Wednesday 31 January 2024

அறிவியல் மாற்றங்களும் அறிவியல் புரட்சிகளும்: பகுதி 2 - சமீர் ஒகாஸா

ஒப்பிடவியலாமை (Incommensurability) மற்றும் தரவின் கோட்பாட்டு-சுமை (theory-ladenness of data)

குண் தான் முன்வைத்த கூற்றுகளுக்கு இரண்டு முக்கிய தத்துவார்த்தமான வாதங்களை முன்வைக்கிறார். முதலாவது, போட்டியிடும் கருத்தோட்டங்கள் ஒன்றுக்கொன்று ’ஒப்பிடவியலாதவை’ என சொல்கிறார். இந்த கருத்தைப் புரிந்துகொள்ள நாம் குண் சொல்லிய ஒரு விஷயத்தை நினைவில்கொள்ள வேண்டும்: ’ஒரு அறிவியலாளரின் கருத்தோட்டமே அவரின் ஒட்டுமொத்த உலகப்பார்வையையும் தீர்மானிக்கிறது, அவர் அந்த கருத்தோட்டத்தின் வழியாகவே அனைத்தையும் பார்க்கிறார்’. ஒரு அறிவியல் புரட்சியில் தற்போதுள்ள ஒரு கருத்தோட்டம் புதிய ஒன்றினால் மாற்றப்பட்டால் இதுவரை அறிவியலாளர்கள் உலகைப் புரிந்துகொள்ள பயன்படுத்திய முழு கருத்தியல் கட்டமைப்பையும் கைவிட நேரிடும். எனவே ’அறிவியலாளர்கள் ஒரு கருத்தோட்டத்தின் மாற்றத்திற்கு முன்பு ஒரு உலகிலும், மாற்றத்திற்குப் பின்பு வேறொரு உலகிலும் வாழ்கின்றனர்’ என உருவகப்படுத்தி சொல்கிறார் குண். ஒப்பிடவியலாமை என்ற கருத்து ஒன்றுக்கொன்று எந்தவொரு நேரடியான ஒப்பீடையும் செய்ய இயலாத மிகவும் வேறுபட்ட இரு கருத்தோட்டங்களைக் குறிப்பது. அவைகளுக்கிடையே தொடர்புபடுத்திக்கொள்ள எந்தவொரு பொது மொழியும் இருக்காது. இதன் விளைவாக வெவ்வேறு கருத்தோட்டத்தை பின்பற்றுபவர்கள் தங்களின் பார்வைகளுக்கிடையே ஒரு முழுமையான தொடர்பை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளனர் என்கிறார் குண்.

இது ஒரு சுவாரஸ்யமான கருத்துதான், இருந்தாலும் தெளிவற்றது. ஒப்பிடவியலாமைக்கு குண்னுடைய ஒரு நம்பிக்கையே உந்துதலாக உள்ளது: ’அறிவியல் கருத்தாக்கங்கள் அவை செயல்படும் கோட்பாட்டிலிருந்தே தங்களுக்கான அர்த்தத்தைப் பெறுகின்றன’. உதாரணமாக, நிறை என்ற நியூட்டனின் கருத்தாக்கத்தைப் புரிந்துகொள்ள நாம் முழு நியூட்டன் கோட்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். கருத்தாக்கங்களை அது பொதிந்திருக்கும் கோட்பாடுகளைச் சாராமல் தனியாக விளக்க முடியாது. ’முழுமைவாதம்’ (Holism) என சிலசமயம் குறிப்பிடப்படும் இக்கருத்து குண்னால் மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ‘நிறை’ என்ற சொல் நியூட்டனுக்கும் ஐன்ஸ்டினுக்கும் வெவ்வேறு விதமாக பொருள்படும், ஏனென்றால் அந்த சொல் பொதிந்துள்ள கோட்பாடுகள் மிகவும் வேறுபட்டவை என்கிறார் குண். நியூட்டனும் ஐன்ஸ்டினும் இரு வேறு மொழிகளில் பேசுகின்றனர் என்பதை இது காட்டுகிறது. இதனால் அவர்களின் கோட்பாடுகளை ஒப்பிடுவது மிகவும் சிக்கலாகியுள்ளது. ஒரு நியூட்டன் இயற்பியலாளரும் ஒரு ஐன்ஸ்டின் இயற்பியலாளரும் பகுத்தறிவுரீதியாக விவாதிக்க முயற்சித்தால் அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தை பேசுவதாக நினைத்துக்கொண்டு இரு வேறுபட்ட விஷயங்களையே பேசி முடிப்பார்கள். 

