Saturday 29 July 2023

வாக்ரிவாளோ - கரசூர் பத்மபாரதி

நரிக்குறவர்களின் பூர்வீகம்

ஒரு சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் (ethnography) செய்திகளை இரண்டு நிலையில் அறியலாம். அவை எழுதப்பட்ட நிலை, எழுதப்படாத வாய்மொழி நிலை. இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், மேவார் போன்ற வட மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டுக்குக் குடி பெயர்ந்து வந்திருப்பர் என்பது எழுதப்பட்ட நிலையிலும், நரிக்குறவர் கூறும் வாய்மொழிக் கதைகளிலும் தெரிகிறது. நரிக்குறவ மக்களைப் பற்றிய எழுத்துவழிச் செய்திகள் மிகச் சிலவே.

'குருவிக்காரர் மராத்தி பேசுகின்றனர். பறவைகள் பிடிப்பார்கள், பிச்சையெடுப்பார்கள். இவர்கள் நரியினை வேட்டையாடி அதன் தோலில் பை செய்வதோடு, அதன் இறைச்சியினையும் உண்கின்றனர். இவர்களை ஜாங்கள் சாதி எனவும், காட்டு மராத்தி எனவும் அழைப்பர். இவர்கள் தங்களை வகிரி அல்லது வகிரிவாலா எனக் கூறிக்கொள்வர். 'எத்து மறிக்கே வேட்ட காண்டுலு' எனவும் இவர்கள் வழங்கப்படுகின்றனர். எருதுகளின் மறைவில் நின்று வேட்டையாடுபவர்கள் என்பது இதன் பொருள். பறவைகளை அகப்படுத்த இவர்கள் எருதுகளின் மறைவில் நின்று பறவைகளைப் போலவே குரல் கொடுப்பர்' என்று எக்டர் தர்ஸ்டன் கருத்துப்படியும், நரிக்குறவர்கள் கூறும் புலப்பெயர்வுக்கான காரணக் கதையின்படியும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும், மராத்தி பேசும் மக்களாகவும் நரிக்குறவர்களைக் கொள்ளலாம்.

'நரிக்குறவர்கள் வட இந்தியாவின் ஆரவல்லி மலைத் தொடர், மேவார், குஜராத் முதலிய பகுதிகளிலிருந்து வந்து தமிழகத்தில் குடியேறிவர்களாவர். வட இந்தியாவில் முகமதியர்களின் படையெடுப்பின்போது இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற மறுத்து இங்கு வந்து குடியேறி இருக்கலாம்' என்கிறார் சீனிவாசவர்மா .

இன்றைய நிலையிலும் கூட நரிக்குறவர்களில் சிலர் மார்வாடிகளை உறவினர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொள்வதைப் பார்த்தால் மொகலாயர்களுடன் பண்டைய காலத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருந்திருக்கக்கூடும் என எண்ணத் தோன்றுகிறது. நரிக்குறவர்களின் பெரும்பான்மையான சடங்குகள் இந்து மதத்தைப் பின்பற்றினாலும், சிற்சில சடங்குகள் முஸ்லீம் சடங்குகளை ஒத்துக் காணப்படுகின்றன. நரிக்குறவர்கள் திருமணத்தன்று வெள்ளைத் தாள்களால் முகத்தை மூடிக்கொள்ளும் வழக்கம் முஸ்லீம்கள் துணியால் முகத்தை மூடிக்கொள்ளும் வழக்கத்தை ஒத்துக் காணப்படுகிறது. முஸ்லீம் மதத்தினர் பின்பற்றுவதைப் போல நரிக்குறவர்களும் இறந்தவர் உடலை எரிக்காமல் புதைப்பதுதான் வழக்கம். முஸ்லீம்கள் போன்றே நரிக்குறவர்களும் கறுப்பு மணியைத் தாலியாக அணிகின்றனர்.

மானிடவியலாளர் அய்யப்பன் பின்வருமாறு கூறுகிறார். “பொ.யு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டுகளில் இவர்கள் தமிழகம் வந்து குடியேறியிருக்கக்கூடும். மொகலாயப் படையெடுப்பின்போது உடன் வந்தோராகவும் இருக்கக்கூடும்." 

