| The Martyrdom of Saint Matthew by Caravaggio, 1599 |
1
ஒரு இலக்கிய நூல் வரலாற்றில் எப்படி எழுதப்பட்டு, சிதைந்து, மீண்டு, தொகுக்கப்பட்டு நமக்கு இன்று வாசிக்கக் கிடைக்கிறது என்பதைப் படிப்பது, வேகப் புனைவு ஒன்றை வாசிப்பதற்கு நிகரானது. அதில் எழுவது அந்த இலக்கியத்தின் வாயிலாக வெவ்வேறு மனிதர்கள், அவர்கள் சந்தித்த சவால்கள், ஒரு படைப்பிற்காகத் தேடி அலைந்து சென்றவர்களின் கதை. ஒன்றை எழுத வாழ்நாளை அர்ப்பணித்தவர்களின் கதை. அந்நூல் தனிக் கதாபாத்திரமாக உருவெடுத்து அதன் ஆசிரியர்களின் வரலாற்றுச் சாட்சியாகவும், தன் சமூக வரலாற்றின் பிரதிநிதியாகவும் மாறியிருக்கும். நமக்கு இன்று கிடைக்கும் சங்கப் பாடல்கள் தொடங்கி அனைத்து மரபிலக்கியங்களின் கதையும் இதுவே.
பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள 'சாலமோனின் பாடல்கள்' (உன்னத சங்கீதம்) யூதர்களின் திருமண நாளில் பாடப்பட்டதாகக் கருதப்படும் 28 காதல் கவிதைகளின் தொகுப்பு. காதலின் தீவிர பித்தும், தன்னிலை அழிந்த காமமும் அமைந்த இப்பகுதி, பைபிளின் உச்ச கவித்துவமாகக் கருதப்படுகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட எகிப்திய, மெசபடோமிய வாய்மொழிக் காதல் பாடல்களாக இருந்து, பல்வேறு நிலங்களின் வழியே திரிந்து, மொழிபெயர்ந்து, வெட்டிச் செதுக்கி விலைமதிப்பற்ற வைரக்கல்லென இன்று 28 பாடல்களாக பைபிளில் மையம் கொண்டுள்ளன என ஸான்டர்வான் (Zondervan) போன்ற ஆய்வு நூல்கள் குறிப்பிடுகின்றன.
பைபிள் தனி நூலாக தமிழ் நிலத்தில் கடந்த முந்நூறு ஆண்டுகளில் உருவாக்கிய செல்வாக்கு உன்னத சங்கீதத்திற்கு நிகரானது. அந்நிய நிலத்திலிருந்து கடல் தாண்டி பயணித்து வந்த ஒரு நூல் இங்கே எப்படி வெவ்வேறு வாய்மொழி இலக்கியங்களாக, கீர்த்தனைகளாக, கும்மிப் பாடலாக, காப்பியங்களாக உருமாறி நம் நிலத்திற்கான நூலாகவும், நம் சமூகத்தின் பிரதிநிதியாகவும், அதே நேரத்தில் கிறிஸ்தவத்தின் ஆன்மீக உச்சத்தைச் சென்று தொடும் தரிசனமாகவும் உள்ளது என்பது வரலாற்று விந்தை.
![]() |
| Song of Songs IV by Marc Chagall, 1958 |
தூரன் விருது விழாவிற்காக ஞான சந்திர ஜாண்சனின் நூல்களை வாசித்தும், தமிழ் விக்கிக்காகப் பதிவேற்றியும் கொண்டிருந்த போது இந்த விந்தையே வினாவாக என்னுள் எழுந்தது.
இரண்டு கேள்விகள்:
-
மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா வழியாக வந்த அந்நிய மதம் முந்நூறு ஆண்டுகளில் தமிழ் நிலத்தில் கொன்றை, கருவேலம் மரங்கள் போல ஆழ வேரூன்றியதற்கு காரணமென்ன?
