Saturday 30 December 2023

செட்டிநாட்டு சுதை சிற்பங்கள் - இராம. நா. இராமநாதன்

 

தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளையும் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியைச் சுற்றியுள்ள 76 ஊர்களையும் உள்ளடக்கிய பகுதி செட்டிநாடு என்றழைக்கப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பெற்ற செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றது. இவ்வீடுகள் அனைத்துமே மிக உயரமான தளம் அமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. வணிகத்தொடர்புகளால் ஏற்பட்ட உலகளாவிய பாரம்பரியங்களின் தாக்கங்களினால் தங்கள் கட்டிடக்கலையை நகரத்தார் மேம்படுத்தினர். நகர்ப்புறத் திட்டமிடல், நீர் மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் கலை படைப்பாற்றல் இவையோடு எல்லா செட்டிநாட்டு கிராமங்களிலும் வீடுகள் எழுப்பப்பட்டன. செட்டிநாட்டு வீடுகள் திராவிடக் கட்டிடக்கலை பாணியுடன் இந்தோ இஸ்லாமிக், இந்தோ ஆர்சனிக் வேலைப்பாடுகளும் இணைந்து அழகு பொலிபவை. செட்டிநாட்டில் வீட்டு முகப்பு முதல் வீதியில் இருந்தால் பின் கதவுகள் இரண்டாவது வீதிக்கு அமையும்படி நீளமாகவும் அதற்கிணையான விரிவோடும் கட்டப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய வீடுகள் கட்ட தொடங்கியது சென்ற நூற்றாண்டு இறுதியில் கிபி 1850 முதல் 1900 வரை. செட்டிநாட்டில் இவ்வாறு வீடுகள் கட்டிய காலத்தை மூன்று கட்டங்களாக பிரிக்க முடியும்.

19 நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் முழுக்க முழுக்க திராவிட கட்டடக்கலையை ஒத்தே அமைக்கப்பட்டன. இவ்வீடுகளில் மேற்புறத்தில் திருமகளை அமைக்கும் வழக்கம் இருந்தது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் இவ்வகை வீடுகள் கட்டுவது தொடங்கப்பட்டாலும் பெருமளவில் வீடுகள் கட்டப்பட்டது 1900 முதல் 1920 வரையிலான காலம். முதல் உலகப்போரை ஒட்டி பல நகரத்தார் குடும்பங்களுக்கு வெளிநாட்டு தொடர்பு குறைந்ததால் 1920 முதல் 1940 வரை வீடுகள் கட்டப்பட்டன என்றாலும் முந்தைய காலகட்டத்தை விட எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. 

முதல் இரண்டு காலகட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் முகப்பு, வளவு, கல்யாணகொட்டகை, இரண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு, அடுப்படி, போஜனஹால், சாலை, கட்டுத்தரை, தோட்டம் என்றபடி முறையாக வடிவமைப்பை கொண்டிருக்கும். இவ்வீடுகளில் கவனிக்க வேண்டியது சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு அமைக்கப்படும் சுவர் பூச்சு. தெற்காசிய நாடுகளுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பின் பயனாக 1900-பின் கட்டப்பட்ட வீடுகள் அந்த நாடுகளின் தாக்கத்தை தன்னகத்தே உள்வாங்க துவங்கியது. அதன் வெளிப்பாடாக வேலைப்பாடுகள் அமைந்த பர்மா தேக்கு கதவுகள் ஜன்னல்கள் பெல்ஜியம் கண்ணாடி பதித்த கதவுகள், இத்தாலிய மார்பிள், கூரையில் பூ வேலைப்பாடுகள், கொத்து விளக்குகள், என பிரம்மாண்டமான முறையில் வீடுகள் அழகுபடுத்தப்பட்டன.

வீடுகளின் நுழைவாயில்களில் மேற்புறத்தில் காப்பாய் கடவுளர்களின் சிலை வைக்கப்பட்டிருப்பதும் இக்காலகட்டத்தில் மெல்ல மாற்றம் பெறுகின்றது. கடவுள் சிலைகளுடன் மேலைநாட்டவர்கள், கந்தர்வர்கள், சேடிப்பெண்கள், பட்சிகள், விலங்குகள் என்றும் ரவிவர்மா ஓவியபாணியில் இறைவனின் உருவங்களை சுதையால் சமைத்தல் என்பதையும் இந்தக்கால வீடுகளில் பார்க்க முடிகின்றது.