கருத்தோட்ட மாற்றம் முற்றிலும் புறவயமானது என்ற பார்வையை மறுக்கவும், அறிவியல் படிப்படியாக வளர்ச்சியடையவில்லை என்ற வரலாற்றுச் சித்திரத்தை ஆதரிக்கவும் குண் ஒப்பிடவியலாமை கருதுகோளை பயன்படுத்துகிறார். வழக்கமாக அறிவியல் தத்துவம் போட்டியிடும் இரண்டு கோட்பாடுகளில் ஒன்றைத் தெரிவு செய்வதில் பெரிய சிரமங்கள் எதையும் காண்பதில்லை. கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் ஒருவர் அவற்றைப் புறவயமாக எளிதாக ஒப்பிடுவார். இது அவ்விரு கோட்பாடுகளுக்கும் இடையே ஒரு பொது மொழி உள்ளது என்ற முன்னூகத்தை (Presume) தெளிவாகக் கொண்டுள்ளது. குண் சொல்வது சரியாக இருந்தால், அதாவது பழைய மற்றும் புதிய கருத்தோட்டத்தின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்ட விஷயத்தையே பேசுகிறார்கள் என்றால், கருத்தோட்டத்தை தேர்வு செய்வதில் உள்ள எளிய முறைகள் எதுவுமே சரியானதாக இருக்கவியலாது. இதற்கு சமமாகவே அறிவியல் வரலாற்றின் மரபான நேர்கோட்டு சித்திரத்திற்கும் ஒப்பிடவியலாமை பிரச்சனையாக அமைகிறது. புதிய மற்றும் பழைய கோட்பாடுகள் ஒப்பிடவியலாததாக இருந்தால், ‘தவறான’ கோட்பாட்டை ’சரியான’தைக் கொண்டு மாற்றுவதே அறிவியல் புரட்சி எனக் கருதுவது மெய்யாக இருக்க முடியாது. ஒரு கருத்தை சரியென்றும் மற்றொன்றை தவறென்றும் சொல்வது அவற்றை மதிப்பிட அவைகளுக்கு இடையே பொதுவான கட்டமைப்பு உள்ளது என்பதை சுட்டுகிறது. இதைத்தான் குறிப்பாக குண் நிராகரிக்கிறார். அறிவியல் மாற்றங்கள் உண்மையை நோக்கிய நேரான முன்னேற்றம் அல்ல, அதன் பாதை திசையற்றது என்பதை ஒப்பிடவியலாமை குறிக்கிறது. பிறகு வந்த கருத்தோட்டங்கள் முன்பிருந்ததை விட சிறந்தவை அல்ல, முற்றிலும் வேறானவை. 

குண்ணின் விவாதக்கருத்தான ஒப்பிடவியலாமையால் பல தத்துவவாதிகள் சமாதானமாகவில்லை. அதற்கான ஒரு காரணம் ’பழைய மற்றும் புதிய கருத்தோட்டங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தமற்றது (incompatible)’ என குண் சொல்லியது. இந்தக் கூற்று நம்பத்தகுந்த ஒன்று. ஏனென்றால், பழைய மற்றும் புதிய கருத்தோட்டங்கள் பொருந்தக்கூடியதாக இருந்தால் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. பல உதாரணங்களில் இந்த பொருத்தமற்ற தன்மை வெளிப்படையாக உள்ளது. கோள்கள் பூமியை சுற்றுகின்றன என்ற ப்டொல்மியின் கூற்று வெளிப்படையாகவே கோபர்நிகசின் கூற்றான கோள்கள் சூரியனை சுற்றுகின்றன என்பதற்கு பொருத்தமற்றது. ஆனால் குண்னுடைய விமர்சகர்கள் ’இரண்டு விஷயங்கள் ஒப்பிடவியலாதவையாக இருந்தாலும் அவை பொருந்தமற்றதாக இருக்கவியலாது’ என்பதை சுட்டிகாட்டுகிறார்கள். ஏன் இருக்காது என்று பார்க்க ’ஒரு பொருளின் நிறை அதன் திசைவேகத்தை சார்ந்தது’ என்ற கூற்றை (proposition) எடுத்துக்கொள்வோம். ஐன்ஸ்டினின் கோட்பாடு இக்கூற்றை சரி என்கிறது, அதே சமயத்தில் நியூட்டனின் கோட்பாடு தவறு என்கிறது. ஆனால் ஒப்பிடவியலாமை கருத்து சரியானது என்றால் ஐன்ஸ்டின் மற்றும் நியூட்டனுக்கு இடையில் எந்த கருத்து முரண்பாடும் கிடையாது, அவ்விரு கோட்பாடுகளும் அக்கூற்றுக்கு வேறுவேறு பொருள்படும். இரண்டு கோட்பாடுகளிலும் அக்கூற்று சமமான அர்த்தத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே அவைகளுக்கு இடையே நிஜமான முரண்பாடு உள்ளது எனப்படும். ஆனால் ஐன்ஸ்டின் மற்றும் நியூட்டனின் கோட்பாடுகள் முரண்படுகின்றன என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்கின்றனர் (குண் முதற்கொண்டு). இது குண் முன்வைத்த ஒப்பிடவியலாமை கருத்தை சந்தேகத்துடன் அணுகவேண்டும் என்பதற்கு உறுதியான காரணம். 

