Sunday 5 March 2023

இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழ் முகங்கள் - தியடோர் பாஸ்கரன்

சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பாற்றிய தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களை முறையாக ஆவணப்படுத்துவதில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. அக்காலகட்டத்தின் ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் தனது இளமையை கழித்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி பொதுச் செயலாளர் ஆர்.எஸ். ரெட்டி (1940-2020) ஒருமுறை கூறுகையில் "அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதும் ஆவணப்படுத்துவதும் நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவதற்கான சிறந்த வழிகள்" என்றார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் தென்னிந்தியாவின் மீதான ஆங்கிலேய ஆட்சியின் தோராயமான பிடி இறுகத்தொடங்கியபொழுதே அதற்கு எதிரான போராட்டங்களும் எழுந்தன. அன்று இந்நிலம் மதுரை நாயக்க மன்னர்களுக்கு விசுவாசமான அதிகாரிகளான பாளையக்காரர்களால் ஆட்சிசெய்யப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளின் வழியே படையெடுத்தபோது அப்பகுதி பாளையக்காரரான வேலாயுதன் நாயக்கர் அவர்களை எதிர்த்தார். சில சிறிய படையெடுப்பகளுக்குப் பிறகு அவர் கைதுசெய்யப்பட்டு திண்டுக்கல் கோட்டையில் சிறையிடப்பட்டார். அதற்கு பிறகு அக்காலத்தின் எந்த பதிவுகளிலும் அவரைப் பற்றிய செய்திகள் இல்லை. பெரும்பாலும் அவர் ஏதேனும் ஒரு சாலையோர புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டு மறக்கப்பட்டிருக்கலாம். அவரைப் போலவே ஆங்கிலேயர்களை எதிர்த்த கட்டபொம்மன் போன்ற பிற பாளையக்காரர்கள் வரலாற்றுப் புத்தகங்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் இடம்பெற்றுவிட்டனர். ஆனால் வேலாயுதன் நாயக்கர், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் மறக்கப்பட்ட பல தென்னிந்திய வீரர்களின் சின்னமாக கவனம் பெறாமலே இருக்கிறார்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றாசிரியர்களால் தமிழ் ஆளுமைகள் ஏன் கடந்து செல்லப்படுகிறார்கள்? அவர்கள் சமூக எழுச்சிகளை பதிவுசெய்கையில் பெரும்பாலும் அன்றைய அரசாங்கத்திற்கு சார்பாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதிவுகளையே நம்பியிருக்கிறார்கள். அச்சு ஊடகங்களை பயன்படுத்தினாலும் ஆங்கில ஊடகங்களையே நம்புகிறார்கள். ஆனால் அன்றைய பெரும்பாலான பொதுப் போராட்டங்கள் தமிழில் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவுமே பதிவுசெய்யப்பட்டன. அவை நம்பத்தகுந்த வரலாற்று ஆவணங்களாக கருதப்படாமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்டன. இதனால் அரசியல் நடவடிக்கைகள் சார்ந்த வரலாறு பெரும்பாலும் ஒற்றைப்படைத்தன்மை கொண்டதாகவே இருந்து வருகிறது. மேலும் அன்றைய தேசிய உயர்குடிகளுக்கு தமிழ் அடையாள அரசியலின் மீதிருந்த ஒவ்வாமையும் இந்த கவனமின்மைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

இந்நிலையில் சென்ற நூற்றாண்டின் அறிஞர்களால் மெட்ராஸ் மாகாணம் வரலாற்றின் இருண்ட மாகாணமாக அறியப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையை இத்தகைய புறக்கணிப்பிற்கான சிறந்த உதாரணமாக வரலாற்றாசிரியர் ஆ. ரா. வெங்கடாசலபதி குறிப்பிடுகிறார். நவம்பர் 23, 1907 அன்று மெரினா கடற்கரையில் நடந்தப்பட்ட லாலா லஜ்பத் ராயின் விடுதலையை ஒட்டிய கொண்டாட்டத்தைப் பற்றிய அரசாங்கப் பதிவு பாரதியின் சுதந்திரப் போரட்டப் பங்களிப்பிற்கான தொடக்ககால பதிவுகளில் ஒன்று. பாரதி அவரது அரசியல் கேலிச்சித்திரங்கள் மற்றும் அங்கதங்களின் பயன்பாட்டிற்காக ஒரு முதன்மை பத்திரிக்கையாளராக அறியப்பட்டார். அவர் தேசிய அளவிலான வார இதழான "இந்தியா"வில் பணியாற்றியபொழுது சமூகத்தில் பிரபலமான மெட்டுக்களுக்கு இசையமைக்கப்பட்ட பாடல்களை அரசியல் பிரகடனங்களுக்கான கருவியாக பயன்படுத்தினார்.

