Sunday 25 June 2023

ஆடல் 3 - செவ்வேள் ஆடல்: தாமரைக்கண்ணன், புதுச்சேரிபதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவரான உமாபதி சிவாசாரியார் தான் எழுதிய சேக்கிழார் புராணம் என்னும் நூலின் காப்புச் செய்யுள்களில் ஒன்றில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு சிவனடியார்களை ஒன்றாக இணைத்து வாழ்த்துகிறார்.

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி

நால்வர் - திருவையாறு ஆலயம்

சைவம் வளர்த்த சமயக்குரவர்கள் ஆகிய இந்த நான்கு பேருக்கும் சிவ ஆலயங்களில் முக்கியமான இடம் தரப்படுகிறது, திருச்சுற்றில் நால்வர் சன்னதியையும் காணலாம். இந்த நான்கு அடியவர்களின் சிலைவடிவங்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு அவர்களின் கதைகளை அறிந்திருக்க வேண்டும், இல்லாவிட்டாலும் பின்வருமாறு எளிமையாக அவர்களை கண்டுகொள்ளலாம். சம்பந்தர் குழந்தை வடிவாக கைகளில் தாளம் என்னும் இசைக்கருவி கொண்டிருப்பார், முதியவராகிய அப்பர் உழவாரப்படை என்னும் கருவியை கைகளில் ஏந்தியிருப்பார். மணக்கோலத்தில் இருக்கும் சுந்தரர் கைகளில் பூச்செண்டும் பிரம்பும் வைத்திருப்பார், மணிவாசகர் கைகளில் ஏட்டுச்சுவடியோடு நிற்பார். இல்லாவிட்டால் இப்படிப் பார்க்கலாம் மழலை மொழியோடு தமிழிசை பாடும் ஒரு குழந்தையை, தள்ளாத வயதில் கோவில் சுவர்களில் களை செதுக்கும் முதியவரை, வாழ்க்கையின் இன்ப துன்பங்களை இரு கைகளில் ஏந்தி நிற்கும் இளைஞனை, தன் படைப்பை ஏந்திக்கொண்டு காலத்தை விஞ்சி இறைவனை நோக்கி நிற்கும் ஒரு கவிஞனை.

மரபான சைவர்களிடையே இந்த நால்வரையும் ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்றும், ஒருவரை உயர்த்தி மட்டும் கருத்துரைப்பது தவறு என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு விவாதங்களுக்குப் பிறகே இந்த நால்வரையும் ஒரே நிரையில் சைவம் கொண்டு வந்திருக்கின்றது என்று ஊகிக்க முடிகிறது.

சைவத்தில் பன்னிரு திருமுறைகள் என்பது ஒரு பனுவல் தொகுப்பு. இந்தப் பன்னிரு பகுதிகளை 27 சைவ அடியார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழில் இயற்றியிருக்கிறார்கள். பதினோரு திருமுறை வரையிலான பகுதிகள் திருநாரையூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டது. தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆலயங்கள் ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல்களில் குறிப்பிடப்படுவதால் நம்பியாண்டார் நம்பியின் காலம் பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக நிர்ணயிக்கப்படுகிறது.

திருமுறை விழா

அதன் பின் பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் என்னும் காப்பிய நூல் இணைக்கப்பட்டு பன்னிரு திருமுறை என்று அறுதி செய்யப்பட்டது. இவற்றில் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளில் தொகுக்கப்பட்டுள்ளன, அப்பர் பெருமானின் பாடல்கள் அடுத்த மூன்று திருமுறைகளாகிய நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. நம்பியாரூரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையாக அமைந்தன. இவர்கள் மூவராலும் பாடப்பட்ட ஒன்று முதல் ஏழு திருமுறை வரையுள்ள இந்த பாடல்களே தேவாரம் என்று வழங்கப்படுகிறது. இவர்கள் காலத்தை அடுத்து வந்த மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் ஆகியவை எட்டாம் திருமுறையில் உள்ளன. மூவருக்கும் காலத்தால் பிந்தைய மாணிக்கவாசகரை, திருமுறை தொகுப்பிற்கு பிறகு சம்பந்தர், அப்பர், சுந்தரர் வரிசையில் வைத்துப்பார்க்கும் வழக்கம் சைவத்தில் வந்திருக்க வேண்டும்.