இந்த மறுப்புக்கு எதிர்வினையாக குண் தன்னுடைய ஒப்பிடவியலாமை விவாதக்கருத்தை சற்று மட்டுப்படுத்துகிறார். கருத்தோட்டங்களுக்கு இடையே பகுதியளவு மொழியை இணைக்க முடியும் என குண் வாதிடுகிறார். எனவே பழைய மற்றும் புதிய கருத்தோட்டங்களைப் பின்பற்றுவபர்கள் சில எல்லைவரை தொடர்புகொள்ள இயலும், அவர்கள் எப்பொழுதும் வேறுவேறான விஷயங்களையே தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் குண் கருத்தோட்டங்களுக்கு இடையேயான புறவயமான தேர்வு சாத்தியமற்றது என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். பொது-மொழி குறைபாடே ஒப்பிடவியலாமையைக் கொண்டுவருகிறது என்பதுடன் ‘அளவுகோல்களின் ஒப்பிடவியலாமை’ (incommensurability of standards) என்ற கருத்தையும் சேர்த்துக்கொள்கிறார். இது கருத்தோட்டம் என்னென்ன அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும், என்னென்ன சிக்கல்களை அதனால் தீர்க்க முடியும், அச்சிக்கல்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வு எப்படி இருக்கும் போன்றவற்றில் வெவ்வேறு கருத்தோட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருக்கலாம் என்கிறது. எனவே அவர்கள் திறமையாக தொடர்புகொள்ள முடிந்தாலும் அவர்களால் யாருடைய கருத்தோட்டம் மேலானது என்பது குறித்த உடன்பாட்டுக்கு வர முடியாது. குண்னுடைய வார்த்தைகளில் சொன்னால் ’ஒவ்வொரு கருத்தோட்டமும் தனக்குத் தானே இட்டுக்கொள்ளும் அளவுகோளை பூர்த்திசெய்யும், முரண்படுபவர் இட்டுக்கொள்ளும் அளவுகோள்கள் சிலவற்றை பூர்த்திசெய்யாது’.

குண் முன்வைக்கும் இரண்டாவது தத்துவார்த்த வாதம் ’தரவின் கோட்பாட்டு-சுமை’ (theory-ladenness of data) என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது. இந்தக் கருத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் ஒரு அறிவியலார் என்றும் இரண்டு முரண்பாடான கருத்துக்களில் ஓன்றைத் தெரிவிசெய்ய முயற்சிக்கிறீர்கள் என்றும் கருதுங்கள். இதற்கு இரண்டில் ஒன்றை தெரிவுசெய்யக் கூடிய தரவு ஏதாவது கிடைக்குமா என்றே நாம் பெரும்பாலும் பார்ப்போம். அல்லது இதை தீர்க்கமானிக்ககூடிய ஒரு முக்கியமான பரிசோதனையை செய்வோம். ஆனால் நமக்குக் கிடைத்த தரவு கோட்பாடை சாராமல் தனித்து இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதாவது ஒரு அறிவியலாளர் இரண்டு கோட்பாடுகளில் எந்தக் கோட்பாடின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் அந்தத் தரவை ஏற்றுக்கொள்ள முடியும். முன்பு நாம் பார்த்தது போல, தர்க்க-புலனறிவாளர்கள் கோட்பாட்டு-சார்பற்ற நடுநிலையான தரவுகள் (theory-neutral data) இருப்பதை நம்பினர். இந்த நம்பிக்கை போட்டியிடும் இரண்டு கோட்பாடுகளுக்கும் ஒரு புறவயமான முறையீட்டு இடத்தை அளிக்கிறது. ஆனால் குண் கோட்பாட்டு-சார்பின்மை என்பது மாயை என்கிறார். கோட்பாட்டு ஊகங்களால் தரவுகள் தவிர்க்க முடியாதவகையில் மாசடைந்துள்ளன என்கிறார். தங்களின் கோட்பாடு சார்ந்த நம்பிக்கைகளை மீறி அனைத்து அறிவியலாளர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தூய தரவுகளின் ஒரு தொகுப்பைப் பிரித்தெடுப்பது சாத்தியமற்றது என குண் வாதிடுகிறார்.

தரவின் கோட்பாட்டு-சுமை குண்னுக்கு இரண்டு முக்கிய பலன்களை கொடுத்தது. ஒன்று, போட்டியிடும் கருத்தோட்டங்களுக்கு இடையில் உள்ள பிரச்சனையை வெறுமனே ‘மாறாவுண்மைகள்’ (facts) அல்லது ‘தரவுகள்’ (data) ஆகியவற்றைக் கொண்டு தீர்க்கமுடியாது. ஒரு அறிவியலாளர் எவற்றை ‘மாறாவுண்மைகள்’ அல்லது ‘தரவுகள்’ என்று சொல்கிறாரோ அது அவர் ஏற்றுக்கொண்ட கருத்தோட்டத்தை சார்ந்தே இருக்கும். எனவே இரண்டு கருத்தோட்டங்களுக்கு இடையில் முற்றிலும் புறவயமாக ஒன்றைத் தெரிவுசெய்வது சாத்தியமற்றது, இரண்டையும் மதிப்பிடுவதற்கு நடுநிலையான இடம் கிடையாது. இரண்டாவது, ‘புறவயமான உண்மை’ என்ற கருத்து கேள்விக்குரியது. ஒரு கோட்பாடு புறவயமாக உண்மையாக இருக்க வேண்டுமெனில் அது கண்டிப்பாக மாறாவுண்மைகளுடன் ஒத்திருக்க வேண்டும். ஆனால் மாறாவுண்மைகளே கோட்பாடுகளின் அடிப்படையில்தான் பெறப்படுகின்றன என்றால் அத்தகைய ஒத்திசைவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இதனால்தான் குண் ’உண்மை கோட்பாட்டுச் சார்புடையது’ என்ற தீவிரமான பார்வைக்கு வந்தடைந்தார். 

குண் ஏன் அனைத்து தரவுகளும் கோட்பாட்டு-சுமையுடையது எனக் கருதினார்? இந்த விஷயத்தில் அவருடைய எழுத்துக்கள் முற்றிலும் தெளிவானதாக இல்லை. ஆனால் அவற்றில் குறைந்தது இரண்டு வாதங்களாவது கவனிக்கத்தக்கதாக உள்ளன. முதலாவது, நம்முடைய தனிப்பட்ட நோக்கு (Perception) நம் நம்பிக்கைகளால் பெரிதும் கட்டமைக்கப்பட்டது. நாம் எதை நம்புகிறோம் என்பதைப் பொருத்தே நாம் எதைப் பார்க்கிறோம் என்பதும் உள்ளது. ஒரு பயிற்சி பெற்ற அறிவியலாளர் சோதனைக் கூடத்தில் இருக்கும் ஒரு அதிநவீன கருவியைப் பார்ப்பது ஒரு சாதாரண மனிதர் அதைப் பார்ப்பதிலிருந்து வேறுபட்டது. அக்கருவியைப் பற்றி அச்சாதாரண மனிதரிடம் இல்லாத பல நம்பிக்கைகள் அறிவியலாளருக்கு இருக்கும். தனிப்பட்ட நோக்கு அதன் பின்னாலுள்ள நம்பிக்கைகளால் பாதிக்கப்படக் கூடியது என்பதையே பல உளவியல் பரிசோதனைகள் காட்டுகின்றன (இந்தப் பரிசோதனைகளின் விளக்கங்கள் சரியானது என்றாலும் விவாதத்திற்கு உரியவையே). இரண்டாவது, அறிவியளாலர்களின் பரிசோதனை மற்றும் அவதானிப்பு பற்றிய அறிக்கைகள் எப்பொழுதும் உயர்-கோட்பாட்டு மொழியிலேயே இயற்றப்படுகின்றன. உதாரணமாக, ஒரு அறிவியளாலர் ஒரு பரிசோதனையின் விளைவை ’செம்புக் கம்பியின் வழியாக மின்சாரம் பாய்கிறது’ எனச் சொல்வதன் முலமாக அறிக்கையிடுகிறார் எனக் கொள்வோம். ஆனால் இந்தத் தரவறிக்கை வெளிப்படையாகவே பெரிய அளவிலான ஒரு கோட்பாட்டை சுமந்துள்ளது. மின்சாரத்தைப் பற்றிய வழக்கமான நம்பிக்கைகளைக் கொண்டிராத அறிவியலாளர் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே இந்த அறிக்கை கோட்பாட்டு-சார்பற்றது அல்ல.

இந்த வாதத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தத்துவவாதிகள் இரண்டாக பிரிந்துள்ளனர். ஒரு பக்கம், தூய கோட்பாட்டு-சார்பின்மையை அடையமுடியாது என்பதில் பலர் குண்னுடன் ஒத்துப்போகிறார்கள். தர்க்க-புலனறிவாளர்களின் கருத்தான ’கோட்பாடிலிருந்து முற்றிலும் விடுபட்ட தரவுகளின் கூற்றுகள்’ பல சமகால தத்துவவாதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்தக் கூற்றுகள் எப்படியிருக்கும் என்று யாராலும் வெற்றிகரமாக சொல்ல முடியவில்லை. ஆனால் இன்னொரு பக்கம், இது கருத்தோட்ட மாற்றத்தின் புறவயதன்மையை நிராகரிக்கவில்லை எனப் பலர் சொல்கின்றனர். உதாரணமாக, ப்டொல்மி வானியலாளர் ஒருவரும் கோபர்னிகன் வானியலாளர் ஒருவரும் விவாதத்தில் ஈடுபடுகிறார்கள் எனக் கருதுவோம். அவ்விவாதம் யாருடைய கோட்பாடு மேலானது என்பது பற்றியது. அவர்கள் அர்த்தமுள்ள விவாதம் ஒன்றைச் செய்யவேண்டுமானால் இருவரும் பொதுவாக ஏற்றுகொள்ளக்கூடிய சில வானியல் தரவுகள் தேவை. ஆனால் இது ஏன் ஒரு பிரச்சனையாக உள்ளது? சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்து எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதிலோ, ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் நேரத்திலோ இவர்கள் ஒத்துப்போகலாம் அல்லவா? இது இருவருக்கும் பொதுவான தரவு தானே. இந்தத் தரவை கோபர்னிகசின் வானியலாளர் சூரிய மைய கோட்பாடின் உண்மைத் தன்மையை வலியுறுத்தும் வகையில் விவரித்தால் ப்டொல்மி வானியலாளர் அதை மறுப்பர். ஆனால் கோபர்னிகசின் வானியலாளர் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் இல்லை. ’மே மாதம் 14 ஆம் நாள் காலை 7.10 மணிக்கு சூரியன் உதயமானது’ போன்ற கூற்றை ஒரு அறிவியலாளர் புவிமைய கோட்பாடு அல்லது சூரிய மைய கோட்பாடு ஆகிய இரண்டில் எதை நம்பினாலும் ஏற்றுக்கொள்வார். இத்தகைய கூற்றுகள் இரு கருத்தோட்டத்தின் ஆதரவாளர்களாலும் ஏற்றுக்கொள்ளகூடிய அளவில் கோட்பாட்டு-சார்பற்றதாக உள்ளது. இதுவே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். 

