Saturday, 29 November 2025

டுடன்காமுன் கல்லறை 6: மம்மி மீதான சோதனைகள் - பொன். மகாலிங்கம்

எகிப்திய வரலாற்றில் டுடன்காமுன் கல்லறை முழுமையாகக் கிடைத்த அளவுக்கு வேறு எந்தக் கல்லறையும் முழுமையாகக் கிடைத்ததில்லை. எனவே டுட்டின் மம்மியை மட்டும் கைரோவிலுள்ள அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைப்பதற்கு பதிலாக கல்லறையிலேயே காட்சிக்கு வைப்பதென எகிப்திய அரும்பொருள் சேவைத் துறை முடிவெடுத்தது. கார்ட்டர் குழுவினருக்கு மருத்துவ நிபுணத்துவச் சேவைகளில் உதவிய பேராசிரியர் டக்ளஸ் டெர்ரியின் சோதனைகளுக்குப் பிறகு டுட் மம்மியின் உடற்பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அது ஒரு மரப் பெட்டியில் மணல் நிரப்பப்பட்டு அதன்மேல் கிடத்தப்பட்டது. 

மம்மியைத் தாங்கிய நீளமான மரப்பெட்டி மம்மி வடிவத்தில் உள்ள முதலாவது பெரிய பெட்டியில் வைக்கப்பட்டு கல்பெட்டிக்குள் இறக்கப்பட்டது. பேராசிரியர் டெர்ரியை அடுத்து பல நிபுணர்கள் டுடன்காமுனின் மம்மியை சோதித்துள்ளனர். இரண்டாம் ராம்சிஸ், யுயா போன்ற மாமன்னர்களின் மம்மியில் தலைமுடி மழிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் டுடன்காமுன் மம்மியில் தலைமுடி நன்கு மழிக்கப்பட்டு தலைக்கு மேல் ஒரு குல்லா போடப்பட்டு (Skull cap) தலைக்குரிய ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. 

உடற்கூற்றியல் நிபுணர் பேராசிரியர் டக்ளஸ் டெர்ரி, மம்மியைச் சுற்றியுள்ள லினன் துணியை வெட்டத் தொடங்கிய காட்சி. படம் நன்றி விக்கிப்பீடியா

வழக்கத்துக்கு மாறான மற்ற சில அம்சங்களும் டுட் மம்மியில் இருந்தன. அவற்றுள் முக்கியமானது டுட்டின் ஆண்குறி நன்கு விரைத்த நிலையில் இருப்பதுபோல் மம்மியாக்கம் செய்யப்பட்டிருந்தது. வேறு எந்த மாமன்னரின் மம்மியிலும் காணக்கிடைக்காதது இது. கிட்டத்தட்ட 90 பாகை கோணத்தில் அது நிமிர்ந்து நின்ற நிலையில் இருந்ததாக கார்ட்டர் குறிப்பிடுகிறார். டுடன்காமுனின் ஆண்குறியை தொடக்ககால கறுப்பு வெள்ளைப்படங்களில் மட்டுமே நீங்கள் பார்க்கமுடியும். கார்ட்டரும் டாக்டர் டெர்ரியும் நடத்திய அடுத்தகட்ட சோதனைகளின்போது அந்த ஆண்குறி முறிந்து கீழே விழுந்துவிட்டது. 

டுட்டின் ஆண்குறி விரைத்த நிலையில். படம் நன்றி விக்கிப்பீடியா

டுட்டின் ஆண்குறியை விரைத்த நிலையில் வைத்திருக்க அதன் கீழே பிசுபிசுப்பான சில பொருள்கள் அண்டக் கொடுத்து வைக்கப்பட்டிருந்தன என்பதையும் கார்ட்டர் குறித்து வைத்துள்ளார். ஆனால் அது விரைத்த நிலையில் படம் ஏதும் எடுக்கப்படவில்லை. உற்றுப் பார்த்தால் பழைய கறுப்பு வெள்ளைப்படங்களில் ஆண்குறியை பார்க்கமுடிகிறது. மிகச்சிறிய சதைத்துண்டான ஆண்குறி நேட்ரான் உப்புக்குள் பொதிந்துவைக்கப்பட்டு உலர்த்தப்படும்போது வற்றிச் சுருங்கி போயிருக்கும். 1968ஆம் ஆண்டில் டுட் மம்மி மீது ஊடுகதிர்ச் சோதனை நடத்தியபோது ஆண்குறி முற்றாகவே காணாமற்போயிருந்ததாம். யாரோ சிலர், அதைத் திருடிவிட்டதாகக் கூட வதந்தி பரவியது. ஆனால் பின்னால் கணினி வருடல் சோதனையின்போது அது கீழே இருந்த மரப்பெட்டியில் மணலில் உதிர்ந்து கிடப்பது தெரியவந்தது. 

