Saturday 8 June 2024

தமிழ்நாட்டின் நட்சத்திர-அரசியல்வாதிகள்: தோற்றமும் வளர்ச்சியும் - சு. தியடோர் பாஸ்கரன்

அறிமுகம்

தமிழ்நாட்டில் அரசியலோ சினிமாவோ பேசப்படாமல் ஒருநாளும் கடந்து செல்வதில்லை. வீடுகள் முதல் பொதுவெளி வரை எங்கும் நிறைந்திருக்கும் பேசுபொருள் அது, ஆனால் இரண்டை குறித்தும் நம்மவர்கள் கொண்டிருக்கும் அடிப்படையான வரலாற்று சித்திரம் என்பது திகைப்பூட்டும் அளவுக்கு சூன்யமாக இருக்கும். சிலர் தங்கள் இளமைக்கால நினைவேக்கமாக அவர்களுக்கு தெரிந்த சினிமா செய்திகளை சொல்வதுண்டு, அரசியலை பொறுத்தவரை அதுவும் கிடையாது. இரண்டிலுமே தற்கால ஊடக பெருக்கத்தில் ஒருவாரத்திற்குமேல் எந்தத் தகவலும் நீடிப்பதில்லை. இந்நிலையில் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இக்கட்டுரை தமிழ் சினிமா குறித்த சிறு வரலாற்று சித்திரத்தை அளித்து அது அரசியலுடன் இணையும் புள்ளியை மட்டும் பேசுகிறது. இந்தக் கோணத்தில் பிரிட்டிஷ் காலம் முதல் இன்றுவரையிலான தமிழ் சினிமா, அரசியலின் நடைமுறை சார்ந்து நாம் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். 

தமிழ் சினிமாவின் முன்வடிவான பிரிட்டிஷ் இந்தியாவின் நாடக கம்பெனிகளின் பரிணாமத்திலிருந்து இக்கட்டுரை தொடங்குகிறது. சுதந்திர போராட்ட காலத்தில் ஒருவித தேசிய உணர்ச்சியாக நாடக கம்பெனிக்குள் அரசியல் உள்நுழைந்தாலும் கலைஞர்கள் உண்மையில் விரும்பியது அரசியல் மாற்றத்தையா, அதிகாரத்தையா அல்லது 'கூத்தாடிகள்' என்ற மேட்டிமைவாத விளிக்கு எதிரான சமூக ஏற்பையா என்பது முக்கியமான கேள்வி. கலைஞர்கள் அரசியலாக்கத்தின் துவக்கத்தில் காங்கிரஸ் இயக்கம் பெரும்பங்கு வகித்தாலும் உரிய காலம் வரும்போது அதன் பலனை திராவிட இயக்கங்கள் அறுவடை செய்வது வரலாற்றில் திரும்ப திரும்ப நிகழும் முரண்களில் ஒன்று. 

2001ஆம் ஆண்டு தியடோர் பாஸ்கரன் அவர்கள் சென்னை ஐ.ஐ.டியில் குஹன் நினைவு சொற்பொழிவில் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம். எனவே அக்காலத்தை ஒட்டி சில தகவல்கள் அமைந்துள்ளன.

டி.ஏ. பாரி

---------------------------------------------

தமிழ்நாட்டின் நட்சத்திர-அரசியல்வாதிகள்: தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் சினிமா குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி அது அரசியலுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை பற்றியதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், இந்த ஊடாட்டம் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வல்ல தமிழ் சினிமாவின் இயல்புகளுள் ஒன்றாக கடந்த சில தசாப்தங்களில் பரிணமித்திருக்கிறது. தற்போது இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இந்த பாணி பரவிவிட்டாலும் இதெல்லாம் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது இங்கே தமிழ்நாட்டில்தான்.

இச்செயல்பாடு எங்கு தொடங்கியது? நாம் எப்படி இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்தோம்? நட்சத்திரங்கள் அரசியல்வாதியாக பரிணமிப்பதன் இயக்கவியல் என்ன? 

காங்கிரஸ் கட்சிதான் முதலில் சினிமாவை அரசியல் பிரச்சாரக் கருவியாக பயன்படுத்தியது அதன்பின்னர் வந்த திராவிடக் கட்சிகளோ சினிமாவை தங்கள் கொள்கைகளை பரப்புவதற்கான ஊடகமாக மட்டும் அல்லாமல் சினிமா நட்சத்திரங்களின் வெகுஜன ஈரப்பை அறுவடை செய்ய அதை பெரிதும் பயன்படுத்தினார்கள். இந்நிலையில், அரசியலுக்கும் பொழுதுபோக்கு ஊடகத்திற்குமான இத்தொடர்பு சினிமா வருவதற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக இந்த கட்டுரையில் நான் விவாதிக்க முற்படுகிறேன்.

தமிழ்சினிமாவின் முன் வரலாறு - நாடக கம்பெனிகள்

சுதந்திர போராட்ட காலத்திலிருந்து நாம் தொடங்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டு இறுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த தென்னிந்திய சினிமாவின் முன் வரலாறு என்று நாம் இதை வரையறுத்துக் கொள்ளலாம். இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் பொழுதுபோக்கு ஊடகமாக நாடக கம்பெனிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்தியாவில் கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே நாடக மரபின் தொடர்ச்சி இருந்து வருவதை இலக்கிய சான்றுகள் காட்டினாலும் இன்று நாம் காணும் வடிவிலான மேடை நாடகம், மேடை முகப்பில் நடிகர்கள் தோன்றுவது திரைச்சீலைகளின் பயன்பாடு இசைக்குழு திரைமறைவில் இருப்பது போன்றவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் அறிமுகமாயிற்று.

மதராஸ் மாகாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சில உள்ளூர் தொழில்முனைவோர்கள், இசை கலைஞர்கள், நடிகர்கள் சேர்ந்து இங்கு நாடகங்களை முன்பே நடத்தி காட்டிய மராத்தி மற்றும் பார்சி கம்பெனிகளின் பாணியில் தாங்களும் நாடக கம்பெனிகளை ஆரம்பித்தனர். தமிழ்மொழியில் இயங்கும் குழுக்களுக்கு தென் தமிழகத்தின் மதுரை தலைநகராக அமைந்தது. கம்பெனி நாடகத்தை பொருத்தவரை 'வாத்தியார்' என்பவரே அதன் மையம். பாடல்கள் எழுதுவது, இசையமைப்பது, நடிகர்களை பாடுவதற்கு பயிற்றுவிப்பது, நாடகத்தை இயக்குவது என முக்கிய பணிகள் அனைத்தும் அவர் கையில்தான். பொதுவாக காவியங்கள், புராணங்கள், நாட்டுப்புற தொன்மங்களில் இடம்பெறும் சம்பவங்கள் கதைகளாக எடுத்தாளப்பட்டிருக்கும். பெரும்பாலானவை இப்போதும் அச்சு வடிவில் உள்ளன. இங்கே உருவான நாடகம் ஒருவகையில் பாடல்களின் தொகுப்புதான் என்பதால் ஒபெராவை (Opera) போல, நாடகக்காட்சியின் முக்கிய அம்சமாக இசை இருக்கும்.

விரைவிலேயே மதராஸ் மாகாணத்தில் பல கம்பெனிகள் செயல்படத் தொடங்கி, யாழ்ப்பாணம், ரங்கூன் வரைக்கும்கூட சமயங்களில் அவை பயணம் செய்தன. நாடக கம்பெனி என்பது உண்மையில் அக்கலையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குடும்பம்தான் - வாத்தியார், நடிகர்கள், இசை கலைஞர்கள் என எல்லோரும் ஒன்றாக தங்கி ஒரு நகரிலிருந்து இன்னொரு நகருக்கு பயணம் செய்வார்கள். நாடகக்குழு (troupe) ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேலாக தங்கியிருக்கும். கம்பெனி நாடகங்கள் பொழுதுபோக்கு ஊடகமாக புகழ்பெற்றதும், பல நகரங்களில் நிரந்தரமான நாடக அரங்குகள் தோன்றின. (பின்னாளில் 'டாக்கீஸ்'கள் தோன்றி பரவலானதும், இந்த அரங்குகள் திரையரங்குகளாக மாற்றப்பட்டன). ஒரு மதிப்பீட்டின்படி கம்பெனி நாடகங்கள் உச்சத்தில் இருந்த சமயம் மதராஸ் மாகாணத்தில் மட்டும் மொத்தம் 260 நாடகக்குழுக்கள் செயல்பட்டதாக தெரிகிறது.

