Wednesday 31 January 2024

கிறிஸ்துவின் சித்திரங்கள்: பகுதி 3 - உடலும் ரத்தமும் - தாமரைக்கண்ணன் அவிநாசி

(1)

இயேசுவின் உடல் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் செயல்பாட்டிலும் மைய இடம் வகிக்கிறது. கிறிஸ்துவின் உடல் பற்றிய குறிப்புகள் எதுவும் பைபிளில் இல்லை. பைபிளில் ஒருமுறை மட்டும், அவரை சிலுவையில் ஏற்றும் போது அவரின் ஆடைகளைக் களைவது பற்றிய குறிப்பு வருகிறது. எனினும் பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு அவரின் மனித அம்சம் கிறிஸ்தவ இறையியலிலும் சடங்குகளிலும் பிரதானமடைந்து அவரின் உடல் மீதான உணர்ச்சிகரமான பக்தியும் ஈடுபாடும் அதிகரிக்கும் போது பெரும்பாலான ஓவியங்களில் அவர் கிட்டத்தட்ட ஆடையற்ற வடிவிலேயே சித்தரிக்கப்படுகிறார். 

ஆடையற்ற உடல் மேற்கத்திய கலையில் தனித்துவமான முக்கிய கலை வடிவம், குறிப்பாக ஆண் உடல். ஆடையற்ற உடலின் கலைவடிவம் பொ.மு.5-ஆம் நூற்றாண்டில் கிரேக்கர்களால் தோற்றுவிக்கப்பட்டது. கலையின் மொழியில் ஆடையற்ற உடல் ஆபாசத்திற்கான குறியீடல்ல. கிரேக்க-ரோம கலைகளில் ஆடையற்ற உடலின் அழகு வழியாக ஒருவரின் அல்லது கடவுளரின் குணம், ஞானம், நெறி போன்ற அகப்பண்புகளையும் ஆளுமையையும் வெளிப்படுத்தினர். கடவுள்களின் ஆடையற்ற உடல் அழகு அவர்களின் தெய்வீகத்தன்மையின் குறியீடு. 

கலைஞர்கள் பொ.யு.ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இந்த செவ்வியல் கலைவடிவில் கிறிஸ்து ஆடையற்ற உடலில் யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு செய்யும் சித்திரங்களைப் படைத்துள்ளனர். திருமுழுக்கில் அவரின் இரட்டை நிலை (இறைவன் அதேசமயம் மனிதன்) வெளிப்படுவதால் அதைக் காண்பிக்கவே அவர் ஆடையற்ற உடலுடன் சித்தரிக்கப்பட்டார். ”இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, ’என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.” என்கிறது மத்தேயு 3.16-17. The Diptych of the Five Parts என்ற ஐந்தாம் நூற்றாண்டு தந்த சிற்பத்தொகுப்பில் உள்ள திருமுழுக்கு சித்தரிப்பில் புறா இறங்கிவரும் சித்திரம் அவரின் தெய்வீக அம்சத்தையும், ஆடையற்ற உடல் அவரின் மனித அம்சத்தையும் குறிக்கின்றன. இத்தாலியின் நியான் திருமுழுக்கு மண்டபத்தின் (Baptistery of Neon) மேல்கூரையில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமுழுக்கு சித்திரம் உள்ளது. இதில் கிறிஸ்து இடைவரை நீரில் நிற்கிறார். எனினும் அவரின் பிறப்புறுப்பு தெளிவாக தெரியும்படி வரையப்பட்டுள்ளது. ஐந்தாம் நூற்றாண்டின் தந்த புடைப்புச் சிற்பத்தொகுதியில் கிறிஸ்து மிகச்சிறிய இடையாடை மட்டும் அணிந்து தெய்வத்தன்மை வெளிப்படும் அழகிய உறுதியான உடலுடன் சிலுவையில் காணப்படுகிறார்.

திருமுழுக்கு - The Diptych of the Five Parts,  ஐந்தாம் நூற்றாண்டு
நியான் திருமுழுக்கு மண்டபம்,  ஐந்தாம் நூற்றாண்டு
ஐந்தாம் நூற்றாண்டு தந்த சிற்பம்

பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் உடலுக்கும் ஆன்மாவிற்குமான வேறுபாட்டை விவாதித்துள்ளனர். கிரேக்க-ரோம மதங்களில் உடலும் ஆன்மாவும் இணையாக வளர்ந்துள்ளன. ஆனால் கிறிஸ்தவர்கள் உடலையும் ஆன்மாவையும் நேரெதிரானவையாகக் கருதினர். கிறிஸ்தவ துறவிகள் ஆன்ம சுத்திகரணத்திற்காக உடலை வருத்தியுள்ளனர். ஆகவே உடல் நிந்திக்கப்பட வேண்டியதாக கருதப்பட்டது. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இறைமகன் ஆடையற்ற வடிவில் சித்தரிக்கப்படவில்லை. சிலுவையில் கூட கால்முட்டி வரையான ஆடை அணிந்தே சித்தரிக்கப்பட்டார். திருமுழுக்கு சித்தரிப்புகளில் நீர் அவரின் உடலை நன்கு மறைத்திருக்கும்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் மனித அம்சமும் மனித குமாரனாக அவர் அடைந்த துயரமும் பிரதானமடையும் போது கலைஞர்கள் மீண்டும் அவரின் ஆடையை நீக்கி அவரின் உடலை சித்தரிக்கத் துவங்குகின்றனர். இந்த முறை அவரின் சிதைந்த உடல் மீதான பரிவைக் காட்டுவதே அதன் நோக்கமாக இருந்தது. உதாரணமாக சென்ற பகுதியில் பார்த்த வேதனையுற்றவர் (Man of sorrows, Umbrian Diptych) ஓவியம். 

வேதனையுற்றவர், 1260

பிறகு பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலிய கலைஞர்கள் கிரேக்க-ரோம கலைவடிவத்தை மறுகண்டுபிடிப்பு செய்தனர். உடல் அழகு வழியாக அவரின் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தினர். பல்வேறு கருக்களில் இதைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இவற்றில் நான்கு படைப்புகளை இங்கு பார்க்கலாம்.

இந்த வகைமையில் மிகச்சிறந்ததாக கருதப்படுவது மைக்கேலேஞ்சலோ 1519–1521-களில் செதுக்கிய மீட்பர் சிற்பம். உயிர்த்தெழுந்த கிறிஸ்து தான் மரணத்தையும் பாவத்தையும் வென்றதை முழுதுடலால் காட்டி சிலுவையை ஏந்தி நிற்கிறார். மைக்கேலேஞ்சலோ கிறிஸ்துவை முழுதும் ஆடையற்ற வடிவிலேயே செதுக்கினார். பின்னர் 1546-ல் ஒரு துணி காற்றில் பறந்து வந்து அவரின் பிறப்புறுப்பை மறைப்பது போல வெண்கலத்தால் செய்து பதித்துள்ளனர். இந்த சிற்பம் வடிப்பதற்கு முன்பு மைக்கேலேஞ்சலோ செதுக்கி முடிக்கப்படாமல் இருந்த முதல் வடிவில் கிறிஸ்துவின் முழுவுடலும் மறைக்கப்படாமல் உள்ளது. 

Risen Christ - மைக்கேலேஞ்சலோ, 1519–1521
இடப்பக்கம் - ரோமின் Santa Maria sopra Minerva-வில் உள்ளது. மைக்கேலேஞ்சலோ முழுமையாக செதுக்கியது.
வலப்பக்கம் - மைக்கேலேஞ்சலோ முதலில் செதுக்கி முடிக்கப்படாமல் விட்ட சிற்பம், பிற்கால கலைஞர் ஒருவரால் முழுமையாக்கப்பட்டது. 

சிலுவையேற்றத்திற்குப் பிறகான மூன்றாம் நாள் மரியா கிறிஸ்துவின் கல்லறையை பார்க்க வருகிறார். அங்கு கிறிஸ்துவின் உடல் இல்லாததைக் கண்டு அழுகிறார். அப்போது அங்கு தோன்றிய இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்கிறார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம் மன்றாடும் போது இயேசு அவரிடம் “மரியா” என்கிறார். உடனே அது இயேசு என்பதை உணர்ந்துகொண்ட மரியா அவரைப் பற்றச் செல்கிறார். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை” (யோவான் 20.17) என்கிறார். “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே” (Touch me not) என்ற இந்த இடத்தை பல கலைஞர்கள் சித்தரித்துள்ளனர். அவற்றுள் கிறிஸ்துவின் உடல் அழகைக்காட்டிய அழகிய ஓவியம் டைட்டன் 1515-களில் வரைந்த Noli me tangere என்ற ஓவியம். Noli me tangere என்பது ”என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே” என்பதன் இலத்தீன் வாக்கியம். 

