மோனியர் வில்லியம்ஸ் |
இந்து ஆலயங்களில் எண்ணற்ற தெய்வங்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. பெரும்பாலான இந்துக்கள் புறவய குறியீடுகள் (தெய்வ சிலைகளும், அவற்றிலுள்ள குறியீடுகளும்) இல்லாமல் மதக் கருத்துக்களை புரிந்துகொள்ளக்கூடியவர்கள் அல்ல. எனினும் ஒரு இந்து அந்த குறியீடுகளில் வெளிப்படுவதும், அனைத்திலும் சாரமாக இருப்பதும் ஒன்றே, ஒரு பிரபஞ்ச ஆன்மாவே என்ற தத்துவ பின்புலத்தை பல தொன்மக்கதைகள் வழியாக சென்றடைகிறான். இந்த ஒருமை வேதத்தில் பல்வேறு கிளைகளாக பிரிந்து வளர்கிறது. எனினும் மிகச்சில பாடல்களில் மட்டுமே ’எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் ஒன்று’ என்ற கருத்து வேதங்களில் வருகிறது. அதுவும் எளிமையாக, தெளிவில்லாமலும் வரையறுக்கப்படாமலுமே காணப்படுகிறது. ஆனால் இது படிப்படியாக வளர்ச்சியடைந்து மனுவின் காலத்தில் தெளிவான வரையறையுடன் இருப்பதை காணலாம். மனுவின் நூலின் கடைசி பாடல்கள் இவ்வாறு சொல்கின்றன:
சிலர் வைவஸ்வத மனு என்கின்றனர்,
வேறுசிலரோ இந்திரன் என்றும்,
சிலர் பிராணன் என்றும் சொல்கின்றனர்.
மேலும் சிலர் அதை நித்ய பிரம்மம் என்கிறனர்.
அது எல்லாவற்றிலும் வியாபித்துள்ளது.
அனைத்து ஆன்மாக்களிலும் உள்ள
அதை
தன் ஆன்மாவில் உணரும் ஒருவன்,
ஒருமையை அடைந்து பிரம்மமாகிறான்.”
இயற்கை ஆற்றல்கள் தனித்தனி தெய்வங்களாக ஆகும் போது மழையையும் காலையில் நீர்த்திவலைகளையும் வழங்கும் தெய்வம் அதிக விருப்பத்திற்குரிய வழிபாட்டு தெய்வமாகிறது. ஆகவே இந்திரன் முதன்மை வழிபாட்டு தெய்வமாக ஆகிறான். வேதத்திலுள்ள பல பாடல்கள் இந்திரனை குறிப்பவை. (ரோமின் ஜுப்பிடர் ப்ளூவியஸ்-க்கு (Jupiter pluvius) இணையானவன்.)
சரி, அனலின் உதவி இல்லாமல் மழைப் பொழிவு நிகழ்ந்துவிடுமா? ஒரு இயற்கை சக்தி தன் ஆற்றலால் இந்தியர்களின் மனதை பெருவியப்பில் (awe) ஆழ்த்தி அவர்களை ஆட்கொண்டு தெய்வத்தன்மை ஏற்றச்செய்தது என்றால் அது ‘நெருப்பு’. பல வேத கடவுள்கள் இருந்தாலும் வேள்வியில் முக்கிய இடம் வகிப்பது அக்னியே (லத்தினில் க்னிஸ், Ignis). சூரியன் (கிரேக்கத்தில் க்னிஸ், ηλιος) கூட முதலில் அனலின் ஊற்று என்றே வழிபடப்பட்டது, நெருப்பின் மற்றொரு வடிவம் என கொள்ளப்பட்டது. வேள்வியில் இடம் வகிக்கும் மற்ற தெய்வங்கள் உஷஸ், அஸ்வினி தேவர்கள், யமன். உதயத்தின் பெண் தெய்வம் உஷஸ் (கிரேக்கத்தில் உயுஸ், ηως). இவள் விண்ணின் மகள் எனப்பட்டாள், இயல்பாகவே சூரியனுடன் தொடர்புபடுத்தப்பட்டாள். அஸ்வினி தேவர்கள் இருவரும் விடியலுக்கு முன் தங்க ரதத்தில் வருபவர்கள். என்றும் இளமையானவர்கள், அழகியவர்கள். புராணங்களில் உஷஸுடன் தொடர்புபடுத்தப்படுபவர்கள். தஸ்ரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர் - தெய்வீக மருத்துவர்கள், நோய்களை அழிப்பவர்கள். நாஸத்யர்கள் எனவும் சொல்லப்படுகின்றனர் - ’என்றும் பொய்க்காதவர்கள்’. இவர்கள் இரவில் இருந்து பகல் பிறக்கும் போது வரும் இரு ஒளிகதிர்கள்.
