Friday, 8 May 2026

டுடன்காமுன் கல்லறை 7: டுடன்காமுன் மம்மி அறை ஓவியங்கள் - பொன். மகாலிங்கம்

டுடன்காமுனின் மம்மி வைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்தை இழுத்துச் செல்லும் பூசகர்கள். டுடன்காமுன் கல்லறை ஓவியம், மன்னர்களின் பள்ளத்தாக்கு, லக்ஸோர்.

மன்னர்களின் பள்ளத்தாக்கிலுள்ள கல்லறைகளில் கிட்டத்தட்ட அனைத்திலுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மன்னர்கள் என்றில்லை, மந்திரிகள், தலைமைப் பூசகர்கள், முக்கியப் பிரமுகர்கள் என அனைவரின் கல்லறைகளிலுமே அவரவர் வசதிக்குத் தக்கவாறு ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். மரணத்துக்கு பிந்திய சடங்குகள், மறுமை உலகில் ஆன்மா மேற்கொள்ளும் பயணம், மன்னரின் படையெடுப்புக் காட்சிகள், போர் வெற்றிகள், மாண்டோரின் புத்தகத்திலுள்ள சில பகுதிகள், மம்மியாக்கம் முடிந்து உடலை மரப்பெட்டிக்குள் வைத்துச் செய்யப்படும் சடங்குகள், நிறுத்தி வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு எதிரில் நின்றும் அமர்ந்தும் பெண்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள், சொர்க்கத்தில் மன்னரை எதிர்கொண்டழைத்துச் செல்லும் தெய்வங்கள் - எனப் பலவகையான ஓவியங்கள் அங்கே வரையப்பட்டிருக்கும். 

கல்லறைக்கு உள்ளேயே இருக்கும் மாண்டவர்களின் ஆன்மா மறுமை உலகில் என்னென்ன இன்பங்களை நாடுமோ அவற்றையும் ஓவியங்களாக வரைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு ஏகாந்தமாக நைல் நதிக்கரையில் அமர்ந்து பறவைகளையும் நீரோட்டத்தையும் பார்த்து மெய்மறப்பது ஆகப் பிடித்தமான பொழுதுபோக்கு என்றால் அந்தக் காட்சி அவரது கல்லறையில் வரையப்படும். எந்த ஓவியம் கல்லறையில் வரையப்படுகிறதோ அங்குள்ள ஆன்மா அந்த இன்பத்தை அனுபவிக்கும் என்று எகிப்தியர்கள் நம்பினர். ஆகவே பெரும்பாலும் உலக வாழ்வில் அனுபவித்த இன்பத்தையே அந்த ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன என்று கூறலாம். விருந்துக்காட்சிகளும் கல்லறைகளில் அதிகம் இடம்பிடிப்பதுண்டு. 

மாண்டவருக்குப் பிடித்தமான உணவுப் பொருள்கள் இரண்டு குட்டையான மேசைகளில் அவருக்கு எதிரே குவிக்கப்பட்டிருக்கும். மாண்டவர் தமது வாழ்க்கைத் துணையோடு தெய்வங்களுக்குப் படையலிடும் காட்சிகளும் வரையப்படுவதுண்டு. கல்லறையில் உள்ள ஓவியங்களில் சித்திரிக்கப்பட்டவற்றை தங்களது தெய்வங்கள் உயிர்ப்பித்துத் தரும் என்பது எகிப்தியர்களின் சமய நம்பிக்கை. பொதுவாக மாமன்னர்களுடைய கல்லறையின் நுழைவாயிலில் இருந்து தொடங்கும் ஓவியங்கள் மம்மி கிடத்தி வைக்கப்படும் கல்பெட்டி இருக்கும் இடம்வரை நீள்வதுண்டு. ஆங்காங்கே சில தெய்வங்களுக்கான அறைகள் இருக்கும். அங்கேயும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும். இதை முதலாம் செட்டி கல்லறையிலும் நெஃபர்டாரி கல்லறையிலும் தெளிவாகக் காணலாம். 

மாண்டவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளின் படையல்

ஆனால் டுடன்காமுன் கல்லறையை பொறுத்தவரை மம்மி அறையில் மட்டுமே நான்கு பக்கமும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்த ஓவியங்களும் அவசர அவசரமாக தீட்டப்பட்டவை. மம்மி அறை தவிர்த்த ஏனைய அறைகளில் எந்த ஓவியமும் தீட்டப்படவில்லை. அவற்றில் ஓவியம் தீட்டப் போதிய நேரம் இல்லை என்றே ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். மம்மி அறையின் நான்கு பக்க ஓவியங்களிலும் பழுப்பு நிறப் புள்ளிகள் ஏராளமாக உள்ளன. 

அதற்கு என்ன காரணம் என்பது தொடக்கத்திலிருந்தே புரியவில்லை. மர்மப் புள்ளிகள் என்றே அவை அழைக்கப்பட்டன. கார்ட்டர் கல்லறையை திறந்தவுடனேயே எடுத்த படங்களில் அவை தெளிவாகத் தெரியும். எப்படி அந்தப் புள்ளிகள் உருவாயின என்பது ஆர்வத்தை கிளப்பிய அதேவேளையில் கார்ட்டருக்குக் கவலையையும் ஏற்படுத்தியது. கல்லறை திறக்கப்பட்டு, வெளிக்காற்றுப் பட்டதும் அந்தப் புள்ளிகள் மேலும் பரவக்கூடுமோ என்று அஞ்சினார் அவர். அந்த புள்ளிகளின் மர்மம், அண்மை காலத்தில்தான் விலகியது. 

டுடன்காமுன் கல்லறையில் வரையப்பட்ட ஓவியங்களின் ஈரம் உலருமுன்னரே, கல்லறை மூடப்பட்டது. துணிகள் முழுமையாக உலருமுன்னரே அவற்றை மடித்துவைத்தால் அவற்றில் சில கரும்புள்ளிகள் உருவாகுமே... அதைப்போல... முற்றாக உலராத அந்த ஓவியங்களில் திட்டுத் திட்டாகப் பழுப்பு நிறத்தில் பூஞ்சணம் படிந்துவிட்டது. அவைதான் அந்தப் புள்ளிகள். கல்லறை மூடப்பட்டதால் உண்டான இருள், சூடு, சுவர்களில் இருந்த ஈரப்பதம் எல்லாம் அங்கே நுண்ணியிரிகள் வளரக் காரணமாயின என்று அமெரிக்காவை சேர்ந்த கெட்டி பழமைபாதுகாப்பு நிலையமும் (Getty Conservation Institute), எகிப்தின் அரும்பொருள் துறையும் இணைந்து 10 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் உறுதியானது. நல்லவேளையாக அந்த நுண்ணுயிரிகள் மேலும் வளராமல் மாண்டதால் பழுப்புத் திட்டுகள் மேலும் பரவுவது நின்றுபோனது. குடைவரைகளான கல்லறைச்சுவர்கள் மீது நேரடியாக ஓவியம் வரையப்படுவதில்லை. சுவர் மீது லேசான தடிமனுக்குச் சாந்து பூசப்பட்டு அது காய்ந்தபிறகுதான் ஓவியம் தீட்டப்படும். டுடன்காமுன் கல்லறையை பொறுத்தவரை, அந்தச் சாந்துப்பூச்சு முழுமையாக உலருமுன்னரே ஓவியம் வரையப்பட்டுவிட்டது. அதுவே பழுப்புத் திட்டுகளுக்குக் காரணம். 

அதை நீக்க முயன்றால் ஓவியம் முற்றாக அழியக்கூடும் என்று அஞ்சி இன்றளவும் அதை அப்படியே விட்டுவிட்டார்கள். இரண்டாம் ராம்சிஸ் மன்னரின் மிகப் பிரியமான பட்டத்தரசி நெஃபர்டாரியின் கல்லறை எகிப்திய ஓவியங்களின் கலைக்கூடம். நூற்றுக்கணக்கான ஓவியங்கள் அங்கே தீட்டப்பட்டுள்ளன. சுமார் 3,150 ஆண்டுகளுக்குமுன் தீட்டப்பட்ட நெஃபர்டாரி கல்லறை ஓவியங்களின் வண்ணம், இன்றளவும் அதே ஒளியுடன் மிளிர்கிறது. அந்தக் கல்லறைக்கு நானும் ராஜகோபாலும் சென்று வந்தோம். அதைப் பார்வையிட மட்டும் தனியாக 1000 எகிப்திய பவுண்ட் கட்டணம் செலுத்தவேண்டும். 

மகாராணி நெஃபர்டாரி

மன்னர்களின் பள்ளத்தாக்கிற்கு அருகிலேயேதான் இருக்கிறது மகாராணிகளின் பள்ளத்தாக்கும். அங்குதான் இருக்கிறது நெஃபர்டாரியின் கல்லறை. மாமன்னர்களை காண செல்லும் பயணிகளில் கணிசமானோர் மகாராணிகளை காண (மன்னரின் மனைவிமார்களை) செல்வதில்லை. நெஃபர்டாரி கல்லறை மிக முக்கியமான இடம் என்பதால் நாங்கள் எங்களது வழிகாட்டியிடம் முன்கூட்டியே சொல்லி அதை எங்கள் பயணத்திட்டத்தில் இணைத்திருந்தோம். நாங்கள் சென்றுவந்தபின் சில காலம் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டிருந்த நெஃபர்டாரி கல்லறை இப்போது மறுபடி திறக்கப்பட்டுவிட்டதாக அங்கு அண்மையில் சென்றுவந்த நண்பர் கோகுல் பிரசாத் தெரிவித்தார். 

கல்லறை அனுமதிக்கான 1000 எகிப்திய பவுண்ட் என்பது சிங்கப்பூர்க் காசில் 85 வெள்ளி வரும். இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய் வரும் (2019இல்). அதனால், பெரும்பாலானவர்கள் அதைக் காணச் செல்வதில்லை. நல்லவேளை நாங்கள் அந்த தவற்றை செய்யவில்லை. யானை வாங்கியபின் அங்குசம் வாங்கத் தயங்கலாமா? ஆயிரத்தைந்நூறு வெள்ளிக்கு ஐஃபோன் வாங்கியபின் ஐந்து வெள்ளிக்கு App வாங்க அஞ்சலாமா? நெஃபர்டாரி கல்லறையில் பத்து நிமிடங்கள் மட்டுமே உள்ளே இருக்க அனுமதி. 10 நிமிடங்களுக்கு ஆயிரம் பவுண்டா? அநியாயமாக இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். நெஃபர்டாரி கல்லறையில் செலவிடும் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு காசும் விலை மதிப்பற்றது. எவ்வளவு கொடுத்தாலும் தகும். காரணத்தோடுதான் 10 நிமிடக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. நாங்கள் பயணிகள் அதிகம் வராத பருவத்தில் சென்றதால் அங்கே அதிக நேரம் செலவிட அனுமதித்தார்கள். 

பார்வையாளர்களின் மூச்சுக் காற்றிலிருந்து வெளிப்படும் ஈரப்பதம், ஓவியங்களை சீர்குலைத்துவிடும் என்பதால்தான் அந்த 10 நிமிடக் கட்டுப்பாடு. கல்லறைக்கு உள்ளே நிலவும் ஈரப்பதத்தை உறிஞ்சி வெளியேற்ற, தனிப்பட்ட காற்றோட்ட வசதி அங்கே செய்யப்பட்டிருந்தது. டுடன்காமுனின் கல்லறை ஓவியங்களையும் அதேபோல் பாதுகாக்க இப்போது நவீனக் காற்று வடிகட்டி முறை பின்பற்றப்படுகிறது. பாலைவனத்தில் பறக்கும் புழுதியும் கல்லறை ஓவியங்களை பாதிக்கக் கூடும். டுடன்காமுன் கல்லறைக்கு மட்டும் நாளொன்றுக்கு 500-முதல் 1000 பேர்வரை வந்து செல்கின்றனர். கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. உண்மையில் அந்த இடம் யாருமே வந்துபோகக் கூடாத இடமாக நீடிக்கவேண்டும் என்பதே அதை உருவாக்கியவர்களின் எண்ணம். 

டுட் கல்லறையின் மம்மி அறை-பார்வையாளர் மாடத்திலிருந்து.

பயணிகளோடு கல்லறைக்கு உள்ளேவரும் பாலைவனப்புழுதி அவர்களது மூச்சுக் காற்றிலுள்ள ஈரப்பதத்தோடு கலந்து உள்புறச் சுவரோவியங்களில் படிகிறதாம். காலப்போக்கில் ஒரு பிசினை போல் ஓவியங்கள்மேல் படியும் இந்த புழுதி அவற்றை நிரந்தரமாக பாதித்துவிடும். ஓவியங்களில் படியும் ஈரப்பதம், மனித வியர்வையிலுள்ள உப்பையும் ஈர்த்து வைத்திருக்கும். பாலைவனப் புழுதியிலுள்ள உப்பு வகைகளும் அந்த ஈரப்பதத்தில் கலந்திருக்கும். ஈரம் உலர்ந்தாலும் அதிலுள்ள உப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஓவியத்தின்மீது படிந்து அதை அரித்துத் தின்னத் தொடங்கும். நாளடைவில் ஓவியம் சிதைந்து அழியும். 

அந்த ஆபத்தைத் தவிர்க்கத்தான் இவ்வளவு பாதுகாப்பு! டுடன்காமுன் கல்லறைக்கு வெளியே இதுபற்றிய குறிப்பை எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு நேரத்தில் 10 பேருக்கு மட்டும்தான் அனுமதி. இயன்றவரை சீக்கிரமாகப் பார்த்துவிட்டு வெளியேறிவிடவேண்டும். கொல்லன் பட்டறைத் துருத்தி மாதிரி புஸ் புஸ்ஸென்று வேகவேகமாக மூச்சு விடுவோரும், என்னைப் போல் சொளச்சொளவென வியர்த்து வழியும் உடல்வாகு கொண்டவர்களும், இதுபோன்ற பண்டைக்கால ஓவியங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறோமாம். கடவுளே... டுடன்காமுன் கல்லறையின் பார்வையாளர் மாடம் இப்போது ஓவியங்களைக் கைவைத்துத் தொட முடியாத தொலைவில் நிறுவப்பட்டுள்ளது. கல்லறைக்குள் எப்போதும் ஓர் ஊழியர் காவலுக்கு இருக்கிறார். 

டுட் கல்லறை கிழக்குப்புறச் சுவரோவியம். கீழே உள்ள வலைப் பின்னல் கதவுதான் மம்மி அறையிலிருந்து கருவூல அறைக்குச் செல்வதற்குரிய வாயில். டுட் உடல் இழுத்துச் செல்லப்படும் வண்டிக்குக் கீழே மாடக் குழி.

டுடன்காமுன் கல்லறை ஓவியங்களை தூய்மைப்படுத்தி பாதுகாக்கும் பணிக்காக காற்றோட்ட வசதிகளை செய்யும்போது வேலையாள்கள் வித்தியாசமான ஒன்றை கண்டுபிடித்தனர். மம்மி அறையை பார்வையாளர்கள் நின்று பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பழைய மேடையை கட்டுமான பணிகளுக்காக அகற்றியபோது மேடைக்குக் கீழே துணியிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட ஏராளமான வேண்டுதல் குறிப்புகள் கிடந்தனவாம். பெரும்பாலான குறிப்புகள் டுடன்காமுனின் ஆசிர்வாதத்தை வேண்டி எழுதப்பட்டிருந்தன. மேலும் சில குறிப்புகள், “மன்னா! உன் கல்லறையைத் திறந்தவர்களைச் சும்மா விடாதே... சாபமிட்டு அழித்துவிடு” என்று இருந்தன. இதெல்லாம்கூடப் பரவாயில்லை. தங்களுக்குப் பிடிக்காத சிலரை டுடன்காமுன் சாபமிட்டு அழிக்கவேண்டும் என்றுகூட சில வேண்டுதல் குறிப்புகள் இருந்தனவாம். 

மன்னர்களின் பள்ளத்தாக்கில் சுமார் 65 கல்லறைகள் உள்ளன. எல்லா கல்லறைகளுமே எல்லா மாதங்களிலும் திறந்திருப்பதில்லை. தினமும் பயணிகள் வந்துசென்றால் கல்லறைகள் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்பதால் அவை சுழற்சி முறையில் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திலும் சில மன்னர்களின் கல்லறைகள் மட்டுமே திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மன்னர்களின் பள்ளத்தாக்கை காண என்று பொதுவாக நுழைவுச் சீட்டு வாங்கினால் நம்மால் மூன்று கல்லறைகளை மட்டுமே பார்வையிடமுடியும். டுடன்காமுன் கல்லறை இந்த மூன்றில் அடங்காது. அதை பார்வையிடத் தனியாக 100 எகிப்திய பவுண்ட் கட்டவேண்டும். 

ஆகவே மன்னர்களின் பள்ளத்தாக்கை காணச் செல்வோர் குறிப்பிட்ட யாராவது ஒரு மன்னரின் கல்லறையை காண்பதில் ஆர்வமாக இருந்தால் நீங்கள் போகும் பருவத்தில் அது திறக்கப்பட்டிருக்குமா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு செல்வது நல்லது. இல்லாவிட்டால் ஏமாற நேரிடும். எந்தெந்த கல்லறைகள் எந்தெந்தப் பருவத்தில் திறக்கப்படும் என்பதை எகிப்திய அரும்பொருள் துறை பயண வழிகாட்டிகளிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடும். அநேகமாக அதிகாரத்துவ இணையத் தளங்களிலும்கூட அந்தப் பட்டியல் வெளியாகக்கூடும். 

அதுதவிர சில கல்லறைகளும் ஆலயங்களும் புனரமைப்பு பணிகளுக்காக ஆண்டுக் கணக்கில் மூடப்படுவதுண்டு. பிரமிடுகளே கூட பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதுண்டு. அதைத் தெரிந்துகொள்ளாமற்போனால் பிரமிடுகளை வெளியே நின்று அண்ணாந்து பார்த்து, அடி ஆத்தி! என்று அதிசயித்துவிட்டுத் திரும்ப வேண்டியதுதான். உள்ளேபோய் அதன் கட்டுமான அற்புதங்களைக் காணமுடியாமற் போய்விடும். ஓவியங்களுக்கு வருவோம்.