’புறவய-உண்மை’ (objective truth) மீதான குண்ணின் நிராகரிப்பு என்ன ஆனது? சில தத்துவவாதிகள் இங்கு குண்ணின் வழியைப் பின்பற்றியுள்ளனர். ஒரு சிக்கல் என்னவென்றால், புறவயமான உண்மையை நிராகரிக்கும் பலரைப் போலவே குண்னும் தகுந்த மாற்றுக்கருத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார். ’புறவய-உண்மை’ கருத்தோட்டத்துடன் தொடர்புடையது என்ற பார்வையை முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம். இதுவொரு சார்பியல்வாத (relativism) பார்வை. எல்லா சார்பியல்வாத (relativism) கருத்துகளையும் போலவே இதுவும் ஒரு முக்கியமான பிரச்சனையை சந்திக்கிறது. பின்வரும் கேள்வியை சிந்தித்துப் பாருங்கள்: ‘புறவய-உண்மை கருத்தோட்டத்துடன் தொடர்புடையது’ என்ற கூற்று தன்னளவில் புறவயமான உண்மையா இல்லையா? சார்பியல்வாதிகள் இதற்கு ’ஆம்’ என பதிலளித்தால் ‘புறவயமான உண்மை’ கருத்தை ஏற்கிறார்கள் என்று பொருள், எனவே அவர்களே தங்களின் கருத்துக்கு முரண்படுகின்றனர். அதேசமயம் ’இல்லை’ என்று பதிலளித்தால், அவர்கள் ’புறவய-உண்மை கருத்தோட்டத்துடன் தொடர்புடையதல்ல’ என்று மறுப்பவர்களுடன் சார்பியல்வாதிகள் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த வாதம் சார்பியல்வாதத்திற்கு முற்றிலும் இடரானது என எல்லா தத்துவவாதிகளும் சொல்லவில்லை. அதேசமயம் இது ‘புறவய-உண்மை’ என்ற கருத்தை கைவிடுவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் காட்டுகிறது. அறிவியல் வரலாறு என்பது உண்மையை நோக்கிய எளிமையான ஒரு நேர்கோடான முன்னேற்றம் என்ற மரபான பார்வைக்கு குண் தனது ஆட்சேபனைகளைத் தெரிவித்தாலும் அந்த இடத்திற்கு மாற்றாக அவர் கொடுத்த சார்பியல்வாதிகளின் கருத்து ஏற்றுக்கொள்வதற்கு கடினமானது. 

குண் மற்றும் அறிவியலின் பகுத்தறிவுத்தன்மை

குண்ணின் நூல் ’The structure of scientific revolutions’ தீவிரமான தொனியில் எழுதப்பட்டுள்ளது. அதில் அறிவியலில் கோட்பாட்டு மாற்றம் பற்றிய வழக்கமான தத்துவ கருத்துக்களை தீவிரமான வேறு கருத்துக்களால் தான் மாற்ற விரும்புவது போன்ற தோற்றத்தை குண் கொடுக்கிறார். இவரின் கோட்பாடுகளான கருத்தோட்ட மாற்றம், ஒப்பிடவியலாமை, தரவின் கோட்பாட்டு-சுமை அகியவை தர்க்க-புலனறிவாளர்களின் பார்வையான அறிவியல் ஒரு பகுத்தறிவான, புறவயமான, படிப்படியாக முன்னேரும் செயல்பாடு என்பதுடன் முற்றிலுமாக முரண்படுகிறது. சிலர் அவரை ’அறிவியல் பெரும்பாலும் ஒரு பகுத்தறிவற்ற செயல்பாடு’ என்று சொன்னவராகப் பார்க்கின்றனர். மேலும் ’இயல்பான காலகட்டத்தில் ஒரு கருத்தோட்டத்தின் மீதுள்ள வறட்டுத்தனமான பிடிப்பு’ மற்றும் ’புரட்சி காலகட்டத்தில் நிகழும் திடீர் மாற்றம்’ ஆகியவற்றை வகைபடுத்தியவராகவும் பார்க்கின்றனர். 

தன்னுடைய எழுத்துக்கள் இவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டதில் குண் மகிழ்ச்சியடையவில்லை. 1970ல் வெளியான ’The structure of scientific revolutions’-னின் இரண்டாவது பதிப்பிலும், அதன்பின் வந்த எழுத்துக்களிலும் குண் தன்னுடைய தொனியை கணிசமாக மட்டுப்படுத்தினார். தான் வலியுறுத்துவதாகத் தோன்றிய தீவிரமான கருத்துக்களில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார். தான் அறிவியலின் பகுத்தறிவுதன்மையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்றும், மாறாக, உண்மையில் அறிவியல் எப்படி முன்னேறுகிறது என்பதை மேலும் யதார்த்தமாக, வரலாற்று ரீதியில் துல்லியமான சித்திரத்தைக் கொடுக்க முயற்சிப்பதாகவும் சொல்கிறார். தர்க்க-புலனறிவாளர்கள் அறிவியலின் வரலாற்றைப் புறக்கணித்ததால் அறிவியல் எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய எளிய சித்திரத்தை குண் கொடுக்க நேர்ந்தது. அறிவியல் பகுத்தறிவானதல்ல என்பதைக்காட்ட அவர் முயற்சிக்கவில்லை, மாறாக அறிவியல் பகுத்தறிவு என்றால் என்ன என்பதை தெளிவாகக் காட்டவே முயற்சிக்கிறார். 

