Saturday 29 July 2023

பல்கால் பறவை குரல் - தாமரைக்கண்ணன் புதுச்சேரி


தமிழகத்திற்கு என்று மிகநீண்ட இசைப்பண்பாடு உள்ளது. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் முதலிய நூல்களில் இசைக்கருவிகள், பண்வகைகள் (பண் - இராகம்) ஆகியவை பேசப்பட்டுள்ளன. இந்த தனித்த இசைமரபைப் பேசவும், பண்களை பாடிக்காட்டவும்கூடிய கலைஞர்கள், அறிஞர்கள் சென்ற தலைமுறையில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் பெரிதும் மதித்த ஒரு தமிழிசை ஆசிரியர் குடந்தை சுந்தரேசனார். 

இசை இயைந்த வாழ்க்கை கொண்டவரின் ஆவணப்படம் இசையோடே துவங்குகிறது. மாடு மேய்க்கும் ஆயன் ஒருவன் தன் மந்தைகளை நோக்கி நிற்கிறான், பின்னணியில் ‘தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி’ என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் பாடப்படுகிறது. ஆயன் கூழுணவு உண்பது காட்டப்படுகிறது. மந்தையில் கன்றுகாலிகள் நடக்கும் தடங்களில் குளம்படி பட்டு நீர் ஊறுகின்றது. மூங்கில் துண்டு ஒன்று துளையிடப்பட்டு குழலாக ஆக்கப்படுகின்றது, ஆயன் குழலிசைக்கிறான். மு.இளங்கோவன் இயக்கிய குடந்தை சுந்தரேசனார் குறித்த ஆவணப்படத்தின் காட்சி இது.

பேரியாழ் இசைக்கும் திறன் கொண்டவர் பெரும்பாணர், தலைவனிடம் பரிசு பெற்ற பாணன், வறுமையில் துன்பப்படும் சக பாணனுக்கு தலைவன் ஊருக்கு செல்லும் வழியைச் சொல்லி அவனை வழிப்படுத்துதலே ஆற்றுப்படை இலக்கியத்தின் இலக்கணம். பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவரால் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் மீது பாடப்பட்டது. பாணன் செல்லும் வழியில் காடும் காடுசார்ந்ததுமான முல்லை நிலத்தைக் கடக்கவேண்டும். முல்லை நிலத்தில் கன்றுமேய்க்கும் ஆயனைக் காட்டுகிறது இப்பாடல்.

 தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி,
 ஒன்று அமர் உடுக்கை, கூழ் ஆர் இடையன்
 கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
 அம் நுண் அவிர் புகை கமழ, கைம் முயன்று
 ஞெலிகோல் கொண்ட பெரு விறல் நெகிழிச்
 செம் தீத் தோட்ட கரும் துளைக் குழலின்
 இன் தீம் பாலை முனையின், குமிழின்
 புழல் கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
 வில் யாழ் இசைக்கும் விரல் ஏறி, குறிஞ்சி,
 புல் ஆர் வியன் புலம் போகி.

 - பெரும்பாணாற்றுப்படை

உரை: இடையன் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அது சலித்துவிட்டால் பொந்துள்ள குமிழ மரத்தில் யாழ் செய்துகொண்டு இசைப்பான். கன்றுக் குட்டிகள் விரும்பி உடன்மேயும் ஆனிரைகளோடு அவன் கானத்து மேய்ச்சல் காட்டில் ஓய்வாகத் தங்குவான். அப்போது தனக்கு வேண்டிய புல்லாங்குழலைத் தானே செய்து கொள்வான். தீக்கடை கோலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தீயில் காய்ந்து கனப்புடன் இருக்கும் தீக் கோலால் மிகுந்த வலிமையோடு மூங்கிலில் அழுத்தித் துளையிட்டது அந்தக் குழல். துளை போடுவதற்காக அவன் கையால் முயன்று அழுத்தும் போது மெல்லிய புகை மனம் கமழும். புல்லாங்குழலில் அவன் பாலைப் பண்ணை இனிமையாகப் பாடுவான். அதில் சலிப்பு தோன்றினால் யாழிசை மீட்டுவான். 