விரைத்த ஆண்குறியோடு எகிப்திய சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காட்டப்படுவது ஒசைரஸ் தெய்வம்தான். வடபுற சுவரோவியத்தில் டுட் ஒசைரஸ் தெய்வத்தை போலவே காட்டப்பட்டதற்கும், இந்த விரைத்த ஆண்குறிக்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார் எகிப்தியவியலாளரான பேராசிரியர் சலிமா இக்ரம். மேலும், டுட்டின் மம்மியில் இதயமோ அதற்கு மாற்றாக புனித வண்டோ இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். டுட் மம்மி மீதும் அது கிடத்தப்பட்டிருந்த இரண்டு மம்மி வடிவ பெட்டிகள் மீதும் அடர்த்தியான கறுப்பு பிசின் வேண்டுமென்றேதான் ஊற்றப்பட்டதே தவிர, ஒரு விபத்துப்போல் நறுமணத் திரவம் கெட்டிதட்டிப் போகவில்லை என்பதும் திருமதி இக்ரமின் ஊகம். 

பேராசிரியர் சலிமா இக்ரம்-கைரோவிலுள்ள பழைய தேசிய அரும்பொருளகத்தின் டுட் கண்காட்சி அறையில். படம் நன்றி பேராசிரியர் சலிமாவின் முகநூல் பக்கம்

வழக்கத்துக்கு மாறான இவை எல்லாமே மம்மியாக்கத்தின்போது நேர்ந்த தவறுகளாக இருக்கமுடியாது என்று ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் திருமதி இக்ரம். எகிப்தியர்கள் எதையும் திருந்தச் செய்பவர்கள். அவர்களின் எல்லா செயல்களுக்குமே ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். கார்ட்டரோடு சேர்ந்து டுடன்காமுனின் மம்மியை சோதித்து குறிப்பெழுதியுள்ள பேராசிரியர் டக்ளஸ் டெர்ரி, டுட்டின் ஆண்குறிக்கு அருகே பருவமுடி ஏதும் தட்டுப்படவில்லை என்கிறார். டுட் ஆண்குறியின் முன்தோல் அகற்றப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) தடயமும் இல்லை. ஆனால் டுட்டின் ஆண்குறி தனியாகத் துணியால் சுற்றப்பட்டு நிமிர்ந்த நிலையில் வைக்கப்பட்டதை டெர்ரி உறுதி செய்துள்ளார். 

டுட்டின் மம்மியில் தென்படும் வழக்கத்துக்கு மாறான எல்லாமே டுடன்காமுனை ஒசைரஸ் தெய்வமாகவே நிலைநிறுத்தும் முயற்சி என்கிறார் திருமதி இக்ரம். விரைத்த ஆண்குறியோடு காட்டப்படும் ஒசைரஸ் தெய்வம் உயிர்த்தெழுதலின் அடையாளம். எகிப்திய ஆலயங்கள் பலவற்றில் விரைத்த ஆண்குறியோடு உள்ள ஒசைரஸ் தெய்வத்தை காணலாம். பிற்காலத்தில் எகிப்தை கைப்பற்றி ஆக்ரமித்த பிறசமயத்தவர் இந்த ஆண்குறியை மட்டும் பெரும்பாலான இடங்களில் சிதைத்துவிட்டனர். மன்னர்களின், தெய்வங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டதைப்போல் பல இடங்களில் இந்த விரைத்த ஆண்குறிகளும் சிதைக்கப்பட்டிருப்பதை இன்றும் எகிப்திய ஆலயங்களில் கல்லறைகளில் காணலாம்.

ராமீசியம் ஆலயத் தூணில் உள்ள தெய்வத்தின் சிதைக்கப்பட்ட ஆண்குறி
லக்ஸோர் நகருக்கு அருகே, ராமீசியம் ஆலயத்தில் விரைத்த ஆண்குறியோடு காட்டப்பட்டுள்ள ஒசைரிஸ் தெய்வத்தின் குடைவுச் சிற்பம்

ஒசைரஸ் தெய்வத்தோடு தொடர்புடைய சில சடங்குகளில் சோளத்தையும் மண்ணையும் பிசைந்து சோள-மம்மி (Corn-Mummy) ஒன்று உருவாக்கப்பட்டு மரத்தாலான சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கும் வழக்கம் எகிப்தில் உண்டு. அப்போதும் ஒசைரஸ் தெய்வத்தின் ஆண்குறி விரைத்த நிலையில்தான் காட்டப்படும். விரைத்த ஆண்குறி ஆன்மா புத்துயிர்பெற்று மறுபிறப்பெடுப்பதன் குறியீடு. தானியம் முளைப்பதை போல் உயிர்கள் மீண்டும் முளைக்கின்றன. ஒசைரஸ் வழிபாட்டின் ஒரு சடங்கு இந்த போலி சோள மம்மி. 