-
அவை எப்படி பல சாத்தியங்களால் தொகுக்கப்பட்ட ஒரு பெருமதமாக இங்கே நிலைகொண்டன?
இரண்டு கேள்விகளுக்கும் அவர் நூல்கள் வழியாகவே ஒரு வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்க முயன்றேன்.
2
ஞான சந்திர ஜாண்சன் தொகுத்து பதிப்பித்த மூன்று நூல்கள் முதன்மையான பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவை:
-
கிறித்தவத் தமிழ்க் காப்பியங்கள்
-
கிறித்தவச் சிற்றிலக்கிய திரட்டு
-
கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள்
'கீர்த்தனைகள்' நூலில் வேதநாயகம் சாஸ்திரியார், அருமைநாயகம் சட்டம்பிள்ளை தொடங்கி ஒன்றிரண்டு பாடல்கள் எழுதியவர்கள் வரை உள்ளடக்கி 2600-க்கும் மேற்பட்ட பாடல்களை ஆசிரியர் குறிப்புகளுடன் மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார். 'சிற்றிலக்கியத் திரட்டு' பள்ளு, அம்மானை, கும்மி போன்ற பதினெட்டு சிற்றிலக்கியங்கள் பற்றிய விரிவான தரவுகளும், அவற்றின் ஆசிரியர் பற்றிய முழு வாழ்க்கைச் சித்திரமும் கொண்டது.
பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பொதுவாகவே தமிழில் சிற்றிலக்கியக் காலம். அவற்றின் முக்கிய சாத்தியங்கள் அதே காலத்தில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளன. பொ.யு. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இதற்கு இணையாக நாற்பது காப்பிய நூல்கள் பட்டியலிடப்படுகின்றன.
இதன் முதல் நூல் என நாம் கருதியது வீரமாமுனிவரின் 'தேம்பாவணி' (பொ.யு. 1726). ஆனால், பதிப்பாசிரியர் ஜாண்சன் மேலதிக ஆய்வில் இத்தாலிய அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து தூத்துக்குடி தமிழர் ஒருவர் எழுதிய, தேம்பாவணிக்கும் முந்தைய காப்பியக் கையெழுத்துப் பிரதியைக் கண்டெடுத்துப் புதுப்பதிப்பாகக் கொண்டுவந்தார். கிட்டத்தட்ட துப்பறியும் நாவல் கதைதான். அவரது நாற்பதாண்டுத் தேடலில் கிடைத்த அருமுத்து அது.
தேம்பாவணி வீரமாமுனிவர் எழுதிய காலத்தில் வெளியிடப்படவில்லை. ஆனால் தேம்பாவணி இயற்றப்பட்டு சிறிது காலத்திலேயே இலங்கையில் கூழங்கைத் தம்புரான் யோசேப்புப் புராணம் இயற்றிவிடுகிறார். தேம்பாவணியை அடிப்படையாகக் கொண்டது இந்நூல். தொடர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டில் பல காப்பிய நூல்கள் இயற்றப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் தேம்பாவணி ஒரு தொடக்கம் என ஆசிரியர் கூறுகிறார். அக்கதை வாய்மொழியாக தமிழகத்திலும், இலங்கையிலும் பரவியிருந்தது.
ஆனால் பொ.யு. 1706-ல் சீர்திருத்தத் திருச்சபையின் அருட்பணியாளர் பார்த்தலோமியஸ் சீகன்பால்க் தரங்கம்பாடி வந்து தமிழ் கற்று பைபிளை ஜெர்மன் வழியாக தமிழில் மொழிபெயர்த்ததையும், அம்மொழிபெயர்ப்பே தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியத்திற்கான தோற்றத்தின் அடிப்படை என்பதையும் குறிப்பிடுகிறார்.