டுடன்காமுன் கல்லறையில் மம்மி அறையில் மட்டும்தான் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வேறு எந்த அறையிலும் ஓவியங்கள் இல்லை. வேண்டுமென்றே அங்கெல்லாம் ஓவியம் வரையாமல் விடப்பட்டதா அல்லது ஓவியம் வரையப் போதுமான நேரம் இல்லாததால் அவ்வாறு விடப்பட்டதா என்பது தெரியவில்லை. டுட்டுக்கு பின் அரியணை ஏறிய மந்திரி ஆயி-யின் கல்லறை ஓவியங்களும் டுட் கல்லறை ஓவியங்களும் பெரிதும் ஒத்துப்போகின்றன. ஆனால் டுட் கல்லறை ஓவியங்கள் அதற்குமுன் வரையப்பட்ட கல்லறை ஓவியங்களில் இருந்து மாறுபட்டுள்ளன. லக்ஸோரின் பழங்கால பெயரான தீப்ஸ் பாணியில் இல்லை ஓவியங்கள். அவை டுட்டின் தந்தை உருவாக்கிய அமர்னா கால பாணியை அதிகம் பிரதிபலிக்கின்றன. ஆயி’க்கு பின் ஆட்சிக்குவந்த ஹோரெம்ஹோப் மன்னரின் கல்லறை ஓவியங்கள் மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள ஏனைய கல்லறை ஓவியங்களின் பாணிக்குத் திரும்பிவிட்டன. 

முதலாம் செட்டியின் கல்லறையில் பணியாற்றிய அதே ஓவியர்கள்தான் ஹோரெம்ஹோப் கல்லறை ஓவியங்களையும் வரைந்திருக்கவேண்டுமென ஊகிக்கப்படுகிறது. டுட் கல்லறை கட்டப்பட்ட அல்லது குடையப்பட்ட 20, 30 ஆண்டுகள் கழித்து குடையப்பட்டது முதலாம் செட்டியின் கல்லறை. டுட் கல்லறையின் மம்மி அறை தங்க அரங்கத்தை போல் மஞ்சள் வண்ணத்தை முதன்மையாக கொண்டு ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஓவியம் வரையத் தோதாக, பக்கவாட்டுச் சுவர்கள் மட்டும் ஜிப்சம் சாந்து கொண்டு பூசப்பட்டுள்ளது. கூரை பூசப்படாமல் செதுக்கப்பட்ட பாறையாகவே சொரசொரப்பாக விடப்பட்டுள்ளது. 

முன்னறையையும் மம்மி அறையையும் பிரிக்கும் தடுப்புச்சுவர், மம்மி அறை சாந்துப்பூச்சு, ஓவிய அலங்காரம் இவை எல்லாமே மன்னரின் மம்மியை கல்பெட்டிக்குள் வைத்து மூடி அதனைச் சுற்றி மூன்று பெரிய மரப் பெட்டிகளை நிறுவிய பின்னரே நடந்திருக்கவேண்டும் என்கிறார் கார்ட்டர். கல்பெட்டியை மூடியுள்ள மூன்று மரப்பெட்டிகள் 80 தனித்தனி பாகங்களால் ஆனவை. அவற்றை மம்மி அறைக்குள் வைத்துத்தான் கோத்துள்ளனர் தச்சர்கள். இளமஞ்சள் நிற கல்பெட்டி அதிக எடையுள்ள பெரிய பெட்டி. அதை முதலில் வைத்து நாலா பக்கமும் அடுக்கடுக்காக மூன்று பெட்டிகளை நிர்மாணித்த பிறகே ஜிப்சம் பூச்சு வேலை தொடங்கியது. 

இவை அத்தனையையும் தடுப்புச் சுவர் கட்டியபிறகு மம்மி அறைக்குள் எடுத்துவர இயலாது. குறிப்பாகக் கல்பெட்டி. மேலும், தடுப்புச்சுவரின் உள்பக்கம் அதவாது மம்மி அறைக்குள் வரும் சுவர்ப்பக்கப் பூச்சும், ஏனைய மூன்று பக்கப் பூச்சும் ஒரே சீராக உள்ளன. ஓவியங்களும் அப்படியே. எனவே, மம்மி அறை பக்கவாட்டுச் சுவர்களுக்கும் தங்க வண்ண வேலைப்பாடுமிக்க பெரிய கடைசி பெட்டிக்கும் இடையே நின்றுகொண்டு மிக மிக சிரமப்பட்டுத்தான் பூச்சு வேலையும் ஓவிய வேலையும் நடந்திருக்கவேண்டும். ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளியில் நின்றுகொண்டு ஓவியர்கள் பணியாற்றியுள்ளனர். இன்னும் கொஞ்சம் இடவசதியும் வெளிச்சமும் இருந்திருந்தால் ஓவியங்கள் இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக வந்திருக்கலாம் என்கிறார் கார்ட்டர். 

மம்மி அறையில் முதலில் நமது கண்களுக்குத் தெரிவது வடபுறச் சுவரில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள்தாம். உடலில் இருந்து உயிர் பிரிந்தபின் மன்னரின் ஆன்மா மறுமை உலகுக்குச் செல்வதை காட்டுகிறது இந்த வடபுறச் சுவர் ஓவியம். மூன்று தனித்தனிக் காட்சிகள் உள்ளன இந்த ஓவியத்தில். கல்லறையில் உள்ள ஓவியங்களிலேயே இதுதான் ஆகப் பிரபலமான ஓவியம். ஆக அதிகமான புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் நீங்கள் பெரும்பாலும் இந்த ஓவியத்தைத்தான் பார்த்திருப்பீர்கள். 

டுடன்காமுன் கல்லறை-வடபுறச் சுவரோவியம்

வலமிருந்து இடமாகச் செல்லும் முதல் பகுதி ஓவியத்தில் மம்மியாக்கம் செய்யப்பட்ட டுட்டின் உடல் ஒசைரிஸ் (Osiris) என்னும் கடவுளின் வடிவில் காட்டப்பட்டுள்ளது. இந்த ஒசைரிஸ் பாதாள உலகக் கடவுள். ஆடவரின் வடிவில் இவர் Atef என்னும் மகுடத்தை அணிந்திருப்பார். மேல் எகிப்துக்குரிய வெள்ளை மகுடத்தின் பக்கவாட்டில் தீக்கோழி இறகுகள் இரண்டைச் சூடியிருப்பார் இவர். இரண்டு கைகளிலும் செழிப்பைக் குறிக்கும் தானியமடிக்கும் கோல்களை வைத்திருக்கிறார். அந்த தெய்வத்துக்கு எதிரே டுடன்காமுன் மறைவுக்குப் பிறகு அவர் இடத்தில் அரியணை ஏறிய அவரது மகாமந்திரி ஆயி தலைமைப் பூசகராகக் காட்டப்பட்டிருக்கிறார்.

டுடன்காமுன் கல்லறை-வடபுறச் சுவரோவியம்

ஆயி இடுப்புக்குக் கீழே வெள்ளை அரையாடையும் மேலுடம்பில் சிறுத்தைத் தோலும் அணிந்தவாறு உள்ளார். சமயச் சடங்குகளை நிகழ்த்தும்போது இந்தச் சிறுத்தைத் தோலை அணிந்துகொள்வது எகிப்திய வழக்கம் போலும். நமது முனிபுங்கவர்கள் புலித்தோல் மீதும் மான் தோல் மீதும் அமர்ந்திருக்கும் ஓவியங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. மந்திரி ஆயி நீல மகுடம் என்னும் புள்ளிகளோடு கூடிய போர் மகுடத்தை அணிந்து வாயைத் திறக்கும் சடங்கை நிகழ்த்துகிறார். உயிரற்ற மம்மி மேலுலகுக்குச் சென்றதும் இந்த வாய் திறக்கும் சடங்கின் மூலம் உயிர் பெறுவதாக ஐதீகம். கடவுளோடு உரையாடவும் தனக்கு படைக்கப்படும் உணவை உட்கொள்ளவும் மம்மிக்கு இந்தச் சடங்கு அவசியம். 

ஒசைரிஸ் தெய்வத்தை இளஞ்சிறுவனான டுடன்காமன் தழுவிக் கொள்ளும் காட்சி. கீழ் இடப்பக்கத்தில் திசை தெய்வங்களுக்கான மாடக் குழி.

ஐந்து கிண்ணங்களும் படையல் மேசையும். நறுக்கப்பட்ட ஒற்றை விரலும் வலப்பக்க ஓரமாக உள்ளது. டுடன்காமுன் கல்லறை.

டுடன்காமுனை எதிர்கொண்டு வரவேற்கும் வானகத் தெய்வம். வலக் கையில் நெளிகோடுகள்.

டுடன்காமுனின் உடலுக்கும் புதிய மன்னர் ஆயி-க்கும் நடுவே ஒரு சின்ன மேசையில் படையல் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. ஈமச்சடங்கோடு தொடர்புடைய பொருள்கள் இவை. மரத்தை சீவுவதற்காக எகிப்திய தச்சர்கள் பயன்படுத்தும் இழைப்புளி போன்ற ஒரு கருவிதான் (Adze) முதலில் கண்ணுக்குத் தட்டுப்படுகிறது. பிறகு ஒரு தீக்கோழி இறகு, ஒற்றை மனித விரல், துண்டிக்கப்பட்ட எருதின் கால். இன்னொன்று தெளிவாகத் தெரியவில்லை. மன்னரில் கை, கால்களைப் போன்ற செயற்கை உலோக உறுப்புகளைப் படையலுக்கு வைப்பது அவர்களுடைய உண்மையான உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இந்த ஒற்றை விரல் படையலுக்குக் காரணமாக இருக்கலாம். போரின்போது எதிரிகளின் கரங்களை வெட்டி எடுத்துவரும் பழக்கமும் எகிப்தில் இருந்தது. 

லக்ஸோரிலுள்ள மெடினட் ஹபு என்னும் ஆலயத்தில் இரண்டாம் ராம்சிஸ் மன்னருக்கு முன் மணிக்கட்டு வரை வெட்டி எடுக்கப்பட்ட கைகள் ஏராளம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குடைவுச் சிற்பம் உண்டு. அதே ஆலயத்தில் கைகளைப் போல் ஆண் குறிகள் வெட்டிக் குவிக்கப்பட்ட சிற்பமும் இருக்கும். எதிரிகளில் எத்தனை பேர் போரில் கொல்லப்பட்டனர் என்பதற்கான அடையாளம் அல்லது மன்னரின் வீரத்தைப் பறை சாற்றும் போர்ப் பரிசாக இதைக் கருதலாம். 

இரண்டாம் ராம்சிஸ் மன்னருக்குப் போரில் மணிக்கட்டு வரை வெட்டி எடுக்கப்பட்ட கைகளைக் காட்டும் காட்சி. மெடினட் ஹபு ஆலயம், லக்ஸோர்

மனிதக் கரங்களை விட நம்பத்தகுந்த ஆதாரம் என்பதால் எதிரிகளின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஆண்குறிகளின் குவியல். மெடினட் ஹபு ஆலயம், லக்ஸோர்.

நகத்துடன் கூடிய ஒற்றை விரல் உள்ள படையல் தாலத்துக்கு மேலே ஐந்து சிறிய கிண்ணங்கள் காட்டப்பட்டுள்ளன. உரலில் தானியங்களை போட்டுக் குத்தும்போது, அவை வெளியே சிதறிப்போகாமல் தடுக்க இருபுறமும் திறந்த தகரத்தில் “வாய்ப்பெட்டி” என ஒன்று வைப்போம் எங்கள் ஊரில். அதுபோல் உள்ளன அந்தக் கிண்ணங்கள். அவற்றில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி. மூன்று தங்கக் கிண்ணங்களுக்கு நடுவே இரண்டு வெள்ளிக் கிண்ணங்கள். அவற்றில் சின்னச் சின்ன உருண்டைகள் உள்ளன. அவை வாசனை உருண்டைகளாம். முன்னறையில் அதேபோன்ற வாசனை உருண்டைகள் இருந்ததாகக் கூறுகிறார் கார்ட்டர். 

எகிப்திய அரும்பொருளகத்தில் இப்போது நீங்கள் காணக்கூடிய வண்ண வண்ண விழுதால் அலங்கரிக்கப்பட்ட கழுத்து ஆரங்களையும் கங்கணங்களையும் இந்த ஓவியங்களில் நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். இங்கே டுடன்காமுன் ஒசைரிஸ் தெய்வமாகவே காட்டப்பட்டிருப்பது முக்கியமானது. 18ஆவது, 19ஆவது அரசகுலத்தைச் சேர்ந்த வேறு எந்த மாமன்னருடைய கல்லறை ஓவியத்திலும் இவ்வாறு ஒசைரிஸ் தெய்வமாகவே மன்னர்கள் காட்டப்பட்டதில்லை. மேலும் போருக்குப்போகும்போது அணியும் நீலமகுடத்துடன் காணப்படும் மன்னர்கள் எவரும் சிறுத்தைத் தோல் அணிந்து வாய் திறக்கும் சடங்கை நிகழ்த்தும் ஓவியமும் இங்குமட்டும்தான் காணக் கிடைக்கிறது என்கிறார்கள். பூசகர்கள்தான் அந்தச் சடங்கைச் செய்வார்கள் சிறுத்தைத் தோலுடன். 

பொதுவாக, மம்மியாக்கம் செய்யப்பட்ட உடல் வடிவமாகவே மன்னர்கள் காட்டப்படுவர். அவர்களை ஒசைரிஸ் தெய்வம் தழுவிக்கொள்ளும் காட்சி காட்டப்பட்டிருக்கும் அல்லது ஒசைரிஸ் தெய்வத்துக்கு ஏதேனும் ஒன்றை மன்னர்கள் படையலிடும் காட்சி காட்டப்பட்டிருக்கும். அதற்கு மாறாக டுடன்காமுன் ஒசைரிஸ் தெய்வமாகவே சித்திரிக்கப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என ஊகிக்கிறார் புகழ்பெற்ற எகிப்தியவியலாளரான திருமதி சலிமா இக்ரம். 

கைரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியரான திருமதி இக்ரம், டுட்டின் தந்தை அக்கினாட்டன் உருவாக்கிய சூரிய (ஆட்டன்) வழிபாட்டு சமயத்திலிருந்து எகிப்து தனது பழைய தெய்வ வழிபாட்டுக்கு திரும்பிவிட்டதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே டுட் இப்படி காட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். அக்கினாட்டனுக்கு பிறகு வேறு எவரும் ஆதவனை வணங்கும் அவரது சமயத்துக்கு புத்துயிரூட்டி புரட்சி செய்துவிடக் கூடாது என்பதற்காக டுட்டையே இப்படி ஒசைரிஸ் கடவுளாக அதிகாரிகள் மாற்றிக் காட்டியிருக்கலாம் என்கிறார் திருமதி இக்ரம்.

அடுத்ததாக நடுவில் உள்ள ஓவியத்தில் டுடன்காமுன் இளஞ்சிறுவனாகக் காட்டப்பட்டுள்ளார். அவரை வானகத்துக்குரிய பெண் தெய்வமான Nut எதிர்கொண்டு வரவேற்கிறாள். நீர்நிலையைக் குறிக்கும் அடையாளமாக நெளிகோடுகள் அந்த தெய்வத்தின் இரண்டு கைகளிலும் வரையப்பட்டுள்ளன. “பிறவிப் பெருங்கடலைக் கடந்துவிட்டாய் கண்ணா” என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ? 

டுட் இடக்கையில் உயிர்க்குறியான அங்க்கை பிடித்துள்ளார். அதே கையில் பத்தி விரித்த நாகம் போல ஒன்றையும் பிடித்துள்ளார். யாகங்களில் நெய் ஊற்றப் பயன்படும் மரக்கரண்டி போலவும் உள்ளது அது. வலக்கையில் தோள்பட்டை உயரமுள்ள ஒரு கம்பை பிடித்துள்ளார். இரண்டு கைகளின் மணிக்கட்டிலும் வண்ணமயமான கங்கணம். கழுத்தில் ஆறு அடுக்கு ஆரம். தலையில் ஓர் உலோக வளையம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்பகுதியில் நீண்ட வால்போன்ற பகுதியும் வரையப்பட்டுள்ளது. தலை வளையத்தின் முகப்பில் கீழ் எகிப்தைக் குறிக்கும் சின்னமாக பத்தி விரித்த நாகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் டுட்டின் பிரபலமான தங்க முகமூடியிலோ படமெடுக்கும் நாகமும், மேல் எகிப்தின் சின்னமான வல்லூறும் இணைந்து காட்டப்பட்டிருக்கும். அது டுடன்காமுன் மேல் கீழ் இணைந்த அகண்ட எகிப்தை ஆட்சி செய்த மாமன்னர் என்பதைக் குறிக்கிறது. சில மன்னர்களுக்கு நாகமோ வல்லூறோ ஒன்று மட்டும் காட்டப்பட்டிருக்கும். அப்படியென்றால் அவர்கள் எகிப்தின் ஒரு பகுதியை மட்டும் ஆட்சி செய்தவர்கள் என்று பொருள். 

கடைசியாக உள்ள ஓவியத்தில் டுடன்காமன் ஒசைரிஸ் தெய்வத்தைத் தழுவிக் கொள்ளும் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. வானுலகில் டுட் அனுமதிக்கப்பட்டு- விட்டதைக் காட்டுகிறது இந்த ஓவியம். ஒசைரிஸ் தெய்வத்தின் வயிற்றுப் பகுதியில் இருந்து வெளிப்படும் இரண்டு கைககள் இயல்பான உடையிலிருக்கும் டுடன்காமுனைத் தொடுவதுபோல் வரையப்பட்டுள்ளது இங்கே. தாடி வைத்துள்ள ஒசைரிஸ் அணிந்துள்ள வரிவரியான கழுத்து ஆரத்தின்கீழே பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் நீளவாக்கில் அமைந்த பெரிய பெருக்கல் குறி காணப்படுகிறது. 

