Tuesday, 11 August 2026

யோ. ஞான சந்திர ஜாண்சன் நூல்கள் அறிமுகம் - ஏ.பால்பிரபு சாந்தராஜ்

சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழறிஞர்கள் பலர் ஆசிரியர்களாக இருந்து தமிழ் வளர்த்தனர். அந்த வரிசையில் பேராசிரியர் முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன் அவர்களின் இடம் குறிப்பிடத்தக்கது. தற்காலக் கிறித்தவ இலக்கிய வரலாற்றை எழுத முற்படுகிறவர்கள் இவரை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்கிற அளவிற்குப் கிறித்தவ இலக்கியப் பணியில் தடம் பதித்தவர். நூல்கள் வழியாக இவரது ஆளுமையை அறிமுகப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது. இவரது நூல்களை, இவர் எழுதிய நூல்கள், பதிப்பித்த நூல்கள், மொழிபெயர்ப்புகள், உரை எழுதிய நூல்கள் என வகைப்படுத்தலாம். அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வந்தாலும் 2003-இல் தான் தனது முதல் நூலை வெளியிடுகிறார் ஜாண்சன். 2003க்குப் பின் 2026 வரை 24 நூல்களை வெளியிட்டுள்ளார். 

ஆய்வுநூல்கள்

கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள் (2003)

டிசம்பர் 2003 ஆம் ஆண்டு கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள் எனும் நூலை வெளியிட்டார். இளம்வயதிலிருந்தே இவர் கீர்த்தனைகள், ஞானப்பாடல்களின் மீது அதிக நாட்டம் உடையவராக இருந்தார். 45 கீர்த்தனைக் கவிஞர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகளையும் அவர்கள் எழுதிய பல கீர்த்தனைகள் எப்படிப்பட்ட சூழலில் எழுதப்பெற்றன என்பதையும் இந்நூலில் சுவைபட எழுதியுள்ளார். முதல் பதிப்பில் 45 கவிஞர்கள் குறித்து எழுதியவர், 2017 இல் வெளியிட்ட மறுபதிப்பில் 71 கவிஞர்கள் குறித்தும் அவர்களது புகைப்படங்களையும் இணைத்து புதிய பதிப்பினைக் கீர்த்தனா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.

எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை (2008)

இந்திய மொழி இலக்கியங்களுக்கு யாரெல்லாம் பங்காற்றி உள்ளனரோ அவர்கள் வாழ்க்கை வரலாற்றை இந்திய இலக்கியச் சிற்பிகள் எனும் வரிசையில் நூலாக்கம் செய்வதைச் சாகித்திய அகாதமி தன் பணிகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது. அந்தவகையில் எச்.ஏ கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை ஜாண்சன் அவர்கள் எழுத சாகித்திய அகாதமி வெளியிட்டது. கிருஷ்ண பிள்ளையின் பிறப்பு, இளமை, படிப்பு, திருமணம், ஆசிரியப்பணி, காப்பியம், எழுத்துப்பணி, கிறித்தவ இலக்கிய சங்கப் பதிப்பாசிரியர் பணி என அவரது வாழ்க்கை குறித்தும், போற்றித் திருஅகவல் இரட்சணிய மனோகரம், இரட்சணிய யாத்திரிகம் ஆகிய செய்யுள் நூல்களைக் குறித்தும் இலக்கண சூடாமணி, நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு, இரட்சணிய சமய நிர்ணயம் ஆகிய உரைநடை நூல்களையும் காவிய தரும சங்கிரகம், வேதப்பொருள் அம்மானை, பரதகண்ட புராதனம், வேத சமயம், தமிழ் ஞானப்பாடல்கள், மகாராணியின் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களையும் பதிப்பித்த எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளையின் பதிப்புப் பணிகளையும் கிருஷ்ணப்பிள்ளை வாழ்க்கை வரலாற்று நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ம.பொ.சி. யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள் (2009)

மிகச்சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான ம.பொ.சி., சுதந்திரப் போராட்டம், அரசியல், கலை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் பங்காற்றியுள்ளார். இவர் 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் எனது போராட்டம், வீரபாண்டிய கட்டபொம்மன், வள்ளலார், சிங்காரவேலர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, ராஜாஜி, கிருஷ்ணசாமி பாவலர் ஆகியவை வாழ்க்கை வரலாற்று நூல்களாகும். இந்த வாழ்க்கை வரலாற்று நூல்களைக் குறித்த அறிமுகமாக ம.பொ.சி.யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள் எனும் நூலை எழுதினார். இதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.

கிறித்தவக் காப்பியங்கள் (2013)

கிறித்தவக் காப்பியங்கள் எனும் நூல் 2013 ஆம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது. கிறித்தவக் காப்பியம் என்றால் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் மட்டுமே நினைவு வரும். கிறித்தவ இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் காப்பியங்களை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் ஜாண்சன் அவர்கள் தனது அயராத உழைப்பினாலும் கடுமையான முயற்சியினாலும், கடல்கடந்தும் முயன்று காப்பியங்களைக் கொணர்ந்து முப்பது காப்பியங்கள் குறித்த அறிமுகக் கட்டுரைகளை எழுதி மிகச் சிறந்த ஆவணமாகப் பதிப்பித்திருக்கிறார். இதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருப்பதால் பரந்துபட்ட பயன்பாட்டுக்கு உரியதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே (2016)

ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே உலகப் புகழ் பெற்ற ஹாலே பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்து இம்மானுவேல் காண்ட் போன்ற பல தத்துவ மேதைகளின் சிந்தனைகளால் கவரப்பட்ட ஒரு வித்தியாசமான அருள்தொண்டர். எளிமை மிக்க அன்பு மலிந்த கிறித்தவ வாழ்வினையும் அவரது ஆன்மிக அர்ப்பணிப்பையும் அளப்பரிய சாதனைகளையும் ஒருங்கே தெளிவுற விளக்கும் அரிய வரலாற்றுப் பேழையாக ஜெர்மானிய இறைத் தொண்டர் ரிங்கல்தௌபே எனும் நூல் அமைந்துள்ளது. நெல்லை மண்ணிலும் குமரி மண்ணிலும் கேரளப் பகுதிகளிலும் ஆடம்பரமின்றி எளிமையான ஒரு துறவியைப் போன்று இறைப் பணியாற்றி நற்செய்தி பரப்பி திருச்சபைகளும் பள்ளிகளும் பெரிய கல்லூரிகளும் குமரி மாவட்டத்தில் தோன்ற அடித்தளமிட்ட மாமனிதரின் பிறப்பு முதல் முடிவு வரை அவரது வாழ்வின் அனைத்துச் செய்திகளும் அடங்கியதாக இந்நூல் 340 பக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல் (2019)

தமிழ்மண் உள்ளவரை தமிழ்ச்சமூகம் மறக்கவே கூடாத ஆளுமைதான் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ஒப்பற்ற அறிஞரும் இருள் படிந்திருந்த தமிழகத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி தமிழின் அருமையை உலகிற்கு அம்பலப்படுத்தியவருமான டாக்டர் கால்டுவெல். அயர்லாந்து அண்ணல் கால்டுவெல்லின் அயராத பணிகளைப் பேசும் பல்வேறு நூல்கள் இருந்தபோதிலும் அவரது பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் முழுமையான நூல் அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல் என்னும் 400 பக்கங்களையுடைய இவருடைய நூல்.

தமிழகத்திற்கு வந்த கிறித்தவர்களின் அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூல் 27 தலைப்புகளில் கால்டுவெல்லின் வாழ்க்கையைக் கண்முன்னே விரித்துரைக்கிறது. நூலை வாசிக்கத் தொடங்கும்போது அயர்லாந்தின் கிளாடியஸ் ஆற்றங்கரையில் நம் கரம் பிடித்து அழைத்துச் செல்லும் ஆசிரியர் நூலை முடிக்கும்போது இடையன்குடியில் கால்டுவெல்லின் கல்லறையில் நம்மைக் கொண்டுபோய் நிறுத்தி கண்ணீர் சிந்த வைக்கிறார். இடையன்குடி, கொடைக்கானல் என கால்டுவெல் பணியாற்றிய இடங்களுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்டி இரண்டு ஆண்டுகால உழைப்பில் தனித்த கவனம் எடுத்து நூலை உருவாக்கியுள்ளார். இவர் கால்டுவெல்லின் பணிகளை மட்டுமல்லாது அவரது மனைவி எலிசா அம்மையாரின் சமூகப் பணிகளையும் அவர்களின் மூத்த மகள் இசபெல்லா - வயாட் தம்பதியரின் பணிகளையும் பதிவு செய்துள்ளார். 1879 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழாவில் கால்டுவெல் ஆற்றிய விழாப் பேருரை தமிழாக்கம் செய்யப்பெற்று இந்நூலில் இடம் பெற்றுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது. கிடைத்தற்கரிய குடும்பப் புகைப்படங்கள் நூலை ஆங்காங்கே அணி செய்கின்றன. தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூலாக இந்நூலைக் குறிப்பிடலாம்.

பதிப்பு நூல்கள்

கிறித்தவத் தமிழியல் ஆய்வுக் கோவை (2007)

சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்த்துறை 2007 ஆம் ஆண்டில் 'கிறித்தவத் தமிழியல்' என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் நடத்தியது. இக்கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளராக யோ.ஞானசந்திர ஜாண்சன் பணியாற்றினார். அக்கருத்தரங்கில் கிறித்தவத் தமிழ்ப்பணிகள் தமிழ் இலக்கியங்கள் சார்ந்து 117 கட்டுரைகள் இடம்பெற்றன. அவை இரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு கருத்தரங்க நாளன்று வெளியிடப்பெற்றன. அப்போதைய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மோசசு மைக்கேல் ஃபாரடே அவர்களின் உதவியோடும் ஜாண்சன் அவர்களின் பெரும் முயற்சியுடனும் இவ்விரு தொகுதிகளும் பதிப்பிக்கப் பெற்றன.

கிறிஸ்தாயனம் (2008)

மறைந்துபோன பழந்தமிழ்க் கிறித்தவ இலக்கியங்களை அரிதின் முயன்று தேடி, தகுதியான அமைப்புகளின் வழி அவற்றைப் பதிப்பித்து வெளியிடுவதைத் தம் மேல் விழுந்த கடமையாக எண்ணி செய்து வருபவர் ஜாண்சன். கிறித்தவக் கீர்த்தனைகளில் பற்பல கீர்த்தனைகளைப் படைத்தளித்த ஜான் பால்மர் 1865 ஆம் ஆண்டு வெளியிட்ட கிறித்தவக் காப்பியம்தான் கிறிஸ்தாயனம். தமிழ் இலக்கியப் பரப்பில் காப்பியம் என்பது இறுக்கமான நெறிமுறைகளைக் கொண்டதாகும். அவ்விலக்கிய வடிவத்தை எடுத்து 842 விருத்தப் பாடல்கள் கொண்ட காப்பியத்தைப் படைத்துள்ளார். புதிய ஏற்பாட்டில் அமையும் நான்கு நற்செய்தி நூல்களை மையமாகக் கொண்டு வரலாற்று உணர்வோடும் இறையியல் அனுபவ முதிர்ச்சியோடு இக்காப்பியம் அமைந்துள்ளது. பெயர் மட்டுமே அறியப்பட்டிருந்த இந்நூலைத் தேடி எடுத்து ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் வாயிலாகத் திறம்படப் பதிப்பித்துள்ளார்.

கிறித்தவத் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம் (2008)

கிறித்தவத் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் நூல் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் வெளிவந்த 36 கிறித்தவ நூல்களை உரிய வகையில் சுருக்கி அறிமுகம் செய்கிறது. 36 நூல்களில் அரிய கிறித்தவத் தமிழ்நூல்கள் தகுதி வாய்ந்த நல்ல அறிஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப் பெற்றுள்ளன. அழியும் நிலையில் இருந்த பல நூல்கள் இம்முயற்சியின் பயனாய் புத்துயிர் பெற்றுள்ளன எனலாம். இச்சிறந்த நூல் டாக்டர் அருள்திரு. தி. தயானந்தன் பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து ஜாண்சன் அவர்கள் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் வாயிலாகப் பதிப்பித்துள்ளார்.

கிறித்தவத் தமிழ் இலக்கிய வளம் (2009)

கிறித்தவத் தமிழ் இலக்கிய வளம் என்னும் நூலை 2009 ஆம் ஆண்டு முல்லை நிலையம் வெளியிட்டுள்ளது. இந்நூல் அதிக அளவில் அறியப்படாத 50 கிறித்தவ இலக்கியங்களை அறிமுகம் செய்யும் நோக்கில் 50 கட்டுரையாளர்களது கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்நூலை இவரும் இவரது முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களான முனைவர் பாலின் எடிசன் அவர்களும் முனைவர் ஏ.பால் பிரபு சாந்தராஜ் அவர்களும் பதிப்பித்துள்ளனர்.

கிறித்தவ இலக்கியத்திறன் (2013)

கிறித்தவ இலக்கியத்திறன் எனப் பெயர் பெற்ற நூல் கிறித்தவக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை நூல்கள், கிறித்தவச் சான்றோர்கள் பற்றிய கட்டுரைகள், இலக்கணக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஆகும். இக்கட்டுரைகள் வழியே கிறித்தவக் கருத்தோட்டங்களை அறியமுடிகிறது. ஆழ்ந்திருக்கும் கிறித்தவ உள்ளமும் ஆய்வுத்திறமும் ஒருங்கே புலப்படும் வகையில் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது. போராளிகளின் வெளிப்பாடுகளாய்ச் சில கட்டுரைகள், மரபின் மீது மாசுபடிந்து விடக்கூடாது என்ற கவனத்தோடு சில கட்டுரைகள், இலக்கியச் சுவை ததும்பு கிறித்தவ அறம் உணர்த்தவேண்டும் என்ற அறச்சிந்தனையோடு சில கட்டுரைகள், ஆன்ம ஈடேற்றம் வெளிப்படுத்தும் வகையில் சில கட்டுரைகள் என 32 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு (2015)

கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு என்னும் நூலை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் வழியாகப் பதிப்பித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களால் தொகுக்கப்பட்டவை தொகைநூல்கள் எனப்படுவது போல் பெரும்பான்மை பயன்பாடு கருதி தொடர்ந்து படிப்பதற்கும் மனப்பாடம் செய்வதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைத் திரட்டி பதிப்பிப்பது திரட்டு என்று அழைக்கப்பெற்றது. 1955 இல் வெளியிடப்பட்ட கிறித்தவ இலக்கியத் திரட்டு என்னும் நூலில் கிறித்தவத் தமிழ் இலக்கியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால் இவர் பதிப்பித்த நூலில் பதினெட்டு தமிழ்க் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளன. பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்கிற வகையிலும் சிறந்த இலக்கியப் படைப்புகள் என்கிற வகையிலும் கிடைத்தற்கரிய நூல்கள் என்கிற பார்வையிலும் எதிர்காலக் கிறித்தவ இலக்கிய ஆய்வாளர்களுக்கான தரவாக இந்நூல் அமையும் என்பதில் ஐயமில்லை.

கிறித்தவ பஜனைக் கீதங்கள் (2015)

திட்டுவிளையில் ஈஸ்வர பாக்கிய ஈசாக்கு என்பவர் பிறந்து, வளர்ந்து இறைப்பணியோடு இலக்கியப் பணியும் செய்துவந்தார். இவரே திட்டூர் தேசிகர் என பின்னாலில் அழைக்கப்பெற்றார். இவரது இசைப் பாடல்களைக் 'கிறித்தவ பஜனைக் கீதங்கள்' என்னும் பெயரில் பதிப்பித்துள்ளார். பஜனைப்பாடல்கள் என்பது திட்டூர் தேசிகர் பயன்படுத்திய சொல்லாடல் ஆகும். தேசிகர் பஜனைப் பாடல்கள் என்னும் சொல்லாடலை இசைப்பாடல்கள் என்னும் பொருளிலேயே பயன்படுத்தினார் எனலாம். தேசிகரால் இயற்றப்பெற்ற 148 இசைப் பாடல்கள் இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

ஆய்வுச் சுவடுகள் (2019)

முனைவர் ஞானசந்திர ஜாண்சன் அவர்களிடம் 25 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வினை முடித்துள்ளனர். கிறித்தவ இலக்கியத்தில் 11 பேரும் நாவல் இலக்கியத்தில் 12 பேரும் இருவர் பொதுத் தலைப்புகளிலும் ஆய்வு செய்துள்ளனர். 25 பேருடைய ஆய்வுச் சுருக்கங்களையும் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தன்னிடம் ஆய்வு செய்த மாணவர்களின் ஆய்வுக் கருத்துக்கள் காலப்போக்கில் மறைந்து போகக் கூடாது, அவர்களது ஆய்வுகளின் சுவடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஆய்வுச் சுவடுகள் என்னும் பெயரில் அனைத்து ஆய்வுகளின் சுருக்கங்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். தனது மாணவர்களுக்காக ஆய்வு வழிகாட்டி இத்தகைய முயற்சி மேற்கொண்டு இருப்பது ஆய்வுலகில் புதிய முயற்சியாகும். இது இவ்வாசிரியர் தனது மாணவர்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் காட்டுகிறது.

மொழிபெயர்ப்புப் பதிப்புகள்

மில்லர் என்னும் மாமனிதர் (2012)

மில்லர் என்னும் மாமனிதர் என்ற நூலை ஜனவரி 2012ல் பதிப்பித்தார். டாக்டர் வில்லியம் மில்லர் என்னும் பெயரில் ஓ.கந்தசாமி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளார். மில்லரின் இளமைக்காலம், சென்னை வருகை, பள்ளியைக் கல்லூரியாக மாற்றியது, மில்லரின் பண்புநலன்கள், கல்லூரிப் பணிகள், பொதுத்தொண்டுகள், மில்லரின் இறுதிக்காலம் என மில்லரைக் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு, மில்லர் மாமனிதர்தான் என்று வியக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. கல்லூரி நிர்வாகம் 175 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் தொடக்கமாக 07.01.2012 அன்று நன்றி ஏறெடுப்பு ஆராதனை நடத்தியது. அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட கிறித்தவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் The very Rev.Canon Ivor Smith Cammeron (Former Chaplain to the Queen U.K.) அவர்களால் இந்நூல் வெளியிடப்பெற்றது.

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும் (2016)

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும் 1837 - 1978 என்னும் மொழிபெயர்ப்பு நூலை டிசம்பர் 2014 ஆம் ஆண்டு பதிப்பித்தார். Life and legacy of madras christian college என ஆங்கிலத்தில் முனைவர் ஜோஸ்வா கலபாடி, முனைவர் அம்புரோஸ் ஜெயசேகரன் ஆகியோர் எழுதியிருந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள இயலாத தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் கல்லூரி வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்வதற்கு ஏற்றவகையில் இந்நூல் அமைந்துள்ளது.

அமைதிக் கல்வி (2017)

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் சிறப்புச் செயல்பாடுகளில் ஒன்று அமைதிக் கல்வி மையம் ஆகும். (Centre of peace studies) இக்கல்வி மையம் 2015ஆம் ஆண்டு 26 கட்டுரைகள் அடங்கிய An Introduction to peace and conflict studies in Colleges எனும் நூலை வெளியிட்டது. இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்து பதிப்பித்து வெளியிடும் பணியைக் கல்லூரி நிர்வாகம் ஜாண்சன் அவர்களிடம் ஒப்படைத்தது. இக்கட்டுரைகளை மொழிபெயர்த்து 2017 ஆம் ஆண்டு அமைதிக் கல்வி எனும் பெயரில் வெளியிட்டார். 

உரை எழுதிய நூல்

அகப்பொருள் விளக்கம் (2010)

கட்டுரைகள் எழுதுவதிலும், பதிப்புப் பணியிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர், ஒரு நூலுக்கு உரை எழுதியிருக்கிறார். இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு அகப்பொருள் விளக்கம் என்னும் இலக்கண நூலை நடத்துகின்ற வாய்ப்பை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப்பெற்ற இவர் இதுவரை இருக்கும் உரைகளைவிட இன்னும் எளிமையாக இருந்தால் மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய வகையில் அமையும் என்பதை உணர்ந்தார். ‘ஏன் நாமே இதற்கு ஓர் எளிய உரை எழுதக் கூடாது’ என்ற எண்ணம் இவரை ஒவ்வொரு ஆண்டும் தொற்றிக்கொள்ள இதுவரை வகுப்பெடுத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதினார். மாணவர்களுக்கு மிக எளிதில் புரியக்கூடிய உரையாக இது அமைந்துள்ளது.

ஏ.பால்பிரபு சாந்தராஜ்

யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki

ஏ.பால்பிரபு சாந்தராஜ்
ஏ. பால்பிரபு சாந்தராஜ் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறை. கட்டுரைகள் எழுதி வருகிறார்.