Thursday 30 November 2023

தொல்லியலில் களஆய்வு முக்கியமானதுதான், அதை மேம்பட்டதாக்க வாசிப்பு அதிகம் தேவைப்படுகிறது - ர.பூங்குன்றன் நேர்காணல்

ர.பூங்குன்றன் தொல்லியல் ஆய்வாளர். கொங்கு மண்டலத்தில் பலகாலம் வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டவர். இவர் எடுத்த கல்வெட்டு பதிவுகள் கொங்குப்பகுதியின் வரலாற்றை தெளிவுபடுத்துகின்றன. இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றை கண்டறிந்தவர். செங்கம் நடுகற்கள் மீதான இவரது ஆய்வு மிகமுக்கியமான ஒன்று. மு.இராகவையங்காருக்கு பிறகு தொல்லியல் மற்றும் இலக்கியச்சான்றுகளுடன் வேளிர் வரலாறு குறித்து விரிவாக எழுதியவர் பூங்குன்றன். அனைத்துக்கும் மேலாக சிறந்த தொல்லியல் ஆசிரியர், இளம் ஆய்வாளர்களை பயிற்றுவிக்க வயது கருதாது இன்றும் தமிழகம் முழுக்க பயணிப்பவர்.

ர.பூங்குன்றன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகிலுள்ள திருமலையில் 11.9.1947-ல் பிறந்தார். தந்தை செ.ரங்கநாதன், தாயார் கமலாம்மாள். சொந்த மாமன் மகள் இலலிதாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு மகள் - கல்பனா, இரண்டு மகன்கள் - பாலதண்டாயுதபாணி, செந்தில். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றார். தமிழ்நாடு தொல்லியல் துறையில் நாகசாமி அவர்கள் வழிகாட்டுதலில் ஓராண்டு கல்வெட்டு மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பை முடித்து தொல்லியல் துறையில் பணிக்கு சேர்ந்தார். 29 ஆண்டுகள் பணிபுரிந்து உதவி இயக்குனராகப் பணிநிறைவு செய்தார். 


உங்களுக்கு வரலாற்றின் மீதான ஆர்வம் இளம்வயதிலிருந்தே இருந்ததாக சொல்லியிருந்தீர்கள், எவ்வாறு வரலாற்றின் மேல் ஆர்வம் ஏற்பட்டது? 


ஆமாம், இளம் வயதிலேயே வரலாற்றின் மீதான எனது ஆர்வம் என்னை அறியாமலேயே ஏற்பட்டுவிட்டது. வகுப்பில் ஒருமுறை வரலாற்று பாடத்தை கேட்டால் மனதில் பதிந்துவிடும். பின்னர் மீண்டும் படிக்க தேவை இருந்ததில்லை. தேர்வில் வரலாற்றில் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிடுவேன். இந்த இயல்பு தான் வரலாற்றுக்கும் எனக்குமான பிணைப்பை வளர்த்தது. எனது ஊரான திருமலை வரலாற்று முக்கியத்துவம் உடையது. அங்கு சோழ இளவரசி குந்தவை செய்வித்த சமண கோவில்கள் உள்ளன. நண்பர் ஒருவர் கா.அப்பாத்துரையின் தென்னிந்திய போர்க்களங்கள் புத்தகத்தை படிக்கக்கொடுத்தார். அதில் திருமலை குறித்தான தகவல்களும் இருந்தன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பிறந்திருக்கிறோம் எண்ணிக்கொண்டேன். பின்னாளில் தொல்லியல் துறையில் ஆய்வேட்டுக்காக திருமலை குறித்து கட்டுரை ஒன்று எழுதினேன். அங்கு உள்ள கல்வெட்டுக்களை படியெடுத்திருக்கிறேன். அவை ‘திருமலை கோயில்கள்’ வரலாற்றை எழுதிய ஏகாம்பரநாதன் முதலியோருக்கு பயன்பட்டிருக்கிறது. இன்னும் என் ஊர் பற்றி எழுதிய கட்டுரையை நான் நூலாக வெளியிடவில்லை, வெளியிடவேண்டும் என்று நாகசாமி அவர்களும் முன்பு வலியுறுத்தினார். வெளியிட வேண்டும். 



நான் கல்லூரியில்  தமிழ் இலக்கியம் முடித்திருந்த சமயம். தொல்லியல் துறையில் எப்போதும் ஒருமாதம் மட்டும் நடத்தும் கல்வெட்டு பட்டயப்படிப்பை ஒரு ஆண்டு நடத்துவதாக அறிவித்தார்கள், அதற்கு உதவித்தொகையும் அறிவித்தார்கள். அந்த வகுப்பில் சேர்ந்து கொண்டேன். முதல் வருடத்தில் என்னுடன் சேர்த்து எட்டு பேர் தேர்வானோம். அதில்  ஆய்வாளர் குழந்தைவேலனும் தேர்வானார். படிப்பு முடிந்த பின்னர் துறையிலேயே எனக்கு வேலையும் கிடைத்தது, பணிநியமனத்தில் தடங்கல்கள் இருந்தாலும் விரைவில் பணிநிரந்தரம் கிடைத்தது. அடிக்கடி பயணம் செய்வதற்கு ஏற்றதாக காட்பாடிக்கு சென்று தங்கிக்கொண்டேன். கோவையில் தான் எனது தொல்லியல் பணி துவங்கியது. 


உங்களுடைய தொல்லியல் பணியின் முக்கியமான ஆய்வுகள் அப்போது செய்யப்பட்டவைதானே?


