கோயில்முன் வந்து நிற்கின்றனர். பூசாரி மட்டும் உள்ளே சென்று கூத்தாண்டவருக்கு தீபாராதனை காட்டியபின் கலசம் முதல் அனைத்தையும் உள்ளே எடுத்துச் செல்லுகின்றனர். பின் கலசத்தை மட்டும் சாலங்கரகம் முன் வைக்கின்றனர். மற்றதை உள் மண்டபத்தில் வைக்கின்றனர்.

கண்ணனைப் பெண்ணுருவாகச் சோடித்தல் : பனவரத்தான் கோவிலில் உள்ள கண்ணனுக்குப் பெண் வேடமிடுகின்றனர். மரத்தால் ஆன இருக்கையில் கூரப்புடவை கொசுவம் வைத்து அதன் மீது இடக்காலை மடக்கி வலக்காலை தொங்கவிட்டுக் கண்ணன் அமர்ந்து இருக்கிறார். இடக்கை மடிமீது வைத்து வலக்கை ஆசீர் வதிப்பது போல் காட்சி தருகிறார். நெற்றியில் குங்குமம் வைத்து உதட்டில் சாயம் பூசப்பட்டுப் பெண்முகம் உடையவர் போல் கண்ணன் அலங்கரிக்கப்படுகிறார். கழுத்தில் பலவித அணிகலன்களை அணிந்திருக்கிறார். தலையில் நீலநிறத்தில் கிரீடம் சூடப்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணரின் பல முகங்களில் ஒன்றுதான் மோகினி வடிவம். இந்த மோகினி வடிவத்தைக் கிருஷ்ணர் மூன்று முறை எடுத்துள்ளார். 'திருமாலின் கட்டளையால் தேவர்கள், அரசுரர்களின் உதவியுடன் பாற்கடலைக் கடைந்தபோது, மோகினியாகி அசுரரர்களை மயக்கி, அவர்களுக்கு அமுதம் கொடுக்காமல் தேவர்களுக்கு அதைக் எடுத்துக்கொண்டு வந்தான். இன்று மணம், நாளை மரணம் என்ற நிலையில் அரவானுக்கு எவரும் பெண் கொடுக்க தயங்கியபோது கிருஷ்ணர் அழகிய பெண்ணாக (மோகினியாக) வடிவம் கொண்டு அரவானைத் திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். பத்மாசூரனைக் கொல்வதற்காக மோகினி அவதாரம் எடுத்துள்ளார்.

அரவானின் அலங்காரம் : அரவான் சிலை கலசநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மஞ்சளாடை அணிவிக்கப்படுகிறது. ஐயனார் கோயிலில் உள்ள மரத்தாலான அரவான் தலை அலங்கரிக்கப்படுகிறது. அரவான் மாப்பிள்ளையாதலால் கோடித் துணியால் அலங்கரிக்கப்படுகிறார். மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.

திறத்தல் : மோகினியாக வேடம் பூண்ட கிருஷ்ணனையும் அரவானையும் தீபாராதனை காட்டிக் கூத்தாண்டவர் கோயிலுக்கு எடுத்துவருகின்றனர். இரண்டு சாமிகளையும் மூடியே எடுத்து வந்து மாரியம்மன் கோயில் முன்பு கிழக்குமுகமாகக் கீழே இறக்கி வைக்கின்றனர். அரவானுக்கு மட்டும் வாழை இலையில் பச்சரிசி, முழுதாய் குங்குமமிட்ட 2 எலுமிச்சம் பழங்கள் ஆகியவற்றுடன் ஊதுபத்தி கொளுத்தித் தேங்காய் உடைக்கின்றனர். பின்பு உடைத்த தேங்காய்முனையில் கற்பூரம் எரியும் கரியைப் படியச் செய்து கற்பூரத்தைக் கையில் எடுத்துச் சாமிக்குமுன் வைக்கின்றனர். திறந்தநிலை பெறுவதாக நினைக்கின்றனர். இந்நிகழ்ச்சி 'கண் இவ்வாறு செய்வதால் அரவான் தலைப்பகுதியில் உள்ள கண்கள் திறத்தல்' எனப்படும்.