குஜராத்தி, மேவாடோ, டாபி, சேளியோ, ஜோகண் என்ற ஐந்து பிரிவில் குஜராத்தி என்னும் பிரிவினர் குஜராத் பகுதியிலிருந்தும், மேவாடோ மேவார் பகுதியிலிருந்தும் இடம் பெயர்ந்து தமிழகம் வந்து குடியேறி இருக்கலாம் எனத் தெரிகிறது. டாபி, சேளியோ, ஜோகண் போன்ற மற்ற மூன்று பிரிவுகளும் குஜராத்தி, மேவாடோ என்ற இருபெரும் பிரிவுகளிலிருந்து உடைந்து பிரிந்ததாக இருக்கின்றது. ஆடை அணிகலன்கள், தலைப்பாகை அணியும் முறை, பண்பாடு, வழிபாட்டு முறை, மொழி ஆகியவை வேற்று மாநிலத்திலிருந்து தமிழகம் வந்து குடியேறியவர்கள் என்பதனையே காட்டுகிறது.

புலப்பெயர்வு

சிவாஜியின் படைவீரர்களாக இருந்தனர் நரிக்குறவர்கள். சிவாஜிக்கும் முகலாயர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் சிவாஜியின் படை தோற்றுவிட, நரிக்குறவர்களை அடிமைகளாகவும், தங்களுக்குப் பணிவிடை செய்யும் பணியாளர்களாகவும் முகலாயர்கள் வைத்துக் கொண்டனர். ஏறக்குறைய 100 -150 ஆண்டுகள் முகலாயர்களுடன் அடிமைகளாக வாழ்ந்த நரிக்குறவர்கள் முகலாயர்களுக்குப் பயந்து நாட்டு வாழ்க்கையைக் கைவிட்டுக் காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர். அவர்களின் ஆடைகள் நரிக்குறவர்களை ‘அடிமைகளாக’ அடையாளம் காட்டவே அவற்றை கழற்றிவிட்டுக் காட்டுக்குள் இருக்கும் இலைகளை ஆடையாக அணிந்துகொண்டனர். வடக்கே முகலாயர்களுக்குப் பயந்து சிறிது சிறிதாகப் புலம் பெயர்ந்து தெற்கே வந்து குடியமர்ந்தனர்.

முகலாயர்களுக்குப் பயந்து காட்டுப்பகுதியிலும், மலைப்பகுதியிலும் வாழ்க்கையை மேற்கொண்டதால் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடவும், அதன் பல்வேறுபட்ட ஒலிகளை அறிந்து அவற்றைப் போன்றே கத்தவும் கற்றுக்கொண்டனர். கூட்டத்துக்குள் தனியாக யாரேனும் மாட்டிக் கொண்டால் தங்கள் கூட்டத்துக்கு அதனைத் தெரிவிக்க விசில், கூக்குரல் மூலம் சைகை ஒலிகளைப் பயன்படுத்தினர்.

கூட்டமாகவே செல்லும் பழக்கமுடைய இவர்கள் தனித்துச் சென்றால் பாதைகளில் பூக்களையும், இலைகளையும் இறைத்துச் சென்றனர். பூக்கள் என்றால் பெண்கள் என்றும், இலைகள் என்றால் ஆண்கள் என்றும் வேறுபடுத்தி அறிந்து கொள்ளக் குறியீட்டு முறையினை வைத்திருக்கின்றனர். வெள்ளையர்களின் வருகைக்குப் பின்பு மீண்டும் நாட்டு வாழ்க்கையை மேற்கொண்டு வந்தனர். கரடி, சிங்கம், புலி ஆகியவற்றை வேட்டையாடும் முறையில் நரிக்குறவர்களை வெள்ளையர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விடவே வில், அம்பு போன்ற கருவிகளை வேட்டைக்குப் பயன்படுத்தி வந்தவர்களுக்குத் துப்பாக்கி கொடுக்கப்பட்டு அதற்கு உரிமமும் கொடுக்கப்பட்டது. வெள்ளையர்கள் இவர்களின் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி எதிரிப் படைகளைத் தாக்கினர்.

மராத்தி மாநிலத்தைச் சேர்ந்த சத்திரபதி சிவாஜியின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் தாங்கள் என்கின்றனர் நரிக்குறவர்கள். சிவாஜி புலியினை வேட்டையாடி புலியின் நகத்தை மறைமுகமாக வைத்துத் தன் எதிரிகளைப் போரிட்டு வென்றார். 

'வாக்' என்றால் மராட்டி மொழியில் 'புலி'. 'வாக்ரி' என்றால் 'புலியினத்தவர்கள்' என்றும் பொருள்படும்.