எட்டு திருமுறைகளுக்குப்பிறகு வைக்கப்பட்டுள்ள ஒன்பதாம் திருமுறை ஒன்பது வெவ்வேறு அடியவர்களின் தொகைப்பாடல்கள். அதுபோலவே பதினோராம் திருமுறையும் பன்னிருவர் பாடிய பாடல்களைக்கொண்டது. பத்தாம் திருமுறை திருமூலர் திருமந்திரம். இந்தப்பன்னிரண்டு திருமுறைகளில் தேவாரம் பாடிய மூவர் தவிர பிற நாயன்மார்களும் சிவபெருமான் மீது போற்றிப்பாடியதாக வைக்கப்பட்டுள்ளவை காரைக்காலம்மையார், திருமூலர், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமாள் ஆகிய நாயன்மார்களின் பாடல்கள்.  வெவ்வேறு பா வகைகளில், முதன்மையாக சிவனைப்பாடும் பாடல்களே இத்தொகுப்பில் மிகுதி என்றாலும், பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள நக்கீரர் இயற்றிய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை முருகக்கடவுளை பாட்டுடைத் தலைவனாக கொண்டது. அதே பதினோராம் திருமுறையிலேயே உள்ள மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை, திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை ஆகிய சிற்றிலக்கியங்கள் விநாயகருக்கானவை.

இந்த மூன்று கடவுள்களுக்கு அடுத்து 63 நாயன்மார்களில் மூன்று பேரை மட்டும் குறித்து தனித்த சிற்றிலக்கியங்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. 'திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' என்ற சிற்றிலக்கியம் கண்ணப்ப நாயனார் மேல் பாடப்பட்டது, இதை இயற்றியவர் கல்லாட தேவர். நம்பியாண்டார் நம்பி அப்பர் மீது 'திருநாவுக்கரசர் திருஏகாதச மாலை' என்ற நூலை பாடியிருக்கிறார். இந்த இரு நூல்களை தவிர்த்து, சம்பந்தர் மீது மட்டும் ஆறு வெவ்வேறு வகை சிற்றிலக்கியங்கள் நம்பியாண்டார் நம்பியாலேயே பாடப்பட்டு திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன, அவை ஆளுடைய பிள்ளையார் கோவை, சண்பை விருத்தம், மும்மணிக்கோவை, திருஉலா மாலை, திருக்கலம்பகம், திருத்தொகை ஆகியவை.

திருஞானசம்பந்தர் - மயிலாப்பூர் அறுபத்து மூவர் விழா

நாயன்மார்களின் கதைகளை விவரிக்கும், பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரியபுராணம் மொத்தம் 4286 செய்யுள்கள் கொண்டது. பெரியபுராணத்தில் சைவ நாயன்மார்கள் தொகையடியார் மற்றும் அறுபத்து மூன்று அடியவர்களில் ஞானசம்பந்தர் ஒருவருடைய கதை மட்டும் 1256 செய்யுட்களால் சொல்லப்படுகிறது. இதனால் “பிள்ளை பாதி புராணம் பாதி” என்ற பழமொழி உருவானது. இப்படியாக நம்பி சம்பந்தரின் மேல் ஆறு சிற்றிலக்கியங்களைப் பாடி திருமுறை தொகுப்பில் சேர்த்ததும், சேக்கிழார் பெரியபுராணத்தில் சம்பந்தருக்கு அதிக பாடல் பாடியதையும் இணைத்துப் பார்த்தால் திருமுறைத்தொகுப்பாக்க காலத்தில் நம்பி, சேக்கிழார் ஆகியோரில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய ஒருவராக திருஞானசம்பந்தர் இருந்திருக்கிறார்.

***********************

தேவாரம் பாடிய மூன்று பேரில், அப்பர் சம்பந்தர் இருவரும் சம காலத்தவர்கள். இவர்கள் காலம் ஏழாம் நூற்றாண்டு. சுந்தரர் காலம் எட்டாம் நூற்றாண்டு. சம்பந்தர் பதினாறாயிரம் பாடல்கள் பாடியதாக நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார், அவற்றுள் நமக்கு தற்போது 4169 பாடல்கள், இறுதியாக கல்வெட்டு மற்றும் சுவடி வாயிலாகக் கிடைத்த திருவிடைவாய், கிளியன்னவூர் பதிகங்களோடு சேர்த்து 385 பதிகங்கள் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பதிகங்களின்படி சம்பந்தர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தலங்களில் உள்ள இறைவனை பாடியிருக்கிறார்.

