| The Incredulity of Saint Thomas by Caravaggio, 1602 |
”இயேசு மலையின் மீதேறி ஜெபம் செய்தார். விடிந்ததும் தன் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்” என்ற நிகழ்வு மாற்கு, லூக்கா, மத்தேயு என பல சுவிசேஷ நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு எளிமையாகக் கடந்த வரியும் கூட. ஆனால் இலக்கியமும், கலையும் அறிமுகமான பின்னர் முன்பு கண்ட நிகழ்வுகள் பேருருக் கொள்கின்றன. அதன் அர்த்தங்களின் ஆழம் புலப்படுகின்றன. ஒரு சொல்லின் கணம் தாங்க முடியாததாக உள்ளது. பைபிள் படிமங்களாக நம் மனதில் பதியவைக்கப்பட்டவற்றின் அர்த்தத்தை, அழகை இன்னும் ஆழமாகத் தேட ஆரம்பிகிறோம்.
சமீபத்தில் வந்த “The Chosen” உட்பட இயேசு சார்ந்த வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் முதன்மையாக இருப்பது அவர் தன் சீடர்களைத் தேர்வு செய்யும் சித்திரம் தான். அவரின் அற்புதங்களைவிட நம்மை ஈர்ப்பவை அவர் சீடர்களைக் கண்டுகொள்ளும் இடங்கள், அவர்களின் பின்புலங்கள். இயேசுவின் மறைவுக்குப் பின்னான சித்திரத்தை கட்டியெழுப்பியவர்களில் முதன்மைப் பங்களிப்பாளர்கள் அவர்கள். யாரைவிடவும் மூன்று சீடர்கள் ஜான், தாமஸ், யூதாஸ் ஆகியோர் வெவ்வேறு காரணங்களின் நிமித்தம் தொடர்ச்சியாக வரலாற்றில் எடுத்தாளப் பட்டிருக்கிறார்கள் எனலாம். பன்னிருவரில் அல்லாத மெக்தலீன் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்படாமல் இருந்தாலும் சில காரணங்களின் பொருட்டு இன்னும் விவாதமாக வந்து கொண்டே இருக்கிறார். இவர்களில் தாமஸ் இந்தியாவின் பாதுகாவலாரக கத்தோலிக்க கிறுஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
தாமஸ் (தோமையர்) இந்தியாவில் சேர நாட்டில் வந்திறங்கி மொத்தம் ஏழரை கோயில்களைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. கட்டிமுடிக்கப்படாத ஒரு கோயில் திருவிதாங்கோடு அரைப்பள்ளி என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவர் சென்னை மைலாப்பூரில் இறந்ததாக அவரின் கல்லறை அங்கு அமைந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. சந்தேக தாமஸ் என்றழைக்கப்படுபவர் இந்தியாவிற்கு நற்செய்தியை அறிவிக்க வந்தார் என்பதை தற்செயல் என்று சொல்லிவிட முடியவில்லை. இயேசு உயித்தெழுந்து சீடர்களுக்கு காட்சியளித்தபோது தாமஸ் அங்கு இல்லை. அவரிடம் பிற சீடர்கள் சொன்னபோது அவர் நம்ப மறுத்தார். அவருக்கு இயேசு மீண்டும் காட்சியளித்தார். அவர் இயேசுவின் ஈட்டியால் குத்தப்பட்ட விலா எலும்புகளில் விரலை விட்டுப் பார்த்தார். அக்கணமே “என் இறைவா! என் கடவுளே!” என்று கூவினார். ”நீ பார்த்ததால் நம்புகிறாய், காணாமல் நம்புகிறவர் பேறுபெற்றவர்” என இயேசு சொன்னார்.