![]() |
| சீகன்பால்க் |
இரண்டில் எனக்கு பைபிளின் மொழியாக்கம் ஏற்படுத்திய செல்வாக்கே ஏற்புடையதாகப்படுகிறது. மேற்கத்தியர்கள் தமிழ் நிலத்திற்கு சீர்த்திருத்த/மதமாற்ற நோக்கில் பொ.யு. 16, 17 ஆம் நூற்றாண்டு முதல் வரத் தொடங்கிய குறிப்பு நமக்குக் கிடைத்தாலும், இலக்கிய சான்றுகள் எனக் கிடைப்பது 18 ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்து தான். அதாவது பைபிள் தமிழ் படுத்தத் தொடங்கிய போது. அதுவொரு தொடக்கம், தமிழகத்திலும், இலங்கையிலும் இன்றுவரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ இலக்கியங்களுக்கு மூல நூலாக அமைந்தது சீகன்பால்க் தரங்கம்பாடியில் செய்த முதல் மொழியாக்கம்.
இந்நூல்களில் எதைக் காப்பியத் தகுதியில் வகைப்படுத்துகிறார், எதைச் சிற்றிலக்கியத் தகுதியில் என்பதும் சுவாரஸ்யமானது. ஜாண்சன் தமிழிலுள்ள இலக்கிய வகைமைகளின் அளவுகோல்களின் அடிப்படையிலேயே இந்த வகைப்பாட்டை மேற்கொள்கிறார்.
சிற்றிலக்கியம், காப்பியம், கீர்த்தனைகள் என்னும் மூன்று இலக்கிய வகைமைகள் வழியாக கிறிஸ்தவ மதத்திலுள்ள நன்நெறி கருத்துக்கள் எப்படி பரப்பப்படுகின்றன என்றும், 18 ஆம் நூற்றாண்டு தொடங்கி தென் தமிழகத்திலும், கடலோரத் தமிழகத்திலும் கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு பெருமக்களின் ஆதரவைப் பெற்றதையும் நூல் வழி அறிய முடிகிறது. தொடர்ந்து கீர்த்தனைகள் வழியாக பெருமக்கள் உள்ளிழுக்கப் படுகின்றனர். சிற்றிலக்கிய வகை நூல்கள் வெகு மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடல் நடையிலும், எளிதாக மெட்டிசைத்து பாடும் படியும் அமைந்துள்ளதால் அதுவும் செல்வாக்கு செலுத்துகிறது.
உதாரணமாக, ஜி.எஸ். வேதநாயகர் எழுதிய மாதர் கும்மி என்னும் நூல். வேதநாயகர் மதுரையிலும், சென்னையிலும் இறைப்பணியாளராகப் பணியாற்றியவர். அப்போது அவர் வார இறுதி நாட்களில் பாடுவதற்காக கீர்த்தனைகள் பலவற்றை இயற்றியுள்ளார்.
மாதர் கும்மி பெண்களின் வாழ்க்கை முறை பற்றிப் பாடுகிறது. பெண் விடுதலை சார்ந்தும், வரதட்சணைக் கொடுமை சார்ந்தும், சமூக மறுமலர்ச்சி பற்றிய கருத்துகளையும் பாடுகிறது.
பாயற்றகப்பலைப் போலாகும்
படித்துமூட மனைவிநடுக்கடல்
பச்சைமரமிதப் பொக்குமடி
இதற்கு இணையாக ஆடவர் கும்மி என்னும் நூலும் ஜி.எஸ். வேதநாயகர் இயற்றியுள்ளார். அதில் ஆடவர் பெண்களை எப்படி மதிக்க வேண்டும், சமூக ஒழுக்கத்தை எப்படி பேணவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். பெண்களைப் போற்றியும், பெண் கல்வியை முன்னிறுத்தியும் வார இறுதிகளில் திருச்சபையில் இப்படி பாடப்பட்டிருந்தால் அதன் செல்வாக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.