சீர்காழி ஆலய விமானத்தில் அருளும் தோணியப்பர்

சம்பந்தர் சோழநாட்டிலிருந்த சீர்காழியில் கவுணியர் (கௌண்டின்ய கோத்ரம்) என்னும் அந்தணர் குடியில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகப் பிறந்தவர். அவரது மூன்றாவது வயதில் தந்தை சீர்காழி தோணியப்பர் ஆலயத்திற்கு செல்லும்போது கூட அழைத்துச் செல்லுமாறு பிடிவாதம் பிடிக்கிறார். தந்தை அழைத்துச்சென்று ஆலயத்தின் குளக்கரையில் இவரை இருக்கச்சொல்லி, நீராடி தனது தினசரி கருமங்களை செய்யச்செல்கிறார். சிறிது நேரம் கழித்து குழந்தை பசியால் அம்மையே அப்பா என்று கோபுரத்திலிருந்த உமாமகேசுவரனை வேண்டி அழ நந்தி வாகனராய் சிவன் அம்மையுடன் வந்து காட்சியளிக்கிறார், இறைவன் கூறியபடி பார்வதி ஒரு பொற்கிண்ணத்தில் தன் முலைப்பாலை சுரந்து குழந்தைக்கு ஊட்டி அவன் பசியாற்றுகிறாள். குளக்கரைக்கு வந்த தந்தை, பிள்ளை வாயிலிருந்த பாலைக்கண்டு யார் தந்தது என்று அதட்ட குழந்தை கோபுரத்திலிருந்து இறைவனைக்காட்டி "தோடுடைய செவியன்" என்று பதிகம் பாடுகிறான். மூன்று வயதுப்பிள்ளை இனிய தமிழ்ப்பாடல்களை பாடுவது கண்டு ஆச்சரியப்பட்ட தந்தையும் பிறரும், இவன் இறைவனால் பால் வடிவில் ஞானம் ஊட்டப்பட்ட குழந்தை என்று கருதி அவரை ஞானசம்பந்தன் என்று அழைக்கிறார்கள். இதுதான் பெரியபுராணத்தின்படி ஆளுடைய பிள்ளையார் சிவஞான-சம்பந்தனான கதை. திருஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர்

திருஞானசம்பந்தர் - சீர்காழி

***********************

எல்லாச் சமயங்களிலும் உள்ள அருளாளர்கள் அவர்கள் நிகழ்த்திய அற்புதச் செய்கைகளாலேயே நினைவு கூறப்படுகின்றனர். மதத்தை கட்டமைத்தவர்களும், புதுப்பித்தவர்களும், பரப்பியவர்களும், தத்துவங்களை வலுப்படுத்தியவர்களும், பேராலயங்களை எழுப்பியவர்களுமான இவர்கள் அனைவருமே மேற்கூறிய தங்கள் அரிய செயல்களுக்காக மட்டும் இல்லாமல், சாமான்யன் வாழ்வில் நிகழாத அற்புதம் ஒன்றை நிகழ்த்திய கதைகளாலும் நினைவுகூரப்படுபவர்கள்.  கத்தோலிக்க கிறிஸ்தவம் இன்று புனிதர் பட்டத்திற்கு தகுதியானவர்களை அவர்களை பிரார்த்திப்பதால் நிகழும் அற்புதங்களின் அடிப்படையிலேயே அங்கீகரித்து புனிதர் என்று அறிவிக்கின்றது.

இந்த அற்புதங்கள் மட்டுமே அருளாளர்களை குறித்த செய்திகளை சாமான்ய மக்களிடையே சென்று சேர்ப்பிக்கும், பின்னரே கருத்துக்கள் அவர்களிடையே பரவ முடியும். இந்த சாத்தியத்தால் அனைத்து மதங்களும் இந்த அற்புதம் என்ற விஷயத்தை, கதைகளை அங்கீகரித்துள்ளன. மதத்தில் தர்க்கத்தை அதன் தத்துவத்தளத்தில் எதிர்பார்க்கலாம், அதன் அடித்தளத்தில் கொட்டிக்கிடக்கும் அற்புதக்கதைகளை முழுவதும் பொய் என்று ஒதுக்க வேண்டுமா என்பது அடுத்த கேள்வி. இந்தக்கதைகளில் பின்னால் உள்ள உளவியல் இன்னுமே ஆழ்ந்து விவாதிக்கப்படவேண்டியது. கதைகளில் பல நாட்டார் கூறுகள் இருக்கும், மறைமுகமான சமூகவியல் பார்வை இருக்கும், அன்றைய காலகட்டத்தின் வரலாற்றோடு இயைந்தோ எதிர்த்தோ ஏன் இந்தக்கதை பரவியது என்ற விதங்களில் இந்த அற்புதங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