ஆம். கோவை சென்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்தியாவின் பழைய ‘பெருவழி’ ஒன்றை கண்டுபிடித்தேன். பெருவழி என்னும் வணிகப்பாதைகள் குறித்து சங்கப்பாடல்கள் குறிக்கின்றன, அகநானுற்றில் நான்கு இடங்களில் ‘பெருவழி’ சொல்லப்படுகிறது. பெரும்பாணாற்றுப்படை "கவலை காக்கும் உல்குடை பெருவழி" என்கிறது. பெரும்பாலும் முல்லை நிலத்தில் பயணிக்கும் வழிகள் அவை. 1976-ல் கோவை சுண்டாக்காமுத்தூர் அருகே நண்பர் இராசுவுடன் சென்று அந்த வழியை கண்டுபிடித்தோம். நாங்கள் அங்கு கண்டது ஒரு அழகிய பாடல் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டு, பாடல் வட்டெழுத்திலும் "ஸ்வஸ்திஸ்ரீ கோஇராசகேசரி பெருவழி" என்ற பெயர் சோழர் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. கொங்கு நாட்டில், பாண்டிய நாட்டைப்போன்றே பொதுப்பயன்பாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்துள்ளது. சோழ அரசின் ஆட்சியெழுத்தாகத் தமிழ் எழுத்து வழக்கில் இருந்தது. எனவே இரு எழுத்துகளும் ஒரு கல்வெட்டில் இடம்பெற்றன. 


திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப

ஒரு நிழல் வெண்டிங்கள் போலோங்கி – ஒரு நிழல்போல்

வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன்

கோழியர் கோக்கண்டன் குலவு.


இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தவுடன் இது இராஜராஜன் காலத்தியது என்று செய்தித்தாளில் செய்திகூட வெளிவந்தது, ஆனால் சோழமன்னர்களின் இராஜகேசரி என்னும் பட்டம் ஒரு மன்னனுக்கு உடையது அல்ல, அவர்கள் இராஜகேசரி பரகேசரி என்னும் பட்டங்களை மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளும் வழக்கமுடையவர்கள். இராஜகேசரி பட்டமுடைய சோழமன்னன் கோக்கண்டன் என்று எடுக்கும்போது தான் இது முழுப்பொருளுடையதாகிறது. கோக்கண்டன் என்ற பெயர் இராஜராஜனுக்கு காலத்தால் முற்பட்ட முதலாம் ஆதித்த சோழனுக்கு உடையது என்று தில்லைத்தானம் கோவிலில் உள்ள ஆதித்தனின் கல்வெட்டு மூலம் உறுதி செய்தோம். முதலாம் ஆதித்தனின் ஆட்சிக்காலம் கி.பி.871-907 ஆகும். எனவே, கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியலாம் அப்படியென்றால் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த வழி கொங்கிலிருந்து சேர நாட்டை இணைக்க உதவியது என்று உறுதியானது. 

இராஜகேசரிப் பெருவழி

இராஜகேசரிப் பெருவழி கல்வெட்டு

அதே சமயம் தொன்மையான பெருவழிகள் கால்நடை மந்தைகளின் இடப்பெயர்வுகளால் உருவானவையாக இருக்கும். நீலகிரி தோடர்கள் புலப்பெயர்ச்சி சடங்கு ஒன்றை செய்கிறார்கள். தங்கள் ஊரிலிருந்து மந்தைகளை குறிப்பிட்ட வழியில் ஓட்டிசென்று குடிமந்தைக்கு போய் சடங்குகள் செய்து மீள்கிறார்கள். அப்போது அந்த பழைய வழியை சோழ அரசன் புதுப்பித்து காவல் செய்து வணிகத்தை வளர்த்திருக்கிறான் எனலாம். முதலில் 1976ல் கல்வெட்டை படிக்கையில் இறுதிச்சொல்லை கோ என்று படித்திருந்தேன், 1998ல் மீளாய்வு செய்து அதை குலவு என்று படித்தேன், அதற்கு புகழ் என்று பொருள். 


என்னளவில் போளுவாம்பட்டி அகழாய்வும் முக்கியமானதுதான். நொய்யல் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதியில் அமையப் பெற்ற ஊர் போளுவாம்பட்டி. ஒரு பகுதியில் அகழாய்வு செய்ய முதற்கட்ட சான்றுகள் அவசியம். அப்பகுதியில் கிடைத்த தொல்லியல் சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு அகழாய்வுக்கான அனுமதி எனது முயற்சியால் கிடைத்தது. 


ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள கோட்டைக்காடு என்ற மேட்டுப் பகுதியில் அகழாய்வு நடந்தது. அகழாய்வில் ஐம்பது வண்ண கற்களால் ஆன பெரியமணிகளும் சிறியமணிகளும் சுடுமண் காதணிகளும், கிடைத்தன. மேலும், இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், சுடுமண் கிண்ணங்கள், மூடிகள் மற்றும் சுடுமண் முத்திரை ஆகியன புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. முக்கியமான சான்றாக ஓலையின் மீது மண் முத்திரையில் மூவேந்தர்களின் சின்னங்களான மீன், உட்கார்ந்த நிலையில் புலி மற்றும் வில் அம்பு பொறிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரைக்கு இலக்கியத்தில் ‘மண்பொறி முடங்கல்’ என்று பெயர். வட்டமான முத்திரையின் விளிம்பு பகுதியில் எழுதப்பட்ட வட்டடெழுத்துகளின் காலம் கி.பி.700 நூற்றாண்டு. மண் மேல் எழுதியவை ஆதலால் எழுத்துக்கள் பொறிந்துவிட்டது, முழுமையாக படிக்க முடியவில்லை, வர்ம என்ற சொல்லை மட்டும் இனங்காண முடிந்தது. 