சிலர் குண்னுடைய பிற்கால எழுத்துக்களை ’பின்வாங்குதல்’ என விமர்சித்தனர். குண் தன்னுடைய உண்மையான நிலைப்பாட்டை விளக்குவதற்கு பதிலாக அதிலிருந்து பின் வாங்குகிறார் என்றனர். இது ஒரு நல்ல மதிப்பீடா இல்லையா என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லப்போவதில்லை. ஆனால் பிற்கால எழுத்து ஒரு முக்கியமான சிக்கலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. அறிவியல் பகுத்தறிவற்றது என தான் சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டதை மறுக்கும் போது அறிவியலில் கோட்பாடை தெரிவு செய்வதற்கு ’எந்த நெறிமுறையும் (Algorithm) இல்லை’ என்ற மிக முக்கியமான கூற்றை குண் அடைகிறார். இதன் பொருள் என்ன? நெறிமுறை என்பது ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான விடையைக் கணக்கிட பயன்படுத்தும் விதிகளின் தொகுப்பு. உதாரணமாக, பெருக்கலுக்கான நெறிமுறை என்பது எந்த இரண்டு எண்களுக்கும் பொருத்தி அதன் பெருக்கல் தொகையைப் பெற உபயோகிக்கும் விதிகளின் தொகுப்பு. கோட்பாட்டு தேர்வுக்கான நெறிமுறை என்பது போட்டியிடும் இரண்டு கோட்பாடுகளுக்குப் பொருத்தி அதில் எதைத் தெரிவுசெய்ய வேண்டும் எனக் கூறும் விதிகளின் தொகுப்பு. மரபான அறிவியல் தத்துவம் அத்தகைய நெறிமுறை இருப்பதை வெளிப்படையாக அல்லது மறைமுகமாக உறுதிசெய்தது. தர்க்க-புலனறிவாளர்கள் அடிக்கடி இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: தரவுகள் மற்றும் போட்டியிடும் இரண்டு கோட்பாடுகள் ஆகியவை கொடுக்கப்பட்டால் ‘அறிவியல் முறையின் கொள்கை’களைக் கொண்டு எந்த கோட்பாடு உயர்ந்தது என்பதைத் தீர்மானிக்க முடியும். இக்கருத்து அவர்களின் நம்பிக்கையான ’கண்டுபிடிப்பு உளவியல் சார்ந்த விஷயம் மற்றும் நிரூபித்தல் தர்க்கம் சார்ந்த விஷயம்’ என்பதில் உட்பொதிந்துள்ளது. 

கோட்பாட்டு தேர்வுக்கு எந்த நெறிமுறையும் இல்லை என்று குண் சொல்லியது ஓரளவு சரியானது. அத்தகைய நெறிமுறையைத் தருவதில் இதுவரை ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கோட்பாடுகளில் நாம் என்ன எதிர்பார்கிறோம் என்பதைப் பற்றி நம்பத்தகுந்த பரிந்துரைகளை பல தத்துவவாதிகள் மற்றும் அறிவியலாளர்கள் கொடுத்துள்ளனர்: கோட்பாடின் எளிமை, அதன் விரிவு, தரவுகளுடன் உள்ள நெருங்கிய பொருத்தம் மற்றும் வேறுபல பரிந்துரைகள். ஆனால் ஒரு கோட்பாடு இந்தப் பரிந்துரைகளுடன் சமரசம் கொண்டதாக இருக்கலாம் என்பதை குண் நன்கு அறிந்திருந்தார். இவைகளுக்கு இடையில் ஒரு சமநிலை இருக்கலாம்: உதாரணமாக, கோட்பாடு A ஆனது கோட்பாடு Bயை விட எளிமையாக இருக்கலாம், ஆனால் கோட்பாடு B தரவுக்கு மிக நெருக்கமாக பொருந்தக்கூடும். எனவே அகவயமான மதிப்பீடோ அல்லது அறிவியல் பொதுபுத்தியோ போட்டியிடும் கோட்பாடுகளில் ஒன்றைத் தெரிவு செய்ய பெரும்பாலும் தேவைப்படுகிறது. இதன்படி பார்த்தால் குண் சொல்லிய ’ஒரு புதிய கருத்தோட்டத்தை ஏற்றுக்கொள்வது சில நம்பிக்கைகளை சார்ந்தது’ என்ற கருத்து அவ்வளவு தீவிரமானதாக தென்படவில்லை. இதுபோலவே ’ஒரு கருத்தோட்டத்தின் ஆதரவாளர்கள் தாங்கள் வெற்றியடைவதற்கான வாய்ப்பை பெற அறிவியல் சமூகத்தை கட்டாயப்படுத்துகிறார்கள்’ என அவர் சொல்லியதும் அவ்வளவு தீவிரமானதாக இல்லை.