மேலும், டுடன்காமுனின் மம்மி மீதும், மம்மிவடிவ பெட்டிகள் மீதும் அடர்த்தியான கறுப்புப் பிசின் ஊற்றப்பட்டது ஒசைரஸ் தெய்வத்தின் அடர் கறுப்பு மேனியை குறிக்கத்தானாம். அந்த கறுப்பு வளமான நைல் நதியின் வண்டல் மண் வண்ணத்தை குறிக்கிறது. செழிப்பின் அடையாளம் அது. மம்மி அறைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த டுடன்காமுனின் இரண்டு ஆளுயர சிலைகளின் மேனியும் அடர் கறுப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருப்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்கலாம். டுட் மம்மி மீது மிதமிஞ்சி கொட்டப்பட்ட இந்த கறுப்பு பிசின் காரணமாக அது தங்க பெட்டிக்குள் “சமைக்கப்பட்டதுபோல்” (cooked) வெந்து போனது என்றே கார்ட்டர் எழுதி வைத்திருக்கிறார்.

ஒசைரஸ் தெய்வம் அதன் சகோதரனான சேத்-தால் (Seth) கண்டந்துண்டமாக வெட்டிப்போடப்பட்டு பின்னர் ஒசைரஸின் இதயம் மண்ணில் புதைக்கப்பட்டதாக சொல்கிறது எகிப்தியத் தொன்மம். (நைல் நதியில் ஒசைரிஸின் ஆண்குறி வீசப்பட்டு, அதை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டதாகவும் ஒரு கதை உள்ளது. ஒசைரிஸின் வெட்டுண்ட பாகங்களை அவரது மனைவியான ஐஸிஸ் தெய்வம்தான் தேடி எடுத்து ஒன்றுசேர்த்தது. ஐஸிஸ் தேடியபோது இதயமும் ஆண்குறியும் கிடைக்காமல் போய்விட்டதாம்.) அதன் அடையாளமாகத்தான் டுட்டின் மம்மியில் இதயமோ புனித வண்டோ வைக்கப்படவில்லை. டுட்டின் மம்மி ஆங்காங்கே வெட்டுண்டிருப்பதுகூட ஒசைரஸ் தெய்வம் வெட்டப்பட்டதை பிரதிபலிக்கும் வகையில் இருக்கலாம் என குறிப்பிடுகிறார் திருமதி இக்ரம். டுட் மம்மியின் மார்புக்கூடு சிதைந்து போயுள்ளது. 

மார்புக் கூடு நடுவில் இணையும் தட்டையான நீண்ட நெஞ்செலும்பு (Sternum) டுட்டின் மம்மியில் இல்லை. கொப்பூழுக்குக் கீழே இடப்பக்கமாக உடல் உள்ளுறுப்புகளை வெளியே எடுப்பதற்காக போடப்படும் கீறல் டுட் மம்மியில் மிகப்பெரியதாக நீளமானதாக இருந்ததை அவர் சுட்டிக் காட்டுகிறார். மார்பில் இவ்வளவு பெரிய துளை இருக்கும்போது இடுப்பில் இவ்வளவு பெரிய கீறல் போடவேண்டிய அவசியம் என்னவென்ற கேள்வி எழுகிறது. 

டுட் மம்மியை பிரிக்கும்போது கார்ட்டருக்கும் இதேபோன்ற சந்தேகங்கள் எழுந்து, அவரும் ஒசைரஸ் தெய்வத்தின் அடையாளங்கள் மம்மியில் இருப்பதை பற்றி எழுதி வைத்திருக்கிறார். மாமன்னரின் மம்மிகளுக்கு கைகள் இரண்டும் மார்புக்கு குறுக்காகத்தான் வைக்கப்படுவது வழக்கம். அதாவது, மம்மியின் விரல்கள் விரிந்தால் தோள்பட்டையின் மேல்பகுதியை அவை தொட்டுவிடும். ஆனால் டுடன்காமுனின் கைகள் மார்புக்குக் கீழே ஆசிரியருக்குமுன் பணிந்து நிற்கும் தொடக்கப்பள்ளி மாணவன் போல இடுப்புக்கு அருகே குறுக்காக வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு காட்டப்படுவதுது ஒசைரஸ் தெய்வத்துக்குத்தான். இவ்வாறு டுட்டின் கைகளை கீழிறக்கியதால் முழங்கைகள் இரண்டும் உடலைவிட்டு சற்றே வெளியே வந்திருப்பதை கார்ட்டர் குறித்து வைத்துள்ளார். 

