“TEMPLE CARS OF MEDIEVAL TAMILAHAM” என்ற நூலின் அறிமுக உரையில் அதன் ஆசிரியர் பேரா. ராஜு காளிதாஸ் தேர்களைப் பற்றிய முறையான ஆய்வுகளும், அதன் பண்பாட்டு ரீதியான பதிவுகளும் இதுவரை செய்யப்படவில்லை என்று வருத்தம் அடைகிறார். கலை வரலாற்று வல்லுநர்களால் நெடுங்காலம் தவிர்க்கப்பட்ட ஒரு தலைப்பாகவே தேர்கள் இருந்துள்ளன. தமிழகத்தில் பல தேர்கள் கோவில் நிர்வாகத்தினராலும், சார்ந்த மக்களாலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்த சூழ்நிலையைக் காண்கிறோம். எனக்குத் தெரிந்த பல தேர்கள் பயன்படாமல் கிடந்து, செல்லரித்து, மண்ணோடு மண்ணாகப் போய் விட்டன. இதற்கு புதுச்சேரி மாநிலம் பாகூர் (படம் 1), விழுப்புரம் மாவட்டம் குமளம், செண்டூர், ஒழிந்தியாபட்டு என பல சான்றுகள் உள்ளன. தேர்கள் படிமவியல் கூறுகளைத் தாங்கி நிற்கும் சிற்பச்சுரங்கமாகத் திகழ்வதை பலரும் அறிவதில்லை. அவை அக்கால சமூகத்தின் காட்சிகளைத் தாங்கி நிற்பவை.
| பாகூர் (படம் 1) |
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தேர்கள் இன்று இருக்கின்றன. ஒரு சில தேர்கள் 15-16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. வெகு சில அதன் பிந்தைய நூற்றாண்டில் செய்யப்பட்டவை. பெரும்பாலானவை 19-20ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டவை. புதிதாக தேர்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வரும் நேரத்தில், பழைய தேர்களை பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகிறது. புதிய தேர்கள் செய்யத் தேவையான இலுப்பை, ஆச்சா, வேங்கை, மருது, தேக்கு போன்ற மரங்கள் எளிதில் கிடைப்பதில்லை; மரம் கிடைத்தாலும் தக்க பருமனில் கிடைப்பதில்லை. புதிய தேர்களை செய்வதற்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. தேர் செய்வதற்கு பொறுமையும், மிகவும் கைதேர்ந்த சிற்ப வல்லுனர்களும் தேவைப்படுகிறார்கள். கைதேர்ந்த சிற்ப வல்லுனர்கள் ஒரு சிலரே இருந்தாலும், அந்த சிற்பங்களை வடிப்பதற்கான நேரத்திற்கு தகுந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே, புதிதாக தேர்கள் செய்யப்படும்பொழுது பழைய தேர்களில் உள்ள சிற்பங்களைப் போன்ற அழகும், நுட்பமும், நேர்த்தியும் அமைவதில்லை. பழைய தேரில் உள்ள ஒரு சிற்பத்தையும் புதிதாக செய்யப்படும் அதே போன்ற சிற்பத்தையும் அருகருகே வைத்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும் (படம் 2). ஆகவே, பழைய தேர்களை பராமரித்து பாதுகாப்பது என்பது தவிர்க்க இயலாதது.
![]() |
| (படம் 2) |
புதுச்சேரி மாநிலம், வீராம்பட்டினம் தேர் திருவிழாவிற்கு சிறுவயதில் சென்ற பொழுது அதன் பிரம்மாண்டத்தையும், மக்கள் கூட்டத்தையும், ஆரவாரத்தையும் பார்த்து ரசித்திருக்கின்றேனே ஒழிய, தேரின் அருகே சென்று அதில் உள்ள சிற்பங்களைப் பார்த்து ஒரு பொழுதும் ரசித்ததில்லை. அதிகபட்சமாக எனக்கு ஞாபகம் உள்ளது - பின்புறம் நீட்டிக் கொண்டிருக்கும் இரண்டு கால்கள். தேர்கள் அமைக்கப்படும் பொழுது தேரின் அடிப்பாகத்தில் வாசுகி என்னும் நாக சிற்பத்தை வைப்பது ஒரு வழமை. தேரின் முன்புறம் வாசுகி நாகத்தின் தலையும், பின்புறம் இரண்டு கால்களும் நீட்டிக் கொண்டிருக்கும். பிறகு தேரை செலுத்தும் தேர்ப்பாகர் சிற்பம். இது பிரம்மன் அல்லது பிராமியாக இருக்கும். அப்புறம் தேரை இழுக்கும் பிரம்மாண்ட குதிரைகள். இவை மட்டும் தான் நினைவில் நிற்பவை.
