ஜம்மு ஓவியங்கள்
இமயத்தின் ராஜபுத்திர நாடுகளில் ஜம்முவும் ஒன்று, அவற்றில் பெரியதும் ஜம்மு தான். இந்தப் பகுதியை மையமாகக் கொண்ட பஹாரி ஓவியப்பள்ளியின் ஒரு பிரிவு ஜம்மு பள்ளி என்றே அழைக்கப்படுகிறது. இதில் முகலாய ஆட்சிக்கு வெளியேயுள்ள பசோலி, கிஸ்த்வார், சம்பா மற்றும் பிற ராஜபுத்திர நாடுகளின் ஓவியங்களும் அடக்கம். பஹாரி ராஜபுத்திர ஓவியங்களில் தனக்கென தனி பாணியைக் கொண்டது ஜம்மு. இது பதினாறாம் நூற்றாண்டு ராஜஸ்தானி ஓவியங்களிலுள்ள சுடர் வண்ணங்களையும் நேர்த்தியான கோட்டுச்சித்தரிப்புகளையும் பெருமளவில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பேணிவந்துள்ளது.
பாஸ்டன் அருங்காட்சியகம் மிக முக்கியமான ஜம்மு ஓவியங்களை வாங்கியுள்ளது. அவை வழக்கத்திற்கு மாறாக பெரிய காகிதங்களில் வரையப்பட்ட ராமாயண போர்ச்சித்தரிப்புகள். (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இவை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியர் மனக்கு (Manaku, 1700–1760) வரைந்ததாகக் கருதப்படுகிறது. இவர் வரைந்த பல ஓவியங்கள், கோட்டுச்சித்திரங்கள் பாஸ்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன). படம் 1 - வானுயர எழுந்து நிற்கும் ராவணனின் அரண்மனையை முற்றுகையிட்டுள்ளன ராமனின் படைகள். அரண்மனைக்குக் கீழே அழகிய தோட்டமும் உள்ளது. ஓவியத்தின் மேல் பகுதியில் கார்மேகங்களும், கீழே கடலும், பல கடல் மிருகங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. தரையில் வானரங்களும் கருநிறக் கரடிகளும் நிறைந்துள்ளன. கரடிகளையும் குரங்குகளையும் வேறுபடுத்த பயன்படுத்தியிருக்கும் அடர்கருப்பும், சாம்பல் நிறமும் நம் பார்வையை ஈர்க்கின்றன. நடுவில் ராமன், லட்சுமணன், அனுமன் என அனைவரும் அமர்ந்திருக்க விபீஷணன் தான் சிறைபிடித்துவந்த இரு அசுர ஒற்றர்களை சுட்டிக்காட்டி ராமனிடம் பேசிக்கொண்டிருக்கிறான். அடுத்த ஓவியம் படம் 2-ல் பிடிபட்ட இரு ஒற்றர்களையும் ராமன் திருப்பி அனுப்புகிறார். அவர்கள் ராவணனின் அரண்மனைக்குப் பறந்து செல்கின்றனர்.
![]() |
படம் 1 (collections.mfa.org/objects/149150) |
![]() |
படம் 2 (collections.mfa.org/objects/149151) |
சம்ஸ்க்ருத கவி பவபூதி எழுதிய உத்ரராமசரிதை நாடகத்தின் முதல் பகுதி முழுக்கவே அயோத்தி அரண்மனை தோட்டச்சுவரில் வரையப்பட்டிருக்கும் ராமாயண ஓவியங்களின் விவரணைகளால் நிரம்பியிருக்கும். அந்நூல் குறிப்பிடும் ஓவியக்கலையின் நேரடி வழித்தோன்றலாகவே பாஸ்டன் அருங்காட்சியகத்திலுள்ள ராமாயண சித்தரிப்புகள் உள்ளன. இவற்றைப் பார்வையிட்ட ஆய்வாளர் எட்கர்ட் போல்செட் (Edgard Blochet) ”இவை மிகத்திறமை வாய்ந்த படைப்புகள், நிச்சயமாக இவை சுவரோவியங்களின் மறு உருவாக்கமாகத்தான் இருக்க வேண்டும். இதுவே அங்கோர்வாட் சுவர்களில் வேறுவித கலைப்பாணியில் சிற்பங்களாக உள்ளன” என்கிறார்.