யாழும் அவனே செய்து கொண்டதுதான். குமிழ மரத்தின் கொம்பை வளைத்து மரல் என்று சொல்லப்படும் பெருங்குரும்பையின் நாரை முறுக்கி நரம்பாக்கிக் கட்டி வில்யாழ் செய்துகொள்வான். அதில் விரல்களால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவான். அதன் ஓசை பல்கால் பறவை என்று சொல்லப்படும் வண்டின் குரல் போல இனிமையாக இருக்கும். இந்தப் புல்வெளியைக் கடந்து சென்றால் சிற்றூர் வரும்.


இந்தப்பாடலை சான்றாகக்கொண்டுதான் தமிழிசை அறிஞரான விபுலானந்த அடிகளார், முல்லை நிலத்தில் தமிழிசை முதலில் தோன்றியது என்ற கருத்தை முன்வைத்தார். விபுலானந்தரிடம் பேரன்புகொண்ட குடந்தை சுந்தரேசனாரின் குரல்தான் இந்தக்காட்சிகளில் பின்னணிப்பாடலாக வருவது. சங்கப்பாடல்களை பாடும் மரபை கேள்விப்படாத தலைமுறையான நமக்கு, சங்கக்கவிதைகளை தமிழிசையில் பாடக்கூட முடியுமா என்ற வியப்போடுதான் ஆவணப்படத்தை பார்க்க முடிகின்றது.

குடந்தை சுந்தரேசனாரை இளங்கோவன் இவ்வாறு அறிமுகம் செய்கின்றார். "தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர். நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு வந்துள்ளது. இளங்கோவடிகள் காலத்திலும், காரைக்கால் அம்மையார் காலத்திலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்திலும், சேக்கிழார் காலத்திலும், தமிழிசை மூவர்கள் காலத்திலும் இசைத்தொண்டினை அவரவர்க்கு உகந்த வகையில் செய்தனர். ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், வீ.ப.கா.சுந்தரம் காலத்தில் தமிழிசைத்தொண்டு என்பது பிறமொழி இசையிலிருந்து தமிழிசையை மீட்பது, பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்த தமிழிசை, இசைக்கருவிகளை அடையாளம் காட்டுவது என்று அடிப்படைக் கட்டமைப்பைச் சான்றுகளுடன் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தகு அறிஞர்களின் வரிசையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இசைத்தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்களுள் ஒருவர் பண்ணாராய்ச்சி வித்தகர் என அனைவராலும் அழைக்கப்பெற்ற குடந்தை ப.சுந்தரேசனார்."

சுந்தரேசனார், வாழ்நாள் முழுதும் கும்பகோணம் பேட்டை நாணயக்காரத் தெருவில் வசித்தவர். வறுமையால் துவக்கப் பள்ளியைக் கடக்கவில்லை, இசை கற்க பெரும்பித்து இருந்தது. திருவனந்தபுரம் கிருஷ்ணபிள்ளை, பிடில் கந்தசாமி தேசிகர், வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் முதலிய ஆசிரியர்களிடம் துவக்க காலத்தில் இசை பயின்றவர், ஏறக்குறைய பதினேழு ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்த வேதாரண்யம் இராமச்சந்திரன் என்னும் ஆசிரியரிடம் இசை கற்றார். தமிழ்ப்பண்டிதராக வேண்டும் என்னும் ஆர்வத்தால் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஒருவரிடம் சிலகாலம் தமிழும் கற்றிருக்கின்றார். 

