Sunday 15 September 2024

பௌத்த வினாவல் - 4, ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

சங்கம்


254. பௌத்த பிக்குகள் பிற மதங்களின் மதகுருக்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனர்?

பிற மதங்களின் குருக்கள் தங்களை மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான தூதர்கள் என்றும், நம்முடைய பாவங்களை மன்னிப்பவர்கள் என்றும் அறிவித்துகொள்கின்றனர். பெளத்த பிக்குகள் தங்களை தெய்வீக ஆற்றலுடையவர்கள் என அறிவித்துக்கொள்பவர்கள் இல்லை, அவ்வாறு எதையும் எதிர்பார்ப்பதுமில்லை.


255. இவ்வாறு பிற மத அமைப்புகள் செய்வதை பௌத்த பிக்குகள் செய்வதில்லை என்றால் ஏன் மக்கள் சமூகத்தில் இருந்து தனித்து இருக்கும் ‘சங்கம்’ உருவாக்கப்பட்டது?


சங்கத்தின் நோக்கம் உயர்ந்த அறமனப்பான்மை, தன்னலமின்மை, அறிவாற்றல், மற்றும் ஆன்மீக மனம் உடையவர்கள், புலனின்பம் மற்றும் வேறு தன்னல விருப்பங்களை வலுப்பெறச்செய்யும் அன்றாட சமூக சூழலிலிருந்து விலகி இருப்பதற்காகவும், உயர் ஞானத்தை அடைய அவர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதற்காகவும் நிறுவப்பட்டது. மேலும் இவர்கள் துயரத்தை தேடித்தரும் இன்பநாட்ட பாதையிலிருந்து மனிதர்களை விலகச்செய்து, பௌத்தத்தின் கடினமான பாதையை பின்பற்றி அவர்கள் மகிழவும், இறுதி முக்தியை அடைவதற்கு அவர்களுக்கு உதவவும் ஆசிரியர்களாக தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்டது.


256. எட்டு நெறிகளுடன் (அஷ்டாங்க சிலம்) சேர்த்து பிக்குகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு நெறிகள் என்னென்ன?


  • நடனம், பாடல், நாடகம் மற்றும் பிற கேளிக்கைகளில் இருந்து விலகியிருத்தல்.

  • பொன் மற்றும் வெள்ளியை பெறாதிருத்தல்.


தச. சீலம் அல்லது பிக்கு சீலம் அல்லது பத்து கட்டளைகள் என சொல்லப்படும் இவை முழுவதும் பிக்குகள் மற்றும் துறவிகளுக்கு கட்டாயமானவை. பொதுமக்களுக்கு இவை நிபந்தனைகள் அல்ல.


257. சங்கத்திற்கு வழிகாட்டவும் ஒழுங்குடன் நடத்தவும் அதற்கென்று தனியாக விதிகளும் நெறிகளும் உள்ளனவா?


ஆம், 250 விதிகள் உள்ளன. அவையனைத்தும் பின்வரும் நான்கு தலைப்புகளில் அடங்கும்


  1. முதன்மை ஒழுக்க விதிகள்

  2. புலன்ஒருக்க விதிகள்

  3. உணவு, உடை போன்றவற்றை சரியான வகையில் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான விதிகள்

  4. களங்கமற்ற வாழ்வை நடத்துவதற்கான வழிகாட்டல்கள்


258. பிக்குகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ள குற்றம் மற்றும் பிற செயல்களை பட்டியலிடுங்கள்?


உண்மையான பிக்குகள் இவற்றை தவிர்ப்பர்:


  • உயிர்க் கொலை.

  • திருட்டு.

  • மயக்கும் மந்திர வித்தைகள்.

  • பாலின உடற்சேர்க்கை.

  • பொய்மை.

  • மது அருந்துதல், காலம் தவறி உண்ணுதல்

  • நடனம், பாடல்

  • பூமாலை, நறுமணம், வாசனை திரவியங்கள்.

  • பறந்து விரிந்த படுக்கைகள், இருக்கைகள்.

  • தங்கம், வெள்ளி, தானியங்கள், இறைச்சி, பெண்கள், உதவியாளர்கள், அடிமைகள், கால்நடைகள், யானைகள் ஆகியவற்றை பரிசாக பெறுதல்

  • பழித்து கூறல்.

  • கடும் சொற்கள், ஒவ்வாத சொற்கள் கூறுதல்

  • வெற்றுப் பேச்சுக்கள்.

  • கட்டுக்கதைகள், கற்பனைக் கதைகள் வாசித்தல் அல்லது கேட்டல்.

  • பொதுமக்களுக்கு செய்தி கொண்டுசெல்லுதல், கொண்டுவருதல்.

  • விற்றல், வாங்குதல்.

  • ஏமாற்றுதல், தந்திரம், வஞ்சம்.

  • ஒருவரை அடைத்துவைத்தல், நாசப்படுத்துதல், அச்சத்தை தூண்டுதல்.