முதன்முதலில் முகநூலில் சில நண்பர்கள் அவ்வப்போது திருக்கோயில் தேர் சிற்பங்களைப் பகிர்ந்து வந்தனர். அதைப் பார்த்த பிறகு தேர்களில் இவ்வளவு சிற்பங்கள் இருக்குமா! என்று ஆச்சரியம் ஏற்பட்டது. அதன் பின் நேரில் ஒரு தேரை பார்த்த பொழுது அந்தத் தேரின் பிரம்மாண்டமும், அதிலிருந்த சிற்பங்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. முதலில், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் செங்கேனியம்மன் கோவில் தேரை மீண்டும் உற்று கவனித்தேன். அதில் இருந்த சிற்பங்களைப் புகைப்படம் எடுத்தேன். அடுத்ததாக, வில்லியனூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோயில் தேர்களைத் திருவிழா காலத்தில் நேரில் சென்று பார்த்து, அவற்றைப் படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவை இரண்டும், தேரில் உள்ள சிற்பங்களைப் பற்றி படிப்பதற்கும், ஆராய்வதற்கும் பெரிதும் உதவின. தமிழ்நாட்டுத் தேர்கள் பற்றி விரிவான அறிமுகத்தை கலை உலகத்திற்கு அளிப்பனவாக உள்ளவை இரண்டு நூல்கள். ஒன்று பேரா. ராஜூ காளிதாஸ் எழுதிய “TEMPLE CARS OF MEDIEVAL TAMILAHAM”. அடுத்தது ஒரிசாவை சேர்ந்த புதுச்சேரியில் வாழும் கண் மருத்துவர் சுசில்பாணி அவர்கள் எழுதிய ”Devaratham”. தேர்களைப் பற்றிய தேடலும், ஆர்வமும் உடையவர்கள் இவ்விருநூல்களையும் படித்தல் அவசியம்.
தேர்களைப் பார்ப்பதிலும், ரசிப்பதிலும் உள்ள சிக்கல்; அவை திருவிழா காலங்களில் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஒரு கொட்டகை அல்லது கூடாரம் அமைத்து மூடி விடுவார்கள். இது நல்ல விஷயம் தான் என்றாலும், கோயில்களுக்குச் சென்று சிற்பங்களையும் கட்டிடக்கலையையும் ரசிப்பது போல நினைத்த நேரத்தில் தேர் சிற்பங்களை ஆய்வு செய்யவோ ரசிக்கவோ முடியாது. திருவிழாவிற்கு தேர் திறந்த உடன் தேர் அலங்காரம் இல்லாமல் இருக்கும் நேரத்தில் தான் சிற்பங்கள் தெளிவாகத் தெரியும். அதுதான் தேர்களை ஆய்வு செய்ய, புகைப்படம் எடுக்க சிறந்த நேரம். தேர்த்திருவிழாவை ஓட்டியோ அல்லது முடிந்த சில நாட்களிளோ தேர் அலங்காரத்துடனேயே இருக்கும். தேர் மீதுள்ள தேர்சீலைகள், தொம்பைகள் தேரிலேயே இருக்கும். அது மட்டுமல்லாமல், தேரின் அடிப்பாகத்தில் அண்மை காலங்களில் மாலைகள் பலவும் அலங்காரமாகத் தொங்க விடுகிறார்கள். அவை சிற்பங்களைப் பெரிதும் மறைக்கும். ஆகவே, திருவிழாவை ஓட்டியோ அல்லது அது முடிந்த நாட்களிலோ ஒரு தேரை ஆய்வு செய்வதும் கடினமான வேலை. தேர்களை ரசிக்கவும், ஆய்வு செய்யவும், படம் எடுக்கவும் ஒரு நல்ல தருணம் அமைய வேண்டும்.