கார்ட்டரின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் திருமதி இக்ரம். டுட்டின் தந்தை அக்கினாட்டன் தோற்றுவித்த ஆட்டன் சமயத்தை துடைத்தொழித்து பழைய சமயத்துக்கு எகிப்து மீண்டுவிட்டதை மறு உறுதிப்படுத்தும் அரசியல் நோக்கமே இதற்கெல்லாம் காரணம். டுடன்காமுனோ அவரது உடலை மம்மியாக பதப்படுத்தியவர்களோ இவ்வாறு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டிருக்கலாம். டுட்டின் மம்மியில் காணப்படும் இத்தகைய வேறுபாடுகளை கொண்ட வேறு எந்த மம்மியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

அந்தக் காலகட்டத்தில் அவ்வாறு மம்மியாக்கம் செய்யப்பட்ட மாமன்னர்களின் கல்லறை இன்னும் நமது கண்ணில் தட்டுப்படவில்லையா அல்லது பழைய சமயம் மீண்டும் உறுதியாக நிலைநாட்டப்பட்டு விட்டதால் அதற்கான தேவை இல்லாமற்போனதா என்பது தெரியவில்லை. இவை எல்லாமே ஊகங்கள்தான் என்றாலும் வருங்காலத்தில் இவற்றுக்கு வலு சேர்க்கும் தடயங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்று முடித்துக்கொள்கிறார் பேராசிரியர் சலிமா இக்ரம். 

நாளும் முன்னேறிவரும் புதிய தொழில்நுட்பத்துக்கேற்ப டுட்டின் மம்மி, கல்லறை, அரும்பொருள்கள் எல்லாமே புதுப்புது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 1925இல் கார்ட்டரும் டெர்ரியும் நடத்திய பிரேதப்பரிசோதனைக்கு பிறகு, 1968ஆம் ஆண்டுவரை டுட்டின் மம்மி பெரிய அளவில் ஆய்வுக்கு ஆட்படவில்லை. லிவர்பூல் பல்கலைகழகத்தை சேர்ந்த உடற்கூற்றியல் பேராசிரியர் ரொனால்ட் ஹாரிசன் டுட்டின் மம்மியை ஆய்வு செய்து சில விவரங்களைக் கண்டுபிடித்தார். 

டுட்டின் மம்மியை கல்லறையில் இருந்து வெளியே எடுத்துச்சென்று ஆய்வு செய்ய எகிப்திய அரசாங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் டுட்டின் தோல் மாதிரியை சேகரித்துக்கொள்ள அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. நகரும் ஊடுகதிர் சோதனைக்கருவி மூலம் கல்லறைக்கு உள்ளேயே டுட்டின் மம்மி சோதிக்கப்பட்டது. ஹாரிசன் காலத்தில் மம்மியின் வெற்று உடல்மீது அந்தச் சோதனை நடத்தப்பட்டது. இன்று மம்மியின் மேலே சுற்றியுள்ள துணி நாடாக்களை பிரிக்காமலேயே முப்பரிமாண ஊடுகதிர் சோதனையை நடத்தமுடியும். 

டுட் மம்மி கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் தற்போதைய நிலையிலும்... படம் நன்றி reddit

ஹாரிசன் சேகரித்த தோல் மாதிரியை சோதித்தபோது அது மன்னர்களின் பள்ளத்தாக்கில் இருந்த KV55 என்று அடையாளமிடப்பட்டுள்ள கல்லறையில் இருந்த மம்மிகளோடு ஒத்துப்போனது. டுட்டின் மண்டை ஓட்டில் இருந்த பிசினை சோதித்த ஹாரிசன் மண்டை ஓட்டுக்குள் சிறிய எலும்புத் துண்டு இருப்பதை கவனித்தார். அது மரணத்துக்குப் பின்னால் உடைந்த எலும்பு. பின்னர் மேலும் ஓர் எலும்புத் துண்டு இருந்ததை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். 

அதைப்பற்றிய தகவல் வெளிவந்ததும் டுடன்காமுன் பின்னந்தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று சில நிபுணர்கள் சந்தேகம் கிளப்பினர். 1925இல் பேராசிரியர் டெர்ரி டுட் மம்மியை சோதித்தபோது உடலின் மேற்பகுதியை முழுமையாக சோதிக்கவில்லை. மார்புப்பகுதியின் உள்ளிருந்த உடற்பாகங்கள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பிசின் தடவிய துணி அடைக்கப்பட்டிருந்தது. 1968இல் டுட் மம்மியை சோதித்த ஹாரிசன்தான் மார்புப் பகுதி சேதமடைந்திருப்பதைக் கண்டுபிடித்தார். 