டுடன்காமுன் இங்கே மன்னர்கள் அணியும் நெமஸ் என்னும் வரிவரியான துணித் தலைப்பாகையை அணிந்துள்ளார். பிரபலமான தங்க முகமூடி இந்தத் தலைப்பாகையுடன்தான் காணப்படுகிறது. தலைப்பாகை முன்னால் படமெடுத்த நாகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. டுடன்காமுனை அவரது ஆன்மா பின்னாலிருந்து வலக்கையால் தோள்பட்டையைத் தொட்டவாறு காட்டப்பட்டுள்ளது. அந்த ஆன்மாவின் இடக்கையில், உயிர்க்குறி அங்க் உள்ளது. ஆன்மாவின் தலையில் ப வடிவப் பெட்டிக்குள் ஒரு பசு மாடு நிற்கிறது. அதற்குமேல் வல்லூறும் நாகமும் உள்ளன. இந்த வடபுறச் சுவர் ஓவியம் பற்றிய முற்றிலும் புதுத் தகவல் 2020இல் ஓர் ஆய்வுக் கட்டுரையில் வெளியாகி இருக்கிறது. அதைப்பற்றிக் கருவூல அறை அத்தியாயத்தில் விரிவாகப் பார்ப்போம். இந்த வடபுற ஓவியம் இரண்டு கட்டங்களாக வரையப்பட்டது என்றும், முதற்கட்ட ஓவியத்தில் இருப்பது டுட்டின் தந்தை அக்கினாட்டனின் அரச மனைவி நெஃபர்டிட்டி என்றும் கூறுகின்றனர் இரண்டு எகிப்தியவியலாளர்கள். டுட்டின் கல்லறையே அந்த அம்மணியுடையதுதான் என்கின்றனர் அவர்கள். அது எப்படி என்பதைப் பிறகு பார்ப்போம். 

வடபுறச் சுவரோவியத்திற்கு இடப்பக்கமாகப் பார்த்தால், மேற்குப்புறச் சுவரில் வரையப்பட்ட ஓவியம் தெரிகிறது. இந்தச் சுவரைப் பெரிதும் ஆக்ரமித்திருப்பவை 12 பபூன் வகைக் குரங்குகள். மூன்று வரிசைகளில் நான்கு குரங்குகள் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளன. தரையிலிருந்து வால் வானோக்கி உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரங்கும் செவ்வக வடிவில் பிரிக்கப்பட்ட பகுதிக்குள் இடப்பக்க ஓரமாக அமர்ந்துள்ளன. இதேபோன்ற குரங்குகளின் ஓவியங்களை புதிய மன்னர் ஆயி’யின் கல்லறையிலும் காணலாம். குரங்கின் எதிரே டுடன்காமுன் பாதாள உலகத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்லப் பயன்படும் மந்திரக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. ஒன்றில் மட்டும் சிறு பிறை உள்ளது. அந்த மாடக்குழியில் காவல் தெய்வங்களை நிறுவுவது எகிப்தியர்களின் பழக்கம். மம்மி அறையில் அதுபோல் திசைக்கு ஒன்றாக நான்கு மாடக் குழிகள் உள்ளன. திக்கு பாலகர்கள்!!

12 மணி நேரத்தைக் குறிக்கும் 12 பபூன் ரகக் குரங்களைக் காட்டும் மேற்குப்புறச் சுவரோவியம்.

குரங்குகளுக்கு மேலே படகு ஒன்று காட்டப்பட்டுள்ளது. படகின் நடுவில் புனித வண்டு இருக்க, அதன் இருபுறமும் அமர்ந்த நிலையிலுள்ள இருவர் உடலைத் திருப்பி அதை வாழ்த்துவதுபோல் வரையப்பட்டுள்ளது. அதற்கு வலப்பக்கமாக மாட் தெய்வத்தை பின்தொடரும் நால்வரின் உருவம் வரையப்பட்டுள்ளது. எகிப்தியத் தொன்மத்தில் இந்த மாட் நீதி தெய்வம். தீக்கோழி இறகை தலையில் சூடியிருக்கும். பாதாள உலகில் மேற்கில் தொடங்கி சூரியக் கடவுள் கிழக்கு நோக்கிச் சென்று புதிதாகப் பிறப்பதை இங்குள்ள மந்திரக் குறிப்பு விளக்குகிறது. சூரியனின் இரவுப் பயணம் நீடிக்கும் 12 மணி நேரத்தைக் குறிக்கவே 12 கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு பபூன் குரங்கும் ஒவ்வொரு மணி நேரத்தைப் பிரதிநிதிக்கிறது.

குரங்குகள் வரையப்பட்ட சுவருக்கு நேர் எதிரில் உள்ள கிழக்குப்புறச் சுவரில் மம்மியாக்கம் செய்யப்பட்ட டுடன்காமுனின் உடல் ஒரு படகின் மேல் சிறிய பெட்டி வடிவிலான சிற்றாலயத்திற்குள் வைக்கப்பட்டு இழுத்துவரப்படும் காட்சி வரையப்பட்டுள்ளது. டுட்டின் மம்மி கல்பெட்டிக்குள் முதலில் வைக்கப்பட்டிருந்த சிங்க முகக் கட்டிலைப் போன்ற ஓர் ஈமப்படுக்கைமேல் வைக்கப்பட்டுள்ளது. டுட்டின் பக்கவாட்டுத் தோற்றம் இதில் காட்டப்பட்டுள்ளது. வயிற்றிலிருந்து முழங்கால் வரையிலான மேல் பகுதியில் டுட்டின் பெயர் உள்ளிட்ட சித்திர எழுத்துகள் சில எழுதப்பட்டுள்ளன. அதற்குமேல் இரண்டு வரிசையாகத் தோரணங்கள். அச்சு அசல் மாவிலைத் தோரணம் போலவே உள்ளது. நமது சோழர்கால செப்புத் திருமேனிகளின் மார்பில் அணிந்திருப்பதாகக் காட்டப்படும் அரும்புச் சரம் போலவும் இந்தத் தோரணம் உள்ளது. 

டுட் மம்மி வைக்கப்பட்டுள்ள தேர் போன்ற பெட்டியானது கருவூல அறையில் பளிங்கால் செய்யப்பட்ட கெனோப்பிக் ஜாடிகள் வைக்கப்பட்டிருந்த தங்கச் சிற்றாலயத்தை போலவே உள்ளது. பெட்டியின் மேலே வரிசையாக படமெடுத்த நாகங்கள் காட்டப்பட்டுள்ளன. கல்லறையில் உள்ள ஓவியங்களிலேயே இதைத்தான் நம்மால் பார்வையாளர் மாடத்திலிருந்து ஓரளவு நெருக்கமாக பார்க்க முடிகிறது. சுவரின் 60 விழுக்காட்டுப் பகுதியில்தான் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதற்குக் கீழே கருவூல அறைக்கான வாயில் வந்துவிடுகிறது. ஒரே காட்சியாக உள்ளது இந்த ஓவியம். 

கல்லறை ஓவியங்களிலேயே இந்த பகுதி ஓவியம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பழுப்பு நிறப் புள்ளிகள் அதிகம். அநேகமாக இந்த பகுதியைத்தான் ஓவியர்கள் கடைசியாக வரைந்து கல்லறையை மூடியிருக்கவேண்டும். முதலில் இங்கு வரைந்துவிட்டால் எஞ்சிய சந்துகளுக்குள் புழங்குவது அவர்களுக்குச் சிரமமாக இருந்திருக்கும். ஆகக் கடைசியாக வரைந்ததால் இந்தச் சுவர்ப் பகுதி உலர போதிய அவகாசம் இருந்திருக்காது. அதனால்தான் இங்கே அதிகமான பழுப்புப் புள்ளிகள். 

டுடன்காமுன் மம்மி இருக்கும் பெட்டியின் அடிப்பகுதி பனி மலைகளில் இழுக்கப்படும் பனிச் சறுக்கு (ஸ்லெட்ஜ்) வண்டிபோல் உள்ளது. இதற்கு சக்கரங்கள் இல்லை. பண்டைக்கால எகிப்தில் பெரிய பெரிய கற்களையும் மகா பிரமாண்டமான சிலைகளையும்கூட இதுபோன்ற சறுக்கு வண்டிகளில் வைத்துத்தான் இழுத்துவந்துள்ளனர். எங்குமே சக்கர வண்டிகளில் எடையுள்ள பொருள்கள் இழுத்துவரப்படுவதாகக் காட்டப்படவில்லை. சறுக்கு வண்டி இழுத்துவரப்படும் வழியில் பாதையில் ஏற்படும் உராய்வைத் தடுக்க நீரூற்றும் காட்சி கூட சில ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளது. பாலைவன மணலில் சக்கரங்கள் புதையும் என்பதால் சறுக்கு வண்டிகளே பண்டைக்கால எகிப்தில் பயன்படுத்தப்பட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். பண்டைக்கால எகிப்தில் சக்கரம் பயன்பாட்டில் இல்லை. வெளிநாட்டு ஊடுருவலின்போதுதான் சக்கரமும் தேர்களும் எகிப்துக்கு அறிமுகமாயின. 

