Saturday 8 June 2024

பௌத்த வினாவல் - 2, ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

பகுதி இரண்டு - தர்மம் அல்லது கோட்பாடு

தர்மச்சக்கரம், தாய்லாந்து, 8-ஆம் நூற்றாண்டு

 104. புத்தர் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

அகவிழிப்படைந்தவர் அல்லது முழுமையான ஞானத்தை அடைந்தவர்.


105. இவருக்கு முன்பும் வேறு புத்தர்கள் இருந்தனர் என நீங்கள் குறிப்பிட்டீர்களே?


ஆம். முடிவில்லா காரணகாரிய சுழற்சியில், அறியாமையால் மனிதகுலம் பெரும்துயரில் மூழ்கி அவதியுருகையில் அத்துயரிலிருந்து விடுபடும் ஞானத்தை மானுடத்திற்கு கற்பிக்க குறிபிட்ட கால இடைவேளைகளில் ஒரு புத்தர் பிறப்பெடுப்பார் என நாங்கள் நம்புகிறோம்.


106. ஒரு புத்தர் எவ்வாறு உருவாகிறார்?


ஒருவர் தான் வாழும் காலத்தில் பூமியிலுள்ள புத்தர்களில் ஒருவரைக் கண்டு, அவரின் சொற்களை கேட்டு, பின்தொடர்ந்து, எதிர்காலத்தில் தானும் அவ்வாறே வாழ முடிவெடுக்கிறார். அவர் அதற்கு தகுதி பெற்றபின்னர் அவரும் ஒரு புத்தராகி மனிதர்கள் பிறவிச்சுழலின் பாதையிலிருந்து விடுபடும் வழியைகாட்டுவார்.


107. அவர் எவ்வாறு முன்செல்வார்?


அந்த பிறவியிலும் அடுத்து எடுக்கவிருக்கும் எல்லா பிறவியிலும் அவர் தன் ஆசைகளை கட்டுக்குள் வைக்கவும், அனுபவங்களின் மூலம் ஞானம் பெறவும், ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ளும் செயலில் முழுமையாக ஈடுபடுவார். இப்படி, அவர் பல படிநிலைகளாக அறிவடைந்து, உன்னத குணம் பெற்று, அறத்தில் வலுவடைந்து, இறுதியாக, எண்ணற்ற மறுபிறப்புகளுக்கு பின் அவர் அனைத்தும் அறிந்த, அகவிழிபடைந்த, மனிதகுலத்தின் தலைசிறந்த ஆசிரியராக முழுமைபெறுவார்.


108. இவ்வாறு எண்ணற்ற பிறப்புகளில் பல படிநிலைகளில் அவர் வளர்ச்சியடையும் போது அவரை எப்பெயரில் அழைக்கவேண்டும்?


போதிசத் அல்லது போதிசத்வர் என அழைக்கவேண்டும். இளவரசர் சித்தார்த்தன் ஒரு போதிசதவர். அவர் கயாவில் அருள்நிறைந்த போதி மரத்தின் அடியில் அமர்ந்து புத்தனாக முழுமையடைவும்வரை அவர் ஒரு போதிசத்வரே.


109. பல பிறப்புகளில் அவர் போதிசத்வராக பிறவியெடுத்ததை குறித்த ஆவணங்கள் ஏதும் உள்ளதா?


போதிசத்வர்களின் அவதார கதைகளைக் கொண்ட நூலான ஜாதகக்கதையில் உள்ளது. இந்த நூலில் போதிச்சத்துவர்களின் பிறப்பைக் குறித்த பலநூறு கதைகள் உள்ளன.


110. இந்த கதைகள் என்ன கற்பிக்கின்றன?


ஒரு மனிதன் நீண்ட மறுபிறப்பு தொடர்ச்சி முழுவதும் ”தீமையை வென்று அறத்தை வளர்த்துக்கொள்வதை” நோக்கமாக எடுத்துச்செல்ல முடியும் என காட்டுகின்றன.


111. புத்தனாகும் முன்பு போதிசத்வர் எத்தனை மறுபிறப்புகளை கடக்கவேண்டும் என்ற நிலையான கணக்கு ஏதேனும் உண்டா?


நிச்சயமாக இல்லை. அது ஒருவரின் இயல்பான குணம், புத்தனாக முடிவெடுக்கும் போது அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி நிலை மற்றும் பல விஷயங்கள் அதை தீர்மானிக்கின்றன.


112. போதிசத்வர்களை வகைப்படுத்தமுடியுமா? முடியுமென்றால் அதை விளக்குங்கள்.


போதிசத்வர்கள், அதாவது வருங்கால புத்தர்கள் மூன்றாக வகைப்படுத்தப் படுகின்றனர்


113. சொல்லுங்கள், இந்த மூன்றுவகை போதிசத்வர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?


  1. பண்ணதிக்கா அல்லது உத்கதிதஜ்னா 

  2. சத்ததிக்கா அல்லது விபசித்தஜ்னா 

  3. விர்யதிகா அல்லது கினேயா 


பண்ணதிக்கா போதிசத்வர்கள் தூய அறிவின் பாதையில் பயணிப்பவர்கள். சத்ததிக்கர்கள் பக்தியின் பாதையில், விர்யதிக்கா ஆற்றல்மிக்க கர்மத்தின் பாதையில் பயணிப்பவர்கள். 


