Tuesday, 11 August 2026

ஊருணி நிறைந்த நீர் - இராச. மணிமேகலை

The Fountain of Life by Cristóbal de Velasco, 1590

"For with you is the fountain of life; in your light we see light." Psalm 36:9 

தமிழ் இலக்கிய வரலாற்றில் கிறித்துவ இலக்கியங்களுக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. பள்ளி, கல்லுாரி அளவில் அறிமுகமானவை தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம், இயேசு காவியம் என்ற கிறித்துவ இலக்கியங்கள் மட்டுமே. இந்நிலையில் தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தூரன் விருது இந்த ஆண்டு யோ. ஞான சந்திர ஜாண்சன் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவரை அறிந்துகொள்ளும்விதமாக மேலும் மேலும் வாசிக்கும்போதுதான் நாமறியாத கிருஸ்தவ இலக்கியங்கள் எவ்வளவு உள்ளன என்பது புரிகிறது. இலக்கிய முன்னோடிகளான வீரமாமுனிவர், இராபர்ட் நொபிலி, சீகன்பால்கு, கால்டுவெல் ஆகியோர் அடித்தளமிட்டுச் சென்ற கிறித்துவ தமிழ் இலக்கியம் மாபெரும் மாளிகையை வளர்ந்திருப்பதை திரு ஜாண்சன் வாயிலாக நாம் முழுமையாக கண்டுமகிழ முடிகிறது.

காலம் சிலவற்றை தகுதியுள்ளவர்களுக்கே கையளிக்கும். அப்படித்தான் பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டெடுக்கும் பணியினை உ.வே.சா. தலைமேற்கொண்டார். அதைப்போலவே கிறித்துவ தமிழ் இலக்கியத்தை மீட்கும் பொறுப்பை ஞானச் சந்திர ஜாண்சனிடம் காலம் கையளித்திருக்கிறது. இயேசு பெருமானின் அருளும், ஆசியும், வழிநடத்தலும் இப்பணியில் தன்னுடன் முழுமையாக இருந்ததை உணர்ந்ததாக ஜாண்சன் கூறுகிறார். அப்பணியினை அவர் தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செய்துகொண்டு வந்ததன் பலனாக பல அரிய கிறித்துவ இலக்கியங்கள், கீர்த்தனைகள் மொழிபெயர்ப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

கிறித்துவத் தொண்டர்களால் வேரூன்றிய தமிழ் கிறித்துவ இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம். கீர்த்தனை, உரைநடை, மொழிபெயர்ப்பு, புதுக்கவிதை எனப் பல்வேறு வடிவங்களில் வளர்ந்து செழித்திருக்கிறது. தொடர்நிலைச் செய்யுளின் அடிப்படையில் காப்பியம், காவியம், புராணம், பாவியம் என்னும் பெயர்களில் 18, 19, 20ஆம் நுாற்றாண்டுக் காப்பியங்கள் என்றும், குறுங்காப்பியங்கள், புதுக்கவிதைக் காப்பியங்கள், புதுக்கவிதைக் குறுங்காப்பியங்கள் என்று வகைப்படுத்திக் காட்டுகிறார். இவை தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் முதலான வகைப்பாட்டை ஒத்ததாக இருப்பதை அறிய முடிகிறது. இவை இருபத்தியோராம் நுாற்றாண்டு வரையிலும் செழித்து வளர்ந்து வருவதற்கு காரணமான கிறித்துவப் படைப்பாளர்களின் புலமைக்கும், இறைப்பற்றிற்கும் நன்றி தெரிவிக்கிறார்.

‘பெருங்காப்பிய நிலைப் பேசுங்காலை’ என்ற காப்பிய நெறிகள் இக்காப்பியங்களில் பின்பற்றாமைக்கான காரணமாக ‘பேரின்பமாகிய வீடுபேறடைதலே கிறித்துவக் காப்பிங்களின் அடிப்படை. அறம், பொருள் இரண்டும் இக்காப்பியங்களில் இயல்பாகவே அமைந்திருக்க, நற்செய்தி கூறவும், ஆன்ம ஈடேற்றங் கருதியும் கவிதையின் அழகுக்கான அழகியல் கூறுகளை கவிஞர்கள் வலிந்து உருவாக்காமல் படைத்துள்ளனர்’ என்பதை நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். கிறித்துவக் காப்பியங்களின் பட்டியல் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக கிறித்துவ இலக்கிய நுால்களில் பல நூல்களைச் சேர்க்க இயலாது என்பதைக் கூறுவதோடு, கறார்த்தன்மையுடன், மரபிலக்கணத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட 30 கிறித்துவக் காப்பியங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். நுால் நெடுக கிறிஸ்து பெருமானின் பெயரைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் மூல கிரேக்கச் சொல்லில் உள்ள ஒலியமைப்பு மாறாமல் குறிப்பிடுவது நல்லது என்றும், மற்ற இடங்களில் வடஎழுத்து தவிர்த்தும் எழுதியதாக கூறியிருப்பது இவரது இறைப்பற்றையும், மொழிப்பற்றையும் காட்டுகிறது. இதுவரை வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணியே முதல் கிறித்துவக் காப்பியம் (1726) என்பதே நாமறிந்தது. ஆனால் ‘கருவைநகர் கவிராயன் சிதம்பரநாதன் என்பவரால் 1603 ஆண்டு இயற்றப்பட்ட ‘பன்னிரு புனிதர் காதை’யே தமிழில் எழுதப்பட்ட முதல் கிறித்துவக் காப்பியம். ஏட்டுச்சுவடியில் உள்ள இந்நுால் microfilm வடிவில் படியெடுக்கப்பட்டு வாட்டிகன் நுாலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அருள்தந்தை முனைவர் அமுதன் அடிகளார் ரோம் சென்று அதனைப் பெற்று வந்து காப்பியத்தைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இக்காப்பியம் விரைவில் நுாலாக வெளிவரவிருக்கிறது’ என்ற செய்தியை ஜாண்சன் நம்மிடம் பகிர்கிறார்.

