Saturday 8 April 2023

எருதின் தடம் - 2: விழுக்கம், மேல்சித்தாமூர் - அனங்கன்


சென்னையிலிருந்து ஒரு நாள் பயணத்திட்டத்துடன் சென்று வரும் வரலாற்றிடங்கள் ஏராளமாக உள்ளன. சென்னைக்கு உள்ளே தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் போர்ச்சுக்கீசியர், பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட தேவாலயங்கள், பிரிட்டிஷ் கால கட்டிடங்கள் நிறைய இருக்கின்றன. வரலாற்று ஆர்வமுடையவர்களுக்கு சென்னையைப் போல பொருளியல் நிறைவும், நகரத்திற்கு உள்ளேயும் வெளியிலும் சென்று காண வாய்ப்புடைய பல வரலாற்றிடங்கள் இருக்கும் பெருநகரங்கள் அரிது.

காலை 5:30க்கு புறப்பட்டேன் (20-11-2022). மதுராந்தகம் அருகில் செல்லும் போது விடிவெள்ளி எழுந்தது. ஐப்பசி மாத சூரியன் நம்மை அள்ளி அனைக்க வரும் அன்னையைப் போல அத்தனை மென்மையானது. பாலாற்றங்கரை மேம்பாலத்திலிருந்து சூரியன் உலகை தழுவிக்கொண்டு எழந்து வந்துகொண்டிருந்தது. ரிக் வேதம் சூரியனை ஜாதவேதன் என்கிறது. உலகனைத்தும் அறிந்தவன், காண்பவன். சூரியன் முழுவதும் எழுந்து வருவது வரை அங்கே நின்ற பின் திண்டிவனத்தில் புதுவை தாமரைக்கண்ணனை உடன் அழைத்துக்கொண்டேன்.

கடந்த வாரம் காஞ்சிபுரம் சென்று திருப்பருத்திக்குன்றம் வர்த்தமானர் ஆலயம், கச்சிப்பேடு கைலாச நாதர் ஆலயங்களை கண்டது யதார்த்தமாக நடந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னையிலிருந்து ஒரு நாள் பயணத்திட்டத்தில் சென்று வரலாம், அதுவும் ஒரு சமணத் தலமாக திட்டமிடலாம் என்று நினைத்தேன். திருப்பருத்திக்குன்றம் அளவிற்கு முக்கியமான சமண தலங்கள் விழுப்புரம், திண்டிவனம் மாவட்டங்களில் நிறைய உள்ளன. அதில் இப்போதும் செயல்படும் சமண மடம் மேல்சித்தாமூர். சித்தாமூரையும் அதையொட்டிய சமணத்தலங்களையும் காணும் நோக்கத்தில் பயணம் திட்டமிடப்பட்டது. மேல்சித்தாமூருக்கு செல்வதற்கு முன் விழுக்கம் செல்வதாக தீர்மானித்தோம். சித்தாமூர் செல்வது தான் திட்டமாக இருந்தது, ஆனால் விழுக்கம் ஆதிநாதர் ஆலயத்திற்கு சென்று விட்டு சித்தாமூர் செல்வது தான் சரியான வழியாக இருக்கும் என்று தாமரை சொன்னான். மேல்சித்தாமூரிலிருந்து வந்தவாசி, உத்திரமேரூர் செல்லும் சாலையில் மேலும் சில இடங்களுக்கு செல்ல வாய்பிருப்பதாகச் சொன்னான்.

தமிழக சமணர்களில் திகம்பர பிரிவினரது தலைமை இடம் என்று வழங்கப்பெறுவது மேல்சித்தாமூர். அங்கு பெரிய ஆலயமும் மடமும் உள்ளது. பயணத்தை ஓர் சிறிய ஆலயத்திலிருந்து துவங்குவது எப்போதும் ஒரு நிதானத்தை அளிக்கும். சிறிய நீதிக்கதைகளில் துவங்கி காப்பியத்திற்கு செல்வது போல. பெரிய ஆலயங்களில் நிறைய நியமங்கள் இருக்கும். ஆகவே கட்டுப்பாடுகள் நமக்கு சமயங்களில் சோர்வை அளிக்கக்கூடும். மாறாக சிறிய ஆலயம் பயணங்களில் என்னை ஏமாற்றுவதில்லை. எனக்கான ஒரு சிறிய இனிப்புத்துண்டு எப்போதும் அங்கிருக்கும். 

செஞ்சி, வந்தவாசியை சுற்றி மொட்டைப் பாறை மலைகள் இருக்கின்றன. சமணப் படிவர்களுக்கு இருபத்தி எட்டு நெறிகள் சமண மதத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை கடைப்பிடிக்க உகந்த இடமாக ஊருக்கு வெளியில் உள்ள மொட்டைப் பாறை மலைகள் இருந்திருக்கின்றன. இந்தியா முழுவதுமே இவ்வாறாக சமணக் கோயில்களும், சமணப் படுக்கைகளும் மொட்டைப் பாறைக் குன்றுகளிலும் மலைகளிலும் நிறைந்திருக்கின்றன.

