Wednesday 31 January 2024

மகாயானத்தின் துவக்கம் - ஆனந்த குமாரசுவாமி


முதல் பௌத்த மகாசபை கூட்டங்களில் ஒன்று அசோகரின் காலத்தில் (பொ.மு.240) தனித்தனி பௌத்த குழுக்களுக்கிடையே நிகழ்ந்த விவாதங்களையும் முரண்களையும் தீர்க்கும் நோக்குடன் நடைபெற்றது. இந்தக் காலத்திலேயே பௌத்தத்திற்குள் பிளவுகள் ஏற்படத் துவங்கியிருப்பதை அசோகரின் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். ஆனால் அதற்கும் முன்பு புத்தரின் வாழ்நாளிலேயே பிளவுகள் ஒலித்துள்ளன. பிறகு காலம் செல்லச்செல்ல மேலும் பல குழுக்கள் தோன்றியுள்ளன. கிருஸ்துவத்திலும் மற்ற பெரு மதங்களிலும் நிகழ்ந்தது போல அக்குழுக்கள் ஒவ்வொன்றும் தாங்களே புத்தரின் உண்மையான கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எனப் பிரகடனப்படுத்திக்கொண்டன. அவை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிந்தன: ஹீனயானம், மகாயானம். ஹீனயானத்தின் நூல்கள் பாலி மொழியில் உள்ளன. இந்நூல்களே கெளதமரின் உண்மையான போதனைகள் என்றனர். ஹீனயானம் பகுத்தறிவு, துறவு, தூய்மைவாதம் ஆகிய பண்புகளைக் கொண்டது. மகாயான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. மறைஞானம், இறையியல், பக்தி ஆகியவற்றுடன் கெளதமரின் கொள்கையை வேறுவிதத்தில் விரிவாக்கம் செய்தது. ஹீனயானம் தெற்கில் அதிகம் பரவியது, குறிப்பாக சிலோன், பர்மா. மகாயானம் வடக்கில் - நேபாளம், சீனா. ஆனால் இதைக் கொண்டு அவை இரண்டையும் வடக்கு தெற்கு என பிரிப்பதும் பேசுவதும் பிழையானது. 

ஹீனயானத்தில் கெளதமர் மற்ற மனிதர்களைப் போல அவரும் ஒரு மனிதரே. இவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுவது வாழ்க்கை மற்றும் துக்கத்தின் சாரத்தை உள்ளுணர்வால் அறிய முடிந்ததும், எல்லாவற்றின் நிஜதன்மையையும் காணும் பார்வையைக் கொண்டிருப்பதுமே. இதன் வழியாக அவர் நிபாணத்தை (நிர்வாணத்தின் பாலி உச்சரிப்பு) அடைந்தார். தனக்கு மறுபிறவி இல்லாமலாக்கினார். மற்ற மனிதர்கள் அரஹத (arahatta) நிலையையும் நிபாண நிலையையும் அடைய புத்தர் அல்லது அவரின் மாணவர்கள் வழி செய்வார்கள். ஆனால் அவர்களை புத்தர் என அழைக்கமுடியாது. எல்லா உயிர்களும் இறுதியில் புத்தநிலையை அடையும் என்றும் சொல்லவில்லை. உடல் இறந்த பிறகும் புத்தர் மற்றும் அரஹதர்கள் இருப்பார்களா இருக்கமாட்டார்களா என்ற கேள்வியை எழுப்புவதும் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. 