நாடக கம்பெனிகள் வணிகரீதியில் செயல்பட்டாலும் ஒடுக்குமுறை கொண்ட அதிகாரம் வழியாகவே அது நிர்வகிக்கப்பட்டது, கொத்தடிமைத் தொழிலாளர் போன்று நடத்தப்பட்ட கலைஞர்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கவில்லை. வேலை மற்றும் வசிப்பிட வசதிகள் மோசமாக இருந்தன. அதிகளவில் இளம் பையன்களை கொண்டு செயல்பட்ட நாடகக்குழுக்கள் 'பாய்ஸ் கம்பெனி' என்று அழைக்கப்பட்டன. வளரிளம் நடிகர்களை சிறைக்கைதிகளாக நடத்தும் இம்மாதிரி கம்பெனிகளில் வாழ்வு இன்னும் கடினமானது, இங்கு விடுமுறை என்பதே கிடையாது. உதாரணமாக முதலாளியின் சம்மதமின்றி ஒரு நடிகர் கம்பெனியை விட்டு வெளியேறிவிட்டால், அவர் கம்பெனி நகைகளை திருடிவிட்டதாக நிர்வாகி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விடுவார். வசனங்களை மனனம் செய்வதில் யாரேனும் தடுமாறினால் வாத்தியாரிடம் அடிவாங்க வேண்டும். சமூக அடையாளம் காரணமாக நாடகக்குழுக்கள் வழக்கமாக நகரின் ஒதுக்குப்புறத்தில்தான் தங்கினர். அங்கிருந்து மாலை நேரங்களில் கையேட்டை மட்டும் எடுத்துக்கொண்டு நாடக அரங்கிற்கு நடந்து வருவார்கள், வெளி உலகுடன் அவர்கள் கொள்ளும் தொடர்பு பெரும்பாலும் அது மட்டுமே.

படித்தவர்களும் மேல்தட்டு வர்க்கத்தினரும் நாடக கம்பெனிகளிடமிருந்தும் அதன் நாடகங்களிலிருந்தும் விலகியே இருந்தனர். மேல்தட்டு வர்க்கத்தினருக்கென தனியாக நாடகக்குழுக்கள் இருந்தன, சுகுண விலாச சபா மாதிரி. அத்தகைய குழுக்களுக்கு பெரும்பாலும் ஒரு பிரிட்டிஷ் உயரதிகாரி புரவலராக இருப்பார். அவர்கள் மில்டன், ஷேக்ஸ்பியர் அல்லது சமஸ்கிருத நாடகங்களை அரங்கேற்றினர். கம்பெனி நாடகங்களோ அதற்கு நேர்மாறாக உழைக்கும் வர்க்கத்தினருக்கு நெருக்கமாக செல்வாக்குடன் இருந்தன. புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட அரசியல்சார்பற்ற காட்சிகளையே அவர்கள் தமிழில் இசை நாடகங்களாக மேடையேற்றி வந்தனர். ஆனால் ஒரு வரலாற்று சம்பவம் இந்தப் போக்கை சட்டென மாற்றியது.

பொழுதுபோக்கு ஊடகத்தின் அரசியலாக்கம்

1919 ஆம் வருடம் பஞ்சாபின் சிறு நகரம் ஒன்றில் பிரிட்டிஷ் ராணுவம் தடையை மீறி நடத்தப்பட்ட ஒரு அரசியல் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக இயந்திர துப்பாக்கிகளை பிரயோகித்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஜாலியன்வாலாபாக் படுகொலை என்று அறியப்பட்ட நாட்டையே உலுக்கிய அச்சம்பவம் பொழுதுபோக்கு ஊடகத்தில் உள்ள கலைஞர்களை புதிய உணர்வுடன் செயல்படத் தூண்டியது. கிட்டத்தட்ட ஒரே இரவில் மாகாணத்தில் இருந்த பொழுதுபோக்கு பரப்பியல் ஊடகங்கள் மொத்தமும் அரசியல்மயமாகின.

கொஞ்சம் கொஞ்சமாக கம்பெனி நாடகங்களில் தேசியவாத உணர்வு மேலோங்கி மேடைகளில் வெளிப்பட்டது. முதலில் இது தொடங்கியது பாடல்களில். பல பாடலாசிரியர்கள் தேசபக்தி பாடல்களை எழுதியிருந்தனர், இவை மக்களிடம் பிரபலமடைந்து பரவலான செல்வாக்கை பெற்றிருந்தன. இவற்றில் பல பாடல்கள் இசைத்தட்டு வடிவிலும் மலிவுவிலை பாட்டுபுத்தகங்களாகவும் கிடைத்தன. மேடை கலைஞர்கள் தங்கள் நிகழ்வுகளின் போது இவற்றை சரியான இடத்தில் பயன்படுத்திக் கொண்டனர். ஊடகங்கள் மீதான கட்டுப்பாட்டை அதிகரித்து வந்த அரசாங்கத்தாலும் பாடல்களின் பயன்பாட்டை தடுக்க இயலவில்லை.

இதன் அடுத்தகட்டம் தேசியவாத நாடகங்களை அரங்கேற்றுவது. நாடக நிகழ்ச்சிகள் சட்டம், 1876 அமலில் இருந்தாலும் கதரின் வெற்றி போன்ற தேசியவாத நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. காவல்துறையிடமிருந்து இடர் ஏற்படும் போதெல்லாம் நாடகத்தின் பெயரை மாற்றி நிகழ்த்துவார்கள். அவர்களின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க நாடகக்குழுக்கள் பயன்படுத்திய இன்னொரு யுக்தி உருவகக் கதைகள் (allegorical plays). சுதந்திரம் பற்றி பேசும் பாணபுத்திர வீரன் எனும் நாடகம் ஸ்காட்லாந்தை சேர்ந்த ப்ரூஸ் (Bruce)-ஐ பற்றியது. சீக்கிரத்திலேயே மக்களிடம் தேசபக்தி பாடல்களுடன் கூடிய தேசியவாத நாடகங்களை காண்பதற்கு ஆர்வம் பெருகியது.

இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக மேடை கலைஞர்கள் நேரடியாக அரசியல் நடவடிக்கையில் இறங்கினர். நாடு முழுதும் பரவிக் கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கத்தில் அவர்களும் ஈடுபட்டனர். சில கலைஞர்கள் அரசியல் கூட்டங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களிலும் பங்கெடுத்தனர். பல கலைஞர்கள் சத்தியாகிரக வழியில் அந்நிய துணி எரிப்பு, கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றில் கலந்துகொண்டனர்.

நேரடி அரசியலில் ஈடுபடுவதால் நாடக கலைஞர்களுக்கு இன்னொரு பெரிய ஆதாயமும் இருந்தது. மேடை கலைஞர்கள் காலம்காலமாக இழிவான அடையாளத்துடன் ஒதுக்கப்பட்டே வந்தனர். எந்த நகர்ப்புறத்திலும் தங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என கம்பெனி கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பின்னணியில் நேரடி அரசியலில் ஈடுபடுவதன் மூலம் சமூகத்தில் இதுவரை அவர்களுக்கு கிடைத்திராத புதிய மரியாதை கிடைத்தது. மக்களின் பார்வையில் கலைஞர்களின் அந்தஸ்து உயர்ந்தது. நூற்றாண்டுகளாக இகழப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வந்த பொழுதுபோக்கு கலைஞர்கள் தற்போது தலைவர்களுடன் அரசியல் மேடையில் இடம்பெற்றனர். அரசியல் தலைவர்களும் மக்கள்திரளை ஈர்க்கும் கலைஞர்களின் சக்தியை பயன்படுத்திக் கொண்டனர்.

டாக்கீஸ்களின் வரவும் மேடையிலிருந்து புலம்பெயர்வும்

இன்னொரு பக்கம் சினிமா தோன்றி வேர்விட ஆரம்பித்தது. மௌனப்பட காலகட்டத்தில் தென்னிந்தியாவில் 124க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. சினிமாவின் இக்கட்டத்தில் நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கவில்லை. இப்படங்களில் நடித்தவர்கள் அதிகமும் ஸ்டண்ட் ஆண்களும் பெண்களும்தான், இவர்களை பாடகர்கள் என்று சொல்வதைவிட நடனகலைஞர்கள் என்றே சொல்லமுடியும். நம் பேசுபொருளை பொருத்தவரை சினிமா மௌனமாய் இருந்த காலம் வரையிலும் நாடகத்திற்கும் சினிமாவுக்கும் அதிக ஊடாட்டம் இருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் சினிமாவில் ஒலி தோன்றியவுடன் நிலைமை விரைவாக மாறியது. டாக்கீஸ்களில் பணிபுரிய பாடும் திறனுள்ள நடிகர்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் பெருமளவில் தேவை ஏற்பட்டது. இதை பூர்த்தி செய்யக்கூடிய ஆட்கள் தயாராகவே இருந்தனர். வணிக மேடைக்கலையில் இருந்த மேடை நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள் அனைவரும் டாக்கீ ஸ்டுடியோக்களுக்கு இடம்பெயர்ந்தனர். ஆரம்பகட்ட தமிழ் சினிமா என்பது கம்பெனி நாடகங்களின் தொடர்ச்சிதான்.

பேசும்படங்கள் காலகட்டத்தின் முதல் பத்தாண்டுகளில் ஏற்கனவே புகழடைந்து நிரூபணமான நாடகங்களே மீண்டும் திரைப்படமாகின. நாடக குழுக்களை பணிக்கு அமர்த்தி அவர்களின் நாடக பாணியிலேயே நடிக்க செய்து நேருக்கு நேராக நீண்ட காட்சிகளில் படம்படிப்பதே வழக்கமான செயல்பாடு. நாடகத்தில் இருந்த வசனங்கள், பாடல்களே அதிகம் பயன்படுத்தப்படும்.

பேசும்படங்களின் ஆரம்ப கட்ட தயாரிப்பாளர்கள் கம்பெனி நாடகங்களின் பக்கம் சென்றதற்கு அச்சமயம் மெட்ராஸில் ஒலிப்பதிவு கூடங்கள் (Sound studio) இல்லாததும் ஒரு காரணம். இதனால் முதல் சில ஆண்டுகள் அவர்கள் படக்குழுவை நெடுந்தூர நகர்களான கல்கத்தா அல்லது பம்பாய் வரை கூட்டிச் செல்ல வேண்டியிருந்தது. இந்த தேவைக்கு நாடக்ககுழுக்கள் சிறப்பாக கைகொடுத்தன. பேசும் படங்களுக்கு தேவைப்படும் அனைத்து அம்சங்களும் அவர்களிடம் உடனடியாக பயன்படுத்தும் வகையில் தயாராக இருந்தன. ஒரு நடிகர் நோய்வாய்ப்பட்டாலும் இன்னொருவர் எளிதில் அவருக்கு மாற்றாக நடிப்பார் ஏனெனில் நாடக மரபில் ஒவ்வொரு நடிகரும் அந்நாடகத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்களில் பரிச்சயத்துடன் இருப்பார். தமிழ் டாக்கீஸ்ஸின் முதல் ஐந்தாண்டுகளில் எடுக்கப்பட்ட அறுபத்தியோரு படங்களும், அநேகமாக ஒன்றைத் தவிர பிற அனைத்துமே வெற்றி பெற்ற கம்பெனி நாடகங்களின் மறு உருவாக்கங்கள், அவை மேடை காட்சியின் துல்லியமான நகல் என்றே சொல்லிவிடலாம். சமகால விஷயங்களை பேசும் சில 'சமூக' படங்கள் எடுக்கப்பட்டன, அவையும்கூட மேடை நாடகங்கள்தான். நாடகக் கலைஞர்கள் அனைவரும் காத்திருந்தது போல அப்படியே புலம்பெயர்ந்து சினிமா ஸ்டுடியோக்களினுள் நுழைந்தனர்.

ஒத்துழையாமை இயக்கமும் சினிமாவும்

தமிழ் டாக்கீயின் முதல் படமான காளிதாஸ் வெளிவந்த 1931 ஆம் வருடம் ஒத்துழையாமை இயக்கம் தீவிரம் அடைந்த காலம். டாக்கீஸ் படங்களும் தேசபக்தி பாடல்களுடனேயே தொடங்கின. புராணக் கதையான காளிதாஸ் படத்தில் பாஸ்கரதாஸ் எழுதிய காந்தியின் கை ராட்டினமே எனும் பாடல் இடம் பெற்றிருந்தது. சினிமாவுக்குள் வந்த நாடகக்கலைஞர்கள் தங்கள் திறன்களை பயன்படுத்தி நாட்டுப்பற்று உணர்வை தூண்டும் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். அவர்கள் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு நாடகங்கள், பாடல்களை தங்களுடன் கொண்டு வந்திருந்தனர். கதை ஆசிரியர்கள் புராண படங்களில் ஒத்துழையாமை போராட்டம் தொடர்பான காட்சிகளை உட்புகுத்தினர். பாடலாசிரியர்கள் அளித்த தேசபக்தி பாடல்கள் பின்னர் தனியாக அரசியல் மேடைகளிலும் பள்ளிகளிலும் கூட பயன்படுத்தப்பட்டன.

சினிமா எனும் கலைவடிவிற்கு இந்த புலம்பெயர்வு மோசமான விளைவை உண்டாக்கியது என்றே சொல்ல வேண்டும். மேடையிலிருந்து வந்த கலைஞர்களுக்கு நாடகத்திற்கும் சினிமாவின் இயல்புக்குமான வேறுபாடுகள் தெரியாததால், அவர்கள் உருவாக்கிய திரைப்படங்கள் படம்பிடிக்கப்பட்ட நாடகங்களாகவே இருந்தன. சினிமாவின் சாத்தியக்கூறுகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ்சினிமா இந்தப்பாதையில் வெகுகாலம் பயணித்தது.

ஆனால் இந்த புலம்பெயர்வு ஆரம்பகட்ட தமிழ் சினிமாவில் அரசியல் உணர்வை ஊட்டியது. 1930களில் மக்களிடம் நன்கு அறியப்பட்ட பல நடிகர்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றனர். நடிகர் நாகையா கெளஹாட்டி காங்கிரசிற்கு பிரதிநிதியாக சென்றார். சிலர் காங்கிரஸ் கூட்டங்களுக்கு பிரதிநிதிகளாக செல்ல, வேறு சிலர் தேர்தல்களில் நேரடி பிரச்சாரம் செய்தனர். அவர்கள் தங்கள் புகழையும் ஈர்ப்பையும் நாட்டுக்காக பயன்படுத்தினர். அவர்களுள், பின்னாளில் நட்சத்திர அரசியல்வாதியாக உருவெடுத்ததில் சரியான எடுத்துக்காட்டு கே.பி.சுந்தராம்பாள். நந்தனார் (1942) படத்தில் அவர் ஆண் வேடம் தரித்து பண்ணையாளாக நடித்து புகழ்பெற்று ஏற்கனவே நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருந்தார். சில ஆண்டுகள் கழித்து சட்டமன்றத்துள் நுழையும் நாட்டின் முதல் சினிமா நட்சத்திரம் என்ற பெருமையை அடைந்தார். 1958ஆம் ஆண்டு அவர் தமிழ்நாடு மேலவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்டார்.

நாகையா

கே.பி. சுந்தராம்பாள்
ஒருபுறம் மரபான இந்திய கலை வடிவங்கள், செவ்வியல் மற்றும் நாட்டார் கலை இரண்டுமே தங்கள் அசல்தன்மையை இழந்து கொண்டிருக்க, மறுபுறம் சினிமா காட்சி வழியில் ஒரு புதிய தொழில்நுட்ப ஊடகமாக வந்திருந்தது. சினிமா பார்வையாளர்களுக்கு முன் நிபந்தனையாக எவ்வித படிப்பறிவும் அவசியமில்லை என்பதால், அதிகமும் படிக்காத மக்களிடம் அது பரவலாக சென்று சேர்ந்தது. வறுமையாலும் பயணங்களுக்கு இருந்த பல்வேறு தடைகளாலும் வாழ்வனுபவம் மிகவும் சுருங்கிப் போயிருந்த பெருந்திரளான மக்களுக்கு அது காட்சி பிம்பங்களடங்கிய புதியவொரு அனுபவ உலகையே திறந்து வைத்தது. வேறெந்த ஊடகமும் இதுவரை உண்டாக்காத பாதிப்பை திரைப்படங்கள் உண்டாக்க தொடங்கின.

சினிமா இங்கு தோன்றிய காலம். படித்த வர்க்கம் அதை இகழ்ந்து பாமரர்களின் பொழுதுபோக்கு என ஒதுக்கியது. வணிக மேடைக்கு இருந்த அதே அடையாளம் சினிமாவுக்கும் தொடர்ந்தது. அவர்களின் கண் முன்னாலேயே புதிய பொழுதுபோக்காக சினிமா தோன்றி வளர்ந்தது. மரபான கலை வடிவங்களுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பும் சினிமாவுக்கு கொடுக்கப்படவில்லை. சினிமா மீது இவ்வகையான மேட்டிமைவாத அக்கறையின்மை வேறுபல வடிவங்களில் தொடர்கிறது.

சத்தியமூர்த்தியும் கலைஞர்களும்

தமிழ் சினிமாவிற்கும் அரசியலுக்குமான உறவு குறித்தான இச்சொல்லாடலில் ஒரு காங்கிரஸ் தலைவருக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாடு அரசியலில் முப்பதுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமையாக இருந்தவர் சத்தியமூர்த்தி, அவர் ஒரு தொழில்முறை சாரா நடிகரும் கூட. மெட்ராஸின் முன்னணி நாடக அமைப்பான சுகுண விலாஸ் சபாவில் உறுப்பினரும் கூட. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் மெட்ராஸின் மேயாரகவும் ஒரு பதவிக்காலம் இருந்துள்ளார். அவர் நிகழ்த்து கலைகளை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதில் நம்பிக்கை கொண்டவர், சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் சினிமாவுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை கண்டார். படித்த வர்க்கம் அதை கலாச்சார சீரழிவாக வசைபாடிக்கொண்டிருந்த சூழலில், சத்தியமூர்த்தி சினிமாவுக்கு அளித்த ஆதரவும் அதன் கலைஞர்களுடன் அவருக்கிருந்த தொடர்பும் அதை வேறொரு கோணத்தில் முன்னிறுத்தியது. சத்தியமூர்த்தியை முன்மாதிரியாகக் கொண்டு வேறு சில காங்கிரஸ் தலைவர்களும் தங்களை தமிழ் சினிமாவுடன் இணைத்துக் கொண்டு திரைக் கலைஞர்களை ஊக்குவித்தனர். அவர்களில் சிலர் முதல்காட்சி திரையிடலின் போது மேடையில் தோன்றினர், புதுப்பட துவக்கத்தின் போது விழாக்களில் பங்கேற்கவும் செய்தனர்.

சத்தியமூர்த்தி
அதே நேரத்தில் நடிகர்களின் நேரடியான அரசியல் பங்களிப்பும் தொடர்ந்தது. சென்னை சாந்தோமில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் நாடகம் காங்கிரஸ் மற்றும் திரைப்பட நடிகர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. சிலர் கள்ளுக்கடை மறியலிலும் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பிரச்சாரம் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது, அவரால் காங்கிரஸில் வேலை செய்ய பல நடிகர்களை வற்புறுத்தி அழைத்துவர முடிந்தது. 1937 மாகாண தேர்தலில் கே.பி.சுந்தராம்பாள் காங்கிரஸ் பிரச்சாரத்தின் நட்சத்திர ஈரப்புவிசையாக இருந்தார்.

1937 தேர்தலை தொடர்ந்து பெருவாரியான மக்களாதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான அரசு மதராஸ் மாகாணத்தில் உருவானதும், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சினிமா தணிக்கை ஏறக்குறைய முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த புதிய சுதந்திரத்தால் திரைப்படங்களில் தேசியவாத பிரச்சாரம் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டது. ஒரே ஆண்டில் 1939இல் ஆனந்தாசிரமம், தியாகபூமி, மாத்ருபூமி போன்ற பல தேசபக்தி படங்கள் வெளியாயின. ஆனால் காங்கிரஸ் அரசு இரண்டாண்டுகள் மட்டுமே நீடித்தது.

பின்னர் ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தீவிரமடைந்த சமயம் பல திரை நடிகர்கள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறை சென்றனர். ஆனால் 1943ல் சத்தியமூர்த்தியின் மறைவினால் பொழுதுபோக்குத்தள கலைஞர்களுடனான காங்கிரசின் உறவு தடைபட்டது. ஆற்றல் வாய்ந்த கலாச்சார, அரசியல் விசையாக இருந்த கலைஞர்கள் தங்களை வழி நடத்த தலைவரின்றி இருந்தனர். எனவே அடுத்துவந்த மேடையும் திரையும் சிறந்த பிரச்சார கருவிகள் என்பதை அறிந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம் இவர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

சீர்திருத்த நோக்குடன் தோன்றிய திராவிட இயக்கம், நாற்பதுகளில் பிரச்சாரத்திற்கு நாடகங்களை பயன்படுத்த ஆரம்பித்தது. சத்தியமூர்த்தியின் மறைவுக்குப் பிறகு நாடக கலைஞர்கள் திராவிட இயக்கத்தின் பக்கம் நகர்ந்தனர், அதன் தலைவர்களிடம் அவர்களுக்கு அங்கீகாரமும் ஆதரவும் கிடைத்தது. அண்ணாதுரை, கருணாநிதி உட்பட இயக்கத்தின் முன்னணி நபர்கள் பலரும் தாங்களே நாடக ஆசிரியர்களாகவும் சமயங்களில் நாடகங்களில் நடிக்கவும் செய்துள்ளனர்.

சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாடு

நாடக, சினிமா கலைஞர்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு பொது மக்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியிருந்தாலும், காங்கிரஸ் தலைமை அதை அங்கீகரிக்க தவறியது. பின்னாளில் சினிமாவுக்கு உருவாகப்போகும் அரசியல் முக்கியத்துவத்தையும் அவர்கள் உணரவில்லை.

சினிமா மீதான ராஜகோபாலாச்சாரியாரின் பார்வை வாழ்வின் பல்வேறு தளங்களில் அவர் கொண்டிருந்த பார்வையைப் போலவே தூய்மைவாதம் சார்ந்திருந்தது. அவர் மக்களிடம் சினிமா பார்ப்பதை தவிர்க்கவே சொல்லிவந்தார். 1953இல் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் அவர் முதலமைச்சராக தலைமை தாங்கியபோது, சினிமா ஒரு நஞ்சு என்றும் அது தன்னைத்தானே நிறுத்திக்கொண்டால் சமூகத்திற்கு மிகப்பெரிய சேவையாக இருக்கும் என்றும் பேசினார். காந்தியின் பார்வையும் இதே போன்றதுதான். ராஜாஜிக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற, சத்தியமூர்த்தியின் சீடரான காமராஜும் கூட திரைக்கலைஞர்கள் பற்றி இழிவான எண்ணத்தையே கொண்டிருந்தார், அவர்களை 'கூத்தாடிகள்' என்றே குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவர்கள் திரைக்கலைஞர்கள் மீது கொண்டிருந்த பார்வையின் ஒட்டுமொத்த அடையாளமாகவே இச்சொல் விளங்கியது.

1950களின் துவக்க காலக்கட்டத்தில் தமிழக கிராமப்புறங்களை பெருவாரியாக மின்வயமாக்கும் செயல்திட்டங்கள், சினிமாவை பரவலாக பாமர மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பங்காற்றியது. டூரிங் டாக்கீஸ் என்றழைக்கப்படும் நடமாடும் சினிமா கொட்டகைகள் மூலம் சினிமாவை குக்கிராமங்கள் வரை கொண்டுசெல்ல இயன்றதால், மக்களுக்கு சினிமா மீதான பற்று பன்மடங்கு அதிகமானது. இது மறைமுகமாக திராவிட கட்சிகள் வளரவும் வழிவகுத்தது.

சத்தியமூர்த்தியின் தீவிர அரசியல் எதிரிகளாக இருந்த திராவிடத் தலைவர்கள் காலப்போக்கில் அவர் சிரத்தையுடன் வளர்த்தெடுத்த விசையை கைப்பற்றி அதிகாரத்தை அடைவதற்கான பயணத்தில் பயன்படுத்திக் கொண்டனர்.  இந்த காலகட்டத்தில்தான் நட்சத்திர-அரசியல்வாதி உருவானார்.

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த என்.எஸ்.கிருஷ்ணனின் (N S K) வாழ்வு, தமிழ்நாட்டு வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் அரசியல் வட்டத்திற்குள் வந்த திரைக்கலைஞர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு.. ஒத்துழையாமை இயக்க காலத்திலிருந்தே கிருஷ்ணன் காங்கிரஸ் கட்சிக்கு தீவிரமாக அரசியல் பிரச்சாரம் செய்தவர். சுதந்திரத்திற்கு பின் 1952இல் முதல் பொது தேர்தலின் சமயத்தில், தான் வேட்பாளராக போட்டியிடுவதை உறுதிசெய்வதன் பொருட்டு டெல்லியில் தங்கியிருந்தார், அப்போது சென்னையில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் திரை நடிகர் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சித்தார். கொதிப்படைந்த கிருஷ்ணன் தேர்தலில் போட்டியிடுவதையே கைவிட்டு மறுத்துவிட்டார். அந்த தேர்தலில் அவருடன் சேர்ந்து மேலும் இரு பிரபல நடிகர்கள் எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். பின்னாளில் திராவிட இயக்கத்துக்கு ஆதரவளித்து வந்த கிருஷ்ணன், திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியாக வளர்வதில் பெரும் உறுதுணையாய் இருந்துள்ளார், ஆனால் அவர் அக்கட்சியில் ஒருபோதும் உறுப்பினராக இணையவில்லை. திமுக 1967இல் தமிழ்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது.

என்.எஸ்.கிருஷ்ணன்
கே.ஆர்.ராமசாமி
நாட்டில் நன்கு அறியப்பட்ட நட்சத்திர நடிகர்-அரசியல்வாதி எம்.ஜி.ராமசந்திரன் திராவிடக் கட்சியில் இணைவதற்கு முன்னர் தேசியவாத நாடகங்களில் நடித்திருக்கிறார், தன் ஆரம்ப நாட்களில் கதர் உடுத்தும் காங்கிரஸ் அனுதாபி அவர். 1970களின் துவக்கத்தில் எம்ஜிஆர், கருணாநிதி இடையே அரசியல் மோதல் உருவாகி வந்தது. அப்போது முதலமைச்சராய் இருந்த கருணாநிதி அரசியல் வட்டாரத்தில் ரசிகர் மன்றங்கள் உண்டாக்கும் தாக்கத்தை கவனித்து வந்தார். எம்ஜிஆரை நிகர் செய்யும் பொருட்டு தன் சொந்த மகன் மு.க.முத்துவை திரைப்படங்களில் நடிக்க வைத்து அவருக்கு ரசிகர் மன்ற ஆதரவையும் உருவாக்கினார். திமுக தலைமை கருணாநிதிக்கு எதிராக எம்ஜிஆர் குரல்எழுப்பி, கட்சி நிதியை கையாள்வதில் வெளிப்படைத்தன்மை தேவை என்று கலகம் செய்தபோது, கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதனையடுத்து 1972இல் எம்ஜிஆரின் சொந்த கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதில் அவரின் ரசிகர் மன்றங்களின் துணையும் பக்கபலமாக இருந்தது. பின்னர் முதலமைச்சராக பதவியேற்று தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்தவர், தான் இறக்கும் வரை எதிர்ப்பில்லாத புகழின் உச்சத்திலேயே இருந்தார்.

எம் ஜி ஆர் - சிவாஜி கணேசன்

தமிழ் திரையில் 1970கள் வரை இடம்பெற்ற நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உட்பட பெரும்பாலானவர்கள் கம்பெனி நாடகங்களின் பின்னணியில் வந்தவர்களே, அவர்கள் அரசியல் செயல்பாட்டிலும் கால் பதித்திருந்தனர். நாற்பதுகளின் தொடக்கத்தில் பரமக்குடியில் முகாமிட்டிருந்த நாடக கம்பெனியில் இளம் கணேசன் கதரின் வெற்றி எனும் தேசபக்தி நாடகத்தில் நடித்த பொழுது, காங்கிரஸ் தலைவர் காமராஜ் இரண்டாம் வரிசையில் அமர்ந்து பார்த்திருந்தார். அத்தலைவர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பொருட்டு தன்னை ஒருநாள் அழைப்பார் என்றும் அவருடன் நெருக்கமாக பணிசெய்வோம் என்றும் கணேசன் ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.


கணேசனின் அரசியல் வாழ்வில் குறிப்பிடத்தக்க அம்சம் என்றால் ஆரம்பம் முதலே காமராஜர் மீது அவர் வைத்திருந்த மாற்றில்லாத விசுவாசம். ஆனால் கணேசனின் தேர்தல் பிரச்சாரங்கள் வாக்குகளை வெல்ல முடியாததால் அது குறித்து அடிக்கடி அதிருப்தியில் இருந்தார். அவரே கூட எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. 1975இல் காமராஜ் இறப்புக்கு பிறகு கணேசன் இந்திரா காங்கிரசின் பக்கம் நகர்ந்தார், 1976க்குள் இரு பிரிவுகளும் இணைந்துவிட்டன. 1982இல் ராஜ்யசபா (மாநிலங்களவை) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திரா காந்தியின் நன்மதிப்பை பெற்றிருந்த அவர் அவசர காலகட்டத்திற்கு பின் இந்திரா பதவியிழந்து இருந்த சமயத்திலும் அவரை ஆதரித்தார். பின்னர் ராஜீவ் காந்தி பதவிக்கு வந்ததும் கட்சியின் மாநில பிரிவில் தான் ஓரம்கட்டப்படுவதை உணர்ந்த கணேசன் கட்சியிலிருந்து வெளியேறினார்.

சில நெருங்கிய நண்பர்களின் உந்துதலால் தமிழக முன்னேற்ற அணி எனும் புதிய கட்சியை நிறுவினார். புதிய கட்சி உருவாக்கத்துக்கு மேலும் சில சம்பவங்களும் காரணிகளாய் இருந்தன. எம்ஜிஆர் 1987இல் மறைந்த போது அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான வி.என்.ஜானகி இருபது நாட்கள் மட்டும் முதலமைச்சராக இருந்து நிலையின்றி இருந்தார். தமிழ்நாடு அரசியலில் தனக்கான இடம் இருப்பதாக எண்ணிய கணேசன், தன் ரசிகர்கள், ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பு ஆதரவுடன் தன்னால் இத்தனை நாள் சாதிக்க முடியாத அரசியல் களத்தில் வெற்றியை பிடித்துவிடலாம் எனக் கணித்தார். சிவாஜி ரசிகர் மன்றம் கட்சிக்கு ஆதரவாக நின்றது. இச்சமயம் என் தமிழ் மக்கள் எனும் தலைப்பில் தன் கட்சியின் கொள்கையை வலியுறுத்தும் வகையில் அவரே நடித்த ஒரு பிரச்சார படம் எடுத்தார், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கணேசனின் கட்சி வி.என்.ஜானகியின் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐம்பது இடங்கள் ஒதுக்கப்பட்டது, அனைத்து இடங்களிலும் மோசமான தோல்வியையே சந்தித்த கணேசன், அவர் போட்டியிட்ட திருவையாறு தொகுதியிலும் தோற்றார்.

நட்சத்திர புகழின் வழி அரசியல் அதிகாரம்

நட்சத்திர நடிகர் உருவாக்கத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது நட்சத்திர புகழ். பெரும்பான்மை மக்களின் பார்வையில் நிபந்தனையற்ற ஈர்ப்பையும் ஆர்வத்தையும் உச்ச நட்சத்திரம் கவர்ந்துவிடுகிறார். மேக்ஸ் வெப்பர் (Max Weber) இந்நிலையை ‘கவர்ந்திழுக்கும்' தன்மையாக (charismatic) குறிப்பிடுகிறார். அவர் சொற்களில், ’கவர்ந்திழுக்கும் தன்மை’ என்று சொல்லும்போது அசாதாரணமானது என நாம் கருதும் தகுதி ஒன்று ஒருவருக்கு அளிக்கப்படுகிறது, அவருக்கு மகத்தான ஆற்றல்கள் அருளப்பட்டிருப்பதாகவும் பிறர் அணுகக்கூடிய வகையில் இருந்தாலும் தெய்வீக, அதிமானுடம் சார்ந்த அல்லது குறைந்தபட்சம் சிறப்பான குணநலன்கள் பெற்றவராக நம்பப்படுகிறார்”. அத்தகைய கவர்ந்திழுக்கும் தன்மை உடையவர் தலைவராக பார்க்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் அவரின் விசுவாசிகள் பலனடைவதாக வெப்பர் சொல்கிறார். முதிர்ச்சியடையாத ஜனநாயகங்களில் நட்சத்திரங்களின் இந்த கவர்ந்திழுக்கும் தன்மை அவர் ஈடுபடும் பிற துறைகளின் பாத்திரங்களுக்கும் கடத்தப்படுவதை வெப்பர் 'கவர்ந்திழுக்கும் தன்மையின் பொதுமையாக்கம்' என்று குறிப்பிடுகிறார். உதாரணமாக பிரேசிலின் கால்பத்து நட்சத்திரமான பீலே நாடாளுமன்றத்துக்கு மிக எளிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவின் முதல் பத்தாண்டுகளிலேயே உச்ச நட்சத்திரங்கள் உருவாவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டன. சினிமா வெகுமக்கள் பொழுதுபோக்காக வளரும் போதே நட்சத்திரம் எனும் நிகழ்வு வந்துவிடுகிறது. மேடை நடிகையாக ஏற்கனவே நல்ல புகழ் பெற்றிருந்த கே.பி.சுந்தராம்பாள் நந்தனார் எனும் படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையான ஒருலட்ச ரூபாய் சம்பளமாக பெற்றார். நாற்பதுகளில் வேறு சில பாடும் நடிகர்களான பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோர் திரை நடிப்பில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களுக்கான ரசிகர் ஆதரவைக் கண்டு படத் தயாரிப்பாளர்களும் ஒரு காப்பீட்டுத் திட்ட பாலிசி எடுப்பதைப் போல, குறைந்தபட்ச வெற்றியை உறுதிசெய்யும் பொருட்டு அவர்களை தங்கள் படங்களில் நடிக்க வைத்தனர். படத் தயாரிப்பாளர்களை பொருத்தவரை நட்சத்திரங்கள் முதலீட்டு மதிப்பு கொண்டவர்கள்.

நட்சத்திரங்கள் பல ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் செலுத்திய ஆதிக்கம் நடிகர் - அரசியல் ஊடாட்டத்திற்கு வழி வகுத்தது. விரைவிலேயே மக்கள் மனதை பாதிக்கக் கூடிய எந்தவொரு வெகுஜன பிரச்சாரத்தை கொண்டு செல்வதற்கும் திரைப்படங்கள் இன்றியமையாத கருவிகளாக ஆகின. 

