Sunday 15 September 2024

அறிவியலும் அதன் மீதான விமர்சனங்களும் - பகுதி 2 - சமீர் ஒகாஸா

அறிவியல் மதிப்பீடு (Value) அற்றதா? 

சிலநேரங்களில் அறிவியல் அறிவு அறமற்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஏறக்குறைய அனைவரும் இதை ஒத்துக்கொள்வார்கள். அணு, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்தல் இதற்கு உதாரணம். ஆனால் அறத்தின் அடிப்படையில் அறிவியல் அறிவு கண்டிக்கத்தக்கது என்பதை இது போன்ற செயல்பாடுகள் காட்டவில்லை. அந்த அறிவை எடுத்துக்கொண்ட பயன்பாடு தான் அறமற்றது. அறிவியல் அல்லது அறிவியல்-சார் அறிவு அறமுடையதா, அறமற்றதா என பேசுவது பொருளற்றது என பல தத்துவவாதிகள் சொல்கிறார்கள். அறிவியல் என்பது மாறாவுண்மைகளுடன் (fact) சம்மந்தப்பட்டது. அறிவியலுக்குள் இருக்கும் மாறாவுண்மைகளுக்கு அறம்சார் முக்கியத்துவமும் எதுவும் கிடையாது. அந்த மாறாவுண்மைகளை கொண்டு நாம் செய்வது சரியா, தவறா, நியாயமானதா, நியாயமற்றதா என பார்ப்பதே முக்கியம். இந்த பார்வையின் படி, அறிவியல் அதன் அடிப்படையிலேயே மதிப்பீடுகளற்ற ஒரு செயல்பாடு. அதன் வேலை உலகைப் பற்றிய தகவல்களை தருவது மட்டுமே. அந்த தகவல்களைக் கொண்டு சமூகம் என்ன செய்கிறது என்பது வேறுவிஷயம். 

மதிப்பீடு சார்ந்த கேள்விகளில் ’அறிவியல் நடுநிலையானது’ என்ற பார்வையை எல்லா தத்துவவாதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவியலிலுள்ள மாறாவுண்மை/மதிப்பீடு என்ற இருமை அவர்கள் ஏற்கமறுக்கின்றனர். அறிவியல் விசாரனைகள் தவிர்க்க முடியாத வகையில் மதிப்பீட்டு-தீர்மானங்களின் (Value judgements) சுமை கொண்டது என சிலர் வாதிடுகின்றனர். இதற்கு ஆதரவான ஒரு வாதம் பின்வரும் நிஜத்தை அடிப்படையாக கொண்டு முளைத்தது - ’எல்லாவற்றையும் ஒரேசமயத்தில் ஆய்வு செய்வது இயலாதது, எனவே அறிவியலாளர்கள் எதை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கிறார்கள்’. எதை ஆய்வு செய்ய வேண்டும் என முடிவுசெய்ய பல்வேறு ஆய்வு சாத்தியங்களை ஒப்பிட்டு அவற்றின் முக்கியத்துவம் பற்றிய தீர்மானங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒருவகையில் இவற்றையே மதிப்பீட்டு-தீர்மானங்கள் என்று சொல்லலாம். இரண்டாவது வாதம் பின்வரும் உண்மையிலிருந்து உருவானது - ‘எந்த தரவுகளானாலும் அவை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கப்படும் இயல்பை கொண்டவை’. இது ஒரு அறிவியலாளரின் கோட்பாட்டு தேர்வு ஒருபோதும் அவருடைய தரவை மட்டுமே கொண்டு முடிவுசெய்யப்படுவதில்லை என்பதை சுட்டுகிறது. மதிப்பீடுகள் தவிர்க்க முடியாத வகையில் கோட்பாட்டு-தேர்வுடன் சம்மந்தப்பட்டுள்ளன, எனவே அறிவியல் மதிப்பீடுகளற்றதாக இருக்க முடியாது என சில தத்துவவாதிகள் சொல்கிறார்கள். மூன்றாவது வாதம் ’அறிவியல் அறிவை அதன் பயன்பாட்டு நோக்கத்திலிருந்து பிரிக்க முடியாது’ என்பது. இந்த பார்வையின் படி, அறிவியலாளர்கள் தங்களுடைய ஆய்வின் நடைமுறைப் பயன்பாட்டை பற்றிய எந்த ஒரு யோசனையும் இல்லாமல், தன்னலத்தையும் கருதாமல் அறிவியல் முன்னேற்றத்துக்காகவே பரிசோதனைகளை செய்கிறார்கள் என்ற சித்தரிப்பு அப்பாவித்தனமானது. பல அறிவியல் பரிசோதனைகளுக்கு தனியார் நிறுவனங்கள்தான் நிதியளிக்கின்றன, அவை தங்களின் வணிக நலனுக்காகவே இதை செய்கின்றன என்ற நிஜமே இந்த பார்வைகான நம்பகதன்மையை கொடுக்கிறது. 