விழுக்கம் கிராமத்திற்கு திண்டிவனம்-செஞ்சி சாலையிலிருந்து பிரிந்து இருபுறம் வயல்கள் சூழ்ந்த சின்ன சாலை வழியாக செல்லவேண்டும். உழுத வயல்களில் மழை நீர் தேங்கி இருந்தது. பயிர்கள் அடர் பச்சையிலும், இளம் பச்சையிலும் செழுந்திருந்தன. விழுக்கம் ஆதிநாதர் ஆலயம் பழைய அக்ரஹார பாணியில் இருபுறம் ஓட்டு வீடுகள் உள்ள தெருவின் நடுவே ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் தெரிந்தது. செம்மண் ஓட்டு வீடுகள் மழையில் நனைந்து சிவப்பேறியிருந்தன.

நாங்கள் சென்று இறங்கியபோது ஒடிசலான ஒரு மனிதர் தாமிரம் மினுங்கும் தட்டில் செம்பருத்தியும் பவளமல்லியும் எடுத்துக் கொண்டு ஒருகாலை சற்று அழுத்தி ஊன்றியபடி, ஆலயத்தை நோக்கி வந்தார். நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டு ஆலயத்தைப் பார்க்கும்படி சொன்னார். சன்னதி மூடியிருந்தபடியால் பூசகர் (சமண மரபில் உபாத்தியாயர்) வரும்வரை கோவிலை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தோம். உள்ளே நுழையும்போதே ஆலய பலிபீடத்திற்குப் பின்னுள்ள மானஸ்தம்பம் மழைநீரில் நனைந்து கருங்கல் பாறைக்கே உண்டான யானை நிற பளபளப்புடன் இருந்தது.

மானஸ்தம்பங்கள் என்பவை சமண கோவில் முகப்பில் பலிபீடத்திற்கருகே இருக்கக்கூடிய ஒற்றைக்கல் தூண்கள். மானஸ்தம்பம் என்ற பெயருக்கு புகழ்த்தூண் என்று பொருள்கொள்ளலாம். சமணக்கோவில்களில் மானஸ்தம்பம் நிறுவுவது வழக்கம், இது கொடிமரம் அல்ல, மாறாக இதன் உச்சியில் சிறிய மண்டபம்(கந்தக்குடி) போன்ற அமைப்பில் தீர்த்தங்கரர் உருவம் அமைந்திருக்கும்.

ஆலயத்தின் மூலமூர்த்தியான ஆதிநாதரின் புடைப்புச்சிற்பம் மிக அழகான நேர்த்தியுடன் மானஸ்தம்பத்தின் முன்புறம் செதுக்கப்பட்டிருந்தது, நாற்புறமும் ஆதிநாதர், வாஸுபூஜ்யர், விமலநாதர், வர்த்தமானர் புடைப்புச்சிற்பங்கள் இருபுறமும் சாமரதாரிகளுடன் இருந்தன. அண்மையில் இந்த மானஸ்தம்பம் நிறுவப்பட்டதாக எங்கள் வழிகாட்டியான அந்த அண்ணன் சொன்னார். 1970-ஆம் ஆண்டு வந்தவாசி திண்டிவனம் சுற்றியுள்ள மாவட்ட ஆலயங்களில் இதேபோன்ற மானஸ்தம்பங்கள் செய்யப்பட்டுள்ளனவாம். சில வைணவத்தலங்களிலும் இதுபோன்ற கல்தூண்கள் வைப்பதுண்டு மன்னார்குடி, திருக்கோவிலூர், காஞ்சி வரதர் ஆலயம் முதலிய ஊர்களில் இவ்வாறு கல்தூண்களை பார்க்களாம். சமண ஆலயங்களின் மானஸ்தம்பத்தின் அடியில் தீர்த்தங்கரர்கள் செதுக்கப்பட்டிருப்பார்கள். ஐந்தடி உயர பீடத்தின்மேல் பத்தடி உயரத்தில் கல்வளையங்களில் அனைத்து தீர்த்தங்கரர்களையும் கொண்டுள்ளது நாங்கள் கண்ட மானஸ்தம்பம்.

விழுக்கம் மானஸ்தம்பம் பலிபீடம்

புடைப்புச்சிற்பங்களில் இருபுறம் அண்டரெண்ட பட்சி தலைகள் கொண்ட சிம்ம பிரபாவளியுடன் முக்குடையும் மடிமேல் விரிந்த கரங்களுடன் நான்கு தீர்த்தங்கரர்களும் அமர்ந்துள்ளனர். நால்வரில் மூலமூர்த்திக்கு நேர்எதிரே இருக்கும் வாஸுபூஜ்யரின் சாமரதாரிகள் மட்டும் சாமரத்தை தோள்களில் வைத்திருந்தனர். மற்ற மூன்று பக்கங்களிலும் கிரீடம் கர்ணபத்திரம் ஆபரணங்கள் ஆடை அலங்காரங்களுடன் ஒரு கையை இடுப்பில் வைத்து ஒய்யாரமாக சாமரம் வீசுகின்றனர். தீர்த்தங்கரர்கள் நீள்காதுகளுடன் சொல்லற்றிருந்தனர். அவர்களின் சின்னங்கள் (லாஞ்சனை) கீழே பொறிக்கப்பட்டிருந்தது.

விழுக்கம் ஆதிநாதர் ஆலயம் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, 1970-ல் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 10 வருடங்களுக்குள் மீண்டும் சில முறை புனரமைத்துள்ளனர். கருவறை கோஷ்டங்களில் மானஸ்தம்பத்தில் உள்ள வரிசைப்படியே தீர்த்தங்கரர்கள் கருங்கல் படிமங்களாக இருந்தனர். வடநாட்டிலோ இப்போது தமிழகத்திலும்கூட மீண்டும் நிறுவப்படும் பளிங்கு உருவங்களை எனக்கு அணுக்கமாக நினைப்பதில் ஒரு பெரிய உளத்தடை உள்ளது. கருங்கல்லில் மோனப்புன்னகை சிந்தும் தீர்த்தங்கரர்கள் அவ்வளவு அழகாக மனதில் பதிந்து போகிறார்கள். விலாசமான அர்த்த மண்டபத்தில் தீர்த்தங்கரர்களின் செப்புப்படிமங்களும், மேருவும், பாகுபலியின் செப்புப்படிமங்களும் நிறைந்திருந்தன. கருவறைமுன் உள்ள பீடத்தில் பார்ஸ்வநாதரும் கருவறைக்குள் ஆதிநாதரும் வீற்றிருந்தனர்.

மையச்சன்னதிக்கு செல்லும் முன் கோவிலைச்சுற்றி வந்தோம், எங்களை அழைத்துவந்த அண்ணனின் பெயர் பாஸ்கரன். கோவில் உபாத்தியாயர் வெளியில் சென்றிருப்பதால் கருவறையை இப்பொழுது திறக்க முடியாது என்று தெரிவித்துக்கொண்டிருந்தார். கோவில் கட்டப்பெற்ற கதைகளையும் தான் அங்கு வளர்ந்த கதைகளையும் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு வயதான அம்மாள் பூக்கூடையுடன் வந்து நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டார் பின்னர் மானஸ்தம்பத்திலுள்ள தீர்த்தங்கரர்களின் தீர்த்தங்கரர்கள் யார் யார் என்று எங்களுக்கு சொன்னார், அவர் பெயர் யசஸ்வதி. பின்னர் சன்னதிமுன் அமர்ந்து அருக மந்திரங்களை சொல்லி அங்குள்ள உள்ள பீடத்தில் சுவஸ்திக் சின்னத்தை தான் கொண்டுவந்திருந்த அரிசியால் இட ஆரம்பித்தார்.

கருவறை, அர்த்தமண்டபங்கள் கல்லால் ஆனவை, விமானம், கோபுரங்கள் சுதையால் கட்டப்பட்டு இருந்தது. கோயிலின் மூலையில் சுற்றுச்சுவரை ஒட்டி பழைய சிதிலமான சிற்பங்களை வைத்திருந்தனர். அர்த்த மண்டபத்தின் மேல் போடப்பட்டிருந்த ஏணியின் மேல் ஏறி பார்க்கும்போது சுற்றிலும் விளைச்சல் நிலங்கள் நீரில் மூழ்கியிருந்தன. நிலம் நடுவே மஞ்சள் ஆடையுடன் ஓர் கற்பலகை கண்ணில்பட்டது. தாமரை கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்றான். 

பிராகாரத்தில் தீர்த்தங்கரர்களில் பாதங்களும் புதிதாகக் கட்டப்பட்ட தீர்த்தங்கரர்களால் ஆன நவகிரஹ சந்நிதியும் இருந்தது. பாஸ்கரன் சமணர்கள் நவகிரஹ வழிவாட்டிற்காக பிற ஆலயங்களுக்கு செல்வதால் இங்கேயே இத்தகைய சந்நிதியை அமைக்கவேண்டி உள்ளது என்றார்.