முதல் வகையினர் அறிவின் வழிகாட்டலில் அவசரமின்றி செயல்படுவர். இரண்டாம் வகையினர் முழுவதுமாக பக்தியின் வழியில் செயல்படுபவர்கள், இவர்கள் அறிவின் வழிக்காட்டுதலை பொருட்படுத்துவதில்லை. மூன்றாம் வகையினர் எது நல்லதோ அச்செயலை செய்ய தாமதிப்பதில்லை. இவர்கள் தங்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல், சரியாக செயலை கண்டு அதை செய்தாகவேண்டும் என்றால் செய்து முடிப்பர்.


114. நமது போதிசத்தவர் புத்தரான போது, மனிதர்கள் துன்பத்திற்கு காரணமாக எதை கண்டார்? அதை ஒற்றை வரியில் சொல்லுங்கள்.


அறியாமை (அவித்யா).


115. இதற்கான தீர்வு என்ன என்று சொல்லமுடியுமா?


அறியாமையை களைந்து சரியான அறிவை (பிரஜ்னா) பெறுவதே இதற்கான தீர்வு.


116. அறியாமை ஏன் துன்பத்திற்கு காரணமாகிறது?


ஏனென்றால் அறியாமை மதிப்பற்றவைகளுக்கு மதிப்பளிக்கச் செய்கிறது, வருந்தவேண்டாதவைகளுக்கு வருந்தச் செய்கிறது. மாயையை உண்மையென காணச் செய்கிறது. வெற்று பொருட்கள் மீது ஆசை கொண்டு வாழ்வை கடக்கச் செய்கிறது, உண்மையில் எது பெருமதிப்புடையதோ அதை புறக்கணிக்க வைக்கிறது.


117. மிகவும் மதிப்புள்ளது எது?


மனித இருப்பின் ரகசியத்தையும் அதன் இலக்கையும் முழுமையாக அறிவதே மதிப்புள்ளது. ஏனென்றால் இதன் மூலம் இந்த வாழ்வு மற்றும் அதிலுள்ள உறவுகள் பற்றிய சரியான மதிப்பீட்டை அடையமுடியும், அவைகளுக்கு உகந்ததல்லாதவற்றை மதிப்பிடாமல் இருக்க முடியும். இவ்வாறு வாழ்வதன் வழியாக நமக்கும் நம் சக மனிதர்களுக்கும் உயர்ந்த மகிழ்ச்சியை அளிக்கவும், துயரிலிருந்து விடுவிக்கவும் முடியும்.


118. எந்த ஒளி நம்முடைய அறியாமையும், நமது துன்பங்கள் அனைத்தையும் களையும்?


புத்தர் கூறிய ”நான்கு உயர்ந்த உண்மைகள்” பற்றிய அறிவு நம்மை இவற்றிலிருந்து விடுவிக்கும்.


109. புத்தர் கூறிய ”நான்கு உயர்ந்த உண்மைகள்” எவை?


  1. இருத்தலின் துக்கங்கள். விளைவாக மீண்டும் மீண்டும் சுழற்சியில் பிறந்து இறத்தல்.

  2. ஆசையே துக்கத்திற்கு காரணம். ஆசை என்றும் நிறைவுறாதது, புதிதுபுதிதாக வந்துகொண்டே இருப்பது, தன்னலமானது.

  3. ஆசையை அழித்தல் அல்லது அதிலிருந்து தன்னை விடுவித்தல்.

  4. ஆசையில் இருந்து விடுபடுவதற்கான வழிகள்.


120. துயரத்தை உண்டாக்கும் சில காரணிகளை சொல்லுங்கள்?


பிறப்பு, மூப்பு, நோய், இறப்பு, விரும்பிய பொருள்களை இழத்தல், வெறுக்கத்தக்க இயல்புடையவர்களுடன் இணைந்திருத்தல், அடையவே முடியாதவற்றுக்கு ஏங்குதல்.


121. இது ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேறுபடுமா?


ஆம். ஆனால் எல்லா மனிதரும் வெவ்வேறு விதங்களில் அக்காரணங்களால் துயருறுவர்.


122. நிறைவுறாத ஆசைகளாலும், அறியாமையால் உண்டாகும் ஏக்கங்களாலும் ஏற்படும் துன்பத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது?


வாழ்க்கை மற்றும் அதிலிருக்கும் சுகபோகங்கள் மீதான வேட்கையை வென்று அழிப்பதன் வழியாக இந்த துன்பத்திலிருந்து விடுபடலாம். இந்த வேட்கையே துன்பத்திற்கு காரணம். 


123. அதை எவ்வாறு வெல்வது?


புத்தர் கண்டடைந்து நமக்கு சுட்டிக்காட்டிய எண்வகை மார்க்கத்தை பின்பற்றுவதின் வழியாக வெல்லலாம். (இது பாலி மொழியில் ’அரியோ அட்தங்கிகோ மக்கோ’ என குறிப்பிடப்படுகிறது. பார்க்க கேள்வி எண்கள் 77, 78)


124. அந்த எண்வகை மார்க்கங்கள் என்னென்ன?


