Saturday 30 December 2023

அறிவியல் மாற்றங்களும் அறிவியல் புரட்சிகளும்: பகுதி 1 - சமீர் ஒகாஸா

அறிவியல் கோட்பாடுகள் மிக வேகமாக மாறி வருகின்றன. உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு அறிவியல் துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலுள்ள பல முக்கியமான கோட்பாடுகள் 50 வருடங்களுக்கு முன்பிருந்த கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டு காணப்படும், 100 வருடங்களுக்கு முன்பிருந்த கோட்பாடுகளிலிருந்து முழுவதுமாக வேறுபட்டிருக்கும். வேறு அறிவுத் தளங்களுடன் ஒப்பிடும் போது அறிவியல் மிக வேகமாக மாறிவரும் துறை. இந்த மாற்றத்தை மையமாகக் கொண்டு பல சுவாரஸ்யமான தத்துவக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன: காலப்போக்கில் அறிவியல் கருத்துக்கள் மாற்றமடைவதில் தெளிவான வடிவம் ஏதாவது உள்ளதா? அறிவியலாளர்கள் தங்களின் தற்போதைய கோட்பாடை புதிய கோட்பாடுக்காக கைவிடும் போது அதை எப்படி விளக்கிக்கொள்வது? புதிதாக வந்த கோட்பாடுகள் அதற்கு முன்பிருந்த கோட்பாடுகளை விட புறவயமாக சிறந்தவையா?

தாமஸ் குண்

இந்த கேள்விகள் மீது விவாதங்கள் எழுவதற்கு தாமஸ் குண் (Thomas Kuhn) என்ற அமெரிக்க வரலாற்றாய்வாளர் மற்றும் அறிவியல்-தத்துவவாதி வழிவகுத்தார். 1960இல் குண் The Structure of Scientific Revolutions என்ற நூலை எழுதினார். இது அறிவியல்-தத்துவத்தில் அதிக செல்வாக்கை செலுத்திவரும் நூல். இதன் தாக்கம் சமூகவியல், மானுடவியல் போன்ற கல்வித் துறைகளிலும், அறிவார்ந்த குழுக்களிலும் பெருமளவு காணப்படுகிறது. (கார்டியன் நாளிதழ் ’அறிவியல் புரட்சிகளின் கட்டமைப்பு’ நூலை 20ஆம் நூற்றாண்டில் அதிக செல்வாக்கு செலுத்திய 100 நூல்களின் பட்டியலில் சேர்த்துள்ளது). இது ஏன் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அந்நூல் வெளிவருவதற்கு முன்பிருந்த அறிவியல்-தத்துவத்தின் நிலையை நாம் சுருக்கமாக பார்க்கவேண்டும். 

தர்க்க-புலனறிவாளர்களின் அறிவியல் தத்துவம் 

உலகப்போருக்குப் பின் ஆங்கிலம் பேசும் நாடுகளில் அதிக மேலாதிக்கம் செலுத்திய தத்துவ இயக்கம் தர்க்க-புலனறிவுவாதம் (logical empiricism). துவக்கத்தில் தர்க்க-புலனறிவாளர்களின் குழு தத்துவவாதிகள், தர்க்கவியல் அறிஞர்கள், மற்றும் அறிவியலாளர்களைக் கொண்டிருந்தது. இவர்கள் 1920களிலும், 1930இன் முற்பகுதியிலும் வியன்னாவில் சந்தித்துக்கொண்டனர். (நாம் பகுதி 3ல் பார்த்த கார்ல் ஹெம்பெலும் கார்ல் பாப்பரைப் போலவே இக்குழுவுடன் மிக நெருக்கமான தொடர்புடையவர்). நாசிக்களின் அடக்குமுறையினால் பல தர்க்க-புலனறிவாளர்கள் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தனர். அங்கு அவர்களும் அவர்களை பின்பற்றுபவர்களும் தத்துவக் கல்வியில் 1960களின் மத்திய காலகட்டம் வரை அதிக செல்வாக்கை செலுத்தினர். ஆனால் அப்போதே இந்த இயக்கம் தளரவும் தொடங்கியிருந்தது. 