நடுகற்களை பண்பாட்டின் எந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம் என்று சொல்லமுடியுமா? 


முதன்மையாக நடுகற்கள் எளிய மக்களின் வழிபாட்டுக்கு உரியதாக இருக்கின்றன. ஒவ்வொரு குடிக்கும் உரியவையாக நடுகற்கள் இருந்துள்ளன. நான் செங்கம் நடுகற்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டேன். செங்கம் பகுதியில் சங்க காலத்தில் இருந்த பண்பாடு சங்ககாலம் தாண்டியும், பொ.யு.1000 வரை தொடர்ந்தது. ஏனென்றால் அவர்கள் அப்போதும் கால்நடைச்செல்வத்தை முதன்மையாக கொண்டிருந்தார்கள், வேளாண்மைக்கு செல்லவில்லை. எனவே மாடுகள் மட்டுமே அவர்களது செல்வம். ஒரு மந்தையில் மாடுகள் குறைந்தால் பிறிதோர் மந்தையில் இருந்து கவர்ந்து வருவதும், அதை போர் செய்து மீட்பதும் வழக்கமாக கொண்டிருந்தார்கள்.


செங்கம் பகுதி நடுகல்

ஆநிரை கவர்வது அக்காலத்தில் தவறாக கருதப்படவில்லை, அது அன்றைய சமூகத்தில் ஒரு வழக்கம். இந்த சண்டையில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்தார்கள். ஆநிரை மீட்க சண்டையிட்டு மடிந்த வீரர்களுக்கு அதிகம் நடுகற்கள் காணப்படுகின்றன, கவர்ந்து சென்ற வீரர்கள் இறந்த போதும் நடுகல் எடுத்திருக்கிறார்கள். ஒரு குடிக்காக போரிட்டு இறந்த வீரனை அந்தக்குடியினர் வணங்கினால் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை, இதை பாசிட்டிவ் கல்ட் என்று கர்ட்டன் கூறுவார், முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் இதுபோலத்தான். அரசன் போரில் இறந்தால் அவனுக்கு பள்ளிப்படை கோவில் கட்டுவார்கள், வீரனுக்கு நடுகல். நடுகல்லுக்கு பலி உண்டு, மக்கள் சாராயம் படைப்பார்கள். சாமான்யர்களின் பண்பாட்டை அறிந்துகொள்ள இந்த நடுகற்கள்தான் நமக்கு உதவுகின்றன.


செங்கம் அருகிலுள்ள தண்டராம்பட்டு நடுகல்

நடுகற்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகள் குறித்து சொல்லுங்கள்?


தமிழகத்தில் கிடைத்துள்ள தொன்மையான சங்க கால நடுகற்கள் வேளிர் ஆண்ட தேனி மாவட்டத்தின் புலிமான்கோம்பை தாதம்பட்டி பகுதிகளில் கிடைத்தவை. இந்த நடுகற்களிலேயே ‘வேள்’ என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து கிடைப்பவை பாண்டிய நாட்டிலிருந்து ஆந்திரா வரை சென்ற வணிக வழியில் கிடைப்பவை. 


புலிமான்கோம்பை நடுகற்கள்

இந்தப்பகுதிகளில் தமிழ்-பிராமி எழுத்துபொறிப்பு கிடைக்கவில்லை, கூடவே பாண்டியரின் தொடர்பால் வட்டெழுத்து கல்வெட்டுகளில், நடுகற்களில் நேரடியாக இடம்பெறுகின்றன. வட்டெழுத்து பாண்டிய நாட்டின் சிறப்பம்சம். சங்க கால கடல்வாணிகம் காலாவதியான பின்னரும் இந்த கால்நடை வணிகம் உள்ளிட்ட உள்நாட்டு வணிகம் தொடர்ந்து கொண்டிருந்தது. துவக்க கால நடுகற்களில் வணிகச்சாத்துக்களின் தாக்கத்தாலும், வேளிர் முதலிய அரசர்களின் நகரத்திற்கு அண்மையாக இருந்ததாலும் கிடைத்த எழுத்தறிவு காரணமாக எழுத்துக்கள் இடம்பெறத்துவங்கின. துவக்க கால வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் அழகிய எழுத்துக்களை உடையவை. பின்னர் அவை அனைவரும் பயன்படுத்த துவங்குகையில் அந்த அழகு குறைந்து சிதைவுறுகிறது. வட்டெழுத்தில் மொத்தம் மூன்று வகைமைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அதில் ஒரே இடத்தில் ஒரே காலத்தை சேர்ந்த இரண்டு வெவ்வேறு வட்டெழுத்துக்களை கூடகாண முடிந்தது. சீரான தமிழெழுத்து கொண்ட நடுகற்கள் கம்பவர்மன் காலத்திலிருந்துதான் துவங்குகின்றன.


தமிழகத்தின் துவக்க கால பேரரசுகள் உருவாக்க காலத்தில் சமூகப்பின்புலம் என்னவாக இருந்தது?