இந்த மார்க்கத்தின் எட்டு பிரிவுகள் அங்கங்கள் என அழைக்கப்படுகின்றன. அவை:

  1. சரியான நம்பிக்கை (கர்மம் அல்லது காரணகாரிய விதியை அடிப்படையாக கொண்டது)

  2. சரியான சிந்தனை

  3. சரியான பேச்சு

  4. சரியான செயல்

  5. சரியான வாழ்கைமுறை

  6. சரியான உழைப்பு/முயற்சி

  7. சரியான எண்ணம் மற்றும் சுயஒழுக்கம்

  8. சரியான தியானம் / சிந்தனையை சரியாக குவித்தல்


இந்த அங்கங்களை மனதில் நிறுத்திக்கொண்டு பின்பற்றுபவர் துக்கத்திலிருந்து விடுபடுவார், இறுதியாக மோட்சத்தை அடைவார்.


125. மோட்சத்திற்கு வேறு சிறந்த வார்த்தை உண்டா?


உண்டு. விடுதலை அல்லது வீடுபேறு.


126. விடுதலை, அது எதனிடமிருந்து?


உலகில் நம்முடைய இருப்பு மற்றும் பிறவி சுழல் ஆகியவற்றால் ஏற்படும் துன்பத்தில் இருந்து விடுதலை. இந்த துன்பங்கள் அனைத்துமே அறியாமை மற்றும் அசுத்த இச்சைகளாலும் ஆசைகளாலும் ஏற்படுபவை.


127. இந்த மோட்சம் அல்லது விடுதலையை எய்திய பின்னர் நாம் அடைவது என்ன?


நிர்வாணம்.


128. நிர்வாணம் என்றால் என்ன?


மாற்றங்கள் அணைந்தும் முழுவதுமாக ஒடுங்கிய நிலை. முழு ஓய்வு எய்திய நிலை. ஆசைகளும் மாயைகளும் துன்பங்களும் அற்றநிலை. மனிதனாக பிறப்பெடுக்கக்கூடிய அனைத்து சாத்தியங்களும் முடிவுற்ற நிலை. நிர்வாணம் அடைவதற்கு முன் மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறான். நிர்வாண நிலைக்குப்பின் அவன் பிறப்பெடுப்பதில்லை.


129. நிர்வாணத்தை பாலி மொழியில் வேறு எந்தெந்த சொற்களால் வரையறுத்துள்ளனர்? மேலும், நிர்வாணம் என்ற சொல்மீது நடந்த விவாதங்களை எங்கே காணமுடியும்?


சைல்டர்ஸ் (R.C.Childers) உருவாக்கிய புகழ்பெற்ற பாலி மொழி அகராதியில் இவற்றை காணலாம். (ஆனால் சைல்டர்ஸ் நிர்வாணத்தை பெசிமிஸ்டிக் (அவநம்பிக்கை) பார்வையில் அணுகுகிறார். நிர்வாணத்தை முற்றழிவு, நிர்மூலமாக்கம் என பொருள்கொள்கிறார். பிற்கால அறிஞர்கள் இவரை நிராகரிக்கின்றனர்.)


130. ஆனால் சிலர் நிர்வாணம் என்பதை விண்ணுலகம் அல்லது சொர்க்கலோகம் என கற்பனை செய்கின்றனர். பௌத்தம் அதை கூறுகிறதா?


இல்லை. புத்தரின் சீடர் குடதந்தா (Kutadanta) ”நிர்வாணம் எங்கே உள்ளது” என கேட்டதற்கு புத்தர் “அஷ்டாங்க மார்க்க விதிகள் எங்கே கடைபிடிக்கப்படுகிறதோ அங்கேயுள்ளது” என பதிலளித்தார்.


131. நாம் மீண்டும் பிறவியெடுப்பதற்கு எது காரணம்?


பொருள்வய தளத்தில் இருக்கும் விஷயங்கள் மீது கொள்ளும் நிறைவேறாத தன்னல ஆசை (சம்ஸ்கிருதத்தில் இது ’திர்ஷ்ணா’ என்றும், பாலியில் ’தன்ஹா’ என்றும் குறிப்பிடப்படுகிறது). புறவயமான நம்முடைய இருப்பு (பாவ) மீது நாம் கொள்ளும் தீராத தாகம் என்பது ஒரு விசை. அது அதற்கேயுரிய படைப்பு சக்தியை கொண்டுள்ளது. அது வலுவானது. ஆகவே அது உயிர்களை உலகியலுக்குள் இழுத்துக்கொண்டே இருக்கிறது.


132. நம்முடைய நிறைவுறா ஆசைகளின் தாக்கம் நம் மறுபிறப்பில் உள்ளதா?


ஆம். மேலும் நம்முடைய நற்செயல் மற்றும் தீயசெயல்களின் தாக்கமும் அதில் இருக்கும்.


133. நமது நற்செயல்களும் தீயசெயல்களும் நாம் எவ்வாறு என்னவாக மறுபிறப்பெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்குமா?