சுவாரஸ்யமாக இருந்தாலும் இந்த வாதங்கள் அனைத்தும் ஓரளவு அருவமான கருத்துகள் மட்டுமே - ஏனென்றால் இவர்கள் அறிவியலில் ஊடுருவியுள்ள மதிப்பீடுகள் என்னென்ன என்பதை அடையாளம் காட்டுவதற்கு பதிலாக, அறிவியல் அதன் இயல்புகளின் அடிப்படையில் மதிப்பீடுகளற்றதாக இருக்க முடியாது என்பதைக் காட்டவே முயல்கின்றனர். எனினும் இவர்கள் அறிவியல் மதிப்பீட்டு-சுமை கொண்டது என்பதற்கு சில திட்டவட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதற்கு இரண்டு உதாரணங்களை இங்கு பார்க்கப்போகிறோம். ஒன்று உளவியல் / உயிரியலில் இருந்தும், மற்றொன்று மருத்துவத்துறையில் இருந்தும் வந்தவை. 

முதலில் நாம் பார்க்கப்போவது பரிணாம-உளவியல் (Evolutionary psychology) துறை. இது டார்வினியன் கொள்கைகளை மனிதர்களின் உளவியல் பாவனைகளுக்கும், அவர்களின் குணங்களுக்கும் பொருத்திப்பார்த்து அவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. முதல் பார்வைக்கு இது ஏற்றுக்கொள்ள கூடியதாக தெரியும். மனிதர்களும் விலங்கினத்தை சேர்ந்தவர்கள் மற்றும் டார்வினிய கோட்பாடு விலங்குகளின் இயல்புகளையும் அவற்றின் உளவியல் அடித்தளத்தையும் விளக்கும் என்பதை உயிரியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். உதாரணமாக, எலிகள் பூனையை எப்போது பார்த்தாலும் ஏன் ஓடுகின்றன என்பதற்கு டார்வினியம் கொடுத்த விளக்கத்தை பார்க்கலாம். கடந்த காலத்தில் இதுபோன்று ஓடாத எலிகள் ஓடிய எலிகளை விட குறைந்த சந்ததிகளையே விட்டிருக்கும். ஏனென்றால் ஓடாத எலிகள் சாப்பிடப்பட்டிருக்கும். இந்த இயற்கையான உள்ளுணர்வு மரபானது என ஊகித்துக்கொள்ளுங்கள். இது பெற்றோரிடமிருந்து அதன் சந்ததிகளுக்கு கடத்தப்பட்டு, பல தலைமுறைகளுக்கு பின் இப்பழக்கம் மொத்த இனத்திற்கும் பரவியிருக்கும். இது போன்ற ஒரு டார்வினிய விளக்கத்தை பல மனித உளவியல் அம்சங்களுக்கு தர முடியும் என பரிணாம-உளவியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.