இந்த தொகுப்பிலுள்ள மற்றொரு ஓவியத்தில் பத்துத்தலை ராவணன் தன் அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருக்கிறான், சீதை அசுரப்பெண்கள் சூழ அசோகவனத்தில் அமர்ந்துள்ளால் - படம் 3.
![]() |
படம் 3 (collections.mfa.org/objects/149153) |
படம் 4-ல் ராவணனின் படைகள் போருக்கு செல்லத் தயாராக இருப்பதைக் காட்டுகின்றது. போர்க்காட்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன, அவை வண்ணமிடப்படாமல் கோட்டுச்சித்தரிப்புகளாக உள்ளன - படம் 5, 6.
![]() |
படம் 4 (collections.mfa.org/objects/149154) |
![]() |
படம் 5 (collections.mfa.org/objects/149158) |
![]() |
படம் 6 (collections.mfa.org/objects/149156) |
(இந்த தொகுப்பில் உள்ள ஓவியங்கள் அனைத்தையும் இதில் காணலாம் - collections.mfa.org/advancedsearch/Objects/peopleSearch%3AManaku)
பல ஓவியத் தாள்களுக்குப் பின்புறம் வால்மீகி ராமாயண வரிகள் நாகரி எழுத்துருக்களில் எழுதப்பட்டுள்ளன. சிலவற்றில் ஓவியங்களின் மீதே நாட்டுப்புற தக்ரி எழுத்துருக்களில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. இந்தியாவில் காகிதத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் மிகப்பெரியவை இந்த ராமாயணச்சித்தரிப்புகளே.
ஜம்முவின் ராக ராகினி ஓவியங்களை நாம் முந்தைய பகுதியிலேயே பார்த்துவிட்டோம்.
சில சிறிய ஜம்மு ஓவியங்களும் அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை கடவுள்கள், விலங்குகள், தாவரங்களை சித்தரிக்கும் ஓவியங்கள். உதாரணமாக படம் 7 - இரு மான்கள் தலையில் முட்டி சண்டையிடும் காட்சி. தனித்தன்மை வாய்ந்த அழகிய ஓவியம். இதன் வண்ணங்கள் துல்லியமானவை அல்ல என்றாலும் மிக உயிரோட்டமாக உள்ளன. இது 1295-ஐச் சேர்ந்த அரபு மனாஃபி அல் ஹயவான் (manafi al hayawan) சித்தரிப்புகள் ஒன்றின் மறுஉருவாக்கம். அந்தப் பண்டைய அரபு சித்தரிப்புகளில் இந்திய கலையின் சாயல்களைக் காணமுடியும்.
![]() |
படம் 7 (collections.mfa.org/objects/149168) |
மற்றோரு ஓவியம் படம் 8 - நாராயணின் பாதங்களில் உள்ள புழுதியை பக்தன் துடைக்கிறான். கருநீல நாராயணன் மஞ்சள் ஆடை அணிந்துள்ளார். நான்கு கரங்களும், வழக்கமாக வைத்துள்ள சங்கு, சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றை ஏந்தியுள்ளன. வானில் மேகங்கள் நேர்கோடாக பரவியுள்ளன. இது மேலே பார்த்த ராமாயண ஓவியங்களின் பாணியில் உள்ளது.
![]() |
படம் 8 (collections.mfa.org/objects/149174) |
ஜம்மு பள்ளியில் கிருஷ்ணலீலை ஓவியங்களும் சில வரையப்பட்டுள்ளன. கிருஷ்ணலீலை. பெரும்பாலும் இது கங்ரா பகுதியிலேயே அதிகம் வரையப்பட்டுள்ளது. படம் 9 - ராதை கிருஷ்ணனுக்கு வெற்றிலை கொடுக்கிறாள், விரிந்த தாமரை மீது நின்றுள்ள கண்ணன் அவளை நோக்கி குனிந்து அதை வாங்குகிறான். கண்ணனின் கழுத்திலிருக்கும் காற்றில் பறக்கும் கச்சை இந்த ஓவியத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. மிகமுக்கியமான அம்சம் என்னவென்றால் இருவரும் ஒருவரையொருவர் நோக்கியுள்ளர், இருவரின் கண்களும் நேருக்குநேர் சந்திக்கின்றன. கண்கள் சந்தித்துக்கொள்வது ராஜபுத்திர ஓவியங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. இந்திய நூல்கள், கண்களின் முதல் தொடுகையில் மலரும் காதலை சர்ச்சஸம் (நான்கு கண்களின் சந்திப்பு) என்கிறது.
