Saturday 14 October 2023

அழகிரிசாமியின் நாடகங்கள் - வெளி ரங்கராஜன்

இலக்கிய வடிவங்களான கதைகள், கவிதைகள்,கட்டுரைகள் ஆகியவற்றில் அழகிரிசாமியின் இலக்கிய ரீதியான பங்களிப்பு இருந்த அளவுக்கு நாடகத்தில் அவருடைய பங்களிப்பு குறைவானதாகவே இருந்தாலும்,எழுதப்படும் நாடகங்கள் குறித்தும்,நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்தும் அவர் தீர்க்கமான கருத்துகள் கொண்டவராகவே இருந்திருக்கிறார். நிகழ்த்தப்படும் நிலையிலேயே நாடகம் முழுமையான வடிவம் கொள்கிறது என்றும் படிப்பதற்காக எழுதப்படுபவைகளை வெறும் இலக்கியப் பிரதிகளாகத்தான் கருத முடியுமே தவிர அவற்றை முழுமையான நாடகங்கள் என்று சொல்ல முடியாது என்றும் அழகிரிசாமி கருதினார். அருணாசலக் கவிராயரின் ‘ராமநாடகம்’ பற்றிய மதிப்பீட்டில் கூட அது பாடுவதற்காகவே எழுதப்பட்ட நாடகம் என்றாலும், அந்தப் பாடல்களை பாடும் நிலையிலேயே அவை நாடக வடிவம் கொண்டு நாடக உணர்வுகளை எழுப்புவதைக் குறிப்பிட்டு அவ்வகையில் அது ஒரு சிறப்பான நாடக இலக்கியம் என்கிறார்.

கு.அழகிரிசாமி சிலை, அறச்சலூர் அரசுப்பள்ளி நூலகம்

அதேபோல் முக்கூடற்பள்ளு பாடல்களையும் படிப்பதைவிட மேடையில் நடிப்போடு பாடும்போது அனுபவிப்பதே அதிக ரசானுபவத்தை கொடுக்கும் என்கிறார்.கிராமிய மெட்டுகளில் இந்தப் பாடல்கள் மந்தை நாடகங்களில் பாடப்படும்போது நம்முடைய முன்னோர்கள் இவைகளைக் கேட்டு அனுபவித்ததை அவர் குறிப்பிடுகிறார். காவடிச் சிந்து பாடல்களைக்கூட இசை வாத்தியங்களின் துணையுடன் ஒரு நிகழ்வு சார்ந்த பின்புலத்தில் கேட்டுப் பரவசமான நிலையிலேயே அந்தப் பாடல்களின் மீது மோகம் கொண்டார் அழகிரிசாமி. அதனால் வெறும் படித்தல் என்று இல்லாமல் நிகழ்த்துதலின் மூலமாக ஒரு நாடக உணர்வைப் பெறுதல் என்பது நாடகத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை அழகிரிசாமி நன்கு அறிந்தவராக இருந்தார். இசை ஒலிகளின் பல்வேறு இயக்கங்கள் உருவாக்கும் பாதிப்புகள் பற்றி அவர் கொண்டிருந்த பல நுட்பமான உணர்வுகள் இத்தகைய ஒரு மனநிலையில் இருந்தே பெறப்பட்டவை ஆகும். அதனாலேயே நம்முடைய காவடிச் சிந்து, குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, ராம நாடகம் ஆகிய இசை சார்ந்த பாடல் இலக்கியங்களை நாடகமாக விரித்துப் பார்க்கக்கூடிய பார்வை அவரிடம் உருவானது.

அதேபோல் நம்முடைய வடநாட்டு நாடகாசிரியர்கள் மற்றும் ஐரோப்பிய நாடகாசிரியர்களின் படைப்புகளை எல்லாம் படித்து நாடகம் குறித்த ஒரு செறிவான பார்வை கொண்டிருந்தார். வெறும் கேலிக்கூத்தான பொழுதுபோக்கு நாடகங்களை ஒதுக்கி பழைய கிரேக்க ஆசிரியர்கள், ஷேக்ஸ்பியர், மோலியர், இப்ஸன், பிரெக்ட், காளிதாசன் போன்றோரது மேடையில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும் இடம் பெறக்கூடிய நாடகங்கள்தான் நீண்ட நெடுங்காலத்துக்கு அழியாமல் நிலைத்து நின்று மக்களைக் கவர்ந்துகொண்டிருக்கும் என்று அழகிரிசாமி கருதினார். அதனால்தான் அவர் வெறுமனே படிப்பதற்காகவென்று நாடகங்களை எழுத விரும்பவில்லை. வானொலியில் கேட்பதற்கென்று அவரைக் கேட்டுக்கொண்டதின் பேரிலும், மேடையில் நிகழ்த்தவென்று சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவினரால் வற்புறுத்தப்பட்டதின் பேரிலும் அவர் நாடகங்கள் எழுத முன்வந்தார். இவ்விதமாக அவர் எழுதியவைதான் வானொலிக்கான சில சிறு நாடகங்களும், கவிச்சக்கரவர்த்தி, வஞ்ச மகள் ஆகிய முழுநீள நாடகங்களும். அவருடைய வஞ்ச மகள் மற்றும் கவிச்சக்கரவர்த்தி ஆகிய முழுநீள நாடகங்களிலேயே நாடக வடிவத்தில் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது எண்ணம் ஈடேறியது என்று சொல்லவேண்டும்.

