![]() |
| The Baptism of Christ by Piero della Francesca, 1439 |
இருளும் குளிரும் உறைந்துகொண்டிருந்த இரவு அது. ஆற்றாமை பெருகிப்பெருகி வந்தது. அதற்கு முழுதும் என்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்தேன். விடுதி அறையில் தனிமை சூழ்ந்து கொண்டு என்னை அச்சுறுத்தியது. டவுன் ஷிப்பின் அகன்ற வீதிகள், கண்கூசும் செம்மண் நிலம், அதில் கால்கொண்ட பெரும் மரங்கள், கதிரின் வரவையும் அணைவையும் கூவும் பறவையொலிகள் இவையெல்லாம் என் அறைக்குள் வரவில்லை. அம்மாவின் குரலும் தொடுகையும் இல்லாத நாளை அதுவரை நான் கற்பனை செய்திருக்கவில்லை. தாளமுடியாத கனம் என்னை ஆழ அழுத்திச்சென்றது. எனது அறை வாயில்களற்ற கண்ணாடி குமிழி போல மாறிக்கொண்டிருந்தது. அதன் எதிரொளிப்பில் ஏதேதோ முகங்கள் என்னை வெறித்துப்பார்க்க நான் தன்னுணர்வற்றிருந்தேன்.
இந்த வரிகள் எனக்கு உள்ளிருந்து ஒலித்தது. என் குரலிலேயே இது ஒலித்தது என்பதை அப்போது உணரவில்லை.
கருணையில் என்னை நீ நினைத்தாய்
உயிரை தந்திடும் கருவினிலே
அருளினை பொழிந்து அரவணைத்தாய்…
எப்போதோ தேவாலயத்தில் கேட்ட இசை. நினைவின் உள்ளிருந்து தானே எழுந்து ஆறுதலளித்தது. தனிமை தாளமுடியாத இருளென்றால், பாடல் மின்மினியாகி அந்த இருளை கேலி செய்தது, எவ்வளவு பெரிய விடுபடல். பின் விடுதி அறைகளில் நான் சுதந்திரமாக நடக்க ஆரம்பித்தேன். பாடல்கள் எனக்கு நம்பிக்கையூட்டின. எங்கேயும் இருவரும் கைகோர்த்து நடந்தோம்.
எனக்கு இது ஒரு தருணமல்ல, நூறு தருணங்களில் இசை எனக்கு துணை செய்திருக்கிறது. அதை நான் தேவாலயத்தின் உள்ளே பெற்றுக்கொண்டேன், அது எனக்கு உலகம் முழுவதையும் காண்பித்தது.
******
![]() |
| The Ghent Altarpiece - Singing Angels by Jan van Eyck, 1427 |
'கிறித்துவத்தில் முதன்மையான திருச்சபைகள் ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church), மரபுவழி திருச்சபை (The Orthodox Church) மற்றும் புராட்டஸ்டன் திருச்சபை (The Protestant Church) ஆகியவை. திருச்சபையில் இசை வழிபாடு என்பது திருச்சபை ஆராதனையின் முக்கிய அங்கம். கிறிஸ்தவத்தில் இசை இறைவனை துதிக்கும், விசுவாசிகளை ஒன்றிணைக்கும், ஆன்மிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிபாட்டு முறை. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பாடல் திருப்பலி ஆனது முழுதும் இசையோடு ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியாகும்.
திருச்சபை இசையின் வரலாறு கிறித்துவத்தின் உலகளாவிய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது. ஜெபப்பாடல்கள் எப்பொழுதும் கூட்டாகவே (choir) பாடப்படுகின்றன. தேவாலயத்தில் ஆரம்பத்தில் இசைக்கருவிகள் இன்றி குரலிசை மட்டுமே வழங்கிய காலம் இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர், அதன் வெளிப்பாடாகவே இன்றும் இந்த சேர்ந்திசை முறை முக்கியமானதாக இருக்கிறது. ஆரம்பகால திருச்சபையின் வழிபாட்டு மொழிகளாக அராமிக், கிரேக்கம், மற்றும் இலத்தின் இருந்தன. பின்பு மேற்கத்திய திருச்சபையில் அது இலத்தினாக நிலைபெற்றது. பின்பு உலகின் பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் மதித்து அவரவர் தாய்மொழிகளில் இறைவனை துதிக்கும் மரபு வந்தது.
என் அம்மா சிறுபிள்ளையாய் இருந்த பொழுது இலத்தீன் மொழியிலேயே பாடல்களும் வழிபாடும் இருந்தது என்றும் அதை வரிவிடாமல் அவர் மனப்பாடம் செய்து பாடுவார் என்றும் பெருமையாக என்னிடம் பல தருணங்களில் கூறியதுண்டு. பின்பு வந்த காலங்களில் அவரவர் தாய்மொழியிலேயே ஜெபிக்கலாம் என்று போப்பாண்டவர் சொல்லிவிட்டார். "நீ லத்தின்ல என்ன பாடினாய், ஆண்டவரிடம் லத்தின்ல என்ன வேண்டினாய்" என்று கேள்விக்கு அவரிடம் பதில்இருக்காது, ஆனால் அந்த எவ்வாறு பாடப்பட்டது என்பதை பற்றி சொல்லும்போது மெய்மறந்து போவார். "உனக்கு தெரியுமா, அந்த இசை உன்னை மயக்கிவிடும். ஆண்டவரிடமே உன்னை நீ ஒப்புக் கொடுத்துவிடும்” என்பார்.
ஆய்வாளர் ஞான சந்திர ஜான்சன் கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகளை தொகுத்து ஆய்வுப்பதிப்பாக வெளியிட்டுள்ளார். மூன்று தொகுதிகளாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், 2221 கிறித்தவ கீர்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. 190 கீர்த்தனைக் கவிஞர்களின் பெயரிலும் இரட்சணியசேனைப் பாடல்கள், சுருக்கப் பெயர், பாளையங்கோட்டைப் பாடல்கள், பெயர் சுட்டப்பெறாதவை, யாழ்ப்பாணப் பாடல்கள், லுத்தரன் பாடல் என்னும் ஆறு பகுதிகளோடு 196 தலைப்புகளில் இக்கீர்த்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
விவிலியத்தில் (பழைய ஏற்பாட்டில்) உள்ள சங்கீதம் (Psalms) என்னும் பகுதி கடவுளைப் போற்றிப் பாடும் பாடல்கள், ஜெபங்கள் மற்றும் கவிதைகளின் தொகுப்பைக் குறிக்கின்றது. எபிரெய மொழியில் இது "தெஹில்லிம்" (Tehillim) என்று அழைக்கப்படுகிறது, அதற்கு "துதிப் பாடல்கள்" என்று பொருள். ஆரம்பகால யூத தொழுகைக் கூடங்களிலும், பின்னர் தோன்றிய கிறிஸ்தவ திருச்சபைகளிலும் வழிபாட்டின் போது முதன்முதலில் பாடப்பட்டவை இந்த சங்கீதங்களே. தாவீது, சாலமன் உள்ளிட்டோர் எழுதிய 150 சங்கீதங்கள் விவிலியத்தில் உள்ளன. இப்பாடல்கள் தந்தையாகிய இறைவனை துதித்து அவரது வல்லமையை போற்றி, தங்களுக்கு துன்பத்தில் உதவுமாறு இறைஞ்சுவன. அவருக்கு நன்றி தெரிவிப்பன. கிருஸ்தவ வழிபாட்டில் இசைக்கான உயரிய இடத்தை விவிலியத்தின் இப்பகுதியே உருவாக்கியது எனலாம். விவிலிய தொகுப்பாக்க காலத்தில் இப்பாடல்களின் செல்வாக்கு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆழ்வார்களும் தேவார மூவரும் இசைப்பாடல்கள் மூலமாகவே பக்தி இயக்கத்தை முன்னெடுத்துச்சென்றனர். அருணகிரிநாதர் காலம் வரையிலும் இசையோடு பக்தி ஒன்றாகக் கலந்திருந்தது. பண்முறை, சந்தப்பாடல்கள் போன்ற இசைவடிவங்கள் புகழ்பெற்றிருந்தன. அங்கு துவங்கி கீர்த்தனை மரபு -தமிழ் மூவர் காலத்தில் உருவாகி ஊத்துக்காடு வேங்கட கவி, தியாகப்பிரம்மம் ஆகியோரின் வழியே நிலைபெற்றிருந்தது. ஏறத்தாழ இக்காலகட்டத்தில்தான் தமிழில் கிருஸ்தவத்திற்கான பாடல்கள் இயற்றப்படுகின்றன.
பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர், ஜோஹான் வால்த்தர் ஆகியோர் சீர்திருத்த கிருஸ்தவ சபையின் வழிபாட்டிற்காக பாடல்களை ஜெர்மன் மொழியில் இயற்றினர். அத்தொகுப்பு ஞானப்பாடல் என்ற பெயரில் நூலாகியது. பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் கிருஸ்தவ வழிபாட்டின் ஒருபகுதியாக ஞானப்பாடல்களின் மொழிபெயர்ப்பு பாடல்களே பாடப்பட்டன, இப்பாடல்களை முதன்முதலில் சீகன் பால்கு வெளியிட்டார். பெப்ரீசியஸ் இவ்வகை ஞானப்பாடல்களை வெளியிட்டவர்களில் முக்கியமானவர். பின்னர் தமிழறிந்த துறவியரும் இசைப்புலவர்களும் அக்காலத்திய மரபை ஒட்டி கீர்த்தனைகளை இயற்றத்துவங்கினர் என்பதை இந்நூலின் வழியே புரிந்து கொள்ள முடிகின்றது.
கிறிஸ்தவ தமிழ்க்கீர்த்தனைகளை பெரிதும் வளர்த்தவர் தஞ்சையை சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரியார். கீர்த்தனையின் இறுதியில் முத்திரையாக தனது பெயர்வரும்படி அமைத்துப்பாடியுள்ளார். இவர் பாடல்களாக 334 பாடல்களை ஜாண்சன் பட்டியலிட்டுள்ளார். தமிழில் பாடலியற்றிய காரணத்தை சாஸ்திரியார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
தாவீது இராசா, பரபரனை எபிரேயப்பாட்டினாலே ஸ்தோத்திரம் பண்ணினான். ஐரோப்பியர் முதலான சகல ஜாதியாரும் பரபரனை தங்கள் தங்கள் சாதி பாஷையிலே ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். அப்படியே நாமும் பராபரனாகிய கர்த்தரை நமது சொந்த பாஷையில் ஸ்தோத்திரம் பண்ண வேண்டாமோ.
சாஸ்திரியார் எழுதிய பாடல்களில் 'பாடித்துதி மனமே, பரனைக்கொண்டாடித் துதி தினமே' போன்ற பாடல்கள் இன்றும் கூட விரும்பிக்கேட்கப்படுகின்றன.
அமெரிக்க மிஷன் மூலம் மதுரையில் இறைப்பணியாற்ற வந்த எட்வர்ட் வெப் சாஸ்திரியாரின் கீர்த்தனைகளால் ஈர்க்கப்பட்டார். 1852ம் ஆண்டு தன்னுடன் எட்டு இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு சாஸ்திரியாரிடம் சென்று பயிற்சி பெற்றார். இவர் மூலமாக தஞ்சை, மதுரை மட்டுமின்றி பிற இடங்களிலும் தேவாலய இசையாக கீர்த்தனைகள் பரவத்துவங்கின. சாஸ்திரியாரை தொடர்ந்து திட்டூர் தேசிகர், ஆபிரகாம் பண்டிதர் முதலியோர் கீர்த்தனைகளை இயற்றினர். இம்மரபு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பரவியது.
****
கிருஸ்தவ கீர்த்தனைகளை தொகுப்பதை வாழ்நாள் பணியாகக்கொண்டு தமிழகத்திலும் இலங்கையிலும் அலைந்து தொடுத்திருக்கும் ஜாண்சன் அவர்களுக்கு என் வணக்கங்கள். கீர்த்தனைகள் இயற்றிய கவிஞர்களின் வாழ்க்கை குறித்தும் ஆய்வு செய்து இந்த நூலில் சேர்த்திருக்கிறார். உண்மையில் அவரது பணியின் மதிப்பை அனைவரும் எளிதாக உணரமுடியாது.
தேவாலயத்தில் அனைவரும் பாடும்படி அழைக்கப்படுகிறார்கள். பிரார்த்தனைகள் பாடல்களாகின்றன. மனித அகம் தங்கள் குறைகளை இறைவனிடம் சென்று சேர்ப்பது மட்டுமல்ல, இசை வழியாக இறைவனை அணுக்கமாக்கிக்கொள்கின்றன. இரண்டற கலந்து விடுகின்றன. ஜெபப்பாடல்கள் வாய்விட்டுப்பாடி முடிந்து எழும் முகங்களில் இருக்கும் தெளிவு, பெருந்துயரொன்றை அழுது கரைத்தபின் அடையும் ஆசுவாசத்திற்கு ஒப்பானது.
![]() |
| யோ. ஞான சந்திர ஜாண்சன் |
தேவாலயத்தில் திருமுழுக்கு என்றொரு சடங்கு உண்டு, அந்த சடங்கின் வாயிலாக நீங்கள் கிறிஸ்தவத்தை ஏற்று திருச்சபையின் அங்கமாகிறீர்கள். தொன்மையான இந்த முழுக்காட்டுதல் சடங்கு ஒருவரை அரசனாக அறிவிக்கும்போதும் நடக்கிறது. யோர்தான் நதியில் புனித யோவான் யேசுபிரானுக்கு நீரால் திருமுழுக்கு அளித்தார். மனிதகுமாரன் தன் சீடர்கள் தூய ஆவியால் முழுக்கு பெற்றார்கள், இவையெல்லாம் நம்பிக்கைகள். ஆனால் தேவாலயத்தின் உள்ளே வரும் ஒவ்வொருவரும் இசையால் முழுக்குப்பெறுகிறார்கள், தீமைகள் களைந்து தங்கள் அகத்தூய்மையை மீட்டுக்கொள்கிறார்கள். இசை உள்ளேயும் வெளியேயும் உங்களை தூய்மையாக்குகிறது, ஆண்டவருக்கு அருகே அழைத்துச்செல்கிறது.
ஹெலன்
யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki
![]() |
| ஹெலன் முத்து குமாரன் |

_-_WGA07641.jpg)