Noli me tangere - Titian 1515

இதில் கிறிஸ்து இடையாடை அணிந்து கையில் தோட்டக்காருக்கான கோடாரியைப் பிடித்து நிற்கிறார். இடையிலும் கழுத்திலும் உள்ள வெண்துணியும் காலிலுள்ள ஆணி அறைந்த காயமும் அவர் உயிர்த்தெழுந்து வந்தவர் என்பதைக் காட்டுகிறது. மரியா உணர்ச்சிகர ஆவேசத்தில் கிறிஸ்துவின் உடலை பற்ற கைநீட்டும் போது கிறிஸ்து சற்று வளைந்து ”என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே” என விலகுகிறார். யோவானில் வரும் இந்த இடம் பல நூற்றாண்டுகளாக ஒரு புதிராகவும் ஈர்ப்புடையதாகவும் உள்ளது. உயிர்தெழுந்த கிறிஸ்து முன்பொருநாள் தன் உடலைத்தொட்டு நறுமணத்தைலம் பூசிய (லூக்கா 7) பாவியான மரியாவிற்கே முதன்முதலில் காட்சிதருகிறார். மரியா கிறிஸ்துவின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். ஆனால் தற்போது கிறிஸ்துவின் உடல்சார்ந்த இருப்பு இவ்வுலகிலிருந்து நீங்கிவிட்டது. ஆகவே மரியா தன் அன்பை அவரின் இவ்வுலக இருப்பின் மீதிருந்து ஆன்மீக அன்பாக மாற்றவேண்டும் என்பதை குறிக்கும் இடமாக பைபிளில் வரும் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கின்றனர். இதை மிகநுட்பமாக, மரியாவின் அன்பு நிறைந்த பார்வை, இயேசுவின் கருணை நிறைந்த பார்வை, அவர்களின் உடல் மற்றும் கைகளின் அசைவுகள் வழியாக தன் ஓவியத்தில் டைட்டன் காட்சிபடுத்தியுள்ளார். 

கிறிஸ்து உயிர்தெழுந்த அந்த குறிப்பிட்ட நிகழ்வை யாரும் பார்க்கவில்லை. அவர் தன் திருத்தூதர்களுக்கு காட்சியளித்ததன் வழியாகவே அவர் உயிர்தெழுந்தது உறுதிபடுத்தப்படுகிறது. இயேசு தன் திருத்தூதர்களுக்கு முதலில் காட்சிகொடுத்த போது தோமா அங்கு இல்லை. அவர் மற்ற திருத்தூதர்களை அழைத்து தன் உடலைத் தொட்டு உறுதிசெய்து கொள்ளுங்கள் என்கிறார். இயேசு சென்ற பிறகு அங்கு வந்த தோமா நடந்ததைக் கேள்விப்பட்டு “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” (யோவான் 20.25) என்கிறார். எட்டுநாட்களுக்குப் பிறகு கிறிஸ்து மீண்டும் திருத்தூதர்கள் முன் தோன்றுகிறார். அப்போது அங்கிருந்த தோமாவிடம் “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” (யோவான் 20.27) என்கிறார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” (யோவான் 20.28) என்கிறார். இதற்கு மறுமொழியாக இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” (யோவான் 20.29) என்றார். இது புதிய ஏற்பாட்டில் மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. 

The Incredulity of Saint Thomas - Bernardo strozzi, 1620

இந்த நிகழ்வை பெர்னார்டோ ஸ்ட்ரோஸி (Bernardo strozzi) 1620-ல் தன் ஓவியத்தில் சித்தரித்துள்ளார். இதில் இயேசுவின் அழகிய உருவத்தை மிக நெருக்கத்தில் பார்வையாளரை நோக்கியிருக்குமாறு காட்சிபடுத்தியுள்ளார். இயேசு தோமாவின் கையைப் பிடித்து தன் காயத்தில் வைக்கிறார். ஓவியத்தைப் பார்க்கும் போது நம் பார்வை முதலில் தோமாவின் கை விரல் கிறிஸ்துவின் காயத்தில் ஊடுறுவுவதைக் காணுமாறு வரையப்பட்டுள்ளது. இதில் ஓவியர் இருவருடைய உடல்களின் நிற வேறுபாட்டைக் கொண்டு அவர்களின் நிலைகளைப் பிரித்துக்காண்பிக்கிறார். கிறிஸ்துவின் வெண்மை நிறம் அவரின் இவ்வுலகைக் கடந்த தெய்வீக நிலையையும், தோமாவின் உடல் நிறம் அவரின் மனித நிலையையும் கிறிஸ்துவை சந்தேக்கிக்கும் இயல்பையும் சுட்டுகின்றன.

உயிர்த்தெழுந்த பிறகு கிறிஸ்து திருத்தூதர்களிடம் தன் ’உடலை’ முன்வைப்பதை மேலுள்ள சித்தரிப்பில் காணலாம். அவர் மனித உடலின் எல்லையைக் கடந்தவர் எனினும் தனது காயங்கள் வழியாக தான் இறந்தபோது இருந்த அதே உடலில் தற்போது இருப்பதைக் காட்டுகிறார். பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் கிறிஸ்துவின் துயரம் பிரதானமடையும் போது அவர் உடலிலுள்ள காயங்களும் பிரதானமான குறியீடாகிறது. அவரின் உடலிலுள்ள ஐந்து காயங்களை வழிபடும் மரபும் முறையும் உருவாகிறது. மேலுள்ள ஓவியத்தில் இயேசுவின் பார்வை தோமாவின் கை தன் காயத்தைத் தொடுவதை நோக்கியிருக்கிறது. கிறிஸ்துவின் உடலிலுள்ள ஐந்து காயங்களில் அவரின் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பது விலாவிற்கு அடியில் இருக்கும் காயமே. ”நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்” (யோவான் 10.9) என்கிறார் கிறிஸ்து. இவ்வாறு கிறிஸ்துவினுள் நுழைவதற்கான வாயிலாக விலா காயம் உருவகப்படுத்தப்படுகிறது. பாவப்பட்டவர்களுக்கான அடைக்கலமாக, அவர்களை சுத்தப்படுத்தி பசியாற்றும் இடமாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த காயம் இவ்வுலகின்மீதான கிறிஸ்துவின் கருணைக்கும், அவரின் தொடர் செயல்பாட்டிற்குமான குறியீடாக உள்ளது. இறுதித்தீர்ப்புநாளில் மனிதர்களின் பிரதிநிதியாக தோன்றுவேன் என அவர் அளித்த வாக்கின் குறியீடாகவும் உள்ளது. 