ஆம் தீர்மானிக்கும். நற்செயல்கள் சிறந்த மகிழ்ச்சியான பிறப்பிற்கும், தீயசெயல்கள் இழிவான துன்பமான பிறப்பிற்கும் வழிவகுக்கும் என்பதுதான் விதிமுறை.


134. பௌத்த கோட்பாட்டின் முதன்மையான தூண் என்பது ஒவ்வொரு காரியமும் அதற்கே உரித்தான ஒரு காரணத்தால் விளைகிறது என்னும் கருதுகோள். சரிதானே?


ஆமாம். ஒவ்வொரு காரியமும் அதற்கான சமீபத்திய காரணம் அல்லது பலகாலம் முன்புள்ள காரணத்தின் விளைவே.


135. இந்த காரணகாரியத்தை எப்படி அழைப்பது?


தனிநபர்களை பொருத்தவரை இது கர்மம், அதாவது செயல். நம்முடைய செயல்களே நாம் அனுபவிக்கும் இன்பதையும் துன்பத்தையும் நமக்கு அளிக்கின்றன.


136. ஒரு தீய மனிதன் தன்னுடைய கர்மவினைகளின் விளைவுகளிலிருந்து தப்பிக்கமுடியுமா?


தம்மபதம் இவ்வாறு கூறுகிறது: “ஒருவன் செய்த தீயசெயல்களால் அவனுக்கு வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்கும் இடம் இந்த மண்ணிலும், விண்ணிலும், கடலிலும், ஏன் மலை முகடுகளிலும் இல்லை”


137. ஒரு நல்ல மனிதன் தப்பிக்க முடியுமா?


நற்செயல்களின் விளைவாக ஒருவர் இடம், உடல், சூழல் மற்றும் கற்றலுக்கான நல்ல அனுகூலங்களை தனது அடுத்த படிநிலையில் பெறுவார். இவை அவரின் தீய கர்மங்கள் நீங்கவும் உயர்நிலை எய்தவும் உதவிசெய்யும்.


138. அந்த அனுகூலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன என்ன?


கதி சம்பத்தி (நல்ல இடத்திற்கான அனுகூலம்), உபாதி சம்பத்தி (நல்ல உடல்), கலால சம்பத்தி (நல்ல காலச்சூழல்) மற்றும் பயோக சம்பத்தி (நல்ல ஆன்மீக சூழல்).


139. இது பகுத்தறிவுடனும் நவீன அறிவியல் அறிவுடனும் ஒத்துப்போகிறதா அல்லது முரண்படுகிறதா?


துல்லியமாக ஒத்துப்போகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.


140. அனைத்து மனிதர்களாலும் புத்தர்களாக முடியுமா?


எல்லா மனிதர்களுக்கும் அவர்களது இயல்பில் புத்தனாகும் தன்மை இல்லை. ஒரு புத்தன் நீண்ட கால இடைவெளிகளில் பல படிநிலைகளாக மட்டுமே வளர்கிறார். குறிப்பாக மானுடம் முழுமையாக நிர்வாணத்திற்கான பாதையை மறந்து ஒரு ஆசிரியனை வேண்டிஇருக்கையில் உருவாகிறார். ஆனால் எல்லா உயிரும் நிர்வாணத்தை அடையலாம், அறியாமையை களைந்து ஞானத்தை அடைவதன் வழியாக.


141. மனிதன் மீண்டும் நம்முடைய உலகில்தான் மறுபிறப்பெடுப்பான் என்று பௌத்தம் கூறுகிறதா?


பொதுவான விதிமுறை இதுதான், அவர் தன் எல்லைகளை மீறிய வளர்ச்சிநிலையை அடையாதவரை. ஆனால் உயிர் வாழத்தகுந்த உலகங்கள் எண்ணற்றவை. ஒருவர் தன்னுடைய அடுத்த பிறப்பை எந்த உலகத்தில் எடுப்பான் என்பதையும், அது எவ்வாறு அமையும் என்பதையும் அவரது முந்தைய பிறப்பின் நல்ல மற்றும் தீய செயல்கள்தான் தீர்மானிக்கின்றன. வேறு வகையில் சொல்வதென்றால், அறிவியல் மொழியில் அவனுடைய ஈர்ப்பால் அது தீர்மானிக்கப்படுகிறது எனலாம். அல்லது எங்களது, அதாவது பௌத்தர்களது வார்த்தைகளில் சொல்வதென்றால் கர்மத்தின் படி தீர்மானிக்கப்படுகிறது எனலாம். 


142. நம்முடைய பூமியை காட்டிலும் நன்கு வளர்ச்சியடைந்த அல்லது வளர்ச்சி குறைந்த உலகங்கள் உண்டா?


பௌத்தம் உயர்ந்த மற்றும் தாழ்ந்த பலவகையான உலகங்கள் கொண்ட முழுமையான அமைப்பை பற்றி கூறுகிறது. ஒரு உலகத்தில் வசிப்பவர்களின் வளர்ச்சிநிலை ஒத்ததன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறுகிறது.


143. புத்தர் தனது மொத்த கோட்பாட்டையும் ஒரே பாடலில் ஒன்றாக சேர்த்தாரல்லவா?


ஆம்.


144. அதை கூறுங்கள்?


