![]() |
| யோசேப்பு பொன்னிற தானிய மணிகளை சேகரித்தல். ஓவியர் Lawrence Alma-Tadema (1874) |
இந்தியப் பண்பாட்டில் 1650 முதல் 1950 வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. யுகசந்தி என்றே சொல்லிவிடலாம். மத சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம், பழமையை உதறி நவீனம் நோக்கி, காலனி ஆட்சியை உதறி ஜனநாயகம் நோக்கி என சுதந்திர இந்தியாவை உருவாக்கிய அடிப்படை விசைகள் அனைத்தும் ஒருங்கே இந்தியக் களத்தில் தொழிற்பட்ட காலம் அது. அந்த அடிப்படை விசைகளுக்கு சாரம் அளித்தவைகளில் இந்து மெய்ஞான தரப்பின் சொற்கள் அளவுக்கே பிற மெய்ஞான தரப்புகளின் சொற்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக கிறிஸ்துவின் சொற்களுக்கு.
வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் கிறிஸ்துவம் என்பதன் விதை கிறிஸ்து எனும் ஞானியின் சொற்கள்தான் என்பது விளங்கும். அந்த ஞானச் சொற்களை முதன் முதலாக நெஞ்சில் ஏந்தியவர்களை யூதமதம் துரோகி என்றே கருதி வேட்டையாடியது. பின்னர் கிறிஸ்துவின் வார்த்தைகளை பின்பற்றும் எவரும் யூதராகவும் அதில் இருந்து பிரிந்த கிறிஸ்துவர் ஆகத்தான் இருக்கவேண்டும் என்ற நிலையை கடந்தது அனைவரையும் உள்ளே இழுக்க துவங்கியது கிறித்துவின் சொற்கள். அதை முறைப்படுத்தி பரப்பி பொதுமக்களை அந்த சொற்களின் கீழ் திரட்டிய சபை ஊழியர்கள் எல்லோரும் அரசனுக்கு அவன் அரியணைக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சுமத்தி நெருப்பில் வீசப்பட்டார்கள். இதற்கெல்லாம் மீறி கிறிஸ்துவின் சொற்களை ஏற்ற மக்களின் எண்ணிக்கை பெருகியபோது வேறு வழியே இன்றி அந்த மக்களின் அரசனும் கிறிஸ்தவன் ஆனான். கான்ஸ்டன்டைன் காலத்துக்கு பிறகு வரை தொடர்ந்து பைபிள் தொகுக்கப்பட்டு, சபையும் அரண்மனையும் ஒருங்கே ஒப்புக்கொண்ட இன்றைய பைபிளின் புதிய ஏற்பாடு செயல்பாட்டுக்கு வந்தது. அதன் மையமாக இருந்தது ஏசுவின் சொற்கள்தான்.
பைபிள் கொண்ட ஞான சொற்கள் வழியே அரசு சபை அதிகாரத்துக்கு வந்ததும், ஒடுக்குமுறை வேறு வடிவம் எடுத்தது. பிற மத வழிபாடுகள் அரசு அதிகாரம் வழியே அழிக்கப்பட்டன. பைபிளுக்கு எதிரானது என்று சொல்லி அறிவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு எரிக்கப்பட்டார்கள். வரலாறு நெடுக தொடர்ந்த இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் இதே பைபிளில் மையமாக இருந்த ஏசுவின் ஞானவாத சொற்களையே தங்கள் பதாகையாக கொண்டார்கள். அமெரிக்காவின் கறுப்பின போராட்டம் வரை இதுவே வரலாறு.
பைபிள் அடிப்படைவாதம் ஓங்குந்தோறும் கிறிஸ்துவ ஞானவாத தரப்பு மேலெழும் தன்மையைதான் மார்டின் லூதர் கிங் வாழ்விலும் காண்கிறோம். கூடன் பர்க் நூல்களை அச்சிடும் முறையை கண்டுபிடிக்கிறார். கண்டுபிடிக்கும்போதே அந்த கருவி அரசு அதிகாரத்துக்கு வெளியே மக்கள் மையப்பட்டதாக இருக்கிறது. அந்த இயந்திரத்தில் அச்சு கோர்க்க, லத்தின் மொழி கொண்ட லிபி மிக எளிய வழியாக இருக்கிறது (இதற்கு 100 ஆண்டுகளுக்கு பிறகே அரபி லிபி அச்சு மொழியாக மாறுகிறது. இதை கொண்டு அந்த தொழில்நுட்பத்தில் லத்தின் லிபி கொண்ட எளிமையையும், அதன் வழியே லத்தின் ஆங்கிலம் கொண்ட பண்பாட்டு மேலாதிக்கத்தையும் ஒருவர் யூகித்து உணரலாம்). எளிய முறையில் அச்சு கோர்க்க கிடைத்த எளிய லிபி வழியே முதன்முதலாக சபைகளின் கட்டுப்பாட்டில் இருந்து பைபிள் விடுதலை அடைந்து மக்கள் கைகளுக்கு சென்று சேர்ந்தது. இதன் பகுதியாகவே லூதர் கிங் உருவாக்கிய புரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவம் உருவானது. சபைகளில் கடவுள் இசையாக புழங்கிய ஞானப்பாடல்களுக்கு (ஹைம் - Hymn) மாற்றாக, மக்கள் கூடிப் பாட மக்கள் மொழியில் இசையில் கிறிஸ்துவ கீர்த்தனைகளும் இந்த காலத்தில்தான் உருவாக்கம் கண்டது.