Christ as saviour and judge - Petrus christus, பதினைந்தாம் நூற்றாண்டு

பதினைந்தாம் நூற்றாண்டின் பெட்ரஸ் கிறிஸ்டஸ் (Petrus christus) இயேசு இறுதித்தீர்ப்புநாளில் மனிதர்களின் பிரதிநிதியாகத் தோன்றி தன் காயங்களைக் காட்டி நிற்பதை சித்தரித்துள்ளார். கிறிஸ்து மனிதர்களுக்காக அவர்களின் பாவங்களை ஏற்று துயரைத் தாங்கி நிற்பதன் குறியீடாக இந்த ஓவியம் உள்ளது. இதில் தீர்ப்பு வழங்கும் அரசரும் அவரே. மேலிருக்கும் பச்சை நிற திரைச்சீலைகள் மிக அழகாக விலகி கிறிஸ்து வெளிப்படுவது அவரை அரசர் என காட்டுகிறது. பின்னால் நிற்கும் தூதுவர்கள் ஏந்தியிருக்கும் வாளும் லில்லி மலர்த்தண்டும் நியாயத்தீர்ப்புக்கான குறியீடுகள். அனைவரும் அவரவர் வாழ்ந்த வாழ்வுக்கு ஏற்றார் போல் தீர்ப்பு பெறுவர், கிறிஸ்து கருணையுடன் தீர்ப்பை வழங்குபவர். இந்த ஓவியத்திலும் கிறிஸ்துவின் ஆடையற்ற உடல் அழகு அவரின் தெய்வீக அம்சத்தின் கருணையின் குறியீடாக உள்ளது. இது தனி வழிபாட்டிற்காக வரையப்பட்ட மிகச் சிறிய ஓவியம். இதன் அளவு 11.2 * 8.5 செ.மீ. மட்டுமே. எனினும் பெரிய அளவில் வரையப்படும் ஓவியங்களின் அதே காட்சி விரிவுடனும் ஆழத்துடனும் வரையப்பட்டுள்ளது. 

--------------------------

(2)

கிறிஸ்துவின் உடல் திருச்சபையில் சடங்குரீதியான மற்றொரு முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. கிறிஸ்துவுடைய உடலின் முக்கியத்துவம் முதலில் யோவான் நற்செய்தியில் (6: 51) குறிப்பிடப்படுகிறது. ”விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்” என்கிறார் கிறிஸ்து. கத்தோலிக்க திருச்சபையின் திருவிருந்து (eucharist, நற்கருணை என்றும் தமிழில் சொல்லப்படுகிறது) சடங்கில் இறையுருவின் முன்னுள்ள மேஜையில் இருக்கும் உணவு கிறிஸ்துவின் உடலாக உருவகிக்கப்படுகிறது. இந்த சடங்கின் வழியாக கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாக ஆகின்றனர், கிறிஸ்துவில் ஒன்றாக இணைகின்றனர், கிறிஸ்துவின் உடலே கிறிஸ்துவின் திருச்சபையாகிறது. ”எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” (யோவான் 6: 55-56) என்கிறார் கிறிஸ்து. ”அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.” என்கிறது 1 கொரிந்தியர் 10.17. ”நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருந்தால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.” என்கிறது உரோமையர் 12:5. 

Transubstantiation என்ற கோட்பாடு 1215-ல் லேட்டரன் சபையால் (Lateran council) வரையறை செய்யப்பட்டது. இதன்படி தேவாலயத்தின் குருமாரால் புனிதப்படுத்தப்பட்ட அப்பத்திலும் திராட்சை ரசத்திலும் கிறிஸ்து உண்மையாக இருப்பார். இந்த நம்பிக்கைக்கான கரு லூக்கா 22:19-20-lஇல் உள்ளது: ”அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ’இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, ’இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை’” என்கிறார் கிறிஸ்து.

நம்பிக்கையாளனுக்கு திருவிருந்தில் இவ்வாறு உருவகப்படுத்தப்படும் கிறிஸ்துவின் உடல் மீட்புக்கும் சகோதரத்திற்குமான சாராம்சம். ஆனால் வரலாற்றாய்வாளனுக்கோ அது அதிகாரத்தின் கருவியாக தென்படும். இந்த சடங்கின் வழியாகவே ரோமத்திருச்சபை கிறிஸ்தவ உலகின் மீது தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. 1215-ல் வரையறுக்கப்பட்ட Transubstantiation கோட்பாடு வழியாகவே மதகுருமார்களின் அதிகாரம் நிலைபெற்றது. 1264-ல் போப் நான்காம் அர்பன் (Pope Urban IV) திருச்சபைக்கு எதிராக விடுக்கப்பட்ட ஒரு சந்தேகத்தை எதிர்ப்பதற்காக அதுவரை சிறிய விழாவாக இருந்த கிறிஸ்துவின் உடல் திருவிழாவை (Feast of corpus christi) அனைத்து சபைகளும் கொண்டாட வேண்டும் என ஆணையிடுகிறார். அந்த திருவிழாவில்தான் திருவிருந்து சடங்கு நிகழ்த்தப்பட்டுவந்தது. எப்போதெல்லாம் ரோம திருச்சபை எதிர்த்தரப்பால் தாக்கப்படுகிறதோ, தன் வலுவை இழக்கிறதோ, அப்போதெல்லாம் அது திருவிருந்தை மேலும் தீவிரமாக ஆடம்பரமாக கொண்டாடி அவைகளுக்கு எதிர்வினையாற்றியது. இந்த விழா திருச்சபையின் முக்கிய விழாக்களில் ஒன்றாக மாறியது. இந்த விழாவின் போது கேளிக்கைகள், விளையாட்டுகள், ஊர்வலங்கள் நிகழ்த்தப்பட்டன. அரசர்கள் இந்த விழாவை ஆதரித்தனர். சீர்திருத்தவாத கிறிஸ்துவம் இந்த விழாவையும் கோட்பாட்டையும் நிராகரிக்கிறது. ஆகவே சீர்திருத்த கிறிஸ்துவம் நிலவும் நாடுகளிலும் சபைகளிலும் இவ்விழா கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இன்றும் ரோம கத்தோலிக்க திருச்சபையில் இந்த விழா முக்கிய இடம் வகிக்கிறது.

பைபிளில் வரும் இறுதிவிருந்து நிகழ்வே திருவிருந்து சடங்கிற்கான சரியான குறியீட்டு நிகழ்வாகும். மேலே பார்த்த யோவான் நற்செய்தியில் வரும் வசனங்கள் 6:51-56 இந்த நிகழ்வில் சொல்லப்பட்டவையே. இது சார்ந்து பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கிறிஸ்துவை சிலுவையில் இருந்து இறக்கும் நிகழ்வும் இதற்கான குறியீடாக பார்க்கப்படுகிறது. இறுதிவிருந்தின் போது கிறிஸ்து “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல்” (லூக்கா 22: 19) என்கிறார். ஆகவே இந்த நிகழ்வும் கிறிஸ்துவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கும் நிகழ்வும் இறையியலின் படி இணையாகவே பார்க்கப்படுகின்றன. இரண்டுமே இயேசுவின் தியாகத்தின் குறியீடு. “கிறிஸ்துவின் உடலை சிலுவையில் இருந்து இறக்கி பெற்றுக்கொள்வதை விட, புனித மேஜையில் இருந்து பெற்றுக்கொள்வது மேலும் சிறப்பானது. சிலுவையில் இருந்து இறக்கியவர்கள் அவரின் உடலை கைகளில் பெற்றுக்கொண்டனர். புனித மேஜையிலிருந்து பெறுபவர்கள் அவரை தங்கள் வாயிலும் இதயத்திலும் பெறுகின்றனர்.” என திருவிருந்தைப் புகழ்ந்து பதினான்காம் நூற்றாண்டு ஜெர்மன் இறையியளாலர் லுடால்ப் ஆப் சாக்சனி (ludolph of saxony) குறிப்பிட்டுள்ளார். 

The deposition - Master of the Saint Bartholomew Altarpiece, பதினாறாம் நூற்றாண்டு

ஓவியர் Master of the Saint Bartholomew Altarpiece என்பவர் 1500-களில் வரைந்த ’The deposition’ இதற்கு நல்ல உதாரணம். இந்த ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் சித்தரிக்கப்பட்டுள்ள தரைத்தளமும் அதிலுள்ள சிறு புற்களும் செடிகளும் இதன் சூழல் கல்வாரிமலை எனக்காட்டுகின்றன. ஆனால் மேலே இருக்கும் அலங்கார அமைப்பும், பக்கவாட்டு அலங்கார தூண்களும், பின்னால் தெரியும் அறை போன்ற அமைப்பும் இதன் சூழல் தேவாலயம் எனக்காட்டுகிறது. கிறிஸ்துவின் உடல் கிட்டத்தட்ட ஆடையற்று பண்டைய கிரேக்க-ரோம பாணியில் அழகியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் தேவாலயத்தில் தொழுகை மேடைக்கு மேல் வைப்பதற்காக வரையட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது திருவிருந்தைச் சுட்டி வரையப்பட்டுள்ளது என உறுதியாக சொல்லலாம். ஒருவேளை இந்த ஓவியம் உண்மையிலேயே தொழுகை மேடை மேல் இருந்திருக்கும் என்றால், திருவிருந்து சடங்கில் குருவானவர் அப்பத்தை உயர்த்தி எழுந்தேற்றம் நிகழ்த்தும் போது அப்பமும் ஓவியத்திலுள்ள கிறிஸ்துவின் உடலும் இணைந்து அப்பத்தில் கிறிஸ்துவின் உண்மையான இருப்பை அங்கிருந்தவர்களுக்கு நிச்சயம் உணர்த்தியிருக்கும். பதிமூன்றாம் நூற்றாண்டின் புனிதர் ஏஞ்சலா ஆப் ஃபோலிக்னோ (Angela of foligno) திருவிருந்து நிகழ்வு ஒன்றில் குருவானவர் அப்பத்தை உயர்த்திக் காண்பிக்கும் போது கிறிஸ்துவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கும் காட்சியைக் கண்டதாக சொல்லப்படுகிறது. 

திருவிருந்தில் குருமாரால் புனிதப்படுத்தப்பட்டு உயர்த்திக் காண்பிக்கப்படும் திராட்சை ரசம் அவரின் ரத்தமாகும். ”இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை” (லூக்கா 22:20) என்கிறார் கிறிஸ்து. ஜியோவானி பெல்லினி (Giovanni bellini) 1460-களில் வரைந்த மீட்பரின் ரத்தம் என்ற ஓவியம் குறிப்பிடத்தகுந்த ஒன்று. கிரேக்க-ரோம கலையின் கடவுள் சிலைகளை போல அதன் செவ்வியல் அழகியலில் கிறிஸ்து முழுதுடலுடன் இடையாடை மட்டும் அணிந்து நிற்கிறார். மரணத்தை வென்றதன் குறியீடாக சிலுவையைப் பற்றியுள்ளார். அவரின் காயத்திலிருந்து இடைவழியாக சிந்தும் ரத்தத்தை ஒரு தேவதை திருவிருந்து கிண்ணத்தில் பெற்றுக்கொள்கிறது. ரத்தம் நன்கு வழிவதற்குத் தோதாக கிறிஸ்து தன் இடக்கரத்தை காயத்தில் அழுத்துகிறார். இங்கு இயேசுவின் உடலே அப்பம், உயிருள்ள அப்பம், அதுவும் விண்ணிலிருந்து வந்த அப்பம். 

The blood of the Redeemer - Giovanni bellini, 1460

இந்த ஓவியத்தில் கிறிஸ்துவிற்குப் பின்னால் கீழே இடப்பக்கமும் வலப்பக்கமும் பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட இரு புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. கிரேக்க-ரோம கலைப்பணியில் உருவங்களுக்கு தங்க நிறம் பூசப்பட்டுள்ளன. இடப்பக்கமுள்ள புடைப்புச்சிற்பத்தில் தீ வளர்த்திய பலிச்சடங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. மனித உடலும் விலங்குக்கால்களும் கொண்ட சட்யர் (satyr) குழலிசைக்கிறது. மற்ற இருவரில் வலப்பக்கம் இருப்பவர் பூசகர். அவர் தன் இடக்கரத்தில் குடுவையைப் பிடித்துள்ளார். வலக்கரத்தில் திராட்சை ரசத்தை நெருப்பில் ஊற்றுவதாக இருக்கலாம், ஏனென்றால் தீ மேலெழுந்தவாறு காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை கிறிஸ்துவின் வலக்கரம் மறைத்துள்ளது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, கிறிஸ்துவின் காயப்பட்ட கரம் பலித்தீக்கு நேர் மேலே உள்ளது. கிறிஸ்து தன் ரத்ததை பலியாகக் கொடுப்பதன் குறியீடாக இதைக் கருதலாம். பேகன் பலிச்சடங்குகளை மறைத்து புதிய சடங்கை முன்வைக்கிறது என்றும் கொள்ளலாம். வலப்பக்கமுள்ள சிற்பத்தில் எரியும் விளக்குக்கால் முன் இருவர் நிற்கின்றனர், மறுபறம் அமர்ந்திருப்பது ஹெர்மஸ் கடவுளாக இருக்கலாம். இந்த இரு புடைப்புச்சிற்பங்களுக்கு முன் கிறிஸ்து நெடிதாக நிற்பது அவர் அடைந்த துயரமும் உயிர்த்தெழுகையும் பண்டைய பேகன் வழிபாடுகளை மறைத்து புதியவொன்றை ஸ்தாபிக்கிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது எனக் கருதப்படுகிறது. இந்தக் கருத்தையே பின்னால் இருக்கும் நிலக்காட்சி சித்தரிப்புகளும் காட்டுகின்றன. வலப்பக்கம் இருக்கும் நிலம் வெறுமையாக சற்று இருண்டு சிதைந்த கட்டிடங்களுடன் உள்ளது. இடப்பக்க நிலம் பசுமையாக உள்ளது. தேவாலயத்துடன் கூடிய நகரமும் தூர வானில் சூரியன் உதிக்கும் பிரகாசமான ஒளியும் மேகங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. துறவி வலப்பக்க நிலத்திலிந்து இடப்பக்க நிலம் நோக்கிச் செல்கிறார். 

பெல்லினியின் ஓவியம் தனிப்பட்ட பிராத்தனைக்காக வரையப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தேவாயத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் இதுபோன்ற பல ஓவியங்கள் தேவாலயங்களில் வைக்கப்பட்டிருந்தன. உதாரணமாக ரபேல் (Raphael) 1503-ல் வரைந்த சிலுவையில் அறையப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் (Mond Crucifixion) ஓவியம். இதில் இரு தேவதைகள் கிறிஸ்துவின் காயங்களில் வழியும் இரத்தத்தை திருவிருந்துக் கிண்ணங்களில் சேகரிக்கின்றன. 

Mond Crucifixion - Raphael, 1503

பால்மா ஜியோவான் (Palma Giovane) 1620-ல் வரைந்த Christ Standing in a Chalice Supported by Angels கோட்டுச்சித்திரத்தில் இயேசுவை இரு தேவதைகள் திருவிருந்து கிண்ணத்தில் தாங்கிப் பிடிக்கின்றன. அவரின் விலா காயத்திலிருந்து இருந்து ரத்தம் கிண்ணத்தில் கொட்டுகிறது. இந்த சித்திரத்தை அவர் குருமார்கள் அணியும் பின் அங்கியில் நூல்பின்னலிட்டு வேலைப்பாடு செய்வதற்கான மாதிரியாக வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உண்மையில் அப்படி இருந்திருந்தால், குருவானவர் எழுந்தேற்ற சடங்கில் திருவிருந்து கிண்ணத்தை உயர்த்தி இறைவனை நோக்கித் திரும்பும் போது இந்த சித்திரமும் கிண்ணமும் இணைந்து அமர்ந்திருப்பவர்களிடம் கிண்ணத்திலிருக்கும் திராட்சை ரசத்தில் இயேசு உண்மையாக இருக்கிறார் என்பதை உணர்த்தியிருக்கும். 

Christ Standing in a Chalice Supported by Angels - Palma Giovane, 1620

வடஐரோப்பாவில் மத்தியகாலத்தின் பிற்பகுதியில் இதேபோல ஆனால் சற்று வேறுபட்ட சித்திரங்கள் பிரபலமாக இருந்தன. அவை ‘திராட்சை பிழியும் மறை ஆலை’ (Mystic winepress) என அழைக்கப்பட்டன. இது பழைய ஏற்பாட்டில் வரும் இரு வாசகங்களின் உருவகச்சித்தரிப்பாகும். மோசஸ் இஸ்ரேல் தலைவர்களை கானான் நாட்டிற்கு உளவறிய அனுப்புகிறார். அவர்கள் அங்கிருந்து திராட்சைக் கொத்துக்களைப் பறித்து வருகின்றனர். ”அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்” எண்ணிக்கை 13:23. இரண்டாவது வாசகம் எசாயா முன்மொழிந்த, நாடுகளைத் தன் காலடியில் நசுக்கும் ஆக்ரோஷமான கடவுள் பற்றிய வாசகம்: ”தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்; மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை; என் கோபத்தில் நான் அவர்களை மிதித்தேன்; என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்; அவர்கள் செந்நீர் என் உடைகள் மேல் தெறித்தது; என் ஆடைகள் அனைத்தையும் கறையாக்கினேன்” எசாயா (63:3). புனிதர் அகஸ்டீன் (நான்காம் நூற்றாண்டு) கிறிஸ்துவை உளவாளி பறித்து வரும் திராட்சைக் கொத்துக்களுடனும் எசாயாவின் முன்மொழிபுடனும் ஒப்பிடுகிறார்: “வாக்களிக்கப்பட்ட நிலத்தின் திராட்சைக் கொத்து இயேசுவே, ஆலையில் பிழியப்படும் திராட்சைக் கொத்து இயேசுவே” என்கிறார். எசாயாவின் வரிகள் கிறிஸ்து அடைந்த துயரமாக குறிப்பிடப்படுகிறது. கிறிஸ்து திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தார், ஆனால் அவரது ஆடையில் தெரித்து கறையாகிய ரத்தம் அவருடையதே. ”நமக்காக கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்” என்கிறது 2 கொரிந்தியர் (5:21). மனிதர்களுக்காக அவர் தன்னையே துன்புறுத்திக்கொண்டார். “இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார்” என்கிறது திருவெளிப்பாடு (19:13).  