உமாபதி சிவாசாரியாரின் பெரியபுராணச் சாரம் சம்பந்தரின் வாழ்வில் நடந்த அற்புதச்செயல்களை பட்டியலிடுகின்றது:

காழிநகர்ச் சிவபாத விதயர் தந்த கவுணியர்கோன்
அமுதுமையாள் கருதியூட்டும்
ஏழிசையின் அமுதுண்டு தாளம்வாங்கி இலங்கிய
நித்திலச் சிவிகை இசையஏற
வாழுமுயலகன் அகற்றிப், பந்தர் ஏய்ந்து,வளர்
கிழிபெற்று, அரவின்விடம் மருகல்தீர்த்து,
வீழிநகர்க் காசுஎய்தி, மறைக்கதவம் பிணித்து,
மீனவன் மேனியன் வெப்பு விடுவித்தான்.

ஆரெரியிட்டு எடுத்த ஏடு அவை முன்னேற்ற
ஆற்றிலிடும் ஏடெதிர்போய் அணைய ஏற்றி
ஓரமணர் ஓழியாமே கழுவில் ஏற்றி, ஓது
திருப்பதிகத்தால் ஓடம் ஏற்றிக்
காருதவும் இடிபுத்தன் தலையில் ஏற்றிக்
காயாத பனையின் முதுகனிகள் ஏற்றி
ஈரமிலா அங்கம் உயிர் எய்த ஏற்றி,
இலங்கு பெருமணத்து அரனை எய்தினாரே

இந்த அற்புத நிகழ்வுகளை நாம் எளிமையாகப்புரிந்து கொள்ள நான்கு வகைகளாக பிரித்துக்கொள்ளலாம்.

சிவபெருமான் சம்பந்தரை, சிறுகுழந்தை என்று கருதி அவருக்கு இரக்கப்பட்டு அருள் செய்த கதைகள். அழுத குழந்தை பசிதீர்க்க சீர்காழியில் பால் அளித்தது, கைகளால் தாளமிட்டு கைசிவந்ததை கண்டு திருக்கோலக்காவில் பொன்னால் செய்த தாளங்கள் தந்தது, நெல்வாயில் அரத்துறையில் குழந்தை வெயிலில் நடந்து வருவதை கண்டு முத்துச்சிவிகை தந்தது, பட்டீஸ்வரத்தில் முத்துப்பந்தலும், சின்னமும் அளித்தது ஆகியவை.


சைவ சமயத்தை மதுரையில் நிறுவியது தொடர்பானவை இரண்டாம் கொத்துக்கதைகள். மூன்றாவது சம்பந்தர் பாடிய பதிகங்களின் மகத்துவத்தை காட்டும் அற்புதங்கள், திருவோத்தூரில் ஆண்பனையை பெண்பனையாக்கியது, திருப்பாலாச்சிராமத்தில் கொல்லி மழவன் மகளுக்கு முயலகன் நோய் தீர்த்தது, மயிலையில் பூம்பாவையை குடத்தின் சாம்பலிலிருந்து உயிர்ப்பித்தது, திருநனிபள்ளியில் பாலை நிலத்தை நெய்தலாக்கியது, திருமருகலில் வணிகனின் விஷம் நீக்கி அவனுக்கு உயிரளித்தது, கொள்ளம்புதூர் முள்ளியாற்றில் பதிகத்தையே துடுப்பாக்கி ஓடம் செலுத்தியது, திருமறைக்காட்டில் கதவு அடைக்கப் பாடியது ஆகியவை. இவையனைத்தும் பிற்காலத்தில் தமிழ் மொழியின் பெருமையாகப் பாடப்பட்டது.