இந்த வருடம் மாசிமகத் திருவிழா தமிழகத்தின் பல கோவில்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இதையொட்டி, அங்கு தேரோட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு சில தேர்களையாவது பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் மாசி மக தேரோட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த கோவிலின் தேர்களைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. ஐந்து தேர்கள் இருந்தன. குறிப்பாக சிவன் தேர், அம்மன் தேர் மற்றும் முருகன் தேர் பழமையானதாகவும், நல்ல சிற்பவியல் செழுமைப் பெற்றதாகவும் இருந்தன.
இதே மாசி மகத்தையொட்டி திருமுதுகுன்றமாகிய விருத்தாசலத்தில் உள்ள பழமலைநாதர் திருக்கோயிலிலும் தேரோட்டம் நடைபெறுவதை அறிந்திருந்தோம். முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பலர் விருத்தாசலம் கோயில் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு வருவதையும், அதன் பிரம்மாண்டத்தையும் பதிவிட்டு வந்தனர். ஆகவே, எப்படியாவது விருத்தாசலம் தேர்களைப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. தேரோட்டத்திற்கு முன்பாக அங்கே செல்லும் வாய்ப்பு அமையவில்லை. தேர் விழா முடிந்து ஒரு வாரம் கழித்து அங்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. ஒரு மதிய வேளையில், விருத்தாசலத்திற்கு பயணப்பட்டேன். சென்று பார்த்த பொழுது ஐந்து தேர்களும் தேரடி வீதியில் நின்று கொண்டிருந்தன. 5 தேர்கள் தேர்சீலை, தொம்பைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நின்றிருந்தது பிரம்மாண்டத்தின் உச்சமாக எனக்குப் பட்டது (படம் 3).
| (படம் 3) |
நான் முதலில் சென்று பார்த்தது விநாயகர் தேர். ஐந்து தேர்களில் அளவில் நான்காம் இடம் இந்த தேருக்குத்தான். இந்தத் தேர் மட்டுமே இந்தக் கோயிலில் உள்ள ஐந்து தேர்களில் பழமையானது. மூன்றாவது பெரிய தேரான முருகனுடைய தேரின் முன்பும் பின்பும் சிற்பங்கள் பழமையானதாக இருந்தன. பக்கவாட்டில் உள்ள சிற்பங்கள் புதியதாக செய்யப்பட்டு, அழகியல் நுட்பங்கள் குறைந்தே காணப்பட்டன. விநாயகர் தேர் இவ்வளவு அழகாக இருக்கின்றதே, இன்னும் இந்த கோயிலின் சிவன் தேரும் அம்மன் தேரும் இதைவிட பிரம்மாண்டமாக அதோ நிற்கின்றது. அதன் அருகில் சென்று பார்த்தால் அது இன்னும் சிற்ப செழுமையோடு பல படிமவியல் கூறுகளைத் தாங்கி நிற்கும் என்று ஆவலுடன் அருகே சென்று பார்த்த போது ஏமாற்றமே மிஞ்சியது. இக்கோயிலில் இருந்த பழைய சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் என்னவாயிற்று என்று தெரியவில்லை. அது ஏன் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்றும் தெரியவில்லை. இரண்டு தேர்களும் முற்றிலும் புதிதாக செய்யப்பட்டிருந்தன. பழைய தேரின் எஞ்சிய சிற்பங்கள் எங்கே? இக்கோவிலிலுள்ள தேர்களில் சிவன் தேரே பெரியதாகும். அதற்கடுத்து அம்மனுடைய தேர். இரண்டு தேர்களிலும் மிகவும் இடைவெளி விட்டு அமைக்கப்பட்ட அண்மைக்கால சிற்பங்கள் ரசிக்கும்படியாக இல்லை என்பதே உண்மை. அதற்குப் பின்பு இருந்த சண்டிகேஸ்வரர் தேர் சென்ற நூற்றாண்டில் செய்யப்பட்டு இருக்கலாம். சுவாமி மற்றும் அம்மன் தேரை விட அது சில பழமையான கூறுகளைத் தாங்கி நின்று கொண்டு இருந்தது. ஆகவே, இப்பொழுது உள்ள தேர்களில் விநாயகர் மற்றும் முருகன் தேர்கள் சமகாலத்தனவாகவும் (17-18ஆம் நூற்றாண்டு), அதற்குப் பிற்பட்ட காலத்தை சார்ந்ததாக சண்டிகேஸ்வரர் தேரும் (20ஆம் நூற்றாண்டு), அதிலும் பிற்பட்ட காலத்தில் அண்மையில் உருவாக்கப்பட்டதாக சிவன் மற்றும் அம்மன் தேரும் திகழ்வதை நாம் பார்க்கலாம்.