அரசு உருவாக்கம் மன்னன், வேள், வேந்தன் என்னும் அடுக்குமுறையை கொண்டிருந்தது. சங்கப்பாடல்களில் ‘மகற்பாற்காஞ்சி’ என்னும் துறை உண்டு. மகட்கொடை மறுத்தல் முறையில் 20 பாடல்கள் உண்டு. கபிலரும், பரணரும் வேந்தர்களை பாடியதோடு பழங்குடி மன்னனையும் பாடுகின்றனர். சேரன் செங்குட்டுவனை பெயர் சுட்டும் பரணர், தொல்குடி மன்னனை பெயர்சொல்லாது பாடுகிறார். கபிலரும் பரணரும் ஒருவகையில் இந்த தொல்குடி மீது இரக்கம் கொள்கிறார்கள். குடிப்பெருமை இல்லாத புதிய வேந்தர்கள் படைகொண்டு பெண்கேட்டு நிற்கிறார்கள். ஆனால் இந்த தொல்குடி மன்னர்கள் தங்கள் மகளை தருவதாக இல்லை. இரண்டு தரப்பும் விட்டுக்கொடுக்காமல் போகலாம். ஆனால் அழிவது என்னவோ இந்த ஊர்தான் என்பது அவர்களது பாடலின் பொருள். 


…பொலந் தார்க் குட்டுவன்

முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன

நலம் சால் விழுப் பொருள் பணிந்து கொடுப்பினும்

புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்

தந்தையும் கொடாஅன்


(பொன் மாலை அணிந்த சேரனின் கடல் போல் முரசு ஒலிக்கும் முசிறி நகரைப் போன்ற உயர்ந்த பொருட்களைப் பணிந்துக் கொடுத்தாலும் அவர்கள் உயர்ந்தோர் ஆக இல்லாவிட்டால் இவள் அவர்களைத் திருமணம் செய்ய மாட்டாள். இவள் தந்தையும் தகுதி இல்லாதோர்க்கு இவளைத் தர மாட்டான்)


அதுபோல வேள் என்பவன் ஒருதிணைக்கு அரசன். வேந்தனோ குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற நான்கு திணையை ஆள்பவனாக இருக்கவேண்டும். ஒவ்வொரு பெருவேந்தனுக்கும் ஒரு கடற்பகுதி சொந்தமாக இருந்ததை இங்கு கவனத்தில் கொள்ளலாம். வேள் முடி சூடவில்லை, வேந்தனுக்கு முடி உண்டு. வள்ளுவர் சொல்லும் ஆறுஅங்கம் கொண்ட அரசுகள் பின்னர் பல்லவ, பாண்டிய அரசு காலத்தில் உருவானவை. சங்க காலத்தில் இருந்தவை எல்லாம் கொஞ்சம் பெரிய சிற்றரசுகள், அவ்வளவுதான். அதுபோல பேரரசுகள் மருதநிலத்தை சார்ந்தவை என்ற கருத்து விளைச்சல், உபரி என்னும் அடிப்படையில் எழுந்தவை.


ஆனால் பெருநகரங்கள், அன்று வணிக மையங்களான முல்லைத்திணையை சார்ந்தவையாகவே இருந்தன. கொடுமணல் முல்லைத்தினையை சார்ந்தது, வேறு இடங்களில் இல்லாத செல்வம் கொங்கு பகுதியில்தான் இருந்தது. தமிழகத்தில் கிடைத்த 80% ரோமானிய காசுகள் கொங்கில் கிடைத்தவை. கொடுமணலில் கிடைத்த ஒரு பானை ஓட்டில் ‘நெகமா’ என்ற சொல் இருந்தது, நகரம் என்பதை குறிக்கும் வடசொல் அது. வளம்மிக்க இந்தவணிக பகுதியை கைப்பற்ற கிள்ளிவளவனும், பூதப்பாண்டியனும் படையெடுத்தார்கள். சேரர்கள் முதலில் கருவூரை தலைநகராகக்கொள்ளாததும் பின்னர் அங்கு நிலைப்படை அமைத்ததும் இந்த அடிப்படையில்தான். பொ.யு.75-ல் இருந்து 150-க்கு இடையில் இந்த மாற்றம் நடந்திருக்கலாம். 


இந்த வேளிர்கள் வேந்தர்கள் படையில் பங்கேற்பார்கள் பின்னர், வெற்றி பெற்றதும் வெற்றி செல்வத்தில் பங்கு பெறுவார்கள். மருத நிலத்தை அடைவதிலும், பின்னர் விரிவுபடுத்துவதிலும் ஆர்வம் கொண்ட வேந்தர்கள், போர் வென்ற பின் அந்த நிலங்களின் விளைச்சலையும், மருத நிலங்களையும் கூட வேளிர்களுக்கு கொடுக்கின்றனர். ‘தண்ணடை நல்கல் வேந்தற்கு கடன்’ என்ற பாடபேதத்தை உ.வே.சா தனது குறிப்புரையில் சொல்கிறார். தண்ணடை என்றால் மருத நிலம், நெல்குவிந்து கிடக்கும் வேளிர் இல்லத்தின் வாசலில் நின்றுதான் வேந்தன் பெண் கேட்கிறான்.



வேளிர்கள் ஏன் பெருவேந்தராகவில்லை அல்லது அவர்களில் மூவர்தான் வேந்தர்களாக ஆனார்களா?


அப்படி சொல்ல இடமுண்டு, வேந்தரின் அவை என்னும் பொருள் தரும் ‘வேத்தவை’ தான் சங்க காலத்தில் குறிப்பிடப்படுகிறது, ‘வேள்-அவை’ என்று ஒன்று இல்லை. செங்கண்மா நன்னன் ஒரு வேளிர் அரசன், அவன் வேத்தவையில் வீற்றிருந்தான் என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. வடநாட்டில் இந்த கருத்து கணசங்கம் என்ற பெயரில் இருந்தது. லிச்சவியில் ஒரு சமயம் 7707 தலைவர்கள் இருந்ததாக சொல்வார்கள், மிகையாக இருக்கலாம். ஆனால் அஜாத சத்ரு காலம் வரை அரசன் என்ற கருத்து வலுவாக அங்கு இல்லை.