![]() |
படம் 9 (collections.mfa.org/objects/149234) |
அலங்கார, காதல் சித்தரிப்புகளும் ஜம்மு ஓவியங்களில் உள்ளன. இத்தகைய ஓவியங்கள் கூட மிக முக்கியமான மரபான கருக்களை கொண்டிருக்கும். படம் 10-ல் ஒரு பெண் குளித்தபின் தன் கூந்தலை முறுக்கிப் பிழிகிறாள். இதே கரு பெளத்த ஓவியங்களிலும் உள்ளது. அதில் பூமாதேவி புத்தரின் அழைப்பை ஏற்று வந்து அவரின் தவத்திற்குக் காவலாக ஆகிறாள், தன் கூந்தலைப் பிழிந்து வெள்ளத்தை உருவாக்கி எதிரிலிருக்கும் மாரனையும் அவன் படைகளையும் அழிக்கிறாள். ராஜபுத்திர ஓவியத்தில் இந்தக் கரு வழக்கமாக ராதையையே சித்தரிக்கும். அவள் குளித்து கூந்தலைப் பிழிந்து முத்து வெள்ளத்தை ஓடவிடுகிறாள், இதைப் பார்க்கும் கண்ணன் மனது முழுதும் அவளின் அழகால் நிரம்புகிறது.
![]() |
படம் 10 (collections.mfa.org/objects/149753) |
எட்டு நாயக நாயகி சித்தரிப்புகளும் ஜம்மு பள்ளியில் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது படம் 11-ன் அபிசாரிகா (Abhisarika) நாயகி சித்தரிப்பு. இது பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தை சேர்ந்தது. வலுவான வண்ணங்களைக் கொண்டுள்ளது. மழைக்கால காரிருளில் பல ஆபத்துகளைத் தாண்டி நாயகி, நாயகன் இருக்கும் இடத்திற்கு வருகிறாள். அவளைப் பார்த்த நாயகன் பேராச்சரியத்தில் கைகளைத் தூக்கி கொண்டாடுகிறான்.
![]() |
படம் 11 (collections.mfa.org/objects/149228) |
ஜம்மு பள்ளியில் உருவச்சித்தரிப்புகள் ஒருசில முகலாய தாக்கம் கொண்டவை, எனினும் ஜம்மு பள்ளியின் வீரியமும் அவற்றில் உள்ளது. அதில் மிகவும் முக்கியமானது படம் 12. இது ஜம்மு மாகாணத்தின் சிறியவொரு பகுதியான பன்ந்ரல்தாவின் (Bandralta) அரசர் ராஜா ஹடஃப் பன்ந்ரல் என ஓவியத்திலுள்ள எழுத்துக்கள் சொல்கின்றன.
![]() |
படம் 12 (collections.mfa.org/objects/149165) |
கங்ரா சமவெளி
கங்ரா பள்ளி ஓவியங்கள் வழியாகவே பெரும்பாலும் ராஜபுத்திர ஓவியங்களை நாம் அறிந்துள்ளோம். கங்ரா சமவெளி பஞ்சாபின் இமயப் பகுதியின் ஒரு அரசு. கங்ரா பள்ளி ஓவியங்கள் கங்ரா சமவெளி, மற்றும் அதன் அருகிலுள்ள மண்டி, சுக்ஹட், பட்யால பகுதிகளை உள்ளடக்கியது. அதற்கு வெகு தொலைவிலுள்ள கார்வால் பகுதி ஓவியங்களும் இதில் அடங்கும். கங்ரா ஓவியங்கள் வீரியமிக்க வண்ணங்களும், திறமையான சித்திரங்களையும் கொண்ட துவக்ககால ராஜஸ்தானி, ஜம்மு பள்ளி ஓவியங்களில் இருந்து வேறுபடுகின்றன. கங்ரா ஓவியங்கள் மென்மையானவை. மேலும் செம்மை நோக்கிச் சென்றவை. இந்த செம்மை காரணமாக இவை தங்களுக்கே உரிய சிறப்புகளையும், பிழைகளையும் கொண்டவை கங்ரா படைப்புகளில் உணர்ச்சியை முழுமையாக வெளிக்காட்டாத இனிமையும், அழகும் நிரம்பியுள்ளன. நீண்ட நளினமிக்க உருவக்கோடுகள் பண்டை சுவரோவிய மரபை நினைவூட்டுகின்றன. பிற்கால படைப்புகளில் துல்லியமான காட்சிச் சித்தரிப்புகளுக்கான தேடலைப் பார்க்கமுடியும்.