திருஞானசம்பந்தர் - மதுரை சைவ சமய ஸ்தாபித லீலை

நான்காவது சம்பந்தர் வாழ்க்கையோடும், அவரது தொண்டர்களோடும் இணைந்த அருள்செயல்கள். திருவாவடுதுறையில் சம்பந்தர் தந்தையின் வேள்விக்காக ஆயிரம் பொற்காசு பெற்றது, திருவீழிமிழலையில் தன் அடியவர்களுக்காக படிக்காசு பெற்றது, திருநீலகண்ட யாழ்ப்பாணருக்காக யாழ்மூரி பாடியது, திருச்செங்குன்றூரில் அடியவர்களின் பனிநோய் தீர்த்தது, நல்லூர் பெருமணத்தில் தன திருமணத்தன்று அடியவர்களோடு சோதியில் கலந்தது. ஆகியவை.


இந்த அற்புதங்கள் சிலவற்றை தேவாரம் பாடிய பிற இரண்டு அடியார்களான அப்பரும் சுந்தரரும் தங்களது பதிகங்களில் குறிப்பிடுகின்றனர்.

சிவபாத இருதயர் வேள்விக்கு சம்பந்தர் ஆயிரம் பொன் பெற்றதை அப்பர் தனது திருவாவடுதுறை பதிகத்தில் நினைவு கூர்கிறார். கழுமலம் என்பது சீர்காழியின் 12 பெயர்களுள் ஒன்று.

மாயிரு ஞால மெல்லா மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே
 - அப்பர் பாடிய திருவாவடுதுறை பதிகப்பாடல்

அப்பர்

திருமறைக்காடு தலத்திற்கு அப்பரும் சம்பந்தரும் ஒன்றாக செல்கின்றனர், நேர்வழிக்கதவு நெடுங்காலம் அடைபட்டிருக்கின்றது, அப்பர் பல பாடல்கள் பாடி அக்கதவை திறக்கின்றார். அருகிலிருந்த சம்பந்தர் கதவு மூட ஒரு பாடல் மட்டுமே பாடுகின்றார். இந்நிகழ்வை அப்பர் தனது திருவாய்மூர் பதிகத்தில் குறிப்பிடுகின்றார்

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே
 - அப்பர் பாடிய திருவாய்மூர் பதிகப்பாடல்

சம்பந்தர் பொன்தாளம் பெற்றதை சுந்தரர் தனது திருக்கோலக்கா பதிகத்தில் பாடுகின்றார்.

நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே
 - சுந்தரரின் திருக்கோலக்கா பதிகம்தமிழோடு இசை கேட்கும் ஆர்வத்தால் திருவீழிமிலை தலத்தில் அப்பருக்கும், சம்பந்தருக்கு காசு கொடுத்தீரே என்று தனது திருவீழிமிலை பதிகத்தில் சுந்தரர் சொல்கின்றார்

பரந்த பாரிடம் ஊரி டைப்பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும்
இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே
 
- சுந்தரரின் திருவீழிமிலை பதிகம்

இவர்கள் இருவராலும் பாடப்பட்ட சிறப்புடையவரான சம்பந்தர், தேவாரம் பாடப்பட்ட காலத்தில் இருந்து, பெரியபுராணம் காலகட்டத்திலும், சிற்றிலக்கிய காலகட்டம் வரையிலும் தொடர்ந்து இலக்கியத்திலும் முன்னிலை பெற்றிருக்கின்றார்.

***********************

தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஒருவர் திருஞானசம்பந்தர். பக்தி நெறி, சைவசமய வளர்ச்சி, தமிழ்ப் பண்ணிசை மரபு என்ற மூன்று விஷயங்களுக்கு பெரும் பங்களிப்புச்செய்தவர் சம்பந்தர்.

பக்தி இயக்கம் தென்னகத்தில் தோன்றி இந்தியா முழுமைக்கும் பரவியது, எழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் இருவரும் தமிழகத்தில் பக்தி இயக்கம் உருவாகக் காரணமானவர்கள் எனலாம். பெருங்கடவுளரை முன்னிறுத்தி சமயத்தை தொகுத்தல், பல்வேறு ஊர்களுக்கு யாத்திரையாகச் சென்று ஒரு பரப்பியக்கமாக பக்தியை எடுத்துச்சென்றமை, இசை மரபை பக்தி இயக்கத்தின் கருவியாக்கியது, சமூகத்திலிருந்த அனைத்து வகுப்பினரையும் ஒன்றாக்கி இந்த பக்தி மரபை பரப்பும் பணியை பகிர்ந்தளித்தல், கோவில்களைச் சார்ந்த மடங்களை உருவாக்கி சமயத்தின் அடியவர்களை பேணுதல், பிற சமய தத்துவக்கருத்துக்களை வாதிட்டு வெல்லுதல், அரசர்களின் கவனத்தை சமய வளர்ச்சி நோக்கி திருப்புதல் அனைத்தையும் இவர்கள் இருவரும் செய்திருக்கிறார்கள்.