அது தம்மபதம் 183-ஆம் பாடல்:


ஸப்ப பாபஸ்ஸ அகாரணம்

குஸலஸ்ஸ உபஸம்பதா

ஸசித்த பரியோதபணம்

ஏதம் புத்திம் ஸாஸனம்


அனைத்துவித பாவகாரியங்களிலில் இருந்தும் விலகுதல்,

நன்மைகளை மட்டுமே செய்தல்,

மனதை தூய்மையாக்குதல்:

இதுவே எப்போதும் புத்தர்களின் அறிவுறுத்தல்


145. இந்த பாடலின் முதல் மூன்று வரிகளில் மிக முக்கியமான பண்புகள் உள்ளதல்லவா?


ஆம். முதல் வரி ’வினய பிடகா’வின் முழு மெய்ப்பொருளையும், இரண்டாவது வரி ’சுத்த பிடகா’, மூன்றாவது ’அபிதம்மபிடகா’வின் மெய்ப்பொருளையும் அடக்கியுள்ளது. இந்த பாடல் வெறும் எட்டு பாலி வார்த்தைகளால் ஆனது எனினும் பனித்துளிக்குள் நட்சத்திரங்கள் பிரதிபலிப்பதுபோல புத்த தர்மத்தின் முழு மெய்ப்பொருளும் இதில் ஒளிர்கிறது.


146. இத்தகைய போதனைகள் பௌதத்தை செயலூக்கம் கொண்ட மதமாக காட்டுகிறதா? அல்லது செயலின்மை கொண்ட மதமாக காட்டுகிறதா?


“பாவச்செயல்களை தவிர்த்தல்” செயலின்மை எனலாம். ஆனால் “நெறிகளை கடைபிடித்தல்” மற்றும் ”தன்னுடைய மனத்தை தானே சுத்திகரித்தல்” ஆகியவை செயலூக்கம் கொண்ட பண்புகள். தீயசெயல்கள் இல்லாமல் இருப்பதை மட்டும் புத்தர் கற்பிக்கவில்லை, நேர்மறையான நல்லியல்புகளை கொண்டிருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.


147. ஒரு பௌத்தர் பின்பற்றவேண்டிய மூன்று சரணங்கள்* என்ன?


அவை திரிசரணத்தில் வருகின்றன. திரிரத்திணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன: 


புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி


நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்

நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்

நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்


இவை மூன்றும்தான் உண்மையில் ”புத்த தர்மம்”.


148. இந்த சூத்திரத்தை ஒருவன் மீண்டும் மீண்டும் ஓதுவதன் மூலம் என்ன செய்கிறான்?


இதை ஓதுவதன் மூலம் அவன் புத்தரை எல்லாம் அறிந்த ஆசிரியனாக, நண்பனாக, முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறான். தர்மமானது சாராம்சமான நித்யமான நீதி மற்றும் சத்தியத்தை கொண்டது என்றும், சரியான மனஅமைதியை இப்புவியில் எய்துவதற்கான பாதையை காட்டுவது என்றும் உணர்ந்துகொள்கிறான். சங்கமானது புத்தர் போதித்த தம்மத்தை கற்பிப்பது என்றும், அதன் முன்னுதாரணம் என்றும் கொள்கிறான்.


149. ஆனால் சங்கத்தின் உறுப்பினர்களில் சிலர் அறிவிலும் அறநெறியிலும் தகுதி குறைந்தவர்களாக இருப்பார்கள் அல்லவா?


ஆம். ஆனால் புத்தரின் கற்பித்ததன்படி, ‘யார் கவனமாக தர்ம விதிகளை பின்பற்றியும், மனதை ஒழுங்குபடுத்தியும், புனிதமான அஷ்டாங்க மார்க்கத்தின் ஏதேனும் ஒரு படிநிலையில் முழுமை பெற்றும் அல்லது முழுமைபெற தீவிரமாக முயற்சிக்கிறார்களோ அவர்கள் மட்டுமே புத்தருடைய சங்கத்தின் உறுப்பினர்கள். திரிசரணத்தில் வரும் ‘சங்கம்’ என்பதற்கு வெளிப்படையாகவே ’அத்தா அறிய புகல’ என்றே பொருளுள்ளது. அதாவது, அஷ்டாங்க மார்கத்தில் ஒன்றை கற்று முழுமைபெற்ற உன்னதர்கள். காவியுடை அணிவதாலும், சமய வழிபாடுகளில் ஈடுபடுவதாலும் மட்டும் ஒருவர் தூய்மையோ, ஞானியோ அல்லது மரியாதைக்குரியவரோ ஆவதில்லை.


150. இதுபோன்ற தகுதியற்ற பிக்குகளை ஒரு உண்மையான பௌத்தன் வழிகாட்டிகளாக ஏற்கக்கூடாதுதானே?


நிச்சயமாக கூடாது.


151. பௌத்தத்தை பின்பற்றும் குடியானவர்கள் பொதுவாக கடைப்பிடிக்கப்படவேண்டிய ஐந்து நெறிகள் அல்லது பஞ்சசீலம் என்பது என்ன?


அவை பின்வரும் சூத்திரத்தில் உள்ளன. புத்த விகாரங்களில் பொதுவெளியில் ஓதப்படும்


  1. எந்த உயிரையும் கொல்லாமலும், தீங்கு செய்யாமலும் இருத்தல்.

  2. பிறர் பொருளைக் களவாடாது இருத்தல்.

  3. முறை தவறிய காமஉறவை தவிர்த்தல்.

  4. பொய் பேசாது இருத்தல்.

  5. மது வகைகளை உண்ணாது இருத்தல்.


(குடியானவர்கள் ஐந்து நெறிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. அவர்கள் முறைதவறிய காம உறவை தவிர்க்க வேண்டும். மண உறவை அல்ல. ஆனால் பிக்குகளுக்கு மண உறவு கண்டிப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு குடியானவன் மொத்தமாக உள்ள பத்து நெறிகளில் எட்டு நெறிகளை குறிப்பிட்ட காலம் மட்டும் பின்பற்றுகிறான் என்றால், அந்த குறிப்பிட்ட காலத்தில் அவனுக்கும் மண உறவு தவிர்க்கப்பட்டுள்ளது. ஐந்து நெறிகள் புத்தரால் போதிக்கப்பட்டவை. அது அனைவருக்குமானது. ஐந்து அல்லது எட்டு நெறிகளை பௌத்தராக இல்லாதவர்களும் பின்பற்றலாம். அது அவர்களுக்கு பலனளிக்கும். திரிசரணத்தை பின்பற்றும் போதுதான் ஒருவர் பௌத்தர் ஆகிறார்.) 


152. இந்த பஞ்சசீலங்கள் அதை படிக்கும் அறிவார்ந்த நபருக்கு உடனே உணர்வது என்ன?

இச்சீலங்களை உறுதியாக பின்பற்றும் ஒருவன் மனித துயர்களின் ஊற்றுமுகத்திலிருந்து விடுபடுவான் என. வரலாற்றை படிக்கும்போது துயரங்கள் ஒவ்வொன்றும் இவற்றில் ஏதோ ஒன்றில் முளைத்ததாகத்தான் இருக்கும் என்பதை அறியலாம்.

153. எந்த சீலங்களில் புத்தரின் தொலைநோக்கு ஞானம் மிக எளிமையாக கூறப்பட்டுள்ளது?

ஒன்று, மூன்று மற்றும் ஐந்தாவது நெறிகள். கொலைசெய்தல், காமநாட்டம், போதைபழக்கம். இந்த மூன்றால்தான் தொன்னூற்றைந்து சதவிகித துயரங்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன.

154. இந்த நெறிகளை கடைபிடிப்பதால் ஒரு மனிதன் அடையும் பலன்கள் என்னென்ன?

ஒருவன் இந்த நெறிகளை பின்பற்றும் கால அளவை பொருத்தும், விதிகளின் எண்ணிக்கை பொருத்தும், குறைந்த அளவிலோ அல்லது கூடிய அளவிலோ நன்மையை அவன் அடைவான் என கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, அவன் ஒரு நெறியை முறையாக பின்பற்றி, மற்ற நான்கையும் முறையாக பின்பற்றாத போது அவனுக்கு அந்த ஒரு விதிக்கான நன்மை மட்டுமே கிடைக்கும். அவன் நீண்ட காலம் இதை கடைபிடித்தால் மேலும் நன்மைகள் கிடைக்கும். எல்லா நெறிகளையும் முறையாக பின்பற்றும் ஒருவனுக்கு உயர்ந்த மகிழ்ச்சியான இருத்தல் அமைந்துவிடுகிறது.

155. குடியானவர்கள் தானே முன்வந்து கடைப்பிடிக்கக்கூடிய நன்மை தரும் நெறிகள் வேறு உண்டா?

அஷ்டாங்க சீலம் (எண்வகை நெறிகள்). இது மேலே குறிப்பிட்ட ஐந்து நெறிகளுடன் மேலும் மூன்று நெறிகளை சேர்த்துக் கொண்டது:

  1. முறையற்ற காலங்களில் உணவு உண்ணாதிருத்தல்.

  2. பூ, வாசனைபொருட்கள், அலங்காரங்கள், நகைகள் மற்றும் நடனம், பாடல், இசை ஆகியவற்றை தவிர்த்தல்.

  3. பெரிய உயர்ந்த மென்படுக்கையை பயன்படுத்தி உறங்குவதை தவிர்த்தல்.


இங்கே சொல்லப்பட்டுள்ள மென்இருக்கைகளும், மென்படுக்கைகளும் உலகியல் ஈடுபாடு கொண்டவர்களால் சுகத்திற்காகவும், புலன் இன்பதிற்காகவும் பயன்படுத்தப்படுவது. துறவிகள் இவைகளை தவிர்க்க வேண்டும்.


156. ’உண்மையான மதிப்பு என்றால் என்ன’ என கேட்டால் ஒரு பௌத்தர் என்ன விளக்கம் தருவார்?


உண்மையான மதிப்பு என்பது வெறும் புறசெயல்களால் வருவதல்ல. ஒரு செயலை தூண்டுவதற்கு காரணமாக உள்ளார்ந்த நோக்கத்தை பொறுத்தே உண்மையான மதிப்பு இருக்கும்.