மக்கள் மத்தியில் நாட்டுப்புற பாடல்களுக்கு இருந்த செல்வாக்கை அறிந்த பாரதி, கும்மி, சிந்து போன்ற வகைமைகளில் பாடல்களை அமைத்தார். அவரது பாடல்களே தேசியவாத இயக்கத்திற்கான ஆதரவு திரட்ட தமிழ் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டன. அவர் 1921-ல் மறைந்த பிறகே அவரது பாடல்கள் பெரும் புகழ் பெற்றன. ஆங்கிலேய அரசு அவரது பாடல்களை அச்சு ஊடகங்களில் பிரசுரிக்க தடை விதித்திருந்தபோதும் அவை கிராமபோன் பாடல்களிலும் கூட்டங்களிலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. "மேனகா" (1936) போன்ற பல்வேறு தமிழ் படங்களில் அவரது தேசபக்தி பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறு இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய பாரதி தமிழ் நாட்டிற்கு வெளியே அறியப்படாததற்கான காரணத்தை ஆராய்ந்த ஆய்வாளர் வெங்கடாசலபதி, பாரதியை வங்காள கவிஞர் தாகூரோடு ஒப்பிட்டு, வங்காள நடுத்தர வர்க்கத்தைப் போலன்றி தமிழ் நடுத்தர வர்க்கம் பாரதியை கைவிட்டதே அவர் கவனம் பெறாததற்கான காரணம் என்கிறார்.

அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வின்ச் துரைக்கும், வ. உ. சிதம்பரம் பிள்ளைக்குமான சந்திப்பை விவரிக்கும் பாரதியின் புகழ் பெற்ற பாடல் ஒன்று மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்பாடல் தூத்துக்குடியின் அரசியல் அமைதியை குலைப்பதாக நீதிபதி சங்கரன் நாயரால் ஒரு தேசத்துரோக வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டது. 1906-ல் சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியில் வழக்கறிஞராக பணியாற்றியபோது தீவிர சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு பாரதியை சந்தித்தார்.

வ. உ. சிதம்பரம் பிள்ளை

தூத்துக்குடி பவள ஆலை (Coral), பருத்தி ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அதற்கு சிதம்பரம் பிள்ளை தலைமை தாங்கினார். இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவி வந்த காலகட்டத்தில் சுயமாக ஒரு இந்திய கப்பல் நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்ற கனவோடு அவர் இருந்தார். அதற்காக இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு நிதி திரட்டி எஸ்.எஸ்.காலோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற இரண்டு கப்பல்களை வாங்கினார். 

சிதம்பரம் முதல் கொழும்பு வரை இயங்கிய முதல் இந்திய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கியதன் மூலம் வரலாற்றில் வ.உ.சி. கப்பலோட்டிய தமிழன் எனும் நீங்கா இடம் பெற்றார். ஆனால் அந்நிறுவனம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. வ.உ.சி.யின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அவர் 1908-ல் தேசத்துரோக வழக்கில் சிறையிலிடப்பட்டு 1912-ல் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் வாடியபொழுதும் தனக்கு பிடித்த சைவ சித்தாந்தத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறந்த சைவ சித்தாந்த இலக்கியங்களை படைத்தார். தனது விடுதலைக்குப் பிறகு மெட்ராஸுக்கு குடிபெயர்ந்து ஒரு பல்பொருள் அங்காடி தொடங்கி தன் வாழ்நாளை வறுமையில் கழித்தார்.