சோழர்களில் பத்து குடியினரை இலக்கியத்தில் பார்க்க முடிகிறது. ஆர்க்காட்டு அழிசியும் சோழன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியும் சோழர்கள் தான். மு. இராகவையங்கார் ஒரே காலத்தில் வாழ்ந்த ஐந்து வெவ்வேறு சோழ அரசர்களை குறிப்பிடுகிறார். இது மிகச்சரியான கருத்து. பாண்டியர்களில் ஐந்து குடியினர் இருந்தனர், அவர்களுக்கு பஞ்சவர் என்றே பெயர். பூதப்பாண்டியன் எனும் அரசன் தன் புறநானூற்றுப் பாடலில் கேளிர் என ஐந்து பெயர்களை குறிப்பிடுகிறார், 


மலி புகழ்

வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்

பொய்யா யாணர் மையற் கோமான்

மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்

அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,

வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,


மையல் என்னும் பகுதிக்குத் தலைவனாகிய மாவன், நிலைஅரண்களையுடைய ஆந்தை, புகழமைந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, சினமிக்க இயக்கன். பல இரத்த உறவுள்ள குடியினர் இணைந்த அவையை வேத்தவை என்று கருதலாம். அதில் முன்னிலை வகித்த அரசனை புலவர் பாடுகிறார். வரிகுறைக்கப்பாடியவர் அவையின் அங்கமாக ஒரே குடியினராகவும் இருந்திருக்கக்கூடும்.


உங்களுடைய வேளிர்கள் குறித்த ஆய்வுகள் முக்கியமானவை, அதில் மு.இராகவையங்காருடன் நீங்கள் வேறுபடும் இடம் என்ன?


மு.இராகவையங்கார் இலக்கியத்தில் இருந்து சான்றுகளை எடுத்து வேளிர் வரலாறை ஆராய்ந்திருக்கிறார். வேளிர் அரசர்களை பட்டியலிட்டிருக்கின்றார். தமிழின் முன்னோடி ஆய்வு அது. எனது ஆய்வில் இலக்கியத்தோடு தொல்லியல் சான்றுகளும் சமஅளவில் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றின் அடிப்படையில் சேர, சோழ, பாண்டிய நாடுகளோடு தொண்டை மற்றும் கொங்கு நாட்டின் வேளிர்களை பட்டியலிட்டிருக்கிறேன், சமூகவியல் நோக்கிலும் அவர்களது நிலையை விளக்கியிருக்கின்றேன். 


மு.இராகவையங்கார் ‘வேள்’ எனும் சொல்லின் மூலத்தை வேள்வி என்னும் சொல் நோக்கி செலுத்துகிறார். நான் வேள் எனும் சொல் மூலமாக ஒளி என்னும் சொல்லை கருதுகிறேன், இதை முதலில் ஆராய்ந்து கூறியவர் துரை ரங்கசாமி. வெளியன், வெளிமான் போன்ற சொற்கள் வேளிர் என்ற சொல்லைப் பற்றி ஆராயும்போது குறிக்கப்பட்டன. ஒளியர் - வெளியர் என்று பொருள் கொண்டால் ஒளி - வெளி என்னும் சொற்கள் ஒரே பொருள் கொண்டவை ஆகிறது. நாமும் வெளிச்சம், வெண்மை, வெள்ளி என்னும் சொற்களை அதே பொருளில் பயன்படுத்திக்கொண்டுதானே இருக்கிறோம்.


இளையர் இன முறையர் என்றிகழார் நின்ற

ஒளியோ டொழுகப் படும்


இந்தக்குறளுக்கான உரையில் பரிமேலழகர், ஒளியானது அரசர் உறங்கா நிற்கவும் தாம் அவர் உலகை காக்கின்ற அவர் கடவுள் தன்மை என்கிறார். பட்டினப்பாலையில் ‘பல்ஒளியர் பணி பொடுங்க’ என்று வரும் இடத்தில் ஒளியர் என்னும் சொல்லுக்கு வேளிர் என்னும் பொருள் பொருந்தியே வருகிறது. பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளை குறிப்பிடும் ஒரு பாடல் வேணாடு என்கிறது, மற்றோர் பாடல் அதே நாட்டை ஒளிநாடு என்கிறது. மேலும் இராகவையங்கார், கபிலர் இருங்கோவேளை பாடிய புறப்பாடலில் சொல்லப்படும் துவாரகை உடனான உறவை தொடர்புறுத்தி நாற்பத்தொன்பது (ஏழு ஏழு) தலைமுறை எனும் தொடர்பை நிறுவ முயற்சிக்கிறார்.



டி.என்.சுப்பிரமணியம் சுட்டிக்காட்டுவது போல அவ்வாறு இருக்க நியாயமில்லை என்றே நானும் கருதுகிறேன். சிறிய வேளிர் அரசுகள் சமூகத்தில் மேலாக்கம் பெறும்போது அவை இவ்வாறு புராணத்தொடர்பு படுத்தப்படும், சான்றாக தொண்டைமான் மாயோன் வழித்தோன்றல் என்றும், நல்லியக்கோடன் முருகன் வழித்தோன்றல் என்றதுவுமான சங்கப்பாடல்களை சொல்லலாம். கபிலரின் பாடல் அந்த சூழல் பின்புலத்தை சேர்ந்ததாக கருத வேண்டும். 