157. ஒரு உதாரணம் கூறமுடியுமா?


ஒரு செல்வந்தர் லட்சங்கள் செலவுசெய்து மடாலயங்கள், விகாரங்கள், புத்தருக்கு சிலைகள் எழுப்புகிறார், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடத்துகிறார், துறவிகளுக்கு உணவு மற்றும் ஏழைகளுக்கு பிச்சைகள் அளிக்கிறார், அல்லது மரம் நடுகிறார், குளம் வெட்டுகிறார், அல்லது வழிபோக்கர்களுக்கு விடுதி அமைக்கிறார். இவ்வாறு பல செயல்களை அவர் புகழ்தேடவோ, தன்னை முன்னிறுத்தவோ, அல்லது சுயநல தேவைகளுக்காகவோ செய்தால் அவருக்கு குறைந்த மதிப்பே கிடைக்கும். ஆனால் ஒருவர் அன்பான நோக்கத்தோடு, பிறன் நலனுக்காக மிகச்சில செயல்கள் செய்தாலும் அவருக்கு சிறந்த மதிப்பு கிடைக்கும். தீய நோக்கத்துடன் செய்யும் நற்காரியங்கள் பிறருக்கு பலன்கொடுக்கும், செய்பவருக்கல்ல. வேறொருவர் செய்யும் நற்காரியங்களை அங்கீகரிக்கும் ஒருவருக்கும் மதிப்பு பகிரப்படும், அவரின் உணர்வு உண்மையெனும் பட்சத்தில். தீய செயல்களுக்கும் இதே விதியே பொருந்தும்.


158. எது எல்லா செயல்களைவிடவும் சிறந்த நன்மை அளிக்கும் செயல் என கூறப்படுகிறது?


’தர்மத்தை உலகெங்கும் பரப்புதலே’ வேறெந்த நற்செயலையும் விட சிறந்தது என்கிறது தம்மபதம்.


159. எந்த புத்தகங்கள் புத்தருடைய போதனைகளின் மிகசிறந்த ஞானத்தை கொண்டுள்ளன?


“திரிபிடகம்” என்று சொல்லப்படும் மூன்று தொகைகள் கொண்ட நூல். 


160. அந்த மூன்று பிடகங்கள் அல்லது தொகைகளின் பெயர்கள் என்ன?


வினயபிடகம், சுத்தபிடகம், அபிதம்மபிடகம்.


161. இப்புத்தகங்களின் உள்ளடக்கம் என்ன?


வினயப்பிடகம் சங்கத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கவிதிகள் மற்றும் நெறிகளை கொண்டது. சுத்தப்பிடகம் எல்லோருக்கும் ஏற்புடைய நீதிநெறி போதனைகளை கொண்டுள்ளது. அபிதம்மபிடகம் புத்தரின் உளவியல் சார்ந்த கற்பித்தலை விளக்குகிறது, மேலும் இயற்கையின் இயக்கத்தை விளக்கும் இருபத்தினான்கு ஆழ்நிலை விதிகள் உள்ளன.


162. இந்த புத்தகங்கள் தெய்வீக அம்சத்தால் வெளிபடுத்தப்பட்டவை என பௌத்தர்கள் கருதுகின்றனரா?


இல்லை. இவை மிகச்சிறந்த அனைத்து நெறிகளையும் கொண்டவை என மிகுந்தமதிப்புடன் அந்நூல்களை எடுத்துக்கொள்கின்றனர். இதை அறிவதன்மூலம் சம்ஸார (உலகவியல், பிறவிச்சுழல்) வலையின் சிடுக்குகளிலிருந்து மீள முடியும் என எண்ணுகின்றனர்.


163. பிடகங்கள் மூன்றும் சேர்ந்த முழுதொகுப்பில் மொத்தம் எத்தனை வார்த்தைகள் உள்ளன?


ரைஸ் டேவிட்ஸின் (Rhys Davids) கணக்குபடி 1,752,800 வார்த்தைகள்.


164. பிடகங்கள் எப்போது முதன்முதலாக எழுத்துவடிவம் பெற்றன?


பொ.மு.88-76 அல்லது புத்தர் பரிநிர்வாணம் அடைந்து முன்னூற்றி முப்பது ஆண்டுக்கு பின் சிங்கள அரசன் வட்டகமினி (wattagamini) தலைமையில் எழுத்துவடிவம் பெற்றிருக்கலாம்.


165. புத்தரின் அனைத்து போதனைகளையும் நாம் பதிவுசெய்துவிட்டோமா?


அநேகமாக இல்லை. அப்படி பதிவாகி இருந்தால் அது வினோதம்தான். புத்தரின் நாற்பத்தைந்து ஆண்டு கால பொது வாழ்வில் அவர் பல நூற்றுக்கணக்கான போதனையுரைகளை வழங்கியிருப்பார். ஆனால் அவைகளில் பல போர்களாலும், காழ்ப்புகளாலும் தொலைந்துள்ளன, பல தேசங்களுக்கு சிதறியுள்ளன, பல சிதைக்கப்பட்டும் இருக்கும். புத்த தர்மத்திற்கு எதிரானவர்கள் தென்னை மரம் உயரம் கொண்ட நம்முடைய புத்தக அடுக்குகளை தீயிட்டு அழித்தனர் என்றும் வரலாறு சொல்கிறது.


