Saturday 8 June 2024

சாக்கியார் கூத்து: ஓர் அறிமுகம், அழகிய மணவாளன்

சாக்கியார் கூத்து

கேரளத்தில் ”சாக்கியார்க்கு எந்தும் ஆவாம் (சாக்கியார் எதையும் செய்யலாம்)” என்ற பழமொழி உண்டு. அந்த பழமொழியில் சுட்டப்படும் ‘சாக்கியார்’ என்பவர் ’சாக்கியார்கூத்து’ என்ற மரபான கதைசொல்லல் வடிவத்தை நிகழ்த்தக்கூடியவர். அந்த கதைசொல்லலில் புராண இதிகாச கதாப்பாத்திரங்களை பகடி செய்யவும், அது வழியாக சமகால சமூகத்தையும், சமகால மனிதர்களையும் பகடி செய்யவும், விமர்சிக்கவும் அவருக்கு முழு சுதந்தரமும் உண்டு என்பதைத்தான் அந்த பழமொழி சுட்டுகிறது. காலப்போக்கில் சாக்கியார்கூத்துடன் எந்த தொடர்பும் இல்லாத, ஆனால் கூர்மையான, எந்த தயக்கமும் இல்லாத விமர்சனத்தன்மையும், அதை வெளிப்படுத்தும் ஆற்றலும், அங்கத நோக்கும்கொண்ட (சிலசமயம் எல்லைமீறும்) தனிநபர்களை ’சாக்கியார்’ என்று சொல்ல ஆரம்பித்தனர்.

புராண இதிகாசங்களில் உள்ள சில கதைச்சந்தர்ப்பங்களை ’சாக்கியார்’ தன் கலை சார்ந்த நுண்ணுணர்வுடன், மேதைமையுடன், தன் கற்பனையுடன் விரிவாக சொல்வதுதான் சாக்கியார்கூத்து. அந்த கதைசொல்லலில் சமகால சமூக விமர்சனமும், தனிநபர் விமர்சனமும் உண்டு. ஆனால் அந்த விமர்சனம் நேரடியானது அல்ல. புராண கதாப்பாத்திரங்களை விமர்சிப்பதுபோல சமகால சமூகத்தின், தனிநபர்களின் நெறிப்பிழைகளும் அபத்தங்களும் சுட்டிக்காட்டப்படும். புராண கதாப்பாத்திரம் வழியாக சாக்கியார் சமகாலத்தில் யாரை விமர்சிக்கிறார், புராணக்கதைச்சந்தர்ப்பம் வழியாக சமகால சமூகத்தின் எந்த போக்கை கண்டிக்கிறார் என்பது சாக்கியார் கூத்தை கேட்க வருபவர்களுக்கு புரியும். உதாரணமாக, அம்மன்னூர் குடும்பத்தை சேர்ந்த சாச்சு சாக்கியார் (1881-1965) திரிச்சூர் வடக்கும்நாதன் கோவிலில் சாக்கியார் கூத்தை வருடாவருடம் நிகழ்த்தக்கூடியவர். ஒருமுறை அவரின் சாக்கியார்கூத்தை கேட்க எரணாகுளம் மாவட்ட நீதிபதி வந்திருந்தார். நீதிமன்றத்தில் சில சமயம் அவர் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவதுண்டு. அன்று சாச்சு சாக்கியார் சாக்கியார்கூத்தில் தட்சயாகம் கதையை சொல்லிக்கொண்டிருந்தார். தட்சனின் மகள் சதி சிவபக்தையாகவே வளர்ந்து சிவனை காதலிக்க தொடங்குவாள். தட்சனுக்கு சிவனை பிடிக்காது. அவளிடம் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள சொன்ன தட்சனிடம் அவள் சிவனின் தனிச்சிறப்புகளை சொல்வதாக சாக்கியார் விவரிக்க தொடங்கினார். பார்வையாளர்களுக்கு நடுவே இருந்த நீதிபதி வந்திருப்பதை சாச்சு சாக்கியார் கவனித்தார். தன் கதையில் சதி தட்சனிடம் சொல்வதுபோல சாச்சு சாக்கியார் “நீங்கள் யார் சொல்வதையும் செவிகூர்வதில்லை. ஆனால் தீர்ப்புகள் சொல்கிறீர்கள். என் விஷயத்தில் அப்படி செய்யவேண்டாம், நான் சிவனைப்பற்றி சொல்வதை நீங்கள் முழுமையாக கேட்க வேண்டும். கேட்காமல் தூங்கிவிட்டு உங்கள் தீர்ப்பை சொன்னால் அது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நீங்கள் எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?” என்றார். பார்வையாளர்களுக்கு யாரை சொல்கிறார் என்று புரிந்து சிரிக்க ஆரம்பித்தனர். நீதிபதியும் தலைகுனிந்தார். அவர் பின்னர் நீதிமன்றத்தில் தூங்குவதை நிறுத்திவிட்டார் என்ற சொல்லப்படுகிறது.