கட்டுரையில் முன்னர் குறிப்பிடப்பட்ட மெரினா கடற்கரை கொண்டாட்டத்தில் பங்குபெற்ற மற்றொரு முக்கியமான சுதந்திர போராட்ட வீரரும் அன்றைய ஆங்கிலேய காவல்துறையின் கழுகுப் பார்வையால் கவனிக்கப்பட்டு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டார். வெங்கல் சக்கரை செட்டியார் (1880-1958) காந்தியராகவும் தொழிற்சங்கவாதியாகவும் 1941-42ல் மெட்ராஸ் மாகாணத்தின் மேயராகவும் இருந்தார். கிருத்துவ மதபோதகரான அவர் தேசிய அரசியலில் ஈடுபட்டு 1954 முதல் 1957 வரை அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தலைவராக பணியாற்றினார். கிருத்துவ தலைவர்கள் தேசிய அரசியலில் பங்குபெறாத அந்த காலகட்டத்தில், கிருத்துவர்களை தனி அரசியல் குழுவாக கருதாத சக்கரை செட்டியார் வகுப்புவாரி தேர்தல் தொகுதி திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.

இந்தியாவில் சுதேசி இயக்கத்தின் வழியே விடுதலை போராட்டம் சூடுபிடித்து வந்த இதே காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் இளம் வழக்கறிஞர் தனது அறவழி சத்தியாகிரக போராட்ட முறைகளை மெருகேற்றிக்கொண்டிருந்தார். இப்போராட்டத்தில் அவருக்கு 1911-ல் டர்பனில் சிறையிடப்பட்ட ஜோசப் ராயப்பன் போன்ற பல தமிழர்கள் உதவினர்.

காந்தியின் வாராந்திர பத்திரிக்கையான “இந்தியன் ஒபீனியன்” அன்று தமிழிலும் பிரசுரிக்கப்பட்டது. தனக்கு தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் அளித்த ஆதரவை குறித்து காந்தி பதிவிட்டிருக்கிறார். அவர்களுள் பரவலாக அறியப்பட்டவர் இளமையில் மரணித்த பதின் வயது சமூகப் போராளி தில்லையாடி வள்ளியம்மை (1898-1914) அவர்கள். 1913 டிசம்பரில் காந்தியின் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து பதினோரு பெண்களுடன் காவல்துறையின் உத்தரவையும் மீறி ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது நடைப்பயணத்தை டண்டி, டர்பன் வழியே நடத்தினார் வள்ளியம்மை. அதற்காக கைது செய்யப்பட்டு கட்டாய உழைப்பும் விதிக்கப்பட்டார். அரசு மன்னிப்பை ஏற்க மறுத்த வள்ளியம்மை உடல்நலக்குறைவுக்கு ஆளாகி மீளாமல் மாண்டார். அவரது இறுதிச் சடங்குகளில் காந்தி பங்குபெற்றார்.

தில்லையாடி வள்ளியம்மை

1915-ல் காந்தி தனது தமிழ் நாட்டு சுற்றுப் பயணத்தின்போது வள்ளியம்மையின் சொந்த ஊரான தில்லையாடிக்குச் சென்று வள்ளியம்மையை நினைவுகூர்ந்தார். அங்கு வள்ளியம்மைக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. வள்ளியம்மையையே காந்தி முதல் சத்தியாகிரகியாக கருதினார். அவரது நினைவாக இந்திய அரசாங்கம் 2008-ல் தபால்தலை வெளியிட்டது.

1919-ல் காந்தி மெட்ராஸ் மாகாணத்துக்கு வருகை புரிந்தபோது ரௌலத் சட்டத்திற்கு எதிராக மெரினா கடற்கரையில் நடந்த ஒரு பெரும் கூட்டத்தில் உரையாற்றினார். இக்கூட்டத்தில் வ.உ.சி.யோடு ஜார்ஜ் ஜோசப் எனும் இளம் வழக்கறிஞரும் பங்கு பெற்றார். ஜார்ஜ் ஜோசப் லண்டனில் சட்டப்படிப்பை முடித்து மதுரையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். 1919-ல் காந்தி மதுரை சென்றபோது ஜோசப் வீட்டிலேயே தாங்கினார்.

ஜார்ஜ் ஜோசப்

அப்போது அவர்களிடையே இருந்த நெருக்கம் வலுப்பெற்றது. ஜோசப் அதன் பிறகு அவர் மனைவி மற்றும் மகளோடு அஹமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். அங்கு காந்தியின் "யங் இந்தியா" பத்திரிக்கையிலும் பிறகு மோதிலால் நேருவின் "இன்டிபென்டென்ட்"  பத்திரிக்கையிலும் ஆசிரியராக பணியாற்றினார். அரசாங்கத்திற்கு எதிராக அவர் எழுதிய கடுமையான விமர்சனங்களுக்காக கைது செய்யப்பட்டு லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது சக கைதியாக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.

மதுரைக்கு திரும்பிய பிறகு அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆலைத் தொழிலாளர்களுக்காகவும், குற்றப் பரம்பரை என்று அரசாங்கத்தால் முத்திரையிடப்பட்ட கள்ளர் சமூகத்திற்காகவும் வழக்குகளை ஏற்று நடத்தினார். அவரது நினைவாக இன்றும் ரோசாப்பூ துரை (ஜோசப் எனும் சொல்லின் மருவல்) எனும் சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயரிட்டு அவரது நினைவு நாளை கொண்டாடி வருகின்றனர்.

1924-ல் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்குபெற்று உயர் சாதிகளின் தடைகளை மீறி தலித்துகள் அடங்கிய ஒரு சிறு குழுவை கோவில் வீதிகளின் வழியே அழைத்துச் சென்றார். ஜோசப் அன்று வளர்ந்து வரும் இளம் தேசியவாதியாக இருந்து பின்னாளில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற காமராஜரின் அரசியல் ஆசிரியராக கருதப்பட்டார். 1937-ல் மத்திய சட்ட மேலவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இன்றளவும் விவாதிக்கப்படும் பொது உரிமையியல் சட்டத்திற்காக குரலெழுப்பினார். ஆனால் தனது பதவிக்காலம் முடியும் முன்பே 1938-ல் உடல்நலச் சிக்கல்களால் உயிரிழந்தார்.

1930-களில் தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றது. இதில் மேடை நாடகங்களையும் பாடல்களையும் பரவலாக்கிய கலைஞர்கள் பெரும் பங்காற்றினர். 1919-ல் அமைதியாக போராடிய நூற்றுக் கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கலைஞர்கள் ஒன்று திரண்டனர். தேசபக்தி பாடல்களையும் அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றினர். அரசாங்கத்தால் புத்தகங்களை தடை செய்ய முடிந்தபோதும் வாய்மொழியாக பரவிய பாடல்களை தடுக்க இயலவில்லை. பல கலைஞர்கள் அந்நிய ஆடை எரித்தல் சிறை நிறைப்பு போன்ற அரசியல் போராட்டங்களில் நேரடியாக பங்காற்றினர்.

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்

உப்பு வரிக்கு எதிராக திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை நடத்தப்பட்ட உப்பு சத்தியாகிரக போராட்டம் வாய்மொழிப் பாடல்களின் சக்திக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. காந்தியின் தண்டி யாத்திரை தொடங்கிய அதே நாளில் தொடங்கப்பட்ட வேதாரண்யம் யாத்திரை சட்ட மறுப்பு இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் வழிநடத்தப்பட்ட மக்கள் கடலோர கிராமமான வேதாரண்யத்தை நோக்கி தேசபக்தி பாடல்களை பாடியபடி நடந்தனர். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை போராட்டத்திற்காகவே பிரத்தியேகமான அணிவகுப்புப் பாடலை இயற்றினார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை

"கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும் யாரும் சேருவீர்"

போன்ற அவரது வரிகளுக்காக நாமக்கல் கவிஞர் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவில் அவர் சட்ட மேலவை உறுப்பினராக பதவி வகித்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்களின் வாழ்விற்கான மிகச் சிறந்த குறியீட்டு எடுத்துக்காட்டாக இன்றளவும் கே.பி. சுந்தராம்பாளின் வாழ்வு விளங்குகிறது. அவர் மேடை நாடகங்கள், திரைப்படங்கள், தேசபக்தி பாடல்கள் தேர்தல் பிரச்சாரங்கள் என பல்வேறு துறைகளில் செயல்பட்டார். கர்நாடக சங்கீத மேடைப் பாடகராக அவர் அடைந்திருந்த பெரும்புகழ் அவரது அரசியல் ஆசிரியரான காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியால் சரியாக பயன்படுத்தப்பட்டது.

