Sunday 5 March 2023

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே - லோகமாதேவி


பல வருடங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில்  தியடோர் பாஸ்கரன் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை முதன் முதலில் வாசித்தேன். கட்டுரையின் உள்ளடக்கம் இப்போது நினைவிலில்லை, திரைப்பட வரலாறு குறித்ததென்று தேசலாக நினைவு. ஆனால் அவரது அபாரமான மொழிநடையும் உன்னத ஆங்கிலமும் மனதில் பதிந்துவிட்டது.

ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து பல்கலைக்கழகத்தில் நகரத்து மாணவர்களுக்கிடையில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல ஆங்கிலம்  பேசத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலம் கற்கவென்றே ஆங்கிலக் கட்டுரைகளையும் நாளிதழ்களையும் தேடி வாசிக்க துவங்கிருந்தேன். அதன்பிறகு அவரது கட்டுரைகளை தேடத் துவங்கினேன் அதிகம் ஆங்கிலமும் ஒரு சில தமிழ் கட்டுரைகளும் பிற்பாடு கிடைத்தன.  அவரது இருமொழிப் புலமை குறித்தான பிரமிப்பு அன்றிலிருந்து இன்று வரை  தொடர்கிறது. அதன்பிறகு முனைவர் பட்ட ஆய்வு, திருமணம் என்று எதையும் வாசிக்க நேரமில்லாத நீண்ட காலம் கடந்துவிட்டிருந்தது.

அவரது தமிழ் கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அடிக்கடி வரத் தொடங்கிய காலத்தில் நான் கல்லூரியில் பணியாற்ற துவங்கியிருந்தேன். அச்சமயத்தில் அவர் தீவிரமாக தமிழில் பல துறைகள் குறித்து எழுதிக்கொண்டிருந்தார். இன்றைக்கு போல தரச்சான்றிதழ் அந்தஸ்திற்காக மெனக்கெட வேண்டிய காலம் இல்லாததால் வகுப்புகளுக்கான இடைவெளிகளில் அப்போது நூலகத்திற்கு செல்ல நேரம் இருந்தது.

தேடித் தேடி அவரது எழுத்துக்களை வாசிக்க துவங்கியிருந்தேன். ஒரு முறை  இந்து தமிழ் நாளிதழில்  சென்னையின் காணாமல் போகும் நீர் நிலைகளை குறித்து வெளியான அவரது மிகச் சிறப்பான ஒரு  கட்டுரையை குறித்து  அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே அது திரும்ப வந்து கொண்டிருந்தது. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னர் அனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார்.

மனைவி திலகா பேரனுடன் பாஸ்கரன்- 2007
மிகச் சிறிய விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் அவர் என்பதற்கான சான்று அதுவும். அத்தனை நுண்மையான பார்வை வாழ்வின் மீதும் சூழலின் மீதும் இருப்பதால்தான் அவரது எழுத்துக்கள் அத்தனை வலிமையாக  இருக்கிறது. இந்த நுண்மையான அவதானிப்பு வாழ்வின் எல்லா தளங்களிலுமே அவருக்கு இருக்கிறது. ஒரு புதிய நிலப்பரப்பில் தேநீர் அருந்த போகையிலும் கூட அவருக்கு அருகிலிருந்த மரத்தின் சலசலப்பை கவனிக்க முடிந்திருக்கிறது. அங்கிருந்த அரிய இனமான ஹுலக் வெள்ளைப் புருவக் குரங்கு எனப்படும் வாலில்லா குரங்கை கவனித்து அதை பதிவு செய்கிறார். சூழல் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய  மிக முக்கியமான இயல்பு அதுவென்பதை அவரிடமிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம். 

அத்தோடு மட்டுமல்லாது  அந்த அரிய உயிரினம் அஞ்சல் தலையில் இடம்பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். அரசு சில காரணங்களால் அப்போது அக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றாலும் இருபது ஆண்டுகள் கழித்து, காட்டுயிர் பாதுகாப்பின் அவசியம் உண்டான பின்னர்  ஓர் அஞ்சல் தலையில் அக்குரங்கு இடம்பெற்றது. அவரது கண்டுபிடிப்புக்களை இயற்கையின் அத்யாவசியமான அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அக்கறை அவருக்கு எப்போதும் இருக்கிறது.

