![]() |
| The Crucifixion by A.D. Thomas, 1908-1989 |
காப்பியங்களின் பிரதான பேசுபொருள்களுள் ஒன்றாக என்றுமே இறை உருவகங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒரு நிலத்தில் புதிதாக அறிமுகமாகும் மதத்தின் வளர்ச்சிப் போக்கில் காப்பியங்கள் உருவாவது என்பது முக்கியமான காலகட்டமாகப் படுகிறது. காப்பியங்கள் உருவாகிவிட்டால் அம்மதம் அப்புதிய நிலத்தில் வேரூன்றி நிலைகொள்ளத் தொடங்கிவிட்டது என புரிந்து கொள்ளலாம். ஏனெனில் அவை சடங்குகளுக்கும் அடையாளங்களுக்கும் அப்பால் மனித மனதுடன் நேரடியாக உரையாடும் கதைகளை கொண்டு வந்து சேர்க்கிறது. பிற கலைகளைகளையும் இணைத்துக் கொண்டு இயல்பாக கலாச்சாரத்தின் பகுதியாகவே மாறிவிடுகிறது. கதைகள் காப்பியங்களின் வழியே தொகுக்கப்பட்டு மீண்டும் கதைகளாக நம்மை வந்து சேர்கின்றன.
நாம் அறிந்த இறை உருவகங்கள் யாவும் நமக்கு முதலில் வெறும் அடையாளங்களாகவே அறிமுகம் ஆகின்றன. பின்னர் வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் அவற்றுள் சில நமக்கு அணுக்கமாகின்றன. யோசித்துப் பார்த்தால் அப்பிணைப்பு ஏதேனும் கதை வழியாகவே நிகழ்ந்திருக்கும். பாரதக் கதையும் இராமாயணமும் அன்றி கிருஷ்ணனும் இராமனும் நம்மை வந்தடையவோ அல்லது நாம் அவர்களை சென்றடையவோ ஏதேனும் வழியிருக்கிறதா என்ன?
அதுவும் தமிழ் நிலத்திற்கு கிறித்தவம் போன்று புதிதாக ஒருமதம் வந்து சேர்கையில் அது மக்களிடையே அடையாளங்களாக மட்டுமின்றி உள்ளார்ந்து சென்று சேர காப்பியங்கள் வகித்த பங்கு இன்றியமையாததாக இருந்திருக்கும். அவ்வகையில் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றிய முதல் தமிழ் கிறித்தவ காப்பியமான தேம்பாவணி தொடங்கி தற்போது வரை கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளில் உருவாகியுள்ள மொத்தம் 48 காப்பியங்களின் அறிமுகத்தை ‘கிறித்தவ காப்பியங்கள்’ என்ற நூலின் வழியே தொகுத்தளித்திருக்கிறார் ஆசிரியர் ஞானசந்திர ஜாண்சன்.