செட்டிநாட்டு வீடுகளின் நுழைவுவாயிலே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகளிலும், அதனைத் தாங்கி நிற்கும் நிலைகளிலும் நேர்த்தியான சிற்பங்கள் பார்ப்பவர்களை வியப்படையச் செய்பவை. 16-17ஆம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்பக்கலை அமைப்புகளே செட்டிநாட்டின் கம்மாளர்களின் கலைத்திறன்களுக்கும் முன்மாதிரியாக நின்று வழிகாட்டியவை. 1940-க்குப் பிறகு மிகப்பெரிய அளவில் வீடுகள் கட்டும் போக்கு மாறி சிறிய அளவில் காலத்திற்கு ஏற்ப நவீன பங்களா முறைகளிலும் வீடுகள் கட்டும் பழக்கம் நகரத்தார் மத்தியில் தோன்றியது. இவ்வகை வீடுகளை அமைப்பதற்கு எழுவங்கோட்டை என்ற பகுதியில் இருந்த கட்டுமான தொழிலாளர்களையும் கம்மாளர்களையுமே பெருமளவில் பயன்படுத்தியுள்ளனர்.

நகரத்தார்களுக்கு வீடுகள் என்பது அந்தஸ்தின் அடையாளம். கல்யாணம் சடங்கு போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததாலும் அதனை தங்கள் வீடுகளிலேயே நடத்த விரும்பியதாலும் நிறைய பேர் கலந்துகொள்ளும் வகையில் பெரிய விருந்துகள் நடத்தும் வகையில் தனித்தனியாக கட்டுகளை கொண்ட பெரிய வீடுகளைக் கட்டினர். இவ்வளவு பெரிய வீடுகளை கட்டியதற்கான காரணங்களில் முதன்மையான ஒன்று கூட்டு குடும்ப அமைப்பு, குடும்பத்தின் ஒவ்வொரு புள்ளியையும் தனித்தனியே நிறைவு செய்யும் வண்ணம் வீடுகள் அமைந்தன. இரண்டாவதாக பருவநிலை மாறுதல்கள் அனைத்திற்கும் ஏற்றமுறையில் வெவ்வேறு பகுதிகளை கொண்டதாக வீடுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் கூதிர்பள்ளி, வேனிற்பள்ளி என தனித்தனியாக பள்ளிகளை குறிப்பிடப் பெறுகின்றன. இந்த பெரிய வீடுகளிலும் வளவு வீடு கூதிர் பள்ளியாகவும் சுற்றுப் பத்திகளும் பட்டா சாலைகளும் வேனிற் பள்ளியாகவும் பயன்படுகின்றன.


 வீடுகளும் சுதைச் சிற்பமும்

இன்று செட்டிநாட்டு வீடுகள் சுற்றுலாதலங்கள் ஆகிவிட்டன. ஆனால் பெரும்பாலானவர்கள் பார்க்க தவறுவது வீட்டின் முகப்பு பகுதியில் அலங்காரத்திற்காக அமைக்கப்பட்ட சுதைச்சிற்ப தொகுப்புகள். பலதரப்பட்ட செய்திகளைக் கொண்டுள்ள இந்த சுதைச்சிற்பங்கள் நகரத்தார்களின் வாழ்வியல், சமூகவாழ்வியல், வணிகத் தொடர்பு, போன்ற செய்திகளை நமக்கு சொல்லக்கூடியதாக அமைந்துள்ளன. செட்டிநாட்டு சுதைச் சிற்பங்களை ஐரோப்பிய தாக்கத்திற்கு முன் பின் என பிரித்து பார்க்க முடியும்.

