Saturday 29 July 2023

நீலகேசி எனும் புனைவாய்வு - ரம்யா


”வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படும் பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்” என வட்டார நுண்வரலாற்றாய்வின் முக்கியத்துவம் பற்றி அ.கா.பெருமாள் ஐயா கூறுகிறார். இவ்வாய்வுகளின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது போன்ற ஆய்வுகளைச் செய்வதற்கு அந்த வட்டாரம் சார்ந்த ஆய்வுகளில் ஆர்வத்துடன் செயல்படக்கூடிய ஆட்களே அதிகமும் தேவை. ஆனால் அப்படியான ஆட்கள் குறைவாக உள்ளனர் என்பதே களநிலவரம்.

இட்டகவேலி நீலகேசி அம்மன்

வட்டார நுண்வரலாற்றின் வழி நாட்டாரியலை அடிப்படையாகக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்யப்படும் வரலாற்றில் முதன்மையாக கொள்ள வேண்டிய கூறுகளின் பட்டியல் பற்றிய கேள்விக்கு அ.கா.பெருமாள் ஐயா பதிலளிக்கும்போது ஊரிலுள்ள சிறு தெய்வங்கள், விளையாட்டுகள், ஆட்டங்கள், கூத்துக்கள், பெருந்தெய்வங்கள், குல தெய்வக் கோயில்கள், ஊர் திருவிழா சடங்குகள், அந்தந்த தெய்வங்களுக்கான கதைகள், சுற்றியுள்ள கல்வெட்டுக்கள், நடுகற்கல் போன்றவற்றை பதிவு செய்யும் பண்பாட்டின் மீது ஆர்வமுள்ளவர்களின் தேவையைப் பற்றிச் சொன்னார். 

கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் பெரும்பாலான ஆய்வுகள் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளை சற்றே மாற்றம் செய்து ஆய்வுப்பட்டம் வாங்கும் ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே செய்யப்படுகிறது. அப்படியல்லாமல் உணர்வுப்பூர்வமாக தீவிர ஆர்வத்துடன் ஆய்வுகளைச் செய்யும் ஆட்கள் எல்லாத்துறையிலும் தேவைப்படுகிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியர் மாணவர் நிரையை குமரி மாவட்டத்தில் நாம் பார்க்கலாம். 

தமிழறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வழிவந்த பேராசிரியர் ஜேசுதாசன் ஒரு ஆய்வாளர்கள் வரிசையை உருவாக்கிச் சென்றார். ஏ.சுப்ரமணிய பிள்ளை, தமிழவன், எம். வேதசகாயகுமார், அ.கா.பெருமாள், ராஜமார்த்தாண்டன், ப.கிருஷ்ணசாமி ஆகியோர் அவரின் புகழ்பெற்ற மாணவர்கள். எஸ்.ஜே. சிவசங்கர் மதுரையிலுள்ள சமணத் தளங்கள், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு இடங்களில் கல்வெட்டு, சிற்பவியல், தொல்லியல், ஆய்வுகளுக்காக அ.கா. பெருமாள், செந்தீ நடராசன் ஆகியோர் நடத்தும் செம்பவளம் ஆய்வு வட்டத்தின் உறுப்பினராக பயணம் செய்து கள ஆய்வு செய்திருக்கிறார். தொடர்ந்த அவரின் ஆய்வுச் செயல்பாடுகள் வழியாக தன் நிலம், மக்கள் சார்ந்த பண்பாட்டின் மீதும் ஆர்வம் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

சென்ற 2022 தூரன் விருது விழாவில் இலக்கியத்தின் வழி கொங்குச் செல்வங்கள், கொங்கு மலர்கள், கொங்கு மணிகள் என கொங்கு வட்டாரம் சார்ந்த ஆய்வுகளைச் செய்த கு.மகுடீஸ்வரன் ஐயாவைச் சந்தித்தோம். அந்த வகையில் 2023-ல் குமரி மாவட்டம் சார்ந்து கல்குளம் வட்டார சொல்லகராதி பணி, குமரி மாவட்டம் சார்ந்து சொலவடைகள், வட்டார வழக்குகள், நாட்டார் கதைகள் போன்ற ஆய்வுகளை மேற்கொண்டுவரும் எஸ்.ஜே.சிவசங்கர் அவர்களுக்கு தூரன் விருது விழாவில் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்வளிக்கிறது. எஸ்.ஜே.சிவசங்கர் தெரளி குமரி கல்குளம் வட்டார வழக்கு சொல்லகராதி, நீலகேசி ஆய்வுப் புனைவு, பொருளும் சொல்லும் (குமரி மாவட்ட சொற்பண்பாடு) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இதில் நீலகேசி என்ற நாட்டார் தெய்வத்தைப் பற்றிய ஆய்வை ஒரு புனைவுத்தன்மையுடன் எழுதும் புதிய முயற்சியைக் கையாண்டுள்ளார். அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் புத்தகம், மெளனகுருவின் ‘பழையது புதியதும்’ என்ற கூத்துக் கலைஞர்கள் பற்றிய ஆய்வுப் புத்தகம் ஆகியவற்றில் கூட ஒரு இனிய கதை சொல்லல் தன்மை இருக்கும். நாமே தகவலுக்கு அலைந்து திரிந்து அதைக் கண்டதைப் போன்ற மகிழ்வும், அறிஞர்கள், கலைஞர்களின் பிரயத்தனங்கள் பற்றியும் நம்மால் அந்தப் புத்தகங்கள் வழி அறிய இயலும். 

