![]() |
| St Francis Xavier in South India |
இயேசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையரின் வருகையால் கிறித்தவம் தமிழகத்தில் கி.பி. 52 ஆம் ஆண்டு முதல் பரவியது. தோமையருக்குப் பின்னர் பல்வேறு அயல்நாட்டவர்களின் வருகையின் மூலம் கிறித்தவம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. அர்மீனியர்களின் வரவால் கிறித்தவம் மேலும் தழைத்தது. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல் வழி கண்டுபிடித்ததன் மூலம் போர்ச்சுக்கீசியர் தமிழகம் வந்தனர். இதைத் தொடர்ந்து இயேசு சபைத் துறவியர்களின் வருகை அதிகரித்தது. 1541 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் சவேரியார் கோவா வந்திறங்கி, தமிழகப் பகுதிகளில் இறைப்பணியும் சமூகப் பணியும் ஆற்றினார். இவரைத் தொடர்ந்து இறைப்பணியாளர்கள் தமிழகம் வந்து சமயப்பணியாற்றியதுடன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தனர். அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்து, அச்சு எழுத்துக்களை உருவாக்கி, காகிதத் தொழிற்சாலை நிறுவி நூல்கள் பதிப்பித்தனர். பல்வேறு வகையான இலக்கியங்கள் படைத்தும், மொழிபெயர்த்தும், எழுத்துச் சீர்திருத்தம் செய்தும் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டனர்.
![]() |
| அண்டிரிக் அடிகளார் (Hentry Henriquez) |
புனித சவேரியாரைத் தொடர்ந்து வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அண்டிரிக் அடிகளார் (Hentry Henriquez) ஆவார். இவர் தம்பிரான் வணக்கம் (1578), கிரீசித்தியானி வணக்கம் (1579) என்னும் நூல்களை கொல்லம், கொச்சி என்னும் இடங்களில் அச்சிட்டு வெளியிட்டார். இவ்விரண்டு நூல்களின் மூலமே அன்றைய மக்கள் கிறித்தவ சமயத்தின் உண்மைகளைச் சிறிது அறிந்து கொண்டனர். இந்நூல்களைத் தொடர்ந்து அடியவர் வரலாறு என்னும் நூலை 1586 ஆம் ஆண்டு வெளியிட்டார். இக்காலக்கட்டத்தில் அண்டிரிக் அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புன்னைக்காயலைச் சேர்ந்த அந்தோனி என்பவர் சந்தந்தோனியார் அம்மானை (புனித பதுவை அந்தோனியார் அம்மானை) என்னும் நூலை எழுதினார். இதுவே முதன் முதலாக தமிழில் வெளிவந்த கிறித்தவச் சிற்றிலக்கிய நூலாகும். ஆனால் இந்நூல் முதல் பதிப்பாக 1892 ஆம் ஆண்டுதான் இலங்கையில் வெளியிடப்பட்டது. தமிழ் அச்சுக்கலையின் தந்தை அண்டிரிக் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலத்தில் புன்னைக்காயல், கொல்லம், கொச்சி ஆகிய இடங்களில் காணப்பட்ட அச்சகங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்திருக்கலாம்.
![]() |
| புனித பதுவை அந்தோனியார் (Anthony of Padua) by Francisco de Zurbarán, 1627–1630 |
கிறித்தவ இலக்கிய வகைமைகளில் சிற்றிலக்கியம் அதிக அளவில் படைக்கப்பட்டுள்ளது. தமிழராகிய அந்தோனியைத் தொடர்ந்து கிறித்தவச் சிற்றிலக்கியங்களை வீரமாமுனிவர் படைத்தார். இவரது திருக்காவலூர் கலம்பகம், அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரி அம்மாள் அம்மானை, தேவமாதா பிள்ளைத்தமிழ், கருணாம்பாள் பதிகம் ஆகியன கிறித்தவச் சிற்றிலக்கியங்களுக்குப் பாதையமைத்துக் கொடுத்தன. வீரமாமுனிவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் கிறித்தவ உண்மைகளை எளிமையாக விளக்க சிற்றிலக்கியத்தை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டனர். பூரணி என்னும் புதுவகைச் சிற்றிலக்கியத்தைக் கிறித்தவப் படைப்பாளர்கள் அறிமுகப்படுத்தினர். சிற்றிலக்கியங்களிலே மிகப்பெரிய சிற்றிலக்கியமாக முத்திவழி அம்மானை திகழ்கிறது. கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. இவற்றில் பல அழிந்துவிட்டன என்பது வருத்தத்திற்குரியது.
வீரமாமுனிவருக்குப் பின்னர் சீர்திருத்தச்சபையைச் சார்ந்த வேதநாயக சாஸ்திரியார் ஏராளமான சிற்றிலக்கியங்களைப் படைத்தார். அவற்றுள் பெத்லகேம் குறவஞ்சி, ஞான அந்தாதி, ஞான உலா, பெண்டிர் விடு தூது, வேதவினாவிடை அம்மானை, ஞானக்கும்மி, சாஸ்திரக் கும்மி, செபமாலை, பராபரன் மாலை, கால வித்தியாச மாலை, தியானப் புலம்பல், ஞானக் கும்மி, சாஸ்திரக் கும்மி, ஞானவிடு தூது, பேரின்பக் காதல், பரமநீதிப் புராணம் என்னும் நூல்கள் குறிப்பிடத்தக்கன. சாஸ்திரியாரைத் தொடர்ந்து அருள்திரு. சி. மாசிலாமணி பல சிற்றிலக்கியங்களை இயற்றியுள்ளார். அவற்றுள் சிலுவைத் தியானம், இரட்சணியநாதர் பதிகம், உற்பவ மஞ்சரி, திருச்சிளுவை அந்தாதி, சத்தியசபை விளக்கச் சதகம், கிறிஸ்துவின் பிரசன்னக் கும்மி, மதுபானக் கண்டனக் கும்மி, யுகாந்தத் தீபச் சிந்து போன்றவை குறிப்பிடத்தக்கச் சில நூல்கள் ஆகும். வேதநாயக சாஸ்திரியாருக்குப் பின்னர் ஒரு நூற்றாண்டு கழித்து திட்டூர் தேசிகர் அதிக அளவில் சிற்றிலக்கியங்களைப் படைத்தப் பெருமைக்குரியவராகிறார். திட்டூர் தேசிகர் எழுதியவற்றுள் திட்டூர்க் கலம்பகம், கிளிகீதை, செல்லப்பிள்ளைத் தாலாட்டு, நன்னாட்டம், மெய்ஞ்ஞான மாலை, அருணோதய மாலை, மாணிக்க மாலை, கிறிஸ்தேசு மாலை, போற்றி மாலை, திருநாம மாலை, கருணானந்த சாவளி, ஞானரஞ்சிதக் கும்மி, ஆனந்தக் கும்மி, திரியேக அம்மானை, அருளம்மானை என்பன குறிப்பிடத்தக்கன. இவர்களைப் போன்று கிறித்தவ இலக்கியப் படைப்பாளர்கள் பலர் ஏராளமான சிற்றிலக்கியங்களைப் படைத்து கிறித்தவ இலக்கியத்திற்குப் பெருமையும் வளமையும் சேர்த்துள்ளனர்.