இந்த சீர்திருத்த கிறிஸ்துவம் தமிழ் நிலத்துக்குள் சீகன் பால்கு வழியாக வருகிறது. தமிழ் நிலத்துக்குள் நவீன காலத்தை கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவர் அவர். அவரது அச்சுக் கூடம், அவர் தமிழில் அச்சிட்ட பைபிள், அவர் துவங்கிய பள்ளி இவற்றை இப்போதும் தரங்கம்பாடியில் பார்க்கலாம். சமத்துவம், கல்வி, உணவு, உறைவிடம், மருத்துவம் என்ற அடிப்படைகள் பலருக்கும் கிட்டாத ஒரு நிலையில் அவற்றை வழங்கும் ஏசுவின் சொற்களோடுதான் கிறிஸ்துவம் தமிழ் நிலத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து இதற்கும் பிறகே பிற இயக்கங்கள் இந்த களத்தில் பணி செய்ய வருகிறது.
![]() |
| சீகன் பால்கு |
கீழைத்தேயவியல் அறிஞர்கள் பலரும் கிறிஸ்துவர்கள். ஜெர்மன் ஆங்கிலம் அளவுக்கே சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் கற்றவர்கள். அவர்கள் வழியாகவே மொழிசார்ந்த நவீன ஆய்வுகள் இங்கே தமிழ் நிலத்தில் முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் வழியாகவே சைவம் வைணவம் உள்ளிட்ட இன்னபிற தமிழ் மொழியின் அறிவுத் தளத்திலும், தமிழ் மொழி மக்கள் மத்தியில் புழங்கும் நிலையிலும் உள்ள அடிப்படைகள் துலங்கி வந்தன. தமிழ் நிலத்துக்கு வந்த கிறிஸ்துவம் தமிழ் நிலத்துக்கான தனித்தன்மை கொண்ட கிறிஸ்துவம் என்ற நிலையை இந்த இரண்டு நிலைகளில் இருந்தே ஸ்தாபித்தது.
அன்று தமிழ்ப் புலவர் என்ற தகுதியை அடைய சில தேர்வுகள் உண்டு, அதில் முக்கியமானது காவியம் இயற்றும் வல்லமை. இலக்கியங்களில் காப்பிய காலம் என்றோ முடிந்து இன்றைய நவீன யுகம் தொடங்கிவிட்ட நிலையிலும் இதுவே அப்போதைய நடைமுறை. அன்றைய கிறிஸ்துவ காப்பிய ஆசிரியர்கள் பலர் இந்த தமிழ் தகுதி தேர்வில் வென்று கிறிஸ்துவ பண்பாட்டை தமிழ் அறிஞர்கள் மத்தியில் உரையாட செய்த நிலையே நாம் காணும் கிறிஸ்துவ காப்பியங்கள் பல. அறிஞர் மத்தியில் புழங்கிய அளவுக்கே கிறிஸ்துவம் எளிய மக்கள் மத்தியில் புழங்க உருவானதே கிறிஸ்துவ கீர்த்தனைகள். தியாகராஜர் ராமா கருணையில்லையா என்று என்ன ராகத்தில் கீர்த்தனை பாடி இருப்பாரோ, அதே ராகத்தில் தேவா கருணை இல்லையா என்று ஒருவர் அதே காலத்தில் கிறிஸ்துவ கீர்த்தனை பாடி இருப்பார். சைவ வைணவ பக்தி எந்த இசையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து இயக்கமாக மாறியதோ அதே வழியில் இதுவும் நிகழ்ந்தது.
தமிழ் நிலத்தில் முழு மகாபாரதத்தை முதன் முதலாக அச்சுக்கு கொண்டு வர ஒருவர் சொத்து முதல் உயிர் வரை எல்லாவற்றையும் இழந்தார். ஒருவர் ஓலையில் உள்ளது எல்லாவற்றையும் அச்சுக்கு கொண்டு வர வாழ்நாள் முழுக்க பணி செய்தார். ஆறுமுக நாவலர் சைவ அறிவு முழுமையையும் அச்சுக்கு கொண்டு வரும் பணியில் இருந்தார். தமிழ் நிலத்தின் சைவ வைணவ மடங்களின் கொண்ட ஓலைகள் பல பல புனித பூட்டுகளுக்கு பின்னே, தீட்டு எதுவும் பட்டுவிடாது பாதுகாப்பாக இருந்தது. ஊரெங்கும் பஞ்சம். இங்கேதான் தமிழ் கிறிஸ்துவம் தனது சேவைகள், கல்வி, அறிவு தரப்புக்கான காப்பியங்கள், மக்கள் தரப்புக்கான கீர்த்தனைகள் இவற்றுடன் தமிழ் சமூகத்தின் முக்கியமான பண்பாட்டு அலகாக மாறியது. அபிரகாம் பண்டிதர் வளமான கிறிஸ்துவ கீர்த்தனைகள் வழியே திரண்டவர். அதன் நீட்சியே தமிழிசை சார்ந்த அவரது பணிகள்.
சுதந்திர இந்தியாவின் தமிழ் நிலத்தில் பல்வேறு காரணிகள் கூடி, கிறிஸ்துவ காப்பியங்கள், கீர்த்தனைகள் சமூகத்தின் புழக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல மறைந்தன. இங்கேதான் இன்று தமிழ் கிறிஸ்தவத்தின் ஆளுமைகளை, கீர்த்தனைகளை, காப்பியங்களை தேடித் தொகுத்த ஆய்வாளர் ஞானசந்திர ஜாண்சன் அவர்களின் பணி முக்கியத்துவம் கொள்கிறது. பழைய ஏற்பாட்டில் யாக்கோபின் மகனான யோசேப்பு எகிப்து அரசனான பார்வோனின் கனவுகளுக்கு பலன்கூறும் இடமொன்று வருகிறது. ஏழாண்டு கால பஞ்சத்திற்காக உணவை சேர்த்து வைக்குமாறு யோசேப்பு கூறுவார். ஜாண்சன் அவர்கள் செய்து கொண்டிருக்கும் பணி அவ்வாறு வரவிருக்கும் காலத்தை எதிர்கொள்ள பொன்னிற தானிய மணிகளை சேகரிப்பதை ஒத்தது.
மதம் என்பது பல்வேறு பண்பாட்டு அடிப்படைகளுடன் பிணைந்துள்ளது, ரஷ்யாவின் கிருஸ்தவத்திற்கும் இந்தியாவின் கிருஸ்தவத்திற்கும் என்ன வேறுபாடு, நிலத்தின் பண்பாட்டுக்கூறுகளுடன் ஏற்றும் மறுத்தும் நிகழும் விவாதம்தானே அடிப்படையில் மாறுதலாக அமையமுடியும். இன்றைய அரசியல் தரப்புகள் மதங்களை துருவப்படுத்தி அதன்மூலம் தங்கள் அரசியல் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றன. ஆனால் இந்த போட்டி முயற்சிகளால் எக்காலத்திலும் இந்தியாவின் ஆன்மாவை மாற்றிவிடமுடியாது என்றே நம்புகிறேன்.
எது இந்தியப் பண்பாட்டின் சாரமோ அதை நோக்கி சமூகம் திரும்பி வரும் நிலை மீண்டும் வரும். அப்போது நமது சாரம் எதுவோ அதை கண்டுகொள்ள அதன் கூறுகள் நம்மிடம் எஞ்சி இருக்க வேண்டும் அல்லவா? ஆய்வாளர் ஞானசந்திர ஜாண்சன் அவர்களின் பணி இந்த இடத்தை சேர்ந்தது. இந்த பகைப்புலத்தின் பின்னணி கொண்டே அவரது ஆய்வுகளின் முக்கியத்துவம் அமைகிறது. திரும்பிச் சென்று, தமிழ் நிலத்தின் பண்பாடு இந்திய நிலத்தின் பண்பாடு எதுவோ அதை நாம் மீண்டும் கண்டுகொள்ள ஜாண்சன் அவர்கள் தனது வாழ்நாளை இட்டு சேகரித்து அளித்திருக்கும் நிதியமே, நாம் மறந்துபோன கிறிஸ்துவப் பனுவல்கள் சார்ந்த அவரது ஆய்வுப் பணிகள். தமிழ் நிலத்தின் வளம் கொண்ட சொத்து அவரது ஆய்வுப் பணிகள்.
![]() |
| யோ. ஞான சந்திர ஜாண்சன் |
2026 ஆம் ஆண்டுக்கான தூரன் தமிழ் விக்கி விருது பெறும் ஆய்வாளர் ஞானசந்திர ஜாண்சன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கமும்.
கடலூர் சீனு
யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki


.jpg)