குருமுகமான கல்வி மட்டுமல்லாது, தனது ஆர்வத்தால் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்தசாகரம் முதலிய இசைநூல்களைப் படித்தும், சங்க இலக்கிய இசைக்குறிப்புகள் வழியாகவும் தனது இசையறிவை மேம்படுத்திக்கொண்டார். அக்காலத்தில் மிகுந்திருந்த கர்நாடக கீர்த்தனைகளை தவிர்த்து, தமிழிசையை மீட்டெடுக்க முயற்சிகள் செய்தார். நல்வாய்ப்பாக விபுலானந்த அடிகளார் தனது யாழ்நூலை வெளியிடும் விழாவில் கலந்துகொண்டு அவரது நூல் குறித்து விரிவாக சுந்தரேசனார் உரையாடியது கண்டு மகிழ்ந்த அடிகளார் தனது தமிழிசை ஆய்வில் சுந்தரேசனாரை இணைத்துக்கொள்கின்றார். அடிகளார் தாம் தொகுத்து வைத்திருந்த பண்களைத் தந்து இவற்றை விரிவாக ஆராய்ந்து பண்ணாராய்ச்சி செய்யவேண்டும் என வேண்டினார். ஒருவகையில் விபுலானந்தரை அவரது இறுதிக்காலத்தில்தான் சுந்தரேசனார் சந்தித்திருக்கின்றார் என்று தெரிகிறது. அடிகளாரின் இசை ஆய்வுப்பணியை பின்னர் தனது வாழ்நாள் பணியாக மாற்றிக்கொண்டு விபுலானந்தர் வழியில் சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்டார். 



சுந்தரேசனார் தொடர்ந்து செய்த பெரும்பணி இசைச்சொற்பொழிவுகள் தான். அவை அனைத்தும் நூலாகத்தகுந்தவை என்றாலும் மிகச்சில நூல்களே வெளிவந்துள்ளன. தேவாரப்பாடல்களைப் பாடுவதோடன்றி அவற்றின் பண்களை விரிவாக ஆராய்ந்துள்ளார். சங்கப்பாடல்கள் துவங்கி, சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், திருவாசகம், சிற்றிலக்கியங்கள் வரை தமிழிசை வழியில் பண் அமைத்துப் பாடக்கூடியவர். தமிழிசை குறித்து பேசமட்டும் செய்த சமகால பேச்சாளர்களிடையே, பண் முறையில் பாடி அதை விளக்குபவராக சுந்தரேசனார் இருந்திருக்கின்றார்.

தனது உரைகளின் துவக்கத்தில் குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் வருகைப்பருவப்பாடலான 'தொடுக்கும் பழங்கடவுள்' என்னும் பாடலை சுந்தரேசனார் பாடுவதுண்டு. ஒருகட்டத்தில் லால்குடி ஊரோடு மிகவும் ஒன்றிப்போன சுந்தரேசனார் அந்த தலத்து இறைவியின்மீது வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ் பாடலான 'மாமலர் நறுங்குழல்' என்னும் பாடலை துவக்கப்பாடலாகப் பாடுகின்றார். இந்த இருபாடல்களும் ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் சுந்தரேசனார் இசை ஆசிரியராக இருந்தாலும் நீண்டகாலம் ஒரே கல்லூரியில் இல்லை, மொத்தமாகவே 15 ஆண்டுகள் தான் கல்லூரியில் இருந்திருப்பார். மீதமுள்ள நாளெல்லாம் சொற்பொழிவு, பண்ணாராய்ச்சி, இசைப்பாடம் கற்பித்தல் என்றே வாழ்ந்திருக்கிறார். 

ஆவணப்பட முயற்சிகளை மேற்கொள்கையில் குடந்தை சுந்தரேசனார் குறித்த தகவல்களைத் திரட்டுவது இளங்கோவனுக்கு பெரும் சவாலாக இருந்திருக்கும். அவரது புகைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே கிடைத்தன. அவருடைய ஒலிநாடாக்கள் சில லால்குடி நாடுகாண் குழுவால் வெளியிடப்பட்டிருந்தது, அவையும் பாடல்கள் இடையே கொண்ட சொற்பொழிவுகள். சுந்தரேசனாருக்கு இசையில் அளவுகடந்த ஞானம் இருந்தது, ஆனால் அதைக்கொண்டு தனது வறுமையை போக்கிக்கொள்ள அவர் முயற்சி செய்யவில்லை. வாழ்நாள் முழுக்க வாடகை வீட்டில் இருந்தார், அவருக்கு குழந்தைகள் இல்லை. ஆவணப்பட முயற்சிக்காக சென்றபோது இளங்கோவனால் அவர் வாழ்ந்த வீட்டைக்கூட சரியாக கண்டறியமுடியாத நிலை இருந்திருக்கிறது. ஏறத்தாழ சுவடின்றி மறைந்துவிட்ட ஒருவர். ஆவணப்படத்தின்வழி தனது தேர்ந்த ரசனையால், இசை மற்றும் தமிழறிவை சரியாகப் பயன்படுத்தி சுந்தரேசனாரை உருவகப்படுத்துகிறார் இளங்கோவன். 