சைவ சமயம் உண்மையில் பல்வேறு வகைகளில் சிதறுண்டிருந்தது, இயல்பிலேயே அவ்வாறு சிறுபிரிவுகளாக இருந்தது. சித்தாந்த காலகட்டத்தில் தொகுக்கப்பட்ட போதே அகப்புறச்சமயங்கள், அகச்சமயங்கள் என்று ஆறும் ஆறுமாக பன்னிரு பிரிவுகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை தொகுக்கும் பணியையும் பக்தி இயக்கமே துவங்குகிறது. திருஞானசம்பந்தர் சைவத்தின் ஆறு உட்பிரிவுகளை குறிக்கின்றார்.

நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரு மீசனிடமாம்
ஆறுசம யங்களும்வி ரும்பியடி பேணியர னாகமமிகக்
கூறுமனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே

சம்பந்தர் மற்றும் அப்பர் பாடல்களுக்கிடையேயுள்ள முரண்களை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அப்பர் சடங்குகளை, தீர்த்தம் ஆடுவதை எல்லாம் ஊக்குவிக்கவில்லை, மனதார இறைவனை தொழச் சொல்கின்றார். சமூகத்தின் அனைத்து பிரிவினரும் ஈசனுக்கு தொண்டு செய்யலாம் என்கிறார். சிறுதெய்வமாகிய சாத்தனை சிவனின் மகனென்கிறார். சிவனடியார் யாராயினும் அவருக்கு நான் அடியேன் என்று தன்னை முன்வைக்கின்றார். சமூகத்தின் அடித்தளத்தில் இருந்தவர்களுக்கும், பிறசமயத்தில் இருந்து சைவம் புகுவோர்க்கும் அவரே வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். ஒருங்கிணைக்கும் பணியில் அப்பரது பாணியிலிருந்து சற்று விலகி நிற்கும் சம்பந்தர் சடங்குகளை முற்றிலுமாக மறுக்கவில்லை. சடங்குகளையும், அனைத்துக் கலைகளையும் உட்கொண்டதாக சைவத்தை கருதுகிறார். பிறசமயத்தவரை கடுமையாகச் சாடுகின்றார்.  ஒரு பெரும் சமயத்தை கட்டமைக்கும் பணியில் அவர்கள் இருவரும் முரணியக்கத்தன்மையோடு செயல்பட்டனர் என்று கருதமுடியும். ஆகவே இருவரின் கருத்துக்களும் ஒன்றின் இன்மையை மற்றோன்று இட்டு நிரப்பி சைவத்தை வளர்த்தது. ஒருவகையில் இதைவிட சிறந்த சாத்தியமும் இருக்க முடியாது.

அப்பரும் சம்பந்தரும்

பழந்தமிழ் இலக்கியங்களில் இசை கலந்திருந்தது, சங்கப்பனுவல்கள் இரு தொகுப்புகளாக பிரிக்கப்படுகையில் பாட்டும் தொகையுமாகவே பிரிக்கப்பட்டன. அப்போதிருந்த தமிழிசை மரபு நம்மிடையே தொடரவில்லை. ஆனால் சங்க காலத்துக்குப்பின் முன்னூறு ஆண்டுகள் கழித்து சோழநாட்டில் தோன்றிய சம்பந்தர் முக்கியமான ஒரு விஷயத்தை செய்தார், பாணர் குலத்தில் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரைக்கொண்டு தான் கூறிய பதிகங்கள் அனைத்திற்கும் இசை கோர்த்து பாடல்களாக்கினார். இந்த காரணத்திற்காகவே தான் செல்லும் தலங்களுக்கெல்லாம் பாணரையும் அவர் மனைவியையும் அழைத்துச்சென்றார். பதிகங்கள் நமது பண்ணிசையோடு இரண்டறக் கலந்தன. இவ்வாறு சம்பந்தர் துவங்கிய காரணத்தினாலும் தேவாரத்தின் செய்யுள்கள் அனைத்தும் பாடல்களாயின, இன்றும் நாம் அவற்றை பாடல்களாகவே காண்கிறோம்.