இதை விரிவாக பார்க்க, மனிதர்கள் தங்களுடைய இணையை தேர்ந்தெடுப்பதில் எவற்றையெல்லாம் விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்கொள்ளலாம். ஆண்களும் பெண்களும் தங்களது இணையிடம் எதிர்நோக்கும் பண்புகள் வேறுபடுகின்றன. இதற்கு சான்றுகள் உள்ளன. (இந்த சான்று எவ்வளவு வலிமையானது என்பது விவாதத்திற்கு உரிய விஷயம்.) டேவிட் புஸ் (David buss) என்பவர் செய்த கலப்பு-பண்பாட்டு களஆய்வு மூலம் அப்பண்புகளை தோராயமாக கண்டறிந்தார்: ஒரு சராசரி ஆண் தான் திருமணம் செய்யும் பெண் இணை தன்னைவிட இளையவளாக இருக்க வேண்டும் என்றும் அவளின் வயது கருவுறுதல் சிறப்பாக நடைபெறும் வயதுக்கு (24 வயது) அருகில் இருக்க வேண்டும் என்றும் விரும்புவார். இதற்கு மாறாக, பெண்கள் தன்னை விட வயது மூத்த ஆணை திருமணம் செய்ய விரும்புகிறார்கள். மேலும் ஆண்களுக்கு உடல்-சார் கவர்ச்சி ஒரு முக்கியமான விஷயம். அதேசமயம் பெண்களுக்கு சம்பாதிக்கும் திறன் முக்கியமானது. டேவிட் புஸ் மற்றும் மற்ற பரிணாம உயிரியலாளர்களும் இந்த விருப்பங்களுக்கு ஒரு டார்வினிய விளக்கம் உள்ளது என்கின்றனர். பரிணாம நோக்கில் இருந்து பார்க்கும் போது ஆண்களுக்கான சிறந்த உத்தி என்பது அதிக இனப்பெருக்க திறன் கொண்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது. ஏனென்றால் இத்திறனால் அவர் அப்பெண்ணுடன் அதிக சந்ததிகளை பெற முடியும். பெண்களுக்கு சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஆணை தெரிவுசெய்வதே சிறந்த உத்தி. ஏனென்றால் அவர் வளங்களைக் கட்டுப்படுத்தி அவளின் சந்ததிகளுக்கு கொடுக்க முடியும். (இந்த சிறந்த உத்திகளில் உள்ள வேறுபாடு ’பெண்கள் குறைந்த அளவிலான கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவர்கள், அதேசமயம் ஆண்கள் எண்ணற்ற விந்துக்களை உற்பத்தி செய்பவர்கள். எனவே சந்ததிகளை பராமரிப்பது பெண்களுக்கு முக்கியமானது’ என்ற உண்மையை அடிப்படையாக கொண்டது.) எனவே நவீன மனிதர்கள் இணையைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள விருப்பங்களுக்கு டார்வினியன் இயற்கைத் தேர்வு மூலமாக விளக்கம் தர முடியும் என இது காண்பிக்கிறது. 

மனிதர்களின் உளவியல் பண்புகள் இயற்கை தேர்வினால் பரிணாமம் அடைந்தது என்ற கருத்து நம்பத்தகுந்ததாக இருந்தாலும் பரிணாம-உளவியல் ஒரு சர்ச்சைக்குரிய துறை. மேலும் இதில் புழங்குபவர்கள் கருத்தியல் சார்பு கொண்டவர்கள் என குற்றம்சாட்டப்படுகின்றனர். இந்த சர்ச்சை 1970களில் மற்றும் 1980களில் நிகழ்ந்த ‘சமூகஉயிரியல் போரை’ (Sociobiology wars) சேர்ந்தது. சமூகஉயிரியல் துறையானது பரிணாம-உளவியலின் முன்னோடி துறை. பரிணாம-உளவியல் மனித குணங்களுக்கு டார்வினிய விளக்கத்தை தேடுவதை சமூகஉயிரியலுடன் பகிர்ந்துகொண்டது. சமூகஉயிரியல் துறையை நிறுவியது 1975ல் வெளிவந்த சமூகஉயிரியல் என்ற நூல். இதை வில்சன் (E.O.Wilson) என்பவர் எழுதினார். இவருக்கும் ஹார்வேர்டில் இவருடன் இருந்த ரிச்சர்ட் லெவொண்டின் (Richard Lewontin) மற்றும் ஸ்டீபன் ஜே கோல்ட் (Stephen Jay Gould) ஆகியோருக்கும் இடையில் கடுமையான கருத்துப் பரிமாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து. இந்த சர்ச்சை வில்சனின் பின்வரும் கூற்றில் இருந்து துவங்கியது: ’வன்புணர்ச்சி, கோபம் (Aggression), மற்றும் அயலவர்கள் மீதான வெறுப்பு (Xenophobia) போன்ற மனிதர்களின் பல சமூகஉளவியல் பண்புகள் மரபணு சார்ந்தவை. அப்பண்புகள் நம் மூதாதைகள் இனப்பெருக்கம் செய்வதை அதிகரித்தன. இதனால் அவை இயற்கை தேர்வினால் விரும்பப்பட்டு தழுவிக்கொள்ளப்பட்டன’. 