![]() |
| வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi) |
தமிழில் சிற்றிலக்கியங்கள்
தொல்காப்பியர் சிற்றிலக்கியத்தை,
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே
(செய்யுளியல், நூ. 131)
எனக் குறிப்பிடுகிறார். பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியத்தைப் பிரபந்தம் என்னும் வடமொழிச் சொல்லால் குறிப்பிடுகின்றன. பிரபந்தம் என்பதற்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருளாகும். இச்சொல் தமிழில் தொகை, திரட்டு என்னும் பொருள்களில் கையாளப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தனித்தமிழ் இயக்கம் பரவியபோது சிற்றிலக்கியம் என்னும் தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட்டது. சிற்றிலக்கியங்களின் வகை தொண்ணூற்றாறு என பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இவ் எண்ணிக்கையை முதன்முதலாகக் குறிப்பிடும் நூல் பிரபந்த மரபியல் என்பதாகும். வீரமாமுனிவர் தமது சதுரகராதியில் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைத் தொண்ணூற்றாறு எனச் சுட்டுகிறார். இலக்கியமும் இலக்கிய வகைங்களும் காலந்தோறும் வளர்ந்து வரும் தன்மையன. அதனால் இன்றைய இலக்கிய வளர்ச்சியினால் புதுவகையிலான சிற்றிலக்கியங்கள் ஏராளமாகத் தோன்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிற்றிலக்கியம் என்ற சொல் தன் முதற் பொருளை இழந்து, காப்பியப் போக்கற்ற சிறிய இலக்கியங்கள் அனைத்தையுமே குறிப்பிடக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது எனலாம். பெரும்பாலான சிற்றிலக்கியங்கள் பக்தி இலக்கியங்களாகவே காணப்படுகின்றன.
கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் வகைமை
கிறித்தவத்தின் இரு பிரிவுகளான கத்தோலிக்கம் மற்றும் சீர்திருத்த திருச்சபையைச் சார்ந்தவர்கள் தங்கள் பிரிவின் பின்னணியை வைத்துப் பல்வேறு வகைமையிலான சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளனர். சீர்திருத்தச் சபையிலுள்ள கிறித்தவர்களின் சிற்றிலக்கியங்களில் சமூகச் சீர்திருத்தம், அறிவுரைகள், இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள், சிலுவைப்பாடுகள், விவிலியச் செய்திகள் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. கத்தோலிக்கர்களின் பெரும்பாலான படைப்புகளில் அன்னை மரியாவின் சிறப்பு, சிலுவைப் பாடுகள், புனிதர்களின் வரலாறு போன்றவை முக்கியமாக இடம்பெற்றுள்ளன.
கிடைக்கப்பெறாத சிற்றிலக்கியங்கள்
![]() |
| சி. மாசிலாமணி |
பத்தொன்பதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட சிற்றிலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காதது மிகவும் வருத்தத்திற்குரியதே. வேதநாயக சாஸ்திரியாரின் ஞானவிடு தூது, கோலேப் ஐயருக்கு எழுதிய சீட்டுக்கவி, தேவசகாயம் பிள்ளை மரணப் புலம்பல், வேதநாயகன் சதகம்; தேவவரம் முன்ஷியாரின் திருட்டாந்த மாலை, சிந்துகவி மாலை; அருள்திரு. சற்குணம் வின்பிரெட் எழுதிய தாவீதரசன் அம்மானை; ஜான் பால்மர் எழுதிய மேசியா விலாசம், பேரானந்தக் கும்மி; வேதமாணிக்கம் நாடார் எழுதிய வேதப்பொருள் அம்மானை; அருள்திரு. அ. வேதக்கண் எழுதிய இலங்கைக் கும்மி; அருள்திரு. சி. மாசிலாமணி எழுதிய சிலுவைத் தியானம், இரட்சணியநாதர் பதிகம், உற்பவ மஞ்சரி, திருச்சிளுவை அந்தாதி, சத்தியசபை விளக்கச் சதகம், கிறிஸ்துவின் பிரசன்னக் கும்மி, மதுபானக் கண்டனக் கும்மி; திட்டூர் தேசிகர் எழுதிய பூரண மாலை, ஔஷத மாலை, சமுத்திர மாலை, அடியடைப் பதிகம், அடைக்கலப் பதிகம், அருமையேசுப் பதிகம், அழைத்தற் பதிகம், ஆள்வாய் பதிகம், இயேசுநாமப் பதிகம், கிறிஸ்து பதிகம்; புன்னையடியூர் சு. யோசேப்பு உபதேசியார் எழுதிய கற்பலங்காரன் மாலை; தேவசகாயம் எழுதிய சிலுவை வியாகுல பூரணி எனச் சிலவற்றைக் குறிப்பிடலாம். இவ்வ வரையறைக்குள் அடங்காத நூல்கள் இன்னும் ஏராளம்! ஏராளம்!!. அருள்திரு. மாசிலாமணியின் சத்தியசபை விளக்கச் சதகம் என்னும் நூலிலிருந்து சான்றுக்கு ஒரு பாடல் பின்வருமாறு:
பாவிகளின் நேசரிவரே;
பயந்தவர்க்குறுதியிவர், படையிலே ஜெயமுமிவர்
படும்பணியில் பண்டிதரிவரே;
நிசமான கதியுமிவர், துன்பத்திலின்பமிவர்
நிகரில்லாச் சீவனிவரே;
நீதிபரிசுத்தமிவர், மீட்பு மெய்ஞானமிவர்
நிலையான பாக்யமிவரே;
அசைவற்ற மலையுமிவர் சுடரிருளில் ஒளியுமிவர்
அடைக்கலம் படைக்கலமிவரே;
அரிய சஞ்சீவியிவர், ஆபத்துக்குதவியிவர்
ஆன்ம உபகாரியிவரே;
திசை பிசிகில் லெக்குமிவர், கப்பலில் நங்கூரமிவர்
திரைகடலின் கரையுமிவரே;
சேனாதிபதியுமிவர், சமஸ்தமிவர், இவர்க்குநிகர்
செகத்துண்டோ? பெரியோர்களே.
இப்பாடலில் இயேசு பெருமான் பசித்தவர்க்கு அப்பம் போன்றவர்; பொருளற்ற வறியவர்க்கு செல்வம் போன்றவர்; பிறரால் வெறுத்து ஒதுக்கப்படும் பாவிகளையும் நேசிப்பவர்; அஞ்சியவர்களின் அச்சத்தைப் போக்கி நெஞ்சில் உறுதி தருகின்றவர்; வீரர்களுக்கு வெற்றியை வழங்குகின்றவர்; நோயுறும்போது மருத்துவர் போன்றவர்; உண்மையின் மோட்சநிலையாக இருப்பவர்; துன்ப வேளைகளில் இன்பம் தருகின்றவர்; தன்னேரில்லா ஆன்மா ஆனவர்; நீதிமானாகவும் பரிசுத்தமானாகவும் இருக்கின்றவர்; ஆன்மாக்களுடைய மீட்புக்குரிய மெய்ஞானமாகத் திகழ்கின்றவர்; நிலைத்த புண்ணியமாக ஆனவர்; அசைவற்ற மலை போன்றவர்; இருள் நேரத்தில் சுடர் போன்றவர்; அல்லலுறும் ஆன்மாக்களுக்கு அடைக்கலமானவர்; எதிரிகளை வெல்லும் படை போன்றவர்; உயிர் காக்கும் மூலிகை போன்றவர்; ஆபத்தில் உதவுகின்றவர்; ஆன்மாவுக்கு அருள் தருகின்றவர்; வழிதடுமாறுகிறவர்களுக்கு உண்மையான திசையாக இருப்பவர்; அலையும் கப்பலை அலையாமல் நிலைநிறுத்தும் நங்கூரம் போன்றவர்; அலைகளை உடைய கடலுக்குக் கரை போன்றவர்; இறைப்படைக்குத் தலைவர்; இவருக்கு நிகரானவர்கள் இவ்வுலகில் வேறு ஒருவருமில்லை பெரியோர்களே என இறைவனின் பெருமைகளை ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
சிற்றிலக்கியங்களின் கருப்பொருள்
கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் தமிழின் பெருமைக்கும், கிறித்தவ இலக்கியத்தின் வளமைக்கும், விவிலியச் சிறப்பிற்கும் சான்று பகர்வனவாக உள்ளன. இச்சிற்றிலக்கியங்கள் பல்வேறு கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. இயேசு கிறிஸ்து, மரியம்மை, புனிதர்கள், விவிலிய மாந்தர்கள், திருத்தல வரலாறு போன்றவை சிற்றிலக்கியங்களின் கருப்பொருள்களாகும். எனினும் பேரின்பமே இந்நூல்களின் மையப் பொருளாக அமைகிறது. கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் மக்களிடம் இறையுணர்வை மேம்படுத்த இயற்றப்படுவதால் பிற சிற்றிலக்கியங்களில் காணப்படும் சிற்றின்பச் செய்திகள் களையப்படுகின்றன.
தழுவல்முறையில் அமைந்த சிற்றிலக்கியம்
ஜான் பனியனின் பில்கிரிம்ஸ் பிராகிரசின் மொழிபெயர்ப்பான மோட்சப் பிரயாணம் என்னும் தமிழ் நூலை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான சிற்றிலக்கியம் முத்திவழி அம்மானையாகும். இதன் ஆசிரியர் சுவீகரனார் ஆவார். இரட்சணிய யாத்திரிகத்திற்கு முன்னர் படைக்கப்பட்டது முத்திவழி அம்மானை என்பது குறிப்பிடத்தக்கது. சிற்றிலக்கியங்களிலே இது பேரிலக்கியம் எனச் சொல்லும் வகையில் அளவில் மிகப்பெரியதாக அமைந்துள்ளது.
மரபு மாற்றம்
கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் சிற்றின்பத்தைத் தவிர்த்துப் பேரின்பத்தை மையப்பொருளாகக் கொண்டுள்ளன. ஆதலால் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் பிற சிற்றிலக்கியங்களிலிருந்து மாறுபட்டனவாக விளங்குகின்றன. வீரமாமுனிவரின் அடைக்கல மாலை என்னும் நூலின் தலைப்பின் கீழ் உலா எனப் பெயரிட்டுள்ளது. பெண்களின் காதலுணர்வைப் பேசும் பின் பகுதிகளை விட்டு விடுகிறார். இதனால்தான் உலா எனப் பெயரிடாமல் மாலை எனப் பெயரிட்டுள்ளார். வீரமாமுனிவரின் திருக்காவலூர் கலம்பகம் பிற கலம்பக நூல்களிலிருந்து மாறுபட்டுள்ளது. கிறித்தவத்தை மையமாகக் கொண்டு பல புதிய உறுப்புகள் சேர்க்கப்பட்டும் சமயக் கொள்கைகளுக்குப் பொருந்தாத பல உறுப்புகள் நீக்கப்பட்டும் உள்ளன. சான்றாக புயவகுப்பு, தவம், வண்டு, ஊசல், மறம், வலைச்சியார், இடைச்சியார், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், தூது ஆகிய துறைகளில் பல மாற்றங்களைக் கையாண்டுள்ளார். மேலும் தமது கொள்கைகளுக்கு ஒவ்வாத பிச்சியார், கொற்றியார், களி ஆகிய உறுப்புகளைக் களைந்துள்ளார். ஆனால் சமூக உல்லாசம், செபமாலை, ஞான நீராட்டு என்னும் புதிய துறைகளைத் தம் மத ஒழுங்குகளுக்கேற்ப இணைத்துள்ளார். திருநெல்வேலியைச் சார்ந்த கனகப்பன் என்பவர் படைத்துள்ள நடுத்தீர்வை உலாவில் உலக முடிவில் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களையும், மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் குறிப்பிட்டு அந்திக் கிறிஸ்துவின் வருகையையும் கூறி இறுதியில் இறைவன் நியாயந்தீர்க்க மேக மண்டலங்களின் வழியாக வருவார் எனக் கூறுகிறார். இந்நூலில் இயேசு நாதர் ஆன்மாக்களின் நடுவில் உலா வருவதாகப் பாடப்பட்டுள்ளது. இந்நூலிலும் ஏழு பருவப் பெண்டிர் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
வேதநாயக சாஸ்திரியாரின் பெண்டிர் விடுதூது நூலில் ஆண்கள் எத்தகையப் பெண்களைத் திருமணம் செய்ய வேண்டும் எனப் பட்டியலிடுகிறார். இந்நூலில் திருமணம் செய்து கொள்ளும் வாலிபரும் கன்னியரும் எங்ஙனம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. பெண்கள் வாலிபருக்கு விடுத்த தூதாகையால் பெண்டிர் விடுதூது எனப் பெயர் பெறுகிறது. வேதநாயக சாஸ்திரியாரின் ஞான உலா பிற உலா நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது. இந்நூலில் ஏழு பருவ மகளிரின் வருணனைகள் இடம்பெறவில்லை. இவ்வுலாவின் முதல் நிலை, தலைவனான இயேசு கிறிஸ்துவின் சிறப்பைப் பாடுவது; இரண்டாம் நிலை, இறைவனைச் சார்ந்து வாழும் தன்னைக் காப்பாற்ற வேண்டுவது என்பதாகும். வேதநாயக சாஸ்திரியாரின் ஞானப் பள்ளு என்னும் நூலில் பள்ளு நூல்களில் பொதுவாக இடம்பெறும் மூத்தபள்ளி, இளையபள்ளியை ஏசுதல் போன்ற செய்திகள் இடம் பெறவில்லை. வேதநாயக சாஸ்திரியார் எழுதிய பெத்லகேம் குறவஞ்சியில் கிறிஸ்து நெறிக்குப் பொருந்தாதனவற்றை நீக்கியுள்ளார். சான்றாக ஏழு பருவ மகளிர் வருணனைகள், தலைவியின் உருவ வருணனைகள் ஆகியனவற்றையும் சிங்கன், சிங்கி ஆகியோரது உரையாடலில் வரும் சிற்றின்பச் செய்திகளையும் கிறித்தவத்திற்குப் பொருந்தாத சடங்குகளையும் உரையாடல்களையும் தவிர்த்துள்ளார். சான்றாக,
அத்தனையும் குடித்துப் போட்டு ஆர்பிறகே தொடர்ந்தாளோ?
என்று சிங்கன் குற்றாலக்குறவஞ்சியில் பேசுகின்றான். ஆனால் இச்சூழலை வேதநாயக சாஸ்திரியார் தமது பெத்லகேம் குறவஞ்சியில்,
ஆத்திரமாய் நின்று குடித்து தானந்தமாய் நிற்கிறாளோ?
என கிறித்தவர்களின் புனித நற்கருணை என்னும் திருவிருந்து குறித்து சிங்கன் பேசுவதாக மாற்றி அமைத்துள்ளார். மேலும் குற்றாலக்குறவஞ்சி சிங்கயின் அணி அலங்காரத்தை,
நறுங்குழலிற் செச்சை சூடி
கொலைமதர்க் கண்மையெழுது
மாத்திரைக்கோல் வாங்கி
மணிக்கூடை தாங்கி
எனக்குறிப்பிடுகிறது. ஆனால் வேதநாயக சாஸ்திரியார் தமது பெத்லகேம் குறவஞ்சியில் விசுவாசக் குறவஞ்சி நீதியினாடை அணிந்து, நானாபரண வேத செபமாலை புனைந்து, மெய்ஞ்ஞானமுடன் ஆதியமலனைப் பணிந்து வருவதாக விவரிக்கிறார். மேலும் பெத்லகேம் குறவஞ்சியில் சாஸ்திரியார் கிறிஸ்து நெறிக்குப் பொருந்தாத தரைமெழுகிக் கோலம் போடுதல், நிறை நாழி நெல் அளந்து, பிள்ளையார் உருப்பிடித்து வைத்து, அதற்கு அருகம்புல் சார்த்தி பழம் போன்றன படைத்தல், பைம்பொன் கும்பம் வைத்தல் போன்றனவற்றை விட்டுவிட்டார்.
![]() |
| வேதநாயகம் சாஸ்திரி |
அறிவுரைகள்
கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் மக்களுக்கு அறிவுரை பகரும் இலக்கியங்களாகவும் அமைந்துள்ளன. அவற்றுள் வேதநாயக சாஸ்திரியாரின் சாஸ்திரக் கும்மி, பெண்டிர் விடுதூது, மாசிலாமணியின் மதுபானக் கண்டனக் கும்மி, திட்டூர் தேசிகரின் கருணானந்த சாவளி, சவரிமுத்து உடையாரின் சேசுநாதர் சதகம், ஜி.எஸ். வேதநாயகரின் ஆடவர் கும்மி, மாதர் கும்மி போன்ற நூல்களைச் சான்றாகச் சுட்டலாம். சாஸ்திரக் கும்மியில் ஆசிரியர் சமுதாயத்தில் காணப்படும் தீமைகளைக் கடுமையாகச் சாடுகிறார். இந்நூலில் மூடநம்பிக்கைகளை அகற்றும் வகையில் பல கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதுபோன்று சாஸ்திரம் பார்த்தல், தீண்டாமை போன்றவற்றைச் சுட்டிக் காட்டி சீர்ப்படுத்துகிறார். குறிப்பாக, பெண்களின் உரிமைகள் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்கிறார். சாஸ்திரியார் மக்கள் சாஸ்திரம் பார்ப்பதை,
சந்தைக்குப் போகவும் சாஸ்திரம் பார்த்து
இரப்பு இரக்கவும் சாஸ்திரம் பார்த்தால்
எங்கே ஈடேறுவாய் ஞானப் பெண்ணே
எனக் கண்டனக் குரல் விடுக்கிறார். தன்னிடம் உள்ள பொருட்களை விற்பனை செய்ய சாஸ்திரங்களைப் பார்த்துக் கொண்டும் சந்தைக்குச் செல்ல சாஸ்திரம் பார்த்துக் கொண்டும் பிறரிடம் கெஞ்சி இரந்து கேட்பதற்குச் சாஸ்திரம் பார்த்துக் கொண்டும் இருந்தால் உன்னால் எப்படி ஈடேற முடியும் எனக் கேட்கிறார். மேலும் தீண்டாமைக் குறித்து,
மனுசனைத் தொட்டு ஸ்நானம் செய்தாய்
மாட்டைப் பார்க்கிலும் மனுசன் இளப்பமோ
மறுமொழி கொடு ஞானப் பெண்ணே
எனக் கோபத்தொனியுடன் வினா எழுப்புகின்றார். அதாவது வீட்டில் கட்டியுள்ள மாட்டினை தொட நேர்ந்தால் அதற்காக நீராடாத நீ, மனிதனைத் தொட்டதற்காக நீராடினால் மாட்டைக் காட்டிலும் மனிதன் குறைபட்டவனா என்னும் இந்தக் கேள்விக்கான மறுமொழியைக் கொடு என்கிறார். சாதி வேறுபாட்டினைக் கண்டித்து,
ஆதத்தின் புத்திரர் மாத்திரம் தானலோ
பின்னனைநீர் எப்படிச் சின்ன குலங்கள்
பெரிய குலங்கள் என்றே சொல்லிப் பேசலாம்
எனக் குரல் கொடுக்கின்றார். இவ்வுலகில் இருக்கும் மக்கள் அனைவரும் ஆதாமின் மக்களாக இருக்கின்றபோது அவர்களை அன்னியராகவும் சிறிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நீ எவ்வாறு உயர்வு தாழ்வுபடுத்திப் பேசமுடியும் என்பது அக்கண்டனக் குரலாகும். பெண்டிர் விடுதூது நூலில் எத்தகைய பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்றும் எத்தகையப் பெண்களைத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் ஆண்களுக்கு அறிவுரை கூறுகிறார். மதுபானக் கண்டனக் கும்மியில் மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகளை விவரிக்கின்றார். கருணானந்த சாவளியில்,
இயன்ற மட்டும் உபகாரம் செய்வோம் பிறர்க்கே
வல்லபரன் எங்கட்கிரங்கியதாலே அவர்
மகிமையைத் தேசமெங்கணும் கூறுவோம்
நீணிலத் துண்டோரை சாதிக் புள்ளே
உறு நிற பேத மாதி கொள்ளும் வேதம்
உரையா தெய்வ தேடு ஒருவாறுமே
என மனிதர்கள் வேற்றுமையின்றி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். சேசுநாதர் சதகம் கடவுள் மோசேக்குக் கொடுத்த பத்து கற்பனைகளை விவரிப்பதுடன் மனிதனுக்குத் தேவையான எல்லாவிதமான அறிவுரைகளையும் வழங்கும் பெட்டகமாகத் திகழ்கின்றது. ஆடவர் கும்மியில் ஆடவர்களுக்கும், மாதர் கும்மியில் பெண்களுக்கும் அறிவுரைகளைக் கூறுகிறார். மாதர் கும்மி நூலில் கிறித்தவக் கருத்துகள் நிறைந்திருப்பினும் பெண் விடுதலை, வரதட்சணைக் கொடுமை, சமுதாய மறுமலர்ச்சி பற்றிய கருத்துகள் மேலோங்கி உள்ளன. பெண்களின் வாழ்க்கைக்குரிய இலக்கணங்களும் செயல்முறைகளும் மாதர் கும்மியில் விவரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் ஆடம்பரத்தை விரும்பக்கூடாது என்பதற்குப் பல கருத்துகளை முன்வைத்து வலியுறுத்துகிறார். பெண்கள் வீட்டில் எங்ஙனம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
புதுமை
வேதக்கண் எழுதிய அதிசயக் கும்மி என்னும் நூல் பிற சிற்றிலக்கியங்களிலிருந்து புதுமையாக உள்ளது. இந்நூலில் இயேசு கிறிஸ்து செய்த 33 அற்புதங்களும், மக்களுக்குக் கூறிய உபதேசங்களிலுள்ள 30 உவமைகளும் சில நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. அற்புதங்களை விவரிக்கும் பாடல்களைத் தொடர்ந்து வரும் 24 பாடல்கள் விவிலியத்தில் காணலாகும் ஆண்டுகளைக் குறிப்பிட்டு, அவ்வாண்டில் நடந்த நிகழ்வுகளை விவரிப்பனவாக அமைந்துள்ளன. கிறித்தவக் கும்மி நூல்களில் எளிமையானதாகவும் புதுமையானதாகவும் இந்நூல் காணப்படுகிறது.
முற்றுருவகம்
உவமையையும் பொருளையும் வேறு வேறாக நிறுத்துவது உவமையாகும். உவமையையே பொருளாகக் கூறுவது உருவகமாகும். நூல் முழுவதும் உருவகத் தன்மையில் அமைந்திருந்தால் அதை முற்றுருவகம் (Allegory) என்பர். மேற்போக்கான கதையுடன் மறைபொருள் கொண்டுள்ள தொடர்ச்சியான ஒரு கதையை இச்சொல் குறிக்கும். வேதநாயக சாஸ்திரியார் முற்றுருவக அடிப்படையில் பெத்லகேம் குறவஞ்சி, ஞான அந்தாதி ஆகிய சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். பெத்லகேம் குறவஞ்சியின் தலைவராக இயேசு கிறிஸ்துவும், சீயோன் மகளாகிய திருச்சபை தேவமோகினியாகவும் படைக்கப்பட்டுள்ளனர். விசுவாசம் குறவஞ்சியாகவும், யோவான் ஸ்நானகன் கட்டியங்காரனாகவும், குரு சிங்கனாகவும், அந்திக் கிறிஸ்து கள்ளக் குறவனாகவும் உருவகிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறிகூறல் திருவாக்குக் கூறுவதாகவும் கட்டியம் உரைத்தல் அருளுரையாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன. பெத்லகேம் குறவஞ்சியின் மாந்தர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் உருவகமாகப் படைக்கப்பட்டுள்ளன. ஞான அந்தாதியில் கிறிஸ்து மணவாளனாகவும், திருச்சபை மணவாட்டியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நூலில் இறை மக்களைப் பறவைகளாகவும் விவிலியத்தை வலையாகவும் உருவகித்துள்ளார். இக்கருத்தமைந்த பாடல்,
வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே
செழித்த மெஞ்ஞானப் பட்சிகள் மூச்சுடுஞ்
சேர வந்து பட்டுக் கிட்டுக் கத்திக்கத்தி
என்பதாகும். ஞான அந்தாதியில் கிறிஸ்து மணவாளனாகவும் திருச்சபை மணவாட்டியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளனர். சாஸ்திரக் கும்மியில் ஞானப் பெண்ணுக்குக் கூறும் பெயர்கள் அனைத்தும் உருவகமாக உள்ளன. குழந்தைகளைக் குறிப்பிடும் பெயர்களும் உருவகத்தில் அமைந்துள்ளன. வேதநாயக சாஸ்திரியாரின் ஞானப் பள்ளு உருவகப் போக்கில் அமைந்துள்ளது.