  • குறி சொல்லல், ஜோதிடம் கணித்தல், கைரேகை பார்த்தல் மற்றும் இதர வித்தைகள்.


மேலே குறிப்பிட்டவைகள் நிர்வாணம் அடையும் முனைப்பை முடக்கும் காரணிகள்.


259. பொதுமக்களுக்கு பிக்குக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்னென்ன?


  • உயர் நெறியின் உதாரணமாக தங்களை நிறுவுதல்

  • கற்பித்தல், வழிநடத்துதல்

  • போதித்தல், நெறிகளை விளக்குதல்

  • உடல்நலிவுற்றவருக்கு பரிட்டா நூலை ஓதுதல்

  • சமூகத்தில் பெரும் இடர்கள் ஏற்படும் போது வேண்டுகோளுக்கு இணங்க பொதுவில் பரிட்டா நூலை ஓதுதல்

  • இடைவிடாது மக்களை நற்செயல்களை செய்ய ஊக்குவித்தல்

  • குற்றச்செயல்களை தடுத்து அவர்களை எல்லா உயிர்களின் நன்மையை விரும்பவும் கருணையுடனும் இளகிய மனதுடனும் இருக்க பழக்குதல்.


260. சங்கத்தில் ஒருவரை சேர்ப்பதற்கான விதிகள் என்னென்ன?


  • பத்து வயதிற்கு குறைந்தவரை அனுமதிப்பதில்லை

  • பெற்றோரிடமிருந்து சம்மதம் பெற்றிருக்கவேண்டும்

  • தொழுநோய், உடல்புண்கள், வலிப்பு, மது அருந்தும் பழக்கம் இருத்தல்கூடாது

  • சுதந்திர மனிதனாக இருக்கவேண்டும்

  • கடன்கள் ஏதும் இருக்கக்கூடாது

  • குற்றவாளி, உடல் ஊனம் கொண்டவர்கள் அல்லது அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது


261. புதியவர்கள் எப்படி அழைக்கப்படுவர்?


சாமனேரா. இது பாலி மொழிச் சொல். இதற்கு மாணவர் என்று பொருள். 


262. சாமனேரா எந்த வயதில் ஸ்ரமனாவாக, அதாவது பிக்குவாக ஆவார்?


இருபது வயது கடந்த பின்னர்.


263. பிக்கு நிலைக்கு தயாரான பின்னர் என்ன நடக்கும்?


தயாராக இருக்கும் நபரை பிக்குகளின் சந்திப்பு கூட்டத்தில் ஒரு பிக்கு முன்வைத்து அவரின் தகுதியையும் குறிப்பிடுவார். பிறகு தயாராக இருக்கும் அந்த நபர் “நான் சங்கத்திடமும், மதிப்பிற்குரிய ஆசிரியர்களிடமும் உபசம்வதா சடங்கை வேண்டுகிறேன்” என கூறுவார். உபசம்வதா என்பதற்கு துறவறம் என்று பொருள். 


தயாராக இருக்கும் நபரை சங்கத்திற்கு அறிமுகப்படுத்திய பிக்கு, அவரை அனுமதிக்க பரிந்துரை செய்வார். பின்னர் அந்த நபர் பிக்குவாக ஏற்கப்படுவார்.


264. அடுத்தது?


அவர் காவி உடையை அணிந்து திரிசரணத்தையும் பத்து கட்டளைகளையும் ஓதுவார்.


265. பிக்குகள் கடைபிடிக்க வேண்டிய இரண்டு அடிப்படைகள் என்னென்ன? 


ஏழ்மை மற்றும் மனத்தூய்மை. சங்கத்தில் சேர்வதற்கு முன் ஒரு பிக்கு வெறும் எட்டு அடிப்படை பொருட்களை மட்டுமே கொண்டிருக்கவேண்டும். அவை,


  1. அவருடைய அங்கிகள் 

  2. இடைக்கச்சை

  3. பிச்சை பாத்திரம்

  4. நீர் வடிகட்டி

  5. சவரக்கத்தி

  6. தையல் ஊசி

  7. விசிறி

  8. செருப்பு 


வினயா நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது போல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு பிக்கு மேலும் சில பொருட்கள் வைத்துக்கொள்ளலாம்.


266. சங்கத்தின் முன்பாக பிக்குகள் தாங்கள் செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்ள சடங்கு உள்ளதா?


ஆம். இருவாரங்களுக்கு ஒருமுறை பிரதிமோக்ஷா சடங்கு நடத்தப்படும். அதில் எல்லா பிக்குகளும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, குழுவிடம் அறிவித்து, அதற்கான பரிந்துரைக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்வர்.


267. பிக்குகள் பின்பற்ற வேண்டிய அன்றாட நடைமுறை என்ன?


  • விடியலுக்கு முன்னே எழுந்து விஹாரத்தை (பௌத்த மடம்) சுத்தப்படுத்துதல், விஹாரங்களுக்கு அருகில் வளர்ந்திருக்கும் போதி மரத்தை சுற்றிலும் தூய்மைசெய்தல், அன்றைய தினம் அருந்துவதற்கான நீரை எடுத்துவந்து வடிகட்டி வைத்தல்.

  • தியானத்திற்கு திரும்புதல், பௌத்த சின்னங்கள் அல்லது போதி மரத்திற்கு மலர்கள் சாற்றுதல்.

  • பிறகு பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீடுவீடாக சென்று நிர்பந்திக்காமல் வீட்டுடைமையாளர்கள் கொடுப்பதை பெறுதல்.

  • திரும்பிய பிறகு கால்களைக் கழுவி, உணவுண்டு, மீண்டும் தியானத்தைத் தொடர்தல்.


268. மலர்களை காணிக்கையாக்கி வழிபடுவதற்கு எதாவது மதிப்பு இருக்கிறதா?


வெறும் சம்பிரதாயமாக செய்யப்படின் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் ஒருவர் மலர்களை இனிமையாகவும், தூய்மையாகவும், மனப்பூர்வமான பக்தியுடனும் ஒரு புனிதமான மனிதருக்கு அர்ப்பணிக்கும்போது நிச்சயமாக அது சிறந்த வழிபாடாகவே இருக்கும்.


269. பிக்கு அடுத்து என்ன செய்வார்?


அவர் தன் கல்வியை பின்தொடர்வார். மாலை நேரத்தில் மீண்டும் புனிதத்தளத்தை சுத்தம்செய்து, விளக்கேற்றி., குருவின் அறிவுரையை கேட்பதுடன், தான் செய்த தவறுகளை குருவிடம் கூறி ஒப்புக்கொள்வார். 


270. எதன் அடிப்படையில் அவரின் நான்கு தியானங்கள் (சதிபத்தானா) உள்ளன?


  1. உடல் (காய)

  2. உணர்வுகள் (வேதனா)

  3. மனம் (சித்தா)

  4. தம்மம்


271. நான்கு உயர்ந்த முயற்சிகளின் (சம்ம பதானா) இலக்கென்ன?


ஒருவருள் இருக்கும் விலங்கின் வேட்கை தன்மையை கட்டுக்குள் வைத்து, நன்மையை வளர்த்தல்.


272. உயர் உண்மையை அறிவதற்கான பாதையில் பகுத்தறிவா அல்லது உள்ளுணர்வா எது சிறந்தது என பிக்குவிற்கு சொல்லப்படுகிறது? 


உள்ளணர்வு - இந்த மனநிலையில் ’உண்மை’ உடனடியாக உள்வாங்கப்படுகிறது.


273. எப்போது அந்நிலை கைகூடும்?


ஞானத்தின் பாதையில் செல்லும் போது அதன் நான்காம் நிலையில் இது உணரப்படும்


274. ஞானத்தின் நான்காம் நிலையை நாம் நம்ப வேண்டுமா? அது சமாதி நிலை என அழைக்கப்படுகிறது. அந்த நிலையில் மனம் இல்லாமல் ஆகி, எண்ணங்கள் முற்றிலும் நின்றுபோகும் அல்லவா?


அது நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கும். இந்நிலையில் ஒருவரின் பிரக்ஞை மிகத் தீவிரமாக விழிப்படைந்திருக்கும், மேலும் இந்நிலையில் அறிவை உள்வாங்கும் திறனும் மிக விரிவானதாக இருக்கும்.


275. இதை ஒரு உவமை வழியாக விளக்கமுடியுமா?


சாதாரண விழிப்பு நிலையில் அறிவானது உயர்ந்த மலைகளுக்கு நடுவேயுள்ள பாதையில் நடக்கும் மனிதனின் காட்சித்தூரம் போல குறுகியது. சமாதி மற்றும் ஞானத்தின் உயர் விழிப்பு நிலையில் அறிவானது விண்ணில் இருந்துகொண்டு மொத்த நாட்டையும் பார்க்கும் பருந்தின் காட்சி போல விரிந்தது.


276. புத்தர் இந்த திறனை பயன்படுத்தியதைப் பற்றி நமது புத்தகங்கள் என்ன குறிப்பிடுகின்றன?

 

அவை இவ்வாறு சொல்கின்றன: “தினமும் காலை அவர் தனது ஞான திருஷ்டியின் மூலம் உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் உண்மையை உள்வாங்க தயாராக உள்ளனர் என அறிந்துகொள்வார். அவர்கள் அவ்வுண்மையைச் சென்றடைவதற்கான பாதையை கண்டறிவார். மனிதர்கள் அவரைக் காண செல்லும்போது அவர் அவர்களின் மனதிற்குள் உற்றுநோக்கி அவர்களின் நோக்கங்களை அறிந்துகொண்டு அவர்களின் தேவைக்கேற்ப போதனை செய்வார்”.


ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி


ஹென்றி ஸ்டீல் ஆல்காட்


விஷ்ணுகுமார்

ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார்.  இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார்.

இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல  மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott

https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott

https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india

Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும்  அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு  பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.