தான் கண்டு நம்பிய ஒன்றை காணாத மக்களிடம் சென்று சேர்க்கும் பெரும்பணியை தாமஸ் மேற்கொண்டார். அவர் வந்ததாக நம்பப்படும் பொ.யு 52-ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஐவகை நிலம் சார்ந்த தெய்வ வழிபாடு இருந்தது. பலவகை சிறு மதங்களும் இருந்திருக்கும். இந்த இடத்தில் ஒரு சந்தேக தாமஸ் வந்திருந்தால் தான் கிறுஸ்தவத்தைப் பரப்பியிருக்க இயலும் எனத் தோன்றியது.
அப்போஸ்தலர் என்பதை நற்செய்தி அறிவிப்பாளர், சீடர், ஒளியைக் உலகெல்லாம் எடுத்துச் செல்ல வந்தவர் என பல பொருள்களில் பைபிளில் எடுத்தாளப்படுகிறது. உண்மையில் சீடர்களைத் தேர்ந்தெடுக்கும் முன் இயேசு ஒன்றை கண்டறிந்திருக்க வேண்டும். அது அறிவு, ஒளி, தத்துவம், புதிய சிந்தனை என எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மதப்பரப்புரை என்று குறுகிவிட்ட பார்வையை மனிதர்கள் தங்கள் சக மனிதர்களுக்கு பகிர்ந்து கொள்ள விருப்பப்பட்ட பார்வை என்று எடுத்துக் கொள்வதை இன்னொரு பார்வையாகக் கொள்ளலாம். ஒரு எழுத்தாளர், சிந்தனையாளர், ஆன்மிகவாதி உலகு அனைத்தும் சொல்ல ஒன்று இருப்பதனால் தான் உலகு தழுவியவராகிறார். அந்த வகையில் தான் இயேசு தன் சீடர்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
பொ.யு. 1 ஆம் நூற்றாண்டிலேயே கிறுஸ்தவம் தாமஸ் வழியாக இந்தியா வந்ததைத் தான் யோ. ஞான சந்திர ஜாண்சன் அவர்களும் தனது ஆய்வுக்கட்டுரைகளில் முதன்மையாகக் குறிப்பிடுகிறார். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் க.நா. சுப்ரமண்யம் “தாமஸ் வந்தார்” என்ற பெயரில் நாவல் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. கிறுஸ்தவ இலக்கியம் சார்ந்த ஜாண்சனின் வரலாற்று ரீதியான பார்வை தோமையரிலிருந்தே தொடங்குகிறது.
![]() |
| Madonna Of The Mangrove by frank wesley, 1923-2002 |
ஆனால் நாம் கிறிஸ்தவ மதம், தத்துவம், இலக்கியம் இந்த மூன்றையும் இந்திய அளவில் சொல்கையில் ஓர் அந்நிய மதமாக பொ.யு. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதமாகவே குறிப்பிடுகிறோம். ஆனால் முசிறிஸ் துறைமுகத்தில் இறங்கியதாக நம்பப்படும் தாமஸின் வருகையை அறிவிக்கும்படியாக மலங்கரா பாரம்பரிய சிரியன் கிறிஸ்தவர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். இதை ஒரு தொன்மக் கதையாகக் கூடக் கொள்ளலாம். இப்பார்வையின் வழியாக இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டின் கிறுஸ்தவ மதச் சிந்தனைகளின் தாக்கத்தைக் கண்ணோக்கினால் அது மேலும் அணுக்கமாகலாம்.