பிற்காலத்தில் பிரபலமடைந்த மும்மூர்த்திகள் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) மந்திரங்களில் வேதக்கடவுள்களில் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்பதை நாம் காணலாம். பிற்கால இந்து மதத்தின் முக்கிய அம்சமாகிய மறுபிறப்பு பற்றி வேதத்தின் மந்திர பகுதியில் குறிப்பில்லை. வர்ணம் பற்றியும் குறிப்பில்லை, இறுதியிலுள்ள புருஷ சூக்தம் தவிர.
மகத்தான அந்த ’ஒன்றின்’ வெளிப்பாடுகளாக வான், காற்று, நீர், நெருப்பு, சூரியன் ஆகியவை வழிபடப்பட்ட போது பூமி (நிலம்) வழிபடப்படவில்லையா என கேட்கலாம். பூமி பிருத்வி தேவியாக வழிபடப்பட்டது. விரிந்தவள் என்று பொருள். அவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னை. தயுஸின் மனைவியாக கருதப்பட்டாள். தயுஸும் பூமியும் இணைந்தது மிக இயல்பாக தோன்றிய கருத்தாகவே இருக்க வேண்டும். பல தெய்வங்கள் தயுஸ்-பூமி இணையில் இருந்து வந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். இருந்தாலும் வேத பாடல்களில் அரிதாகவே பிருத்வி குறிப்பிடப்படுகிறாள். தெய்வ வழிபாடுகள் மனிதர்கள் தங்கள் தேவைக்காக செய்துகொள்பவையாக ஆகியது. நீர், நெருப்பு, காற்று போன்ற சக்திகளின் நிலையின்மைகளை மனிதன் உடனடியாக தணிக்க வேண்டியிருந்தது. நிலத்திற்கு இந்த தேவை ஏற்ப்படவில்லை. மனிதர்கள் நிலத்தை நன்கு கையாண்டு வந்தனர். ஆகவே தெய்வங்கள் நிரையில் நிலம் தன் முக்கியத்துவத்தை இழந்தது.
ரிக் வேதத்தில் மொத்தம் 33 தெய்வங்கள் சொல்லப்படுகின்றன. பல வேதப்பாடல்களில் தெய்வ நிரைகள் முழுவதுமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதத்தில் மூன்றின் மடங்காகவே தெய்வங்கள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக மும்மூர்த்திகள்.
இப்போது வேத பாடல்கள் சிலவற்றைப் உதாரணமாக பார்க்கலாம். அதர்வவேதத்தின் 16-வது பாடலில் இருந்து துவங்கலாம். இது விண்ணின் உருவகமாகிய வருணனை துதிப்பது:
வருணன் |
வருணனின் பாடல்
உன் கோபத்தை
வேள்வித்தீயில் இடும்
அவிஸைக்கொண்டு நிகர்செய்வோம்.
நீ அறிஞன், சிறப்புள்ளவன்
துன்பத்தை நீங்கச்செய்வாய்.
எங்களில் எழுந்தருளி
தூய்மையாக்குவாய்.
குணங்களால் நாங்கள்
இயற்றும் பிழைகளை
பொருத்தருளுவாய்.
