Sunday 25 June 2023

தெய்வ தசகம் - 3 நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி


மூன்றாவது பாடல்:

அன்னவஸ்த்ராதி முட்டாதெ

தந்நு ரக்ஷிச்சு ஞங்ஙளெ

தன்யராக்குன்ன நீயொன்னு

தன்னெ ஞங்ஙள்க்கு தம்புரான்


உணவும் உடையும் குறையாது

தந்து எமைக் காத்து

நிறைவடையச் செய்யும் நீயே

எமக்கென்றும் இறை


அன்னவஸ்த்ராதி முட்டாதெ: அன்றாட வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகளான உணவும் உடையும் ஒருபோதும் குறையாமல்


தந்நு ரக்ஷிச்சு ஞங்ஙளெ தன்யராக்குன்ன நீ: காலமறிந்து அளித்து எங்களை நிறைவடையச் செய்யும் அருள் தெய்வமே


ஒன்னுதன்னெ ஞங்ஙள்க்கு தம்புரான்: எல்லோர்க்கும் ஒருபோலே அடைக்கலமாயிருக்கும் நீ மட்டுமே எங்கள் இறை 


(உணவு,உடை முதலாயவை ஒருபோதும் குறைவுபடாமல் அளித்து எங்களை நிறைவடையச் செய்யும் தெய்வமே,  நீயன்றி எங்களுக்கு வேறு இறை இல்லை)


பொதுவாக வேதாந்தத்தில் முன்வைக்கப்படும் ஈஶ்வரனுக்கும் இந்த வேண்டுதலுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது.கிறிஸ்தவமும் இஸ்லாமும் தெய்வத்தை நம் வாழ்வுக்கான அன்றாட, நிரந்தர,அரிய தேவைகள் எல்லாவற்றோடும் நெருங்கிய தொடர்புடைய காப்பாளனாக,இறையாக கருதுகின்றன.அந்தத் தொடர்பை குரு இங்கே வலியுறுத்துகிறார்.


மானுட வாழ்வில் விலக்க முடியாத இரண்டு அடிப்படை விழுமியங்கள் உண்டு. ஒன்று, மனிதன் தனது அகத்தின் தளைகளற்ற இயல்பின்படி வாழ்வதற்கான வாய்ப்பு; மற்றொன்று, உடலோம்பல் குறித்த உறுதிப்பாடு. இவற்றில் ஒன்றைத் தவிர்த்து மற்றொன்றைக் கொள்வது இயலாதது. முன்பே சொன்னதுபோல, ப்ரபஞ்சம் சார்ந்த புலனறிவின் அடிப்படையில் ‘தத்வமஸி’ எனும் பெருஞ்சொல்லுக்கான பொருளை அறிந்தாலும், அறிவெல்லை கடந்ததன் வழியாக ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்ற பெருஞ்சொல்லின் பொருளை உணர்ந்தாலும், உணவும் உடையும் இல்லாதானால் அனைத்து இன்பமும் இல்லாதாகிவிடும். ப்ராணனில்லாத உணவும், உணவில்லாத ப்ராணனும் பொருளற்றதாக இருக்கும் என்கிறது ப்ருஹதாரண்யக உபநிடதம். தைத்திரிய உபநிடதம் இரண்டாம் வல்லி இரண்டாம் அனுவாகத்தில் அன்னம் ப்ரம்மத்திற்கு இணையானதாக கூறப்படுகிறது. ‘அன்னத்தால் மட்டுமே ப்ரஜைகள் உண்டாகின்றனர். பூமியில் உள்ள எல்லா வகையான உயிரிகளும் அன்னத்தை துணையாகக் கொண்டே வாழ்கின்றன. அனைத்தும் அன்னத்திலிருந்து தோன்றி, அன்னத்தால் வளர்ந்து இறுதியில் அன்னத்திலேயே கரைந்தழிகின்றன. எனவே, அனைத்துயிரிலும் அன்னமே முதன்மையானதாய் இருக்கிறது. இதனால், அன்னம் அனைத்துக்குமான மருந்தெனப்படுகிறது. அன்னத்தை ப்ரம்மமெனக் கருதுபவருக்கு அன்னம் நிச்சயமாய் கிடைக்கிறது. விலங்குகளுக்கு அன்னமே பெரிது. அன்னத்திலிருந்து விலங்குகள் உண்டாகின்றன. அன்னம் கொண்டு வளர்கின்றன. அன்னம் விலங்குகளுக்கு உணவாகவும், விலங்குகளை உண்பதாகவும் உள்ளது. எனவேதான் அது அன்னம் எனப்படுகிறது.


தைத்திரிய உபநிடதத்தில் இரண்டாம் வல்லியில் மீளவும் அன்னம் ப்ரம்மம் என்று கூறப்படுகிறது. வாக்கிற்கும் ப்ராணனுக்கும் நன்மை பயக்கும் அன்னத்தை மீண்டும் மீண்டும் ப்ரம்மமென்றே கூறுகிறது ப்ருகுவல்லி.


அன்னமய கோசம் - உணவால் செய்யப்பட்ட உடல்

பஞ்சதத்துவங்களில் முதன்மையான அன்னமயத்திற்கு முதலிடம் அளிக்காத எந்த தத்துவமும் நிலம்தொட்டு நிற்க இயலாது. மனிதன் வாழ்வது அப்பம் கொண்டு மட்டுமல்ல என்று யேசுகிறிஸ்து சொல்கிறார். என்றாலும், அவரே, தந்தையிடம் மகன் அப்பம் வேண்டினால் கல்லையோ, மீன் வேண்டினால் பாம்பையோ கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார்.


இறையின் அருள்மழை பொழிந்தால் மட்டுமே உணவும் அதிலிருந்து உயிரும் உண்டாகும் என்று பாடுகிறார் திருவள்ளுவர். நமது உடலோம்பலும் இறையருளும் அந்த அளவுக்கு ஒன்றாக பிணைத்துவைக்கப்பட்டுள்ளன. 

ஒரு விவசாயி நெல் விதைத்தாலும் அது உண்ணக்கூடிய சோறாக உருப்பெற வேண்டுமென்றால் வானிலிருந்து தெய்வம் பொழியும் மழையும் நிலத்திலிருந்து ஊறிவரும் உயிர்ச்சக்தியும் வேண்டும்.


இன்று உலகெங்கிலும் கிறிஸ்தவர்கள் தமது இறைப் ப்ரார்த்தனயில் (Lord’s Prayer) ‘இன்றைக்கான எமது அப்பத்தை தருவீராக’ என்று மறக்காமல் வேண்டுகின்றனர். இதற்கும் நாராயண குரு சொல்வதற்கும் ஒரு சிறிய வேறுபாடே உள்ளது. கிறிஸ்தவ ப்ரார்த்தனையில் உணவைக் கோரும் வேண்டுதல் உள்ளது. இந்தப் பாடலில், அன்னத்தை அள்ளி வழங்கும் இறை வாழ்த்தப்படுகிறது.


அகத்தேடலில் இருத்தலியல் மெய்மையையும் கணக்கில் கொண்டு அதிலுள்ள முதன்மையான தேவைகளுக்கு உரிய மரியாதை கொடுப்பது உயர்ந்த தத்துவ சிந்தனைக்கு பொருத்தமானதுதான் என்றாலும், தேவைகளை முதன்மைப்படுத்தி சிந்திக்கும் பலரும் தத்துவ சிந்தனையின் நேரிய பாதையிலிருந்து விலகி பொருண்மை என்றும்  புறவயம் என்றும் சொல்லப்படும் குறுகிய வட்டம் ஒன்றில் சிக்கிக் கொள்கின்றனர். அரசியல், பொருளியல் போன்றவற்றை கையாள்பவர்கள் இவ்வாறான பிழைகளை இயற்றுவது எல்லோரும் அறிந்த ஒன்றே. அத்தகையை குறையைப் போக்க நாராயண குரு தன்னுடைய ப்ரார்த்தனையில், தத்துவசிந்தனையின் முக்கிய வழிமுறைகளில் ஒன்றான உவமானம் வழியாக, அடுத்த பாடலை முன்வைக்கிறார்.



தமிழில் - ஆனந்த் ஶ்ரீநிவாசன்


Photo courtesy: Krishna for today Keshav 


முந்தைய பகுதிகள்- தெய்வ தசகம்- 2

                                     தெய்வ தசகம்-1


(தெய்வ தசகம் நன்கு அறியப்பட்ட ஒரு அத்வைதியால் இயற்றப்பட்டுள்ளது. உண்மையில் அத்வைதிக்கு பிராத்தனை வேண்டியதில்லை. அவருடைய நோக்கில் இறைக்கும் பிராத்திப்பவருக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது, இறை-பிராத்திப்பவர் என்ற இருமை கிடையாது. ஆனால் ஒரு அத்வைதி ஞானத்தின் பரிபூரணத்தை நாடுவதற்காக தன்னை பின்பற்றி வருவபர்களுக்கு ஒரு பிராத்தனை தேவை என நினைக்கலாம். அந்த பிராத்தனை அவர்களை அத்வைத நோக்கின் உச்சத்தை அடையச்செய்வதாக இருக்க வேண்டும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பிராத்தனை பாடல்கள் - ஸ்வாமி முனி நாராயண பிரசாத்)





தெய்வ தசகம்: தெய்வம் - இறை, தசகம்- பத்து. பத்து இறைப்பாடல்கள் என்பது பொருள். தமிழில் பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட தேவார பாடல்களை ‘பதிகம்’  என்பர்.  


நாராயண குரு (1856-1928)


இந்திய தத்துவ ஆன்மீக ஞானியரில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி கேரள சமூகத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப தகவமைத்த முன்னோடி. மதச் சீர்திருத்தவாதி, சமூக சீர்திருத்தப் போராளி, அறிவியக்கத் தலைவர், மாபெரும் இலக்கிய ஆசிரியர் என பன்முக ஆளுமை அவருடையது. நாராயண குருவின் மாணவர்களே கேரளத்தில் எல்லா அறிவுத்துறைகளிலும் முன்னோடிப் பங்களிப்பை நிகழ்த்தியவர்கள்.


நித்ய சைதன்ய யதி  (1923-1999)


நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர்.  தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள்  வெளியாகி உள்ளது.  

 

ஆனந்த் ஶ்ரீநிவாசன்


தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர்  அனிதா  அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.