அதன்பின் பொ.யு. 16ஆம் நூற்றாண்டு தொடங்கி போர்த்துகீசியர்கள், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சவேரியார் (1506-1552) என தமிழகத்தின் கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மண்டலம், அதன் எல்லையோரக் கடற்கரைகள் முழுவதுமாக கிறிஸ்தவ மதம் தன் தாக்கத்தை செலுத்தியிருந்தது. அதன்பின் வந்த டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களால் இந்தியா முழுவதுமான அதன் தாக்கத்தை வரலாற்றில் வாசித்திருப்போம். சவேரியாருக்குப் பின் இயேசு சபைத் துறவியர்கள் பலர் இந்தியாவிற்கு வந்தனர். அவர்களில் ஆய்வாளர் ஜாண்சன் முக்கியமானவராகக் குறிப்பிடுபவர் அன்டிரிக்கு அடிகளார். இவர் எழுதிய தம்பிரான் வணக்கம் (1578), கிரீசித்தியானி வணக்கம் (1579) அண்டிரீக்கு அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புன்னைக்காயலைச் சேர்ந்த அந்தோனி எழுதிய சந்தந்தோனியார் அம்மானை ஆகிய நூல்களை முதல் கிறுஸ்தவ இலக்கிய நூல்களாக ஜாண்சன் குறிப்பிடுகிறார். இவ்விலக்கியங்கள் பற்றிய வரலாற்றுப் பார்வையை அளிக்கும் ஜாண்சனின் கட்டுரைகள் முக்கியமானவை.
அங்கிருந்து முதல் எழுத்துவடிவ கிறுஸ்தவ இலக்கியங்கள், புனைவுகள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றையும் ஜாண்சன் தொகுக்கிறார். இவையாவும் அந்த நற்செய்தியை அறிவிக்க வந்த இயேசுவின் ஆன்மாவை வெவ்வேறு வகைகளில் புனைந்து புரிந்து கொண்டவர்கள் அளிக்கும் சித்திரம் எனக் கொள்ளலாம்.
*
யோ. ஞான சந்திர ஜாண்சன் இரண்டு முக்கியமான பணிகளை செய்திருக்கிறார். முதலாவது கிறுஸ்தவ இலக்கியங்களை தொகுத்து, பதிப்பிக்கும் பணி. இதில் அவரின் மொழியாக்கப் பணிகளையும் உள்ளடக்கலாம். மில்லர் என்னும் மாமனிதர் (சென்னை கிறித்தவக் கல்லூரியின் நிறுவனர்), சென்னை கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும் ஆகிய மொழியாக்கப்பணிகள் வழியாக அவரின் தேர்வை அறிந்து கொள்ள முடிகிறது. தொடர் செயல்பாட்டின் வழியாக ஜாண்சன் தமிழ்- கிறுஸ்தவ இலக்கியம் தொடர்பான வரலாற்றுப் பார்வையையும் கட்டமைக்கிறார்.
இரண்டாவது அவர் ஆளுமைகள் சார்ந்து எழுதிய நூல்கள். வேதநாயக சாஸ்திரியார், கால்டுவெல், ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தெளபே, எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் பற்றிய வரலாற்று நூல்கள் முக்கியமானவை. இந்த தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் வழியாக நாம் கிறிஸ்தவ மதம் சார்ந்த அறிவுப்பணிகள், அவை செயல்பட்ட விதம், அறிஞர்களில் ஏற்படுத்திய தாக்கம் என பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
இவர்கள் அனைவரைப் பற்றிய பதிவுகளும் தமிழ்விக்கியில் உள்ளன. கிறுஸ்தவ கலைக்களஞ்சியம் ஒன்று தனிப்பிரிவாக அமையுமளவு கட்டுரைகள் உள்ளன. உதாரணமாக, மேலைநாட்டு இறைத்தொண்டர்களின் படைப்புகளுக்கு சீகன்பால்குவும் வீரமாமுனிவரும் முன்னோடிகளாக இருந்ததைப் போல தமிழ்க் கிறுத்தவ இலக்கியப் படைப்பாளர்களுக்கு முன்னோடியாக விளங்கிய வேதநாயக சாஸ்திரியாரில் ஆரம்பித்தால் அவரோடு மிகவும் நெருங்கிய நட்புறவு கொண்டவரும் அவரை கிரேக்கப் புலவரான ஹோமருடன் ஒப்பிட்டவருமான ஜி.யு. போப், அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் இடையன்குடியில் வாழ்ந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராயர் கால்டுவெல், அவரை மதப்போதகக் கல்விக்காக அழைத்து வந்த ஸ்வார்ட்ஸ் ஐயர், இப்போதும் தன்னை வேதநாயகம் சாஸ்திரியார் என அறிவித்துக்கொண்டு கிறிஸ்தவப் பணி புரியும் வழக்கம் வரை சென்றடையும் தமிழ்விக்கி பதிவுகள் உள்ளன.