ஐரோப்பிய தாக்கத்திற்கு முன் இருந்த சுதைச்சிற்ப தொகுப்புகள் நாயக்கர்கள் மற்றும் தஞ்சை மராட்டியர்களின் காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த முறையை ஒன்றிணைத்து செட்டிநாட்டில் காணப்பட்ட காட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒருவகையான சிற்ப அமைப்பு. சுதைச் சிற்பங்களை உருவாக்கும் போது உட்புறத்தில் கம்பியை பயன்படுத்தி அதன் மீது சாந்து பூசி உருவங்களை உருவாக்கும் பாணி முதன் முதலில் துவங்கியது செட்டிநாட்டு பகுதியில் தான். அதற்கு முன்பு இருந்த தஞ்சை மராத்தியர்கள் மற்றும் நாயக்கர் பாணியில் இவ்வாறு உட்புறத்தில் கம்பிகள் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. முற்காலத்தில் சிற்பத் தொகுதியில் அதிகம் காட்டப்பட்டவை யானையுடன் கூடிய திருமகளின் வடிவங்களே. மேலும் இந்த திருமகளோடு சேடி பெண்களை காட்டும் வழக்கமும் இருந்துள்ளது. சில வீடுகளில் சேடிப் பெண்கள் மட்டுமில்லாது அரசன் அரசியர், காவலர்கள், நாட்டிய மகளிர், பறவைகளின் வரிசை போன்ற உருவங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் அரசன், அரசி, காவலர்களின் உருவங்கள் மராத்தியர்களின் பாணியில் அமைந்து இருக்கின்றன. நடன மங்கையர்கள் சேடிப் பெண்கள் போன்ற உருவங்கள் நாயக்கர் பாணியிலும், தஞ்சை மராத்திய சாயலிலும் அமைந்துள்ளன. இக்காலகட்டத்தில் தான் வீடுகளில் மெல்ல கந்தர்வர்களை சுதையாக காட்டும் வழக்கம் தலையெடுக்கின்றது என்பதனையும் பழமையான சுதைச் சிற்பங்களை பார்க்கும்போது நம்மால் உணர முடிகிறது.
செட்டிநாட்டு வீடுகளில் முகப்பு பகுதியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் திருமகள் வடிவம் பலதரப்பட்ட செய்திகளையும் தாங்கி நிற்கும் ஒர் அமைப்பு. திருமகள் உருவம் வளமையின் அடையாளம். இது சைவ வைணவத்தில் மட்டுமல்லாது பிற இந்திய சமயங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம். திருமகள் செல்வத்தின் குறியீடாக இன்று பார்க்கப்பட்டாலும் இந்திய சமயங்களான சமணம் பவுத்தம் ஆசீவகம் போன்ற எல்லா சமயத்திலும் வளத்தின் குறியீடாகவே இவ்வடிவம் பார்க்கப்படுகின்றது. திருமகள் உருவம் என்பது தொல்பழங்கால தாய்தெய்வம் / குத்துகல் வழிபாட்டில் இருந்து வந்த ஒன்று. அதன் வெளிப்பாடாகவே வளமையின் அடையாளமாக நம் வீடுகளில் முகப்பு பகுதிகளில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

1850 முதல் 1910 காலகட்டத்திற்குள் சமைத்த வடிவங்களில் திருமகளை சுற்றி திருவாச்சி காட்டும் வழக்கும் காணப்படுகின்றது. சில இடங்களில் மண்டபம் காட்டும் வழக்கமும் இருந்துள்ளது. திருமகளின் உருவம் நாயக்க பாணி அல்லது மராத்திய பாணியிலும் அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த திருமகள் உருவங்களில் பயன்படுத்தப்பட்ட நகைகள் செட்டிநாட்டு பாணியிலும் அமைந்திருந்தன. உடனிருக்கும் சேடிப் பெண்கள் அதாவது சாமரம் வீசும் பணிப்பெண்கள் செட்டிநாட்டிப் பெண்களின் உடைபானியில் அமைக்கப்பட்டனர்.1910க்கு பின் செட்டிநாட்டு பகுதியின் வீடுகளில் கட்டுமானத்தில் ஐரோப்பிய தாக்கத்தினை மெல்ல உள்வாங்கத் துவங்கியதும் சுதைச் சிற்பங்களும் மெல்ல ஐரோப்பிய தாக்கத்தை உள்வாங்க ஆரம்பிக்கின்றன. அதன் வெளிப்பாடாக மாடங்களில் ஆங்காங்கே ஆண், பெண், ராஜா, ராணி, கோமாளிகள், ஐரோப்பியர்கள், விலங்குகளின் முகங்களை காட்டும் வழக்கம் ஏற்படுகின்றது. வாயிலின் மேற்புறத்தில் இரட்டை உருவங்களாக சிங்கம், குதிரைகள், யாளி, மான்கள், காவலாளி போன்ற பலவகையான இரட்டை உருவங்களை காட்டும் பழக்கம் இக்காலகட்டத்தில் இருந்தே துவங்குகின்றன. அதற்குமுன் சேடிப் பெண்கள் அல்லது இரட்டை நடனமங்கையர்களை மட்டுமே காட்டும் வழக்கமிருந்தது. இக்காலகட்டத்தில் நகரத்தார்கள் தாங்கள் கொண்டுவிற்கச் சென்ற தேசத்தில் கண்ட காட்சிகளை எல்லாம் செட்டிநாட்டு பகுதியை சேர்ந்த கம்மாளர்களை கொண்டு மிக நேர்த்தியாக இங்கு காட்ட முற்படுகின்றனர்.