கங்ரா ஓவியங்களின் காலத்தை பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்பு கொண்டு செல்லமுடியாது. ஏனென்றால் அப்போது ராஜபுத்திர அரசர்கள் ஷாஜகானின் கீழ் முகலாய சாம்ராஜியத்தின் சிற்றரசர்களாக இருந்தனர். எனவே கங்ரா ஓவியங்களில் முகலாய தாக்கத்தைக் காணமுடியும், குறிப்பாக கட்டிடங்களில். இருந்தாலும் இவை தனித்தன்மையையும் மரபான பண்பையும் இழக்கவில்லை.
துவக்ககால கங்ரா ஓவியங்கள் (குறிப்பாக 1700-ஐ சுற்றிய வருடங்கள்) மென்மையான துகள் வண்ணத்தன்மை உடையவை, ஆழமான உணர்ச்சி வெளிப்பாடு கொண்டவை. அதிகமாக கிடைத்துள்ள பிற்கால படைப்புகள் (பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்காலம்) மிளிர் வண்ணம் கொண்டவை, அளவான உணர்ச்சியையும் அழகையும் வெளிப்படுத்துபவை. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும்பாலான ஒவியங்கள் பாதி முடிக்காத நிலையிலேயே உள்ளன. நமக்கு கிடைத்துள்ள கங்ராவின் இறுதிக்கால ஓவியங்கள் கார்வால் பகுதியைச் சேர்ந்த ஓவியர் மோலா ராம் (1760-1833) வரைந்தவை. இதற்குப் பிறகும் சில குறிப்பிடத்தக்க ஓவியங்கள் கங்ராவிற்கு வெளியேயுள்ள பகுதிகளில் வரையப்பட்டுள்ளன. இன்று முழுமையாகவே கங்ரா பள்ளி அழிந்துவிட்டது. எனினும் சில ஓவியர்கள் இந்தக் கலையில் செயல்பட்டு வருகின்றனர், குறிப்பாக சுவர் அலங்காரங்களில்.
கங்ரா ஓவியங்களின் கருக்கள் பிற ராஜபுத்திர கலைகளில் இருந்து வேறுபட்டது. இவற்றில் ராக ராகினி ஓவியங்கள் இல்லை. பெரும்பாலும் வைஷ்ணவ ஓவியங்கள், நாயகி பாவங்கள், காதல், அன்றாட வாழ்க்கை சார்ந்த ஓவியங்களே உள்ளன. தாந்த்ரிக சித்திரங்கள் உள்ளன. சில பகுதிகளில் சைவ தொன்ம சித்தரிப்புகளும், இதிகாச சித்தரிப்புகளும் கிடைத்துள்ளன. உருவசித்தரிப்புகள் சிலதும் கிடைத்துள்ளன.
வைஷ்ணவ ஓவியங்கள்
நாராயணனையும் அவரின் அவதாரங்களையும் வழிபடும் வைஷ்ணவம் பதினொன்றாம் நூற்றாண்டு முதல் இந்து மதத்திலும், இலக்கியங்களிலும், ஓவியங்களிலும் செல்வாக்கு செலுத்திவருகிறது. இதற்கு முன்பிருந்தே தொல் இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்ட ராம வழிபாட்டு ஓவியங்கள் இந்திய ஓவியர்களால் நெடுங்காலமாக வரையப்பட்டு வந்துள்ளன. அந்த தொல் ஓவியங்களின் கருக்களை ஜம்முவின் பெரும்பாலான ராமாயண ஓவியங்களில் காணலாம். அந்தக் கருக்கள் துளசிதாசரின் கவிதைகளால் புதிய உயிர்ப்படைந்து கங்ரா ஓவியங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணனின் ஓவியங்களில் காவிய நாயகதன்மையை விட குழந்தைப்பருவ சாகசங்களே அதிகம் வரையப்பட்டுள்ளன - பிருந்தாவன சாகசங்கள், ராசலீலை போன்ற அழகிய நயமிக்க சித்திரங்கள்.
