Saturday 30 December 2023

கிறிஸ்துவின் சித்திரங்கள்: பகுதி 2 - துயரமும் மறைஞானமும் - தாமரைக்கண்ணன் அவிநாசி


(1)

கிறிஸ்தவ மறைஞானத்தை (mysticism) இறையியளாலர் பெர்னார்ட் மெக்கின் (Bernard McGinn) “நேரடியாகவும் ஆழ்நிலையிலும் இறையின் இருப்பை உணரவும் அறியவும் மனதை (consciousness) தயார்ப்படுத்த கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கையிலும் செயல்முறையிலும் இருக்கும் அம்சம்” என வரையறுக்கிறார். மறைஞானிகள் (mystics) பலர் கலையை பயன்படுத்தியுள்ளர். கலை வழியாக தங்கள் அறிதல்களை கற்பித்துள்ளனர், தங்களின் மனதையும் கற்பனையையும் வடிவமைத்துள்ளனர். ஞானிகளின் மறை அனுபவங்கள் உருவகப்படுத்தப்பட்டு ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மறைஞான அனுபவம் அகவயமானது. கலை முழுக்க முழுக்க புறவயமானது. இவையிரண்டும் முரண்பாடானது என்றாலும் கிறிஸ்தவத்தில் இவை ஒன்றுக்கொன்று கைகோர்த்து செயல்பட்டுள்ளன. மறைஞான நூல்கள்கூட வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத அந்த அனுபவத்தை வெளிப்படுத்துவதற்கான முயற்சியாகவே அறியப்படுகிறது. இதுபோலவே சித்திரங்களையும் சிலைகளையும், காணமுடியாத அவ்வனுபவத்தை காட்டுவதற்கான முயற்சியே எனலாம். மக்களிடையே பரவலாகச் சென்றதும் இதுவே. 

மிகத்துவக்க காலத்தில் இருந்தே கிறிஸ்தவத்தில் மறைஞான அம்சம் (mysticism) உள்ளது. மறைஞானம் ஆறாம் நூற்றாண்டு வரை காண்டம்ப்ளேசியோ (contemplatio) என்ற லத்தீன் வார்த்தையால் குறிப்பிடப்பட்டது. காண்டம்ப்ளேசியோ-விற்கு சமமான கிரேக்க வார்த்தை தியொரியா (theoria). இவை இரண்டுக்கும் மனதால் அல்லது கண்களால் காண்பது என்று பொருள். அறிஞர்கள் கிரேக்க கருத்தான தியொரியாவிற்கும் இந்திய கருத்தான தரிசனத்திற்கும் ஒற்றுமைகள் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். மிஸ்டிசிசம் என்பது மிஸ்டிகோஸ் (மிஸ்டி + க்கோஸ்) (mystikos) என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது. மிஸ்டி என்றால் தீட்சை (initiated) அடைந்தவர் என்று பொருள்.

ஆரம்பத்தில் துவக்ககால திருச்சபை தந்தைகளால் (early church fathers) மறைஞானம் (mystic) என்ற சொல்லுக்கும் தெய்வீக தரிசனத்திற்கும் தொடர்பு உருவாக்கப்பட்டது. மறைஞான இறையியல், மறைஞான சிந்தனை (contemplation) என அவ்வார்த்தையை பெயரடையாகப் பயன்படுத்தினர். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கிரேக்க தத்துவத்தைக் கொண்டு கிறிஸ்தவ கருத்துக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அகஸ்டின் ஆப் ஹிப்போ மற்றும் ஓரிஜென் ஆப் அலெக்சாண்ட்ரியா ஆகியோரால் நியோபிளேட்டனிசம் கிறிஸ்தவ மறைஞான சிந்தனைகளிலும் செயல்முறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு பலர், குறிப்பாக பெர்னார்ட் ஆஃப் கிளேர்வாக்ஸ், ப்ரான்சிஸ் ஆப் அசிசி, ஹில்டிகார்ட் ஆப் பிங்கன் (hildegard of bingen), மார்குரைட் போர்ட் (Marguerite Porete), எக்கார்ட் (Meister Eckhart), கேத்தரின் ஆப் சியானா (catherine of siena) என மத்திய காலத்திலும், சீர்த்திருத்த கிறிஸ்தவ ஞானிகள் பலரும் மறைஞானம் பற்றி பேசியுள்ளனர்; தத்துவார்த்தமாக விரித்துள்ளனர். 

இந்த விரிவான ஈராயிரமாண்டு தொடர்ச்சியில் கிறிஸ்தவ மறைஞானம் பல வடிவங்களில் உள்ளது. இவற்றை பொதுவாக மூன்று வடிவங்களில் பிரிக்கின்றனர். இவை ஒவ்வொன்றும் பிறவற்றிலிருந்து முற்றிலும் தனித்தவை அல்ல. மறைஞானத்தில் மிக முக்கியமானது இறையின் அறிமுடியாமையை மையமாக கொண்ட வடிவம். சூடோ-டையோனிசியஸ் (Pseudo Dionysius) இதில் முதன்மையானவர். டிரான்சண்டண்ட் (transcendent) என இவர்கள் குறிப்பிடுவது கடவுள் என இங்கு வரையறுக்கப்பட்ட அனைத்தையும் கடந்தது. இறையைப் பற்றி நாம் எதையும் சொல்லமுடியாது, ஏனென்றால் இறை அனைத்தையும் கடந்தது, அறியமுடியாதது என்கின்றனர். ஆகவேதான் இது இறையை அடைவதற்கான எதிர்மறை பாதை (via negativa, negative mysticism) என அழைக்கப்படுகிறது. (இது நேர்மறை பாதையான cataphatic theology-யுடன் இணைந்தது). மத்தியகாலத்தில் எக்கார்ட் (Meister Eckhart) இதில் முக்கியமானவர். இந்திய மற்றும் பெளத்த சிந்தனைகளுக்கு மிக நெருக்கமாக வருவது எக்கார்ட்டின் சிந்தனைகள். ஆனந்த குமாரசாமி எக்கார்ட்டையும் இந்திய சிந்தனைகளையும் தொடர்புபடுத்தி பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