’சாக்கியார்கூத்து’ இந்த சொல்லில் கூத்து என்ற சொல் தமிழ் வாசகர்களை குழப்பக்கூடியது. நாம் நம் தெருக்கூத்துடன் தொடர்புபடுத்தி சாக்கியார்கூத்து ஒரு நிகழ்த்துகலை என்று கற்பனை செய்வோம். சாக்கியார் கூத்தில் எந்த அபிநயமும் நிகழ்த்துகலை அம்சங்களும் இல்லை. அது தூய கதைசொல்லல் வடிவம். இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தும்வகையில் கேரளத்தில் நடனம் சார்ந்த, அபிநயத்தை அடிப்படையாகக்கொண்ட நிகழ்த்துகலைகளுக்கும் ’கூத்து’ என்ற பெயர் உண்டு. உதாரணம் நங்கையார்கூத்து நம்பியார் சாதிப்பெண்கள் நிகழ்த்தும் அபிநயவடிவம். அதனால் “சாக்கியார்கூத்து” என்பது சரியான பெயர் இல்லை அதை “சாக்கியார் கதைசொல்லல்” என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று பண்பாட்டாய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.


சாக்கியார் கூத்தின் பிரதானமான ஃபாவங்கள் பகடியும், விமர்சனத்தன்மையும் அறிவுறுத்தும்தன்மையும்தான். சாக்கியார்கூத்தின் கதைசொல்லியான சாக்கியார் ஒரு  satirist. நமக்கு தமிழகத்தில் புராண-இதிகாசங்களை கதைகளாக சொல்லும் கதாகாலட்சேப மரபு உண்டு. அது பக்தியை பிரதானமான உணர்வுநிலையாகக்கொண்டது.  அதுபோல இந்தியாவின் பிறபகுதிகளிலும் ஹரிகதை போல பக்தியை பிரதான உணர்வுநிலையாக கொண்ட நிறைய கதைவடிவங்கள் உள்ளன. சாக்கியார் கூத்து என்ற கதைவடிவம் இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டது. சாக்கியார் கூத்தும் புராண இதிகாச கதைசொல்லல் வடிவம்தான் என்றாலும் அதன் உணர்வுநிலை பக்தி மட்டுமல்ல; அங்கதமும், அறிவுறுத்துதலும், சமகால சமூக விமர்சனமும் கூடவே பக்தியும் இணைந்தது.  அதுதான் சாக்கியார்கூத்தின் தனித்தன்மை.

அம்பலவாசி சாதிப்பிரிவில் சாக்கியார் சாதியை சேர்ந்தவர்தான் சாக்கியார்கூத்தின்  கதைசொல்லியாக இருக்கமுடியும். சாக்கியாருக்கு மிக எளிமையான ஒப்பனை உண்டு. சாக்கியார் கூத்து தொடங்கும்போதும் முடிந்தவுடனும் பின்னணியில் மிழா இசைக்கப்படும்.

மாணி மாதவ சாக்கியார்

கேரளத்தில் சேரமான் பெருமாள் அரசவழியில் வந்த குலசேகர வர்மன் (கி.பி.844-1124)  என்ற அரசர் தபதி சம்வரணம், சுபத்ரா தனஞ்ஜயம் என்ற இரண்டு சம்ஸ்கிருத நாடகங்களை எழுதியவர். அவரும் அவரது அவைப்புலவர் தோலன் நம்பூதிரியும் கூடியாட்டத்தில் இரண்டு முக்கியமான  மாற்றங்களை கொண்டுவந்தனர். கூடியாட்டத்தில் ஆண்கதாப்பாத்திரங்களின் உரையாடல்மொழி சம்ஸ்கிருதம், பெண்கதாப்பாத்திரங்களுக்கு பிராகிருதம். குலசேகரவர்மன் மலையாளத்தையும் கூடியாட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.  சம்ஸ்கிருத நாடக மரபில் ‘விதூஷகன்’ என்ற கதாப்பாத்திரம் உண்டு.  அங்கதத்தை பிரதான இயல்பாக கொண்டது. விதூஷகனின் இந்த சாத்தியங்களை குலசேகர வர்மன் விரிவாக்கினார். விதூஷகன் கதாப்பாத்திரத்தை வெறுமனே அங்கதம் மட்டுமல்லாமல், கூர்மையான விமர்சனத்தன்மை கொண்டதாக ஆக்கினார். அவர் எழுதிய நாடகங்களில் கதாநாயகர்களை  அறிவுறுத்துவதும், அவர்களை முக்கிய முடிவுகளை எடுக்கவைப்பதும் விதூஷகன் தான். கதாநாயகன் வெளிப்படுத்த விரும்பாத அல்லது வெளிப்படுத்த  இயலாத ஆழம் விதூஷகனின் கேள்விகள் வழியாக  வெளிப்படும். கூடியாட்டத்தின் மையக்கதாப்பாத்திரத்திற்கு (சூத்ரதாரன்) புறப்பாடு (நாடகீயமான அறிமுகம்), நிர்வஹனம் (Flashback) உண்டு. குலசேகர்வர்மன் விதூஷகனுக்கும் புறப்பாட்டையும் நிர்வஹனத்தையும் ஏற்படுத்தினார். கூடியாட்டத்தில் விதூஷகன் கதாநாயகனுடன் உரையாடுபவனாக   மட்டுமல்லாமல்; கூடியாட்டத்தின் முதல்பகுதியில் விதூஷகன்  தனியாக பேசும்வெளியையும் அமைந்தார், அதற்கு விதூஷக கூத்து என்று பெயர். அதில் கூடியாட்ட கதையை தவிர்த்து இந்து புராண இதிகாசங்களின் நுட்பங்களும் மற்ற பொது விஷயங்களையும் விதூஷகன் பேசினான். இந்துமரபில் நான்கு புருஷார்த்தங்கள் உண்டு (அறம், பொருள், இன்பம், வீடுபேறு). அதை பகடி செய்வதுபோன்ற நான்கு புருஷார்த்தங்கள் (அரசசேவை, உணவு, கேளிக்கை, ஏமாற்றுதல்) உருவாக்கபட்டது, அதை விதூஷகன் விரிவாக பேசினான். கூடியாட்டத்தில் அந்தபகுதி புருஷார்த்தகூத்து என்றும் அழைக்கப்பட்டது. 

அம்மன்னூர் குட்டன் சாக்கியார்

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் இந்த விதூஷகக்கூத்தும் அல்லது புருஷார்த்தக்கூத்து தனி கலைவடிவமாக ஆகியது.  விதூஷகன் ’சாக்கியார்’ என்ற மலையாளப்பெயரைப்பெற்றான். அதுதான் சாக்கியார்கூத்து.

சாக்கியார்கூத்தில் புராண-இதிகாசங்களிலிருந்து ஏதாவது ஒரு கதைச்சந்தர்ப்பத்தை எடுத்துக்கொண்டு அதன் விளக்கங்களாக, விரிவாக்கத்திற்கும் இடையே புருஷார்த்தங்களை பகடி செய்வதும், சமகால சமூக விமர்சனமும், தனிமனித விமர்சனமும் விரிவாக நிகழ்த்தப்படும்.