நெஞ்செலும்பு, இதயம் தவிர விலா எலும்புகளில் சிலவும் மம்மியில் இல்லை. பேராசிரியர் டெர்ரி மம்மியை சோதித்தபோது அந்த சேதம் நடந்திருப்பதாக ஹாரிசன் நினைக்கவில்லை. டுட் உடலை மம்மியாக்கம் செய்யும்போதோ அதற்கு முந்தியோ அந்த சேதம் நேர்ந்திருக்கவேண்டுமென கணித்தார் அவர். 1978இல் மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த பற்கள்-தாடைத்துறை பேராசிரியர் ஜேம்ஸ் ஹாரிஸ் டுட் மம்மி மீது ஊடுகதிர் சோதனை நடத்தினார். 

அப்போது அவர் KV55 கல்லறையில் இருந்த மம்மிகளின் தலைப்பகுதியும் டுட்டின் தலைப்பகுதியும் ஒன்றுபோலிருப்பதை கவனித்தார். அந்தக் கல்லறையில் இருப்பவை அமர்னா காலத்து மம்மிகள் என்று நெடுங்காலமாகவே எகிப்தியவியல் நிபுணர்கள் நம்பிவந்ததால் தலைப்பகுதி ஒற்றுமை அதிக கவனம் பெற்றது. அதன் அடிப்படையில் KV55 கல்லறையில் இருக்கும் மம்மிகளில் ஒன்று டுட்டின் தந்தை அக்கினாட்டனுடையது என்றே எகிப்தியவியல் நிபுணர்கள் பலரும் நம்புகின்றனர். (அண்மையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.)

உடற்கூற்றியல் ஆய்வாளரான பேராசிரியர் டெர்ரியும், அக்கினாட்டனின் மண்டையோட்டுக்கும் டுடன்காமுனின் மண்டையோட்டுக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஒரு பட்டியலே போட்டுள்ளார், கார்ட்டர் எழுதியுள்ள இரண்டாவது புத்தகத்தில் மண்டையோட்டின் நீளம், அகலம், உயரம், நெற்றி, தாடையின் அகலம், தலையின் சுற்றளவு-என எல்லாமே மிக நெருக்கமான அளவில் உள்ளன. தன் தந்தையை காட்டிலும் டுடன்காமுன் 2 சென்டிமீட்டர் உயரம். 1.68 மீட்டர் உயரம் டுட்.

பேராசிரியர் ஜேம்ஸ் ஹாரிஸுக்கு பிறகு 2005ஆம் ஆண்டுவரை டுட்டின் மம்மி சோதிக்கப்படவில்லை. அந்த ஆண்டு எகிப்தின் அரும்பொருள் உச்சமன்றத்தை சேர்ந்த டாக்டர் ஸாஹி ஹவாஸ் (Dr Zahi Hawass) நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சோதனை நடத்தினார். எகிப்து பற்றிய ஆவணப்படங்கள் பெரும்பாலானவற்றில் தொப்பியோடு வரும் இவரை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். எகிப்தின் இன்றைய நட்சத்திரங்களில் ஒருவர் டாக்டர் ஹவாஸ். அவரும் அவரது குழுவினரும் டுட் மம்மியிலிருந்து மரபணுக்களை சேகரித்து ஆய்வு செய்தனர். CT scan எனப்படும் கணினி வருடல் சோதனை முறையை பயன்படுத்தி மம்மியின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்கினர் அவர்கள். 

உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை ஊடுகதிர்கள் மூலம் முப்பரிமாண தோற்றத்தில் அப்போது பார்க்க முடிந்தது. அந்த சோதனையில் இருந்தும் மரபணு சோதனையில் இருந்தும் சில புதிய முடிவுகளுக்கு வந்தது டாக்டர் ஹவாஸின் குழு. மம்மியாக்கத்துக்கு முன்னதாகவே டுட்டின் மார்புப் பகுதி சேதமடைந்திருக்கக் கூடும் என்று அந்த குழு குறிப்பிட்டது. டுட் இறந்த பிறகு உடலை பதப்படுத்தும்போதோ அல்லது டாக்டர் டெர்ரியின் சவப்பரிசோதனையின்போதோ டுட் மண்டையோட்டுப் பகுதி உடைந்து எலும்பு துண்டுகள் உள்ளேயே விழுந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது நிபுணர் குழு. 

