 |
| சரவண பிரபு |
சரவண பிரபு தமிழகத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள் குறித்த ஆர்வத்தால் அருகி வரும் கருவிகளை ஆவணப்படுத்தி வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட கருவிகள் குறித்து விரிவாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இவற்றை தொகுக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார். இதுவன்றி புதுவையை சுற்றியுள்ள தொல்லியல் தளங்களை ஆய்வு செய்து வருகிறார். அழியும் நிலையில் உள்ள தேர்கள், அவற்றின் சிற்பங்களை பாதுகாக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக தொல்லியல் மற்றும் பண்பாடு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கிறார்.
சரவண பிரபுவின் பெற்றோர் இராமமூர்த்தி - தேவராணி. சரவண பிரபு பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். மனைவி எழிலரசி. மகன் ஸ்ரீநிகேதன். தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார்.
 |
| இசைக்கருவிகளுடன் சரவண பிரபு |
உங்களுக்கு இசைக்கருவிகள் மீதான ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
எனது தாத்தா கிருஷ்ணன் அவர்களின் தாக்கத்தால் சிறு வயது முதல் எனக்கு வரலாறு மற்றும் பண்பாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டு. அவருடன் நிறைய பயணித்து இருக்கிறேன். எதைப் பார்த்தாலும் அவரிடம் கேள்வி கேட்பேன். கோவில், திருவிழாக்கள், சடங்குகள், வரலாறு இவற்றை பற்றி அவரிடம் துருவி துருவி நிறைய சந்தேகங்கள் கேட்பேன், அசராமல் பதில் சொல்வார். நான் பார்த்த முதல் கோவில், தேர், திருவிழாக்கள் எல்லாமே அவருடன் தான். இது எனக்கு சிறுவயது முதல் பண்பாடு சார்ந்த ஒரு அடிப்படை தேடலை ஏற்படுத்தியது.
வேலை காரணமாக ஆஸ்திரேலியாவி்ல் இருந்த போது அங்கே இருந்த அரசாங்க நூலகத்திற்கு செல்லும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அரசாங்கத்தால் வாங்கப்பட்டதும் மக்களால் நண்கொடையாக அளிக்கப்பட்டதுமான தமிழ் நூல்கள் அந்த நூலகத்தில் இருந்தன. அந்த புத்தக அடுக்குகளிலிருந்து வெ. நீலகண்டனின் ‘வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்’ என்ற நூலை சும்மா படித்துப் பார்ப்போம் என்ற மனநிலையில் வீட்டிற்கு எடுத்து சென்றேன். ஏனெனில் எனக்கு அப்போது இசைக்கருவிகள் மீதான எந்த அறிதலும் ஆர்வமும் தேடல்களும் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நூலை தற்செயலாக தான் வீட்டிற்கு கொண்டு வந்து படிக்க ஆரம்பித்தேன். அந்நூலில் ஒரு இசைக்கருவியை பற்றி எழுதியிருந்த விதம். அவற்றை எவ்வாறு தயாரிக்கிறார்கள். அதன் அமைப்பு எப்படி இருக்கும்? அதை எப்படி வாசிப்பது? எங்கே வாசிக்கப்படும்? எந்த சடங்கில் பயன்படுத்துகிறார்கள் போன்ற பல தகவல்கள் இருந்தன. அந்நூலை படிக்கப் படிக்க ஒருவிதமான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இந்த இடத்தில் இன்னும் ஒரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். எனக்கு எந்த வித இசைப்பின்னணியும் இல்லை, இசை கற்றதும் இல்லை. ஆனால் அந்த நூல் என்னை ஈர்த்து இசைக்கருவிகள் மீதான ஆர்வத்தையும் தேடலையும் தொடங்கத் தூண்டியது.
வெ. நீலகண்டனின் புத்தகத்தில் முப்பது இசைக்கருவிகள் பற்றி விபரமாக கூறப்பட்டிருந்தது. குறிப்பாக மட்டும் சொல்லப்பட்ட சில இசைக்கருவிகளும் அதில் உண்டு. அதனுடன் தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் மற்றும் ஆவணங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் உள்ள இசைக்கருவிகள் பற்றிய குறிப்பெடுத்துக்கொண்டு என்னுடைய ஆய்வை தொடங்கினேன். சுமார் 500 இசைக்கருவிகளின் பெயர்கள் கிடைக்கின்றன. அவ்வளவு எல்லாம் இப்பொழுது இல்லை. ஒரு 70 கருவிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதிலும் பல வேகமாக வழக்கொழிந்து வருகிறது. நீலகண்டனின் நூலைத்தான் என்னுடைய இசைக்கருவிகளின் தேடலுக்கான ஆரம்ப புள்ளியாக சொல்ல வேண்டும். அந்த நூல் சுமார் ஒரு வருட காலம் என் வீட்டிலேயே இருந்தது.
நேரில் சென்று கலைஞர்களை பார்க்கும் அனுபவத்தை பகிர முடியுமா? இதற்காக எங்கெல்லாம் பயணம் செய்திருக்கிறீர்கள் ?
தமிழ் பண்பாட்டுடன் பிணைந்துவிட்ட கருவிகளைத்தான் ஆவணப்படுத்த முயற்சிக்கிறேன். ஆகவே என்னுடைய ஆய்வுக்கான களம், புதுவை மற்றும் தமிழகம் தான். புதுச்சேரி, சென்னை, தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, காஞ்சிபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்றிருக்கிறேன். இன்னும் பயணிக்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தமிழ்நாடு பகுதிகளுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு இதுவரை சென்றதில்லை என்றாலும் அங்குள்ள கலைஞர்களுடன் தொடர்பை தக்கவைத்து வந்துள்ளேன். கூடிய விரைவில் அங்கெல்லாம் செல்ல திட்டமிட்டுக்கொண்டுள்ளேன். நமது இசைக்கருவிகள் சில கேரளம், துளு நாடு, கர்நாடகம் ஆந்திரத்திலும் உண்டு. அங்கும் செல்ல வேண்டும்.