தீர்த்தங்கரர்களால் ஆன நவக்கிரஹம்

நவகிரக தீர்த்தங்கரர்கள் அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ற நிறத்தில் செய்யப்பட்டிருந்தனர். எந்தெந்த தீர்த்தங்கரருக்கு என்ன கிரகம், தானியம் போன்ற தகவல்களோடு கல்வெட்டு அங்கே செதுக்கப்பட்டிருந்தது. எப்போதும் இருக்கும் பழைய நவகிரக சன்னதியும் வெளியில் இருந்தது. அது இதற்கு முன் கட்டப்பட்டது என்றார் பாஸ்கரன். கோயிலுக்கு முனிமகராஜ் வரும் ஒவ்வொரு சமயமும் ஏதாவது புதுப்பிக்கப்பட்டு வருவதாக சொன்னார்.

கோவிலுக்கு வெளியே உபாத்தியாயர் வந்தது போல் இருந்தது. பின்னர் பாஸ்கரனே சென்று சாவி வாங்கி வந்து கருவறையை திறந்து காண்பித்தார். ஊர் மக்களும் மடங்களும் சேர்ந்து செய்த தங்கத்தேர் ஒன்றையும் கதவு திறந்து காண்பித்தார். சமணர்களின் எட்டு மங்கலங்களும், சாமரதாரிகளும், வான் தேவர்களும் நிரம்பிய அழகிய பொற்தேர். அந்தக்கணம் திடீரென அந்த கிராம ஆலயத்தில் புஷ்பக விமானம் ஒன்று வந்துவிட்டதைப்போல நின்றிருந்தது. கோவிலில் யுகாதிப்பண்டிகை, நவராத்திரி இவையெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றனர். அருகர் ஆலயத்திற்கு இந்துக்கள் வருகின்றனர். இருசாராருடைய ஆலய ஊர்வலங்களில் மாற்று மரியாதைகள் செய்கின்றனர். விஜயதசமிக்கு ஆலயம் வரவேண்டும் என்றும் கிளம்பும்போது சொல்லியனுப்பினார் பாஸ்கரன்.

கோயிலை சுற்றிக்கொண்டு அந்த மஞ்சளாடை பலகை சிற்பத்தை பார்க்கச் சென்றோம். கோயிலின் நேர் பின்னால் இருந்த வயலில் ஒரு சிறிய புல்தரை மடுவில் நீர் சூழ இருந்தது அந்த கரும்பலகை. சுற்றி வயலும் வரப்பும் ஒன்றாகும்படி தண்ணீர் சூழ்ந்திருந்தது. பலகையின் அருகில் சென்று கொற்றவை என்று தாமரை கூவினான்.

பல்லவர் காலக் கொற்றவையாக இருக்கலாம். ஐந்து அடிக்கு மூன்று அடி நீளம் உடைய கற்பலகையில் செதுக்கப்பட்ட கொற்றவை. மகிடம் மேல் நின்று இருவாட்களும், கேடயமும், சங்கு, சக்கரம்,மணி, வில், ஏந்திய எட்டு கைகளுடன் தோளில் இருபுறம் அம்பராத்துணியுடன் அருகில் மான் இருக்க வான்நோக்கி சரிந்திருந்தாள் புன்னகையுடன். முகம் உடல் அனைத்தும் தேய்ந்திருந்தாலும் அதைத் தாண்டி அவள் முகமும் அருட்கண்களும் நம்மை ஆட்கொள்வன.

வெட்டவெளி வயல், சுற்றி நீர் தேங்கியிருக்கிறது, காற்றும், மழையும், வெயிலும் பொருட்டின்றி நிற்கும் ஒருத்தி. ஐம்பருக்களும் சூழ நிற்கின்றன. காலடியில், வேம்பு, காய்ந்த பூக்கள், விளக்கேற்றும் கூடு, கொஞ்ச தூரத்தில் கரும்பு வயல், வயல்கள் நடுவே ஒற்றை மரம். அந்த இடமே 'தண்' என்றிருந்தது.

கொற்றவை

அடுத்து மேல்சித்தாமூருக்கு செல்ல வேண்டும் மையச்சாலைக்கு செல்வதற்கு பைக்கில் விரைந்த போது சாரைப்பாம்பு ஒன்று எங்களை கடந்து செல்ல பைக்கை அதன் அருகில் சென்று நிறுத்தி அது வயலில் இறங்கி சென்ற பின் கிளம்பினோம்.