’கோட்பாட்டு தேர்வுக்கு எந்த நெறிமுறையும் இல்லை’ என்ற கருத்து ’கருத்தோட்ட மாற்றம் பற்றி குண் குறிப்பிடுவது அறிவியல் பகுத்தறிவுக்கு எதிரானதல்ல’ என்ற பார்வைக்கு சாதகமாக உள்ளது. எனவே குண் பகுத்தறிவைப் பற்றி நாம் கொண்டுள்ள கறாரான கருத்தை மட்டும் நிராகரிக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். தர்க்க-புலனறிவாளர்கள் அறிவியல் மாற்றம் பகுத்தறிவற்றதாக இருக்கக்கூடாது என்பதற்காக கோட்பாட்டு தேர்வுக்கு ஒரு நெறிமுறை கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என நம்பினர். இது அசட்டுத்தனமான பார்வையல்ல: பல பகுத்தறிவு செயல்பாடுகளின் கருத்தோட்டங்கள் விதிகளை, நெறிமுறைகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஒரு பொருளின் விலை இங்கிலாந்தில் குறைவா அல்லது ஜப்பானில் குறைவா என்பதை முடிவுசெய்யும் போது நீங்கள் பவுண்டின் மதிப்பை யென்னுக்கு மாற்றும் நெறிமுறையைப் பயன்படுத்துவீர்கள். வேறெந்த வகையில் இதை முடிவுசெய்ய முயன்றாலும் அது பகுத்தறிவற்றதே. இதைப்போலவே ஒரு அறிவியலாளர் போட்டியிடும் இரண்டு கோட்பாடுகளில் ஒன்றைத் தெரிவுசெய்ய முற்பட்டால், அதற்கு ஒரு நெறிமுறையைப் பயன்படுத்துவதே பகுத்தறிவான வழி என நினைக்கத் தோன்றும். அத்தகைய நெறிமுறைகள் இல்லையென்றால் நம்மிடம் இரண்டு தேர்வுகள் இருக்கும். ஒன்று, அறிவியல் மாற்றம் பகுத்தறிவற்றது என்ற முடிவுக்கு நாம் வரலாம், இல்லையென்றால் பகுத்தறிவைப் பற்றிய நம் கருத்து மிகமிகக் கறாரானது எனக் கருதலாம். குண் தன்னுடைய பிற்கால எழுத்துக்களில் இரண்டாவதாக இருப்பதையே வலியுறுத்துகிறார். இறுதியாக அவர் சொல்லவருவது என்னவென்றால் கருத்தோட்டத்தின் மாற்றம் பகுத்தறிவற்றது கிடையாது, மாறாக அவற்றைப் புரிந்துகொள்ள இன்னும் தளர்வான, நடைமுறை சார்ந்த, பகுத்தறிவான கருத்தாக்கம் தேவை. 

குண்னுடைய செயல்பாட்டின் தாக்கம்

குண்னுடைய கருத்துக்கள் சர்ச்சைக்குறியதாக இருந்தாலும் அவை அறிவியலின் தத்துவத்தை மாற்றியமைத்தன. ஏனென்றால் மரபாக எடுத்துக் கொள்ளப்பட்ட பல அனுமானங்களை குண் கேள்விக்கு உட்படுத்தி அவற்றை எதிர்கொள்ள தத்துவவாதிகளைக் கட்டாயப்படுத்தினார். மேலும் மரபான அறிவியல் தத்துவம் வெறுமனே புறக்கணித்த பல சிக்கல்களின் மீது கவனத்தை ஈர்த்தார். குண்னுக்குப் பிறகு ‘தத்துவவாதிகள் அறிவியல் வரலாற்றை தவிர்த்துவிடலாம்’ என்ற கருத்தை நிராகரிப்பது அதிகரித்தது. இது போலவே கண்டுபிடிப்பு சூழலுக்கும் நிரூபணச் சூழலுக்குமான வேறுபாடு தவறானது என சொல்வதும் அதிகரித்தது. குண்னுக்கு முன்பிருந்தவர்களை விட சமகாலத்தில் இருக்கும் அறிவியல் தத்துவவாதிகள் அறிவியலுடைய வரலாற்று ரீதியான முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். குண்னுடைய தீவிரமான கருத்துக்களை ஏற்காதவர்கள் கூட இந்த விஷயத்தில் அவரது செல்வாக்கு நேர்மறையானதாக இருப்பதை ஒத்துக்கொள்கின்றனர். 

