![]() |
| Music and Devotion by Angelo da Fonseca, 1902–1967 |
சாகித்ய அகாதமி நிறுவனம் வெளியிட்ட இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வேதநாயகம் சாஸ்திரி பெயரிலான நூல் ஒன்றுள்ளது. அந்த புத்தகத்தை படித்தபிறகு சாஸ்திரி குறித்து இன்னும் அதிகமாக புரிந்துகொள்ள முடிந்தது. அதுவரை அந்த நூலை எழுதிய ஞானசந்திர ஜாண்சன் குறித்து நான் கேள்விப்படவில்லை. ஞானசந்திர ஜாண்சன் மீண்டும் மீண்டும் வேதநாயகம் சாஸ்திரியாரின் வாழ்க்கை, அவரது கீர்த்தனைகள் அவரது சிற்றிலக்கியங்கள் இவற்றை வெவ்வேறு சமயங்களில் தொகுத்திருக்கிறார். கிருஸ்தவ இலக்கிய முன்னோடியான சாஸ்திரியின் பங்களிப்பு குறித்த முழுமையான பார்வைக்கு நீங்கள் ஜாண்சனைத்தான் நாடவேண்டும். கலையின் ஈர்ப்பு விசித்திரமானது. சாஸ்திரியின் படைப்புகளின் அழகுணர்ச்சியைப் பற்றி அவை எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளுக்குப் பின் மொத்த கிருஸ்தவ இலக்கியங்களை தொகுத்து வெளியிட்டவரான ஞான சந்திர ஜாண்சன் வியந்து பேசுகிறார். இத்தனைக்கும் அவர் குறைந்தது இருநூறு படைப்பாளிகளையாது பதிவு செய்துள்ளார். அவர்களில் வீரமாமுனிவரும், திட்டூர் தேசிகரும், கிருஷ்ணப்பிள்ளையும் அடங்குவர்.
ஜெ. பி. ஃபெப்ரிசியஸ் ஐயர் ஜெர்மானிய மொழியில் இருந்து மொழிபெயர்த்த கீர்த்தனைகள் வேதநாயகம் சாஸ்திரி காலத்திற்கு முன்புவரை தேவாலயங்களில் பாடப்பட்டுவந்தன. செயற்கையாக இருந்ததாக கூறப்பட்ட நிலையிலும் அவை நீடித்தன. வேதநாயகம் சாஸ்திரி சில கீர்த்தனைகள் புதிதாக இயற்றியதும், கிருஸ்தவ மிஷினரிகளிடையே மிகுந்த செல்வாக்குடன் அவை பேசப்பட அதன் பின் அவர் நிறைய கீர்த்தனைகளையும் சிற்றிலக்கியங்களையும் படைக்க ஆரம்பித்தார்.
வேதநாயகம் சாஸ்திரி 1774ல் தேவசகாயம் என்ற தகப்பனுக்கும் ஞானப்பூ அம்மாள் என்ற தாய்க்கும் பிறந்தார். தந்தை தேவசகாயத்தின் உண்மையான பெயர் அருணாச்சலம் பிள்ளை. ரோமன் உபதேசியார் ஒருவரின் பேச்சு வன்மையை கண்டு கிருஸ்தவ மதத்திற்கு மாறினார். தன் பெயரை தேவசகாயம் என்று மாற்றி தீட்சை பெற்றார். 1770ல் திருமணம் செய்த அவருக்கு 1774ல் ஒரு குழந்தை பிறந்தது அதுவே வேதநாயகம். அவருக்கு பின் இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்ததும் அவர் தாயார் இறந்து போனார். தேவசாகயம் மூன்று பிள்ளைகளையும் அவர்களது பாட்டனாரின் திருநெல்வேலி இல்லத்தில் படிப்பிற்காக விட்டிருந்தார்.