**********************

மேல்சித்தாமூர் கோபுரம்

சோழர்கால கல்வெட்டுகளில் சிற்றாமூர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் மேல்சித்தாமூர் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முன்னாலிருந்து சமணத்தலமாக இருந்து வந்திருக்கலாம். இந்த ஊர் சார்ந்த முதல் தொல்லியல் தடயம் முதலாம் ஆதித்தன் காலத்தியது. அக்கல்வெட்டு மலைநாதர் கோயிலில் நந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்காக தானம் வழங்கியதை குறித்தது. மேல்சித்தாமூரில் சோழர் காலம் முதல் நாயக்கர் ஆட்சி காலத்திற்குப் பின்னான கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய மலைநாதர் ஆலயம் 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று சமண அறிஞர் ஏகாம்பரநாதன் சொல்கிறார். மலைநாதர் கருவறையில் இருக்கும் ஒற்றை கல் சிற்பத்தொகுதி பல்லவர் காலத்தில் செதுக்கியதாக இருக்க வேண்டும் என்கிறார். பெரும்பாறையில் செதுக்கப்பெற்று பின்னாளில் பாறையை வெட்டி எடுத்துவிட்டு கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்கிறார். மலை நாதர் ஆலயம் ஒற்றை சன்னதியை உடைய கோயில். அதில் கோமதீஸ்வரர், பார்ஸ்வநாதர், ஆதிநாதர், நேமிநாதர், தர்மதேவி ஆகியோருடைய புடைப்பு சிற்பங்கள் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அந்த கோவிலுக்கு கடைசியாக தான் சென்றோம்.

விழுக்கத்திலிருந்து மேல்சித்தாமூருக்கு பத்தரை மணிக்கு வந்திருப்போம். ஊரில் மக்கள் அவ்வளவாக தென்படவில்லை கோயில் இருந்த சன்னதித்தெரு பெரிய தெருவாக விசாலமாக இருந்தது. இருபக்கம் ஓட்டு வீடுகளும் பழைய செங்கல் வீடுகளும் இருந்தன. கோயிலின் வலது பக்கம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படும் மேல்சித்தாமூர் மடம் இருக்கிறது. மடத்தின் முன் வண்டியை நிறுத்தினேன். உள்ளே நாலைந்து பேர் பட்டாரகரிடம் ஆசி பெற்றுக்கொண்டிருந்தார்கள். கோவிலின் முன் உள்ள தகரக் கொட்டகையில் புதிய கொடிமர வேலை நடந்து கொண்டிருந்தாலும் ஆட்கள் யாருமில்லை. கொடிமரம் 20 அடிக்கும் மேல் இருக்கும். உள்ளே மக்கள் பட்டாரகருடன் பேசிக் கொண்டிருந்ததால் முதலில் கோவிலுக்கு சென்றோம்.

மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடம்

இப்போது மையக்கோயிலாக இருக்கும் பார்ஸ்வநாதர் ஆலயம் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கல் அதிட்டானமும் ஏழுநிலை கோபுரமும் 1865 ஆம் ஆண்டு அபிநவ ஆதிசேன பட்டாரகரால் மக்களிடம் தானமாக பெறப்பட்ட நிதியில் கட்டப்பட்டது. கோபுர அடித்தளத்தில் நாயக்கர் கால புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தன. காளிங்கநர்த்தனர், ராமர் லக்ஷ்மணர், நதிமகளிர் ஆகியோரும் கோபுரநிலைகளில் தீர்த்தங்கரர்களும் இருந்தனர். கோயிலுக்குள் நுழைந்த உடன் கொடிமரத்துக்கான இடம், பலிபீடம் மானஸ்தம்பம் இவற்றோடு இரண்டு புறமும் மண்டபங்கள் இருந்தன. கொடிமரம் திருப்பணியில் உள்ளதால் 5 அடிக்குழியில் மழைநீர் தேங்கியிருந்தது. இடது புறம் உள்ள மண்டபத்தில் பாகுபலி இரும்பு கூண்டுக்குள் இருந்தார்.

அங்குள்ள மானஸ்தம்பம் புஸ்செட்டி என்ற வணிகரால் 1500-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாக கல்வெட்டு சொல்கிறது. மானஸ்தம்பம் நிறைய வேலைபாடுகள் இல்லாமல் ஐந்தடி பீடத்தின் மேல் பத்தடி உயரம் உடையதாக இருந்தது. தூணில் அடிப்பகுதியில் மண்டலமும் அதன் மேல் நான்கு பகுதிகளில் தீர்த்தங்கரர்களும் இருக்கிறார்கள்.

மானஸ்தம்பத்தை அடுத்து மகா மண்டபம் செஞ்சியின் தனித்துவமான 16 அடி தூண்களுடன் உள்ளது. தூண்களில் விஷ்ணு, லக்ஷ்மி, மிருதங்கம் வாசிக்கும் சிம்மமுகன், தர்மதேவி, அறவாழி ஏயந்தியவன், பிரம்மதேவன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. மண்டப கூரையில் சுற்றிலும் அன்னப்பறவைகளுடன் புஷ்பவிதானம் தாமரைகூம்போடு அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தது. 