வாலில்லா குரங்காகட்டும், அரிய ஆர்கிட் மலராகட்டும், கிளிகளாகட்டும், வாழ்வாதாரம் இழந்த இசை வெள்ளாளர்களாகட்டும் அனைத்து உயிர்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் கரிசனமே அவரது எழுத்துக்களில் முதன்மையாக தெரியும். கூடவே சரியில்லாத மொழி மாற்றத்துக்கும், குழப்பமான மொழிநடைக்கும் அவரது கண்டனங்களையும் முன்வைக்கிறார். அவரது கம்பீரமான முரட்டு மீசையும் புன்னகைக்கும் கண்களையும் போல சூழல் சார்ந்த பல கட்டுரைகளில் இருக்கும் கரிசனமும் கண்டிப்புமான இந்தக்கலவையும் இருக்கிறது.   

********

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்து. அதன் பிறகு ஜெயமோகன் அவர்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டிலும் அவர் மிக முக்கியமான சூழல் பாதுகாப்பு குறித்த உரையை வழங்கினார். தமிழக அளவில், இந்திய அளவில் என்று அவரது பிரபல்யத்தை சுருக்கிவிட முடியாது உலகளவில் அவர் ஒரு மிக முக்கியமான பல்துறை பேராளுமை என்பதை அக்கூடுகைகள் உணர்த்தின.

தியடோர் பாஸ்கரன் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக இயங்கி வரும் துறைகளை கவனித்தாலே பெரும் பிரமிப்பு உண்டாகும். இந்திய திரைப்பட தணிக்கை, திரைப்பட வரலாறு, சூழலியல், காட்டுயிர் பேணல், திரைப்படம், இயற்கை, இந்திய அரசியல் என்று அனைத்துமே வேறுபட்டவை.  இப்போது சூழல் இலக்கியம், பசுமை இலக்கிய படைப்புக்கள் நிறைய இருக்கின்றன என்றாலும் தியடோர் பாஸ்கரன் அவர்களே தமிழ் சூழலிலக்கியத்தின் முன்னோடியும் பிதாமகரும் ஆவார். 

தியடோர் பாஸ்கரனின் தாத்தா தில்லைக்கண் ஒரு இந்து. இளமையிலேயே அவர் வீட்டை விட்டு ஓடிவந்து கரூரில் அலைந்து கொண்டிருக்கையில் ஒரு கிருஸ்துவ பாதிரியாரின் அரவணைப்பு கிடைத்திருக்கிறது. அவரது  பொறுப்பில் இருக்கையில் தான் அவர் கிருஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். தியடோர் பாஸ்கரனின் தாத்தா ஒரு தமிழறிஞரும் கூட. அவர் பல தமிழ் பாடல்கள் எழுதியிருக்கிறார். தனது 50-வது வயதில் அவற்றை வாசித்த தியடோர் பாஸ்கரன் தன்னை இம்மண்ணின் வேருடன் பிணைத்து வைத்திருப்பது தமிழ்தான், தன் முதன்மை அடையளமாக தமிழன் என்பதையே முன்வைப்பேன் என்கிறார்.

