Friday, 8 May 2026

தொன்மங்களின் ஆற்றல் - 6: ஜோசப் கேம்ப்பெல்

Shoshone elk hide robe
(Smarthistory – Eastern Shoshone: Hide Painting of the Sun Dance)

மோயர்ஸ்: நூறாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களால் இம்மதிப்பிற்குரிய விலங்குகள் கூட்டம்கூட்டமாக வெட்டிச்சாய்க்கப்பட்டதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

கேம்ப்பெல்: அது ஒரு புனிதமீறல். ஜார்ஜ் காட்லின் வரைந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால ஓவியங்களை பாருங்கள். பிரம்மாண்டமான மேற்கத்திய சமவெளிகளை காட்சிப்படுத்தும் பெரும்பாலான ஓவியங்களில் எருமைகள் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் இடம்பெற்றிருந்தன. ஆனால் அடுத்து வந்த அரைநூற்றாண்டு காலத்தில் துப்பாக்கி ஏந்திய எல்லைப்படையினர் மந்தைமந்தையாக எருமைகளை சுட்டுக்கொன்று அவற்றின் தோலை விற்பனைக்காக உரித்துச்சென்றனர். தோலற்ற உடல்கள் அங்கேயே அழுகவிடப்பட்டிருந்தன. இது அவற்றை படைத்த இறையை அவமதிக்கும் செயல்.

மோயர்ஸ்: இச்செயல் எருமைகளை மனிதனுக்கு இணையாக ‘அவர்’ என நடத்திய நிலையிலிருந்து…

கேம்ப்பெல்: ’அது’ என மாற்றிவிட்டது.

மோயர்ஸ்: பூர்வகுடிகள் எருமைகளை ‘அவர்’ என்று மதித்து ஒரு உயர்திணையைப் போல் அணுகினார்கள், ஒரு மரியாதைக்குரிய உயிராக.

கேம்ப்பெல்: பூர்வகுடிகள் மரம், கல் என அனைத்தையும் உயிர்களாக, உயர்திணையாகத்தான் கண்டார்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் அப்படி அணுகலாம், அவ்வாறு அணுகுகையில் ஒரு மாற்றத்தை நீங்கள் உங்களுக்குள் உணர்வீர்கள். ‘அவர்’ என உணரும் அகமும், ‘அது’ என உணரும் அகமும் வேறு வேறானது. போர்க்களத்தில் பலியாகும் மக்களை ’அவர்’ எனும் இடத்திலிருந்து ’அது’ எனும் நிலைக்கு மாற்றுவது செய்தித்தாள்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால். 

மோயர்ஸ்: திருமணத்திலும் கூட இது நிகழ்கிறதல்லவா? குழந்தைகளிடமும் இது நிகழ்கிறது.

கேம்ப்பெல்: ‘அவர்’ எனும் சொல் ‘அது’ என்று மாறுகையில், உங்களுக்கும் அவருக்குமான உறவு என்ன என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியாது. பழங்குடிகள் விலங்குகளுடன் கொண்டுள்ள உறவுமுறையானது, நாம் விலங்குகளுடன் கொண்டுள்ள உறவுமுறைக்கு நேரெதிரானது. நாம் விலங்குகளை கீழ்நிலை உயிர்களாக கருதுபவர்கள். ஏனெனில் விவிலியத்தில் நமக்கு நாம்தான் இவ்வுலகின் அதிபர்கள் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நான் முன்பு கூறியது போல வேட்டையின மக்களுக்கு விலங்குகள் உயர்வானவை. பாணி இனத்தைச் சேர்ந்த பூர்வகுடி ஒருவர், “தொடக்கத்தில் அறிவும் ஞானமும் விலங்குகளிடம்தான் இருந்தன. விண் வாழும் தெய்வமான திரவா (Tirawa) மனிதர்களிடம் நேரடியாகப் பேசியதில்லை. சில குறிப்பிட்ட விலங்குகளை அவர் மனிதர்களிடம் அனுப்பி விலங்குகளின் வழியாக தான் வெளிப்படுவதாக மனிதர்களுக்கு உரைத்தார். மேலும் மனிதர்கள் அவ்விலங்குகளுடமிருந்தும், நட்சத்திரங்கள், சூரியன், நிலவு ஆகியவைகளிடமிருந்துமே கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார். 

மோயர்ஸ்: அப்படியானால் வேட்டைமனிதனின் காலத்தில்தான் நாம் தொன்மக்கற்பனையின் விந்தையையும், இங்கிருப்பவைகளின் அதிசயத்தையும் உணரத் துவங்குகிறோம்.

கேம்ப்பெல்: ஆம். இது ஒரு மகத்தான கலையாக வெடித்துள்ளது. இதை உணர உங்களுக்கு தேவை ஒரு முழுமையான தொன்மக்கற்பனை மட்டுமே. 

மோயர்ஸ்: அந்த பண்படாத கலை ஆக்கங்களை நீங்கள் எப்போதேனும் கவனித்திருக்கிறீர்களா? மேலும் அக்கலையைப் பற்றியல்லாமல் அங்கு நின்று அதைப் படைத்த ஆண் அல்லது பெண்ணை பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? ஒரு ஊகமாகத்தான் நான் இதைக் கேட்கிறேன் - யார் அந்த அவன் அல்லது அவள்?

கேம்ப்பெல்: இந்த உணர்வுதான் அத்தகைய பழங்கால குகைகளுக்குள் நீங்கள் நுழைகையில் உங்களை வந்து அறைவது. குகையோவியங்களை வரைகையில் அவர்கள் மனதில் இருந்தது என்ன? எப்படி அவர்கள் அங்கு சென்றார்கள்? எப்படி அந்த இருளுக்குள் அவர்கள் எதையாவது கண்டிருப்பார்கள்? ஏனென்றால் ஒளியென அவர்களிடமிருந்தது ஒரு சிறுநெருப்பு மட்டுமே. இப்போது இங்கு அழகைப்பற்றி ஒரு கேள்வி எழுகிறது. அந்த ஓவியங்களில் தோன்றும் அழகு உண்மையிலேயே அவர்களால் உத்தேசிக்கப்பட்டதா? அல்லது அது அவர்களின் ஆன்மஅழகின் இயற்கையான வெளிப்பாடா? ஒரு பறவையின் இசையில் இருக்கும் இனிமைக்கு எதாவது நோக்கமுண்டா? அப்படி இருந்தால் அந்த நோக்கத்தின் அடிப்படையென்ன? அல்லது அது வெறுமனே பறவையின் வெளிப்பாடா? அல்லது அது நீங்கள் சொல்வது போல அப்பறவையின் ஆன்மாவின் அழகா? இவ்வாறுதான் அந்த ஓவியங்களை குறித்து நான் எப்போதும் சிந்திக்கின்றேன். இந்த கலைஞனின் நோக்கமும் கலைப்படைப்பின் வெளிப்பாடும் ’அழகியல்’ என்று நாம் சொல்வதை எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறது? ஒரு சிலந்தி பின்னும் வலையிலுள்ள அழகு சிலந்தியின் இயல்பிலிருந்து தோன்றுகிறது. அது உள்ளுணர்வாலான அழகு. நம் வாழ்க்கையின் அழகு எத்தனை தொலைவு நமது இருத்தலை சார்ந்திருக்கிறது? எந்த அளவிற்கு அதன் பிரக்ஞையையும் நோக்கத்தையும் சார்ந்திருக்கிறது? ஒரு மாபெரும் வினா இது. 

மோயர்ஸ்: ஓவியங்கள் நிரம்பிய குகைகளை முதன் முதலில் பார்த்தபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுங்கள். 

கேம்ப்பெல்: நான் அங்கிருந்து அகல விரும்பவில்லை. தேவாலயங்களில் இருப்பதுபோல எண்ணற்ற அறைகள் அங்கு இருந்தன. அனைத்து அறைகளிலும் விலங்குகளின் ஓவியங்கள் இருந்தன. நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு இருள் அங்கு நிறைந்திருந்தது. மின்விளக்குடன் நாங்கள் இருந்தபோதிலும் எங்களுடன் வந்த மனிதர் விளக்கை அணைத்தபோது நாங்கள் வாழ்க்கையிலேயே அதுவரை கண்டிராத ஒரு பேரிருளில் மூழ்கினோம். அவ்விருள் எங்களை முற்றாக வீழ்த்தியிருந்தது. நாங்கள் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. எத்திசையை நோக்குகிறோம் என்பதும் தெரியவில்லை. எங்கள் திசையுணர்வு முற்றிலும் காலியாகிவிட்டிருந்தது. சூரியன் கூட ஒளிர இயலாதோ எனும் அளவிற்கான இருளில் நாங்கள் இருந்தோம். பிறகு அவர் திடீரென விளக்கை உயிர்ப்பித்தபோது நாங்கள் ஒளிர்ந்துகொண்டிருக்கும் விலங்கு ஓவியங்களை கண்டோம். பட்டின் மீது மையின் சாரம் கொண்டு வரையப்பட்ட ஜப்பானிய ஓவியம் போல் அவை இருந்தது. இருபது அடி நீளமுடைய எருது பாறைப்புடைப்பு போன்ற பின்னங்கால்களுடன் அதில் தீட்டப்பட்டிருந்தது. அவர்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டிருந்தார்கள். 

Royal Portal, West Front, Chartres Cathedral, 1145-55

மோயர்ஸ்: நீங்கள் அவற்றை குகைக்கோயில்கள் என அழைக்கிறீர்கள். 

கேம்ப்பெல்: ஆம்.

மோயர்ஸ்: ஏன்?

கேம்ப்பெல்: கோயில் என்பது ஆத்மாவின் நிலம். ஒரு தேவாலயத்தினுள் நீங்கள் நுழைகையில் ஆன்மிகப்படிமங்கள் நிறைந்த உலகினுள் நுழைகிறீர்கள். உங்களுடைய ஆன்மிக வாழ்க்கையின் கருப்பை அது. அதாவது அன்னை ஆலயம். அங்கிருக்கும் அனைத்து வடிவங்களும் ஆன்மிகமானவை. இன்று தேவாலயத்தில் இறைபடிமமானது மானுட வடிவில் இருக்கின்றது. கடவுளும், இயேசுவும், பிற புனிதர்களும் மனித வடிவில் உள்ளனர். குகைகளில் அப்படிமங்கள் விலங்கு வடிவில் உள்ளன. ஆனால் இரண்டும் ஒன்றுதான். நம்புங்கள். உண்மையில் வடிவமென்பது இரண்டாம் பட்சம்தான். அது வழங்கும் செய்திதான் முதன்மையானது. 

மோயர்ஸ்: அப்படியென்றால் குகைகளின் செய்தி என்ன?

கேம்ப்பெல்: காலத்திற்கும் காலமின்மைக்கும் இடையே உள்ள உறவை குகைகள் கூறுகின்றன. அவ்வுறவு அங்கு எவ்வகையிலாவது உணரப்பட வேண்டும். 

மோயர்ஸ்: எதற்காக இக்குகைகள் பயன்படுத்தப்பட்டன?

கேம்ப்பெல்: இளைஞர்களை வேட்டைக்குள் ஆற்றுப்படுத்துவதற்காக இருக்கலாமென அறிஞர்கள் ஊகிக்கின்றனர். அன்றைய இளைஞர்கள் வேட்டையுடன் சேர்த்து விலங்குகளுக்கு மதிப்பளிப்பதைப் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இயற்றவேண்டிய சடங்குகளையும், தனது வாழ்க்கை இனிமேல் ஒரு சிறுவனுக்குரியதல்ல, மாறாக ஆண்மகனுக்கானது என்பதையும் அவர்கள் அறிய வேண்டியிருந்தது. உங்களுக்கே தெரியும், வேட்டைகள் மிக ஆபத்தானவை. இந்த குகைகள் மூத்த ஆண்களின் சடங்குகளுக்கான மடங்கள். அங்குதான் சிறுவர்கள் அன்னையின் வளர்ப்பிலிருந்து வெளியேறி தந்தையின் வழித்தோன்றலாக ஆகிறார்கள்.

மோயர்ஸ்: நான் ஒரு சிறுவனாக இருந்து இச்சடங்குகளில் ஒன்றை நான் செய்கையில் எனக்கு என்ன நிகழும்?

கேம்ப்பெல்: அவர்கள் என்ன செய்தார்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் ஆஸ்திரேலியாவின் தொல்குடிகள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களில் ஒரு சிறுவன் பருவமடைகையில், திடீரென ஒரு நாள் ஒரு ஆண்கள் கூட்டம் அங்கு வருகை புரியும். அவர்கள் தமது வெற்றுடலில் வெண்பறவைகளின் உடல்வரிகளை தமது சொந்த குருதியையே பசையாக பயன்படுத்தி ஒட்டியிருப்பார்கள். ஆத்மாவின் குரல் எனப்படும் புல்ரோரர் இசைக்கருவியை சுழற்றி ஒலியெழுப்புவார்கள். அந்த ஆண்கூட்டமே ஆத்மாக்களாக வருகிறது என்பது அதன் குறியீடு. அச்சிறுவன் அவர்களிடமிருந்து தப்பிக்க தனது அன்னையை காப்பாக்கிக்கொள்ள முயல்வான். அவன் அன்னையும் அவனை பாதுகாக்க முனைவாள். ஆனால் அந்த ஆண்கூட்டம் அவனை மிக எளிதாக கவர்ந்து செல்லும். அன்றிலிருந்து அவனுக்கு அன்னையில்லை. நினைத்தாலும் அவன் அன்னையிடம் மீள முடியாது. அவன் வேறொரு தளத்திற்கு வந்துவிட்டான். அவ்வாறு அழைத்துவரப்பட்ட சிறுவர்கள் ஆண்களின் புனிதநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்கள் விருத்தசேதனம், ஆண்குருதி அருந்துதல் போன்ற பலவகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அன்னையின் முலையருந்திய சிறுவர்கள் இப்போது ஆண்குருதியை பருகுகிறார்கள். அவர்கள் முழு ஆணாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இது நடந்து கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு தொன்மங்களின் நெறிமுறைகள் கற்பிக்கப்படும். தமது பழங்குடி இனத்தைச் சேர்ந்த தொன்மங்களும் அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. இறுதியில் அவர்கள் கிராமத்திற்கு மீள்கிறார்கள். அங்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் மணப்பெண் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாள். சிறுவன் இப்போது ஆணாக மாறி வந்துள்ளான். அவனது குழந்தைப்பருவம் அவனிடமிருந்து அகற்றப்பட்டுள்ளது. அவனது உடல், குலக்குறிகள் பொறிக்கப்பட்டு, விருத்தசேதனம் செய்யப்பட்டு, சட்டதிட்டங்கள் புகுத்தப்பட்டு மாற்றமடைந்திருக்கிறது. இப்போது அவன் ஒரு ஆணின் உடலைப் பெற்றிருக்கிறான். இதற்குப் பிறகு அவன் தனது குழந்தைப்பருவத்திற்கு மீள எவ்வித வாய்ப்புமில்லை. 

Aborigine Circumcision initiation

மோயர்ஸ்: நீங்கள் மீண்டும் அன்னையிடம் செல்வதில்லை. 

கேம்ப்பெல்: இல்லை. அப்படி எதுவும் நம்முடைய வாழ்க்கையில் இல்லை. 45 வயதான ஆண்மகன் இன்னமும் தன் தந்தைக்கு கீழ்ப்படிய முயன்றுகொண்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்காக அவன் ஒரு உளவியலாளரை நாடவேண்டியுள்ளது, உளவியலாளர் அவனுக்காக இந்த வேலையை செய்வார். 

மோயர்ஸ்: அல்லது அவன் திரைப்படங்களுக்கு செல்கிறான். 

கேம்ப்பெல்: அதுதான் தொன்மரீதியான மறுதுவக்க நெறிகளுக்கான நமது மாற்று, ஆனால் திரைப்படத்தை தயாரிப்பதன் பின்னாலுள்ள எண்ணமும் அந்த துவக்கச்சடங்கின் பின்னாலுள்ள எண்ணமும் ஒன்றல்ல.

மோயர்ஸ்: ஆனால் நமது சமூகத்தில் இருந்து பெருமளவில் மறைந்துபோன இந்த துவக்கச்சடங்குகள் இன்று இல்லாதிருக்கும் நிலையில் திரையில் காட்டப்படும் கற்பனையான உலகம் ஒரு பிழையான வழியிலாவது அக்கதையை சொல்லவேண்டுமல்லவா?

கேம்ப்பெல்: ஆம். ஆனால் நம்முடைய துரதிர்ஷ்ட நிலையென்னவென்றால் இக்கதைகளை எழுதும் மனிதர்கள் தங்கள் பொறுப்பு குறித்த உணர்வற்றவர்களாக இருப்பதே. கதைகள் வாழ்க்கைகளை உருவாக்கவும் செய்கிறது, உடைக்கவும் செய்கிறது. ஆனால் திரைப்படம் வெறும் பணம் ஈட்டுவதற்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது. சடங்கை இயற்றும் பூசகமரபுக்குள்ள பொறுப்பு திரைப்படங்களுக்கு இல்லை. இது இன்றைய சிக்கல்களில் ஒன்று. 

மோயர்ஸ்: அவ்வகையான எந்த சடங்குமே இன்று நம்மிடம் இல்லையா?

கேம்ப்பெல்: இல்லை என்பதை நான் சற்று அச்சத்துடன் சொல்கிறேன். ஆகவே இளைஞர்கள் அவற்றை தாங்களாகவே கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் பயணக்குழுக்களும், அதைப்போன்ற பல விஷயங்களும் உருவாகியுள்ளன. இவற்றின் வழியாக ஒருவர் தானாகவே தனக்கு ஒரு மறுதுவக்கத்தை அளித்துக்கொள்கிறார். 

மோயர்ஸ்: ஆகவே தொன்மம் விழாக்களுடனும் பழங்குடிச்சடங்குகளுடனும் நேரடித் தொடர்புடையது. தொன்மங்கள் இல்லாமலாவதை சடங்குகளின் முடிவு எனக் கொள்ளலாம். 

கேம்ப்பெல்: ஒரு சடங்கென்பது ஒரு தொன்மத்தின் நெறிவடிவம். ஒரு சடங்கில் பங்குகொள்வதன் மூலமாக நீங்கள் ஒரு தொன்மத்தில் பங்குகொள்கிறீர்கள். 

மோயர்ஸ்: இத்தகைய தொன்மங்கள் இல்லாமல் போனதால் இன்றைய இளைஞர்களுக்கு என்ன நிகழ்கிறது?

கேம்ப்பெல்: இன்று இவ்வகை சடங்குகளுக்கு மாற்றாக ‘உறுதிப்படுத்தல்’ சடங்கு (Confirmation Ritual) நமது மதத்தில் உள்ளது. ஒரு கத்தோலிக்கச் சிறுவனாக உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டிய பெயரை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். ஆனால் மதபோதகர் உங்கள் உடலில் குலக்குறி பதிப்பதற்கும், உங்கள் பற்களை பிடுங்குவதற்கும் மாறாக ஒரு இனிய புன்னகையுடன் உங்கள் கன்னத்தை தட்டுகிறார். இந்த அளவிற்கு இது குறைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஒன்றுமே நிகழவில்லை. அதேபோல ‘பார் மிட்ஸ்வா’ (Bar Mitzvah) என்பது யூதர்களுக்கான மாற்றுச்சடங்காக உள்ளது. ஆனால் இவை ஒரு உளவியல் மாற்றத்தை நிகழ்த்துமளவிற்கு செயல்புரிகிறதா என்பது ஒவ்வொரு தனிமனிதனையும் பொறுத்தது என நான் நினைக்கிறேன். ஆனால் பழங்காலத்தில் எவ்வித பிரச்சினையும் இருந்ததில்லை. சடங்கிற்கு பின் அச்சிறுவன் ஒரு மாறுபட்ட உடலுடன் வருகிறான். ஆகவே அவன் உண்மையாகவே ஏதோ ஒன்றினுள் புகுந்து வெளிவந்திருக்கிறான். 

மோயர்ஸ்: இவற்றில் பெண்களுக்கான இடம் என்ன? பெரும்பாலான குகை ஓவியங்களில் ஆண்களே உள்ளனர். ஆண்களுக்கான ஒரு இரகசிய சமூகமா இது?

கேம்ப்பெல்: இல்லை. இது இரகசிய சமூகமாக இருந்திருக்கவில்லை. பொதுவாக சிறுவர்களுக்குத்தான் இதைச் செய்ய வேண்டியிருந்தது, அதற்கு இயற்கைரீதியிலான காரணமும் இருந்தது. ஆனால் இக்காலகட்டத்தில் பெண்களுக்கு நடந்ததைப் பற்றி நமக்கு துல்லியமாக எதுவும் தெரியாது என்பது உண்மைதான். ஏனெனில் அதைக்குறித்துச் சொல்ல சொற்பமான சான்றுகளே நம்மிடம் உள்ளன. ஆனால் இன்றைய முக்கியமான பண்பாடுகளில், ஒரு சிறுமி பெண்ணாக மாறுவது அவள் பூப்படையும்போதுதான். அது அவளுக்கு தானாகவே நிகழ்கிறது. சொல்லப்போனால் இயற்கை அதை அவளுக்கு இயற்றுகிறது. ஆகவே அவள் அடைந்த மாற்றத்தில் அவளுடைய தன்னளிப்பு என ஏதுமில்லை. அவள் செய்யக்கூடியதெல்லாம் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒரு குடிசைக்குள் அமர்ந்துகொண்டு தனக்கு நேர்ந்த மாற்றத்தைக் குறித்து சிந்திப்பது மட்டுமே. 

மோயர்ஸ்: அவள் எப்படி அதை செய்கிறாள்?

கேம்ப்பெல்: அவள் அங்கே அமர்ந்திருக்கிறாள். இப்போது அவள் ஒரு பெண். பெண் என்றால் என்ன? பெண் என்பவள் வாழ்க்கையின் ஊர்தி. வாழ்க்கை அவளை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. பெண்தான் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது. பிறப்பளிப்பது, உணவூட்டுவது என அனைத்திற்கும். தனது சக்தியைக் கொண்டு ஒப்புநோக்கினால் அவள் பூமி தெய்வத்திற்கு நிகரானவள். இதை அவள் உணரவேண்டும். ஒரு சிறுவனுக்கு இதைப்போல ஏதும் நிகழ்வதில்லை. ஆகவே அவனை ஒரு ஆண்மகனாக மாற்றி தன்னைவிட மேலான ஏதோ ஒன்றிற்கு பணியாளனாக ஆக்க வேண்டியிருக்கிறது. 

மோயர்ஸ்: இங்குதான் தொன்மக்கற்பனை வேலை செய்யத் துவங்குகிறதல்லவா ?

கேம்ப்பெல்: ஆம். 

மோயர்ஸ்: சென்றகாலத்தின் முதன்மைக் கருக்களாக இருந்தது என்ன? இறப்பா?

கேம்ப்பெல்: அக்காலகட்டத்தின் கருக்களில் ஒன்று - இறப்பு என்ற மர்மம், அதுதான் வாழ்வு என்ற மர்மத்தை சமன்படுத்துகிறது. இவை இரண்டும் ஒரு மர்மத்தின் இருபக்கங்களே. இரண்டாவது கரு - இறப்பிற்கும் மறுபிறப்பெடுக்கும் விலங்குலகத்திற்கும் இடையே உள்ள உறவு. மூன்றாவது, உணவு ஈட்டுதல் பற்றியது. இங்குதான் இயற்கையுடன் பெண் கொண்டிருக்கும் உறவு வருகிறது. அடுத்ததாக, குழந்தைகள் பருவமடைகையில் வரும் மாற்றம் பற்றியது. அந்த மாற்றம் மக்களின் சடங்கு-வாழ்க்கை முழுவதிலும் ஒரு அடிப்படைக் கருதுகோளாக இன்றும் நம்மிடம் உள்ளது. கவனிப்பற்ற குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவர்கள் இயற்கையின் பண்படாத துடிப்புகளை அப்படியே சமூகத்தின் உறுப்பினர்களிடம் காட்டுவது. யாராவது இப்படி விதிமுறைகளை மீறி ஏதாவது செய்கையில் சமூக மக்களால் அதை தாங்க இயலாது. ஆகவே சமூகம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்காது. ஒருவேளை இவர்கள் அவர்களை கொல்லவும் கூடும். 

மோயர்ஸ்: ஏனெனில் அவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த நலன்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருந்தார்கள். இல்லையா ?

கேம்ப்பெல்: ஆம். அப்படித்தான். அவர்கள் உடலை கிழிக்கும் புற்றுநோய் போல. பழங்குடிகள் எப்போதுமே இந்த விளிம்பில்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 

மோயர்ஸ்: அவ்விளிம்பில் இருந்துகொண்டுதான் அவர்கள் அடிப்படைக்கேள்விகளை கேட்கத் துவங்கினார்கள். 

கேம்ப்பெல்: ஆம். ஆனால் மரணத்தைக் குறித்த அவர்களின் மனநிலை ஒருபோதும் நம்முடையது போலிருந்ததில்லை. ஆழுலகம் பற்றிய கருத்துக்கள் அங்கே மிகத்தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. 

மோயர்ஸ்: பழமையான சடங்குகளின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அது உங்களை ஒரு பழங்குடி உறுப்பினராக, இனக்குழுவின் ஒரு உறுப்பினராக, சமூகத்தின் ஒரு உறுப்பினராக ஆக்கியது. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தின் வரலாற்றைப் பார்த்தால், அது சமூகத்திலிருந்து சுயத்தை பிரித்துக்கொள்வதை மெல்ல மெல்ல விரிவாக்கிக்கொண்டிருக்கிறது. ‘நான்’ என்பதும் ‘தனி மனிதன்’ என்பதும்தான் இங்கே முதன்மையானதாகிறது. 

Laplander wedding photograph, Norway

கேம்ப்பெல்: நான் இதை மேற்கத்திய கலாச்சாரத்தின் பண்பு என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் பிரிதல் என்பது ஒரு எளிய உயிரியல் ரீதியான பிரிவாக மட்டும் இல்லை. மிகச்சமீப காலம் வரை அதில் ஒரு ஆன்மிகரீதியான வரவு இருந்தது. அமெரிக்க குடியரசுத்தலைவரின் பதவியேற்பு விழா பதிவுகளை இப்போது நீங்கள் கண்டால் அவர் ஒரு தொப்பி அணிந்திருப்பது தெரியும். அதிபர் வில்சன் அவருடைய பதவிக்காலம் முழுவதும் ஒரு தொப்பியை அணிந்திருந்தார். ஆனால் அவருடைய அன்றாட வாழ்க்கையில் அவர் அதை அணிந்ததேயில்லை. ஒரு அதிபராக அவருடைய இருத்தலுக்கான சடங்கின் அம்சமாக அதை அவர் வைத்திருந்தார். ஆனால் இப்போது ஜான்’னை பாருங்கள், நேராக கோல்ப் மைதானத்திற்கு வருவார், உங்கள் அருகில் அமர்வார், நாம் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று பேசுவார். இன்று சடங்குகள் குறைந்துகொண்டு வருகின்றன. ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் நிகழும் பிரார்த்தனைக் கூட்டத்தின் மொழி சடங்கிற்கான பூர்வமொழியிலிருந்து உள்ளூர் சொற்கள் கலந்த மொழிக்கு மாறிவிட்டது. பிரார்த்தனை மொழியான இலத்தீன் நம்மை உள்ளூர் சார்ந்த களத்திற்கு வெளியே வைத்திருந்தது. முன்பெல்லாம் நீங்கள் மதபோதகரின் பின்புறம் இருக்குமாறு தேவாலயத்தின் பிரார்த்தனை மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் உங்களை நீங்களே வெளியேற்றிக்கொண்டீர்கள். ஆனால் இன்று அவர்கள் பிரார்த்தனை மேடையை உங்கள் பக்கமாக திருப்பிவிட்டார்கள், அது ஜூலியா சைல்டு (சமையல் நிபுணர்) உங்கள் முன் நின்று ஒரு செய்முறை விளக்கமளிப்பது போல மனதுக்கும் உடலுக்கும் வசதியாக அமைந்துவிட்டது. 

மோயர்ஸ்: மேலும் அவர்கள் அங்கு கித்தார் வாசிக்கின்றனர். 

கேம்ப்பெல்: ஆம், கித்தாரும் வாசிக்கிறார்கள். ஆனால் இச்சடங்குகளின் பணியென்பது உங்களை புறவயமாக விரித்துக்கொள்ளவைப்பதுதானே தவிர நீங்கள் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் வளைக்குள் நன்றாக சுருண்டுகொள்வதற்காக அல்ல என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். 

மோயர்ஸ்: ஒரு திருமணச்சடங்கு உங்களைத் தவிர்த்து உங்கள் இணையரை நோக்கி உங்களை வெளிப்பட வைக்கிறது.

கேம்ப்பெல்: உண்மைதான். ஆனால் ஒரு உள்ளார்ந்த உண்மையை கடத்திவிட்ட சடங்குகள் இன்று வெறும் வடிவமாக தங்கிவிட்டன. இது பல சமூகச்சடங்குகளிலும் தனிப்பட்ட திருமணச்சடங்குகளிலும் நிதர்சனமாக உள்ளது.

மோயர்ஸ்: சடங்குகளில் இருந்த மதஅறிவுரைகள் ஏன் பெரும்பாலான மக்களுக்கு வழக்கொழிந்ததாக மாறிவிட்டது என இப்போது புரிகிறது. 

கேம்ப்பெல்: சடங்கை பொருத்தவரையில் அது உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டும். பெரும்பாலான நமது சடங்குகள் மரித்துவிட்டன. பண்படாத, துவக்ககாலத்து சமூகங்களைப் பற்றி படிப்பதும், எப்படி அவர்கள் நாட்டார் கதைகளையும் தொன்மங்களையும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாற்றுகிறார்கள் என்பதை அறிவதும் மிகுந்த ஆர்வமூட்டுவது. 

பொதுவாக மக்கள் ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்திற்கு இடம்பெயர்பவர்கள். உதாரணமாக தாவரங்கள் முக்கிய ஆதரவாக இருக்கும் நிலப்பகுதியிலிருந்து சமவெளிப்பகுதிக்கு செல்வதை சொல்லலாம். குதிரைப்பயணம் செய்யும் காலகட்டத்தை சேர்ந்த நம்முடைய சமவெளிப்பகுதி அமெரிக்க-பூர்வகுடிகள் பெரும்பாலானவர்கள் மிஸிஸிப்பியன் பண்பாட்டைச் சார்ந்தவர்கள். அவர்கள் மிஸிஸிப்பி கரையின் வளர்ந்த பெருநகரங்களிலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களிலும் வசித்தார்கள். பிறகு அவர்கள் ஸ்பானியர்களிடமிருந்து குதிரைகளைப் பெற்றுக்கொண்டு சமவெளிகளில் ஊடுருவி அங்கிருந்த எருமைமந்தைகளை வேட்டையாடினர். இக்காலகட்டத்தில்தான் தாவரங்களைச் சார்ந்திருந்த அவர்களுடைய தொன்மம் எருமைத்தொன்மத்திற்கு மாறியது. பழங்காலத் தாவரத்தொன்மங்களின் கட்டமைப்பு டகோடா, பாவ்னி, கொய்வா போன்ற பூர்வகுடிகள் மற்றும் அதைப்போல மேலும் பல பூர்வகுடிகளின் தொன்மத்திற்கு அடித்தளமாக அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். 

மோயர்ஸ்: சூழல்தான் கதைகளை வடிவமைக்கிறது என்கிறீர்களா?

கேம்ப்பெல்: ஆம். மக்கள் சூழலுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். ஆனால் சூழலுக்கு எதிர்வினையாற்றாத ஒரு மரபை நாம் இன்று பெற்றிருக்கிறோம். சொல்லப்போனால் அது எங்கிருந்தோ பொ.மு. முதல் நூற்றாண்டிலிருந்து வந்திருக்கின்றது. அது நமது நவீன கலாச்சாரத்தின் தகுதிகளையோ அல்லது சாத்தியமுள்ள புதிய விஷயங்களையோ அல்லது பிரபஞ்சத்தைப் பற்றிய புதிய பார்வையையோ தன்னுள் கொண்டிருக்கவில்லை. ஆகவேதான் தொன்மங்கள் உயிருடன் வைக்கப்படவேண்டும் என்று கூறுகிறேன். தொன்மங்களை உயிருடன் வைக்க கலைஞர்களால்தான் இயலும். கலைஞனின் பணிதான் சூழலையும் உலகத்தையும் தொன்மமாக்குகிறது. 

மோயர்ஸ்: அப்படியென்றால் கலைஞர்கள்தான் நமது காலத்தின் தொன்மப்படைப்பாளர்கள் என்கிறீர்களா?

கேம்ப்பெல்: ஆம். ஆதிகாலத்தின் தொன்மப்படைப்பாளர்கள் இன்றைய நமது கலைஞர்களுக்கு மறுஇணையாக இருந்தார்கள். 

மோயர்ஸ்: அவர்கள் குகையோவியங்களை வரைந்தார்கள். சடங்குகளைச் செய்தார்கள். 

கேம்ப்பெல்: ஆம். ‘das Volk ditchet’ என்று ஒரு பழைய கற்பனாவாத கருத்து ஜெர்மனியில் இருந்தது. அது நாட்டாரியலில் இருந்துதான் மரபார்ந்த கலாச்சாரம் சார்ந்த கருத்துக்களும் பாடல்களும் வந்தது என்றது. ஆனால் அவை அங்கிருந்து வரவில்லை. அவை மேன்மையான அனுபவங்களில் இருந்து அதாவது பிரபஞ்சத்தின் இசைக்காக செவி திறந்துகொண்ட ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர்களின் அனுபவத்தில் இருந்து வருகிறது. இவர்கள் நாட்டார் மரபுடன் பேசுகிறார்கள், அங்கிருந்து ஒரு பதில் வருகிறது, பின் அது ஒரு உரையாடலாக மாறுகிறது. ஆனால் ஒரு நாட்டார் மரபை வடிவமைப்பதில் இருக்கும் முதல் துடிப்பு மேலிருந்துதான் வருகிறது, கீழிருந்து அல்ல. 

மோயர்ஸ்: இந்த முற்கால ஆரம்பநிலை கலாச்சாரத்தில் இன்றைய கவிஞர்களுக்கு இணையானவர்களாக யார் இருந்திருக்கக்கூடும்?

கேம்ப்பெல்: பூசகர்கள் (Shaman). பூசகன் ஒரு மனிதன், ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். தன் குழந்தைப்பருவத்தின் இறுதியில் அல்லது வாலிபப்பருவத்தின் துவக்கத்தில் ஏதாவதொரு கொந்தளிப்பான உளவியல் அனுபவத்தை பெற்றிருப்பார்கள். அது அவர்களை முற்றாக உள்நோக்கித் திருப்பியிருக்கும். ஒருவகையான பிளவாளுமை உடைவு அது. முழு நனவிலியும் திறந்துகொள்ள, ஷாமன்கள் அதனுள் விழுகிறார்கள். ஷாமன்களின் இவ்வனுபவம் பலமுறை விளக்கப்பட்டுள்ளது. அது சைபீரியா முதல் அமெரிக்கா வழியாக கீழிருக்கும் டியரா டெல் ப்யூகோ (Tierra del Fuego) வரை நிகழ்கிறது. 

மோயர்ஸ்: மனதின் உச்சநிலை அதன் ஒரு பகுதி. 

கேம்ப்பெல்: ஆம். 

மோயர்ஸ்: உதாரணமாக புஷ்மேன் சமூகத்தில் காணப்படும் ஆழ்நிலை நடனம். 

Siberian Shaman

கேம்ப்பெல்: அருமையான உதாரணம் ஒன்றை இப்போது சொல்கிறேன். புஷ்மன் சமூகம் பாலைவனத்தால் ஆன ஒரு உலகில் வாழ்கின்றனர், அங்கு வாழ்க்கை மிகக்கடினமானது, பெரும் பதட்டங்களை உள்ளடக்கியது. ஆண்களும் பெண்களும் அங்கே தனித்தனியாக மிகுந்த ஒழுக்கத்துடன் வாழ்வர். நடனங்களின்போது மட்டுமே அவர்கள் ஒன்றிணைவர். பெண்கள் வட்டமாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ அமர்ந்துகொண்டு தொடைகளைத் தட்டி தங்களைச் சுற்றி ஆடும் ஆண்களின் நடனத்திற்கு தாளமிடுவர். பெண்களை மையமாகக் கொண்டு ஆண்கள் நடனமாடுவர். தங்கள் பாடலாலும் தொடையொலிகளாலும் பெண்கள் அந்த நடனத்தையும் ஆண்களுக்குள் நிகழ்வதையும் கட்டுப்படுத்துகிறார்கள். 

மோயர்ஸ்: இவ்விதம் பெண்கள் ஆண்களின் நடனத்தை கட்டுப்படுத்துவதில் உள்ள சிறப்பென்ன? 

கேம்ப்பெல்: நல்ல கேள்வி. பெண் என்பவள் வாழ்க்கை. ஆண் அவ்வாழ்க்கையின் சேவகன். அதுதான் இதிலிருக்கும் அடிப்படைக் கருத்து. இவ்வாறு இரவு முழுவதும் ஆண்கள் வட்டமிட்டு நடனமாடுகையில் அவர்களில் ஒருவன் திடீரென சன்னதம் கொள்வான். அவனுடைய அனுபவத்தை நாம் ஒருவகையான ஆட்கொள்ளப்படுதல் என்றழைக்கலாம். ஆனால் அது ஒரு மின்னல் போல, இடி போல அவன் மீது இறங்கி அவனது மூலாதாரத்திலிருந்து முதுகுத் தண்டுவடம் வழியாக மேலேறி உச்சந்தலையை வந்தடைவதாக விளக்கப்படுகிறது. 

மோயர்ஸ்: ‘விலங்காற்றலின் வழியில்’ (The Way of the Animal Powers) எனும் உங்கள் நூலில் இது விவரிக்கப்பட்டுள்ளது. 

கேம்ப்பெல்: “மக்கள் பாடும்போது நான் நடனமிடுகிறேன். நான் பூமிக்குள் நுழைகிறேன். மக்கள் நீரருந்துமிடம் போன்ற ஓரிடத்திற்குள் நான் செல்கிறேன். அங்கு நான் வெகு தொலைவு பயணிக்கின்றேன். பெரும்தொலைவு அது.” அவன் இப்போது உள்ளிழுக்கப்பட்டுவிட்டான். அத்தகைய ஒரு அனுபவத்தின் விவரிப்பு இது.

“நான் என்னிலிருந்து வெளிப்படுகையில் நான் முன்னரே மேலேறிக்கொண்டிருக்கிறேன். கயிறுகளை பற்றிக்கொண்டு நான் ஏறுகிறேன். தெற்குப்பக்கமாக கயிறுகள் கிடக்கின்றன. நான் அவற்றில் ஒன்றைப் பற்றி ஏறிய பின்பு அதை விடுத்து இன்னொன்றை பற்றுகிறேன். பிறகு அதை உதறிவிட்டு மற்றொன்றை பற்றுகிறேன். இவ்வாறாக நீங்கள் கடவுளின் இருப்பிடத்தை அடைகையில் நீங்கள் உங்களை சிறியதாக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் சிறியதாகிவிட்டீர்கள். நீங்கள் உருவத்தில் சிறுத்து கடவுளின் இடத்திற்கு வந்துள்ளீர்கள். அங்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்கிறீர்கள். பின்பு நீங்கள் அனைவரும் உள்ள இடத்திற்கு திரும்புகிறீர்கள். உங்கள் முகத்தை ஒளித்துக்கொள்கிறீர்கள். உங்கள் முகத்தை மறைத்ததினால் நீங்கள் அங்கு எதையும் காண்பதில்லை. நீங்கள் மீள மீள பயணித்து இறுதியாக உங்கள் உடலுக்குள் புகுந்துகொள்கிறீர்கள். உங்களுக்கு பின்னால் நின்றிருக்கும் மக்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கின்றனர். உங்களை அவர்கள் அஞ்சுகிறார்கள். நீங்கள் பூமிக்கு வந்து உங்கள் தோலைத் துளைத்து உடலுக்குள் உட்புகுகிறீர்கள். பெருங்குரலெடுத்து யீ…யீ……யீ…. என்று அலறுகிறீர்கள். அது நீங்கள் உடல் மீண்டதற்கான ஒலி. பின் நீங்கள் பாடத் துவங்குகிறீர்கள். இதை முன்பே கண்டு தேர்ந்தவர்கள் உங்களைச் சுற்றி நிற்கிறார்கள். அவர்கள் மந்திரத்தூளை அள்ளி உங்கள் முகத்தில் ஊதுகிறார்கள். உங்கள் தலையை கைகளால் பற்றிக்கொண்டு முகத்தின் இருபக்கமும் மந்திரத்தூளை ஊதுகிறார்கள். இவ்விதம்தான் நீங்கள் மீண்டும் உயிர் கொள்கிறீர்கள். அவர்கள் அப்படி செய்யாவிடில் நீங்கள் உயிர் துறப்பீர்கள். மடிந்து விழுவீர்கள். நண்பர்களே, அது இதைத்தான் செய்கிறது. நடனத்தின் வழியாக நான் இதை செய்கிறேன்.” 

கடவுளே! இவ்விளைஞன் தன்னுணர்வின் இன்னொரு பேராளுகையின் அனுபவத்தை பெற்றிருக்கிறான்! இவ்வனுபவத்தில் அவர்கள் தன்னியல்பாகவே காற்றில் பறக்கிறார்கள். 

மோயர்ஸ்: அதன் பின் அவன் பூசகனாக மாறுகிறான். 

கேம்ப்பெல்: இல்லை. இப்பண்பாட்டில் அவன் அப்படி ஆவதில்லை. அவன் ஒரு ஆழ்நிலை நடனக்காரனாக ஆகிறான். அவ்வண்ணம் ஆகும் ஆற்றலை அனைத்து ஆண்களும் தன்னுள் கொண்டிருக்கிறார்கள். 

மோயர்ஸ்: நம் பண்பாட்டின் அனுபவத்திலும் இதைப்போல ஏதாவது பொதுவானதாக உள்ளதா? குறிப்பாக நமது தென்பகுதி பண்பாட்டிலுள்ள மறுபிறவி அனுபவத்தைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

கேம்ப்பெல்: அப்படி ஏதாவது இருக்கவேண்டும். இது மண்ணிலிருந்து தொன்மத்தின் பேரரசிற்கு செல்லும் ஆழ்நிலைப் பயணத்தின் அனுபவம். அதாவது கடவுளிடம் அல்லது ஆற்றலின் சிம்மாசனத்திடம் செல்லும் ஆழ்நிலைப் பயணம். கிறித்துவத்தில் மறுபிறப்பின் அனுபவம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் மத்தியகால ஞானிகள் இறைதரிசனம் பெற்ற கதைகள் அந்த அனுபவத்திற்கு இணையானவை என நான் நினைக்கிறேன்.

மோயர்ஸ்: இவ்வனுபவத்தில் உச்சநிலை உணர்வு உள்ளது, இல்லையா?

கேம்ப்பெல்: பதிவான வரையில் அதில் எப்போதுமே உச்சநிலை உண்டு. 

மோயர்ஸ்: அப்படியொரு சடங்கினை நீங்கள் என்றாவது கண்டதுண்டா? அப்படியொரு நிகழ்வினை? அதைப்போலவொரு உச்சநிலையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா அல்லது அதற்கு சாட்சியாய் இருந்திருக்கிறீர்களா?

கேம்ப்பெல்: இல்லை. நான் அப்படி எதையும் கண்டதில்லை. கரீபியன் தீவின் ஹெய்ட்டி நாட்டில் வசிக்கும் என் நண்பர்கள் அங்கு நிகழும் வூடு (VOODOO Ceremony) திருவிழாக்களில் பங்குகொள்வார்கள். மூதாதையரின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் அவ்விழாக்களில் மக்கள் ஆட்கொள்ளப்பட்டவர்களாக மாறுவர். இசையுடன் கூடிய நடனங்களின் வழியாக அங்கு உச்சநிலை எட்டப்படுகிறது. போருக்கு செல்லும் முன்னர் படைவீரர்களை மூர்க்கமாக மாற்றுவார்கள் என்றவொரு பழைய கருத்து இருக்கிறது. போரின்போது அவர்கள் உண்மையாகவே வெறிபிடித்த நிலையில் இருக்கவேண்டும். அதை போர்கூச்சல் என்கிறார்கள். 

மோயர்ஸ்: இந்த ஒரே வழியில்தான் ஒருவன் நனவிலியை உணரமுடியுமா?

கேம்ப்பெல்: இல்லை. எதிர்பாரா தருணம் ஒன்றில் திடீரென்ற ஒரு உட்புகுதலாக அது மனிதர்களுக்கு நிகழ்வது இன்னொரு வழி. ஒரு பெரும் தாக்குதல் போல அது அவர்களை வந்தடைகிறது.

மோயர்ஸ்: இத்தகைய உளவியல் அனுபவத்தை அல்லது அதிபயங்கர அனுபவத்தை அல்லது பேரானந்தநிலையை அடைந்த ஒருவன் அந்த அறியமுடியா அனுபவத்தை பிறருக்கு விளக்குபவனாக மாறுகிறான். 

கேம்ப்பெல்: ஆம். நீங்கள் சொல்வதைப்போல அவன் தொன்மம்சார்-வாழ்க்கையின் மரபை விளக்குபவனாக மாறுகிறான். 

மோயர்ஸ்: எது அவனை அதனுள் இழுக்கிறது?

கேம்ப்பெல்: இதற்கு பதிலளிக்க பிளாக் எல்க் (Black Elk) எனும் சியோக்ஸ் (Sioux) இன சிறுவனின் அனுபவம் உதவலாம். நான் அறிந்தவரையில் அதுதான் மிகச்சிறந்த உதாரணம். சியோக்ஸ் இனமக்களை அமெரிக்க குதிரைப்படைகள் அழிப்பதற்கு முன்னர் இது நிகழ்ந்தது. சமவெளி நிலத்தின் மிகச்சிறந்த மக்களாக அவர்கள் திகழ்ந்தார்கள். பிளாக் எல்க் ஒன்பது வயது சிறுவனாக இருக்கையில் உளவியல்ரீதியாக பாதிக்கப்படைந்து உடல்நலம் குன்றி இருந்தான். அதற்கு காரணமாக ஒரு வழக்கமான மந்திரக்கதையை அவன் குடும்பம் கூறியது. சிறுவனின் உடல் துடிதுடித்து பின் செயலிழந்துபோனது. கலக்கமுற்ற அவன் குடும்பம் ஒரு பூசகரை அழைத்து அவனை குணமாக்க முயன்றது. பூசகர் தனது இளம்வயதில் இதைப்போன்ற ஒரு அனுபவத்தைப் பெற்றிருந்ததால் ஒரு உளப்பகுப்பாய்வாளர் போல அவனை இதிலிருந்து வெளியேற்ற முனைந்தார். ஆனால் அவர் தெய்வத்திடம் இருந்து அச்சிறுவனை விடுவிப்பதற்கு மாறாக தெய்வத்திற்குள் அவனையும் அவனுக்குள் தெய்வத்தையும் புகுத்திவிட்டார். உளப்பகுப்பாய்வின்படி பார்த்தால் இது வேறொரு பிரச்சினை. நீட்சே இதை இவ்வாறு சொல்கிறார் என நினைக்கிறேன், “உங்களில் இருந்து தீயஆவிகளை வெளியேற்றுகையில் எச்சரிக்கையுடனிருங்கள், ஏனெனில் உங்களில் இருக்கும் சிறந்தவற்றை நீங்கள் வெளியேற்றிவிடக்கூடும்”. இங்கே எதிர்கொள்ளப்பட்ட தெய்வம் - இதை நாம் ஆற்றல் என அழைப்போம் - தக்கவைக்கப்படுகிறது. அதனுடனான தொடர்பு பராமரிக்கப்படுகிறது, துண்டிக்கப்படவில்லை. அதன்பிறகு இம்மனிதர்கள் அவர்களுடைய மக்களுக்கு ஆன்மிக அறிவுரையாளர்களாகவும் ஆசியளிப்பவர்களாகவும் மாறுகின்றனர். 

Black Elk (L) and Elk of the Oglala Lakota photographed in London - 1887

உண்மையில் அச்சிறுவனுக்கு நிகழ்ந்ததென்னவென்றால் அவன் தனது இனக்குழுவைப் பற்றி ஒரு பயங்கரமான எதிர்காலத்தை தீர்க்கதரிசனமாக கண்டிருந்தான். அதை அவன் ‘தேசங்களின் வளையம்’ (The Hoop) என்றழைத்தான். அத்தரிசனத்தில் பிளாக் எல்க் தனது நாட்டிற்கான வளையத்தை அங்கிருந்த பல வளையங்களில் ஒன்றாகக் கண்டான். அது இன்றுவரை நம்மால் சரியாக புரிந்துகொள்ள இயலாத ஒன்று. அனைத்து வளையங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்புடன் இருந்ததையும் அனைத்து நாடுகளும் மிகப்பெரிய ஊர்வலத்தில் நகர்ந்து கொண்டிருந்ததையும் அவன் கண்டான். 

ஆனால் அதைவிட மேலாக, அத்தரிசனம் அவனது பண்பாட்டின் ஆன்மிகப்படிமத்தின் சாம்ராஜ்ஜியத்தினுள் அவனே செல்லும் அனுபவமாகவும், அந்த சாம்ராஜ்ஜியத்தின் முக்கியத்துவத்தை உட்கிரகித்துக்கொள்வதாகவும் அமைந்தது. அவன் கூறுகிறான், “நான் இவ்வுலகின் மையமாக இருக்கும் ஒரு மலையின் மீது என்னைக் கண்டேன். அதுதான் இவ்வுலகின் உயரமான இடம். அதை இவ்வுலகத்தின் புனிதமான வடிவில் நான் பார்த்துக்கொண்டிருந்ததால் நான் ஒரு தரிசனத்தை பெற்றேன்”. அந்த புனிதமான மையமலை தெற்கு டகோடாவில் உள்ள ஹார்னி முகடு. தொடர்ந்து அவன், “ஆனால் மையமலை எங்கும் உள்ளது” என்றான். தொன்மத்தையும் குறியீடுகளையும் நான் புரிந்துகொள்ள திறவுகோலாக அமைந்த ஒரு மகத்தான வாக்குமூலமாக இது இருந்தது. 

இதுதான் மெய்யானவொரு தொன்ம-உணர்தல். அது ஹார்னி மலைமுகடு எனும் அவர்களின் படிமத்தையும், உலகத்தின் மையம் எனும் கருத்தையும் வேறுபடுத்துகிறது. உலகின் மையம் என்பது உலகத்தின் அச்சு, மையப்புள்ளி. அதை மையமாகக் கொண்டே அனைத்தும் சுழல்கிறது. இவ்வுலகத்தின் மையப்புள்ளியில்தான் நிலைமமும் இயக்கமும் ஒன்றாக இணைந்திருக்கிறது. காலம் இயக்கமாகவும் நித்தியம் நிலைமமாகவும் உள்ளது. உங்கள் வாழ்க்கையின் இக்கணம் எவ்வாறு உண்மையில் நித்தியத்தின் ஒரு கணம் என்பதை உணர்வதும், நிலையற்ற அனுபவத்தில் இருந்துகொண்டு நீங்கள் செய்துகொண்டிருப்பதன் நித்தியத்தை அனுபவிப்பதும்தான் தொன்மஅனுபவம். ஆகவே இப்போது கூறுங்கள் உலகின் மையமலையாக இருப்பது ஜெருசலேமா? ரோமா? வாரணாசியா? லாசாவா? அல்லது மெக்ஸிகோ நகரமா?

மோயர்ஸ்: அனைத்து கோடுகளும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இடத்தில் ஓர் ஒளிரும் புள்ளி உள்ளது என அந்த பழங்குடிச் சிறுவன் கூறினான். 

கேம்ப்பெல்: மிகச்சரியாக அதைத்தான் அவன் கூறினான். 

மோயர்ஸ்: கடவுளை ஒரு எல்லைக்குள் குறுக்க இயலாது என்று கூறுகிறானா?

கேம்ப்பெல்: கடவுளுக்கான விளக்கம் பல தத்துவவாதிகளால் விவரிக்கப்பட்டுள்ளது. கடவுளை அறிவுக்குட்பட்ட ஒரு கோளம் எனலாம், அதாவது புலன்களால் அல்லாமல் மனதால் அறிந்துகொள்ளக்கூடிய ஒரு கோளம். அதன் மையம் எங்கும் உள்ளது, அதேசமயம் எல்லைகள் இல்லாதது. நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடம் அதன் மையமே. நான் அமர்ந்திருக்கும் இடமும் அதன் மையமே. நாம் ஒவ்வொருவரும் அந்த மர்மத்தின் ஒரு வெளிப்பாடு. இதுவொரு இனிய தொன்மம்சார் உணர்தல். நீங்கள் யார் என்பதையும், என்ன என்பதையும் அளிக்கும் உணர்தல் அது. 

மோயர்ஸ்: ஆகவே அது ஒரு உருவகம். மெய்மையின் ஒரு படிமம். 

கேம்ப்பெல்: ஆம். உங்கள் எதிரில் இருக்கும் இன்னொரு மனிதனிடமும் மையம் உள்ளது என்பதை நீங்கள் உணரவில்லையென்றால் இங்கே நீங்கள் அடைந்தது ஒரு பண்படாத தனியாளுமை மட்டுமே. நீங்கள்தான் மையமலை, மேலும் அந்த மையமலை எங்குமிருக்கின்றது. இதுதான் சரியான தனியாளுமையுடன் இருப்பதற்கான தொன்மத்தின் வழி.

(அத்தியாயம் 3 நிறைவு)

மொழிபெயர்ப்பு - பூபதி துரைசாமி

--------------------------------------------------------------

மோயர்ஸ் மற்றும் கேம்ப்பெல்
பூபதி துரைசாமி

பூபதி துரைசாமி. கோவையில் வசிக்கிறார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளில் இருந்து கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் இவற்றில் ஆர்வம் பெற்று தேடல் கொண்டிருப்பவர்.