![]() |
| ஆரூர் ஆழித்தேர் (ஓவியம் விஷ்ணு ராம்) |
ஸ்ரீ ருத்ர திரிசதியில் "ரதப்யோ நம: ரதபதிப்போ நம " என்று சிவனின் இரண்டு நாமங்கள் உள்ளன. அவை திரிபுராந்தக வடிவத்தை குறிப்பவை என்று கொள்கிறோம். போருக்கு ரதம் ஏறி செல்லும் சினந்தவன் என்ற தொல் படிமம் (Archetype), தன் உட்சபட்ச சாத்தியத்தை அடைவது ஆரூர் ஆழித்தேரில்.
கல்லணைக்கு கிழக்கே பூம்புகார் வரை ஆயிரக்கணக்கான கோயில்கள். பாடல் பெற்ற 278 தலத்தில் சோழநாட்டில் மட்டும் 190க்கும் மேல். காவிரி மற்றும் கோயில்களால் நிரம்பிய பகுதி டெல்டா. ஒருமுறை தஞ்சையில் இருந்து புள்ளமங்கை செல்லும் வழியில் 50 மீட்டருக்குள் மூன்று திவ்யதேசங்கள் கடந்து வந்தோம்.
இந்திய கோயில் கட்டிடக் கலை மரபில் கோபுரமென்பது தத்துவார்த்தமாக யாகாக்னியின் வடிவமாக கருதப்படுவது. நுழைவாயில் நிலைகாலில் வைக்கப் பட்டிருக்கும் மகரத்தின் மீதமைந்த கங்கை, ஆமை அல்லது மகரத்தின் மீது யமுனை நதிதெய்வங்கள் அமைக்கப் பட்டிருக்கும். அனலாட்டும் புனலாட்டும் முடிந்து ஆன்மா பக்குவப்பட்டு ஆலயத்தில் நுழைகிறது. கல்ஹாரம் வரையான பகுதி வேதிகையாகவும் அதன் மீதெழும் சுதை அக்னியாகவும் பாவிக்கப் படுகிறது. அவ்வகையில் டெல்டா மக்கள் ஒரு பெரும் யாக சாலைக்குள் கால் மடக்கி அமர்ந்திருகின்றோம்.
காலை குடந்தை ஈசனையும் சார்ங்கபாணியையும் தரிசித்து விட்டு, மாலை திருவாரூர் அடைந்தோம். 1300 ஆண்டுகளுக்கு முன் ஏறத்தாழ இதே நாளில் அப்பர் “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டதாரூரே” என்று பாடியிருக்கிறார். முதல் முறை ஆரூர் தரிசனம் பெற்றது திருவாதிரை பாத தரிசனத்தின்போது. ஒவ்வொரு சன்னிதியாக ஓடி ஓடி தரிசித்தது நினைவில் உள்ளது. வழிபாட்டில் உள்ள ஒவ்வொரு ஐம்பொன்னும் அந்த சிற்பியின் உட்சபட்ச சாத்தியமாக இருக்கும். பின்னர் சென்ற மாதம் சிவனிரவின் அடுத்த நாள். நயினார் ஒருவரின் தாயார் மறைந்ததால் சிவன் ராத்திரி 4 கால பூஜைகள் முடித்து நடையடைப்பட்டிருந்தது. மாலை நடை திறந்த பின் உற்சவர் அல்லியங்கோதை சந்நிதியில் இருந்து முதலில் கருவறையை அடைந்தார். “போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று ஓதுவர் பாட திருப்பள்ளியெழுச்சி தொடங்கி, கால சந்தி மரகத லிங்க அபிஷேகம், உச்சி காலம், சாயரட்சை என்று காலையில் இருந்து நிகழாத பூஜைகள் அனைத்தும் தொடர்ந்து செய்தனர். முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது உள்ளூர் அக்கா ஒருத்தி தேருக்கு வாங்க, அதும் முதல் நாளே வந்துருங்க தியாகராஜர் அஜபா தாண்டவமாடி போவாரு, கைலாயமே அதிரும் என்றாள். அவள் வாக்கு பலித்தது.
தியாகராஜர் வசந்த விழாவை மையமாக வைத்து நடத்தப் படுவதே இந்த உற்சவம். முத்துசுவாமி தீக்ஷிதர் ஸ்ரீ ராகத்தில் அமைந்த மகாத்வஜாரோஹனம் என தொடங்கும் பெரிய கீர்த்தனை பாடியிருக்கிறார். வசந்த விழாவின் அத்தனை நிகழ்வுகளும் அதில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. திருவொற்றியூரில் சங்கிலியாருடன் இருக்கும் சுந்தரர் வசந்த காற்று வீசியவுடன் ஆரூர் வசந்த விழா குறித்த எண்ணம் வர சங்கிலியாருக்கு கொடுத்த சத்தியத்தையும் மீறி திருவொற்றியூர் கடந்தபோது கண்பார்வை இழக்கிறார். பின் கச்சி ஏகம்பனிடம் இடது கண் பார்வையும் ஆரூர் அடைந்தவுடன் வலது கண் பார்வையும் பெறுகிறார். ஆலால சுந்தரனாலும் பிரிந்திருக்க முடியாத திருநாள்.