பனிச் சறுக்கு வண்டியைப் போன்ற அடித்தளத்துடன் கூடிய கல்லறைப் பெட்டி

டுடன்காமுனின் மம்மி வைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்தை இழுத்துச் செல்லும் பூசகர்கள்.
பனிச் சறுக்கு வண்டியைப் போன்ற அடித்தளத்துடன் கூடிய கல்லறைப் பெட்டிகள்-கைரோ தேசிய அரும்பொருளகம்
மாபெரும் சிலைகளை எகிப்தியர்கள் நகர்த்தப் பயன்படுத்திய பனிச் சறுக்கு வண்டி. இது ஒரு கல்லறையில் உள்ள சுவரோவியம். சக்கரம் இல்லாமல் பிரமாண்டமான சிலைகளை எகிப்தியர்கள் நகர்த்தியதற்கான ஆதாரம் இந்த ஓவியம்தான். படம் நன்றி sci.news இணையப்பக்கம்

டுட் மம்மியுள்ள படகு வடிவிலான சிறு ரதத்தை வெள்ளை ஆடை அணிந்து தலையில் வெள்ளை நாடா கட்டிய 12 பேர் ஒரு கயிற்றால் கட்டி இழுத்து வருகின்றனர். கைப்பிடியைத் தாண்டி நீளும் கயிறு ஒரு விலங்கின் வால் போல் சுருண்டு முடிகிறது. பத்து பேருக்குத் தோள்பட்டை வரை முடி இருக்கிறது. இரண்டாவது, மூன்றாவது ஆள்களாகக் காட்டப்பட்டுள்ள மீதி இருவரது தலை மொட்டையடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முக்கியப் பூசகர்களாக இருக்கலாம். 10 பேர் இடுப்பில் வெள்ளை வேட்டியை முடிந்து கட்டியதுபோன்ற ஆடையை உடுத்தியுள்ளனர். மேலே காலர் இல்லாத குர்த்தி போல் முழங்கைவரை நீளும் அரைக்கை சட்டை அணிந்துள்ளனர். மொட்டைத்தலைப் பூசகர்கள் மட்டும் தோளை மூடாமல் சமையல்காரர்கள் அணியும் ஏப்ரன் போன்ற வெள்ளை முழு ஆடையைக் கழுத்திலுள்ள நாடாவிலிருந்து முடிச்சிட்டுக் கட்டியுள்ளனர். கால்களில் அனைவருமே காலணி அணிந்திருக்கிறார்கள். இந்த பத்துப் பேரில் சிலர் அமைச்சர்கள். இந்தப் பனிச் சறுக்கு வண்டிக்கு நேர் கீழேதான் திசைக் காவல் தெய்வத்துக்கான ஒரு மாடக்குழி உள்ளது. 

இந்த இடத்தில் எகிப்தியர்கள் பின்பற்றிய ஓவிய பாணி பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். பக்கவாட்டில் நின்றநிலையில் உடலைத் திருகிக்கொள்வது போலத்தான் கிட்டத்தட்ட எல்லா ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. Torso எனப்படும் உடலின் மேல் பகுதி, தோள்பட்டை முதல் வயிறு வரை முன்னோக்கியவாறு வரையப்பட்டிருக்கும். ஒரு பூ மாலையோ மணியாரமோ அணிந்திருந்தால் அது முழுமையாகத் தெரியும். ஆனால் தலை, இடுப்பு, கால்கள் எல்லாமே பக்கவாட்டில்தான் காட்டப்பட்டிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் Profile Pose என்று சொல்வோமே அதுபோல. வாய், மூக்கு, நெற்றி, காது, நெற்றியில் அணிந்துள்ள சுட்டிகள், தலையாரம், மணிமகுடம் எல்லாமே பக்கவாட்டுத் தோற்றத்தில்தான் வரையப்பட்டிருக்கும். 

முகம் முழுவதும் பக்கவாட்டில் காண்பதுபோல் இருந்தாலும், உருவத்தின் ஒற்றைக் கண் பாதியாகக் காட்டப்படாமல் நம்மை நேருக்குநேர் பார்ப்பதுபோல் முழுமையாக வரையப்பட்டிருக்கும். நிஜத்தில் ஒருவர் இப்படிக் காட்சியளிப்பது சாத்தியமில்லை. உடலை எவ்வளவு திருகிக்கொண்டாலும் இதுபோல் இருக்கமுடியாது. ஏனிந்தச் சிக்கலான உறைநிலையை சுவரோவியங்களுக்கும் சுவர்ச் சிற்பங்களுக்கும் தெரிவு செய்தனர் எகிப்தியர்கள்? 

ஓவியர்கள் இதற்குத் தரும் விளக்கம் சுவையானது. நடைமுறைக்கு ஏற்ற எளிய வழி இதுதான் என்கின்றனர் அவர்கள். மூக்கையும் பாதங்களையும் பக்கவாட்டுத் தோற்றத்தில் வரைவது மிக எளிது. தோள்களை நேர்ப் பார்வையில் வருவதுபோல் வரைவது எளிது. வேண்டுமானால் நீங்கள் ஓர் உருவத்தை வரைந்து பார்த்து இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கூர்மையான நாசி என்பதைப் பக்கவாட்டில் உணர்த்துவதே எளிதானது. 

நேர்ப் பார்வைக்கு வருவதுபோல் மூக்கை வரையும்போது, எல்லா மூக்கும் சப்பை மூக்கு போல் தோற்றமளிக்கவே வாய்ப்பு அதிகம். இத்தனை திருகல்களோடு ஓவியம் வரையப்படுவதற்கு ஆன்மிக ரீதியான சில காரணங்களும் எகிப்தியர்களுக்கு இருந்திருக்க வேண்டுமென ஊகிக்கின்றனர் எகிப்தியவியல் நிபுணர்கள். உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவுக்கு, பூமியில் ஓர் இருப்பிடம் தேவைப்படுமென நம்பினர் அக்கால எகிப்தியர்கள். அது மம்மி வைக்கப்படும் கல்பெட்டியாகவோ உருவப்படமாகவோ இருக்கலாம். மரணமிலாப் பெருவாழ்வு என்னும் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக நிலையான, சலனமற்ற, காலமில்லாத வகையில் இந்த உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவாம். 

இந்த விளக்கத்தோடு ஓவியங்களை பார்க்கும்போது நம்மால் எகிப்திய ஓவியங்களை இன்னும் ரசித்துப் பார்க்கமுடியும். மம்மி அறையின் நுழைவாயில் அமைந்துள்ள தென்புறச் சுவரில் டுடன்காமுன் ஹாத்தோர் தெய்வத்துடன் இருக்கும் காட்சி வரையப்பட்டுள்ளது. மேல் எகிப்தின் காவல் தெய்வம் ஹாத்தோர். உயிரின் அடையாளமாக அங்க்’கை டுட்டின் மூக்கிற்கு நேராக அந்த தெய்வம் நீட்டிக் கொண்டுள்ளது. நரித் தலைத் தெய்வம் அனுபிஸ் டுட்டுக்கு பின்னால் நிற்கிறது. 

டுட் கல்லறை-தென்புறச் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியம்

இந்த ஓவியத்தை மம்மி அறை நுழைவாயில் தடுப்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டு உட்புறமாகத் திரும்பிச் சிரமப்பட்டுத்தான் பார்க்க முடியும். மம்மி அறையில் நுழைவதற்காக கார்ட்டர் குழுவினர் உடைத்த இடப்பக்க தடுப்புச் சுவரின் பின்பக்கத்தில் இந்த ஓவியம் இருக்கிறது. சுவரை உடைத்தபோது, அந்த ஓவியத்தின் ஒருபகுதி நொறுங்கி விட்டது. ஆனால், கார்ட்டரா விடுவார்? சுவரை கவனமாக உடைத்து, கீழே விழுந்த துண்டுகளில் இருந்து அந்த ஓவியத்தை மீட்டுருவாக்கம் செய்து அப்போதே புகைப்பட நிபுணர் பார்ட்டனை வைத்து அதைப் படமும் எடுத்து ஆவணப்படுத்தியும் விட்டார். 

மம்மி அறையில் ஓவியம் தீட்டிய ஓவியர்கள் இந்தச் சுவர் ஓவியப் பணிகளை முடித்துவிட்டுக் கீழிருந்த சின்ன வாசல் வழியாகத்தான் வெளியேறி இருக்கவேண்டும். பின்னாளில் கள்வர்கள் புகுந்தபோது அந்தப் பகுதியை உடைக்காமல் ஓவியர்கள் வெளியேறிய சின்ன வாசலை உடைத்துத்தான் உள்ளே போயிருக்கவேண்டுமென வரலாற்றாய்வாளர்கள் ஊகிக்கின்றனர். 

உடைபட்ட இந்த ஓவியத்தின் படம் டுடன்காமுன் கல்லறையை போன்றே அச்சு அசலாக நகலெடுக்கப்பட்ட மாதிரிக் கல்லறையில் காட்சிக்கு உள்ளது. லக்ஸோரில் கார்ட்டரின் இல்லத்துக்கு மிக அருகிலேயே உள்ளது இந்த மாதிரிக் கல்லறை. ஹாரி பார்ட்டன் எடுத்த படத்தில் ஐசிஸ் தேவதை மன்னர் டுட்டை வரவேற்கும் விதமாகக் காட்டப்பட்டுள்ளது. அதன் இரண்டு கைகளிலும், எதிரே வடபுறச் சுவரிலுள்ளதை போலவே நெளிகோடுகள் காட்டப்பட்டுள்ளன.

இந்த மாதிரிக்-கல்லறையில் வைக்கப்பட்டுள்ள விளக்கப்படத்தில் இந்த தேவதையின் கைகள் நிநி முத்திரையை குறிப்பதாக எழுதப்பட்டுள்ளது. இரண்டு நெளிகோடுகளும் ஹைரோகிளிஃப்ஸ் எழுத்துகளாம். அந்த ஐசிஸ் தேவதைக்குப் பின்னால் மூன்று பாதாள உலக தெய்வங்கள் குத்த வைத்த நிலையில் காட்டப்பட்டுள்ளன. இதுதான் டுட் கல்லறையில் வரையப்பட்ட ஆகக் கடைசி ஓவியமாக இருக்கவேண்டும். உண்மையான கல்லறையில் இந்த சிதைந்த ஓவியத்தைப் பற்றி குறிப்புகள் ஏதுமில்லை. மாதிரிக்-கல்லறையில் பார்த்துத்தான் நாங்கள் இதுபற்றித் தெரிந்துகொண்டோம். நிறையப் புத்தகங்களிலும்கூட இதுபற்றித் தகவல் இல்லை. 