குண்னுடைய செயல்பாடுகளினால் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான தாக்கம் அறிவியல் நிகழும் சமூக சூழல் மீது கவனத்தை செலுத்தியது. இது மரபான அறிவியல் தத்துவம் தவறவிட்ட ஒன்று. குண்னுக்கு அறிவியல் என்பது அடிப்படையிலேயே ஒரு சமூக செயல்பாடு. ஒரு கருத்தோட்டத்தின் மூலம் இணைக்கப்பட்ட அறிவியல் சமூகத்தின் இருப்பே இயல்பு நிலை அறிவியல் நடைபெறுவதற்கான முன் நிபந்தனை. மேலும் அறிவியல் எப்படி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது, அறிவியல் சமூகத்தில் எவ்வாறு இளம் அறிவியளாலர்கள் செயல்படத் துவங்குகின்றனர், அறிவியல் முடிவுகள் எப்படி வெளியிடப்படுகின்றன போன்ற பல சமூகவியல் விஷயங்களிலும் குண் கணிசமான கவனத்தை செலுத்தினார். அறிவியல்-சமூகவியலாளர்களிடம் குண்னுடைய கருத்து மிகவும் செல்வாக்கு பெற்றிருப்பது ஆச்சிரியமானதல்ல. குறிப்பாக, 1970கள் மற்றும் 1980களில் பிரிட்டனில் துவங்கிய ’தீவிர-இயக்கம்’ (strong programme) என்ற அறிவியல் சமூகவியலின் ஒரு இயக்கம் குண்னுக்கு மிகவும் கடன்பட்டுள்ளது. 

தீவிர-இயக்கம் ’அறிவியலை அது செயல்படும் சமூகத்திலிருந்து விளைந்த ஒன்றாக பாக்க வேண்டும்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டது. தீவிர-இயக்க சமூகவியளாலர்கள் ’அறிவியலாளர்களுடைய நம்பிக்கைகளின் பெரும் பகுதி சமூகத்தால் தீர்மானிக்கப்படுகிறது’ என்ற கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டனர். உதாரணமாக, அவர்கள் ஒரு அறிவியளாலர் ஏன் ஒரு கோட்பாடை நம்புகிறார் என்பதை விளக்குவதற்கு அறிவியலாளரின் சமூக அல்லது பண்பாட்டுப் பின்னணியின் அம்சங்களை மேற்கோள் காட்டுவார்கள். அதை விளக்குவதற்கு அந்த அறிவியலாளர் கொடுக்கும் சொந்த கருத்துக்கள் போதுமானது அல்ல என்கின்றனர். தீவிர இயக்கம் குண்னுடைய பல கருத்துக்களைக் கடன் வாங்கிக்கொண்டது: தரவின் கோட்பாட்டு-சுமை, அறிவியல் அடிப்படையிலேயே ஒரு சமூக நடவடிக்கை என்ற பார்வை, மற்றும் கோட்பாட்டுத் தேர்வுக்கு எந்த புறவய நெறிமுறையும் கிடையாது என்ற கருத்து போன்றவை. ஆனால் தீவிர-இயக்க சமூகவியலாளர்கள் குண்னை விட தீவிரமானவர்கள், ஆனால் கவனமில்லாதவர்கள். இவர்கள் வெளிப்படையாகவே புறவய-உண்மை, பகுத்தறிவு ஆகியவற்றை நிராகரிக்கின்றனர். அவற்றை கருத்தியல் ரீதியாக சந்தேகத்திற்குரியது என்கின்றனர். மேலும் மரபான அறிவியல் தத்துவத்தையும் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். இது தத்துவவாதிகளுக்கும் அறிவியலின்-சமூகவியளாலர்களுக்கும் இடையே இன்றுவரை நீடிக்கும் குறிப்பிட்ட அளவிலான பதற்றத்துக்கு வழிவகுத்தது. 

மேலும் குண்ணின் செயல்பாடுகள் மானுடவியலிலும் சமூக-அறிவியலிலும் சமூக-நிர்ணயவாதத்தின் (Social constructionism) எழுச்சியில் பங்காற்றியுள்ளன. சமூக-நிர்ணயவாதத்தின் படி, மனித இன வகைப்பாடுகள் போன்ற சில விஷயங்கள் ’சமூக-கட்டமைப்புகள்’ (Social constructs). இது மனம் சாராத புறவயமான இருப்பை நிராகரிக்கிறது. குண் அறிவியல் சமூக சூழலுக்கு கொடுத்த முக்கியத்தையும், ‘அறிவியல் கோட்பாடுகள் அவற்றின் புறவய-உண்மைகளை ஒத்திருக்கின்றன’ என்பதை நிராகரித்ததையும் வைத்துப்பார்த்தால் அவர் ஏன் அறிவியலை ஒரு ‘சமூக-கட்டுமானம்’ என சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது எளிது. எனினும் இங்கு ஒரு முரண்நகை (Irony) உள்ளது. அறிவியல் ஒரு ‘சமூக-கட்டுமானம்’ என்ற கருத்தை ஆதரிப்பவர்கள் அறிவியல் மறுப்பின் அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் நவீன சமூகத்தில் அறிவியலுக்கு கொடுக்கப்படும் அதிகாரத்தை பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். ஆனால் குண் மிகவும் அறிவியல் சார்புடையவர். தர்க்க-புலனறிவாளர்களைப் போலவே இவரும் நவீன அறிவியலை ஒரு அறிவார்ந்த சாதனை என்றே கருதுகிறார். இவரின் கருத்துக்கலான கருத்தோட்ட மாற்றம், இயல்புநிலை அறிவியல், புரட்சிகர அறிவியல், ஒப்பிடவியலாமை, தரவின் கோட்பாட்டு-சார்பு போன்றவை அறிவியலை கீழிறக்குவதையோ அல்லது விமர்சிப்பதையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அறிவியலை இன்னமும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

அறிவியல் தத்துவம் :: சமீர் ஒகாஸா - தொடர்