கிறித்துவக் காப்பியங்கள் என்னும் நுாலில் ஆறு தலைப்புகளில் காப்பியங்களை வகைப்படுத்தியிருக்கிறார். விவிலியத்தின் வரலாற்றைக் கூறுவதாக திருமறை வரலாற்றுக் காப்பியங்கள், முழு விவிலியத்தின் நடுநாயகமாக விளங்கும் இயேசு பெருமானின் வரலாறாக கிறிஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள், விவிலியத்தில் இடம்பெறும் முக்கிய மாந்தர்களின் வரலாறாக திருமறை மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள், விவிலியத்தில் இடம் பெறாத கிறித்துவ தொண்டர்கள், புனிதர்கள் வரலாறாக திருமறை சாரா மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள், பிறநாட்டு, பிறமொழிக் காப்பியங்களைத் தழுவி எழுதப்பட்ட தழுவல் காப்பியங்கள், மொழிபெயர்ப்புக் காப்பியம் எனக் காப்பியங்களைப் பற்றிய பார்வையில் தெளிவு வேண்டியே இவ்வாறு பகுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அரிதின் முயன்று ஜாண்சன் தொகுத்துள்ள இந்த காப்பியங்களில், சுவை மிக்க படைப்புகள் சிலவற்றை நாம் விரித்துக் காணலாம்.

திருவாக்கு புராணம்

இலங்கையில் பிறந்தவரான கனகசபைப்பிள்ளை தேம்பாவணியைத் தொடர்ந்து வெளிவந்த திருவாக்குப் புராணத்தை எழுதினார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவான் 1-1)” என்பது வேதவாக்கு. வார்த்தை என்பதன் சிறப்பினை உணர்ந்த ஆசிரியர் வார்த்தையாம் கடவுளைக் குறித்துப் பாடியதால் திரு எனும் அடைமொழியுடன் திருவாக்குப் புராணம் எனப் பெயர் சூட்டியுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள் இக்காப்பியத்தைப் படித்து மனனம் செய்ய வேண்டும் என்னும் நோக்குடன் இந்நுால் எழுதப்பட்டது என்னும் செய்தி, ‘துமி’தம் ஊர்புக வானவர் துள்ளினார் அமுதம் இன்னும் எழும்எனும் ஆசையினாலே, ‘நொய்தின் நொய்ய சொல்’ கொண்டு யாத்த கம்பராமயணப் பாடலை நினைவூட்டியது. துமியும், வார்த்தையும் கொடுத்த கொடையாக காப்பியங்கள் நம்க்குக் கிடைத்திருப்பது பெரும்பேறென்றே கொள்ளவேண்டும்.

எளிமையும், இனிமையும் நிறைந்த இந்நுாலின் பாடல்களைத் திருவிளையாடற் புராணத்தோடு ஒப்பிட்டுக் காண்கிறார்.

  காண்பதற்கினிய கனிகளு மதுரங் கனிந்தபூங் கனிகளு நிறைந்த
  மாண்புறுதருக்கள் அனைத்தையுமன்றி வயங்கொழின் மலர் குடைந்தளிர்கள்
  பாண்செயுந் துடவை நடுவிணிற்சீவ விருக்கமும் படைத்ததனுடனே
  எண்பெறு நன்மையு தீமைகளுணர்த்தும் மரத்தையு மியற்றினனன்றே     

என்ற பாடலில் கடவுள் கனி கொடுக்கும் மரங்களைப் படைத்து அதன் நடுவில் நன்மை தீமை உணர்த்தும் மரத்தையும் படைத்திருப்பதில் உள்ள இலக்கிய இன்பம்,

   பொதியி லேவிளை கின்றன சந்தனம் பொதியின்
   நதியி லேவிளை கின்றன முத்தமந் நதிசூழ்
   பதியி லேவிளை கின்றன தருமப் பதியோர்
   மதியி லேவிளை கின்றன மறைமுதற் பத்தி

பரஞ்சோதி முனிவரின் பாடலைப் போன்று எளிமையும், இனிமையும் உடையதாய் விளங்குகிறது.
Christ of Saint John of the Cross by Salvador Dalí, 1951
இயேசு புராணம்