விருத்தாசலத்தில் உள்ள ஐந்து தேர்களும் அடிப்பாகம் மட்டுமே முழு நிரந்தர கட்டுமானமாக உள்ளது. புதுச்சேரி வட்டாரங்களில் நான் தேர்களை, பார்க்கும்போது அடி முதல் உச்சி வரை அவை எப்பொழுதும் நிரந்தர கட்டுமானமாக மரத்திலேயே செய்யப்பட்டிருக்கும். அடிப்பாகம் சிற்பங்களால் நிரம்பி, மேலே மரச்சட்டங்களாலான கூரை போன்ற அமைப்பு (விமானம்) இருக்கும். அதன் மீது தேர்சீலைகள் போர்த்துவர். ஆனால், பெரும்பாலான சோழநாட்டு தேர்களில் அடிப்பாகம் மட்டுமே நிரந்தரமாக இருக்கும். அதற்கு மேல் உள்ள விமானம் திருவிழா காலங்களில் மூங்கில்களும், சவுக்கை மரமும் கொண்டு அமைக்கப்படும் என்றார் நண்பர் ஒருவர். அப்படித்தான் விருத்தாசலத்திலும் அமைக்கப்பட்டு இருந்தது. மிகவும் அடர்த்தியாக கட்டப்பட்ட மூங்கில், சவுக்கை மரங்கள் தேரின் மேல்பாகத்தை அலங்கரித்தது. அவை கட்டப்பட்டிருந்த விதம் ஆச்சரியப்பட வைத்தது (படம் 4). ஐந்து தேர்களுக்கும் தேவைப்படும் மரங்களும், உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பும் என்னை பெரிதும் வியக்கவைத்தது. இந்த கம்பு கட்டுமானத்தின் மீது தென்னங்கீற்று கூரைகளும் போடப்பட்டுள்ளது. அதன் மேலே தேர்சீலைகள் பொருத்தப்பட்டு இருந்தன. தேரின் உட்புறமாக கழிகளில் இருந்து தென்னங்கீற்றில் செய்யப்பட்ட தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது மிக அழகாக இருந்தது.
| (படம் 4) |
| (படம் 5) |
17ஆம் நூற்றாண்டினது என்று கருதத் தக்க விநாயகர் தேர் 2 cut polygon அமைப்பையுடையது. தேரின் முன்புறத்தில் (படம் 5) மேல் அடுக்கில் நின்ற நிலையில் உள்ள பிள்ளையாரை, பூசை செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது. தேரின் அடிப்பாகத்தை சிங்கங்களும், மேல்பாகத்தை யாளிகளும் தாங்குவது போல அமைக்கப்பட்டு இருந்தது. யாளிகளுக்கு இடையே காளிங்க நர்த்தன கண்ணன், அடுத்து நடுவில் பிள்ளையாரும், இருபுறத்திலும் பூசகர்களும் உள்ளனர். கடைசி உருவம் காட்சிப்படுத்த தவறிவிட்டேன். அதன் கீழ் தளத்தில் இடமிருந்து வலமாக முறையே துவாரபாலகர், ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய திருமால், ரிஷபாந்திகர், உமையுடன் கூடிய சந்திரசேகர், வல்லபை கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர், பாறை மீது அமர்ந்து சிவனுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் உள்ள முருகர், அதன் பக்கத்தில் ராஜகோபாலன் (கையில் செண்டுடன் ருக்மணி சத்தியபாமாவுடன்), இறுதியாக துவாரபாலகர் ஆகியோர் உள்ளனர்.