உண்மையில் நிர்ப்பந்தங்களின் காரணமாகவே அழகிரிசாமி இந்த இரண்டு நாடகங்களையும் எழுதினாலும், கம்பராமாயணத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், கம்பர் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்புமே இந்த நாடகங்கள் உருவாகக் காரணமாக இருந்தன. கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று குறிப்பிடும் பாரதியார் கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என்று சொல்வதுபோல இத்தகைய காவியம் எப்படி ஒரு மானுடச்செயலால் உருவானது என்ற வியப்புடன் கம்பரின் வரலாற்றை இலக்கியமாக்குவதற்கு தமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்றே இந்த நாடக முயற்சியைக் கருதினார். கம்பராமாயணப் பாடல்களைக் கொண்டே கம்பரை உருவாக்கும் ஒரு உத்தியையும் அவர் மேற்கொண்டார். கம்பருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் என்று ஆதாரபூர்வமாக சொல்லப் படுபவை மிகச் சிலவே என்பதால் கம்பருடைய பாடல்களில் தெரியும் ஆளுமைக்கு ஏற்ப சில புனைவுகளின் அடிப்படையில் கவிச்சக்கரவர்த்தி நாடகத்தை அழகிரிசாமி எழுதியிருக்கிறார்.

ஒரு பெருங்கவிஞனின் எழுச்சியை உருவகப்படுத்தும் விதமாக அரசு அதிகாரத்துக்கும், போகத்துக்கும் அடிபணியாது தன்னுடைய கவித்திறன் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையையும், உறுதியையும் வெளிப்படுத்தும் விதமாக கம்பரை இந்த நாடகத்தில் அழகிரிசாமி சித்தரித்துள்ளார். போலிச் சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படாத ஒரு தன்மையையும், வறியவர்பால் கம்பர் கொண்டிருந்த பரிவையும் வெளிப்படுத்தி, கம்பரின் அதிகம் வெளியே தெரியாத ஒரு முகத்தையும் அழகிரிசாமி வெளிக்கொணர்கிறார். ஒரு செவ்வியல் சார்ந்த படைப்பில்கூட சமூக உணர்வுக் கண்ணோட்டத்தை புகுத்தி தன்னுடைய சமகால உணர்வுகளுக்கு நியாயம் செய்பவராகவே அழகிரிசாமி இந்த நாடக உருவாக்கத்தில் வெளிப்படுகிறார்.

கம்பருடைய வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களையும், கற்பனையாக புனையப்பட்ட சில நிகழ்ச்சிகளையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடகம் கம்பர் தமது `ஏர் எழுபது` நூலை சடையப்ப வள்ளல் இல்லத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. உழவுத்தொழிலையும், உழவரையும் சிறப்பிக்கும் இந்நூல் அனைவரது பாராட்டையும் பெறுகிறது. கம்பருடைய கவித்திறமையை கேள்விப்பட்டு சோழ மன்னன் குலோத்துங்கன் அவரை அரசவைக்கு அழைக்கிறான். ஒட்டக்கூத்தர் அங்கே அரசவைப் புலவராக இருக்கிறார். அரசவையில் நடனமாடிய நாட்டிய மங்கையின் கலைத்திறமையைப் பாராட்டி கம்பர் தம் காலில் அணிந்திருந்த பொற்சிலம்புகளைக் கழற்றி அவளுக்கு பரிசாக அளிக்கிறார். கம்பர் போன்ற கவிஞர்கள் சம்பிராயத்தை மீறுவது இயல்பானதே என்பதை உணரும் குலோத்துங்கன் தனது நீண்ட ஆசையான இராமகாதையின் தமிழ் ஆக்கத்தை ஒட்டக்கூத்தரிடமும், கம்பரிடமும் ஒப்படைக்கிறான். போர்க்களத்தில் பகைவரை வென்று திரும்பும் குலோத்துங்கனுடைய போர்ப் பராக்கிரமங்களை ஒட்டக்கூத்தர் பாட, ரத்தமில்லாத உழவர்களின் நெல் போர்க்களத்தை கம்பர் பாடுகிறார். தாங்கள் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதை கம்பர் ஒட்டக்கூத்தருக்கு எடுத்துரைக்கிறார். குலோத்துங்கனுக்கு கம்பனின் கவித்திறமை மீது உண்மையிலேயே அபிமானமும், மதிப்பும் இருந்தாலும் எதிரி நாட்டுக்கு நெல் அனுப்பிய சடையப்ப வள்லலை கம்பர் போற்றிப் பாராட்டுவது அவன் மனதில் சிறிய விரிசலை உண்டுபண்ணுகிறது. கம்பரின் பாட்டில் உள்ள ஒரு சாதாரணப் பிரஜையின் வாக்கில் நடமாடிய துமி என்ற வார்த்தையின் பொருளை அறியாது அவமானமுற்ற ஒட்டக்கூத்தர் அரசனின் மனதில் உள்ள விரிசலைப் பெரிதாக்குகிறார். தாம் இயற்றிய ராமாயணப் பாடல்களையும் கிழித்தெறிகிறார்.இந்த சூழலில் அங்கு இராமாயணக் காவியம் இயற்றுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்து கம்பர் சடையப்ப வள்ளலின் இருப்பிடத்துக்கே வருகிறார்.

சடையப்ப வள்ளல் இனி மன்னனின் அனுமதி இன்றி பகை நாட்டுக்கு நெல் அனுப்பக்கூடாது என்று சோழ மன்னன் உத்திரவிட்டதை சிறுசெயல் என கம்பர் விமர்சிக்கிறார். ஒட்டக்கூத்தர் அவர்கள் விரிசலுக்கு மேலும் தூபமிடுகிறார். இந்நிலையில் கம்பர் ராம காவியம் இயற்றும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறார்.சடையப்ப வள்ளலின் முன்னிலையில் இரவும் பகலும் பாடல்கள் இயற்றப்பட்டு அனைவரின் பரவசங்களுக்கு இடையே ராமாயண மகா காவியம் நிறைவடைகிறது. சடையப்ப வள்ளலின் இருப்பிடத்தில் அதை அரங்கேற்றுவது அவருக்கு மேலும் பல இன்னல்களை உருவாக்கும் என்று வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் வைணவப் பெரியார்களின் ஆசியுடன் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றுகிறார். அவர் புகழ் எங்கும் பரவுகிறது. பாண்டிய நாடு,கொங்கு நாடு, ஆந்திரம் எனப் பலநாட்டு மன்னர்கள் கம்பரைத் தங்கள் நாட்டுக்கு அழைக்கிறார்கள். இயல்பில் தமிழ்ப்பற்றுக் கொண்ட சோழ மன்னன் குலோத்துங்கனும் கம்பரின் இந்த அரிய செயலைப் பாராட்டி அவர் பிறந்த திருவழுந்தூர் வளநாட்டுக்கு கம்ப நாடு என்று பெயர் சூட்டி அதை கம்பருக்கே வழங்குகிறான். சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திக்கு செலுத்தப்படும் கல்யாண வரித்தொகைகளை எல்லாம் கம்பருக்கே வழங்குகிறான். சோழன் வழங்கிய கல்யாண வரிக் காணிக்கையை அரங்கேற்றத்தின்போது உடனிருந்த அங்கீகாரமின்றித் தவிக்கும் கொங்கு நாட்டுப் புலவர்களுக்கும், அவர்கள் வம்சத்தாருக்கும் கம்பர் வழங்கிவிடுகிறார்.

இதற்கிடையில் காதல் வயப்பட்ட கம்பரின் மகன் அம்பிகாபதியும், சோழன் மகள் அமராவதியும் கைது செய்யப்பட்டு தகாத காதல் என குற்றம் சாட்டப்பட்டு அரசனால் மரண தண்டனை விதிக்கப்படுகிறார்கள். தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன் கம்பரின் வரவுக்குக் காத்திருக்கிறான் சோழன். அரச கெளரவத்தை நிலைநாட்ட அது நியாயமான தண்டனை என்பது சோழன் கருத்து. கொள்ளைக்காரர்களும் அரசர்களான பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்த்து அவர்களுக்குள்தான் திருமணம் என்பது என்ன நீதி என்ற கம்பரின் வாதங்களுக்கு பதிலளிக்க முடியாத சோழன் தண்டனையை மாற்ற முடியாது என்கிறான். மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. கம்பர் விரக்தியுற்று நாடு துறந்து நாடோடியாகிறார். சடையப்ப வள்ளலும் உயிர் துறக்கிறார்.

கம்பராமாயணப் பாடல்கள் மக்களிடையே பரவி பலர் இல்லங்களில் நடமாடுவதை கம்பர் பார்க்கிறார். அம்பர் மாகாளம் என்ற ஊரில் கம்பர் எழுதிய `வஞ்ச மகள்` நாடகம் அரங்கேறுகிறது. கம்பர் ஒருமுறை அரசவையில் பரிசளித்த நடன மாதின் மகளான சிலம்பி அற்புதமாக அந்த நாடகத்தை நிகழ்த்தியதைக் கம்பர் வியந்து பாராட்டுகிறார். கம்பர் பரிசளித்த சிலம்புகளை அணியாமல் அதைச் செல்வமென அந்த நடனமாதின் குடும்பம் போற்றிப் பாதுகாக்கிறது. கம்பர்ச் சிலம்பி என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண் இனி தன் நடனச் சிலம்பின் பெருமை துலங்க அம்பர்ச் சிலம்பி என அழைக்கப்படுவாள் என்கிறார் கம்பர். நாடெங்கும் அலைந்து திரிந்து கடைசியில் பாண்டிய நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டரசன் கோட்டையில் அக்கோட்டைத் தலைவனின் பாதுகாப்பில் தங்குகிறார். அங்கு அவர் உயிர் பிரிகிறது. இனி கம்பர் எல்லாத் தமிழ் இல்லங்களிலும் புகுந்துவிட்டதை நாட்டரசன்கோட்டைத் தலைவன் சொல்லி அவருக்கு அஞ்சலி செலுத்த நாடகம் முடிகிறது.

வெளி ரங்கராஜன் இயக்கிய நாடகம்

அழகிரிசாமி ஒரு கதைசொல்லும் பாணியில் சம்பவங்களை அடுக்கிச் செல்லாமல் கம்பரின் ஆளுமையைப் புலப்படுத்தும் வகையில் சம்பவங்களைத் தேர்வு செய்து நாடகத்தை நகர்த்திச் செல்கிறார்.சடையப்ப வள்ளல், குலோத்துங்க சோழன் மற்றும் ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் கம்பர் கொண்ட உறவுகளும், முரண்களும் மட்டுமல்லாமல், சோழனின் பட்டமகிஷி புவனமுழுதுடையாள், சடையப்ப வள்ளலின் மனைவி மகேஸ்வரி, மாவண்டூரைச் சேர்ந்த கொல்லன் சிங்கன், நாட்டிய மங்கை சிலம்பி, திருவழுந்தூர் நகரவாசியான நாராயண பட்டர் ஆகிய சிறுசிறு பாத்திரங்கள் கூட கம்பரின் ஆளுமை வெளிப்பட பங்களிப்பு செய்கிறார்கள். ஒரு பெருங்கவிஞனின் எழுச்சியையும்,ஒரு மகாகாவியத்தின் உருவாக்கத்துக்கான சூழலையும் வடிவமைப்பதற்காக சிறுசிறு கூறுகளாக நாடகத்தை நகர்த்திச் செல்கிறார். முதலில் `ஏர் எழுபது` பாடல் அரங்கேற்றத்தில் வெளிப்படும் கம்பரின் சமூக நோக்கு, சடையப்ப வள்ளலுடன் கொண்டுள்ள ஆழ்ந்த பிணைப்பு, பின்னர் அரசவையில் நாட்டிய மங்கைக்கு பரிசளிப்பதின்மூலம் அரச சம்பிரதாயங்களுக்கு அடிபணியாத ஒரு சுதந்திர மனப்போக்கு,ஒட்டக்கூத்தர் மற்றும் குலோத்துங்க சோழன் ஆகியோருடன் கொண்ட வேறுபாடுகள் மூலம் வெளிப்படும் கம்பரின் கவித்துவப் பார்வை மற்றும் அதிகாரத்துக்கு அஞ்சாத குரல், சடையப்ப வள்ளலின்மீது திணிக்கப்படும் நிர்ப்பந்தங்களால் கம்பர் கொள்ளும் மனநெகிழ்ச்சி,தன் கவித்துவத்தின் மீது முன்வைக்கப்படும் சவால்களால் பீறிட்டு எழும் படைப்புத்திறன்,இராமாயண அரங்கேற்றத்தின் போது சக கலைஞர்களிடம் அவர் காட்டும் பரிவு, எளிய நாடகக் கலைஞரான சிலம்பியிடம் அவர் காட்டும் அன்பு என ஒரு மகா கவிஞனின் படிமம் மெல்ல மெல்ல வெளிப்பட்டு வளர்ச்சியடைகிறது. கம்பரின் பற்றற்ற தன்மைக்கும், நாடோடியாக அலைந்து உயிர்விடும் முடிவுக்காகவும் அவர் மகன் அம்பிகாபதி குறித்த நிகழ்வுகள் புனைவுத்தன்மையுடன் அமைக்கப்பட்டிருந்தாலும் கம்பரின் ஆளுமைக்கு அவை பெரிய பங்களிப்பு செய்யவில்லை.அரசின் அதிகாரமும், மதிப்பீடுகளும் எப்படிப்பட்ட கலைஞனையும் விட்டுவைப்பதில்லை என்பதையே கம்பரின் இறுதிகட்ட வாழ்க்கை புலப்படுத்துகிறது.

கம்பருடைய பாத்திரப் படைப்பின் வாயிலாக அழகிரிசாமி ஒரு உண்மையான படைப்புக் கலைஞனின் பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கிறார். ஏர் எழுபது அரங்கேற்றத்திற்குப் பிறகு கம்பரை அரசவைக்கு அழைத்துச்செல்ல நினைக்கும் புலவர் குணவீர பண்டிதரின் கோரிக்கைக்கு கம்பர் இவ்வாறு கூறுகிறார் “சோழன் அவைக்களத்துக்குச் செல்லவேண்டும் என்று எனக்கு விருப்பம் உண்டாகவில்லை. சோழன் கேட்டு மகிழ்வதற்காகவா நீங்களும், நானும் பாடுகிறோம்? நாம் பாடுவதைக் கேட்டு மகிழ்கிறவர்கள் மகிழட்டும். சோழன் என் பாட்டை விரும்பினால் அவனே சடையப்ப வள்ளலின் இல்லத்துக்கு வருவான் அல்லவா?”அரசவையில் சிறப்பாக நடனம் ஆடிய நாட்டிய மங்கைக்கு உணர்ச்சிப் பெருக்கில் கம்பர் பரிசளிக்க முன்வந்தபோது அரசன் முன்னிலையில் அரச சம்பிரதாயத்தை மீறுவது முறையல்ல என்று ஒட்டக்கூத்தர் கருத்து தெரிவிக்கும் நிலையில் கம்பர் இவ்வாறு கூறுகிறார் “கலையை போற்றிக் கெளரவிக்கும் உரிமை சோழ சக்கரவர்த்திக்கு மட்டும் தான் உண்டா? எந்த ஏழைக்குமே அந்த உரிமை உண்டு என்பது என் எண்ணம். ஏழை உவச்சனுடைய மகனாக இருந்த என்னை என் புலமைக்காக பெருமைப் படுத்தி அரசவை அழைக்கும் அளவுக்கு என்னை உயர்த்தியவன் ஒரு வேளாளன். சடையப்ப வள்ளல்”. 

கம்பருக்கும் குலோத்துங்க சோழனுக்கும் வேறுபாடுகள் தோன்றி முரண்பாடுகள் தலைதூக்கியபோது அவர்களிடையே நடைபெற்ற ஒரு உரையாடல்:

சோழன்: நீங்கள் எதற்காக என் மனதுக்கு மாறுபட்டே நடக்கவேண்டும்?

கம்பர்: நீ அரசன்.நான் கவிஞன்.இதுதான் காரணம்.

சோழன்: இந்த இருவரும் கீரியும் பாம்பும் அல்லவே?

கம்பர்: விரோதிகளல்ல. ஆனால் வேறானவர்கள். அவரவர் ஸ்தானத்தை எண்ணி பெருமைப்படுபவர்கள். என்னை ஆஸ்தானக் கவியாக்குவதும், கூத்தருக்கு இணையாகக் கருதுவதும் என்னை கெளரவிக்கும் செயல் என்கிறாய். ஆனால் நான் ஆஸ்தான கவியாக இருக்க எந்தக் காலத்திலும் உடன்படமாட்டேன். கூத்தர் வேறு. நான் வேறு. அவர் நிலைக்கு நான் வர மாட்டேன்.என் நிலைக்கு அவரால் வரவே முடியாது.அவர் கவிதையை ஜீவனோபாயமாக ஆக்கிக்கொண்டவர். எனக்கு கவிதை ஜீவனோபாயமல்ல. ஜீவன். நான் ஆஸ்தானக் கவிஞனாக இருந்து உலாவும் பரணியும் பாடி என் ஆயுளை கரைக்க விரும்பவில்லை. எந்த மனிதனும்,எந்த மதத்தினனும், எந்த நாடும் பயன்பெறக்கூடிய பேரிலக்கியத்தைப் படைக்கவே எண்ணினேன். என் எண்ணம் நிறைவேறியும் விட்டது. “


இவ்வாறு உரையாடல்கள் வழி வெளிப்படும் கருத்துக்களும், பாத்திரச் செறிவும் நாடகத்துக்கு ஒரு சிறப்பான சூழலை வழங்குகின்றன. இராமாயண உருவாக்கத்தின்போதும் அரங்கேற்றத்தின்போதும் நிலவும் சூழல் பற்றிய சித்தரிப்பு நாடக உணர்வுகளை குவியச் செய்வதாக உள்ளது. காவிய உருவாக்க சூழல் குறித்த வர்ணனை இது “நான்கு கால் மண்டபம் போன்ற ஒரு கொடி வீடு. அதன்மீது படர்ந்துள்ள கொடிகள் பூத்திருக்கின்றன. சுற்றிலும் செடிகள். பின்னணியில் ஸ்ரீராமனின் பட்டாபிஷேகச் சிலை. அதன்முன் குத்துவிளக்கு மற்றும் பூஜா திரவியங்கள். மண்டபத்தின் நடுவே உள்ள பீடத்தில் கம்பர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் இருபக்கமும் ஏடு எழுதும் வாலிபர்கள். அப்புறம் சடையப்ப வள்ளல். எதிர்ப்பக்கம் அமர்ந்திருக்கிறாள் மகேஸ்வரி. இணையாரமார்பன் கம்பருக்குப் பின்னால் வலதுபுறத்தில் உட்கார்ந்திருக்கிறான். காட்சி ஆரம்பமாகும்போது கம்பர் கூப்பிய கரங்களுடனும்,குவிந்த கண்களுடனும் வீற்றிருக்கிறார். அனைவரும் ஆவலோடு அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் நரம்பு வாத்தியத்தின் சன்னமான ஒலியிழை உலாவிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து வேத மந்திரங்களின் ஒலியை வீணை மிழற்றுகிறது. பின்பு ஜயபேரிகை கொட்டும் முழக்கம். கடைசியில் ஓங்கார நாதம். இத்தனையும் சுமார் இரண்டு நிமிஷங்கள் வரை நிகழ்கின்றன. கம்பர் பாடத் தொடங்கியதும் ஓங்கார நாதம் நிற்கிறது. கம்பர் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்துப் பாடுகிறார். பாடி முடியும்வரை மூடிய கண்களைத் திறக்கவில்லை.கூப்பிய கரங்களையும் எடுக்கவில்லை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் அரங்கேற்ற மண்டபச் சூழல் இவ்வாறு விவரிக்கப்படுகிறது. ”கம்பர் மேடையில் அமர்ந்திருக்கிறார்.முன்னால் இராமாயணச் சுவடிகள் இருக்கின்றன. அவருக்குப் பின்புறம் வலப்பக்கத்தில் இராமர் பட்டாபிஷேகச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் நரசிம்ம மூர்த்தியின் சிலை. கம்பருக்கு முன்புறத்தில் இரண்டு பக்கங்களிலும் ஆசனங்களில் வைணவப் பெரியார்கள் அமர்ந்திருக்கிறார்கள். வலதுபுறம் ஐந்தாறு ஆசனங்களுக்குப் பிறகு ஒரு தவிசில் சடையப்ப வள்ளலும், அடுத்தபடியாக குணவீர பண்டிதரும் இருக்கிறார்கள். மற்றவர்கள் கீழே உட்கார்ந்திருக்கிறார்கள்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின்
சேவடி செவ்வி திருக்காப்பு

என்ற இறைவணக்கத்துடன் அரங்கேற்றம் துவங்க இருக்கிறது.இவ்வாறு நாடகம் முழுவதும் சிறப்பான நாடக உணர்வுகளும், நாடகத்துக்கான சூழலும் அமைந்துள்ளன.

அழகிரிசாமியின் `வஞ்ச மகள்` நாடகம் ராமாயணம் ஆரண்ய காண்டத்தில் உள்ள சூர்ப்பனகைப் படலத்தை மையமாக வைத்து கம்பரின் வார்த்தைகளைக் கொண்டே எழுதப்பட்ட ஒரு உபநாடகமாகும். இது `கவிச்சக்கரவர்த்தி` நாடகத்துக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தாலும் இந்த நாடகம் கவிச்சக்கரவர்த்தி நாடகத்துக்குள் நிகழ்வதாக அதன் சுருங்கிய வடிவம் சேர்க்கப்பட்டுள்ளது. வஞ்ச மகள் நாடகம் கம்பரின் வார்த்தைகளைக்கொண்டே அமைக்கப்பட்டிருந்தாலும் சூர்ப்பனகையின் பார்வையிலிருந்து இராமாயண நிகழ்வுகள் பார்க்கப்படுவது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி சூர்ப்பனகையின் பார்வைக்கு அழகிரிசாமி ஒரு அழுத்தம் தந்துள்ளார். சூர்ப்பனகை ஒரு அரக்கியின் வடிவமாக இல்லாமல் அழகும், ஆசையும் கொண்ட ஒரு பெண்ணாக சித்தரிக்கப்பட்டு அவளுடைய உணர்ச்சிகளை மதிக்காமல் இராமனும், இலக்குவனும் அவமானம் செய்வதைக் கண்டு அவள் வெகுண்டு எழுவதாக நாடகம் தோற்றம் கொண்டுள்ளது. சூர்ப்பனகை பாத்திரத்தின் மீது அழகிரிசாமி கொண்டுள்ள பரிவும், இரக்கமுமே நாடகத்தில் வெளிப்படுகிறது.

சூர்ப்பனகை சொல்லொணாத பேரழகியாக நாட்டிய ஜதியோடு நடந்து வரும் தோற்றம் இவ்வாறு சொல்லப்படுகிறது.

கானின் உயர் கற்பகம்
உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனிபெற்று வினை
 காமநெறி வாசத்
தேனின் மொழி உற்றினிய
செவ்விநனி பெற்றோர்
மானின் விழி பெற்றுமயில்
வந்ததென வந்தாள்.

அந்தக் காட்டுக்கு அவள் வந்ததின் காரணத்தை இராமன் கேட்க சூர்ப்பனகை இவ்வாறு கூறுகிறாள். ”அம்மாய வல்லரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன். அறம் தலை நிற்பதானேன். தீவினை தீய நோற்று, தேவரில் பெற்றது…என்கிறாள். மேலும் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கையாயின் துணையின்றி இங்கே ஏன் வரவேண்டும் என்ற இராமனின் கேள்விக்கு “விமல யான் அச்சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலேன். தேவர்பாலும், ஆரிய முனிவர் பாலும் அடைந்தெனன். இறைவ, ஈண்டு ஓர் காரியம் உண்மை, நின்னைக் காணிய வந்தேன்“ என்று சூர்ப்பனகை சொல்லும் வரிகளில் அரக்கர் பக்கம் சாராமல் அறம் சார்ந்து நிற்கவே நான் தனியளானேன் என்ற அவள் நிலைப்பாடு உண்மையானதாகவே ஒலிக்கிறது. இராவணனைப் பிரிந்து சூர்ப்பனகை துணைதேடித் தனியாகக் காட்டில் அலைந்து திரிந்ததாகவே ஆதாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் அவள் இராமன்மேல் ஆசை கொண்டு வேறு வாழ்க்கை வாழ உண்மையிலேயே விருப்பம் கொண்டிருந்ததாகவே நம்ப இடம் இருக்கிறது. ஆனால் சீதையின் பிரசன்னமும், இலக்குவனின் கோபமும் நிகழ்வுகளை திசைதிருப்பி விடுகின்றன. அவள் அங்கங்கள் சிதைக்கப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட நேர்கிறது.

“தேவர்ப் பராவி நீங்கினேன். அப்பழி பிறவி காதலில் கலந்த சிந்தை மாந்தர்க்கும், மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம். இஃது இயைந்தபின் எனக்கு மூத்த வேந்தர்க்கும் விரும்பிற்றாகும்…வேறும் ஓர் உரை உண்டு” என்ற தன்னுடைய நல்லெண்ண உரைகள் சிதைவுற்றது கண்டு “உன் திருமேனிக்கு அன்பிழைத்த வன்பிழையால் யான்பட்ட படி இது காண்” என்று இராமனிடம் முறையிடுகிறாள். ஆனால் `இவர் எனக்கு இரங்கார். உயிரிழப்பன் நிற்கில்` என்றபடி இறுதியாக “காற்றினிலும், கனலினும் கடியானைக் கொடியானைக் கரனை, உங்கள் கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன்” என்று சூர்ப்பனகை சூலுரைத்துச் செல்கிறாள். இராம இராவண யுத்தத்துக்கான வித்து அங்கே ஊன்றப்படுகிறது.

அழகிரிசாமி இந்த நாடகத்தில் கம்பரின் வார்த்தைகளையே பயன்படுத்தினாலும், சூர்ப்பனகை பற்றிய ஒரு நுட்பமான பாத்திரச்சித்தரிப்பின் மூலமும், அவளுடைய அந்தரங்க மன உணர்வுகள் குறித்த கவனக்குவிப்பின் மூலமும் அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டதான தோற்றத்தை உருவாக்குகிறார். புராணப் பாத்திரங்களின் மீது சமகால உணர்வுகளைப் பாய்ச்சி புதிய கவனத்தைக் கோரும் அழகிரிசாமியின் உத்தி இந்த நாடகத்தில் சிறப்பாக வெளிப்படுகிறது. 

கவிச்சக்கரவர்த்தி மற்றும் வஞ்ச மகள் ஆகிய நாடகங்களே அதிகம் அறியப்பட்டிருந்த நிலையில் அழகிரிசாமியின் மகன் சாரங்கன் மூலமாக பத்திரிகைகளில் பிரசுரமான வேறு சில நாடகப் பிரதிகள் அறியக் கிடைத்தன. அதிகாரத்துக்கு எதிரான குரல், வறியவர்களிடம் பரிவு, காப்பியப் பாத்திரங்களை சமகால நோக்கில் அணுகுவது, நாடக வடிவம் குறித்த தீர்க்கமான பார்வை ஆகியவைகளை அவருடைய நாடகங்களின் சிறப்பம்சங்களாகக் கொள்ளமுடியும்.

பரங்கியர் வந்தார், ஞான ரதம், ஜன்மப் பகை, வாழ்வில் வசந்தம், சொல்லாத சொல், மகுடாபிஷேகம் ஆகிய அழகிரிசாமியின் நாடகங்களை சாரங்கன் அளித்தார். அவைகளில் ஞானரதம் நாடகம் பாரதியாரின் ஞானரதம் கட்டுரையைத் தழுவி அழகிரிசாமி உருவாக்கிய நாடக வடிவம். அதில் கவிஞன் மனம் என்னும் துணையுடன் ஞான ரதத்தில் ஏறி உபசாந்தி லோகம், ஸ்வேச்சா லோகம், கந்தர்வ லோகம், சத்திய லோகம் மற்றும் தர்ம லோகம் செல்கிறான். கவலை இல்லாத இடத்தில் சுகம் இராது, வாழ்க்கை முரண்பாடுகளின் தொகுப்பு, ஆதர்சம் உண்மை வனப்பு இவைதான் தெய்வம், அதிருப்தியே மனிதப்பிறவியின் சிறப்பு, மனிதர்கள் பயிற்சியினாலும், குணதர்மங்களினாலும்தான் வெவ்வேறு வர்ணங்கள் ஆகிறார்கள், லெளகீகப் பெருமைகளில் ஆசையில்லாமையே பிராம்மண தர்மம். அதர்மத்துக்கு எதிரான போர் தான் சத்திரிய தர்மம், தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருக்கிறது ஆகிய உண்மைகள் அங்கே அறியக் கிடைக்கின்றன. அழகிரிசாமி கட்டுரையின் சாரத்தை சிறப்பான நாடகமாக உருமாற்றியுள்ளார். அவருடைய மற்ற நாடகப் பிரதிகளும் ஆய்வுக்குரியன.

வெளி ரங்கராஜன்

அரங்கம் எழுத்தை பன்மடங்கு பெருக்கிக்காட்டும் ஆடி - வெளி ரங்கராஜன் நேர்காணல் ~ குருகு (kurugu.in)

வெளி ரங்கராஜன் நூல்கள் வாங்க

அழகிரிசாமி குடும்பத்துடன்

கு.அழகிரிசாமி (1923-1970) நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர். தமிழின் மகத்தான சிறுகதைகளை எழுதியவர். இதழாளர், இசையிலும் நாட்டாரியலிலும் ஆய்வுகள் செய்தவர். 

கு. அழகிரிசாமி தமிழ் விக்கி பக்கம்

எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அறச்சலூர் அரசு பள்ளியில் அவர் பெயரில் நூலகம் 23.09.2023 அன்று திறக்கப்பட்டது. குக்கூ அமைப்பினர் இந்த நற்செயலை முன்னெடுத்தனர். ஓவியர், சிற்பக்கலைஞர் கோயில் பிச்சை பிரபாகர் அவர்களால் வனையப்பட்ட கு.அழகிரிசாமியின் உருவச்சிலையை எழுத்தாளர் யூமா வாசுகி திறந்து வைத்தார். 

புகைப்படம் - வினோத் பாலுசாமி