Tuesday, 11 August 2026

தமிழ் இலக்கியமும் தேவாலய இசையும் - யோ. ஞான சந்திர ஜாண்சன் நேர்காணல்

யோ. ஞான சந்திர ஜாண்சன்

யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ் ஆய்வாளர். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவர். தமிழ் கிறிஸ்தவ காப்பியங்கள், கிறிஸ்தவ சிற்றிலக்கியங்கள், கிறிஸ்தவ கீர்த்தனைகள் இவற்றை தொகுத்துள்ளார். அச்சேறாத படைப்புகளை பதிப்பித்தல், மீள்பதிப்பு, தொகுப்புப்பணிகள், மொழிபெயர்ப்பு, உரை என்று பல்வேறு தளங்களில் முப்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வேதநாயகம் சாஸ்திரிகள், கால்டுவெல் போன்ற இறைத்தொண்டர்களது வாழ்க்கை வரலாறு குறித்தும் ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். 

யோ. ஞான சந்திர ஜாண்சன் குமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர். சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தந்தை யோவான், தாயார் பரமாயி, மனைவி ஷீபா நேசகுமாரி பள்ளி ஆசிரியை, மகள் கீர்த்தனா கேலப், மகன் இம்மானுவேல் ஜாண்சன். 

யோ. ஞான சந்திர ஜாண்சன் - Tamil Wiki

யோ. ஞான சந்திர ஜாண்சன் தன் மனைவு ஷீபா நேசகுமாரியுடன்

தமிழ் கிறித்தவ இலக்கியத்தின் தொடக்க காலம் பற்றி கூறுங்கள்?

தமிழ் இலக்கிய வரலாற்றில் கிறித்தவத் தமிழிலக்கியம் தனித்துவம் பெற்றது, நெடிய வரலாறு கொண்டது. கிறித்தவ இலக்கியங்களுக்கான முதன்மையான மூலம் ‘விவிலியம்’ தான். ஒரு ஆசிரியர் விவிலியத்தில் நன்கு தேர்ச்சி பெறாமல் கிறித்தவ இலக்கியத்தை படைக்க முடியாது. சீர்திருத்தச் சபையின் முதல் இறைத்தொண்டரான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பர்த்தலோமேயு சீகன்பால்கு (1683-1719) தரங்கம்பாடிக்கு 1706 ஆம் ஆண்டு வந்தடைந்தார். தரங்கம்பாடியில் அவர் கட்டிய ஆலயத்தில் தமிழில் ஆராதனை நடத்தப்பட்டது. ஆனால் மக்கள் கைகளில் விவிலியம் மற்றும் பாடல் புத்தகம் இல்லாதமையைக் கண்டு முதலில் விவிலியத்திலுள்ள புதிய ஏற்பாட்டைத் தமிழில் 1708 இல் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1711 மார்ச் 21 ஆம் நாளில் புதிய ஏற்பாட்டிலுள்ள 27 நூல்களையும் மொழிபெயர்த்து முடித்தார். விவிலியத்தை அச்சிடுவதற்கு இங்கிலாந்து நாட்டினர் அச்சு இயந்திரம் அனுப்பி உதவினர். இதனால் 1714இல் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தல நடபடிகளும் நூலாக வெளிவந்தன. எஞ்சிய நூல்கள் 1715 இல் வெளிவந்தன. புதிய ஏற்பாடு முழுவதும் நூலாக வெளிவந்த பின்பு, பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினார். பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரை அவரால் மொழிபெயர்க்க முடிந்தது. தொடர்ந்து தமிழகம் வந்த இறைத்தொண்டர்கள் விவிலியத்தின் மொழிபெயர்ப்பை செம்மைப் படுத்தினர்.

வீரமாமுனிவரை முதன்மை கிறித்தவ இலக்கிய ஆசிரியராக கருதினாலும், அதற்கு முன்பாகவே ‘அண்டிரிக் அடிகளார்’ (ஹென்ரிக் ஹென்ரிக்கஸ்) என்பவர் மிக முக்கியமானவராக இருந்துள்ளார். தமிழில் கிறிஸ்தவ நூல்கள் படைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர். தம்பிரான் வணக்கம் (1578), கிரீசித்தியானி வணக்கம் (1579), கொம்பசியோநாயிரு (1580), அடியார் வரலாறு (1586) என்னும் நான்கு நூல்களை எழுதியுள்ளார். இவை கொச்சி, கொல்லம், புன்னைக்காயலில் அமைக்கப்பட்டிருந்த அச்சகங்களில் அச்சிடப்பட்டது. 