இங்கு எஸ்.ஜே.சிவசங்கர் ஒரு புனைவெழுத்தாளரும் கூட. பண்பாடு, தொன்மம் சார்ந்து தங்கள் புனைவெழுத்தை அமைத்துக் கொண்டவர்கள் ஒருவகையில் வட்டார ஆய்வாளர்களும் தான். தஞ்சைப் பகுதியில் மிக நீண்ட எழுத்தாளர்கள் வரிசை உள்ளது. இங்கு சோழவரலாறு சார்ந்த ஆய்வு நூல்களே உள்ளதால் அப்பகுதியிலிருந்து பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, உடையார், கங்காபுரம் போன்ற வரலாற்றுப் புனைவுகள் அதிகமும் நிகழ்ந்தன. ஆனால் நுண்வரலாறுகள் சார்ந்த ஆய்வுகள் அத்தனை நிகழவில்லை. இது போன்ற இடங்களில் புனைவெழுத்தாளர்கள் தங்கள் புனைவில் கடத்தியிருக்கும் வட்டாரத் தகவல்கள் மட்டுமே அந்த காலகட்டத்தின், நிலத்தின் தகவல்களாக நமக்கு கிடைப்பன. எஸ்.ஜே.சிவசங்கருக்கு ஒரு புனைவெழுத்தாளராகவும், ஆய்வாளராகவும் ஒரு நீண்ட மரபின் தொடர்ச்சியில் உள்ளார். ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகள் மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதையும், எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும், புதுமையை நிகழ்த்துவதற்கான வாயிலையும் அளிக்கின்றன.

அந்த வகையில் புதிய முயற்சியாக எஸ்.ஜே.சிவசங்கர் நீலகேசி என்ற இந்த நூலில் நாட்டார் கதைகள், கதைப் பாடல்கள் போன்றவற்றை தன் கற்பனையின் மூலமும் விரித்தெடுக்கிறார். ஒரு புனைவெழுத்தாளனுக்கேயுரிய ஈரமான மொழியில் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். காணிக்காரர்கள், நாயர்கள் பற்றிய வரலாற்று சித்திரத்தை அளிப்பதோடு அதை கால நெடுகவும் இணைக்கும் சரடை புனைவின் துணை கொண்டு நிகழ்த்துகிறார். நீலகேசி என்ற வட்டாரம் சார்ந்த சிறுதெய்வத்தைப் பற்றிய வாய் மொழிக்கதையையும், அதற்காக கொண்டாடப்படும் திருவிழா பற்றிய முழுமையான பதிவையும் செய்திருக்கிறார். நீலகேசியின் கதை பற்றி கிடைக்கும் அத்தனை புனைவு வேறுபாடுகளையும் நூலில் பதிவு செய்துள்ளார். தன் ஆய்வுகளை புனைவு, நாடகம் ஆகியவற்றின் கோட்பாடுகள் கொண்டு அணுகும் முயற்சியை இதில் கையாண்டுள்ளார். சமணக்காப்பியமான நீலகேசியிலிருந்து இங்குள்ள இட்டகேசி நீலகேசி வரையிலான ஒரு கோட்டை இந்தத் தொகுப்பில் காண்பித்திருப்பதும், புராணங்களிலுள்ள பெருந்தெய்வங்களுடன் நீலகேசியை இணைக்கும் ஒன்றைக் கண்டறிவதையும் செய்துள்ளார்.

நீலகேசியிலிருந்து ஆரம்பித்து காலம்தோறும் வரலாற்றில் கொலை செய்யப்பட்ட பெண்களைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார். அங்கிருந்து நம் மரபின் தொன்மங்கள் புராணங்கள் எனத்தாவி பெண் தெய்வங்கள் அனைத்தின் மூலத்தின் தோற்றத்தையும் பற்றிய கேள்வியை எழுப்புகிறார். அதோடு மட்டும் நின்று விடாமல் உலக அளவில் கதைப்பாடல்களாகப் புழங்கும் சின்டரெல்லா, ரபென்சல், ஹான்செல் அண்ட் க்ரட்டெல், ஸ்னோ வொயிட் போன்ற கதைகளுடனான முடிச்சை இடுகிறார். அதே சமயம் சமணம், பெளத்தம் சார்ந்து நீலகேசி பற்றிய சில அவதானிப்புகளைச் சொல்லி அங்கிருந்து இயற்கையிலும் தன் தேடலை விரித்து காட்டின் கேசம் நீலகேசி என்பது பற்றியும் சொல்கிறார். 