![]() |
| வேதநாயகம் சாஸ்திரியார் |
திருநெல்வேலி இல்லத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது சி.எப். ஸ்வார்ட்சு ஐயர் அங்கு வருகிறார். மராட்டிய பிராமண பெண்ணாக இருந்து ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவர் இறந்து, சிதையில் உடன்கட்டை ஏறும் போது அவளை காத்த லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரியை திருமணம் செய்து கொண்டு மதம் மாறிய கிளார்ந்தா, திருநெல்வேலியில் ஒரு தேவாலத்தை கட்டிமுடித்த நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்த ஸ்வார்ட்ஸ் ஐயர் துடிப்பான சிறுவனான வேதநாயகத்தை காண்கிறார்.
வேதநாயகத்தின் புத்திசாலிதனத்தை கண்டு நேரடியாக “என்னுடன் வருகிறாயா நான் உன்னை படிப்பிக்கிறேன்” என்று கேட்கிறார். அதற்கு “சரி எனக்கு விருப்பம்தான்” என்று அவரது அப்பாவான தேவசகாயத்தையும் கலந்து ஆலோசிக்காமலே கூறுகிறார். சுவாட்ஸ் ஐயர் பிறகே தேவசகாயத்தை கண்டு சிறுவனை அழைத்துச் செல்வதை தெரிவிக்கிறார். அவர் சம்மதித்தபின் பன்னிரெண்டு வயதான வேதசகாயத்தை அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் வருகிறார்.
![]() |
| St.Peter's church |
நவீன பள்ளியில் வேதநாயகம் சேர்க்கப்படுகிறார். நவீன பள்ளி என்பது தமிழும் ஆங்கிலமும் அறிவியல் தொழில்நுட்பமும் பாடங்களாக கொண்டவை. அந்த சமயத்தில் தமிழகத்தில் முதன்முறையாக நவீன கல்வி அறிமுகப்படுத்தபடுகிறது. தஞ்சாவூரை ஆண்ட மன்னர் துளஜா மரண படுக்கையில் இருந்தார். அவரது தத்துப்பிள்ளையான இரண்டாம் சரபோஜியை ஸ்வாட்ஸ் ஐயரிடம் அளித்து அவனை வளர்க்கும்படி கேட்டிருந்தார். இவனை அரசவையில் ஏற்றி, தன் தம்பியிடமிருந்து காக்க கேட்டிருந்தார். சம்மதித்து அழைத்து செல்ல, சரபோஜியும் வேதநாயகமும் ஒன்றாக நவீன பள்ளியில் படிப்பை தொடங்குகிறார்கள். மூன்று வயது இளையவரான சரபோஜி, வேதநாயகத்தை அண்ணா என்று அழைத்து, இருவரும் நட்பாக இருந்தார்கள். பின்னாலில் சரபோஜி மன்னரான பின், வேதநாயகத்தை தன் கூட வைத்து எல்லா வகையிலும் கவனித்துக் கொண்டார்.
ஸ்வார்ட்ஸ் ஐயரிடம் பன்னிரெண்டு மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் வேதநாயகம் முதன்மையானவராக இருந்திருக்கிறார். வேதநாயகம் ஒரு நாள் ஸ்வார்ட்ஸ் ஐயரிடம் நான் படிக்க தங்களுக்கு சித்தமான ஒரு நூல் கொடுங்கள் என்று கேட்கிறார். அவரிடமிருந்த சங்கீத புத்தகத்தை வாழ்த்தி கொடுத்த ஆசிர்வாதத்தினால், "இவர் கடவுளுக்கு சங்கீதக்காரனாகவும், பேர் பெற்ற வித்வானுமாகிப் போனார்" என்று அவர் மகன் நோவா ஞானாதிக்க சாஸ்திரியார் கூறியுள்ளார். தஞ்சையில் கல்வியை முடித்து பின் தரங்கம்பாடியில் இறையியல் படிப்பை முடித்து, ஜெர்மன், ஆங்கிலம் மொழிகளில் புலமையுடன் இருந்தார் வேதநாயகம். மீண்டும் தஞ்சை வந்து படித்த பள்ளியில் ஆசிரியராக வேலை சேர்ந்தார்.