நமது கோவில் பண்பாடு எந்த அளவில் சமூகத்துடன் இணைந்திருந்தது? 


மனிதன் சிந்திக்க துவங்கிய காலம் முதற்கொண்டு இயற்கையை மாற்றியமைக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறான். இந்தியாவின் துவக்ககால சிந்தனைகளில் ஒன்று சாங்கியம். அது இந்த பிரபஞ்சத்தை ஒரு பெண்ணின் கருவறையாக உருவகிக்கிறது. ரஜ, தம, சத்வ என்னும் மூன்று குணங்கள் சமமாக இருந்தால் உலகம் தோன்றாது என்கிறது சாங்கியம். சங்கரர் அவர்களை பிரதான மல்லர்கள் என்கிறார். சாங்கியத்திலிருந்து நமது பெண் தெய்வங்களை தொடர்புபடுத்தி பார்க்கலாம். எங்கெல்லாம் வேளாண்மை பெருகியதோ அங்கெல்லாம் பெண் தெய்வங்களும் பெருகின. ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழி ஓட்டில் உள்ள பெண் உருவம் கரும்பு, கொக்கு, மான், முதலை சூழ நிற்கிறது. நமது பண்பாடு உலகளாவியது, பொ.யு.10ம் நூற்றாண்டில் இஸ்ரேலில் இருந்து செம்பு அனுப்பி, தமிழகத்தில் சிலை வடித்து தரச்சொல்லிய கடிதம் ஒன்று உள்ளது, உலகின் தெய்வங்களும், தேவதைகளும் இங்கு வார்க்கப்பட்டன.


ஆதிச்சநல்லூர் தாய்தெய்வ பானை ஓடு

நமது நீதிபரிபாலன முறையும், ஊர் சபைகளும் முக்கியமான பண்பாட்டு சான்றுகள். போரில் இரத்தத்தையும், வீரச்சாவையும் பாடிய சமூகத்தில், ஒரு கொலை செய்தவனுக்கு எங்குமே கொலை தண்டனை வழங்கப்பட்ட கல்வெட்டு சான்றுகள் இல்லை. புதிதாக அணைகட்ட கேட்டுக்கொண்டவருக்கு, கீழணை நீரால் நிரம்பிய பின்னரே நீர் தேக்கி வைக்க வேண்டும் என்று ஆணையிடுகிறார்கள். 


கோவில்களும் சமூகத்தில் மிக முக்கியமான மையமாக செயல்பட்டிருக்கின்றன, கோவில்கள் பெற்றதோடு மட்டுமில்லாமல் நிறைய கொடுத்தும் இருக்கின்றன. காவிரி வெள்ளம் வந்து வயல்வெளிகள் மண்ணால் மூடப்பட்ட போது திருவரங்கம் ஆலயம் மக்களுக்கு உதவிய கல்வெட்டுச்செய்தி உள்ளது. அதுபோல திருக்கோவிலூர் அருகே பஞ்ச காலத்தில் கோவில் நகையை விற்று மக்கள் பசியை போக்கியிருக்கிறார்கள். மீண்டும் வளமான காலத்தில் அதை திரும்ப செய்து கொடுத்திருக்கிறார்கள். திருமணம், வேளாண்மை, வாணிகம் என பலகாரணங்களுக்கு கோவிலில் இருந்து சமூகத்திற்கு பொருளுதவி கிடைத்திருக்கின்றது. இது கோவிலுக்கும் சமூகத்திற்கும் இருந்த பக்தி தாண்டிய உறவை காட்டுகிறது. 


ஆய்வாளராக பக்தி இலக்கியம் குறித்த உங்களது பார்வை?


இந்தியாவுக்கு தமிழகம் அளித்த கொடை பக்தி இலக்கியம். எனக்கு வைணவத்தில் திருமங்கையாழ்வார் மொழி போல பிடித்தது வேறொன்றும் இல்லை. அவரது மொழி தெளிவான, செறிவான மொழி. பெண்கள் மடலேறுதல் சமூகத்தில் மறுக்கப்பட்ட ஒன்று. இதை வள்ளுவரும், தொல்காப்பியரும் வலியுறுத்துகின்றனர். ஆனால் திருமங்கை ஆழ்வார், பெண்பால் என தன்னை கருதிக்கொண்டு மடலேறுவேன் என்று அறைகூவுகிறார். இந்த மீறல் பக்தி இலக்கியம் மீறிய பல்வேறு விஷயங்களில் ஒன்று.


ஓரானைக் கொம்பொசித்து ஓர்ஆனை கோள்விடுத்த

சீரானைச் செங்கண் நெடியானைத் தேன்துழாய்த்

தாரானை தாமரைபோல் கண்ணானை-எண்ணரும்சீர்ப்

பேரா யிரமும் பிதற்றி - பெரும் தெருவே

ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்

வாரார்பூம் பெண்ணை மடல்


சைவம் ஊர்களுக்கு ஒரு வரலாறு தந்தது. அப்பர் ஆனைக்கா பதிகத்தில் அதன் புராண வரலாறை கூறுகிறார். அதில் யானை இறக்க காரணமாக இருக்கும் சிலந்தி ஒரு சோழன். சங்க காலத்தில் உறையூருக்கு கோழி என்னும் பெயர் மட்டுமே உள்ளது. ஆனால் கோழி யானையை வென்ற ஊர் என்னும் செய்தி தேவார பாடல்களில் தான் கிடைக்கிறது. வெல்லப்பட்ட யானை வேறு குடியின் குலச்சின்னமாக இருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. 