பொ.மு.80-ல் எழுதப்பட்ட பாலி நூல்களை ஆராயும் போது அவற்றிலுள்ள சில அம்சங்கள் ஹீனயானத்தின் இந்த தூய பகுத்தறிவுக் கோட்பாடுக்குப் பொருந்தாமல் இருப்பதைக் காணலாம் (இந்த பகுத்தறிவுக் கோட்பாடுகள் தான் கெளதமரின் தம்மத்திற்கு அடிப்படை). உதாரணமாக, கோசல அரசன் பஷேனதி, பிக்குனி கீமாவுடனான (சமஸ்கிருதத்தில் க்‌ஷீமா) உரையாடலில் மரணத்திற்குப் பிறகு புத்தரின் நிலை என்ன என்பது பற்றி சொல்லப்படுகிறது: “அரசே கேள், பருவுலக அளவுகோலைக் கொண்டே அளவிட வேண்டும் என்பதிலிருந்து பூரணமானவர் விடுபட்டார். அவர் பேராழியைப் போல் ஆழமானவர், அளவிடமுடியாதவர், நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாதவர்”. புத்தர் நம்முடைய புரிதலுக்கும் அறிதலுக்கும் அப்பார்ப்பட்டவர் என்பதை இது குறிக்கிறது. மற்றொரு நூலில் புத்தர் என்றால் யார் என்ற கேள்விக்கு புத்தரே இவ்வாறு பதில் சொல்கிறார் “நான் தேவனல்ல, கந்தர்வனல்ல, யக்‌ஷனல்ல, புத்தர்”. புத்தரை சாதாரண மனிதராகக் குறிப்பிடக்கூடாது என்பது இவற்றில் தெளிவாக சொல்லப்படுகிறது. இது மட்டுமே அவ்வரிகளின் நோக்கமாக இருந்தாலும், பிற்காலத்தில் உருவான தர்மகாயம், நிர்மானகாயம் ஆகிய மாகாயான கோட்பாடுகளுக்கான திறப்பை அவ்வரிகளில் காணலாம். மற்றொரு பாலி நூலான உதானாவிலும் (vii, 3) இதற்கு இணையான வரிகள் உள்ளன - ”பிட்சுக்களே கேளுங்கள், பிறப்பற்றது, துவக்கமற்றது, படைக்கப்படாதது, வடிவமற்றது உள்ளது. பிட்சுக்களே கேளுங்கள், பிறப்பற்றது, துவக்கமற்றது, படைக்கப்படாதது, வடிவமற்றது இல்லையென்றால் பிறப்புடைய, துவக்கமுடைய, படைப்பு நிகழ்கின்ற, வடிவமுடைய உலகிலிருந்து விடுதலை அடைய முடியாது”. இது பௌத்த கூற்றாக ஒலிப்பதை விட அதிகம் பிராமணிய கூற்று போலவே ஒலிக்கிறது. 

பாதுகைகளாக குறிக்கப்பட்டிருக்கும் புத்தரை வணங்கும் பெண்கள்.
அமராவதி, சென்னை அருங்காட்சியகம்

பௌத்தர்கள் அடிக்கடி சொல்வது ”நான் புத்தரிலும், தம்மத்திலும், சங்கத்திலும் சரண்புகுகிறேன்” என்பது. மதம் மாறுபவர்களும் இதைச் சொல்லியே மாறுவர். கெளதமரின் காலத்திலேயே இது சொல்லப்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. தம்மம் மற்றும் சங்கத்திற்கு சற்றும் குறையாத, உலக துக்கத்திலிருந்து மக்கள் சரணடையும் இடமாக, புத்தர் என்ற ஆளுமையும் இருக்கிறது. ஆனால் புத்தர் இறந்த பிறகு ‘நான் புத்தரை சரணடைகிறேன்’ என்பதை எந்த அர்த்தத்தில் சாதாரண மக்களும் பிக்குகளும் சொல்கின்றனர்? அவர்கள் புத்தர் போதித்த தம்மத்தை அவ்வாறு சொல்கிறார்களோ? இல்லை. அது தனியாகவே சொல்லப்படுகிறது. கீழேயுள்ள சிற்பத்தைக் கவனிக்கவும். இதில் பெண்களும் மற்றவர்களும், பாதுகைகளாக குறிக்கப்பட்டிருக்கும் புத்தரின் முன் பக்தியுடன் முழு அர்ப்பணிப்பில் மண்டியிட்டு மலர் காணிக்கையை சமர்ப்பிக்கின்றனர். சாஞ்சி, அமராவதியில் இத்தகைய சிற்பங்கள் உள்ளன. சிலவற்றில் போதிமரமாக புத்தர் குறிக்கப்பட்டிருப்பார். இவர்களுக்கு புத்தரிடம் சரணடைவது என்றால் என்னவாக அர்த்தப்பட்டிருக்கும்? 

இந்த வாக்கியம் மட்டுமே தனித்து வசியத்தன்மையுடன் செயல்பட்டு, ’புத்தர் இன்னமும் இருக்கிறார் என்றும், பூர்ணத்தை அடைந்தவரான அவருக்கும் தங்களுக்கும் ஏதோ பந்தம் இருக்கிறது’ என்றும் வழிபாட்டாளர்களை இசையவைக்கிறது. இந்த கருத்தின் வளர்ச்சியே பௌத்த உருவவடிவங்களின் வளர்ச்சியையும் மகாயானத்தின் மறைஞான இறையியலையும் கிட்டத்தட்ட தீர்மானித்துள்ளது. இந்த வழிபாட்டு அம்சமே கெளதமரின் துறவியர் அமைப்பை உலக மதமாக மாற்றியது.