மகாமண்டபத்தின் வலதுபுறம் மயிலாப்பூரில் இருந்து கொணரப்பட்டதாக சொல்லப்படும் நேமிநாதருடைய ஆலயம் இருந்தது. உயரமான அடித்தளத்துடன் முகமண்டபம் அர்த்த மண்டபம் கருவறை ஆகியவற்றுடன் இருந்தது அந்த உட்கோவில். மண்டபத்தில் பிரிட்டிஷ் இலச்சினை பொருத்திய மேனா ஒன்று இருந்தது. கருவறையில் ஆறடி உயரமுள்ள நேமிநாதர் கருமை பளபளக்க தனிமையிலிருந்தார்.

வெண்முரசில் நேமிநாதருடைய கதை அற்புதமாக எழுதப்பட்டிருக்கும். நேமிநாதருடைய பெயர் காதில் விழும் போதும், படிக்கும் போதும் வெண்முரசின் கதை எழுந்து வராமல் இருந்ததில்லை. எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று காண்டீபத்தில் அர்ஜுனன் சுபத்திரை கல்யாணம். அந்தப் பின்னணியில் நேமிநாதரும் இளைய யாதவரும் வரும் பகுதிகள் கனவை நிறைப்பவை. ரைவதமலைக்குச் செல்ல வேண்டும் என்று காண்டீபம் வாசித்தவுடன் தோன்றியது. 2018-ஆம் ஆண்டு கிர்னார் சென்று நேமிநாதரை தரிசித்தேன். கிர்னார் படிகளில் ஏறும் போது ‘ரிஷப பதம்’ நினைவுக்கு வந்தது. அர்ஜுனன் படிகளில் தாவி தாவி ஏறும் போது அவனுக்கு ஒரு அருகபடிவர் சொல்லும் வழி அது. எருமை போல் அடி அடியாக செல்ல வேண்டும் என்பார். எருமையின் ஆற்றல் ஒவ்வொரு அடியிலும் வெளிப்படுவது நீண்ட தூரம் செல்வது. அருக படிவர்களுக்கே உவமை என்றாகுவது ‘ரிஷப பதம்’ (எருதின் தடம்) என்ற சொல்.

பார்ஸ்வநாதர் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகள் அழகானவை. விமானம் திருக்கோட்டியூர் அஷ்டாங்க விமானத்தை நினைவூட்டுவது. பத்தடி உயரம் உடைய பார்ஸ்வநாதர் சிற்பத்தில் 23 தீர்த்தங்கரர்களும் இடம்பெற்றுள்ளனர். அர்த்தமண்டபத்தில் அஷ்டமங்கலமும் சிறிய பார்ஸ்வநாதரும் உள்ளனர். அவருக்கே தின பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் உபாத்தியார் அபிஷேகம் செய்வித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். இங்கே 24 தீர்த்தங்கரருக்கும் செப்புத் திருமேனிகள் உள்ளன. அவை கண்ணாடி போடப்பட்ட அறைகளில் இருந்தன.

ஜிநவாணி


பிராகாரங்களைச் சுற்றி பிரம்மதேவர், ஜிநவாணி சன்னதிக்கு வந்தடைந்தோம். அங்கே ஒரு வட நாட்டுக் குடும்பம் மலர் மாலையை அனைத்து சன்னதிக்கும் வழங்கி அங்கே அபிஷேகத்திற்காக காத்திருந்தது. அச்சன்னதி முகமண்டப கூரையில் அழகிய மரபான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

சித்தாமூர் ஆலயத்தின் மிக அழகிய சிற்பங்கள் கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலது புறம் இருக்கும் அலங்கார மண்டபத்தில் தான் உள்ளன. இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் கீழ்ப்பகுதியில் அஷ்டமங்கலங்களும் ஏந்திய பெண்களும், மேல் பகுதிகளில் தீர்த்தங்கரர்களும் உள்ளனர். கோவிலுக்கு வழியே தேர்வடிவில் நல்ல கல் மண்டபம் ஒன்று யானைகளுடன் இருக்கிறது. சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். சித்தாமூர் மடத்தின் பட்டாரகரை பணிந்து அருகர்களின் பாதை நூலை சமர்ப்பித்துவிட்டு மலைநாதர் ஆலயத்திற்கு சென்றோம். 

மலைநாதர் ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருந்தனர். கோயிலே சுண்ணாம்புக் கலவையில் ஸ்வேதாம்பர சமணர்களைப் போல் ஆகி விட்டிருந்தது. வாசலிலேயே சங்க நிதியும் பத்ம நிதியும் வீற்றிருந்தனர். பல்லவர்கால புடைப்பு சிற்பம் என்று தெரிந்தது. சன்னதி சாத்தியிருந்ததால் கருவறை சாளரம் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கே வேலை பார்க்கும் வேலையாட்கள் அதை பார்த்து சன்னிதியை திறந்து விட்டனர். வெண்ணிற காடா துணியால் மூடி இருந்த சிற்பம் பல்லவர் காலத்திய செதுக்குச் சிற்பம். நூற்றாண்டுகள் கடந்து சிற்பங்கள் மழுங்கி இருந்தாலும் அதன் கலையம்சம் சற்றும் குறைவில்லாமல் இருந்தது. 

அந்த சிற்ப நிறைகளிலேயே அழகிய சிற்பம் தர்மதேவியுடையது. சிம்மத்தின் மேல் வலது காலை ஊன்றி இடது காலை மடித்து திரிபங்க நிலையில் உயிர் எழிலுடன் நின்றிருந்தாள். இடை வலது புறம் சாய்ந்திருக்க பக்கவாட்டில் மார்பகங்கள் சரிந்திருந்தது. கமுக மரத்தின் கீழ் கால்களுக்கு அடியில் இரு குழந்தைகளுடன் கையில் தாமரை மலர் ஏந்தியவளாக இருந்தாள்.

மலைநாதர் ஆலய கருவறை சிற்பம் 

மதியம் ஆகிவிட்டதால் எந்த வழியில் செல்வது என்று பேசிக்கொண்டு, வந்தவாசி-உத்தரமேரூர் சாலை வழியாக சீயமங்கலம் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

செல்லும் வழியில் சாலை வளைவில் சமணக் கோயில் மானஸ்தம்பத்தின் மேல் உள்ள கந்தகுடி ஒன்று தெரிந்தது. அதை நோக்கிச் சென்றோம். விழுக்கம் கிராமத்தில் பார்த்த அதே பாணியில் அமைந்த ஊர். இருபுறம் ஓட்டு வீடுகளில் ஸ்வஸ்திக் சின்னம் பெயிண்டுகளால் இடப்பட்டு இருந்தது. கோயில் முகப்பு திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர் சற்று தள்ளி உள்ள வீட்டில் கோயில் உபாத்தியார் இருப்பதாகச் சொன்னார்.

மேல்சித்தாமூரில் மடம் அமைக்கப்பட்ட போது சுற்று வட்டாரங்களில் சமண ஆலயங்கள் செய்வித்திருக்கின்றனர். அவ்வாலயங்களில் ஒன்று இது. விழுக்கம் ஆதிநாதர் ஆலய அமைப்பில் மானஸ்தம்பம் சற்று சிறிய அளவில் இருந்தது. அங்கே பிரதிஷ்டை செய்த போது இங்கும் அதே போல் செய்திருக்கின்றனர். நான்கு பக்கங்களிலும் தீர்த்தங்கரர்களுடன் கீழே பத்ம பீடத்தில் அஷ்டமங்கலங்களும் செதுக்கப்பட்டு இருந்தது மானஸ்தம்பம். ஊரின் பெயரை அங்கிருந்த கல்வெட்டின் மூலம் தெரிந்துகொண்டோம், அது அகலூர் ஆதிநாதர் ஆலயம்.

அகலூரிலிருந்து தொண்டூர் சமணப்படுக்கையும் விண்ணாம் பாறை என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் புடைப்பு சிற்பம் செதுக்கப்பட்ட பெரும் பாறையையும் காணச் செல்வது திட்டம். வயல்களுக்கு நடுவில் கூழாங்கற்களை குவித்து வைத்திருப்பது போல் பாறைகளாலான மலைகள் நிறைந்திருந்தது தொண்டூர் சாலை. தொண்டூர் சமணப் படுக்கையில் கிடைத்துள்ள இரண்டு வரி பிராமி கல்வெட்டு நமக்கு கிடைத்துள்ள பழைய தமிழ் கல்வெட்டுகளில் ஒன்று. அகலூரைச் சேர்ந்த இளம்காயிபன் என்பவன் சமணர்களுக்கு அறம் வழங்கிய செய்தி தமிழ்-பிராமி வடிவில் எழுதப்பட்டுள்ளது.

வாயொன்று திறந்து இருப்பது போல் சமணப் படுக்கைகள் இருந்த குகை திறந்திருந்தது. அதில் ஏறிச் செல்வதற்கு வெட்டி செதுக்கிய பாறை படிக்கட்டுகள் இருந்தன. வெளியில் இருப்பதைவிட உள்ளே குளிர்ச்சியானதாக இருந்தது. குளிர்ந்த சமண படுக்கைகள் ஏதோ இருப்பை நமக்கு செலுத்திக் கொண்டிருந்தன. எத்தனை சமண படிவர்கள் அந்த கல்படுக்கையில் படுத்தும் ஊழ்கத்தில் ஆழ்திருப்பார்களோ.