மேலும், டுட்டின் இடுப்பு எலும்பு கிட்டத்தட்ட முற்றாகவே காணாமற்போயிருந்தது. டுட்டின் இடப்பக்க தொடைஎலும்பு உடைந்திருந்தது. அது மரணத்தின்போதோ அதற்கு சற்று முந்தியோ நேர்ந்திருக்கவேண்டும். டுட் உயிர்வாழ்ந்தபோது அவருக்கு மேலும் சில உடல்நல கோளாறுகள் இருந்திருக்கலாமென்றும் டாக்டர் ஹவாஸ் குழு கண்டுபிடித்தது. வளைந்த பாதம், பிளவுபட்ட மேலண்ணம், வளைந்த முதுகுத்தண்டு ஆகியவற்றுடன் மலேரியா காய்ச்சலாலும் டுட் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது குழு. ஆனால்,\ எல்லா ஆய்வாளர்களுமே அந்த முடிவை ஒப்புக்கொண்டார்கள் என சொல்லமுடியாது. வளைந்த பாதம் (Cleft foot) காரணமாக டுடன்காமுனால் இயல்பாக நடந்திருக்க முடியாது என்றும், கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஊன்றுகோல்கள் அதற்கு வலுவான சான்றுகள் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

2005இல் டுட் மம்மி மீதும், கைரோ அரும்பொருளகத்திலுள்ள அரச மம்மிகள் மீதும் நடத்தப்பட்ட மரபணுச்சோதனைகளின் முடிவை ஆய்வாளர்கள் 2010இல் வெளியிட்டனர். மம்மிகளுக்கு இடையிலான குடும்ப தொடர்புகளை கண்டறிய ஆய்வாளர்கள் முயன்றனர். பண்டைக்கால மம்மிகளில் இருந்து மரபணுக்களை பிரித்தெடுப்பது மிகச் சிரமமான செயல். பெரும்பாலும் அது மாசுபட்டிருக்கும். எனினும், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மாமன்னர் டுடன்காமுனின் உறவினர்கள் குறித்த சில உறுதியான முடிவுகளுக்கு வந்தனர் ஆய்வாளர்கள். 

அக்கினாட்டனே டுடன்காமுனின் தந்தை என உறுதி செய்தனர் அவர்கள். KV55 கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட அமர்னா மம்மிகளில் ஒன்று டுடன்காமுனின் தாயாருடையது. The Younger Lady என்று அழைக்கப்படும் இந்த மம்மிதான் டுடன்காமுனின் அம்மா என்பதை டாக்டர் ஹவாஸ் ஆதாரங்களோடு நிரூபித்திருக்கிறார். அதே கல்லறையில் இருந்த மற்றொரு மம்மி டுட்டின் தந்தைவழி பாட்டியான (தாய்வழி பாட்டியும்கூட) மகாராணி டை-யின் (Tiy) மம்மி. அதாவது அக்கினாட்டனின் தாயார். 38 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த மூன்றாம் அமென்ஹோட்டெப்பின் (Amenhotep III) அருமை மனைவி மகாராணி டை. சிலைகளில் இவர் தமது கணவரோடு இணைந்து அமர்ந்திருப்பதை காணலாம். மன்னருக்கு நிகராக சிலைகளில் மகாராணியும் வடிக்கப்படுவது அப்போது வழக்கத்தில் இல்லை. 

டுட்டின் தாத்தா, பாட்டி. டுட்டின் தந்தை அக்கினாட்டனின் பெற்றோர். அரச தம்பதியின் கால்களுக்கு இடையிலும் பக்கவாட்டிலும் உள்ள சிலைகள் அவர்களது மகள்கள். அவர்களில் ஒருவரை மணந்துதான் அக்கினாட்டன் டுடன்காமுனைப் பெற்றார்.

கைரோவிலுள்ள பழைய அரும்பொருளகத்திற்குள் நுழைந்ததுமே நேரெதிரே நமது கண்ணில் தென்படும் 7 மீட்டர் உயரமும் சுமார் நாலரை மீட்டர் அகலமும் கொண்ட பிரமாண்டமான தம்பதி சிலை இவர்கள் இருவருடையதுதான். மகாராணி டை தமது வலக்கரத்தால் மூன்றாம் அமென்ஹோட்டெப்பின் இடையை ஆதுரத்துடன் தழுவிக்கொண்டிருப்பதை இந்த மாபெரும் சிலையில் காணலாம். இருவரும் சமமான உயரத்தில் காட்டப்பட்டுள்ளனர். இருவரின் கால்களுக்கு பக்கத்திலும் நடுவிலும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்த மகள்களில் ஒருவர்தான் டுடன்காமுனின் தாயாரும்கூட. குழப்புகிறதா? தமது சகோதரனான அக்கினாட்டனை மணந்தே இவர் டுடன்காமுனை பெற்றெடுத்தார். இது பண்டைய எகிப்தில் மிக இயல்பானது. 

மன்னர்களின் பள்ளத்தாக்கிற்கு செல்லும் வழியில் உள்ள மூன்றாம் அமென்ஹோட்டெப்பின் ஈமச்சடங்கு ஆலய நுழைவாயிலில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இரண்டு பிரம்ம்ம்ம்ம்ம்ம்மாண்ட சிலைகள் மூன்றாம் அமென்ஹோட்டெப்பின் சிலைகள்தாம். தற்போது கலோசி ஆஃப் மெம்னன் (Colossi of Memnon) என்று அழைக்கப்படுகின்றன இச்சிலைகள். 