வீரமாமுனிவருக்குப் பின் தென்னிந்தியா வந்து மதம் மற்றும் கல்விப் பணிகளை மேற்கொண்டவர்களுள் முக்கியமானவரான வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே (1770 - 1816) பதிவு வழியாக அவர் காலகட்டத்தில் புரொட்டஸ்டண்ட் மிஷனரி செய்த கல்விப்பணிகள், மதமாற்றப் பணிகள் வழியாக கன்னியாகுமரி மைலாடியில் முதல் சீர்திருத்தக் கிறுஸ்தவராக மாறிய மகாராஜன் வேதமாணிக்கம் பதிவுக்கு வந்து சேரலாம். கால்டுவெல், எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை, வட்டுகோட்டை குருமடம், அதனுடன் தொடர்பிலிருந்த தமிழறிஞர்களான சி.வை. தாமோதரம் பிள்ளை, கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, அளவெட்டி கனகசபைப் புலவர் என பெரும் வரிசை கொண்ட அறிஞர்களின் பதிவுகள் வழியாக நாம் கிறுஸ்தவ அறிவு வட்டம் ஒன்றையும், அதனுடன் நாம் புனைந்து பார்க்கச் சாத்தியமான பெரும் வாழ்க்கையை உள்ளடக்கிய பதிவுகளும் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான பதிவுகளுக்கு ஞான சந்திர ஜாண்சன் அவர்களின் நூல்கள் உதவியுள்ளன.
முதன் முதலாக 2023-ல் கிறுத்தவக் காப்பியங்கள் நூலை தமிழ்விக்கி பதிவுகளுக்காக எழுத்தாளர் ஜெயமோகன் தந்ததன் வழியாக அவரை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதில் கிறுஸ்தவ இலக்கியம், காப்பியங்கள் குறித்த வரலாற்று ரீதியிலான முன்னுரை முக்கியமானதாக இருந்தது. கிறிஸ்தவக் காப்பியங்கள் என்றவுடன் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு காவியம் என்ற நிலை மாற வேண்டி நாற்பத்தியெட்டு கிறிஸ்தவக் காப்பியங்களைப் பட்டியலிட்டு அதில் தொகுத்திருந்தார். இக்காப்பியங்களின் வழியாக பைபிளிலிருந்து எந்தெந்த நிகழ்வுகள் காப்பியங்களாக்கப் பட்டிருக்கின்றன என்று அறிவது ஆர்வமாக இருந்தது. கன்னிமரி, யோசேப்பு, எஸ்தர், பவுல் ஆகியோரின் காவியங்கள் வழியாக பைபிளிலிருந்து கதைமாந்தர்கள் காவிய நாயகர்களாக ஆவதையும் பார்க்க முடிகிறது. ஞானாதிக்கராயர், சவேரியார், தெரெசா, வேதமாணிக்கம் போன்ற திருமறைசாராத காவிய நாயகர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.
அவர் கட்டுரைகள் வழியாகத் தெரிந்து கொண்டது அவர் தீவிரமாக, முதன்மையாக எடுத்துக் கொள்வது தொகுத்தல் பணி என்பதைத்தான். ஆய்வாளர்களின் முதன்மைக் குணம் என அதைச் சொல்லலாம். எல்லா நல்ல கலைஞர்களும் இறுதியில் சென்றமையும் புள்ளியும் கூட. தூர தேசத்திலிருந்து வந்த ஒரு சொல், ஒரு செய்தியை இது காறும் உள்வாங்கிக் கொண்ட நம் முன்னோர்கள், அதை அவர்கள் புனைந்து கொண்ட விதம், கடத்த முற்பட்ட வடிவம் ஆகியவற்றை வரலாற்றுப் பார்வையுடன் தொகுத்துள்ளார் என்றே அவரின் தொகுத்தல் பணிகளைப் பார்க்கையில் சொல்ல முடிகிறது. அவர் எழுதிய பெரும்பான்மையான நூல்கள் குறித்து தனித்தனி தமிழ்விக்கி பதிவுகள் நண்பர்களால் போடப்பட்டுள்ளன. தவிரவும் அவர் தொகுத்த கிறுத்தவக் காப்பியங்கள், கிறுத்தவச் சிற்றிலக்கியத் திரட்டு ஆகிய நூல்களில் உள்ள அனைத்துக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றிற்கும் தனித்தனி பதிவுகள் உள்ளன. இவையனைத்தும் இணைந்து நம் சூழலுக்கு பெரிய கிறுத்தவ அறிவுத் திரட்டு ஒன்று உருவாகி வந்துள்ளது என்றே சொல்ல முடிகிறது. அந்த வகையில் இந்த அறிவுச்சேகரத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் ஒருவராக தன் தொகுத்தல் பணியின் நிமித்தம் ஜாண்சன் அமைகிறார்.
![]() |
| யோ. ஞான சந்திர ஜாண்சன் |
கிறித்தவ இலக்கியங்கள் பற்றிய விழிப்புணர்வும் அவற்றைப் படிக்கும் ஆர்வமும் பாதுகாக்கும் உணர்வும் வேண்டும் என்பதே ஜாண்சனின் தலையாய வேண்டுகோலாக ஒவ்வொரு கட்டுரையின் கீழும் குறிப்பிட்டிருக்கிறது. அதற்கு மேலாக அதைக் கொண்டு கலை, இலக்கியத்தில் முழுமையான ஒரு தமிழ்-கிறுஸ்தவம் தொடர்பான வாழ்வை, சித்திரத்தை உருவாக்க முடிந்தால் அவை இதுகாறும் தமிழில் இயங்கி வந்த கிறுஸ்தவ தமிழறிஞர்களுக்கு நாம் செய்யும் கைமாறாக அமையும்.
அறிவு, ஒளி, சிந்தனை யாவுமே தன்னளவில் இயல்பாகப் பரவும் தன்மையது. ஒளித்து வைக்கவே இயலாத அது தான் வெளிப்படுத்தத் தேர்ந்து கொள்ளும் ஒன்று எச்சமின்றி தனக்குச் சாத்தியமான எல்லை வரை முயன்று பார்க்கும் ஒன்றாகவே இருப்பதை இயேசு தொடங்கி, அப்போஸ்தலர்கள், அறிஞர்கள் வரை பார்க்க முடிகிறது. தோமையர் ஒருவேளை அத்தனை தொலைவு பயணம் செய்து இங்கு தமிழ் நிலத்திற்கு வந்து தன் குரு சொன்ன அந்த ஒளியை பறைசாற்றியது உண்மையெனில் அந்த உச்சமான விருப்பமே இன்றளவிலும் ஜாண்சனின் தீவிரமான நூல்களாக உருக்கொண்டிருக்கின்றன எனலாம்.
தமிழ்விக்கி தூரன் 2026 விருது பெறும் யோ. ஞான சந்திர ஜாண்சன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ரம்யா
யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki
ரம்யா. எழுத்தாளர். நீலி மின்னிதழ் ஆசிரியர். தமிழ்விக்கி கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர். சிற்றிதழ்களில் சிறுகதைகள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதிவருகிறார். நீலத்தாவணி சிறுகதைத்தொகுப்பு 2024-ல் வெளிவந்துள்ளது.