நட்சத்திர உருவாக்கத்தில் சினிமாவின் இரண்டு இயல்புகள், உதவின. இரண்டுமே தொழில்நுட்பத்தால் சாத்தியமானவை. கலை விமர்சகர் வால்டர் பெஞ்சமின் (Walter Benjamin) கூற்றுப்படி, முதல் இயல்பு ஒரு கலைவடிவம் புறவயமாக, மறு உருவாக்கம் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். சினிமாவை பொருத்தமட்டில் அதிக பிரதிகளை உற்பத்தி செய்து, ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் திரையிட முடிவதால் நட்சத்திரத்தை பின்தொடரும் பரவலான ரசிகர்களை உருவாக்க முடியும். பெஞ்சமினின் சொற்களில் “மறு உருவாக்கம் செய்யும் செயல்பாடு, அவ்வாறு செய்யப்பட்ட பொருளை மரபின் எல்லையிலிருந்து வெளியேற்றுகின்றது. நகல்களின் பன்மைத்தன்மைக்கு மாற்றாக தனித்துவமான அனுபவத்தை அளிக்கின்றன.” திரையில் நகரும் பிம்பங்களால் ஆட்கொள்ளப்படுவது தமிழ் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவமே.

ஒளிப்பதிவு சார்ந்த நுட்பமான அண்மைக்காட்சிகள் (close-up) இவ்வரிசையில் வரும் சினிமாவின் இரண்டாவது தனி இயல்பு. நட்சத்திர உருவாக்கத்தில் இதுவும் ஒரு முக்கிய காரணி. இருள்சூழ்ந்த திரைஅரங்கில், புலன்களின் பிற தூண்டல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில், அண்மைக்காட்சிகளின் வழியாக நட்சத்திரங்களால் வசீகரிக்கப்பட்டு அவர்களுடன் அணுக்கமான உணர்வை பார்வையாளர்கள் அடைகிறார்கள், அண்மைக்காட்சி இந்த பிணைப்பை ஏற்படுத்த உதவுகிறது, ஆனால் இப்பிணைப்பு ஒருவழிப்பாதை கொண்டதுதான். (D.W.Griffith தனது ஃபார் லவ் ஆஃப் கோல்டு (1908, மெளனப்படம்) எனும் படத்தில் முதன்முதலாக அண்மைக்காட்சியை பயன்படுத்தினார். அவர் இதை ஒரு கண்டுபிடிப்பாக தெரிந்து செய்யவில்லை, குறிப்பிட்ட ஒரு செயலை நோக்கி பார்வையாளரின் கவனத்தை கவரும் பொருட்டு கேமராவை மிக அருகில் கொண்டு சென்றார். அதுவே பின்னர் புரட்சிகரமான நகர்வாக மாறியது.)

தமிழ்நாட்டில் இரு வகையான நட்சத்திர-அரசியல்வாதிகள் தோன்றியுள்ளனர். தாங்களே சொந்த கட்சியை அறிவித்து அரசியலுக்கு வந்தவர்கள் அல்லது தங்கள் திரைப்புகழைக் கொண்டு ஏற்கனவே இருக்கும் பிரபலமான கட்சியில் இணைந்து அவர்களின் முதுகில் சவாரிசெய்தபடி தேர்தலில் நின்றவர்கள். திமுகவை சேர்ந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் அதிமுகவை சேர்ந்த ராமராஜன் ஆகியோர் இரண்டாம் வகைக்கு உதாரணங்கள். நடிகர் தயாரிப்பாளர் டி.ராஜேந்தரால் அவர் தொடங்கிய அரசியல் கட்சியை தொடர்ந்து தாக்குப்பிடித்து நடத்த முடியவில்லை. எம்ஜிஆரை போல அதிகாரமற்ற மேல்தட்டிலிருந்து அரசியல் அதிகாரத்தின் மையமாக ஆகும் வளர்நிலையையே அனைத்து நட்சத்திர-அரசியல்வாதிகளின் கனவாக உள்ளது.

ரசிகர் மன்றங்கள்

திரை நடிகர்களின் அரசியல் வாழ்வில் அவர்களின் ரசிகர் மன்றங்கள் அடிப்படையான பங்காற்றியுள்ளன. சிவாஜி, எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் அந்நடிகர்கள் கட்சி துவங்கிய போது கீழ்மட்டம் வரை செல்லும் கட்சியின் உள்ளூர் கட்டமைப்பாக செயல்பட்டன. தமிழ்நாட்டில் திரை ரசிகர்களின் களச் செயல்பாடு என்பது மெளனப்பட காலத்திலிருந்தே துவங்குகிறது, ஹாலிவுட் நட்சத்திரங்களான எடி போலோ (Edie Polo) மற்றும் எல்மோ லிங்கன் (Elmo Lincoln) ஆகியோரின் படங்கள் தென்னிந்தியாவில் பெரும்புகழ் பெற்றிருந்தன, அதற்கான ரசிகர்கள் இங்கிருந்தனர். 1928இல் சேலத்தில் ஒருமுறை திரையரங்கின் முன்னே திரை ரசிகர்களின் இந்த இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் காவல்துறை தலையிட்டு சண்டையை நிறுத்த வேண்டியிருந்தது. 

நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்ததும் தமிழ்நாட்டில் ரசிகர்களின் பின்தொடர்வும் பெருகியது. 1950களின் சமயம் திரை ரசிகர்களின் செயல்பாடுகள் நிறுவனமயமாக தொடங்கின, நூற்றுக்கணக்கில் ஒருங்கமைக்கப்பட்ட ரசிகர் மன்றங்களாக உருப்பெற்று அவை தமிழ்நாட்டின் கலாச்சார, அரசியல் சூழலின் பகுதியாக மாறின. நட்சத்திர-அரசியல்வாதிகள் உருவாக்கத்தில் ரசிகர் மன்றங்கள் முக்கிய பங்கு வகிப்பதிலிருந்தே தமிழ்நாட்டு மக்கள் சினிமா மீதும் நட்சத்திரங்கள் சார்ந்துள்ள கட்சி மீதும் கொண்டுள்ள தீவிர அபிமானத்தை தெரிந்து கொள்ளலாம்.

காலப்போக்கில் மன்றங்கள் மாவட்டம், வட்டம், உள்ளூர் வரை அமையப் பெற்றன. ஒவ்வொரு மன்றமும் தனி அலகாக பெரும்பாலும் சிறு நூலகத்துடன் செயல்பட்டது. ஒருவகையில் கட்சியின் கீழ்மட்ட அளவிலான கட்டமைப்பின் மாற்று வடிவாக செயல்பட்ட அவற்றை நட்சத்திரங்கள் அவ்வப்போது நிதியுதவி செய்து பார்த்துக் கொண்டனர். மன்றங்களும் நட்சத்திரங்களும் பரஸ்பரம் ஒன்றையொன்று வளர்ப்பவையாக ஆகின. சிவாஜி கணேசன் எம்ஜிஆர் இடையே நட்சத்திர மோதல் நிகழ்ந்த சமயத்தில் ரசிகர் மன்றங்கள் உச்சம் பெற்றன, அவர்கள் இருவரின் திரைப்பட, அரசியல் வாழ்விலும் தவிர்க்க முடியாத அம்சமாக அவை இடம்பெற்றன. இக்காலகட்டத்தில் தான் ரசிகர் மன்றங்கள் அரசியல் பரிமாணத்தை அடைந்தது.

திரை வாழ்வுக்குள் வந்த முதல்சில வருடங்களிலேயே சிவாஜி கணேசனுக்கு பரவலான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். புகழின் உச்ச்சியில் இருந்த நேரம் கிட்டத்தட்ட 3000 ரசிகர் மன்றங்கள் அவரது பிம்பத்தையும் திரைப்படங்களையும் முன்னெடுக்க செய்ய வேலை செய்தன. சிவாஜி கணேசனுக்கு 'நடிகர் திலகம்' என பட்டமளித்தது கூட ஒரு ரசிகரே, காலப்போக்கில் அது அவரது பெயரின் முன்னொட்டாகவே நிலைபெற்றது. தொடர் வெற்றிப் படங்களின் மூலம் கணேசனின் ரசிகர் எண்ணிக்கை கூடியது. அதேசமயம் எம்ஜிஆர் ஒரு நட்சத்திரமாக வளர்ந்து வர அவரது ரசிகர் மன்றங்களும் தமிழ்நாடு முழுக்க முளைத்தன. அவை நட்சத்திர அரசியல்வாதியில் கட்சிக்கு சாரக்கட்டு போல் பயன்பட்டன. 

கொள்கை சார்பு அடிப்படையில் எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களுக்கு கணேசனின் மன்றங்களிலிருந்து ஒரு வேறுபாடு இருந்தது, இவ்வேறுபாடு அவர்களின் அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் விஷயமாக ஆனது. எம்ஜிஆர் ரசிகர்கள் முன்னரே திராவிட இயக்க கொள்கைகளில் ஈர்ப்பு கொண்டிருந்ததால் பின்னாளில் அவர்களின் அரசியல் சாய்வும் இயைந்து போனது. திமுகவுடன் பிளவு ஏற்பட்டு எம்ஜிஆர் அண்ணா திமுக எனும் சொந்த கட்சி ஆரம்பித்த போது அவரது ரசிகர் மன்ற கட்டமைப்பு கட்சி கட்டமைப்பின் வடிவில் தயாராக இருந்தன. இன்னொரு பக்கம் கணேசனின் ரசிகர்களோ சாதரணமாக படம்பார்க்க செல்லும் கலவையான ரசிகர்கள். எம்ஜிஆர் ரசிகர்கள் போன்று அவர்கள் ஒற்றை கொள்கையால் இணைக்கப்பட்டவர்கள் அல்ல. கணேசனின் திரைப்படங்களையும் அவரது நடிப்பையும் சிலாகிக்கும் அதேநேரம், அவர்கள் அவரின் அரசியல் கொள்கையை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் அப்போது பெருவாரியான ஆதரவு இல்லாததும் கணேசன் அடிக்கடி தன் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருந்ததும் குறுகிய காலம் ஜனதா தளத்துடன் இணைந்தது உட்பட, அவரின் அரசியல் வாழ்வை பாதித்தது. எம்ஜிஆர் தொடர்ச்சியாக கவனத்துடன் நன்மை செய்யும் நாயகனாக மட்டுமே தன் திரை ஆளுமையை கட்டமைத்திருக்கையில் சிவாஜி விதவிதமான பாத்திரங்களில் நடித்தார், தீய மனிதனாக, உருக்குலைந்த மனிதனாக. எம்ஜிஆர் கவனமாக தவிர்த்து வந்த புகைபிடிக்கும், குடிக்கும் காட்சிகளையும் அவர் திரையில் நடித்தார். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் சொன்னது “தான் கற்றுதேர்ந்த திறனை திரையில் காட்டுவதை விட, பிம்பத்தை கட்டமைப்பதே முக்கியம் என்பதை எம்ஜிஆர் நினைத்திருந்தார். ஆனால் சிவாஜி கணேசனின் அணுகுமுறையோ நேரெதிரானது. எம்ஜிஆர் திரைப்படங்களைப் போலவே அரசியலிலும் வெற்றியடைந்திருக்க வெளிப்படையான அரசியல் கனவுகள் கொண்டிருந்த சிவாஜி, தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருப்பினும் அரசியல்வாதியாக தோற்றார்”. (1995 ப.45)

ரசிகர் மன்றங்கள் ஒருவர் அரசியல் வாழ்வுக்குள் நுழைவதற்கான உந்து பலகையாகவும் சிலருக்கு பயன்பட்டன. இம்மன்றங்களின் நிர்வாகிகளாக செயல்பட்ட அதிமுகவின் முசிறி பித்தன் போன்ற சிலர் பின்னர் சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர். விஜயகாந்த் ரசிகர் மன்றங்கள் கட்சி கட்டமைப்பின் வடிவில் செயல்பட்ட நிலையில் அவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைய தயாரானார்.

அனைத்து ரசிகர் மன்றங்களுமே அரசியல் நோக்குடன் செயல்பட்டதாக சொல்ல முடியாது. ஆரம்ப நாட்கள் முதல் நீண்ட காலம் கமல்ஹாசனின் ரசிகர் மன்றங்கள் இரத்த தானம் போன்ற சமூக செயல்பாடுகளையே முன்னெடுத்தன. அவர்கள் தங்கள் அமைப்பை நற்பணி மன்றம் என்றே அழைத்து வந்தனர். ஜெமினி கணேசன், சத்யராஜ், சிவகுமார் போன்ற நட்சத்திரங்கள் தெளிவாகவே தங்களுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாவதை தவிர்த்தனர். ரசிகர் மன்றங்களின் துணை இல்லாமலேயே வெற்றிகரமாக நிலைகொள்ள முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தனர்.

சில மன்றங்கள் ரசிகர் இதழ்கள் வெளியிட்டன, அதில் நட்சத்திரங்கள் தற்போது நடித்துவரும் திரைப்படங்கள் குறித்து தகவல்கள் இடம்பெறும். சிவாஜி, எம்ஜிஆர், அஜீத் மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு அவர்களின் புகழ்பாடும் அவ்வாறான இதழ்கள் இருந்தன. சிவாஜி மன்றங்கள் சார்பில் சிவாஜி ரசிகன் எனும் தலைப்பில் மாதமிருமுறை இதழ் வெளிவந்தது, அதற்கு சின்ன அண்ணாமலை ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் எம்ஜிஆரை விமர்சனம் செய்யும் வழக்கம் கொண்டிருந்தது. சில வருடங்கள் கழித்து நமது சிவாஜி என்றொரு மாத இதழை ரசிகர் மன்றம் நடத்தியது, அதில் சிவாஜியை நோக்கி எழுப்பப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு பதில் கூறப்பட்டிருக்கும், அதுபோக அவரின் அரசியல் எதிரிகளை தாக்கி எழுதப்படும் கட்டுரைகளும் இடம்பெறும். எழுபதுகளில் சிவாஜி படம் வெளியாகும் போதெல்லாம் அப்பெயரில் ரசிகர் மன்றங்களின் புதிய கிளைகள் தொடங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய ரசிகர் மன்ற நிகழ்வு என்றால் 1970இல் சிவாஜியின் நாற்பத்தி மூன்றாவது பிறந்தநாளையொட்டி அனைத்திந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்த விழாவையே சொல்ல வேண்டும். யானைகளும் குதிரைகளும் முன்னால் அணிவகுத்து செல்ல 840 பேருந்துகள் 140 லாரிகளில் வந்த பெருந்திரள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் தொடங்கி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தென்னிந்திய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் நிறைவுற்றது. திலீப் குமார், தர்மேந்திரா உட்பட இந்திய திரையுலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்ற நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் காமராஜும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தாராஹேஸ்வரி சின்ஹாவும் அவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டனர். சில ஆண்டுகள் கழித்து கணேசன் முழுக்க முழுக்க ரசிகர்களை நம்பியே சொந்த கட்சியை துவங்கினார், ரசிகர்களுக்கான கட்சியாகவே அதை உருவகித்தார். ஆனால் அரசியல் அதிகாரத்தை அடையும் அவரது முயற்சி பரிதாபகரமான முறையில் தோல்வியடைந்தது.

நட்சத்திர அரசியல்வாதிகளின் சினிமா

சுதந்திரத்திற்கு பிறகான தசாப்தங்களில், தமிழ் சினிமாவை பொருத்தவரை சிவாஜி கணேசனின் காங்கிரஸ் ஆதரவும் எம்ஜிஆரின் திமுக ஆதரவுமே திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் படங்களின் உள்ளடக்கம் அதிகமும் சண்டைக்காட்சிகள், பாட்டு, நடனம் என வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களால் நிறைந்திருக்கும். சிவாஜி கணேசனின் படங்கள் மிகை உணர்ச்சி காட்சிகள் கொண்டிருக்க எம்ஜிஆரின் படங்களோ சாகசங்களும் சண்டைக்காட்சிகளும் நிறைந்திருக்கும். அவர்களின் கொள்கை ஆதரவை குறிப்புணர்த்தும் வகையில் படங்களில் சில காட்சிகள் இடம்பெற்றாலும் அவற்றை அரசியல் படங்கள் என்று வரையறுத்து விட முடியாது. எம்ஜிஆர் தன் படங்களில் கருப்பு வெள்ளை நிறங்கள், உதயசூரியன் போன்ற கட்சியின் சின்னங்களை பயன்படுத்தினார். எம்ஜிஆர் நடித்த படங்களை ஆராய்ந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன் படங்களில் அவர் எடுத்துக்கொண்ட கதாப்பாத்திரங்கள் வழியே அவரது பொதுப் பிம்பம் வளர்த்தெடுக்கப்பட்டதாக சொல்கிறார். தமிழ்நாட்டின் பொதுத் திரளோ திரைப்பட பிம்பத்திற்கும் நிஜவாழ்வுக்குமான எந்த வேறுபாட்டையும் காணவில்லை. மேலும் அக்காலகட்டத்தின் சமூக பொருளாதார நிலைகளும் கிராமப்புற நாட்டார் தெய்வங்கள் மரபின் தொடர்ச்சியாக இத்தகைய இணைவு ஏற்பட சாதகமான சூழலை உருவாக்கியதாக பாண்டியன் குறிப்பிடுகிறார்.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன்
தமிழ் சினிமாவில் நட்சத்திரங்கள் தங்கள் படங்களின் மீது முழுக் கட்டுப்பாடு வைத்திருந்தனர். படத்தின் இயக்குநரோ, தயாரிப்பாளரோ யாராக இருந்தாலும் தங்கள் மீதே முழுக் கவனம் இருக்குமாறு நட்சத்திரங்கள் பார்த்துக் கொண்டனர். பிரதான வேடங்களில் யாரை நடிக்க வைப்பது என்பதில் தொடங்கி பாடல் வரிகளை மாற்றுவது வரை அவர்களின் செல்வாக்கு இருந்தது. எம்ஜிஆரை பொறுத்தமட்டில் பெரும்பாலும் இயக்குநரே அவருடைய பொதுப் பிம்பத்திற்கு ஏற்றவாறு கதையை மாற்றிவிடுவார். பிரபல அரேபிய இரவுகள் கதையின் நாயகனான அலிபாபாவோ மூலக்கதையில் ஓர் எளிய ஏமாற்றுக்கார மூடன். 1942இல் இக்கதையின் முதல் தமிழ் சினிமா வடிவம் வெளிவந்த சமயத்தில் கூட அதில் அலிபாபா வேடத்தில் நடித்திருந்தது நகைச்சுவை நடிகரான என்.எஸ்.கிருஷணன் அவர்களே. ஆனால் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் 1955இல் எம்ஜிஆரை நாயகனாக கொண்டு எடுத்த படத்தில் அலிபாபா முற்றிலும் வெரொருவராக உருமாறிவிட்டிருந்தார், நல்லவனாக, சாகச நாயகனாக. இன்னொருபுறம் எம்ஜிஆரை நல்ல காரியங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வதும் நடந்தது, உதாரணமாக சென்னையில் ரிக்‌ஷா வண்டிக்காரர்களுக்கு மழைக்கோட்டுகள் அளித்தது போன்ற செயல்கள் அவரின் புகழை உயர்த்தின.