மேலும் மேல் மாடங்களில் இராமன், வேணுகோபாலர், தாயும்குழந்தையும், ஐரோப்பிய ஆண்கள், பெண்கள், நாயுடன் கூடிய காவலர்கள் போன்ற உருவங்களையும் காட்சி படுத்துகின்றனர். பூ மாரி பொழியும் கந்தர்வர்கள், மாலை ஏந்தும் கந்தர்வர்கள் என்று இந்த கந்தவர்களின் பலவிதமான உருவங்களை காட்டத் துவங்குகின்றனர். இக்காலகட்டத்தில் கந்தர்வர்கள் காட்டும் வழக்கம் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது என்பதனை 1910முதல் 1915களுக்கு பின் கட்டிய வீடுகளில் நம்மால் காண முடிகின்றன.

1920களுக்கு பின் செட்டிநாட்டு வீடுகளில் அதிகமும் ரவிவர்மா ஒவிய பாணியை சார்ந்து சுதை சிற்பங்கள் அமைகின்றன. இக்காலகட்டத்தில் வீட்டின் முகப்பு பகுதியில் பலதரப்பட்ட இறையுருவங்கள் காட்டும் வழக்கம் உருவாகியது. ரவிவர்மா ஓவியத்தாக்கம் சுதைச் சிற்பங்களில் உட்புகும் முன்பு திருமகள் உருவம் அமர்ந்த நிலையிலேயே காட்டப்பட்டது அதன் பின் தான் திருமகள் நின்றவடிவில் சுதைசிற்பங்களில் காட்டும் வழக்கம் தோன்றியது. பல செட்டிநாட்டு வீடுகளின் முகப்பில் ரவிவர்மா ஓவியங்கள் சுதைகளாக சமைக்கப்பட்டன குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சண்முகர், பிள்ளையார், கஜேந்திர மோக்‌ஷம், வேணுகோபாலர், ருக்மணி சத்தியபாமா சமேத கிருஷ்ணர், அல்லி அர்சுனன் திருமகள், கலைமகள், மீனாட்சி திருக்கல்யாணம், ரிஷபாருடர், யசோதா கண்ணன், பார்வதியுடன் பாலமுருகன், போன்ற உருவங்கள் சமைக்கப்படன. சில வீடுகளில் மேல்புறத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் இலச்சினையும் சுதையில் காட்டியிருகின்றனர். அதோடு வீட்டில் இருபுறமும் மாடங்கள் அமைக்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்துள்ளது. அந்த மாடங்களில் ஆங்காங்கே கிளிகள், புறாக்கள், பறவைகள் போன்ற உருவங்களை சுதையில் நம்மால் காணமுடிகின்றன. சில வீடுகளின் மாடங்கள் அமைப்பதற்கு பதிலாக மேற்புறத்தில் சுதையால் ரதங்கள் செய்து நிறுத்தும் வழக்கமும் இருந்து வந்துள்ளன. தத்ரூபமாக செட்டிநாட்டு வெள்ளி ரதங்களில் காணப்படும் அங்கங்களை ஒன்று விடாமல் அப்படியே சுதையில் காட்டியிருகின்றனர் செட்டிநாட்டு கம்மாளர்கள். இக்காலகட்டத்தில் சமைக்கப்பட்ட சுதைகளில் ரவிவர்மா ஓவியபாணியை ஒத்து அமையத் துவங்கியதன் காரணமாக மெல்ல இங்கு நம் வசம் இருந்து தொன்மையான சுதைகள் அமைக்கும் பாணி மறையத் துவங்கியது என்பது வருத்தமான செய்தியே.