![]() |
| வேதநாயகம் சாஸ்திரியார் இல்லம் |
வேதநாயகம் சாஸ்திரி கடவுளின் மீது பல கீர்த்தனைகளையும் சிற்றிலக்கியங்களையும் இயற்றியுள்ளார். கிட்டத்தட்ட 120 புத்தகங்களை எழுதியுள்ளதாக தெரிவிக்கிறார்கள். அதில் 80 புத்தகங்கள் வரை தற்போது கிடைக்கின்றன. வேதநாயகம் பிள்ளையான இவர் பிற்பாடு தன் பாட்டு வல்லமையால் வேதநாயகம் சாஸ்திரி ஆனார். சாத்திரி என்ற சொல் சூத்திரம் என்ற சொல்லின் தமிழ் வடிவமான சாத்திரம் என்ற சொல்லிருந்து வந்தது. அளிக்கப்பட்ட பட்டமான ‘வேத சாத்திரி’ என்ற பட்டபெயர் பிறகு சமஸ்கிருந்த சொல்லில் சாஸ்திரி என்றானது.
சமகாலத்தவரான தியாகைய்யரின் (1767-1847) சில கீர்த்தனைகள் வேதநாயகம் இயற்றிய கீர்த்தனைகளுக்கு துணையாக பயன்பட்டன. ஒருவர் கிருஸ்தவ மதத்தையும் மற்றொருவர் இந்து மதத்தையும் போற்றி பாடல் எழுதிக் கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மற்றும் திருவையாற்றில் இருந்தபோது அவர்கள் சந்தித்ததில்லை. பாடல்களுக்காக அவர்களுக்கு பாராட்டுவிழா ஒரே காலகட்டத்தில் தனித்தனியான அமைப்பில் ஒரே இடமான சென்னை வேப்பேரியில் நடந்த போதும் அவர்கள் சந்தித்துக் கொண்டதாக தெரியவில்லை. ஆனால் மற்றொரு சமகாலத்தவரான சூஃபி இலக்கியவாதியான குணங்குடி மஸ்தான் சாகிபும் வேதநாயகம் சாஸ்திரியும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. தங்கள் மார்க்கம் குறித்து விவாதித்திருக்கிறார்கள். மூன்று வேவ்வேறு சமயத்தை சேர்ந்த பிரபல்யமான மனிதர்கள் ஒரே காலக்கட்டதில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் இலக்கிய ஆக்கங்கள் இன்றும் பேசப்படுகின்றன. சில இலக்கிய ஆக்கங்கள், ஒரே தன்மையிலும் வடிவத்திலும் அமைந்தும் உள்ளன.
பெத்லகேம் குறவஞ்சி, பேரின்ப காதல், தியான புலம்பல், ஆராணதிந்தம், ஞான அந்தாதி, ஞான வழி, போன்ற முக்கிய நூல்கள் வேதநாயகம் எழுதியவைகளில் முக்கியமானவை.
குற்றால குறவஞ்சி என்கிற தமிழில் உள்ள இலக்கியவடிவத்தை பிரதியெடுப்பது போல தலைவன் பாட்டுடை தலைவி என்ற பொருளில் வேதநாயகம் பெத்லகேம் குறவஞ்சி என்ற நூலை இயற்றினார். தலைவன் இயேசு பிரான், தலைவி சீயோன் மகள். இது அவரது முதல் படைப்பாக அமைந்தது. 1794ல் தன்னுடைய 20 வயதில் எழுதத் தொடங்கினார், 26 வயதில் வெளியிடப்பட்டு சென்னையில் நூலாக அரங்கேறியது. உண்மையில் இது ஒரு நாடகம்.
உதாரணமாக:
தந்தையில்லா திருமகனைத் தாதையருக் கொருமகனை
சந்தமரித் தலைமகனைக் கலைமகனை வாழ்த்துகிறேன்
(வேதநாயகம் இயற்றிய பெத்தகேம் குறவஞ்சியில் ஒரு வரி ஆனால் குற்றாலக் குறவஞ்சியை போன்றே அடியை கொண்டுள்ளன.)
வேதசாகாயம் இயற்றிய கீர்த்தனைகளில் முக்கியமான மற்றொரு நூல் செபமாலை. இந்நூல் ஐரோப்பியர்களின் பிரார்த்தனை புத்தகம் (Hymn Book) போல இருக்க வேண்டும் என நினைத்து எழுதியது. மாணிக்கவாசகரின் திருவாசகம், திருநாவுக்கரசரின் தேவாரதிரட்டு, நடராஜப்பத்து போன்று பிரார்த்தனைகளை தெய்வசிநேகம் கொண்டு எழுதப்பட்டவை.
உதாரணமாக:
சத்தியவேதத் தெளிவேபோற்றி
சயமேநயமே மயமேபோற்றி
தம்முன்னென்று மில்லாய்போற்றி
சற்குருஞானச் சாமிபோற்றி
(ஜெப.1 அடி 2)
பேரின்ப காதலும் தியான புலம்பலும் அவரது நூல்களில் முக்கியமானவை. இரண்டும் கிரிஸ்துவின் பாடுகளைப் பற்றி கூறுபவை. கிருஸ்துவின் பண்டிகை நாட்களில் மகிழ்ச்சியாக பாடுவதற்கு செய்யப்பட்ட நூலாக 1821ல் எழுதிய ஆரணாதிந்தத்தைப் பற்றி அதன் முன்னுரையில் கூறுகிறார் வேதநாயகம். வேதத்தினடக்கம் என்று பொருள்கொண்ட இந்நூல் பிறகு எல்லா தேவாலயங்களிலும் இசைக்கப்பட்ட நாடகமாகும்.
![]() |
| The Adoration of the Shepherds by Georges de La Tour, 1644 |
1837ல் எழுதிய ஞான உலா என்ற நூல் 1885ல் வெளியானது. பக்தர்கள் கடவுளை மனதில் பற்றிக்கொண்டு கூறும் பாடல்கள் இவை. இந்துமத உலாக்களை போன்றே ஓசை நயம், சொற்செறிவு, பொருட்பொலிவு அமைந்த பாடல்களாக அமைந்துள்ளன.
வித்தம் வைத்து நின்னருளை மென்மேலும் வைத்துனது
சித்தம் வைத்து தேவத்திருக் கண்ணுருக்கம் வைத்து
முத்தம் வைத்துன் வேத மொழியெனது நெஞ்சில் வைத்து
நித்தம் வைத்து காப்பாயென் னீதிப்பராபரனே
பராபரன் மாலை நூலில் வரும் ஒரு பாடல், தாயுமானவர் பாடல் பாரபரமே போன்று பராபரனே என்று இயேசு பிரானை விளிக்கும் பாடல்கள்.
மன்னர் இரண்டாம் சரபோஜியின் அமைச்சரவையில் அரசவை கவிஞராக இருந்தார் வேதநாயகம் சாஸ்திரி. அவருக்கு மானியங்கள் அளிக்கப்பட்டன. வேதநாயகத்தின் பாட்டுவன்மையை கண்ட சரபோஜி, தான் வணங்கும் பிரகதீஸ்வரர் மேல் பாடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் வேதநாயகம் கிருஸ்துவையன்றி மற்ற தெய்வங்கள் மேல் பாடமுடியாததை எடுத்துரைத்தார். பலமுறை கேட்டும் அவர் ஒத்துக் கொள்ளாததால், இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது, சில காலம் இருவருக்கும் இடையே பேச்சு இல்லாமல் இருந்தது. பிறகு சரிசெய்யப்பட்டது.
வேதநாயகம் அணிந்திருந்த குல்லாயின் பெயர் செளத்னாக் குல்லாய் என்பதாகும். முற்றிலும் வெள்ளி ஜரிகையால் செய்யப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி ஆர்காடு நவாப் அளித்த வெகுமதி. (ஆனால் புகைப்படத்தில் காண்பது அதுவல்ல.) அவரது உடையும் மராட்டியர்கள் அணியும் உடை தான்.