நட்சத்திர அரசியல்வாதிகளின் அரசியல் கட்சிகளான திமுகவோ அல்லது காங்கிரசோ திரைப்படங்களை தங்கள் கொள்கைகளை பரப்புவதற்கான ஊடகமாக பயன்படுத்தவில்லை. அவர்கள் நட்சத்திரங்களின் புகழைக் கொண்டு, வெகு மக்களை கவர்ந்து அரசியல் அதிகாரத்தை அடையவே முயன்றனர். நட்சத்திர-அரசியல்வாதியின் அரசியல் கொள்கைகள் அவர்களின் திரைப்படங்களில் பிரச்சாரம் செய்யப்படவில்லை. ஆனால் வெகு மக்கள் ஆதரவைப் பெற கட்சிகள் நட்சத்திரங்களின் அபிமானத்தை பயன்படுத்திக் கொண்டன. கடந்த சில வருடங்களில் வெளிவந்த விஜயகாந்தின் படங்களிலும் அதிரடியான சமூக மாற்றங்களை பேசும் பொதுவான பிரச்சாரத்தன்மை உண்டே ஒழிய அரசியல் கொள்கை என்பது மிகக் குறைவாகவே உள்ளது.

அரசியல் சினிமா என்றால் என்ன?

சொல்லப்போனால், வெகுசில அரசியல் திரைப்படங்களே தமிழில் எடுக்கப்பட்டுள்ளன. நட்சத்திரங்களின் புகழும் ஈர்ப்பும் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டாலும், அவர்கள் படங்களின் உள்ளடக்கம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழக்கமான பாணியிலேயே அமைந்திருந்தன. இவ்விடத்தில் பிரெஞ்சு இயக்குனரான ஜீன் லூக் கோடார்ட் (Jean Luc Godard) அரசியல் படங்கள் எடுப்பதற்கும் 'அரசியலுக்காக' படங்கள் எடுப்பதற்குமான வேறுபாட்டை விளக்கியிருப்பது பொருத்தமாக இருக்கும். ஒரு திரைப்படம் அரசியல் உள்ளடக்கம் கொண்டதாகவும் கதையின் ஊடே அரசியல் கொள்கையும் பேசப்பட்டால் அதை அரசியல் திரைப்படம் என்று வகைப்படுத்தலாம். வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக அரசியல் நோக்கில் எடுக்கப்பட்டால் அவற்றை வெறுமனே அரசியலுக்காக எடுக்கப்பட்ட படங்கள் என்றே சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் நட்சத்திர-அரசியல்வாதி உருவாவதற்கு இங்கு சினிமாவுக்கு கிடைக்கும் அதிகப்படியான கவனமும் ஒரு காரணம். வேறு சொற்களில் சொல்வதானால் இந்தியாவில் வேறெங்கை காட்டிலும் இங்குதான் அதிக மக்கள் சினிமா பார்க்கின்றனர். மொத்தம் 2548 திரையரங்குகள் உள்ளன, அவற்றுள் 892 டூரிங் டாக்கீஸ்கள் கிராமப்புறங்களில் இயங்குபவை. கடந்த இருபது ஆண்டுகளில் தொலைக்காட்சி, இணையதள காணொளி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள புரட்சி காரணமாக திரைப்படங்களின் பரவலாக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கை இரண்டிலுமே இங்கு நிலவும் திரை விமர்சனத்தின் மோசமான தரமும் (இதை சினிமா இதழியலுடன் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை) இந்நிலைக்கான காரணமாக சொல்லலாம். எந்த கல்வி நிறுவனமும் சினிமாவை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை, எந்த பல்கலைக்கழகத்திலும் திரைப்படக் கல்விக்கென தனித் துறை இல்லை. இப்படியான மேட்டிமைவாத அக்கறையற்ற மனோபாவம் இன்னமும் பல வடிவங்களில் தொடர்கிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பலசமயம் இசைக்கென தனி இடமோ அல்லது துறையோ உள்ளது. ஆனால் சினிமாவிற்கு எந்த இடமும் இல்லை.

நாட்டார் தெய்வங்களாக நட்சத்திரங்கள்

இரு பெரும் நட்சத்திரங்களின் காலகட்டத்திற்கு பின்பும் பிற புதிய நட்சத்திரங்களின் வரவால் ரசிகர் மன்ற கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது. மன்றங்கள் சில சடங்குகளையும் உருவாகியுள்ளன. புதுப்பட வெளியீட்டின் போது படச்சுருளை திரையரங்கிற்கு ஊர்வலமாக எடுத்து செல்வது, படத்தை வெளியிடும் திரையரங்கின் முன் வானளாவ கட் அவுட்கள் வைப்பது போன்றவை. பல சமயம் இந்த கட் அவுட்கள் மீது பாலபிஷேகம் செய்யப்படுவதுண்டு. பீரை கொண்டு அபிஷேகம் செய்வதும் புதிய நடைமுறையாக உருவாகி வருகிறது. ரசிகர் மன்றங்களால் நட்சத்திரங்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு ஆண்டுக்கொருமுறை மாநாடுகளும் நடத்தப்படுகின்றன. ரஜினிகாந்திற்கும் விஜயகாந்திற்கும் விரிவான ரசிகர் பட்டாளம் உண்டு. வெளியீட்டு தினத்தின் போது படம் பார்க்க வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். மரபான வழிபாட்டு மரபின் படி இந்த கட் அவுட் உருவங்களுக்கு தேங்ககாய் உடைத்து சூடம் ஏற்றும் வழக்கமும் உண்டு. திருட்டு டிவிடிக்கள் பரவலாக இருந்த காலத்தில் ரசிகர் மன்றங்களால் திருட்டு டிவிடி தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் டிவிடிக்கள் விற்கும் கடைகள் திரையரங்குகளுக்கு ரோந்து போவார்கள். தமிழ்நாட்டில் நட்சத்திரங்கள் ஒருவகை நாட்டார் தெய்வங்களாகவே பார்க்கப்படுவதால் அதனுடன் தொடர்புடைய மரபான சடங்குகள் யாவும் நட்சத்திரங்களுக்கும் தொடர்கின்றன.

சு.தியடோர் பாஸ்கரன், 2001

அறிமுகம் மற்றும் தமிழாக்கம் - டி.ஏ.பாரிசு. தியடோர் பாஸ்கரன் தமிழின் முன்னோடி சூழலியல் ஆளுமை. தமிழில் சூழலியலை முதன்மைப்படுத்தி எழுதியவர். சூழலியலுக்கான சொற்றொடர்களை உருவாக்கியவர். சினிமாவின் மீது பண்பாட்டு நோக்கில் ஆய்வுகள் செய்திருக்கிறார். நாடகங்களை பற்றியும் ஆய்வுகள் செய்திருக்கிறார். தன்னுடைய இளமை முதல் வரலாற்றில் ஆர்வமுடைய பாஸ்கரன், பிரபல ஆங்கில பத்திரிக்கைகளில் வரலாற்றுக் கட்டுரைகளை 1967 முதல் தொடர்ந்து எழுதி வருகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தொடர் செயல்பாடுகளின் மூலம் அவர் இத்துறைகளுக்கு பெரும் பங்களித்திருக்கிறார். பொதுவாக இந்த தளங்களில் எழுதப்படும் மிகை உணர்வுகள் தவிர்த்து தரவுகளின் அடிப்படையில் அழகியல் ரசனையுடன் எழுதியவர்.டி.ஏ.பாரி இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர். ஈரோட்டில் வசிக்கிறார். ஆங்கில சிறுகதைகளை, பிரதானமாக ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் கதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார்.