நிநி முத்திரையோடு கூடிய ஐசிஸ் தேவதை. கல்லறையில் வரையப்பட்ட இறுதி ஓவியமாக இது இருக்கக்கூடும்.

டுடன்காமுன் பற்றிப் படிக்கத் தொடங்கினீர்கள் என்றால் உங்களால் நிறுத்தவே முடியாது. பழந்தமிழ்ச் சொற்களைப் பற்றி ஆராயப் புகுந்த நாஞ்சில் நாடன் ஐயாவை பார்த்து கி. ராஜநாராயணன் பாட்டா சொன்ன மாதிரி, “தொடங்கிட்டீகன்னா நிறுத்த முடியாது. ஆயுசுக்கும் அது ஒங்களைப் பிடிச்சிக்கிடும், பாத்துக்கிடுங்க” என்ற கதைதான். டுட் பற்றி எங்கு, என்ன தகவல் வெளியானாலும் அது எப்படியாவது உங்களை வந்து சேர்ந்துவிடும். டுட்டின் மம்மியையும் ஆபரணங்களையும் நேரில் சென்று பார்க்கும்வரை உங்கள் ஆவல் தணியாது. (எகிப்துக்குச் சென்றுவந்த பிறகு, அந்தப் பித்து இன்னும் முற்றிவிடும் என்பது வேறு விஷயம்.) 

வழக்கமாக நுனிப்புல் மேயும் பயணிகளுக்கு வழிகாட்டிகள் கார்ட்டரின் இல்லத்தையும், ஸ்பெயின் கட்டிக்கொடுத்த இந்த மாதிரிக் கல்லறையையும் அழைத்துச் சென்று காட்டுவதில்லை. கார்ட்டரின் இல்லத்துக்கு நாங்கள் சென்றபோது எங்களைத் தவிர ஒரே ஒரு வெள்ளைக்காரத் தம்பதி வந்து சென்றது. மாதிரிக் கல்லறையில் அதுவும் இல்லை. பயணம் செய்யும்போதெல்லாம் டுட் பற்றி நானும் ராஜகோபாலும் கேட்ட கேள்விகளை பார்த்து எங்கள் வழிகாட்டி இந்த இரண்டு இடங்களையும் நாங்கள் பெரிதும் ரசிப்போம் என்று அனுமானித்து அவரே அழைத்துச் சென்றுவிட்டார். இரண்டு இடங்கள் பற்றியும் எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. 

மாதிரிக் கல்லறையை காட்டிலும் கார்ட்டரின் இல்லத்தைத்தான் நான் வெகுவாக ரசித்தேன். அங்கே நான் கார்ட்டரோடு மானசீகமாகப் பேசிக்கொண்டேன். “டுடன்காமுன் மம்மியை பார்த்த நாளன்று எத்தனை மணிக்குத் தூங்கப் போனீங்க கார்ட்டர்? டுட் உங்க கனவுல வந்தாரா?” புது டில்லியின் சஃப்தர்ஜங் சாலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வசித்த இல்லத்தை 2000ஆம் ஆண்டில் நேரில் சுற்றிப் பார்த்தபோது, ஓய்வுபெற்ற அரசாங்க உயர் அதிகாரியான என் அப்பா அடைந்த நெகிழ்ச்சிக்கு இணை வைக்கலாம் என் உணர்வை. உண்மையில், அப்போது நாங்கள் மேற்கொண்டது 17 நாள் காசி யாத்திரை. அதன் ஒரு பகுதியாகத்தான் புது டில்லிக்குச் சென்றிருந்தோம். 

என் தந்தை எதற்கும் பெரிதாக உணர்ச்சிவசப்பட மாட்டார். சரியான கல்லுளிமங்கன்! ஆனால் சஃப்தர்ஜங் சாலை நினைவு இல்லத்தில் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை பார்த்துக் கண் கலங்கிவிட்டார் அவர். பின்னாளில் பலரும் அந்த இடத்தை பார்த்து அதிக உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று அதை பார்வையாளர்களுக்கு மூடிவிட்டதாக படித்த நினைவு. அதே இல்லத்தில் கண்ணாடிச் சட்டத்துக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடையைப் பார்த்தபோதும் அதே அளவுக்குக் கலங்கிப் போனார் அப்பா. எனக்கு ராஜீவின் கனமான தோஷிபா மடிக்கணினியைப் பார்த்ததில் பரவசம். இந்தியா இழந்த இளம் பிரதமர்! 

அலஹாபாத் ஆனந்தபவன் இல்லத்தில் மகாத்மா காந்தி தங்கியிருந்த அறையை அவர் பயன்படுத்திய பொருள்களோடு பார்த்தபோதும் அப்பா உணர்ச்சிவசப்பட்டார். அன்று நான் பார்த்தது என் அப்பாவின் இன்னொரு பக்கத்தை. அந்த 17 நாள் பயணத்தில் என் அப்பா ஆக அதிகம் நேசித்தது அந்த இரண்டு இடங்களைத்தான். வாழ்நாளில் என் தந்தை எனக்கு நன்றி சொன்னது அந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான். 

மாதிரிக் கல்லறையை சுமார் முக்கால் மில்லியன் டாலர் செலவில் கட்டி எகிப்திய மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருப்பது ஸ்பெயினைச் சேர்ந்த Factum Arte என்ற அமைப்பு. பழமைப் பாதுகாப்பில் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அற நிறுவனம் இந்த ஃபேக்டம். எகிப்தின் கட்டட அழகியல் மரபுடைமைக்கான Tarek Waly நிலையமும், எகிப்தில் செயல்படும் ஸுரிக்கைச் சேர்ந்த அரச கல்லறைகளுக்கான நண்பர்கள் சங்கமும் இந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளன. வெளிநாட்டுத் தொல்பொருள் தலம் ஒன்றுக்கு இந்த அமைப்புகள் ஏன் இவ்வளவு பெரும் பொருட்செலவில் இந்த மாதிரிக் கல்லறையை அமைத்துக் கொடுக்கவேண்டுமென்று நீங்கள் நினைக்கலாம். அவற்றின் நோக்கம் உன்னதமானது. எந்தவொரு தொல்லியல் தலமும் அது கண்டுபிடிக்கப்பட்ட விநாடியிலிருந்தே சிதையத் தொடங்குகிறது. ஒவ்வோர் அங்குலம் தோண்டப்படும்போதும் அங்கிருந்த தொல்லியல் பதிவு அகற்றப்படுகிறது. நிரந்தரமாக!

ஒரு தொல்லியல் தலம், எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது அழிவைச் சந்திக்கிறது. அதன் பிரபலத்தன்மையே அதன் அழிவுக்கும் காரணமாகிறது. கொம்பன்கள் கொல்லப்பட அவற்றின் கொம்புகளே காரணமாவது போல! புதிய வரலாற்றுத் தடயங்களைக் கண்டுபிடித்து அதுபற்றி ஃபேஸ்புக்கில் எழுதும் நண்பர்கள் சிலர் எந்த இடம் என்று கேட்டால், “உள் டப்பிக்கு வாருங்கள் சொல்கிறேன், பொதுவில் சொல்லமாட்டேன்” என்று சொல்வது இதனால்தான். கலைப் பொருள் களவாணிகள் மீதான பயம் ஒருபுறம். கண்டு ரசிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிவந்து சிதைக்கும் கூட்டத்தின் மீதான அச்சம் மறுபுறம். சில இடங்களுக்குச் சிலர் வராமல் இருப்பதே நல்லது. 

தொல்லியல் தலங்கள் மிதமிஞ்சிய சுற்றுப் பயணிகளின் வருகையால் சீரழிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது. டுடன்காமுன் கல்லறை போன்ற இடங்களை அதிநவீனத் தொழில்நுட்பக் கேமராக்களையும் முப்பரிமாண வருடிகளையும் (Scanners) கொண்டு அணு அணுவாக வருடிப் படம்பிடித்துப் பதிவு செய்து, அச்சு அசல் அதன் பிரதிபலிப்புப் போன்ற ஒரு மாதிரியை உருவாக்கிவிடுவது. உண்மையான கல்லறை எப்படி இருக்குமோ அதே நீள அகலத்தில் மாதிரிக் கல்லறை உருவாக்கப்பட்டு அதன் சுவர்கள் மிகத் தெளிவான படங்களால் அலங்கரிக்கப்படும். 

உள்ளே வந்தால், உங்களால் உண்மையான இடத்துக்கும் இந்த நகலிடத்திற்கும் வித்தியாசம் காணமுடியாத அளவுக்கு அது துல்லியமாகப் பிரதி எடுக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரிக் கல்லறைக்கு எத்தனை லட்சம் பேர் வந்தாலும் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. அது சிதைந்தால், மீண்டும் ஒரு முறை அதைப்போன்ற ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம். அத்துடன், டுட் கல்லறை போன்ற ஒன்றை உலகின் எந்த மூலையிலும் நகல் எடுக்கமுடியும். 