ஈழத்துப் பூராடனாரின் (தாவீது செல்வராசகோபால்) இயேசு புராணம் (1986) விவிலியத்திலுள்ள ஆதியாகமம் தொடங்கி பழைய, புதிய ஏற்பாட்டுச் செய்திகளைச் சுருக்கமாகத் தருகின்றது என்ற செய்தியும், ஆதி கிரேக்கத்தின் 48 நாடகங்களைத் தமிழில் இவர் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதும், இயேசு புராணம் ‘பரிசுத்த வேதாகமத்தின் பாகு’, இதை ‘சின்ன வேதாகமம்’ எனல் மிகப் பொருத்தமானது என்ற செய்தியும் காணக் கிடைக்கிறது. மேலும் மிக முக்கியமாக ‘கிறித்துவர்கள் எத்தகைய வாழ்க்கையை அமைப்பதால் கிறிஸ்தவர்களாகலாம் என்பதற்கும், கிறிஸ்தவர்கள் அல்லாத தமிழ் அறிந்தவர்கள் கிறிஸ்தவன் என்பவன் யார்? அவனது சமய நோக்கு எது? அவனது வாழ்க்கை நெறி எத்தகைய அமைப்புடையது என்பதை அறிந்துகொள்ளவும், அச்சமயத்தின் பின்னணிகளை விளங்கிக் கொள்ளவும் தக்கதாக இயேசு புராணம் இயற்றப்பட்டது’ என அதன் நோக்கத்தையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இப்புராணத்தில் வருணனை இடம்பெற்றிருப்பது கதையோட்டத்திற்கு பெரிதும் துணை புரிவதுடன் கற்பனைப் புலமையினை வெளிப்படுத்துவதை,
 
  மலையழிந்து வீழருவி தாழிசை யூட்டும்
  மடைதிறந்து பாய்வெள்ளந் தவழிசை யீட்டும்
  நிலைதளர்ந்து எழுமேகம் மேலிசை கூட்டும்
  நிழல்தவழ்ந்து வருந்தென்றல் நீழிசை நீட்டும்
  அலைதிரளுங் கடலாதித் தாளத்தை வீட்டும்
  அனைத்துயிரும் அளவில்லாப் பண்ணிசை தீட்டும்
  சிலையென்ன மரநிழலில் மந்தை ஓட்டஞ்
  சிதறாது சிந்தித்துத் தாவீது இருப்பான்
  (சங்கீத அடங்கல் பா.469)

என நயம் பாராட்டுகிறார். இது நமக்கு கண்ணன் கானகத்தில் கன்றுகளுடன் மரத்தடியில் படுத்து புல்லாங்குழலிசைப்பதைக் காட்சிப்படுத்துகிறது. இறைவன் ஆணையை ஏற்று நோவா கப்பலுக்குள் சென்று பூட்டிய பின்னர் மழை பெய்கிறதாம். அதை

  பாரதியின் பாட்டுப்போல் வேட்கை மிக்குப்
  பட்டினத்தார் பாப்போல பற்றை விட்டுப்
  பாரதியின் தாசன்பாப் பயனை யூட்டிப்
  தாரதிர மன்னர்முடித் தரையைக் கவ்வ
  தண்ணீரிறை படைதங்கா தவிக்கும் மண்ணிற்
  தேரதிரக் கண்ணதாசன் தென்னகச் செய்யுள்
  தேன்போலப் பெருகிற்றுத் திரண்டமாரி

என்று ஈழத்துப் பூராடனாரின் தமிழ்ப் பற்றையும், அவர் தமிழ் புலவர்களிடம் கொண்டிருந்தப் பற்றையும் இந்தப் பாடலோடு ஒப்புமைக் காட்டி விளக்குகிறார். கதையோட்டத்துடனான உவமைகளை, ‘சொல்நயத்துக் கம்பன்வாய்க் கவிபோல்’, ‘அடைக்கலங்கள் நீயே என்று அலறிடும் ஆத்மா போல’ ‘அகரத்தை அறியாதார் அகராதி பார்ப்பது போல’ ‘எனக் வெந்தழலில் வேகாத தமிழைப் போல’ என்ற உவமைகளை எடுத்துக் காட்டும்பொழுது தருகின்ற விரிவான விளக்கம் கற்போர் மகிழும்வண்ணம் சுவைக்க இயலுகிறது.

நசரேய புராணம்

இதனை எழுதியவர் ஜே. எஸ். ஆழ்வார் பிள்ளை (யாழ்ப்பாணம்). தன் தந்தையாரிடமிருந்து இராகம், தாளம், இசை கற்றதையும், சிறந்த வைணவ பக்தராகவும், சைவசமய தீட்சை பெற்றதையும், தனது 13ஆவது வயதில் இயேசு பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, ஜேம்ஸ் எனப் பெயர் மாற்றம் பெற்று கிறித்தவராக மாறியதையும், விவிலியத்தின் முதல் நுாலான ஆதியாகமம் தொடங்கி அப்போஸ்தல நடபடிகள் வரையுள்ள செய்திகளைச் சுருக்கமாகத் தருவதால் ‘விவிலியத்தின் பிழிவு’ எனப் பலவாறான செய்திகளைத் தருகிறார். இவரது பாடல்களில் பட்டினத்தார் பாடல்களின் தாக்கம் இருப்பதை, ‘அத்திமுதல் எறும்பீறான வுயிர் அத்தனைக்கும் சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகா (சித்தர்பாடல்கள் திரட்டு பக்.74) என்ற பாடலோடு ‘அத்தியே முதலெறும்பீறா கியவனைத் தினுக்கும் நத்தியே வேறு வேறாய் நாமங்கள் சூட்டியாங்கு’ என்ற சிருஷ்டிப்புப் படலத்தின் பாடலோடு (பக்.36) ஒப்பிட்டு தொனிப்பொருளைக் சுட்டுகிறார்.. ஏதேன் தோட்டத்தின் தன்மையை பூங்காவனப் படலத்தில் (பக்.37)

  யானையு மடிக்கவில்லை யெறும்புமோ கடிக்கவில்லைப்
  பூனையு முறுமவில்லைப் புலியுமோ பிடிக்கவில்லை
  யானையோ டெறும்பு பூனை யிடர்ப்புலி யாவுஞ்சேர்த்து
  சேனையாய்ப் பூங்காதன்னிற் சேவித்து நின்றவம்மா

அனைத்து விலங்குகளும் கூடி வாழ்ந்து, ஒன்றாகத் திரண்டு இயேசுவை வணங்கி நின்றன என்று கற்பனைநயம் விளக்குகிறார். ஆழ்வார் பிள்ளையவர்கள் இயேசு பெருமானை, குருமூர்த்தி (பக்50), திருவாசகப் பெருமான் (பக். 56), நாவரசன் (பக்.56) என்ற பெயர்களால் குறிப்பிடுவதைச் சொல்லும்போது நமக்கு நாயன்மார்கள் நினைவுக்கு வருகிறார்கள். ஆசிரியரின் புலமையும் கூர்மையும் இவரது நயவுரையால் சிறப்படைகிறது. 
The Light of the World by William Holman Hunt, 1853
உலக ஜோதி

கிறித்துவக் காப்பியங்களில் தனிச்சிறப்புப் பெற்ற காப்பியம் இது. இதன் ஆசிரியர் இறையரசன். தமிழ்நாட்டின் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ‘நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்’ என இறைமகன் கூறியதால் இதற்கு உலகஜோதி எனப் பெயரிட்டதாக கூறுகிறார்.

  காந்தியை இந்திய ஜோதி-என்றே
  ஏந்தல் பலரும் இயம்பிச் சென்றார்
  ஆசியஜோதி புத்தர் என்று
  தேசிகவிநாயக மன்றே சொன்னார்
  அலகையை வென்றிவ் வுலகை மீட்ட
  ஆண்டவர் ஏசுவோ உலகஜோதி  (பாயிரம் பா.6)

தன் காப்பியத்தில் சிற்றிலக்கிய உத்திகளைப் பல இடங்களில் புகுத்தியிருப்பதை பதிப்பாசிரியர் காட்டுகிறார். இயேசுவை பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் வைத்துப் பாடிக்கொண்டே வருபவர் ‘சிறுதேர்’ பருவத்தை ‘பெருந்தேர்’ என மாற்றியுள்ளதையும், ஏரோதுவின் கட்டளைப்படி போர்வீரர்கள் குழந்தைகளை வெட்டிச் சாய்ப்பதை,
  
  ஓடிடும் குருதி ஆற்றில்
  ஓடின சிலபேர் தலைகள்
  வாடிடும் தாயின் பக்கம்
  வந்தன சிலபேர் தலைகள்
  பனமரக் காய்போல் தலைகள்
  பலாச்சுளை போல மூளை
  நனைந்தன ரத்தச் சேற்றில்
  நஞ்சினன் நயவஞ் சத்தால் (பா.347-349)

என பரணி இலக்கியப் பாடல்களின் சந்தநயத்தோடு ஒப்புமைக் காட்டுகிறார். கம்பராமாயணத்தின் போர்புரிப் படலக் காட்சியில் ‘துமிந்தன தலை, குடர் சரிந்தன தேர்க்குலம் அவிந்தன புரவியும் ஆளும் அற்றன குவிந்தன பிணக்குவை……..பரந்தது குருதி நீர்த்தமே’ என்ற பாடல் ரத்தச் சேற்றில் நனைந்த காட்சியையும் ஒத்தது.

‘வானானான் வளியானான் ஒளியானான் ……ஊனானன் உயிரானான் வானானான் திருநாமம் வாணாளெலாம் வாழ்த்துவனே’ என்ற உலகஜோதியின் கடவுள் வாழ்த்துப் பாடலை மாணிக்கவாசகரின் ‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி திருவாசகப் பாடலோடு ஒப்பிடும்போதும், ஆசியஜோதியில் புத்தருக்கும் ஏழைச் சிறுவனுக்கும் நடைபெறும் உரையாடலைப் போன்றே இயேசுவும் சமாரியப் பெண்ணும் ‘தீண்டத்தகாத மனிதரென தேவன் யாரையும் படைக்கவில்லை ஆண்டவன் மக்கள் அனைவருமே அவனியில் சரிசமம் அறிந்திடுவாய்’ என இயேசு கூற அதற்கு அவள் ‘என்னவோ சாமி நானறியேன் எங்களை யாருமே மதிப்பதில்லை பன்னெடுங் கால மாகயிந்தப் பழக்கம் உள்ளது புவியினிலே’ எனப் பேசுவதை ஒப்பிட்டுக் காட்டும்போதும் பிறமத விருப்பு வெறுப்பின்றி அவ்வம்மதக் காப்பியங்களில் அதனதனுடையக் கொள்கைகளையும், மரபுகளையும், வழக்குகளையும் நுால்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தும் சொல்வது பாராட்டுதற்குரியது.