மறைஞானத்தின் மற்றொரு வடிவம் ட்ரினிட்டி எனப்படும் இறையின் மும்மை வடிவத்தை மையமாக கொண்டது. கிறிஸ்து இந்த மும்மையில் ஒருவர். கிறிஸ்து கடவுளாக இவ்வுலகில் அவதரித்தவர். இது Trinitarian mysticism எனப்படுகிறது. இறையின் மும்மை கருத்தாக்கம் சார்ந்த சித்திரங்களை மறைஞானிகள் அல்லது அவர்களின் நேரடி மாணவர்கள் வரைந்துள்ளனர். இவை பெரும்பாலும் அருவச் (abstract) சித்தரிப்புகள். 

மூன்றாவது வடிவம் கிறிஸ்துவை மையமாக கொண்ட கிறிஸ்து-மறைஞானம். யோவான் (John) மற்றும் பவுல் (Paul), கிறிஸ்து வழியாக அடைந்த மறை அனுபவமே கிறிஸ்தவத்தில் மிகத் தொன்மையானது என சொல்லப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவின் சிமியோன் (Symeon) “மறைஞானி என்பவன் தன்னில் கிறிஸ்துவை முழுவதுமாக ஆட்கொள்ளவிட்டவன். உண்மையில் அவனும் கிறிஸ்துவே” என்கிறார். மேற்கு ஐரோப்பாவின் அகஸ்டின் “கிறிஸ்து அவராக நம்மை மாற்றுகிறார்” என்கிறார். ”கிறிஸ்துவின் ஆவியே வந்து ஆன்மாவுடன் ஒன்றிணைகிறது, இல்லை, ஆன்மாவின் ஆன்மா போல் அது தன்னை நம்மில் முழுவதுமாக நிறைத்துவிடுகிறது” என லூயிஸ் டி லியோன் (Luis de León) குறிப்பிடுகிறார். மத்திய காலத்தில் கேத்தரின் ஆப் சியானா போன்ற பெண் ஞானிகள் முக்கியமானவர்கள். கிறிஸ்துவுடன் ஒன்றினைவதற்கு மறை திருமணமும் (Mystic marriage, Bridal theology) ஒரு வழிமுறை. கிறிஸ்துவை தெய்வீக மணமகனாகவும் தங்கள் ஆன்மாவை மணப்பெண்ணாகவும் உருவகித்து கிறிஸ்துவுடன் இணைவது. பழைய ஏற்பாட்டின் சாலமோன் பாடல்களில் (உன்னத சங்கீத பாடல்கள்) இதற்கான வேர் உள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இது சார்ந்த சித்தரிப்புகள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஜியோவானி டி பாலோ (Giovanni di Paolo, The Mystic Marriage of Saint Catherine of Siena) மற்றும் அம்ப்ரோஜியோ பெர்கோக்னோன் (Ambrogio Bergognone) போன்றவர்கள் வரைந்த ஓவியங்களைக் குறிப்பிடலாம்.

புனிதர் பெர்னார்ட் ஆஃப் கிளேர்வாக்ஸ் மற்றும் புனிதர் ப்ரான்சிஸ் ஆப் அசிசி ஆகியோருக்கு பிறகு மனித குமாரனாக கிறிஸ்து அடைந்த துயரம் பிரதான இடம் வகிக்கத்துவங்குகிறது. கிறிஸ்து அடைந்த துயரை உணர்த்தும் வழிபட்டும் அதை நடிப்பதன் வழியாகவும் கிறிஸ்துவை உணர்வது மறைஞான வழிமுறையில் ஒன்றாக ஆகிறது. மறைதிருமணமும் தன் ஆன்மாவை கிறிஸ்துவின் மனைவியாக உருவகித்து கணவரின் துயரை பகிர்ந்துகொள்வதற்கான வழியாக ஆகிறது. இங்குதான் கிறிஸ்துவின் ஓவியங்களும் சித்தரிப்புகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. 

கிறிஸ்துவின் துயரம் (passion of christ) என குறிப்பிடப்படும் நிகழ்வு கிறிஸ்து கைது செய்யப்படுவதில் துவங்கி அன்னை மரியாள் அவரின் உடலை மடியில் கிடத்தி ஓலமிடுவது வரையான நிகழ்ச்சிகள் அடங்கியது. கிறிஸ்துவின் மற்ற வாழ்க்கை நிகழ்வுகளை காட்சிப்படுத்திய படைப்புகளை விட இந்த நிகழ்வை காட்சிப்படுத்திய படைப்புகள் ஆற்றல் மிக்கவை. துன்பத்தில் இருப்பவர்களை காணும்போது மனிதர்களிடத்தில் இயல்பாக தோன்றும் இரக்கமும் பரிவும் இந்த படைப்புகள் வழியாக கிறிஸ்துமீது செலுத்தப்பட்டு, மனிதராக அவர் அடைந்த துயரை நம்மில் நடிக்க வைத்து அவருடன் ஒன்றிணைய வைக்கின்றன.

--------------------------

(2)

துவக்ககால சித்தரிப்புகளும் குறியீடுகளும் வரையப்பட்ட கேடாகோப்ம்ஸ்களில் சிலுவையேற்றமும் கிறிஸ்துவின் துயரமும் சித்தரிக்கப்படவில்லை. சிலுவை கூட நேரடியாக சித்தரிக்கப்படாமல், நங்கூரம் மற்றும் Chi-Rho வடிவங்களில்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சிலுவை குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிப்பதற்கானது, ஆகவே சிலுவையேற்றம் அவமானமாக இழிந்த நிலையாக பார்க்கப்பட்டுள்ளது, இதனால் கேடாகோப்ம்ஸ்களில் சிலுவை சித்தரிக்கப்படாமல் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (ரோமின் பாலடைன் மலையில் Alexamenos graffito என சொல்லப்படும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவர்க்கிறுக்கல் சித்தரிப்பு கிடைத்துள்ளது. இதில் சிலுவையில் அறையப்பட்ட கழுதைத் தலையுடைய ஒரு மனிதனை மற்றொருவன் வழிபடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்து வழிபாட்டை நகையாடி வரையப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்வாறு இருந்தால் இதுதான் கிறிஸ்துவின் சிலுவையேற்றத்தின் முதல் சித்தரிப்பாக இருக்கும்.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒன்றிரண்டு சிலுவையேற்ற சித்தரிப்புகள் தற்போது கிடைத்துள்ளன. உதாரணமாக கல்லில் பொறிக்கப்பட்ட சிலுவையேற்ற சிற்பம். இதில் கிறிஸ்துவின் கரங்கள் சிலுவைக்குக் கீழே உள்ளன. 

Chi-Rho-வில் சிலுவை
நான்காம் நூற்றாண்டு

ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து குறிப்பிடத்தகுந்த அளவில் சிலுவையேற்ற சிற்பங்களும் ஓவியங்களும் கிடைக்கின்றன. பெரும்பாலானவற்றில் சிலுவையேற்றமும் உயிர்த்தெழுதலும் இணைந்து ஒரேநிகழ்வாகவே படைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக கிறிஸ்து தீமை மற்றும் மரணத்தின் மீது அடைந்த வெற்றியும் உயிர்த்தெழுதலும் முன்வைக்கப்படுகின்றன. அவரின் தெய்வீக ஆற்றலே இவற்றில் பிரதானமாக உள்ளது. மனிதராக அவர் அடைந்த துயரம் காட்சிப்படுத்தப்படவில்லை. இவைகளில் கிறிஸ்து உடல் திடமாக நேராக, கண்கள் நன்கு திறந்தவாறு சிலுவையில் காணப்படுகிறார். சில படைப்புகளில் சிலுவையின் மேல் சந்திரனும் சூரியனும் இடம்பெற்றிருக்கும். இது சிலுவையேற்றத்தை ஒரு பிரபஞ்ச நிகழ்வாக, கிறிஸ்துவை அரசராக, மீட்பராக சித்தரிக்கிறது. சிலவற்றில் கிறிஸ்துவின் விலா காயத்திலிருந்து ரத்தம் வழிவது சித்தரிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட எந்த மாற்றமும் இல்லாமல் பத்தாம் நூற்றாண்டு வரை இவ்வாறே தொடர்கிறது. இந்தவகை சிலுவையேற்ற சித்தரிப்புகளில் பழமையானதாக கருதப்படுவது பொ.யு.420-களில் தந்தத்தில் செதுக்கப்பட்ட சிற்பத்தொகுதி. 

பொயு.420, தந்த சிற்பத்தொகுதி
ஒன்பதாம் நூற்றாண்டு தந்த சிற்பம். ஒரு நூலின் முகப்பில் இருந்துள்ளது. கிறிஸ்துவின் விலா காயத்திலிருந்து வழியும் ரத்தத்தை ஒருவர் கிண்ணத்தில் பெருகிறார்.

எனினும் எட்டாம் நூற்றாண்டில் சிறு மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளதை பேராயர் ரிச்சர்ட் ஹாரிஸ் (Richard Harries) குறிப்பிடுகிறார். சினாயில் உள்ள செயின்ட் கேத்தரின் மடாலயத்தின் ஒரு சிலுவையேற்ற திருவுருவில் (icon) கிறிஸ்துவின் உடலும் கைகளும் நேராக இருந்தாலும் கண்கள் மூடியுள்ளன. இது கிறிஸ்து இறந்திருப்பதை குறிக்கிறது. இந்த ஓவியமே கிறிஸ்து இறந்தவாறு சிலுவையில் இருக்கும் முதல் சித்தரிப்பாக இருக்கலாம் என ஊகிக்கிறார். இது எட்டாம் நூற்றாண்டின் மத்தியகாலமாக இருக்கலாம் என்கிறார் ஹாரிஸ். இதே காலகட்டத்தில்தான் மற்றொரு முக்கிய மாற்றமும் நிகழ்கிறது. ஒரேசமயம் மனிதனாகவும் இறையாகவும் கிறிஸ்துவை சித்தரிக்கும் உயிர்த்தெழுகை சித்திரங்கள் படைக்கப்படுவது துவங்குகிறது என்கிறார் ரிச்சர்ட் ஹாரிஸ். 