தர்க்க-புலனறிவாளர்கள் இயற்கை-அறிவியல் (natural science), கணிதம், தர்க்கம் ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்தினர். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிவியல் அற்புதமான முன்னேற்றங்களைக் கண்டது, குறிப்பாக இயற்பியலில். இது அவர்களை மிகவும் கவர்ந்தது. அவர்களின் ஒரு நோக்கம் தத்துவத்தை அறிவியல்ரீதியாக ஆக்குவது. ஏனென்றால் அறிவியலைப் போலவே தத்துவத்திலும் முன்னேற்றங்களைக் கொண்டுவர முடியும் என நம்பினர். எந்த விஷயம் தர்க்க-புலனறிவாளர்களை அறிவியல் நோக்கி ஈர்த்தது என்றால் அதன் தெளிவான புறவயத்தன்மையே. கேள்விகளுக்குப் பெரும்பாலும் அகவயமான பதிலையே தரும் மற்ற துறைகளைப் போலல்லாமல் அறிவியலின் கேள்விகளை முழுமையாக புறவயமான வழியில் தீர்க்கமுடியும் என அவர்கள் நம்பினர். ’பரிசோதனை வழியாக சோதித்தல்’ போன்ற நுட்பங்களால் ஒரு அறிவியலாளர் தனது கோட்பாட்டை நேரடியாக மாறாவுண்மைகளுடன் (fact) ஒப்பிட முடிகிறது. எனவே அவர் கோட்பாடின் விளைவுகள் குறித்து தெளிவான, நடுநிலையான முடிவை அடைகிறார். தர்க்க-புலனறிவாளர்களைப் பொருத்தவரை அறிவியல் என்பது பகுத்தறிவு செயல்பாட்டுக்கான ஒரு மாதிரி உதாரணம், உண்மையை அடைவதற்கு உறுதியான பாதை.


அறிவியல் மீது அதிக மதிப்பு வைத்திருந்த போதிலும் தர்க்க-புலனறிவாளர்கள் அறிவியல்-கோட்பாடுகளின் வரலாறு மீது கவனம் செலுத்தவில்லை. இதற்கு முக்கியமான காரணம் ‘கண்டுபிடிப்புச் சூழல்’ (context of discovery) மற்றும் ‘நிரூபனச் சூழல்’ (context of justification) என அவர்கள் குறிப்பிடுபவைகளுக்கு இடையே கூர்மையான வேறுபாட்டை வரைந்து வைத்திருந்ததே. கண்டுபிடிப்புச் சூழல் என்பது ஒரு அறிவியலாளர் ஒரு கோட்பாடை அடைவதற்கான வரலாற்றுரீதியான வழிமுறையைக் குறிக்கிறது. நிரூபனச் சூழல் என்பது ஒரு அறிவியலாளர் தான் அடைந்த கோட்பாடை நிரூபிக்க முயற்சிக்கும் வழிமுறையைக் குறிக்கிறது. இது கோட்பாட்டை சோதிப்பது, தொடர்புடைய சான்றுகளைத் தேடுவது, அதை எதிர் கோட்பாட்டுடன் ஒப்பிடுவது ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. தர்க்க-புலனறிவாளர்கள் கண்டுபிடிப்புச் சூழல் அகவயமானது, உளவியல் சம்பந்தமானது, துல்லியமான விதிகளால் வரையறுக்கப்படாதது என நம்புகின்றனர். அதே சமயம் நிரூபனச் சூழலை தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட புறவயமான விஷயம் என்றனர். அறிவியல்-தத்துவவாதிகள் நிரூபனச் சூழலையே ஆராய வேண்டும் என தர்க்க-புலனறிவாளர்கள் சொல்கின்றனர். 

ஒரு உதாரணம் இந்த கருத்தை தெளிவுபடுத்த உதவும். பென்சீன் (benzene) மூலக்கூறு அறுங்கோண வடிவில் இருப்பதை 1865இல் பெல்ஜிய அறிவியலாளர் கேகுளே (Kekule) கண்டறிந்தார். அவரின் கனவில் நாகம் ஒன்று தனது வாலை கவ்வ முயற்சிப்பதைக் கண்டார் (கீழேயுள்ள படத்திலிருப்பது போல). இதன் பிறகே தான் பென்சீன் மூலக்கூறின் அறுங்கோண வடிவ கருதுகோளை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 


இக்கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் கேகுளே இதை அறிவியல் ரீதியாக சோதனை செய்ய வேண்டும். இது அரிதான ஒரு உதாரணம் தான். இருந்தாலும் அறிவியல் கருதுகோள்கள் சாத்தியமேயில்லாத வழிகளில் வருகிறது - அதாவது அவை எப்பொழுதும் கவனமான, முறைப்படுத்தப்பட்ட சிந்தனைகளிலிருந்து வருவதில்லை என்பதைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் ஒரு கருதுகோள் எப்படி வருகின்றது என்பதில் எந்த வேறுபாடும் கிடையாது என தர்க்க-புலனறிவாளர்கள் சொல்கின்றனர். அக்கோட்பாட்டை எப்படி சோதனை செய்கிறோம் என்பதே முக்கியமான விஷயம். இதுவே அறிவியலை பகுத்தறிவுச் செயல்பாடாக ஆக்குகிறது. 

தர்க்க-புலனறிவாளர்களின் மற்றொரு பேசுபொருள் கோட்பாடுக்கும் அவதானித்த மாறாவுண்மைகளுக்கும் (facts) இடையிலான வேறுபாடு. இது பகுதி 4ல் விவாதித்த அவதானிக்க-இயல்பவைக்கும் அவதானிக்க-இயலாதவைக்குமான வேறுபாட்டுடன் தொடர்புடையது. தரவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடுகளுக்குப் பொருந்தினால் அவற்றில் எதைத் தேர்வு செய்வது என்பதை அக்கோட்பாடுகளை நேரடியாக ’நடுநிலை-மாறாவுண்மைகளுடன்’ (neutral observational facts) ஓப்பிடுவதன் மூலம் முற்றிலும் புறவயமான வழியில் தீர்க்கமுடியும் என நம்பினர். இது எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. இந்த நடுநிலை-மாறாவுண்மைகளின் (neutral facts) இயல்பை எப்படி சரியாக வரையறுப்பது என்பதில் தர்க்க-புலனறிவாளர்களுக்கு இடையிலேயே பல விவாதங்கள் நடைபெற்றன. எனினும் நடுநிலை-மாறாவுண்மைகள் உள்ளன என்பதில் உறுதியாக இருந்தனர். கோட்பாடுகளுக்கும் அவதானித்த மாறாவுண்மைகளுக்கும் இடையே தெளிவான வேறுபாடு இல்லாவிட்டால் அறிவியலின் புறவயத்தன்மை மற்றும் பகுத்தறிவுதன்மை ஆகியவற்றில் சமரசம் செய்ய நேரிடும். எனினும் அவர்கள் அறிவியல் பகுத்தறிவானது, புறவயமானது என்ற தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். 

அறிவியல் புரட்சிகள் பற்றிய குண்ணின் கோட்பாடு 

குண் அறிவியல்-வரலாற்று ஆசிரியராக பயிற்சி பெற்றவர். தத்துவவாதிகள் அறிவியலின் வரலாற்றைப் படிப்பதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என நம்பியவர். அறிவியல் வரலாற்றின் மீது போதுமான கவனம் செலுத்தாததால் தர்க்க-புலனறிவாளர்கள் ஒட்டுமொத்த அறிவியலின் சித்திரத்தையும் தவறாக, மிக எளிமையாக உருவாக்கினர் என குண் சொல்கிறார். அவருடைய புத்தகத்தின் தலைப்பு குறிப்பிடுவது போலவே குண் அறிவியல் புரட்சியில் ஆர்வமுடையவர். அறிவியல் புரட்சி என்பது அறிவியலில் நடந்த பெரும் எழுச்சியின் காலகட்டத்தைக் குறிக்கிறது. அந்த காலகட்டத்தில் அப்போதிருந்த அறிவியல் கருத்துக்கள் புதியவற்றால் வேகமாக மாறிக்கொண்டிருந்தன. அறிவியல் புரட்சிக்கான உதாரணங்கள் என வானியலில் கோபர்நிக்கஸ் புரட்சி, இயற்பியலில் ஐன்ஸ்டின் புரட்சி, உயிரியலில் டார்வின் புரட்சி போன்றவற்றை சொல்லலாம். இந்த ஒவ்வொரு புரட்சியும் அறிவியல்சார் உலகநோக்கில் (Worldview) அடிப்படை மாறுதல்களைக் கொண்டுவந்தன. அந்த மாறுதல்கள் முற்றிலும் வேறுவகையான புதிய கருத்துக்களால் அப்போதிருந்த கருத்துக்களைத் தூக்கியெறிந்தன. 

அறிவியல் புரட்சி அரிதாக நிகழக்கூடிய ஒன்று. பலசமயம் எந்த அறிவியல் துறையும் புரட்சிகர நிலையில் இருக்காது. அறிவியல் துறைகள் புரட்சிகர மாற்றத்துக்கு உட்படாமல் இருக்கும் போது அத்துறைகளில் அறிவியலார்கள் ஈடுபடும் வழக்கமான அன்றாட நடவடிக்கைகளை விவரிக்க குண் ‘இயல்புநிலை அறிவியல்’ (normal science) என்ற சொல்லை உருவாக்கினார். இயல்புநிலை அறிவியல் என்பது ஒரு கருத்தோட்டம் (Paradigm, இதை சிந்தனை-சட்டகம் என்றும் குறிப்பிடலாம்). ஒரு கருத்தோட்டம் இரண்டு முக்கியமான பகுதிகளைக் கொண்டது. ஒன்று - ஒரு அறிவியல் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை கோட்பாட்டு ஊகங்களின் தொகுப்பு. இரண்டாவது - அந்த கோட்பாட்டு ஊகங்களால் தீர்க்கப்பட்ட அறிவியல் சிக்கல்களின் தொகுப்பு. இந்த சிக்கல்கள் தான் அந்தந்த துறைகளின் மையப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் கருத்தோட்டம் என்பது கோட்பாட்டை விட மேலானது (குண் சில நேரங்களில் கோட்பாடு மற்றும் கருத்தோட்டம் ஆகிய வார்த்தைகளை மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும்). அறிவியலாளர்கள் ஒரு கருத்தோட்டத்தை வெளியிடும் போது சில அறிவியல் செயல்திட்டங்களை (Propositions) மட்டும் முன்வைப்பதில்லை. கூடவே அந்தத் துறையில் எப்படி எதிர்கால அறிவியல் ஆராய்சிகள் தொடர வேண்டும், எந்த சிக்கல்கள் தீர்வுகாணத் தகுதியானவை, அந்த சிக்கல்களைத் தீர்க்க எந்த முறைகள் பொருத்தமானவை, அந்த சிக்கல்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எப்படி இருக்கும் என்பது போன்ற பலவற்றை அவர்கள் முன்வைக்கின்றனர். சுருக்கமாகப் பார்த்தால், கருத்தோட்டம் என்பது ஒரு முழு அறிவியல் கண்ணோட்டம். இது ஊகங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரும் தொகுதி. இது அறிவியல் சமூகத்தை இணைக்கிறது மற்றும் இயல்புநிலை அறிவியல் நடைபெறவும் வழிவகை செய்கிறது.

இயல்புநிலை அறிவியலில் என்னதான் நடைபெறுகிறது? குண்னைப் பொறுத்தவரை இது அறிவியல் புதிர்களை, சிக்கல்களைத் தீர்க்கும் செயல்பாடு. ஒரு கருத்தோட்டம் எவ்வளவு வெற்றிகரமானதாக இருந்தாலும் எப்பொழுதுமே சில சிக்கல்களை சந்தித்துக் கொண்டே இருக்கும். எளிதில் ஒத்துபோகாத நிகழ்வுகள், கோட்பாடின் கணிப்புகளுக்கும் பரிசோதனையில் கண்டறிந்த மாறாவுண்மைகளுக்கும் இடையிலான பொருத்தமின்மை போன்றவை. இயல்புநிலை அறிவியலாளர்களின் பணி கருத்தோட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ளும் போது சிறுசிறு புதிர்களை நீக்க முயற்சிப்பதே. எனவே இயல்புநிலை அறிவியல் என்பது கட்டுக்குள் வைக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. இதில் புழங்குபவர்கள் தற்போதுள்ள கருத்தோட்டத்தை மேம்படுத்தவும் விரிவாக்கவும் மட்டுமே செய்வார்கள். உலகத்தை உலுக்கக் கூடிய அளவிலான எந்தக் கண்டுபிடிப்பையும் செய்ய முயற்சிக்கமாட்டார்கள். இதையே குண்ணின் வார்த்தைகளில் பார்த்தால் ’இயல்புநிலை அறிவியல் மாறாவுண்மைகளில் அல்லது கோட்பாடுகளில் புதுமைகளை காண்பதை இலக்காகக் கொண்டிருக்காது மற்றும் எப்போதும் வெற்றிகரமாக ஒன்றை கண்டுபிடிக்காது’. அனைத்திற்கும் மேலாக, இயல்புநிலை அறிவியலாளர்கள் கருத்தோட்டத்தை சோதனை செய்ய முயற்சிக்கமாட்டார்கள் என்பதை அழுத்தமாக சொல்கிறார். மாறாக அவர்கள் எந்த கேள்வியுமில்லாமல் கருத்தோட்டத்தை ஏற்றுக்கொள்வார்கள். அது வரையறுத்த எல்லைக்குள்ளேயே தங்களின் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ஒரு இயல்புநிலை அறிவியலாளர் கருத்தோட்டத்துக்கு முரண்பாடான ஒரு பரிசோதனை முடிவைப் பெற்றால், அவர் தன்னுடைய சோதனை முறையில் தான் பிழை உள்ளது என்று கருதுவார், கருத்தோட்டத்தை தவறு என சொல்லமாட்டார். 

பொதுவாக இயல்புநிலை அறிவியலின் காலகட்டம் பல ஆண்டுகள் நீடிக்கும், சில நேரங்களில் நூறாண்டுகள் கூட. இந்தக் காலகட்டத்தில் அறிவியலாளர்கள் கருத்தோட்டத்தை படிப்படியாக சீரமைப்பார்கள் - மேம்படுத்துதல், விவரங்களைப் பூர்த்தி செய்தல், அதன் பயன்பாடுகளை விரிவாக்குதல். ஆனால் காலம் செல்லச்செல்ல முரண்பாடுகள் கண்டறியப்படும். அவை அறிவியலாளர்கள் எவ்வளவு கடுமையாக முயற்சித்தாலும் கருத்தோட்டத்துடன் எளிதில் பொருத்தமுடியாத நிகழ்வுகளாக இருக்கும். முரண்பாடுகள் எண்ணிகையில் குறைவாக இருக்கும் போது அவை புறக்கணிக்கப்படும். ஆனால் அவை மேலும் மேலும் குவியும்போது பதற்றம் பெருகி அறிவியல் சமூகத்தை சூழ்ந்துகொள்ளும். அப்போது தற்போதிருக்கும் கருத்தோட்டத்தின் மீதான நம்பிக்கை உடையும், இயல்புநிலை அறிவியலில் நடைபெறும் செயல்பாடுகள் நிறுத்தப்படும். இதை குண் ’புரட்சிகர அறிவியல்’ (Revolutionary science) காலகட்டத்தின் துவக்கம் எனக் குறிப்பிடுகிறார். இந்த காலத்தில் அடிப்படை அறிவியல் கருத்துக்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். பழைய கருத்தோட்டத்துக்கு மாற்றாக பல்வேறு கருத்தோட்டங்கள் முன்வைக்கப்படும். இறுதியில் ஒரு புதிய கருத்தோட்டம் நிறுவப்படும். அறிவியல் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதை ஏற்றுக்கொள்ள ஒரு தலைமுறைக் காலமாவது ஆகும். அக்கருத்தோட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு அறிவியல் புரட்சியின் நிறைவாகக் குறிக்கப்படும். எனவே ஒரு அறிவியல் புரட்சி என்பது பழைய கருத்தோட்டத்திலிருந்து புதிய கருத்தோட்டத்திற்கு மாறுவது. 

இயல்புநிலை அறிவியலின் நீண்டகால செயல்பாட்டை அறிவியல் புரட்சி உடைக்கிறது. புரட்சி முடிந்து மீண்டும் அறிவியல் ஒரு புது இயல்பு நிலைக்கு செல்கிறது. குறிப்பிட்ட காலம் கழித்து மீண்டும் புரட்சி ஏற்ப்படுகிறது. இந்த மாற்றம் தான் அறிவியல் வரலாற்றின் தன்மை என குண் வரையறுத்தார். பல அறிஞர்கள் இந்த வரையறையை ஏற்றுக்கொண்டனர். அறிவியல் வரலாற்றில் இருந்து எடுத்த பல உதாரணங்கள் குண்ணின் மாதிரிக்கு நன்கு பொருந்துகின்றன: டோலமியின் (ptolemy) வானவியலில் இருந்து கோபெர்னிகஸின் வானவியலுக்கு மாறியது, நியூட்டனின் இயற்பியலில் இருந்து ஐன்ஸ்டீனுக்கு மாறியது போன்றவை. இவற்றில் குண் விவரித்த பல அம்சங்கள் இருக்கின்றன. உண்மையில், டோலமிக் வானவியலாளர்களும் ஒரு கருத்தோட்டத்தையே கொடுத்தனர். அது பூமி பிரபஞ்சத்தின் மையத்தில் நிலையாக உள்ளது என்ற கோட்பாடின் அடிப்படையில் அமைந்தது. இது அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு பின்னடைவையும் தந்தது. இதுவே 18, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியூட்டோனியன் இயற்பியலாளர்களுக்கும் நடந்தது. அவர்களின் கருத்தோட்டம் நியூட்டனின் இயக்கம் மற்றும் ஈர்ப்பு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டு உதாரணங்களிலும் எப்படி ஒரு பழைய கருத்தோட்டத்துக்கு பதிலாக புதிய ஒன்று வைக்கப்படுகிறது என்பது குண்ணின் கூற்றுக்கு மிகத் துல்லியமாகப் பொருந்துகிறது. குண்ணின் கூற்றுக்கு நன்கு பொருந்தாத அறிவியல் புரட்சிகளும் உள்ளன. உதாரணமாக, 1950களிலும் 1960களிலும் உயிரியலில் நிகழ்ந்த மூலக்கூறு (molecular) புரட்சி. இருந்தாலும்கூட அறிவியல் வரலாற்றின் மீதான குண்ணின் வரையறை அதிக மதிப்பீடுகளைக் கொண்டது என்பதைப் பலர் ஏற்றுக்கொள்கின்றனர்.

ஏன் குண்ணின் கருத்துக்கள் பெரும் விவாத அலையைக் கிளப்பிவிட்டது? ஏனென்றால் அறிவியல் வரலாற்றை விவரிக்கும் கூற்றுகளுக்கு மேலதிகமாக சில சர்ச்சைக்குரிய தத்துவ விவாதக்கருத்துக்களையும் குண் முன்வைத்தார். அறிவியலாளர்கள் புதிய கோட்பாடுக்காக பழையதைக் கைவிடும் போது தகுந்த சான்றின் அடிப்படியிலேயே அவ்வாறு செய்கிறார்கள் என வழக்கமாக நாம் கருதுவோம். ஆனால் அறிவியலாளர்களின் தரப்பிலுள்ள பற்றின் (Faith) அடிப்படியிலேயே புதிய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என அவர் வாதிட்டார். அறிவியலாளர்கள் ஒரு பழைய கோட்பாட்டைக் கைவிட்டு புது கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு நல்ல பகுத்தறிவு காரணங்கள் இருக்கலாம் என்பதை ஏற்கும் குண், அந்த பகுத்தறிவு காரணங்கள் மட்டுமே ஒருபோதும் ஒரு கருத்தோட்ட மாற்றத்தைக் கட்டாயப்படுத்தி இருக்காது என சொல்கிறார். ”கருத்தோட்டத்தின் மீதான சார்பு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இடம்பெயர்வது ஒரு ’மாறுதல் அனுபவம்’ என்கிறார், அதாவது ஒருவர் வேறோரு மதத்திற்கு மாறுவது போல அறிவியலாளர்கள் புதிய கருத்தோட்டத்தை நோக்கி நகர்கின்றனர், இது கட்டாயப்படுத்தி நிகழக்கூடியதல்ல” என குண் எழுதியுள்ளார். ஆனால் ஒரு புதிய கருத்தோட்டம் ஏன் அறிவியல் சமூகத்தில் மிக விரைவாக ஏற்றுகொள்ளப்படுகிறது என்பதை விளக்கும் போது சக அறிவியலாளர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் அழுத்தமே அதற்குக் காரணம் என்பதை குண் சொல்கிறார். ஒரு கருத்தோட்டம் மிக வலிமையான ஆதரவாளர்களைக் கொண்டிருந்தால் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாயுப்புகள் மிக அதிகம். 

இந்த கூற்றுகளினால் குண்னுடைய விமர்சகர்கள் பலர் திகைப்படைந்தனர். கருத்தோட்ட மாற்றம் குண் சொல்வது போல இருந்தால் அறிவியலை எவ்வாறு ஒரு பகுத்தறிவு செயலாகக் கருதமுடியும்? அறிவியலாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை பற்று மற்றும் சக அறிவியலாளரின் அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் இல்லாமல் சான்றுகள் மற்றும் காரணங்களின் அடிப்படையில் கொண்டவர்கள் அல்லவா? போட்டியிடும் இரண்டு கருத்தோட்டங்களை எதிர்கொள்ளும் போது அறிவியலாளர்கள் அவற்றைப் புறவயமாக ஒப்பிட்டுத்தான் சான்றுகள் எதற்கு சாதகமாக உள்ளன என்பதை தீர்மானிக்கிறார்கள் அல்லவா? ‘மாற்றுதல் அனுபவ’த்திற்கு உட்படுவதோ அல்லது சக அறிவியலாளர்களில் வலிமைமிக்க ஒருவரால் மற்றவர்கள் சம்மதிக்கவைக்கப்படுவதோ ஒரு பகுத்தறிவான வழி போல் தெரியவில்லை. ஒரு விமர்சகர் ’அறிவியலில் கோட்பாடுத் தேர்வு கும்பல் மனநிலை சம்பந்தப்பட்ட விஷயம்’ என குண் சொல்வதாக எழுதியுள்ளார்.

மேலும் குண் அறிவியல் மாற்றத்தின் ஒட்டுமொத்தமான பாதையைப் பற்றிய சர்ச்சைக்குரிய வாதங்களையும் எழுப்பியுள்ளார். உண்மையை நோக்கிய அறிவியலின் நகர்வு நேர்கோட்டுப் பாதையில் உள்ளது என நாம் பரவலாக கருதுகிறோம். அதாவது பழைய தவறான கருத்து புதிய சரியான கருத்தால் மாற்றப்படுகிறது. புதிய கோட்பாடுகள் பழைய கோட்பாடுகளை விட சிறந்தவை, எனவே அறிவியல் அறிவு காலப்போக்கில் படிப்படியாக திரட்டப்படுகிறது. அறிவியலின் இந்த நேர்கோட்டுப் பாதை, மற்றும் திரட்டப்படுதல் ஆகிய கருத்துக்கள் சாதாரணமான மக்கள் மற்றும் அவர்களைப் போன்ற அறிவியலாளர்களிடம் பிரபலமாக உள்ளது. ஆனால் இக்கருத்து வரலாற்றுரீதியாக தவறானது என்றும், தத்துவார்த்தமாக மிக எளிமையானதும் கூட என்று குண் வாதிடுகிறார். 

உதாரணமாக, ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடானது சிலவற்றில் நியூட்டனின் கோட்பாட்டை விட அரிஸ்டாட்டிலின் கோட்பாட்டை ஒத்திருக்கிறது என குண் கருதுகிறார். எனவே இயக்கவியலின் வரலாறு தவறானதிலிருந்து சரியானதுக்கு என எளிய நேர்கோட்டுப் பாதையில் இல்லை. மேலும் ‘புறவயமான உண்மை’ என்ற கருத்தாக்கம் நிஜமாகவே பொருளுடையதா என்ற கேள்வியையும் குண் எழுப்புகிறார். ’எந்தவொரு குறிப்பிட்ட கருத்தோட்டதையும் சாராமல் உலகம் நிலையான மாறாவுண்மைகளைக் கொண்டுள்ளது’ என்ற எண்ணம் சந்தேகத்திற்குரியது என அவர் நம்பினார். குண் இதற்கு நேர்மாறான ஒன்றை பரிந்துரைத்தார்: உலகத்தைப் பற்றிய மாறாவுண்மைகள் (facts) கருத்தோட்டத்துடன் தொடர்புடையது, கருத்தோட்டம் மாறும் போது அவைகளும் மாறும். இந்த பரிந்துரை சரியானது என்றால் கோட்பாடு (theory) மாறாவுண்மைகளுடன் (facts) நிஜமாகவே ஒத்திருக்கிறதா எனக் கேட்பதிலும் மாறாவுண்மைகள் புறவயமாக சரியானதா எனக் கேட்பதிலும் எந்த அர்த்தமும் இல்லை. குண்ணின் இந்த வாதம் ரியலிச மறுப்புவாதத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்து அதற்கு மேலும் வலு சேர்த்தது. 

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

அறிவியல் தத்துவம் :: சமீர் ஒகாஸா - தொடர்