நரிக்குறவர்கள் ஒருவரை ஒருவர் 'வாக்ரி' என்று அழைத்துக் கொள்ள இதுவே காரணமாய் இருக்கலாம், அதாவது ஆரம்ப காலத்தில் ஒரு அரசனுக்கும் மற்றொரு அரசனுக்கும் போர் நடந்தால் தோற்றுப் போகின்ற அரசனுடைய நாட்டில் உள்ள அனைத்தும் வெற்றி பெற்ற அரசனுக்குச் சொந்தம். அவ்வகையில் சிவாஜியின் படை வீரர்களாய் இருந்த இவர்கள் தோற்றுப்போய் விடவே கொத்தடிமைகளாய் வாழ விருப்பமில்லாமல் இரவோடு இரவாக ஆடைகளைக் கழற்றிவிட்டு இலைகளை அணிந்து காட்டுக்குள் அன்றுமுதல் இன்றுவரை யாருக்கும் அடிமையாகும் எண்ணம் இல்லாமல் மிகச் சுதந்திரமாக வாழ்ந்து வருதாகக் கூறுகின்றனர்.

1. அனைவருக்கும் தொழிலை மையமாக வைத்து வாழ்க்கைத் தரம் மாறிவிடுகிறது. ஆனால் நரிக்குறவர்களின் முதன்மைத் தொழிலே வேட்டையாடுதல் என்பதால் வேட்டையாட ஏதுவாக உள்ள இடமாய்ப் பார்த்து நகர்ந்து செல்வர். இதனால் ஓரிடத்தில் நிலையாய் வசிக்காமல் இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

2. யாரேனும் இறந்தால் அங்கேயே பிணத்தைப் புதைத்து விட்டு வேறிடம் செல்வது முன்பு வழக்கம். ஆனால் தற்போது இல்லை. 

3. ஒரு குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்பட்டால், அதாவது சாமி சொத்து போன்ற பிரச்சனைகள் வந்தால் 'ஒதுக்கி வைத்தல்’ போன்ற தண்டனைகளால் இடம் பெயர வாய்ப்புண்டு.

4. பலவான்கள் (25 வருட சாமி சொத்துள்ளவர்கள்) ஒரே இடத்தில் இருக்க முடிவதில்லை. அதனால் வேறு வேறிடம் சென்று தங்கள் சந்ததியினரைப் பெருக்கிக்கொள்வர். 

எனவே தொழிலை முதன்மைப்படுத்தியே நரிக்குறவர்கள் தங்கள் வாழிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.

இனப் பெயர்

தமிழகத்தில் திருந்தாத நிலையில் நாகரிகமற்று இருக்கும் மக்களைப் பொதுவாகக் 'குறவர்' என்றே சமூகத்தில் அழைத்து வந்தனர். ஏறக்குறைய 70 வகையான குறவர்கள் இருந்தாலும் தொழில் அடிப்படையில் பூனைகுத்தும் குறவர், உப்புக்குறவர், மலைக்குறவர் போன்ற பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நரியினை வேட்டையாடி அதன் இறைச்சினை உண்பதாலும் நரித்தோல், நரிப்பல், நகம், வால், கொம்பு முதலியவற்றை விற்பதாலும் 'நரிக்குறவர்' என்பது தொழில் அடிப்படையில் வழங்கப்பட்ட பெயரெனலாம்.

நரியால் விவசாயிகளுக்குப் பெரும் தொல்லை உண்டாகின்றது. கோழி, ஆடு போன்றவற்றை நாட்டில் புகுந்து பிடித்துக் கொண்டு போகும் மிகத் தந்திரமான விலங்கு நரி. இதனை மற்றவர்களால் எளிதில் பிடிக்கவோ கொல்லவோ முடியாது. யாரும் எளிதாகப் பிடிக்க முடியாத ஒரு மிருகமான நரியை இவர்களின் அறிவுக் கூர்மையால் பிடிப்பதால் இவர்கள் 'நரிக்குறவர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். நரிக்கறியை உணவாக உட்கொள்வதால் ஆஸ்துமா, இரத்தசோகை போன்ற சில நோய் தீர்க்கும் மருந்தாகவும், உடல் வலிமை பெறவும் அது உதவுகிறது என்று கருதுகின்றனர். இதனால் தெற்குப்பகுதியில் குறிப்பாகத் தேவர்கள் நரிக்கறியினை விரும்பி உண்பர். எல்லா விலங்குகளையும், பறவைகளையும் நரியைப் போலவே மிகத் தந்திரமாக வேட்டையாடி வீழ்த்துவதால் கூட 'நரிக்குறவர்' எனப் பெயர் பெற்றனர்.