St Catherine's monastery, Sinai, எட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம்

ஆன்மீக ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் கிறிஸ்தவம் சிலுவையேற்றத்தின் ஆற்றலை மிகப்பிந்தியே கண்டைகிறது. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து சிலுவையேற்றம் கணிசமாக படைக்கப்பட்டிருந்தாலும் அவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. உதாரணமாக ரோமின் சாண்டா சபீனா தேவாலயக் கதவின் பெரும் சிற்பத்தொகுப்பில் ஒரு மூலையில் சிறிதாக மட்டுமே சிலுவையேற்றம் செதுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் திருச்சபையின் துவக்ககாலத்தில் அதற்கு ஆட்களே தேவைப்பட்டனர். மக்களை தங்களிடத்தில் ஈர்ப்பதிலேயே அது அதிக கவனம் செலுத்தியது. அதற்கு கிறிஸ்து நிகழ்த்திய அற்புதங்கள், நோயை குணப்படுத்துதல், உயிர்த்தெழுதல் மற்றும் விண்ணேகல் வழியாக அவர் மீதான நம்பிக்கையை பிரதானப்படுத்தியது. இதில் மனிதகுமாரனாக அவர் அடைந்த துயரத்திற்கு துளியும் இடமில்லை. கிடைக்கின்ற சிலுவையேற்ற சித்தரிப்புகளுமேகூட பார்ப்பவரின் உணர்ச்சியை தூண்டுவதற்காக சித்தரிக்கப்படவில்லை.

பத்தாம் நூற்றாண்டில் இருந்துதான் சிலுவையேற்றம் அதற்கான ஆற்றலுடன் படைக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இறந்தவறாக கண்கள் மூடி உடலும் தலையும் தொங்கியபடி சித்தரிக்கப்படுகிறார். இதில் இரண்டு படைப்புகள் மிக முக்கியமானவை என வரலாற்றாசிரியர் கென்னத் கிளார்க் (kenneth clark) மற்றும் பேராயர் ரிச்சர்ட் ஹாரிஸ் ஆகியோர் முன்வைக்கின்றனர். இரண்டும் பத்தாம் நூற்றாண்டு ஜெர்மனைச் சேர்ந்தவை. முதலாவது லோதையரின் சிலுவை (Cross of Lothair). இதன் முன்பகுதி தங்கத்தால் செய்யப்பட்டு அரியகற்கள் பல பதிக்கப்பட்டுள்ளன. நடுவே ரோமப்பேரரசர் அகஸ்டஸின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பின்பகுதியில் மிக எளிமையாக வெள்ளித்தகட்டில் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் சித்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது படைப்பு பொ.யு.965–970-ஐச் சேர்ந்த ஜோரோவின் சிலுவை (Gero Cross). இது லோதையரின் சிலுவைக்கு சற்று முந்தையது. இவ்விரு படைப்புகளிலும் கிறிஸ்து இறந்தவராக கண்கள் மூடி, தலையும் உடலும் தொங்கி, உடல் வளைந்து காணப்படுகிறார். கிறிஸ்து அடைந்த துயரம் இவற்றில் வெளிப்படத்துவங்குகிறது. இவைகளுக்கு முன்பு படைக்கப்பட்ட எந்த சிலுவையேற்ற சிற்பத்தையும் ஓவியத்தையும் காட்டிலும் இவை ஆற்றல் மிக்கவையாக இருப்பதை உணரலாம். 

Cross of Lothair, பத்தாம் நூற்றாண்டின் இறுதி
Gero Cross, பொ.யு. 965–970

பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெர்னார்ட் ஆஃப் கிளேர்வாக்ஸ் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் தியாகத்தை மையப்படுத்திய இறையியலைத் தோற்றுவிக்கிறார். புனிதர் ப்ரான்சிஸ் ஆப் அசிசி இதை விரிவாக்குகிறார். பிறகு கிறிஸ்துவின் துயரை மையப்படுத்திய பல நூல்கள் எழுதப்படுகின்றன. இதன் விளைவாக சிலுவையில் அறையப்பட்டு கிடக்கும் கிறிஸ்து ‘மனிதர்கள் மீதான இறைவனின் அன்பிற்கும் தியாகத்திற்குமான குறியீடாக’ அல்லாமல் ‘துயரத்திலிருக்கும் மீட்பர் மீதான ஒட்டுமொத்த மனிதத்தின் கருணையின் குறியீடாக’ ஆகிறது. இத்தகைய சித்திரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு பரவலாக தேவாலயங்களிலும், தனிப்பட்ட வழிபாட்டிற்காகவும் படைக்கப்படுகின்றன. இந்தவகையில் கிறிஸ்துவின் துயரத்தை மிக உணர்ச்சிகரமாக சித்தரித்த முதல் ஓவியங்களில் ஒன்று 1260-ல் வரையப்பட்ட வேதனையுற்றவர் (man of sorrow) ஓவியம். இது ஆற்றல் மிக்க ஓவியம். இதிலிருக்கும் கிறிஸ்துவின் பரிதாபநிலை, காண்பவரை துயரத்தில் ஆழ்த்துகிறது, அவர் மீதான கருணையை தூண்டுகிறது. ஒரேசமயம் குற்றவுணர்வையும் நன்றியுணர்வையும், வேதனையையும் பரிவையும் தூண்டும் ஓவியம். இதேகாலத்தைச் சேர்ந்த வேதனையுற்றவர் சித்திரங்கள் சிலவற்றில் அவரின் காயங்களும் அவரை துன்புறுத்தி கொன்ற பொருட்களும் இடம்பெற்றிருக்கும். இவற்றின் மூலமாக இச்சித்திரங்களைக் காண்பவர் அல்லது வழிபடுபவர் கிறிஸ்து அடைந்த துயரை மனதால் காட்சிப்படுத்தி நன்கு ஆழ்ந்து அவரின் துயரை தானும் அடையச்செய்கின்றன. 

வேதனையுற்றவர் (Man of sorrows, Umbrian Diptych), 1260. வரைந்தவர் Master of the Franciscan Crucifixes
வழிபாட்டு நூல் ஒன்றில் இருந்த மரச்செதுக்கு ஓவியம், பொ.யு. 1500

இந்த வேதனையுற்றவர் ஓவியங்கள் இரண்டும் தனிப்பட்ட வழிபாட்டிற்காக வரையப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இறைவடிவங்கள் தேவாயலங்களிலும் திருச்சபைகளிலும் மக்கள் அனைவரும் பொதுவாக வழிபட வைக்கப்பட்டிருக்கும். பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய ஃபிரான்சிஸ்கன் மற்றும் டொமினிகன் மதக்கட்டளைகளின் விளைவாக இறைவடிவங்களை வீடுகளில் தனிப்பட்ட வழிபாட்டிற்காக வைத்திருக்கும் வழக்கம் அதிகரித்தது. தனிப்பட்ட வழிபாடுகளில் கிறிஸ்துவின் உருவங்களை வைத்து அவர் மீது உணர்ச்சிகரமான பக்தி செலுத்தி பிராத்தனை செய்தனர் மற்றும் ஆழமான மெடிடேசனில் ஈடுபட்டனர். உணர்ச்சிகரமான பிராத்தனையும், மெடிடேசன் என பயிற்சியும் காண்டம்ப்ளேசனை அடைவதற்கான வழிமுறைகள். இதற்கு வரையப்பட்ட ஓவியங்களில் கணிசமானவை மனிதனாக அவர் அடைந்த துயரை மையமாக கொண்டவை. 

சிலுவையேற்றத்தின் துவக்ககால சித்தரிப்புகளுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகான சித்தரிப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பிக்க கேப்ரியல் ஃபினால்டி (Gabriele Finaldi, லண்டன் தேசிய அருங்காட்சியத்தின் இயக்குனர்) அந்தந்த காலகட்டத்தில் கிடைத்த முதல் படைப்புகள் இரண்டை ஒப்பிட்டுக்காட்டுகிறார் - பொ.யு. 420இன் தந்த புடைப்புச்சிற்பத் தொகுப்பு மற்றும் 1260இன் வேதனையுற்றவர் (man of sorrow) ஓவியம். தந்த புடைப்புச்சிற்பத் தொகுப்பின் முதல் சிற்பத்தில் கிறிஸ்து சிலுவையை திடமாக ஏந்தி கல்வாரி மலைக்கு நடந்துசெல்கிறார். இரண்டாம் சிற்பத்தில் தனது கம்பீரமன உடலுடன், தலை நேராக நிமிர்ந்து, கண்கள் நன்கு திறந்தவாறு சிலுவையில் அறையப்பட்டுள்ளார். நான்காவது சிற்பத்தில் உயிர்தெழுத்த கிறிஸ்து தன் சீடர்களுடன் உள்ளார். இதில் அவரின் வெற்றியும் உயிர்த்தெழுதலுமே பிரதானமாக உள்ளது. கிரேக்க-ரோம சிற்ப அழகியலில் தனது அழகிய உடலுடன் கிறிஸ்து பார்ப்பவர்களிடம் தன் தெய்வீக ஆற்றலை காட்டுகிறார். நேர்மாறாக பதிமூன்றாம் நூற்றாண்டு ஓவியத்தில் கிறிஸ்து வேதனையுற்ற மனிதராக உள்ளார். அவரின் மன வேதனையும் உடல் வேதனையும் முகத்திலும் உடலிலும் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. பின்னால் சிலுவை இருக்க, தலை தொங்கி கண்கள் மூடியவாறு முகத்தில் வலியுடன் இறந்து கிடக்கிறார். இது பார்ப்பவரை ”உமது துயருக்கு நானும் காரணம்” என மனமுருகி பிரார்த்திக்க வைக்கிறது.

இடம்: தந்த சிற்பத்தொகுதி, பொயு.420. வலம்: வேதனையுற்றவர், 1260

--------------------------

(3)

”அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை.” என்ற பழைய ஏற்பாட்டு எசாயாவின் (53, 3) வரிகளை கிறிஸ்துவின் துயர நிகழ்விற்கு ஒப்பாக சொல்வதுண்டு. 

கிறிஸ்துவின் கைது முதல் அன்னை மரியாள் அவரை மடியில் கிடத்தி ஓலமிடுவது வரையான நிகழ்வுகளில் கலைஞர்கள் எசாயாவின் இந்த முன்மொழிவை காட்சிபடுத்தியுள்ளனர். இந்த நிகழ்வின் பத்து ஓவியங்கள் அடங்கிய பதினாறாம் நூற்றாண்டின் ஓவியப்பெட்டகம் இந்தவகை சித்தரிப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. இது நெதர்லாந்தைச் சேர்ந்தது. குடும்ப வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்டது. எளிதாக எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துவின் உடலில் இருந்து வழியும் ரத்தத்துளிகள் கவனிக்கப்படவேண்டியவை. “இனிமையானவரே, இயேசுவே, முழுக்க சிவப்பு மையால் எழுதப்பட்ட புத்தகம் உன் உடல், சிகப்புக் காயங்களால் எழுதப்பட்டது உன் உடல்” என மறைஞானியும் கவிஞருமான ரிச்சர்ட் ரோல் (Richard Rolle) பாடியுள்ளார். 