நாயகன் நாயகி பாவம்
![]() |
| எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை |
ஓர் இலக்கியப் படைப்பு பல்வகை உத்திகளைக் கொண்டதாகும். உத்திகள் கவிஞனின் திறனைக் காட்டுவதுடன் பனுவலை வாசிக்கின்றவனுக்கு அவை இன்பம் பயப்பனவாகும். அத்தகைய பல்வேறு உத்திகளில் நாயகன் நாயகி பாவம் என்பது முக்கியமான உத்தியாகும். இந்தியாவைப் பொறுத்தமட்டும் இறைவன் ஒருவனே ஆண் எனவும், ஏனைய ஆன்மாக்கள் பெண் எனவும் கொள்வது பல சமயங்களின் மரபாகும். அதுவே நாயகன் நாயகி பாவம் எனப்படும்.
விவிலியத்திலுள்ள உன்னதப்பாட்டு, ஏசாயா நூலின் பல பகுதிகள், எசேக்கியேல் நூலின் சில பகுதிகள், வெளிப்படுத்துதல் நூலின் சில பகுதிகள் நாயகன் நாயகி பாவத்தில் அமைந்துள்ளன. எனவே உன்னதப்பாட்டை எழுதிய சாலமோன் அரசனின் காலத்திலிருந்தே நாயகன் நாயகி பாவம் என்னும் அமைப்பு முறை நிலவி வருகின்றது. சாலமோன் அரசனின் காலம் இயேசு கிறிஸ்துவுக்கும் ஆயிரம் ஆண்டுகள் முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துவைக் காதலனாகவும், திருச்சபையைக் காதலியாகவும் வைத்துப் பாடுவது நாயகன் நாயகி பாவம் என்னும் முறையாகும். கிறித்தவக் கவிஞர் வேதநாயக சாஸ்திரியார் இறைக் காதல் அல்லது நாயகன் நாயகி பாவம் என்னும் இம்மரபினைப் பின்பற்றி பேரின்பக் காதல், ஆரணாதிந்தம், ஞான உலா, ஞான அந்தாதி, பெத்லகேம் குறவஞ்சி என்னும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். ஞான அந்தாதியில் ஞான மணவாளனாகிய கிறிஸ்துவை, ஞான மணவாட்டியாகிய திருச்சபை அடையத் துடிக்கும் செய்தி விளக்கப்பட்டுள்ளது. நூலின் காப்புச் செய்யுளில்,
வான மணவாளன் மகிழவே - யானதனை
உன்னதக்கீ தத்துரையாய் ஓதினன் நூறின் கவிக்குக்
கன்னி மகன் பாதமலர் காப்பு
எனப் பாடுகிறார். விவிலியத்திலுள்ள உன்னதப்பாட்டை ஞான அந்தாதிக்கு முதனூலாகக் கொண்டதை இக்காப்புப் பாடலில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது. ஞான மணவாட்டி ஞான மணவாளனைப் பல இடங்களிலும் தேடியும் காணாது தவிக்கின்றாள். இந்த நிலையினை வேதநாயக சாஸ்திரியார்,
இளைத்தனள் முக்தி பெறத் துடித்தனள்
எனப் பாடுகிறார். ஞான அந்தாதியிலுள்ள நாயகன் நாயகி பாவம் ஜா.சே. வேதநாயகரின் நித்தியானந்தக் காதல் என்னும் சிற்றிலக்கியத்துடன் ஒப்பிட்டு நோக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சாஸ்திரியாரின் ஞான உலாவில் நாயகன் நாயகி பாவத்தில் அமைந்துள்ள தலைவியின் நிலை,
ஒன்றும் கருதலையே ஊணுமில்லை உறக்கமில்லை
என்றும் என்மேற்பகை கொண்டனன் நான்இனியென் செய்குவேன்
நான்சொல்வாரிலை சொல்லார்க்கு நானொரு நங்கையே
என விவரிக்கப்பட்டுள்ளது. பெத்லகேம் குறவஞ்சி நூலில் உலாவரும் நாயகன் இயேசு கிறிஸ்து ஆவார். அவர் மேல் காதல் கொள்ளும் நாயகி தேவமோகினி எனப்படும் சீயோன் மகளாம் திருச்சபையாகும். எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை இரட்சணிய மனோகரத்தில் ஆன்ம பிரலாபம் என்னும் பகுதியிலுள்ள 29 பாடல்களை நாயகன் நாயகி பாவம் என்னும் தன்மையில் படைத்துள்ளார். தன் தலைவனின் அன்பை நினைந்து,
தெரிமுகத் துற்ற மெழுகென இளகியுள் உடைவாள்
திருமுகச் செவ்விகாண் குறுஞ் செவ்வி நீளிதெனக்
கருமுகிற் றுளி காண்குறாப் பயிரெனக் கரிவாள்
எனத் தலைவி பாடுவதாக ஆன்மப் பிரலாபத்தில் பாடல் இடம்பெற்றுள்ளது. இவைபோன்று இப்பகுதியிலுள்ள பாடல்கள் அனைத்தும் நாயகனைப் பிரிந்து நாயகியாகிய உயிர்படும் துன்பநிலையினையும் இறைவனை அடைவதற்கு ஏங்கித் தவிக்கும் தன்மையினையும் வெளிப்படுத்துகின்றன.
சிலுவைப்பாடுகள்
![]() |
| ஜா.சே. வேதநாயகர் |
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை விவரிக்கும் சிற்றிலக்கியங்களாக சிலுவைத் தியானம், சிலுவை வழி அம்மானை, சிலுவை வியாகுல பூரணி, சிலுவைத் தியான மாலை, நெஞ்சுருவு கட்கம், வியாகுல மாதாவின் புலம்பல், அன்னை அழுங்கல் அந்தாதி முதலியன உள்ளன. அன்னை அழுங்கல் அந்தாதியில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் உருக்கமான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளன. தனது மகனின் நிலையைக் கண்ட மரியாளின் துன்பநிலையை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. நெஞ்சுருவு கட்கம் என்னும் நூலின் ஆசிரியர் ஜா.சே. வேதநாயகர் ஆவார். நெஞ்சுருவு கட்கம் என்பதன் பொருள் "இதயத்தை ஊடுருவிப் பாய்ந்த வாள்" என்பதாகும். இயேசு கிறிஸ்துவின் பாடுகளைப் பார்த்த மரியானின் புலம்பலாக இந்நூல் அமைந்துள்ளது. தன் கண் எதிரே துன்புறுத்தப்படும் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பார்த்து,
பொன்போல் வளர்த்த திருமேனி சோரிப்
புனல்பாய்ந்து காயம் நிறைய
வான்பாவி காணும் முன்னமே இறக்க
வரமே கிடைக்க இலையே!
தனியே திரும்பும் எனையே
எங்கே உன்நேச மகன்என் பவர்க்கு
எதுகூ றுவெனென் மகனே!
என மரியாள் கதறுவது படிப்பவர் நெஞ்சத்தை உருக வைக்கின்றது. ஜே.சி. சுந்தரம் படைத்துள்ள சிலுவை வழி அம்மானை என்னும் நூலில் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்குவதை,
சாவத்தைப் போக்கவே, தற்பரன் தொங்குகின்றார்.
எனப்பாடுகிறார். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகள் கற்போர் நெஞ்சத்தைக் கரைய வைக்கும் வகையில் அமைந்து படைப்பாளர்களின் திறனை வெளிப்படுத்துகின்றன.
தமிழ்ப்பற்று
தன் தாய்மொழியை நேசிப்பது அனைவருக்கும் பொது என்றாலும் இலக்கியம் படைக்கின்ற படைப்பாளிக்கு அது உயிர்நாடியான ஒன்றாகும். குறிப்பாக சிற்றிலக்கியம் சொல்லணி, பொருளணி ஆகியன மிக்கு விளங்குவது. அவற்றைச் செறிவாகவும் அழகாகவும் அமைக்க சொற்களஞ்சியப் பெருக்கம் இன்றியமையாததாகும். தமிழ்மொழி ஈடு இணையற்ற வளமிக்கதாகத் திகழ்கின்றது. ஆகவே சிற்றிலக்கியம் படைக்கும் கவிஞர் தமிழின் வளத்தை அறிந்து வியப்பது வியப்பான ஒன்றன்று. அத்துடன் தாய்மொழிப் பற்றும்கேர, சிற்றிலக்கியங்களில் தமிழை, அதன் தன்மைகளை உணர்வு பூர்வமாகக் கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்மீது தீராக் காதல் கொண்ட வீரமாமுனிவர் கித்தேரியம்மாள் அம்மானையில்,
தமிழ்வாழும் தென்மலைமேல் தந்தையயால் வந்தெழுந்தாள்
எனக் கதைத் தலைவியின் சிறப்பைக் குறிப்பிடும்போது தமிழின் சிறப்பைக் குறிப்பிடுகிறார். மேலும் கனகப்பன் என்பவர் தமது நடுத்தீர்வை உலாவில்,
நீயே உதவி செய்வாய் நேராக - ஓயாமல்
என நூல் எழுத இறைவனிடம் துணை கேட்கும்போது தமிழ்ப் பற்றினை வெளிப்படுத்துகிறார். மேலும் தொன்போசுகோ பிள்ளைத்தமிழ் என்னும் நூலில் பாவலர் தில்லை எழிலன்,
அஞ்சு இலக்கணம் கொஞ்சிடும் பாட்டென அழகு கொழித்தவனே
அழகு தமிழென அமுதத் தமிழென அகிலம் வியந்தவனே
எனத் தமிழின் ஐந்திலக்கணத்தையும் தமிழுக்கும் அமுதென்று பேர் என்பதனையும் நினைவூறுத்தி பாடலடிகளை நூலில் எழுதியுள்ளார்.
![]() |
| தொன்போசுகோ (Saint John Bosco) |
உவமை
ஒன்றினை மற்றொன்றோடு ஒப்புமைப்படுத்தி இதுபோல் இது உள்ளது எனக் கூறுவது உவமையாகும். உவமை கருத்துத் தெளிவிற்காகவும் அழகுணர்ச்சிக்காகவும் பேச்சிலும் கவிதையிலும் இடம்பெறுகிறது. வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கு நிலைகளில் வரும் உவமைகளைச் சரியான இடத்தில் நுட்பமாக அமைத்துப் பாடுவது கவிஞனின் ஆற்றலைக் காட்டுவதாகும். பொதுவாக சிற்றிலக்கியங்கள் அழகியற் பண்பை சிறப்பாகப் போற்றிக் கொள்ளுகின்றன. கிறித்தவச் சிற்றிலக்கியமான சிலுவை வழி அம்மானையில் அதன் ஆசிரியர் ஜே.சி. சுந்தரம் இயேசு கிறிஸ்துவின் முதுகில் பட்ட காயங்களை,
வார் செய்த சால்வரிசை வள்ளல்மேல் எத்தனையோ
எனப் பாடுகிறார். இயேசு கிறிஸ்துவின் உடல், உழவன் உழுத நிலத்தைப் போல் காணப்பட்டது என உவமையின் மூலம் விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிற்றிலக்கியங்களிலே பெரிய இலக்கியமான முத்திவழி அம்மானையின் ஆசிரியர் சுவீகரனார். இவர் இந்நூலில் பலவிதமான உவமைகளைக் கையாண்டு நூலைப் படைத்துள்ளார். ஆசிரியர் நிழலைப் பற்றி குறிப்பிடும்போது வித்தியாசமான உவமையைக் கையாண்டுள்ளார். விசனங்களை எவ்வளவுதான் மடக்கி வைக்க முயன்றாலும் முடியாது என்பதனை விவரிக்க, எவ்வளவுதான் முயன்றாலும் நிழலைக் குழி தோண்டிப் புதைக்க முடியாததைப் போல என்னும் உவமையைக் கையாண்டுள்ளார். இதை,
முழுநாளும் தானேமுயலும் ஒருமானிடன் போல
அடக்கி வைத்துப் பார்த்தாலும் அவனுடைய மெய்வசனம்
மடக்கி வைக்கக் கூடாமல் மனதில் வந்து பொங்குமாம்
என்று பாடுகிறார். வேதநாயக சாஸ்திரியார் தமது சாஸ்திரக் கும்மி என்னும் நூலில் மனிதனது இழிநிலையைக் குறிப்பிட்டு அவனைத் திருத்த விரும்புகிறார். இதனை ஒரு உவமையின் வாயிலாக விளக்குகிறார். அப்பாடல் பின்வருமாறு:
பிசாசைப் பாடிப் பணம் பறித்து
நாயைப் போல் உன் வயிறு வளர்ப்பது
ஞாயமோ சொல்லடி ஞானப் பெண்ணே
இப்பாடலில் பல இழிந்த பாதைகளின் வாயிலாகப் பணம் பறித்து நாயைப் போல வயிற்றை வளர்க்கின்றாயே என உவமையின் மூலமாகக் கேள்வியினை விடுக்கின்றார் சாஸ்திரியார்.
பழமொழிகள்
பழமொழி, முதுமொழி, சொலவாடை என்று பலவகையாக அழைக்கப்படும் பழமொழிகள் ஒரு சமுதாயத்தின் அறிவு விளைச்சலாகும். நுண்மை, ஆழம், தெளிவு, அழகு, சுருக்கம் ஆகிய பண்புகளுடன் அமைகின்ற பழமொழிகள் வாழ்வியல் அனுபவங்களால் விளைந்த கனிகளாகும். செவ்வியல் இலக்கியவாதிகளும் இந்த நாட்டுப்புற அறிவு வடிவத்தை விதந்து போற்றிக் கொண்டாடியுள்ளனர். தொல்காப்பியர் இதனை முதுசொல் என்று குறிப்பிடுகின்றார். இதன் பெருமையை உணர்ந்து சங்கம் மருவியகால புலவர் முன்றுறையரையனார் ஒவ்வொரு பழமொழியையும் ஒரு பாடலில் வைத்து நானூறு பாடல்களில் பழமொழி நானூறு என்னும் நூலை இயற்றியுள்ளார். பின் வந்த படைப்பாளிகள், நவீன இலக்கியவாதிகள் வரையிலும் இப்பழமொழிகளைத் தங்கள் படைப்புகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
கிறித்தவச் சிற்றிலக்கியங்களில் உவமைகளைப் போன்று பழமொழிகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவை ஆசிரியரின் அனுபவ வெளிப்பாட்டையும் புலமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. முத்திவழி அம்மானையில்,
வீட்டிலே கறி சமைத்து விருந்துக்கு உதவாது
என்னும் பழமொழியை இன்னும் அறியாயோ நீ
என்று பயணிகளிடம் பிடிவாதன் கேட்பதாக அமைத்துள்ளார். எழுதுகின்ற ஏட்டில் சுரைக்காய் என்று எழுதி வைத்திருந்தால் அதனைக் கொண்டு வீட்டில் கறி சமைத்து விருந்து உண்ண முடியாது என்னும் பழமொழியை இன்னும் நீ அறியவில்லையா? என்பது இதன் பொருளாகும். இதில் பழமொழியின் அழுத்தம், சொல்லும் செய்தியின் இன்றியமையாமை ஆகியன புலப்படுகின்றன. வேதநாயக சாஸ்திரியார் சாஸ்திரக்கும்மியில் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமோ என்னும் பழமொழியினை,
ஊர்க் குருவி பருந்தாகுமோ
உயர்ந்து தன்னடை அன்னம் நடக்கிட
உள்ளதும் போமல்லோ ஞானப் பெண்ணே
என்னும் பாடலில் கையாண்டுள்ளார். பெத்லகேம் குறவஞ்சியில் சாஸ்திரியார் காற்றுள்ள போதே தூற்றிக்கோ என்னும் பழமொழியை அடிப்படையாகக் கொண்டு,
கண்ணுள்ள போதே தோற்றிக்கோ
ஊற்றுள்ள போதே யிறைத்துக்கோ திரு
வுரையுள்ள போதே நிறைத்துக்கோ
எனப் பாடுகிறார். இப்பாடலில் சாஸ்திரியார் காற்றுள்ள போதே பதரை அகற்றத் தூற்றிக் கொள்; இரு கண்கள் உள்ள போதே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்; ஊற்றுத் தண்ணீர் உள்ள போதே இறைத்துக் கொள்; மேன்மையான வார்த்தைகள் உள்ள போதே நிறைவாக்கிக் கொள் என்று வலியுறுத்துகிறார். வாழ்க்கை இருக்கும் போதே விவிலியத்தைப் படித்து அதன்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துவதில் மக்கள் பொதுவாகப் பயன்படுத்தும் பழமொழிகளை எடுத்தாண்டுள்ளார்.
வருணனை
ஒன்றை வருணித்துக் கூறுவது வருணனை எனப்படும். ஒரு பொருளின் வடிவம், நிறம், உள்ளடக்கம் ஆகியவற்றால் தாக்கப்பட்டு மகிழ்வுறும் மனம், அப்பொருளைப் போற்றிக் கொண்டாடுகின்ற பான்மையில் அதன் பல்வேறு பண்புகளை உவமை, உருவகம் முதலியவற்றோடு பலப்பட புகழ்ந்துரைத்தல் வருணனை ஆகும். ஒன்றனை வருணிப்பதற்குக் கற்பனைஆற்றல் அடிப்படையாக அமைகின்றது.
கிறித்தவச் சிற்றிலக்கியங்களில் காணலாகும் பிள்ளைத்தமிழ் நூல்களில் வருணனைகள் இடம்பெற்றுள்ளன. சான்றாக இயேசுபிரான் பிள்ளைத்தமிழ் நூலில் அதன் ஆசிரியர் அருள். செல்லத்துறை,
கடலின் அலைமேல் வருநிலவோ
கண்ணின் ஒளிவிண் மீனொளிரயோ
கண்ணோ கயலோ கருவண்டோ
சோலை மலரோ சுடர் பொன்னோ
சூரிய னொளிசெய் காழகமோ
தொண்டர் உளத்தில் நின்னுருவம்
சுவைக்கும் தமிழோ கனிச்சாரோ
மாலைத் தென்றல் அதுதானோ
மயக்கும் வீணை இசைதானோ
என இயேசு கிறிஸ்துவாகிய பாலகனை வருணிக்கிறார். இயேசு பாலகன் காலை வேளையில் எழும் கதிர் போல எழில் பொருந்திய முகத்தினை உடையவன்; கடல் அலைகளின் மேல் வருகின்ற நிலவு போன்றவன்; அவனது கண்களின் ஒளி விண்மீன்களின் ஒளி போன்றவை; அவனது விழிகள் மீன் போலவும் கருவண்டு போலவும் இருப்பன; சூரியன் போல ஒளிவிடுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் அவனது உருவம் தமிழைப் போலவும் கனிச் சாற்றைப் போலவும் இனிப்பது; மெல்லத் தழுவும் தென்றல் போலவும் வீணையின் மயக்கும் இசை போன்றதும் ஆகும். இவ்வருணனையில் தமிழும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அருள். செல்லத்துறை இயற்றியுள்ள இயேசுபிரான் பிள்ளைத்தமிழ் நூலிலுள்ள,
கொத்திக்கால் கீழ்ப் றித்துக்
கூட்டமாய் நோட்டம்பார்த் திட்டபின் ஒப்பாமற்
குத்திட்டுக் கோழி பார்க்க
கட்டிய முத்துச் சரத்தினால் ஒச்சிட்டுக்
கைகொட்டித் தான்ம கிழவாய்!
கட்டவிழ் முத்துக்கள் தாக்கிட மாங்கொத்து
காம்பிற்று வீழ்ந்து நீரை
முட்டிய தார்பொய்கை விட்டிறை நீர்வான்
முத்தென்று தண்ட லேவாழ்
மொய்த்தகண் தோகையா டுற்றபொய் மையெண்ணி
மொட்டுக்கை தட்டி மகிழ்வாய்!
என்னும் பாடலையும் சான்றாகச் சுட்டலாம். இப்பாடலில் பச்சைக்கற் குவியலைக் கால்களால் கீறிய கோழிகள் முத்துக்கள் உள்ளிருந்து கிடைக்க, அவை தானியங்களா என நோட்டம் பார்த்து, அவை தானியங்களாக இல்லாமல் இருப்பதைக்கண்டு திகைத்து நிற்கும். அந்தக் கோழிகளைக் கையிலுள்ள முத்துச் சரத்தினை எறிந்து விரட்டி, அவை சிதறி ஓடுவதைக் கண்டு, கை கொட்டிச் சிரித்து மகிழ்வாய். அந்தச் சரம் அறுந்து முத்துக்கள் சிதறும். அம்முத்துக்களைக் கொண்டு மாங்கனியை அடித்து வீழ்த்துவாய். மரத்திலிருந்து விழுந்த மாங்கொத்து கீழுள்ள பொய்கையில் விழும். அதனால் தெறிக்கின்ற நீர்த் துளிகளை மழைத் துளிகள் என எண்ணி மயங்கி மயில்கள் தோகை விரித்தாடும். இவ்வாறு அவை ஏமாந்து ஆடுவதைக் கண்டு கை கொட்டிச் சிரித்து மகிழ்வாய் என ஆசிரியர் தம் வருணனைத்திறனால் விவரிக்கிறார். மேலும் சூ. தாமஸ் அவர்கள் வேளை மரியன்னை பிள்ளைத்தமிழ் என்னும் தமது நூலில்,
பொழில்சார் தெங்கின் மிசையேறிப்
புகலும் முகவின் கலைபறித்துப்
போடும் இளநீர் கயத்துறலால்
தத்தும் வாளைக் குலம்மோதத்
தடஞ்சேர் மேதி மடிசுரந்து
தாழும் பணையிற் புகுந்துவரத்
தகரும் சாலி யொடுகரும்பும்
முத்தம் சொரியும் கழனியெலாம்
முளரிச் செடியும் ஆம்பலுமே
மொய்த்த களையாய்ப் பறித்தெறிய
முகிழ்த்த வளத்தால் மகிழ்ந்தெவரும்
நத்தும் வேளை நகர்க்கரசி!
என வேளை நகரைப் பற்றி வருணனை நயத்துடன் பாடுகிறார். இப்பாடலில், புத்தம் புதிய மலர்களை மலர்விக்கும் பொழில்களிலுள்ள மரங்களின் மீதேறி, ஆண் குரங்கு இளநீர்க் காயினைப் பறித்துப் போடும். அவ்விள நீர் கீழுள்ள பொய்கையில் விழும். அதனால் திடுக்கிட்டு வாளை மீன்கள் துள்ளிக் குதித்து குளத்திலுள்ள எருமையின் மடி மீது மோதும். இதனால் மடி சுரந்து பால் சொரியும். அவ்வாறு சொரியும் பால் வயல்களில் புகுந்து மோதித் தகர்ப்பதால் நெல்லும் கரும்பும் முத்துக்களை உதிர்க்கும். அவ்வயலில் தாமரையும் ஆம்பலுமே களைகளாக முளைக்க உழத்தியர் அவற்றைப் பறித்தெறிவர். இத்தகைய வளமிக்கது வேளை நகர் எனத் தம் வருணனைத் திறத்தால் வியந்து போற்றுகின்றார். சாமிநாதர் தமது சேசுநாதர் பிள்ளைத்தமிழ் நூலில்,
சிரத்தின் எழிலும்
பந்துர நிறைந்த நளிர் இந்தனையதாகவே
பகரு நன்னுதலும் இனிய
கூன்மணிகள் ஒப்பென விளங்கு நற்புருவமுங்
குமிழாம்பல் மூக்கின உருவும்
கோல்தரள வெண்பல்லும் விரிபவள இதழுதம்
கூறுமதுமலர் வாயதும்
வெண்டாமரைக் கைகளும்
வித்தகர்கள் உற்றுரைசெய் பொற்பதமும் மேவிவளர்
வேதநீதி கொள் நாதனே
எனப் பாடுகிறார். இப்பாடலில் பால் போல் விளங்கும் மணிகள் போன்ற முகமும், பசும் பொன்னின் நிறம் பெற்ற சிகை கொண்ட தலையும், நிலவினைப் போன்ற நல்ல நெற்றியும், வளைந்த மணிகள் போன்ற நல்ல புருவமும், கூம்பிய ஆம்பல் போன்ற மூக்கும், முத்துப் போன்ற பற்களும், பவளம் போன்ற இதழ்களும், மலர் போன்ற வாயும், விண்மீன்கள் போல் சுடரும் கண்களும், வெண்டாமரைப் போன்ற கைகளும், அறிஞர்களால் போற்றப்படும் பொற்பாதங்களும் பெற்ற வேத நீதி கொண்ட தலைவனே என இயேசு கிறிஸ்துவைத் தம் வருணனைத் திறத்தால் வியந்து போற்றுகின்றார்.
கன்னிமரி பிள்ளைத்தமிழ் என்னும் நூலில் எஸ். தம்பிரான் தோழ பிள்ளை, கன்னிமரி அன்னையை,
இலசும் நிறமோ கோதுமையே
மாற்றுப் பொன்னின் மின் கூந்தல்
மலராம் குவளை மென் கண்ணும்
மாற்ற மில்லா உயர் செம்மை
மலர்ந்த உதடு மென்குரலும்
ஏற்ற கரங்கள் விரல் காந்தள்
எடுத்தோய் ஆடுக செங்கீரை
என செங்கீரைப் பருவத்தில் வருணனை செய்துள்ளார். கன்னி மரியாளாகிய சின்னஞ்சிறு குழந்தை அளவான அழகான திருமேனியை உடையது; கோதுமையைப் போன்ற பொன்னிறமானது; மாற்றுக் குறையாத பொன் போன்ற மின்னும் கூந்தலை உடையது; குவளை போன்ற கண்களைக் கொண்டது; ஒப்பிட்டுக் கூற முடியாத அழகிய சிவந்த உதடுகளையும் மென்மையான குரலையும் காந்தள் போன்ற விரல்களையும் உடையது என வருணனை அமைந்துள்ளது. வேதநாயக சாஸ்திரியார் பெத்லகேம் குறவஞ்சியில் பெத்லகேம் நகரினை,
மாதவப்பரி சேயர்கள்நாடு வாதுசேர்சதுக்கேயர்கள்நாடு
ஓதும்லேவியர் சேனையினாடு வுலாவுமாசாரியோர் களிநாடு
நீதிசேருமப் போஸ்தலர்நாடு நேயனின் வெல்லைநாட எங்கள்நாடே
என வருணிக்கிறார். இப்பாடலில் பெத்லகேம் நகரினை திருமறையை ஆராயும் வேதபாரகர் வணங்குகின்ற நாடு, ஏராளமான தீர்க்கர்கள் தோன்றுகின்ற நாடு, சிறந்த ஒருமை மனமுடைய திருமறை வழி வாழும் பரிசேயர்கள் வாழும் நாடு, வழக்காடுகின்ற சதுசேயர்கள் வாழும் நாடு, சிறப்பித்துக் கூறப்படும் லேவியர் படையுள்ள நாடு, எங்கும் நடக்கும் அப்போஸ்தலர்களின் நாடு, உலகமக்களின் அன்பன் இறைவனின் எல்லை நாடு எங்கள் நாடாகும் என வருணிக்கிறார். கிறித்தவச் சிற்றிலக்கியங்களில் வருணனைகள் குறைவாகக் காணப்படினும், இவை ஆசிரியரின் வருணனைத் திறனுக்குச் சான்று பகர்வனவாக உள்ளன.
இறைவனைக் குறிக்கும் பல்வேறு சொற்கள்
கிறித்தவ இலக்கிய உலகில் ஏராளமான சிற்றிலக்கியங்களைப் படைத்தவர் திட்டூர் தேசிகராவார். இவரது படைப்புகள் அனைத்தும் இலக்கிய நயம் செறிந்தவையாகும். இவரது நமோ பதிகத்திலுள்ள,
வாக்குத்தத்தனே! தியாகத்தனே!
நித்தனே! நிறைபத்தனே! சுயசித்தனே! நீதிகர்த்தனே!
விவேகத்தனே! சதகாலத்தனே!
வித்தனே! ஏவைவித்தனே! மனுக் குலத்தனே! விமலசொத்தனே!
திருவுளத்தனே! உயர்நலத்தனே!
முத்தனே! விண்டலத்தனே! விகசித்தனே! முழுச்சத்தனே!
கிறிஸ்தீசுரா! நமோநமோ!
என்னும் பாடல் இயேசு கிறிஸ்துவைப் பல பெயர்களால் எழுத்துக்களின் நயத்தால் புகழ்ந்து பாடியுள்ளார்.
யோ. ஞான சந்திர ஜாண்சன்
நன்றி: ஆசியவியல் நூல் நிறுவனம்
![]() |
| யோ. ஞான சந்திர ஜாண்சன் |
யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki
கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு - Tamil Wiki
யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ் ஆய்வாளர். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவர். தமிழ் கிறிஸ்தவ காப்பியங்கள், கிறிஸ்தவ சிற்றிலக்கியங்கள், கிறிஸ்தவ கீர்த்தனைகள் இவற்றை தொகுத்துள்ளார். அச்சேறாத படைப்புகளை பதிப்பித்தல், மீள்பதிப்பு, தொகுப்புப்பணிகள், மொழிபெயர்ப்பு, உரை என்று பல்வேறு தளங்களில் முப்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வேதநாயகம் சாஸ்திரிகள், கால்டுவெல் போன்ற இறைத்தொண்டர்களது வாழ்க்கை வரலாறு குறித்தும் ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார்.









.jpg)