'வாக்' என்றால் மராட்டி மொழியில் 'புலி' என்றும் 'வாக்ரி' என்றால் 'புலியினத்தவர்கள்' என்றும் அழைக்கப்படுவதாக நரிக்குறவர்கள் கூறுகின்றனர். சிவாஜியின் போர்ப்படை வீரர்களாய் இருந்ததாலும் மராட்டியர்களின் தொடர்பு இருந்தமையாலும் 'மராட்டியன்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். மராட்டிய மண் வீரத்திற்குப் பெயர் பெற்றதால் மராட்டியன் என்பதில் பெருமை கொள்கின்றனர். மராட்டியன் என்ற சொல்லில் மகரம் கெட்டு முகரம் தோன்ற 'முராட்டியன்' என்றும் அழைக்கப்படுகின்றனர். முராட்டியன் என்னும் சொல்லில் முகரம் கெட்டு 'ராட்டியன்' என்றும் வழங்கப்படுகின்றனர்.

நரிக்குறவர்கள் வலை விரித்தும் வெடி வைத்தும் காடை, கௌதாரி போன்ற குருவிகளைப் பிடிப்பதால் 'குருவிக்காரன்' என்றும் அழைக்கப்பட்டுகின்றனர். எங்கு சென்றாலும், எதைச் செய்தாலும் கூட்டம் கூட்டமாகவே காட்சியளிப்பதால் 'நரிக்குறவர் கூட்டம்', 'குருவிக்காரக் கூட்டம்' போன்ற பெயர்கள் ஏற்பட்டன.


மாவட்ட மாநில அளவில் நரிக்குறவர்களின் பெயர்கள்

தமிழகத்தில் திருநெல்வேலியில் நரிநாயக்கர் என்றும் புதுக்கோட்டையில் பெரிசு, ஆதி என்றும், நாகப்பட்டினத்தில் நரித்தொம்பன் என்றும், கன்னியாகுமரியில் முராட்டியன், ராட்டியன் என்றும், தஞ்சாவூரில் மராட்டியன் என்றும், திருச்சி, சேலம், தென்னார்க்காடு ஆகிய மாவட்டங்களில் நரிக்குறவர், நரிக்குறவக் கூட்டம் என்றும், செங்கல்பட்டு, வட ஆற்காடு பகுதிகளில் குருவிக்காரன், குருவிக்காரக் கூட்டம், குருவிக்காரச் சாதி என்றும் அழைக்கப்படுகின்றனர். மாநில அளவில் நரிக்குறவர்களின் பெயர்கள் பின்வருமாறு மாறுபடுகின்றன.

தமிழகத்தில் இவர்கள் குருவிக்காரன், குருவிக்காரச் சாதி, குறவன், குளுவன், நரிக்குறவன், நரிக்குறவக் கூட்டம், நரிக்குறவச் சாதி என்றும், புதுவையில் நரிக்குறவன் என்றும், ஆந்திராவில் நக்கலா, நக்கலவாண்டுலு, பிள்ளைகுத்து அம்மு எனவும், கல்கத்தாவில் சிங்களன் என்றும், ராஜஸ்தானில் வாக்ரி, பாக்டி, சிங்கா என்றும், கேரளத்தில் குருவிக்காரர் என்றும், கர்நாடகத்தில் ஹக்கிபிக்கி என்றும், மகாராஷ்டிரத்தில் பார்தா / பார்த்தீலோஹ் என்றும், குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் வாக்ரி என்றும், டில்லி, உத்திரபிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் ஹக்கிபிக்கி என்றும், இந்துஸ்தானியில் பரக்கு, மிர்சிக்காரி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

குஜராத் மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் என்பதனால் ‘வாக்ரிவெல்ஜாத்' என்று கூறிக்கொள்கின்றனர். 'வாக்ரி' என்றால் குஜராத் மொழியில் 'குருவி'. 'வாக்ரிவெல்ஜாத்' என்றால் 'குருவிக்காரச் சாதி', 'வாக்ரிவாளோ' என்றால் 'குருவிக்காரன்' எனப்படும். 'வாக்ரிவெல்வாடோ' என்றால் 'குருவிக்கார கூட்டம்'. இவர்கள் குறவனை ‘வாக்ரி' என்றும் குறத்தியை 'பைக்கோ' என்றும் அழைக்கின்றனர். ஆண் குழந்தைகளை ‘சொக்ரு' என்றும் பெண் குழந்தைகளை ‘சொக்ரி' என்றும் அழைக்கின்றனர்.