பதினாறாம் நூற்றாண்டு ஓவியப்பெட்டகம்


“அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்.” மத்தேயு 27, 28-29. இந்த வரிகளின் சித்தரிப்பு என பதினாறாம் நூற்றாண்டில் ஜான் மோஸ்டார்டின் (Jan Mostaert) ஓவியப்பள்ளியில் வரையப்பட்ட ஓவியத்தை சொல்லலாம். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கிறிஸ்து அடைந்த வேதனையை காட்சிப்படுத்திய ஓவியங்கள் வழிபாட்டிலும் மெடிடேசனிலும் முக்கிய இடம் வகித்தன. நெதர்லாந்தில் தோன்றிய Modern devotion என்ற ஆன்மீக இயக்கத்தின் தாக்கத்தால் இந்த ஓவியம் படைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த இயக்கம் மிக எளிய மக்களிடத்தில் கிறிஸ்துவின் ஆளுமை மீதான நம்பிக்கையையும் ஆன்மீகமான உணர்வுரீதியான பிணைப்பையும் கொண்டுசென்றது.

Jan Mostaert, 1520-களில்

கிறிஸ்வின் துயர நிகழ்வில் உணர்ச்சிமிக்க தருணங்கள் கிறிஸ்துவை சிலுவையில் இருந்து இறக்குவதும் அவரை தன் மடியில் கிடத்தி அன்னை மரியாள் ஓலமிடுவதும். சிலுவையில் இருந்து இறக்குவது (Descent from the Cross) பற்றி ஒரிரு வரிகள் மட்டுமே பைபிளில் உள்ளன. எனினும் ஞானிகளும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இந்த நிகழ்வை தங்கள் கற்பனைகளால் விரித்துள்ளனர். மத்திய காலத்திலும் அதற்குப் பிறகும் பல எழுத்துக்களும் ஓவியங்களும் சிற்பங்களும் இதை சார்ந்து படைக்கப்பட்டுள்ளன. இந்த சித்திரங்களில் கவனிக்க வேண்டியது கிறிஸ்துவை இறக்கும் போது அன்னை மரியாள், மகதலேனா மரியாள், யோவான், அரிமத்தியா யோசேப்பு, நிகொடிமஸ் போன்றோரின் உணர்ச்சிகளை. இவர்களின் உணர்ச்சிகள் நன்கு வெளிப்படும் ஓவியங்களில் ஒன்றென உகோலினோ டி நெரியோ (ugolino di nerio)-வின் The deposition ஓவியத்தைக் குறிப்பிடலாம். இது புளோரன்சில் உள்ள சாண்டா குரோஸ் தேவாலயத்தில் இருந்தது. அரிமத்தியா யோசேப்பு சிலுவை மீதேறி கிறிஸ்துவின் உடலை தாங்கிப்பிடித்து இறக்குகிறார். நிகோடேமஸ் காலில் அடித்துள்ள ஆணியை பிடுங்கி எடுக்கிறார். யோவான் கிறிஸ்துவின் இடையை தாங்கி அதில் முகம் பொத்தி அழுகிறார். மேக்தலின் கிறிஸ்துவின் கையில் தன் கண்ணீரை சிந்துகிறாள். 

The deposition. Ugolino di Nerio. பதினான்காம் நூற்றாண்டு

இந்த ஓவியத்தில் முக்கியமான அம்சம் அன்னை மரியாள் கிறிஸ்துவின் திருமுகத்தை தன் முகத்துடன் அணைத்திருப்பது. அன்னை மரியாளின் பரிவும் கிறிஸ்துவின் துயரும் ஒருசேர வெளிப்பட்ட ஒவியம். அன்னைக்கும் மகனுக்குமான பிணைப்பைக் காட்டும் மிக அழகிய சித்தரிப்பு. கிறிஸ்து இறந்த உடலால் அன்னையை அணைத்துள்ளார். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து, தன்மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை அரவணைப்பவர் என்ற உருவகத்தை இது சித்தரித்துக்காட்டுகிறது. புனிதர் பெர்னார்ட் ஆஃப் கிளேர்வாக்ஸ் “சிலுவையில் அறையப்பட்டிருந்த கிறிஸ்து தன் கரங்களை நீட்டி என்னை இழுத்து அரவணைத்தார்” என தான் அடைந்த அகத்தரிசனம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பதினைந்தாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தன் மைந்தனை மடியில் கிடத்தி அன்னை மரியாள் ஓலமிடுவது (Lamentation of Christ or Pieta) கிறிஸ்தவ ஓவியங்களிலும் நூல்களிலும் இடம்பெறுகிறது. இது பற்றியும் பைபிளில் குறிப்புகள் இல்லை. மற்றொரு உணர்ச்சிமிக்க தருணமாக கலைஞர்கள் இதை விரித்துள்ளனர். அன்னை மரியாள் இதன் வழியாக கிறிஸ்துவின் மீதான பரிவின் சிறந்த வடிவாக கிறிஸ்துவின் துயர நிகழ்வில் பிரதானப்படுத்தப்படுகிறாள். அன்னையர்களின் துயரத்தின் வடிவாக (Our lady of sorrows or Addolorata) ஆகிறாள். இறந்துகிடக்கும் கிறிஸ்துவை சுற்றி பெண்கள் ஓலமிடும் சித்தரிப்புகள் துவக்ககால சவப்பெட்டிகள் முதல் செதுக்கப்பட்டு வந்திருந்தாலும் பதினொன்றாம் நூற்றாண்டு முதல்தான் அன்னை மரியாள் இதில் பிரதானமடைகிறாள். இந்தவகை சித்தரிப்புகளில் மிகப்பிரபலமானது மைக்கேலேஞ்சலோ 1499-ல் முடித்த Pieta சிற்பம். எனினும் அன்னையின் துயரையும், சுற்றியுள்ள அனைவரின் துயரையும் மிக உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துவது ஜியோட்டோ (Giotto di Bondone) 1304-1306-களில் வரைந்த ஓவியமும், டொனாடெல்லோ (Donatello) வடித்த Lamentation over the Dead Christ சிற்பமுமே. ஜியோட்டோவின் ஓவியத்தில் சுற்றியிருக்கும் மொத்த சூழலுமே ஓலமிடுகிறது. தேவதைகள் கதறியழுகின்றன. மரம் முற்றிலுமாக பட்டுப்போய் உள்ளது. டொனாடெல்லோவின் சிற்பத்தைப் பார்க்கும் போது அவர்களின் ஓலம் நம் காதுகளை எட்டும் உணர்வை தவிர்க்கமுடியாது. Pieta என்ற லத்தின் சொல்லுக்கு ‘பரிதாபம்’ என்று பொருள். தனிப்பட்ட பிராத்தனைக்காகவும் இந்தவகையான பரிதாப வடிவங்கள் படைக்கப்பட்டுள்ளன. 

