Friday, 8 May 2026

கல்லினுள் தேரைக்கும் - தாமரைக்கண்ணன் புதுச்சேரி


கருப்பைக்குள் முட்டைக்குள் கல்லினுள் தேரைக்கும்

விருப்புற் றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்

ஊட்டி வளர்க்கானோ ஓநெடுவாய் அன்னாகேள்

வாட்டம் உனக்கேன் மகிழ்

அரனான இறைவன் அனைத்துயிரையும் காக்க கடன்பட்டவன் என்று சொல்லும் தனிப்பாடல் திரட்டிலுள்ள ஒரு பாடல் இது. ஜீவ காருண்யத்தை சைவமும் எடுத்துக்கொண்டபடியால் அன்பும் சிவமும் ஒன்றானதனால் இறைவனை பாம்பும், புலியும், புள்ளினமும், யானையும், சிலந்தியும், நண்டும், எறும்பும் கூட வழிபட்டு அருள்பெற்ற தலவரலாறுகளை தமிழகம் முழுக்க கேட்கிறோம். அதன்வழி மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள சொல்லாடலை முதலாகக்கொண்டு எழுத்தாளர் வடிவரசு பிரதீபன் எழுதியுள்ள 'தாவர சங்கமம்' என்ற புத்தகம் சூழலியல் நோக்கிலும் முக்கியமானதாக ஆகின்றது.

பதினெட்டு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. மரபு இலக்கியம், மரங்கள் மீதான அன்பு, பயண அனுபவம், தொல்லியல், அரிய புத்தகங்கள் என்று பல தளங்களை தொட்டுச்செல்லும் கட்டுரைகள். ஆசிரியரே சொல்வது போல எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கூறொன்று நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. 

பல்லுயிரியம் (Biodiversity) என்பது பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் வகைமைகளையும், அவற்றின் பரஸ்பர உறவுகளையும் குறிக்கிறது. தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் என அனைத்தும் இதில் அடங்குகின்றன. உள்ளபடியே இந்த புத்தகத்தின் கட்டுரைகளும் தாவரம், விலங்கு, மனிதர்கள் மூவரையும் பிணைக்கும் புள்ளிகளை தொட்டு எழுதப்பட்டவை, பல்லுயிரிய பார்வை கொண்டவை. 

சின்னமனூர் பூலாநந்தீசுவரர் ஆலய தல விருட்சமான முள் மரமான பூலா மரம் குறித்த கட்டுரையொடு நூல் துவங்குகிறது. தொடர்ந்து சங்கம் முதலான மரபிலக்கியங்களில் உள்ள தொன்மங்களை விரித்துப்பார்க்கும் கட்டுரைகள். முத்து, சிறுநோவுகளுக்கு மருந்தாகும் தாவரங்கள், நடுகற்கள், உணவும் தீனியுமாகும் பழங்கள் கிழங்கு வகைகளை குறித்தெல்லாம் தன் வாழ்வனுபவத்தோடு எழுதப்பட்ட கட்டுரைகள் என்று நீள்கின்றன. 

கரிக்கையூர் பாறை ஓவியம், அம்மாக்குள சிற்பங்கள், வேடியப்பன், புறடியாத்தா வழிபாடு என்று தொல்லியல் சார்ந்தும் மானுடவியல் அடிப்படைகளை பேசும்படியுமான கட்டுரைகள் தொகுப்பில் உண்டு. பனை மரத்தின் நூறு பெயர்களோடு தாலவிலாசம் என்ற அரிய நூல் குறித்த கட்டுரை சுவாரஸ்யமானதாக இருக்கிறது. 

எழுத்தாளர் வடிவரசு திருவண்ணாமலை மாவட்டம் திருவடத்தனூரை சேர்ந்தவர். வடிவரசு நூல்களில் ஐயா என்னும் புத்தகம் அவருக்கான அறிமுகமாக அமைந்தது. தொண்ணூறு வயது கடந்த தனது தந்தை குறித்த அவரது இயற்கை சார் வாழ்வியல் மற்றும் விழுமியங்கள் குறித்த இந்த நூல் பரவலான வாசிப்பை பெற்றது. வடிவரசு பாடலாசிரியராகவும் பணிபுரிகிறார்.

வடிவரசு

இன்றைய சூழலியல் எழுத்தில் தாவரவியல் சார்ந்த எழுத்துக்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன. முன்னர் வெளியாகிய வடிவரசுவின் நிலைத்திணை புத்தகம், தமிழில் நமது வாழ்வியலோடு பிணைந்த மரங்கள் குறித்து எடுத்துரைக்கும் முக்கியப் படைப்பு. இந்த வரிசையில் தாவர சங்கமம் நூலிலும் உயிரினங்கள் மரங்கள் குறித்த தனது பார்வைகளை கட்டுரையாக்கியுள்ளார் வடிவரசு. அவரது எல்லா படைப்புகளிலும் இயற்கை சார்ந்த வாழ்வியலை நோக்கிய ஒரு தொடர்ச்சியான தேடலும், அதனை வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகக் காணும் பார்வையும் வெளிப்படுகின்றன. 

புத்தகத்தில் இரண்டு இடங்கள் என்னை பற்றிக்கொண்டன. ஒன்று நூலாசிரியர் ஆமை ஒன்று முட்டையிடும் தருணத்தை நேரில் பார்த்த அனுபவம். இரண்டாவது ஆந்திராவிலுள்ள ஒரு பேரால மரம் உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்று பதிவாகிய மரத்தை பார்த்த அனுபவம்- கடவுள் மரம் என்ற தலைப்பில் இந்த கட்டுரை உள்ளது. அந்த மரத்தின் அருகிலேயே சதிப்பாய்ந்த பெண்ணொருத்திக்கு கோவில் உள்ளது. திம்மம்மாவின் பெயராலேயே இந்த மரமும் அழைக்கப்படுகிறது. கிரா இது போன்ற ஒரு காட்சியை விவரிக்கும் இடம் அவரது கோபல்ல கிராமத்தில் உண்டு. அந்த சிதையிலிருந்து வெளிவந்த ஒரு விதை மரமாகி அந்த நிலத்தை முழுவதும் நிழலாக்கி விட்டது என்று தோன்றியது. புனைவற்ற வாழ்க்கை என்று ஒன்று இல்லை, புனைவோ அதற்கும் அப்பால் இருக்கிறது. 

 தாமரைக்கண்ணன் புதுச்சேரி


நூல் வாங்க: முரம்பு படைப்பகம் 
195, மாரியம்மன் கோயில் தெரு,
திருவடத்தனூர் (கிராமம் & தபால் )
தண்டராம்பட்டு (வட்டம்)
திருவண்ணாமலை (மாவட்டம்) - 606708
Ph: 9715383822