அண்டிரிக் அடிகளாரைத் தொடர்ந்து, தத்துவப் போதகர் என்று அழைக்கப்பட்ட ராபர்ட் டி நொபிலி(1577-1656) 1605இல் கோவா வந்தடைந்தார். இவர் தமிழகம் வந்து தமிழைக் கற்று, பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய சுமார் 48 நூல்களுள் ஞானோபதேசம், ஆத்ம நிருணயம், அஞ்ஞான நிவாரணம், திவ்விய மந்திரிகை, தத்துவக் கண்ணாடி, ஞான சஞ்சீவி, இயேசுவின் சரிதம், சிலுவையின் விசேச சல்லாபம், தவக்காலப் பிரசங்கம், வெள்ளிக்கிழமை பிரசங்கம், புனர்ஜென்ம ஆட்சேபம் என்பன குறிப்பிடத்தக்கன. 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புன்னைக்காயலைச் சேர்ந்த புலவர் அந்தோனி என்பவர் ‘சந்தந்தோனியார் அம்மானை’ (புனித பதுவை அந்தோனியார் அம்மானை) என்னும் நூலை எழுதினார். அந்நூலில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றாலும் அது 1586 க்கும் 1600 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது என்று தெரிகிறது. இதுவே கிறித்தவப் படைப்பிலக்கியத்தில் வெளிவந்த முதல் நூலாகும். இந்நூல் முதல் பதிப்பாக 1892 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்டது. அடுத்து ‘பன்னிரு புனிதர் காதை’ என்ற காப்பியம் 1603 ஆம் ஆண்டு இயற்றப்பட்டிருக்கிறது. இக்காப்பியத்தை கருவைநகர் கவிராயன் சிதம்பரநாதன் என்பவர் எழுதியுள்ளார். நமக்கு கிடைத்துள்ள இந்த இரண்டு நூல்களையும் வைத்துப்பார்க்கும் போது 15ஆம் நூற்றாண்டிலேயே கிறித்தவ இலக்கியம் படைக்கப்பட்டு வந்திருப்பதை காண முடிகிறது. வீரமாமுனிவர் இதற்கு 125 வருடங்களுக்கு பின்னால்தான் தமிழ் கற்று இலக்கியங்கள் படைக்க துவங்குகிறார். 

யோ. ஞான சந்திர ஜாண்சனின் மகள் கீர்த்தனா கேலப் மற்றும் அவரின் குடும்பம்

இப்போது நீங்கள் சொல்லிய இலக்கிய படைப்புகள் பொதுவாக இயங்கி வந்த தமிழ் இலக்கிய வகைகளிலிருந்து எந்த முறையிலாவது வேறுபட்டிருக்கிறதா?

தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளை அடிப்படையாக்கியே இந்த நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இலக்கியங்களை எழுதுவதற்கு அதற்கு முன்னோடியான இலக்கியங்களை படித்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கும் இல்லையா? சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை வாசித்தவர்கள் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் கிறிஸ்தவ இலக்கியங்களையும் இயற்றியிருக்கிறார்கள். 

தமிழ் காப்பிய மரபைப் பின்பற்றி எழுதினாலும் சிலர் விதிவிலக்காக காப்பிய எளிமைக்காக இயற்கை வருணனை, நாடு, நகர் வர்ணனைகள், உவமைகள், அணிகள், கிளைக்கதைகள் போன்றவற்றைக் கையாளவில்லை. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் இன்பத்திற்கு பெரிதாக இடம் அளிக்கவில்லை. சிற்றின்பத்தை விட்டு பேரின்பத்தை எழுதினார்கள். அந்த வகையில் பொது மரபிலிருந்து தங்களுக்கான தனி மரபை உண்டாக்கிக்கொண்டார்கள். 

கிறித்தவ இலக்கியம் படைத்தவர்களுக்கு விவிலியத்தை மையமாக வைத்து எழுத வேண்டும் என்ற நோக்கம் இருந்ததால் அதற்கு வெளியில் அவர்களுடைய கவனம் பெரிதாக செல்லவில்லை. மோசேயின் கதையை எடுத்துக்கொண்டால் அதை சொல்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இலக்கியம் இயற்றியிருக்கிறர்கள். எழுதும் படைப்பாளியின் ரசனைக்கேற்ப, புலமைக்கேற்ப சிலர் அணிகளுக்கும், உவமைகளுக்கும், பழமொழிகளுக்கும் தங்கள் படைப்புகளில் இடம் அளித்துள்ளார்கள். சிலரிடம் திருக்குறள் மற்றும் பிற நெறிநூல்களின் தாக்கமும் தெரிகிறது. எச்.ஏ. கிருஷ்ண பிள்ளையின் இரட்சணிய யாத்திரிக காப்பியத்தில் கம்ப ராமாயணத்தின் தாக்கம் மிக அதிகம். வைணவராக இருந்து கிறிஸ்தவத்திற்குள் வந்ததால் அவருக்கு கம்பராமாயணத்தில் நல்ல புரிதல் இருந்தது. அவருடைய காப்பியத்தில் கம்பராமாயண படலங்களின் தலைப்பை அப்படியே சில இடங்களில் பயன்படுத்திருப்பார். சிலருக்கு இலக்கண நயமும் அழகும் கொண்டு வர வேண்டும், சிலருக்கு அவை தேவை என்று தோன்றவில்லை அவரவர் எண்ணப்படி தங்கள் படைப்புகளை இயற்றியுள்ளனர்.

கிறித்தவத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் பற்றி சொல்லுங்கள்.

சீகன் பால்கு, அண்டிரிக் அடிகளார், தத்துவப் போதகர் இவர்கள் மூவரைத்தொடர்ந்து சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த சீகன்பால்குவும் (1683-1719), இயேசு சபையைச் சேர்ந்த வீரமாமுனிவரும் (1680-1747) தமிழகம் வந்து கிறித்தவ இலக்கியச் சேவை செய்தனர். 1706இல் தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு 14 நூல்களை எழுதியுள்ளார். இவர் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கிறித்தவ இலக்கியங்கள் வெளிவர சீகன்பால்கு மொழிபெயர்த்த விவிலியம் மிகவும் உதவியாக இருந்தது. இவர் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழியிலிருந்த வழிபாட்டுப் பாடல்களைத் தெரிந்தெடுத்து, தமிழில் மொழிபெயர்த்து 1713இல் வெளியிட்டார். இவை ஞானப்பாடல்கள் என வழங்கப்படுகின்றன. வீரமாமுனிவர் 1711இல் மதுரை வந்து, தமிழ் கற்று, தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கலமாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரி அம்மானை, கருணாம்பரப் பதிகம், சதுரகராதி, தொன்னூல் விளக்கம் போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.