Christ as man of sorrows in the winepress, 1425

இந்த உருவகத்தின் நேரடிச்சித்தரிப்பு 1425-ஐ சேர்ந்த சுதைச்சிற்பம். இதில் கிறிஸ்து தன்னை திராட்சை பிழியும் இயந்திரத்தில் பொருத்திக்கொண்டு திராட்சைகள் நிரம்பிய பெரிய கலத்தின் மீது நின்று அவற்றை மிதிக்கிறார். கீழே திராட்சை ரசமாக வடிவது அவரின் ரத்தமே. பின்னால் இருக்கும் தேவதை இயந்திர பிடியை அழுத்துகிறது, இயந்திரத்தின் திருகை கிறிஸ்து தானே திருகிக்கொள்கிறார். “தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்; மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை” என்ற எசயாவின் சொற்களை கிறிஸ்துவே சொல்வதாக அவரது வாய்க்கு அருகிலிருந்து நீளும் சுருளில் ஜெர்மன் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. வலப்பக்கம் மண்டியிடிருப்பது அன்னை மரியாளாக இருக்கலாம். ”என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்” என இனிமைமிகு பாடலின் வரியை (5:10) அவர் பிராத்திக்கிறார். இடப்பக்கம் மேலே நட்சத்திரங்கள் சூழ இருப்பது இறை தந்தையாக இருக்கலாம். இடப்பக்க சுருள் “அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்” (யோவான் 1:11) என்ற வசனத்தையும், நடுவிலுள்ள சுருள் “அவர் மேலிருந்து வருபவர்” (யோவான் 3:31) என்ற வசனத்தையும் கொண்டுள்ளன. 

இந்த வகையைச் சேர்ந்த மற்றொரு சித்தரிப்பு ஹைரோனிமஸ் வேய்ரிக்ஸ் (hieronymus wierix) 1600-களில் வரைந்தது. கிறிஸ்துவின் துயரமும் திருவிருந்தும் இணைந்தது இந்த சித்தரிப்பு. இடப்பக்கத்தில் பழைய ஏற்பாட்டின் குலமுதல்வர்களும் நீதித்தலைவர்களும் திராட்சைக் கொடிகளை நட்டு வளர்க்கின்றனர். பல நூற்றாண்டுகள் காத்திருப்பிற்குப் பின் கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு திருத்தூதர்கள் திராட்சைகளை அறுவடை செய்துவந்து கிறிஸ்து மிதிக்கும் கலத்தில் கொட்டுகின்றனர். கிறிஸ்து சிலுவையையே இயந்திரமாக சுமந்து கொண்டு தன் காயங்களிலிருந்து கொட்டும் ரத்தத்தைக் கலந்து திராட்சைகளை மிதிக்கிறார். சிலுவையின் மேல் தூய ஆவி, புறா வடிவில் அமர்ந்துள்ளது. இறைதந்தை சிலுவை இயந்திரத்தின் திருகைப் பொருத்துகிறார். கீழே இரு தேவதைகள் இயேசுவின் ரத்தத்தை திருவிருந்து கிண்ணத்தில் நிரப்புகின்றனர். இடப்பக்கம் பாவப்பட்டவர்கள் திருவிருந்து ரசத்தைப் பெறுவதற்காக கிறிஸ்துவை பிராத்திக்கின்றனர். வலப்பக்கம் அன்னை மரியாள் வாளால் கிழிபட்ட இதயத்துடன் தன் மகனுக்காக பிராத்திக்கிறார். சித்திரத்தின் கீழே “தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்; மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை” என்ற எசயாவின் வசனம் பொறிக்கப்பட்டுள்ளது. 

Christ in the winepress, Hieronymus wierix, பதினேலாம் நூற்றாண்டு

இந்தப் படைப்புகள் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருந்தாலும் எந்த கருவைக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் கிறிஸ்தவ இறையியல் மற்றும் கிரேக்க-ரோம செவ்வியல் கலையின் இணைவு வழியாக அவரின் தெய்விகத்தன்மையை கருணையை காட்டுகின்றன. ஆடையற்ற உடலழகைத் தோற்றுவித்த கிரேக்க-ரோம கலையை விஞ்சும் அளவிற்கு கிறிஸ்துவம் இறைமகனின் மனித உடலை, அவரின் அழகை சித்தரித்து, அதன் வழியாக இவ்வுலகில் அவரின் நிஜ இருப்பைக் காட்டியுள்ளது.

--------------------------

முந்தைய பகுதிகள்

உதவியவை:


தாமரைக்கண்ணன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்.  ஆங்கிலத்திலிருந்து முதன்மையாக தத்துவ கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். இவர் மொழிபெயர்த்துவரும் ஆனந்தகுமாரசாமியின் கட்டுரைகள் பரவலான வாசகத்தளத்தை சென்றடைந்துள்ளன