வெடி வெடித்தல் : ஆற்றங்கரை, மற்ற இடங்களில் முக்கியச்சடங்கு நிகழும்பொழுது 2 வெடிகள் வெடிக்கும். 'இரட்டை வெடி' நல்ல நிகழ்வுகளுக்கு வெடிக்கும். இதனைக் 'கோவில் வெடி' என்கின்றனர். 'ஒற்றை வெடி' வெடிப்பதைச் 'சாவு வெடி' என்கின்றனர். கண் திறத்தல் நிகழும்பொழுது இரட்டை வெடி வெடிக்கின்றனர். சாமிகள் கங்கையம்மன் கோயிலுக்குகொண்டு செல்லப்பட்டு தீபாராதனை காட்டப்படுகின்றன. கூத்தாண்டவர் கோயிலை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு அதற்குமுன் வடக்கு நோக்கி நிறுத்தப்படுகின்றன. இதுவரை சாமிகள் துணியால் மூடப்பட்டே இருக்கும். பின்னர் கோயில் உள்ளிருந்து தீபாராதனை வந்தபிறகு சாமிகள் உள்ளே கொண்டு செல்லப்படும். ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரும்பொழுது கூத்தாண்டவர் கோயில் முன் ஓரிடமாக அமர்ந்து கோயில் மேளம் அடித்துக் கொண்டிருப்பர். பறை மேளம் மட்டும் அதற்குப் பின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உடன் செல்லும்.

வரிசை கொண்டுவருதல் : இரண்டு விளக்குடன் காக்காயன் தோப்பு முருகசாமி வீட்டிலிருந்துதான் பரம்பரை பரம்பரையாக வரிசை வரும். இந்த வரிசை வந்தபிறகுதான் சாமிக்குத் திருமணம் நடக்கும். பூ, வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, சாத்துக்குடி, தேங்காய், கிருணிப்பழம், அன்னாசி, ஆரஞ்சு முதலியன வரிசையாகக் கொண்டுவரப்படுகின்றன.

திருமணம் : பெண் வேடமிட்ட கிருஷ்ணன், கழுத்து மட்டும் உள்ள அரவான் ஆகிய இருவரும் கிழக்குமுகம் பார்த்து உள்ளனர். அங்கே காமாட்சி அம்மன் விளக்கு, உரல், உரல்மேல் சாலங்கரகம் நீர் உள்ள புதுப்பானையில் ஒரு சிறிய மண்தட்டு விளக்கு, 2 அலங்கரிக்கப்பட்ட மூடியுள்ள பானைகள், 2 அலங்கரிக்கப்படாத மூடியில்லாத பானைகள் ஆகியனவும், கால் நடப்பட்டும் உள்ளன. திருமணம் நடக்கும் இடம் பூப்பந்தலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் இடம் பெறும் அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன.

அரவானின் உருவத் தோற்றம் : கழுத்துவரை வெட்டப்பட்ட அரவான் முகம், சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது. கழுத்துப்பகுதியில் வெள்ளைத் துணி அணிவிக்கப்பட்டுள்ளது. அகன்ற பெரிய முகம். அதில் நீண்டு வளர்ந்து வளைந்த அடர்த்தி யான மீசை, வலப்பக்க மூக்கில் ஒரு மெல்லிய வளையம் மூக்குத்தி போன்று காணப்படுகிறது. உதடுகளின் பக்கவாட்டில் இரண்டு வீரப்பற்கள் இருக்கின்றன. வாயின் நடுவில் சாதாரண நிலையில் சின்னப் பற்கள் வரிசையாக அமைந்திருக்கின்றன. இரண்டு பெரிய முட்டைகளைப் பதித்திருப்பது போன்ற வெள்ளை விழிகளும் கறுப்பு மணியும் பயமுறுத்தும் பெரிய கண்களாக உள்ளன. வானவில் போன்ற வளைந்த கறுத்த புருவங்கள். நெற்றியில் மூன்று கோடுகளால் நாமம் இடப்பட்டுள்ளது. தலையில் நாகத்தின் உருவம் சிறிய அளவில் பதித்த கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. இது நீலம், மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. கழுத்தில் மாலைகள் சூட்டப்பட்டுள்ளன.