அமராவதி

துவக்ககால பௌத்த நூல்களில் ‘புத்தர்’ என்ற சொல் ஒரு கலைச்சொல் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. இதற்குப் பல குறிப்புகள் உள்ளன. உதாரணமாக மஜ்ஜிமநிகாயத்தில் “அவர் புத்தம் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். தன்னை ‘புத்தர்’ என்கிறார். புத்தர் - மகத்தானவர், பகவான்”. சுதானிபாதா மற்றும் வினயா போன்ற நூல்கள் “புத்தம், தம்மம், சங்கம் மூன்றும் திரிரத்தினங்கள். புத்தம் இந்த உலகில் மிக அரிதான ஒன்று என்பதை இது உணர்த்துகிறது” என்கின்றன. கெளதமர் தன்னையே புத்தர் என்று கருதுகிறார். மற்றொரு உதாரணம், ”பிரம்மனின் வேண்டுகோளுக்குப் பிறகு, கெளதமர் புத்தரின் கண்களைக் கொண்டு இந்த உலகைப் பார்த்தர்” என மஜ்ஜிமநிகாயமும் வினயாவும் குறிப்பிடுகின்றன. அவரும் மற்றவர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது ’ஞானமடைந்த’ என்ற பொருளில். புத்தர் அர்ஹதர்களுக்கும் மேலானவர், சிறந்தவர். முழுமையாக தன்விழிப்படைந்தவரான (சமா-சம்புத்தா) அவர் தன் மாணவர்களுக்கு தம்மத்தின் பாதையை, ஞானத்தின் பாதையைக் காட்டுபவராக இருக்கிறார். பிறகு காலம் செல்லச்செல்ல ‘புத்தர்’ என்ற வார்த்தை மிக அரிதான, மகத்தான ஒன்றைச் சுட்டுவதாக ஆகியது. அதேசமயம், முதன்முதலில் ’போதிச்சத்துவ’ என்ற வார்த்தை ஞானமடையும் பாதையில் நிபாணத்தை நோக்கிச் செல்லும் கெளதமரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. பிறகு இந்த பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் புத்தநிலையை அடைய இருப்பவர்களைக் குறிக்கும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது. போதிச்சத்துவர் என்ற கருத்து ஜாதகக் கதைகளில் மிக விரிவாக வளர்த்தெடுக்கப்பட்டது. ஒரு கதையில் புத்தரின் முற்பிறவி பிராமணன் சுமேதர் தனியாக பிறவிக்கடலைக் கடக்க மறுத்து, ’பிற மனிதர்களும் தேவர்களும் அக்கடலைக் கடக்க வைப்பதற்கான சர்வ ஞானத்தை அடைவேன்’ என்று சபதமெடுக்கிறார். இதில் சுமேதர் பேசுவது மகாயானம் போலவே ஒலிக்கிறது. போதிச்சத்வர் கருத்துக்கு இணையானது ’புத்தரின் முற்பிறவிகள்’ என்ற கருத்து. மகாபதன சூத்திரத்தில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுடைய வாழ்க்கைகள் அனைத்தும் ஒரே வடிவத்தில் உள்ளன. எதிர்கால புத்தர் என சொல்லப்படுபவர் மைத்தேயர் மட்டுமே. அன்பு, கருணையின் வடிவானவர். மூலநூல் அல்லாத பிற்கால நூலான மிலின்ந்த பாஹாத்தில் இவர் குறிப்பிடப்படுகிறார். 

புத்தருடைய இந்தப் பிறவிக்கு முந்தைய மூன்று பிறவிகள் அவருக்கு முந்தைய நிஜ ஆசிரியர்களின் நினைவைக் குறிப்பவை. அம்மூன்று பிறவிகளும் இந்த யுகத்தைச் சேர்ந்ததாக சொல்லப்பட்டாலும், அவர்கள் வெகு காலத்திற்கு முன் பிறந்தவர்கள். பெரும்பாலும் அனைத்து முற்பிறவி புத்தர்களும் ஒரே கோட்பாட்டையே முன்வைக்கின்றனர் என்பது சுவாரஸ்யமானது. அந்தக் கோட்பாடு பிராமணிய பார்வையான வேதத்தின் அபௌருஷ்யம் என்ற கோட்பாட்டை ஒத்தது. அபௌருஷ்யம் என்றால் கேட்கப்பட்டது என்று பொருள், படைக்கப்படாதது, ரிஷிகளால் சிருஷ்டிக்கப்படாதது. ’உண்மையின் காலாதீதமான ஒருமை’ மீதான இந்த நம்பிக்கை இந்திய மரபுகள் பலவற்றில் பகிரப்பட்டிருப்பது மிகமுக்கியமான ஒன்று. 