வீரமாமுனிவருக்கு பின் வந்தவர்களில் 1774ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் பிறந்த வேதநாயக சாஸ்திரியார் முக்கியமானவர். சீர்திருத்தக் கிறித்தவப் படைப்பாளர்களுள் முன்னோடியாக விளங்கும் சாஸ்திரியார் விவிலியத்தின் அடிப்படையில் பண்பாட்டுத் தெளிவுடனும், பிற சமய அறிவுடனும் கவிச்சுவை குன்றாமல் ஏறத்தாழ 131 நூல்களைப் படைத்துள்ளார். ஆயினும் இன்று காணக்கிடைக்கின்ற அவரது நூல்களின் எண்ணிக்கை சுமார் 36 மட்டுமை. தமது கீர்த்தனைகள் மூலமாகவே தமிழ்க் கிறித்தவர்களிடம் பெரிதும் அறியப்பட்டவர். சாஸ்திரியார் நாட்டுப்புறப் பாடல் நடையைத் தழுவியும் கீர்த்தனைகளை எழுதியுள்ளார். வேதநாயக சாஸ்திரியாரோடு மிகவும் நெருங்கிய நட்புறவு கொண்டவர் டாக்டர் ஜி.யு. போப். சாஸ்திரியார் தன்னிடம் வந்த பல அயல்நாட்டு இறைத்தொண்டர்களுக்கும் நம்நாட்டவர்க்கும் கீர்த்தனைகள் பாடும் முறைமையைக் கற்றுக் கொடுத்தார். 

யோ. ஞான சந்திர ஜாண்சன் அவர்களின் தந்தை யோவான் மற்றும் தாயார் பரமாயி

நீங்கள் கூறியதைக்கொண்டு கிறிஸ்தவ இலக்கியத்தின் தோற்றுவாயை புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு புதிதாக வளர்ந்த கிறிஸ்தவ இலக்கியம் எவ்வாறு வாசிக்கப்பட்டது? 

நாம் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என்றுமே இந்த தமிழ் இலக்கியங்களை மக்கள் நேரடியாக படித்து எதிர்வினை ஆற்றியதில்லை. எப்போதுமே செய்யுள் இலக்கியங்களை வாசிப்பவர்கள் சிறிய குழுவாக தான் இருந்திருப்பார்கள். கிறித்தவ சபைகளுக்கு விவிலியமும் கீர்த்தனைகளுமே போதுமானதாக இருக்கும். ஆகவே அவர்கள் கிறித்தவ இலக்கியங்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

அப்போது யார் இந்த இலக்கியங்ளை வாசித்தவர்கள்? புலவர் குழுக்களுள் இந்த இலக்கியங்கள் வாசிக்கப்பட்டு அவர்களுக்குள் கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வார்கள். கிறித்தவ இலக்கியங்களை இயற்றியவர்களுக்கு சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சிற்றிலக்கியங்கள் போன்ற இலக்கியங்களில் வாசிப்பும், ஆர்வமும் இருந்ததன் வாயிலாக, அவற்றை போன்று கிறித்தவ இலக்கியங்களைப் படைக்கவும் ஆர்வம் இருந்தது. அவர்கள் இலக்கிய அனுபவம், இறை அனுபவம், விவிலியப் புலமை போன்றவற்றின் அடிப்படையில் இந்த இலக்கியங்களைப் படைத்தார்கள். அதில் சில இலக்கியங்கள் பரவலாக வாசிக்கப்படுகின்றன. சில படைப்புகள் வெளிவந்த பின் அப்படியே வாசிக்கப்படாமல் தேங்கி விடுகின்றன. உதாரணமாக எச்.ஏ. கிருஷ்ண பிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பியம் நல்ல கவனத்தை பெற்றது. ஆனால் அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த சுவீகரனார் இயற்றிய ‘முத்தி வழி அம்மானை’ அத்தனைக் கவனம் பெறவில்லை. இவ்விரண்டு நூல்களும் ஜான் பனியனின் ‘பில்கிரிம்ஸ் புராகிரஸ்’ என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டவை.

பல படைப்புகள் முதல் பதிப்போடு கவனம் பெறாமல் வாசிக்கப்படாமல் இருக்கிறது. பேராலயங்கள் கிறித்தவத்தை வளர்கின்றன. ஆனால் அவர்கள் ஆன்மிகக் கிறித்தவத்துடன் மட்டுமே நின்று விடுகிறார்கள். பைபிள் என்று சொல்லப்படுகின்ற விவிலியம் மட்டுமே அவர்களுக்கு போதுமானது. ஆனால் விவிலியத்தை மிக சிறப்பாக எடுத்துரைக்கின்ற கிறித்தவ இலக்கியங்கள் பற்றிய அறிதலும் ஆதரவும் மிக்குறைவாகவே உள்ளது. அந்த நாட்களிலிருந்து இன்று வரை அவர்களுடைய கவனம் இந்த இலக்கியங்கள் மீது மிகக்குறைவாகவே விழுந்துள்ளது. அவர்கள் ஆதரித்திருந்தால் மேலும் கிறித்தவ இலக்கியங்களுக்கு அதிகக் கவனமும், வாசிப்பும், ஆதரவும் கிடைத்திருக்கலாம். பல பழைய இலக்கியங்கள் புத்துயிர் பெற்றிருக்கும். நான் பட்டியலிட்ட 55 காப்பியங்களில் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு காப்பியம் ஆகிய மூன்று மட்டுமே பரவலாக அறியப்படிருக்கிறது. இவையல்லாமல் பல காப்பியங்கள் உள்ளன. 