தோற்றத் தொன்மம்

இவர்களின் தோற்றத் தொன்மம் வாய்மொழி வரலாறாக இன்றும் வழங்கப்படுகிறது. ஓர் ஊரில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஒரு நாள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பொழுது தாகத்தின் மிகுதியால் நீர் தேடி அலைந்தனர். முதலில் கடைசித் தம்பி நீர் அருந்தச் சென்ற பொழுது ஒரு பெண் ஆற்றில் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மறைந்து நின்று ரசித்தான். பிறகு இரண்டாம் தம்பி வரவே அவனும் அவ்வாறே செய்தான். மூத்தவன் கடைசியாக நீர் அருந்த வந்தபொழுது சகோதரர்கள் இருவரையும் காணாமல் தாகத்தின் மிகுதியால் தேடாமல் நீர் அள்ளிக் குடித்தான். நீரில் ஏதோ மிதக்கவே அதனைப் பாசியென நீக்கினான். இருப்பினும் நீர் குடிக்கும் பொழுது கைவிரல்களிடையே அதுமாட்டிக் கொள்ளவே, அதனை நீக்க முயற்சித்தான். அப்பொழுது ஆற்றுக்குள் மூழ்கி எழுந்த ஒரு பெண், "என் தலை முடியை இழுக்கின்றாயே, வலிக்கின்றது எனக்கு" என்றாள்.

இந்தக் குரல் வெகு தூரத்திலிருந்து ஒலித்தது. சிரித்துக் கொண்டே சொன்னான் “என் விரல்களிலே மாட்டியிருப்பது பாசி தான், நீங்கள் அந்தக் கரையில் குளிக்கிறீர்கள். நான் இந்தக் கரையில் நீர் குடிக்கிறேன். எப்படி உங்கள் கூந்தல் என் விரல்களிலே சிக்கிக் கொள்ளும்?" என்று வினவ, அப்பெண்ணுக்குக் கோபம் வந்தது. உன் விரல்களிலே மாட்டியிருக்கும் முடியை சிக்கெடுத்து நீளமாக வைத்துப்பார். அது என்னை வந்து தொடும் என்றாள். மூத்த சகோதரனும் அவ்வாறு செய்தான். தன் விரல்களில் சிக்கியிருந்தது அந்தப் பெண்ணின் கூந்தல்தான் என அறிந்ததும், "தாயே ! மன்னித்துக் கொள் ! நான் தாகத்தின் மிகுதியால் கவனிக்கவில்லை" என்றான்.

மேலும் அவள் கோபித்தவளாய் "என் பெயர் சீதாதேவி. நான் இந்த வனத்தில் வசிக்கிறேன். நான் குளிப்பதை உன் இரண்டு சகோதரர்களும் மரத்தின் பின் மறைந்து நின்று ரசிக்கின்றனர் என்று சுட்டிவிட்டு முதலில் பார்த்து ரசித்த கடைசிச் சகோதரனுக்கு சாபம் கொடுத்தாள். நீ 'குடுகுடுப்பைக்காரனாய்' வீடுவீடாய்ச் சென்று குடுகுடுப்பை அடித்துப் பிச்சையெடுத்து அலைந்து திரிவாயாக என்றும், பிறகு பார்த்து ரசித்த இரண்டாம் சகோதரனுக்கு, நீ 'லம்பாடியாய்' தெருத்தெருவாய்ச் சென்று இரத்தம் கசியும்வரை சாட்டையடித்துப் பிச்சையெடுத்து அலைந்து திரிவாயாக என்றும் சாபம் கொடுத்தாள்.