கிறிஸ்தவம் தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கியதற்கு முதல் காரணம் அக்காலத்தில் பெண்களுக்கும், அனைத்துச் சாதியினருக்கும் சமமான அடிப்படை உரிமைகளை வழங்கிய மதமாக அது இருந்தது. ஆனால் முதல் காரணம் என்பது முழுக் காரணம் அல்ல. உரிமை ஒரு வாசல். வாசல் திறந்திருப்பதனால் மட்டுமே ஒருவர் உள்ளே சென்று குடியேறி, அங்கேயே வாழ்ந்து, அதை எழுதத் தொடங்கிவிடுவதில்லை.
![]() |
| Hagar in the Wilderness by Camille Corot, 1935 |
3
கிறிஸ்தவக் கீர்த்தனைகள் நூலில் என் கண்ணில் பட்ட பாடல்: ‘மூலாதி காரணனே! மூவுலகுந் தாங்குபரி பாலா...’. இதை இயற்றியவர் வடக்கன்குளம் தேவசகாயம் பிள்ளை.
திருநெல்வேலி பணகுடி அருகிலுள்ள வடக்கன்குளம் பேராலயத்தின் வரலாறும், அவ்வூர் கிறிஸ்தவத்தின் தொடக்கமும் 'சாந்தாயி' எனும் ஒற்றைப் பெண்ணிலிருந்து தொடங்குகின்றன. 17-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி தோப்புவிளையிலிருந்து தனியாகக் காட்டுவழியில் 50 கி.மீ நடந்து வடக்கன்குளம் எனும் அரைப்பாலை நிலத்திற்கு வருகிறாள் சாந்தாயி. அங்கே ஓலைக்குடிசை அமைத்துத் தங்கும் அவள் குடும்பம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறாள். சாந்தாயி குடும்பத்திற்கு வடக்கன்குளம் வந்த மதப்பரப்புனர் ஜான் டி பிரிட்டோ (புனித அருளானந்தர்) ஓலையாலான குருசு ஆலயம் அமைத்து ஞானஸ்நானம் அளிக்கிறார். அதுவே இன்று பேராலயமாக உள்ளது. புனைவு வழியே சாந்தாயிலிருந்து மொத்த தமிழ்க் கிறிஸ்தவ வரலாறும் விரித்தெடுக்கப்பட வேண்டியது.
அவள் ஏன் நடந்தாள் என்பதற்கு நம்மிடம் எந்த சான்றும் இல்லை. இருப்பது ஒரு பெயரும், ஒரு தூரமும், ஒரு திசையும் மட்டுமே. ஆனால் அந்த மூன்றும் சேர்ந்து ஒரு வடிவத்தைக் காட்டுகின்றன. பதினேழாம் நூற்றாண்டில் ஒரு பெண் தனியாகக் கிளம்புகிறாள் என்றால் அவளுக்கென ஊரில் இடமில்லை என்பது பொருள். கணவனை இழந்திருக்கலாம், சாதி விதிகளை மீறியிருக்கலாம், இழக்க ஒன்றுமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். எதுவாயினும் அவளுக்குப் பின்னால் மூடப்பட்ட ஒரு கதவு இருந்திருக்கிறது. மேலும், அவள் தேர்ந்தெடுத்த திசை வளத்தை நோக்கியதல்ல. வளமான கன்னியாகுமரியிலிருந்து அரைப்பாலையை நோக்கி நடப்பவள் நிலத்தைத் தேடிச் செல்லவில்லை, ஊரைத் தவிர்த்துச் செல்கிறாள். வழியில் ஊர்கள் இருந்திருக்கும். அவள் அவற்றைக் கடந்து சென்றிருக்கிறாள். ஐம்பது கிலோமீட்டர் என்பது அப்போது மூன்று நாள் நடை. இரண்டு இரவுகள் காட்டில். அத்தனை தூரம் நடந்து முடித்த பின்னும் அவள் திரும்பிச் செல்லவில்லை. அங்கேயே ஓலைக்குடிசை போட்டு, குடும்பம் அமைத்து, ஒரு ஊரையே தொடங்குகிறாள். அதாவது, சாந்தாயி மதம் மாறுவதற்கு முன்பே ஒரு வாழ்வைத் துறந்து இன்னொன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். பிரிட்டோ அங்கே வந்து ஞானஸ்நானம் அளிக்கும்போது புதிதாக ஒன்றைக் கொடுக்கவில்லை. அவள் ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருந்த ஒன்றுக்குப் பெயர் சூட்டுகிறார்.