தமிழில் முதல் கிறித்தவக் காப்பியமான பன்னிரு புனிதர் காதை பற்றி சொல்லுங்கள்? 

கருவைநகர் கவிராயன் சிதம்பரநாதன் என்பவரால் 1603ஆம் ஆண்டு இயற்றப்பட்டது “பன்னிரு புனிதர் காதை” இதுவே தமிழில் இயற்றப்பட்ட முதல் கிறித்தவக் காப்பியம். கருங்குளம் அல்லது கரிவலம்வந்த நல்லூர் என்னும் ஊரே இக்கருவை நகர் என்பது சிலரின் ஊகம். இக்காப்பியம் இயேசு கிறிஸ்துவின் இறையடியார்கள் பன்னிருவரைப் பற்றிப் பாடப்பெற்றது. இவர்களுள் பதின்மர் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் (பேதுரு என்னப்பட்ட சீமோன், அந்திரேயா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, யோவான், தோமா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, கானானியனாகிய சீமோன்); மற்ற இருவர் அப்போஸ்தலராகிய பவுலடியார் மற்றும் தூய அலெசு ஆகியோர். பன்னிருவரின் வரலாறு இதில் பாடப்பெற்றிருந்தாலும், பாட்டுடைத் தலைவன் ஒருவரே. பன்னிருவரின் ஆற்றலும், அவர்கள் வாழ்வில் நடந்த மீமானுடச் செயல்களும் இயேசு கிறிஸ்துவின் அருளாலும் ஆற்றலாலும் மட்டுமே நிகழ்ந்தவை என்பதால், இயேசு கிறிஸ்து ஒருவரே இக்காப்பியத்தின் பாட்டுடைத் தலைவராக உள்ளார். வத்திகான் திருத்தூதர் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஓலைச்சுவடி வடிவிலிருக்கும் இந்நூல், அண்மையில் கண்டறியப்பட்டதன் மூலம், இக்காப்பியம் குறித்து அறியமுடிந்தது.

திருமந்திர நகர் என வழங்கப்பெறும் தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் ஏழு கடல் துறை எனப் பெயர் பெற்ற கடற்கரைப் பட்டினங்களை ‘அதிரியன் தெக்குரிசு’ என்பார் பரதகுலத் தலைவனாக ஆட்சிபுரிந்தார். அவரின் தம்பி சந்தக்குரிசு என்பவரின் முயற்சியால் இப்பன்னிரு புனிதர் காதை என்னும் காப்பியம் இயற்றப்பட்டது.

ஏட்டுச் சுவடிகளில் எழுதப்பட்டுள்ள இந்நூல், நுண்பட (microfilm) வடிவில் படியெடுக்கப்பட்டு, வத்திக்கான் நகரில் அமைந்துள்ள ‘வத்திக்கான் திருத்தூதர் நூலகத்தில்’ (Biblioteca Apostolica Vaticana) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டுவரும் தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவனத்தின் இயக்குநர் அருள்தந்தை முனைவர் அமுதன் அடிகளார் ரோம்(Rome) நகருக்கு சென்றிருந்தபோது, அதனைப் பெற்றுக்கொண்டு வந்து, காப்பியத்தைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இக்காப்பியம் விரைவில் நூலாக வெளிவரும்.

யோ. ஞான சந்திர ஜாண்சன், மனைவி ஷீபா நேசகுமாரி, மகன் இம்மானுவேல் ஜாண்சன்

உங்களுடைய நூல் தொகையில் பரவர் புராணம் என்ற நூலின் குறிப்புள்ளது, அது மீனவர்களின் வாழ்வை சொல்கிறதா? 

பல ஆண்டுகள் இடையறாது தேடிய பிறகே, ‘பரவர் புராணம்’ என்ற காப்பியம் எனக்கு கிடைத்தது. திருசெந்தூர் பக்கம் உள்ள புலவர் ஒருவர் இயற்றியது. செல்வமுள்ளவர்கள், இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் தாங்கள் விரும்பும் நிகழ்வுகளை, வரலாறுகளை இலக்கியங்களாகப் படைக்கப் புலவர்களிடம் வேண்டுவர். இந்த முறையில் எழுதப்பட்டது பரவர் புராணம். ஆசிரியர் இக்காப்பியத்திற்கு உரையும் எழுதியுள்ளார். இக்காப்பியத்தில் வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் பெரிய கவனம் எல்லாம் அதற்கு கிடைக்கவில்லை. 

பரவர் புராணம் 1909இல் அருளப்ப முதலியாரால் இயற்றப்பட்டது. இக்காப்பியம் பரதவர் குலத்தின் வரலாற்றைக் கிறித்தவப் பின்புலத்தில் எடுத்துரைக்கிறது. இப்புராணத்தில் 807 செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன. இச்செய்யுட்களுக்கான உரையும் ஆசிரியராலே தரப்பட்டுள்ளது. இப்புராணம் ஒன்பது இலம்பகங்களாலானது. சிருட்டிக் இலம்பகம் ஆதியாகமத்திலுள்ள முதல் அதிகாரத்தை ஆதாரமாகக் கொண்டது. ஜலப்பிரளய இலம்பகத்தில் ஆதாம் ஏவாள் தொடங்கி அவர்களது வம்சம் பலுகிப் பெருகிய வரலாறும், நோவாவின் கப்பலிலிருந்து அனைவரும் வெளியே வந்தது வரையிலுள்ள செய்திகளும் இடம்பெற்றுள்ளன. எட்டாவது இலம்பகத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் இறைப்பணிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இறைவன் உலகத்தைப் படைத்ததில் இருந்து தொடங்கி, பரவர் இன மக்களின் வரலாற்றினையும் அவர்கள் கிறித்தவரான வரலாற்றையும் இக்காப்பியம் உரைக்கின்றது. இக்காப்பியம் முதல் பதிப்பிற்குப் பின்னர் இதுவரையிலும் வெளிவரவில்லை. 

உங்களுடைய பணிகளில் கீர்த்தனைகள் தொகுப்பாக்க பணி முக்கியமானது, அளவில் பெரியதும் கூட. இதை உருவாக்க வேண்டும் என்று ஏன் விரும்பினீர்கள்?.

என்னுடைய இறைத்தேடலும் இலக்கியத்தேடலும் இந்த கீர்த்தனைகள் வழியேதான் துவங்கின. சீகன்பால்கு வழிபாட்டுக்குத் தேவையான பாடல்களை ஜெர்மன், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார். அவை 1713இல் Book of Hymns Set to Malabaric Music என்னும் பாடல் தொகுப்பு நூலாக வெளிவந்தது. இவை ஞானப்பாட்டுகள் என்றும் வழங்கப்படுகின்றன. இதில் 48 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ் வழிபாட்டுப் பாடல்கள் அவற்றிற்குரிய இசைமரபுப்படி இருந்ததால் மக்களிடமும் நல்ல செல்வாக்கை பெற்றது. இப்பாடல்களே கிறித்தவக் கீர்த்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

தேவாலயத்தில் இன்று இசைக்கப்படும் பாடல்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம் ஞானப்பாடல்கள், கீர்த்தனைகள், புத்தெழுச்சிப்பாடல்கள். ஞானப்பாடல்கள் எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டது என்று முன்பே சொன்னேன், அதற்கு அடுத்த கட்டமாக தமிழ் கீர்த்தனை மரபை ஒட்டி வேதநாயகம் சாஸ்திரியாரால் துவக்கப்பட்ட கிறிஸ்தவ கீர்த்தனை மரபு. இவை இரண்டுமே அடுத்தடுத்து வந்த ஆர்வலர்களால் வளர்த்தெடுக்கப்பட்டன. இறுதியாக வருவது புத்தெழுச்சிப்பாடல்கள் என்னும் மெட்டுக்கு பாட்டு எழுதும் முறை, இதில் உற்சாகமான இசைக்கே முதலிடம் உள்ளது. எனது கவனம் ஆரம்ப கால வெளிப்பாடுகளாக அமைந்த ஞானப்பாடல்கள் மற்றும் கீர்த்தனைப்பாடல்களில் தான் குவிந்தது. முக்கியமாக கீர்த்தனைப்பாடல்கள் வளர்ந்த விதம் ஆச்சரியமானது. 

பொதுவாக கீர்த்தனைகளில் சீர்திருத்த கிருஸ்தவ சபை பங்களிப்பு அதிகம், அவர்களுக்கு இசைப்பாடல்கள் முக்கியமான ஒன்று. கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இலக்கியப்பங்களிப்பு மிகுதி, குறிப்பாக சிற்றிலக்கியங்கள். ஒப்பீட்டளவில் கத்தோலிக்கத்தில் அன்னை மரியாளுக்கும், புனிதர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆகவே அவர்களை முன்னிறுத்தி நிறைய இலக்கியப்படைப்புகள் எழுதப்பட்டன. அவர்களுடைய சபை அதை ஆதரித்தது என்று கொள்ளவேண்டும். சவேரியாருக்கு (பிரான்சிஸ் சேவியர்) இங்கு காப்பியமும் உண்டு சிற்றிலக்கியமும், நாடகமும் உண்டு. 

முதல் கட்ட தொகுப்பாக்க முயற்சிகளின் போது ஒன்றை கண்டுகொண்டேன். கீர்த்தனைகள் அவை உருவான காலகட்டத்தின் இசைமரபையும், அதற்கான மொழியையும் ஒட்டி உருவானவை. இந்த அடிப்படையான விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் கீர்த்தனைகளில் இடம்பெற்ற வடமொழிச்சொற்களுக்கு பதிலாக தூய தமிழ் சொற்களை மாற்றி விடலாம் என்று சிலர் நினைத்தார்கள். வேறு சிலர் கீர்த்தனையின் இசையமைப்பையே தங்களுக்கேற்றவாறு மாற்றியபடி இருந்தனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. நான் முறையே இசை கற்றவனில்லை, ஆனால் இளம்வயதில் நான் கேட்ட ஒரு கீர்த்தனையை புதுமை என்ற பெயரில் மெட்டை மாற்றிப்பாடுவதை கேட்டபோதுதான் எனது பணியின் முக்கியத்துவத்தை நானே புரிந்து கொண்டேன். ஒரு இலக்கிய ஆக்கம் எப்படி படைப்பாளியின் அனுமதியின்றி மாற்றப்படாதோ அதுபோல கீர்த்தனைகளை இயற்றிய ஆசிரியர் அனுமதியின்றி அதன் சொற்களை மாற்றுவதும் இசையை மாற்றுவதும் தவறு என்ற புரிதல் வரவேண்டும். 

கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகளில் பழைய தமிழ் இலக்கிய வடிவமும், புதிதாக வந்த கிறித்தவ இறையியல் பொருண்மையும் எவ்வித நெருடலுமின்றி இயல்பாக ஒன்றிணைந்தன. கிறித்தவச் சிந்தனைகளையும் வழிபாட்டு நெறிகளையும் எடுத்துச்சொல்லும் மிகப் பொருத்தமான வடிவமாகவே கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் பார்க்கப்பட்டன. நவீன மோகத்தால், மேலைக் கலாச்சார ஆதிக்கத்தால் கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் காலப்போக்கில் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டன. இதனால் கீர்த்தனைகளைப் பாடுவதில் பெரிய அளவிலான தொய்வு ஏற்பட்டது. ஏராளமான இந்தத் தமிழ்க் கீர்த்தனைகள் பயன்பாட்டிலிருந்து மறைந்தன. பல நேரங்களில் பாடலின் வரிகள் மட்டுமே மீட்டெடுக்க இயல்கிறது, அதற்கான இசை நம்மிடம் இல்லை அது தொலைந்து விடுகிறது. இந்தப்பிரச்சனை ஏன் வருகிறது என்று பார்த்தால் தேவாலயத்தில் மீண்டும் மீண்டும் ஒரு 20 பாடல்களை மட்டும் பாடப்படுவதால் தான். அங்கும் மாறுதல்கள் வேண்டும். 

எனது தரப்பிலிருந்து நான் கீர்த்தனைகளை முழுவதும் பதிவு செய்துவிட்டேன், அவற்றின் இராகம் தாளம் முதலியவற்றை முதற்பதிப்புகளின் அடிப்படையில் ஆராய்ந்து சேர்த்திருக்கிறேன் மேலாக இயன்றவரை அவற்றின் ஆசிரியர்களை பற்றிய அறிமுகத்தை எழுதியுள்ளேன். கீர்த்தனைகளை நான் ஆசிரியர்களின் பெயரிலேதான் தொகுத்துள்ளேன். இதற்கு முன்பு வெளியாகிய ஞானப்பாடல்கள் தொகுப்பை எடுத்துக்கொண்டால் அவை கிருஸ்துமஸ் பாடல்கள், சிலுவைப்பாடு பாடல்கள் என்று தருணங்கள் அடிப்படையிலும் பாவமன்னிப்பு, மன்றாட்டு, நன்றி தெரிவித்தல் என்று உட்பொருள் அடிப்படையிலும்தான் பகுக்கப்பட்டிருக்கும். ஆனால் நான் அவற்றை இயற்றிய ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களின் பெயரில் பாடல்களை பகுத்திருக்கிறேன். இந்த கிருஸ்தவ கீர்த்தனைகளை குறித்து நிறைய பேசலாம், வேதநாயகம் சாஸ்திரியாரின் கீர்த்தனைகளை தொகுக்கையில் பாடுபொருள் அடிப்படையில் அவற்றை இயேசு பிரானின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரை வரிசைப்படுத்தி பார்த்தேன், அவற்றிற்கு ஒரு காவியத்தன்மை வருகிறது. 

யோ. ஞான சந்திர ஜாண்சன்

பல கீர்த்தனை கவிஞர்கள் பெயர்களை பார்க்க அரிதாக இருந்தது. சி வை தாமோதரம்பிள்ளை, திருவிக, வீ பா க சுந்தரம் ஏன் ஆவுடையக்காள் பெயரில் கூட ஒரு கீர்த்தனை உள்ளது.

செங்கோட்டை ஆவுடையக்காள் பெயர் தமிழ் கிருஸ்தவ கீர்த்தனை ஆசிரியர் பட்டியலில் உள்ளது, நம்பகத்தன்மை மிக்க ஒன்றுதான். அந்தக்காலத்தில் சமயக்காழ்ப்புணர்வு இல்லை. எங்கள் மாவட்டத்தில் உறவினர்களே வெவ்வேறு சமயத்தினராக இருப்பார்கள், வேற்றுமை கிடையாது. இந்துக்கள் கிறிஸ்தவர் கோவிலுக்கு வருவதும் காணிக்கை வைப்பதும் சாதாரணமான நிகழ்வு. துவக்க காலத்தில் புதிய சமயக்கருத்துக்களை அறிந்துகொள்ளும் ஆர்வமும் அறிஞர்களிடையே இருந்திருக்கும். எழுத்தாளர் தாயம்மாள் அறவாணன் எங்கள் ஊர்க்காரர், அவரது அப்பா ஆறுமுகப்பெருமாள் பெரிய தமிழ்ப்பண்டிதர், சைவப்பழமும் கூட. ஆனால் சிறுமியான தாயம்மாளுக்கு அவர் தந்தை தேவாலயத்தில் நடைபெறும் பிரசங்கத்திற்கு செல்லுமாறு ஊக்குவித்ததாக என்னிடம் தாயம்மாள் கூறியிருக்கிறார். அறிவுத்தேட்டத்திற்கு சமயங்கள் தடையில்லை என்பதே புரிந்துகொள்ள வேண்டியது. போகும் வழியில் உள்ள தேவாலயத்திற்கு வெளியே நெற்றி நிறைய திருநீறு பூசிய ஒருவர் சிலநிமிடங்கள் காலணிகளை கழற்றி விட்டு இயல்பாக கைகூப்பி பிரார்த்தித்து விட்டு செல்வதை பார்க்கலாம், பிரிவினை எல்லாம் நாம் மிகைப்படுத்தி பார்ப்பதுதான்.

கிறிஸ்தவ சிற்றிலக்கிய திரட்டு வெளியிட்டுள்ளீர்கள், சிற்றிலக்கியங்களில் காணப்படும் வாய்மொழி மரபுத்தாக்கத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். அதுபோல நேரடியாகவே நாட்டார் பாடல்களில் கிறிஸ்தவத்தின் தாக்கம் உள்ளதா? 

கட்டாயம் தாக்கம் இருந்திருக்க வேண்டும். ஞானசௌந்தரி கதை, தேவசகாயம்பிள்ளை கதை இவையெல்லாம் வாய்மொழி மரபிலிருந்து வந்தவைதான், அப்படி தோன்றி இலக்கியப்பதிவு பெற்றவையாக மாறியுள்ளன. கும்மிப்பாடல்கள், ஏலேலக் கும்மி முதலிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் காலத்தில் நிகழ்த்தப்படும் கழியல் பாடல்கள், விவிலியத்தை அடிப்படையாகக்கொண்ட போட்டிக்கதைப்பாடல்கள் இவையெல்லாம் நீங்கள் கேட்பதற்கான நல்ல உதாரணங்கள். ஆனால் நான் நாட்டார் இலக்கிய புலத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை, அதுபோல நவீன புனைவிலக்கியத்தில் கிறிஸ்தவத்தின் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்யவில்லை. 

எளிய மக்களுக்கு கிறிஸ்தவ கருத்துக்களை அதிகம் கொண்டு சேர்த்தவை நாடகங்கள் தான். இலங்கை கிறிஸ்தவ இலக்கியத்திற்கு முக்கியமாக பணியாற்றியவர் ச. தம்பிமுத்துப் பிள்ளை (1857-1934), இவர் மொத்தம் 26 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் ஒன்று யோசேப்பு டிராமா, நாடகம், விலாசம், வாசாப்பு போன்று அல்லாமல் நேரடியாகவே டிராமா என்றுதான் அச்சிடப்பட்டது. அந்த அளவுக்கு இலங்கையில் நாடகங்கள் புகழ்பெற்றிருந்தன. நாடகங்களின் சுருக்கம் வாசகப் பாக்கள். வாசகப்பா என்ற சொல் வசனம் கலந்த பாட்டு எனப் பொருள்படும். ஒரே கதையை நாடகமாகவும், வாசகப்பாவாகவும் பாடும் வழக்கம் உண்டு. வாசகப்பா அல்லது வாசாப்பு என்னும் பெயரில் மூவிராயர் வாசகப்பா, அந்தோனியார் வாசகப்பா, சூசையப்பர் வாசாப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் லோறன்சுப்பிள்ளை இயற்றிய மூவிராயர் வாசகப்பாவே முதன்முதலில் எழுதப்பட்ட நாடக நூல் என்று சொல்லப்படுகிறது. 

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பகுதியில் நாட்டுக் கூத்துகள் ஆடப்பட்டு வந்தன. நாட்டுக் கூத்து முறையில் ஏராளமான நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் சில நாடகங்கள் இரண்டு இரவுகளில் நடிக்கப்பட்டு வந்தன. இந்நாடகங்களில் பல இன்னும் அச்சாக்கம் பெறவில்லை. சில மறைந்து விட்டன. நாட்டுக் கூத்து முறையில் எழுதப்பட்ட நாடகங்களில் முக்கியமானவையாக தேவசகாயம்பிள்ளை நாடகம், ஞான ரூபன் நாடகம், அகினேச கன்னி நாடகம், அர்ச். செபஸ்தியார் நாடகம், அருளப்பர் நாடகம், சந்தியாகுப்பர் நாடகம், சவேரியார் நாடகம், சூசையப்பர் நாடகம், ஞானசவுந்தரி நாடகம், தாவீதுராசன் நாடகம், மத்தேசு அப்போத்தலர் நாடகம், மூவிராசாக்கள் நாடகம், அர்ச். பிலோமினா கன்னி நாடகம், கித்தேரியாள் நாடகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அன்றைக்கு இலங்கையின் சிலப்பகுதிகளும் தமிழ்நாடும் எவ்வளவு அருகாமையில் இருந்தன என்றால் படகேறி வந்து ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும் அளவுக்கு. இன்று சூழல் மாறிவிட்டது, அதையெல்லாம் நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ஆகவே அன்று இலங்கையில் நூல்கள் தொடர்ந்து அச்சிடப்பட்டன, சேமிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் பல நூல்கள் அச்சிடப்பட்டன. யாழ் நூலக எரிப்பில் அவ்வாறு சேகரிக்கப்பட்டிருந்த பல நூல்கள் அழிந்து போயின.

இலக்கியத்தில் காட்டும் ஆர்வம் போலவே வரலாற்று ஆளுமைகள் குறித்தும் ஆவணப்படுத்தியுள்ளீர்கள்.

நான் படித்தது அரசு உயர்நிலைப் பள்ளியில். தமிழைவிட ஆங்கிலத்தைக் கண்டிப்புடன் கற்றுக் கொடுத்தனர். ஆங்கிலம் கற்றுக்கொண்ட அளவுக்கு தமிழார்வம் ஏற்படவில்லை. ஆனால் பள்ளி முடித்து கல்லூரியில் சேரும் போது எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆய்வாளர் அ. கா. பெருமாள் அவர்கள். அன்றைக்கு பெருமாள் சார் இளைஞர். பாடம் துவங்கினால் பாடப்பகுதி மட்டுமன்றி, அந்நூலிலுள்ள செய்திகளைச் சுவைபட பேசுவார். அவரால் தான் இலக்கிய ஆர்வம் வந்தது. 

அதுதவிர, யார் தங்களை எடுத்துக்கொண்ட நோக்கத்துக்காக முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டார்களோ அவர்களது வரலாற்றையே ஆவணப்படுத்தியிருக்கிறேன். ஓலைச்சிலுவை சிறுகதை படித்திருக்கிறீர்களா அதில்வரும் சாமர்வெல் பாத்திரம் எவ்வளவு அற்புதமானது. காலரா வந்து மக்கள் கொத்துக்கொத்தாக இறந்த காலம், துணிந்து சேவை செய்யும் மனதைரியத்தைதான் ஆன்மிகம் என்கிறோம். மக்கள் அவரது காலடி மண்ணை எடுத்து முடிந்து கொள்கிறார்கள், தங்களது வீட்டில் சாமி படங்களுடன் அவரது படத்தையும் வைத்து வணங்குகிறார்கள் என்ற செய்திக்கு பின்னால் உள்ளது அவரது மருத்துவசேவை தானே. வெள்ளையர்கள் நமது நாட்டின் வளங்களை சுரண்டினார்கள் என்பது சரி, அது வணிகம், அதனோடிணைந்த அரசியல். ஆனால் இங்கு இறைத்தொண்டர்கள் வந்து மருத்துவத்தையும் கல்வியையும் பொதுவாக்கினார்களே, இலக்கியம் வளர்த்தார்களே இவற்றையும் தானே பதிவுசெய்ய வேண்டும்.

கால்டுவெல் பிறப்பால் ஐரோப்பியர், அவர் இங்கு இடையன்குடி தேரிக்காட்டில் பணிசெய்தார். எங்கு தேவாலயங்கள் எழுப்பினாரோ அங்கெல்லாம் பள்ளிகளையும் ஏற்படுத்தினார். அவரது குடும்பம் பல்வேறு இழப்புகளை சந்தித்தது, மகளும் குழந்தைகளும் இறந்துபோனார்கள். அந்த சூழலிலும் தளராது உழைத்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை வெளியிட்டார். கிறிஸ்தவ கல்லூரி நிறுவனர் மில்லர் இன்னும்கூட போற்றத்தக்கவர் தனது செல்வத்தையெல்லாம் இங்குள்ளவர்கள் கல்விக்காக செலவழித்தார். தனது மாணவர்கள் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தார், முதிய மில்லர் தனது மாணவரும், கல்லூரியில் பணிசெய்தவருமாகிய பரிதிமாற்கலைஞர் நோய்வாய்ப்பட்டிருப்பதைக்கண்டு முதியவன் நான் இருக்க இளைஞன் இவன் இப்படி இருக்கலாமா என்று கடவுளிடம் மன்றாடுகிறார். பாபர் ஹ்யுமாயூனுக்கு மன்றாடியதைப்போல. இவர்களையெல்லாம் பதிவுசெய்வதும் எனது கடமைதான். 

தமிழ் கிறிஸ்தவ இலக்கியத்தால் நாம் அடைந்தது என்ன?

இலக்கியம் பொதுவானது, அதில் காலந்தோறும் என்ன மாற்றம் வருகிறதோ அது அனைவருக்கும் பொதுவானது தான். இருந்தாலும் இப்படிச்சொல்லலாம். வெள்ளையர்கள் மதப்பிரச்சாரத்திற்காக இங்கு வந்தனர். ஆனால் நமது மொழி மீது கொண்ட ஈர்ப்பால் அதற்கும் தொண்டு செய்யத்துவங்கினர். வீரமாமுனிவர் சதுரகராதி இயற்றினார், எழுத்து சீர்திருத்தம் செய்தார். தமிழ் மிக விரைவாக அச்சு இயந்திரத்தில் ஏறி உலகம் சுற்றி வந்தது, திருக்குறளும் திருவாசகமும் மொழிபெயர்க்கப்பட்டன. தேவாலய இசை வழியாக மேற்கின் இசை இங்கு அறிமுகமாகியது. சமூக சீர்திருத்த கருத்துக்கள் வேகமாக பரவின, கல்வியும் மருத்துவமும் எளியோருக்கும் கிடைத்தன. இங்கிருந்த தமிழ்ப்பண்பாடும் இலக்கியமும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டன, அதன்வழியே அவை மேலும் செறிவுற்றன. 

தற்போது என்ன ஆய்வுப்பணி மேற்கொள்கிறீர்கள்? 

எனது மாணவர் ஒருவரின் தூண்டுதலால் 'கிறிஸ்தவ உரைநடை இலக்கியம் ஐநூறு' என்னும் நூலை தொகுத்துக்கொண்டிருக்கிறேன், இதில் கிறிஸ்தவ இலக்கியத் திறனாய்வு நூல்களும் அடக்கம். இதுவரை நூறு எண்ணம் முடித்திருக்கிறேன், இன்னும் நானூறை தொகுக்க வேண்டும். வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்க வேண்டும், சீக்கிரம் முடித்து விடுவேன். இத்துடன் 'அறிவர் வில்லியம் மில்லர்' என்னும் நூலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த இரு நூல்களையும்  எழுதி முடிக்க இறைவனின் அருள் வேண்டும். 

நேர்காணல்: தாமரைக்கண்ணன், அனங்கன்