வேட்டையில் விருப்பம் கொண்டிருந்த அவரது தந்தை பிரபல வேட்டைக்காரரும் அமெரிக்க அதிபராக இருந்தவருமான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை தனது மகனுக்கும் வைத்தார். தந்தையுடன் வேட்டைக்கு சென்ற நாளொன்றில் ஆற்றுப்பாறையில் தன்னை நிற்க வைத்துவிட்டு துப்பாக்கியுடன் சற்றுத்தொலைவில் அவரது தந்தை காத்திருக்கையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு உண்டாகி இருக்கிறது. தன்னை கழுத்திலும் துப்பாக்கியை நீர்மட்டதுக்கு மேலும் வைத்துக்கொண்டு தன் தந்தை துணிச்சலாக ஆற்றைக்கடந்ததை தியடோர் பாஸ்கரன் நேர்காணலொன்றில் பகிர்ந்திருந்தார். வேட்டைக்காரரான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை மகனுக்கு அவர் வைத்திருந்தால் என்னவோ அவரைப் போலவே இவரும் ஒரு இயற்கை விரும்பி ஆகிவிட்டிருக்கிறார். ஆசிரியர்களான தனது பெற்றோர்களை அந்த நேர்காணலில் நினைவுகூறும் தியடோர் பாஸ்கரன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள கடுமையாக உழைத்த அவர்களைப்போல தான் எதிர்காலத்தில் அப்படி தேவைகளுக்காக உழைத்து வாழ்வை இழந்து விடக்கூடாது என்று  முடிவு செய்திருந்ததை பகிர்ந்துகொள்கிறார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் வரலாறு படிக்கையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த அவரது கணிதப் பேராசிரியர் கிப்பிள் கல்லூரியை சுற்றி இருக்கும் புதர்க்காட்டில் பறவைகளை காணச்செல்கையில் தியடோர் பாஸ்கரனும் உடன் செல்வது வழக்கம். அவரோடு பறவைகளை காத்திருந்து கண்டது, அவற்றின் பல வகைகளை இனம் கண்டுகொண்டது, அவற்றின் வாழிடத்தை அறிந்து கொண்டதுமாக அந்த அனுபவங்களே தன்னை இயற்கையுடன் இணைத்த புள்ளி என்கிறார் தியடோர் பாஸ்கரன். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அன்றிலிருந்தே விடுதி மாணவர்களுக்கு தனித்தனி அறை என்பதால்  அவருக்கு வாசிக்கவும் எழுதவும் நல்ல சுதந்திரமும் தனிமையும் அங்கு கிடைத்து.

அவரது கல்லூரிக்காலத்தில் ஆங்கிலப் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது கிராமத்திற்கு  ஜான் என்னும் பிரிட்டிஷ் இளைஞர் வந்தபோது, அவருடன் ஆங்கிலம் பேச வேறுயாரும் இல்லாததால் தியடோர் பாஸ்கரன் அவருடன் பேசிப் பழகி நெருக்கமானார். ஜான் தனது சேகரிப்பில் இருந்த ஷேக்ஸ்பியரின் பல படைப்புக்களின் ஒலிநாடாக்களை இவருக்களித்திருக்கிறார். அவற்றை ஆழ்ந்து கவனித்து கேட்ட தியடோர் பாஸ்கரனுக்கு இலக்கியமும் நாடகமும் இசையும் அறிமுகமானது. மேலும்  ஜான் அளித்த பெர்னாட்ஷா, ரஸ்ஸல் ஆகியோரின் நூல்களும் அவரின் ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கின. அந்த வாசிப்பனுபவம் அவரது வாழ்வு குறித்தான அடிப்படையான தேடல்களுக்கு விடையளிக்கவில்லை எனினும் பல புதிய கதவுகள் அவருக்கு அப்போது திறந்தன. அச்சமயத்தில் இறையுணர்விலிருந்து தியடோர் பெருமளவில் விலகிவிட்டிருந்தார். அந்த கிராமத்தில் இருந்து பெளத்தம் குறித்த நூலை எழுதிக் கொண்டிருந்த ஜான் இப்போதும் நலமாக இருக்கிறார் என்று 2021-ல் தியடோர் பாஸ்கரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்

இவரது பணிச்சூழல்களும் மிக வித்தியாசமானவை. வரலாறு படித்து பட்டம் வாங்கிய இவர் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக பணி புரிந்தார். அப்போது பல ரகசிய, முக்கிய ஆவணங்கள் அவர் பொறுப்பில் அளிக்கப்பட்டிருந்தது. அவர் அவற்றை சரியாக படித்து, தொகுத்து எழுத வேண்டியிருந்தது. ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்கள் தொடர்புடையவைகளும், அங்கு நடந்த விடுதலைப் போராட்டம் சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஆகியோரை குறித்தவைகள், ஆஷ்துரை கொலை வழக்கு போன்ற முக்கிய ஆவணங்களை எல்லாம் தியடோர் பாஸ்கரன் தொகுத்து எழுதினார். இரு வருட ஆவணக்காப்பக பணி முக்கிய ஆவணங்களை கையாள்வது தொகுத்தெழுதுவது ஆகியவற்றில் அவருக்கு நல்ல அனுபவத்தை அளித்தது. அந்த அனுபவங்கள் பின்னாட்களில் வரலாற்று பெரும்படைப்புக்களை எழுத அவருக்கு உதவியாக இருந்தன.