![]() |
படம் 13 (collections.mfa.org/objects/149059c) |
![]() |
படம் 14 (collections.mfa.org/objects/149060) |
கிருஷ்ணன் பல ஓவியங்களில் நண்பர்களும், கோபியரும் சூழவே சித்தரிக்கப்பட்டுள்ளான். தன் குழலிசையால் அனைவரையும் மயக்கி ஏமாற்றுபவன். ஒரு ஓவியத்திலுள்ள கவிதை வரிகள் “அது குழலின் இசை மட்டுமல்ல, நச்சு நாகம், கேட்பவரின் மனதை தன் நச்சால் நிரப்பிவிடும்” என்கிறது. அவன் ஆன்மாவை மயக்குபவன், குழலிசையால் மயக்கி விடுதலை நோக்கி இட்டுச்செல்பவன். அவன் இசைகேட்டு கோபியர்கள் இரவில் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி யமுனையின் கரையில் நிலவொளியில் அவனுடன் நடனமாடுவதை ராசலீலா ஓவியங்கள் சித்தரிக்கின்றன. ஒரு துறவி தன் வீட்டைத் துறந்து செல்வது போல கோபியர்கள் தங்கள் சமூக, உலக மதிப்புகளைத் துறந்து வந்து அவனுடன் கலக்கின்றனர், படம் 14
![]() |
படம் 15 (collections.mfa.org/objects/149061) |
மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட அச்சமூகத்தில் தன் ராதையைக் காண பல வழிகளை கைகொள்கிறான். துவக்ககால கங்ரா படைப்புகளில் மிக முக்கியமான ஒரு படைப்பில் அவன் அதிகாலையில் கோபியாக வேடமணிந்து பால் கறப்பதுபோல நடித்து ராதைக்காக காத்திருக்கிறான், (படம் 15). ராதையை அவன் சந்திப்பதே பல நூறு ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன, (படம் 16). ஒரு ஓவியத்தில் கிருஷ்ணன் ராதையிடம் திரும்பி வருவது சித்தரிக்கப்பட்டுள்ளது, (படம் 17)
![]() |
படம் 16 (collections.mfa.org/objects/149240) |
![]() |
படம் 17 (collections.mfa.org/objects/148838) |
கிருஷ்ணனும் ராதையும் வரலாற்றுப் பாத்திரங்கள் அல்ல. பிருந்தாவனமும் வரலாற்று இடமல்ல. இந்தியர்களுக்கு அவனொரு மகத்தான ரகசியம். கோபியர்கள் மனிதர்களின் ஆன்மாவின் குறியீடு. அதை உலகப் பிணைப்பிலிருந்து விடுவித்து தனதாக்கிக்கொள்பவன் மாயனான கிருஷ்ணன். காதலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு இனிமையும், காதலர்கள் ஆடும் ஒவ்வொரு விளையாட்டும் ஆன்மீகத்தின் அங்கங்களே. வைஷ்ணவ கவிகள் சொல்வது போல தலைவனும் தலைவியும் சேர்ந்து பிரபஞ்ச ரகசியம் ஒன்றைக் கட்டவிழ்க்கின்றனர். இது நவீன மனதிற்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட குறியீடு போல தோன்றலாம். ஆனால் அவ்வாறல்ல. இதை விளக்கத்தால் அறிந்துகொள்ள முடியாது. எனினும் இதை ஒவ்வொருவரும் தங்கள் உள்ளுணர்வால் அறிந்துகொள்ள முடியும். கிருஷ்ண லீலையை சித்தரிக்கும் ஓவியங்களையும் கவிதைகளையும் நவீன அழகியலில் சொல்லவேண்டும் என்றால் படிமங்கள் (imagisme) எனலாம். உருவகம் (allegory) என சொல்வதை விட படிமம் என்பதே சரியாகப் பொருந்தும். படிமத்தில் குறியீடும் அது சுட்டுவதும் வேறுவேறல்ல, ஒன்றே. உருவகம் வேறொன்றைக் குறியீடாக சுட்டுவது. வெளியே இருப்பவர்களுக்கு உருவகமாகத் தெரியும் ஒன்று அந்த மண்ணில் இருப்பவர்களுக்குப் படிமமாக இருக்கும். அதாவது, ஒரு பண்பாட்டின் கலை அதில் இருப்பவனுக்கு செவ்வியல், ஆனால் வேறொரு பண்பாட்டில் இருந்து வருபவனுக்கு கற்பனாவாதமாகத் தெரியும், அவன் வெளியாளாகவே இருக்கும் வரை அவனுக்கு அவ்வாறே தெரியும்.