தமிழகத்தின் கோயில்கள் அனைத்திலும் நீண்ட பிரம்மோற்சவம் கொண்டது ஆரூர். தைபூசத்தன்று பந்தக்கால் நடப் படுகிறது. ஹஸ்தத்தில் கொடியேறி ஆயில்யத்தில் தேரோடுவது மரபு. இங்கோ மாசி ஹஸ்தம் மகாதுவஜாரோஹனம் பங்குனி ஆயில்யத்தில் தேர். கொடியேற்றத்திற்கு முன்பே ஊர் அய்யனார் உற்சவம் 5 நாட்கள், பிடாரியம்மனுக்கு திருவிழா 10 நாட்கள், அதை தொடர்ந்து விநாயகர், முருகர் தொடங்கி, காட்சி கொடுத்தார், பைரவர் என்று ஒவ்வொரு நாளும் புறப்பாடு.
10 நாட்கள் சம்பந்தர் உற்சவம். 10ம் நாள் தைப்பூசத்தன்று குதிரை வாகனத்தில் தீர்த்தவாரியுடன் சம்பந்தர் உற்சவம் பூர்த்தியாகும். அதன் பின் சாஸ்தாவிற்கு 5 நாட்களும் ஊர் பிடாரியம்மன் திருவிழா 10 நாட்களும் உற்சவம். சிவன் ராத்திரி அன்று தில்லையில் 4ம் கால பூஜை முடித்து திரும்பி திங்களன்று மாலை சாயரட்சைக்கு ஆரூர் வந்திருந்தோம். அன்று அய்யனார் புறப்பாடு நடந்துகொண்டிருந்தது.
பூதநெல் திருவிழா முடிந்து அடுத்த நாள் மாசி ஹஸ்தம் மஹா துவஜாரோகனம் என்னும் பெரிய கொடியேற்றமும் கொடியேற்றத்தன்று காலை அப்பர் புறப்பாடும் நடைபெறும். அது முடிந்தபின் தியாகராஜர் சன்னிதியில் ஆச்சாரியர்கள், ஆதீனங்கள், கோயில் முக்கியஸ்தர்கள் கூடியிருக்க, “நம்மனுக்கும் நமது வன்தொண்டனான ஆலால சுந்தரனுக்கும்” என்று தொடங்கி அடிமுடி தேடிய வீதிகளில் ஆழித்தேர் நடக்கவிருப்பதால் “சகல புவனத்து அடியார்களும் தங்களது பரிசின்னங்களுடன் திருவாரூருக்கு வந்துசேரவும். இது தியாகராஜ மகாராஜா ஆக்ஞை” என்று தியாகராஜர் தன்னிலையில் இருந்து ஒரு ஆணை பிறப்பிப்பார். உயிர்கள் அனைத்தும் ஓம் என இசைகின்றன. தியாகராஜரின் ஆணையை சண்டிகேஸ்வரர் ஸ்தானத்தில் இருந்து நயினார் எழுதிக்கொள்ள அந்த ஆணை ஆதி சண்டீசர் சந்நிதிக்கு சென்று அங்கிருந்து சண்டீசர் மூலமாக பக்தர்கள் அனைவருக்கும் அனுப்பப் படும். அதன் பிறகு கௌபீனம் மற்றும் திருவோட்டுடன் பத்திரிக்கை விநியோகம் நடைபெறும்.
கொடியேற்றத்தன்று தொடங்கி ஒரு வாரம் விநாயகர் முருகர் உற்சவம். தொடர்ந்து நான்கு நாட்கள் பக்தோத்சவம். நால்வர், அதிகார நந்தி புறப்பாடு நடைபெறும். அடுத்து ஒருநாள் பைரவர், அடுத்த நாள் காட்சி கொடுத்தார் உற்சவம். அதை அடுத்த 10 நாட்கள் பட்டோத்சவம், தியாகாரஜரின் பட்டம் ஏற்று சந்திரசேகரர் புறப்பாடு. பட்டோத்சவத்தின் இறுதிநாள் வன்மீகநாதருக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் மகா அபிஷேகமாக நடைபெறும்.
பங்குனி கிருத்திகை அன்று வசந்தன் திருநாள். தியாகராஜர் முதல் முறையாக யதாஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபம் அடைதல். அன்றிரவு அஷ்டதுவஜாரோஹணம். எட்டு திக்கிலும் திசை தேவர்களின் கொடியேறும். அன்றைய தினம் தொடங்கி கேடயம், இந்திரவிமானம், பூத வாகனம், கஜவாகனம், வெள்ளி ரிஷபவாகனம், தெருவடச்சான் என்று சந்திரசேகரர் உற்சவம். அடுத்த நாள் தேர் புறப்பாடு அன்று காலை வீர கட்கம் புறப்பாடும் மாலை சந்திரசேகரர் கைலாய வாகனமும் முடிந்த பின் தியாகராஜர் தேருக்கு புறப்படுவார்.
மறுநாள் ஆழித்தேர். ஆழித்தேர் முடிந்து மறுநாள் சஹஸ்ர கலசாபிஷேகம். அன்றிரவு திரிபுராந்தகர் மற்றும் பிட்சாண்டவர் புறப்பாடு. அதனை தொடர்ந்து பங்குனி உத்திரநாள் ருத்ரபாத தரிசன மண்டபத்தில் பதஞ்சலி வியாக்ரபாதருக்கு பாத தரிசனம். மறுநாள் ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருந்து பக்த காட்சிக்காக மஹா அபிஷேகம். அடுத்த நாள் பக்த காட்சி முடித்து தியாகராஜர் யதாஸ்தானம் அடைவார். அதை தொடர்ந்து 4 நாட்கள் அம்பிகை உற்சவம் 3 நாட்கள் சண்டீசர் உற்சவம் முடிந்து ஆசார்யர் உற்சவத்துடன் துவஜா அவரோஹணம் என்று திருவிழா நிறைவுறும்.
![]() |
| திருவாரூர் ஶ்ரீ வீதிவிடங்கப் பெருமான் பங்குனி உத்திர மஹா அபிஷேகம் (ஒவியம் விஷ்ணு ராம்) |
28 மார்ச் மாலை கமலாலய குளக்கரையில் நின்று அன்றைய அஸ்தமனம் பார்த்தோம். பிரம்மாண்டமான குளத்தில் நீர் பொன்னுருக்கி ஊற்றியது போன்று மின்னிக்கொண்டிருந்தது. 6 மணி போல் தேரடியை அடைந்தோம். விநாயகர் முருகர் தேருக்கு பின் ராஜாங்கமாக ஒரு பெருங்கோபுரம் நிற்பது போன்று வீற்றிருந்தது ஆழித்தேர். விண்ணவர்கள் ஆரூருக்கு இறங்கி வரும் படி போன்றிருந்தது. தேர் நிழலில் 500 பேருக்கு மேல் நிற்க முடியும் 600 டன் எடையிருக்கும்.
பாவபக்தி, அறியவியலாத பிரபஞ்ச ஆற்றலை, நமது கைக்குள் அடக்கும் வடிவமாக பாவித்து உபசரித்து பக்தி செலுத்துவது. இரு கைகளுக்குள் அடங்கும் நதி நீரை நதியாகவே பாவிப்பது. தியாகராஜர் மகாராஜனாக இங்கு பாவிக்கப்படுகிறார். ராஜனின் புறப்பாடு என்பது ராஜ்யத்தில் உள்ள அனைத்து பரிசனங்களும் சேர்ந்து செய்யவேண்டிய ஒன்று. சன்னிதி வீதியில் இருந்து ஒரு வெள்ளை பருத்தித்துணி தேருக்கு முன் நீண்டிருந்தது. தியாகராஜரின் சந்நிதியில் இருந்து பெரியகொடிமரம் வழியாக வந்து யாகசாலையில் தீபாராதனை கண்டருளி ராஜநாராயணன் மண்டபத்தை சுற்றிக்கொண்டு வெளியேறி, தேவாசிரியன் மண்டபத்திற்கு அருகில் அணுக்கன் வாயில் வழியாக கல்தேரை சுற்றிக்கொண்டு கிழக்கு வாயில் முன் வந்து நேராக தேருக்கு செல்லும் வழி வரையில் வெண் பருத்தி விதானம் விரிக்கப் பட்டிருந்தது. முன்னாளில் பட்டாக இருந்து இப்போது பருத்தி விரிக்கப் படுகிறது.
தியாகராஜர் வெயில் படாத திருமேனி. தேருக்கு முதல் நாள் இரவே எழுந்தருளுவார். நாங்கள் அணுக்கன் வாயிலை கடந்து தேவாசிரியன் மண்டபத்தை நெருங்கும்போது சந்திரசேகரர் கைலாய வாகனத்தில் புறப்பாடு தொடங்கி இருந்தது. மற்ற நாட்களை காட்டிலும் இன்று விரைவாக புறப்பாடு முடியும். இங்கு சுவாமி யோக மூர்த்தியாக இருப்பதால் பஞ்ச மூர்த்தி புறப்பாடு என்பது விநாயகர், முருகர், சந்திரசேகரர், சண்டீசர் நான்கு மூர்த்திகள் மட்டுமே. இன்று மூர்த்திகள் நான்கு வீதிகளில் வலம் வந்து முடித்த பின் தியாகராஜர் புறப்பாடு தொடங்கும்.
இங்குள்ள ஆதி சண்டீசர் மழு ஏந்துவதற்கு முன்னுள்ள கோலம். சண்டீச பக்தி என்றால் என்ன என்பது இந்த திருமேனியை கண்டால் புரியும். அத்தனை குழைவு, இளகி குறுகிய தோள்கள், அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கும் இந்த சண்டீசர், உற்சவத்தை முன்னின்று நடத்துபவர் என்பதால் எல்லா நாளும் இவருக்கு புறப்பாடு உண்டு.
தியாகராஜருக்கு வீரகட்கம், ஞானகட்கம் என இரண்டு வாட்கள். மாலை தேருக்கு தியாகராஜர் புறப்படும் அன்று காலையே வீரகட்கம் புறப்பட்டு தேரை அடையும். அஸ்திரம் அங்கு வந்தபின் தனியாக சுத்தி செய்வதில்லை. கோயிலின் நான்கு கோபுரங்களும் ஈசனின் நான்கு முகங்களாக பாவிக்கப் படுவதால் புறப்பாடு கண்டருளும் திருமேனிகள் கிழக்கு வாயில் அருகில் உள்ள அணுக்கன் வாயில் வழியாகத் தான் வெளி வருவர். திருவாரூர் மண்ணை அடைந்துவிட்ட அனைவருமே சிவ பூதகணங்கள் என்பதால் தியாகராஜருக்கு மலர் சொரியும் உரிமை அனைவருக்கும் உண்டு. திருவாரூரில் அனைத்துமே பிரம்மாண்டம் தான், மகா துவஜாரோஹணம், ஆழித்தேர், மகா யாகசாலை பிரம்மாண்ட கமலாலய குளம் என்று எல்லாம். மகா யாகசாலைக்கு முன் அமர்ந்திருந்த போது அடியார்கள் பலர் மூட்டையாக பூக்களை கொண்டுவந்து அனைவரின் கைகளிலும் திணித்துக்கொண்டிருந்தனர். அப்பர் “காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன்” எனத்தொடங்கும் பதிகத்தில் திருவாரூரில் காணும் அனைத்து வகை அடியார்களையும் வரிசைப்படுத்துகிறார்.
அருமணித்தடம் பூண்முலை
அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார்
உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர்
சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந்
திருவாரூ ரம்மானே. 4.020
அரம்பையர் போன்ற கோயில் பணி செய்வோர், உரிமையில் தொழுவார்(ஆதி சைவர்), சிவகணத்தார், உருத்திரர், மாவிரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், காபாலிகர் ஆகியோர் உள்ளனர் என்கிறார். அத்தனை வகை அடியார்களையும் அங்கு கூடியிருப்பது போன்றிருந்தது.
தியாகராஜர் ரஹஸ்ய மூர்த்தி. பாத தரிசனம் உத்ராயணத்தில் மார்கழி திருவாதிரையன்றும் தட்சிணாயணத்தில் பங்குனி உத்திரத்தன்றுமாக இரண்டு முறை மட்டுமே. மற்ற நாட்களில் திருமுகத்தையும் கொண்டியம்மையின் திருமுகத்தை மட்டுமே பார்க்க முடியும். ரஹஸ்ய மூர்த்திக்கான அலங்காரம் நயினார்களுக்கு மட்டுமே உரியது. யோகபீடத்தில் அமர்ந்துள்ள தியாகரை பிள்ளை தண்டில் வைத்து கட்டும் ரஹஸ்யம் ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கானது.
அல்லியங்கோதை சன்னிதி முன் மண்டபத்தில் கமலாம்பாள், நீலோத்பலாம்பாள் உற்சவர் முழு அலங்காரத்தில் காத்திருந்தனர். தாள வாத்தியங்களில் உடுக்கை, இடக்கை, முழா, சுத்த மத்தளம், தவில், தாளம், சிலம்பு முழங்க; காற்று வாத்தியங்களில் எக்காளம், கொக்கரை, கொம்பு, தாரை, திருச்சின்னம், வெண்சங்கு, நாகஸ்வரம் கருவிகள் ஒலிக்க, ஐராவதம் மீது அமர்ந்த இந்திரன் தொடங்கி அஷ்டதிக் பாலகர்கள் அவர்களது வாகனத்தின் மீதமர்ந்த கொடி சின்னங்கள், ரிஷபக்கொடி, ரிஷபதண்டம், கவரி என்ற பரிசின்னங்கள் எல்லாம் ஆயத்த நிலையில் இருந்தன. சந்திரசேகரர் உலா முடிந்து முதல் பிரகாரத்திற்குள் பிரவேசித்தபின் எந்நேரமும் தியாகராஜர் புறப்பாடு என்று செவ்வந்தி, மரிக்கொழுந்து, முல்லை, மல்லி, செவ்வரளி என்று பூக்களை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தனர். கைலாய வாத்திய குழுக்களே ஐம்பத்துக்கும் மேல் இருக்கும். பிரம்மாண்டமான ஆரூர் கோயில் வளாகம் முழுவதும் திருமுறையும், வேதமும், நாதமும், இசையும், இனிய மலர் மணமும் தூப தீப புகையும் என்று ஒரு பித்த நிலை நிலவியது.
வெண்முரசில் படித்த அத்தனை அரசர் அவை நுழைவும் இங்கு கண் முன் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது கரை தொடும் அலை போல அரூரா தியாகேசா என்று கோஷங்கள் ஒலித்தடங்கின. தீவெட்டி கொளுத்தும் உரிமையுடைய குழுவினர் அல்லியங்கோதை சந்நிதிக்கருகில் கொளுத்திய பந்தங்களுடன் நின்றிருந்தனர். அடுக்கு பந்தங்கள் பலவும், தியாகராஜருக்கு மேல் பிடிக்கும் விதானமுமாக ஒரு அடியார் கூட்டம் மைலாப்பூரில் இருந்து வந்திருந்தனர். இறுதியாக 10 மணி போல் தியாகேசரை சுமந்து வரும் தண்டு வெளியில் தெரிய தொடங்கியது. “ஐராவனம் ஏறாது ஆனேர் ஏறி, அமரர் நாடாளதே ஆரூர் ஆளவந்த பிரான், தக்கார்க்கு தக்கான். யோக மார்க்கத்தின் மிக உயர்ந்த அஜபா தாண்டவமாடி” தோன்றினார். அப்போது தோன்றிய ஆரூரா தியாகேசா கோஷமும் அங்கெழுந்த உன்மத்த நிலையும் சொல்லில் அடங்காதவை. கின்னரர்கள், கிம்புருடர்கள், யக்ஷர்கள், தேவர்கள், கோள்கள், நதிகள், ரிஷிகள், பூதங்கள், அசுரர்கள், மாலவன், நான்முகன் முதலான அனைவரும் அங்கு பூ தூவி கொண்டாடினர். தியாகராஜருக்கான நாமங்களுள் அடிக்கு ஆயிரம் பொன் அளந்த பிரான் என்பதொன்று. அவரது ஒரு அடி அழகிற்கு ஆயிரம் பொற்காசுகள் ஈடாகுமாம். பக்த காட்சியன்று தட்டஞ்சுற்றி மண்டபத்தில் அஜபா தாண்டவத்தின் பொது இன்றும் மக்கள் பொற்துகள்களை இறைக்கின்றனர்.
யாகசாலை முன் பூர்ணாகுதியும் மகா தீபாராதனையும் ஏற்று வேதகோஷங்களும், திருமுறை விண்ணப்பிப்பவர்களும் செல்ல, தொடர்ந்து கைலாய வாத்திய குழுக்கள் முழங்க, பலவித அடுக்கு தீப்பந்தங்கள் செல்ல, கொடிபடங்கள் தொடர, இருபுறமும் கவரி வீசியபடி அடியார்கள் வர, செல்லும் வழியெங்கும் மலர்களால் அர்ச்சிக்கப்பட்டு மேலே விதானமும் அதற்குமேல் வெண் பருத்தியும் விரிந்திருக்க ஆழித்தேர் அமர்ந்தார் தியாகராஜர்.
![]() |
| வசந்தன் திருநாள் (ஒவியம் விஷ்ணு ராம்) |
தேரில் ஏறியவுடன் தீபாராதனை நடந்து திரையிடப் பட்டது. புதிய மலர்கள் மற்றும் அலங்காரம் முடிந்து 1 மணி நேரத்திற்கு பின் மகா தீபாராதனை நடைபெற்றது. நான்கு வேதங்களும் நான்கு குதிரைகளும் நடுவில் குண்டலினி சக்தியை குறிக்கும் யாளமும் பூட்டப்பட்ட மகா ரதத்தில் நான்முகன் சாரதியாக அமர்ந்த தேரில் திரிபுராந்தக வடிவமாக ஆரூரார் அமர்ந்திருந்தார். 5 லட்சத்திற்கும் மேல் மக்கள் குழுமியிருக்க அத்தனை பிரம்மாண்டமான ஆழித்தேரில் கோயில் விமானத்தின் மீது ஏற்றப்படும் சுடராக தியாகராஜரின் முகம் மட்டும் தெரிந்தது. ஒருவகையில் தேர் மைய பீடத்திற்கு கீழுள்ளவை அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் என்ற ஏழு உலகங்களாகவும் பீடத்திற்கு மேல் உள்ள மூங்கில் கட்டுமானங்கள் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், சத்யலோகம் என்று லோகங்களாகவும் இறையுருவம் இந்த கணத்தில் பூலோகத்தில் தோன்றி காட்சியளிப்பதாகவும் தோன்றியது. திரை விலகியதும் தேவரடியார் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ஒரு கீர்த்தனையை பாடி அடுக்கு தீபாராதனை எடுத்த நயினார்
“ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய சாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மாஹ்யம்
கமேச்வரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:”
என்று முடித்தார். “ஆம், இவன் கோ !” என்று நினைத்துக்கொண்டேன்.
கலை, இலக்கியம், வரலாறு, ஆலயம் சார்ந்து கொஞ்சம் வாசிப்பு வந்தவுடன் வரலாற்று நூல்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் என வாசிக்கும் அனைத்திலும் இந்த தெய்வ உருவங்கள் உருவாகி வந்த பரிணாமத்தை, தொல் படிமங்களை, அதன் அடியை தேடி மணம் சென்றுகொண்டிருக்கிறது. இந்த திரிபுராந்தக வடிவம் என்றோ ஒருநாள் வில்லேந்தி சென்ற காட்டாளன், கிராதன். தற்போது வெண்முரசில் கிராதம் படித்துகொண்டிருப்பதால் இன்னும் அந்த ஆழம் இன்னும் தத்துவார்த்தமாக விரிவடைகிறது. அந்த இறை படிமங்களின் அடி, அறியமுடியா ஆழம். ஆனால் அதன் முடி இதோ இப்போது என் கண் முன் தூலமென இருக்கிறது. ஆழ் படிமங்கள்(archetypes) மீது அர்த்தம் ஏற்றி ஏற்றி தியாகராஜன் என்ற சிவனின் உருவகத்தை அதன் உச்சத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம்.
சமீப காலம் வரைக்கும் தேரில் தியாகராஜர் ஏறியவுடன் அவர்முன் தேவரடியார் தேர் மீது ஏறி அபிநயம் பிடித்து அடவு எடுத்து ஆடுவர். அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மருந்து பிரசாதம் நெய்வேத்யம் செய்யப்பட்டு வந்தது. தற்போது பாடல் மட்டும் என்ற வகையில் சுருங்கிவிட்டது. தேரின் மீது அமர்ந்து கொடுகொட்டி வாசிக்கப்பட்டிருக்கிறது.
நள்ளிரவு 1 மணிக்கு திரையடப் பட்டது. தெற்கு வாசல் அருகில் மணல்வெளியில் உறங்கி காலை ஊர் சென்று திரும்பினோம். காலை 5 மணிக்கு விநாயகர் முருகர் தேர்கள் புறப்பட்ட சத்தம் கேட்டு விழித்து கிளம்பினோம். மீண்டும் திருவாரூர் அடைய நண்பகல் ஆகி விட்டது. தேர் 9 மணிக்கு வடம் பிடிக்கப் பட்டது. நாங்கள் சென்றபோது ஆழித்தேர் அக்னிமூலையில் இருந்தது. தேர் வடம் பிடிக்க தொடங்கும்போது திரிபுராந்தகர் புன்சிரிப்பால் முப்புரம் எரித்ததை குறிக்கும் மூன்று வேட்டுகள் போடுவர்.
ஆழித்தேர் நகரும் பெருங்கோபுரமென அசைந்துவந்தது. தேர் இழுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், ஒவ்வொரு முறையும் திரும்புவதற்கும் 1-1.30 மணி நேரம் பணி செய்யும் கோயில் ஊழியர்கள். மொத்த தமிழகத்தில் இருந்தும் வந்துள்ள காவல் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள். வேட்டு போட்டுக்கொண்டு வரும் குழுவினர், நூற்றுக்கணக்கான இசைகலைஞர்கள், முட்டுக்கட்டை போடுபவர்கள், முட்டுக்கட்டை சுமந்து வரும் வண்டிகளை இயக்குபவர்கள்,நொறுங்கிய முட்டுக்கட்டைகளை மீண்டும் வண்டியில் ஏற்றுபவர்கள் என்று ஒரு அடி தேர் நகர்வதற்கு ஆயிரகணக்கானோர் வேலை செய்யவேண்டும். இத்தகைய பெருஞ்செயல்களில் அனைவருமே ஒற்றை விராடவடிவத்தின் பல கைகள் என்று ஆகின்றனர். தனியன் என்று அத்தருணத்தில் யாருமில்லை.
வடக்கு நோக்கி தேர் எங்களை கடந்து சென்றபின் தேருக்குப் பின், முன்னுள்ள அதே அளவு உழைப்பும் பெரும் பணிகளும் நடந்து கொண்டிருந்ததை பார்த்தோம். சமீப காலமாக பின்னிரு சக்கரங்களும் Bulldozer கொண்டு தள்ளப் படுகின்றன. அதை இயக்குபவர்கள், வேலி பிடித்து வேட்டு போடுபவர்கள் புதிய முட்டுக்கட்டைகளை எடுத்துச் செல்பவர்கள், நொறுங்கிய முட்டுக்கட்டைகளை மீண்டும் வண்டிக்கு எடுத்துசெல்பவர்கள், அடுத்த திருப்பத்திற்கு ஆயுத்தமாக இரும்பு தட்டுகளும், உயவுக்காக கிரீஸ் வாளிகளும் நிரம்பிய வண்டி என்று அங்கொரு உலகம் இயங்கிகொண்டிருந்தது.
அப்பரின் வரிகள் சட்டென நினைவிற்கு வந்தன.
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும்
உலகமெலாம் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
அமரர்கள் தம் பெருமானே ஆரூராயே.
ஆரூரா ஆரூரா என்று நான்முகனும் திருமாலும் தேர் ஊர்ந்த தடத்தை நோக்கி அழைத்துக்கொண்டே செல்கிறார்களாம்.
தெற்கு பார்த்து தேர் வலம் தொடங்கும்போது அகோரமுகமாகவும் பின் மேற்கு நோக்கி சத்யோஜதமாகவும் பின் வடக்கு நோக்கிய வாமதேவமாகவும் இறுதியாக கிழக்கு நோக்கிய தத்புருஷமாகவும் வடமேற்கில் திரும்பும் பொது ஈசானம் என்று ஐந்து முகமாகவும் தேர் பவனி வரும். வடமேற்கு மூலைக்கு வந்தபோது மதிய உணவிற்காக தேர் சில மணி நேரங்கள் நிறுத்தப் பட்டது. 7 மணிக்கு மேல் தேர் நிலைக்கு வந்தது. நிலையை அடைந்து சிகப்பு கொடி காட்டியபின் ஒவ்வொருவரும் தங்கள் அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தியது போன்று அழுது புரண்டு கண்ணீர் விட்டு ஆரூரா தியாகேசா என்று உச்ச நிலைக்கு சென்றனர். திரையிட்டு அலங்காரம் தொடங்கியது. அந்த நேரத்தில் விநாயகர் தேரில் ஏறி பார்ப்பதற்கு அனுமதித்தனர். ஐங்கலக்காசு விநாயகர் அந்தியொளியில் பொன்னென மின்னினார்.
அலங்காரம் முடிந்தபின் நித்ய பிரதோஷமாக தினந்தோறும் தியாகராஜரின் யதாஸ்தானத்தில் நடைபெறும் சாயரட்சை அன்று தேரிலேயே நடைபெற்றது. சோடச உபசாரம் திருமுறை விண்ணப்பம் முடிந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இன்னும் நீண்ட சோடச உபசாரம் பார்க்கவேண்டுமென்றால் அகிலா நவராத்திரி கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும்போது பார்க்கவேண்டும்.
தேரில் இருந்து கிளம்பி ராஜ நாராயணன் மண்டபம் செல்ல நள்ளிரவாகிவிடும். காலை மீண்டும் சஹஸ்ர கலசாபிஷேகம் பார்க்க வருவதாக திட்டம்.
திங்களன்று மதியம் மீண்டும் பூங்கோயில் அடைந்தோம். காலை தொடங்கிய சஹஸ்ரகலசாபிஷேகம் அப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆயிரம் கலசங்கள், ஆயிரம் சங்குகள் ஸ்தாபிக்கப் பட்டு யாகம் வளர்த்து தியாகராஜர், அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகர், ஆதி சண்டேஸ்வரர், ஐங்கலக் காசு விநாயகர் அனைவருக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் சங்குகள் மட்டுமின்றி பால் தயிர் முதலிய அனைத்து திரவியங்களாலும் மகா அபிஷேகம் நடைபெற்றுகொண்டிருந்தது.
ராஜ நாராயணன் மண்டபத்தில் வீற்றிருந்த தியாகராஜர் வெண்பட்டால் உடல் மறைக்கப் பட்டு ரஹஸ்ய மூர்த்தியாக காட்சி கொடுத்தார். அப்பர் இந்த சோமாஸ்கந்த வடிவத்தில் இருக்கும் தியாகராஜரை 25 மாகேஸ்வர மூர்த்தங்களையும் கடந்த வடிவமாக “ஐ ஐந்தின் அப்பாலாய்” என்கிறார்.
தியாகராஜருக்கு வலப்புரம் அமர்ந்திருந்த விநாயகருக்கு பின் நின்றிருந்தோம். யோக மரபில் குறிப்பிடும் மூலாதாரம் சுவாதிஷ்டானம் முதலான 7 சக்கரங்களில் ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு தெய்வம் கூறப் பட்டுள்ளது. மூலாதாரத்திற்கான தெய்வம் விநாயகர். ஆரூர் மூலாதார தலம் என்பதால் இங்கு இவருக்கு சிறப்பு அதிகம். திருவாரூர் கோயிலுக்குள் நூற்றுக்கணக்கான விநாயகரை பார்க்கலாம்.
விநாயகர் உருவம், நல்ல ஒரு குண்டு குழந்தையை அமர வைத்து செம்பால் போர்த்தியது போன்ற அத்தனை அழகான திருமேனி. பின்னிலிருந்து பார்த்தல் இரு தோள்களுக்கும் கீழ் தசை தொங்கல்களும் உருண்டையான முகமும் அகண்ட மத்தகத்தத்தின் இருபுறமும் வழவழப்பும் பார்க்க பார்க்க தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்றதொரு உருவம். வெண்முரசின் கிராதத்தில் பாசுபத பகுதியில் வரும் கொம்பன் என்ற குழந்தைக்கு ஒரு உருவம் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்.
தியாகேசர் அங்கு இருப்பதையே மறந்து விநாயகரின் பாதத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். பல குழந்தைகளில் பார்ப்பது போன்ற மெத்தென்ற கணுக்கால் மற்றும் விரல்களின் தடிமன். திருவாரூரில் வழிபாட்டில் உள்ள ஐம்பொன் திருமேனிகள் அனைத்துமே Masterpiece. அதில் ஒரு சிலை அருங்காட்சியகத்தில் இருந்தாலும் அது ஒரு மாமங்கலம். காட்சிகொடுத்தார் என்னும் ரிஷபாந்திகர், பிட்சாண்டவர் (திருவாதிரையன்று வெறும் ஒரு முழம் செவ்வந்தி மட்டும் சாற்றப் பட்டு நான்கு கரங்களை வீசிய அவரின் நளினத்தை பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது), குழந்தை போன்ற நடராஜர் திருமேனி, பைரவர், பரவையார் சங்கிலியார் உடனான சுந்தரர், அசலேஸ்வரர் கோயிலில் உள்ள அம்பிகையின் உருவம், ஆதி சண்டீசர், வன்மீகநாதர் கருவறையில் உள்ள போகசக்தி, அனைவரை விடவும் ஏன் தியாகராஜரின் திருமேனியை விடவும் விநாயகர் திருமேனி கொள்ளை அழகு.
ஞாயிறன்று மாலை தேரிலிருந்து விநாயகர் முருகரை இறக்கும்போது சகடத்தை கூட்ட நெரிசலுக்குள் கொண்டுவர முடியாததால் சிலைகளை அப்படியே தூக்கி சென்று சகடத்தில் ஏற்றினர். பள்ளிக்கு இழுத்து செல்வது போன்று விநாயகரை தும்பிக்கையை பிடித்து தூக்கி சென்றனர். மற்ற திரவியங்கள் முடிந்து திரையிடப்பட்டு புதிய சந்தனம் நாகஸ்வரம் தவில் இசையுடன் கொண்டுவரப் பட்டு அபிஷேகம் முடிந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மண்டபத்தில் இருந்து இறங்கி மூலவரையும் தரிசித்து விடைபெற்றோம். அன்று மாலை திரிபுராந்தகர் மற்றும் பிட்சாண்டவர் புறப்பாடு. ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களை திரிபுராந்தகர் அறுக்க அதனை பெற்றுக்கொள்ள பிட்சாண்டவர் செல்கிறார்.
![]() |
| தியாகராஜர் மூலஸ்தானம்- ஓவியம் விஷ்ணு ராம் |
பிட்சாண்டவர் சந்நிதியில் திரையிட்டு அலங்காரம் தொடங்கியிருந்தனர். இத்துடன் திருவிழா முடிவதில்லை. இன்றிலிருந்து இன்னும் 4 நாட்களுக்கு தியாகரின் உற்சவம் உள்ளது. பக்த காட்சி முடித்து அவர் யதாஸ்தானம் திரும்பியதும் கமலாம்பாள் உற்சவம் தொடங்கும் அதனை தொடர்ந்து சண்டீஸ்வரர் உற்சவத்துடன் துவஜா அவரோகணம், பின் ஆச்சாரியர் உற்சவம் முடிந்து விழா நிறைவுறும்.
மாயவரம் வந்து ரயிலேறி இல்லம் சேர்ந்தோம். ஏப்ரல் 2ம் தேதி பக்த காட்சி தேர் போன்றே அதுவும் முக்கியமான திருநாள். பாத தரிசனம் முடித்து தட்டஞ்சுற்றி மண்டபத்தில் பக்த காட்சி கொடுத்து தியாகராஜர் யதாஸ்தானம் திரும்புவார். தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமாக ஆகிய பெருந்திருவிழா ஒன்றில் பங்குகொண்ட இனிமை. ஒரு மகத்தான நாடகத்தில் பங்கெடுத்த நிறைவுடன் வீடடைந்தோம். ஆரூரா, தியாகேசா !