1935களுக்கு பின் கட்டப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையான வீடுகள் அளவு சுருங்க துவங்கியதும் சில வீடுகளில் முகப்பில் சிறிய அளவில் திருமகள், இயற்கை காட்சிகள், தோரணங்கள், திரைச்சீலைகள் என்று சுதைகளின் பயன்பாட்டின் தாக்கம் குறைந்து வேறு விதமான மாற்றத்தை நோக்கி நகர துவங்கியது. அது சுதந்திர போராட்ட காலகட்டம் என்பதால் சிலர் தங்களின் சுதந்திர போராட்ட உணர்வை காட்டும் விதமாக வீடுகளின் முகப்பில் பாரதமாதா, காந்தி, நேரு, நேதாஜி, போன்ற உருவங்களை சுதைகளாக சமைத்து தங்களின் எண்ணங்களையும் சுதந்திர சுதேசிய உணர்வையும் வெளிப்படுத்தினர். மற்றும் ஒரு சுவையான செய்தி செட்டிநாட்டு கிராமங்களில் ஒவ்வொரு ஊருக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு அதாவது சுதைசிற்பங்கள், கதவுகள், கதவுகளின் வர்ணம், மாடங்கள் என்று எதாவது ஒரு அமைப்பு எல்லா வீடுகளிலும் பொதுவாக அமைக்கப்படும். எடுத்துகாட்டாக குருவிக்கொண்டான்பட்டியில் பெரும்பாலான வீடுகளின் முகப்பு பகுதில் இரட்டைசிங்கம் கர்ஜனை செய்யும் தோரனையில் நிறுத்தப்பட்டிருக்கும் இது அந்த பகுதியில் மட்டும் அதிகமாக காணமுடியும்.

கோயில்களும் நகரத்தார் அமைத்த சுதைகளும் 

கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், விஜயநகரர், மராத்தியர், சேதுபதிகள், சிவகங்கை மன்னர்கள் என்று அரச மரபினர்கள் எண்ணற்ற கோயில்களை கட்டியும் புனரமைத்தும் வந்துள்ளனர். அவை இன்று கலைச் சின்னங்களாகவும் பண்பாட்டு சின்னங்களாகவும் இருக்கின்றன. அவர்கள் காலத்துக்கு பின்னர் மன்னர் பின்னோர் மரபினர் என்று காப்பியங்கள் சொல்லும் நகரத்தார்கள் அப்பணியை ஏற்றனர். 

நகரத்தார்கள் பாண்டிய நாட்டில் குடியேறிய கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இருந்தே கோயில் திருப்பணிகள் ஈடுபட்டனர் என செவிவழிச் செய்தியாக கூறுகின்றனர், இதற்கு எந்தவித சான்றுகளும் தற்சமயம் இல்லை. என்றாலும் கி.பி 16 ஆம் நூற்றாண்டிலிருந்தே கோவில்கள் திருப்பணி, ஊரணி அமைத்தல் போன்ற சமயப் பணிகளில் ஈடுபட்டதற்கான கல்வெட்டு சான்றுகள் ஏராளம் கிடைக்கின்றன. முக்கியமாக கி.பி 18 முதல் 20 ஆம் நூற்றாண்டுகளில் செய்த திருப்பணிகள் காலவாரியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. செட்டிநாட்டு ஊர்களில் ஒன்றான அரியக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் 1818ஆம் ஆண்டு திருப்பணி முடிந்து முதல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இக்கோயிலே முதன் முதலில் நகரத்தார்கள் கற்றளியாக எடுத்ததாக சொல்லபடுகின்றது. இரண்டாவதாக 1820 ஆம் ஆண்டு உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலின் திருப்பணிகள் நடந்துள்ளது.