இந்த வசதி புதிய பல சாத்தியங்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவுக்கே வராமல் ஒருவரால் அஜந்தா குகை ஓவியங்களான பத்மபாணியையும் வஜ்ரபாணியையும் உள்ளது உள்ளபடி ரசிக்க முடியுமென்றால் அது எவ்வளவு பெரிய வசதி? கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக எல்லைகள் மூடப்பட்டு விமானப் பயணமே நிலைகுத்திப் போன சூழலில், இத்தகைய நவீன வசதிகள் புது நம்பிக்கையை அளிக்கின்றன. ஃபிரான்ஸின் தென் மேற்குப் பகுதியிலுள்ள Lascaux Caves என்னும் குகைகளில் உள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய பாறை ஓவியங்களைப் பாதுகாக்கவும் இத்தகைய நகல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

ஸ்பெயினில் உள்ள Altimira Cave என்னும் குகையில் சுமார் 36-ஆயிரம் ஆண்டுப் பழமையான பாறை ஓவியங்கள் உள்ளன. அந்தக் குகை ஓவியங்களின் ஒரு பகுதி, நகலெடுக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உண்மையான குகைக்குள் இப்போது பார்வையாளர்கள் செல்லமுடியாது. நகல் ஓவியங்களை மட்டும் கண்டு ரசித்து மனநிறைவு கொள்ளலாம். தொல்லியல் அறிஞர்களும் இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். டுட்டின் மாதிரிக்கல்லறை எகிப்துக்கு நன்மையே விளைவிக்கும் என்கின்றனர் அவர்கள். உண்மையான கல்லறை பாதுகாக்கப்படுவது பெரிதல்லவா? ஆனால் நகலெடுக்கப்படும் தொல்லியல் தலங்களைக் கட்டணம் செலுத்திப் பார்க்க எத்தனை பயணிகள் விரும்புவார்கள் என்பது பெரிய கேள்வி. 

“போலிக் கல்லறைகளைக் காண போலிப் பணத்தைக் கொண்டு கட்டணம் செலுத்தலாமா?” என்று சிலர் இணையத்தில் நக்கலடிக்கின்றனர். உண்மையான வரலாற்றுத் தலங்களை நேரில் காணவே வரலாற்றுப் பிரியர்கள் விரும்புவர். அதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது. ஆனால், ஆழமாகச் சிந்தித்தால் வரலாற்றுப் பிரியர்கள் இந்த ஏற்பாட்டை மனமுவந்து ஏற்றுக்கொள்வர்கள் என்றே நம்புவதாகத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். என்ன காரணத்துக்காகப் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்துவந்து ஓர் அற்புதத்தைப் பார்க்கிறார்களோ அது காலப்போக்கில் சிதைந்துபோக அவர்கள் மனம் இடம்தராதுதானே? எங்கோ அது பத்திரமாக இருக்கிறது என்று நம்புவது நிம்மதி தரும்தானே? பார்க்கலாம். 

டுட் மாதிரிக் கல்லறையைப் போலவே மன்னர்கள் பள்ளத்தாக்கிலுள்ள ஆகப் பெரிய முதலாம் செட்டியின் கல்லறையையும், கண்கவர் ஓவியத்துக்குப் பெயர்பெற்ற மகாராணிகளின் பள்ளத்தாக்கிலுள்ள நெஃபர்டாரி கல்லறையையும் நகலெடுக்கும் பணி நடந்து வருகிறதாம். டுட் மாதிரிக் கல்லறையை உருவாக்கும் பணி 2009இல் தொடங்கப்பட்டு 2014இல் முடிவடைந்தது. அது எதிர்பார்த்த வெற்றியை அடைந்ததா என்று எங்களால் சொல்லமுடியவில்லை. அதற்கெனத் தனியாகக் கட்டணம் செலுத்திப் பார்த்த மாதிரியும் எனக்கு நினைவில்லை. 

முதலாம் செட்டி கல்லறையில், மம்மிப் பெட்டி இருந்த முக்கிய இடம். இண்டு இணுக்கு விடாமல் ஓவியங்களால் நிறைக்கப்பட்ட இடம். மன்னர்களின் பள்ளத்தாக்கு.

கார்ட்டர் இல்லத்தைப் பார்வையிடுவதற்கான கட்டணத்தோடு அதுவும் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை உண்மையான கல்லறை மூடப்பட்டால் பயணிகள் வேறு வழியின்றி இங்கு வருவார்களோ என்னவோ? டுட் கல்லறை கண்டிப்பாக வெகுநாள்களுக்குத் தாக்குப் பிடிக்கும் நிலையில் இல்லை. மன்னர்களின் பள்ளத்தாக்கில் உருவாகும் திடீர் வெள்ளம், எந்நேரமும் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நேரடியாகத்தான் வெள்ளம் உள்ளே வரவேண்டும் என்றில்லை. 

டுட் கல்லறையைச் சுற்றியுள்ள மற்ற கல்லறைகளில் புகும் வெள்ளம், மலைப் பாறைகளில் உள்ள நுண்ணிய துளைகள், இடுக்குகள் வழியே டுட் கல்லறைக்குள் கசிந்து வரக்கூடும். அப்படிக் கசியும் நீர் ஓவியத்தில் ஊறி அவற்றை நிரந்தரமாகச் சிதைக்கக்கூடும். மன்னர்களின் பள்ளத்தாக்கு படிவுப் பாறைகளால் ஆனது. உறுதியான கருங்கல்லால் ஆனது அல்ல அது. டுடன்காமுனின் உண்மையான கல்லறையைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருந்தால் அதை அதிக நாள்களுக்குத் தள்ளிப்போட வேண்டாம். பாதுகாப்புக் கருதி எந்த நேரத்திலும் பார்வையாளர்கள் அதற்குள் செல்வதற்கு எகிப்திய அரசாங்கம் தடை விதிக்கலாம். 

டுடன்காமுனின் மம்மி உண்மையான கல்லறைக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுவதும் அவ்வளவு உசிதமல்ல என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். எகிப்திய நாகரிகத்தின் நட்சத்திர மம்மிகளான முதலாம் செட்டி, இரண்டாம் ராம்சிஸ், ஹட்ஷெப்சுட் மம்மிகள் எல்லாமே அரும்பொருளகத்தில் முறையான தட்ப-வெப்பத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 2021 ஏப்ரல் மாதம் மம்மிகள் அனைத்துமே கைரோவுக்கு அருகிலுள்ள எகிப்திய நாகரிக தேசிய அரும்பொருளகத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன. 

தஹ்ரீர் சதுக்கத்திலுள்ள பழைய அரும்பொருளகத்திலிருந்து அந்த மம்மிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதை கோவிட்-19 சூழலுக்கு இடையிலும் ஒரு கோலாகலமான விழாவாகக் கொண்டாடியது எகிப்து. உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ஊர்வலம் பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டது. எகிப்திய அதிபர் அப்டெல் ஃபட்டா அல்-சிசி மாமன்னர்களையும் மகாராணிகளையும் வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். 

பழைய அரும்பொருளகத்தில் மம்மி அறைக்குள் செல்ல தனிக் கட்டணம் செலுத்தவேண்டும். இப்போதும் அது மாதிரித்தானா என்பது தெரியவில்லை. மேலும் புதிய எகிப்திய நாகரிக அரும்பொருளகத்தில் மம்மிகளை மேலும் நன்றாக தெளிவாகக் காணும் வகையில் அவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்பு பழைய அரும்பொருளகத்துக்குச் சென்றாலே முக்கியமான எல்லாவற்றையும் ஒரே கூரையின்கீழ் பார்த்துவிடலாம். ஆனால் அங்கிருந்த அரும்பொருள்கள் இப்போது இரண்டு இடங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளதால் தனித்தனியே சென்று கூடுதல் கட்டணம் செலுத்திப் பார்க்கவேண்டும். 

கைரோவில் இருந்து பிரமிடுகளுக்குப் போகும்வழியில் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் புதிய எகிப்திய நாகரிக அரும்பொருளகம் வலப்பக்கமாக அமைந்துள்ளது. நாங்கள் போகும்போது அதன் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அங்குதான் எல்லா மம்மிகளும் இப்போது உள்ளன. அதைத் தவிர பிரமிடுகளுக்கு அருகிலேயே கட்டப்பட்டிருப்பதுதான் Grand Museum எனப்படும் மாபெரும் அரும்பொருளகம். மன்னர் டுட்டின் அரும்பொருள்கள் எல்லாமே, இதுவரை காட்சிக்கு வைக்கப்படாத பொருள்கள் உள்பட, ஒரே இடத்தில் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. டுட்டின் மம்மியையும் புதிய அரும்பொருளகங்களில் ஒன்றுக்கு எடுத்துவந்து பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. 19 வயது பாலகன் எத்தனை முறைதான் இடம் மாறுவான்.

நெஃபர்டாரி கல்லறையின் உள்பகுதி. உள்ளறைகள் சிலவற்றிலுள்ள ஓவியங்கள் சிதைந்துவிட்டன. மகாராணி பள்ளத்தாகு, லக்ஸோர்.

பொன். மகாலிங்கம்

இராஜபாளையத்தில் பிறந்த பொன் மகாலிங்கம், கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரிலுள்ள தமிழ் வானொலி 96.8 பண்பலையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழியான வசந்தத்தில் செய்தித் தயாரிப்பாளராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 

தமிழ்நாட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சி உருவான தொடக்ககாலத்தில், அதில் செய்தி ஆசிரியராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பேராலயம் பற்றிய இவரது பயணக் கட்டுரை, நூலாக வெளிவந்துள்ளது. பயணம் செய்வதில் அதீத ஆர்வமுள்ளவர்.