![]() |
| யோ. ஞான சந்திர ஜாண்சன் |
ஆசிரியர் தன் முன்னுரையிலேயே பொது வாசகருக்கான பல ஆச்சர்யங்களைத் தருகிறார். தமிழின் முதல் அச்சு நூலை உருவாக்கியவர் இயேசு சபை துறவியான அண்டிரிக் (Henrique) அடிகளார் என அறிமுகம் செய்கிறார். 1578 இல் இது நிகழ்கிறது. முதல் இரண்டு தமிழ் நூல்களும் தமிழகத்திற்கு வெளியே கொல்லத்திலும் கொச்சியிலும் அச்சாக அதன்பிறகு மூன்றாவது நூல் தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் 1580 இல் அச்சாகிறது. தமிழ் எழுத்துகளை உருவாக்குவது முதல் இம்மூன்று நூல்களுமே அடிகளாரின் முயற்சியில் வெளிவந்துள்ளன. அதன் பிறகு பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர், சீகன்பால்கு ஆகியோரின் காலத்தில் உருவாகத் தொடங்கும் கிறித்தவ இலக்கியங்கள் வேதநாயக சாஸ்திரியார், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை என தொடர்ந்து இன்றுவரை தொடர்ந்து கிறித்தவ காப்பியங்கள் உருவாகிவரும் சித்திரத்தை அளிக்கிறார் ஆசிரியர் ஜாண்சன். பட்டியல் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக கிடைத்த காப்பியங்களையெல்லாம் நூலில் சேர்க்கவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். உதாரனமாக உரைநடையில் அமைந்தவற்றை இதில் சேர்க்க இயலாது என்றும் சில நூல்களின் தலைப்பில் காப்பியம் எனப் பெயர் இருப்பதினாலேயே அவை காப்பியம் ஆகா என்றும் சொல்கிறார். தமிழ் பேரகராதி காப்பியத்திற்கு வகுத்தளிக்கும் இலக்கணப்படி அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகை உறுதிப் பொருளையும் காப்பியம் பேச வேண்டும். அந்த இலக்கணத்தை முழுமையாக பின்பற்றியுள்ள நூல்கள் என எடுத்துக் கொண்டால் இப்பட்டியலில் தேம்பாவணி, இராட்சணிய யாத்திரிகம், திருத்தொண்டர் புராணம் உள்ளிட்ட ஐந்து நூல்கள் மட்டுமே அடங்கும் என்பதையும் குறிப்பிட்டுவிட்டே காப்பிய அறிமுகளுக்குள் செல்கிறார்.
ஆசிரியர் ஜாண்சன் ஒவ்வொரு காப்பியத்திற்கும் அளிக்கும் முழுமையான அறிமுகங்கள் வழியாக திரண்டு வரும் இரண்டு விஷயங்கள் எனக்கு முக்கியமாக பட்டன. முதலாவது ஆசிரியர் ஜாண்சனின் பரந்துபட்ட தமிழ் இலக்கிய வாசிப்பின் பகுதியாக வைத்தே இக்கிறித்தவ காப்பியங்களை அறிமுகம் செய்கிறார். எனவே அனைத்து வகையிலும் ‘தமிழ்’ காப்பியங்களாகவே இவை நமக்கு அறிமுகம் ஆகின்றன. இரண்டாவது அம்சம் ஆசிரியர் ஜாண்சன் அறிமுகப்படுத்தும் காப்பிய ஆசிரியர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள் வழியாக தமிழ் பண்பாட்டில் அவர்கள் இயல்பாக வேரூன்றியிருக்கும் தன்மை, அவர்களின் சமூக பங்களிப்பு ஆகியவை குறித்து நமக்கு ஏற்படக்கூடிய புரிதல்.
ஆசிரியர் ஜாண்சன் ஒவ்வொரு காப்பியத்தையும் அதன் பெயர்க் காரணம் துவங்கி, காப்பிய நோக்கம், காப்பியத்தின் அமைப்பு, திருக்குறள் போன்று பிற தமிழ் செவ்வியல் ஆக்கங்களின் தாக்கம் இடம்பெற்றிருக்கும் இடங்கள் என மேற்கோள்களுடன் விரிவாக அறிமுகம் செய்கிறார். இதில் காப்பிய ஆசிரியர்களின் தமிழிலக்கிய ஈடுபாட்டுடன் ஜாண்சன் அவர்களின் விரிவான தமிழிலக்கிய வாசிப்பும் விவிலிய வாசிப்பும் வெளிப்படுகிறது. உதாரணமாக இலங்கையைச் சேர்ந்த கனகசபைப் பிள்ளை இயற்றிய திருவாக்குப் புராணத்தின் பெயரைக் குறித்து விளக்கும் போது ‘ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ எனும் வேதவாக்கை நினைவுப்படுத்துகிறார். அதேபோல உலகஜோதி என்ற காப்பியத்தின் பெயரின் காரணமாக ‘நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்’ எனும் தேவனின் வாக்கை சொல்கிறார். முக்கியமாக தமிழ் செவ்விலக்கியங்களின் தாக்கம் பெற்ற இடங்களை சுட்டிக்காட்டுவது ஆசிரியர் ஜாண்சனின் வாசிப்பில் இப்புத்தகம் முழுக்க வந்துகொண்டே இருக்கிறது. அருளவதாரம் எனும் ஒரு காப்பியத்திலேயே சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், பாரதியாரின் பாஞ்சாலி சபதம், திருக்குறள் என தமிழ் செவ்வியல் மரபின் தாக்கம் பெற்ற பல இடங்களை பாடல்களுடன் ஒப்புநோக்கி விளக்கியுள்ளார்.
கிறித்தவ காப்பியங்களில் கம்பராமாயணத்தின் தாக்கத்தை பேசுகையில் முக்கியமான நூலாக இரட்சணிய யாத்திரிகம் குறிப்பிடப்படுகிறது. முதலாவதாக இதன் ஆசிரியர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை தன் பதினான்காவது வயதிலேயே கம்பராமாயண செய்யுள்களை மனப்பாடத்துடன் பொருள் கூறும் அளவுக்கு கம்பனை கற்றவர். இவரின் தந்தை சங்கர நாராயணபிள்ளை கம்பராமாயண சொற்பொழிவாளர். கம்பனின் காவிய நடை கிருஷ்ணபிள்ளையின் பாடல்களிலும் வெளிப்பட பின்னாளில் அவரே கிறித்தவ கம்பர் எனும் நற்பெயரை அடைய காரணமாய் இருந்திருக்கிறது. அதுவரை புரியக் கூடிய அளவில் மட்டும் இருந்துவந்த கிறித்தவ பாடல்கள் ஈர்க்கக் கூடியதாகவும் இலக்கியத் தரம் மிக்கதாகவும் வெளிப்படுவது கிருஷ்ணபிள்ளையின் காவியத்தில்தான் என்கிறார் இந்நூலுக்கு ஆங்கில முன்னுரை எழுதிய T. Uwalker. கம்பராமாயணத்துடன் ஆசிரியர் ஒப்புநோக்கும் ஒரு இடத்தை மட்டும் இங்கு சுட்டுகிறேன். இராமாயணத்தின் நகர் நீங்கு படலத்தில் இராமன் காட்டுக்குச் செல்லும் நிலையைக் கண்டு அயோத்தி மக்கள் புலம்புகின்றனர். பெண்களுள் சிலர் கூந்தலில் தீப்பற்றியது போல பதைபதைக்க, சிலர் மயங்கி விழுகின்றனர். இதேபோன்ற காட்சியை இரட்சணிய சரிதப்படலத்தில் கிருஷ்ணபிள்ளை அமைத்துள்ளார். கிறிஸ்து முள் முடி சூடி கல்வாரி மலைநோக்கி கொண்டு செல்லப்படும் காட்சியின் வருணனைகள் இராமாயணத்தின் நகர்நீங்கு படலத்திற்கு நிகராக அமைந்துள்ளதை பாடல்களுடன் விளக்குகிறார் ஜாண்சன்.
வட்டார வழக்கு இடம்பெற்றுள்ள காப்பியங்களாக யாழ்பாணத்தின் ஜே.எஸ். ஆழ்வார்பிள்ளை எழுதிய நசரேய புராணம் மற்றும் குமரி வழக்கு இடம்பெறும் நூலாக ஜான் பால்மரின் கிறிஸ்தாயானம் காப்பியத்தையும் எடுத்துக் காட்டுகிறார். ஆசிரியர் ஜாண்சன் தன் ஆய்வு நோக்கில் காப்பியத்தில் இடம்பெறும் வட்டார வழக்கு, பழமொழிகள், சித்தர்பாடல்கள் என எதையும் தவறவிடுவதில்லை. காப்பியத்தை முழுமையாக ஈடுபட்டு வாசிக்கும் அதே சமயம் காப்பியத்திற்கு வெளியேயும் பரந்துபட்ட வாசிப்பை கொண்டிருக்கும் ஒருவரால்தான் இத்தகைய தொடர்புபடுத்தல்களை செய்ய முடியும். உதாரணமாக உலக ஜோதி காப்பியத்தில் பாம்பாட்டி சித்தரின் பாடலான ‘நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ பாடலின் தாக்கம் குறிப்பிடப்படுவதைக் கூறலாம். பழங்கதை படலத்தின் சாத்தானை விரட்டல் எனும் பகுதியில் மேற்சொன்ன சித்தர் பாடலின் அதே சந்தத்தில் காப்பியத்தின் தருணத்திற்கேற்ப பொருள் கொள்ளும் பாடல் ஒன்று அமைந்திருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் அடியவர்களை பாடும் காப்பியங்களில் அன்பு மலர் அன்னை தெரசா, தேவசகாயம் பிள்ளையின் திருத்தொண்டர் காப்பியம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இதில் சூ. இன்னாசி அவர்கள் இயற்றிய திருத்தொண்டர் காப்பியம் வரலாற்று ரீதியாக காப்பிய உருவாக்கத்தின் அனைத்து படிநிலைகளையும் கொண்டதாக இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட காரணத்தால் நீலகண்ட பிள்ளை எனும் தேவசகாயம் பிள்ளை அல்லல் பல பட்டு இரத்த சாட்சியாக மரிக்கிறார். இவரது வரலாறு கதை வடிவிலும் கும்மி, சிந்து, அம்மானை, தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற வடிவங்களிலும் இடம்பெற்று இறுதியில் திருத்தொண்டர் காப்பியமாக பரிணாமம் கொள்கிறது.
![]() |
| The Transfiguration of Christ by A.D. Thomas, 1908-1989 |
ஒரு பண்பாட்டின் தொன்மக் கூறுகளே வரலாற்றின் போக்கில் அப்பண்பாட்டில் தொடர்ந்து உருவாகும் கதைகளையோ அல்லது வந்துசேரும் கதைகளையோ இணைக்கும் மாயச் சரடாக உள்ளது என்று கூறலாம். அவ்வகையில் இந்திய நிலம் உருவாக்கிய தொன்மங்கள் கிறித்தவ இலக்கியத்திற்குள் ஊடுருவியிருக்கிறதா என்ற கேள்விக்கும் ஓரிடத்தில் விடை சொல்கிறார் ஆசிரியர். கிறிஸ்து காவியத்தில் ஓர் இடம் வருகிறது. இரட்சகரை கடுமையான வெயில் எரியும் நண்பகல் நேரத்தில் சிலுவையில் ஏற்றுகின்றனர். அப்போது சுற்றிலுமிருந்த வெறியர்கள் அவரின் ஆடையை உரிக்கின்றனர். அப்பகுதியை ‘துகில் உரியும் துச்சாதனர்கள்’ எனும் உட்தலைப்பிட்டு எழுதியிருக்கிறார் இலங்கை ஆசிரியர் வாகரைவாணன். பாரதக் கதை உருவாக்கிய துச்சாதனன் எனும் தொன்ம உருவம் தொட்டெழுப்பக்கூடிய இடங்களை வாசகர் எவரும் உணரலாம்.
இரண்டாவதாக இந்நூலில் இடம்பெறும் காப்பிய ஆசிரியர்களின் வாழ்க்கை குறிப்புகள் அளிக்கும் பன்முகத்தன்மை இயல்பாகவே ஆர்வமூட்டக்கூடியது. இந்நூலில் இடம்பெறும் 45 காப்பிய ஆசிரியர்களுள் ஏழு பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். காப்பிய படைப்பாளர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் மாணவர்களை நெறிப்படுத்தும் நல்ல மேய்ப்பர்களாக இருந்துள்ளனர். அதாவது பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக நீண்ட காலம் பணிபுரிந்துள்ளனர். இறைத்தொண்டர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர் போன்று பிற வகையினரும் உண்டு. அமைப்புகளில் உயர் நிர்வாக பொறுப்பு வகித்த காப்பிய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இயேசு அருட்காவியத்தை இயற்றிய வி.ஜி. சந்தோசம் அவர்கள் பிரபல வி.ஜி.பி. நிறுவனங்களின் தலைவர் ஆவார். அன்பம்மாள் ஏசுதாசன் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெறும் ஒரே பெண் படைப்பாளர். தன் கணவரின் இறப்புக்குப் பிறகே அன்பம்மாள் எழுத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாக ஆசிரியர் ஜாண்சன் குறிப்பிடுகிறார். இவர் படைத்த காப்பியத்தின் பெயர் ‘காப்பிய மைந்தன்’.
காவிய ஆசிரியர்களில் ஐந்து பேர் கிறித்தவரல்லாதோர். இந்த ஐவர் போக மீதமுள்ள படைப்பாளர்களிலும் பலர் பிறப்பால் வேறு மதத்தில் இருந்து பின்னாளில் வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் ஆண்டவரின் விளியை ஏற்று கிறித்தவத்திற்கு மாறியவர்கள். ஐம்பது வயதிற்கு மேல் திருமுழுக்கு செய்து கொண்டவர்களும் உண்டு. எனவே காப்பிய ஆசிரியர்களின் வாழ்வை ஒட்டுமொத்தமாக நோக்கும் போது அவர்களில் பலரும் தங்கள் வாழ்வில் பன்மத நம்பிக்கைகளை பின்பற்றியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இந்தியச் சூழலில் வேறு எந்த மதம் சார்ந்த காப்பிய ஆசிரியர்ளுக்கேனும் இந்தத் தனித்தன்மை வாய்த்திருக்குமா எனத் தெரியவில்லை. தேவாரம் திருவாசகம் தொடங்கி கம்பராமாயணம், இந்து தொன்மங்கள் என கிறித்தவ காப்பியங்களில் இந்தத் தாக்கம் பிரதிபலிப்பதை ஏற்கனவே பார்த்தோம்.
சிறு வயதில் ஆழமான பிற மத நம்பிக்கை கொண்ட காப்பிய ஆசிரியர்கள் என்று குறிப்பிட்டு சொல்லும்படி சிலர் உண்டு. நசரேய புராணம் இயற்றிய ஆழ்வார் பிள்ளை இளம் வயதில் வைணவ பக்தராகவும் சைவ சமய தீட்சை பெற்றவராகவும் விளங்கியிருக்கிறார். அதேபோல குமரி மாவட்டக் கீர்த்த்னைக் கவிஞர்களுள் முதன்மையானவரும் கிறிஸ்தாயனம் காப்பியத்தின் ஆசிரியருமான ஜான் பால்மர் வைதீக இந்து குடும்பத்தில் பிறந்தவர். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் மோனத்தவம் புரிந்த சுத்தானந்த பாரதியார் ஏசுநாதர் சரிதத்தை படைத்திருக்கிறார்.
பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன் அவர்களின் மத நம்பிக்கையோ பல திருப்பங்களைக் கொண்டதாக இருக்கிறது. இளம் வயதில் பெரியாரிய இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர் பின்னர் இஸ்லாமிய நூல்களை கற்க துவங்கியிருக்கிறார். இஸ்லாமியர்களால் ஈசாநபி என்று அழைக்கப்படும் கிறிஸ்துவை அறிந்து தன் 56 ஆவது வயதில் திருமுழுக்கு பெறுகிறார். அதன் பிறகு அவர் இயற்றிய காப்பியமே ‘மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்’.
அர்த்தமுள்ள இந்துமதம் நூலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்பதை பலரும் அறிவோம். அவர் இயேசு காவியத்தை படைத்ததோடு தான் இயற்றிய நூல்களிலேயே இறவாக் காவியமாக இருக்கப் போவது ‘இயேசு காவியம்’ தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிறித்தவ இலக்கியம் என்றல்லாமல் வேறு பல தளங்களில் படைப்புகளை இயற்றிய ஆசிரியர்களும் இப்பட்டியலில் கணிசமாக உண்டு. இயேசு புராணம் இயற்றிய ஈழத்துப் பூராடனார் ஆதிகிரேக்க 48 நாடகங்களையும் ஹோமரின் இரண்டு காவியங்களையும் தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆசிரியர் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் ஒளவையார் காவியம், கரிகாலச் சோழன் காவியம், அம்பேத்கார் பிள்ளைத்தமிழ், நாளைய புரட்சி (சமூக காவியம்) போன்ற நூல்களை இயற்றியிருக்கிறார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் தமிழில் பல எழுத்துகளை சீர்திருத்தம் செய்தவர். திருக்குறளை திருத்த முயன்ற படைப்பாளர் ஒருவர் உண்டு, ஆசிரியர் சுகாத்தியர் (Scott). இன்னொரு காப்பிய ஆசிரியர் மாணவர்களுக்கு கணிதத்தையும் தமிழையும் இணைத்துக் கற்பிக்கும் ‘கணித ஜாலம்’ எனும் நூலை இயற்றுபவராக இருக்கிறார்.
![]() |
| The Ascension by A.D. Thomas, 1908-1989 |
கிறித்தவ காப்பிய ஆசிரியர்களின் வாழ்வைப் பார்க்கும் போது அவர்கள் அனைவரும் விரிவான செயற்களம் கொண்டவர்களாக இருப்பது பிரதானமாகப் படுகிறது. மத நம்பிக்கையாளர்களாக மட்டும் சுருக்கி விடாதபடிக்கு அவர்களின் செயல்வாழ்வும் படைப்புகளும் உள்ளன. நினைத்துப் பார்த்தால் உலகம் முழுக்க, வரலாறு நெடுக காப்பிய ஆசிரியர்களின் இயல்பு என்பதே எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது.
கிறித்தவ காப்பியங்கள், கீர்த்தனைகள், சிற்றிலக்கிய திரட்டு, பஜனை கீதங்கள் என ஆசிரியர் ஜாண்சன் செய்திருப்பது கிறித்தவ இலக்கியத்திற்கான முழுமையான தொகுப்புப் பணி. ஆசிரியர் ஞான சந்திர ஜாண்சனின் தொகுப்புப் பணிகளை வாசிக்கையில், ஒரு தமிழ் பொதுவாசகர் தம் மனதில் தமிழ் இலக்கிய பரப்பிற்குள் இடம்பெறும் கிறித்தவ இலக்கியத்திற்கென எந்தளவு இடம் வகுத்திருந்தாலும் அதைவிட கூடுதலான பரப்பளவைக் கொண்டது கிறித்தவ இலக்கியம் என்னும் உணர்வையே அடைவார். ஆசிரியர் ஜாண்சன் அவர்களின் தொகுப்பு நூல்களை வாசிக்கையில் தேவன் இம்மண்ணில் வார்த்தைகளாக பெருக்கெடுக்கும் உணர்வே எழுகிறது. காப்பியங்கள் இறைவன் அருளியவை என மத நம்பிக்கையாளர்கள் கூறலாம். அதேசமயம் இறைவனை வளர்த்தெடுப்பதே காவியங்கள்தான் என்று சொல்லத்துணிவதும் எவ்வகையிலும் மிகையல்ல. ஆதியில் சொல்லாக இருந்தவன், சொல்லின் வழி உயிர்பெற்று சொல்லின் வழியாகவே இங்கு பரவுகிறான்.
டி.ஏ. பாரி
யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki




