Thursday, 30 November 2023

கிறிஸ்துவின் சித்திரங்கள்: பகுதி 1 - தெய்வீக அம்சம் - தாமரைக்கண்ணன் அவிநாசி

மீட்பர், ஆண்ட்ரி ரூப்லெவ். ஸ்வெனிகோரோட், ரஸ்யா. 1410

 (1) 

கிறிஸ்துவின் உருவ விவரணைகள் பற்றி பைபிளில் எந்த குறிப்பும் இல்லை. அவரின் மரணத்திற்கு பிறகு எழுதப்பட்ட நற்செய்திகளிலும் (Gospels) குறிப்புகள் இல்லை. ஆனால் ஐரோப்பிய ஓவியங்களில் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்துவின் ஓவியங்களே. முதன்மையான ஐரோப்பிய அமெரிக்க அருங்காட்சியங்களிலுள்ள ஓவியங்களில் பெரும்பாலானவை கிறிஸ்துவின் சித்தரிப்புகளே. பிறப்பு, திருமுழுக்கு, சிலுவையேற்றம், சிலுவையிலிருந்து இறக்குதல், உயிர்த்தெழல் என அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்களும், மடோனாவுடன் குழந்தையாக, அரசனாக, புனித இருதயத்தை உடையவராக, அன்னை மடியில் இறந்து கிடப்பவராக, உடல்முழுதும் காயங்களுடன் மனிதர்களின் துயரங்களை சுமப்பவராக சித்தரிக்கும் வழிபாட்டு ஓவியங்களும் என பொ.யு.2ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரை 20 நூற்றாண்டுகள் தொடர்ந்து பல கலைஞர்களால் கிறிஸ்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். 

கிறிஸ்து வழிபாடு பொ.யு.முதலாம் நூற்றாண்டில் துவங்குகிறது. துவக்ககாலத்தில் யூதர்கள் அடங்கிய சிறுசிறு குழுக்களே வழிபாடு செய்தனர். “மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.” என்ற மோசஸின் இரண்டாவது கட்டளையின் காரணமாக அவர்கள் கிறிஸ்துவின் உருவங்களை சித்தரிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு வேறு இனங்கள் மதங்களில் இருந்தும் பலர் கிறிஸ்து வழிபாட்டில் இணையத் துவங்கினர். ஆனால் அதன் மீதிருந்த அரசின் தீவிர கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறையினால் மறைவான இடங்களில் மட்டுமே வழிபாடு நிகழ்கிறது. ஆகவே அப்போதும் கிறிஸ்துவின் உருவங்கள் சித்தரிக்கப்படவில்லை. எனினும் மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்து சார்ந்த சித்திரங்களை வைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் அக்காலத்தைய நூல் குறிப்புகளின் அடிப்படையில் ஊகிக்கின்றனர். இதற்கான தொல்லியல் சான்று சிரியாவின் டியுரா-யுரோபோஸ் (Dura-Europos) தொல் நகரில் கிடைத்துள்ளது.

கிறிஸ்துவின் உருவங்கள் சித்தரிக்கப்படுவதற்கு முன்பு முதலில் கிறிஸ்துவின் குறியீடுகள் பொறிக்கப்படுகின்றன. ரோமுடைய நகரங்களுக்கு வெளியே பூமிக்கடியில் வெட்டப்பட்ட கேடாகோப்ம்ஸ் எனப்படும் கல்லறைத்தொகுப்புகளில் இந்த குறியீடுகள் கிடைத்துள்ளன. இது பொ.யு.மூன்றாம் நூற்றாண்டில் துவங்குகிறது. இவை கிறிஸ்தவர்களை அடக்கம் செய்வதற்காக வெட்டப்பட்டவை. அவர்களின் எண்ணிக்கை பெரிதாக பெரிதாக பூமிக்கடியில் இவைகளும் பல அடுக்கு சவ அறைகள் கொண்டதாக, நீண்ட பாதைகள் கொண்டதாக ஆகியது. மக்கள் இதை இறந்தவர்களின் நகரம் என்றனர். ஆனால் கிறிஸ்தவர்கள் இதை செமிட்ரீஸ் (cemeteries), அதாவது இறந்தவர்கள் கிறிஸ்துவுடன் இணைவதற்கான இடம் என்றனர். சவ அறைகளை பளிங்குப்பலகை கொண்டு மூடினர். அப்பலகையில் இறந்தவரின் பெயர், அவரின் விஸ்வாச சாசன வரியுடன் கிறிஸ்துவின் குறியீடும் பொறிக்கப்பட்டிருக்கும். 

கிறிஸ்து மரணத்தை வென்றதன் குறியீடான சிலுவை அதில் அரிதாகவே பொறிக்கப்பட்டுள்ளது. அதுவும் சற்று மாறுபட்ட வடிவில் இருக்கும். உதாரணமாக நங்கூர வடிவம். ரோமில் நங்கூரம் நம்பிக்கையின் குறியீடு. இந்த அர்த்தத்திலும் மிகத்துவக்ககால கிறிஸ்தவர்கள் நங்கூர குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர். நங்கூரத்திற்கு அருகிலோ அல்லது தனியாக விஸ்வாச வரிகளுடனோ மிகப்பழமையான, கிறிஸ்துவின் குறியீட்டு வடிவமாகிய மீன் பொறிக்கப்பட்டிருக்கும். ஜீஸஸ், கிறிஸ்து, கடவுளின் மைந்தன் ஆகிய சொற்களுக்கான கிரேக்க சொற்களின் முதல் எழுத்துக்களை ஒன்றிணைத்தால் ichthys என்ற கிரேக்க வார்த்தை வருகிறது, இது மீனின் கிரேக்க சொல். மீனின் குறியீட்டை மேலும் விளக்குகிறார்கள். மீன் நீரில் வாழ்வது, நீரைக் கொண்டே ரட்சிப்புக்கு அவசியமான திருமுழுக்கு அளிக்கப்படுகிறது. மாற்கு நற்செய்தியில் கிறிஸ்து அப்பத்தையும் மீனையும் பெருக்கித் தருகிறார். இது திருவிருந்தின் (eucharist) உருவகமாக கருதப்படுகிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்து தைபிரிஸ் கடற்க்கரையில் தான் காட்சிதருகிறார். மீன் என்ற சொல் வழியாக கிறிஸ்தவத்தில் விஸ்வாசம் நம்பிக்கை ஆகிய கருத்துக்கள் ஒரு வார்த்தையாகிறது, பின்பு வார்த்தை குறியீடாகிறது, குறியீடு படிமமாக மொத்த சொற்களையும் மீண்டும் கொண்டுவருகிறது. 

மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டு, ரோம்
மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டு, ரோம்

கேடாகோப்ம்ஸ் கல்லறை பலகையில் பொறிக்கப்பட்டிருக்கும் மற்றொரு முக்கியமான குறியீடு ☧. இது Chi Rho எனப்படுகிறது. கிறிஸ்துவின் கிரேக்க பெயரான khristos என்பதின் ரோம எழுத்துரு ΧΡΙΣΤΟΣ. இதன் முதல் இரு எழுத்துகள் ΧΡ சேர்ந்த வடிவே Chi Rho என அழைக்கப்படும் ☧ குறியீடு. இது கிறிஸ்துவை சுட்டுகிறது, ஆனால் இது கிறிஸ்துவின் குறியீட்டு வடிவல்ல. இந்த குறியீடு மங்களம் என்ற பொருளுடைய கிரேக்க சொல்லான khrestos-ன் குறியாக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தது. பேரரசர் கான்ஸ்டன்டைன் இதை முதன்முதலில் ரோம முத்திரையாக பயன்படுத்துகிறார். இந்த குறியீடு கிரேக்கத்தின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களான ஆல்பா மற்றும் ஒமேகாவிற்கு நடுவில் இருக்கும். ஆகவே இவை “அகரமும் (ஆல்பா) னகரமும் (ஒமேகா) நானே; தொடக்கமும் முடிவும் நானே” என்ற கிறிஸ்துவின் வாக்கியத்தை எந்த சந்தேகமும் இல்லாமல் சுட்டுகிறது எனலாம். ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு இந்த முக்குறியீடுகளுக்கு பதிலாக கிறிஸ்துவின் லத்தின் எழுத்துரு LHSOUS-வின் முதல் மூன்று எழுத்துக்கள் LHS பொறிக்கப்படுகிறது. ஆனால் ☧ மற்றும் LHS ஆகிய இரண்டும் சுட்டுகின்ற அர்த்தங்கள் வேறுவேறானவை. பிற்காலத்தில் LHS என்பது ”கிறிஸ்து மனித குலத்தின் ரட்சகர்” (lesus hominum salvator) என்ற வார்த்தையின் சுருக்கம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆல்பா ஒமேகாவிற்கு நடுவில் Chi Rho குறியீடு. டோமிட்டிலா கேடாகோப்ம். ரோம்.
நங்கூரம், மீன், Chi Rho குறியீடுகள்

பளிங்கு மூடியில் காணப்படுவதில் மிக முக்கியமானது நல்மேய்ப்பர் வடிவம். இது கிறிஸ்துவின் உருவ சித்தரிப்பல்ல. கிறிஸ்து புனிதர் யோவான் நற்செய்தியில் ”நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்” (யோவான் 10.11) என்கிறார். இந்த உருவகத்தின் சித்தரிப்பே இது. தாடியற்ற இடையர் சிறுவனாக, அரைக்கால் சட்டையுடன், ஒரு ஆட்டை தோளில் சுமந்து கொண்டும் மற்றொரு ஆடு அவரின் கால்களுக்கு அடியில் இருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துவிற்கு முன்பே தொல் கிரேக்க மதத்தின் இறுதிச்சடங்கு நிகழும் இடங்களில் இத்தகைய வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வடிவம் Kriophoros எனப்பட்டது. இது மரணத்திற்கு பிறகான வாழ்வின் அமைதிக்கான குறியீடு. கிட்டத்தட்ட இதற்கு இணையான அர்த்தத்துடன் இவ்வடிவம் கிறிஸ்தவர்களின் சவப்பெட்டிகளில் பொறிக்கப்பட்டது. இறந்தவர்களின் ஆன்மாக்களை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர். 


கிறிஸ்து மேய்ப்பர், அதேசமயம் அவர் பலியாகின்ற ஆடும் கூட. ”இதோ! கடவுளின் ஆட்டுக் குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என கிறிஸ்துவை யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இவ்வடிவத்தையும் நல்மேய்ப்பர் வடிவத்தையும் குழப்பிக்கொள்வதை தடுக்க கேடாகோப்ம்ஸ்களில் ஆடு மட்டுமேயான வடிவம் பொறிக்கப்படவில்லை. பொ.யு.692-ல் கிரேக்க திருச்சபை கிறிஸ்துவை விலங்கு வடிவில் சித்தரிப்பதை தடைசெய்தது. எனினும் மேற்கில் இந்த பழக்கம் தொடர்ந்தது. 1200-களில் புனிதர் ப்ரான்சிஸ் ஆப் அசிசியின் தாக்கத்தால் உருவான இறையியலில் ’பலி ஆடு’ துயரை தாங்கியிருக்கும் மீட்ப்பரை சுட்டும் முக்கியமான குறியீடாக ஆகியது. 