தாலி கட்டல் : ஐயர் ஒருவர் முறைப்படி இந்தத் திருமணச் சடங்குகளைச் செய்கிறார். மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் சேர்த்து அரவான் சார்பில் கிருஷ்ணன் கழுத்தில் ஐயர் இரவு 8-9 மணியளவில் கட்டுகிறார். அலங்கரிக்கப்பட்ட இரண்டு சாலங்கரகப் பானையில் இருவர் தண்ணீர் ஊற்றுகின்றனர். பின்னர் செட்டியார் குடும்பத்தில் இருந்து சாமிக்கு மாலைகள் போடுகின்றனர். அடுத்து வரிசை கொடுப்பவர் மாலை போடுகின்றார். இதனையடுத்துச் செட்டியார் குடும்ப ஆண் பிரதிநிதி ஒருவருக்கு ஐயர் தாலி கட்டுகிறார். இதே போன்று வரிசை அனுப்பிய வீட்டினர் இரண்டு பேருக்கு ஐயர் தாலி கட்டுகிறார். அடுத்து கிருஷ்ணனைத் தூக்குபவர்களுக்குத் தாலி கட்டப்படுகிறது. பின்னர் வரிசை கொடுத்தவர் அவற்றைத் திரும்ப எடுத்துச் சென்றுவிடுகிறார். அடுத்து வரிசையாக அனைவரும் தாலி கட்டிக்கொள்வர்.


அரவாணிகள் அல்லாத ஆண்கள் அனைவரும் கையில் வளையல் அணிந்து பூசாரி கையால் தாலிகட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு தாலிகட்டிக் கொள்வதால் தங்கள் மனதில் நினைப்பது நிச்சயம் நிறைவேறும் என நம்புகின்றனர். குழந்தைப் பேறு, அரசு உத்தியோகம், திருமணம், காதல் நிறைவேற்றம், நோய் நீக்கம் ஆகிய அனைத்து எண்ணங்களும் நிறைவேறுவதாகக் கூறுகின்றனர். கழுத்தில் பூ மாலைகள் சூடி இருக்கின்றனர். சிறியவர் முதல் வயதானவர் வரை ஆண்கள் தாலி கட்டிக்கொண்டாலும் பெண்கள் கட்டிக் கொள்வதில்லை. காரணம் மங்கலக் குறியாகப் பெண்கள் மாங்கல்யம் சூடி இருப்பது மரபு. கூத்தாண்டவர் இறந்த உடனே தாலியறுப்பது அமங்கலமான ஒன்று என்பதால் ஆண்கள் மட்டும் கட்டிக்கொள்கின்றனர். ஏறக்குறைய 2000 முதல் 3000 பேர் வரை உள்ளூர், வெளியூர் ஆண்கள், அரவாணிகள் ஆகியோர் தாலிகட்டிக்கொள்கின்றனர்.

அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளுதல் :

மும்பை,கல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை போன்ற பெருநகரங் களிலிருந்து திருவிழாவிற்கு வந்திருந்த அரவாணிகள் அன்றைய தினத்தைத் திருமண நாளாகக் கருதுகின்றனர். பெண்போல அலங்காரம் செய்துகொண்ட அரவாணிகள் தங்களை கிருஷ்ண பூசாரி கையால் கூத்தாண்டவர் முன்பு தாலி கட்டிக் கொள்கின்றனர். கண்ணனின் அம்சமாக, மறு அவதாரமாக நினைத்துக் கணவராக ஏற்றுப் தாலி கட்டும்பொழுது பூசாரி மந்திரம் சொல்கிறார்.