கே. பி. சுந்தராம்பாள்

அவர் பாடிய அரசியல் கூட்டங்களில் மக்கள் பெருந்திரளாக திரண்டனர். இந்நிலையிலேயே அவர் திரைப்படங்களில் பெரும் நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக 1953-ல் வெளியான அவ்வையார் எனும் திரைப்படத்தில் சங்ககால கவிஞர் அவ்வையாராக அவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 1958-ல் மெட்ராஸ் மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட முதல் திரைப்பட நடிகர் எனும் பெருமையை பெற்றார். பின்னாட்களில் தமிழ் நாட்டில் பூதாகாரமாக வளர்ந்த திரைப்படக் கலைஞர்களுக்கும் அரசியலுக்குமான உறவின் தொடக்கப்புள்ளி அவரே.

தமிழ் நாட்டின் சித்தாந்தத் தளத்தில் காந்தியின் பெரும் ஆதரவாளராக திகழ்ந்தவர் ஜோசப் கார்னீலியஸ் குமரப்பா (1892-1960). தஞ்சாவூர் மாவட்டத்தில் மரபார்ந்த கிருத்துவக் குடும்பத்தில் பிறந்த குமரப்பா லண்டனில் பட்டையக் கணக்கராக பட்டம் பெற்றார். பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பின்போது ஆங்கிலேய ஆட்சியின் சுரண்டலும் இந்தியாவின் பொருளாதாரச் சூழலும் அவரது கவனத்தை ஈர்த்தன. அவரது ஆய்வறிக்கையை வாசித்த காந்தி அதில் முன்வைக்கப்படும் வாதங்களின் வலிமையை உணர்ந்தார்.

சபர்மதி ஆசிரமத்தில் காந்தியுடனான அவரது சந்திப்பு அவரது வாழ்வை மாற்றியது. அதற்கு பிறகு காந்தியோடு அணுக்கமாக செயல்படத் தொடங்கினார். "யங் இந்தியா"விலும் "ஹரிஜன்"இலும் வெளியான அவரது தீவிரமான கட்டுரைகளை கவனித்த ஆங்கிலேய அரசாங்கம் அவரை கைது செய்து இரண்டு வருடம் ஜபல்பூர் சிறையில் அடைத்தது. பிறகு காந்தியின் சேவாகிராம் தலைமை ஆசிரமத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில் தீவிர எழுத்துப் பணியில் ஈடுபட்டார் குமரப்பா. காந்தியின் மரணத்திற்கு பிறகு பிரதமர் நேருவின் தேச வளர்ச்சிக்கான சிந்தனைகள் வேறு விதமாக இருப்பதை உணர்ந்து இந்தியாவின் முதன்மை திட்ட அமைப்பான திட்டக் கமிஷனிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு தென்னிந்தியா திரும்பி மதுரை அருகே கள்ளிப்பட்டி எனும் கிராமத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து வாழ்ந்தார். காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30 1960 அன்று அங்கேயே மறைந்தார்.

ஜெபல்பூர் சிறையில் ஜே. சி. குமரப்பா (இடதுபுறம்), பரதன் குமரப்பா

சுரண்டலற்ற பொருளாதாரமே இந்தியாவை காக்க முடியும் என்று அவர் நம்பினார். அதற்கு அவர் “அஹிம்சா பொருளாதாரம்” என்று பெயரிட்டார். கிராமிய பொருளாதாரமே பிரதானமாக கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மரபார்ந்த நீர்நிலை மேலாண்மையின் அவசியம் சார்ந்தும் தென் தமிழ் நாட்டின் ஏரிகள் பராமரிப்பு சார்ந்தும் அவர் எழுதிய கட்டுரைகள் எதிர்காலத்திற்கான தீர்க்க தரிசன எச்சரிக்கைகளாக அமைந்தன. குமரப்பா சுதந்திர இந்தியாவால் முற்றிலுமாக மறக்கப்பட்டார். அவரது நினைவாக ஒரு தபால் தலைக்கூட வெளியிடப்படவில்லை.      


ஆங்கிலவழி மொழியாக்கம் விக்னேஷ் ஹரிஹரன்

இக்கட்டுரை Of love and war - Tamil Story(s) from India and the world என்ற ஜெர்மன் நூலில் ஜெர்மன் மொழியில் வெளிவந்துள்ளது.