பலதரப்பட்ட அறிஞர்களிடமிருந்து வலுவான விமர்சனங்களை சமூகஉயிரியல் பெற்றுள்ளது. ’சமூகஉயிரியல் கருதுகோள்களை சோதித்துப் பார்ப்பது மிகவும் கடினம், எனவே இவற்றை சுவாரஸ்யமான ஊகமாக மட்டுமே பார்க்க வேண்டும், நிறுவப்பட்ட உண்மையாக அல்ல’ என விமர்சகர்கள் சொல்கின்றனர். மேலும் மனித குணங்களின் மீதுள்ள பண்பாட்டு தாக்கங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்கின்றனர். வேறு சில அறிஞர்கள் இத்துறையை கருத்தியலின் அடிப்படையில் நிராகரிக்கின்றனர். ஏனென்றால் முழு சமூகஉயிரியல் துறையும் கருத்தியல்ரீதியாக சந்தேகத்திற்குட்பட்டது என்கின்றனர். அவர்கள் இத்துறையை சமூக விரோத குணங்களை குறிப்பாக ஆண்களுடையதை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியாக பார்க்கின்றனர். அல்லது சில சமூகவிரோத செயல்களின் தவிர்க்க இயலாத தன்மைக்காக வாதிடும் ஒன்றாக பார்க்கின்றனர். உதாரணமாக, வன்புணர்ச்சி மரபணு தொடர்ச்சியை கொண்டது மற்றும் இது டார்வினியன்-தேர்வின் அடிப்படையில் உருவானது என்பதால் சமூகஉயிரியலாளர்கள் இதை இயற்கையானது என்கிறார்கள். மேலும் வன்புணர்ச்சி செய்தவர்கள் அவர்களின் செயலுக்கு பொறுப்பல்ல - அவர்கள் வெறுமனே தங்களுடைய மரபணு தூண்டலுக்கு கீழ்படிந்துள்ளனர் என்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விமர்சகர்கள் சமூகஉயிரியலை ஒரு மதிப்பீட்டு-சுமையுடைய அறிவியல் என குற்றம்சாட்டுகின்றனர். இது சுமந்துகொண்டிருக்கும் மதிப்பீடுகள் மிகவும் சந்தேகத்திற்குரியவை என்கின்றனர்.

1970கள் மற்றும் 1980களின் சமூகஉளவியலை விட நவீன பரிணாம-உளவியல் பல முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது. பரிணாம-உளவியலின் சிறப்பு என்னவென்றால் அது உறுதியான புலனறிவு அடித்தளத்தைக் கொண்டுள்ளது மற்றும் கண்டிப்பான அறிவியல் அலகுகளை அடைந்துள்ளது. மரபுவழி குணங்களைப் பற்றிய ஆரம்பகால சமூகஉயிரியலாளர்களின் எளிய தீர்மானம் மிகவும் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட சித்திரத்திற்கு வழிவகுத்தது. இதுவே பரிணாம-உளவியலின் சித்திரம். இதில் பண்பாட்டு மற்றும் மரபணு காரணிகள் மனிதர்களின் குணங்களை பாதிக்கும் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் கலப்பு-பண்பாட்டு பன்முகத்தன்மையும் நிராகரிக்கப்படவில்லை. இருந்தாலும் பரிணாம-உளவியல் விமர்சனங்களைச் சந்திக்கிறது. எனென்றால் இது மனித இயல்பின் ’இருண்ட’ பகுதி, பாலினம், இனச்சேர்க்கை, திருமணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் பிறவியிலேயே வரும் உளவியல் வேறுபாடு ஆகியவற்றை பற்றிய விஷயங்களை சமூகஉயிரியலுடன் பகிர்ந்து கொண்டது. மனித உளவியல் இவற்றை தாண்டியும் பல விஷயங்களைக் கொண்டுள்ளது, ஆயினும் பரிணாம-உளவியல் இந்த சில இடங்கள் மட்டுமே ஆய்வு செய்வது ஆச்சரியப்பட வைக்கிறது. எனவே ’பரிணாம-உளவியல் ஏற்கனவே இருந்த சித்திரத்திற்குதான் வலு சேர்க்கிறது’ என்ற குற்றச்சாட்டு அதன் மீது வைக்கப்படுகிறது. கவனக்குறைவாக இருந்தால் இக்குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரிப்பது கடினமாகி விடும்.