துவக்ககால பௌத்த நூல்களில் நுழைந்த தொன்மம் மற்றும் மாய அம்சங்கள் பலவற்றிற்குள் இங்கு மிக விரிவாக செல்லாமல் ஒன்றை மட்டும் குறிப்பாக சொல்கிறேன். மேலே பார்த்தது போல துவக்ககால பௌத்த நூல்களில் உள்ள மிகச்சிறிய கருத்துக்கள் மகாயானத்தில் மிகமிக விரிவாக வளர்ச்சியடைந்துள்ளன. துவக்ககால பௌத்த உளவியலில் இருந்து மகாயனம் வளர்ச்சியடைவதும், உபநிஷதங்களை அடிப்படையாகக் கொண்ட மத்தியகால இந்துமதம் வளர்ச்சியடைவதும் கிட்டத்தட்ட இணையாக நிகழ்ந்தன. 

சாஞ்சி

கடினமான பிறவிக்கடலைக் கடந்தே நிபாணத்தின் கரைக்கு செல்லமுடியும், வெளியிலிருந்து எந்த ஆன்மீக உதவியும் தேவைப்படாத வலிமைமிக்க மிகச்சில ஆன்மாக்கள் மட்டுமே இதை அடைய முடியும், வழிபாட்டால் இதை அடைவது சாத்தியமல்ல என ஹீனயானம் சொல்லிய போது மகாயானம் அன்பாலும் நம்பிக்கையாலும் அனைத்து உலகத்திலும் உள்ள எல்லா உயிர்களுக்கும் விடுதலை உண்டு என்பதை போதித்தது, அறிவாலும் இதை அடையமுடியும் என்றது. ’நிர்குண பிரம்மத்தை’ நோக்கிச் செல்பவர்களின் ‘காட்டப்படாத பாதை’ போல ஹீனயானத்தின் பாதை கடினமானது. மாறாக, மகாயானத்தின் சுமை எளிமையானது. ஒருவன் உடனடியாக உலக வாழ்வையும் பந்தங்களையும் துறக்க வேண்டும் என்பதில்லை. ஹீனயானம் அறிவை அதிகமாக வலியுறுத்தியது. தனிமனித நிபாணத்தை இலக்காகக் கொண்டது. நிபாணத்தைப் பற்றிய மர்மங்களை வளர்ப்பதை நிராகரிக்கிறது. மகாயானம் அன்பை மிக அதிகமாக வலியுறுத்தியது. அனைத்து உயிர்களுக்குமான விடுதலையை இலக்காகக் கொண்டது. 

மகாயானம் பௌத்தத்தின் வளர்ச்சியா இல்லை சரிவா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஹீனயான ஆதரவாளர்களே இந்த சந்தேகத்தை எழுப்புகின்றனர். உதாரணமாக ரைஸ் டேவிஸ் (Rhys Davids) போன்றோர். என்ன இருந்தாலும் உண்மையில் மகாயானத்தின் வளர்ச்சி குறுகிய எல்லைக்குள் இருந்த பௌத்தத்தை உலக வாழ்வை நோக்கி பொங்கி மேலெழச் செய்தது. 

அமராவதி

============

மூலம்: ஆனந்த குமாரசாமியின் ‘Buddha and the Gospel of Buddhism, 1916’ நூலில் இருந்து. 

ஆனந்த குமாரசுவாமி

மொழிபெயர்ப்பு - தாமரைக்கண்ணன் அவிநாசி

ஆனந்த குமாரசுவாமி - Tamil Wiki

============

ஆனந்த குமாரசுவாமியின் மூன்று கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் அடங்கிய “இந்திய கலையின் நோக்கங்கள்” நூலை வாங்க:


இந்தியக் கலையின் நோக்கங்கள்: ஆனந்த குமாரசுவாமி, தாமரைக்கண்ணன் அவிநாசி: Amazon.in: Kindle Store

இந்தியக் கலையின் நோக்கங்கள் | CommonFolks