இயேசுவின் மீது அவர் இயற்றிய கீர்த்தனைகளும், சிற்றிலக்கியங்களுக்கு பல நூல்களை இயற்றி, எல்லோராலும் போற்றப்பட்ட சிறப்பான வாழ்வை வாழ்ந்தே மறைகிறார். ஆனால் சில சங்கடங்களும் நிகழ்ந்துள்ளன.
ஸ்வார்ட்ஸ் ஐயர் 1798ல் அவரது 76வது வயதில் காலமாகிறார். ஸ்வார்ட்சின் நினைவுக்குறிப்புகள் எனப்படும் மெமொர் (Memoir) நூலில் வேதநாயக சாஸ்திரி பற்றி ஒரு வரியும் எழுதவில்லை. மகனாக, சிஷ்யனான கருதிய வேதநாயகத்தை 12 வயதிலிருந்து வளர்த்து பெரியமனிதனாக ஆக்கிய பின்னும் அவரைப் பற்றி எழுதாதது ஆச்சரியம் என்று பின் வந்த வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள். வேதநாயகத்தின் தீவிரமான சாதியப்பற்று அவர் மீது வெறுப்பை உண்டு பண்ணியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மற்ற சாதியினரை தேவாலயத்தில் அனுமதிக்காதது ஜியூ போப்பிற்கு பிடிக்கவில்லை. அதை எதிர்த்ததால், அவருக்கு எதிராக உபத்திரா உபத்திரம் என்ற நூலையும் வெளியிட்டார் வேதநாயகம். செயிண்ட் பீட்டர்ஸ் ஆலயத்தை நிர்வகித்தவருமான ஜி.யு. போப்பும் வேதநாயகத்தின் செயலால் வெறுப்புற்றார்.
பொருட்படுத்தக்கூடிய கிருஸ்தவ இலக்கிய ஆக்கங்களில் வரிசையில் முக்கியமானவர் வேதநாயகம் சாஸ்திரி. வரண்ட வார்த்தைப் பிரயோகங்களின்றி மொழிபெயர்ப்பை போன்ற தொனியில் இல்லாமல் நேரடியான இலக்கியங்களைப் போன்று படைத்தது அவரது தனிச் சிறப்பு. கிருஸ்தவ ஆலயங்களிலும் அவரது பாடல்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன. கிறிஸ்தவ இலக்கியத்தின் முன்வடிவை உருவாக்குவதில் வீரமாமுனிவருக்கு அடுத்த இடம் வேதநாயகம் சாஸ்திரி என்று மதிப்பிடுகிறார் யோ. ஞானசந்திர ஜாண்சன்.
![]() |
| வேதநாயகம் சாஸ்திரியார் கல்லறை |
1864ல் தேவாலயப் பாடல்களை பாடிய பின் தனக்கு நெஞ்சு வலிப்பதை தெரிவித்து வீட்டிற்கு சென்றதும் இறந்தார் என தெரிகிறது. ஈஸ்டர் திருநாளில் அவர் மறைந்தார். அவரது கல்லறை செயிண்ட் பீட்டர்ஸ் சர்ச்க்கு பின்னால் உள்ள கல்லறை தோட்டதில் உள்ளது. அவர் வாழ்ந்த இல்லம் இன்றும் சர்ச்க்கு முன்னால் பராமரிப்புடன் காணப்படுகிறது.
கே.ஜே. அசோக்குமார்
வேதநாயகம் சாஸ்திரியார் - Tamil Wiki
யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki
![]() |
| கே.ஜே. அசோக்குமார் |
கே.ஜே. அசோக்குமார் தமிழ் எழுத்தாளர். ரமணிகுளம், யாக்கை இவரது நாவல்கள். சிறுகதை தொகுதிகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து தஞ்சையில் இலக்கிய கூடுகைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.