உமது கோபத்தாலும்,
நிறைவின்மையாலும்
தாபத்தாலும்
எங்களை அழித்துவிடாதீர்கள்.
களைப்படைந்த குதிரையை ஒத்த
உம்முடைய மனதை
அவிஸ்ஸால்
நிதானமடையச்செய்வோம்.
உன் அணைப்பால்
தூய்மை அடைந்து
நிறைவடைவோம்.
இந்திரன் |
இந்திரனின் பாடல்
இந்திரனின் புகழ் பாடுவோம்.
செல்வத்தை அளிக்கும் இந்திரனை
ஸோம ரஸத்தால்
போற்றுவோம்.
குதிரைகளை பூட்டுவதற்குள்
பகைவர்கள் புறம் காட்டி
ஓடிவிடுவர்.
தூய்மையான ஸோமத்தை
பருகும் இந்திரனை
மகிழ்விக்க
எரியில் மேலும்
ஸோமத்தை பிழிவோம்.
ஸோமம் இந்திரனை
வலிமையாக்கட்டும்.
அவனை ஸாம கானத்தால்
பாடுவோம்.
ரிக் வேதத்தால் பாடுவோம்.
எங்கள் பாடல்
அவனை வலிமையாக்கட்டும்.
குன்றா வலிமையுடைய இந்திரன்
எங்களுக்கு காப்பாகுக.
அக்னி |
அக்னியின் பாடல்
அக்னியை போற்றுவோம்.
தொல்கால ரிஷிகள் போற்றிய
அவனை
இன்றைய ரிஷிகள் போற்றுவர்.
அக்னியே
எங்கள் அவிஸை
தேவர்களிடம் சேர்ப்பாயாக.
அக்னியே
அங்கிரஸனே
இரவிலும்
பகலிலும்
உன்னை மனத்தால்
வணங்குகிறோம்.
நீ நன்மையை
அளிப்பவன்.
இருளை அகற்றி
உலகை துலங்கச்செய்பவன்.
நெறிகளை வழிநடத்துபவன்.
இருக்குமிடமிருந்து உலகெங்கும்
வளர்பவன்.
மகனை காக்கும்
தந்தை என
எங்களை காப்பாற்றுவாய்.
சூரியன் |
சூரியனின் பாடல்
சூரியனைக் காண
மேலேறி வாருங்கள்.
அவன் ஜாதவேதன்
உலகை முற்றறிந்தவன்.
அவன் தொடுகை
மானுடத்தை ஒளிரச்செய்யட்டும்.
பிணியைப் போக்கட்டும்.
அவன் புவி மட்டும் அன்றி அண்டத்தை
ஒளிரச்செய்பவன்.
உன் கதிர்முகம்
எங்களை தூய்மையாக்கட்டும்.
தேவர்களிடமிருந்து
மானுடத்தை காக்க
நீயொருவனே
புவி இறங்கி வருகிறாய்.
ஏழு புரவிகளை ஊர்த்தியாக்கி
விண்ணில் வலம் வருகிறாய்.
விண்ணிலிருந்துகொண்டு
கங்குலை
ஒளியை
உண்டுபண்ணுகிறாய்.
என் பகையை
வெல்லும் ஆற்றல்
என்னிடத்தில் இல்லை
உன் ஏழு புரவிகளை செலுத்தி
என் பகை அழித்து
விண்ணில் எழுவாயாக.
காயத்ரி மந்திரம்
வரந்தருபவனாகிய சூரியனே
இருளை அகற்றுக!
உன் ஒளியால்
என் புலன்களை நிரப்புக!
மகத்தான சிந்தனைகள்
என்னில் எழுவதாக!
காயத்ரி |
உஷையின் பாடல்
கீழ்திசை வானில் தன்
கொடியை உயர்த்துகிறாள்.
வீரர்கள் தன் படைக்களங்களை கூர்
தீட்டி ஒளிரவைப்பது போல்
வைகறை வானை ஒளிர்விக்கிறாள்.
உஷை
ஆயர்
செந்நிற ஆநிரைகளை நடத்தி
வருவது போல்
விண்ணில் பகலவனின் செந்நிற
ஒளியை நிறைக்கிறாள்.
உஷையே
உன்னால் இருட்டின்
எல்லையைக் கடந்தோம்.
உஷையே
உன் அளியாள்
புகழும், கொடிவழியும்
ஆட்படைகளும், போர் பரிகளும்
செல்வவளமும்
அடைவோமாக.
உணவை அளிப்பவளான நீ
வேள்வியில்
போற்றப்படுவாய்.
தேவி
மீண்டும்
மீண்டும்
பிறப்பவளும்
ஒரே வடிவத்தை
உடையவளுமான
உன்னை வணங்குகிறோம்.
உஷையே
ஆற்றளுடையவளே
உன் செந்நிற குதிரைகளை இணைத்துக்கொண்டு
செல்வங்களை ஏந்தி
விண்ணில் எழுந்தருளுவாய்.
யமன் |
யமனின் பாடல்
மானுடத்தை
ஒன்றினைப்பவனும்
தூயவர்களை
புவியில் செலுத்துபவனும்
அறத்தை
புலப்படுத்துபவனுமான
உன்னை
வேள்வியின் அவிஸ்ஸால்
போற்றுகிறோம்.
தலைவனே
எங்களை முற்றும்
அறிந்தவனே
அங்கிரஸர்களில் ஒருவான
நீ
வேள்வியில்
எழுந்தருளுவாய்.
கவிஞர்களால்
பாடப்பட்ட
நுண்சொற்கள்
உண்ணை இங்கு
ஏந்தி வருக.
அரசே அவிஸ்ஸானது
உன்னை நிறைவடையச்செய்க.
இன்புறுத்துக.
சிருஷ்டி கீதம்
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை
ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?
அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை
இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!
தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது
அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!
ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன
ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக யாரறிவார்?
அதன் மூலகாரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?
அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!
புருஷ சூக்தம்
ஆயிரம் விழிகளும்,
கால்களும் கொண்டவன்.
அவனின்றி எப்பொருளுமில்லை
இங்குயிருப்பவையும்,
வரவிருப்பவையும்
புருஷனே.
அழிவற்ற பெருநிலை புருஷன்.
அவன் ஹவிஸால் தன்னை
பெருக்குகிறான்.
அவன் பெருமையோ அளப்பறியது
தன் பெருமையை தானே
மீறிச்செல்வது அவன் பெருமை.
புருஷனே
நான்கின் ஒரு பகுதி
உயிர்களாக
நிறைத்துள்ளான்.
மீதமுள்ளவை அழிவற்ற
ஒளியால் அமைந்தவை.
நான்கில்
ஒரு பங்கே உயிர் குலமாக திகழ்கிறது.
புருஷனே உயிரற்ற பொருட்களாகவும்
உயிர்களாகவும் திகழ்கிறான்.
அவை பல வடிவங்கள் கொண்டன
அவற்றிலிருந்து முடிவிலித் தோன்றியது.
அதிலிருந்து புருஷன் பிறந்தான்.
பிறந்தவுடன் புலன்களை அறிந்தான்
மண்ணுலகை உண்டாக்கினான்.
உடல்களை உருவாக்கினான்.
தேவர்கள்
புருஷனையே அவியாக்கி வேள்வி செய்தனர்
வசந்தம் அதன் நெய்
கோடை அதன் விறகு
குளிர்காலம் அதன் அன்னம்
அவர்கள் புருஷனை வேள்வி பசுவாக
நீர் தெளித்து
பலியிட்டனர்
மெய்யுணர்வோரும் தவத்தோருமான
தேவர்கள்
அந்த அவிஸ்ஸைக் கொண்டு
வேள்வி செய்தனர்
பலியிப்பட்ட அந்த வேள்வியிலிருந்து
நெய் கலந்த
அன்னம் தோன்றியது
அவன் மூச்சால் காற்றுயுரும்,
வளர்ப்பு உயிரும் தோன்றின.
அனைத்தையும் எரிந்த
அந்த வேள்வியிலிருந்து
ரிக் வேதமும்
சாம வேதமும் தோன்றின
யஜுர் தோன்றின.
அந்த வேள்வியிலிருந்து குதிரைகளும்
இரு வரிசை பற்களுள்ள பல விலங்குகளும் பிறந்தன
அந்த வேள்வியிலிருந்து ஆடுகள் பிறந்தன
அவர்கள் புருஷனை பிளந்து பலியிட
எவ்வாறு அறிந்துகொண்டனர்?
முகம் எது? கை எது?
தொடை எது? கால் எது?
வாயிலிருந்து பிராம்மணன்
தோலிலிருந்து ஷத்ரியன்
தொடைகளிலிருந்து வைசியன்
பாதங்களில் சூத்ரன் தோன்றினான்.
புருஷனின்
உள்ளத்திலிருந்து சந்திரன் பிறந்தான்
விழிகளில் கதிரவன்
வாயிலிருந்து இந்திரனும்
மூச்சில் பிறந்தது காற்று
அவன் கொப்புள் சுழியிலிருந்து
விண்வெளி உதித்தது
தலையிலிருந்து வானின் ஒளி
கால்களிலிருந்து பூமி
செவியிலிருந்து திசைகள்
அவ்வாறே உலகங்கள்
அனைத்தும் உருவெடுத்தன.
பரந்த வானையும்
உயர்ந்த விண்ணையும்
தாழ்ந்த நிலங்களையும்
தழுவி
அணைத்துக்கொள்கிறாள்.
அவள் வருகையால்
மரத்தில் வாழும் பறவைகள் போல்
இல்லங்களுக்கு நாங்கள்
மீள்கிறோம்.
தேவி ஊர்மியே
எங்கள் பாதையில்
ஒநாயும்
கள்வனும்
அணுகாது
காப்பாயாக.
பசுக்களை
தொழுவங்களில் சேர்ப்பது போல்
புகழ் பாடல்களை
உன்னிடம் சேர்ப்பிக்கிறோம்.
ஒளியின் மகளே
என்னுடைய அவிஸ்ஸை
ஏற்றுக்கொள்ளவும்.
இராத்ரி தேவி
சகோதரி
உஷையை
தன் இடத்தில்
நிறுத்திவிட்டு
விலகுகிறாள்.
உஷையே
தேவியின்
கருணையை
எங்களிடம் அருள்வாயாக.
சிருஷ்டி கீதம், காயத்ரி மந்திரம் - தமிழில் எழுத்தாளர் ஜெயமோகன்
மற்ற வேத பாடல்கள் - அனங்கன்
மேலும் வாசிக்க
சர் மோனியர் மோனியர்-வில்லியம்ஸ் (1819-1899) சம்ஸ்கிருந்த அறிஞர், இந்தியவியலாளர். வேதம், சம்ஸ்க்ருதம், இந்திய தத்துவம் ஆகியவற்றை உலகறிய செய்த முன்னோடிகளில் ஒருவர். சமஸ்கிருத-ஆங்கில சொல் அகராதியை முப்பது ஆண்டுகள் உழைத்து உருவாக்கியவர். இவர் நவம்பர் 12, 1819-ல் மும்பையில் பிரிட்டிஸ் கர்னல் மோனியர் வில்லியம்ஸுக்கு பிறந்தார். 1822-ல் கல்வி கற்க இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டார். 1860-ல் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சமஸ்கிருந்த பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் Indian wisdom, Hinduism, Brahmanism and Hinduism, Religious Thought and Life in India, Modern India and the Indians போன்ற நூல்களை எழுதியுள்ளார். காளிதசரின் நாடகங்கள் விக்ரமூர்வசி, சாகுந்தலம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.