கூத்தாண்டவரைத் தனது கணவனாக எண்ணித் தாலிகட்டிக் கொள்ளும் அரவாணிகள் அன்று இரவு 'முதல் ராத்திரி' என்ற பெயரில் பிற ஆடவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாகக் கூறுகின்றனர். இதனை ஒரு சடங்காகச் செய்வதாகவும் கூறுகின்றனர். எங்ஙனம் தாலி கட்டி அறுப்பது ஒரு சடங்கோ அவ்வாறே பாலியல் உறவு கொள்வதும் சடங்கு என்கின்றனர். தாலி கட்டி முடிந்த பின் திருமண விருந்தாக அனைவருக்கும் உணவு அளிக்கப் படுவது 'பள்ளயத்துச் சோறு' என்று அழைக்கப்படுகிறது.

இச்செலவினை ஊர்க்காரர்கள் (தனிநபர் அல்லது குழுவாக) சேர்ந்து செய்கின்றனர். சைவ உணவு வகையே வழங்கப்படுகிறது. வெளியூர், உள்ளூர்ப் பொதுமக்கள், அரவாணிகள், பூசாரிகள் ஆகிய அனைவரும் உணவு உண்கின்றனர்.

மணமக்கள் திருவீதி உலா : காத்தவராயன் சிலை முன்பு செல்ல, அதைத் தொடர்ந்து மணமக்களான மோகினி வடிவக் கிருஷ்ணனையும், கூத்தாண்டவரையும் ஊர் மக்கள் கண்டுகளிக்கவும், அருள் பாலிக்கவும் வீதி வீதியாக ஊர் முழுவதும் உலா வருகின்றனர். அப்போது அவரவர் வீட்டின் முன்பும் சுண்டல் படைக்கப்பட்டுத் தீபாராதனை காட்டித் தேங்காய் உடைக்கப் படுகிறது. பின்பு அனைவருக்கும் சுண்டல் பிரசாதமாகக் கொடுக்கப் படுகிறது. மக்கள் அனைவரும் பயபக்தியுடன் தெய்வங்களை வணங்கி விபூதி, குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். இறுதியாக அம்மன் கோயிலை அடைவர். மறுநாள் புதன் அன்று காலை கூத்தாண்டவரின் தலை மட்டும் பூசை செய்யப்படுகிறது. பின்பு கோயில் முன்பு ஆடு ஒன்று பலியிடப்படுகிறது. இவையெல்லாம் தேர் இழுப்பதற்கு முன்பு பூசாரியால் செய்யப்படுபவை.

கூத்தாண்டவரின் தேர் இழுத்தல் : மரத்தேரில் பிற்பகல் 1 மணியிலிருந்து கூத்தாண்டவர் ஜோடிப்பு தொடங்குகிறது. நீண்ட பெரிய உருவ அமைப்புடன் கூத்தாண்டவர் நிற்கிறார். பெரிய கைகளை விரித்தபடி இருக்கிறார். இடக்கையில் கூத்தாண்டவர் உருவத்தைக் காட்டிலும் பெரிய வில் ஒன்று உள்ளது. நீண்ட கழியில் மஞ்சள்துணியைக் கட்டி வில்போன்று அமைத்துள்ளனர். வலக்கையில் நீண்ட கூர்மையான இரும்புக் கத்தி ஒன்றை ஏந்தி உள்ளார். இக்கத்தி முனையில் எலுமிச்சைப்பழம் ஒன்று செருகப் பட்டுள்ளது. தலை, கைவிரல்கள், கால்விரல்கள் மட்டும் சிலையாக இருக்க, மற்ற உடல் பகுதிகளை வைக்கோல்பிரி கொண்டு அமைத்துள்ளனர். கூத்தாண்டவர் தோற்றத்தை மிகப் பெரிதாக்கிக் காட்ட வைக்கோலால் உடல் கூறுகளைத் தயாரிக்கின்றனர். இப்பெரிய உடலை வெள்ளை ஆடை கொண்டு மூடி இருக்கின்றனர். இரண்டு கால்களின் பக்கத்திலும் பெண் சிலைகள் பக்கத்துக்கு ஒன்றாய் உள்ளன. இவர்கள் 'வெண் சாமரப் பெண்கள்' எனப்படுவர். மேலே பூச்சக்கரம் சூழ்ந்துள்ளது. இரண்டு பக்கம் சூரிக் குடை பக்கத்துக்கு ஒன்றாய் உள்ளது. கூத்தாண்டவர் கழுத்தில் ஏகப்பட்ட பூ மாலைகளைச் சூடி உள்ளார் . மரத்தால் ஆன இரண்டு சக்கரத் தேரினை ஊர் மக்கள் இழுக்கின்றனர். அப்பொழுது அரவாணிகள் கூட்டம் கூட்டமாய்க் கும்மியடித்துப் பாடுகின்றனர். சுடுகாடு நோக்கிக் கூத்தாண்டவர் தேர் செல்கிறது.


ஒப்பாரி பாடுதல் : தாலி கட்டிய மறுநாளே கூத்தாண்டவர் இறக்கிறார். இதனால் அரவாணிகள் அனைவரும் மார் அடித்து அழுகின்றனர். ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கூட்டமாக அமர்ந்து ஒப்பாரி பாடுகின்றனர். அரவாணிகள் அல்லாதோர் (தாலி கட்டிய ஆண்கள்) அழுவதுமில்லை. ஒப்பாரி பாடுவதுமில்லை. ஆனால் அரவாணிகள், 'என் ராசா! என்ன அம்போன்னு விட்டுட்டு போயிட்டியே! தலையில வச்ச பூ வாடலியே! நான் எந்த சுகத்தையும் காணலியே!' போன்ற வார்த்தைகளைக் கூறி அழுவர். வாயிலும் வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொண்டு இழவு வீட்டில் அழுவதைப் போல் அழுவர். பொதுமக்கள் அனைவரும் இதை ரசிப்பர். மாலையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. வட்ட வடிவில் சுற்றிக் கும்மி அடித்து பாடுகின்றனர். மலர் காணிக்கை, வேட்டி போர்த்துதல், ஆட்டுக்கிடா, சேவல் விடுதல், தாலிகட்டி அறுத்தல், கற்பூரம் செலுத்துதல் ஆகியன கூத்தாண்டவர் கோயிலில் சாத்தப்படும் காணிக்கைகளாக உள்ளன.

அரவான் உடல் தீயிடல் : கோழி, ஆடு பலியிட்ட இரத்தத்தில் சோறு கலந்து பூசாரி நான்கு திசைகளிலும் இறைக்கிறார். இதனை உண்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என நம்பிச் சிலர் வாங்கிச் செல்கின்றனர். இதனைக் 'காளிச் சோறு' என்கின்றனர். 'இதனை நிணச்சோறு' வீசி நின்ற சங்க காலத்துடன் கருதிப் பார்க்கலாம். அரவான் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்பு அரவானின் தலை வெட்டப்பட்டதை வெளிப்படுத்த ஒரு பெரிய மஞ்சள் துணியால் தலையை மூடி நீக்கி விடுகின்றனர். கை கால் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றையும் நீக்கி எடுத்து வைக்கின்றனர். பின்பு வைக்கோல் பிரியால் ஆன உடலைக் கலைத்துப்போட்டுத் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். கொளுத்தப்பட்டுச் சாம்பலானதை அனைவரும் நெற்றியில் பூசிக்கொள்கின்றனர். மேலும் அதனை அள்ளி எடுத்துச்சென்று நடுவீட்டிலும் வைப்பர். இச்சாம்பலைச் செடிகளில் போட்டால் பூப்பூக்கும், காய் காய்க்கும் என நம்பிப் போட்டிபோட்டு அள்ளிச் உடல் எரிந்தபின் அரவான் தலையை ஆற்றில் குளிப்பாட்டி செல்கின்றனர். இந்நிகழ்வைச் செய்வதற்கு இரவு 7.00 மணி ஆகிறது. மீண்டும் கோயிலுக்கு எடுத்துவந்து மல்லாத்தி கிடத்துவர். இந்நிகழ்வு அரவான் களப்பலியானதை வெளிப்படுத்தும். கிருஷ்ணன் சிலை மீண்டும் கோயிலுக்குள் வைக்கப்படுகிறது.