வீ.ப.கா.சுந்தரத்துடன் இளங்கோவன்

இந்த ஆவணப்படத்தில் இசை இருக்கிறது, பாடல்களுக்குப் பொருந்த நடனம் இருக்கின்றது, கானல்வரிப்பாடல்களுக்கேற்ப சுழன்றோடும் காவிரியும், பெருமுக்கல் ஆலயமும் தோன்றுகின்றன. புதுவைப்பகுதிகளின் இயற்கை எழிலை சரியாக ஆவணப்படத்தில் பொருத்திவிடுகிறார் இளங்கோவன். குடந்தை சுந்தரேசனார் பாடும் சிலப்பதிகார மங்கல வாழ்த்து பகுதியில் மாமழை போற்றுதும் என்னும் பாடல் வரிகளில் நாமநீர்வேலி உலகிற்கு என்ற இடத்தில் கடல் புகும் காயல் பகுதியில் நடனக்கலைஞரை அபிநயிக்க வைத்திருக்கின்றார். 

புதுச்சேரியின் சுடுமண் சிற்ப கலைஞரான வி.முனுசாமி அவர்கள் சுந்தரேசனாரின் சிலையை களிமண்ணிலிருந்து உருவாக்கும் காட்சியில் படம் துவங்கி, சுந்தரேசனார் மறைவுக்கு பெருஞ்சித்திரனார் எழுதிய இரங்கற்பாவை இராசமாணிக்கம் உருக்கமாக பாடிமுடிப்பதோடு ஆவணப்படம் நிறைவுபெறுகின்றது. 

சுந்தரேசனாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் இளங்கோவன். சுந்தரேசனாரை அறிந்தவர்கள் பேசுவதன் வழியேதான் நாம் அவரைக் காணமுடிகிறது. அவரது இசைச்சொற்பொழிவில் ஓரிடத்தில் திருவாசகத்தை மோகன இராகத்தில்தான் பாடவேண்டும் என்கிறார். பாட்டுக்கு இடையே ஒரு சுரத்தில் பாடலை வெட்டி பேசத்துவங்கி பின் விட்ட இடத்தில் பாடலை அனாயசமாக தொடருமிடம் ஒன்று படத்தில் வருகின்றது. உருவமற்ற சுந்தரேசன் தனது குரலால் ஆவணப்படம் முழுவதும் இசையாய் நிறைகிறார். இந்த ஆவணப்படத்தில் வெவ்வேறு சுந்தரேசன்கள், கையிலிருந்த காசை மாணவரின் தந்தை இறந்ததற்கு கொடுத்து விட்டு கும்பகோணத்திற்கு வெகுதூரம் நடந்தே வரும் சுந்தரேசன், தனது குழந்தை சிலநாட்களில் இறக்கப்போவது தெரியாமல் பெரும்பற்றுடன் விபுலானந்தன் எனப்பெயரிடும் சுந்தரேசன், உலகத்தமிழ் மாநாட்டில் சங்கப்பாடல்களை கைதட்டல்களுக்கு நடுவில் பாடும் ஒருவர், தேவாரப்பண்களை தமிழிசை மன்றத்தில் ஆய்வுசெய்யும் ஒருவர், சிலப்பதிகாரத்தின் கானல்வரியை முழுநிலவுநாளில் பாடிவிட்டு அ.ச.ஞானசம்பந்தன் கட்டித்தழுவ ஓடிவருகையில் எதிரில் அமர்ந்திருக்கும் ஒருவர், திவ்வியப்பிரபந்தத்திற்கும் தேவாரத்திற்கும் பண் முறையில் ஒன்றும் வித்தியாசமில்லை என்று ஒரே பண்ணில் இரண்டு பாடல்களையும் பாடிக்காட்டும் அறிஞர் ஒருவர், தனது மணிவிழாவில் கிருபானந்த வாரியாரிடம் ஆசி பெரும் ஒருவர், யார் உங்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்தது, என்னிடம் சொல்லுங்கள் எனக்கோபமாக கேட்ட பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரிடம், விட்டுடுங்க அய்யா எனக்கு அங்க பிராப்தம் அவ்வளவுதான் என்று அமைதியாய் நின்ற சுந்தரேசன், இறுதியாக திருத்தவத்துறை எனும் லால்குடியில் கோவில் கோபுரத்தில் சிலையாய் இருக்கும் ஒரு சுந்தரேசனாரின் எத்தனை முகங்களைப் பார்க்க முடிகிறது.