166. நாம் செய்யும் பாவங்களால் விளையும் பாதிப்புகளில் இருந்து தன்னுடைய மகிமையினால் நம்மை மீட்பவர் புத்தர் என பௌத்தர்கள் எண்ணுகின்றனரா?


ஒருபோதும் இல்லை. மனிதன் தன்னைத்தானே விடுவித்துகொள்ள வேண்டும். அதை செய்யாதவரை அவன் மீண்டும் மீண்டும் பிறவியெடுத்துக்கொண்டே இருப்பான் - அறியாமைக்கு இலக்கானவனாக, இச்சைகளுக்கு அடிமையாக.


167. என்ன! பிறகு புத்தர் நமக்கும் பிற எல்லா உயிர்களுக்கும் என்னவாக உள்ளார்?


அனைத்தையும் காண்பவர், எல்லாம் அறிந்த ஞானி, விடுதலைக்கான பாதையை கண்டறிந்து நமக்கு சுட்டிகாட்டியவர், மனித துன்பத்திற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியையும் தந்தவர். துன்பத்திலிருந்து தப்பிப்பதற்கான சரியான வழியை சுட்டிக்காட்டி அதில் நம் துணையாக வருபவர். விழிஇழந்த மனிதர்களாகிய நமக்கு சீறிப்பாய்ந்து சுழன்றோடும் ஆற்றின் மீதுள்ள குறுகிய பாலத்தை கடக்க உதவும் வழிகாட்டியும் ஆனவர்.


168. புத்தருடைய கோட்பாட்டின் முழு ஆன்மாவையும் ஒரே வார்த்தையில் பிரதிநிதித்துவம் செய்ய முயற்சித்தால், எந்த வார்த்தையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?


தர்மம்.


அடிக்குறிப்பு:


சரணம் - விஜேசிங்க முதலியார் (Wijesinha Mudaliar) எனக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “சரணம் என்பதை ஆங்கிலத்தில் Refuge என ஐரோப்பிய பாலி அறிஞர்கள் மொழிபெயர்த்தனர், இங்குள்ள பாலி அறிஞர்கள் அதை ஒத்துக்கொண்டனர். இது பிழையானது. பாலி மொழியின் சொற்பிறப்பியல் (etymology) படியும், பௌத்த தத்துவத்தின் படியும் Refuge என்ற மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. Refuge என்பதற்கு திரும்பி வருதல், அடைக்கலமான இடத்திற்கு வருதல் என்று பொருள். உண்மையான பௌத்த கொள்கைக்களுக்கு இது பொருந்தாது. பௌத்தம் ஒவ்வொரு மனிதனும் தனக்கான விடுதலைக்காக அவன்தான் முயற்சிக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்பதை வழியுறுத்துகிறது. சரணம் என்பதன் வேர்ச்சொல் ’ஸ்ர்’ என்ற சம்ஸ்கிருத சொல், பாலியில் ’ஸர’. இதற்கு அர்த்தம் ’செல்’, ’முன்னகர்’. சுரிணம் என்ற சொல் ’வழிகாட்டுனர் ஒருவருடன் முன்னகர்தலை’ குறிக்கிறது. ’புத்தம் சரணம் கச்சாமி’ வரியை நான் இவ்வாறு மொழிபெயர்க்கிறேன்: ’சரணம் - எனது வழிகாட்டுனர், புத்தம் - புத்தருடன், கச்சாமி - நான் செல்கிறேன்’. ஆகவே திரிசரணத்திற்கு ‘Three Refuge’ என்ற மொழிபெயர்ப்பு தவறான புரிதலை அளிக்கிறது. மேலும் இது பௌத்தர்கள் உண்மையல்லாதவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் மற்றும் இல்லாதவற்றில் அடைக்கலம் புகுகின்றனர் என பௌத்தத்தின் மறுத்தரப்புகள் சொல்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. Refuge என்ற சொல் நிர்வாணத்திற்கு பொருந்தும், நிர்வாணத்தின் ஒரு இணைச்சொல் சரணம். தலைமை பிக்குவான சுமங்கலா சொல்லியது இப்போது நினைவுக்கு வருகிறது. ஸர என்ற பாலி வேர்ச்சொல்லுக்கு அழித்தல் என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. அப்படியென்றால், ’புத்தம் சரணம் கச்சாமி’ வரிக்கு இவ்வாறு பொருள்கொள்ளலாம்: ”நான் புத்தரிடம், தம்மத்திடம், சங்கத்திடம் செல்கிறேன், என் பயங்களை அழிப்பவை அவை. முதலாவது அவரின் போதனை, இரண்டாவது அவர் அடைந்த மெய்மை, மூன்றாவது அந்த மெய்மையின் பல சான்றுகளும் அதற்கான வழிமுறைகளும் அடங்கியது”.


ஹென்றி ஸ்டீல் ஆல்காட்


ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி

விஷ்ணுகுமார்

ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார்.  இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார்.

இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல  மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott

https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott

https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india

Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும்  அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு  பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.