பரணர் தித்தன் என்னும் வேளின் ஊராக உறையூரை சொல்கிறார், நக்கீரர்தான் சோழன் உறந்தை என்கிறார். இந்த யானை எனும் தொன்மம் காவிரிக்கரை நெடுக காணக்கிடைக்கிறது. வயல்வெளி ஒன்றில் பலகைக்கல் சிற்பம் ஒன்றை கண்டெடுத்தோம், அதில் யானை நாகம் மீது நிற்கிறது. நாகம் சோழர்களோடு தொடர்புடையது, தாலமி சோழ நாகர் என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். பலகைக்கல் சிற்பம் யானை நாகத்தை வென்ற வேறொரு கதையை நமக்கு சொல்ல வருகிறது. இவ்வாறு பக்தி இலக்கியங்களிலிருந்து இன்னும் நாம் கண்டுபடிக்காதவை எத்தனையோ உள்ளன.


 தங்களுக்கு பிடித்த வரலாற்று ஆய்வாளர்கள் யார்?


கே.என்.சிவராஜபிள்ளை மிகவும் முக்கியமானவர். சங்க பாடல்களை கொண்டு பண்டைத் தமிழர்களின் காலவரிசையை ஆய்வு செய்தவர். கிழார்களின் அழிவின் மீதுதான் அரசர்கள் உருவானார்கள் என்பார். ஏறத்தாழ பத்து தலைமுறையை விரிவாக ஆய்வு செய்திருக்கின்றார் (The Chronology of the Early Tamils). பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் செய்த தமிழர்கள் வரலாறு ஆய்வும் முக்கியமானது History of the Tamils: From the Earliest Times to 600 A.D. இவையெல்லாம் காலத்தால் முற்பட்ட ஆய்வுகள் என்பதால் அதையொட்டிய குறைகள் இருக்கலாம், ஆனால் அவர்கள் நமது இன்றைய ஆய்வுக்கு முன்னோடிகள். அதன் பிறகு இலங்கையிலிருந்து கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றனர். சி.க,சிற்றம்பலம் இலங்கை ஆய்வாளர்களில் முக்கியமானவர். துரை ரெங்கசாமி அவர்களுடைய Religion and philosophy of tevaram எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அவருடைய சைவ சமயம், ஆகமம் தொடர்பான அறிவுத்தேடல் எப்போதும் நம்மை வியக்க வைப்பது. A.L.பாஷம் அவர்களுடைய ஆஜிவகர்கள் குறித்த புத்தகமும் அப்படித்தான் (The History and Doctrines of the Ajivikas). ஷெரின் ரத்னாகரின் சிந்துவெளி ஆய்வுகள் முக்கியமான ஒன்று. தொல்லியலில் களஆய்வு முக்கியமானதுதான், ஆனால் அதை பொருள்கொண்டதாக மாற்ற ஆய்வாளனுக்கு வாசிப்பு அதிகம் தேவைப்படுகிறது. 



இன்றைய ஆய்வாளர்களுக்கு தொல்லியல் குறித்த அடிப்படை புரிதல்கள் எந்த அளவுக்கு அவசியம்? 


ஓவ்வொரு காலத்திலும் தொல்லியல் என்றால் என்ன என்ற அடிப்படை கேள்வி எழுகிறது, எப்போதும் அது அன்றைய நவீனத்தின் பார்வையால் ஆனதாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லுவேன். 


உலக அளவில் ஆய்வு என்பது பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது, பல விஷயங்களை சொல்லலாம். ஆய்வாளர்கள் தனது முன்னோடி ஆய்வுகளை எவ்விதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு முக்கியமான விஷயம். கோண்டு பழங்குடிகளை குறித்து F.G.Bailey எழுதிய ஆய்வு நூல் Tribe caste nation. இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து இவர்களின் குடியமைப்பை சோழர் அரசாட்சியுடன் ஒப்பிடுகிறார் Burton Stein. இது தவறான புரிதலுக்கு வழி வகுக்கும். அதேசமயம் ஆய்வாளர் இர்பான் ஹபீப் முகலாய ஆட்சிக்காலம் குறித்த அக்பரது இந்தியா என்னும் நூலை எழுதினார். இதற்கு முன்பு வந்த இரு முகலாய ஆய்வு நூல்களின் குறைகளை உணர்ந்து அவற்றை நீக்கியதும் இது சிறந்த புத்தகமாக ஆகிவிட்டது. வேளாண்மை குறித்த இவரது ஆய்வு இன்று உலக அளவில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருக்கு பெர்ஷியன் மொழி தெரியும், அதன் வார்த்தைகளை சரியாக புரிந்துகொண்டார். நல்ல ஆய்வு என்பது அதுபோல பல்துறை அறிவை உள்ளே கொண்டுவருவதாக அமைய வேண்டும். இன்று பல ஆய்வாளர்கள் செய்வது புத்தக ஆய்வு, அதன் மூல சான்றுகளை அவர்கள் சரிபார்ப்பது கூட இல்லை. 


கொங்கு பகுதியில் நீண்ட காலம் ஆய்வு செய்திருக்கிறீர்கள் இன்னும் செய்யவேண்டியதாக எதை கருதுகிறீர்கள்? 