இந்த முக்கியமான ஆவணப்படத்தை இயக்கிய இளங்கோவன் தமிழ் படித்தவர், இசை கற்றவரல்ல. இன்று அவரது பணிகளில் பெரும்பகுதி இசைத்தமிழுக்கானது. இந்தத்தொடர்பு அவருக்கு நாட்டார் பாடல்களால் ஏற்பட்டது. சிறுவயதில் வயல்வெளிகளுக்கு விவசாய வேலைகளுக்கு சென்றவருக்கு அங்கு பாடும் நடவுப்பாடல்களைக் கேட்டு நாட்டார் பாடல்களின் தன்மை பிடிபட்டிருக்கிறது. அவற்றின் சந்த அமைப்பை புரிந்துகொண்டவர் அதிலிருந்த தாளக்கணக்குகளை மனதிலிருத்திக்கொண்டார். அது அவருக்கு பிற இசைவடிவங்கள் அனைத்தையும் அறியச்செய்யும் கருவியாகியது. 

இசைத்தமிழை நன்கு அறியக்கூடிய எதிர்பாராத வாய்ப்பு இளங்கோவனுக்கு கிடைத்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக்களஞ்சியம் தொகுத்துக்கொண்டிருந்த வீ.ப.கா.சுந்தரம் ஒரு தமிழறிஞர் என்றளவில் மட்டுமே அப்போது அதே பல்கலைக்கழகத்தில் பயின்ற இளங்கோவன் அறிவார். ஒரு தமிழரங்கத்தில் பங்கேற்க சென்றபோது, முதியவரான சுந்தரம் உடல்நலக்குறைவால் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அவருக்கு உதவும் பொருட்டு அங்கு செல்கிறார் இளங்கோவன். சிலநாட்கள் கழித்து இளங்கோவனை அடையாளம் கண்டுகொண்ட சுந்தரம் அவர்கள் தனது தமிழிசை கலைக்களஞ்சிய பணிக்கு அவரை உதவியாளராக இருக்குமாறு செய்தார். இளங்கோவன் அந்த அரிய முயற்சியில் பங்கேற்றதன் மூலம் தனது தமிழிசை குறித்த ஆர்வத்தை பெருக்கிக்கொண்டார். ஒரு வகையில் விபுலானந்தரிடமிருந்து சுந்தரேசனார் தொடர்ந்ததுபோலவே, வீ.ப.கா.சுந்தரத்தின் தொடர்ச்சியாக இளங்கோவன் இந்தப்பணியை செய்திருக்கின்றார் எனலாம். 


சுந்தரேசனாருடைய பாடல் ஒலிநாடாக்களை பெரிய முயற்சிகளுக்குப்பின் மீட்டிருக்கின்றார் இளங்கோவன். என்றேனும் அவரது பாடல்களை பண்ணிசை குறிப்புகளோடு இளங்கோவன் வெளியிடலாம். அவரது சிலப்பதிகார அரங்கேற்றுக்காதையை தனியே வெளியிடலாம். தமிழிசை மரபு தொடருவதற்கு அது வழிவகுக்கும். அந்தப் பெரும்பணியும் அவருக்குக் கைகூட வேண்டும்.

தாமரைக்கண்ணன், புதுச்சேரி