செட்டிநாட்டு கம்மாளர்கள் பிள்ளையார்பட்டி, அருணாசலபுரம், தேவகோட்டை, எழுவன்கோட்டை, வைரவன்பட்டி போன்ற ஊர்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்கள் கட்டிய கோயில்கள் மற்றும் சிற்பங்கள் வாஸ்து சாஸ்திரம், மயமதம், மானசாரம், சகளாதிகாரம், காசியப சிற்பசாஸ்திரம், சாரஸ்வதிய சித்திர தர்மசாஸ்திரம், பிராமிய சித்ர கர்ம சாஸ்திரம், ஸ்ரீ தத்துவநிதி ஆகிய சிற்ப நூல்களில் கூறுகின்ற இலக்கணப்படி காணப்படுகின்றன. நகரக்கோயில்கள் காமிகாகமம், காரணாகமம் ஆகிய ஆகம முறைப்படி கோயில் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. நகரத்தார்கள் நம்நாட்டில் கங்கைக்கரை வரை பல பகுதிகளையும் வாணிபம் காரணமாக சுற்றிப்பார்த்து பல்வேறு கோயில்கள் அமைப்புகளை நோக்கியும் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் கால சிற்பங்களிலிருந்து தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டும் கோயில்களை அமைத்தனர்.

சோழர் காலத்துக்கு முன்பு வரை இறைவிக்கு என தனி சன்னதி இல்லை பொ.யு 11ஆம் நூற்றாண்டிலிருந்து இறைவிக்கு காமகோட்டம் அமைக்கும் வழக்கம் துவங்குகின்றது. இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்கள் இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இறைவன் கோயிலுக்கு இடப்புறம் இறைவி கோயில் அமையும் ஆனால் சிவன் சக்தி ஆகிய இருவரையும் ஒரே ஆலயத்தில் பக்கம் பக்கமாக வீற்றிருக்க செய்தவர்கள் நகரத்தார்கள் என சிற்பக்கலை வல்லுனர் வை. கணபதி ஸ்தபதி குறிப்பிடுகிறார். இவ்வாறே இவர்கள் அமைத்த கோயிலில் மேடை மீது கிழக்கு நோக்கிய சிவபெருமான் சன்னதியும் தெற்கு நோக்கிய இறைவியின் சன்னதியும் அமைந்திருக்கும். இதே பாணியை பின்பற்றி நகரத்தார்கள் வாழும் ஊர்களில் கட்டப்பட்ட நகர கோயில்களும் அமைத்துள்ளன.

கோவில் அமைப்பில் பள்ளப்பத்தி முறை என்பது நகரத்தார்க்கே உரிய தனித்துவமான பாணியாகும். கருவறை தளத்தை உயரத்தி நிலைக் கோபுர உயரத்திற்கு சமமாக கருவறைப் விமானங்களையும் அமைத்தனர். நகரத்தார் கோவில் அமைப்பு என்பது கொடிமரம், நந்தி, பலிபீடம், முகமண்டபம், பள்ளப்பிரகாரம், திருச்சுற்று மாளிகை, மாளிகைபத்தி, பரிவார ஆலயங்கள், வாகன அறை, உற்சவர் அறை, கருவூலம், யாகசாலை, வியஞ்சன மண்டபம், மடைப்பள்ளி, மலர் மேடை, கோவில் கிணறு, அலங்கார மண்டபம், மேல் சுற்று பிரகாரத்தில் மகா மண்டபம், அம்மன் சன்னதி, வைரவர் சன்னதி, பள்ளியறை, நடராஜர் சபை, அர்த்த மண்டபம், கருவறை இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும். இறைவனுக்கு முன்பாக அர்த்த மண்டபத்தில் ஐம்பொன்னால் செய்த கண்ணாடி படிமமும் நந்தியும் அமைக்கும் வழக்கம் நகரத்தார்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டதே. இறைவனுக்கு செய்யும் சோடச உபசாரங்களில் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி சக்தியாகவும் அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் இதனை ஆராதிப்பவர்களும் தரிசிப்பவர்களும் ஞானத்தை அடைவார்கள் என சொல்லப்படுகின்றது.