தாலியறுப்பு : அரவான் களப்பலியானதால் தாலி கட்டிய அரவாணிகள் அனைவரும் அழுது புலம்புகிறார்கள். தங்கள் நெற்றிப்பொட்டைக் கலைத்துக் கொள்கின்றனர். சூடிய பூக்களைப் பிய்த்தெறிகின்றனர். கண்ணாடி வளையல்களைக் கழற்றியும், உடைத்தும் எறிகின்றனர். முதல்நாள் இரவு கட்டிய தாலியை அறுத்து முன்பெல்லாம் ஏதாவது ஒரு மரத்தடியில் கட்டுவர். தற்போது கூத்தாண்டவர் ஊர்வலம் வந்த மரத்தேரிலேயே கட்டி விடுகின்றனர். பின்பு அரவாணிகள் குளித்து வண்ண ஆடைகளை நீக்கி வெள்ளாடையை உடுத்திக் கொள்வர். இது கணவனை இழந்த பெண்ணின் விதவை நிலையைச் சுட்டிக் காட்டுகின்றது. அரவாணி அல்லாத ஆண்களும் தங்கள் கழுத்தில் உள்ள பூமாலை, தாலி, வளையல் ஆகியவற்றை நீக்கிக் கொள்கின்றனர். அன்று இரவோடு திருவிழா முடிவடைகிறது. இதனால் மறுநாள் காலையில் வெளியூர் அரவாணிகள் ஊர் செல்கின்றனர். பெரிய வாழையிலையில் இறைச்சி, கருவாடு, ஆகியவற்றைச் சமைத்துச் சோற்றுடன் கலந்து படைக்கப்படுவதைப் 'படுகளம் இளப்பல்' என்ற பெயரில் அழைக்கின்றனர். இது 16 ஆம் நாள் கருமாதிச் சடங்கு ஆகும். இது கூத்தாண்டவர் ஆத்மா சாந்தி பெறுவதற்காகச் செய்யப்படுகிறது. பின்பு அரவான் தலை பழைய இடத்தில் வைக்கப்படுகிறது. இத்துடன் கூத்தாண்டவர் திருவிழா முடிவடைகின்றது. 

கரசூர் பத்மபாரதி

நன்றி - தமிழினி பதிப்பகம்

கரசூர் பத்மபாரதி தமிழின் முக்கியமான மானுடவியல் ஆய்வாளர். வெளிஉலகுடன் அதிகம் கலக்காத மூடுண்ட சமூகங்களான திருநங்கைகள் குறித்தும், நரிக்குறவர்கள் குறித்தும் ஆய்வுநூல்கள் வெளியிட்டிருக்கிறார். அவர் எழுதி 2004ம் ஆண்டு வெளிவந்த நரிக்குறவர் இனவரைவியல் நூலில் இடம்பெற்ற கட்டுரை இது. இவரது ஆய்வுப்பணிக்காக 2022ம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்பட்டது. 

கரசூர் பத்மபாரதி நேர்காணல் - எனக்கு டேபிள் வொர்க் செய்வதை விட கள ஆய்வு செய்வது சுலபம் ~ குருகு இதழ் - 1

வாக்ரிவாளோ- கரசூர் பத்மபாரதி

கரசூர் பத்மபாரதி - தமிழ்.Wiki

கூத்தாண்டவர் திருவிழா - தமிழ்.Wiki

''திரிபு முதல் திரு வரை”: திருனர் வாழ்வும் சமூகமும் – கடலூர் சீனு