குகையின் வலது வாயோரத்தில் மூன்று பேர் பள்ளிகொள்ள வசதியான பாறைகள் தலையணையோடு செதுக்கப்பட்டிருந்தது. தலையணையிலிருந்து படுத்தால் உடல் சரிசமமாக படுப்பதற்கு ஏற்றார் போல் வெட்டி இருந்தனர். எதிர் பக்கம் பார்ஸ்வநாதர் உருவம் மெல்லிய கோடுகளால் பாறையில் தீட்டப்பட்டு இருந்ததை இப்போது மேலும் செதுக்கி எடுத்திருந்தனர்.

தொண்டூர் சமணப் படுக்கை

சமண படுக்கை மூன்று பெரும் பாறைகள் ஒன்றையொன்று தழுவி அதன் மேல் பெரும் பாறையை கொண்டது. மேல் உள்ள பாறை எப்பொழுதும் விழ காத்திருப்பது போல் இருந்தது. மழை நீர், பாறை இடைவெளியில் வழிந்து அருகபடிவர்களின் படுக்கைக்கு கீழே ராட்சசன் ஒருவரின் வாயிலிருந்து நீர் கொட்டுவது போல படிகளில் இறங்கி செல்லும் என்று நினைத்து கொண்டேன். சமணர் படுக்கையில் அமர்ந்து வான்வெளியை பார்க்கும்பொழுது அனைத்துக்கும் எத்தனை தொலைவில் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இங்கே சமணப்படிவர்கள் வான்நோக்கி அமர்ந்திருந்தது போல் இங்கிருந்து சற்று தள்ளி திருமாலும் வான் நோக்கி வெட்ட வெளியில் படுத்திருக்கிறார். பிற்கால பல்லவ மன்னன் நந்திவர்மன் செதுக்கியதாக சொல்லப்படும் திருமாலின் பெரும் பாறைச் சிற்பம் ஒன்று இருக்கிறது.

எங்களை அங்கு அழைத்துச்சென்றது அங்கே வசிக்கும் பள்ளிச் சிறுவர்கள். அங்கே நிறைய அதிகாரிகள் வந்ததாகவும் அந்தப் பாறையில் எழுதி இருந்ததை படியெடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள். ஒருவன் தான் அதில் தொண்டூர் என்பதை படித்ததாகவும் நாங்கள் மீண்டும் வரும்பொழுது கல்வெட்டு முழுவதும் படித்து காட்டுவதாகவும் சொன்னான்.

திருமால் பாம்பனையின் மேல் இரு காது குழைகளும் தோளிலிருந்து மார்பில் தொங்க, வான் நோக்கி படுத்திருந்தார். இங்கே செதுக்கி வேறு எங்கோ கொண்டு செல்லும் நோக்கம் இருந்திருக்கலாம். மேல்பகுதி பலகை வெட்டப்பட்டுள்ளது. இருபுறமும் வெட்டிக்கொண்டிருக்கையில் கைவிட்டு சென்றிருக்கலாம்.

விண்ணாம் பாறை

அங்கிருந்து சீயமங்கலம் வழியாக உத்திரமேரூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில் செல்லலாம் என்று நினைத்தோம். சீயமங்கலம் செல்லும்போது சூரியன் கீழ் இறங்கத் தொடங்கி விட்டது. மாலையானதால் சீயமங்கல பல்லவர் குடவரையை காண முடியவில்லை. சமண குடைவரைக்கு சென்றோம்.

சமணப்படுக்கை ஒரு பாறைமேல் இன்னொரு பாறை அமர்ந்தது. அதில் பார்ஸ்வநாதர், பாகுபலி ஆகியோர் செதுக்கப்பட்டிருந்தனர். உள்ளே சிமெண்டாலான தரை போடப்பட்டு தீர்த்தங்கரர்கள் இருந்தனர்.

சீயமங்கலம் ஆலயம்

குடைவரையை பார்த்துவிட்டு மேலே பாறையிலமர்ந்து பேசிக்கொண்டே மலை மேல் இருந்து வயல்களை பார்த்துக் கொண்டிருந்தோம். சூரியன் மேற்கில் முழுவதும் மறைந்து சிவப்புத் திட்டுக்கள் மட்டும் வானில் தெரிந்தன. அங்கிருந்து கீழிறங்கினோம். சீயமங்கலம் நோக்கி செல்லும் வழியில் பாறை ஒன்றில் கொற்றவையை குங்குமத்தால் வரைந்திருந்தனர். அருகில் அகல் விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. காலையில் வயல் நடுவே அவளை பார்த்து விட்டு பயணத்தை தொடங்கினோம் முடிக்கும் போதும் அவளைக் கண்டது நிறைவே.

அனங்கன்

எருதின் தடம் -  1