"மூத்த சகோதரனே! இதைப் போன்ற கேவலமான சகோதரர்களை வளர்த்துவிட்ட உனக்கு ஒரு பந்தயம் வைக்கிறேன். இதில் நீ வெற்றி பெற்றால் உண்டு. இல்லையேல் நீயும் சபிக்கப்படுவாய்" என்று கூறித் தன் தலையிலிருந்து நான்கு முடிகளைப் பிடுங்கி, தன் கை வளையல்களால் கண்ணி போன்று குறுக்கும் நெடுக்குமாகச் செய்து ஆடுகள் வரும் பாதையில் வைத்தாள். இந்த வளையத்தில் "நல்ல ஆடு சிக்குமா? நொண்டி ஆடு சிக்குமா?" என்று வினவ, சற்று யோசித்து நல்ல ஆடு சிக்கினால் வெளியே வந்துவிடும்; நொண்டி ஆடு சிக்கினால் வர இயலாது என்ற கணிப்பில் "நொண்டி ஆடு" என்றான். இருவரும் காத்திருந்தனர். ஆடுகள் அந்தப் பாதையில் வந்தன. நல்ல ஆடு ஒன்று வளையத்தில் சிக்கிக்கொண்டது. உடனே சீதை நீ ‘நரிக்குறவனாய்' காடுகடாய் வேட்டையாடிப் பிச்சையெடுத்து அலைந்து திரிவாயாக என்று சாபம் கொடுத்தாள். நீங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியாக அலைய வேண்டும். நான் சொல்லும் தொழிலை மேற்கொள்ளாவிட்டால் இறந்து போவீர்கள் என்றாள். இந்தச் சாபத்தின் அடிப்படையில் இன்றும் நரிக்குறவர்கள் வேட்டையாடக் கண்ணி பயன்படுத்துகின்றனர். இக்கதையின் வழி நரிக்குறவர்களும், குடுகுடுப்பைக்காரர்களும், லம்பாடிகளும் ஓரிடத்தில் நிலையின்றி இருப்பவர்கள் எனத் தெரிகிறது. மூன்று இனங்களின் தோற்றத்திற்கான தொன்மம் இராமாயணத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

இதனை தர்ஸ்ட்டன் வேறு ஒரு வடிவில் கூறுகிறார். "முன்னொரு காலத்தில் இவர்களின் முன்னோர்களுள் மூன்று உடன் பிறந்தவர்கள் இருந்ததாகவும், அவர்களுள் ஒருவன் மலைப் பகுதிகளுக்கு ஓடிப்போய் கன்னக் குறவரோடு சேர்ந்து கொண்டவனாகத் தகுதியில் தாழ்ந்து விட்டான் எனவும் ஒரு கதை வழங்குகின்றது. அவன் சந்ததியினரே இன்று 'தொம்மரர்' என அழைக்கப்படுகின்றனர். அம்மூவருள் இரண்டாவது உடன் பிறந்தவன் சந்ததியினர் 'லம்பாடியர்'. மூன்றாவதான உடன் பிறந்தவன் சந்ததியினர் 'குருவிக்காரர்'. 

இம்மூன்று சாதியினரும் இவ்வாறு தாழ்ந்த பிரிவினரானதற்குக் காரணமாகக் கூறப்படும் கதை வருமாறு ‘இவர்கள் அலைந்து திரிந்துகொண்டிருந்த சமயத்தில் சீதை எதிர்ப்பட்ட போது அவள் அழகினைப் பற்றிக் கேலியாகப் பேசிச் சிரித்தனர். இதனால் கோபமுற்ற சீதை 'மாலிதோ சிக்கார் நைதோ பிக்கார்' எனச் சாபமிட்டாள். பறவைகளைக் கண்டால் வேட்டைக்காரர். இல்லையேல் பிச்சைக்காரர் என்பது இச்சாபமொழியின் பொருளாகும். இக்கதையே மற்றொரு வகையாகவும் வழங்கி வருகின்றது.’

பல ஆண்டுகளுக்கு முன் ராஜபுதனத்தில் இரண்டு உடன் பிறந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் மூத்தவன் அறிவிலி. இளையவன் கூர்ந்த அறிவினன். ஒரு நாள் அவர்கள் ஒரு நீர்நிலையினை ஒட்டி தங்கள் எருதினை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கையில் அங்குக் குளித்துக் கொண்டிருந்த சீதையை எதிர்பாராது கண்டனர். இளையவன் உடனே எருதுக்குப் பின் மறைந்து கொள்ளவில்லை. எனவே இவ்விருவரையும் அந்த தெய்வமகள் கண்டுகொண்டு அதனால் மன வருத்தம் அடைந்தவளாக இவர்களைத் தென்னிந்தியாவில் சென்று சேரும்படி சாபமிட்டாள். மூத்தவனைப் பொதி எருதுகளைக் கொண்டு பொருள்களைச் சுமந்து சென்று பிழைக்கும்படியும், இளையவனைக் கண்ணிகளை வைத்துப் பறவைகளைப் பிடித்துப் பிழைக்கும்படியும் சாபமிட்டதோடு, இளையவன் அவ்வாறு கண்ணிகள் அமைக்க தன் கையிடுக்கிலிருந்து இரண்டு முடிகளையும் பிடுங்கிக் கொடுத்து உதவினாள். இதன் காரணமாக வகிரிவாலாக்கள் தங்கள் கையிடுக்கினை மழித்துக் கொள்ளும் பழக்கத்தினை மேற்கொள்வதில்லை".