கோயிலில் காணப்படும் தூண் வகைகளை வைத்தே இது எந்த பாணியில் கட்டப்பட்ட கோயில் என்று கூறலாம். கல்தூண்கள் கால், பாதம், கலசம், தாடி, குடம், பத்மம், பலகை, போதிகை என எட்டு பகுதிகளை கொண்டவை. தூணை உத்திரத்துடன் இணைக்கும் பகுதியில் போதிகை என்ற உறுப்பு அமைக்கப்படும். நகரத்தார்களின் கட்டிடபாணியில் போதிகையில் கீழ் ஒரு சிங்கத்தின் சிற்பம் கூடுதலாகக் காட்டப்படும். சித்திரக்கால், அணியொட்டிகால், கர்ணக்கால் என்று மூன்று வகையான தூண்களை நகரத்தார் புனரமைத்த கோயில்களில் காணலாம். மேலும் போதிகையில் உள்ள பூமுனை ஒரே கல்லில் செதுக்காமல் தனியாக செய்து காடி கொடுத்து கையால் திருகி பொருத்துமாறு அமைந்துள்ளமை நகரத்தார்களின் கலைக்கு ஒர் எடுத்துக்காட்டு. இவ்வாறே இவர்கள் புனர்நிர்மாண செய்த கோயில்களில் இவற்றுள் ஏதேனும் ஒரு அமைப்பை நம்மால் காணமுடியும்.

கோயில்களில் நகரத்தார்கள் செய்த சுதை வேலைப்பாடுகள்

நகரத்தார் வீடுகளைப் போல கோயில் திருப்பணியின் போது இங்கும் அமைக்கப்பட்ட சுதை வேலைப்பாடுகளையும் கால வாரியாக நம்மால் பிரித்து காணமுடியும். கோவில் சுதை தொகுப்பில் நகரத்தார்களின் தனித்துவம் என்று குறிப்பிட வேண்டுமென்றால் ஆலய விமானங்கள், கோபுரம் போன்றவற்றில் காணப்படும் பாரஹாரர் (சுமைதாங்கிகள்) உருவங்களை சொல்லலாம். தலைப்பாகைகள், முண்டாசுகட்டு, சட்டை, பதக்கங்கள் கொண்டும் ஐரோப்பிய காவலர்கள் தோற்றத்திலும் குறவன் குறத்தி வேடுவர்கள் போன்ற உருவிலும் சுமைதாங்கிகள் காட்டப்படும் வழக்கம் இவர்கள் ஏற்படுத்தியது. அத்தோடு அவர்களுக்கு அருகில் பறவைகளை காட்டும் வழக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் கோபுரத்தின் கர்ணக்கூடு பகுதிகளில் கந்தர்வர்கள், குழந்தைகள், அரசன், அரசி முகங்கள் காட்டுதல், ஆலயத்தின் மதில்சுவற்றில் நாக்கு பகுதியின் மையத்தில் ரவிவர்மா பாணியில் வள்ளி தெய்வானையுடனான சண்முகர், சயனகோலத்தில் திருமால், வாசுதேவர், ஆலமர்செல்வன், இராமர் பட்டாபிஷேகம் போன்ற காட்சிகளையும் சுதைசிற்பங்களாக காணமுடியுகின்றது.

இரட்டை குதிரை வீரன், பிரிட்டிஷ் சிப்பாய்கள், சேடிப்பெண்கள், பிரிட்டிஷ் உடையுடுத்திய மக்கள், பாரதமாதா, சுதந்திர போராட்ட தியாகிகள், போன்ற உருவங்களையும் நகரத்தார் செய்வித்த ராஜகோபுரங்களில் நம்மால் காணமுடியும். அத்தோடு குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் இறைவனும் இறைவியும் ரிஷபத்தில் இருப்பவர்களாக பிற கோவில்களில் காட்டப்படும். செட்டிநாட்டில் மட்டும் சுதைகளில் அம்மாள் ரிஷபம் தனிரிஷபமாக காட்டும் வழக்கம் இருக்கின்றது. 

ரவிவர்மா வரைந்த இறையுருவங்களை முப்பரிமாணத்தில் மிக நேர்த்தியாக காண வேண்டுமாயின் அவற்றை செட்டிநாட்டு பகுதியில் உள்ள வீடுகளிலும் கோவில் கோபுரங்களிலும் காணமுடியும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அரியக்குடி பெருமாள் கோவில் ராஜகோபுரம், ஆத்தங்குடி, பட்டமங்கலம், குருவிக்கொண்டான்பட்டி சிவன் கோயில்களின் ராஜகோபுரங்கள் இவ்வகை சிலைகள் நிறைந்தவை. மிதிலைப்பட்டி சிவன்கோவில் ராஜகோபுரத்தில் மிக நேர்த்தியாக ரவிவர்மா ஓவியபாணி சுதைகள் நிறைந்து காணப்படுகிறன. செட்டிநாடு தவிர்த்த பிற ஊர்களில் நகரத்தார்கள் திருப்பணி செய்த கோவில்களிலும் செட்டிநாட்டு கலைப்பாணி சுதைகளை நம்மால் எளிதாக இனம்காண முடிகிறது. திருவையாறு ஐய்யாரப்பர் கோவில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் திருக்கோயில், திருவிற்குடி வீரட்டானேசுவரர் திருக்கோயில் போன்றவை இதற்கான சான்றுகள். 

செட்டிநாட்டில் நகரக்கோவிலின் முகப்பு பகுதிகளில் இரட்டை யானையும் பாகனும் காட்டுவர், அதோடு அம்மன் சன்னதி நுழைவாயிலில் லலிதா தர்பார் காட்சியும் இறைவனின் சன்னதி வாயிலில் மீனாட்சி திருமணம் அல்லது இடபாரூடர் சிலைகளையும் அமைக்கும் வழக்கம் உள்ளது. கோவிலின் நான்கு மூலைகளிலும் உள்ள பூதகணங்கள் மற்றும் காளையின் உருவங்களை மிகவும் உயிரோட்டமாகவே செட்டிநாட்டின் கம்மாளர்கள் வடிவமைத்துள்ளார். 

செட்டிநாட்டு கருப்பர் கோவில்களிலும் சுதையால் செய்யப்பட்ட பெரிய அளவிலான குதிரைகள், யானைகள், பூதகணங்கள் மிகவும் உயிரோட்டமாக காட்சியளிக்கும். கத்தப்பட்டு தொட்டியத்து கருப்பர் ஆலயத்தில் உள்ள உயரமான குதிரைகள், காரைக்குடி பொய்சொல்லா மெய்யர் ஆலய புரவிகளும் பூதகணங்களும், இராங்கியம் கருப்பர் கோவிலின் முகப்பில் உள்ள ஆக்ரோஷமான அனுமன் மற்றும் குதிரையை தாங்கி நிற்கும் பூதகணங்களும் மிகச்சிறந்த சான்றுகள். இப்படி 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நகரத்தார்களின் திருப்பணியில் செய்யப்பட்ட சுதை வேலைப்பாடுகள் இன்றுவரை செட்டிநாட்டு கம்மாளர்களின் திறமையை கூறுபவையாகவே இருக்கின்றது.

இப்போது செய்யப்படும் சுதை வேலைப்பாடுகளிலும் செட்டிநாட்டு பாணி நீடிக்கிறது. சுதைகளின் உட்புறத் கூடுகளை கம்பிகளை கொடுத்தே இன்றளவும் சுதைச்சிற்பங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் மூலப் பொருளாக காரைக்கு பதிலாக சிமெண்ட்டை தற்காலத்தில் பயன்படுத்துகின்றனர். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுதைகளில் ஏற்பட்ட ரவிவர்மாவின் தாக்கமும் இன்றளவும் சுதைகளில் மேற்கத்திய பாணியின் சாயலோடு கோலோச்சிக் கொண்டிருகின்றது.

இராம. நா. இராமநாதன்

பட்டினத்தார் அணிகள்-இராம. நா. இராமநாதன்

front cover photo courtesy: சிவமுருகன்


இராம.நா.இராமநாதன் செட்டிநாட்டில் உள்ள தெக்கூர் இவரது பூர்வீகம். அணிகலன்களை குறித்து தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிவருகிறார். செட்டிநாட்டு கலாசாரம் மற்றும் குடந்தை நாகநாதசுவாமி ஆலய சிற்பங்களை கம்பன் பாடல்களோடு ஒப்பிட்டு இவர் எழுதிவரும் பதிவுகள் முக்கியமானவை. தற்போது மதுரையில் வசிக்கிறார்.