கொடுமணல் ஆய்வு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம் எங்களது துறையும் அகழாய்வாய் மேற்கொண்டது. கொடுமணல் ஆய்வில் நமக்கு நிறைய எழுத்துப்பொறிப்பு கொண்ட ஓடுகள் கிடைக்கின்றன. அந்த எழுத்துக்களை சொற்களை ஆய்வு செல்ல இடமிருக்கின்றது. அந்த இடத்திற்கும் வடபுலத்திற்குமான தொடர்பு அந்த பெயர்கள் மூலம் உறுதியாகிறது. திச என்னும் சொல் இலங்கையை தொடர்புறுத்துகிறது. ஒரு ரோமானிய பாண்டத்தின் உடைந்த துண்டு கிடைக்கிறது. 


கொடுமணல் அகழாய்வில் கிடைத்த எழுத்துப்பொறிப்புள்ள பானை

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மணிகள்

சங்க இலக்கியத்தில் காணமுடியாத சொற்கள் இங்கு கிடைக்கின்றன. ‘அந்தை’ என்னும் சொல் பத்து இடங்களில் உள்ளது. கல்வெட்டுகளில் முதலில் அந்தை என்னும் சொல் எட்டாம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது தோகைமலையில் இவ்வூர் தந்தை என்னும் சொற்றொடர் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. மைய திராவிட மொழியானது கீழே வருகையில் சகரம் கெட்டு வரும். ஆட்டை குறிக்கும் சிடை என்னும் சொல் இடை என்னும் சொல்லாக திரிகிறது. அதுபோல சந்தை என்னும் சொல் அந்தை என்று மாறலாம். 


கொங்கு மக்களின் வாழ்வியலும் முக்கியமானதுதான். பல சங்ககால மரபுகள் அப்பகுதியில் வழங்கப்படுகின்றன. திருமணத்தில் நாட்டுக்கல் பார்க்கிறது என்று ஒரு சடங்கு உண்டு. மணப்பெண் ஒரு இடத்தில் அமரவைக்கப்பட்டு அவர் உடலில் கை கால்களில் வடைகள் வைக்கப்படும். இது சந்தி வழிபாடு எனும் முறையை ஒத்திருக்கிறது. பழங்குடிகளில் இது போன்ற ஒரு வழக்கம் உண்டு. இது மூன்று இடம் கூடும் இடத்தில் நிகழும். நடுகற்கள் வைக்கும் இடமும் இதுபோன்ற ஒன்றுதான். பருத்திப்பெண்டிர் என்னும் வழக்கத்தை பார்த்திருக்கிறேன், கணவனை இழந்த பெண்ணிற்கு நூல் நூற்கும் தக்ளியை வழங்குவார்கள். ஆய்வு செய்தால் இன்னும் பல சங்ககால சடங்குகளை அறியலாம். இவற்றை எல்லாம் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன், இது எனது ஆய்வுக்களம் இல்லையோ என்ற தயக்கமும் இருக்கிறது. ஆனால் நான் கண்டுபிடித்த 30 சதவிகித தொல்லியல் சான்றுகள் எனது கண்முன்னால் இன்று இல்லை, அழிந்து விட்டன. இந்த பழைமையான பழக்கங்கள் தெரிந்தவர்களும் இன்று குறைந்து வருகின்றனர். 



நீங்கள் நடத்தும் தொல்லியல் வகுப்புகளை எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்? 


இன்றும் வாசிக்கிறேன், அது இல்லாமல் முடியாது. ஆரம்ப காலத்தில் நான் வாசித்த நேஷனல் ஜியாகிராபி புத்தகத்தின் வரலாற்றுக் கட்டுரைகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. கள ஆய்வு அனுபவங்கள் முக்கியமானவை. உள்ளூர் தொல்லியல் சான்றுகளை அண்டை மாநிலங்களின் சான்றுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். தாய்தெய்வ விசிறிக்கற்கள் நம்மிடம் இரண்டுதான் உள்ளன, ஆந்திராவில் பல இருக்கிறது. சிந்து நாகரிகம் மட்டுமல்ல, இஸ்ரேல், ஆப்கானிய நாகரிகங்களையும் சேர்த்து பார்க்க ஒரு தொல்லியலாளனுக்கு கற்பிக்க வேண்டும். நான் உலக அளவிலான தொல்லியல் ஆய்வுகளில் ஒரு சதவிகிதம் தான் கற்க முடிந்தது. இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதிகளால் இப்போது அதிகம் கற்றுக்கொள்கிறேன். எனது வகுப்பறை எப்போதும் கலகலப்பாகத்தான் இருக்கும், கலந்துரையாடலை ஊக்குவிப்பேன், எந்தக்கேள்வியையும் தவறு என்று கருதுவதில்லை. 


சந்திப்பு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி, அனங்கன். 


ர பூங்குன்றன் புத்தகங்கள் 

  • தொல்குடி - வேளிர் - அரசியல் - Heritage Treasure Publishers 
  • நடுகல் கல்வெட்டுகள் - Heritage Treasure Publishers 
  • தொல்குடி வேளிர் வேந்தர் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 
  • வேளிர் வரலாறு - தடாகம் 
  • பண்டைய தமிழ் சமூகம் (ர பூங்குன்றன்,கோ சசிகலா) - தடாகம் 
  • கொற்றவையும் நடுகற்களும் (ர பூங்குன்றன், கோ சசிகலா) - தடாகம் 
  • பேரிசை நவிரம் -பணிப்பாராட்டு ஆய்வுநூல் - திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம்

புகைப்படங்கள் உதவி: தமிழ் இணையக்கல்வி கழகம், ஜெயக்குமார், து.சுந்தரம், ஸ்ரீதரன், வேலுதரன்