நரிக்குறவர்களிடம் வழங்கிவரும் மற்றொரு குலபுராணமாக செல்லபெருமாள் பின்வருமாறு கூறுகிறார். "ஒரு பெரிய கடல் இருந்தது. ஒரு பகுதியில் ஐயர் எலும்பு, முதலியார் எலும்பு, பிள்ளைமார் எலும்பு, தேவர் எலும்பு, கோனார் எலும்பு, பள்ளர் எலும்பு எல்லாம் கிடந்தன. அவற்றைக் கடவுள் கரைக்கு எடுத்துவந்து அவற்றுக்கு உயிர் கொடுத்து சந்ததிகளை உருவாக்குகின்றார். இதே போல் நரிக்குறவர்களின் எலும்பைக் கடவுள் எடுத்து வரும்போது ஒரு கருங்குருவி ஒன்று அதனைக் கடலில் தள்ளிவிட்டது. ஒருவாறாக அவர்கள் மனித உருவமும் உயிரும் பெற்று கடலிலிருந்து தப்பித்து காட்டுக்கு வந்து வாழ்கின்றனர். அதனாலேயே இன்றும் குருவி போன்ற பறவைகளை வேட்டையாடி வாழ்கின்றனர்.


மொழி

நரிக்குறவர்கள் நாடு முழுவதும் பரவி இருக்கின்றனர். இவர்களது மொழியை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து எழுத்து வடிவம் கொடுக்க முடியாமல் குழப்பம் அடைவர். காரணம் தெலுங்கு என்றால் ஆந்திர மாநிலமும், தமிழ் என்றால் தமிழ் நாடும் குறிக்கப்படுவதைப் போல 'வாக்ரிபோலி' என்றால் எந்த ஒரு மாநிலமும் குறிப்பிடும்படி இல்லை. ஏனெனில் ஒரே மாநிலத்தில் நிலைத்து வாழாமல் இடம் விட்டு இடம், ஊர்விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் என்று இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் அந்தந்த இடத்தின் கலாச்சரத்தையும் பண்பாட்டையும், மொழியையும் அறிந்துகொண்டு அந்தந்த மாநிலத்தின் மொழியைத் தங்கள் மொழியில் கலந்து உரையாடி வருகின்றனர். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, உருது, குஜராத்தி போன்ற இருபத்தி நான்கு மொழிகளைக் கலந்து நரிக்குறவர்கள் பேசுகின்றனர். என்ன மொழி உங்கள் மொழி என்று கேட்டால் பெரும்பான்மையோர் தெரியவில்லை எனக் கூறுகின்றனர். சிலர் 'மராட்டி' என்கின்றனர். இவர்களது மொழி எழுத்து வடிவம் பெறாமல் வாய்மொழியாகவே இருந்து வருகிறது. ஒரு வாக்கியத்தை நரிக்குறவர்கள் சொன்னால் தமிழ், தெலுங்கு, இந்தி என்று குறைந்தது மூன்று மொழிகள் கலந்த ஒரு கலப்பு மொழியாக இருக்கிறது. நரிக்குறவர்கள் பேசுகின்ற இந்த மொழி 'வாக்ரி போலி' எனப்படும்.

''நரிக்குறவர் மொழி வாக்ரிபோலி. இது இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். தமிழ் பேசுவோர்க்கு அம்மொழி ஒரு புரியாத மொழியாக உள்ளது. இந்தி, உருது பேசுவோர்களுக்கும் குஜராத்தி மொழி பேசுவோர்க்கும் ஓரளவு புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. வாக்ரிபோலியின் ஒலியமைப்பு தமிழினின்றும் மாறுபட்டதாகும். மூச்சொலி, வெடிப்பொலிகள், வருடொலிகள், மூச்சொலியுடன் கூடிய உயிரொலிகள் ஒலிப்புடைய வல்லின மெய்கள் ஆகியவைகளுடன் உள்நா அதிரொலி, ஹகர ஒலிகள் முதலியனவும் உள்ளன" என்கிறார் சீனிவாச வர்மா.