ஞான சந்திர ஜாண்சனின் நூல்களை நான் வாசிக்கும் போது அதிலிருக்கும் வாழ்க்கைத் தருணங்களே எனக்கு முதன்மையாகப் படுகின்றன. தேவசகாயம் (நீலகண்ட பிள்ளை) திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மா படையில் படைத்தளபதியாக இருக்கிறார். டச்சுப் படைத்தளபதியான டி லெனாயின் கிறிஸ்தவப் போதனையால் நீலகண்ட பிள்ளை தேவசகாயமாக மாறுகிறார். திருவிதாங்கூரிலுள்ள சாதிப் பேதத்திற்கும், ராணுவத்தின் அதிகாரக் கொடுமைக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். தினமும் எண்பது சவுக்கடிகள் அவருக்கான தண்டனை. ஆனால் அங்கே அவர் அதிசயங்கள் நிகழ்த்தியதாகவும், நோயாளிகளைக் குணப்படுத்தி, ஆட்டுக்குட்டியை உயிர்ப்பித்ததாகவும் நம்பப்படுகிறது. சிறையில் தேவசகாயத்தின் செல்வாக்கு கூடவே அவர் கிறிஸ்தவ மதத்தைக் கைவிடும்படி அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுகிறார். அவர் அதை மறுக்கவே சிறைக்காவலர்களால் ஆரல்வாய்மொழி மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது எலும்புகளையும், பற்களையும் மீட்ட உள்ளூர் குருமார்கள் அதனைக் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்கின்றனர். அன்றிலிருந்து அவர் தொன்மமாகிறார்.
இன்றும் தேவசகாயம் பிள்ளை பற்றி தொன்மக் கதைகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகப் பிரபலம். தேவசகாயம் பிள்ளை பிறந்த நட்டாலம் கிராமத்திலிருந்து, அவர் அடக்கம் செய்யப்பட்ட கோட்டாறு வரை ஆறு முக்கிய புனித யாத்திரைத் தலங்கள் வழியாக அவரது புனித மரபு போற்றப்படுகிறது. வடக்கன்குளத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 1 அன்று தேவசகாயம் பிள்ளை திருப்பயணத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13 அன்று திருவிழிப்பு பிரார்த்தனையும் நிகழும்.
2007ல் சூ. இன்னாசி தேவசகாயம் பிள்ளையை தலைவனாகக் கொண்டு ‘திருத்தொண்டர் காப்பியம்’ இயற்றியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபை தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் வழங்கியது. இந்தியாவின் முதல் பொதுநிலைப் புனிதர் இவரே.
![]() |
| யோ. ஞான சந்திர ஜாண்சன் |
4
பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள 'ரூத்' கதையைத் தமிழில் அம்மானை வடிவில் எழுதியவர் அருமைநாயகம் சட்டம்பிள்ளை. நாசரேத்தைச் சேர்ந்தவர். யூதர்களின் எபிரேய மொழியில் எழுதப்பட்டதே மெய்யான கிறிஸ்தவம் என்றும் ஐரோப்பியர்கள் அதை தங்களுக்கு ஏற்ற வகையில் திரித்துப் பரப்புகின்றனர் என்னும் நம்பிக்கை கொண்டவர். அவருள் அந்நம்பிக்கை கிறிஸ்தவக் குருமார்களின் ஊழலை நேரில் கண்டதால் எழுவது.
மேற்கிலிருந்து மதப்பரப்புனர்கள் தமிழகம் வந்துகொண்டே இருந்தனர். அவர்களில் ஒரு சாரருக்கு நம் சமூகம் நோக்கிய மேலிருந்து கீழ் நோக்கிப் பார்க்கும் பார்வையிருந்தது. கால்டுவெல் தன் ‘திருநெல்வேலி சாணார் வரலாறு’ நூலில் நாடார்களில் கிறிஸ்தவரல்லாதவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் குறிப்பிடுகிறார். அவர்கள் இந்து மதத்திலிருந்தாலும் காட்டுமிராண்டிகளாகவே கருதப்படுகின்றனர் என்கிறார். இதனை அருமைநாயகம் எதிர்க்கிறார். அருமைநாயகம் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் பரம்பரையாகவே செல்வந்தர்கள். இவர் சட்டம்பிள்ளை (படிப்பறிவால் ஆசிரியர் ஆனவர்). அருமைநாயகம் தன் குடும்பத்தை முதன்மை சான்றாக முன்வைக்கிறார். அங்கிருந்து அருமைநாயகம் சட்டம்பிள்ளையின் பயணம் தொடங்குகிறது.
![]() |
| The Last Supper by Jamini Roy, 1940 |
கால்டுவெல் தொடங்கி அருமைநாயகம் வாழும் பிரகாசபுரத்தின் கேமரர் வரை திரிந்த பார்வையும், ஒழுக்கமற்ற நடத்தைகளும் கொண்டிருப்பதைக் காண்கிறார். பைபிளின் மொழியாக்கத்திலிருந்தே அந்த திரிந்த கோணம் இருப்பதைக் கண்டுகொள்கிறார். அதற்காக எபிரேய (Hebrew) மொழி கற்று அதிலிருந்த மூல பைபிளைத் தமிழுக்கு மொழிபெயர்க்கிறார். கிறிஸ்தவ இறைப்பணியாளர்களிடம் அவருக்கு தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது. அவர்கள் இங்கே இந்திய மக்கள் பற்றி இனவாத பார்வை கொண்டிருப்பதையும், மடங்களிலுள்ள ஊழல் பற்றியும் முன்வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்.
ஆலயத்தில் குருசு வைப்பது அவருக்கு உவப்பானதாக இல்லை. மீண்டும் உருவ வழிபாடு நோக்கிச் செல்கிறோம் என வாதிடுகிறார். சிலுவை ஒரு அடையாளமே அன்றி இறைவடிவம் அல்ல என வாதம் செய்கிறார். எளிய உடைகளுக்குப் பதிலாக செல்வந்தரான அருமைநாயகம் மிடுக்கான உடைகளும் தலைப்பாகையும் அணிகிறார்.
இச்செயல்கள் கேமரருக்கு எரிச்சல் ஏற்படுத்துகின்றன. ஆசிரியர் பணியிலிருந்து அருமைநாயகத்தை வெளியேற்றுகிறார்.
இவையனைத்தாலும் உந்தப்பட்டு அருமைநாயகம் எஸ்.பி.ஜி - யிலிருந்து (Society for the Propagation of the Gospel in Foreign Parts) விலகி இந்தியக் கிறிஸ்தவ இறையியலை உருவாக்குகிறார். அதற்கான கொள்கைகளைத் தன் நண்பரும் ஆதரவாளருமான சுவாமியடியான் உபதேசியாருடன் இணைந்து உருவாக்குகிறார். Hindu Church of Lord Jesus பிரகாசபுரத்தில் நிறுவப்படுகிறது.
அருமைநாயகம் தேவாலயம் தொடங்கிய அதே காலத்திலேயே சிப்பாய் கலகம் வெடிக்கிறது. பிரிட்டிஷ் அரசு அனைத்து செயல்களையும் ஒரு சந்தேக நோக்குடன் கண்காணிக்கத் தொடங்குகிறது. மேலும், பிற அமைப்புகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் செயல்படும் போது அருமைநாயகத்தால் அதற்கு ஈடுகொடுக்கும் சேவையில் ஈடுபட முடியவில்லை. அவரது அமைப்பு தேக்கம் காண்கிறது.
ஒரு திரைக்கதைக்கான சாத்தியம் கொண்ட வாழ்க்கை அருமைநாயகத்துடையது. அவர் அங்கே தேங்கிவிடவில்லை. 1893ல் சிகாகோவில் அனைத்து மத மாநாடு நிகழ்விற்கான விளம்பரத்தைப் பார்க்கிறார். புகழ் பெற்ற விவேகானந்தர் உரையாற்றிய மாநாடு தான் அது.
அதில் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் அமைப்பின் பேச்சு இருக்கிறது. யூத நம்பிக்கையான சனிக்கிழமை வழிபாடு நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களைப் பற்றி மேலும் வாசிக்கிறார். அவர்களுடன் கடிதத் தொடர்பு ஏற்படுகிறது. அருமைநாயகத்தின் தொடர் உரையாடலால் 1906ல் ஜேம்ஸ் என்பவர் இந்தியா வருகிறார். 1908ல் மினசோட்டாவிலிருந்து தென்னிந்தியா வந்த ஜேம்ஸுக்கு அருமைநாயகம் ஏசு ரட்சகர் சபை மூலம் 1000 ரூபாய் வழங்குகிறார். 1915ல் செவந்த் டே அட்வெண்டிஸ்ட்களின் முதல் தென்னிந்திய தேவாலயம் ஐம்பது உறுப்பினர்களுடன் நிறுவப்படுகிறது. அவர்களுடன் இணைந்த ஒரு அமைப்பாக அருமைநாயகம் சட்டம்பிள்ளையின் ஏசு ரட்சகர் சபை மாறுகிறது. அருமைநாயகத்தின் கீர்த்தனைகளும் அக்காலத்தில் புகழ் பெற்றவை. 150க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இவர் இயற்றியுள்ளார்.
அருமைநாயகம் சட்டம்பிள்ளையின் வரலாறு வழியே எஸ்.பி.ஜி., கத்தோலிக்கம், அவரது சொந்தச் சபை, செவன்த் டே அட்வென்டிஸ்ட் என எத்தனையோ கிறிஸ்தவப் பிரிவுகள் இங்கே உருவானதைப் பார்க்க முடிகிறது. இவை ஒன்றோடொன்று இணைந்தும், மோதியும், விவாதித்தும் முயங்கியதன் விளைவே கிறிஸ்தவம் என்னும் பெரும் மதம் தமிழ் நிலத்தில் நிலைபெற்றது.
![]() |
| Christ carrying the cross by Stanley Spencer, 1920 |
5
இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றம் ஏழைகளை மட்டுமே மையமாகக் கொண்டு நிகழ்ந்தது எனும் பொதுப்படைப் பார்வைக்கு நீலகண்ட பிள்ளையும், அருமைநாயகம் சட்டம்பிள்ளையும் முரணாக நிற்கிறார்கள். செல்வத்தையும் அதிகாரத்தையும் துறந்து சிறையையும் மரணத்தையும் தழுவ நீலகண்ட பிள்ளையைத் தூண்டியது எது? நிறுவன மதத்துடன் சமரசம் செய்யாமல் சுயவழியைத் தேர்ந்தெடுக்க அருமைநாயகத்திற்குத் துணிவளித்தது எது? சாந்தாயியை அரைப்பாலை நிலத்தில் புதிய வாழ்வைத் தொடங்க வைத்தது எது?
அது சிலுவையின் பாதை.
சமமான உரிமைகளை வழங்கியதே கிறிஸ்தவம் இங்கே வேரூன்றியதன் முதல் காரணம் என முன்பு குறிப்பிட்டேன். அது யார் இம்மதத்திற்குள் வந்தார்கள் என்பதை விளக்குகிறது. ஆனால் ஏன் அவர்கள் அங்கேயே தங்கினார்கள், ஏன் அதைப் பாடினார்கள், எழுதினார்கள் என்பதை அது விளக்குவதில்லை. உரிமை ஒருவரை உள்ளே அழைத்து வரும். சிறைக்கும் சவுக்கடிக்கும் மரணத்திற்கும் ஒப்புக்கொடுக்கச் செய்யாது.
நீலகண்ட பிள்ளை உரிமையற்றவர் அல்ல, படைத்தளபதி. அருமைநாயகம் ஏழை அல்ல, பரம்பரைச் செல்வந்தர். அவ்விருவருக்கும் வாசல் தேவைப்படவில்லை. அவர்கள் தாண்டிச் சென்றது வேறொன்றை நோக்கி.
பைபிளை சொந்த வாழ்க்கை வழியாகவும், இலக்கியங்கள் வழியாகவும், தொன்மமாகவும் பரப்பினர். வாழ்ந்தும், மரணித்தும். அவை கடத்தியது கொள்கையை அல்ல, ஒரு உணர்வுநிலையை. தங்களை வருத்தித் துன்புறுத்திக் கொண்ட இவர்கள் அனைவரும் அதைச் செய்தது தங்களை அச்சிலுவைப் பாதையின் ரத்த சாட்சிகள் என உணர்ந்தமையால்தான். அவ்வுணர்வு இவ்வந்நிய நிலத்திற்குக் கடத்தப்பட்டதே முதன்மை மதமாற்ற நிகழ்வு.
தம்முடன் வாழ்ந்த பிறரிடமே சுவிசேஷத்தின் அற்புதங்களை மக்கள் நேரில் கண்டனர். கண்டதைத் தமக்காகவே பாடிப் பாடி இலக்கியங்கள் ஆக்கினர். அவ்விலக்கியங்கள் அடுத்தவரை உள்ளிழுத்தன. உரிமை கதவைத் திறந்தது. சிலுவை என்னும் உருவகம் அதைக் கடந்து சென்றவர்களைத் தங்கவைத்தது, எழுதவைத்தது. அவ்விரண்டும் சேர்ந்ததே கிறிஸ்தவத்தின் இத்தனை செல்வாக்கிற்குக் காரணம்.
உன்னத சங்கீதத்தில் காதலால் தன்னை இழக்கும் நிலை, தன்னைத் தானே முற்றழித்துக் கொள்ளும் எத்தனிப்பு பற்றிக் குறிப்பிட்டேன். பைபிளின் சாராம்சமாகத் திரண்டு வருவதும் பிறர் வெளிச்சத்திற்காக மெழுகு தன்னை முழுதும் உருக்கிக் கொள்ளும் நிலை தான். கிறிஸ்துவின் சிலுவையேற்றம் அதன் குறியீடு. மேலே சொன்னவர்களின் வாழ்க்கை வரலாறு உன்னத சங்கீதத்தின் பித்து நிலைக்கு நிகரானது.
இத்தகைய வரலாற்றுத் தடங்கள் சிதறிப் போகாமல் ஒரு தொகுப்பாக நமக்குக் கிடைக்கின்றன என்பதில்தான் ஞான சந்திர ஜாண்சனின் பதிப்புப் பணி மகத்தானதாகிறது. மூன்று உதாரணங்களை நான் கட்டுரையில் குறிப்பிட்டேன். இப்படி வாசிக்க உள்ளே செல்லும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கான கிறிஸ்துவின் வழித்தடத்தைக் கண்டுகொள்ளக் கூடும்.
இவ்வாண்டு தூரன் விருது பெறும் ஜாண்சனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஜி.எஸ்.எஸ்.வி. நவின்
யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki






