Wednesday 31 January 2024

கதாபாத்திரம் அல்ல கலைஞனின் திறமை தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது - சிவானந்த ஹெக்டே நேர்காணல்

கெரமனே சிவானந்த ஹெக்டே
யக்ஷகானா கர்நாடகத்தின் தனித்துவமிக்க நிகழ்த்துக்கலை. இசை நடனம் வசனம் வண்ணங்கள் செறிந்த ஆடை அலங்காரம் என எல்லாம் இணைந்தது யக்ஷகானம். இரவு முழுக்க ஆடப்படும் ஆட்டங்களுக்காகவே இயங்கும் குழுக்களால் நீண்ட காலமாக நிகழ்ந்துவருகிறது. இக்கலைக்கு கர்நாடக மக்கள் பெருவாரியான வரவேற்பும் அளிக்கின்றனர், குறிப்பாக மேற்குக்கரையின் கிராம மக்கள் இக்கலையை பெரிதும் ஆதரிக்கின்றனர். தமிழகத்தின் தெருக்கூத்து கேரளத்தின் கதகளி போல யக்ஷகானாவிலும் ஆண்களே பெண்வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தனர். இந்நூற்றாண்டில் பெண்களும் ஆடுகின்றனர். கதகளியில் மேடையில் ஆடுபவர் அபிநயம் மட்டுமே செய்வார், பாகவதர் பின்னணியில் பாடல்கள் பாடுவார். தெருக்கூத்தில் ஆடுபவரே பாடுவார் வசனமும் பேசுவார். யக்ஷகானத்தில் பொதுவாக பாகவதர் பின்னணியில் பாடுவார், ஆடுபவர் வசனங்கள் பேசுவார். கையில் வண்ண நூல்கள் சுற்றப்பட்ட தடி ஒன்றை வைத்துக்கொண்டு ஆடுவதுண்டு, அது செங்கோலும் வில்லும் வாளுமாக மாறிக்கொண்டே இருக்கும். முன்மேடையில் கலைஞர்கள் நடனமாடி, கதையை நடிக்கின்றனர். பின்மேடையில் பாகவதர் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் அமர்கின்றனர். பாகவதருக்கு செண்டை, மத்தளம், தாளம் முதலிய கருவிகள் துணை செய்கின்றன. நடனம் என்றால் எளிதான அசைவுகள் அல்ல, செண்டை அதிர முழங்கால்கள் தரையில் இட்டு சுழன்றாடும் அடவுகள் உண்டு. மழை ஓய்ந்த பருவகாலம் முழுவதும் இந்த ஆட்டங்கள் கர்நாடகத்தில் தொடர்ந்து நடக்கிறது. ஓய்வுக்காலங்களில் பயிற்சி, அணிகளை தயாரித்தல் முதலியவற்றை செய்கிறார்கள்.
கெரமனே சிவராம ஹெக்டே (தாத்தா)
கர்நாடகத்தின் வடஉச்சியிலுள்ள குணவந்தே என்னும் கிராமத்தில் உள்ளது இடகுஞ்சி மகாகணபதி யக்ஷகான மண்டலி. இன்றுள்ள பலநூறு யக்ஷகானா குழுக்களில் இடகுஞ்சி மகாகணபதி யக்ஷகான மண்டலி நீண்டகால மரபுடைய மதிப்புமிக்க குழு. இடகுஞ்சி கர்நாடக மாநிலம் முருடேஷ்வருக்கு அருகிலுள்ள இடம். இங்கு உள்ள மகாகணபதி ஆலயம் பிரசித்தி பெற்றது, மேற்கு கடற்கரையிலுள்ள கோகர்ணம் உள்ளிட்ட 6 முக்கியமான விநாயகர் ஆலயங்களில் இதுவும் ஒன்று. 1934 -ல் கெரமனே சிவராம ஹெக்டேவால் இடகுஞ்சி குழு துவங்கப்பட்டது, பின்னர் அவரது மகன் கெரமனே ஷம்பு ஹெக்டேவால் 40 ஆண்டு காலம் இக்குழு வழிநடத்தப்பட்டது, தற்போது மூன்றாம் தலைமுறையினரான கெரமனே சிவானந்த ஹெக்டே இக்குழுவை நடத்துகிறார். இடகுஞ்சிக்கு அருகிலுள்ள குணவந்தே என்னும் அழகிய கிராமத்தில் இக்குழுவினரின் பயிற்சிக் கூடம் அமைந்துள்ளது. 1986ல் ஷம்பு ஹெக்டே இடகுஞ்சி கலாகேந்திரா என்னும் யக்ஷகானா பள்ளியை துவங்கினார். பயிற்சி பெற்ற யக்ஷகானா கலைஞர்களை உருவாக்குவதற்காக குணவந்தேவில் கட்டணமற்ற ஓராண்டு பயிற்சியை அறிமுகப்படுத்தினார், பாடசாலை அமைப்பில் அங்கேயே தங்கி மாணவர்கள் இலவசமாக பயிலலாம். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஓரிரு வருடங்கள் பயிற்சியும், குழுவில் இடம்பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

பயிற்சிக்காக வருபவர்கள் தங்கும் அறைவசதி, பயிற்சிக்கூடம் இவற்றோடு இரண்டு பெரிய அரங்குகள் இந்த வளாகத்தில் உள்ளன. அறுநூறு பேர் அமரக்கூடிய பழைய அரங்கம் வழக்கமான மேடை பாணியில் அமைந்தது, புதிய முயற்சியாக திறந்தவெளி அரங்கம் ஒன்றும் சிவானந்த ஹெக்டேவால் அமைக்கப்பட்டுள்ளது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு இடகுஞ்சி கணபதி ஆலயத்துடன் மிகவும் பிணைந்த கலைஞரான ஷம்பு ஆலயத்தில் நடந்த யக்ஷகானா நிகழ்வில் மேடையிலேயே உயிர்துறந்தார். அப்போது அவர் அனைவருக்கும் பிரியமான இராமர் வேடத்திலிருந்தார். அவரது நினைவிடம் இந்த அரங்கத்திற்கு அருகிலேயே உள்ளது. கர்நாடகத்திற்கு வெளியே இந்தக்கலையை நிகழ்த்தவும் நிறைய முயற்சிகளை இடகுஞ்சி குழு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து கர்நாடகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் 6000 ஆட்டங்களுக்கு மேல் இவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

கெரமனே ஷம்பு ஹெக்டே (தந்தை)
கெரமனே ஷம்பு ஹெக்டே நினைவாக "கெரமனே ஷம்பு ஹெக்டே ராஷ்ட்ரிய நாட்யோத்ஸவா" என்ற கலாச்சார நிகழ்வை இக்குழு கொண்டாடுகிறது (ஜனவரி-பிப்ரவரி). இது 2009 முதல் ஆண்டுதோறும் 5 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான நடன விழா. செவ்வியல், நாட்டுப்புறக்கலைகள், பழங்குடி கலைகள் மற்றும் இசைக்கான விழாவாக இது நிகழ்கிறது. கலைஞர்களுடன் கலந்துரையாடல் அமர்வுகள், கலைஞர்களுக்கான விரிவுரை கூட்டங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவையும் இதில் அடங்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைசிறந்த கலைஞர்கள், மண்டலியின் நிகழ்ச்சியில் பங்குபெறுகின்றனர். கலைஞர்களுக்கான சிறப்பு விருதுகளும் இந்நிகழ்சியில் வழங்கப்படுகிறது. உலக, இந்திய அளவிலிருந்து செவ்வியல், நாட்டுப்புற, பழங்குடியினர் கலைஞர்கள் ஒன்றிணைந்து பங்குபெறுவதால் கலைஞர்கள் மற்ற கலைத்துறையை சேர்ந்தவரை அறிந்துகொள்ளவும், கலைஞர்களை கிராமப்புற சமூகத்தோடு இணைக்கும் முயற்சியாகவும் உள்ளதால் இவ்விழா முக்கியமாகிறது.
கெரமனே சிவானந்த ஹெக்டே

கெரமனே சிவானந்த ஹெக்டே யக்ஷகான நடன கலைஞர், ஆசிரியர், மற்றும் மண்டலியின் தற்போதைய இயக்குநர். கர்நாடகாவின் ஹொன்னாவர் தாலுகாவில் உள்ள குணவந்தே என்ற கிராமத்தில் பல்வேறு சமூக-கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கலைஅரங்கம் மற்றும் யக்ஷகானா பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். இவர் தந்தை புகழ்பெற்ற யக்ஷகான கலைஞர் ஷம்பு ஹெக்டே, தாய் கௌரி. மனைவி ராஜேஸ்வரி இரண்டு மகன்கள் ஸ்ரீதர், சசிதர் (இருவருமே யக்ஷகான கலைஞர்கள்) இவர்களுடன் குணவந்தேவில் வசிக்கிறார்.

புகழ்பெற்ற யக்ஷகானா கலைஞர்களின் பரம்பரையில் இருந்து வந்த ஹெக்டே 12 வயதில் யக்ஷகானாவில் அறிமுகமானார். சட்ட கல்விப் படிப்பை முடிக்கவில்லை, தனது தந்தை மறைந்த ஸ்ரீ கெரமானே ஷம்பு ஹெக்டேவின் வழியைப் பின்பற்றி அவரது குரு டாக்டர். மாயா ராவ் அவர்களின் பயிற்சியின் கீழ் நடனக் கலையில் டிப்ளமோ முடித்தார். கதக் மற்றும் இந்தியாவின் பல நாட்டுப்புற நடனங்கள், செரைகலா பள்ளியில் சாவ் நடனம், மணிப்பூரி திருமண நடனங்கள் ஆகியவற்றை பயின்றுள்ளார். 
சிவானந்த ஹெக்டே

வணக்கம். மாலையில் நிகழ்ச்சி இருந்தும் எங்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. யக்க்ஷகானாவை செவ்வியல் அல்லது நாட்டார் கலை, இந்த இரண்டில் எந்த வகையை சேர்ந்ததாக பார்க்கலாம்?


யக்ஷகானாவிற்காக ஆர்வத்துடன் இத்தனை தொலைவு எங்களை காண வந்தமைக்கு நன்றி. உங்களது கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் கலை வடிவங்கள் குறித்தான புரிதல் நமக்கு இருப்பது முதன்மையானது. பொதுவாக ஆய்வின் வசதிக்காக நாட்டார் கலை, செவ்வியல், பழங்குடி, நவீனம் இப்படி கலை வடிவங்களை பிரிக்கின்றனர். நாட்டார் கலை பற்றி சொல்வதாய் இருந்தால் ‘பீட்டர் கிளார்க்’ எனும் பின்லாண்டிய அறிஞரின் கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன். எப்போதுமே நாட்டார் கலைகளில் உன்னத தருணங்கள் இடம்பெறுகின்றன ஆனால் அவையனைத்தும் வரையறுக்கப்பட்டு ஒருவகையில் கட்டுப்பட்டிருக்கிறது. செவ்வியல் கலைகள் போன்ற விரிந்து செல்லும் தன்மை அதற்கில்லை. நாட்டுப்புற கலைகளுக்கு அதற்கான பாரம்பரியமும் செவ்வியல் தன்மையும் உண்டு என்றாலும் அவை வரையறுக்கப்பட்டது. அஸ்ஸாமின் பிஹு, கோலாட்டம், தாண்டியா எல்லாமே வரையறுக்கப்பட்ட கலை வடிவங்கள். காண்பதற்கு செவ்வியல் கலை போலவே அழகானவை, ஆனால் மிகச்சிறிய எல்லைகளை உடையவை, விரிந்துசெல்லும் தன்மை அவற்றுக்கில்லை. 


யக்க்ஷகானாவை எடுத்துக்கொண்டால் அதன் ஆட்டகதைகள் மானுடத்தின் நுட்பமான எல்லைகளை தொடக்கூடியது அந்தவகையில் அது ஒரு செவ்வியல் கலை என கூறலாம். யக்க்ஷகானாவில் உபயோகிக்கப்படும் செவ்வியல் ராகங்களாலும் சிலர் இதை செவ்வியல் வடிவம் என்று கூறுகின்றனர். நான் யக்க்ஷகானாவை ‘மரபான பாரம்பரிய கலை’ என்றே சொல்ல விரும்புகிறேன். யக்க்ஷகானா மட்டுமல்ல தெருக்கூத்து, கூடியாட்டம் எல்லாமே மரபான கலைகள்தான். 


இடகுஞ்சி மகாகணபதி யக்ஷகான மண்டலி

விரிவாக்கம் குறித்து நீங்கள் சொன்னதன் அடிப்படையில், ஒரு கலைஞனுக்கு எந்த அளவிற்கு பாரம்பரிய எல்லைகளை மீறும் சுதந்திரம் இருக்கிறதாக நினைக்கிறீர்கள் ?


கலைஞனுக்கான மேடை சுதந்திரம் யக்க்ஷகானாவின் கலைவடிவத்திலேயே உள்ளது. இதன் அடிப்படைகளை நன்றாக கற்றபின் கண்டிப்பாக கலைஞர்கள் சுதந்திரம் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அந்த சுதந்திரம் இந்த கலை வடிவத்தை நியாயப்படுத்துவதற்காக இருக்கவேண்டும். மற்ற கலைகளின் தாக்கத்தால் அடிப்படையிலேயே மாற்றங்களை செய்யக்கூடாது. உதாரணமாக இங்கே ஆண், பெண் வேடங்களுக்கான நடன நுணுக்கங்களுண்டு. சந்தபாமா(பெண்) வேடம் தரிக்கும்பொழுது அந்த நுணுக்கங்களை கச்சிதமாக கொண்டுவரவேண்டும். பயிற்சியின் வழியாக கிடைத்த நுட்பங்கள் சிறந்த கலைவெளிப்பாட்டுக்கு உதவும் என்பது இங்கு அடிப்படையான விதி. 


கதகளி முத்திரைகளை முதன்மையாக வைத்துக்கொண்டு மிக நுட்பமான வடிவமாகவுள்ளது. யக்க்ஷகானா அதை செய்வதில்லை அனைத்திற்கும் சம பங்குகொடுக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் கதகளியில் முழுநடனத்தில் அடவு வெளிப்பாடுகள் மிக குறைவு. யக்க்ஷகானா எல்லாவற்றிற்கும் சம பங்கு அளிக்கிறது அபிநயம், நடனம், பாடல், உரையாடல் என அனைத்தும் ஒரு ஒத்திசைவுடன் இருக்கவேண்டும், ஒன்றை விஞ்சி ஒன்றை செலுத்துதல் கூடாது.அப்போது பின்மேடைக்காரரான பாகவதருக்கு யக்ஷகானாவில் உள்ள இடம் என்ன?


எங்கள் அமைப்பில் எல்லோருக்கும் எல்லாவற்றிலும் பயிற்சியுண்டு. பலசமயங்களில் பாகவதர் நடனக்கலைஞராகவும் இருப்பார், இதுவல்லாத மரபான பாகவதர்களும் எங்கள் குழுவில் உண்டு. அவர்களுக்கு யக்ஷகானா நடைமுறைகள் அனைத்தும் அத்துப்படி. பொதுவாக நல்ல பாகவதராக ஒருவர் தயாராக பத்துவருடங்கள் வரை ஆகும் மற்ற எல்லா கலைஞருக்கும் இதேபோல பயிற்சிக்காலங்கள் உண்டு. பொதுவாக ஒரு இளம்கலைஞர் எதாவது ஒரு கோவில் நிகழ்ச்சியில் தனது முதல் ஆட்டம் ஒன்றை நடத்துவார், அதை சேவே என்போம். பிறகு மரபான ஆட்டம் ஒன்றில் அவரது அரங்கபிரவேசம் நிகழும். சிறுசிறு வேடங்களின் வழியே அவர் பயிற்சியடைந்து முழுக்கலைஞராவார்.


பாகவதர் முழு யக்ஷகான நிகழ்வையும் தெரிந்த ஒருவர். மேடைக்கட்டுப்பாட்டில் அவரது இருப்பு மிக முக்கியமானது. ஆட்ட கலைஞர்கள் அவருடன் தங்கள் ஆட்டப்பகுதி குறித்து விவாதிப்பர். கலைஞர்களாக தங்களது திறமையை மேடையில் நிரூபிக்க வேண்டி பாகவதரின் துணையை நாடுவதுண்டு. பொதுவாக யக்ஷகானா குழு அமைப்பில் மூத்தகலைஞர் யாரோ அவர் அனைத்தையும் வழிநடத்துவார். 


நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை யக்ஷகானா ஆட்டத்தில் பாகவதரின் பங்கு முதன்மையாக இருந்தாலும் அவருக்கு எல்லா ஆட்ட கதைகளும் ராகங்களும் தெரிந்திருந்தாலும் அனைத்து சமயமும் அவர் கட்டுப்பாட்டில் தான் மேடை இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் சிலர் பாகவதர் தான் ஒட்டுமொத்த நிகழ்ச்சியுமே கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அது சரியல்ல.கர்நாடக நிலவியல் சார்ந்து யக்ஷகானத்தின் வகைகள் குறித்து சொல்லமுடியுமா ?


மேற்கு கடலோர கர்நாடகம் தான் யக்ஷகானத்தின் இடம், இதைத்தொட்டே தெற்கு, வடக்கு, பெருவடக்கு (தென்கு திட்டு, படக்கு, படாபடக்கு) என்று பிரிவுகள் உள்ளன. சிவராம காரந்த் உட்பட சிலர் யக்க்ஷகானாவின் பிறப்பிடமாக ‘நாக’ அல்லது ‘பூத கோலா’ இருக்கக்கூடும் என ஊகிக்கின்றனர். ஆனால் பாரம்பரிய யக்க்ஷகானாவை பார்த்தால் அப்படி ஒரு நீட்சி இருப்பதாக தெரியவில்லை. காசர்கோட்டிலிருந்து உடுப்பிக்கு கீழே தெற்கு பாணி ஆட்டம் நிகழ்கிறது. இதில் உடையிலும் அலங்காரத்திலும் வேறுபாடுகள் உண்டு. உரையாடலுக்கும் அதிக இடம் அளிக்கப்படும். உடுப்பி, குந்தாப்பூர் மற்றும் சுற்றிலுள்ள பகுதியை சார்ந்தது வடக்கு பாணி ஆட்டங்களில் நடனத்திற்கு முக்கிய இடம் உண்டு. இவை இரண்டும் வெவ்வேறு உணர்வுநிலைகளை வெளிப்படுத்துபவை, இசையிலும் வேறுபாடு உண்டு. நான் உத்தர கர்நாடகத்தின் பெருவடக்கு பகுதியை சேர்ந்தவன். இங்கு யக்ஷகானத்தில் உரையாடல் நடனம் இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் உண்டு. 


மூன்று பிரிவிலுமே முக்கியமான ஆட்ட கதைகள் பொதுவானதாகவே உள்ளது. பெரும்பாலான கதைகள் இராமாயணம், பாரதம், பாகவதம், புராணங்கள் இவற்றை ஒட்டியவை. கிருஷ்ண சந்தானா, வாலி மோக்ஷம், சீதா ஹரணா, பஞ்சவடீ, நள தமயந்தி, லங்கா தகனம், கீச்சக வதம், துரியோதன வதம், கம்ச வதம், ருக்மணி ஹரணா, சத்ய ஹரிசந்திரா. கதகளியில் பிரபலமான கல்யாண சௌகந்திகம் போலவே சௌகந்திக ஹரணா என்ற ஆட்டம் யக்ஷகானத்திலும் உள்ளது. 


எங்கள் குழுவின் மூன்று முக்கியமான ஆட்டகதைகள் என்று ‘கதா யுத்தம் ஆட்டம்’ ‘பஞ்சவடீ’ ‘கிருஷ்ண சந்தானா’ ஆகியவற்றை சொல்லலாம். கதா யுத்தம் ஆட்டம் பாரதத்தின் இறுதி யுத்தத்தை குறித்தது. அதில் பீமன், துரியோதனன், அஸ்வத்தாமன் ஆகிய பாத்திரங்கள் இடம்பெறும். பஞ்சவடீ இராமாயணத்தின் வனவாச காலத்தில் சீதை இராமனின் பஞ்சவடி வசிப்பிடக்கால கதை, கிருஷ்ண சந்தானா துரியோதனனின் அவைக்கு கிருஷ்ணன் தூது செல்லும் கதை. 


‘மாருதி பிரதாபா’ கூட முக்கியமான ஆட்ட கதை தான். ஒருமுறை கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் சண்டை வந்துவிடுகிறது. பலராமன் கிருஷ்ணனை தூஷிக்கிறான். கருடன் தானே ஆற்றல் மிக்கவன் என்கிறான், சத்யபாமா தானே பேரழகி என்கிறாள். தங்கள் அதிகாரம், ஆற்றல், அழகு இவற்றின் மீதுகொண்ட பற்றால் கிருஷ்ணனை ஒதுக்குகின்றனர். கண்ணன் சோகமாக அமர்ந்திருக்கின்றான். நாரதர் அவனை தேற்றி, அனுமனுக்கு துவாபர யுகதத்தில் ராமனாக காட்சியளிக்க ஒப்புக்கொண்டதை நினைவுபடுத்துகிறார். அனுமன் மூலமாக ரூப மதம், சக்தி மதம், அதிகார மதம் ஆகிய மூன்று அகந்தைகளை அழிக்கின்றார் கண்ணன். இந்த கதையை சொல்வது மாருதி பிரதாபா. இவையில்லாமல் பலநூறு ஆட்டக்கதைகள் உள்ளன, கிருஷ்ணார்ஜுன காலகா, இராமாஞ்சனேயா யுத்தா, என புராணங்களில் இல்லாத கதைகளும் பல உள்ளன.


ஜராசந்த வதம் ஆட்டத்தில் அர்ஜுனனும் பீமனும் முதலில் ஜராசந்தனின் முரசை அழிக்கின்றனர், ஏனெனில் கிருஷ்ணன் சொல்கிறான் இந்த மாயமுரசின் சத்தமானது எதிரிகளை ஓடச்செய்துவிடும் முதலில் அதை அழிக்க வேண்டுமென்று. முரசை அழிப்பது என்பதே இங்கு நீண்ட நிகழ்வாக நடத்திக்காட்டப்படும். 


தற்காலத்தில் ஒவ்வொரு ஊரின் கோவில் கதைகளை பிரபலப்படுத்தும் க்ஷேத்ர மகாத்மிய கதைகளை பல இடங்களில் யக்ஷகானமாக ஆடுகிறார்கள். இந்த மாற்றம் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒன்று, தர்மஸ்தலா முதலிய கோவில்களின் மகிமைக்கதைகள் பிரசித்தி பெற்றுவிட்டன. அதுபோல புதிதாக நாட்டார் தெய்வ கதைகளும் ஆடப்படுகின்றன. இவை காலத்தின் தேவைக்கேற்ப சேர்க்கப்படுகின்றன, ஆனால் இவை மரபான ஆட்டக்கதைகள் அல்ல. 


சிலகாலம் முன்பு வரை யக்ஷகானா இரவு முழுதும் விடியும் வரை நடக்கும் அப்போது முழு பாடல்களையும் எடுத்துக் கொள்வார்கள் 300 முதல் 400 பாடல்கள் இருக்கும். அதில் தேவையில்லாததும் கூட இருக்கும், இரவு முழுதும் நடத்தவேண்டுமல்லவா. இப்போது ஆடப்படும் கதைகளும் சுருங்கிவிட்டது, ஆட்டமும் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மணிநேர கதையாக சுருங்கிவிட்டது.சிவானந்த ஹெக்டே
யக்ஷகான பாடல்கள் குறித்து சொல்லுங்கள். 

நிறைய ஆட்டங்களுக்கான பிரதிகள் அச்சிடப்பட்டுவிட்டன, புத்தகத்தில் கவிதைப்பாடல்கள் மட்டும் இருக்கும். எங்கள் நூலகத்தில் அவற்றின் தொகுப்புகளும் உள்ளன, நூலகத்தை இன்னும் விரிவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதோ இந்த கயாசுர வதம் புத்தகத்தில் பாடலுடன் சங்கராபரணம், கேதாரகெளளை போன்ற ராகங்களும் தாளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாகவதர்கள் இதை பின்பற்றி பாடுவார்கள், சிலர் தாளங்கள் முதற்கொண்டு தங்களுக்கேற்ப சில மாற்றங்களை செய்துகொள்ளும் சுதந்திரம் உண்டு. 

யக்ஷகானத்தின் இசை தனித்துவமான மரபு கொண்டது, இன்று அதன் இசை கர்நாடக இசை ராகங்களால் குறிப்பிடப்பட்டாலும் ஆரம்ப காலத்தில் கர்னாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை இரண்டையும் சாராததாகவே இருந்திருக்கிறது. யக்ஷகான இசை, அதன் கதைப்பாடல்களுடனே வருகிறது என்றாலும் இதன் தனித்த ராக வடிவங்களை குறித்து ஆய்வுகள் நடந்துள்ளன. இசைக்கான தனிக்கலையாக இல்லாமல், ஆட்டத்துடன் கலந்து இருந்ததால் இதன் இசை இன்றுள்ள இசைவடிவங்களுக்கு முற்பட்ட வடிவாக நீடிக்கின்றது என்று கருதப்படுகிறது. 

தற்போது யக்ஷகானாவில் 70 முதல் 100 ராகங்கள் வரை கணக்கிடப்படுகின்றன. 600 பிரசங்கங்கள் (கதை பாடல்கள்) உள்ளன. பெரும்பாலும் நாடகத்தின் கதையானது பாகவதரால் இந்த பிரசங்கங்கள் பாடுவதன் வழியாகவே எடுத்துச் செல்லப்படும். பல நல்ல பாடல்கள் நினைவுக்கு வருகின்றன, கஜமுக தவயே கணபயே என்ற பாடல் ஒப்பனை அறையில் கணேச வந்தனத்தின்போது பாடப்படுவது. பூர்வ ரங்க சமயத்தில் வாரண வதனா என்ற பாடல் பாடப்படும். எனக்கு மனதில் இப்போது தோன்றும் பாடல்கள், ராம நிர்யானாவில் 'நுவூ நலிவுகலிந்த கூடித ஜீவன கண்டாயிதா' என்பது சோகம் கலந்த தத்துவப்பாடல், கதாயுத்தாவில் 'நொடிதோ தர்மஜா', தட்ச யஞ்யத்தின் 'ஒந்து திவச நானு குளித்திருப்ப சபகே, ஸீதா வியோகா ஆட்டத்தில் 'செலுவரன நொடிதரே நலிவு தென்னய ஹ்ருதயா' இவை அனைத்தும் பாடுபவருக்கும் ரசிகருக்கும் அந்த அந்த தருணத்தோடு ஒன்றிப்போக செய்யும் பாடல்கள். 

அதே போலவே 'தாள மத்தளே' என்றொரு வடிவம் உண்டு, ஆடை அணிகள் இன்றி வட்டமாக அமர்ந்து யக்ஷகானத்தை பாடல்களோடும், வசனங்களோடும் குழுவினர் நிகழ்த்தும் முறை. இதில் குழுவினர் மட்டுமல்லாது புராணக்கதைகளில் நல்ல பயிற்சியுள்ள அறிஞர்களும் கலந்துகொள்ளலாம். யக்ஷகான வசனங்களை உருவாக்கி, ஆட்டத்தின் போக்கை வரையறுக்கும் ஒரு பயிற்சி முறையாக இது தோன்றியது. தனித்த ஒரு கலையாக இப்போது 'தாள மத்தளே' மேடையிலும் நிகழ்த்தப்படுகிறது.
 

பொதுவாக நிகழ்த்துக்கலைகளில் எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும். உதாரணமாக கதகளி மற்றும் தெருக்கூத்தில் இராவணன், கம்சன் போன்ற கதாபாத்திரங்கள் தேர்ந்த கலைஞர்களால் மட்டுமே நடிக்கப்படும். யக்க்ஷகானாலும் இது உண்டா?
 
இங்கேயும் அப்படிதான், ஆனால் நாயக பாத்திரமும் வரவேற்கப்படும். கதாபாத்திரம் அல்ல கலைஞனின் திறமைதான் முதன்மையானது என நினைக்கிறேன். உதாரணமாக ‘ஹரிசந்திரா’ ஆட்டகதை முழுவதும் நேர்நிலையானது. ‘கீசகவதம்’ ஆட்டத்தில் பீமன் கீசகன் இருவருக்குமே சமமான பங்குண்டு. ஒரு சிறந்த கலைஞன் ஒரு சாதாரண கதாபாத்திரத்தைக்கூட உயர்த்திவிடக்கூடும். எத்தனை சிறந்த கதாபாத்திரத்தையும் ஒரு சுமாரான கலைஞன் கெடுக்கக்கூடும். கதாபாத்திரத்தைவிட கலைஞனின் படைப்பூக்கமே முக்கியம். 

எனது தந்தை ஷம்பு ஹெக்டே துரியோதனனாகவும் நடித்திருக்கிறார், கர்ணனாகவும் ஹரிசந்திரனாகவும் நடித்திருக்கிறார். ‘சதி சுசீலா’ என்னும் ஆட்டத்தில் அவர் ஏற்று நடித்த துர்ஜரன் என்னும் வில்லன் பாத்திரமும் அதன் வசனங்களும் இன்னமும் கூட யக்ஷகான ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கிறது. அவரே நடித்து பிரபலப்படுத்திய இன்னொரு வேஷம், பீஷ்ம விஜயத்தில் வரும் சால்வன் பாத்திரம். வழக்கமாக காட்டப்படும் சால்வனின் தீய வடிவத்தை மாற்றி அவனை சோகம் ததும்பும் மென்மையான காதலனாக மாற்றி ஆட்டத்தில் காட்டினார். ஆடுபவரின் தகுதிதான் பாத்திரங்களும் பெறுகின்றன.

சிவானந்த ஹெக்டேவுடன் விஷ்ணு குமார், தாமரைக்கண்ணன் புதுச்சேரி, அனங்கன்
ஶ்ரீதரன் (மகன்)
இடங்குஞ்சி யக்ஷகான குழுவுடன் விஷ்ணுகுமார்
இன்றைய யக்ஷகானம் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது. ஆட்டத்திற்கு முன் சடங்குகள் ஏதாவது உள்ளதா?

யக்ஷகானாவில் மிக அடிப்படையான சடங்குகள் மட்டுமே இருக்கின்றது. ஒப்பனை அறையில் தலையில் தரிக்கும் கிரீடம் மற்றும் மணிகளை வைத்து அதையே விநாயகராக பாவித்து கணேச வந்தனம் செய்வோம், இதுதான் யக்ஷகான ஆட்டத்தின் முதல் நிகழ்வு. பிறகு அந்த கிரீடம் பூர்வரங்க பூஜைக்காக சபைக்கு எடுத்துவரப்படும். பிறகு பாலகோபால நடனம், சந்தபாமா நடனம், ஓட்டோலாகா என்று ஒவ்வொரு நிகழ்வும் வரிசைக்கிரமமாக நிகழும். அதுபோல மேடைக்கலைஞர்கள் ஊரின் முக்கியஸ்தர்களை பார்த்து நாடகத்தின் நடுவே அவர்களை வரவேற்பதுண்டு.
 
ஆட்டம் முடிந்து இறுதியாக மீண்டும் ஒப்பனை அறையில் கணேசருக்கு ஆரத்தி காண்பித்து நிகழ்வை முடிப்போம். எங்களை பொறுத்தவரை நாங்கள் அரிதாரம் பூசுமிடத்திலேயே ஆட்டம் ஆரம்பமாகிவிடுகிறது, நாங்கள் அதை பாத்திர பிரவேசம் என்போம். 

இவையெல்லாம் ஏற்கனவே உள்ள வழக்கங்கள். ஆனால் இன்று சமயங்களில் நான் பார்ப்பவை, மேடையில் ஒரு நிஜ யானை போல பொம்மையை கொண்டுவருவது போன்ற சர்க்கஸ் வேலைகள். முன்பு யக்ஷகானம் திறந்தவெளியில் ஆடப்பட்டது, அப்போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து யக்ஷகானா பாத்திரங்கள் வருவதுண்டு. மின்சாரம் இல்லாத காலத்தில் தீப்பந்தங்கள், நெருப்புக்கொண்டு செய்யப்படும் வித்தைகள் இவையெல்லாம் தேவைப்பட்டிருக்கலாம், இன்று அது மேடையில் மட்டும் ஆடப்படும் கலையாகி விட்டது. பல நிகழ்ச்சிகளை பார்க்கும்போது, பார்வையாளர்களை கவரும் உத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட கலை வடிவத்துக்கான கவனம் இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. 

சில இடங்களில் யக்ஷகானத்தை மிகவும் கீழிறக்கி விடுகிறார்கள், ஜனரஞ்சகத்தை கொண்டு வந்துவிடுகிறார்கள். ரசனையை மழுங்கடிக்கும் இந்த செயல்கள் எனக்கு அளவற்ற வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. 

உங்களது குடும்பத்திற்கும் யக்ஷகானத்திற்கும் உள்ள உறவை கூறுங்கள். 

எனது வம்சாவளி மேல்கோட் நாணப்ப ஹெக்டேவிடம் இருந்து துவங்குகிறது, அவரது சந்ததியில் எனது தாத்தா சிவராம ஹெக்டே வந்தார், அவரது மகன் எனது தந்தை ஷம்பு ஹெக்டே, இன்று எனது மகன்கள் ஸ்ரீதரனும் அவனது தம்பியும் மேடையில் இருக்கின்றனர், கிட்டத்தட்ட ஏழு தலைமுறைகளுக்கும் மேலாக யக்ஷகானத்துடன் எங்கள் தொடர்பு தொடர்கிறது. சிவராம ஹெக்டே இக்குழுவை துவங்கியவர், அவர் யக்ஷகானத்தின் பாடங்களை நெறிப்படுத்தினார், கலைஞர்களுக்கான தன்மதிப்பை உருவாக்கினார் சிறந்த கலைஞர். அவரது சுயசரிதை ‘நெனப்பின ரங்கஸ்தலா’ என்ற புத்தகமாக வெளியாகியுள்ளது. 

எனது தந்தை ஷம்பு இந்தக்குழுவை முன்னெடுத்து சென்றதோடு, இதற்கான இலவசப்பயிற்சியையும் அளித்தார். இன்றும் கர்னாடக யக்ஷகான உலகில் அவரது பெயர் மிகுந்த மரியாதையோடு உச்சரிக்கப்படுகிறது. இன்று இப்பகுதியில் வசிக்கும் பல கலைஞர்கள் அவரால் உருவாக்கப்பட்டவர்கள், அவரால் உத்வேகம் அடைந்தவர்கள். எனது தந்தையின் முதல் சேவையும், ரங்கப்பிரவேசமும், இறுதி மேடை நிகழ்வும் இடகுஞ்சி கணபதி ஆலயத்தில்தான் நடந்தது. அன்று லவகுச காலகா ஆட்டம், இவர் இராமன் வேஷத்திலிருக்கிறார். சென்ற காட்சி முடிந்து மேடைக்குப்பின்னே தனது கிரீடத்தை கழட்டி எனது கையில் கொடுத்துவிட்டு அடுத்த காட்சியில் 'ஏளி போகுவ நாவு முனி நிட்டகே' (எழுக நாம் முனி வால்மீகியின் இடத்திற்கு செல்வோம்) என்று பாடியபடி உயிரைவிட்டவர். 

எனது ‘கெரமனே’ குடும்பத்தில் இன்னும் பல கலைஞர்கள் இருக்கின்றனர், சிவராம காரந்தின் நண்பரும் ஆட்டத்தின் பிரசங்க பகுதிகளை மீள்கட்டமைப்பு செய்தவருமான மஹாபல ஹெக்டே, இளவயதில் இறந்துபோன பெண்வேடத்தில் பிரபலமான கஜானன ஹெக்டே ஆகியோரும் யக்ஷகானத்திற்கு மகத்தான பங்களிப்பு செய்துள்ளனர். நான் இவர்கள் எனக்கு அளித்ததை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறேன். ஹொன்னாவரில் பதினோரு தலைமுறையாக யக்ஷகானம் ஆடிய குடும்பம் இருந்தது, இன்று அதில் யாரும் யக்ஷகான மேடைக்கு வரவில்லை. எனது தந்தை நான் சட்டம் படிக்க விரும்பினார், ஆனால் என்னால் ஓராண்டுக்கு மேலாக கல்லூரியில் இருக்க முடியவில்லை. எங்களுடைய மேடைக்கு திரும்பிவிட்டேன், எத்தனையோ திரைகள், எனது கால்கள் மேடையை பிரிவதை எங்கள் முன்னோர்கள் விரும்பவில்லை போலும்.

எனது தந்தையின் நினைவாக துவங்கப்பட்டு இன்று எங்களால் நடத்தப்படும், வருடாந்திர கலைவிழா ஒரு கலாசார அடையாளமாக மாறியிருக்கின்றது. இந்திய அளவில் முக்கியமான ஒருவிழாவாக கலைஞர்களால் மதிக்கப்படுகிறது. கட்டாயம் பணவசதிகளுக்காக அல்ல, யக்ஷகான கலைஞர் ஒருவரின் பெயர் மதிப்புக்காக அவர்கள் வருகிறார்கள். ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில் ஒரு நாளைக்கு மூன்று நிகழ்வுகள் வரை நடைபெறும், கலை ஆர்வமுள்ள யாரும் வந்துபார்க்கலாம், கட்டணம் ஏதும் இங்கு இல்லை. கதகளி, மணிப்புரி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து கலைவடிவங்களும் இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன, உங்களுடைய தெருக்கூத்து நடந்திருக்கிறது, கூத்துகலைஞர்கள் துரௌபதி வஸ்திராபரணம் அற்புதமாக ஆடினார்கள். மக்களுக்கு நாங்கள் இவை அனைத்தையும் ஒருசேர அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இவ்வருடம் எங்களுடைய பதினான்காவது நாட்டியோத்சவ விழாவை மார்ச் மாதம் 16 முதல் 20 வரை இவ்விழாவை நடத்த திட்டமிடுகிறோம்.கர்னாடக இலக்கியவாதிகள் சந்திரசேகர கம்பார, சிவராம காரந்த் ஆகியவர்கள் யக்ஷகானத்தை குறித்து எழுதியிருக்கிறார்கள், அதில் இயங்கவும் செய்திருக்கிறார்கள், அவர்களின் பங்களிப்பு குறித்து சொல்ல முடியுமா ? 

கம்பாராவுடன் நான் பேசியிருக்கிறேன், அவரது ‘சிரீசம்பிகேவை’ நான் மேடையில் கண்டதில்லை, முயற்சி செய்யவேண்டும். சிவராம காரந்தை மிகவும் மதிக்கிறேன், அவர் உண்மையில் யக்ஷகானத்தை குறித்த நல்ல புத்தகத்தை எழுதியிருக்கிறார். அவர் ஏற்படுத்த முயன்ற மாற்றங்களினுடாக கலைஞர்களுக்குமே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார். அவரது யக்ஷகானம் குறித்த பரிசோதனை முயற்சிகளில் எனது குடும்பத்தை சேர்ந்த மஹாபல ஹெக்டே பங்காற்றியிருக்கிறார். ஆனால் பிற்காலத்தில் காரந்த் இது என்னுடைய யக்ஷகானம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார், இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தொனி வந்துவிட்டது. அது எங்களுக்கு விலக்கத்தை அளித்தது. ஆனாலும் இலக்கியவாதிகளின் பங்களிப்பு எப்படி இருந்தாலும் முக்கியமானது தானே. 
மஹாபல ஹெக்டே
சமூகத்தில் யக்ஷகானா கலைஞர்களுக்கான மதிப்பு எப்படி இருக்கின்றது?
இன்று யக்ஷகானாவுக்கு மதிப்பு கூடித்தான் இருக்கிறது என்று சொல்லவேண்டும். வருமான ரீதியாகவும் மோசமில்லை. பொதுவாக தெற்கு கனராவில் இதற்கான பொருளியல் உதவிகள் அதிகம் கிடைக்கின்றன, மடங்கள் உதவுகின்றன. இங்கு நாங்கள் எங்களுடைய பெயரினால் தான் இயங்குகிறோம், உதவிகள் கிடைப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. கொரானா சமயத்தில் இருந்து நாங்கள் இலவசமாக வழங்கிய ஒருவருடப் பயிற்சியையும் தொடரமுடியவில்லை, இப்போது பயிற்சி வாரம் ஒருமுறை என்று நடக்கின்றது. அரசாங்கத்திடமிருந்து இன்னும் உதவிகள் கிடைத்தால் பயிற்சி போன்ற பிற விஷயங்களை நன்கு தரமுயர்த்த முடியும்.
அதே சமயம் எனக்கு அமைப்புகள், மடங்கள் ஆகியோரிடத்தில் ஒரு வேண்டுகோளும் இருக்கின்றது. நீங்கள் யக்ஷகானாவுக்கு உதவுங்கள் அது அவசியம் தேவை, அதே சமயம் பயிற்சி கொடுக்கிறேன் என்று நீங்களே அதை கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். காலம்காலமாக நாங்கள் கலைஞர்கள் இதை எடுத்து வந்திருக்கிறோம், இன்னும் சிரமப்பட்டாலும் நாங்களே இதை சுமந்துகொள்வோம், நீங்கள் ஒரு கலையை முழுக்க பொறுப்பேற்க முடியாது, நீங்கள் நினைப்பதுபோல ‘கலை’ அத்தனை சிறிய விஷயமும் அல்ல.

சந்திப்பு - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் புதுச்சேரி, அனங்கன். 

சிவானந்த ஹெக்டே இணையதளம்

இவ்வருடம் (2024) குனவந்தேவில் (முருடேஷ்வருக்கு அருகிலுள்ளது) இடகுஞ்சி மகாகணபதி யக்ஷகான மண்டலியின் பதினான்காவது நாட்டியோத்சவ விழா மார்ச் மாதம் 16 முதல் 20 வரை நடைபெறயிருக்கிறது.