| (படம் 6) |
அடுத்து வலமாக இடது பக்கம் (படம் 6) செல்லும் பொழுது மேற்புறத்தில் யோகநரசிம்மர், லட்சுமி நாராயணர், சிவனை வழிபடும் காமாட்சியம்மை மற்றும் சங்கநிதி, பதுமநிதி சிற்பங்களும், அதன் கீழ் அடுக்கில் யாளிகளுக்கு இடையில் இடமிருந்து வலமாக சிறு சிற்பங்களாக ஏகபாதமூர்த்தி, பைரவர், பிரம்மன் (லிங்கோத்பவரை வணங்குவது), லிங்கோத்பவர், திருமால் (லிங்கோத்பவரை வணங்குவது) மற்றும் அரிகரர் ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் கீழ் வரிசையில் கண்டபேருண்ட பறவை, மார்க்கண்டேய புராணத்தில் வரும் காலசங்காரர், ரிஷபாந்திகர், ராமர் சீதையுடன் அமர்ந்திருக்கும் பட்டாபிஷேகக் கோலம் (சற்று பெரிய தொகுதி நடுவில், (படம் 7), தட்சனின் தலையைத் துண்டிக்கும் வீரபத்திரர், யானை உரித்த தேவர் (கஜசம்ஹாரர்), மீண்டும் கண்ட பேருண்டம் ஆகியவற்றுடன் முடிவடைகிறது. வழமையான தேர்களில் நான் பார்த்த மகரத்தின் மேல் இருக்கும் பெண் நதி தேவதைகள் நின்று கொண்டு இசைக்கருவிகளை வாசிக்கும் சிற்பங்களுக்குப் பதில் இந்த விநாயகர் தேரில் கண்டபேருண்ட (படம் 8) பட்சிகளின் சிற்பம் இருப்பது தனித்துவமாக இருந்தது. நான் பார்ப்பது இது முதல் முறை. அரிகரர் சிற்பம் தஞ்சாவூர் ஓவியங்களில் காணப்படும் பாணியில் அமைந்துள்ளது (படம் 9). இந்தத் தேரை மராத்தியர் ஆட்சியின் கடைசி காலத்தில் அமைக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு.
| (படம் 7) |
| (படம் 8) |
இங்கிருந்து வலமாக சென்றால் தேரின் பின்புறத்தில் (படம் 10) மாரியம்மன், துணைவியருடன் கூடிய காத்தவராயன், பரசுராமர் ஆகியோர் மேல் தளத்தில் உள்ளனர். அதற்கு கீழ் யாளிதாங்கும் தளத்தில் யாளிகளுக்கு இடையில் அப்பரை சிவலிங்கதில் இருந்து வெளிபட்டு விழுங்கும் சிங்கம், கண்ணப்ப நாயனார் புராணத்தை விளக்கும் சிற்பம், மயில் சிவலிங்கத்தைப் பூசிப்பது, ஐந்து முகங்களுடைய அரிய சிவலிங்கச் சிற்பம் (படம் 11) மற்றும் குங்கிலியகலய நாயனார் சிவலிங்கத்தை நேராக நிமிர்த்த முயற்சிக்கும் காட்சி (குங்கிலிய புகை போடும் தூபக்காலும் காட்டப்பட்டுள்ளது) உள்ளது. எல்லா சிற்பங்களிலும் ஏதோ ஒரு நுட்பம் காட்டப்பட்டுள்ளது; உற்று நோக்கினால் புலப்படும். குங்கிலியகலய நாயனார் திருப்பனந்தாள் தலத்தில் வளைந்த லிங்கத்தை தன் கழுத்தில் கயிறு கட்டி நிமிர்த்தினார். திருப்பனந்தாள் தலத்தின் தல மரம் பனை. இந்தச் சிற்பத்தில் சிவலிங்கத்தின் பின்பாக பனை மரம் காட்டப்பட்டுள்ளது (படம் 11). அதற்கடுத்து, ஒரு மரத்தடியில் அமர்ந்து சிவலிங்கத்தை பூசிக்கும் சற்றுப் பருமனான தோற்றமுடைய ஒருவரின் சிற்பம் காட்டப்பட்டுள்ளது. உற்று நோக்கும்பொழுது இது கண்ணன் சிவலிங்கத்தை பூசிக்கும் சிற்பமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சிவலிங்கத்தில் இருந்து சிங்கம் வெளிப்பட்டு அப்பரை விழுங்கும் சிற்பம் அரிதானது (படம் 11). இது வேறு எங்கும் இல்லை எனலாம். பழைய தஞ்சை ஒவியங்களில் மட்டுமே இந்த காட்சி காணக்கிடைக்கும். திருப்புகலூரில் அப்பர் முத்தியடைந்தார். அப்பொழுது சிவன் சிங்க உருக்கொண்டு அவரை விழுங்கி ஐக்கியப்படுத்திக்கொண்டார் என்கிறது ஒரு சாராரின் நம்பிக்கை. “சாவா மூவாச் சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்- திருப்புகலூர் மேவிய தேவதேவே” என்பது அப்பர் திருத்தாண்டகம். அடுத்த தளத்தில், இடையர் தம்பதிகள், அடுத்து ரிஷி பத்தினியர் அருகே மயங்கி நிற்க பிச்சதேவருக்கு அன்னமிடும் காட்சி, கண்ணபிரானிடம் மயிலைக் காட்டும் பெண், லட்சுமி நாராயணர், பின்புறத்தில் மாடு திகழும் குழலூதும் கண்ணன், காளிங்க நர்த்தனம் செய்யும் கண்ணன், பிட்சாடனர் புராணத்தோடு தொடர்புடைய மோகினி, அவரை சுற்றி காமம் தலைக்கு ஏறிய ரிஷிகளும் வடிக்கப்பட்டு உள்ளனர். இங்கு உள்ள பல கண்ணனின் சிற்பங்கள் தஞ்சை பாணி ஓவியங்களை ஒத்து இருக்கின்றது. கண்ணனிடம் மயில் அல்லது கிளியைக் காட்டி அவனை மகிழ்விக்க முயலும் காட்சிகள் தஞ்சை ஓவியங்களில் நீங்கள் பார்க்கலாம் (படம் 11). தஞ்சை ஓவியங்களில் காணப்படுவது போல் இந்தத் தேரிலும், கண்ணன் தொந்தியுடன் குண்டாகவே உள்ளார்.
| (படம் 10) |
![]() |
| (படம்-11) |
![]() |
| (படம் 12) |
அடுத்த பக்கம் செல்ல (படம் 12), மேல் தளத்தில் விநாயகரை பூசிக்கும் சிற்பத் தொகுதி உள்ளது. இசைக்கலைஞர்கள், பூசகர்கள் இருபுறமும் காட்டப்பட்டுள்ளனர். அரச தோற்றத்தில் ஒருவர் வணங்கி நிற்கிறார். அதன் கீழ் யாளிகளுக்கு இடையில் அகோரமூர்த்தி (யூகம்), தொடையில் உமையை அமர்த்திய சிவன் (யூகம்), சுந்தரர் (யூகம்), விநாயகர், மயில் மீது ஒயிலாக அமர்ந்து இருக்கும் முருகன் ஆகியோர் உள்ளனர். அதற்குக் கீழே கண்டபேருண்டம், திருமாலுக்கு சக்கரம் வழங்கும் சிவன், பதஞ்சலி- புலிக்கால்முனிவர்கள் வழிபடும் நடராசர், அடுத்து நடுநாயமாக விளங்குவது சிவன் பார்வதி திருமணமாகும் (படம் 13). சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் செய்து தாரை வார்க்கும் கோலத்தில் மகாலட்சுமியுடன் கூடிய திருமால் காட்டப்பட்டு உள்ளனர். அதற்குக் கீழே, பிரம்மன் முனிவர்களுடன் திருமண வேள்வி செய்யும் காட்சி காட்டப்பட்டுள்ளது. அடுத்து, வேடுவர் தம்பதிகளாக சிவனும் பார்வதியும், அதற்கு அடுத்து, நந்திகேஸ்வரருக்கு அருள் செய்யும் சிவனும் பார்வதியும் என்று கருதத்தக்க சிற்பங்கள் உள்ளன.
![]() |
| (படம் 13) |
இந்தத் தேர் அறுகோண வடிவமுடையது. ஆகையால், நான்கு முனைகளிலும் உட்புறமாக நிறைய சிற்பங்கள் இருந்தன. சில சேதமடைந்து உள்ளன. பல படம் எடுக்க முடியாதவாறு இருந்தன. நான்கு மூலைகளிலும் உள்ள சிற்பங்களில் சில – மாதொருபாகர், சிவன் விடம் அருந்திய பொழுது அவரது கழுத்தில் கை வைத்து விடத்தை தடுக்கும் பார்வதி, காதலியுடன் கண்ணன், பூரணி-பொற்கிலையுடன் அய்யனார், கொம்பு இசைக்கும் வீரன், லட்சுமி, மாலையுடன் திகழும் கந்தர்வப் பெண்கள் (இறக்கைகளுடன்), யானையை தாக்கும் சிங்கம் ஆகியவை. தேரினுள் தேர்த்தட்டிலும் சிற்பங்கள் உள்ளன. இவையும் புகைப்படம் எடுக்கவியலாத உயரத்தில் இருட்டில் இருந்தன. இயன்றவரை அடையாளம் காணப்பட்டவை வீணையேந்திய சிவன், சந்திரசேகரர், முருகன், அக்நி, உமையுடன் கூடிய சிவன், சுந்தரர் ஆகியன.
அடுத்ததாக இருந்தது முருகனின் தேர். தேரின் முன்புறத்தில் (படம் 14) உள்ள சிற்பங்கள் - கவரி வீசும் பெண், அம்மன், இடபாந்திகர், இடப்பாரூடர், மயில் மீது அமர்ந்த முருகன் துணைவியருடன், நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தராக சிவன் நடுவில் குழந்தை முருகனுக்கு பதில் நான்கு கரங்களுடன் இளைஞராக முருகன், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் மற்றும் கவரிப்பெண். தேரின் பின்புறத்தில் (படம் 15) கவரிப்பெண், லட்சுமி நாராயணர், துணைவியருடன் செண்டாயுதம் முதலியவற்றைத் தாங்கிய ராஜகோபாலன், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், மயில் மீது அமர்ந்த ஆறுமுகர், ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமால். பிரம்மனிடம் வரம் பெறும் அடியவர் மற்றும் கவரிப்பெண் ஆகியோர் உள்ளனர். பக்கவாட்டு சிற்பங்கள் முன்பே சொன்னது போல புதிய சிற்பங்களாக நம்மை கவராதவையாக இருந்தன. தேர்த்தட்டில் இரண்டு நிலைகளில் அட்ட லட்சுமிகளும், எண் திசை தெய்வங்களும் இருப்பதை உணர முடிந்தது. படம் எடுக்க இயலவில்லை. இது வினாயகர் தேருக்கு சற்று பிற்பட்ட காலத்ததாக இருக்க வேண்டும்.
![]() |
| (படம் 15) |
சரவண பிரபு
உசாத்துணை:![]() |
| சரவண பிரபு |




.jpg)