Giotto, 1304-1306, Scrovegni Chapel

Lamentation over the Dead Christ, Donatello, 1460

கிறிஸ்துவின் துயர நிகழ்வினுடைய மையம் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டுக் கிடப்பது. எண்ணற்ற ஓவியங்களும் சிற்பங்களும் இது சார்ந்து படைக்கப்பட்டுள்ளன. மானுட திரள்சூழ நடுவே சிலுவையில் அறையப்பட்டிருக்கும் கிறிஸ்து முதல் தன்னந்தனிமையில் இருளில் பெருவெளியில் சிலுவையில் அறையப்பட்டு கிடக்கும் கிறிஸ்து வரை, பல புகழ்பெற்ற கலைஞர்கள் இதை சித்தரித்துள்ளனர். இவற்றில் சில படைப்புகள் முக்கியமானவை, தனித்தன்மை வாய்ந்தவை. அவைகளுக்கே உரிய வழிபாட்டுத் தன்மையும் குறியீடும் கொண்டவை. அதில் ஒன்று மத்தியாஸ் கிரென்வால்ட் (Matthias grünewald) 1512-1516-ல் வரைந்த ஐசென்ஹெய்ம் திருப்பீட (Isenheim altarpiece) ஓவியம். 

Isenheim altarpiece, Matthias grünewald, 1512–1516

இது மிக பிரம்மாண்ட ஓவியம். இதன் அருகே நிற்பவர் கிறிஸ்து இறந்து கிடக்கும் கோரக்காட்சியை துல்லியமாக காணமுடியும். கைகள் மிகமோசமாக மேலே திருகி சிலுவையில் அறையப்பட்டுள்ளன. கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு நீண்டுள்ளன. வயிறு உள்ளொடுங்கி உடல் இழுபட்டுள்ளது. விலாக்காயத்திலிருந்து வழியும் ரத்தம் கால்களுக்குக் கீழே ஒழுகுகிறது. கால்நகக்கண்கள் அனைத்திலிருந்தும் ரத்தம் சொட்டுகிறது. உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் முட்கள் தைத்த காயங்கள் உள்ளன. தலைதொங்கி வாய்பிளந்து உதடுகள் நீலம்பாரித்து உள்ளன. தலையில் வைக்கப்பட்டுள்ள முள்கிரீடமே இதன் கொடூரத்தை பார்ப்பவருக்கு முதலில் உணர்த்திவிடுகிறது. 


வலப்பக்கம் திருமுழுக்கு யோவான் “இதோ! கடவுளின் ஆட்டுக் குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என சுட்டி நிற்கிறார். இந்த வசனத்தின் குறியீடாக அவரின் காலடியில் சிலுவையுடன் ஆட்டுக்குட்டி நிற்கிறது, அதன் விலாக்காயத்திலிருந்து வழியும் ரத்தம் திருவிருந்து கிண்ணத்தில் விழுகிறது. இடப்பக்கம் கீழே மண்டியிட்டுக்கிடப்பது மகதலேனா மரியாள். வெள்ளை ஆடையணிந்திருக்கும் அன்னை மரியளை யோவான் தாங்கிநிற்கிறார். அன்னையின் கைகள் ஒன்றில்மறுகை சேர்ந்து, கண்கள் மூடி, வாய்சற்று திறந்து, இறப்பிற்கு நிகரான வெளிர் நிறமுகத்துடன் மயங்கி மறைநிலையில் இருக்கிறார். 

--------------------------

(4)

பதினான்காம் நூற்றாண்டின் புனிதர் கேத்தரின் ஆப் சியானா கூட்டுப் பிரார்த்தனையில் இருக்கும் போது தேவாலயத்தின் சுவரிலிருந்த சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவை தியானித்து மறைஞான அனுபவம் அடைந்ததை குறிப்பிட்டுள்ளார். “மகத்தான ஒளியுடன் சிலுவையில் அறையப்பட்ட இறைவன் என்னை நோக்கி வருவதை கண்டேன். அவரின் ஐந்து காயங்களிலும் இருந்து ரத்தக்கற்றைகள் என்னை நோக்கிவந்தன. நான் ’ஆண்டவரே, இந்த காயங்களை என்னுடைய உடலின் வெளிப்புறத்தில் தெரியும்படி பதிக்கவேண்டாம்’ என வேண்டினேன். இதை சொன்னவுடன், அக்கற்றைகளின் நிறம் சிவப்பிலிருந்து ஒளியின் நிறத்திற்கு மாறி என்னுடைய ஐந்து இடங்களில், கைகள் கால்கள், இருதயத்தில் பதித்தன.” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வை பதினேழாம் நூற்றாண்டில் ஒவியர் ருத்திலில் மானெட்டி (Rutilil Manetti) சித்தரித்துள்ளார். இதில் கிறிஸ்துவின் காயங்களில் இருந்து ஒளிக்கற்றைகள் கேத்தரினின் கைகள், கால்கள், இருதயத்திலும் ஊடுருவுகின்றன. இறையனுபவத்தில் மயங்கிக் கிடக்கும் கேத்தரினை அவரின் சககன்னி தாங்கிப் பிடித்துள்ளார். கீழேயுள்ள லில்லி மலர்கள் கேத்தரினின் தூய மனதை சுட்டுகின்றன. 