மூன்றாம் அமென்ஹோட்டெப்பின் ஆலய நுழைவாயிலில் இருக்கும் அவரது மாபெரும் சிற்பங்கள். (கலோசி ஆஃப் மெம்னன்)

தமது கணவரின் காலத்திலும், பின்னர் இளைய மகன் அக்கினாட்டன் காலத்திலும் அதிகச் செல்வாக்கோடு திகழ்ந்தவர் மகாராணி டை. மனைவியை மிகவும் நேசித்த மூன்றாம் அமென்ஹோட்டெப், மனைவி அரசப்படகில் உலா வருவதற்காகவே ஒரு பெரிய ஏரியை வெட்டுவித்தார் என்றுகூட குறிப்புகள் உள்ளன. கைரோ அரும்பொருளகத்தில் உள்ள மம்மிகளில் மகாராணி டை-யின் மம்மி மிக அழகானது. அலை அலையான கூந்தலுடன் காட்சி தருகிறது அது. 

மகாராணி டை-யின் பேரனான டுடன்காமுன் இத்தனை நவீன ஆய்வுகளுக்கு பின்னரும் எதனால் மாண்டார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டதாக சிலரும், கால் உடைந்து ஏற்பட்ட தொற்று காரணமாக மாண்டார் என வேறு சிலரும் நம்புகின்றனர். மரபணு குறைபாடு காரணமாக ஏற்பட்ட நோயால் டுட் மாண்டதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நீர்யானை தாக்கி டுட் மாண்டதாக கூட ஒருவர் எழுதி வைத்திருக்கிறார். ரதத்திலிருந்து கிழே விழுந்து, அது மேலேறிச் சென்றதால் டுட் மாண்டு போயிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கணினி பாவனைச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. எதுவும் உறுதியான தீர்வைத் தரவில்லை. 

கார்ட்டர் குழு டுட்மம்மி கல்லறை கண்டுபிடிப்புகள்மீது பயன்படுத்திய தொல்லியல் ஆய்வு நடைமுறைகள் இன்று நமக்கு ஆச்சர்யம் தரலாம். ஆனால் அப்போது கிடைத்த சிறந்த நடைமுறைகளைத்தான் அவர்கள் பயன்படுத்தினர். இன்று நமக்கு கிடைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பண்டைக் கால நாகரிகங்கள்மீது புத்தொளி பாய்ச்ச உதவி வருகின்றன. 

கணினி ஊடுருவல் சோதனைகளில் மருத்துவர்கள் உடல் உள்ளுறுப்புகளை தெளிவாக காண்பதுபோல, வானிலுள்ள செயற்கைக்கோள்கள் மூலமாக ஒரு தொல்லியல் தலத்தின் நிலக்காட்சியை எளிதில் ஊடுருவிப் பார்க்க முடியும். நேரில் பார்க்கும்போது தெரியாத கட்டடங்களும் அஸ்திவாரங்களும் அதில் தெரியும். பழங்கால நாகரிகம் செழித்தோங்கிய கம்போடியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில், அதுபோன்ற பல இடங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. 

டாக்டர் ஹவாஸ் குழுவினர் 2007இல் நடத்திய ஆய்வுக்குப் பின்னர் டுட்டின் மம்மி மீண்டும் கல்லறைக்கு கொண்டுசெல்லப்பட்டு, ஒரு கண்ணாடி பேழைக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டது. 2019 செப்டம்பர் முதல் தேதி நாங்கள் அதைப் பார்த்தோம். தட்பவெப்பத்தையும் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்தி நிலையாக வைத்திருக்கும் சிறப்பு ஏற்பாட்டின்கீழ் டுட்டின் மம்மி பாதுகாக்கப்படுகிறது. நாங்கள் பார்க்கும்போது அது Antechamber எனப்படும் முன்னறையின் இடப்பக்க ஓரத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்குமுன் அது கல்பெட்டிக்குள் கிடத்தி வைக்கப்பட்டிருந்ததாக சில புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. 