இப்போது என் பட்டியலில் உள்ள இசைக்கஞைர்களை மட்டும் தான் சந்தித்து வருகிறேன். அவர்களை சந்திக்கும் போது நான் கருதியிருந்த இசைக்கருவிகளை தான் இதுவரைப் பார்த்திருக்கிறேனே தவிர புதுமையான இசைக்கருவி என்று பார்க்க இன்னும் வாய்ப்பு அமையவில்லை. நான் பட்டியல் செய்து வைத்திருக்கும் இசைக்கருவிகளில் இருந்து சிறு சிறு வேறுபாடுகள் இருந்திருக்கிறது ஆனால் முற்றிலும் நான் கருதியதிலிருந்து புதிது என்று சொல்லும் கருவியை பார்க்கவில்லை.
 |
| ஸ்ரீரங்கம் கோவில் கலைஞர்கள் |
நீங்கள் பார்த்த பதிவு செய்த இசைக்கருவிகளில் அழிவின் விளிம்பில் இருக்கும் கருவிகள் என்னென்ன? அதாவது அந்த கருவியை வாசிப்பதற்கு உண்டான ஆட்கள் மிகக்குறைவாக இருக்கக்கூடிய கருவிகள் எதுவாக இருக்கிறது?
‘சுத்த மத்தளம்’ என்றொரு இசைக் கருவி இருக்கிறது. அதை வெகுசில கோவில்களில் குறிப்பிட்ட விழாக்களில் மட்டுமே வாசிக்கிறார்கள். சுத்த மத்தளம் பார்க்க மிருதங்கம் போல தோன்றும், ஆனால் மிருதங்கத்தை விட பெரிதாக இருக்கும். இதை தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் வாசிக்கிறார்கள். சப்த விடங்க கோவில்களிலும் இந்த இசைக்கருவியை வாசிக்க வேண்டும் என்ற மரபு இருந்துள்ளது, ஆனால் தற்போது அவற்றில் சில கோவில்களில் மட்டுமே இக்கருவி வாசிக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலில் ஹேரம்பநாதன் வாசித்து வந்திருக்கிறார். தற்போது அந்த பகுதியிலும் அந்த கருவி வாசிக்கப்படுவது குறைந்து கொண்டுவருகிறது.
‘எக்காளமும்’ இப்போது வாசிக்கப்படுவது குறைந்து வருகிறது. எக்காளம் மிப்பெரிய கருவி, ஆள் உயரத்திற்கு நீண்டு இருக்கும், வாசிப்பது கடினம். நான் மயிலாடுதுறை அருகே ஆக்கூர் சி. வைரக்கண்ணு என்ற எக்காளம் வாசிக்கும் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். அவரை சந்திக்கும் போது அவருக்கு தொண்ணூறு வயது இருக்கும். அவர் உயரத்திற்கு இருக்கும் எக்காளத்தை எடுத்து வைரக்கண்ணு வாசித்தார். நான் வாசித்துப் பார்த்தேன். சத்தம் கூட வரவில்லை, அவர் வாசிக்கும் போது அற்புதமான இசை வந்தது. அவருடைய குடும்பத்தில் யாரும் அதை வாசிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. மயிலாடுதுறை பக்கம் நாலைந்து பேர் எக்காளம் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார். அவர்களுக்கும் வயதாகி விட்டது அவர்களுடைய குடும்பத்திலும் யாரும் வாசிக்க கற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. வைரக்கண்ணு ஐயா அவர்களை பற்றி வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்ற முயற்சி நடந்து கொண்டு இருக்கும்போதே அவர் இயற்கை எய்தி விட்டார். இது ஒரு பேரிழப்பு.
எக்காளம் தனியாக வாசிக்கக் கூடாது என்று வைரக்கண்ணு சொன்னார். எக்காளத்தை தனியாக வாசிப்பது அமங்கலமாக கருதப்படுகிறது. அதனுடன் துணை கருவியாக ‘நமரி’ என்ற ஒரு இசைக்கருவி வாசிக்கப்படும். அக்கருவியும் எக்காளம் போலவே இருக்கும் ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். நமரி கிட்டத்தட்ட அழிவின் நிலைமையில் இருக்கிறது. ஏனெனில் எக்காளம் வாசிக்கவே இப்போது ஆள் இல்லாத போது அதன் துணைக்கருவியான நமரியை வாசிக்க யார் இருப்பார்கள். உண்மையில் இப்பொழுது நான் பார்க்கும் இடங்களில் எக்காளம் தனித்தே ஒலிக்கின்றது.
 |
| எக்காள கலைஞர் சி. வைரக்கண்ணு, பிரபு |
ஆதிதிருவரங்கம் என்கிற ஊரில் நீலன் என்கிற தாசரை சந்தித்தேன். மறக்கமுடியாத நிகழ்வு. நீலன் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலத்தை சேர்ந்தவர். புரட்டாசி மாதங்களில் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு வந்து விடுகிறார். தாசரி ‘தப்பட்டை’ என்கிற தோலிசைக்கருவி ‘சேமக்கலம்’ ஆகியவற்றை இசைத்து திருமால் துதி பாடினார். அத்தனை குரல்வளம் மற்றும் இசை நுட்பம் அறிந்தவர். ஒருவர் இரண்டு கருவிகளை இசைத்துக்கொண்டு பாடவும் செய்தது வியப்பாக இருந்தது. அது போலவே எனது சிறு வயதில் புதுச்சேரியில் வசித்த பிரபல உடுக்கை கலைஞர் பா. ஞானராஜ் அவர்கள் என்னை பெரிதும் கவர்ந்தவர். அம்மன் பாடல்களை அவர் பாடும்பொழுது சிலிர்ப்பாக இருக்கும்.
நீங்கள் பெரும்பான்மையாக விழாக்களில் பார்க்கும் இசைக்கருவிகளை தவிர மற்ற இசைக்கருவிகள் அழிவின் நிலையில் உள்ளதாகவே கருதலாம். எக்காளம் மாதிரியே இருக்கும் கௌரிகாளம், தாரை, கொம்பு, சென்னை பக்கம் வாசிக்கும் பூரி, பூரிகை, வாங்கா, துத்திரி, சங்கில் அலங்காரங்கள் செய்து தவிலுடன் வாசிக்கும் தவளச்சங்கு, தோலுக்குட்டி என்னும் பவுனி, குந்தலம், முகவீணை என்று இவை அனைத்துமே மிக குறைவான ஆட்களால் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் தான் இப்போது வாசிக்கப்படுகிறது. இந்த பட்டியல் இன்னும் நெடியது என்பது தான் வருத்தமான தகவல். ஒரே ஒரு தக்கை வாத்தியம் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே உள்ளது. தக்கைக்கு புகழ்பெற்ற கொங்கு பகுதியில் அது காணாமலே போய்விட்டது.
இசைக்கருவிக்கும் இனக்குழுக்களுக்குமான பிணைப்பு பற்றி சொல்ல முடியுமா? பொதுவான வாத்தியக்கருவிகள் இருந்தாலும் சில வாத்தியங்களை தமிழகத்தில் சில குறிப்பிட்ட சமூகங்கள், இனக்குழுக்கள் மட்டுமே இசைப்பதை பார்க்க முடிகிறது. பெரும்பாலும் அந்தந்த இனக்குழுக்களுக்குள் மட்டும் தான் இசைக்கருவிகள் இருக்கிறதா ?
இசைக்கருவிகளை வாசிப்பதை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று குடும்ப பாரம்பரியத்திலிருந்து வாசிக்க வருவது. இரண்டாவது ஆர்வத்தின் காரணமாக ஒரு இசைக்கருவியை கற்றுக்கொண்டு வாசிப்பது. உதாரணமாக தற்போது உள்ள கைலாய வாத்தியக் குழு மாதிரி ஒரு குழுவில் இணைந்து அதன் வழியே கற்றுக்கொள்வது. மரபாக வாசிக்கப்படும் இசையை கற்றுக்கொள்வதற்கு இன்னும் கடின முயற்சி தேவை.
இன்று வரை அனைத்து இசைக்கருவிகளுமே குலங்கள் வழியாக குடும்பங்கள் வழியாகத்தான் இத்தனை ஆண்டுகள் வழிவழியாக கைமாற்றப்பட்டு காப்பாற்றப்பட்டு இசைக்கபட்டு வந்திருக்கிறது. அண்மையில் பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக மரபான வாத்தியக் கருவிகள் பரவலாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் ஒவ்வொரு இசைக்கருவிகளுக்கும் மரபான குலங்களுடன் சமூகங்களுடன் பிணைக்கப்பட்டு இருந்திருக்கிறது.
எக்காளம், நமரி போன்ற இசைக்கருவிகளை இசைவேளாளர்களிலேயே ஒரு பிரிவினர் மட்டுமே வாசிக்கின்றனர். வெண்டயமும், வாங்காவும் சாதிப்பிள்ளைகள் வாசிக்கிறார்கள். துத்திரி, தவளச்சங்கு இவற்றை தாசர் மற்றும் பண்டாரம் சமூகத்தினர் வாசிக்கிறார்கள். சென்னை செங்கல்கட்டு, காஞ்சிபுரம் பக்கம் நாட்டார் சமூகத்தினர் பூரி, உடுக்கை போன்ற இசைக்கருவிகளை வாசிக்கின்றனர். கொம்பு வாத்தியத்தை ஆதி திராவிடர்கள் அல்லது தெலுங்கு பேசும் அருந்ததியர் வாசிக்கிறார்கள். இந்த பிணைப்புகள் வழியாகவே நம்முடைய இசைக்கருவிகள் சமூகத்தில் புழங்கி இதுவரை வந்திருக்கிறது.
 |
நீலன் தாசர் - நீலமங்கலம்
|
இசைக்கருவிகள் உருவாக்கம் பற்றி சொல்ல முடியுமா? இசைக்கருவிகளை செய்பவர்களின் மரபு இப்போது எப்படி உள்ளது?
சில இசைக்கருவிகளை வாசிப்பவர்களே தயார் செய்துகொள்கிறார்கள். தோல் கட்டுவது போன்ற விஷயங்களை அவர்களே செய்ய முடியும். சில இசைக்கருவிகளை வாசிப்பது ஒரு குழுவாக இருந்தாலும் அதை செய்வது முழுக்கவே வேறொருவராக இருக்கிறார்கள். அனைத்து கருவிகளுமே அதை வாசிப்பவர்கள் உருவாக்குவதாக இருக்கமுடியாது இல்லையா?. வெளியாட்கள் தான் செய்து தரமுடியும். உதாரணமாக சில கருவிகள் பித்தளையிலும் செம்பிலும் செய்யப்படுகிறது. எக்காளம், நமரி, திருச்சின்னம், வாங்கா, பூரி போன்ற உலோக இசைக்கருவிகளை வாசிப்பவர்களால் செய்ய முடியாது. அதை செய்யக்கூடிய தச்சர்களிடம் கொடுத்து தான் செய்ய வேண்டும்.
கைத்தாளம் என்ற கருவியை செய்வதற்கு உலோகங்களுடன் உலோகத்தை சேர்ப்பதற்கான மரபான வழிமுறைகள் இருக்கிறது. அதை அறிந்திருப்பது முக்கியமானது. சேமக்கலம் போன்ற உலோக கருவிகளை பொருத்தவரைக்கும் அதை மரபாக செய்துவராதவர்களும் ஏற்கனவே செய்யப்பட்ட கருவியை அடிப்படையாக வைத்து செய்ய முடியும். ஆனால் இப்படி செய்வதால் அந்த கருவியின் அளவுகள் குறித்த மரபான அறிதல் முறை அழிந்து கொண்டே வருகிறது.
அரங்கிசை கருவிகளை முழுவதுமாகவே செய்து கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நாட்டார் இசைக்கருவிகள் பொருத்தவரை கருவிகளை பெரும்பாலும் இரு குழுக்கள் செய்துகொள்கிறார்கள். தோல் கருவிகள் பொறுத்தவரை மரத்தை குடைந்து செய்ய வேண்டியவைகள் மர ஆசாரிகளிடம் கொடுத்து செய்துகொள்கிறார்கள். ஜிம்பளா கொட்டு, டமாரம், குந்தலம் போன்றவை அவை. கொங்கு பகுதியின் மொடாமத்தளம், இருளர் பலகை ஆகிவை குயவர்கள் செய்து தருவார்கள். கலைஞர்கள் தோல் கட்டிக்கொள்ளவார்கள். பம்பை, உடுக்கை போன்ற உலோக கருவிகளும் அப்படி தான். ஒருவர் செய்து கொடுக்க ஒருவர் தோல் கட்ட வேண்டும். பழங்குடிகளின் சில இசைக்கருவிகள் பினாச்சி, துடி போன்றவற்றை முழுவதுமாக அவர்களே செய்துக் கொள்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு.
 |
| துடி இசைக்கருவியை செய்யும் வேலன் மூப்பர் |
நமது திருக்கோவில்களில் இசைக்கருவிகள் மற்றும் கலைஞர்களின் நிலை எவ்வாறு உள்ளது?
பல்லவர் காலம் தொடங்கி கல்வெட்டுகளில் இசைக்கருவிகள், இசைக்கலைஞர்களுக்கு மானியங்கள் பற்றிய செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. ராஜராஜன் பல தங்க, வெள்ளி எக்காளங்களை செய்து தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடையாக கொடுத்தார். திருவண்ணாமலை கோவிலுக்கு தங்க சேமக்கலம் செய்து கிருஷ்ணதேவராயர் கொடுத்தார். காலந்தொறும் அரசர்களும், அதிகாரிகளும், மக்களும் இப்படி பல இசைக்கருவிகளை கோவில்களுக்கு கொடுத்துள்ளனர். படையெடுத்தவர், திருடினவர் என்று அவர் அவர் கைவரிசையை காட்டியதில் எஞ்சியது எதுவும் இல்லை.
கோவில் நிர்வாகங்களின் அலட்சியத்தால் சென்ற நுற்றாண்டு வரை திருக்கோவில்களில் புழக்கத்தில் இருந்த ஏராளமான தமிழர் தொல்லிசைக் கருவிகள் அழிந்துவிட்டன. பெரிய கோவில்களில் கூட அங்கிருந்த பெரிய நகரா முரசை பராமரிக்க முடியவில்லை. பராமரிப்பின்றி அவை துரு பிடித்தும் எலி கடித்தும் குப்பையாக மாறிவிட்டது. நகரா முரசு போல் 'உடல்' என்கிற தோற்கருவியையும் பல கோவில் ஆணிகளில் தொங்க விட்டு வீணாக்கப்பட்டது. கொடுகொட்டி, டமாரம், திமிலை, பாணி, எக்காளம் போன்ற கருவிகளை அழித்ததில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இக்கருவிகளில் பயிற்சி உள்ள இசைக்கலைஞர்களை ஆதரிக்காமல் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சரியான ஊதியமும் வழங்காமல் கோவிலில் இருந்த இசைகலைஞர்களை அழித்து விட்டனர். தனியார் மற்றும் மடாதிபதிகள் வசமுள்ள கோவில்களிலும் இதே நிலை தான்.
தமிழகத்தை பொறுத்த வரை திருவரங்கம், திருவாரூர், காஞ்சி வரதர், காஞ்சி காமாட்சியம்மன் ஆகிய கோவில்களில் மட்டும் பல தொய்வுகள் இருந்தாலும் பழைய கோவில் இசை மரபு ஒரு அளவிற்காவது பேணப்பட்டு வருகின்றது.
 |
| உடல் - இசைக்கருவி |
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தினந்தோறும் நடைபெறும் பூசைகளில் 10 விதமான இசைக்கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி பெருவிழாக் காலங்களில் மட்டும் 18 விதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். இக்கோவிலில் வெள்ளி எக்காளம், சிறிய செப்பு எக்காளம், வீரவண்டி, சேமக்கலம், உடல், சுத்த மத்தளம், பேரி மத்தளம், திருச்சின்னம், சங்கு, தாளம், தவில், நாதசுரம், தக்கை, இடக்கை, நகரா, சிறிய முரசு, பாரிமணி ஆகிய இசைக்கருவிகள் தற்கால பட்டியலில் உள்ளவை.
இதில் நாள் வழிபாட்டில் வீணை, சேமக்கலம், வீரவண்டி, மத்தளம், சின்ன எக்காளம், திருச்சின்னம் ஆகியவை உள்ளன. காலை பள்ளியெழுச்சி வீணை இசையுடன் தொடங்குகிறது. காவிரியில் இருந்து சங்கொலியுடன் நீர் வரும் (தற்பொழுது இல்லை). பிறகு நீர் உள்ளே சென்றவுடன் சங்கு மற்றும் மத்தளம் இசைத்து பூசை நடக்கும். பிறகு வீரவண்டி இசையுடன் சாளக்ராமத்திற்கு திருமஞ்சனம் நடக்கும். உச்சி காலத்தில் வீரவண்டி, பெரிய மேள இசையுடன் பூசை நடக்கும். மாலையில் நகரா, பெரிய மேளம் இசைக்கப்படும். ஆராதணை முடிவில் எக்காளம் ஊதுவர். இரவு பூசை வீணையுடன் நிறைவு பெறும். பிறகு பாரிமணியும் மத்தளமும் இரவு பூசை முடிந்தை அறிவிக்க வீதிகளில் இசைக்கப்படும். இவ்வழக்கம் தற்போது கைவிடப்பட்டுவிட்டது.
பெருவிழா நாட்களில் முதல் நாள் பேரீ மத்தளத்திற்கு பேரீ தாடனம் நடக்கும். இது மத்தளத்தை வழிபடும் ஒரு சடங்கு. விழா நாட்களில் தசமூர்த்தி புறப்பட்டு பலி கொடுக்கும் பொழுதும் பேரீ மத்தளம் இசைக்கப்படும். கருவறையில் இருந்து பெருமாள் புறப்பட்டால் படிகளில் நின்று வீரவண்டியும் சேமக்கலமும் இசைக்கப்படும். பிறகு வெள்ளி எக்காளமும் திருச்சின்னமும் ஊதப்படும். வாங்கா யாகசாலையில் இசைக்கப்படும். இந்த இசைக்கருவிகளில் சில உறையூர் மற்றும் திருவெள்ளறை கோவிலிலும் இசைக்கும் மரபு உள்ளது. இந்த அரிய செய்திகளை அறிந்துகொள்ள உதவிய ஸ்ரீரங்கம் கோவில் இசைக்கலைஞர் PRK. ரஞ்சித்குமார் என்றும் எனது நன்றிகளுக்குரியவர்.
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலிலும் பல வகையான இசைக்கருவிகள் இசைக்கும் மரபு உள்ளது. சண்டோல்(உடல்), ஒற்றை திருச்சின்னம், பெரிய தவண்டை, டமாரம், கௌரிகாளம், நகரா, டங்கா, முகவீணை, கஞ்சிரா, தவில், நாதசுரம், சுருதிபெட்டி ஆகியவை இக்கோவிலின் தற்கால பட்டியல். சூரிய பிறை, சந்திர பிறை ஆகியவை 30 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் இருந்து வழக்கொழிந்து விட்டன. காஞ்சியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்னும் சற்று குறைத்து ஒரு சில இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் கோவில்களில் விழா நாட்களில் பேண்டு, செனாய் மற்றும் சாக்சோபோன் ஆகியவையும் இசைக்கப்படும்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. தற்காலம் பல இசைக்கருவிகள் இங்கு காணாமல் போய்விட்டன. நகரா, டமாரம் டங்கா ஆகிய வாத்தியங்களை கோவில் நிர்வாகம் 2021ஆம் ஆண்டு பெருவிழாவில் இருந்து நிறுத்திவிட்டது.
 |
| ஸ்ரீரங்கம் கோவில் இசைக்கலைஞர் PRK. ரஞ்சித்குமார் |
இசைக்கருவிகள் வாசிப்பதற்கான தருணங்கள் இப்போது குறைந்து வருகிறது. கிராம தெய்வ வழிபாட்டில் வாசிக்கப்படும் வாத்தியங்கள் வழக்கொழிந்து வருகிறது. இதை பற்றி சொல்லுங்கள்?
பெரும்பாலான இசைக்கருவிகளின் இருப்பு திருவிழாக்கள் சார்ந்து இருக்கிறது. ஒரு வசதிக்காக திருவிழாக்களை இரண்டாக பெருந் தெய்வங்களின் விழாக்கள், கிராம தெய்வங்களின் விழாக்கள் என்று பிரித்துக்கொள்வோம். சில ஊர்களில் கிராம தெய்வங்களின் கோவில்களில் வாசிக்கப்படும் இசைக்கருவிகள் மற்ற கோவிலில் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் இப்போது பெருந்தெய்வ கோவில் விழாக்களில் இசைக்கப்படும் கருவிகள் கிராம தெய்வத்தின் கோவில் விழாவில் வாசிக்கப்படுகிறது. நாதஸ்வரம் கிராம தெய்வத்தின் கோவிலிலும் வாசிக்கப்படுகிறது. அந்த தெய்வத்திற்கு வாசிக்கப்படும் இசை கருவி எதுவோ அதுவும் வாசிக்கப்படுகிறது. பறை, கொம்பு, பம்பை, தாரை அந்த கோவில் வழக்கத்திற்கு ஏற்றது போல் வாசிக்கப்படுகிறது. ஆனால் அந்த கருவியின் முக்கியத்துவத்தை திருவிழா நடத்துபவர்கள் அறிந்து இருக்க வேண்டும். இசைக்கலைஞர்களுக்கு போதிய ஆதரவு இல்லாமை, ஆட்குறைப்பு, சம்பள பிரச்சினை என்று பல சிக்கல்கள் உள்ளன.
வாசிக்கவே ஆள் இல்லை என்றால் பரவாயில்லை. தடை செய்தால் என்னவாகும்? வழக்கொழிந்து தான் போகும். டமாரம் என்று ஒரு கருவி இருக்கிறது. வடதமிழகத்திற்கு உரிய கருவி. செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வட்டாரங்களில் வாசிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் அருகே பழமையான ஒரு கோவில் இருக்கிறது அந்த கோவிலின் பெயரை சொல்லப்போவதில்லை. அங்கு டமாரம் காலம் காலமாக வாசிக்கப்படுகிறது. போன வருடம் டமாரம் வாசிப்பவர்களை அழைக்காமல் அதற்கு பதிலாக பேண்ட் செட் வைத்துக்கொண்டனர்.
இப்படித்தான் நமது கருவிகள் காணாமல் போகத் துவங்குகின்றன. வாசிக்க சென்றவர்களையும் இதை எல்லாம் யார் கேட்டார்கள் என்று திருப்பி அனுப்பி விட்டனர், பழனி மலையில் காவடி குழுக்களுடன் வரும் நாட்டார் இசைக்கருவிகளுக்கு மலை எற தடை போட்டு உள்ளார்கள்.
என்னைப் பொறுத்தவரை பெருவாரியான கருவிகள், கோவில்கள், திருவிழாக்கள், மக்களின் வாழ்வியலோடு அதாவது அவர்களது சடங்குகளோடு ஒட்டி பயன்பாட்டில் உள்ளவை தான். நாம் தான் அவற்றை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும்.
 |
| டமாரம் இசைக்கலைஞர் ராஜா - மஹாபலிபுரம் |
தமிழக பழங்குடியினரின் இசைக்கருவிகளின் நிலை எவ்வாறு உள்ளது?
இன்னும் விரிவாக ஆவணப்படுத்தப் படவேண்டியவை பழங்குடியினரின் இசைக்கருவிகள். மிக வேகமாக வழக்கொழிந்து கொண்டிருக்கும், அசல் தன்மை திரிந்து கொண்டிருக்கும் இக்கருவிகளை ஆய்வாளர்கள், இசை ஆர்வலர்கள் பொருட்படுத்துவதில்லை. இந்தக்கருவிகள் குறித்து இவ்வளவு சொல்லக் காரணங்கள் உண்டு. கருவிகள் உருவாக்கப்படும் முறைகள் வெகுவாக மாறிவருகிறது. ஒரு தாளக்கருவி பழங்குடி இன மக்கள் பயன்படுத்துவது. அதை மரத்தில் குடைந்து செய்யவேண்டும், ஆனால் தற்போது அதற்கு பதிலாக பெயிண்ட் டப்பாக்கள் மேல் தோலைக்கட்டி வாசித்தால் அதன் உண்மையான ஒலி வெளிப்பாடு எப்படி வரும் ?
பழங்குடி மக்களில் எனக்கு இன்னும் பல இன மக்களை காண வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் சமதள இருளர்களை மட்டும்தான் சந்தித்திருக்கிறேன். இன்னும் காணிக்காரர், படுகர், குறும்பர் என்று சந்திக்கவேண்டிய மக்கள் பலர் இருக்கிறார்கள். இருளர் இனமக்களின் வாத்தியக்கருவிகளில் பலகை என்ற கருவியை பார்த்து பதிவு செய்ய முடிந்தது. இந்த சட்டம் மண்ணால் ஆனது. தனது தொன்மையை தக்கவைத்துக்கொண்டுள்ள சில கருவிகளில் ஒன்று இது.
வீடூர் அருகே பாதிராப்புலியூர் என்னும் ஊரில் உள்ள ஒரு இருளர் குடும்பம் தேவைப்படும் தனது சமூக மக்களுக்கு இந்த கருவிகளை தயாரித்துக்கொடுக்கிறது. அவர்களை மற்றவர்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால் பல இசைக்கருவிகள் தங்களது அசல் தன்மையை தக்கவைத்துக்கொள்ளும்.
அதுபோல துடி என்றொரு சங்க கால தோற்கருவி. தமிழகத்தில் நீலகிரி பகுதியில் மட்டுமே பார்க்க முடியும். பணியர் பழங்குடியினர் இசைப்பார்கள். மிகவும் அரிதான ஒரு கருவி.
 |
| பலகை இசைக்கருவியுடன் சுசிலா, இருளர் பழங்குடி, பாதிராபுலியூர் |
நிலப்பகுதியோடு இசைக்கருவிகள் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடுகிறீர்கள் அதே சமயம் ஓரிடத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த கருவிகளை கண்டதுண்டா ?
கலை வடிவங்கள் நிலம் தாண்டியும் செல்லும்போது அங்குள்ளவர்கள் இசைக்கருவிகளை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பு உள்ளது. உதாரணமாக சென்னை சங்கமம் போன்ற நிகழ்வுகளில் தமிழகத்தின் தெற்குப்பகுதியை சேர்ந்த கணியான் மகுடம் வாசிக்கப்படுகிறது என்றால் வடதமிழக வாசிக்கு அதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. ஆனால் அதே சமயம் அந்த கருவியை புதுச்சேரியில் ஒரு கோவிலில் அந்த கருவியை நாம் வாசிக்க வைப்பது எளிதல்ல.
இது போன்ற அரிய கருவிகள் பயணித்தாலும் அவை மரபிசை, சடங்குகள் போன்றவற்றால் தொடர்பு கொண்டுள்ளன. மக்கள் வாழ்வியலில் ஏதோ ஒரு பிணைப்பு ஏற்படாமல் அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். குந்தலம், தொட்டாலு என்னும் குழல், சாரங்கி போன்றவை இந்தியாவின் வேறு பகுதிகளில் இருந்து வந்து நமது மரபோடு கலந்து விட்டவை.
பறைக்கருவி சடங்குகளுக்கான பயன்பாடு தாண்டி, ஒரு கலாச்சார அடையாளமாக ஆகி விட்டது. தற்போது பறை அயல்நாடுகளிலும் தமிழ் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. இந்த ஏற்பு அனைத்து கருவிகளுக்கும் சாத்தியமாகுமா என்பது வரையறுக்க முடியாதது.
நிகழ்த்துக்கலைகளை ஒட்டி புழங்குகின்ற கருவிகளை எப்படி பார்க்கிறீர்கள் ?
நிகழ்த்துக்கலைகளில் தனித்த கருவிகள் உள்ளன. வில்லிசையோ, தெருக்கூத்தோ அவற்றிற்கான கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. தெருக்கூத்தின் மேளக்காரர், ஒரு மத்தளத்தை நேராகவும் மற்றொன்றை கிடைமட்டமாகவும் வைத்து ஒருசேர வாசிப்பதை பார்க்கிறோம் இல்லையா இப்படி பயன்பாட்டில் சில தனித்த பழக்கங்களும் தொடர்கின்றன.
வழிபாட்டுத்தன்மையோடு இசைக்கருவிகள் அணுகப்படுகின்றதா ?
நல்ல உதாரணம் முன்பு சொன்ன இருளர் பலகை தான். இந்த இசைக்கருவி அவர்களது கோவிலில் தான் உள்ளது. இந்த பலகை கருவி இருளர்களது தெய்வமாகிய கன்னியம்மனாகவே கருதப்படுகிறது. இந்த மண் கருவியில் அம்மன் முகம், நாகம், உடுக்கை, சூலம் முதலியவை பொறிக்கப்பட்டுள்ளன. ஆகம கோவில்களிலும் பழங்குடியினர் வழிபாட்டிலும் இசைக்கருவிகளுக்கும் பூசைகள் உண்டு. அம்மன் கோவில்களில் பம்பை உடுக்கைக்கு காப்பு கட்டுவார்கள்.
பால்பேதமற்று இசைக்கருவிகளை வாசிக்க பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனரா?
இதற்கான பதிலை யோசிக்க வேண்டியுள்ளது. எனக்கு இருளர்களின் பலகை வாத்தியத்தை வாசித்துக்காட்டியது ஒரு பெண்மணிதான். நாதஸ்வரம் முதலிய கருவிகளை ஆர்வமுள்ள பெண்களும் வாசிக்கின்றனர். அதே சமயம் பல கருவிகளை பெண்கள் இசைத்து பார்த்ததில்லை. பம்பை, உருமி இவற்றோடு கொம்பு, தாரை போன்ற ஊது கருவிகளையும் பெண்கள் இசைத்து பார்த்ததில்லை. பிற கருவிகளில் தொழில்சார் கட்டுப்பாடுகள் இருந்திருக்கலாம், தற்போது சூழ்நிலை மாறி வருகின்றது. அதேபோல சூழலின் தேவையின் பொருட்டும் பெண்கள் புதிதாக கருவிகளை இசைக்கத் துவங்குகிறார்கள். திருவாரூர் கோவிலின் குடமுழா வாசிக்கும் முட்டுக்காரரின் குடும்பத்தில் ஆண்வாரிசு இல்லாததால் முட்டுக்காரரின் மகளான சுமதி என்னும் சகோதரி தற்போது குடமுழாவை வாசித்து வருகிறார்.
 |
| இசைக்கருவிகள் வாங்கா மற்றும் வெண்டையத்துடன் சாதிப்பிள்ளை |
தமிழ்ப்பண்பாட்டில் இந்த இசைக்கருவிகளுக்கான இடம் அருகிவிட்டது என்ற வருத்தத்தை அடிக்கடி பதிவு செய்துள்ளீர்கள். இந்த நிலை மாற தங்கள் முன்வைக்கும் யோசனைகளை என்ன?
வீடுகளில் இருந்து துவங்க வேண்டும். வீட்டின் சடங்குகளில் பாரம்பரிய கருவிகளை எடுத்து வரவேண்டும். பிறப்போ இறப்போ திருமணமோ நமது மண்சார்ந்த கருவிகளுக்கு முதலிடம் தரவேண்டும். பேண்டு இசை, கேரளா செண்டைக் குழுக்கள் போன்றவை ஆக்கிரமித்துள்ள பழைய இடத்தை மேளம், பறை, சேகண்டி, சங்கு போன்றவை மீண்டும் அடைய வேண்டும். நாட்டு நாதஸ்வரம் என்று ஒன்று உண்டு தெரியுமா?
தற்போது எந்த திருவிழாவோ, கல்யாணம் முதல் பொதுக்கூட்டம் வரையான நிகழ்ச்சியோ நடக்க இருந்தால் முதல்வேலையாக செண்டை மேளத்தை ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள். உள்ளூர் கருவிகளுக்கு மதிப்போ இடமோ கொடுப்பதில்லை. இதற்கு ஆகும் செலவில் நமது கலைஞர்களை பத்து முறை ஒப்பந்தம் செய்ய முடியும். அந்த தொகைக்கு நீங்கள் கொம்பு, தாரை, எக்காளம் என்று எத்தனையோ அழிந்துகொண்டிருக்கும் கருவிகளுக்கு புத்துயிர் கொடுக்க முடியும். இருந்தாலும் நாம் அவர்களுக்கு எந்த முன்னுரிமையும் கொடுப்பதில்லை. உள்ளூர் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள், உபயதாரர்கள் அவர்களது மண்ணின் இசைக்கருவிகளை இசைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் முக்கியத்துவம் அறிந்தவர்கள் சில பகுதி மக்கள். எங்கள் பகுதியில் சில இடங்களில் பறையையும் கொம்பையும் ஒரு பொழுதும் கைவிடுவதில்லை.
கோவில் சார்ந்த பல கருவிகள் தற்போது வழக்கில் இல்லை. பழைய ஆவணங்களின் படி ஒரு சில கோவில்களில் பதினைந்திலிருந்து இருபது கருவிகள் வரை வாசிப்பதற்கு ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது ஒரு பெரிய கோவிலில் 20 வாத்தியங்களுக்கான பதவிகள் இருக்கும். ராமேஸ்வரத்தில் தாளகிரி என்ற கருவி வாசிக்கப்பட்டிருந்தது. தென்தமிழ்நாட்டில் சாரங்கி என்றொரு கருவி இருந்தது. தற்போது அந்த பதவிகளும் இல்லை, கருவியையும் கண்டறிய முடியவில்லை. இப்படி பல கோவில்களில் இருந்து தவண்டை, திருச்சின்னம், எக்காளம், சுத்தமத்தளம் இப்படி ஒவ்வொன்றாக விலகிச்செல்கின்றன. உங்களுக்கு தெரியுமா.. கொடுகொட்டி என்ற வாத்தியம் ஒரு காலத்தில் தவில் போல பெருவாரியாக இசைவேளாளர்களால் வாசிக்கப்பட்டது, தற்போது வாசிப்பாரில்லாமல் கிடக்கிறது. திருவாரூர் தியாகராஜர் ஆலய தேர்திருவிழாவில் மட்டுமே அதை வாசிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. நாதசுரம் தவில் என்கிற சுருங்கிய வட்டத்திற்குள் திருக்கோவில் இசைப்பணிகள் வந்து விட்டன. அறநிலையத்துறை நினைத்தால் இந்த நிலையை மாற்ற முடியும்.
தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கு இந்த இசைக்கலைஞர்களை நியமிப்பதில் பெரும் வித்தியாசம் உள்ளது. தேவசம்போர்டு மூலம் நியமிக்கப்படும் கேரளக்கலைஞர்களின் ஊதியம் மிகவும் நியாயமான ஒன்றாக உள்ளது. அவருக்கு அந்த ஊதியம் தனது வாழ்க்கையை மரியாதையுடன் நடத்த போதுமானதாக உள்ளது. அதே நிலை இங்கு தமிழகத்திற்கும் வரவேண்டும். இங்கு முதலில் பெரிய கோவில்களில், ஒரு 50 கோவில்களையாவது தேர்ந்தெடுத்து அங்கிருந்த பழைய வாத்தியங்களை எல்லாம் இசைக்க முதலில் பதவிகளை நியமிக்க வேண்டும். அந்த கருவிகளை கற்றுக்கொடுக்க தகுதியான ஆசிரியர்களை கண்டறிய வேண்டும். கோவில்களின் வருவாயில் இருந்தே இவற்றை எளிதாக செய்துவிட முடியும். இது செய்யப்பட்டால் இப்போதைக்கு ஒரு இருபது இசைக்கருவிகளுக்கும் அவற்றை வாசிக்கும் கலைஞர்களுக்கும் நாம் நன்மை செய்தவர்களாவோம். இந்த மரபு அழியாமல் தொடரும்.
இவை மட்டுமல்ல எனக்கு இக்கருவிகள் குறித்து ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்தது நான் தற்செயலாக படிக்க நேர்ந்த ஒரு நூல்தான். கண்டு கேட்பது மட்டுமல்லாமல் இந்தக்கருவிகள் குறித்த புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பதும் உதவும். நான் இது தொடர்பாக வாசிக்க விரும்புபவர்களுக்கு கீழ்க்கண்ட நூல்களை படிக்குமாறு பரிந்துரை செய்வேன்.
இசைக்கருவிகள் குறித்த அறிமுகத்திற்கு வெ நீலகண்டனின் 'வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள்', விரிவாக படிக்க ஆளவந்தார்.ஆர் அவர்களின் 'தமிழர் தோற்கருவிகள்', நா மம்மது அவர்களின் 'தமிழிசை பேரகராதி', 'பஞ்சமரபு உரை', P. சாம்ப மூர்த்தி அவர்களின் 'Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, சென்னை', முனைவர் வீ.ப.கா சுந்தரம் அவர்களின் 'தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதிகள்', முனைவர் பெ சுப்பிரமணியனின் 'கொங்கு நாட்டுபுற இசைக்கருவிகள்'- மற்றும் மகேந்திரன், சி எழுதிய. 'தமிழர் முழவியல் – பாகம் I' இந்த நூல்களை வாசிக்க நமது இசைக்கருவிகள் குறித்த புரிதல்கள் விரிவாகும்.
உங்கள் ஊர் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்கு நீங்கள் தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளை அமர்த்தி அதை அழிவில் இருந்து மீட்க விரும்பினால் தாராளமாக என்னை தொடர்புக் கொள்ளலாம். தக்க கலைஞர்களின் தொடர்பை உங்களுக்கு தர தயாராக உள்ளேன்.
நேர்காணல்: தாமரைக்கண்ணன் புதுச்சேரி
படங்கள் - சரவண பிரபு
சரவண பிரபுவின் மின்னஞ்சல் முகவரி - saravana.ramd@gmail.com