சடங்குகளில் ஒளிந்திருக்கும் குறியீட்டு அர்த்தங்களை மானுடப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளும் கருவியாக அணுகும் ஒருவராக உள்ளார். உதாரணமாக தூக்கத்திருவிழா என்ற சடங்கைப் பற்றி பதிவு செய்துள்ளார். இருபதடி உயரத்தில் குழந்தைகளை கட்டித்தூக்கி நேர்ச்சை செலுத்தும் ஒரு சடங்கு அது. சடங்குகளை கூத்து கலை போல பார்க்கும் ஒரு மன நிலையே புனைவுக்குள் நம்மை அழைத்துச் செல்வது போன்ற உணர்வைத்தருகிறது. அதற்கான காரண காரியங்களை, அது மாறி வரும் விதத்தை, அது எளிதாக்கப்பட்ட பிற வடிவங்களை என சொல்லிச் செல்கிறார். யாவற்றிலும் தொக்கி நிற்கும் கேள்வியைத் தன் புனைவு கொண்டு நிரப்புகிறார்.

தூக்கத்திருவிழா

இங்கு எஸ்.ஜே.சிவசங்கர் மரபான ஆய்வு முறைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் போக்கை இந்த நூலில் அவரே பிரகடனப்படுத்திக் கொள்வதைப் பார்க்கலாம். வெறுமே தகவல்களாக பதிவு செய்வதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார். வாய்மொழிக்கதைகளாக, சடங்குகளாக நம் பண்பாட்டில் உள்ளதை அப்படியே பதிவு செய்வதுடன், அதன் திரிபடைந்த அனைத்து தரப்புகளையும் கேட்டு அதன் சரடை தன் கற்பனை கொண்டு நிரப்பும் ஆளாக இருக்கிறார். அதிலுள்ள சமூக உளவியலை, மானுட பரிணாமம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்கிறார். 

Casticide, uneatability போன்ற பரிமாணங்களை இந்த கதைப்பாடல்களுக்கு அளிக்கிறார். சமீபத்தில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட மது, மாட்டுக்கறி சாப்பிட்டதால் கொல்லப்பட்ட நீலகேசியையும் இணைக்கும் ஒன்றை நமக்கு கையளிக்கிறார். தான் இந்தத் தரப்பை எடுத்து நிற்பது அரசியல், சமூகம் சார்ந்த எந்தச் சார்பும் அல்ல. ஆனால் புனைவு சார்ந்த சார்பு என்றே பிரகடனப்படுத்திக் கொள்கிறார். சிவசங்கரின் இந்த ஆய்வு வழியாக சென்று நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நிகழும் சடங்குகளை கால நெடுகிலும் கண்டு, கேட்டு, கேள்வியெழுப்பிக் கொள்ளும் அனுபவத்தைப் பெறலாம்.

“என் நண்பனே மரணம் வேட்டைக்காரனாக இருக்கும் இவ்வுலகில் சந்தேகங்களுக்கும் வருத்தங்களுக்கும் இடமில்லை. முடிவெடுத்தல்களுக்கு மட்டுமே நேரமிருக்கிறது” என்ற கார்லோசின் மேற்கோளையே சோர்வுறும்போதெல்லாம் தான் எடுத்துப் பார்த்துக் கொள்ளும் வரி என எஸ்.ஜே.சிவசங்கர் இந்த நூலில் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். தன் வாழ்க்கைப் பயணத்தின் நிமித்தம் அதை மேலும் அணுக்கமாக அவர் உணர்ந்திருக்கக்கூடும். தன் நிலத்தை, தன் மக்களை, தன் கேள்விகளை புனைவுக்களமாகக் கொண்ட சிவசங்கர் அதே வீச்சில் தன்னைச் சுற்றியுள்ள, தன் சார்ந்த பண்பாடு சார்ந்தவற்றையும் ஆவணப்படுத்துவார் என்ற நம்பிக்கையை அளிக்கும் நூல் இட்டகவேலி நீலகேசி. வழக்கமான ஆய்வாளர்களிலிருந்து வேறுபட்டு ஆய்வுப்புனைவாக இந்த நூலை ஆக்கியிருப்பது புனைவுகளில் வட்டார ஆய்வை ஆவணப்படுத்தும் ஒரு போக்கை குறைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அந்தவகையில் கூறுமுறை சார்ந்து இட்டகவேலி நீலகேசி ஒரு முக்கியமான முன்னெடுப்பு.

ரம்யா

ரம்யா- தமிழ் விக்கி

ரம்யா ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். பெண் படைப்புகளுக்காக 'நீலி' என்னும் மின்னிதழ் நடத்துகிறார். சிறுகதைகளும் கட்டுரைகளும் இலக்கிய இதழ்களில் எழுதிவருகிறார். தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்தின் தீவிரமான எழுத்தாளராகவும் இருக்கிறார்.