பல வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் (1967) அவர் இருக்கையில் அங்கிருக்கும் ஒரு ஏரிக்கு அரிய வகை பறவையினம் இமாலயத்திலிருந்து வரவிருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. உடனே அவர் அதிகாலையில் புறப்பட்டு அங்கு செல்கிறார். அங்கிருந்த காவலாளி நடராஜனும் இவரும் அமர்ந்து அங்கு வரும் பறவைகளை அடையாளம் கண்டுகொண்டிருந்திருக்கிறார்கள். சற்று நேரத்தில் தொலைவிலிருந்து பறவை கூட்டமொன்றின் முழக்கம் கேட்டிருக்கிறது. அவர்கள் முன்னே பனித்திரையை கிழித்துக்கொண்டு வரித்தலை வாத்துகள் (Bar-headed Goose)  சாம்பல் நிற சிறகுகளை விரித்தபடி மெதுவாக ஏரியில் வந்து இறங்கி இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனுக்கு அது ஒரு மாயக்காட்சியை போல பரவசமளிக்கிறது. வெகுநேரம் அவற்றை பார்த்துவிட்டு திரும்பிய அவர்  ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும் அப்பறவைகளை குறித்து வன அலுவலக ஆவணங்களில் தேடி வாசிக்கிறார். பின்னர் முதன் முதலில் 1967-ல் ஹிந்து பத்திரிகைக்கு அப்பறவையை குறித்த கட்டுரையை எழுதி அனுப்புகிறார். சில நாட்களிலேயே அக்கட்டுரை பிரசுரமானது. இக்கட்டுரையுடன் துவங்கி தொடர்ந்து ஹிந்து நாளிதழில் சூழல் இயற்கை காட்டுயிர் பறவைகள் என நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார் தியடோர் பாஸ்கரன்.

மற்றொரு சமயம் அவரது காதல் மனைவி திலகாவுடன் குஜராத்தில்  ஒரு பயணம் மேற்கொண்டிருக்கையில் வழியில் சாரஸ் பறவை இணையொன்றின் அழகிய நடனத்தை பார்த்து அதை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். குஜராத்தில் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் இளம் தம்பதிகளை வாழ்நாளில் ஒரே இணையுடன் வாழ்ந்து மடியும் காதல்பறவைகளான சாரஸ் இணையை காண பெரியவர்கள் அழைத்து செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்த  பறவைகளின் நினைவாகத்தான்  சூழலியல் மற்றும் காட்டுயிர் பற்றி தான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை சாரஸின் நடனம் (The Dance of the Sarus) என்னும் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தாரால்  வெளியிட்டார்.


குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று இந்திய தபால் துறையில் சேர்ந்தார். தபால் துறை பணி அவருக்கு  மிகுந்த நிறைவை அளித்தது. அக்காலகட்டத்தில் பணி நிமித்தம் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மஹராஷ்ட்ரா, மேகாலயா, டெல்லி என தொடர்ந்து பயணித்தது அங்கிருந்து பலதரப்பட்ட மக்களின் வாழ்வின் இயங்கியலையும் இந்தியாவை குறித்த அறிதலையும் அவருக்கு அளித்தது. அச்சமயத்தில் ராஜீவ்காந்தி வாரம் 6 நாட்கள் வேலை என்பதை 5 வேலைநாட்களாக மாற்றினார். வார இறுதியில் முழுக்க இரண்டு நாட்கள் அவருக்கு விரும்பியவற்றை செய்யவும் பயணிக்கவும் கிடைத்தபோது மேலும் படைப்பாற்றலுடன் செயல்பட்டார். தபால் சேவை ஆட்கள் அதிகம் தேவைப்படும் ஒரு இலாகா, எனவே அப்பணியில் இருக்கையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தது, பல கிராமங்களுக்கு பயணித்தும் கிடைத்த நேரங்களில் எழுதியும் வாசித்தும் தனக்குள்ளிருக்கும் ஆளுமையை வெளிக்கொணர முடிந்தது.

தியடோர் பாஸ்கரன் வங்காள இயக்குநர் சித்தானந்த தாஸின் டான்ஸ் ஆஃப் சிவா என்ற ஆவணப்படத்தை குறித்து சிவ தாண்டவம் என்னும் கட்டுரையை கசடதபற இதழில் வெளியிட்டார். அக்கட்டுரைக்கு பிறகே அமெரிக்க வரலாற்று ஆய்வாளரான சார்லஸ் ஏ. ரையர்சன் அவரை தமிழ் திரைப்பட ஆய்வில் ஈடுபடும்படி ஊக்குவித்தார். இரண்டாண்டுகள் பணி விடுப்பு பெற்றுக்கொண்டு திரைப்பட பகுப்பாய்வு வகுப்பில் சேர்ந்து பல திரைத்துறை குறித்த பல விஷயங்களை அப்போது கற்றுக்கொண்டார். அங்கு அவரது ஆசிரியராயிருந்த  பி.கே. நாயர் தியடோர் பாஸ்கரனை புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில்  உறுப்பினராக்கினார். அங்கு இரண்டாண்டுகள் பல பழைய திரைப்படங்களை பார்த்த பாஸ்கரன் மீண்டும் தபால் பணியில் சேர்ந்தபோது கல்கத்தாவிற்கு பணிமாறுதல் பெற்றார். கல்கத்தாவிலும் திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.

இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977-ல் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இக்கட்டுரையையும் மேலும் சில கட்டுரைகள் சேர்ந்த தொகுப்பு  1981-ல் தி மெசேஜ் பியரர்ஸ் (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரிக்கும் பல அரிய தரவுகளை கொண்ட  இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் மிக அரியதும் மிக மிக முக்கியமானதும் கூட. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுகம் செய்த அவருடைய அடுத்த  நூல், தி ஐ ஆஃப் தி செர்பன்ட் (The Eye of the Serpent) சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றை மிகச்சரியான வடிவத்தில் அடுத்த தலைமுறையினர் முன்னர் கொண்டு வந்து சேர்த்தவர் தியடோர் பாஸ்கரன். ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல முக்கியமான  புத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.


தியடோர் பாஸ்கரன் ஷில்லாங்கில் இருக்கையில் முரசொலி மாறன் ஒரு மாலை அவரை சந்தித்தபோது பொதுவாக சினிமா குறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த உரையாடலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் திரைப்படங்களை குறித்த ஆழமான அறிவை அடையாளம் கண்டுகொண்ட முரசொலி மாறன் அவரது வார இதழில் சினிமாவை குறித்து எழுதும்படி கேட்டுக்கொண்டதோல்லாமல் ஒவ்வொரு தொடருக்கும் 1000 ரூபாய்கள் சன்மானம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்படித்தான் சினிமா குறித்து இவர் எழுத துவங்கினார்.

********

ராஜீவ் காந்தியுடன் பாஸ்கரன்-1985
பணி நிமித்தம் மேகாலயாவிலிருந்த போது பங்களாதேஷ் விடுதலைப் போர்ச்சூழலில் தியடோர் பாஸ்கரன் தபால் தந்தி துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்.  அவருக்கு அப்போது 45 வயது. அப்போது அகர்தலாவில் முன்னணி படைப்பிரிவில் பணி புரிந்தார். அவர்களது  குடியிருப்புகளினருகே தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ள பதுங்கு குழிகள்  அமைக்கப்பட்டிருந்தன. எந்த சூழலிலும் தியடோர் பாஸ்கரன்  படைப்பிரிவுகளின் பல விதங்கள், அவை இயங்கும் விதம் ஆகியவற்றை கற்று கொண்டார் 

தேசிய டிஃபென்ஸ் கல்லூரியில் ஒரு வருட படிப்பை முடித்த அவருக்கு அந்த அமைச்சகத்தின் மூலம் பல உலக நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனி, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய அரசின் விருந்தாளியாக சென்று அங்கும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு நாட்டை குறித்து அறிந்து கொண்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக ஓய்வு பெற்றார். 

பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில் ரோஜா முத்தையா நூலகத்தில் இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.  மூன்று வருடங்கள் அந்த பணியில் இருந்தவர் மீண்டும் தனது  விருப்பத்திற்குகந்த இயற்கையை பேணுதல்,  காட்டுயிர்களை குறித்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றை தொடர்ந்தார். தற்பொழுது அந்த நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ள அவர் தனது நூல் சேகரிப்பு முழுவதையும் அந்த நூலகத்துக்கே அளித்துவிட்டார்.  

பாஸ்கரன் புகழ்பெற்ற விலங்கியலாளரான உல்லாஸ் காரந்தின் தி வே ஆஃப் தி டைகர் (The way of the Tiger) என்ற நூலை ”கானுறை வேங்கை” (2006) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சூழல் குறித்த அறிதலை அளிப்பவற்றுள் மிக முக்கியமான நூல் இது. தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து படைப்புகளும் இன்றியமையாதவை எனினும் சூழல் முக்கியத்துவம் கொண்ட ‘சோலை என்னும் வாழிடம், தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில் பறக்கும் புள்ளெல்லாம், கானுறை வேங்கை, மழைக் காலமும் குயில் ஓசையும்’ ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.


அவரது படைப்புகளில் தரவுகள் மிக துல்லியமாக இருக்கும் புள்ளிவிவரங்கள், பெயர்கள், படங்கள் என்று அனைத்தும் மிகச் சரியாக அமைந்திருக்கும். கச்சிதமான வடிவமைப்பும், ஒழுங்கும் கொண்டிருக்கும் கட்டுரைகள் மிக சுவாரஸ்யமாக துவக்கி ஒரு சொல்லோ ஒரு வார்த்தையோ தேவையற்று  இடம்பெறாமல் உருவாகியிருக்கும். பசுமை இலக்கியத்தில் கட்டுரைகளை எழுதும் பயிற்சிகளுக்கு முன்னுதாரணமாக எக்காலத்திலும் சுட்டிக்காட்டப்படும் தகுதி கொண்டவை தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து கட்டுரைகளும். 

உயிர்மை இதழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தியடோர் பாஸ்கரன் அவர்களின் சூழல் குறித்த கட்டுரைகள் வெளிவந்தன. ஒரு சிற்றிதழில் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஒருவரின் கட்டுரைகள் வருவதிலிருந்தே அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். அக்கட்டுரைகளின் தொகுப்பே ’கையிலிருக்கும் பூமி’. சில கட்டுரைகளை கவித்துவமாக துவங்கப்பட்டிருக்கும். கிளிகளை பற்றிய  ஒரு  கட்டுரை இப்படி துவங்குகிறது: ”நீலவானப் பின்புலத்தில் பனித்திவலைகள் மிதந்து வருவதைப் போன்ற தோற்றம். இருநோக்கியில் பார்த்தபோது அது வெள்ளை நிறக்கிளிகளின் திரள் என்பது புலப்பட்டது”. 


நீர்நாய்களுக்காக ஆளியாறு அணையருகே காத்திருப்பது, டாப்ஸ்லிப்பில் புதைக்கப்பட்ட ’ஹியூகோ வுட்’ உயிலை தேடி செல்வது, ஒரு  புதிய கிராமத்தில் ஓநாய்களை காண இரவெல்லாம் கயிற்றுக்கட்டிலில் டார்ச் அடித்து பார்த்துக்கொண்டு காத்திருப்பது என்று இயற்கை குறித்த பேரார்வத்தினால் அவர் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் ஆர்வமூட்டுபவை. ஒநாய்களை பார்த்த அனுபவத்தை சொல்லுகையில்  ”அவை உணவின்றி மெலிந்திருக்கும் அல்சேஷன் நாய்களைப் போன்ற தோற்றத்துடன்” இருந்ததாக குறிப்பிடுகிறார். இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் நோய்களை குணமாக்கும் மருந்து எனும் நம்பிகைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் குறித்த வருத்தமும் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆட்கொல்லி புலியை குறித்த பதிவில் அறம் எனப்படுவது குறித்தும், இசை வெள்ளாளர்களின் வாழ்வாதாரம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தினால் பாதிக்கப்படுவது குறித்துமான தியடோர் பாஸ்கரனின் கருத்துக்கள் கரிசனமன்றி வேறில்லை. ஒரு கட்டுரையில் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பை குறித்த வருத்தத்தை முன்வைக்கிறார். ஓவியக்கலை போன்ற தொன்மையான அழகியல் பாரம்பரியம் அழிந்து போவதை குறித்து கவலைப்படுகிறார்.

சூழியல் தளத்தில் இவர் உருவாக்கிய பல புதிய தமிழ்ச்சொற்கள் தற்போது புழக்கத்தில் இருக்கிறது. மேலும் பல புதிய சொற்களின் தேவை இருக்கிறதென்றும் அவை உருவாக்காப்பட்டால்தான் மொழி வலுப்பெறும் என்று கருதுகிறார். இவர் உருவாக்கும் மூலச்சொற்கள், தமிழ் வழங்குபெயர்கள், சிறந்த மொழியாக்கங்கள் எல்லாம் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானவை. ஒரு உரையில் ’தேன்சிட்டுவை’ என்கிறார் நாம் ’தேன்சிட்டை’ என்பது தவறென்று அவர் சரியாக உச்சரிக்கையில் தான் தெரிகிறது. இயற்கையை எழுதுபவர்கள் ஒருபோதும் அரசியலை  தவிர்க்கமுடியாது, எனினும் இவரது கட்டுரைகள் அறிவியல் பூர்வமானவை மட்டுமல்ல அனுபவபூர்வமானவைகளும் கூட. 

*********

மொழியாக்க கட்டுரைகளின் தரம் குறித்து சொல்லுகையில்: ”இயற்கை சார்ந்த நூல் ஒன்றை மொழிபெயர்க்கத் துணிபவருக்குப் புறச்சூழல், மரங்கள், காட்டுயிர் ஆகியவை பற்றிய பட்டறிவு அடிப்படை அளவிலாவது இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இயற்கை சார்ந்த கருதுகோள்களையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அத்துறை சார்ந்த நூல்களில் கைவைக்கக் கூடாது.” என்கிறார்.

50-வது பிறந்தநாள், மேகதாட்டு, 1990

சங்க இலக்கிய தாவரங்கள், விலங்குகள் என்று பலர் தங்களது வலைப்பக்கத்திலும் முகநூல் பக்கங்களிலும் எழுதுகின்றனர் அவற்றில் 90 சதவீதம் எந்த கவனமும், உயிரினங்கள் குறித்த அடிப்படை அறிவும் இல்லாமல் எழுதப்படுபவை. பலர் முருக்க மரம் என்பதற்கு கல்யாண முருங்கையின் புகைப்படத்தை பலாச மரத்திற்கு பதிலாக  வைத்திருக்கிறார்கள். கஞ்சக்கொல்லை என்னும் துளசி வகை கஞ்சாச்செடி என்று சொல்லப்பட்டிருக்கிறது பல வலைப்பக்கங்களில். முக்கியமான சூழல் சார்ந்த விஷயத்தை  பிறருக்கு தெரிவிக்கையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக்கறையும் கவனமும் இன்றி எழுதப்படும் கட்டுரைகள் மலிந்து கிடக்கும் இச்சூழலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் கருத்துக்களும், கட்டுரைகளும் உரைகளும் நூல்களும் மிக முக்கியமானவை. அவரை போல ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்வது, நூற்றுக்கணக்கான நூல்களை வாசிப்பது, பல்துறை ஆளுமைகளுடன் நட்பு கொள்வதெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தாலே இதுபோன்ற பிழைகளை தவிர்க்கலாம். 

தியடோர் பாஸ்கரன் அவரது சகோதரரின் மறைவின் போதும் மகளின் காதல் திருமணத்தின் போது தேவாலயங்களும் மதகுருக்களும் காண்பித்த மற்றொரு முகத்தை கண்டு வருந்தினார். அப்போது ஜே. கிருஷ்ணமுர்த்தியின் எழுத்துக்களும் அறிமுகமானதால் தான் அதுவரை சார்ந்திருந்த மதத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். அதன் பிறகு ’’இந்தியாவில் ஒரு கிறிஸ்தவனாக இருப்பது என்பதென்ன’’ என்பதை குறித்த தொடர் கட்டுரைகள் எழுதினார். ஒரு பல்கலைக்கழகம் அந்த கட்டுரைகளுக்காக  அவருக்கு DD எனப்படும் doctrine of divinity என்னும் பட்டம் அளித்து சிறப்பித்தது.  

மா. கிருஷ்ணன், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் தியடோர் பாஸ்கரனின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியவர் சுவாமி என்னும் ஜென் குரு ஒருவர். இப்போது கொடைக்கானல் மடமொன்றில் இருக்கும் சுவாமியின் பல பயிற்சி வகுப்புகளில் தியடோர் பாஸ்கரன் கலந்து கொண்டிருக்கிறார். ஜென் மதம் தன் அடிப்படை கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை, தன் வாழ்க்கையை பெருமளவில் மாற்றவும் இல்லை எனினும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தை பெருமளவு மாற்றிவிட்டிருக்கிறது என்கிறார் இவர்.

50 வருடங்களாக கூரிய சூழல் எழுத்துக்களை எழுதி வரும் தியடோர் அவர்கள் சமீபத்திய ஒரு மேடை உரையில் வாசகர்கள் ஆர்வமுடன் வாசிப்பதே தன்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது என்கிறார் மிகுந்த பணிவுடன். அவரது பணி, பணிச்சூழல், பயணங்கள், அவர் எழுத்துக்களுக்கென அளிக்கும் கடும் உழைப்பு, அவரது தோழமைகள், அவரது வாசிப்பு, அவரது இத்தனை ஆண்டு கால அயராத எழுத்துப்பணி உள்ளிட பல பணிகள் ஒவ்வொன்றுமே சாதனைகள்தான். அவரது எழுத்துக்கள் வழியே நாம் காண்பது இயற்கையின் தரிசனத்தை தான்.

தியடோர் பாஸ்கரன் உலகக் காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF - India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றிருந்த்தார். பெங்களூரு உயர் கல்விக்கான தேசிய ஆய்வுக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கும் தியடோர் பாஸ்கரன். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராகவும் இருந்தார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமாவை போதித்திருக்கிறார். இந்தியாவில், சர்வதேச கல்வி நிலையங்களில் முக்கிய தலைப்புக்களில் உரையாற்றியிருக்கிறார். இந்திய  தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராகவும் இருந்தார். 


தற்போது பெங்களூருவின் புறநகர் பகுதியில் இயற்கையின் அமைதியில் எப்போதும் பறவைகளின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும்  ஒரு வீட்டில் வசிக்கிறார். அன்று  ஏரியில், அமைதியான அதிகாலையில் இமாலயத்தில் இருந்து ஒரு தெய்வம் போல வந்து தியடோர் பாஸ்கரன் முன்பாக தரிசனம் தந்து அவர் அயராது எழுத காரணமாயிருந்த அந்த பறவைகளையும், அவற்றிற்கு பிறந்த, இனி பிறக்கப் போகும் பல தலைமுறைகளையும்  பணிந்து வணங்குகிறேன்.



லோகமாதேவி தமிழ் எழுத்தாளர், தாவரவியலை நவீன தமிழ் இலக்கிய மொழியில்  அறிமுப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழ் தாவரவியல் அகராதியை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவ்வகையில் தமிழ் தாவரவியலில் முன்னோடி. துறைசார்ந்த நூல்கள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். பொள்ளாச்சி அருகே வேடசந்தூர் என்ற ஊரில் வசிக்கிறார். 

தமிழ் விக்கி பக்கம்: லோகமாதேவி - Tamil Wiki

லோகமாதேவி இணையதளம்: அதழ் (logamadevi.in)