புராண இதிகாசங்களில் நிபுணத்துவமும், மரபான விஷயங்களில் ஆழமான அறிதலும், சம்ஸ்கிருத புலமையும்கொண்ட கேரள அறிஞர்கள் புராண இதிகாசங்களில் உள்ள கதைச்சந்தர்ப்பத்தைகளை எடுத்துக்கொண்டு அதற்கு விளக்கங்களும் விரிவாக்கங்களையும் சம்ஸ்கிருதத்தில் எழுதினார்கள். அது சம்ஸ்கிருதத்தின் உரைநடையும் செய்யுளும் கலந்த ‘சம்பு’ என்ற வடிவில் எழுதப்பட்டது. அவ்வாறு கேரள அறிஞர்கள் எழுதிய சம்ஸ்கிருத சம்புகளுக்கு மலையாளத்தில் பிரபந்தங்கள் என்று பெயர். மொழியியல் அறிஞரும், ஜோதிட ஆராய்ச்சியாளர், கணிதவியலாளர் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி (1560-1644) நிறைய பிரபந்தங்களை எழுதியிருக்கிறார்.

மார்கி மது சாக்கியார்

சாக்கியார்கூத்தின் அடிப்படை பிரபந்தங்கள்தான். சாக்கியார் சம்ஸ்கிருதத்தில் உள்ள பிரபந்தங்களை சொல்லி அவற்றின் விளக்கத்தையும் விரிவாக்கத்தையும்  மலையாளத்தில் சொல்வார். கூடவே அதில் சம்ஸ்கிருத வேர்ச்சொல் ஆராய்ச்சியும் செய்வார். புராண இதிகாச அறிமுகங்கள் மட்டுமல்லாமல் சம்ஸ்கிருத நிபுணத்துவமும் அவசியமானது. பிரபந்தங்கள் புராண இதிகாசங்களுக்கான விளக்கங்கள். பிரபந்தங்களை தன் கதைசொல்லலுக்காக எடுத்துக்கொள்ளும் சாக்கியார்கள் பிரபந்தங்களுக்கான விளக்கங்களை அளிப்பவர். அதாவது விளக்கங்களுக்கான விளக்கங்களை.

சில சந்தர்ப்பங்களில் சாக்கியார்கூத்தில் சம்ஸ்கிருத மொழி ஆராய்ச்சியும், சொற்பொருள் மயக்கங்களையும் அதிகமாக ஆராய்வதாக ஆகிவிடுவதுண்டு. சிலவற்றில் அங்கதம் தனிநபரை கிண்டல் செய்வதாக, வெறும் நகைச்சுவை மட்டுமாக, வெறும் விளையாட்டாக சுருங்கிவிடுவதுண்டு. கிட்டத்தட்ட கோமாளி போல கேளிக்கையாளராக சாக்கியார் ஆகிவிடும் அபாயமான நிலை.

சாக்கியாரின் முக்கியமான பணி புராண-இதிகாச கதாப்பாத்திரங்களை பகடி வழியாக, மாற்றுக்கோணம் வழியாக இன்னும் துலங்கச்செய்வது, அதோடு கூர்மையான, பிறர் அஞ்சும் சமூக விமர்சனத்தை செய்யும் துணிவு. கூடுதலாக மொழிநுட்பங்களும், சொல்லுக்கும் பொருளுக்குமான உறவின் சாத்தியங்களும் ஆராயப்படவேண்டும். பகடியும், விமர்சனத்தன்மையும், மொழியறிவும் சமானமான அளவில் சாக்கியாரிலிருந்து வெளிப்படும்போதுதான் அது நல்ல சாக்கியார்கூத்தாக, நல்ல கலைப்படைப்பாக ஆகிறது.   

அழகியமணவாளன்




அழகிய மணவாளன் தமிழ் மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார். தமிழில் கட்டுரைகள் எழுதி வருகிறார். பி.கே. பாலகிருஷ்ணனின் நாவலெனும் கலைநிகழ்வு எனும் நூல் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.