அருளாவதாரம்

தமிழகத்தின் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.மரிய அந்தோனி அவர்கள் 15 ஆண்டுகள் உழைத்து ஒப்பற்றக் காப்பியமாக இதனை ஆக்கியுள்ளார். கிறித்துவக் காப்பியங்களிலேயே தன்த்தன்மையும் முழுமையும் பெற்ற இக்காப்பியத்தை முனைவர் பா. வளன் அரசு அவர்கள் பதிப்பித்திருக்கிறார். பன்னுால் புலமையின் தாக்கத்தை இந்நுாலாசிரியரிடம் காணமுடிகிறது.

சிலப்பதிகாரத்தின் மங்கலவாழ்த்து ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் எனத் தொடங்குவதைப் போல தந்தையைப் போற்றுவோம்,/ தந்தையைப் போற்றுவோம் எனத் தெடங்குவதையும், ஆதாமும் ஏவாளும் சாத்தானால் வஞ்சிக்கப்படுவதற்கு முன்னர் ஆடிப்பாடியதை ‘ஆடுவார் திளைத்திடுவார் அன்புஉருகி நின்றிடுவார்/ …பாடுவார் பதம் பெயர்வார் ….கூடுவார/ களித்திடுவார் (வீழ்ச்சிக் காதை, பா. 5)என்ற பாடலை பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் கண்ணளித்து குருதி நின்றவுடன் மகிழ்ச்சியில் ஆடிப்பாடும் ‘நின்ற செங்குருதி கண்டார்/ நிலத்தின் றேறப் பாய்ந்தார்/…..ஒன்றியக் களிப்பினாலே உன்மத்தர்போலே மிக்கார்’ (பா.823) என்ற சேக்கிழாரின் பாடலோடுப் பொருத்திக் காட்டுகிறார்.

பாரதியின் பாஞ்சாலி சபதத்திலுள்ள ‘மனமாரச் சொன்னாயோ பீமா? என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? என்னும் பாடலை அடியொற்றியே ‘என்ன சொன்னாய் அண்ணா? யாரை நீ கடிந்து கொண்டாய்?’ (யோசோபு காதை, பா.44 ) என்ற பாடலின் சாயலை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

  அன்புக் கடவுள்பால் அச்சங்கொல் ஞானத்தின்
  இன்பத் தொடக்கம் இது.
  சான்றோன் மகனெனல் தந்தைக்கின் பம்தன்னை
  ஈன்றாட்கு இருபங்கு இனிது.

என சாலமோன் அரசனின் நற்கருத்துகள் குறள் வடிவில் ஞானக்குறள் என மாற்றிமைக்கப்பட்டுள்ளதை புதுவகை முயற்சி எனப் பாராட்டுகிறார்.

The Creation of Man by Marc Chagall, 1958
ஆதியாகம காவியம்

இக்காவியம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ‘முத்தமிழ் மாமணி’ எனப் போற்றப்படும் சவரிமுத்து அவர்களால் எழுதப்பட்டு 2008ல் வெளியிப்பட்டது. ஆதியாகம நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் மரபுக்கவிதையில் சொல்லிச் செல்கிறது. பாயிரத்தின் அவையடக்கப் பாடலில் இறைமகனின் திருவடிகளைப் பற்றத் தகுதியற்றவனாகத் தன்னை பலவாறாகத் தாழ்த்திக் கூறிக்கொள்வதைக் காணமுடிகிறது. இக்காப்பியம். மக்கள் பாவ வாழ்க்கையைில் வீழ்ந்திருந்ததை,

  பெடைவிலகிக் கொக்கரிக்கும் கோழிச் சேவல்
  பிய்ந்திருக்கும் கூரையிலே ஏறிக் கொண்டு
  நடையளந்து வேறுபெடை தேடல் போன்றே
  நாலுமிலா மனிதரவர் மாறாய் நின்றார்

என உவமை நயத்துடன் பொருத்திக்காட்டியும்,

  சிறுமியாய் இல்லில் சிற்றிடைச் சிணுங்கச்,
  சிறுநற் குறும்புகள் செய்தவள் ஓடி
  முறுவலித் தன்னையை இருகரங் கொண்டே
  மூச்செலாம் அடக்கிக் கட்டித் தழுவி (15 ஆம் படலம் பா.40)

என்ற பாடலை ‘பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர் பொற்கலத்து ஒருகை ஏந்தி’ என்ற நற்றிணைப் பாடலின் சாயலில் காண்கிறார் தமிழ் இலக்கியத்தில் நற்றிணை, புறநானுாறு, திருக்குறள், கம்பராமாயணம், சித்தர் பாடல்களின் தாக்கம் இவரது பாடல்களில் மிக்கு காணப்படுவதை சுட்டிக்காட்டுவதைக் காணும்போது இவரது பன்னுால் புலமையை அறியலாம்.

கிறிஸ்தாயனம்

ஜான் பால்மர் என்ற தமிழ் கிறிஸ்தவக் கவிஞரால் எழுதப்பட்டு வெளிவந்த முதல் காப்பியம் இது. இராமனின் வரலாற்றை விளக்கும் காப்பியத்திற்கு இராமாயணம் எனப் பெயர் சூட்டியதைப் போல இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைப் பாடுவதால் கிறிஸ்தாயனம் எனப் பெயரிட்டதையும், இப்பெயர் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இதன் பல படிகளை தீக்கிரையாக்கிய செய்தியையும், இந்நுால் கிடைப்பது அரிதாகி இருபது ஆண்டுத் தேடல்களுக்குப் பிறகே கைக்கு கிடைத்தது என்றும் பதிவு செய்கிறார். ஜான் பால்மர் செவ்வியல் நெறிப்பட்ட யாப்பு வடிவங்களை பயன்படுத்தி இயேசு பெருமானின் கதையைக் கூறுகிறார். விவிலியத்திலுள்ள நிகழ்வுகளைக் கவிதையாக்குவதில் வல்லவரான இவர் செய்திகளை நேரடியாக, தெளிவாக, எளிமையாக சொல்வதை பாயிரத்தில்,

  கற்றவரின்றியுங் கல்லாதவரு
  முற்றெளிதாய்க்கண் டுணருதற்கிடனா
  யதியரும்பதங்க ளகல மிக்காறும்
  பொதுநிகழுரைகள் புலப்படவமைத்து

என வெளிப்படுத்தியுள்ளார் இக்காப்பியத்தின் பல இடங்களில் அந்தாதி முறையில் பாடல்கள் அமைந்திருப்பதை கவித்திறனுக்கு சான்றாக காட்டுகிறார். அந்தாதிப் பாடல்கள் நினைவாற்றலைப் பெருக்குவன. இயேசு என்னும் பெயரை ஜேசு எனக் குறிப்பிடுவது பிற கிறிஸ்தவ இலக்கிய படைப்பாளர்களிடமிருந்து வேறுபடுவதையும், மொழிக்கு முதல் எழுத்துகளை மனதில் கொண்டு ‘இயோவான்’ எனவும், ‘லேவி’ என்னும் பெயரை ‘இலேவி’ எனவும் குறிப்பிடுவது இலக்கணத்தில் அவரது ஆழங்காற்பட்ட அறிவை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார். இருநுாற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை எழுதியதாக இவர் அறியப்படுகிறார். வரலாற்றை முன்கூறிப் படிப்பவரின் ஆர்வத்தைத் துாண்டும் உத்தியை இந்நுால் முழுக்கக் கையாளுகிறார்.

இரட்சகராகிய இயேசுநாதர்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராகிய பண்டிதர் தே.ஞானாபரணம் பாமரரும் பண்டிதரும் போற்றும் வகையில், எளிய செய்யுள் நடையில், மனப்பாடஞ்செய்து பாடும்படி இந்நுாலைப் படைத்திருப்பதாக, ஆசிரியர் கூறுகிறார். வேற்றுமொழிக் காப்பியங்களை தமிழ்க் புலவர்கள் தமிழ்நாட்டில் நடந்ததைப் போன்றே படைப்பது போல இவரும் பாலஸ்தீனத்தில் நடந்த நிகழ்வுகளை ‘கோபுரங் குளங்களாறு குன்றுகள் மேடுபள்ளம் நேர்பட வளர்விரட்சம் நிறைந்த பூஞ்சோலைக்காடு’ எனத் தமிழக நிகழ்வாகக் காட்டுவதையும், பெத்தலகேம் நகர வளமையை,

  காடெலாம் கழனி யங்கே! கரையெலாம் பயிர்கள் அங்கே!
  நாடெலாம் உழவர்அங்கே! நடையெலாம் தழைகள் அங்கே!
  மேடெலாம் மரங்கள் அங்கே! விளையெலாம் பழங்கள் அங்கே!
  வீடெலாம் கறவை அங்கே! வெளியெலாம் பறவை அங்கே!

எனும் பாடல் அவரது கற்பனையாற்றலுக்கு சான்றாக அமைவதையும் எடுத்துக்காட்டுகிறார். வடமொழியில் எழுதப்பட்ட வால்மீகியின் இராமாயணம் தமிழ்ப் பண்பாட்டு மரபையொட்டி கம்பரால் எழுதப்பட்டதும், தேம்பாவணி, சீறாப்புராணம் போன்ற பிறமதக் காப்பியங்கள் தமிழ்ப் பண்பாட்டையொட்டியும், நிலத்தையொட்டியும் எழுதப்பட்டன என்பது கண்கூடு. 

சுடர்மணி

கிறிஸ்துவத் தமிழ் காப்பியங்களில் தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம், சுடர்மணி ஆகியன முப்பெருங்காப்பியங்கள். இக்காப்பியத்தை எழுதியவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ஆரோக்கியசாமி அவர்கள். கிறிஸ்துவின் வாழ்வும் வரலாறும் மக்கள் வாழ்க்கைக்கு என்றும் குன்றாத சுடராக விளங்குவதால் ‘சுடர்மணி’ எனப் பெயர்க்காரணத்தை ஆசிரியர் விளக்குகிறார்.

காப்பியக் கவிஞன் தன் உணர்வுகளைக் கூறுவது கவிக்கூற்று என்பர். இக்காப்பியத்தில் கவிக்கூற்று உத்தியைக் கொண்டு

  இறைவனின் செயல்தனை எதிர்ப்பதில் கேடுள
  இறைவனின் சொற்படி இயங்குவதோடு நாம்
  இறைவனைத் தொழுதலே இனிமையாம் என்பதை
  முறைப்படி முனிவனின் மூங்கை விளக்குமால்

என அறிவுரையாக அமைந்திருப்பதை தமிழ் இலக்கியத்தில் மட்டுமன்றி எல்லா மத இலக்கியங்களிலும் ‘பாவிகம் என்பது காப்பிய’ப்பண்பாக உயிர்நாடியாக இருப்பதைக் காணமுடிகிறது.

  இவர்க்கு நன்னிழலை ஈய
  எண்ணிடு மரங்கள் எல்லாம்
  இவரொடு செல்லும் பேறிங்(கு)
  இல்லையே என்று சோரும்

எனும் இப்பாடலில் மரியன்னைக்கு நிழல் கொடுக்க மரங்களிடையே போட்டி நிலவியதாக இயற்கையின் தன்மையில் தற்குறிப்பேற்ற அணியாக அமைத்திருப்பதைக் நயம்படக் காட்டுகிறார். ‘போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடியும்’, வராதே என்று கூறும் சிலப்பதிகாரமும், ‘கூறுமா அழுங்கலும் குலைந்தறாத இன்மையும், சீருலாவும் எம்பிரான் பெரும்பதம் பழிச்சினால் வாரும் என்பதொக்கும்……. மாடம் ஆடும் தோகையே’ வருக, வருக எனக்கூறும் சீறாப்புராணமும் தற்குறிப்பேற்றவணியாகக் கண்முன்னே விரிகிறது.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் புதுமைப் பொலிவுடன் மக்களுக்கு அறிவித்தலே இவருடைய நோக்கமாக எடுத்துக்காட்டி, பழமை மரபுகளைப் போற்றியும், புதிய மரபுகளை வகுத்தும் பயில்வோரின் இரசிகத்தன்மையின் எல்லைகளை விரிவுபடுத்துகிறார்.

Mother Teresa by Maqbool Fida Husain
அன்னை தெரசா காவியம்

கிறித்தவ இறை அடியார்களை கதைமாந்தர்களாகக் கொண்டு படைக்கப்பட்ட காப்பியங்கள் அன்னை தெரசா காப்பியமும், திருத்தொண்டர் காப்பியமும் ஆகும். புதுச்சேரியைச் சேர்ந்த துரை மாலிறையன் அன்னை தெரசா காப்பியத்தை இயற்றினார். ‘நானுண்டு தொண்டுண் டென்றே நாளெலாம் உழைக்க அன்னை தானுண்டு புவியில் என்றே தமிழினில் பாடவந்தேன்’ என, தான் இக்காப்பியம் பாட வந்ததன் காரணத்தையும், உயிர்களுக்குத் தொண்டு செய்வதில் அன்னை தெரசாவைப் போல் யாருமில்லை என்பதை,

  காட்டுத்தீ பரவும் போது
  கருமழை பெய்தல் போலும்
  வீட்டுக்குள் பசித்தீ போக்க
  விரைந்திடும் வள்ளல் போலும்
  நாட்டுக்குள் இயற்கை சீறின்
  நலஞ்செயும் படைஞர் போலும்

பாடலின் மூலமும், அன்னையின் மனிதநேயம் மதங்களைக் கடந்தது என்பதனை,

  கிருத்துவர் தமக்கே அன்றிக்
  கேடுற்றார் அனைவருக்கும்
  மருத்துவம் மன அமைதி
  மகிழ்வொடும் கலந்து தந்தார்
  பெருத்தவர் முசுலிம் இந்து
  பேணிடும் சமணர் புத்தர்
  ஒருத்தரும் விட்டு விடாமல்
  ஒழுங்குறப் பணிகள் செய்தார்.

அன்னையைப் போல வாழ்நாளெலாம் உதவ முடியாவிட்டாலும் தம்மால் இயன்ற அளவு பிறருக்கு உதவ வேண்டும் என்னும் உந்துதலையும் உயிர்த்துடிப்பையும் படிப்போரிடத்தில் ஏற்படுத்துவதில் இக்காவியம் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறுகிறார். படைப்பாளனின் கருத்தையும், நோக்கத்தையும் நன்கு ஆராய்ந்து உட்பகுதி இன்னதெனப் பல இடங்களில் கூறிச்செல்வதை இவரது திறனாய்வில் காணமுடிகிறது.

திருத்தெண்டர் புராணம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சூ. இன்னாசி அவர்களால் எழுதப்பட்டக் காப்பியம் இது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மரித்த தேவசகாயம் நீலகண்டப் பிள்ளையின் வரலாற்றைக் காப்பிய வடிவில் எழுதியுள்ளதையும், பல்வேறு காப்பியக் கூறுகளும், 95 இடங்களில் திருக்குறளின் கூறுகளும், அகமரபு சார்ந்த களவியல், கற்பியல், ஊடல், கூடல் போன்ற செய்திகளை தேவசகாயம் பிள்ளையின் வாழ்வையொட்டி அமைத்திருப்பதையும், கும்மி, அம்மானை, தெருக்கூத்து என்னும் பல வடிவங்களிலும் இருந்ததை விரிவாக காட்டுகிறார். “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்?” என்னும் விவிலிய வசனத்தை,

  மண்ணுலகில் உப்பதுவே உவர்ப்புநீங்கின்
  மறுபடியும் எதைக்கொண்டே உவர்ப்பாய் ஆகும்?
  கண்ணெதிரே கொட்டப்படும் கால்மிதிக்கும்
  கருதுபயன் ஒன்றுக்கும் உதவாதாகும்
  ஆண்டுணர்வாய் நீயுந்தான் உலகின் உப்பாம்
  கருத்தின்றிச் சாரமற்றுப் போனால் நீயும்
  மண்ணுலகில் மட்டுமன்றி விண்ணில் தானும்
  மதிப்பிழப்பாய்! உதவாத பொருளுமாவாய்!

கவிதையில் பொருத்திக் காட்டியதை எடுத்துரைக்கிறார். கிறித்துவக் காப்பியங்களில் அகப்பொருள் மரபு சேர்த்துப் படைக்கப்பட்டது இக்காப்பியம். இதன் முதல் காண்டமான இளமைக் காண்டத்தில் ‘நலம் புனைந்துரைத்தல்’ என்னும் பகுதியில்,

  இதழேதான் தேனாக இனிக்கும் என்றான்
  இதுதானே பொய்சொல்ல வேண்டாம் என்றாள்
  இதழூறும் எயிற்றின்நீர் இனிக்கும் என்றான்
  இருவரும்நாம் கூடும்போ துண்டோ என்றாள்
  மதமூறும் வேழம்போல் என்னைப் பற்றி
  மடிமீது வைப்பதுவும் சரியோ என்றாள்
  இதமாகக் கண்வழியே அழைக்கும்போதே
  இதற்கேதான் காத்திருந்தேன் என்றான் அவனே!

எனும் பாடலில் அகப்பொருள் மரபைச் சுட்டுகிறார். அகப்பாடல் உருவாக்கத்தின் அடிப்படைநெறியாக ‘புலனெறி வழக்கு’ இலக்கணத்தை அறிவால் எண்ணிப் பார்க்காமல் உணர்வால் இயைத்துப் பார்க்க வேண்டும் என்னும் சிந்தனையை இங்கே துாண்டுகிறார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உவமைகள், மரபுத்தொடர்கள், பழமொழிகள், கிளைக்கதைகள் இடம்பெற்ற விவிலியப் பகுதிகள் அமையப்பெற்று ஆசிரியரின் கைவண்ணத்தில் இக்காப்பியம் மிளிர்வதாகக் கூறுகிறார்.

***

தழுவல் காப்பியங்களின் இருகண்களாகப் போற்றப்படுபவை வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணியும், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகமும் ஆகும். இவற்றின் பெருமையை விரித்துரைக்கத் தேவையே இல்லாத அளவிற்கு விண்மீன்களாய் ஒளிர்கின்றன. திருச்செல்வர் காவியம், மோட்சப் பயணக் காவியம் இவைகளும் தழுவல் காப்பியங்களே. ஜான் மில்டனின் Paradise Lost ஆங்கிலக் காப்பியத்தை ‘பூங்காவனப் பிரளயம்’ என்னும் பெயரில் சாமுவேல் வேதநாயகம் தாமஸ் தமிழில் மொழிபெயர்த் துள்ளதையும், கிறித்துவக் காப்பியங்களில் இது ஒன்றே மொழிபெயர்ப்புக் காப்பியம் என்பதையும் அறிய முடிகிறது. இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு இதுவரை வெளிவந்துள்ள காப்பியங்கள் அனைத்தும் தனித்தன்மை மிக்கவை. இக்காப்பியங்களில் பல மறைந்தும், மறக்கப்பட்டும் போயின. இவற்றை வெளிக்கொணர்வதும், இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பதும் தமிழறிஞர்களின் தலையாய பணி எனக் குறிப்பிடுகிறார்.

உண்பதற்குரிய நீர் நிறைந்த குளம் ஊருணி எனப்பட்டது. ஒரு ஊரின் தாகமனைத்தையும் தானேயுண்ணும் நீருள்ள இடம். இந்தப்பின்னொட்டு முல்லை நிலத்து ஊர்களுக்கு உரியது என்பார் ரா பி சேதுப்பிள்ளை. திருவள்ளுவர் பேரறிவாளன் திரு - ஊருணி நீர் நிறைந்தது போல என்கிறார். இங்கு பேரறிவாளன் என்ற சொல் சுட்டுவது உதவும் உயர்ந்த குணம் கொண்டவன் என்கின்றன உரைகள். விவிலியமோ தந்தையாகிய இறைவனை வாழ்வுக்கான நீரூற்று என்கிறது. வாழ்நாள் பணியாக ஜாண்சன் ஈட்டும் அறிவின் தொகையாவும் ஊருணி நீராக நிறையட்டும். 

இராச. மணிமேகலை

யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki

இராச. மணிமேகலை
இராச. மணிமேகலை, புதுச்சேரியை சேர்ந்தவர்.  முதுகலைத்  தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஆசிரியர் பயிற்றுநராக உள்ளார். இலக்கிய வாசகர், வாசிப்பனுபவ கட்டுரைகள் எழுதி வருகிறார்.