அவர்தம் கருத்துப்படி தமிழருக்கு வாக்ரிபோலி என்ற குருவிக்கார மொழியைப் புரிந்து கொள்ளவும், பேசவும், மிகக் கடினமாக இருப்பதால்தான் இது தமிழ் மொழியிலிருந்து வேறுபட்டு அமைகின்றது. நரிக்குறவ மொழிக்கு இலக்கணமும் அகராதியும் எழுதியவர்களுள் கிப்ட்சிரோமணி ("வாக்ரிபோலி என்ற நரிக்குறவர் மொழி"), சீனிவாச வர்மா ("நரிக்குறவர் இலக்கணம்") ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆடவரும் பெண்டிரும் ஆடை, அணிகலன்களை வித்தியாசமாக அணிவது, வித்தியாசமான ஒரு மொழியைப் பேசுவது, சிறியவர் முதல் பெரியவர் வரை குடித்தல், வெற்றிலைபாக்கு போடுதல், கூட்டம் கூட்டமாக மரநிழலில் வாழ்வது, நீண்ட நாட்களுக்குக் குளிக்காமல் இருப்பது, நாடோடி வாழ்க்கையினை மேற்கொள்வது, பாட்டுப் பாடி ஆட்டம் போட்டுப் பிச்சையெடுத்தல், வேட்டையாடுதல், வேட்டையாடியதை உண்டு மிஞ்சியதை விற்றல், சுத்தமின்மை, பூசை முறையில் பச்சை இரத்தம் குடித்தல் போன்ற செயல்களே நரிக்குறவர்களை நமக்கு அடையாளம் காட்டி விடுகின்றன. இதனாலேயே நாய்கள் முடைநாற்றம் வீசுபவர்களாக காட்சியளிக்கும் நரிக்குறவர்களை இனங்கண்டு குரைக்கின்றன. பேருந்து நிலையம், ரயிலடி, சினிமா அரங்கு, மருத்துவமனை போன்ற பொது இடங்களிலும் பிறமக்களால் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். ஆனாலும் மற்ற சமூகத்தினரின் பண்பாட்டாலோ, சமுதாய அமைப்பாலோ, பழக்கவழக்கங்களிலோ, வாழ்க்கை முறைகளாலோ ஈர்க்கப் படாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

பழங்குடிகள் இந்திய அளவில் பரவிக் காணப்படுகின்றனர். அவரவர் வாழும் சூழலுக்கேற்ப இடத்துக்கேற்ப வெவ்வேறு பெயரால் அழைக்கப்படுகின்றனர். என்றாலும் பல நூற்றாண்டுகளாக நாகரிகத்தை அடைய விரும்பாமல் பழைமைகளின் வேர்களில் இருப்பவர்களை அரசாங்கம் விழிக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. பல சலுகைகளை அளித்து அவர்களின் வாழ்நிலையை உயர்த்த வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுத்துள்ளது. மலைச் சாதியினராகவும், பழங்குடிகளாகவும் நரிக்குறவர்கள் கருதப்பட்டாலும் மற்ற பழங்குடி மக்களினின்று வேறுபட்டு அமைகின்றனர். இவர்கள் சமவெளிப் பகுதியான காடுகளில் வந்து தங்கினர். நாட்டுமக்கள் காடுகளை ஆக்கிரமிப்பு செய்தவுடன் நாட்டுக்குள்ளேயே விலங்குகளைப் போன்று முட்செடிகளிலும், புதர்கள் நிறைந்த புறம்போக்கு நிலங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அரசின் உதவியோடு நிலம் ஒதுக்கப்பட்டு வீடு கட்டி வாழ்கின்றனர் என்றாலும் வாழ்க்கைத் தரம் உயரும் அளவுக்கு அரசு உதவ வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.


கரசூர் பத்மபாரதி

நன்றி: தமிழினி பதிப்பகம்

கரசூர் பத்மபாரதி தமிழின் முக்கியமான மானுடவியல் ஆய்வாளர். வெளிஉலகுடன் அதிகம் கலக்காத மூடுண்ட சமூகங்களான  திருநங்கைகள் குறித்தும்,  நரிக்குறவர்கள் குறித்தும் ஆய்வுநூல்கள் வெளியிட்டிருக்கிறார். அவர் எழுதி 2004ம் ஆண்டு வெளிவந்த நரிக்குறவர் இனவரைவியல் நூலில் இடம்பெற்ற கட்டுரை இது. இவரது ஆய்வுப்பணிக்காக 2022ம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்பட்டது. 

கரசூர் பத்மபாரதி நேர்காணல் - எனக்கு டேபிள் வொர்க் செய்வதை விட கள ஆய்வு செய்வது சுலபம் ~ குருகு இதழ் - 1

கரசூர் பத்மபாரதி - தமிழ்.Wiki