நீலகண்ட யாழ்ப்பாணரும் சம்பந்தரும்

திருஞானசம்பந்தர் காலத்திற்குப்பிறகு மூன்று நூற்றாண்டுகள் சென்றபின் மீண்டும் தேவாரப்பதிகங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, நீலகண்ட யாழ்ப்பாணர் குலத்தில் பிறந்த பாணர் மரபை சேர்ந்த பெண் ஒருவரின் உதவியால் மீண்டும் அவற்றிற்கு பண்முறை செய்து வழக்கில் கொண்டு வந்தார். முதல் ஏழு திருமுறைகளாகிய தேவாரப்பதிகங்கள் இந்தப்பண் முறை அடிப்படையில் தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. பாண்மரபின் இசையை சம்பந்தர் எடுத்துக் கொண்டிருக்காவிட்டால் இன்று நம்மிடையே தமிழிசையின் இந்தத் தொல்மரபு நிலவியிருக்காது. நல்ல உதாரணம் திவ்வியப்பிரபந்தம், தேவாரம் நம்பியால் தொகுக்கப்பட்டது போலவே பிரபந்தப்பாடல்களும் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன, நாதமுனிகள் அரையர் சேவையாக இந்தப்பாடல்களை தனது மருமகன்களுக்கு கற்பிக்கையில் இசைப்பாடல்களாக கற்பித்தார், ஆனால் இம்முறை நிலைபெறவில்லை. தேவாரத்திற்கு அமைந்த ஓதுவார் மரபு போலன்றி, அரையர் மரபு மிகக்குறுகியதாக இருந்ததும், அரையர் சேவை நிகழ்த்துக்கலை வடிவிலான வழிபாடாகவும் அமைந்ததும் காரணமாக இருக்கலாம். பின்னாளில் தமிழிசையை மீட்டெடுத்தவர்கள் அனைவருக்குமே தேவாரம் ஒரு களஞ்சியமாக இருந்திருக்கின்றது.

தமிழில் திருவெழுகூற்றிருக்கை என்றொரு பாடல் வடிவம் உள்ளது. சித்திரக்கவியின் ஒரு வகையாக, ரதபந்தம் என்றும் இது அழைக்கப்படும். ஒரு தேரின் வடிவில் பாடலை பகுதிகளாக்கி எழுதுவது, ஏழு மேல் அடுக்கு, ஏழு கீழ் அடுக்கு அமைக்கப்பட்டிருக்கும், ஒன்று அல்லது மூன்று என்று துவங்கி ஒவ்வொரு அடுக்கிலும் அறைகள் ஒற்றைப்படையில் அதிகரித்துச்செல்லும். இப்படியாக பாடல் அமைக்கப்பட்டு மாறுபட்ட வரிசையில் படித்தாலும் பொருள் தரக்கூடியது திருவெழுகூற்றிருக்கை.  திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நக்கீரதேவ நாயனார், அருணகிரி நாதர், திருக்குருகை பிரான் கவிராயர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் தமிழில் கூற்றிருக்கை பாடியிருக்கின்றனர். சம்பந்தர் இவர்களில் காலத்தால் முன்னோடி, சம்பந்தர் கூற்றிருக்கை இணைக்குறளாசிரியப்பா என்னும் வடிவில் அமைந்தது, சீர்காழி தலத்து இறைவனைப் பாடியது, இப்பாடலில் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களை குறிப்பிடுகிறார் சம்பந்தர்.

திருவெழுகூற்றிருக்கை

ஞானசம்பந்தர் மாலைமாற்று என்னும் பதிகத்தை பாடியிருக்கிறார், திருக்கடைக்காப்பையும் சேர்த்து பதினோரு பாடல்கள். தலைகீழாகப்படித்தாலும், நேராகப்படித்தாலும் ஒன்று போலவே இருப்பது மாலைமாற்று, ஆங்கிலத்தில் Palindrome எனப்படும்.

தாவாமூவா தாசாகா
ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ
காசாதாவா மூவாதா

"அழிவில்லாதவனே சீர்காழி திருத்தலத்து இறைவனே, சுடலையில் நடனம் ஆடுபவனே, உயர்ந்தவனே, ஐராவதம் என்னும் யானையின் மேல்வருபவனே. கொடையில் கடலே. இறவாமல் எங்களை காப்பாற்று. ஒளிரும் மாணிக்கமே. வேண்டும் வரங்களைத் தந்தருள். எங்கள்முன் எழுந்தருள். முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே."

தமிழில் திருஞானசம்பந்தர் தவிர்த்து காஞ்சிப்புராணம் இயற்றிய மயிலை மாதவ சிவயோகிகள், திருநாகைக் காரோண புராணத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருவையாற்றில் வசித்த அப்துல் கபூர் சாஹிப் ஆகிய சிலர் மட்டுமே இவ்வகை பாடல்களை முயன்றிருக்கின்றனர். சம்பந்தர் இப்படியாக கடினமான பாடல் வடிவங்களான மாலை மாற்றுப்பதிகம், எழுகூற்றிருக்கை, ஏகபாதம், சக்கர மாற்று, கோமுத்திரிகை முதலிய வகைப்பாடல்களை பாடியிருக்கிறார், தமிழ் மொழியின் மீதான தனது புலமையை நிறுவியிருக்கின்றார்.

***********************

குமுதவல்லி நாச்சியார், திருமங்கை ஆழ்வார்

ஆளும் மன்னனின் கையில் வேல் இருப்பது ஒரு வழக்கம். மன்னனின் வீரத்தை பகைவர் அறியும்படி அவன் கையிலுள்ள வேலைக்கொண்டு கூறுவது இலக்கிய மரபு. ஆண்டாள் திருப்பாவையில் திருமாலைப் பாடும்போது ‘வென்று ‘பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி’ என்கிறாள். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் ஒரு குறுநிலமன்னர். சோழ தேசத்தில் ஆலிநாடு என்னும் பகுதியை அவர் ஆண்டதாக கருதப்படுகிறது. தனியாகவும், மனைவியோடும் திருமங்கையாழ்வார் இருக்கும் உலோகச்சிலைகளில் வேலும் அவர் கரங்களில் உள்ளது. பாடல்களில் அவரே ‘கையிலங்கு வேல் கலியன்’ என்று தன்னைக்குறிப்பிடுகிறார், பரமேச்சுர விண்ணகர் என்னும் திருப்பதியை 'செருவேல் வலங்கைப்பிடித்த பல்லவர் அரசன் பணிந்த இடம்' என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்
சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன்
அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ்-மாலை பத்தும் வல்லார்
தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே

"அழகிய தாமரைத்தடாகங்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருவாலி நாட்டுக்குத் தலைவரும், பகைவரை கீழே ஒடுக்கி வைப்பவரும், வெற்றியை கொடுக்கும் வேலையுடையவரான திருமங்கை மன்னன் சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் செந்தாமரைக்கண்ணனை பற்றிப் பாடிய பாட்டை சொல்பவர்கள் சிறப்புடன் வாழ்வர்"

ஆனால் வைணவ வாய்மொழிக்கதைகளில் ஒன்று, திருமங்கையாழ்வார் ஒருமுறை தனது யாத்திரையின்போது திருஞானசம்பந்தரை சந்தித்தாகவும், அப்போது நடந்த விவாதத்தில் திருமங்கையாழ்வார் சம்பந்தரை வாதில் வென்று, அதன் அடையாளமாக சம்மந்தர் கையிலிருந்த வேலை பெற்றதாகவும் அதனால் திருமங்கை ஆழ்வார் சம்பந்தரை வென்றதன் அடையாளமாகவே கையில் வேல் வைத்திருக்கிறார் என்று கூறுகிறது. உண்மையில் இந்த இருவரின் காலமும் வேறுவேறு, மங்கையாழ்வாருக்கு சம்பந்தர் காலத்தால் முற்பட்டவர், அவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பு ஏதும் இல்லை. வைணவப்பெருமை பேசும் விதமாக இக்கதை வழங்கி வந்திருக்கலாம், ஆனால் இங்கு கவனிக்கவேண்டியது வேல் ஏன் திருஞானசம்பந்தரின் கையிலிருந்தது என்பதை, காலத்தால் அணுக்கமான சுந்தரரை சொல்லாமல் சம்பந்தரை இக்கதையில் இணைக்க காரணம் என்ன என்பதை. ஏனெனில் சைவ மரபில் வேல் என்பது முருகனின் கையிலிருக்கும் ஆயுதம் மட்டுமே.மேலும்...

தாமரைக்கண்ணன், புதுச்சேரி

முன்தையப் பகுதிகள்:


தாமரைக்கண்ணன்,புதுச்சேரி