பைபிளில் வரும் கிறிஸ்துவின் உருவகத்தை சார்ந்த மற்றொரு குறியீடு திராட்சைகளும், திராட்சைக் கொடிகளும். “உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்” (யோவான் 15.1) என்கிறார் கிறிஸ்து. இது நற்பேறையும் கிறிஸ்துவின் தியாகத்தையும் குறிப்பது. இது பழங்காலம் முதலே கிரேக்க-ரோம கடவுளான டையோனிசஸ் உடன் சம்பந்தப்பட்டது. அவரும் இறந்து, புதைக்கப்பட்டு, உயிர்த்தெழுந்தவர். ஆகவே இது மரணத்திற்கு பிறகான வாழ்வின் குறியீடாக இறுதிச்சடங்குகளில், சவப்பெட்டிகளில் அலங்கரிக்கப்பட்டது. கேடாகோப்ம்ஸ்களில் கிறிஸ்தவ சமாதிகளிலும் இது பொறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க-ரோம கல்லறைகளையும் கிறிஸ்தவ கல்லறைகளையும் வேறுபடுத்துவது என்னவெனில் கிறிஸ்தவ கல்லறைகளில் திராட்சைக்கொடி அல்லது திரட்சைகளுடன் Chi Rho குறியீடும் காணப்படும். 

திராட்சைக் கொத்துக்களும் திராட்சைக் கொடிகளும். நேப்பில்ஸ் கேடாகோப்ம், ரோம்

துவக்ககால சித்திரங்கள் கேடாகோப்ம்ஸ்களின் சவ மூடிகளில் மட்டும் காணப்படவில்லை. வீடுகளிலும் வரையப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். அதற்கான சான்று சிரியாவின் டியுரா-யுரோபோஸ் (Dura Europos) நகரிலிருந்த தேவாலயத்தில் கிடைத்துள்ளது. அந்நகரம் முற்றிலும் சிதைந்தே இன்று காணப்படுகிறது. அந்த தேவாலயம் வீடாக இருந்து வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ளது. பொ.யு.233 முதல் 256 வரை செயல்பட்டு வந்துள்ளது. அதன் சுவர்களில் கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்ட இரு ஓவியங்கள் கிடைக்கின்றன. முடக்குவாதமுற்றவனை கிறிஸ்து குணப்படுத்துவது, கிறிஸ்துவும் பீட்டரும் நீர் மீது நடந்து செல்வது ஆகியவை. நல்மேய்ப்பர் சித்தரிப்பும் உள்ளது. இவை உருவச்சித்தரிப்புகள் அல்ல. இவையே மிகப்பழமையான கிறிஸ்தவ ஓவியங்களாக கருதப்படுகின்றன. இவை கேடாகோப்ம்ஸின் குறியீட்டுச் சித்தரிப்புகளுக்கு சற்று பிந்தையவை. இங்கு பழைய ஏற்பாடு சார்ந்த சித்தரிப்புகளும் சுவரில் தீட்டப்பட்டுள்ளன. 

டியுரா-யுரோபோஸ்
இடம் - கிறிஸ்துவும் பீட்டரும் நீரின் மீது நடத்தல்.
வலம் - முடக்குவாதமுற்றவனை கிறிஸ்து குணப்படுத்துதல். 

கேடாகோப்ம்ஸ்களில் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் நான்காம் நூற்றாண்டுகளிலும் பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நல்மேய்ப்பர் சித்திரங்கள், கிறிஸ்து தன் நண்பர்கள் சூழ நடுவில் ஆசிரியராக அமர்ந்து அவர்களுக்கு கற்பிக்கும் சித்திரம் என பல சித்திரங்கள் உள்ளன. சிலவற்றில் அவர் அற்புதம் நிகழ்த்துவதற்கான கோலை நீட்டி அற்புதங்கள் நிகழ்த்துகிறார் (Christ the Miracle Worker அல்லது Christ the Wonder Worker), உதாரணமாக இறந்தவரை உயிர்த்தெழ வைத்தல். இவை அனைத்திலும் கிறிஸ்துவின் உருவங்கள் தெளிவாக வரையப்பட்டுள்ளன. இந்த மிகத்துவக்ககால சித்தரிப்புகளில் கிறிஸ்து தாடியற்ற ரோம இளைஞர் போல சித்தரிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாம் நுற்றாண்டு. பிரிசில்லா கேடாகோப்ம், ரோம்.
மந்திரக் கோலுடன் கிறிஸ்து
வலம் - இறந்தவரை உயிர்த்தெழ வைக்கிறார்
நண்பர்களுக்கு நடுவில் கிறிஸ்து
இதையடுத்து சிறிது காலத்திற்கு பிறகு கிறிஸ்துவை தாடியுடன் ரோம மதத்தின் தலைமை கடவுளான ஜூப்பிட்டரின் சாயலிலும் சித்தரிக்கத் துவங்கினர். ஒரே தேவாலயத்தில் கிறிஸ்துவின் தாடியுடைய வடிவமும் தாடியற்ற வடிவமும் வரையப்பட்டுள்ளன. எந்த வடிவத்தில் வரைவது என்பதற்கான சுதந்திரம் அவற்றை வரையும் கலைஞர்களின் விருப்பத்திற்கு விடப்பட்டிருந்தது. இவ்விரு வடிவங்களுமே இயேசுவின் தெய்வீகத்தன்மையை குறிப்பவை. கிறிஸ்துவின் தாடியற்ற இளம் முகம் கிரேக்க கடவுளான டையோனிசஸூடன் ஒப்பிடப்படுகிறது. இதே காலகட்டத்தில் கிரேக்க-ரோம கடவுள்களின் தலைக்கு பின்னால் ஒளிரும் ஒளிவட்டம் கிறிஸ்துவின் சித்தரிப்புகளிலும் இடம்பெறத்துவங்கிறது.

தாடியுடனும் ஒளிர்வட்டத்துடனும் கிறிஸ்து சித்தரிக்கப்பட்டிருக்கும் முதல் சித்தரிப்புகளில் ஒன்று. நான்காம் நூற்றாண்டு. கொமோடிலா கேடாகோப்ம், இத்தாலி.

மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு சர்கோபாகி (sarcophagi) எனப்படும் கல்லாலான சவப்பட்டிகளில் கிறிஸ்தவ சித்தரிப்புகள் செதுக்கப்படுகின்றன. இதிலிருக்கும் சிற்பங்களே பழமையான, அளவில் பெரிய கிறிஸ்தவ சிற்பங்கள். தந்தத்தால் ஆன பெட்டிகளிலும் கிறிஸ்தவ சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

நான்காம் நூற்றாண்டில் பெருவாரியான மக்கள் கிறிஸ்துவத்தை தழுவுகின்றனர். ரோமப்பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறுகிறார். உலக வரலாற்றில் இது மிக முக்கியமான நிகழ்வாக வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. பின் கிறிஸ்தவம் ஆட்சி மதமாக ஆகிறது. ஆகவே மெல்ல மெல்ல கேடாகோப்ம்ஸ்கள் கைவிடப்படுகின்றன. அவற்றில் ஒருசில மட்டும் புனித யாத்திரை செல்லும் இடமாக எஞ்சுகின்றன. நல்மேய்ப்பர் போன்ற வடிவங்கள் ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு சித்தரிக்கப்படுவது குறைகிறது. கிறிஸ்துவின் ஆளுமையில் அதிக கவனம் செலுத்தும் படைப்புகள் வருகின்றன. 

--------------------------

(2)

கிறிஸ்துவின் உருவம் பற்றி பைபிளில் எந்த குறிப்பும் இல்லை என்றாலும் அவரின் நிஜ சொரூபம் எப்படி இருந்தது என தனக்கு தெரியும் என்பதில் மத்தியகால ஐரோப்பா உறுதியாக இருந்தது. எல்லா இடங்களிலும் அவரின் திருமுக ஓவியங்கள் காணப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ரோமின் செயின்ட் பீட்டர் திருச்சபையிலுள்ள வெரோனிகா (Veil of Veronica) எனப்படும் அவரின் உண்மையான திருமுகத்தின் நகல் என சொல்லப்பட்டது. பிரபலமான கதையின் படி, கிறிஸ்து சிலுவையை சுமந்து கல்வாரி மலைக்குச் செல்லும் பாதையில் புனித வெரோனிகா அவரின் முகத்தில் வழியும் வியர்வையையும் ரத்தத்தையும் துடைக்க தன் துணியை கொடுக்கிறார். கிறிஸ்து தன் முகத்தை துடைத்த பின்பு திருப்பி வாங்கிப் பார்க்கும் போது துணியில் கிறிஸ்துவின் முக அமைப்பு பதிந்திருப்பதை காண்கிறார். இதை வெரோனிகா ரோமிற்கு எடுத்துச்சென்று பேரரசர் டைபீரியஸ்ஸிக்கு காண்பிக்கிறார். கிறிஸ்துவின் முகத்தைப் பார்த்தவுடன் அவரின் நோய் குணமடைகிறது. 

வெரோனிகா திரை

இந்த தொன்மம் பற்றியும் நற்செய்திகளில் எந்த குறிப்பும் இல்லை. இந்தக் கதையின் முதல் எழுத்துச் சான்று மத்தியகாலத்தில் தான் கிடைக்கிறது. வெரோனிகா திரை எட்டாம் நூற்றாண்டில் ரோமின் வெரோனிகா தேவாலயத்தில் இருந்திருக்கலாம் என ஊகிக்கின்றனர். 1300-ல் இக்கதை நிறுவப்பட்டு பிரபலமாக்கப்பட்டது. வெரோனிகா திரை மக்கள் முன் காண்பிக்கப்பட்டது. அந்நூற்றாண்டில் ரோம் திருச்சபையிலும் மேற்கு ஐரோப்பிய தேவாலயங்களிலும் வெரோனிகா திரை முக்கிய இடம் வகித்தது. ரோம திருச்சபை எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் வெரோனிகா திரையும் உடன் சென்றது என கலை வரலாற்றாய்வாளர் நீல் மேக்கிரிகோர் (Neil MacGregor) குறிப்பிடுகிறார். ஆனால் அதன் தோற்றம் பற்றி ஆய்வாளர்கள் உறுதியாக எதையும் சொல்லவில்லை. 

வெரோனிகா திரையை சுருக்கமாக வொரோனிகா என்கின்றனர். Sudarium என்ற லத்தீன் சொல்லாலும் குறிப்பிடுகின்றனர். இதற்கு வியர்வைத் துணி என்று பொருள். Vera (உண்மை) மற்றும் Icon (திருவுரு) என்ற இரு லத்தீன் சொல்லின் கூட்டே veronica என்ற சொல். ஆகவே இதற்கு உண்மையான திருவுரு என்ற பொருளுண்டு. 

The procession to calvary, Ridolfo Ghirlandaio, 1505-ஆம் ஆண்டாக இருக்கலாம்

வெரோனிகாவை காண மக்கள் ரோமிற்கு புனித யாத்திரை வந்தனர். ”அது காட்டப்பட்ட போது கிறிஸ்துவின் நிறைவான சாந்தமான பார்வையுடன் தொங்கிக்கொண்டிருந்தது” என தாந்தே குறிப்பிடுகிறார். பதினாறாம் நூற்றாண்டு பிரஞ்சு பயணி மாண்டெய்ன் ”இது போன்றதொரு பிரார்த்தனை வேறெதற்கும் நிகழ்ந்ததில்லை. மக்கள் இதன் முன் மண்டியிட்டு விழுகின்றனர். பெரும்பாலானவர்கள் கண்களின் கண்ணீர் வழிய துயருடன் கருணையுடன் விழிகளை உயர்த்தி அவரை நோக்குகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். வெரோனிகாவை தரிசிப்பது நோய்களை குணமாக்கும் என நம்பப்பட்டது. யாத்திரை வர முடியாதவர்களுக்கு, தொலைவான இடங்களுக்கு இதை பிரதியெடுத்து சென்றுள்ளனர். கிறிஸ்தவ மதத்தில் அதிகமாக பிரதியெடுக்கப்பட்ட ஓவியம் இதுவே. 

Saint Veronica with the Sudarium, பதினைந்தாம் நூற்றாண்டு. வரைந்தவர் Master of Saint Veronica

1527-ல் ஜெர்மனியர்கள் ரோமை முற்றுகையிட்ட போது வெரோனிகா அழிக்கப்பட்டது என்கின்றனர் சிலர். ரோமிலுள்ள மதுக்கடைகளுக்கு கைமாறி கைமாறி சென்றது என சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்கு பிறகும் பல கலைஞர்கள் வெரோனிகாவை பிரதியெடுத்துள்ளனர். ஆகவே இது ரோமிலேயே இருந்திருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. ஆனால் 1616-ல் போப் ஐந்தாம் பால் இதை பிரதியெடுப்பதை நிறுத்தினார். அடுத்து வந்த போப் பிரதிகளை அழிக்க ஆணையிட்டார். பிரதியை வைத்திருந்தால் வாடிகனுக்கு கொடுத்துவிட வேண்டும் என்றும் இல்லையெனில் திருச்சபையிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவித்தார். இன்றும் வெரோனிகா ரோமுக்கு யாத்திரை வருபவர்களுக்கு காண்பிக்கப்படுகிறது.


வெரோனிகா மட்டுமே ஒரேயொரு உண்மையான திருவுரு அல்ல. மேற்கின் வெரோனிகாவிற்கு முன்பே கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சபையில் மாண்டிலியன் ஆப் எடெசா (Mandylion of Edessa) என்ற கிறிஸ்துவின் திருவுரு இருந்தது. இதுவும் உண்மையான திருவுரு எனப்பட்டது. இது பற்றிய முதல் எழுத்துக் குறிப்பு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த குறிப்பில் கிடைக்கிறது. எடேசா இன்றைய சிரியாவின் உர்ஃபா (urfa) பகுதி. இங்கிருந்து 944-ல் காண்டண்டைன்நோபிலுக்குச் சென்று, 1203 வரை அங்கு புகழ்பெற்றிருந்தது. 1204-ல் நடந்த நான்காம் க்ருசேடர் தாக்குதலில் இது தொலைந்துவிட்டது. இன்று மாண்டிலியன் ஆப் எடெசா என சொல்லப்படும் இரண்டு ஓவியத்துணிகள் உள்ளன. 

இடம் - ஜெனோவா நகர தேவாலயத்திலுள்ள திருமுகம்
வலம் - சான் சில்வெஸ்ட்ரோ நகர தேவாலயத்திலுள்ள திருமுகம்

மாண்டிலியன் என்ற கிரேக்க வார்த்தைக்கு துணி என்று பொருள். இது அச்சிரோபொய்டா (Acheiropoieta) எனப்படும் மனித கை படாமல் அற்புதத்தால் உருவான புனிதப் பொருள்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. கிரேக்க மதத்தில் மனிதனால் அல்லாமல் சுயம்புவாக உருவான வழிபாட்டு பொருள்களை அச்சிரோபொய்டா என்றனர். 

கதைகளின் படி, கிறிஸ்துவின் காலத்தைச் சேர்ந்த எடேசாவின் அரசர் ஐந்தாம் அப்கர் (Abgar) நோய்வாய்ப்பட்டு கிடக்கும் போது, இயேசு நோய்களை குணப்படுத்தும் அற்புதத்தை கேள்விப்படுகிறார். எடேசாவிற்கு வந்து தன்னை குணப்படுத்துமாறு அழைப்பு விடுத்து கடிதம் எழுதி தன் ஏவலனிடம் கொடுத்தனுப்புகிறார். ஏவலன் ஓவியனும் கூட. அவர் வரவில்லை என்றால் அவரின் உருவத்தை துல்லியமாக வரைந்து வருமாறு கட்டளையிடுகிறார். ஏவலன் யுதேயாவிற்கு வந்து கடிதத்தை இயேசுவிடம் கொடுக்கிறான். இயேசு தான் வர இயலாது என்றும், ஆனால் அவரின் நோய் குணமாகும் என்றும் உறுதியளிக்கிறார். பின் தன் முகத்தை கழுவி ஒரு துணியால் துடைத்து அதை ஏவலனிடம் கொடுக்கிறார். அற்புதத்தால் இயேசுவின் முகம் அத்துணியில் பதிந்திருப்பதைக் காண்கிறான் ஏவலன். அதைக்கொண்டு எடேசாவிற்கு வந்து அரசரிடம் கொடுக்கிறான். அரசர் குணமடைந்து மதம் மாறுகிறார். 

எடேசாவின் அரசர் ஐந்தாம் அப்கர் கிறிஸ்துவின் திருமுகத்தை பெறுதல். புனித கேத்தரின் மடாலயம், எகிப்து. பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்

கிறிஸ்துவின் முழு உடலும் அவர் இறந்த பின்பு சுற்றியிருந்த 14 அடி நீளமுள்ள சவத்துணியில் பதிந்துள்ளது என இன்றும் வழிபாட்டில் உள்ளது. டுரின் சவத்துணி (Shroud of Turin) எனப்படும் அது இத்தாலியின் டுரின் நகர தேவாலத்தில் உள்ளது. கார்பன் டேட்டிங்கின் படி இது 1260-1390க்கு இடையில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இயேசுவின் உருவம் முன்புறமும் பின்புறமும் மங்கிய நிலையில் அதில் காணப்படுகிறது. இதை 1898-ல் முதன் முதலில் இத்தாலிய புகைப்படக்காரர் செகண்டோ பியா புகைப்படம் எடுத்தார். அந்த நெகட்டீவ் பதிப்பில் அத்துணில் பதிந்த இயேசுவின் முகம் தெளிவாக தெரியவந்தது. இதுவும் சட்டகமிடப்பட்டு வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. 

டுரின் சவத்துணி
டுரின் சவத்துணியிலுள்ள கிறிஸ்துவின் முகம்.
வலம் - 
செகண்டோ பியா எடுத்த புகைப்படம், 1898

--------------------------

(3)

கிறிஸ்து இறைவனா, இல்லை மனிதரா? எளியவரா, இல்லை அனைவருக்கும் மீட்ப்பை அளிக்கும் ரட்சகரா? 

கிறிஸ்து முழுமையாக மனிதன், அதேசமயம் முழுமையாக இறைவன். ”அவரே ஆல்பாவும் ஒமேகாவும், முதலும் முடிவும்” என்கிறது திருவெளிப்பாடு. கிறிஸ்தவம் மக்களிடையே சிறு மதமாக துவங்கி பெருமதமாக, ஆட்சி மதமாக வளர்ந்தது. ஆகவே எளியவர்கள் முதல் பேரரசர்கள் வரை அவரின் கொடியின்கீழ் திரண்டனர். ரட்சகரும் அவரே, பலியாவதும் அவரே. அரசர்களுக்கெல்லாம் அரசர், ஆனால் ’அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்’. இந்த இருமை நிலைகளை கலைஞர்கள் மிகச்சிறப்பாக கையாண்டுள்ளனர்.

முதன்முதலில் ’மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்கும்’ (Adoration of Magi) சித்தரிப்பில் இந்த இருமை நிலை கையாளப்பட்டுள்ளது. மனிதக்குழந்தையான இயேசு அன்னையின் மடியில் அமர்ந்திருக்க, மூன்று ஞானிகள் அவரை வந்து வணங்குகின்றனர். இந்த சித்தரிப்புகள் கேடாகோப்ம்ஸின் பளிங்குச் சவ மூடிகளிலும் சுவர்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. 

மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்குகின்றனர். மூன்றாம் நூற்றாண்டு.
மூன்றாம் நுற்றாண்டு. பிரிசில்லா கேடாகோப்ம், இத்தாலி.

எனினும் கிறிஸ்துவின் இருமை நிலை வெளிப்பட்ட முதல் புனித சித்தரிப்பாக (Icon) கருதப்படுவது எகிப்திய சினாய் (Sinai) தேவாலயத்தில் இருக்கும் பாண்டோக்ரேட்டர் (Pantocrator) ஓவியம். இதற்கு எல்லாம் வல்லவர் (Almighty), அனைத்தையும் ஆட்சி புரிபவர் (Ruler of all) என்று பொருள். இதன் காலம் ஆறாம் நூற்றாண்டு. இந்த கிறிஸ்துவின் திருமுகத்தில் வலப்பக்கம் ஒரு முகமும் இடப்பக்கம் வேறு முகமும் இருப்பதைக் காணலாம். கிறிஸ்துவின் வலப்பக்கம் தெய்வ அம்சம் பொருந்திய திருமுகம். இடப்பக்கம் மனித அம்சம் கொண்ட முகம். இந்த இருமுகத்தையும் கணினியில் வெட்டி அதன் பிம்பத்தை மற்றோருபக்கம் பொருத்தி காண்பித்ததில் இந்த இரு முகங்களின் அமைப்பைத் தெளிவாகக் காணலாம். 

பாண்டோக்ரேட்டர், சினாய், எகிப்து, ஆறாம் நூற்றாண்டு
பாண்டோக்ரேட்டர் திருமுகத்தின் இடப்பக்கத்தையும் வலப்பக்கத்தையும் பிரித்து அவற்றின் ஆடிபிம்பங்கள் மறுபக்கம் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒன்றிணைவை ஹைபோஸ்டேடிக் (Hypostatic) ஒன்றிணைவு என இறையியலில் குறிப்பிடுகிறனர். நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்தில் இயேசுவின் இருமை நிலை பற்றிய விவாதம் எழுந்த போது ஹைபோஸ்டாஸிஸ் என்ற கிரேக்க வார்த்தையை இதற்கு எடுத்துக்கொண்டனர். இதை mystical union என்றும் குறிப்பிடுகின்றனர்.

கிறிஸ்துவத்தின் துவக்ககாலத்தில் இருந்து மத்திய காலம்வரை அவரின் தெய்வீக அம்சத்திற்கே அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. உதாரணமாக ரோமில் சாண்டா புடென்சியானாவில் (Santa Pudenziana) இருக்கும் பொ.யு.420-ஐ சேர்ந்த ஓவியத்தையும், மான்ரியால் நகர தேவாலயத்திலிருக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாண்ட ஓவியத்தையும் எடுத்துக்கொள்ளலாம். இரண்டு ஓவியங்களிலும் சித்தரிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்து மென்மையானவர் அல்ல. அவர் அரசர், நீதிவழங்குபவர். சாண்டா புடென்சியானா ஓவியத்தில் ரோமநகர பின்னனியில் தன் திருத்தூதர்களுடன் அரியணையில் தெய்வீகமாக வீற்றிருக்கிறார். மான்ரியால் தேவாலயச்சுவரில் கிறிஸ்து பிரம்மாண்டமாக பிரபஞ்ச அரசராக வீற்றிருக்கிறார். பிற்காலத்தில் புனிதர் பெர்னார்ட் ஆஃப் கிளேர்வாக்ஸ் (Bernard of Clairvaux) மற்றும் புனிதர் ப்ரான்சிஸ் ஆப் அசிசி ஆகியோருக்குப் பிறகு கிறிஸ்துவின் மனித அம்சம் மீது கவனம் திரும்புகிறது. மனித குமாரனாக அவர் அடைந்த துயரமும் சிந்திய ரத்தமும் கலைகளில் முக்கிய இடம் வகிக்கத்துவங்குகிறது.

பொ.யு.420, சாண்டா புடென்சியானா, ரோம்
பன்னிரெண்டாம் நூற்றாண்டு. மான்ரியால் தேவாலயம், இத்தாலி.

எனினும் பிற்காலத்தில் கலைஞர்கள் கிறிஸ்துவின் இந்த இருமை நிலையை மிகச்சிறப்பாக, தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளனர். பெனெடெட்டோ போன்ஃபிக்லி (Benedetto Bonfigli) பதினைந்தாம் நூற்றாண்டில் குழந்தை இயேசுவை மூன்று ஞானிகள் வணங்கும் சித்தரிப்புடன் அருகிலேயே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும் வரைந்துள்ளார். கிறிஸ்துவின் இருமை நிலைகளை காட்டும் அழகிய ஓவியங்களில் ஒன்று இது. இந்த காலகட்டத்தில் கிழக்கில் இருந்து வந்த அம்மூவரும் அரச நிலைக்கு உயர்த்தப்படுகின்றனர். இவர்கள் இயேசுவை வழிபடுவது அவர் அரசர்களின் அரசர், பேரரசர் என்பதை சுட்டுகிறது. குழந்தை இயேசு முழுதுடலில் ஜொலிப்பது கிரேக்க-ரோம குழந்தைக் கடவுள் சிற்பங்களை ஒத்துள்ளது. அருகிலேயே எளிய மனிதராக துன்புற்று சிலுவையில் அறையப்பட்டு மரணித்துள்ளார். 

The Adoration of the Kings and Christ on the Cross, Benedetto Bonfigli, பதினைந்தாம் நூற்றாண்டு

முரில்லோ (Murillo) பதினேழாம் நூற்றாண்டில் வரைந்த சிறுவன் இயேசு அவரின் உடலளவிலான சிலுவை மீது மண்டையோட்டுடன் துயிலும் ஓவியம் கிறிஸ்து உலகின் நன்மைக்காக மரணிப்பதையே தன் விதியாகக் கொண்டு பிறந்திருப்பதை குறிக்கிறது. அன்பையும் மரணத்தையும் ஒருங்கே காண்பிக்கும் சித்தரிப்பு. இத்தகைய ஓவியங்கள் ஸ்பெய்னில் பரவலாக இருந்தது. தனிப்பட்ட வழிபாட்டுக்காக வரையப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இரு சிறு தேவதைகள் குழந்தை இயேசுவை வணங்குவது, பார்வையாளர்கள் இயேசுவை வணங்க அழைப்புவிடுக்கிறது. 

The Infant Christ Asleep on the Cross, Bartolomé Esteban Murillo, பதினேழாம் நூற்றாண்டு

இந்த வரிசையில் காண்பவரின் மனதில் ஆழமான தாக்கத்தை செலுத்துவது முரில்லோ வரைந்த The Heavenly and Earthly Trinities என்ற ஓவியம். இது அவரின் கடைசி ஓவியங்களில் ஒன்று. அவரின் மகத்தான ஓவியமும் கூட. இதில் இரண்டு மும்மைகள் (Trinity) உள்ளன. கீழே அன்னை மேரி, மைந்தன் இயேசு, தந்தை ஜோசப் என்ற மண்ணுலக மும்மை. மேலே பிதா, புறா வடிவிலுள்ள பரிசுத்த ஆவி, சுதனாகிய இயேசு என்ற விண்ணுலக மும்மை. ஜோசப் மண்டியிட்டுள்ளார். அவரின் பார்வை காண்பவரை நோக்கியுள்ளது, இறைவனிடத்தில் அன்பு செலுத்த, வழிபட, காண்பவரை அழைக்கிறது. இதில் இயேசு நிற்பது பலிபீடத்தின் மீது என எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்லலாம். அன்னை தந்தையின் கைகளைப் பற்றியிருக்கும் அதேசமயம் அவர்களை விட்டுச்செல்லும் நிலையிலும் இருக்கிறார். கிறிஸ்துவை மனித குமாரனாகவும் கடவுளாகவும் சித்தரிக்கும் மகத்தான ஓவியங்களில் ஒன்று இது. 

The Heavenly and Earthly Trinities, Bartolomé Esteban Murillo, பதினேழாம் நூற்றாண்டு

--------------------------

(4)

இறைமகனின் தெய்வீக அம்சம் பைபிளில் பல இடங்களில் வெளிப்படுகிறது. பிரதானமாக வெளிப்படும் நிகழ்வு கிறிஸ்து தோற்றம் மாறும் (Transfiguration) நிகழ்வு. ”இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.… அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ’என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்’ என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ’எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்’ என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.” மத்தேயு நற்செய்தி, 17.1-8; மாற்கு நற்செய்தி, 9.2-8. கிறிஸ்தவத்தில் இது மிக முக்கியமான தருணம். மனித இயல்பு இறைவனை சந்திக்கும் தருணம். மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்குமான பாலம். கிறிஸ்து அதன் இணைப்புப் புள்ளி. 

கிறிஸ்து தோற்றம் மாறுதல். திருத்தூதர்கள் ஆட்டுக்குட்டிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆறாம் நூற்றாண்டு புனித சித்தரிப்பு (Icon). ரவென்னா, இத்தாலி.
The Transfiguration, Raphael, பொ.யு.1520

”அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது” என்கிறது மேலே குறிப்பிட்ட பைபிள் வரி. கிறிஸ்து பேகன் மதங்களில் இருந்த சூரிய கடவுள்களுடன் ஒப்பிடப்பட்டார். கிறிஸ்து உயிர்த்தெழுந்தது ஞாயிறு சூரிய உதயத்திற்கு முன்பு. நற்செய்திகள் முழுக்க கிறிஸ்துவை ஒளியுடன் ஒப்பிட்டே பேசுகின்றன. ”அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருக்கிறது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை” யோவான் 1.9-10. “மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, ‘உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்’ என்றார்” யோவான் 8.12. இயேசு ஒளியைக் கொண்டுவருபவர் என்ற கருத்து மிகத்தொன்மையாக பைபிளில் குறிப்பிட்டிருந்தாலும் இத்தகைய சித்திரங்கள் மிகப் பிற்காலத்தில் தான் வரையப்படுகின்றன. ஒளியைக் காண்பிக்க வேண்டும் என்றால் தூய இருளை காண்பிக்க வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டில் எண்ணெய்ப்பசை ஓவிய (oil painting) நுட்பம் வந்து இருளை ஓவியங்களில் காண்பிக்க முடிந்த பிறகே இத்தகைய சித்தரிப்புகள் வருகின்றன. ஒளிரும் குழந்தையாக கிறிஸ்து தான் பிறந்த கொட்டகைக்கு வெளிச்சம் தருவதை கீர்ட்ஜெனும் (Geertgen), ரெம்ப்ராண்டும் (Rembrandt) அழகாக சித்தரித்துள்ளனர். சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் வில்லியம் ஹோல்மன் ஹன்ட் வரைந்த கிறிஸ்து ஒளிரும் விளக்கை ஏந்தி வரும் ஓவியம் பிரபலமாக பேசப்பட்டது. அதில் ”The light of the world” என்ற மத்தேயுவில் வரும் வசனம் பொறிக்கப்பட்டுள்ளது.

The Nativity at Night, Geertgen tot Sint Jans, 1490
Rembrandt, பதினேழாம் நுற்றாண்டு
The Light of the World, William Holman Hunt, 1904

துவக்கத்தில் இறையை அல்லது தீர்க்கதரிசியை குறியீடுகளாக மட்டுமே சித்தரித்த மதங்களில் அல்லது உருவத்தை முழுமையாக மறுத்த மதங்களில் ஏன் பிற்காலத்தில் அவரின் உருவங்கள் பல்வேறு விதத்தில் ஓவியங்களாக வரையப்படுகின்றன, சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன? ”இறை படிமங்களின் நோக்கம் காண்டம்ப்ளேசன்(contemplation)-னுக்கான ஊன்றுகோல்” என்கிறார் ஆனந்த குமாரசாமி. காண்டம்ப்ளேசன் என்பது பிராத்தனை வழியாகவும் அல்லது மெடிடேசன் என்ற பயிற்சிமுறை மூலமாகவும் அறிவைக் கடந்த தெய்வீக நிலையை அல்லது உணர்வை அடைவது. கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகள் சார்ந்த துவக்ககால சித்தரிப்புகளும் அடுத்துவரும் பைபிள் வசனங்களை அடிப்படையாக கொண்ட சித்தரிப்புகளும் அவரின் தெய்வீக தன்மையை காட்டி அதன் வழியாக அவர்மீது நம்பிக்கை வைப்பதை வழியுறுத்துகின்றன. எனினும் பெரும்பாலான ஓவியங்கள் மறைமுகமாகவோ நேரடியாகவோ காண்டம்ப்ளேசனை மையமாக கொண்டவையே. கிறிஸ்துவின் உருவங்களிலேயே மிக வசீகரமான ஒன்றாக, பார்க்கும் ஒவ்வொரு முறையும் மயங்கச்செய்வதாக இருப்பது ரஸ்ய ஓவியர் ஆண்ட்ரி ரூப்லெவ் வரைந்த மீட்பர் (Christ the redeemer) ஒவியம். இதை எந்த நோக்கத்திற்காக ரூப்லெவ் வரைந்தார் என நம்பால் உறுதியாக சொல்ல முடியாது. எனினும் இதிலுள்ள கிறிஸ்துவின் கண்கள், ஒளிர்நிறம் மற்றும் இதில் வெளிப்படும் அவரின் தெய்வீக நிலையாலும் இதை காண்டம்ப்ளேசனுக்கான மிகச்சரியான ஓவியம் என உறுதியாக சொல்லலாம். மேலும் கலைப்படைப்புகளாக வடிக்கப்பட்ட இறைப் படிமங்கள் வழியாகவே அவை சுட்டும் விழுமியங்களும் தரிசனங்களும் ஆன்மீகமும் பெருவாரியான மனிதர்களைத் தீண்டியிருக்கும். பதினான்காம் நூற்றாண்டில் ரோமுக்கு யாத்திரை வந்து வெரோனிகாவை தரிசித்த எத்தனை பேருக்கு அவர்களின் நோய் குணமாகியிருக்கும் என சொல்லமுடியாது. ஆனால் அவர்களின் மனதில் இறைமகனின் தெய்வீக ஆற்றலும் ஒளியும் நிச்சயம் பதிந்திருக்கும். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஆழ்ந்து செல்வதற்கு (contemplation) ஆன்மீகமான ஒன்றை நிச்சயம் சுமந்து சென்றிருப்பார்கள்.

--------------------------

உதவியவை:


தாமரைக்கண்ணன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்.  ஆங்கிலத்திலிருந்து முதன்மையாக தத்துவ கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். இவர் மொழி பெயர்த்துவரும் ஆனந்தகுமாரசாமியின் கட்டுரைகள் பரவலான வாசகத்தளத்தை சென்றடைந்துள்ளன