இந்த குற்றச்சாட்டுக்கு மாறாவுண்மைகள் மற்றும் மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாட்டை ஒரு எதிர்வினையாகக் கொடுக்கலாம். ’மண துரோகம்’ (marital infidelity)-க்கு சில பரிணாம-உளவியலாளர்கள் என்ன விளக்கம் தருகிறார்கள் என்று பார்க்கலாம்: இது பரிணாமத்தின் வழியாக வந்த உத்தி - பெண்கள் தங்களுடைய நீண்டகால துணை சந்ததியை கொடுக்கும் தரம் குறைந்தவராக இருக்கும் போது தங்களுக்கான சந்ததிகளைப் பெற இந்த உத்தியை உபயோகிக்கின்றனர். இந்த கூற்று சரியா தவறா என்பது அறிவியல் மாறாவுண்மை சார்ந்த கேள்வி, எளிதாக பதிலளிக்க கூடியதல்ல. ஆனால் மாறாவுண்மைகள் என்பது வேறு, மதிப்பீடுகள் என்பது வேறு. ’மண துரோகம்’ பரிணாமத்தால் தழுவிக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட, அது நெறி சார்ந்து சரியான நடவடிக்கை அல்ல. எனவே பரிணாம-உளவியல் பற்றி கருத்தியல் சார்ந்து சந்தேகப்பட எதுவும் இல்லை, அத்துறை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆய்வு செய்தாலும் கூட. மற்ற அறிவியல் துறைகளைப் போலவே இதுவும் உலகைப் பற்றிய மாறாவுண்மைகளை நமக்கு சொல்ல முயற்சிக்கிறது. சிலசமயம் மாறாவுண்மைகள் தொந்தரவு செய்யக்கூடியதாக இருக்கும், எனினும் அவற்றுடன் வாழ நாம் கற்றுக்கொண்டாக வேண்டும். 

மதிப்பீட்டு-சுமைக்கு இரண்டாவதாக நாம் பார்க்கப்போகும் உதாரணம் மனநோய் மருத்துவத்துறையில் (Psychiatry) இருந்து வந்தது. இது மருத்துவதுறையின் ஒரு கிளை - மன அழுத்தம், உளச்சிதைவு நோய் (schizophrenia), பசியின்மை (anorexia) போன்ற மனநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. மனநோய் (அல்லது மனக்கோளாறு) என்ற கருத்தாக்கம் எப்படி புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதில் மனநோய் மருத்துவர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் இடையில் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு தரப்பு ‘மருத்துவமாதிரி’ (Medical model) என்பதை ஆதரிக்கிறது. இதன்படி, ஒரு பிரச்சனை மனநோயா இல்லையா என்பது முழுவதும் புறவயமான ஒன்று; இதில் மதிப்பீடுகளின் தலையீடு எதுவும் இல்லை. மனநோய் மற்றும் உடல்நோய் ஆகியவை ஒரே மாதிரியனவை என இது வாதிடுகிறது. உதாரணமாக நீங்கள் நீரிழிவு அல்லது ’நுரையீரல் காற்றுக்குமிழி அடைப்பு’ (emphysema) நோயால் அவதிப்பட்டால் உங்கள் உடல் நன்றாக செயல்படவில்லை என்று பொருள். இதைப் போலவே நீங்கள் மன அழுத்தம் அல்லது உளச்சிதைவுநோயால் பாதிப்படைந்தால் உங்கள் மனம் நன்றாக செயல்படவில்லை என்று பொருள். எனவே மருத்துவமாதிரியில் மன ஆரோக்கியம் மற்றும் மனநோய் ஆகியவற்றிகு இடையிலான எல்லை என்பது உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நோய் ஆகியவற்றிற்கு இடையிலான எல்லையைப் போலவே புறவயமானது. 

இதற்கு எதிரான தரப்பு மனநோயை இயல்பாகவே தரநெறிசார்ந்த (Normative) ஒரு வகைப்பாடாக பார்க்கிறது, இதில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ மதிப்பீடுகள் இருக்கும். இந்த பார்வையின் படி, சமூகத்தின் எதிர்பார்ப்புகளில் இருந்து மாறுபட்டிருக்கும் குணங்கள் அல்லது ’மாறுபட்டவை’ என கருதப்படும் மற்ற குணங்கள் மனநோய் என்ற பெயரைப் பெறுகின்றன. உதாரணமாக, சமீப காலம்வரை மேற்கு நாடுகளில் ஓரினச்சேர்க்கை மனநோயாக பார்க்கப்பட்டது. 1970களில் தான் அமெரிக்க மனநோய் மருத்துவ கூட்டமைப்பு DSM பட்டியலில் (Diagnostic and statistical manual of mental disorders) இருந்து ஓரினச்சோர்க்கையை நீக்கியது. எனினும் அதன் அனைத்து உறுப்பினர்களும் இதை ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் மனநோய் என அங்கீகரிப்படுபவைகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் மாறுபடுகின்றன என்பதை மருத்துவ மானுடவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். இதை எப்படி கையாள்வது என்று DSM நீண்டகாலமாக போராடிவருகிறது. எனவே மனநோய் என்பது மதிப்பீட்டு-சுமை கொண்ட ஒன்று அல்லது தரநெறிசார் கருத்து என்ற பார்வை நம்பத்தகுந்ததாகவே தெரிகிறது. இதன் ஆதரவாளர்கள் மனநோய் ஒரு உண்மையான மருத்துவ வகைப்பாடு அல்ல, இது ஒரு சமூக கட்டுப்பாட்டுக் கருவி என வாதிடுகிறார்கள். இந்த வாதத்தின் தீவிரமான வடிவத்தை அமெரிக்க மனநோய் மருத்துவர் தாமஸ் சஸாஸ் (Thomaz szasz) 1961ல் வெளியான The myth of mental illness என்ற தனது நூலில் எழுதியுள்ளார். 

மனநோய் இயல்பிலேயே மதிப்பீட்டு சுமையுடையது என்ற பார்வைக்கும் மருத்துவமாதிரிக்கும் இடையிலான விவாதம் சிக்கலான ஒன்று. இதிலுள்ள ஒரு பிரச்சனை மனதிற்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பில் கவனம் செலுத்துகிறது. மருத்துவ மாதிரிக்கு சாதகமான ஒரு விஷயம் என்னவென்றால் ஒரு சில மனநோய்களாவது நரம்பு அல்லது நரம்புவேதியலின் அடிப்படையில் ஏற்படுபவை என்பது. அவை மூளை நோய்கள் எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூளை நரம்பு தொடர்களின் கோளாறினால் ஏற்ப்படுகின்றன. தற்போது மனநோய் மருத்துவத்துறையில் இந்த பார்வை அதிகரித்துவருகிறது. மூளை உடலின் ஒரு பகுதி என்பதால் மன மற்றும் உடல் நோய்களுக்கு இடையில் எந்த கூர்மையான வேறுபாடும் கிடையாது என இது சொல்கிறது. எனவே உடல் நோய்கள் மதிப்பீடு-சுமையுடையவை அல்ல அவை புறவயமானது என ஏற்கப்பட்டால் மனநோயும் புறவயமானது என்பது சரி தானே?

இந்த வாதம் திறன் வாய்ந்ததாக இருந்தாலும், இதில் முடிவு என எதுவும் இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம்: குழந்தைப்பருவ நோய்களான ஆட்டிசம் மற்றும் ADHD போன்றவை ஒரு தனித்த நோயா, அல்லது பல நோய்களின் கூட்டா என்பதில் கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. இந்த நோய்கள் பல அறிகுறிகளினால் வகைப்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்டவருக்கு அதில் பெரும்பாலான அறிகுறிகள் இருக்கும், ஆனால் எல்லா அறிகுறிகளும் இருக்காது, அந்த அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். (இதனாலேயே ஆட்டிசம் ’தொகுப்பு நோய்’ (Spectrum disorder) என அழைக்கப்படுகிறது.) மேலும் இதன் பல அறிகுறிகள் ‘இயல்பான’ குழந்தைகளிடமும் காணப்படுகின்றன. அக்குழந்தைகள் நோய் என்ற எல்லைக்குள் வருவதில்லை. இது காட்டுவது என்னவென்றால் ’எது ஒரு மனநோய் என எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதில் வரையறுக்கப்படாத அல்லது தன்னிச்சைச் கூறு இருக்கிறது; எனவே மனதின் செயல்பாடு மூளை நரம்பு இணைப்பு மற்றும் மூளை வேதியலைச் சார்ந்துள்ளது என எடுத்துக்கொண்டால் கூட மன நோய் உடல் நோயைப் போல புறவயமானதாக இருந்தாக வேண்டும் என்பதில்லை’.