மம்மியின் தலை, பாதங்கள் இவற்றை மட்டுமே இப்போது நம்மால் பார்க்கமுடிகிறது. எஞ்சிய உடல் முழுவதும் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது. முகத்தில் மேல் முன்பற்கள் துருத்திக்கொண்டு வாயைவிட்டு வெளியே வந்திருக்கின்றன. பாதங்கள் உலர்ந்துபோய் சுருங்கி மிக வயதானவரது பாதங்களைப்போல் உள்ளன. விரல்கள் முழுமையாக இல்லை. சில பகுதிகள் உதிர்ந்துபோயுள்ளன. டுடன்காமுன் கல்லறையில் டுட் மம்மியோடு வேறு இரண்டு மம்மிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

கருவூல அறையில் குறைமாதத்தில் பிறந்து மாண்டுபோன இரண்டு பெண் சிசுக்களின் மம்மிகள் இருந்தன. இரண்டு சிறிய சவப்பெட்டிகளில் அவை வைக்கப்பட்டிருந்தன. ஒரு சிசுவுக்கு வயது நான்கு மாதம் இருக்குமென்றும், மற்றொன்று பிறப்பதற்கு இரண்டு மாதத்துக்கு முந்திய சிசு என்றும் தோராயமாக மதிப்பிடப்படுகிறது. அந்த பெண் குழந்தைகள் இரண்டுமே, டுடன்காமுனுக்கும் அவரது மனைவி அங்க்கேசெனமுனுக்கும் (Ankhesenamen) பிறந்தவை என்று எகிப்தியவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். மரபணு சோதனையும்கூட அதற்கான சாத்தியத்தை உறுதி செய்கிறது. 

டுடன்காமுனுடைய இரண்டு மகள்களின் மம்மிகள். படம் உதவி Kenneth Garrett for National Geographic

குறைமாதத்தில் பிறந்து குழந்தைகள் மாண்டுபோவதும், பிறந்தபின் இளம் குழந்தைகள் மாண்டுபோவதும் பண்டைக்கால எகிப்தில் வழக்கம்தான். ஆனால் அந்த பச்சிளம் சிசுக்களை மிக கவனமாகப் பாடம் செய்து மம்மியாக்கி அவற்றை டுட் கல்லறையிலேயே சேர்த்து ஒரு பெட்டிக்குள் வைத்துப் புதைத்தது வழக்கத்துக்கு மாறானது. அதற்கு ஒரு காரணம் இருக்கலாமென்கின்றனர் சில எகிப்திய நிபுணர்கள். டுடன்காமுன் செல்வ வளமிக்க மாமன்னர். தமது பெண் சிசுக்கள் மாண்டதும் அவர்களை தனியாக ஒரு கல்லறையில் அவர் அடக்கம் செய்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. சடங்குரீதியாக அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 

பண்டைக்கால எகிப்தில் பெண்களும் சிறுமிகளும் பாதுகாவலர்களாக கருதப்பட்டனர். தந்தையருக்கும் கடவுள்களுக்கும் அருகே அவர்கள் சித்திரிக்கப்படுவதுண்டு. இரண்டாம் ராம்சிஸ் போன்ற விளம்பர விரும்பி மன்னர்கள்கூட தங்கள் காலடியில் மனைவி அல்லது மகளின் சிறிய உருவங்களோடுதான் காட்டப்பட்டுள்ளனர். டுடன்காமுன் மறுமை உலகுக்கு மேற்கொள்ளும் பயணத்தில் அவருக்கு துணையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே அந்த சிசுக்கள் இரண்டும் மம்மியாக்கம் செய்யப்பட்டு தந்தையின் கல்லறையில் வைக்கப்பட்டனவாம். மன்னர்களின் மறுமை உலகுக்கான பயணத்தை உறுதி செய்யும் பொருள்களை கல்லறையில் சேர்த்துப் புதைப்பதில் தனி கவனம் செலுத்தினர் பழங்கால எகிப்தியர்கள். 

ஏதேனும் ஒன்று செயல்படவில்லை என்றால் அதற்கு மாற்றாக இன்னொரு பொருள் இருக்கவேண்டும். அதனால்தான் டுட்டின் கல்லறையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் வைக்கப்பட்டன. எவ்வளவு அதிகமான பொருள்கள் இருக்கின்றனவோ அவ்வளவு அதிக வாய்ப்பு மன்னருக்கு மறுமை உலகுக்கு வெற்றிகரமாகச் சென்று சேர…

டுட் கல்லறையில், டுட் மம்மியோடு கட்டுரை ஆசிரியரும் அவரது பயணத் தோழர் ராஜகோபாலும்


பொன். மகாலிங்கம்

இராஜபாளையத்தில் பிறந்த பொன் மகாலிங்கம், கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரிலுள்ள தமிழ் வானொலி 96.8 பண்பலையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழியான வசந்தத்தில் செய்தித் தயாரிப்பாளராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 

தமிழ்நாட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சி உருவான தொடக்ககாலத்தில், அதில் செய்தி ஆசிரியராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பேராலயம் பற்றிய இவரது பயணக் கட்டுரை, நூலாக வெளிவந்துள்ளது. பயணம் செய்வதில் அதீத ஆர்வமுள்ளவர்.