The stigmata of saint catherine of siena, Rutilio manetti, 1630

பதிமூன்றாம் நூற்றாண்டின் புனிதர் ப்ரான்சிஸ் ஆப் அசிசி கிறிஸ்துவுடன் முழுவதும் ஒன்றாவது பற்றிய தன் விருப்பத்தைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துவின் ஐந்து காயங்களை தானும் பெற்று அவரின் துயரை அடைந்து சில ஆண்டுகளில் மரணிக்கிறார். காயங்களை பெறும்போது “என் உடலிலும் ஆன்மாவிலும், என் இனிய இயேசுவே, உன்னில் நீ அடைந்த கடுந்துயரங்கள் அனைத்தையும் உணர வேண்டும்” எனப் பிரார்த்திக்கிறார். இதை உருவகரீதியாக ஸ்பானிஸ் ஓவியர் பிரான்சிஸ்கோ ரிபால்டா (Francisco Ribalta) வரைந்துள்ளார். ப்ரான்சிஸ் கிறிஸ்துவுடன் இணைந்த மறைஞான அனுபவத்தின் உருவகம் என்றும் இந்த ஓவியத்தை சொல்லலாம். ப்ரான்சிஸ் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை கனிவுடன் அணைத்துள்ளார். தன் உதட்டை கிறிஸ்துவின் விலாக் காயத்திற்கு அருகில் அதில் வழியும் ரத்தத்தை பருகும்படி வைத்துள்ளார். கிறிஸ்து தன் அன்பை வெளிப்படுத்த வலக்கரத்தை சிலுவையில் இருந்து விடுவித்து தன் முள் மகுடத்தை எடுத்து ப்ரான்சிஸ்ஸின் தலையில் சூட்டுகிறார். தன் துயரை பகிர்ந்து கொடுத்து அவருக்கு நன்மதிப்பை அளிக்கிறார். ஒரு தேவதை இசை மீட்ட மற்றொரு தேவதை மலர் மகுடத்தை கிறிஸ்துவின் தலையில் அணிவிக்கிறது. ப்ரான்சிஸ் இவ்வுலக வாழ்வையும் ஏழு பாவங்களையும் வென்றதன் குறியீடாக தங்ககிரீடம் அணிந்த ஏழு மிருகங்கள் அவரின் காலடியில் கிடக்கின்றன. 

Saint Francis embracing the crucified christ, Francisco Ribalta, 1620

கிறிஸ்து-மறைஞானத்தில் முக்கியமானது கிறிஸ்து அடைந்த துயரை தானும் நடித்து அதன் வழியாக கிறிஸ்துவை அடைவது. மேலுள்ள ஓவியங்கள் அனைத்துமே, அவை தேவாலயங்களில் வரையப்பட்டிருந்தாலும், தனிநபர் அல்லது குடும்ப வழிபாட்டிற்காக வரையப்பட்டிருந்தாலும் அவற்றின் நோக்கம் இதுவே. இக்கருத்தை நேரடியாகவே வெளிப்படுத்தும் அரிதான ஓவியம் பதினேழாம் நூற்றாண்டில் ஸ்பானிஸ் ஓவியர் டியாகோ வெலாஸ்குவேஸ் (Diego Velázquez) வரைந்த Christ after the Flagellation contemplated by the Christian Soul ஓவியம். இதில் கிறிஸ்துவை சித்தரவதை செய்வது சித்தரிக்கப்படவில்லை. மாறாக கசையடிக்கு பின் ரத்தம் உடையிலும் தரையிலும் சிதறிக்கிடக்க கைகள் கட்டப்பட்டு துவண்டுவிழும் நிலையில் இருக்கிறார். கீழே கசை பிய்ந்து தெறித்திருப்பது கிறிஸ்து அடைந்த வலியின் கொடுமையை காட்டுகிறது. கைகள் கட்டுப்பட்டு சாய்ந்தவாறு இருக்கும் கிறிஸ்துவின் உடல், பார்ப்பவரிடம் பரிவைத் தூண்டுகிறது. வலப்பக்கம் மண்டியிட்டுக் கிடக்கும் சிறுவன் மனித ஆன்மாவின் குறியீடு. தேவதை அச்சிறுவனிடம் கிறிஸ்துவை சுட்டி துயரிலிருக்கும் கிறிஸ்துவின் வேதனையை உள்வாங்கி தியானிக்கச் (Meditation on christianity) சொல்கிறது. கிறிஸ்துவின் பார்வை அச்சிறுவனின் இருதயத்தில் ஊடுருவுகிறது. இதன் வழியாக பார்ப்பவரையும் மனிதர்களுக்காக துயரைத் தாங்கி வேதனையில் இருக்கும் கிறிஸ்துவை தியானிக்கச் சொல்கிறது. கிறிஸ்துவை நம்முள் உணர, கிறிஸ்துவில் ஒன்றிடச் சொல்கிறது. 

Christ after the Flagellation contemplated by the Christian Soul, Diego Velázquez, 1630-கள்

--------------------------

உதவியவை:



தாமரைக்கண்ணன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்.  ஆங்கிலத்திலிருந்து முதன்மையாக தத்துவ கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். இவர் மொழி பெயர்த்துவரும் ஆனந்தகுமாரசாமியின் கட்டுரைகள் பரவலான வாசகத்தளத்தை சென்றடைந்துள்ளன