வைஷ்ணவ இயக்கமும், வைஷ்ணவ கலையும் அடிப்படையில் மனிதம் சார்ந்தவை, உலகியலுக்கு மிக நெருக்கமானவை. பொய்யானதாகவோ, ஒரு மதத்தின் மூல நூலை அடிப்படையாகக் கொண்டோ இருக்கவில்லை. இதற்கு இணையாக ஐரோப்பாவில் விதிகளுக்கு கட்டுப்பட்ட கிருஸ்துவ கலை அதன் உச்சத்தை அடைந்த காலத்தில் இருந்து சுதந்திரமாக வெளிப்பட்ட ப்ளேக், கல்வெர்ட் (calvert), மற்றும் போஸ்ட்-இம்ப்ரெஷனிஸ்டின் மகத்தான கலைஞர்கள் வரையிலான வளர்ச்சியை சொல்லலாம். இதில் ப்ளேக்கின் இடம் தனித்துவமானது. நவீன ஐரோப்பிய மதத்தின் தடங்கள் செஷான், வான்கா போன்றோரின் படைப்புகளில் காணப்பட்டாலும் அவை ஜென் பெளத்தத்திலும் வைஷ்ணவத்திலும் உள்ள கலைகளைப் போல மக்களின் பொதுப்பிரக்ஞைக்குள் ஊடுருவவில்லை.
சைவ ஓவியங்கள்
இயமத்தில் தன் மனைவி பார்வதி, மகன்கள் கார்த்திகேயன், கணேசனுடன் உலவிக்கொண்டிருக்கும் யோகியான மஹாதேவரையே கங்ராவின் சைவ ஓவியங்கள் பெரும்பாலும் சித்தரித்துள்ளன. ஓவியர் மோலா ராம் வரைந்த ஒரு ஓவியத்தில் (படம் 18) சிவனும் பார்வதியும் கோடையில் தாமரைத் தடாகத்தருகே இரவு தங்குகின்றனர். தன் மடியில் துயில் கொள்ளும் பார்வதியை சிவன் நிலவொளியில் வாஞ்சையுடன் ரசிக்கிறார். இந்த ஓவியம் முடிவில்லா வசீகரத்தைத் தன்னுள் அடக்கியுள்ளது. ஆனால் அந்த வசீகரம் வேண்டுமென்றே அறிவார்த்தமாக புகுத்தப்பட்டுள்ளது. எனினும் இது மதம் கடந்த உணர்வை வெளிப்படுத்துகிறது.
![]() |
படம் 18 (collections.mfa.org/objects/149080) |
மற்றொரு ஓவியத்தில் (படம் 19) சிவனும் பார்வதியும் கைலாயத்தில் பொன்னம்பலத்தில் வீற்றிருக்க கீழே யோகிகளும் வைராகிகளும் அவர்களை வணங்கி நிற்கின்றனர்.
![]() |
படம் 19 (collections.mfa.org/objects/149026) |
இதிலுள்ள சமஸ்கிருந்த வரிகள் இவ்வாறு வர்ணிக்கின்றன:
”நூறு சூரியன்கள் போல பிரகாசிக்கும் கயிலையில், ரத்தின அரியனையில், இறைவன் தியானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு நாளில், மலையரசன் மகள் பார்வதி தேவி, பக்தியுடன், இறைவனின் இடத்தொடை மீதமர்ந்து, எல்லா உயிர்களின் நன்மைக்காக, பேரின்ப ஊற்றான இதனைச் சொல்கிறாள் ‘சிவனே போற்றி’.“
பல ராஜபுத்திர ஓவியங்களில் இமயத்திலிருக்கும் சிவனின் இருப்பிடம் காளிதாசனின் சாகுந்தலத்திலுள்ள வர்ணனைகளை ஒட்டியே சித்தரிக்கப்பட்டிருக்கும்.
சிவன் மகாயோகி என்ற கருத்து பெளத்தத்தில் இருந்தே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருபக்கம் அவன் யோகநிலையில் இருப்பவன். ஆன்மீக உச்சநிலையின் குறியீடானவன். சுகமும் துக்கமும் ஒன்றேயான இருப்பு. உள்முகம் நோக்கியவன். புறவுலகம் நோக்காமல் முழுமையை, ஒருமையை மட்டுமே தன் சிந்தையில் நிறுத்தியவன். இன்னொருபக்கம், செயலில் அவன் ஆடலின் அரசன். மொத்தப் பிரபஞ்சமும் அவனுடைய சக்தியின் வெளிப்பாடு. அலெக்ஸாண்டர் ஸ்கிராபின் (Alexander Scriabin) Poem of Ecstasy-யில் வர்ணிப்பது முழுக்க முழுக்க அவனையே.
சக்தி - உமை, தேவி, பார்வதி, துர்கை, காளி. ஒரேசமயம் மாயையாகவும், சிவனின் உண்மைத் தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்றதுபோல் காட்டுபவளாகவும் இருப்பவள். அவள் இயக்கமே ஆனவள், அவளின் இயக்கம் முழுமுதலானது, பிறப்பு இறப்பு என்ற பெரும் மாயையை உருவாக்குபவள். கருணையும் கோரமும் உருவானவள், பிரக்ருதி அவளின் பெயர்களில் ஒன்று, கொற்றவையும் அவளே. சாக்தத்தில் இவள் முழுமுதலின் பெண்வடிவாக வணங்கப்படுபவள்.
நாயகி பாவங்கள்
கங்ரா ஓவியங்களில் மற்றோரு வகை அழகிய சித்தரிப்புகள் நாயகிபாவ ஓவியங்கள். இவை இந்திய நூல்களிலுள்ள நாயகி பாவங்களின் ஓவிய சித்தரிப்பு. இந்த வகை ஓவியங்களில் காட்சித்தன்மையும் கற்பனாவாதமுமே மேலோங்கியிருக்கும். உதாரணமாக அபிஷாரிகா நாயகி ஓவியம். மனதில் துளி அச்சமும் இல்லாமல் காரிருளும் ஆபத்துகளும் நிரம்பிய காட்டில் இரவில் மின்னலின் ஒளியை மட்டுமே கொண்டு தன் காதலனைக் காணச் செல்கிறாள் தலைவி. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஹிந்தி கவி கேசவதாஸின் வரிகள், பல ராஜபுத்திர ஓவியங்களில் எழுதப்பட்டுள்ளன.
![]() |
படம் 20 (collections.mfa.org/objects/149081) |
பாம்புகள் அவள் காலடியில் சிக்கின
எங்கு காணினும் பேய்களே தென்பட்டன
கொட்டும் பெருமழையை
சீவிடுகளில் ஓசையை
புயலின் உறுமலை கண்டுகொள்ளவில்லை அவள்
தன் நகைகள் விழுவதை கவனிக்கவில்லை
ஆடை கிழிந்ததை அறியவில்லை
முட்கள் மார்பை துளைத்ததும் தெரியவில்லை
எதுவும் அவளை தாமதப்படுத்தாது
’எப்போது நீ இந்த யோகத்தை பயின்றாய்?’
’இந்த அபிஷாரிகா எவ்வளவு மகத்தானது’ என்றன
காதல்
ஒப்புநோக்க மகாபாரத சித்தரிப்புகள் அரிதாகவே உள்ளன. அதிர்ஷ்டவசமாக பாஸ்டன் அருங்காட்சியகத்தில் மிகமுக்கியமான நளதமயந்தி சுயம்வர ஓவியத்தொகுப்பு உள்ளது. நளனின் வருகை, போட்டி, வென்ற நளனை வாழ்த்தும் அரசர்கள், திருமணக்காட்சிகள் உள்ளன. இவற்றில் மிகச்சிறப்பானது நளதமயந்தியின் காதல் சித்திரங்கள்.
![]() |
படம் 21 - நளனும் தமயந்தியும் நிலவெழுகையைக் காண காத்திருத்தல் (collections.mfa.org/objects/148866) |
![]() |
படம் 22 - முழுநிலவை தமயந்திக்குக் காட்டும் நளன் (collections.mfa.org/objects/148867) |
![]() |
படம் 23 - காதல் காட்சிகள் (collections.mfa.org/objects/148851) |
![]() |
படம் 24 - தங்கள் தனிமையை இடையூறு செய்யும் தமயந்தியின் தோழிகளை தண்ணீர் தெளித்துவிரட்டும் நளன் (collections.mfa.org/objects/148854) |
(இந்த தொகுப்பிலுள்ள பிற ஓவியங்களை இதில் காணலாம்: collections.mfa.org/search/objects/*/Nala%20)
தனித்துவமான இரு ஓவியங்கள்
கலைப்பாணியையும் இடத்தையும் அறியமுடியாத இரு ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன. இரண்டுமே புராணக் காட்சிகள். சித்தரிப்பும் வண்ணங்களும் வழக்கமான ராஜபுத்திர பாணிக்கு மாறாக உள்ளன. பழமையான பாணியில் வரையப்படுள்ளன, பாசி பச்சை, பழுப்பு நிறம், மங்கிய சிவப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்கள் உள்ளன. இரு ஓவியங்களும் பளபளப்புடன் காணப்படுகின்றன. அடர்பச்சை நிறமே அதற்குக் காரணமென நினைக்கிறேன். இரண்டும் எளிமையாக சற்று அருவத்தன்மையுடன் உள்ளன.
முதல் ஓவியம் சனகாதி முனிவர்கள். வைஷ்ணவ வழிபாட்டாளர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளர். இலையும் அக்ஷரமாலையும் வைத்துள்ளனர். வழக்கமான இடைக்கச்சை அணிந்து கால்களில் மரவடியுடன் நிற்கின்றனர். இவர்களுக்குப் பின்புறம் வலப்பக்கத்தில் நாரை நிற்கிறது.
![]() |
படம் 25 (collections.mfa.org/objects/148767) |
இரண்டாவது ஓவியத்தில் இருவர் ஒளிரும் நீலவண்ணக் கடலில் நிற்கின்றனர். சிறுசிறு மீன்கள் நீந்திச்செல்கின்றன. மணிமுடி அணிந்து கையில் வீணை வைத்திருப்பவர் நாரத ரிஷி. வலப்பக்கம் இருப்பது பயணி அல்லது யோகி போல தெரிகிறது. இதிலும் பின்புறம் கொக்கு நிற்கிறது. அதன் அருகிலுள்ள நான்கு வெண்ணிறப் புள்ளிகள் மலர் மழை பொழிவதைக் குறிப்பதாக இருக்கலாம். இடதுபுறம் புள்ளிகளால் ஆன இரு வளையங்கள் விண்ணிலிருந்து விழும் முத்து மாலைகளாக இருக்கலாம். ஓவியத்தின் மேலேயுள்ள வெண்ணிற வளைவுகள் மேகங்களையும், அவற்றில் கீழுள்ள புள்ளிகள் மழைத்துளிகளையும் குறிக்கின்றன. இது மிக சுவாரஸ்யமானது. இந்தக் குறியீடு எல்லா ராஜபுத்திர பாணிகளிலும் உள்ளன. பின்னோக்கிச் சென்றால் எட்டாம் நூற்றாண்டு ஓவியங்களிலும் இதைக் காணலாம்.
![]() |
படம் 26 (collections.mfa.org/objects/148768) |
மொழிபெயர்ப்பு - தாமரைக்கண்ணன் அவிநாசி
முந்தைய பகுதி: ராஜபுத்திர ஓவியங்கள் - 1, ராஜஸ்தான், ஆனந்த குமாரசாமி
Sources:
- Rajput Painting - A. K. C. Museum of Fine Arts Bulletin, Vol. 16, No. 96 (Aug., 1918), pp. 49-62 - jstor.org/stable/4169664
- Rajput Painting - A. K. C. Museum of Fine Arts Bulletin, Vol. 17, No. 102 (Aug., 1919), pp. 33-43 - jstor.org/stable/4169702
- Recent Acquisitions of the Department of Indian Art - Ananda Coomaraswamy Museum of Fine Arts Bulletin, Vol. 20, No. 122 (Dec., 1922), pp. 69-73 - jstor.org/stable/4169840
- Rājput Paintings - A. K. Coomaraswamy Bulletin of the Museum of Fine Arts, Vol. 24, No. 142 (Apr., 1926), pp. 23-26 - jstor.org/stable/4169988
- A Rajput Painting - Ananda Coomaraswamy Bulletin of the Fogg Art Museum, Vol. 1, No. 1 (Nov., 1931), pp. 14-16 - jstor.org/stable/4300884
- An Early Rajput Painting - Ananda Coomaraswamy Bulletin of the Museum of Fine Arts, Vol. 30, No. 179 (Jun., 1932), pp. 50-51 - jstor.org/stable/4170375