இரண்டாவது காரணம்: உடல் நோய் என்ற வகைப்பாடு புறவயமானது என்பதை எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. நோய் அல்லது கோளாறு உடல் சார்ந்ததாக இருந்தாலும் அல்லது மனம் சார்ந்ததாக இருந்தாலும் அது பற்றிய பேச்சுக்கள் இயல்பாகவே தரநெறிசார் அல்லது மதிப்பீட்டு-சுமையுடையதே என்கின்றனர் சில தத்துவவாதிகள். ஒருவர் உடல் கோளாறு ஒன்றால் அவதிப்படுகிறார் என்றால் அதற்கு அவரின் உடல் அல்லது உடலின் ஒரு பகுதி தவறாக செயல்படுகிறது - அதாவது அது எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படவில்லை என்று அர்த்தம். ஆனால் ‘இப்படி செயல்பட வேண்டும்’ என்பது ஒரு தரநெறிசார் கோணத்தைக் குறிக்கிறது. உடல் ‘இப்படி செயல்பட வேண்டும்’ என்பதை யார் தீர்மானிப்பது? மேலும் எல்லா மனிதர்களின் உடலியலும் கணிசமான வேறுபாடுகளை கொண்டுள்ளன. சிலருக்கு பார்வை 20/20 ஆக இருக்கும், சிலருக்கு சற்று குறைவாகவும், மற்றவர்களுக்கு நன்கு குறைவாகவும் இருக்கும். எனவே மனித கண்கள் ‘இப்படி செயல்பட வேண்டும்’ என்பதை வரையறுத்து சொல்லும் முயற்சி எதுவாக இருந்தாலும் அது மதிப்பீடுகளைக் கொண்டதே அல்லவா? உதாரணமாக பார்வை செயல்பாடு குறைவாக உள்ள ஒரு சமூகத்தில் இந்த வரையறை வேறுவிதமாக இருக்கும் அல்லவா. எனவே இதன்படி, மன மற்றும் உடல் நோய் இரண்டுமே மதிப்பீட்டு-சுமையுடைய வகைப்பாடுகளே. 

இதற்கு எதிரான பார்வையில் வேறு சில தத்துவவாதிகள் தரநெறிசார் தன்மை என்பது தோற்றம் மட்டுமே என சொல்லி மருத்துவமாதிரியை ஆதரிக்கின்றனர். உயிரியல் இயக்கம் மூலமாக உடல் அல்லது மனம் ‘எப்படி இயங்க வேண்டும்’ என்பதை முழுவதும் புறவயமான வழியில் சொல்ல முடியும் என்கிறார்கள். இதைப் புரிந்துகொள்ள மனித இதயத்தை உதாரணமாக பார்க்கலாம். இதயம் உடல் முழுவதும் ரத்தத்தை செலுத்துகிறது, துடிக்கும் சத்தத்தை எழுப்புகிறது. முதலில் குறிப்பிட்டது இதயத்தின் செயல்பாடு, இரண்டாவதாக குறிப்பிட்ட துடிக்கும் சத்தம் பக்க விளைவு மட்டுமே. பரவலாக உள்ள பார்வையின் படி, பரிணாம வரலாற்றில் செயல்பாட்டுக்கும் பக்க விளைவுக்கும் இடையில் ஒரு புறவயமான அடிப்படை வேறுபாடு உள்ளது. இன்றிருக்கும் இதயம் இயற்கைத் தெரிவின் மூலமாக அடைந்தது ரத்தத்தை செலுத்தும் செயல்பாட்டையே, துடிக்கும் சத்தத்தை அல்ல. எனவே ஒருவரின் இதயம் ரத்தத்தை செலுத்தவில்லை என்றால் அது தவறாக செயல்படுகிறது என்பதே புறவயமான முழு அர்த்தம். (மருத்துவர்கள் ‘இதய கோளாறை’ பற்றி பேசும் போது எந்த மதிப்பீட்டு தீர்மானங்களையும் உருவாக்குவதில்லை, பரிணாமம் அடைந்த உயிரியல் செயல்பாட்டின் அடிப்படையில் இதயம் என்றால் என்ன என்பதைத்தான் பேசுகிறார்கள்.) 

இவர்கள் இதே போன்ற ஒரு கதையை மனநோய்களும் சொல்ல முடியும் என்கிறார்கள். மூளையும் அதன் பகுதிகளும் உயிரியல் செயல்பாட்டைக் கொண்டுள்ளன; ஒருவரின் மூளை அதன் செயல்பாட்டை சரியாக செய்யவில்லை என்றால் அதற்கு மனநோய் என்று பொருள். உளச்சிதைவு, மன அழுத்தம் போன்ற நிலைகளை மனநோய் என குறிப்பிடுவதில் நாம் எந்த மதிப்பீட்டையும் உருவாக்கவில்லை. இந்த நிலைகளைக் கொண்டுள்ள நோயாளிகளின் மூளையின் சில பகுதிகள் அவை பரிணாமத்தின் வழியாக அடைந்த செயல்பாட்டை சரிவர செய்யவில்லை என்று பொருள். எனவே உயிரியல் செயல்பாட்டின் அடிப்படையில் மனநோய்க்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையிலான எல்லையை முழுவதும் புறவயமான வழியில் வரைய முடியும். இதன்படி பார்த்தால், மருத்துவ மாதிரியின் ஆதரவாளர்கள் மனநோய் என்பது நடைமுறையில் உள்ள சமூக விதிமுறைகளின் பிரதிபலிப்பல்ல, மாறாக அவற்றிற்கு புறவயமான உயிரியல்சார் அடிப்படை உள்ளது என்று காட்ட முடியும் என நம்புகிறார்கள். இருந்தாலும் இந்த வாதம் சர்ச்சைக்குரிய ஒன்று, ஏனென்றால் இந்த வாதம் பரிணாம வரலாறு என்ற நம்முடைய ஊகத்தின் அடிப்படையில் உள்ளது. பரிணாம வரலாறே சரியானதாக இல்லாமலும் இருக்கலாம். இந்த காரணத்தாலும் மற்றும் வேறு காரணங்களாலும் சில மனநோய் மருத்துவர்களும் சில தத்துவவாதிகளும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இறுதியாக, அறிவியலில் மதிப்பீட்டு-சுமை உள்ளது என்பதற்கு கொடுத்த இரண்டு உதாரணங்களும் வெவ்வேறு வகையானவை. பரிணாம-உளவியல் உதாரணம் காட்டுவது என்னவென்றால், ஆய்வாளர்கள் ஆய்வுசெய்ய தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட கருதுகோள்களும் மற்றும் அதற்கு அவர்கள் சொல்லும் பதில்களும் ஏற்கனவே இருக்கும் சித்திரத்தை வலுப்படுத்தவே செய்கின்றன. இது சரியானதாக இருக்கும் பட்சத்தில் இதை பின்வருவனவற்றின் மூலம் சரிசெய்ய முடியும்: பரிணாம-உளவியலின் உள்ளடக்கத்தை தகுந்தவாறு மாற்றியமைத்தல், எவற்றை நிராகரிக்கிறோம் என்பதை கவனித்தல் மற்றும் கண்டிப்பான அறிவியல் அலகுகளைப் பயன்படுத்துதல். மனநோய் மருத்துவ உதாரணம் காட்டுவது என்னவென்றால், மனநோய் என்ற வகைப்பாடு மதிப்பீட்டு-சுமையைக் கொண்டுள்ளது, அதில் மதிப்பீட்டு தீர்மானங்கள் மறைமுகமாக உள்ளன. இது நிஜமாக இருக்கும் பட்சத்தில் இதை எப்படி சரிசெய்வது என்பதைப் பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் மனநோய் என்பது மனநோய் மருத்துவத்தில் ஒரு அடிப்படை அலகாகும். எனவே மனநோய் மருத்துவத்தில் மதிப்பீட்டு-சுமை மிக ஆழமாக வேறூன்றியுள்ளது. 

முடிவாக, அறிவியல் என்ற நிறுவனம் பல்வேறுபட்ட தரப்புகளின் விமர்சனத்திற்கு தன்னைத் தானே உட்படுத்திக்கொள்வது தவிர்க்க முடியாதது, மனித குலத்திற்கு இது பல நன்மைகளைக் கொடுத்த போதிலும் கூட. இது நல்ல விஷயம் தான். ஏனென்றால் அறிவியலாளர்கள் சொல்லுவதையும் செய்வதையும் விமர்சனங்களற்று ஏற்றுக்கொள்வது வறட்டுத்தனமானது, அதேசமயம் ஆரோக்கியமற்றதும் கூட. அறிவியலுக்கு எதிராக எழுப்பப்பட்ட விமர்சனங்களில் உள்ள தத்துவத்தின் பரிதிபலிப்புகள் எந்தவொரு இறுதியான பதிலையும் கொடுக்காமல் போகலாம். ஆனால் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் மீது பகுத்தறிவான, நடுநிலையான விவாதத்தை ஊக்குவிப்பதற்கும் தத்துவம் பயன்படும். 


நிறைவு

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

அறிவியல் தத்துவம் :: சமீர் ஒகாஸா - தொடர்